/

குவேணி! பண்டைய இலங்கை நாகரிகமும் ஆங்கில நாவலும்: ஜிஃப்ரி ஹாஸன்

சமகால இலங்கையின் ஆங்கில நாவல்வெளியில் சிங்கள எழுத்தாளர்களின் பங்களிப்புகளே அதிகம். இந்தத் தளத்தில் இயங்கும் தமிழ் எழுத்தாளர்கள் மிகச் சொற்பமானவர்கள்தான். இலங்கையின் ஆங்கில நாவல்கள் பொதுவாக இலங்கை வரலாறு, புலம்பெயர் சிங்கள வாழ்வு, இலங்கையின் போர் மற்றும் அரசியல், சமூக பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள், சமப்பாலுறவு, கலாசார மோதல்கள் என பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சந்திரா ஆரியரத்னவின் குவேணி நாவல் பண்டைய இலங்கை நாகரிகத்தைக் கதையாடும் வரலாற்று ஆங்கில நாவல்களுள் ஒன்று. இலங்கையின் வரலாற்றை ஆரியர் வருகையுடன் அதாவது சிங்கள நாகரிகத்துடன் தொடங்கும் பார்வையே சிங்களவர்கள் மத்தியில் வலுவாக ஊன்றியுள்ளது. விஜயனின் வருகைக்குப் பின்னரே இலங்கையில் நாகரிகம் தொடங்குவதாகவே இங்குள்ள பெரும்பாலான சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூவிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் சில நேர்மையான சிங்கள அறிவுஜீவிகள் தரப்பிலிருந்து இந்த வரலாற்று நோக்குக்கு மறுதலையான பார்வைகளும் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன.

சந்திரா ஆரியரத்தனவின் குவேணி நாவலை இத்தகையதொரு மாற்று வரலாற்றைப் பேசும் நாவல் என முழுமையாக கூறமுடியாவிட்டாலும் இலங்கையில் சிங்கள நாகரிகத்துக்கு முந்திய ஒரு நாகரிகத்தை, அரச வம்சத்தை, அரசைப் பற்றி இந்நாவல் பேசுகிறது என்றவகையில் இலங்கையின் வரலாற்று நாவல்கள் வரிசையில் சற்றுப் புதுமையான முயற்சியாகத் தோன்றுகிறது.    

 இந்நாவல் விஜயனின் வருகையையும் அதற்கு முன்னர் இலங்கையில் நிலவிய புராதன நாகரிகம், அரசு, வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் இலங்கையில் காணப்பட்ட இயற்கை வளங்கள், ஆரியருக்கு முற்பட்ட இலங்கையின் சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், நெய்தல் முறைகள், கடல் பாதுகாப்பு படை என பண்டைய இலங்கை குறித்து நாம் தெரிந்துகொள்ள விரும்பும் பல்வேறு அம்சங்கள் பற்றியும் விவரிக்கிறது. ஜம்புத்துவீபத்தில் (இந்தியா) விஜயனையும் ராக்சஸ்துவீபத்தில் (இலங்கை) குவேனியையும் சுற்றி கதை நகர்ந்தாலும் கூட பண்டைய இலங்கையின் மக்கள் வாழ்வியலினதும், பாரம்பரியத்தினதும் பதிவாக நாவலின் சில பகுதிகள் தேறிவருகின்றன.

இந்நாவலின் முக்கியத்துவம் என்பது விஜயன் வருகைக்கு முன்னமே இலங்கையில் ஒரு புராதன நாகரிகமும், ஒரு அரசும் நிலவியிருந்தது என்பதை விவரித்துச் சொல்வதுதான். பண்டைய இலங்கையின் ஆதிக்குடிகளாக நாம் அறிந்து வைத்திருக்கும் யக்கர், ராக்சஸர், நாகர் போன்றவர்களுக்கு அப்பால் (இவர்கள் மனிதர்கள் அல்ல என்றொரு கருத்தும் உள்ளது) Shy Nittawos, Dasyus, Pulindas போன்ற இனக் குழுக்கள் பற்றியும் சொல்கிறார். அப்போது அந்த மக்களின் வாழ்க்கை இயல்பாகவும் அமைதியாகவும் இருந்தாக சொல்கிறார். ஆனால் சில இளைஞர்கள் மாடுகளைத் திருடவும், கன்னிப் பெண்களைக் கடத்தவும் பக்கத்துக் கிராமங்களுக்குள் நுழையும் போது மட்டுமே சில சச்சரவுகள் மூண்டுள்ளன என நாவல் சொல்கிறது.

மீன், ஜெம், நீர்வளம், மரக்கறிகள், யானைத் தந்தம், மாணிக்கம், காட்டு எருமை, பறவைகள் போன்றன பண்டைய இலங்கையின் வளங்களாக நாவலில் சித்திரிக்கப்படுகின்றன. பண்டைய இலங்கையின் கடவுள்களாக சுமன, சமன், உபுல்வான், நதா ஆகிய நான்கு காக்கும் கடவுள்கள் சொல்லப்படுகின்றனர். இதில் சமன் என்பது வேறு எந்த நாகரிகத்திலும் காணப்படாத இலங்கைக்கு மட்டுமே உரித்தான கடவுளாகும்.

