எதுவாக 

அதிர்ஸ்டவசமாக இன்று
மானாக இருக்க வாய்த்தது
மானாகியதும்
புள்ளிகள் உதிருமோ
என்று அஞ்சும் அளவிற்கு
மகிழ்ந்து
காற்றில் தெறித்தேன் ஒரு கணம்
அந்த ஒரு கணம் முடிவதற்குள்
காலடியில்
நாய்க்குரைப்பும்
ஆட்குரைப்பும் எழுந்து
விரட்டியது மானை.
அடுத்த கணத்தில்
காட்டிலா வீட்டிலா இருப்பதென்ற
குழப்பம் எழ
மெல்லக் காணாமற் போனது
மான்.

0

இருள்

நாய்க்குட்டியுடன் விளையாடும் குழந்தையும்

குழந்தையுடன் விளையாடும் நாய்க்குட்டியும்

தங்கள் குழந்தைப் பருவத்தில்

கடவுளின் பரிசை

சமமாகப் பகிர்ந்து கொண்டனர்.

பிறகெப்படி முதுவேனிற் காலத்தில்

கடவுளின் பரிசு

வினோதமாக மாறுகின்றதென

நாய்க்குட்டிக்கு விளங்கவேயில்லை.

எல்லைகள் வேறாகி

நடுவே ஒரு பிரிகோடு

நூதனமாக நுழைந்து கொள்ள

அந்தக் கோட்டுக்கு

அப்பால் ஒரு உலகம்

இப்பால் ஒரு உலகம்

என எழுந்த இரண்டு உலகங்களுக்கிடையில்

அப்பாலும் இப்பாலுமாக

இருவரும் இருக்கும்

பருவத்தின் விளையாட்டை

படுத்திருந்தே பார்த்துக் கொண்டிருந்தது

அது.

கடவுளின் வஞ்சனையை

புரிந்து கொள்ளவே முடியவில்லை

அதனால்

0

தாளம்

புதிய ஊரில்

அதிகாலையில்

அலையாக எழுந்து வரும்

புத்தம் புதிய கீர்த்தனைக் குரலில்

புலர்ந்த காலையில்

அந்தப் பெண்ணின் வாசத்தை உணர்ந்தேன்

அவளுடைய சாயலில்

ஊர் மெல்ல

இயங்கத் தொடங்கியது.

அப்படியே அவளாகவே மாறியது

ஊரும் பொழுதும்.

ஊரையும் பொழுதையும் திறந்தபெண்

யார் என்று அறியத் தவிக்கும் மனதில்

ஒரு கொடி அசைகிறது

ஒரு பூ மலர்கிறது

ஒரு பறவை பறக்கிறது

ஒரு அன்னம் நீந்துகிறது

ஒரு பெண் வானவில்லாகிறாள்

ஒரு விருந்தாளிக்கு

இதெல்லாம் அதிகபட்சமே.

புறப்படும்போது

எல்லாவற்றையும் விட்டுச் செல்லவும்

எதையும் எடுத்துச் செல்லவும் முடியாமல்

பயணப்பொதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

0

சருகு

இரத்தத்தை உறைய வைக்கும்

ரகசியம்

இன்றிரவு உங்களுக்குத் தெரியவரும்

அந்த ரகசியத்தின் குறுக்கும் மறுக்கும்

நீங்கள் சென்று கொண்டிருப்பீர்கள்

ஒளிந்து கொள்வதற்கு

ஒரு மறைவிடம் கூட இருக்காது

சூழும் பதட்டத்தின் வியர்வை

உங்களைப் பரிகசிக்கும்போது

உங்கள் முகம் தத்தளித்துத் தவிக்கும்.

ஆனாலும்

அதை மறைப்பதற்கு

ரகசியத்திடம்

ரகசியமாகக் கெஞ்சுவீர்கள்.

அதுவோ உங்களை விலகிச் செல்லும்

வேதனைக்கும் மகிழ்ச்சிக்குமிடையில்

உங்களின் உடல்

கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு

மகிழ்ச்சிக்கும் வேதனைக்குமிடையில்

அலைந்து கொண்டிருப்பீர்கள்.

மாபெரும் கனவொன்று அவிழ்ந்து

உங்களின் காலடியிலே தீப்பற்றும்

மற்றவரின் மலவாசலில்

எப்போதும் மூக்கை வைத்திருக்கும்

தினவெடுத்த உங்களின் 

ரகசியமறியும் தாகத்தில்

உங்கள் உறைந்த இரத்தமும் 

புகை மண்ட எரியும்.

அப்பொழுது

மகிழ்ச்சிக்கும் வேதனைக்குமிடையில்

அலைந்து கொண்டிருக்கும்

கழிக்கப்பட்ட சருகொன்று.

0

கொதிக்கும் காடு

கனவில்

பெருமிருகமொன்று உறும

திடுக்கிட்டவளின் நாசியில்

மணத்தது காடு

பெருங்காடு

ஆதிக்காடு.

ஆதிக்காட்டின் வேர்கள் ஊறிய

நீரின் குளுமை

உடலிலும் மனசிலும் பரவிடச்

சிலிர்த்தெழுந்தவள்

16 ஆவது மாடியின்

இடது புற யன்னலைத் திறந்தாள்.

