/

ஒவ்வொரு கவிஞனும் தன் தனிமொழியை தமிழ்கவிதையின் மொத்த சொல்மரபில் இணைக்கிறான் : சுகுமாரன்

நேர்கண்டவர் விஷால் ராஜா

தமிழின் முன்னோடி கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் (1957- ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தீவிர இலக்கியத்தில் செயல்பட்டுவருபவர். 1985-ல் வெளியான “கோடைக்கால குறிப்புகள்” தொடங்கி 2019-ல் வெளியான முழுத்தொகுப்பு வரை எட்டு கவிதை நூல்கள் பிரசுரமாகியுள்ளன. அவருடைய கவிதை மொழி உணர்ச்சிகரமானது. மனித உறவுகளோடு வலுவாகப் பிணைக்கப்பட்டது. உள்ளத்தின் வெப்பத்தையும் உடலின் வெப்பத்தையும் ஒருங்கே சுட்டுவது. அவருடைய செறிவான கவிதைமொழி, பிந்தைய தலைமுறைகளையும் பாதித்துள்ளது. எண்பதுகளில் தனிமனதின் இருப்பு சார்ந்த அனைத்து தத்தளிப்புகளுக்குமான சாட்சியங்களாக இருக்கின்றன அவர் கவிதைகள்.

சுகுமாரன், கவிதைகளோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக இலக்கியக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியத்தில் படைப்பிலக்கியவாதிகளே, இலக்கிய விமர்சகர்களாகவும் இருக்கிறார்கள். கவிஞர்களே கவிதையின் அடிப்படைகள் குறித்து உரையாடுபவர்களாகவும் இருக்கும் நிலைமை உள்ளது. அது ஒருவகையில் இயல்பானதே. கவிதை போன்ற ஒரு நுட்பமான இருப்பை விளக்க, அதைத் தோற்றுவிக்கும் மனதின் அதே நுட்பம் தேவைப்படுகிறது.

தமிழின் கவி விமர்சகர்களில் சுகுமாரன் முக்கியமானவர்; விமர்சகர் எனும் அடையாளத்தை அவர் வலுக்கட்டாயமாக தவிர்த்தாலும். கவிதைகள் பற்றி மட்டுமில்லாமல் புனைவுகள் பற்றியும் அவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். “திசைகளும் தடங்களும்” (2003), “இழந்த பின்னும் இருக்கும் உலகம்” (2008) முதலிய ஆறு கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன. கச்சிதமும் துல்லியமும் கூடியது சுகுமாரனின் உரைநடை. அவருடைய வாழ்க்கை அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான “தனிமையின் வழி” சற்று தனித்துவமானது. மொழிநடையாகவும் புனைவுக்கு அருகில் இருப்பது. பிரபல இதழ்களில் பணியாற்றியிருக்கும் ஊடகவியலாளரான சுகுமாரனின் முகத்தையும் அனுபவங்களையும் அதில் காணலாம்.

சுகுமாரன் இரண்டு நாவல்களும் எழுதியிருக்கிறார். 2013-ல் வெளியான அவருடைய “வெல்லிங்டன்” நாவல் தன்வரலாறு சாயல் கொண்டது. நேரெதிராக 2017-ல் வெளியான “பெருவலி” நாவல் முகாலய அரசர் ஷாஜகானின் மகள் ஜஹனாராவின் கதை. ஆங்கிலம் மற்றும் மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தும் உள்ளார்.

“அகழ்” இதழுக்காக சுகுமாரனை நேர்காணல் செய்யவிருப்பதாக நண்பர்களிடம் சொன்னபோது பொதுவாக வந்த எதிர்வினை “அவர் அதிகம் பேசக்கூடிய நபர் இல்லை” என்பதுதான். இத்தனைக்கும் “சுகுமாரன் நேர்காணல்கள்” என்று ஒரு தொகைநூல் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. எனினும் சுகுமாரன் பற்றிய பொதுப்பிம்பம், அவர் பேச்சைத் தவிர்க்கக்கூடியவர் என்பதே. ஒருவகையில் சுகுமாரன், பேச்சைக் கட்டுப்படுத்துபவர் அல்லது தன்னை முழுக்க வெளிப்படுத்துவதில் தயக்கம் கொண்டவர் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனாலேயே ஒரு கண்டிப்பான வாத்தியாரின் தோற்றம் அவரிடம் வந்துவிடுகிறது. அவருடைய மொழியின் இறுக்கமும் திருத்தமும் தோற்றத்திலும் சேர்ந்தது போல. எனினும் அவரிடம் ஏற்கனவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலக்கியம் சார்ந்து உரையாடியஅனுபவம் இருந்ததால் நேர்காணல் செய்வதில் எனக்கு அதிகம் தயக்கம் எழவில்லை.

சுகுமாரன் தன்னைக் கூச்சசுபாவி என்றே அடையாளப்படுத்தினாலும் இலக்கியம் பற்றி நண்பர்களோடு நெடுநேரம் உரையாடக் கூடியவராகவும் இருக்கிறார். எழுத்தைப் போலவே நேர்ப்பேச்சிலும் தெளிவான, வரையறுக்கப்பட்ட பதில்களையே பகிர்கிறார். அந்தத் தகவல்கள் வழியாகவே நாம் சிந்தனையை மேலும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. சுகுமாரன் போன்ற ஆளுமைகள் பல ஆண்டுகளாக சலிக்காமல் இலக்கியம் பற்றி உரையாடுவது நம் சூழலை வளப்படுத்தியிருக்கிறது; அவருடைய கவிதைகள் மொழியை அழகுப்படுத்துவது போலவே.

சுகுமாரனுடைய கவிதைகளில் தென்படுகிற உணர்ச்சிகரமான மொழிக்கும் இலக்கியக் கருத்துக்களில் வெளிப்படுகிற கச்சிதம் மற்றும் நிதானத்துக்கும் நடுவே ஆச்சர்யமூட்டும் அளவிலான இடைவெளி இருக்கிறது. இந்த நேர்காணலில் சில இடங்களில் அது குறைந்திருக்கிறது. ஒரு சமயம் அவரே “நான் இவ்வளவு பேசுகிறவன் அல்ல. எப்படியோ பேச வைத்துவிட்டீர்கள்” என்றார். இந்த நேர்காணல் வெவ்வேறு கால இடைவெளிகளில், வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் எழுத்தில் பதில் அனுப்பியிருந்தார். பிறகு அவற்றையொட்டி தொலைபேசியில் உரையாடி, அதையும் பேட்டியில் இணைத்தோம். தொடர்ந்து காணொளி வாயிலாகவும் பேட்டி தொடர்ந்தது.

சமீபத்தில்தான் சுகுமாரனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் தாக்கம் அவரிடம் இன்னமும் முழுமையாக விலகவில்லை. அவ்வப்போது சலிப்பும் சோர்வும் தென்பட்டன. “ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் எழுத முடியவில்லை” என்பதை குறிப்பிட்டபடியிருந்தார். ஆனாலும் இலக்கியம் பற்றி பேசும்போது அவரிடம் இயல்பாக தீவிரம் வந்துவிடுகிறது. பேட்டியின் கடைசியில் அவரே அதைக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். இலக்கியத்துடனான தனது அந்தரங்கமான தொடர்பு பற்றிப் பேசும்போது அவர் நெகிழ்ந்திருந்ததைக் காணமுடிந்தது. இங்கேயே நிறைவு செய்துகொள்ளலாம் என்றார். எனக்கும் அதுவே சரியென்று பட்டது.

விஷால் ராஜா

கேள்வி: உங்களுடைய முதல் நூலான “கோடைக்காலக் குறிப்புகள்” (1985) கவிதைத் தொகுப்பு ஒருவகையில் ஆச்சர்யமூட்டுவது. “சாகத் தவறிய மறுநாள்”, “கையில் அள்ளிய நீர்” போன்ற மிகச் சிறந்த கவிதைகளை முதல் தொகுதியிலேயே எழுதியிருக்கிறீர்கள். இக்கவிதைகளின் விசேஷத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் அப்போதே அறிந்திருந்தீர்களா?

பதில் : ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் உழன்றபின்பு தனிப்பட்ட அளவில் இலக்கியம் எனக்கு முதன்மையானது என்று எண்ணுகிறேன். ஆனால் உயிர் தரித்ததே இலக்கியத்தை உய்விப்பதற்கு என்றோ, இலக்கியம் இல்லை என்றால் நான் இல்லை என்றோ நம்பியதில்லை. எனவே சிறந்த கவிதைகளை முதல் தொகுதியிலேயே எழுதிவிட்டதாக நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி முன்னுணர்வதற்கான தீர்க்க தரிசனம் எனக்கு இருக்கவில்லை.இளம் வயதிலேயே இலக்கியத்துடன் அறிமுகம் ஏற்பட்டு விட்டது. கவிதை மீதான காதலும் கூடி விட்டது. இந்தப் பின்னணியில் நிறைய எழுதிக் குவித்திருக்கிறேன். குறிப்பாகக் கவிதைகள் என்ற பெயரில் சாரமில்லாத வார்த்தைக் கூட்டங்களை. செய்யுள்களை; பின்னர் வாசிப்பும் இலக்கியம் தொடர்பான அறிமுகங்களும் உரையாடல்களும் எனக்கான கவிதையின் முன் வடிவங்களைக் கண்டடைந்ததும் கவிதையைப் புதிய அணுகுமுறையில் பார்த்தேன். அதுவரை இல்லாத இன்னொரு வடிவத்தில் முயன்றேன். அது என்னுடைய தேவையாக மட்டுமல்லாமல் அன்றைய காலத்தின் அவசியமாகவும் இருந்தது.

கேள்வி: அப்போது தமிழ் இலக்கியச் சூழலில் “கோடைக்காலக் குறிப்புகள்” நூலுக்கு என்ன வகையான எதிர்வினை இருந்தது என்று சொல்ல முடியுமா? முன்னோடிகள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்?

பதில்: அநேகமாகப் பாராட்டுகளே வந்தன. வன்முறையான படிமங்களும் வாழ்க்கை மீதான கசப்புணர்வையும் நமபிக்கையின்மையையும் மொத்தத் தொகுப்பும் கொண்டிருக்கிறது என்ற விமர்சனங்களும் சொல்லப்பட்டன. ஆனால், முந்தைய தலைமுறையினர் அடுத்த தலைமுறைக்கான ஆள் வந்துவிட்டான் என்று வரவேற்றார்கள். எனக்கும் முன்னால் எழுதி வந்தவர்கள் பலரும் ஆதரவான கருத்துகளையே தெரிவித்தார்கள். அந்தத் தொகுப்பால் பாதிப்புக்குள்ளான சிலரும் இருந்தார்கள். அன்று மிக முக்கியமான சிறுகதையாளராகப் புகழ் பெற்றிருந்த சுரேஷ்குமார இந்திரஜித்தான் ‘ கோடைக்காலக் குறிப்புக’ளுக்கு முதல் மதிப்புரை எழுதினார். அன்றைய பிரபல விமர்சகரான ராஜ மார்த்தாண்டன், ராஜ சுந்தரராஜனின் ‘ உயிர் மீட்சி’, சமயவேலின் ‘காற்றின் பாடல்’ என்னுடைய ‘கோடைக்காலக் குறிப்புகள் ஆகிய மூன்று தொகுப்புகளை முன்வைத்து ‘நம்பிக்கை தரும் இளங்கவிஞர்கள்’ என்று கட்டுரை எழுதினார். யாருடைய கருத்துகள் ஒரு புதிய கவிஞனை ஊக்குவிக்குமோ அவர்கள் அனைவரும் எதிர்வினை காட்டியிருந்தார்கள். க.நா.சுப்ரமண்யம், வெங்கட் சாமிநாதன், வல்லிக்கண்ணன், தி.க.சி என்று எல்லாரும் உற்சாகமூட்டும் வார்த்தைகளை அளித்திருந்தார்கள்.

நான் முக்கியமானவர்கள் என்று மதித்த இருவர் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. சுந்தர ராமசாமியும் பிரமிளும். அன்று ஒரு கவிஞனின் முதல் தொகுப்பு, பெரும்பான்மையும் அவனுடைய கைக்காசில் அச்சிடப்பட்டுத்தான் வெளிவந்தது. ‘கோடை காலக் குறிப்புகளும் விலக்கல்ல. எனவே யாருக்காவது புத்தகத்தை அனுப்பிவைத்தால், அதன் விலையை உடனடியாக அனுப்பும் பழ்க்கம் ஓரளவுக்காவது இருந்தது. அதைக் கறாராகக் கடைப்பிடித்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. நூலின் விலையை அனுப்பிய மணியார்டரின் தகவல் பகுதியில் நூலை முழுவதுமாகப் படித்து விட்டு எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அது குறித்து ஆதங்கம் இருந்தது. ஆனால், பின்னர் ஓரிருமுறை பேசவேண்டிய இடத்திலும் எழுத வேண்டிய இடத்திலுமாக எடுத்துச் சொல்லியிருந்தார்.

புத்தகம் வெளிவந்தபின்னர்இரண்டோ மூன்றோ சந்தர்ப்பங்களில் பிரமிளைச் சந்தித்திருக்கிறேன். முகமன்சொல்லி விலகுவதைத் தவிர அவருடன் நெருக்கமில்லை. எனினும் அருகருகில் பார்த்தபோது ஏதாவது சொல்லக்கூடும் என்று சில நொடிகள் தயங்கி நின்றதும் உண்டு. அப்போதும் அற்புதங்கள் எதுவும் நிகழமறுத்தன. ஆனால் அவர் என் கவிதைகளை வாசித்தது மட்டுமல்லாமல் பரிந்துரையும் செய்திருக்கிறார் என்பதைப் பாதிரியாரும் கவிஞருமான அ. அமிர்தராஜ் ‘சோஃபியின்உலகம்’ நூலின் அறிமுக விழாவின்போது தெரிவித்தார்.

நான் கவிஞன், நான் எழுதுவதும் கவிதைதான் என்ற பெரும் நம்பிக்கையை அளித்தது முதல் தொகுப்புக்குக் கிடைத்த எதிர்வினைகள்.

கேள்வி: உங்களுடைய ஆரம்ப காலக் கவிதைகளில் “இருத்தலியல்” தாக்கம் அதிகம் இருப்பது போலப் படுகிறது. “கழுத்துக்கு மேலே வெறும் பெயர்” என்று அடையாளச் சிக்கலை முன்வைக்கும் வரிகள் வழியாகவும், “இறந்த எனது கடவுள்” போன்ற தலைப்புகள் வழியாகவும் அதை வெளிப்படையாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த காலக்கட்டத்தின் பொதுவான தத்துவச் சிக்கல் என்பதைத் தாண்டி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருப்பு சார்ந்த தத்தளிப்புகள் இருந்தனவா? முதல் தொகுப்பு வெளியான காலக்கட்டம் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எத்தகைய ஒன்றாக இருந்தது?

பதில்: இலக்கியம், வாழ்க்கை தொடர்பாகச் சிந்திக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே வாழ்க்கை வழியாக இலக்கியத்தையும் இலக்கியத்தின் துணையுடன் வாழ்க்கையையும் அணுகுவதே எனக்கு விருப்பமானதாகவும் உகந்ததாகவும் இருந்தது. அதனால் நீங்கள் சுட்டிக் காட்டும் கோட்பாட்டின் தாக்கம் இருக்கிறதாவென்று என்னால் உறுதியாகச் சொல்ல முடிய்வில்லை. அப்புறம் அது கவிஞனின் வேலை அல்லவே! விமர்சகனின் கடமை அல்லவா?