மகாவம்சத்தைத் தாண்டி இன்றைய சிங்கள வரலாற்றாய்வாளர்கள் தங்களுக்கென கட்டமைக்க முனையும் வரலாறு குறித்த ஒரு ஆழமான புரிதலை ஒரு நுண்ணிய வாசிப்பின் போது நமக்குள் ஏற்படுத்துவது நாவலின் ஆக்கமான இன்னொரு பக்கம் என்றால் கதையின் பெரும்பாலான பகுதிகள் முழுக்க முழுக்க மகாவம்சத்தை அப்படியே தழுவி நிற்பது நாவலின் மிக முக்கிய பலவீனமான உள்ளடக்க அம்சமாக இன்னொரு புறம் வெளிப்படுகிறது.

நாவலின் முதல் அத்தியாயம் விஜயனின் பரம்பரை இந்தியாவில் எப்படித் தோற்றம் பெற்றது என்ற வரலாற்றோடு தொடங்குகிறது. முழுக்க முழுக்க மகாவம்சத்தை தழுவியே கதை நகர்த்தப்படுகிறது. நாவலில் இந்தியா ஜம்புத்துவீபம் என்றும் இலங்கை ரக்சஸ்துவீபம் (Rakshasdveepa) என்றும் அழைக்கப்படுகின்றன.

வங்க மன்னனினதும் (அவனது மனைவியும் அரசியுமான கலிங்க மன்னனின் மகள்) மாயாதேவியினதுமான அழகிய மகள் சுப்பாதேவி எனும் இளவரசி. அவள் பிறந்த போது வழமை போன்று அரசன் மகள் பற்றி குறிசொல்பவர்களிடம் அவளது எதிர்காலம் பற்றிக் கேட்கிறான். அவர்கள் அவள் அழகியாக இருந்தாலும் பிடிவாதக் குணமுள்ள முரட்டுப் பெண்ணாகவே வளர்வாள். அவள் தனக்கும் ஒரு சிங்கத்துக்கும் பிறக்கும் ஒரு புத்திரன் மூலம் ஒரு புதிய அரச வம்சத்தைத் தோற்றுவிப்பாள் என்றனர்.

அரசனுக்கும் அரசிக்கும் அது அச்சத்தையும் வெட்கத்தையும் (மிருகத்துடன் என்பதனால்) ஒருசேர ஏற்படுத்தியது. இதனால் அவள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வீட்டுத் தனிமைச்சிறையில் அடைக்கப்படுகிறாள். ஒருநாள் ஒரு பையனைப் போல் மாறுவேடம் பூண்டு அரண்மனையிலிருந்து தப்பித்து நாடோடிகள் கூட்டத்துடன் இணைந்து விடுகிறாள். இந்த நாடோடிகள் குழு வழியில் சிங்ஹா தலைமையிலான படையொன்றினால் இடைமறிக்கப்பட்டு தாக்கப்படுகிறது.

இந்த இடத்தில் மகாவம்சத்திலிருந்து சந்திரா விலகும் புள்ளி வருகிறது. குறிசொல்பவர்களும் அதனை சிங்கம் (விலங்கு) என்றுதான் சொல்கின்றனர் அதேபோல் மகாவம்சமும் அதனை சிங்கம் (விலங்கு) என்றுதான் சித்திரிக்கிறது. மகாவம்சத்தில் இந்த சம்பவம் இப்படி விபரிக்கப்படுகிறது-

“….லாலா நாட்டுக் காட்டில் ஒரு சிங்கம் அவர்களைத் தாக்கியது. மற்றவர்கள் ஓடிவிட்டனர். அவள் மட்டும் சிங்கம் வந்த திசையிலேயே சென்றாள். சிங்கத்துக்குத் தேவையான இரை கிடைத்த பிறகு, அவ்விடத்தை விட்டு அகன்றது. தூரத்திலிருந்து அவளைப் பார்த்தது. அவள் மீது காதல் பற்றிக் கொண்டது. வாளை ஆட்டிக்கொண்டும், காதுகளை பின்னுக்குத் தள்ளிக் கொண்டும் அவளருகே வந்தது.

அதைக் கண்ட அவளுக்கு சோதிடர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அச்சமின்றி சிங்கத்தை வருடிக் கொடுத்தாள். தட்டிக் கொடுத்தாள். அவளின் ஸ்பரிசத்தால் சிங்கம் உணர்ச்சி மேலிட, அவளைத் தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு வேகமாகத் தன் குகைக்குச் சென்றது. அவளோடு இணைந்தது. புணர்ச்சியின் விளைவாக உரிய காலத்தில் அவளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்….”

