/

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 4) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் : தென்னவன் சந்துரு

பதட்டமான ஆன்மாவை சமநிலைப்படுத்த ஒரு வீடு. Ludwig Mies van der Rohe, Farnsworth House, Plano, Illinois, 1951

பகுதி-1 பகுதி-2 பகுதி-3

பகுதி 4 – சமநிலைமீட்டல்

நம்மில் சிலரே முழுமையான சமநிலையில் இருக்கிறோம். பொதுவாக நம்முடைய  உணர்ச்சிகள் வெவ்வேறு திசைகளில் மூர்க்கமாக இழுபடுகின்றன. நம் உளவியல் வரலாறுகளும் உறவுகளும் அன்றாட செயல்திட்டங்களும் இதையே உணர்த்துகின்றன.  உதாரணமாக, சில நேரங்களில் நாம் மிகுந்த மனநிறைவுடனோ அல்லது மிகுந்த பாதுகாப்பின்மையுடனோ இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனோ அல்லது மிகுந்த சந்தேகத்துடனோ இருக்கிறோம். மிகுந்த அழுத்தத்துடனோ அல்லது மிக இலகுவான இதயத்துடனோ இருக்கிறோம்.  இந்த சமநிலையற்ற மனப்போக்கில் நம்முடைய தொலைந்துபோன குணாதிசயங்களின் செறிவான பகுதிகளோடு, நம்மை மீண்டும் தொடர்புகொள்ள வைக்க, கலையால் முடியும். நம் ஆழ்நிலை சுயங்களுடன் சரியான அளவில் சமநிலையை தக்கவைக்க முடியும்.

ஒரு கற்பனை செய்யலாம். அதிகப்படியான அழுத்தத்தாலும், தூண்டுதலாலும், கவனச்சிதறலாலும் பாதிப்புக்குள்ளாகும் ஒரு வாழ்க்கைமுறையில் நாம் சிக்குகிறோம். வேலை மூன்று வெவ்வேறு கண்டங்களிலாக பரபரப்பாக நடக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 200 செய்திகளால் இன்பாக்ஸ் நிரம்பிவழிகிறது. வாரநாள் ஆரம்பித்தவுடன் எதைப்பற்றியும் சிந்திக்க நேரமே இருப்பதில்லை. இருப்பினும், சில சமயங்களில் மாலையில் சிகாகோவின் புறநகர்ப் பகுதியில், முழுமையான சீர்மையும் ஒழுங்கும்  கொண்ட, ஒரு ஒற்றை படுக்கையறை வீட்டிற்கு திரும்பும் வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொள்வோம். பரந்தகன்ற ஜன்னல்களுக்கு வெளியே ஒரு கருவாலி மரத்தையும், அங்கே கூடிவரும் இருளையும் பார்க்கும்போது, ஆழ்ந்த தனிமையும், சிந்தனை வயப்பட்ட சுயமும் திரும்பக்கிடைக்கும் வாய்ப்பு அமைகிறது.  சாதாரணமாக வாய்த்திருக்காத இந்த அகத்தொடர்பை இச்சூழல் நமக்கு மீட்டுத்தருகிறது.

I-வடிவ இரும்புத்தூன்களின் தொடர் மீட்டல்கள், நம்முள் புதைந்துகிடக்கும் ஆழ்ந்த அமைதிக்கு  உரமூட்டுகின்றன. நேர்த்தியான இந்த வாழ்விடத்தைச் சுற்றி இருக்கும் மிகப்பெரிய திரைச்சீலை, அவ்வளவு மென்மையாக மடிக்கப்பட்டிருப்பது நமக்கு கனிவின் மகத்துவத்தை உணர்த்திவிடுகின்றது. சுண்ணாம்புக் கற்கள்  பதிக்கப்பட்ட கட்டிட மேற்பரப்பின் மிகையற்ற எளிமை,  பணிவோடு இருப்பதிலும், கனிவான இதயத்தைக் கொண்டிருப்பதிலும் நமக்கிருக்கும் விருப்பத்திற்கு உந்துதலாய் அமைகிறது. ஒரு கலைப் படைப்பு நம் குணாதிசயத்தில் தொலைந்துபோன பண்புக்கூறுகளை நாம் திரும்பப் பெற உதவுகிறது. நாம் அனைவரும் ஒரே மாதிரியான பண்புக்கூறுகளை இழப்பதில்லையென்பதால், நம்மை மறுசீரமைக்கும் திறன் கொண்ட, நம் உற்சாகத்தைத் தூண்டும் கலையும், குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகிறது.