வெளியே வெம்மையில்

தகித்துக் கொண்டிருந்தது

நகரம்.

பெரு நகரம்.

சொர்க்கத்தின் அலங்கரிப்பில் 

சுடர்ந்து மினுங்கிய நகரத்தின்
நூறு நூறு பாதைகளும் அடைபட்டு

ஒரு வழியுமன்றி மூடப்பட

மண் தொடாத கால்கள்

விண் தொடும் மாடிகளில்

அலைவுறும் துயரில்

நரகத்தின் வாசல்கள் திறந்திருப்பதைக் கண்டாள்.

கடவுள்

நரகத்தின் வாசலிலே

குந்திக் கொண்டிருந்தார்.

02

மாநகரின் அடியிலோ

அழிக்கப்பட்ட பெருங் காட்டின்

துயரோலம்.

காட்டின் இதயத்தை எரித்த சாம்பற் படிகை

அலையலையாக படிந்திருக்க

உருமாற்றி

அதன் மேலெழுப்பப்பட்ட

நகரத்தைக் கண்டு பதைத்தது அவள் மனம்.

மனித வேட்கையும் வேட்டையும்

காலத்தை உருத்திரித்து

முறுகிக் கயிறென இறுக்க

நிலமோ

காடற்றது

வேரற்றது

பூவற்றது

கனியற்றது

குயிலற்றது

கிளியின் குரலற்றது

நீரற்றது

நிழலற்றது

நிழலற்ற வெளியில்

கண்களில் துயர்ப்பீழை முளைத்திட

விதியற்றுத் தனித்தவள்

மூதாதைகளின் காலடி தொடர்ந்து

வரலாற்றில் நடந்து

நகரின் வேரடிக்குச் சென்றாள்.

காடழித்துக் காடழித்துக் காடழித்தே

மேடாகியது மாநகர்

எனக் காண

பாழாகிற்று நிலம்

என்றறிந்தாள்.

துக்கம் முட்டி, அலையடித்தது.

03

மறுதிசையில்

தூரத் தெரிந்தது கடல்

நிலத்தைப் போலன்றி

நீரின்னும் நீராகவே

அலையின்னும் அலையாகவே

மீனின்னும் மீனாகவே

கடலின்னும் கடலாகவே

அசைந்து கொண்டேயிருக்கும்

அதிசயத்தைக் கண்டவள்

யாரும் வென்று தின்னமுடியாக்

கடலின் மேலே

காதல் மிகக் கொண்டாள்

கடலைக் கையெழுந்து தொழ

நீர்ப்பரப்பின் மேலே

பறவைகள்

வானிலே நீந்துகின்றன.

நீரிலே மீனும் கடற்பூவும்

நீந்துகின்றன

வானிலும் கடலிலும்

நீந்தினாள் அவளும்.

04

திரும்பி நகர் நோக்க

தெரிந்த திசையெங்கும்

காட்டின் சாம்பல் மேடாகக் கட்டிடப் பூதங்கள்.

அனல் மூச்சு எழுந்தலையும்

கட்டிடச் சிறையில்

தம்மைத் தாமே சிறையிட்ட

நாகரீகத்தில்

அடைபட்ட மனிதர்.

தம்மைத்தாமே தண்டிக்கும்

சிறைக்கூட வாழ்க்கை

துயரில் சறுக்கி

தீரா அவதியில் வீழ்த்தியது.

காடழித்த குற்றமே

கடவுளைத் தேடியது எங்கும்

காடழியக் காடழியக் காடழிய

கடவுளைத் தேடி மன்றாடும்

தவிக்கும் மனம்.

ஈற்றில்

காடழித்த குற்றங்கள்

கடவுளின் முற்றமாகின

குற்றங்கள் பெருகப் பெருக

கடவுளின் முற்றங்களும் பெருகின.
கோயிலும் மசூதியும்

விகாரையும் தேவாலயமும் பிறந்தன.

குற்றங்களே

தோத்திரங்களும் பிரார்த்தனைகளுமாயின.

குற்றங்களின் மீதமர்ந்திருந்த

கடவுள்

தன்னைத் தானே மோகித்தார்

குற்றத்தின் பிரதிநிதியே

கடவுள் எனக் கண்டவள்

சபித்தாள் அவரை.

குளிர் வற்றி

கனலேற

கனலும் நிலத்தின் மேலெழுந்த

கொங்கிரீட் விருட்சத்தின்

16 ஆம் மாடியில்

பிளாஸ்டிக் சாடியில்

காட்டின் நினைவாக வைத்த செடி

காற்றைத் துழாவி

வான்னோக்கித் தன் நாவை நீட்ட

அழிக்கப்பட்ட காட்டின்

நினைவின் மீது

சாற்றினாள் மலரொன்றை

கடவுளின் இதயம்

வெடித்தது.

கருணாகரன்

கருணாகரன் ஈழத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும், விமர்சனத்தையும் கண்டவை

2 Comments

  1. நல்ல முயற்சி. அழகிய கவிதைகள். முயற்சி தொடர வாழ்த்துகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.