ஆனால் சந்திரா ஆரியரத்ன தனது நாவலில் சிங்ஹா வை தோற்றத்தில் சிங்கம் போன்றிருந்த ஒருவனாக சித்திரிக்கிறார். சிங்ஹா என்பது சிங்கம் இல்லை. அவன் சிங்கம் போன்ற வீரமும் கம்பீரமும் கொண்ட ஒரு மனிதன் என்பதே அவரது சிங்ஹா குறித்த சித்திரிப்பாக இருக்கிறது.

“The leader of this group was Sinha. He was leonine in appearance, taller than average, broad shoulders, slim hips, rippling with hardened muscles, he was handsome specimen of a man. He had the strength and courage of a lion. He feared no man…or beast. To add to the colorful character he wore a skin of a lion he had killed himself“  

இந்த குழுவின் தலைவன் சின்ஹா. அவன் தோற்றத்தில் சிங்கம் போன்றிருந்தான், சராசரியை விட உயரம், அகன்ற தோள்கள், மெலிதான இடுப்பு, அவன் வன்மையான தசைகளுடன் அலையும், ஒரு மனிதனுக்கான அழகான மாதிரி. சிங்கத்தின் வலிமையும் தைரியமும் அவனிடம் இருந்தன. அவன் எந்தவொரு மனிதனுக்கோமிருகத்துக்கோ பயப்படவில்லை. தனக்கு வண்ணமயமான பண்பைச் சேர்க்க, அவன் தன்னைக் கொல்ல வந்த சிங்கத்தைக் கொன்று அதன் தோலை அணிந்திருந்தான்

என சந்திரா சிங்ஹாவைப் பற்றி விபரிக்கும்போது சிங்ஹாவில் வாசகன் ஒரு மனிதனைத்தான் தரிசிக்கிறான். சிங்கம் போன்றவன் என்பதுதான் சிங்கம் என புரிந்துகொள்ளப்பட்டது என்பதே சந்திராவின் நிலைப்பாடாகத் தெரிகிறது. இங்கு சந்திரா ஆரியரத்ன மகாவம்சம் கூறும் சிங்களவர்கள் சிங்கத்துக்கும் (சிங்ஹா) ஒரு பெண்ணுக்கும் (சுப்பாதேவி) பிறந்த சந்ததி என்ற அருவருப்பானதும் வேடிக்கையானதுமான வரலாற்றுத் தகவலிலிருந்து விலகி சிங்கத்துக்கும்- மனிதனுக்கும் பிறப்பது சாத்தியமற்றது என்பதால் அறிவியல் யோசனைக்கு ஏற்ற விதத்தில் அதனை மீள்கட்டமைப்பு செய்ய முனைந்திருப்பது போல் தோன்றுகிறது. அதேநேரம், மகாவம்சத்தின் கதையையே திரும்ப எழுதியது போன்ற சங்கடமான உணர்விலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் ஒரு எத்தனமாக கூட நாவலின் இந்த இடத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மகாவம்சத்தில் வருவதைப் போன்றே இந்நாவலிலும் சிங்ஹா சுப்பாதேவியை கொண்டு சென்று ஒரு குகையில் அடைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகள் பெறுகிறாள். மகன் சிங்கபாகு. மகள் சிங்கசீவலி. சிங்ஹா வெளியே செல்லும் போது இவர்களைக் குகையில் வைத்து அடைத்து விட்டே செல்வது வழக்கம். சிங்ஹாவுக்கு மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் அதிக பாசம் இருந்தது. அதே போல மூன்று பேரிலும் சிங்ஹாவின் மீது அதிக பாசம் கொண்டிருந்தது மகளான சிங்ஹசீவலி. இப்போது பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். இந்த குகைச் சிறை வாழ்க்கை அவர்களுக்கு கசந்துவிட்டது. சிங்கபாகுவும் மிகவும் பலாசாலியாகவும், தைரியசாலியாகவும் வளர்ந்து விட்டிருந்தான். அவன் குகையை விட்டும் தப்பிச் செல்வது பற்றி அம்மாவிடம் பேசத் தொடங்குகிறான. உரையாடல்களில் அம்மா, அப்பா என்ற வார்த்தைகள் தான் பாவிக்கப்படுகின்றன. ஒருநாள் சிங்ஹா குகையை விட்டுச் சென்றதும் சிங்கபாகு குகையை விட்டுத் தப்பிக்கும் யோசனையை அம்மாவிடம் முன்வைக்கிறான்.

‘Amma, now is the chance. Let’s run away’

Suppadevi agreed to the plan while Sinhaseevali did not want to leave her beloved father.

‘Appa will miss us. He won’t have anybody to look after him Amma and who will look after us?’