இன்னொரு கற்பனை. ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் இருக்கும் அமைதியான நகரமான டிரான்ட்ஹெய்மில் (Trondheim) ஒரு மந்தமான அலுவலகக் கிளையில், நார்வே குடியியல் பணி அதிகாரிகளாக நாம் பணிபுரிவதாக வைத்துக் கொள்வோம். நாம் ஒரு தீவிரமான உணர்ச்சியை அனுபவித்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கடைசியாக அனுபவித்திருக்கலாம். நம் நாட்கள் அட்டவணைப்படி   கழிகின்றன.  எப்போதும் மாலை 5.15 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுகிறோம்; படுக்கைக்கு முன் குறுக்கெழுத்து புதிர் விளையாடுகிறோம். இத்தகைய சூழ்நிலைகளில், மீஸ் வேன் டெர் ரோஹ்-ஆல் (Mies van der Rohe)  தூய்மையாய் வடிவமைக்கப்பட்ட வீட்டில் வாழ்வது நம் முதல் தேவையாக இருக்காது. அதற்கு பதிலாக, உறங்கிக் கிடக்கும் நம் ஆன்மாக்களுக்கு ஜீவனளிக்கிற கலை வகைகளில் ஈடுபட அறிவுறுத்தப்படலாம். ஃபிளமென்கோ இசை (Flamenco music). ஃபிரீடா காலோ-வின் ஓவியங்கள் (Frida Kahlo). மெக்சிகோவின் கதீட்ரல் டி சாண்டா பிரிசாவின் கட்டிடக்கலை (Catedral de Santa Prisca). இவைப் போன்றவற்றில் ஈடுபடும் தேவை இருக்கலாம்.

நார்வேஜியன் குடியியல் பணியாளரை மறு சமனிலைபடுத்த உதவும் கலை படைப்புகள். Catedral de Santa Prisca y San Sebastián, Taxco, Mexico, 1751-8

‘உணர்வுரீதியாக நம் சமநிலையை மீட்டளிப்பதில் கலைக்கு முக்கிய பங்கிருக்கிறது’ என்னும் கருத்து இன்னொரு ஆழமான கேள்விக்கும் பதிலளிக்கிறது- நாம் ஏன் அழகியல் ரசனைகளில் இவ்வளவு வேறுபட்டு இருக்கிறோம்? ஏன் ஒருசிலர் மினிமலிச கட்டிடக்கலையால் (minimalist architecture) ஈர்க்கப்படும்போது மற்றவர்கள் மிகைபானியை பரோக்கினை(Baroque) நாடுகிறார்கள்? சிலர் வெறும் கான்கிரீட் சுவர்களினாலேயே உற்சாகமடையும்போது, மற்றவர்கள் ஏன் வில்லியம் மோரிஸின் (William Morris) மலர் வடிவங்களில் நாட்டம் கொள்கிறார்கள்?

நம் குணாதிசியத்தின் ஆழத்தில் உறைந்துள்ள உணர்வுகளைப் பொறுத்தே நம் ரசனைகள் அமைகின்றன. அவ்வுணர்வுகளுக்கே தூண்டுதலும் முக்கியத்துவமும் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு கலைப் படைப்பும் ஒரு குறிப்பிட்ட உளவியலையும் நெறியையும் சார்ந்தே வியாபித்திருக்கிறது. ஒரு ஓவியத்தை குறிப்பிட்ட மனநிலையின் பிரதிபலிப்பென்றோ, உணர்ச்சிநிலையின் வெளிப்பாடென்றோ அடையாளப்படுத்தலாம். அது பணிவையோ நம்பிக்கையையோ வெளிப்படுத்தலாம்; அமைதியையோ அமைதியின்மையையோ கொண்டிருக்கலாம்; தைரியத்தையோ  கவனத்தையோ வலியுறுத்தலாம்; பகட்டையோ நன்மதிப்பையோ தெரிவிக்கலாம். ஒருவேளை ஆண்தன்மையோடோ அல்லது பெண்தன்மையோடோ கூட இருக்கலாம். பூர்ஷீவாத்தனமாகவோ அல்லது மேட்டுக்குடித்தனமாகவோ இருக்கலாம். இவற்றுள் ஒரு வகையை விட மற்றொன்றுக்கான நமது விருப்பத் தேர்வுகள், நம்முள் உறைந்திருக்கும் பல்வேறு உளவியல் இடைவெளிகளின் பிரதிபலிப்பையே சுட்டுகின்றன.

