/

குஞ்சரம் ஊர்ந்தோர்: ஜேகே

யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே அமைந்துள்ள பாசையூர் கிராமத்தில் மீன் சந்தை ஒன்று தினமும் கூடுவதுண்டு. அங்கே காலை வேளைகளில் மீன் வாங்கச் செல்பவர்களுக்கு அந்த ஐயாவைத் தெரிந்திருக்கலாம். சந்தைக் கட்டடத்தின் கடற்கரைப் பக்க வாசலுக்கு அருகே ஒரு கதிரையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மிதப்பாக அமர்ந்திருந்தபடி அந்த வயோதிபர் சந்தையின் சந்தடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அந்தச் சந்தையே தன்னால்தான் இயங்குகிறது என்பதுபோல அங்கு நிற்கும் ஏல வியாபாரிகளையும் மீனவர்களையும் ஏய்த்தவண்ணம் இருப்பார். இடையிடையே பத்திரிகையை எடுத்து வாசிப்பார். மீன் வாங்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறுவார். ஒருநாள் ஆர்வமிகுதியில் வாங்கிய மீன்களைக் கழுவி அறுத்துக் கொடுக்கும் தொழிலாளர்களிடம் அவரைப்பற்றி விசாரித்தபோது ஒருவித புறுபுறுப்புடன் அவர்கள் பதில் தந்தார்.

“சீமான் அந்தக்காலத்துச் சம்மாட்டியார். பழைய மிதப்பில இன்னமும் திரியிறார்’         

பெரும் படகுகளின் உரிமையாளர்களே சம்மாட்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அக்காலத்தில் முத்துக்குளிப்புத் தொழிலில் ஈடுபட்ட படகுகளைச் சொந்தமாக வைத்திருந்தவர்களும் இவர்களே. மீன்பிடியிலும் பெரு வள்ளங்கள் அல்லது வத்தைகளின் சொந்தக்காரர்களை சம்மாட்டிகள் என்று அழைப்பார்கள். அந்த வத்தைகளின் சுக்கானைப் பிடித்து அவற்றைப் பொறுப்பாக ஓட்டிச்செல்பவர் மன்றாடியர் என்று அழைக்கப்படுவார். சம்மாட்டியார், மன்றாடியார் என்பவை சாதிப்பெயர்கள் அல்ல, அவை திறன் மற்றும் தகுதியால் ஒருவரிடம் வந்து சேர்பவை. ஒரு மன்றாடியார் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு வத்தையை வாங்கினாரேயானால் அவர் சம்மாட்டியார் ஆகிவிடுகிறார். பின்னர் ஒரு வத்தை இரண்டு வத்தையாகி மூன்றாகிப்பெருகும். அவரிடம் பலர் வேலை செய்வார்கள். மீன் வரத்து அதிகமாகும். மீதமாகும் மீன்கள் கருவாடு போடப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படும். கொழும்பு முதலாளிகளுடனான பரிச்சயமும் நவீன தொழில்நுட்பமும் இவர்களுக்குக் கைவசப்படும். சம்மாட்டியாரின் செல்வம் விரிவாகி, வீடு, கார் என வசதி வந்து சேரும். ஆனால் காலம் எப்போதும் ஒருவரையே தூக்கி வைத்துக் கொண்டாடாது அல்லவா? இவருக்குக்குப் போட்டியாக இன்னொரு சம்மாட்டியார் உருவாகுவார். அவர் வத்தைக்குப் பதிலாக டீசல் இயந்திரத்தில் இயங்கும் படகினைக் கொண்டுவருவார். முன்னவரின் பொல்லாத காலம், வத்தைகள் கடல் சூறாவளியில் சிக்கிச் சின்னாபின்னமாகும்.  யானை மீது வெண்கொற்றக் குடையின் நிழலில் அமர்ந்து வீதியுலா சென்றவர்கள் எல்லோரும் ஒருநாள் உடல் மெலிந்து கால்நடையாக மற்றோர் ஊருக்குச் செல்லும் வேளை வந்து சேரும். மொத்தச் சந்தையையும் குத்தகை எடுத்து மீன் வியாபாரம் செய்தவரின் வாழ்வு நொடிந்துபோய் அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து பழைய பெருமை பேசும் நிலைக்கு வந்து சேரும்.

“குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்”

சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் சொல்லும் ஆதார விசயமும் அதுவே. 