மகள் சிங்ஹாவின் மீது கொண்டிருந்த நேயம் இந்த உரையாடலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருந்தாலும் மூவரும் தப்பி அங்கிருந்து மிகத்தொலைவான இடத்துக்குச் சென்று விடுகின்றனர். அங்கு வழியில் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் நீதிபதியைச் சந்திக்கின்றனர். அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இவர்களுக்கு ஆடை கொடுக்கும்படி மக்களிடம் சொல்கிறார். சுப்பாதேவியை அடையாளம் கணடுகொண்ட அவர் அவளைத் திருமணமும் செய்துகொள்கிறார். பிள்ளைகளை தன் சொந்தப் பிள்ளைகள் போன்று கவனித்துக் கொள்கிறார்.

குகைக்கு மீண்டு வந்த சிங்ஹா தன் குடும்பம் அங்கு இல்லை எனக் கண்டதும் கோபம் கொள்கிறான். அவர்களை எங்கிலும் தேடியலைகிறான். அவர்கள் கிடைக்காத கோபத்தில் மக்களைக் கொல்லத் தொடங்குகிறான். இதனால் அரசன் சிங்ஹாவுக்கு முடிவுகட்டத் தீர்மானித்து, சிங்ஹாவின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 3000 தங்கக் காசுகள் பரிசுத்திட்டத்தை அறிவிக்கிறான்.

சிங்ஹாவின் மகன் சிங்கபாகு சிங்ஹாவைத் தான் கொல்லத் தயாராகிறான். அதனை அவனது அம்மாவும், சகோதரியும் தடுக்கின்றனர். அவர்களைப் புறக்கணித்து அவன் அதனை மேற்கொள்ள இசைகிறான். சிங்ஹாவின் தலையைக் கொண்டுவந்தால் தங்கக் காசுகளோடு நாட்டில் ஓர் உயர் பதவியும் தருவதாக அரசன் அவனுக்கு வாக்குறுதி வழங்குகிறான். அப்போது அரசர் வயது முதிர்ந்து இயலாத நிலையில் இருந்தார்.

இருபக்கங்களும் நண்பர்கள் புடைசூழ சிங்கபாகு சிங்ஹாவை நெருங்குகிறான். தனது தந்தை தன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை சிங்கபாகு அறிந்திருந்தான். அதனால் அவர் அவனை அருகே வர அனுமதித்தார். என் மகனே என் மகனே என கைகளை நீட்டிக் கொண்டு தழுவ வந்த தந்தையை நோக்கி சிங்கபாகு அம்பை எய்தான் முதல் அம்புக்கு மறுக்கித் தப்புகிறார் தந்தை. அன்பை ஒரு ஆயுதமாகக் கொண்டு சிங்ஹாவை வீழ்த்துகிறான் சிங்கபாகு. கூட்டத்தின் பாராட்டைப் பெறுகிறான். வீரன் நாயகன் என்றெல்லாம் புகழப்படுகிறான்.

சிங்ஹாவின் தலையுடன் அவன் திரும்பி வந்தபோது மன்னர் இறந்திருந்தார். ஆண் வாரிசுகள் அவருக்கு இல்லாததால் அமைச்சர்கள் சிங்கபாகுக்கு அரசாட்சியை வழங்க முன்வந்தனர். தனது தந்தையைக் கொன்றதன் சன்மானமாக அது கிடைத்ததனால் சிங்பாகு அந்த அரசுடைமையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதை அவன் தனது வளர்ப்புத் தந்தைக்கு கொடுத்தான். பின்னர் தன் சகோதரியான சிங்கசீவலியை அழைத்துக்கொண்டு சென்று தந்தையின் நினைவாக சிங்கபுர எனும் பெயரில் புதிய தேசத்தை அவதாவது லாடா ராஜ்ஜியத்தை உருவாக்கினான். அதுவே தற்போதைய பங்களாதேஷ் ஆகும். அவனுக்கு பதினாறு இரட்டைப் பிள்ளைகள் பிறக்கின்றன. அதில் மூத்தவனே விஜயன்.

விஜயன் முரட்டு சுபாவத்துடனும் கட்டுப்பாடற்றவனுமாக இருந்ததானால் அரசாட்சி செய்ய பொருத்தமற்றவனாகக் கருதப்பட்டு அவன் தன் தந்தையால் விரட்டப்படுகிறான். அவனுடன் நட்பு பாராட்டிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மேலும் எழுநூறு பேருடன் மூன்று கப்பல்களில் இலங்கையை வந்தடைகிறான்.

நாவலின் இரண்டாவது அத்தியாயம் பண்டைய இலங்கையின் யக்கா சமூகத்தின் தலைவர் பிம்பாவின் மனைவியான இளவரசி சந்திரவதிக்கு நிகழும் பிரசவம் பற்றிய விபரிப்புடன் தொடங்குகிறது.