வில்லியம் மோரிஸீன் மலர் வடிவம்

நம் உள பலவீனங்களை ஈடுசெய்து சமநிலைக்குத் திரும்ப உதவும் கலைப்படைப்புகளுக்காகவே நாம் ஏங்குகிறோம். ஒரு படைப்பு தொலைந்துபோன நற்பண்புகளை கையளிக்கும்போது அதை அழகானது என்கிறோம். இதைப்போலவே, நாம் மோசமான படைப்பு என்று  நிராகரிப்பவையும், பொதுவாக நம் மனநிலையின்மேல் ஆதிக்கம் செலுத்துபவையே. அச்சுறுத்தக்கூடிய அல்லது திணறச் செய்யும்படியான மனநிலைகளையோ பண்புகளையோ கொண்டவை.  எனில், ஆழ்நிலை முழுமைக்கான ஒரு வாக்குறுதியையே கலை அளிக்கிறது.

தனிநபர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையில் இழந்தவற்றை திரும்பப்பெற கலையைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறதோ, அதைப்போலவே மக்கள் குழுக்களும், ஏன் முழு சமூகமும் கூட, தங்கள் இருப்பை வாழ்வை சமநிலைப்படுத்திக்கொள்ள கலையை அணுகலாம். இந்த கருத்தை ஜெர்மன் கவிஞரும், நாடக ஆசிரியருமான தத்துவஞானி ஃபிரெட்ரிக் ஷில்லர் (Friedrich Schiller) 1796 இல் வெளிவந்த “நேரடித்தன்மைவாய்ந்த உணர்ச்சிவயமான கவிதைகள் பற்றி” (“On Naive and Sentimental Poetry’) என்னும் கட்டுரையில் முன்மொழிந்தார். 

பண்டைய கால கிரேக்க கலைஞர்கள் எவரும் நிலக்காட்சிமேல்(landscape) அவ்வளவு பெரிதாக நாட்டம் செலுத்தியிருக்கவில்லை என்ற உண்மை அவர் ஆர்வத்தைத் தூண்டியது. இதற்கான காரணத்தை அவர்கள் வாழ்ந்த விதத்தைவைத்து நாம் புரிந்துகொள்ளலாம் என்று ஷில்லர் வாதிட்டார். அவர்கள் தங்கள் நாட்களை நிலவெளியிலேயே கழித்தார்கள். அதுவும் கடலும் மலையும் சூழ்ந்திருந்த சிறிய நகரங்களிலேயே வாழ்ந்தார்கள். ‘கிரேக்கர்கள் தங்கள் மனதிற்குள் இயற்கையை இழந்திருக்கவில்லை’. எனவே, ‘தங்களுக்குள்ளே எதையும் மீட்டெடுக்க உதவாத, அன்னியமான ஒன்றை உருவாக்குவதிலும் அவர்களுக்கு பெரிய விருப்பம் இருக்கவில்லை’ என்று அவர் யூகித்தார். இதன் தொடர்ச்சியாக, இயற்கைக்கு அதிக முக்கியத்துவமளிக்கும் கலைப் படைப்புகள் அதற்கான அவசியம் இருக்கும்போது மட்டுமே கவனம்பெறும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