நான் பட்டதைச் சொல்ல முயன்றேன் என்பதைத் தவிர கோட்பாட்டு வியாக்கியானத்துக்கு முனையவில்லை என்றே நினைக்கிறேன். அன்றைய காலக்கட்டத்தின் பொதுவான சிக்கலாக இருந்தது எது என்று விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு பொன்னுலகம் உருவாக்கப்படும் என்ற புரட்சிகரமான கனவின் சிதைவு, நீங்கள் குறிப்பிட்ட அடையாளச் சிக்கல், மொத்த சமூகத்துக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வாக்குறுதி இன்மை – இவை எல்லாம் சிக்கலாகப் பின்னிப் பிணைந்த காலக்கட்டமாகவே அதைப் பார்க்க முடியும். தனிப்பட்ட வாழ்விலும் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களும் நிரம்பியிருந்தன. அதுவரையிலும் ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சி இந்த இன்னல்கள் எல்லாவற்றையும் களைந்து விடும் என்று கொண்டிருந்த நம்பிக்கையும் சிதிலமானது. இவற்றின் நடுவில் எனக்கு எஞ்சியவை, நான் என்னவாக இருக்கிறேன், என் இருப்பு என்பது என்ன, என் இருப்புக்கு என்ன பொருள் – ஆகிய கேள்விகள்தாம். அவை பற்றிய விசாரங்களும் விசாரணைகளும்தான். அவை இன்றும் என்னை அலைக்கழிப்பவைதாம். என் படைப்பில் உள்ளோடோடுபவைதான். அதைக் கண்டு பிடித்த உங்களுக்கு நன்றி.

கேள்வி: கவிஞர் ஆத்மநாமுடைய உலகத்துக்கும் உங்கள் உலகத்துக்கும் நடுவே ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது. “நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன” என்று அவர் எழுதியிருக்கிறார். “அப்போது புத்தகங்களும் நம்பிக்கைகளும் என்னைக் கைவிட்டன” என்பது உங்களுடைய புகழ்பெற்ற வரிகளில் ஒன்று. இந்த தொடர்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் எழுத வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே எழுத வந்தவர்தான் ஆத்மாநாம்.அவர் எழுத்தில் ஈடுபட்ட சூழலும் இரண்டுங்கெட்டான் சமூகப் பின்னணியும் பின்னால் வந்த எனக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே இருந்தன. அவை சில ஒற்றுமைகளுக்குக் காரணம். உண்மையில் வேற்றுமைகளே அதிகம். அவர் கவிதைகளில் பயன்படுத்தும் நறுக்கான சொற்களை நான் அதிகம் பயன்படுத்தியதில்லை. எனக்கு இன்னும் கொஞ்சம் நீளமாகப் பேசும் விருப்பம் இருக்கிறது. அவருடைய கமாண்டிங்க் தொனி – போ, வா, வரிசையில் நில் – மாதிரியான குரல் எனக்குத் தேவைப்படவில்லை. இருவரும் நகரத்தின் பண்டங்கள். ஆனால், அவர் காட்டிய நகரத்தை விட என் நகரம் இன்னும் கொஞ்சம் பசுமையானது. அப்புறம் அவர் கவிதையுலகில் பெண்களின் சஞ்சாரம் மிக மிகக் குறைவு.

இருவருக்கும் ஒற்றுமையுள்ள ஓர் அம்சம் இருக்கிறது. நாங்கள் எழுதவந்த காலத்தில் கவிதையில் இரண்டு வகையான அணுகுமுறைகள் இருந்தன. தனி உணர்வு சார்ந்தவையும், சமூகப் பிரக்ஞை கொண்டவையும். இந்தப் பிரிவினையை நீக்கியதில் ஆத்மாநாம் கவிதைகளுக்கும் என்னுடைய கவிதைகளுக்கும் சிறிய அளவிலாவது பங்களிப்பு இருப்பதாக நம்புகிறேன். இதை எடுத்துச் சொன்னவரும் அவர்தான். ’’நானும் நீங்களும் ஒரே டிராக்கில் எழுதுகி்றோம், இல்லையா?’ என்று அவர் கேட்டபோதுதான் அந்தப் பொதுமை புலப்பட்டது. “கையில் அள்ளிய நீர்” கவிதைக்கு “வரலாறு” என்று அவரே ஒரு தலைப்பையும் பரிந்துரை செய்தார்.நான் பல கவிஞர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டே வந்திருக்கிறேன். அவர்களில் ஆத்மாநாமும் முக்கியமான ஒருவர்.

கேள்வி: ஆத்மநாமுடைய தற்கொலை ஒரு நவீன தொன்மமாகவே மாறிவிட்டது. “6 ஜூலை1984” என்று நீங்களும் ஒரு கவிதை இயற்றியிருக்கிறீர்கள். அக்கவிதை சார்ந்த ஞாபகத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?

பதில்: ஆத்மாநாம் மரணம் அதுவாகவே தொன்மமாக மாறியதல்ல; மாற்றப்பட்ட ஒன்று. அதை ஒரு நவீனத் தொன்மமாகக் கருத எனக்கு விருப்பமில்லை. இன்றைய மனநிலையில் அன்று இருந்திருப்பேனென்றால் அந்தக் கவிதையையே எழுதியிருக்க மாட்டேன். அப்போது நான் ஊர் ஊராகத் திரிகிற பணியில் இருந்தேன். ஆத்மாநாம் மறைவுச் செய்தியை அஞ்சல் அட்டை மூலம் தெரிவித்தவர் நண்பர் விமலாதித்த மாமல்லன். அதை நான் பார்க்கும்போதே மரணம் நிகழ்ந்து நாட்களாகியிருந்தன. எனினும் தகவலை எங்கள் பொது நண்பரான கவிஞர் பிரம்மராஜனுக்குத் தொலைபேசி உறுதி செய்துகொண்டேன். சென்னை வட்ட நண்பர்களுடனோ பிற நண்பர்களுடனோ ஆத்மாநாமுக்கு இருந்த நெருக்கம் என்னுடன் இல்லை. ஆனாலும் அந்த இழப்பு மிகவும் உலுக்கியது. நான் நிற்பது அஞ்சல் அலுவலகம் என்பதையும் மறந்து வாய் விட்டு அலறி அழுதிருக்கிறேன். இளம் வயதினர், நண்பர்,இசை விரும்பி, அனேகமாக எல்லாருடனும் தோழமை பாராட்டியவர், இலக்கியத்தில் நிறைய சாதிக்க ஆசைப்பட்டவர், அகாலத்தில் மறைந்து விட்ட துக்கம் அப்படிச் செய்யத் தூண்டியிருக்கலாம். நானும் அந்த ஆசைகளுடனும் கனவுகளுடனும் இருந்தவன் என்பதால் அவற்றின் மீது விழுந்த தாக்குதலாக அந்த மரணத்தை உணர்ந்திருக்க வேண்டும். வயதான தபால்காரர் ஒருவர் தேறுதல் சொல்லும்வரை விசும்பிக் கொண்டிருந்தேன் என்பது நினைவிலிருக்கிறது. அந்தக் கவிதையின் கரட்டு வடிவத்தையும் அஞ்சல் அலுவலக மேஜைமீது வைத்துத்தான் என் டெய்லி சேல்ஸ் ரிப்போர்ட் ஷீட்டில் எழுதினேன் என்பதும் மங்காமல் ஞாபகத்தில் இருக்கிறது.

கேள்வி: நீங்கள் மார்க்ஸிய பின்புலம் கொண்டவர். அப்படியிருக்கையில் சமூக யதார்த்தத்துக்கு அப்பால் தனிமனிதனின் இருப்பு சார்ந்த நோக்கை (Individualistic) அடைந்தது எப்படி?

பதில்: அப்பாவுக்கு ஓரளவுக்கு இடதுசாரித் தொடர்புகள், தொழிற்சங்கச் செயல்பாடுகள் இருந்தன அதன் விளைவாக எனக்கும் மார்க்சிய ஈடுபாடும் கவனமும் இயல்பாகவே ஏற்பட்டன. அதுதான் மானுட மீட்சிக்கான வழி என்ற நம்பிக்கையும் உருவாயின. தனிமனித இருப்பைத் தத்துவம் என்ற நிலையில் மார்க்சியம் எங்கும் மறுத்தது இல்லை என்பது எனது புரிந்துகொள்ளல். இருத்தலியல் கோட்பாடு மனிதனின் ஆன்மீக இருப்பைப் பற்றிக் கவலை கொள்கிறது. மார்க்சியம் அவனது சமூக இருப்பைப் பற்றி கரிசனம் கொள்கிறது என்று எண்ணுகிறேன். நான் கோட்பாட்டுவாதியோ தத்துவ மாணவனோ அல்ல என்பதால் இந்த எளிமையான சிந்தனையின் தொடர்ச்சியாகவே அவற்றைக் காண்கிறேன். மேலும் மார்க்ஸின் எழுத்துக்களில் ஒரு தனிமனிதனின் உள்ளார்ந்த தேடலையும் பார்க்க முடியும். அவற்றில் உணர்ச்சிகள் உள்முகப்பட்டிருக்கும். மார்க்ஸியம் புறவயமாக சமூகம் சார்ந்த செயல்திட்டத்தினைக் கொண்டிருந்தாலும் மார்க்ஸின் எழுத்துக்களில் அகவயப்பட்ட உணர்ச்சிகளை அறியலாம். அவருடைய உவமைகள் எல்லாம் அகவயப்பட்டவையே. விவிலியத்தின் நீட்சியை அவர் எழுத்தில் காணலாம் (Biblical). இதனாலேயே ஐரோப்பாவை சேர்ந்த நவமார்க்ஸியர்களால் பின்னாட்களில் கலாச்சார மார்க்ஸியத்தை (Cultural Marxism) வளர்த்தெடுக்க முடிந்தது. உடன், முற்றிலும் தனி மனிதர் என்றும் முற்றிலும் சமூகஜீவி என்றும் யாரும் இல்லை. தனிமனித அனுபவமும் சமூக அனுபவமாகிறது. சமூக அனுபவமும் தனி அனுபவமாகிறது.

கேள்வி: மார்க்ஸியம் அழுத்தமான புறவயநோக்கு கொண்டது. ஏதோவோர் வகையில் அது கவிதை உணர்ச்சிக்கு தடையாக மாற முடியுமா?

பதில்: எனக்கு அப்படியான கருத்து இல்லை. மனிதர்கள் எல்லாரும் சமமானவர்கள்; எல்லாருக்கும் சமமானஉரிமைகள் உண்டு என்று போதிக்கிற ஒரு கோட்பாடு எப்படி உணர்ச்சிக்குத் தடையாக முடியும்? சிலஆண்டுகளுக்கு முன்பு அஜ்மீர் தர்ஹாவுக்குச் சென்றிருந்தேன். நான் பக்திமானோ ஆன்மீக நாட்டம் கொண்டவனோஅல்லன். ‘பெருவலி’ நாவலி எழுதிக் கொண்டிருந்தபோது அஜ்மீர் தர்காவுக்குப் போக விரும்பினேன். நாவலின்மையப்பாத்திரமான ஜஹனாரா அஜ்மீரில் வாழ்ந்து மறைந்த குவாஜா மொய்னுத்தீன் சிஷ்டியைத் தனது ஆன்மீகவழிகாட்டியாகக் கொண்டவள்; அவளுடைய செல்வத்தின் கணிசமான பகுதியை அந்த தர்காவுக்குஅளித்திருந்தாள். இந்தத் தகவல்கள்தான் அஜ்மீர் செல்லத் தூண்டின. தர்ஹாவில் இரண்டு அடுப்புகள் உள்ளன.இரண்டு கிணறுபோல ஆழமானவை. அவற்றுக்குள் காணிக்கைகளும் உணவுப் பொருட்களும் கொட்டப்படும்.அந்த உணவுப் பண்டங்கள் எடுத்து சமைக்கப்பட்டு, வருபவர்களுக்குப் பரிமாறப் படும். நான் சென்றிருந்த அந்த தினமும் உணவுபரிமாற்பட்டது. நானும் வாங்கி உண்டேன். என் அருகில் பரட்டைத் தலையும் ஊளை மூக்குமாக ஒரு சிறுகுழந்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. முதல் கவளத்தை வாயில் போட்டதும் அவன் எழுப்பிய ஆனந்தக் கூவல்அருகில் இருந்த என்னை சிலிர்க்கச் செய்தது. ஏதோ வட இந்தியக் கிராமத்திலிருந்து வந்தவனாக இருக்கவேண்டும். அனேகமாக பெற்றோருடன் நடந்தே வந்திருக்கவும் வேண்டும். அவன் உடையில் அத்தனை செம்மண்அப்பியிருந்தது. பல நாள் பசிக்குப் பிறகு அவன் உண்ணும் நல்ல உணவு அதுவாக இருக்கலாம். முதல் கவளம் வயிற்றுக்குள் இறங்கிப் பசி நீங்கத் தொடங்கியதும் அவன் முகத்தில் கண்ட மலர்ச்சி என்னைப் பரவசப்படுத்தியது’கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருந்தேன். நான் அனுபவித்த இந்த உணர்ச்சியின் தீவிரத்துக்கு மார்க்ஸியப் பின்புலமும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். மாய அனுபவங்களையே ஆன்மீகம் என்று கருதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மனித உறவுகளும் அவற்றை நிலைநிறுத்தும் பொருள் சார்ந்த வாழ்க்கை அனுபவங்களும் ஆன்மீகமானவையே. மதமும் ஆன்மீகமும் ஒன்றல்ல என்று அழுத்தமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையை எனக்குள் ஊன்றியவை கொஞ்சம் மார்க்சியமும் கொஞ்சம் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்.

கேள்வி: இளமையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீதிருந்த பரவசம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இப்போது அதே அளவு அந்த பரவசம் தொடர்கிறதா?

பதில்: ஜே.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துக்களைப் படிக்கும்போது மிகச் சுவையாக இருக்கும். அப்படியே நடைமுறைப்படுத்திவிடலாம் என்று தோன்றும். நாம் எல்லோரும் ரொம்ப பிரகாசமான ஓர் உலகத்தின் வாழ்வதான தோற்றத்தை கொடுக்கும். ஆனால், நாம் வாழும் உலகத்தில் மங்கலான பகுதிகளும், இருட்டான பகுதிகளுமே இருக்கின்றன. அதை யதார்த்தம் புரிய வைக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் “ஜே.கே. வேண்டாம்” என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அப்போது அவருடைய புத்தகங்களை கைவிட்டுவிடுகிறேன். வெளியே கொடுத்துவிடுகிறேன். “Commentaries on Living” எனும் அவருடைய மூன்று தொகுதி நூல்களை இதுவரை ஐந்து தடவை திரும்ப திரும்ப வாங்கியிருக்கிறேன். சில சிக்கலான சந்தர்ப்பங்களில் ஜே.கே படிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போதெல்லாம் இந்நூலை வாங்குவேன்.மீண்டும் தவிர்ப்பேன்.இப்படித்தான் அவருடனான என் உறவு இருக்கிறது.

கேள்வி: நவீனத் தமிழ் இலக்கியத்தில் “படிமக் கவிஞர்கள்” என்று யார் பட்டியல் போட்டாலும் அதில் உங்கள் பெயர் தவறாமல் இடம்பெற்றுவிடும். “படிமம்” போன்ற இலக்கியக் கருவிகள் சார்ந்து உங்களுக்கு ஆரம்பத்திலேயே முறையான பரிச்சயமும் திட்டங்களும் இருந்தனவா?