மன்னார் பிரதேசத்து, குறிப்பாக வங்காலையில் வாழும் பரதவ சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தலைமுறையின் வாழ்க்கையை ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் அதன் மனிதர்களினூடாகப் பதிவு செய்கிறது. முத்துக்குளிப்புத் தொழில் அருகிப்போன காலத்தில் எப்படி அந்தச் சமூகத்தின் தொழிலும் பொருளாதாரமும் ஆழ்கடல் மீன்பிடிநோக்கித் தள்ளப்பட்டது, எப்படி கொழும்பு கருவாட்டு முதலாளிகளுடனான தொடர்பு அவர்களுக்கு ஏற்பட்டது, கடற் தொழிலின்போது கூடவே அவ்வப்போது இடம்பெறுகின்ற கடத்தல் தொழில், பணம் சமூக நிலைகளில் ஏற்படுத்தும் செல்வாக்கும் அதிகார மாற்றங்களும், மதம் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறது, மதத்தை இந்த மனிதர்கள் எப்படித் தம் அதிகாரப் பெருமைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பல்வேறுபட்ட மனிதர்களினூடாக இந்த நாவல் பேசிக்கொள்கிறது.

‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு மொழியையும் கலையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மன்னாரின் தனித்துவப் பாரம்பரியமான கூத்துக்கலை வெறும் அரங்கக் கலையாகக் காட்டப்படாமல் வீட்டுக்கொண்டாட்டங்களிலும் தினசரி வாழ்வியலிலும் மிக இயல்பாகப் பிணையப்பட்டிருக்கிறது.

உதாரணாத்துக்கு ஒரு திருமணக்காட்சி.

ஆனாப்பிள்ளை சம்மாட்டியார் வீட்டுத் திருமணத்தில் பச்சை வடம் சாத்துகிறார்கள். பச்சை வடம் சாத்துதல் என்பது திருமணத்துக்குப்பின்னர் மாப்பிள்ளை பெண் வீட்டில் மூன்று நாள் தங்கியிருந்துவிட்டு நான்காம் நாள் மாலையில் தன் தாயார் வீட்டுக்கு வரும்போது அவரைக் கனம் பாடி அண்ணாவியர் கூட்டம் சொல்லும் பட்சண வார்த்தை.

‘அகோஷயம்’ – அண்ணாவியார்

‘சவ்வாசு’ – ஒத்துப்பாடிகள்

‘அகோஷயம்’ – சற்று மேல்ஸ்தாயியில்.

‘சவ்வாசு’ – அதை ஒத்த ஸ்தாயியில்.

‘அகோஷயம்’ – இன்னும் மேல்ஸ்தாயியில்.

‘சவ்வாசு சவ்வாசு’

‘அவாள் ஆரெண்டால்’

‘ஆ….ஆ’

‘மாப்பிள்ளை ராயன்’

‘ஆகா ஆகா’

‘மணவாளக்குமாரன்’

‘அக்கா அக்கா’

‘மனங்கொண்டு மணமுடித்து’

‘சவாசு ச்வாசு’

‘தன் மணவறையிலிருந்து மீண்டு தெருலாத்தி’

‘அடடா அடடா’

‘தன் தாய் தந்தை வீட்டிற்கு வந்த சந்தோசத்திற்கு’

‘அவாள் ஆரெண்டால்’

‘வாழைக்கு இரண்டு குலை வரக்கண்ட வள்ளல்’

‘அடடா அடடா’

‘மண்ணினால் கப்பல் செய்து தண்ணீரில் ஓட்டுவித்தவன்’

‘அககா அககா’

‘மாப்பிள்ளை ராயன் மணவாளக்குமாரன்’

‘ஆனாப்பிள்ளை பெற்றெடுத்த அருமருந்த புத்திரர்’

‘தம் மணவறை துறந்து தெரு உலா சென்று தன் தாயார் வீடு வந்த சந்தோசத்திற்கு’

‘சவாசு சவாசு’

‘மாக்கிறேற் மச்சாள்’

‘மாப்பிள்ளைக்கு அருமை மச்சாளாகிய’

‘மதன காமேஸ்வரி மாக்கிறேற் அம்மாள்’

‘சவாசு சவ்வாசு’

‘மன்மத சுந்தரி மாக்கிறேற் மச்சாள் சொல்லுங்கவி கேளுங்காணும்’

‘அடடா அடடா’

‘கைப்பிடி நாயகன் தூங்கயிலே’

‘அவன் கையை எடுத்தப்புறந்தானில் வைத்து’

‘சவாசு சவாசு’

‘அயல் வளாவிற் சென்று ஒப்புடன் துயில் நீத்து வருபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியே கம்பனே’

இப்படி நகைச்சுவையும் இரட்டை அர்த்தங்களும் கலந்து கட்டி பச்சை வடம் நீண்டு கொண்டே போகும். அதிகம் நீண்டுவிட்டால் அங்கிருக்கும் சில குடிமக்களின் பொறுமை சோதிக்கப்பட்டுவிடும். அவர்கள் சாராயம் வேண்டும் என்று கலகம் செய்ய ஆரம்பிப்பார்கள். பச்சை வடம் அடுத்த நிலையை எட்டும். போதையும் தலைக்கேற குடும்பச்சண்டைகள் எழும். இப்படிக் கூத்தும் குடும்பமும் இணைந்த கொண்டாட்டங்கள் சில தசாப்தங்களுக்கு முன்னம்கூட எம் வாழ்வியலில் ஊடாடிக்கொண்டிருந்தது என்று அறியும்போது நவீனம் எத்தனை அழகுணர்ச்சிகளைத் தொலைத்து நிற்கிறது என்கின்ற அயர்ச்சியே ஏற்படுகிறது.