சிங்கள நாகரிகத்துக்கு முன்னரான பண்டைய இலங்கையில் நிலவிய நாகரிகத்தை அரசை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. இளவரசிக்கு அவளது குடும்ப மருத்துவிச்சியான சிம்பிக்கா பிரசவம் பார்க்கிறாள். மிகுந்த அனுபவமும், முதிர்ச்சியும், திறமையும் கொண்ட மருத்துவிச்சி சிம்பிக்கா. ஒரு வயதான பெண்ணும் கூட. அவள் நாவலில் கிரியம்மா என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறாள். அக்குழந்தை பிறக்கும் போதே வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கடும் புயல் நாட்டைத் தாக்கி பலத்த சேதங்களை உண்டு பண்ணுகிறது. அது நிகழவிருக்கும் ஒரு பேராபத்தின் சமிக்ஞையாக தெரிகிறது. அரட்டை அடிக்கும் பெண்கள் ஒரு பாவி பிறக்கப் போகிறான் என தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். இளவரசிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதுவே குவேனி. குவேனி மிக அழகாக ஜொலிக்கும் தங்க நிறத்தில் இருந்தாள். நாவலில் குவண்ணா என்றே அழைக்கப்படுகிறாள். ஆண் குழந்தைக்கான எதிர்பார்ப்பே அவர்களிடம் வலுவாக இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அரச குடும்பங்களில் அந்த எதிர்பார்ப்பு மிக ஆழமானது. சந்திரவதி தனது கணவர் ராஜ்ஜியத் தலைவர் பிம்பாவிடம் ‘My lord would be very disappointed that it is a girl’ என்கிறாள். ஆனால் அதை ஒரு சோகமாகக் காட்டிக்கொள்ளாத பிம்பா தான் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது போல இளவரசிக்கு ஆறுதல் கூறுகிறான். ஆனால் மறுநாள் பிம்பாவுக்கு அது ஒரு பெண்பிள்ளை என்பதாலும் அதன் ஜாதகத்தை குறிசொல்பவர்களிடம் கேட்டுத் தெரிந்ததாலும் அதன் மீது கோபங்கொள்கிறான்.

குவேணி பிற்காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் உறவுகொண்டு நமது இனம் அழிந்துவிடக் காரணமாக இருப்பாள் என சோதிடர்கள் சொல்வதாகவும் அதனால் குவேணியைத் தான் கொன்றுவிடப் போவதாகவும் பிம்பா சந்திரவதியிடம் சொல்கிறான். அதிர்ச்சியடைந்த சந்திரவதி பிம்பாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறாள்.

அன்பே, இராவணனின் காலத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஜம்புத்துவீபத்திலிருந்து சீதையை அவர் ரக்சஸ்துவீபத்துக்கு கடத்திக் கொண்டு வந்தமையால்தான் பெரும் யுத்தம் மூண்டு நம் இனமே அழிந்தது என பிம்பா சொல்கிறான். அத்தகையதொரு நிகழ்வு மீண்டும் நிகழ்ந்து தங்கள் இனம் அழிந்துவிடக்கூடாது என்பது அவன் விருப்பமாக இருக்கிறது. நாவலின் இந்த இடம் பண்டைய இலங்கையின் மிக முக்கிய வரலாற்றுக் கட்டத்தை பதிவுசெய்கிறது. சிங்கள நாகரிகத்துக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகள், நிலவிய பண்டைய நாகரிகம், அரசு பற்றிய தேடலுக்கு வாசகனை இட்டுச் செல்கிறது. இராமன்-இராவணன் யுத்தத்தால் தங்கள் இனம் அழிந்ததாக பிம்பா சொல்கிறான். எனவே ஆரியர் வருகைக்கு முன்னமே இலங்கையில் ஓர் அரசும் நாகரிகமும் இருந்திருக்கிறது என்பது நமக்கு மேலும் உறுதியாகிறது. அழிந்த அந்த இனம் எது? அதன் இன்றைய இனத் தொடர்ச்சி யார்? என்ற கேள்வியை தன்னளவில் வாசகன் எழுப்பிக் கொள்கிறான்.  

குவேணியாலும் நம் இனம் அழிந்துவிடும் என்ற அச்சம் பிம்பாவின் பேச்சில் கடுமையாகத் தொனிக்கிறது. அதனால் அவன் குவேணியைக் கொல்லத்தான் போகிறான் என்பது சந்திரவதிக்கு உறுதியாகிவிட்டது. சந்திரவதியின் சகோதரர்களில் இளைய சகோதரனான மயிலாவளனயைத் தவிர அனைவரும் பிம்பாவின் கருத்தையே ஏற்றுக்கொண்டனர்.

அதனால் யாருக்கும் தெரியாமல் சந்திரவதி தன் குடும்ப மருத்துவிச்சியான சிம்பிகா எனும் கிரியம்மாவிடம் மகளைக் கொடுத்து மலையரட்டைக்கு அனுப்பி விடுகிறாள். அவர்கள் செல்லும் வழியில் பெண் குழந்தையொன்று ஒரு பெண்ணுக்குப் பிறந்து இறந்துவிடுகிறது. இறந்தது குவேணி என்ற கதை கட்டிவிடப்பட்டு ஊரெங்கும் பரப்பப்படுகிறது. அதை நம்பி பிம்பா அமைதியடைகிறான்.