பதில்: நான் பயன்படுத்துவது படிமம்தானா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது. இலக்க்கிய அறிஞர்களும் விமர்சகர்களும் சொல்கிறார்கள். ஆகவே, சரியாகத்தான் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். என்னுடைய கவிதை வடிவம் என்று ஒன்றை நான் வரித்துக் கொள்வதற்கு முன்பு ஏராளமான மரபுச் செய்யுள்களை எழுதிப் பார்த்திருக்கிறேன். எனவே அவற்றுக்கான இலக்கண்மும் அணிகளும் ஓரளவுக்கு அகத்துள் இருந்தன. ஆனால் புதுக் கவிதையை எதிர்கொண்ட பின்னர் அவற்றின் பழைமை விளங்கியது. மலர் முகம் என்றால் உவமை. முக மலர் என்றால் உருவகம். சரி, நூற்றாண்டுக் காலங்களாகச் சொல்லிச் சொல்லி இவையெல்லாம் தேய்ந்துபோன நிலையில் படிமம் அறிமுகமானது.‘செம்புலப் பெயநீர் போல’ இந்த வரியில் போல என்ற உருபு வந்து அதை உவமையாகக் கருதச் செய்தாலும் இதை ஒரு படிமம் என்றே நான் ஏற்பேன் காரணம், படிமம் இயக்கம் கொண்டது. அந்த இயக்கமே அன்றுவரையான கவிதையாக்க முறையை மாற்றியது .சங்க இலக்கியத்தில் வலிமையான காட்சி படிமங்கள் இருந்தாலும் தமிழ் மரபு பொதுவாக சப்தம் சார்ந்தே இயங்கி வந்துள்ளது. ஓசையழகையே முதன்மையாக கொண்டுள்ளது. “மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ” எனும் கம்பராமாயண வரியை படிக்கும்போது முதலில் அதன் ஒலிதான் நம்மை ஈர்க்கிறது. அர்த்தத்தைக்கூட பின்னரே யோசிக்கிறோம். நவீன கவிதை, படிமம் வழியே இந்த போக்கை சற்று மாற்றியது. ‘கடிகாரம் சிலந்தி’, ‘காலண்டர் வலை’ ஆகியவையும் பிரமிளின் காவியமும் உவமையையும் உருவகத்தையும் இயக்கியவை. அதனால்தான் அவை படிமங்கள். வெறும் பிம்பங்கள் அல்ல. இந்த அறிவை நிலைநிறுத்திக் கொண்டதைத்தவிர முன் தயாரிப்புகளோ திட்டங்களோ இருக்கவில்லை.

கேள்வி: தமிழில் நீங்கள் யாரை எல்லாம் சிறந்த படிமக் கவிஞர்கள் என்று சொல்வீர்கள்?

பதில்: பிரமிள் ஒருவரை மட்டுமே. மற்றவர்களைச் ‘சிறந்த’ அடைமொழியுடன் குறிப்பிட மாட்டேன்.

கேள்வி: “நீருக்குக் கதவுகள் இல்லை” போன்ற உங்களுடைய பின்னாட்களின் தொகுப்புகளில்ஒருவித நெகிழ்ச்சிஉருவானது போல படுகிறது. பல கவிதைகள் தூய புலன் அனுபவம் நோக்கி செல்கின்றன. “ஆப்பிள்”, “ஆப்பிள் தருணங்கள்” போன்ற மிக அழகிய கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். வலியும் இறுக்கமும் மிகுந்த உங்கள் உலகத்தில் நிகழ்ந்த வேறுபாடாக அதை கருதலாமா?

பதில்: தொடக்கத்திலிருந்தே நெகிழ்ச்சியான கவிதைகளைத்தான் எழுதி வருகிறேன் என்று நம்புகிறேன். ஆனால்மொழியில் ஓர் இறுக்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அன்றைய மூட்டமும் திணறலுமானவாழ்வுக்கு அந்த இறுக்கம் ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாம். நான் என்னவாக இருக்கிறேனோ அதைத்தான் கவிதைகளிலும் எழுத்துக்களிலும் கொண்டுவர முயன்றிருக்கிறேன். அப்புறம் என் அளவில் கவிதை முதன்மையாகப் புலன் அனுபவத்தைச் சொல்வதுதான். சற்று ஆசுவாசமும் சொகுசுமான வாழ்க்கை வாழக் கிடைத்ததும் கொஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன் போல..

கேள்வி: 2006ல் அதுவரையிலான உங்களுடைய அனைத்து கவிதைகளின் முழுத்தொகுப்பாக “பூமியை வாசிக்கும் சிறுமி” வெளியானது. முதலில் வெளியான முழுத்தொகுப்பு பற்றி சொல்லுங்கள்?

பதில்: 2006 ஆம் ஆண்டு இறுதியில் புதிய கவிதைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வரலாம் என்ற ஆசை வந்தது.ஆனால் கைவசம் இருந்த புதிய கவிதைகளின் எண்ணிக்கை வழக்கம் போலவே குறைவு. ‘கோடைக்காலக்குறிப்புகள்’ முதல் ‘வாழ்நிலம்’ வரையான எல்லாத் தொகுப்புகளும் ஒடிசலானவை. எந்தத் தொகுப்பும் ஐந்து ஃபாரத்தைத் தாண்டியதில்லை. அப்போது நண்பர் மனுஷ்யபுத்திரன் இதுவரையான எல்லாக்கவிதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக்கி விடலாம் என்று தெரிவித்த ஆலோசனைதான் ‘பூமியை வாசிக்கும் சிறுமி ‘தொகுப்புக்குக் காரணம். 200 பக்கத் தொகுப்பு ஆரோக்கியமானது தானே! ஒரேவகையிலான கவிதைகளை எழுதக்கூடாது, என்னையே நகலெடுத்து விடக்கூடாது என்பதெல்லாம் கவிதையாக்க முறையில் பின்பற்ற விரும்புபவை. அப்படித்தான் செயல்பட்டிருக்கிறேன் என்பதை மொத்தத்தொகுப்பு எடுத்துக் காட்டியது. சின்ன வரிகளிலிருந்து நீண்ட வரிகள் கொண்டவை, சின்னக்கவிதைகளிலிருந்து நீள் கவிதைகள், கதை சொல்லிப் பார்க்கும் முயற்சிகள் என்று எனக்குச் சாத்தியமான வடிவிலும் முறையிலும் எழுதிப் பார்த்திருக்கிறேன் என்ற நிறைவை மொத்தத் தொகுப்பு அளித்தது.

கேள்வி: உங்கள் கவிதைகளில் “நீர்” எனும் படிமம் வெவ்வேறு அர்த்தங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. “நீரின்றி அமையாது”, “நதியின் பெயர் பூர்ணா”, “நீராலானவள்” – இப்படி பல கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். உங்கள் கவிதைகளில் ஒரு விடாப்பிடியான ஆக்கிரமிப்பு போல நீர் இடம்பெறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மலையாளக் கவிஞரும் நண்பருமான பி.ராமன் என்னுடைய கவிதைகளை ஆய்ந்து ஒரு விரிவானகட்டுரையை எழுதியுள்ளார். அதன் தலைப்பும் ‘கதவுகள் இல்லாத நீர்’ என்பது. நான் எப்படி இந்த அளவுக்கு நீர்மயன் ஆனேன் என்று எனக்கும் விளங்கவில்லை. மூன்று தலைமுறைக்கு முந்தைய என் முன்னோர் வாழ்ந்த இடம் ஓர் ஆற்றங்கரை – பரதப்புழையின் கரையில் உள்ளஷொர்னூர் என்று சொன்ன ஒற்றைக் குறிப்பை வைத்துக் கொண்டு என்னை ஜல சந்ததி ஆக்கிவிட்டார். எனக்கே நம்பிக்கையில்லாத ஜென்மாந்திரத் தொடர்பாக இருக்கலாமோ என்னவோ? நீரை மையமாக வைத்து முப்பது கவிதைகள்வரை எழுதியிருக்கிறேன்.

அநேகமாகக்கவிதைக்குள் இடம்பெறும் பெண்கள் எல்லாருமே நீரால் அமைந்தவர்கள். வேறு எதனாலும்இட்டு நிரப்ப முடியாத பள்ளங்களும் பாதாளங்களும் மனதுக்குள் நிறையவே இருக்கிறது. அதைநீர் தவிர வேறு எது மூடி மறைக்க முடியும்?

கேள்வி: புது கவிதை இயக்கம், செய்யுட்களின் இலக்கண முறைமைகளை எதிர்த்தது. ஆனால் நவீன கவிதையே படிமம், உருவகம் என்று புதுவகையான செய்யுட் தன்மையை அடைந்துவிட்டதாக பின்னர் வந்த தலைமுறையினர் விமர்சனங்களை முன்வைத்தார்கள். நேரடியான எளிய கவிதைகள், கவிதைக்குள் கதை சித்தரிப்புகள் (plain poetry, micro narration) போன்றவை முன்மொழியப்பட்டு இப்போது அவை மைய வெளிப்பாடாக மாறிவிட்டன. இந்த மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இலக்கண முறைகளுக்கு எதிரானது புதுக் கவிதை என்பது சரியான கருத்தல்ல என்று பலமுறை சொல்லியும்எழுதியும் இருக்கிறேன். புதுக்கவிதை என்பது , வெறும் வடிவமாற்றம் அல்ல; உணர்வில் நேர்ந்த மாற்றம் என்பதுஎன் கருத்து.’எவர் சில்வர் நிலவு என்ற எஸ் வைதீஸ்வரனின் வரியை புதுக் கவிதையின் வருமைக்கு முன்பு யோசித்திருக்க முடியாது. கவிதை எல்லாக் காலத்திலும் ஒன்றுதான். நாம் வெகுகாலம் செய்யுள்களையும் கவிதைகள் என்று நம்பி வந்திருக்கிறோம். அவைதாம் இலக்கண விதிகளுக்கு உட்பட்டவை. கவிதை எப்போதும் சுதந்திரமானது. புதுக்கவிதை அறிமுகமானபோதே அதற்கான இலக்கணமும் உருவாகிவிட்டது. முன்னோடிகளான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா , பிரமிள், ஆகியவர்கள் இலக்கணத்தை வகுத்துச் சொல்லியிருந்தார்கள். சி.மணி ‘யாப்பும் கவிதையும்’ என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார். வெறும் இலக்கணப் பொருத்தமான வடிவத்தை – மரபிலும் சரி, புதுக் கவிதையிலும் சரி, சுமந்து திரிபவர்கள் செய்யுள்காரர்களே. முகப்புத்தகப் பதிவுகளாக வெளியாகும் பல மூத்த கவிஞர்களின் வரிகளைக் கவிதை என்றுசொல்வது கவிதைக்கு இழைக்கும் அநீதி. குணரூபமான கூற்றாகச் சொல்வதானால் கவிதை இதையெல்லாம்கடந்தது. அதை எவன் உணர்கிறானோ அவனே கவிஞன்.

எந்தக் கலைவடிவமும் இறுதியில் அல்லது உச்சத்தில் எளிமை நோக்கியே பயணம் செய்யும் என்று கருதுகிறேன். இசை, தன் கடைசி இலக்காக மௌனத்தைக் கொண்டிருப்பது போல. அதுவே கலை வடிவங்களின் பாதை. ஓவியக்கலை, பிரம்மாண்டமான சித்தரிப்புகளில் இருந்து மெதுவாக அரூபத்தன்மைக்கு மாறுவதுபோல. அதுவே கலைவடிவங்களின் இயல்பு. இது கவிதைக்கும் பொருந்தும். பாரதியின் ஆரம்ப காலக்கவிதைகள், மொழி அளவில் வாசிக்கக் கடுமையானவை. காலப்போக்கில் அந்த மொழி எளிமையாகிறது. எனவே கவிதைகளில் நிகழும் மாற்றங்களை இயல்பான ஓட்டமாகவே பார்க்கிறேன். புதுக் கவிதையின் ஆரம்பித்திலேயே நேரடித்தன்மையும் எளிமையும் அதன் இயல்புகளாக சிலரிடமாவது இருந்தன. ந.பிச்சமூர்த்தி , க.நா.சு போன்றோர்அவரவர் அளவில் எளிமையாகவே எழுதியிருக்கிறார்கள். எளிமைதான் முக்கியமான குணம் என்றால் ஷண்முகசுப்பையாவே ‘எழுத்து’ காலத்தில் முதன்மைக் கவிஞராக இருந்திருப்பார். எனவே நவீன கவிதையில் கடைசியில்தான் இந்தப் பண்புகள் வந்து சேர்ந்ததாகச் சொல்ல முடியாது. கவிதையில் தொடர்ந்து மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம்.

கேள்வி: அதன் தொடர்ச்சியாக இன்னொரு கேள்வி. கவிதை எந்த எளவுக்கு எளிமையை தன் லட்சியமாக கொள்ளலாம்? எளிமையும் நேரடித்தன்மையும் குறிக்கோள்களாக முன்வைக்கப்படும்போது “போலச் செய்தல்” அதிகமாவதோடு “எளிமையாக இல்லாத” விஷயங்களை பேசுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

பதில்: கவிதையின் நோக்கம் , நீங்கள் பயன்படுத்திய வார்த்தை இலட்சியம், எளிமை அல்ல; ஓர் கருத்தைஅல்லது அனுபவத்தைக் கவிதையாகச் சொல்வதுதான். கார்த்திக் நேத்தாவின் கவிதை இது.

யார் தட்டிவிட்டு
சிந்திக் கிடக்கிறது ஒளி?
எவர் கண்ணுக்கும் தெரியாமல்
எந்தப் பூனை பருகியது
மொத்த ஒளியையும்?

இந்தக் கவிதையை நிர்ணயிப்பது எளிமையா? கவிதையுணர்வா? கவிதை, தோற்றத்தில் எளிமையானது. உள்ளே அல்ல. கவிதையின் மொழிபு நேரடியாகத் தெரிந்தாலும் நேரடியானது அல்ல. இது நீங்கள் பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. முன்பொரு கேள்விக்கான பதில்தான் இதற்கும். வெறும் விதிகளை, குறிக்கோள்களை மட்டுமே நம்பும்போது வெறும் டெம்ப்ளேட் சங்கதிகள் மட்டுமே கிடைக்கும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான தீப்பெட்டிப் படங்களைச் சேர்க்க முடியும். கலை மிளிரும் ஓர் ஓவியத்தைப் படைக்கமுடியாது.

வீணாக வருத்தப்படாதீர்கள். எல்லாக் காலத்திலும் கவிதையில் பேசுவதற்கான எளிமையானவையும் எளிமை இல்லாதவையுமான விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அதை உருவாக்கத்தானே மனிதர்களான நாமும் இருந்துகொண்டே இருக்கிறோம்.

கேள்வி: ஒவ்வொரு காலகட்டத்தின் விவாதங்களும் சிந்தனைகளும் எந்த அளவுக்கு உங்கள் கவிதை உலகை பாதிக்கின்றன? “பேபி ஸார்” கவிதை வரிசை “கதைத்தன்மை”க்கு நெருக்கமாக இருக்கிறது.இப்படி பொதுவான உங்கள் கவிதை உலகத்துக்கு வெளியேயும் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்.இந்த மாற்றங்கள் பற்றி சொல்லுங்கள்.

பதில்: கவிதை நிகழ்காலத்தைச் சேர்ந்தது என்று நம்புகிறவன். அதனால் நிகழ் காலத்தவனாகவே என்னைவைத்துகொள்ள முயல்பவன். மனிதர்களைப் பாதிக்கிற எல்லாமும் என்னையும் பாதிக்கிறது. அதுகவிதையாக உருவானாலும் இல்லையென்றாலும் . முன்பே சொன்னதுதான் ஒரே மாதிரியாக எழுதத்தயக்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு நானே நிறைய கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டேன். பின்னர் அவை மாறியிருக்கின்றன. கவிதையில் ஆங்கில கலப்பே இருக்கக்கூடாது என்கிற உறுதிப்பாடு முன்னல் இருந்திருக்கிறது. இப்போது அதை நானே தளர்த்தியிருக்கிறேன். போலவே,பேபி ஸார் கவிதைகளுக்கு முன்பும் பின்புமாக திருடன் வந்த வீடு, கபாலீசுவரம்,மழை நாள், பாட்டி மணம், ஆணொரு பாகினி. வாசவதத்தை தற்கொலை செய்த இடம், பால்யகால சகிகள், (மக்தலேனா) மரியாளின் சுவிஷேசம் முதலான கதைக் கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

கேள்வி: நீங்களே ஒரு பேட்டியில் சொன்னது போல உங்கள் சொந்த கவிதைகளின் எண்ணிக்கையைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக கவிதைகள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்களுடைய பார்வையில் தமிழ் கவிதையில் பெரும் செல்வாக்கு செலுத்திய வேற்று மொழி கவிஞர்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?