‘இயற்கையின் நேரடியான அனுபவம் நம் வாழ்விலிருந்து படிப்படியாக மறையத் தொடங்கும் போது, கவிஞர்களின் உலகில் அது ஒரு சிந்தனையாக வெளிப்படுவதைக் காணலாம்.’ வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகவும், செயற்கையானதாகவும் மாறும் போதும்,வாழ்க்கையை நான்கு சுவற்றுக்குள் கழிக்க நேரிடும்போதும், அதை ஈடுசெய்யும் இயற்கையின் எளிமைக்கான ஏக்கம் வலுப்பெறுகிறது. “இயற்கையின் அணைப்பிலிருந்து வெகுதூரம் சென்ற ஒரு தேசத்தையே சாதாரணமான ஒரு நிகழ்வும் மிகவும் வலுவாகத் பாதிக்கும்”. ஷில்லரின் இக்கருதுகோளை உறுதிப்படுத்துவது போல, பிரெஞ்சு பேரரசின் கடைசி அரசி மேரி அன்டோனெட் (Marie Antoinette) இதற்கு சில ஆண்டுகள் முன்புதான் வெர்சாய் அரண்மனைக்கு (palace of Versailles) அருகில் ஒரு மாதிரிப்பண்ணையை உருவாக்கினார், அங்கிருந்து அவர் பசுக்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

திகட்டிப்போன பிரமாண்டங்கலிளிருந்து மீட்டெடுக்க உதவும் எளிய அமைப்பு. Richard Mique and Hubert Robert, The Queen’s Hamlet, Petit Trianon, Versailles, 1785.

வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் என்ன வகையான கலைப்படைப்புகள் புதிதாக பிரபலமடைந்தன என்பதை வைத்து அப்போது நிலவிய சமநிலையின் ஏற்ற இறக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். தாமஸ் ஜோன்ஸின் (Thomas Jones) இத்தாலிய ஓவியங்கள் புதுக்கவனம் பெறுவதை, வளர்ச்சியடைந்த சமகால உலகம் பொருள் ரீதியாக திருப்தியடைந்தாலும் ஓய்வில்லாத பரபரப்புடன் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக குறிப்பிடலாம். பொதுவாக அவர் தன் படைப்புகளில் உன்னதமான சிதைவுகளை தாங்கியபடி சாட்சிபோல நிற்கின்ற பழமையான கட்டிடங்களை காட்சிப்படுத்துவார். மேலும் இதற்கான மற்றொரு சான்றாக, ஒரு காலகட்டத்தில் துறவிகள் வாழ்ந்த ‘தோரோனெட் அபே’ (abbey of Le Thoronet) போன்ற அமைதி நிறைந்த, ஆடம்பரமில்லாத, வரிசையான தூண் அமைப்பைக் கொண்ட (colonnades)  மடாலயங்களும் இப்போது கவனம் பெறுவதை குறிப்பிடலாம். எந்த வகையான கலைப்படைப்புகளை நாம் விரும்புகிறோம் என்பதை வைத்தே, நம் சமூகத்தில் எவையெல்லாம் இழக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

Thomas Jones, A Wall in Naples, 1782

இவ்வாறு, ரசனைகளுக்கு பின்னாலுள்ள உளவியல் காரணத்தை புரிந்துகொள்வதன் வழியே, நாம் இப்போது எவற்றை அழகு என்று கருதுகிறோமோ, அந்த உணர்ச்சியை மாற்றியமைத்துவிடலாம் என்று சொல்லமுடியாது.இருப்பினும் நாம் விரும்பாதவற்றுக்கு உணர்ச்சிவயமாக எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, எளிய விமர்சனத்தோடு கடந்து செல்ல வழிவகுக்கும். ஒரு படைப்பை மக்கள் அழகாகக் கருதுவதற்கு, இப்போது அவர்களிடம் என்ன குறைவாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களது விருப்பம் நமக்கு தனிப்பட்ட வகையில் உவப்பாக இல்லாவிட்டாலும்கூட, அதைப் புரிந்துகொண்டு மதிப்போடு அணுகலாம். 

கலை நம் குணநலன்களின் சமநிலையை மீட்க உதவுவது போலவே,  நம் அறவொழுக்கத்தையும் மேம்படுத்திக்கொள்ள உதவ முடியும். இந்த நவீன யுகத்திற்கு ‘அறம்’ என்ற வார்த்தையே பெரும் எரிச்சலை உண்டாக்குகிறது. ‘நல்ல பண்போடு’ இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுரைக்கும் பரிந்துரைகளுக்கு நாம் சரியான விதத்தில் எதிர்வினையாற்றுவதில்லை. இந்த வகையான தலையீடுகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை பெரும்பாலானோர் உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களிடம் போய், உடலை பேணுவதில் எப்படி நல்லொழுக்கத்தை கடைபிடிக்க விரும்புகிறோமோ, அதைப்போலவே நம் சுபாவத்திலும் நல்லொழுக்கத்தை பேண முயற்சிக்கலாம் என்று ஆலோசனை சொன்னால் கொதித்துவிடுவார்கள். 