கொழும்பு முதலாளிகளுக்கும் இந்த மக்களுக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல்களும் ஒருவரை மற்றோருவர் தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தும் போக்கும் மிக அற்புதமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கருவாட்டுக் கொள்முதலின் ஏகபோக உரிமைக்காக முதலாளிகள் செய்யும் நரித்தன வேலைகள் இயல்பாக ஒரு சமூகத்தின் வாழ்வியலையே மாற்றிவிடுகிறது. படகுகளிலிருந்து வத்தைகளுக்குக்கும் பின்னர் டீசல் இயந்திரங்களுக்கும் மாறுவதும் அதை இயக்குவதற்கென கொழும்பிலிருந்து பணியாளர்கள் வருவதும், கூடவே அவர்கள் செய்யும் தங்கக் கடத்தல்கள், அங்கு ஏற்படும் சிக்கல்கள், குடும்ப வாழ்க்கையின் குலைவுகள் என ஒரு மொத்த சமூக மாற்றத்தையே தன் பாத்திரங்களினூடாக சீமான் பத்திநாதன் பர்ணாந்து கொடுத்துவிடுகிறார். இவற்றையெல்லாம் அந்த மக்களிடையே ஏகபோகம் செய்யும் கத்தோலிக்கக் கட்டமைப்பு எப்படிப் பயன்படுத்துகிறது, தன் பிழைத்தல் அந்த சமூக நிலை மாற்றங்களை எப்படி கையாள்கிறது, மத நம்பிக்கையைத் தாண்டி மதம் என்பது அதிகாரத்துக்கான பிடிமானமாக எப்படி மாறுகிறது என்பதெல்லாம் நாவலின் உப கிளைகளுள் சில.

‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவலை வாசிக்கும்போது இதே களத்தின் எழுதப்பட்ட வேறு இரண்டு நாவல்கள் அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒன்று செங்கை ஆழியானின் வாடைக்காற்று. நெடுந்தீவு சமூகத்தின் வாழ்க்கையும், அங்கு வாடைக்காற்றுப் பருவத்தில் வந்து வாடிவீடு அமைத்து மீன் பிடிக்கும் மனிதர்களும் கூடவே அந்தத் தீவில் தங்கிப்போகும் வலசைப்பறவையான கூழைக்கடாக்களும் பின்னிப்பிணைந்து அந்த நாவலின் ஊடாடியிருக்கும். அடுத்தது ஜோ. டி. குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’. ‘ஆழி சூழ் உலகு’ என்பது நெய்தல் நிலத்து சமூகத்தின் வாழ்க்கையையும் அதன் பரிமாணாத்தையும் பல்வேறு காலகட்டங்களினூடாக வெளிப்படுத்தி ஒரு முழு வடிவத்தைக் கொடுக்க முயன்றிருக்கும். குஞ்சரம் ஊர்ந்தோரில் வாடைக்காற்று கொடுக்கும் கூழைக்கடா போன்ற ஆழ் படிமங்கள் கிடையாது. ஆழி சூல் உலகு நாவலின் பல்வேறு காலப் பரிமாணங்கள் கொடுக்கும் முழுமையும் இதில் இல்லை. ஆனால் ஒரு சமூகத்து மனிதரின் ஒரு குறிப்பிட்ட தலைமுறை மாற்றத்தை எந்தப் பதனிடலும் இலக்கிய நுட்பங்களின் பூச்சுகளும் இல்லாமல் எழுத்துப்பிழைகளைக்கூடத் திருத்த முயலாமல் அப்படியே அதன் இயல்புகளுடன் கொடுக்க முயன்றிருக்கிறது ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவல். அதனளவின் அந்த நாவலின் முக்கியத்துவமும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. குஞ்சரம் ஊர்ந்தோர் போன்ற நாவல்களின் வருகை நாமறியாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த அதிகம் பேசப்படாத சமூகக் குழுக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றன. புனைவுகளின் வரலாற்றுப் பங்களிப்பும் இதுவே. இந்த நாவல் தன் பலவீனங்களையும் கடந்து தனித்து நிற்பதன் காரணமும் அதுவே.  

ஜே.கே

அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.