பதில்: மொழிபெயர்ப்புக் கவிதைகளின் அதிக எண்ணிக்கைக்குக் காரணங்கள் உள்ளன. ஒன்று, நான்வாசித்து மகிழ்ந்த கவிதையை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதற்காக. இரண்டாவது,என்னுடைய கவிதை மொழியை இன்னும் செறிவுடையதாக்கிக் கொள்ள. கேள்வியின்இரண்டாவது பகுதிக்குச் சரியான பதிலைச் சொல்லிவிட முடியுமா என்ற சந்தேகம்இருக்கிறது. தமிழ்க் கவிதையில் வேற்று மொழிக் கவிஞர்கள் செல்வாக்குச் செலுத்தத்தொடங்கியது நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் செயல். மரபுக் கவிதைகள்கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே வேற்று மொழிக் கவிதைகள் மொழியாக்கம்வழியாகச் செல்வாக்குச் செலுத்தி யிருப்பதை இலக்கிய வரலாறு எடுத்துக் காட்டுகிறது.அவ்வளவு வரலாற்றுப் பின்னணியுடன் பதில் சொல்ல என்னால் இயலாது. பாரதியே ஷெல்லி முதலான ஆங்கிலக் கவிஞர்களின் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாகூர், பங்கிம்சந்திரர் கவிதைகளை மொழிபெயர்த்தார் என்பதுடன் அந்தக் கவிதைகளின் பாதிப்பில் சொந்தக் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். ஆங்கிலம் பிரெஞ்சுக் கவிதைகளை அடியொற்றியும் எழுதியிருக்கிறார்.

நவீன கவிதையில் இந்தப் பாதிப்புகள் இன்னும் பரவலாக இருந்தன. முற்போக்கு கவிஞர்களிடையே மாயகோவ்ஸ்கி, நெரூதா ஆகியோர் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள். ஜான் டன் போன்றவர்கள் ஆன்மீக தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தீவிர இலக்கியத்தில் டி.எஸ்.எலியட்டும், எஸ்.ரா.பவுண்ட்டும் வடிவரீதியாக பாதித்துள்ளார்கள். இந்த பாதிப்பு என்பது தொடர் போக்காவே உள்ளது. தமிழிலேயே ஜப்பானிய ஹைக்கூ ஒரு கட்டத்தில் பெரிய அலையாக எழுந்தது. தமிழில் எழுதப்பட்ட ஹைக்கூக்கள் ஜப்பானிய ஹைக்கூக்களின் உயரத்தை எட்டவில்லை என்றாலும் அதன் பாதிப்பு வலுவானது.

சுந்தர ராமசாமியின் இடைக்காலக் கவிதைகளில், குறிப்பாக ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பிலும் அதன் பின்னும் அந்தோனியோ மச்சாடோவின் பாதிப்பையும் அவருடைய இறுதிக்காலக் கவிதைகளின் அடங்கிய தொனியில்விஸ்லொவா சிம்போர்ஸ்காவின் பாதிப்பையும் பார்க்க முடிகிறது. போலவே ழாக் ப்ரெவரின் “சொற்கள்” தொகுப்பின் பாதிப்பை ஷங்கர்ராமசுப்ரமணியனுடைய ஆரம்பகாலக் கவிதைகளில் பார்க்கலாம். ஒரு சுவாரஸ்யமான விஷயம், நேரடி ஆங்கிலக் கவிஞர்களைவிட, பிறமொழி கவிஞர்களே தமிழில் அதிகம் பாதிப்பைச் செலுத்தியுள்ளார்கள். அப்படி பார்க்கும்போது, கலீல் கிப்ரானையோ ரூமியையோ நாம் மூல மொழியில் படிக்க முடிந்தால் அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாகவும் இருக்கலாம். சமகால கவிதைகளிலும் வேற்று மொழி கவிஞர்களின் பாதிப்பு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அது அதிகம் வெளியே தெரிவதில்லை. கவிஞர்களும் அதைப்பற்றி பேசுவதில்லை.

கேள்வி: டி.எஸ்.எலியட்டின் “பாழ் நிலம்” கவிதை வெளியாகி நூறு வருடங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான இந்திய மொழிகளில் அக்கவிதை மொழிபெயர்க்கப்பட்டதோடு அது பாதிப்பையும் ஏற்படுத்தியது. தமிழில் அதன் செல்வாக்கு பற்றி சொல்ல முடியுமா?

பதில்: ஒரு கவிதை அது எழுதப்பட்ட மொழி உட்படப் பிற மொழிகளிலும் வலுவான தாக்கம் செலுத்தியது என்பதன் உதாரணம் ‘ பாழ்நிலம்’. அநேகமாக கவிதை வடிவம் நடைமுறையில்உள்ள எல்லா மொழிகளிலும் ‘பாழ்நிலம்’ மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பில் புதிய கவிதைகளும் எழுதப்பட்டன. ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் நவீனத்துவக் கவிதைப்போக்குக்கு எடுத்துக்காட்டாகவும் பின் தொடர்ச்சி கொண்டதாகவும் ‘பாழ் நிலம்’இருந்திருக்கிறது. என் வாசிப்புக்கு எட்டிய அளவில் மலையாளத்தில் கே அய்யப்ப பணிக்கரின் குருக்ஷேத்திரம், ஹிந்தியில் அக்ஞேயாவின் நீள் கவிதை ஒன்று, தமிழில் சி.மணியின் ‘நரகம்’ஆகியவை பாழ் நிலத்தின் பாதிப்பில் எழுதப்பட்டவை. எல்லா இந்திய மொழியிலும் பாழ்நிலத்தின் வடிவத்திலும் கருப்பொருளிலும் ஒரு கவிதையாவது நிச்சயம் எழுதப்பட்டிருக்கும். பாழ் நிலம் கவிதை, இந்திய தத்துவத்தின் சாயலையும் உப நிஷத எதிரொலியும் பகவத்கீதையின் பாதிப்பும் கொண்டது என்பதனால் இந்தியக் கவிஞர்கள் அந்தக் கவிதையின்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். 1960 – 70 காலப்பகுதியில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இந்தக்கவிதை பிற்காலத்தில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. இன்று அதன் இடம் ஒருசான்றாதாரத்தின் இடம் ( ரெஃப்ரென்ஸ் ). அது அதிகம் விவாதிக்கப்படுவது கல்விப்புலம்சார்ந்து மட்டுமே. இன்றைய கவிஞனுக்கு அது புத்துணர்வு எதையும் அளித்துவிடாது என்றுதோன்றுகிறது. மாறாக எலியட்டின் புகழ்பெற்ற கவிதைகளான தி லவ் சாங்க் ஆஃப்ஆல்ப்ரெட் ஜே ப்ரூஃப்ரோக், ஹாலோ மென் ஆகியவை இன்றும் பொருத்தப்பாடுகொண்டவையாகத் தென்படுகின்றன. சி.மணியைத் தவிர பாழ் நிலம் கவிதையால் வலுவாகப் பாதிக்கப் பட்டவர் என்று இன்னொருகவிஞரை என்னால் சொல்ல முடியவில்லை.

கேள்வி: “பாழ் நிலம்” போல தமிழில் ஏதேனும் ஓர் ஆக்கம் பொது வாசிப்பில் அதிகம் புழங்காமல் வெறும் சான்றாதாரமாக மட்டும் மாறியிருக்கிறதா?

பதில்: கவிஞனாக வருத்தத்தோடும் வாசகனாக கோபத்தோடும் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றுண்டு.கவிதையே, இன்று, வெறும் சான்றாதாரமாகத்தான் உள்ளது. கவிதை என்பது வாசகர்களே இல்லாத ஒரு வடிவமாகிவிட்டது. கவிஞர்களே ஒருவருக்கொருவர் கவிதைகளை வாசித்துக் கொள்ளும் நிலையிருக்கிறது. ஒரு சமூகமாக கவிதை வாசிப்பே இப்போது இல்லை என்று சொல்லலாம். உலகளவிலேயேக்கூட கவிதை நூல்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. முன்னர் மலையாளத்தில் கவிதை வாசிப்பு அரங்குகள் நடத்தப்பட்டதுண்டு. வாசகர்கள்டிக்கெட் வாங்கிச் சென்று கவிதைகளை கேட்பார்கள். சச்சிதானாந்தன், கடம்மனிட்டா ராமகிருஷ்ணன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரின் கவிதைகளுக்கு பெரும் வரவேற்பிருந்தன.கவிதைகளே கேசட்டுகளாக பல லட்சம் காப்பிகள் விற்றிருக்கின்றன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஒரு பருப்பொருளாக கவிதையின் இருப்பை நான் இங்கே சொல்லவில்லை. கவிதை எனும் பருப்பொருளை சமூகம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் கவிதையை ரசிப்பதற்கான நுண்ணுணர்வு இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.

கேள்வி: புதுக்கவிதை என்பதே மேற்குலகின் இறக்குமதி என்று எழுத்து காலத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்போது கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கடந்தபிறகு, நவீன கவிதையின் அசலான “தமிழ் அம்சங்கள்” என்று எவற்றையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?

பதில்: அந்த விமர்சனங்களை மீறிப் புதுக்கவிதை என்ற வடிவம் வளர்ந்து நிலை பெற்றிருப்பதே அந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்குச் சான்றுதானே? அன்றைக்கு புதுக்கவிதைக்கு சில விளக்கங்களை முன்னோடிகள் கொடுத்தார்கள். அது நவீன வாழ்க்கையைப் பற்றியதாக இருக்க வேண்டும். நிகழ்காலத்தின் சிக்கல்களை அலசுவதாக இருக்க வேண்டும். எளிமையானதாகவும் அதேசமயம் பூடகமானதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். அவை இன்றைய கவிதைக்கும் பொருந்தும். நவீனத் தமிழ் வாழ்வுக்கு எவையெல்லாம் அம்சங்களோ அவையெல்லாம் கவிதைக்கும் சேர்த்துத்தான். அப்புறம் அது என்ன அசலான தமிழ் அம்சம்? அப்படியானால் போலியான தமிழ் அம்சமும் உண்டா?

கேள்வி: வேறு மாதிரி கேட்க வேண்டும் என்றால், நவீன தமிழ்க்கவிதை தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மனிதனின் வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம் அணுக்கமாக இருக்கிறது?

பதில்: தமிழ் வாழ்க்கைக்கு அணுக்கமாக இருக்கக்கூடிய ஆக்கம் மட்டுமே கவிதையாக கவனம்பெறும். மேலும் இன்றைய தமிழன், லட்சிய தமிழ் வாழ்க்கையை எல்லாம் வாழவில்லை.முதலில், எந்த கலப்புமில்லாத சுயம்புவான தமிழ் வாழ்க்கை என ஒன்று கிடையாது.எனில் யதார்த்தத்தில் தமிழ் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ, என்னென்ன கோணல்களோடு இருக்கிறதோ அதுவே கவிதையிலும் பதிவாகும். ஒரு காலகட்டத்தில், நவீன தமிழ் கவிஞர்களிடையே சில தயக்கங்கள் இருந்தன.என்னால் “நைஸ்” எனும் வார்த்தையை கவிதையில் எழுத முடியாது. ஆனால் இசை போன்ற ஒரு கவிஞர் “இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா” என்று தாராளமாக அந்த வார்த்தையை பயன்படுத்த முடிகிறது. தமிழ் வாழ்க்கைக்குள்தான் “நைஸ்”இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் வந்துவிட்டதே.

கேள்வி: தமிழில் நாட்டாரியல் கூறுகளை அல்லது வட்டாரப் பண்புகளை வெளிப்படுத்தும் கவிதைகள் எப்போதும் கிளையோட்டமாகவே இருக்கின்றன. மு.சுயம்புலிங்கம்போல. எனில் கவிதையில் வட்டார குணம் அதிகரிப்பதில் சாதகமும் பாதகமும் இருக்கின்றனவா?

பதில்: கவிதை ஆர்வலனாக கவிதையை அதிகம் பகுப்பதை நான் விரும்புவதில்லை. இத்தகைய அளவுகோல்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்புறம் வட்டாரம் என்பது கிராமம் மட்டுமல்ல. நகரமும் ஒரு வட்டாரம்தான். தமிழிலேயே ரொம்ப முன்னால் வந்த, கலாப்ரியாவின் கவிதைகளே திருநெல்வேலி வட்டார வழக்கு மற்றும் அது சார்ந்த குறிப்புகளோடுதான் இருந்திருக்கின்றன. நான் என் கவிதையில் வெறுமனே “ஒரு தெரு” என்றுதான் குறிப்பிடுவேன். ஆனால் கலாப்ரியா “தேரடித் தெரு” என்று அடையாளத்தோடு சொல்வார். “கல்லத்தி முடுக்கு” கவிதைக்குள் வருவது அப்படிதான். விக்கிரமாதித்யனும் அது போல எழுதியிருக்கிறார். இதையே இன்னொரு நிலையிலிருந்து கொண்டு வந்தவர் பழமலய் என்று சொல்லலாம். அவர்தான் பிற்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்கிறார். ஓர் இனப்பிரிவின் வாழ்க்கையை முதலில் சொன்னவர் அவர்தான். சுயம்புலிங்கத்தை அதனுடைய தொடர்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.

இதில் கொஞ்சம் சிக்கலான இடமிருக்கிறது. வட்டாரம் சார்ந்த ஆக்கங்கள் எல்லாம் வெறுமனே ஒரு வாழ்க்கையை சொல்லக்கூடிய கூற்றுகளாக இருக்கின்றனவா அல்லது கவிதைகளாக மாறியிருக்கின்றனவா எனும் சந்தேகம் எனக்கு இருக்கிறது. நீங்கள் பார்க்கிற வாழ்க்கைமேல் கூடுதலாக ஒரு விஷயத்தை செலுத்துவதற்காகவே கவிதையிடம் செல்கிறீர்கள். கூடுதலாக இருக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் அக்கவிதைகளில் குறைவதாக எனக்கு தோன்றியிருக்கிறது. இத்தனைக்கும் சுயம்புலிங்கத்தின் தொகுப்புக்கு நானே மதிப்புரை எழுதியிருக்கிறேன். ஆனால் இன்னொரு கோணத்தில் இவை எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ் கவிதை என்றும் சொல்லலாம்.

சங்க இலக்கியமேக்கூட பண்படுத்தப்பட்ட மொழியில் இருப்பதாக நாம் நம்பினாலும், அக்கவிதைகளை எழுதியவர்கள் அன்றாட வாழ்க்கையில் பண்படுத்தப்பட்ட மொழியை பயன்படுத்தியவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் சங்கப் பாடலை கொல்லன் எழுதியிருக்கிறான். மீனவன் எழுதியிருக்கிறான். பாணன் எழுதியிருக்கிறான். அவர்கள் எல்லோருக்குமே ஒரு பெரிய கவித்துவ சொல்மரபை (Poetic idiom) தொடர வேண்டும் எனும் தேவை இல்லை. தங்களுடைய மொழியை மொத்தமான, பெரிய கவித்துவ மரபில் சேர்ப்பதுதான் அவர்களுடைய வேலை. அப்படி, ஒவ்வொரு கவிஞனும் தன் தனிமொழியை தமிழ் கவிதையின் மொத்த சொல்மரபில் இணைக்கிறான். இவ்வளவு நீண்ட காலம் கவிதை செயல்படுவதற்கான காரணமும் அதுதான். புதுப்புது மொழிகள் எல்லாம் அதில் வந்து சேரும். சிறுசிறு கிளைநதிகள் இணைந்து பேராறாக மாறுவது போல ஒரு தொடர்ச்சி உருவாகும். அப்புறம் ஒருகட்டத்தில் அந்த நீருக்குப் பொதுவான ஒரு சுவை அமைந்துவிடுகிறது. எனவே ஒரு கவிதை ஆர்வலனாக, கவிதையை வட்டாரம் மற்றும் பிற குணங்கள் சார்ந்து பகுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை. கவிதை தரக்கூடிய மொத்த அனுபவமே எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.

கேள்வி: சங்க இலக்கியம் சார்ந்த பரிச்சயம் உங்களுக்கு இளமையிலிருந்தே உண்டா?