நவீன ஜனநாயக அரசியலின் சிந்தனை கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று, நம் வாழ்கையை நாம் விரும்பியபடி எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பது. ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அஞ்சாமல், அதிகாரத்தின் பிடிக்கு ஆளாகாமல் நாம் நினைத்தபடி இருக்க வேண்டும் என்று நினைப்பது. ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் தைரியம் இன்னொருவருக்கு எங்கிருந்து வருகிறது என்னும் ஆவேசமான கேள்விக்கு முன், ஒழுக்கத்தை விமர்சிப்பதற்கான நியாயமான உந்துதல்கூட நடுங்கிப்போய்விடுகிறது. 

வரலாறு முழுக்க உருவாக்கப்பட்டிருக்கிற பல சிறந்த கலைப்படைப்புகள் வெளிப்படையான தார்மீக நோக்கத்தை கொண்டவையே. பல குறியீட்டு அம்சங்களின் வழியாக அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் நமக்குள் கடத்தி, நற்பண்புகளாலான ஒரு மேம்பட்ட மன நிலையை ஊக்குவிக்கும் முயற்சி என்றும் சொல்லலாம். இருப்பினும் இவ்வாறான அறிவுறுத்தும் தன்மை கொண்ட கலைப் படைப்புகளை நாம் பொதுவாக அதிகாரம் செலுத்துபவையாகவோ, தேவையற்றவையாகவோ நினைக்கக்கூடும். ஆனால் இப்படி நாம் நினைக்கக் காரணம், நல்லொழுக்கத்திற்கான ஊக்கம் எப்போதும் நம் சுய விருப்பங்களுக்கு முரணாக இருக்கும் என்ற தவறான புரிதல்தான். 

உண்மையில், நாம் எந்தவித நெருக்கடியுமற்று மனஅமைதியோடு இருக்கும்போது, நம்மில் பெரும்பாலோர் நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அப்படி இருக்கவிடாமல் அலைக்கழிக்கும் நினைவூட்டலை நாம் அப்போது பொருட்படுத்துவதில்லை. ஆனால் இப்படியான ஊக்கத்தை நாம் தினசரி  அடையமுடிவதில்லை என்பதுதான் சிக்கல். நற்பண்புகளுக்கான நமது விருப்பார்வத்தை உற்றுநோக்கும்போது, அரிஸ்டாட்டில் ‘அக்ராசியா’ (akrasia) என்று குறிப்பிட்டது போல  மனபலவீனத்தால் (weakness of will) தான் நாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

நாம் நம் உறவுகளில் சரியாக நடந்து கொள்ளவே விரும்புகிறோம். எனினும் அழுத்தம் நிறைந்த ஒரு நெருக்கடியான நேரத்தில் தவறிவிடுகிறோம். பொதுவாக நல்லியல்பை பேணவே விரும்புகிறோம்; ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஊக்கத்தை இழந்துவிடுகிறோம். இப்படியான தருணங்களில்தான் நம் இயல்பை மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் கலைப் படைப்புகளிலிருந்து மகத்தான பலன்களை நாம் பெற முடியும்; நாம் ஏற்கனவே பூரணமாக சரியாகத்தான் இருக்கிறோம் என்று நினைப்பதும், நம் சுபாவம் பற்றிய தலையீடுகள் குறித்து நமக்கிருக்கும் தேவையற்ற அச்சம் கொண்டிருப்பதும்தான் இப்படியான மாற்றத்திற்க்கு பெரிய தடையாக அமைகின்றன. 