கிரியம்மாவைப் பொறுத்தவரை அவள் இந்த நாவலின் மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறாள். அங்கே அனுபவமிக்க அறிவார்ந்த கிரியம்மாவால் குவேணி மிகச் சிறப்பாக ஒரு இளவரசிக்குத் தேவையான அத்தனை அறிவும் புகட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள். சந்திரா சிம்பிக்காவை ஏன் கிரியம்மா என அழைக்கிறார்? நாவலில் அவளைத் தெரிந்த எல்லாக் கதாபாத்திரங்களும் அவளைக் கிரியம்மா என்றே அழைக்கின்றனர். கிரியம்மா என்பது சிங்கள பௌத்த பண்பாட்டில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. புகழ்பெற்ற சிங்கள மானுடவியல் அறிஞர் கணநாத் ஒபேசேகர கிரியம்மா பற்றி இப்படிச் சொல்கிறார்- பௌத்த சிங்களவர்களிடம் புகழ்பெற்று விளங்கிய ஒரு பூர்வீகத் தாய்த் தெய்வம் கிரி அம்மாஆகும். கிரி என்றால் பால், அம்மா என்றால் தாய் ஆகும். இலங்கை முழுவதிலும் சிங்கள மக்களிடம் நீக்கமற நிறைந்திருந்த இந்தத் தெய்வம் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றும் தெய்வமாகும். அம்மை, கொள்ளை நோய் முதலானவை தொற்றிக் கொள்ளும் போது நோய்வாய்ப்படடிருக்கும் குழந்தையின் வீட்டிற்குக் கைக் குழந்தைகளுக்குப் பாலூட்டும் ஏழு தாய்மார்களை அழைப்பார்கள். அவர்களுக்குப் பால்சோறுடன் கவுன் எனப்படும் எண்ணெயில் பொரித்த பலகாரத்தையும் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தைக் கோருவார்கள். தானம் பெற்றுக்கொண்ட அந்த ஏழு தாய்மார்களும் குழந்தை நலம் பெற கிரியம்மாவை வேண்டி அருளாசி சொல்வார்கள்

சந்திரா ஆரியரத்ன நாவலில் சிம்பிகாவை கிரியம்மா என அழைப்பதற்குப் பின்னாலிருக்கும் சமூகப் பண்பாட்டுக் காரணம் குவேணிக்கு ஒரு கிரியம்மாவாக சிம்பிகா இருக்கிறாள் என்பதுதான். சிம்பிக்கா குவேணிக்கு வாழ்வியல் கலைகளை நிறையவே கற்றுக்கொடுக்கிறாள். மூலிகை மருத்துவம், பாயிழைத்தல், கொட்டன் மற்றும் சில்க் ஆடைகள் நெய்தல் போன்ற கலைகளை மிகச் சிறப்பாக குவேணி கற்றுக்கொள்கிறாள். அப்போது சில்க் நூல்கள் தூரகிழக்கு நாடொன்றிலிருந்து கப்பல்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நாவலில் சொல்லப்படுகிறது.

சிம்பிகா, கிராமப் பெரியவர்களின் உதவியுடன், இரகசியமாகச் சத்தியம் செய்து, வருங்கால ஆட்சியாளருக்கு வாள் விளையாட்டு, தன்னைத் தானே தற்காத்துக் கொள்வது, வசியம், மாந்திரீகம் மற்றும் மந்திரங்கள், ஜோதிடம் போன்ற சில விசயங்களையும் கற்றுக் கொடுத்தாள். “Shimbikha with help of village elders, sworn to secrecy, taught her some of the few things a future ruler should know like sword play, how to defend herself, even how to charm, chants and mantrams, astrology” என சந்திரா ஆரியரத்ன இதனை விவரிக்கிறார்.

குவேணி மிகத் திறமையானவளாக வளர்ந்து வருகிறாள். அனைத்துக் கலைகளையும் அவளது வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் போது அது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவள் ஒரு வித்தியாசமான சிறுமி (பெண்) என்பதை எல்லோரும் அறிந்துகொள்கின்றனர். அவளது திறமைகள் குறித்து ஆச்சரியமடைந்த சில கிராமத்துப் பெரியவர்கள், கஜ்ஜராகமத்தின் மையப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மிகவும் புத்திசாலியான ஒரு துறவியிடம் குழந்தையை அழைத்துச் செல்லும்படி சிம்பிகாவுக்கு ஆலோசனை கூறுகின்றனர். சிம்பிகா துறவியிடம் இரகசியமாக குவேணியை அழைத்துச் செல்கிறாள். துறவி வசித்த இடம் புத்தர் வந்திறங்கிய இடம் எனவும் அந்த சூழல் குறித்த விபரிப்பு அதனை ஒரு பௌத்த சூழலாகவே வாசக மனதில் பதிக்கிறது. இது நாவலில் சந்திராவின் முற்சாய்வு மனப்பான்மையை எடுத்துக் காட்டும் இடமாக விரிகிறது.