பதில்: எனக்கு பள்ளிக்கூடத்தில் வாய்த்த தமிழாசிரியர்கள் பெரும்பாலும் திராவிடச் சார்புள்ளவர்கள். அவர்களை பொருத்தவரையில் சங்க இலக்கியம்தான் தமிழ் பண்பாட்டின் அடையாளம். அதனாலேயே, சங்க இலக்கியத்தின் பேரிலுள்ள சிறப்பான மனோபாவத்துடனே அதை கற்றுக் கொடுத்தார்கள். அப்படிதான் நானும் அதை கற்றுக் கொண்டேன். கோயமுத்தூரில் புலவர் மருதவாணன், புலவர் சுந்தர ராசன் போன்ற சில முக்கியமான புலவர்கள் இருந்தார்கள். மருதவாணன்தான் எங்களுடைய தமிழ் ஆசிரியர். அவரிடம் பல நூல்களை நான் பாடம் கேட்டிருக்கிறேன். பிறகு ஒருவருடம் குடும்பச் சூழ்நிலை காரணமாக தருமபுரியில் வசித்து வந்தேன். அங்கே கோவிந்தன் என்றொரு தமிழ் ஆசிரியர் இருந்தார். அவரிடம் “கம்பராமாயணம்” போன்ற நூல்களை பாடம் கேட்டிருக்கிறேன். ஆனால் நவீன இலக்கிய வாசகர்களின் நுண்ணர்விலும் மரபிலக்கிய வாசகர்களின் நுண்ணுணர்விலும் சில வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக மரபிலக்கிய வாசகர்களால் நம் புனைவிலக்கியத்தின் ஒரு மகத்தான சாதனையை ஏற்றுக்கொள்ளக்கூட முடியாது. அதேபோல நவீன இலக்கிய வாசகர்களுக்கும் சங்க இலக்கியத்தின் மீது விலக்கம் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, ஒரு மொழி எப்போதும் ஓர் இலக்கியத் தொகுப்பை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அதற்குள் எல்லாமே அடங்கிவிடும்.சுந்தர ராமசாமிக்கு சங்க இலக்கியம் தெரியாது என்று ஒருவர் குற்றச்சாட்டாக சொல்லலாம். ஆனால் அவர் எழுத்துக்களில் சங்க இலக்கியத்தின் சாயைகளைக் கண்டுபிடிக்க முடியும். இப்படியான ஜீவனுள்ள ஒரு மரபை மொழி உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம்.

கேள்வி: பள்ளி ஆசிரியர்களை அடிக்கடி நினைவுகூர்கிறீர்கள். பள்ளி காலம் உங்கள் ஆளுமையில் செலுத்திய செல்வாக்கு எத்தகையது?

பதில்: எனக்கு ஆசிரியர்கள் மேல் எப்போதும் பெரிய மதிப்பிருந்திருக்கிறது. சோமசுந்தரம் என்ற ஆசிரியர்தான் எங்களுடைய பள்ளிக்கூடத்தின் நூலகத் துறைக்கு பொறுப்பேற்றிருந்தார். பொதுவாக பள்ளிக்கூடத்தில் சிறார் நூல்களை மட்டும் வாங்கி வைப்பார்கள். இவர் கூடுதலாக ஆசிரியர்களும் படிக்கும்படியான நூல்களை வாங்கினார். அப்படி ஜெயகாந்தன் நூல்களையும் அவர் வாங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் மேஜைமேல் வைத்திருந்த ஜெயகாந்தனின் சிறுகதை நூலை அவரிடம் சொல்லாமலேயே எடுத்து சென்றுவிட்டேன்.அதைஇரண்டு நாட்கள் வீட்டில் வைத்து படித்து முடித்துவிட்டு திரும்ப கொண்டு கொடுத்தேன். “திருட்டுப் பயலா இருக்கியே” என்று சிரித்தார். அந்தத் தொகுப்பில் “மிருகம்” என்றொரு சிறுகதை உண்டு. ஒரு நாள் ஆசிரியர்களின் அறைக்கு நான் போனபோது அந்த கதை பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. “என்ன கதை எழுதுறாரு? ஒன்னுமே புரியல” என்கிற ரீதியில் ஒரு ஆசிரியர் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவர் வேறேதோ வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவருமே அந்த கதையை புரிந்துகொள்ளவில்லை என்று அப்போதே எனக்கு தோன்றியது. “ஒரு சகோதரனும் சகோதரியும் உடலுறவு கொள்கிறார்கள் என்பதைத்தானே மறைமுகமாக சொல்லியிருக்கிறார்” என்றேன். வாத்தியார் என்னை இரண்டு அடி கொடுத்து விரட்டிவிட்டார். பிறகு, ஜெயகாந்தன் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது இதே சோமசுந்தரம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். இவையெல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன.

கேள்வி: நீங்கள் சொன்னது போல கவிதையில் வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன. நீங்கள் மிக வலுவாக மனித உணர்ச்சிகளை மையப்படுத்தும் கவிஞர். தமிழில் அரூபத்தை பேசக்கூடிய கவிஞர்களின் வரிசையும் உண்டு. நகுலன், தேவதச்சன், அபி இவர்கள் வெவ்வேறு அளவுகளில் அதை செய்திருக்கிறார்கள். இப்படி கவிதையில்வெவ்வேறு அழகியல்கள் இருக்கும்போது, கவிதைக்கான பொது சந்திப்பு எது? உங்களுடைய தனிப்பட்ட ரசனை மற்றும் தேர்வில் உடன்பாடில்லாத போக்கும் உண்டா?

பதில்: கவிதை, கவிதையாக மாறக்கூடிய ஒரு கணம் இருக்கிறது. மொழியைத் துறந்து நாம் நெகிழக்கூடிய ஒரு கணம். அந்த கணத்தில்தான் எந்த வாசகனும் எந்தக் கவிதையையும் சந்திக்கிறான். “யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம்” என்று நகுலனுடைய கவிதை சொல்கிறது அல்லவா? அது போல, யாருமற்ற இடத்தில் கவிதையில் என்னவோ நடக்கிறது. அந்த இடத்தில்தான் நான் எல்லா கவிஞர்களையும் சந்திக்கிறேன்.

மேலும் ஒருவருடைய தேர்வு என்பது சில அடிப்படை விஷயங்களை முன்னிறுத்தியே உருவாகிறது. என்னுடைய தேர்வானது என்னுடைய ரசனை, ஆளுமை, மொழிக் கிடங்கின் வலு இவை எல்லாம் சேர்ந்ததுதான். போலவே ஒருவருடைய ரசனைக்கு உவக்காத சில விஷயங்களும் கட்டாயம் இருக்கும். மொழியையோ மனித உணர்வையோ மிக மலினமாக சொல்லக்கூடிய ஓர் ஆக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில நேரங்களில் தனிப்பட்ட ரசனையில் ஒரு நல்ல கவிஞரேகூட கொஞ்சம் விலக்கமாக தோன்ற முடியும். ஞானக்கூத்தன் கவிதைகளை நான் தொடர்த்து படித்திருக்கிறேன். ஆனால் அவருடைய கவிதை நூறு சதவீதம் எனக்கு உடன்பாடானதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, மனித உணர்ச்சியை நான் மதிப்பிற்குரியதாக பார்க்கிறேன். ஞானக்கூத்தன் அதை கேலிக்குரியதாக பார்க்கிறார். இரண்டாவதாக, என் வாசிப்பில், அவருடைய பெரும்பாலான கவிதைகள் ஏதோவொன்றிற்கான எதிர்வினையாகவே இருக்கின்றன. நீங்கள் தமிழ் மொழியை மேன்மையானது என்று சொன்னால், உடனே அவர் அதற்கு எதிர்நிலையிலிருந்து கவிதை எழுதுகிறார். நீங்கள் காந்தியை ஒரு பெரிய ஆளுமையாகவும், லட்சியவாத உருவாகவும் சொன்னால், அவர் அதை பகடி செய்கிறார்.பகடியில் இன்னொருவரைக் கீழே இறக்கும் ஓர் அம்சம் இருக்கிறது. அது எனக்கு உடன்பாடாக இல்லை. ஞானக்கூத்தனை தமிழின் முக்கியமான கவிஞர் என்று சொல்கிற அதே நேரத்தில் இந்த விமர்சனத்தையும் நான் குறிப்பிடுகிறேன். அது மாதிரியே பிரமிளை எடுத்துக்கொண்டால், அவர் கவிதை உலகத்தில் பெண்களே இடம்பெறவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆத்மாநாமுடைய உலகத்திலும் பெண் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. இவை எல்லாம் ஒரு வாசகனாக எனக்கு சின்ன ஒவ்வாமையைத் தரக்கூடிய இடங்கள்.

கேள்வி: கவிதைகள் அளவுக்கே புனைவுகளையும் நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். ஒரு காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் தமிழில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது. அதில் நீங்களும் ஈடுபட்டிருந்தீர்கள். பாப்லோ நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்தது போலவும் மார்க்வெஸின் புனைவுகளையும் மொழிபெயர்த்துள்ளீர்கள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்துடனான உங்கள் தொடர்பு பற்றிச் சொல்ல முடியுமா? தமிழில் அதன் தாக்கம் பற்றியும்.

பதில்: எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம்உலக மொழிகள் எல்லாவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது தமிழிலும் நிகழ்ந்தது. பெரும்பாலும் அன்று வாசிக்கக் கிடைத்த ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக போர்ஹேஸ், மார்க்வெஸ் உட்படப் பல எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் சிலர் தமிழில் விரைவாக மொழிபெயர்க்கப்பட்டார்கள். அந்தக் கால அளவில் உலக இலக்கியம் என்பதே லத்தீன் அமெரிக்க இலக்கியம்தான் என்று சொல்லக் கூடிய சூழல் நிலவியது. வாசகன் என்ற நிலையில் நானும் ஈர்க்கப்பட்டேன். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான மொழிபெயர்ப்பில் நான் ஈடுபடவில்லை. மார்க்கேசின் சில கதைகள், தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல்,நெரூதாவின் கவிதைகள் இவைதாம் நான் மொழிபெயர்த்தவை. எந்தத் தேர்ந்த வாசகனுக்கும்இருக்கும் தொடர்பைக் காட்டிலும் சிறப்பான தொடர்பு எதுவும் எனக்கு இல்லை.

தமிழில் அதன் பாதிப்புகள் பரவலானவை என்று சொல்லலாம். ருஷ்ய இலக்கியத்துக்குப்பிறகு அதிகம் செல்வாக்கு செலுத்தியது தென் அமெரிக்க இலக்கியமாக இருக்கலாம்.எண்பதுகளிலேயே தமிழில் மூன்றோ நான்கோ குறிப்பாக மேஜிக்கல் ரியலிசப் பின்னணியிலான கதைகளும் ஒரு சில நாவல்களும் எழுதப்பட்டன. ஆனால் அந்த புனைவுகளுக்கான வரவேற்பு காலவோட்டத்தில் குன்றிப் போய்விட்டது. பா.வெங்கடேசனின் “தாண்டவராயன் கதை” நாவலும் தமிழவனின் “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களின் கதை” நாவலும் மார்க்வெஸின் பாதிப்பில் எழுதப்பட்டவை. ஆனால் இன்று அந்த இரு நாவல்களையும் தமிழின் மகத்தான் நாவல்களின் வரிசையில் வைக்கமுடியுமா எனும் கேள்வியை பொதுவில் கேட்கலாம். ஒருவகையில் தமிழ் வாழ்க்கையை சொல்லக் கூடியதும், தமிழ் வாழ்க்கைக்குள்ளிருந்து கேள்விகளை எடுக்கக்கூடியதுமான புனைவுகளே காலத்தில் நிலைத்தும் நிற்கும். அவையே இலக்கிய மதிப்பு பெறும் என்பது என் நம்பிக்கை. அப்படி பார்க்கும்போது இத்தகைய முயற்சிகளை புதுமைப்பித்தன் ஏற்கனவே செய்திருக்கிறார் –“இதே போல” செய்யவில்லை என்றாலும். நம் மரபிலும் நம் மண்ணின் ஈரத்திலும் நீங்கள் ஊன்றுகிற விதைதான் விருட்சமாக முளைக்கமுடியும். சிறுகதைகளில் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டவை, புதுவகை முயற்சி என்பதோடு நின்று போய்விட்டன. அவற்றுக்கு இன்று பெரிய பொருத்தபாடு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மார்க்வெஸ் மற்றும் அவரைப் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் அவர்களுடைய மண்ணின் கதைகளாக இருப்பதால் இப்போதும் மதிப்போடுள்ளன.

கேள்வி: மார்க்வெஸ் மேல் உங்களுக்கு இன்னும் கூடுதல் பிரியம் இருப்பது ஏன்?

பதில்: அது அவர் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸாக இருப்பதால்தான். என் வாசிப்பில், மார்க்வெஸ் அளவுக்கு நம் வாழ்க்கையை கதையாகவும் கதையை வாழ்க்கையாகவும் மாற்றிக் காண்பித்த வேறொரு கலைஞன் இல்லை. அதனாலேயே அவர் மேல் எனக்கு பிரியம் அதிகம். என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் நிறைய உண்டு. என்வரையில், என் ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று நான்கு பேரை நினைப்பேன். தாஸ்தாயெவ்ஸ்கி, ஆல்பர்ட் காம்யு, காப்காமற்றும் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ். இதில் முதல் மூவர் பேரிலும் எனக்கு ஒவ்வொரு காலத்தில் காதல் இருந்திருக்கிறது. அந்த காதல் பின்னர் குறைந்திருக்கிறது. மீண்டும் அதிகமாகியிருக்கிறது. ஆனால் மார்க்வெஸ் மீதான காதலும் மதிப்பும் ஒருபோதும் குறையவே இல்லை.

கேள்வி: தாஸ்தாயெவ்ஸ்கி, காம்யு, காப்கா மூவருமே தனிமனித தத்துவத்தின் எடையால் அழுத்தப்பட்டவர்கள். ஆனால் மார்க்வெஸ் அப்படி இல்லை. அவரிடம் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது இல்லையா?

பதில்: ஆமாம். மற்ற எல்லோரையும்விட மார்க்வெஸே என்னை மகிழ்ச்சிப்படுத்துபவர். மற்றவர்கள் என்னை கேள்வி கேட்டு “வதைப்பவர்கள்”. ஆனால் மார்க்வெஸ் கதை சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்துபவர். உடனே,அவருடைய கதைகளில் தீவிரமான வாழ்க்கை இல்லை என்பதல்ல பொருள். “தனிமையின் நூறு ஆண்டுகள்” மாதிரி அவ்வளவு தீவிரமான வலியையும், வேதனையையும், வாதைகளையும் சொல்லக்கூடிய படைப்புகள் ரொம்பக் குறைவுதான். நூறு ஆண்டுகளில் ஏழு தலைமுறைகள் மகிழ்ச்சிக்கு இணையாகவேஅனுபவித்த துன்பங்களையும் தோல்விகளையுமே அது சொல்கிறது. ஆனால் அதில் கதை சொல்லலின் இன்பம் இருக்கிறது.

கேள்வி: ஒரு பெருந்தொகுப்பாக வெளியிடும் அளவுக்கு கவிஞர்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள். இருந்தும், ஓர் எச்சரிக்கைக் குறிப்பு போல எல்லா உரையாடல்களிலும் “நான் ஒரு விமர்சகன் அல்ல” என்று சொல்கிறீர்கள். ஒரு படைப்பிலக்கியவாதி விமர்சனத் துறையில் ஈடுபடும்போது இந்த முரண் தவிர்க்கமுடியாதது என்று சொல்லலாமா?

பதில்: அப்படி சொல்ல நான் தயாராக இல்லை. இது முழுக்க என்னுடைய ஆளுமை சார்ந்ததே. விமர்சகன் என்பவன் இன்னும் வலுவானவன் என்றும் இன்னும் விரிவான தளங்களை அணுகக்கூடியவன் என்றும் நம்புகிறேன். அதனாலேயே இந்த எச்சரிக்கையை திரும்பத் திரும்ப சொல்கிறேன். அப்புறம், மிக முக்கியமான விமர்சகர்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருமே மிக முக்கியமான படைப்பாளிகளும் கூடத்தான். டி.எஸ்.எலியட் ஒரு நல்ல உதாரணம். தமிழிலும் புதுமைபித்தன்தான் மிகப் பெரிய படைப்பாளி. தமிழில் கறாரான விமர்சனத்தை தொடங்கிவைக்கும் நபரும் அவர்தான். அதனால் இதை ஒரு பொது முரண்பாடாக சொல்ல முடியாது. தனிநபர் சார்ந்த கருத்து மட்டும்தான்.