நம்மை எச்சரிக்கையூட்டி வழிநடத்தக்கூடிய கலைப்படைப்புகளில் சிறந்துவிளங்குபவை, அறநெறிகளை போதனைபோலின்றி இயல்பாக தன்னுள் கொண்டவையே. குறிப்பாக அவை நாம் எவ்வளவு எளிதாக தவறான விஷயங்களால் ஈர்க்கப்பட்டுவிடுகிறோம் என்பதை நன்கு புரிந்துவைத்திருக்கின்றன. ஒருவர் எவ்வளவு எளிதாக தவறான பழக்கங்களுக்கு இறையாகிப்போய்விடக்கூடும் என்பதையும் – அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைக்கின்றன.

Robert Braithwaite Martineau, The Last Day in the Old Home, 1862

நல்ல மனிதர்கள் பலரும் கூட, பெரும்பாலான சமயங்களில் தங்கள் அறியாமையால் பெரிய தவறுகளைச் செய்துவிடுவது கண்கூடே. மார்டினோவின் (Robert Braithwaite Martineau) ஓவியத்தில், ஒரு பந்தயக் குதிரையின் புகைப்படம் தரையில் சாய்ந்துகிடப்பதையும், பின்னால் உள்ள மதுக்கோப்பைகளையும் வைத்து, அந்த குடும்பத்தின் பிரச்சனை, கணவனின் சூதாட்டத்தாலும் குடிப்பழக்கத்தாலும்தான் உருவாகியிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போது பெரிய மனிதர்களின் அந்த பகட்டான பழக்கங்களை அவர் தன் மகனுக்கும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவரை மோசமானவர் என்று சொல்லிவிட முடியாது; அவரது கவலையற்ற இனிமையான புன்னகை வலிந்து உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை. அவர் ஒருவேளை அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பும் நபராக இருக்கலாம். அவரது பிரச்சனை அவர் நிலையற்றவராகவும், மனக்கட்டுப்பாடற்று எளிதில் தூண்டுதலுக்கு இரையாகிவிடுபவராகவும் இருப்பதே. அவரது ஒவ்வொரு முட்டாள்தனமான முடிவும் எப்படி தன் வீட்டை இழக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை நாம் யூகிக்கலாம். ஓவியத்திலுள்ள பழங்கால கணப்படுப்பும், போர்க்கவசங்களும், அந்தகால உருவப்படங்களும், பல தலைமுறைகளாக இந்த வீடு அவரது குடும்பத்திற்குச் சொந்தமானது என்பதை புலப்படுத்துகின்றன. இப்படி உணர்வுகள் நிறைந்த இந்த வீட்டை அவருடைய காலத்தில் இழந்துவிட்டார். 

இப்படைப்பாளியின் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படும் இடம் இந்த அவமானத்தையும் சோகத்தையும் நம்மையும் உணரச்செய்து அவற்றை நம் குணவியல்புகளோடு ஒப்பிட்டு பரிசீலனையும் செய்யத்தூண்டுகிறார் என்பதே; ஏனென்றால் நம்மில் பலரும், அந்த மனிதரின் சில போக்குகளை நம்முள்ளும் கொண்டிருக்கிறோம். 

Fra Angelico, “The Pains of Hell’ from The Last Judgement (detail), 1431

வரலாற்றில் கிறிஸ்தவம் கலையின் தார்மீக அம்சங்களை குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தி வந்திருக்கிறது. எந்த நெறிகளையும் பெரிதாக பொருட்படுத்தாத சமூகத்தில் இயங்கிய ஃபிரா ஏஞ்சலிகோ (Fra Angelico), மக்களை சரியான பாதைக்கு திருப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ‘கொடூரமான மரணங்களாலான நரகத்தின் நினைவூட்டலாய்’ ஒரு ஓவியத்தை உருவாக்க முடிவுசெய்தார் .ஆகையால் அவர் அந்த நரகத்தை முடிந்தவரை பயங்கரமானதாக உருவாக்க முயன்றார். அந்த ஓவியத்தை சுவரில் பார்க்கும் எவரும் மனித உடல்களை உண்ணும் பிசாசுகளையும், உயிரோடு உலையில் கொதிக்கும் கொடூரத்தையும் நினைத்து குலைநடுங்க வேண்டும் என்றும் திகிலடைய வேண்டும் என்றும் எண்ணினார். ‘இவ்வோவியம் பிரதிபலிக்கும் உருவகத்தை தன் சிந்தையிலிருந்து வெளியேற்ற இயலவில்லை’ என்று ஒருவர் வேதனைதெரிவிப்பதையே அவர் இப்படைப்பின் வெற்றிகரமான எதிர்வினையாக கருதியிருப்பார். 

