பாப்லோ நெரூதா கவிதைகள்: தமிழில் சுகுமாரன்

உன் முலை போதும்

என் இதயத்துக்கு உன் முலை போதும்

உன் சுதந்திரத்துக்கு என் சிறகுகள் போதும்

உன் ஆன்மாவின் மேல் உறங்கிக்கொண்டிருப்பதுதான்

என் வாய்வழியே சொர்க்கத்துக்கு உயரும்.

ஒவ்வொரு நாளின் மாயத் தோற்றமும் உன்னுள்ளிருக்கிறது

பனித்துளிபோல பூமொட்டுகளை அடைகிறாய்

நீ வராமலிருந்து தொடுவானத்தைக் கவிழ்க்கிறாய்

அலையைப்போல ஓயாமல் விம்மி எழுகிறாய்

நீ பைன்மரங்களையும் கப்பற் கொடிமரங்களையும்போல

காற்றில் பாடுகிறாய் என்று சொல்லியிருந்தேனே?

நீயும் அவைபோல உயரமானவள், அமைதியானவள்

ஆக நீயும் கடற்பயணம்போலத் துயரமானவள்

பழைய பாதையைப்போல உனக்கான பொருட்களைச் சேகரிக்கிறாய்

எதிரொலிக்கும் நினைவேக்கக் குரல்கள் உன் வீட்டை நிறைக்கின்றன

நான் விழித்தெழுந்தேன். சில வேளைகளில் 

உன் ஆன்மாவில் உறங்கிக் கொண்டிருந்த பறவைகள்

பறந்து வலசை போய்க்கொண்டிருந்தன.

வெள்ளைத் தேனீ

வெள்ளைத்தேனீயே, தேனருந்திய கிறக்கத்தில்

என் ஆன்மாவில் முரல்கிறாய் சாவதானப்  புகைச் சுருள்போலப் பறந்திறங்குகிறாய்.

நான் நம்பிக்கை அற்றவன் எதிரொலிகள் இல்லாத சொல்

எல்லாம் இழந்தவன் எல்லாம் இருந்தவன்

கடைசி வடக் கயிறே, என் கடைசி ஆசை உனக்குள் நெரிபடுகிறது.

என் தரிசு நிலத்தில் நீ கடைசி ரோஜா.

ஆ, நீ மௌனமாக இருக்கிறாய்.

உன் ஆழ் விழிகளை மூடு, அங்கே இரவு சிறகடிக்கிறது

உன் உடல் அச்சமுற்ற நிர்வாணச் சிலை.

உனக்கு ஆழமான கண்கள் அவற்றில் இரவு அசைகிறது.

உனக்கு மலர்களின் குளிர்க் கரங்கள்; ரோஜாவின் நாபி.

உன் முலைகள் வெண் நத்தைகள்

உன் அடிவயிற்றில் உறங்க வந்திருக்கிறது நிழலின் பட்டாம் பூச்சி

ஓ, நீ மௌனமாக இருக்கிறாய்.

நீ இல்லாத தனிமை இது, மழை பெய்கிறது

கடற்காற்று நீர்க் கழுகுகளை வேட்டையாடுகிறது.

ஈரத் தெருக்களில் வெறுங்காலுடன் நடக்கிறது நீர்.

அந்த மரக் கிளையிலிருந்து நோயாளிகளைப்போல இலைகள் முனகுகின்றன

வெள்ளைத் தேனீயே, நீ விலகிச் சென்றாலும் என் ஆன்மாவுக்குள் முரல்கிறாய்

மீண்டும் காலத்துக்குள் ஒடுங்கி அமைதியாக வாழ்கிறாய்.

ஓ. நீ பேசாமலிருக்கிறாய்.

நீ இருந்ததைப்போலவே உன்னை நினைவு கூர்கிறேன்

சென்ற இலையுதிர் காலத்தில் 

எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை நினைவுகூர்கிறேன்

நீ சாம்பல் நிறத் தொப்பியும் அசையா இதயமுமாக இருந்தாய்

உன் கண்களில் அந்திச் சுடர்கள் போராடின உன் ஆன்ம நீரில் இலைகள் உதிர்ந்தன 

படர்கொடிபோல என் கைகளைப் பற்றிக்கொண்டு

நிதானமும் அமைதியுமான உன் குரலைத் திரட்டின இலைகள்.

பய பக்தியின் சொக்கப் பனையில் எரிந்து கொண்டிருந்தது என் தாகம்.

இனிய நீலவண்ண ஆகாயத் தாமரைகள் என் ஆன்மாவை முறுக்கின.

உன் கண்கள் சென்றுகொண்டிருப்பதையும்

இலையுதிர் காலம் வெகு தொலைவில் என்பதையும் உணர்கிறேன்.

சாம்பல் நிறத் தொப்பி, பறவையின் குரல்.

என் வேட்கைகள் இடபெயர்ந்தும் என் முத்தங்கள் நீறுபூத்த தணல்கள்போல மகிழ்ந்தும் 

குடியேறும் வீடு உன் இதயம்.

கப்பலிலிருந்து தெரியும் வானம்

குன்றுகளிலிருந்து தெரியும் வயல் 

உன் நினைவு ஒளியாலும் புகையாலும்

அசைவற்ற நீராலும் ஆனது.

உன் கண்களுக்கு அப்பால் தொலைவில்

மாலைகள் எரிந்துகொண்டிருந்தன

உன் ஆன்மாவில் இலையுதிர் காலச் சருகுகள் சுழன்றன.

சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவரவிருக்கும் பாப்லோ நெரூதாவின் ’இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்’ என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகள்.

2 Comments

  1. மிகவும் அருமையான காதல் மொழி பெயர்ப்பு

  2. கவிதைகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு திருத்தம். ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் ‘ என்ற நெரூதா நூலையே மொழியாக்கம் செய்திருக்கிறேன். அதில் இடம்பெற்ற கவிதைகள் இவை.

உரையாடலுக்கு

Your email address will not be published.