எந்த இலக்கியக் கருத்தையும் விமர்சனமாக ஊன்றிச் சொல்வதற்கான கருவிகளை பயன்படுத்தாதனால், அந்தக் குறிப்பை சொல்கிறேன்.மேலும் அத்தகைய விமர்சகர்களிடமிருந்து சற்று விலகி நிற்கவும் செய்கிறேன். சூசன் சொண்டாக் எனக்கு பிடித்த விமர்சகர். ஆனால் எந்த விமர்சகரின் கருத்தையும் போல, அவருடைய கருத்தையும் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துகிறேன். பிடிக்காவிட்டால் விலகவும் செய்கிறேன். விமர்சகர்களை அண்டி என் வாசிப்போ எழுத்தோ இல்லை.அதேநேரம் என்னுடைய மரபு சார்ந்த புரிதலையும் கொண்டிருக்கிறேன். மரபின் தொடர்ச்சி பற்றியும் அதில் ஒரு கவிஞர் எங்கே இருக்கிறார் என்பதையும் நான் சுட்டவே செய்கிறேன்.

கேள்வி: உங்களுடைய கட்டுரை நூல்களில் “தனிமையின் வழி” விசேஷமானது. அத்தகைய வாழ்க்கை அனுபவக் கட்டுரைகளை மேற்கொண்டு எழுத உங்களுக்கு திட்டம் இருக்கிறதா? அக்கட்டுரைகள் “உயிர்மை”யில் தொடராக வெளியாகின இல்லையா? பிரபல வெகுஜன பத்திரிக்கைகளில் பணியாற்றிருக்கும்போதும் தொடர்கள் அல்லது பத்தியெழுத்து மேல் உங்களுக்கு ஏன் நீடித்த ஈடுபாடு வரவில்லை?

பதில்: பிரபல பத்திரிக்கைகளில் வேலை பார்த்திருந்தாலும் அங்கே என்னை நான் இலக்கியவாதியாக நினைத்துக் கொள்ளவில்லை. ஒரு அலுவகத்தில் எழுத்தர் வேலை செய்வது போலதான் அங்கு வேலை பார்த்தேன். அந்த எழுத்தர் பாடத் தெரிந்தவராக இருந்தால், அலுவலகத்தில் சில நேரம் அவர் பாடும்படியாக சந்தர்ப்பம் வந்துவிடும். அது போல, இலக்கியம் சார்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு வந்தபோது பத்திரிக்கைகளில் அதை உபயோகித்திருக்கிறேன். மற்றபடி பத்திரிக்கையாளனாக பணியாற்றும்போது, ஓர் எழுத்தாளனாக என்னை முன்வைக்க அந்த பத்திரிக்கையை பயன்படுத்திக் கொள்ளும் விருப்பம் இருந்ததில்லை. அதனால்தான் என் அனுபவ கட்டுரைகளையும் இலக்கிய பத்திரிக்கையிலேயே எழுதினேன்.

என் அனுபவத்தை நான் மட்டுமே மதிப்பிட முடியும் என்பதனால் அப்போது அக்கட்டுரைகளை எழுதத் தோன்றியது. எந்த இடத்தில் நல்லவனாக இருந்தேன் என்பதையும் எந்த இடத்தில் அயோக்கியனாக இருந்தேன் என்பதையும் நான் மட்டுமே சொல்ல முடியும் இல்லையா? முப்பது கட்டுரைகள் வரை அந்த வரிசையில் எழுதியிருக்கிறேன். பின்னர், ஒரே மாதிரி எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதை நிறுத்திவிட்டேன்.கவிதையிலும் நான் அக்கொள்கையை பின்பற்றுகிறேன். என் கவிதைகளும் வெவ்வேறு வகைமைகளிலேயே எழுதப்பட்டிருக்கும். என் இரண்டு நாவல்களும் வெவ்வேறு வகைப்பட்டவை. புதிய விஷயங்களை தொடரவே எனக்கு எப்போதும் பிடிக்கிறது. எழுத்து என்பது ஏதோவோர் வகையில் ஓர் அறைகூவல்தானே? “தனிமையின் வழி” கட்டுரைகளேகூட ஒரே மொழி நடையோ, ஒரே வடிவமோ கொண்டவை அல்ல. அதுதான் எனக்கேற்படும் நிறைவு. அக்கட்டுரைகள் வெளியான நேரத்தில் என் நண்பர் யுவன் சந்திரசேகர், நிறைய சிறுகதைகளை கட்டுரைகளாக எழுதி வீணாக்கிவிட்டதாகச் சொன்னார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அந்த வடிவத்தில் அவை வெற்றிகரமாகப் பொருந்துவதாகவே நினைத்தேன். வாசக எதிர்வினைகளும் என் நம்பிக்கையை பொய்ப்பிக்கவில்லை.

கேள்வி: இளமையில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தவர், ஊடகத் துறைக்கு எப்படி சென்றீர்கள்?

பதில்: கல்லூரிப் படிப்பு முடித்தவுடனே எனக்கு விற்பனை பிரதிநிதி வேலை கிடைத்துவிட்டது. அப்போது அதுதான் எனக்கான வேலை என்று நினைத்தேன். ஆனால் பின்னால்தான் அது எனக்கான வேலை இல்லை என்று தெரிந்தது. விற்பனை பிரதிநிதியாக இருக்க நிறைய பேச வேண்டும். நான் பேசவே மாட்டேன். ஒருவேளை, அப்போது நான் பேசாமல் இருந்ததனாலேயே எனக்கு ஆர்டர்கள் கிடைத்ததோ என்னவோ. ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது விற்பனை சார்ந்து எல்லாமே கரதலாமலகமாக தெரிந்துவிட்டதாகவும் விற்பனையின் சூட்சுமம் புரிந்துவிட்டதாகவும் பொய்யாக நம்பி ஒரு ஏற்றுமதி யுனிட் தொடங்கினேன். அது நஷ்டமானது. எனக்கு அப்போதுதான் கல்யாணமும் ஆகியிருந்தது. யுனிட்டை மூடவேண்டிய கட்டாயம் வந்தபோது என் மனைவி “நீதான் என்னமோ எழுதுறேன்னு சொல்றியே பத்திரிகைஎதிலாவது வேலை கிடைக்குமா பார்” என்றார். ஒருபோதும் பத்திரிகை வேலைக்கு போகக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. இளமையிலேயே “புதுமைப்பித்தன் வரலாறு” நூலை படித்ததால் அந்த எண்ணம் ஏற்பட்டிருந்தது. தன் கடைசி காலத்தில் “இலக்கியத்தை பொழுதுபோக்காக வைத்துக் கொள். எழுத்தை நம்பி பிழைக்காதே” என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் எழுத்தை நம்பியே இதுவரை வாழ்ந்து வருகிறேன். இப்போது அதை வாழ்க்கையின் நல்லூழ் என்றே சொல்வேன்.

பத்திரிக்கை துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், ஊடகத்துறைக்கு வந்த பிறகு பத்திரிக்கை சார்ந்த கல்வியை மறைமுகமாகவேனும் நான் கற்றுக் கொண்டேன். சாதாரண ரிப்போர்ட்டராக தொடங்கி, ஒரு பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராகவும், ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும் என்னால் செயல்பட முடிந்திருக்கிறது. இப்போதும் ஒரு மாற்றிதழின் பொறுப்பா்சிரியராக இயங்குகிறேன். “குங்குமம்” போன்ற ஒரு பத்திரிகையில் பணியாற்றியபோது அங்கே அனுமதி பெற்று சில விஷயங்களை, இலக்கியத்திற்காய் என்னால் செய்ய முடிந்தது. தொடர்ந்து புத்தக விமர்சனங்கள் வெளியிட்டேன். வாரம் ஒரு கவிதை வெளியிட்டேன். மிக முக்கியமான எழுத்தாளர்களின் புதிய சிறுகதையையோ அல்லது தொகுப்புகளிலிருந்து சிறுகதையையோ இதழில் பிரசுரித்திருக்கிறேன். இணைப்பிதழ்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது அவற்றிலும் இலக்கியத்துக்கான இடத்தை பெற்றுத் தர முடிந்துள்ளது. ஒரு தீபாவளி சிறப்பிதழில் இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு பெண் கவிஞர்களின் கவிதைகளை பிரசுரித்தோம். இப்படியெல்லாம் செயல்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

கேள்வி: இளமையில் எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் பார்க்கும் வழக்கும் இருந்திருக்கிறது அல்லவா? அதில் உங்களை பாதித்தவர்கள் யார்?

பதில்: விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றியபோது சம்பளத்தைக் காட்டிலும் கிடைத்த மிகப் பெரிய மகிழ்ச்சி என்பது வெவ்வேறு இடங்களுக்கு செல்லலாம் என்பதே. இப்படி ஒவ்வொரு இடத்துக்கு போகும்போதும் ஒவ்வொரு எழுத்தாளரை சந்திக்கலாம். அத்தகைய பயணங்களில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களையும் சந்தித்திருக்கிறேன். அதில் சுந்தர ராமசாமி அளவுக்கு என்னை பாதித்த இன்னொரு எழுத்தாளர் இல்லை. பிரமிளின் கவிதைகள் ஆரம்ப காலத்தில் என்னை பாதித்துள்ளன. ஆனால் என்னுடைய பாதை அதுவல்ல என்பதும் சீக்கிரமே புரிந்துவிட்டது.

கேள்வி: உங்களுடைய உரைநடையில் அபாரமானகச்சிதத்தன்மை இருக்கிறது. உணர்ச்சிகரமான கவிஞர், உரைநடையில் துல்லியத்தை லட்சியம் போல கொண்டிருப்பது எதனால்?

பதில்: துல்லியமாக எழுதுவதால் உணர்ச்சி அடிபடும் என்று நான் நம்பவில்லை. “தனிமையின் வழி” தொகுப்பிலேயே “ஓடும் கால்கள்” உணர்ச்சிகரமான கட்டுரைதான். உரைநடையில் நான் முன்னோடி என்று எண்ணக்கூடிய எழுத்தாளர், சுந்தர ராமசாமி. அவர் உரைநடையின் பாதிப்பு என் மேல் உண்டு. ஒரு காலத்தில் அது விமர்சனமாகவே சொல்லப்பட்டது. நீண்ட காலம் முன்னர், என் நண்பர் விமலாதித்த மாமல்லனின் “அறியாதமுகங்கள்” சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை எழுதினேன். அந்த நூல் வெளிவந்தபோது இலக்கிய நண்பர்கள் அனைவரும் சொன்ன விமர்சனம் இது – “மாமல்லன் அசோகமித்திரன் பாணியில் கதை எழுதியிருக்கிறார். சுகுமாரன் சுந்தர ராமசாமி பாணியில் முன்னுரை கொடுத்திருக்கிறார்”. அதே சமயம், நானும் கச்சிதமாக எழுதுவதை விரும்பக்கூடியவன். எந்த விஷயத்தையும் கூர்மையாக சொல்வதிலேயே என்னுடைய கவனம் இருக்கிறது. ஆனால் கவிதையில் எனக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை. என்னுடைய உணர்ச்சியை சொல்வதே கவிதையில் நோக்கம்.

கேள்வி: இலக்கியச் சூழலில் தொடர்ந்து செயல்படுகிறீர்கள்.முதன்முதலில்பேசிய இலக்கிய கூட்டம் ஞாபகமிருக்கிறதா?

பதில்: இருக்கிறது. கோவை ஞானி மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தனிப் பயிற்சியகத்தில் ஒரு கூட்டம் நடத்துவார். நான் பேசிய முதல் கூட்டம் 1982ல் நடந்தது. தி.ஜாவுக்கு அஞ்சலி கூட்டம். என்னால் பேச முடியாமல் அழுதுவிட்டேன். இன்னொருவர் என் கட்டுரையை வாசித்தார்.

கேள்வி: உங்களுக்கு மிக பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமிக்கு தி.ஜாவின் எழுத்துக்கள் மேல் விமர்சனங்கள் இருந்தன அல்லவா? ஆச்சர்யமாக உங்களுடைய தனி ரசனை என்பது அவற்றால் பாதிக்கப்படாமலேயே இருக்கிறது.

பதில்: ஆமாம். சுந்தர ராமசாமிக்கு தி.ஜாவின் மேல் விமர்சனங்கள் இருந்தன.இரண்டு எழுத்தாளர்கள் பற்றிய சு.ராவின் கருத்துக்கள் தமிழ்ச்சூழலில் வலுவாக நிலைப்பெற்றுவிட்டன. இன்றுவரை அதை வெட்டியோ ஒட்டியோதான் இங்கு உரையாடல்கள் நடக்கின்றன. முதலாவது ஜானகிராமன் பற்றி அவர் எழுதியது. வாழ்க்கை மீது கனவின் சல்லாத் துணியை போர்த்தியவர் என்று சு.ரா எழுதியிருக்கிறார். தி.ஜாவிடம் நிச்சயம் ரொமாண்டிக்கான ஓர் அம்சம் இருக்கிறது. ஆனால் அந்த அம்சம் உண்மைக்கு புறம்பானது அல்ல. அவர் கதைகளில் வருவது போல யதார்த்தத்தில் உரையாடல் நடக்காது என்பது எனக்கும் தெரியும். ஆனால் வேறேதோ ஓர் உண்மையை வெளிப்படுத்துவதற்காக அது அப்படி எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக வண்ணதாசன் பற்றிய சு.ராவின் அவதானிப்பே அவரை அணுகுவதற்கான பிரிவினையை தமிழில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் என் ரசனை அவருடைய கருத்துக்களால் முழுமையாக மாறவில்லை.

கேள்வி: சுந்தர ராமசாமியின்புகழ்பெற்ற “ஆத்மராம் சோயித்ராம்” சிறுகதையின் நாயகன், விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் ஒரு கவிஞன். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் உங்கள் சாயலையும் சேர்த்திருக்கிறார் இல்லையா?

பதில்: ஆமாம். ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டதால், சுந்தர ராமசாமிக்கும் கொள்முதலுக்காக சென்னை, பெங்களூரு என்று வெவ்வேறு இடங்களுக்கு பயணித்த அனுபவம் உண்டு. பல நிஜ மனிதர்களை அவர் புனைவுகளில் கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். புனைவாக்கத்தில் அவர்களைஅடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி உருமாற்றியதிலேயே அவருடைய வெற்றி இருக்கிறது. ஒருநாள் திடீரென்று என்னுடைய பிறந்த வருடத்தை கேட்டார். எதற்கு என்றபோது சும்மாதான் என்றார். பிறகு “ஆத்மராம் சோயித்ராம்” கதையை எழுத்துப் பிரதியாக வாசிக்கத் தந்தார். “படிச்சுப் பாருங்கோ” என்றார். நாகர்கோயிலில் இரவில் ஒரு லாட்ஜில் அதை வாசித்தது நினைவில் உள்ளது. படித்துக் கொண்டிருக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டேன்.

கேள்வி: உங்களுடைய முதல் நாவல் “வெல்லிங்டன்” ஓர் வளர் இளம் பருவ நாவல் (coming of age) எனலாம். அசோகமித்திரனுடைய “18வது அட்சக்கோடு” நூலைப் போல. உலகம் முழுக்கவே இத்தகைய நாவல்கள் அதிகம் உண்டு. எழுத்தாளர்களுக்கு பால்யத்தின் மேல் எதனால் இவ்வளவு ஈர்ப்பு?

பதில்: மற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் என்ன காரணம் இருந்தது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இருந்த காரணம் – நான் உண்மையாக சொல்லக்கூடிய அனுபவங்கள் அவை என்பதே. அப்படி உண்மையாக சொன்னால் மட்டும் போதும் என்றே நான் எண்ணவும் செய்தேன். பால்யம் என்பதைத் தாண்டி அந்நாவலில் இடம்பெற்ற மனிதர்களே இன்னும் மனதில் இருக்கக்கூடியவர்களாவும் மனதில் நடமாடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களே இன்னும் என் மனதை ஆக்கிரமித்துள்ளன. அதை மீண்டும் அனுபவித்துப் பார்ப்பதற்காகவே அந்நாவலை எழுதினேன். அது அப்போது இனிமையாக இருந்தது. உதாரணமாக, அந்த கதையில் வரக்கூடிய கௌரியின் இதமான அணைப்புக்கு எந்த மொழியிலும் விளக்கம் சொல்ல முடியாது. அத்தகைய நினைவுகளை இன்னொரு தடவை உணர்ந்து பார்க்கும் விருப்பம் தான் அந்த நாவல். மனிதர்களை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு. அப்புறம் பால்யம்தான் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கக்கூடிய முதல் கச்சாப் பொருள்.