மத கண்ணோட்டத்தை தாண்டி, இந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல், நம் அன்றாடத்திலுள்ள நரகத்தின் நவீன வடிவங்களை கற்பனை செய்து பார்க்கலாம். கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நபர், நரகம் எனும் கருதுகோள் சுய முன்னேற்றத்தின் தடை என்று கருதுவார். அந்த வகையில் ஈவ் அர்னால்ட்டின் (Eve Arnold) , விவாகரத்து பெறுகிற ரஷ்ய தம்பதிகளின் புகைப்படங்களை கவனிக்கலாம். எங்கும் விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வாகிப்போன காலத்தில், அவர்கள் தினசரி அனுபவிக்கும் நரக வேதனையை, கடவுளால் கைவிடப்பட்ட தருணங்களாக நம்முள் கடத்திவிடுகிறார்.

மன்னிப்பு கேட்க ஒரு காரணம். Eve Arnold, Divorce in Moscow, 1966

“கனிவோடும் கருணையுடனும் இருங்கள்”, “எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே குறை கூறாதீர்கள்” என்பது போன்ற  தார்மீகக் கருத்துக்களை கலையில் முன்வைப்பதில் உள்ள சிக்கல் யாதெனின், ஒருவருக்கு அவை ஆச்சரியமாகவோ புதுமையாகவோ இருக்கப்போவதில்லை. மாறாக வெளிப்படையானதாகவும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தோன்றிவிடுகிறது. அவற்றின் தொடர் நியாயத்தன்மை  காரணமாகவே நம் குணத்தை மாற்றியமைக்கக்கூடிய வல்லமைபடைத்த அதன் திறன் வலுவிழந்துவிடுகிறது.

“நாம் நம் அண்டை வீட்டாருடன் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்”, “நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்” என்பதை ஓராயிரம் முறை கேட்டிருப்போம். இருந்தும், இந்த பரிந்துரைகள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதனாலேயே அவற்றின் அர்த்தத்தை இழந்துவிடுகின்றன. எனவே, கலைஞனின் பணி என்பது இவ்வாறு நாம் கேட்டு கேட்டு பழகிப்போன, ஆனால் முக்கியமான கருத்துக்களை பிரதிபலிக்க புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதேயாகும். ஏனென்றால் அவைதான் நாம் எப்படி ஒரு சமநிலையான நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைக் கொண்டுள்ளன. 

நரகத்தின் சித்திரவதைகளுக்கிணையான உணர்வுகளை படைப்பில் தொடர்ந்து உருவாக்குவதும், அதன் உயிர்ப்பை தக்கவைப்பதும் எளிதான காரியமல்ல. ஏனென்றால் அவை ஒரு சம்பிரதாயமான முறையில் வெளிப்படுவதாக எண்ணி அவற்றை ஒருவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் போகும் வாய்ப்பே அதிகம். இந்த காரணத்தினால்தான் அர்னால்ட் போன்றவர்கள் மகத்தான கலைஞர்களாக வெளிப்படுகிறார்கள். நம் உணர்வுகளுக்கும் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்காமல் போகும்போது, எவற்றையெல்லாம் இழக்கக்கூடும் என்பதை உணர்த்தி, ஒரு திறப்பை அவரால் அளித்திடமுடிகிறது. இந்த புகைப்படத்தை படுக்கையறையிலோ,  சமையலறையிலோ வைக்கலாம். அதுதான் இதற்கான சரியான இடமும்கூட. ஏனென்றால், ஒருவர் கோபத்தின் உச்சத்தில், ‘யாருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று எனக்கு தெரியும், இனி நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்ல எத்தனிக்கும்போது இப்புகைப்படத்தை பார்க்கநேரிடும் வாய்ப்பு அமையக்கூடும்.