ஆளுமையான பெண்ணாக வளரும் குவேணி சாதாரணமாக எல்லோருடனும் குறிப்பாக ஆண்களுடன் சரிசமமாகப் பழக விரும்பவில்லை. விஷக்கடி மருத்துவம், போர்க் கலை, நூல் நூற்றல் போன்றவற்றில் அவள் சிறப்புத் தேர்ச்சியுடன் இருக்கிறாள். அவளது புகழ் பின்னர் அவளது பெற்றோருக்கும் சென்றடைகிறது. சந்திரவதி பின்னர் பிம்பாவிடம் உண்மையைச் சொல்கிறாள். அவனும் குவேணியின் திறமையைக் கண்டு அவளை ஏற்றுக்கொண்டு படைச்சேனாதிபதியாக அவளை நியமிக்கிறான். ஆனாலும் அவளுக்கான பாதுகாப்பை தந்தை தீவிரமாக்கி இருந்தார். எப்போதும் அவளைச் சுற்றி படை இருந்துகொண்டே இருந்தது.

குவேணி ஒருநாள் இரவு தூங்கும் போது ஓர் அழகான இளைஞனை கனவில் காண்கிறாள். அவன் பார்ப்பதற்கு இளவரசன் போன்ற தோற்றத்திலிருந்தான். கனவில் தோன்றிய அவன் அவள் இதயத்தில் அழியாச் சித்திரமாக இடம்பிடித்திருந்தான்.

இதற்கிடையில் சூலா என்பவன் (சற்று அந்தஸ்தில் கூடிய ஒருவன்) குவேணியை மணக்க தீவிரமாக விரும்புகிறான். ஆனால் குவேணிக்கு அவனை அறவே பிடிக்கவில்லை. தனக்குத் தகுதியானவன் அவன் கிடையாது என்ற பிடிவாதம் அவளிடமிருந்தது. அவளது கற்பனை எல்லாம் அவள் கனவில் கண்ட இளைஞனைச் சுற்றியே இருந்தது. சூழல் மன்னன் பிம்பாவுக்குச் சாதகமாக அமையவில்லை. குவேணி தன் தலையெழுத்தை நோக்கியே சென்று கொண்டிருந்தாள். விதியின் முன்னே அவள் மதி மயங்கியது.

ஒரு நாள் குவேணி தன் படையினருடன் இரவு நேரப் பாதுகாப்புக்காக கடற்கரைப் பகுதிக்குச் சென்ற போது புதுமையான ஒரு காட்சியைக் காண்கிறாள். மூன்று கப்பல்களில் கிட்டத்தட்ட 700 பேரளவில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என மனிதக்கூட்டத்தைக் காண்கிறார்கள். விஜயனும் அவனது உறவினர் நண்பர்கள் உள்ளிட்ட குழுவினரே அங்கே தரை இறங்கி நின்றவர்கள். குவேணியின் ஆட்கள் அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என தீர்மானித்து தாக்குவதற்கு அவளிடம் கோருகின்றனர். ஆனால் அவள் அதனை விரும்பவில்லை. அவர்களைப் பார்த்தால் கப்பல் உடைந்து இங்கே கரையொதுங்கியவர்களைப் போல் இருப்பதாகச் சொல்கிறாள்.

அந்தக் கப்பலிலிருந்து இறங்கி வந்த ஒருவன் அவள் கனவில் கண்ட அதே இளைஞன் போன்றிருந்தான். அவள் தன் கனவு நாயகனை மறைவாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள். லொக்கா என்ற படைவீரன் இவர்கள் ஆக்கரிமிப்பாளர்கள்தான் என அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தான். குவேணி அதனை மறுத்து மறைந்திருந்து கண்காணிப்போம் என்றாள். குவேணியின் கலு என்கிற நாய் விஜயன் குழுவினரிடம் சென்று அவர்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றது. உடனே அந்தக் குழுவிலிருந்தவர்கள் நாய் இருப்பதால் இங்கே அயலில் கிராமம் ஒன்றிருப்பதாக சொல்லிக் கொண்டு நாயைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

எல்லோரும் கலைந்து சென்ற பின் விஜயன் மட்டும் ஒரு மரத்தின் கீழ் நிற்கிறான். அப்போது திடீரென்று வெண்ணிறத் தோற்றத்திலான மனிதன் ஒருவன் வானில் தாழ்வாகத் தோன்றி நீ அரசனாகப் போகிறாய் என ஆசீர்வதித்துவிட்டு மறைகிறான். அது அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இதன் பின் நடக்கும் கதை முழுக்க முழுக்க மகாவம்சத்தின் தழுவலாக,  அதை அப்படியே திரும்பி எழுதிய கதையாகவே எஞ்சுகிறது. விஜயன் குவேணியின் அரச குடும்பத்தை அழித்து அவளை மணமுடித்து ஆட்சியை கைப்பற்றுகிறான். புதிய அரசனாகும் அவன் சில வருடங்களின் பின் குவேணியை மீண்டும் மலையரட்டைக்கு தன் இரண்டு பிள்ளைகளுடனும் விரட்டிவிட்டு பாண்டிய இளவரசியை வரவழைத்து திருமணம் செய்து கொள்கிறான்.