கேள்வி: மாற்று சினிமாக்களை அறிமுகம் செய்தும் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். சினிமாவின் மீதான உங்கள் ஆர்வம் பற்றி.

பதில்: இளமையில் கோவையில் இருந்தபோதே நாங்களே மாற்று சினிமாவுக்கான திரையிடல்களை ஒருங்கிணைத்திருக்கிறோம். பிற்பாடு திருவனந்தபுரத்தில் நீண்ட காலம் வசித்ததனால் பெரும்பாலான உலக சினிமா விழாக்களில் கலந்துகொள்ள முடிந்திருக்கிறது. பத்திரிகையாளன் என்பதால் சில இயக்குநர்களைச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பும் இருந்திருக்கிறது. ரிதுபர்ண கோஷ், அப்பாஸ் கியோராட்ஸ்மி ஆகியோரைச் சந்தித்திருக்கிறேன். 2000த்தில் நான் திருவனந்தபுரத்துக்கு குடிபெயர்ந்தேன். 2022-ல் அங்கிருந்து மீண்டும் இடம் மாறுவதுவரை மூன்றே மூன்று திரைப்பட விழாக்களை மட்டுமே நான் தவறவிட்டிருக்கிறேன். திரைப்படத்தின் மீதான ஆர்வம் என்பது இளமையிலிருந்தே என்னில் இருக்கிறது. இளமையில் நானும் என் நண்பர் எழுத்தாளர் பாதசாரியும் அதிகாலையிலே எழுந்து கோவையிலிருந்து பத்து கிலோமீட்டர் மேல் நடந்து சென்று மலையாள கிளாசிக்குகளைப் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு காலம் இருந்தது என்று இப்போது சொல்லிக்கொள்ளலாம்.

கேள்வி: ஆரம்பகாலத்திலிருந்தே உங்கள் கவிதைகளில் “இசை” ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஹரிபிரசாத் சௌரஸ்யா, யேசுதாஸ் முதலிய இசைக்கலைஞர்களுக்கு கவிதைகளை சமர்ப்பித்துள்ளீர்கள். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை மீதான உங்கள் அறிமுகம் மற்று பரிச்சயம் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: சிறுவயதிலேயே என்னுடைய டீச்சர் ஒருவர் பஜனை பாடுவதற்குக் கூட்டிச் செல்வார். அதைக் கேட்டு கேட்டே சங்கீதம் மேல் ஈர்ப்பு வந்துவிட்டது. பள்ளிக்காலத்திலும் தொடர்ந்து சங்கீதம் கேட்பதற்கான வாய்ப்பு இருந்தது. கல்லூரியில் எனக்கு சீனிவாசன் என்றொரு நண்பர் இருந்தார். அவர் பாடக்கூடியவர். இன்னொரு நண்பர், ஜூனியர், மிருதங்கம் வாசிக்கக்கூடியவர். இவர்களுடைய நட்பு வழியாக மேலும் சங்கீத ஆர்வம் தொடர்ந்தது. மூன்று வருடங்கள் சங்கீதம் கற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஓர் ஆசிரியரிடம் பயிற்சிக்கு சென்றோம். ஒழுங்காக தொடர்ந்திருந்தால் சங்கீதம் கற்றிருக்கலாம். ஆனால் சங்கீதம் கற்பதற்கான ஒரு தகுதி எனக்கு இருக்கவில்லை. கர்நாடக சங்கீதம் புழங்கக்கூடிய வீட்டில் நான் பிறக்கவில்லை. என் பிறப்பில் கர்நாடக சங்கீகத்துக்கான இடமில்லாமல் போய்விட்டது. அது என் தகுதிக்குறைவாகச் சுட்டப்பட்டதால் என்னால் தொடர்ந்து கற்க முடியவில்லை. ஆனாலும் இசை கேட்பது நிற்கவில்லை.

இன்று வரை இசை கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். மேலும் இசை எனக்கு தனிப்பட்ட முறையில் எதையோ வழங்கியிருக்கிறது என்றே நம்புகிறேன். சமீபத்தில் என் இதய அறுவை சிகிச்சை நடந்த நாட்களில் அதை இன்னும் ஆழமாக உணர்ந்தேன். அறுவை சிகிச்சை முடிந்து நான் மொத்தமாக சுயநினைவை இழந்திருந்தேன். பிறகு பிரக்ஞை வந்ததும் என்னால் எதையும் துல்லியமாக இனங்கண்டு சொல்ல முடியவில்லை. ஆட்கள் தெரிகிறார்கள். பெயர் தெரிகிறது. ஆனால் அவர்களைப் பற்றிய வேறெந்தத் தகவலும் மூளையில் கிடங்கிலிருந்து வெளியே வரவில்லை. நானாக எதையோ உளறிக் கொண்டிருக்கிறேன். வலியில் “ஐயோ அம்மா” என்று சத்தம் போடுகிறேன். அப்போது என் தம்பி “ஏதாவது பாட்டு போட்டு விடுங்க. அவர் வழக்கமா அதுதான் கேட்பார்” என்று சொல்ல, ஒரு பாடலை ஒலிக்கச் செய்தார்கள். அதை கேட்கும்போது என் வலியை மீறி, என் நினைவிழப்பையும் மீறிஅந்தப் பாடலை என்னால் சரியாக அடையாளம் காணமுடிந்தது .அதில் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். நண்பர் இசை அப்போது இன்னொரு காரியத்தை செய்தார். அப்பாடலைப் பாடியவருக்கே போன் செய்து இதை குறிப்பிடவும் அவர் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். “நீங்கள் அறுவை சிகிச்சையில் இருப்பதாக அறிகிறேன். சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்புவீர்கள் என்று தெரியும். மீண்டும் கச்சேரியில் சந்திப்போம். போன தடவை வகுளாபரணம் ராகம் பற்றி உரையாடியது போல வேறொரு ராகம் பற்றி உரையாடுவோம்” என்று அதில் சொல்லியிருந்தார். அது எனக்கு பெரிய நெகிழ்வை தந்தது. இப்போது எண்ணும்போதும் கண்கள் கலங்குகின்றன. சங்கீதம் என்னுள் நிரந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நான் திரும்ப உணர்ந்துகொண்ட தருணம் அது. அந்த பாடகர், சஞ்சய் சுப்ரமணியம்.

கேள்வி: முன்னோடிகள் பற்றித் தொடர்ந்து எழுதும் நீங்கள் சமகால தமிழ் புனைவுகள், முக்கியமாக சிறுகதைகள், மீது விமர்சனத்தையும் முன்வைத்துள்ளீர்கள். அவற்றில் நீங்கள் காணக்கூடிய போதாமை என்ன?

பதில்: என்னுடைய விமர்சனம் என்பது தமிழ் சிறுகதைகளின் சாதனைகளை கணக்கில் கொள்வதனாலேயே உருவாகிறது. தமிழ் சிறுகதை மரபு வளம் மிக்கது. சிறுகதையில் சாதனையாளர்கள் என்று சொல்லக்கூடிய எழுத்தாளர்கள் பலரும், அவர்களுடைய இரண்டு அல்லது மூன்று கதைகளை படிக்கிறபோதே “இவர்கள் மகத்தான சிறுகதையாசிரியர்கள்” என்று தோன்றும்படியாக செய்துவிடுகிறார்கள். அவர்கள் மோசமான கதைகளை எழுதுகிறபோதும் இந்த எண்ணம் நமக்கு மாறுவதில்லை. புதுமைப்பித்தன் நூறு கதைகள் எழுதாமல் வெறுமனே பதினைந்து கதைகள் எழுதியிருந்தால்கூட அவர் இன்றும் “சிறுகதையின் மேதை” என்றே கருதப்பட்டிருப்பார். அதற்கான கலைநுட்பமும், மொழித் திறனும் அவர் கதைகளில் இருக்கின்றன. இவையே ஓர் எழுத்தாளரின் அடையாளங்களாக மாறுகின்றன. இப்போது இத்தகைய அடையாளங்களோடு யாரும் இல்லை என்பதே என் ஆதங்கம். இதனால் சிறுகதையே தேக்கம் அடைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி இலக்கியத்தில் எந்த வடிவமும் முடங்கி நிற்கும் என்று நான் நம்பவில்லை.

கேள்வி: உண்ணி ஆரின் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளீர்கள். மலையாள சிறுகதை இப்போது செழிப்பாக இருக்கிறதா?

பதில்: மலையாள சிறுகதைகள் சார்ந்தும் மிக உயர்வான அபிப்ராயங்களோ போற்றுதல்களொ எனக்கில்லை. ஆனால் ஒரு மொழிக்குள் என்னென்ன பரிசோதனைகள் செய்ய முடியும் என்பதையும் ஒரு மொழியை எப்படி நவீனப்படுத்தமுடியும் என்பதையும் அவர்கள் முயன்று பார்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் எழுத்து மேல் மதிப்பு வருகிறது. உண்ணி.ஆரின் கதைகளை “பின் நவீனத்துவக் கதை” எனும் வகைப்பாட்டில் சொல்லலாம். அக்கதைகள் மிகப் புதிதாகவும் இதுவரையிலான நம் மனச் சித்திரங்களை எல்லாம் கலைத்துப் போடுவதாகவும் இருந்தன. அதனால்தான் அவற்றை மொழிபெயர்த்தேன். மற்றபடி சமகால மலையாள சிறுகதையின் போக்கு பற்றி ஒரு பட்டியலை என்னால் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பால் சக்கரியாவிலிருந்து உன்னி.ஆர் வரை அங்கு ஒருபுதிய அல்லது பின் நவீனத்துவ மரபு இருக்கிறது. வாழ்க்கையை, மொழியை புதிய கோணத்தில் பார்க்கும் மரபு.

கேள்வி: கேரளாவில் நெடுங்காலம் இருந்திருக்கிறீர்கள். மலையாள இலக்கியச் சூழலை விதந்தோந்தி பேசும் பழக்கம் உள்ளது. ஒப்புநோக்கில் இரண்டு மொழிகளும் நவீன இலக்கியத்தில் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தியுள்ளன?

பதில்: மலையாளத்தோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கியத்தை நான் ஒருபோதும் குறைத்துப் பேச மாட்டேன். தமிழில் ஒரு பஷீர் ஏன் இல்லை என்று கேட்பதில் பொருளில்லை. மலையாளத்தில் ஏன் ஒரு புதுமைப்பித்தன் இல்லை என்று அவர்கள் கேட்பது கிடையாது. ஒருமொழியில் இலக்கியம் என்பது கலாச்சார வேறுபாடுகள் சார்ந்தே இயங்க முடியும். ஆரம்பத்தில் மலையாள இலக்கிய உலகில் தமிழ் இலக்கியம் மேல் பெரிய மதிப்பில்லாமல் இருந்தது. வெகுஜன எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தார்கள். “ஜே.ஜே சில குறிப்புகள்” நாவல் வெளியாகிறவரை அந்த எண்ணம் இருந்தது. சுந்தர ராமசாமியின் நாவலே அந்த எண்ணத்தை மாற்றியது. போலவே மலையாள உலகிலேயே ரசனை மேம்பட்டிருப்பதாகவும் நான் சொல்ல மாட்டேன். தமிழின் சாதாரண எழுத்தாளர்கள்கூட வெவ்வேறு காலகட்டங்களில் அங்கு புகழ்பெற்றிருக்கிறார்கள். மலையாளத்தில் நவீன கவிதை சார்ந்த நுண்ணுணர்வை வளர்த்ததிலும் தமிழுக்கே பங்கிருக்கிறது. அங்கே கவிதை என்பது “கேட்டல்” சார்ந்த ஒன்றாகவே இருந்தது. அதை “வாசித்தல்” சார்ந்ததாக, அந்தரங்கமானதாக மாற்றியதில் தமிழுக்கு பங்குண்டு.

ஒரு சுவாரஸ்யமான விஷயம். சாகித்திய அகாடமி ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சியில் “மோகமுள்” நாவலின் மலையாள மொழிபெயர்ப்பை நான் பார்த்தேன். அப்போது எனக்கு அந்த நூல் கேரளாவில் கவனிக்கப்படாது என்றே தோன்றியது. ஏனென்றால், வயதுகூடிய பெண்மீதான மையல் என்பது கேரளாவில் ஒரு கலாச்சாரச் சிக்கலே அல்ல. எனவே தமிழ் மனதை பாதிப்பது போல அது மலையாள மனதை பாதிக்காது என்று தோன்றியது. ஆனால் சமீபத்தில் மலையாளக் கட்டுரையாசிரியர் சந்தியா (பி.ராமனின் மனைவி) “மோகமுள்” பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு பெண்ணின் நோக்கில் புதிய திறப்புகளோடு அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தபோது கலாச்சார வேறுபாடுகளை தாண்டிய இலக்கிய மதிப்பும் புலப்பட்டது.

கேள்வி: எழுத்து காலகட்டத்திலிருந்தே நவீன கவிதை என்பது சிற்றிதழ்களோடு நெருக்கமாகத் தொடர்பை கொண்டிருக்கிறது. இப்போது சிற்றிதழ்களின் பொற்காலம் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அது நவீன கவிதையில் என்னென்ன விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?

பதில்: தமிழில் அவ்வளவு ஆழமில்லாத, பொருட்படுத்தும் தேவையில்லாத கவிதைகள் பெருகுவதற்கான காரணங்களில் ஒன்று தீவிர இதழ்கள் இல்லாதது எனலாம். சிற்றிதழ் தீவிர இலக்கியத்துக்கான களத்தைக் கொடுக்கிறது. இன்று செவ்வியல் படைப்பாக கருதப்படும் டி.எஸ்.எலியட்டின் “பாழ் நிலம்” வெளியானது முன்னூறு பிரதிகள் மட்டுமே அச்சிட்டப்பட்ட ஒரு சிற்றிதழில்தான். சிற்றிதழ் என்பது ஒரு மனநிலை. ஆனால் இந்த மனநிலையை சிற்றிதழில் மட்டுமில்லாமல் இன்று வெளியாகிற இணைய இதழ்களிலும் பார்க்க முடிகிறது. போலவே, தமிழ் கவிதைகள் செழிப்பதற்கு இதழ்கள் அவசியம் என்றும் சொல்ல முடியாது. சிற்றிதழிலேயே எழுதாமல் முன்னணியில் வந்திருக்கக்கூடிய கவிஞர்களும் தமிழில் உண்டு. குறிப்பாக இரண்டு பேரை சொல்லலாம். ‘முகுந்த் நாகராஜன்’ மற்றும் ‘போகன் சங்கர்’. போகன் சங்கரை நான் அணுகியதே இணையத்தில் வெளியான அவர் கவிதைகளை வைத்துத்தான். பத்திரிக்கைகளில் பின்னால்தான் அவர் எழுத ஆரம்பிக்கிறார். எனவே சிற்றிதழ் உருவாக்கிய இலக்கியத்திற்கான தீவிர மனநிலைதான் தேவையானது. இதழ் இரண்டாம்பட்சம்தான்.

கேள்வி: சமீபமாக முன்னோடிகளின் தேந்தெடுத்த ஆக்கங்கள் மற்றும் முழுத் தொகுப்புக்கான ஆசிரியராகச் செயல்பட்டுள்ளீர்கள். இந்தச் செயல் வழியே தமிழ் இலக்கியத்தை மொத்தமாகத் தொகுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமைகிறதல்லவா?