நம் நல்லியல்புகளை ஊக்குவிக்கும் வகையான கலைப்படைப்புகள், பொதுவாக அவற்றை நேரடியாக போதனைபோன்று எடுத்துரைப்பதில்லை. உதாரணமாக கொரிய “நிலவு ஜாடியை” (moon jar) கவனத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

Choson dynasty. Korean Moon Jar 17th-18th century

பயனுள்ள கொள்கலன் என்பதைத்தாண்டி, அது பணிவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த உருவகமாக உள்ளது. அதன் மேற்பரப்பிலுள்ள சிறு சிறு கரும்புள்ளிகளும், அவற்றின் வண்ண மாறுபாடுகளும், மேற்புற ஒழுங்கின்மையும், முழுதாக வழவழப்போ சொரசொரப்போ அற்ற பூரணமற்ற கோள வடிவமும், இந்த தன்மையை அதற்கு அளிக்கின்றன. சூளைக்குள் இருக்கும் தூசிகளே அதன் மேற்பரப்பிலுள்ள கரும்புள்ளிகளுக்கு காரணம். எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாததே அதை பணிவிற்கான அடையாளமாக ஆக்குகின்றது. சொல்லப்போனால், அந்த ஜாடிகளின் இந்த குறைபாடுகள்தான் சுயபெருமிதத்தின்மீது அவற்றிற்கிருக்கும் ஆர்வமின்மைக்கு  சாட்சியாய் அமைந்துள்ளன. அவை தங்களை விசேஷமானதாகவும்கூட வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. அந்த ஞானம் அவற்றுக்குள் இருக்கிறது; உண்மையில் அவை பணிவை வலிய வரவழைத்துகொண்டிருக்கவில்லை; அது என்னவாக இருக்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்தவும் செய்கிறது- அவ்வளவுதான். 

சமூகப்பெருமிதம் பற்றிய ஆணவத்தையோ அல்லது அதற்கான பதட்டத்தையோ கொண்ட ஒரு நபரை எடுத்துக்கொள்வோம். அவர்  சமூகக் கூட்டங்களில் பங்குபெறும்போது தன் சுய அங்கீகாரத்தை பற்றிய மனக்குழப்பத்தோடே இருப்பார். அவ்வேளையில் அவர் இந்த ஜாடியை பார்க்கும்போது அது அவருக்குள் ஒரு தீவிரமான மாற்றத்தை ஊக்குவிக்க வாய்ப்பிருக்கிறது. அடக்கத்தின் இலட்சியவாத வடிவத்தை மிகத் தெளிவாகப் பார்க்கும்போது, அதிலிருந்து எவ்வளவு தூரம் தான் விலகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணரமுடிவது இயல்பானதே. எனினும் கவலைகொள்ளத்தேவையில்லை. அதற்காகவே இந்த ஜாடிகள் நம்முடன் இருக்கின்றன. பொதுவாக நல்லுள்ளம் கொண்ட நேர்மையான ஒரு நபர், எங்கு தான் பாதிப்புக்குள்ளாகிவிடுவோமோ என்ற அச்சத்தாலும் பாதுகாப்பின்மையின் பயத்தாலும் ஆணவத்தை ஒரு அரணாக வெளிப்படுத்துவாராயின், அவர் இந்த ஜாடியைப் கூர்ந்து கவனிக்கும்போது, அந்த சாதாரன பீங்கான் ஜாடி அதன் குறியீடுகளின்   தொடுகையால், அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதை நாம் புரிந்துகொள்ளலாம்.

கலை நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது; நம் வாழ்வை காப்பாற்றுகிறது ; ஏற்கனவே போதுமான அளவு அறிந்துவிட்டோம் என்று ஒருபோதும் கருதிவிடக்கூடாத நல்லொழுக்கங்களையும் சமநிலையையும் தக்கவைத்துக்கொள்ள உறுதுணையாய் இருக்கிறது.  

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. இந்தக் கட்டுரைத் தொடரில் வரும் எல்லா கட்டுரையும் கலையை பற்றிய புதிய பார்வைகளை அறிமுகப்படுத்துகிறது. ‘கலையின் பயன்பாடு என்ன?’ என்ற கேள்வி எரிச்சலூட்டக் கூடியது என்ற எண்ணத்தை மீறியும் இந்த கட்டுரைகள் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.