நாவலின் இந்த இடத்தில் குவேணி விஜயனிடம் தன்னிலையை எடுத்துக் கூறிப் புலம்பும் காட்சி குவேணியின் மீதான பரிவை ஏற்படுத்துகிறது. தன் சொந்த நிலத்தில் ஒரு பெண் என்ற வகையில் அவளது கையறுநிலையை சந்திரா பதிவுசெய்கிறார்.

குவேணியின் மூலம் இந்த மண்ணில் தனக்கான ஆட்சியுரிமையைப் பெற்றுக்கொண்ட விஜயன் ஒரு நம்பிக்கைத் துரோகியாக, ஆதிக்குடிகளின் வெறுப்பாளனாக, இலங்கையின் பூர்வ குடிகளுக்கு நியாயாமாக நடந்துகொள்ளாத ஒருவனாகவே அவன் குறித்த சித்திரத்தை உள்வாங்க வேண்டி இருக்கிறது. பிம்பா முன்னரே பயந்ததைப் போல் விஜயனால் அவனது இனம் அழிக்கப்பட்டிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். சோதிடத்துக்கு அப்பால் அறிவியல் நோக்கிலும் இதுவே உண்மை எனத் தோன்றுகிறது. இந்த நாவல் முழுமை பெறாமல் இடையில் நிறுத்தப்பட்டது போன்ற உணர்வைத் தரவே நாவலின் பதிப்புரையை வாசித்தேன். உண்மையில் இது முழுமைபெறாத நாவல்தான். சந்திரா ஆரியரத்ன குவேணி நாவலை இந்தளவில் பதிப்புக்குக் கொடுத்திருக்கிறார். இதன் அடுத்த அத்தியாயங்களையும் அவர் எழுது முன்னமே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. அதனால் நாவல் முற்றுப் பெறாமல் முழுமையாக மகாவம்சத்தை தழுவிக் கொண்டு நிற்கிறது. நாவல் முடியும் இடத்திலிருந்து பார்த்தால் அதற்குப் பின்னரான சம்பவங்கள் மகாவம்சத்தின் மூலம் நாம் அறிந்து கொண்டவைதான். சிலவேளை அதைத் தாண்டி சந்திரா புதுமையாக எதையேனும் எழுதி இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை.      

நாவலில் குவேணி காலத்தில் மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம்தான் சித்திரிக்கப்படுகிறது. வறுத்த இறைச்சி, மீன் போன்ற உணவுப் பழக்கவழக்கங்களும் அந்த நாகரிகத்தின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கப்படுகிறது.பௌத்தத்தின் வருகைக்கு முன்னரே மறுபிறவிகள் குறித்த நம்பிக்கை பண்டைய இலங்கையின் பாரம்பரிய மதத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் நாவலுக்குள் இருக்கின்றன. சந்திரா ஓரிடத்தில்,

அவளுடைய கடந்த பிறப்பையும் எதிர்காலத்தையும் காணக்கூடிய பார்வைகள் அவளிடம் இருந்தனஎன குவேணியைப் பற்றி விவரிக்கிறார்.

தவிர மேலே சொன்னதைப்போல, இந்நாவலின் முக்கியத்துவம் என்பது ஆரியர் வருகைக்கு முன்னர் அதாவது சிங்கள நாகரிகத்துக்கு முன்னர் இலங்கையில் ஒரு புராதன நாகரிகம் இருந்தது எனபதை சராசரியாகவேனும் முன்வைப்பதுதான். அதற்குமேலே இந்நாவலுக்கு ஒரு முக்கியத்துவமுமில்லை. நாவலின் பெரும்பகுதி மகாவம்சத்தை தழுவி இருப்பதால் அதன் தனித்துவத்தைக்கூட இழந்து எது மகாவம்சம் எது சந்திரவதியின் புனைவு என்று பிரித்தறியக்கூட முடியாதளவு இரண்டும் வலுவாகப் பிணைந்திருகின்ற ஒரு புனைவாக குறுகி இருக்கிறது.   

ஒரு புனைவுக்கான அழகியல் விபரிப்புகளும், பாத்திரவார்ப்புகளுமற்று ஒரு வரலாற்று நாவலை எழுதும் போது நிகழும் அத்தனை களங்கங்களும் இந்நாவலுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

உரையாடலுக்கு

Your email address will not be published.