பதில்: தி.ஜானகிராமன், ஆ.மாதவன், ஜெயகாந்தன் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் பணியாற்றியிருக்கிறேன். நகுலன், பிரமிள், ஆத்மநாம் மூவருடைய கவிதைகள் பற்றியும் நண்பர் யுவன் சந்திர சேகருடன் உரையாடி அந்த உரையாடலோடு அவர்களுடைய தேர்ந்தெடுத்த கவிதைகளையும் சேர்த்து நூல்களாக கொண்டு வந்தோம். முன்னோடிகள் பற்றிய அடுத்த தலைமுறையினருடைய எண்ணங்களுக்கான பதிவு அது. இளைய படைப்பாளிகளுக்கு ஏதோவோர் வகையில் அது பயன்படலாம் எனும் நோக்கில் அதை செய்தோம். மற்றபடி இந்தப் பணிகளுக்காக அல்லாமல், பொதுவாகவே, ஒவ்வொரு முறை முன்னோடிகளை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புதிய கோணம் தென்படும். மேலும் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப அணுகுமுறைகளும் மாறுகிறது. ஜெயகாந்தனின் கதைகள் நான் இளம்பருவத்தில் வாசித்திருக்கிறேன். இப்போது அவருடைய கதைகளிலிருந்து ஒரு தொகுப்பு கொண்டுவர வேண்டும் என்பதற்காகத் திரும்பப் படித்தபோது, ஏமாற்றமும் நிறைவும் சமவிகிதத்தில் இருக்கும் மனநிலையே தோன்றியது. சில கதைகள் இவ்வளவு உரத்த தொனியில் இருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது. சில கதைகள் இன்றும் ஒரு புதிய எழுத்தாளன் யோசிக்கக்கூட முடியாத அளவில் இருக்கிறது. இப்படி கலவையான உணர்ச்சிகளே ஏற்பட்டன. அசோகமித்திரனுடைய பிற்காலக் கதைகளேகூட ஒரு பயிற்சியினால் அவர் எழுதியவை என்று தோன்றியிருக்கிறது. பழைய கதைகளின் வாசிப்பின்பம் அவற்றில் இல்லை. அப்புறம் இவையெல்லாம் தனிப்பட்ட ரசனை சார்ந்தவையே. உதாரணத்துக்கு லா.ச.ராவை எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஒரு கட்டம் வரைக்கும் எனக்கு லா.ச.ரா விருப்பத்திற்குரிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். ஆனால் பிறகு அவர் எனக்குரிய எழுத்தாளர் அல்ல என்று கண்டுகொண்டேன். எனினும் தமிழ் இலக்கியத்துக்கு லா.ச.ரா முக்கியமானவர் என்று சொல்லவும் தவறமாட்டேன்.
அதே நேரம், தமிழ் இலக்கியம் என்று ஒரு மொத்த தொகுப்பையோ பட்டியலையோ போடுவது என் வேலையல்ல. அந்தக் காரியங்களிலிருந்து என்னை நான் துண்டித்தே வைத்திருக்கிறேன். தனிப்பட்ட ரசனை சார்ந்தே உரையாடுகிறேன்.

கேள்வி: தமிழின் மிகச் சிறந்த காதல் கவிதைகளில் சிலவற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். “முதல் பெண்ணுக்குச் சில வரிகள்” கவிதை போல. மேலும் உங்கள் கவிதைகளில் பெண்ணுடனான உறவு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் பெண்களுடனான உங்கள் உறவு எத்தகையது?

பதில்: பெண்களுடனான என் உறவு நல்லுறவாக இருந்ததனால் தானே இத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறேன். இதற்கு மேல் விளக்கமாக சொல்ல புகுந்தால், எங்கள் குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் எனும் குற்றச்சாட்டுக்கு உங்களைத் தள்ள வேண்டிவரும். ஆனால் அடிப்படையான சில விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, காதலிக்காமல் எந்த காதல் கவிதையும் நான் எழுதவில்லை. காதல் எனும் உணர்வை அரூபமாக பார்த்துவிட்டு இக்கவிதைகளை எழுதவில்லை. எப்போதெல்லாம் காதலிக்கிறேனோ அப்போதெல்லாம்தான் காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன். இரண்டாவதாக, எந்த உறவு பற்றியும் பிளேட்டானிக்காக (Platonic) நான் எழுதவில்லை. காதலில் அப்படியொரு அம்சம் இல்லை என்று நான் நம்புகிறேன். சங்க இலக்கியம் தொடங்கி தமிழில் உடல் சாரா காதல் என்று ஒன்று சொல்லப்படவில்லை. மூன்றாவதாக பெண்ணைப் பீடத்தில் ஏற்றியோ அல்லது கீழே தள்ளியோ பேசாமல் சமநிலையான இடத்தில் வைத்தே என் கவிதையில் உறவுகளை பேசியிருக்கிறேன். என் கவிதைகள் ஆண் நோக்கில் இருந்தாலும் உறவைச் சமநிலையில் காணும் நோக்கு கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். ஆச்சர்யமான விஷயம். கொஞ்ச காலத்துக்கு முன்னால், ஒரு பெண் கவிஞர் என்னை அழைத்து என் காதல் கவிதைகள் பற்றி உரையாடினார். அது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. எதையோ சரியாக செய்திருப்பதான மகிழ்ச்சி அது.

கேள்வி: உங்களுக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களான காப்கா, சுந்தர ராமசாமி இருவருமே தங்கள் தந்தையோடு சிக்கலான உறவைக் கொண்டிருந்தவர்கள். உங்களுடைய ஆரம்ப கால கவிதைகளிலும் தந்தையை பழிக்கும் அம்சம் உண்டு. தந்தையுடனான உங்கள் உறவு எத்தகையது?

பதில்: பிறந்து ஒரு வயது ஆகும் முன்பே வேறிடத்தில் வளரும்படி ஆகிவிட்டது. அதனால் என் அப்பாவோடு பெரிய உறவில்லை. திரும்பிவந்து அந்த உறவுக்காக நான் ஏங்கியபோது அதை தருவதற்கான மனநிலையில் அவரில்லை. அவர் வேறொரு உலகத்தில் இருந்தார். அது எனக்கு கோபமாக இருந்தது. மேலும் அவருடைய குடிபழக்கமும் எனக்கும் அவருக்குமான விலகலை பெரிதாக்கிவிட்டது. விளைவாக அவரை எதிர்நிலையில் நிறுத்தி கோபத்தோடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது, என்னுடைய அறுபதுகளில் யோசிக்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. ஒரு மனிதரை அவமதிக்கிற வகையில் கவிதை எழுதிவிட்டோமே என்று. ஆனால் அன்றைக்கு அது உண்மை.

இதில் பெரிய வியப்பு என்னவென்றால், தன்னைப் பற்றிய கவிதையை அப்பா வாசித்திருக்கிறார். பின்னர் கடைசிக் காலத்தில் என்னிடம் “நான் உனக்கு எதுவும் பண்ணலைன்னு உனக்கு வருத்தமா இருக்காடா?” என்று கேட்டார். “இப்ப நான் என்னவா இருக்கேனோ அது நீங்க பண்ணினதுனாலதான்” என்று பதில் சொன்னேன்.
காப்காவை விரும்புவதற்கோ அல்லது சுந்தர ராமசாமியை விரும்புவதற்கோ இது காரணம் கிடையாது. உறவுகளில் இயல்பாக விழக்கூடிய முடிச்சுதான் இது.

கேள்வி: உங்கள் கவிதையை வாசித்திருக்கிறார் என்றால் உங்கள் அப்பா இலக்கிய வாசகரா?

பதில்: இல்லை. இலக்கிய வாசகர் அல்ல. ஆனால் பத்திரிக்கைகள் படிக்கும் வழக்கம் இருந்தது. அதற்கு மேல் நான் என்னவோ எழுதுகிறேன். என்னைத் தேடி ஆட்கள் வருகிறார்கள். இதை எல்லாம் அவர் கவனித்து கொண்டுதான் இருந்தார். கோவை ஞானி போன்ற ஒரு பெரிய நபர் என்னைத் தேடி வீட்டுக்கு வருவது அவருக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அப்புறம் என்னுடைய இலக்கிய நண்பர்கள் சிலர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளார்கள். ஆறுமுகம் என்றொரு நண்பர் இருந்தார். நான் வீட்டில் இல்லாவிட்டாலும் என் அப்பாவிடம் மணிக்கணக்கில் பேசிவிட்டுச் செல்வார்.

கேள்வி: நூற்றாண்டு செயல்பட்டிருக்கும் நவீன தமிழ் இலக்கியம் பொது சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு என்று எதை சொல்வீர்கள்?

பதில்: பரவலாக வாசிக்கப்படாவிட்டாலும் இன்றைய தமிழ் நவீன மனதை உருவாக்கியதில் நவீன இலக்கியத்துக்கு பெரும் பங்கிருக்கிறது. மறைமுகமாக அது நடந்துள்ளது. இன்றைய தமிழ் மொழிக்குச் சிற்றிதழ்களும் தீவிர இலக்கிய முயற்சிகளும் முக்கியப் பங்களிப்பை செலுத்தியிருக்கின்றன. “பங்களிப்பு” எனும் வார்த்தையே அங்கிருந்து வந்ததுதான். இப்படி பொதுவெளியில் இன்று புழங்கக்கூடிய வார்த்தைகள் பலவும் நவீன இலக்கியத்தால் உருவானவை. பொது சமூகம் பெண்கள் சார்ந்து இன்று வந்தடைந்திருக்கிற மதிப்பீட்டின் உருவாக்கத்தில் நவீன இலக்கியமும் ஒரு பகுதியாக இருக்கிறது. இன்றைக்கு பெண்கள் வேலைக்கு போவது ஒரு பெரிய விஷயம் அல்ல. வேலைக்குப் போகும் பெண்கள் பற்றி அசோகமித்திரன் கதைகள் எழுதியபோதும் நாம் அதை இயல்பாகவே எடுத்திருக்கிறோம் என்பதை இங்கு பொருத்தி பார்க்க வேண்டும். இலக்கியம் அப்படித்தான் செயல்பட முடியும்.

பொதுச் சமூகம் பொருளாதாரக் காரணங்களுக்காக வேக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பண்பாட்டுத் தளம் பொறுமையாகவே இயங்க முடியும். இப்படி சொல்வார்கள். அரசியல், பொருளாதாரம் போன்றவை பெருக்குத் தொடரில் (Geometric Progression) முன்னேறிக் கொண்டிருக்கும்போது கலை, இலக்கியம் போன்றவை கூட்டுத் தொடரிலேயே (Arithmetic Progression) முன்னேறும்.

கேள்வி: நவீனதமிழ் இலக்கியம் மிகச் சிறிய பரப்பில் இயங்குவது என்றாலும் அங்கே அதிகார வட்டம் சார்ந்து நிறைய பேசப்படுகிறது. “காலச்சுவடு” போன்ற ஒரு வெற்றிகரமானபத்திரிக்கை மற்றும் பதிப்பகத்தில் பொறுப்பில் இருப்பதால் உங்கள் மேலும் அந்த விமர்சனம் வைக்கப்பட்டதுண்டு. நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: எழுத்தாளனை வழிபட வேண்டும் என்ற குரல் மேல் எனக்குப் பெரிய மரியாதை எப்போதும் இருந்ததில்லை. எழுத்தாளன் சமூக பாதிப்புகளைக் கவனிக்கிறான். அவற்றை பற்றி எழுதுகிறான். அவன் எழுத்து சமூகத்தையும் பாதிக்கிறது. இதுதான் எழுத்தாளனுடைய பங்கு. அதற்காக அவன் மதிக்கப்பட வேண்டும். ஒரு பண்பாட்டில் மனசாட்சியாக துடிக்கும் உயிரை இறவாமல் காப்பாற்றுவது அவசியமானது. இதைத் தாண்டி எந்த அதிகாரம் சார்ந்தும் எனக்கு ஈடுபாடில்லை. காலச்சுவடில் இணைவதற்கு முன்னாலும் நான் எழுத்தாளன்தான். இப்போதும் நான் எழுத்தாளன்தான். உண்மையில், நான் எழுத்தாளன் என்பதால் தான் காலச்சுவடில் ஆசிரியராக அழைக்கப்படுகிறேன். நாளை, இதிலிருந்து விலகினாலும் எழுத்தாளனாகவே தொடரப் போகிறேன். இப்போதைக்குஓர் அமைப்பின் சில தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன். எனக்கு உவப்பில்லையென்றால் அதில் ஈடுபட மாட்டேன். மற்றபடி அதன்வழியே வேறு எந்த அதிகாரத்தையும் நான் கோருவதில்லை.

கேள்வி: நீண்ட காலம் இலக்கியத்தில் செயல்படுகிறீர்கள். அப்படி செயலாற்றுவதற்கான ஆற்றல் எப்படி வருகிறது என்று நினைக்கிறீர்கள்?

பதில்: ஆற்றல் பற்றி எல்லாம் தெரியவில்லை. ஆனால் பன்னிரெண்டு வயதிலிருந்து இலக்கியத்தின்மேல்தான் எனக்கு பேரார்வம். அதைத்தவிர வேறெதையும் என்னால் ஒழுங்காகச் செய்யமுடியும் என்று தோன்றியதில்லை. இலக்கிய ஈடுபாடு அளித்த இன்பம் துன்பம் எல்லாவற்றையும் அப்படியே ஏற்கப் பழகிவிட்டேன். Feeling at home என்று சொல்வார்கள். “நான் என்னுடைய இடத்தில் இருக்கிறேன்; நான் நானாக இருக்கிறேன்” எனும் உணர்வு. இந்த உணர்வை எனக்கு இலக்கியம் மட்டுமே தருகிறது. என் அறுவை சிகிச்சை பற்றி ஏற்கனவே சொன்னேன் இல்லையா? இந்தக் கேள்விக்கும் அதை ஒட்டியே பதில் சொல்கிறேன். இத்துடன் முடித்து கொள்வோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோர்ந்த மனநிலையும் தோல்வி மனப்பான்மையுமாகவே நான் இருந்தேன். மரணத்தை நெருங்கி திரும்பி வந்த நாட்கள். பல்வேறு கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்? எதற்காக இதையெல்லாம் செய்கிறேன்? இதையெல்லாம் செய்யாமல் இருக்கமுடியாதா? இப்படி அடிப்படையான கேள்விகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் இலக்கியத்தை எல்லாம் விட்டுவிட்டுப் பேசாமல் சும்மா இருந்துவிடலாம் என்றே எண்ணம் வந்தது. சில நாட்களுக்கு மனம் அந்த மூட்டத்துடனே இருந்தது. அப்போது நான் இரண்டு தொகுதிகளாக உருவாக்கியிருக்கும் தி.ஜானகிராமனின் சிறுகதை நூல் அச்சாகி கைக்கு கிடைத்தது. அந்தப் புத்தகம் வந்ததுமே இலக்கிய வெறுப்பிலிருந்து இலக்கியக் காதலுக்கு மாறிவிட்டேன். இதைச் செய்வதற்கு நான் வேண்டும் இல்லையா? ஒருவேளை இலக்கியம் என்னை விட்டாலும், நான் அதை விட முடியாது என்று தோன்றுகிறது.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

6 Comments

  1. நல்ல பேட்டி. நன்றி விஷால் ராஜா, கேள்விகளால் மரியாதை செய்திருக்கிறீர்கள். இந்த உரையாடல் அவருக்கும் அவசியம் என்று தோன்றுகிறது.

  2. மிகச் சிறந்த நேர்காணல். கவிஞரின் பரந்த அனுபவம் , வாழ்க்கைப்பற்றிய, , கவிதைப்பற்றிய நுண்ணிய அவதானிப்புகள் அனைத்தையும் அவருக்கேயுரிய மெல்லிய குரலில் அழுத்தமாக கூறியள்ளார்.

  3. அ௫மையான நேர்காணல். இதற்கான தங்களின் உழைப்பும் தெரிகிறது. சுகுமாரன் என்ற ஆளுமையை அ௫மையாக அறிமுகப்படுத்தியதைக்கு நன்றிகள் பல.

  4. கேள்விகளை பொறுத்தே பதில்கள் அமையும். நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். நல்ல நேர்காணல். வாழ்த்துகள்.

  5. ஒரு பிறப்பின் ஆழ்ந்த wisdom அழகாக வெளி கொணரப்பட்டது.
    துல்லியமாய் சேகரித்த விஷாலுக்கும் ; வாசகனுக்கு கொம்பு தேன் தந்த தேனீக்கும் நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.