அவன் முகப்போவியங்களுக்காகவே புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அறைமுழுக்கப் பரவிக்கிடக்கும் புத்தகங்களெல்லாமே அவனால் முகப்போவியங்களுக்காக வாங்கப்பட்டவைதான். ஏதாவது புத்தகங்களை வாங்கிவந்தால் அறைக்குள் நுழைத்து எங்கே இடைவெளியிருக்கிறதோ அங்கே சொருகிவிட்டுப் போய்விடுவான். இதுதவிர, எப்போதாவது அறையை ஒழுங்குபடுத்த வேண்டுமெனத் தோன்றினால்மட்டும் அங்கே நுழைவான். அதுவும் ஒரு மணித்தியாலத்துக்குமேல் அங்கிருக்கமாட்டான். அதற்குள் தனக் கிசைவான விதத்தில் அறையை ஒழுங்குபடுத்த எத்தனிப்பான். சிலவேளைகளில் ஒருசில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்ப்பான். பின்னர் தனக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொள்வான். கைக்கடிகாரத்தை உயர்த்தி நேரம் பார்ப்பான். உடனே அறையைப் பூட்டிக்கொண்டு போய்விடுவான்.

அன்றைய தினம் வெறுங்கையோடு அறைக்குள் நுழைந்தவன் வழமையான ஒழுங்குபடுத்தலில் ஈடுபடாமல் நுழைவாயிலுக்கு நேரெதிராகவிருந்த இறாக் கையின் இரண்டாவது தட்டின் அடுக்கிலிருந்து சரிந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த புத்தகத்தை இழுத்தெடுத்தான். முன்னட்டை மயில்நீலப் பின்னணியிலிருக்க, நட்டநடுவில் பால்வெள்ளையில் ‘புனையம்’ என்றிருந்தது. அதற்கு நேர்கீழே பக்கப்பார்வையில் வாய்போலவும் நேர்ப்பார்வையில் காதுபோலவும் தோன்றும் மென்சிவப்பு உருவொன்றிருந்தது. அந்த உருவிற்காகவே இந்தப் புத்தகத்தை வாங்கியதை நினைவுகூர்ந்தான். முன்னட்டையில் எழுதியவர் பெயர் இருக்கவில்லை. பின்னட்டையைத் திருப்பிப் பார்த்தான். முன்னட்டையைப்போலவே பின்னட்டையுமிருந்தது. பின்னட்டையில் எழுதியவர்பற்றி ஏதாவது குறிப்பிருக்கலாமென எதிர்பார்த்தான். எதுவுமிருக்கவில்லை. இப்போது அதெல்லாம் முக்கியமில்லையெனத் தோன்றியது. புத்தகத்தின் மொத்தப்பக்கங்களைத் தெரிந்துகொள்ளக் கடைசிப்பக்கத்தை விரித்துப் பார்த்தான். பக்கஎண் 156 என்றிருந்தது. அந்தப் பக்கத்தைத் தன்னிலிருந்து ஒரு மீற்றர் தூரத்தில் நிற்பவருக்குக் கேட்கத் தக்கதாக வாசிக்கலானான்.

“…புனையத்திற்கு நான் சென்றுதிரும்பி ஒரு மாதம் கடந்தநிலையிலும் சோமேஸ்வரனை வழமையாகச் சந்திக்கும் மாநகரசபை நூலகத்திற் சந்திக்க முடியவில்லை. லென்டிங் பகுதியிலிருந்த துள்ளுமீசைக்காரரிடம் போய், ‘ரி. சோமேஸ்வரன் புத்தகங்களை இரவல் பெற்றுச்சென்ற கடைசித் திகதியைப் பார்த்துச் சொல்ல முடியுமா?’ எனக் கேட்டேன். அவர் தனது துள்ளுமீசை விரியச் சிரித்துக்கொண்டே, ‘சாதாரணமாக இதுபோன்ற தகவல்களை நான் எவருக்கும் வழங்குவதில்லை. எனினும், நீங்கள் எமது நெடுங்கால வாசகர் என்பதால் சொல்கிறேன்’ என்றொரு பீடிகையோடு இரவல் வழங்கும் பதிவேட்டை எடுத்துப் புரட்டிப்பார்த்துத் தகவல் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அவர் தந்திருந்த திகதியில்தான் நான் சோமேஸ்வரனை இந்த வளாகத்தின் மருதமரத்தடியில் கடைசியாகச் சந்தித்துக் கதைத்திருந்தேன். மறுநாள் எதிர்பாராதவிதமாகப் புனையத்திற்குச் சென்றுவிட்டேன். அதற்குப் பிறகு அவர் ஒரு மாதமாகப் புனையத்துக்கு வரவில்லையென்பது அதிர்ச்சி கலந்த வியப்பைத் தந்தது. மூன்று அல்லது ஐந்து நாள்களுக்கொரு தடவை ஒழுங்காக இந்த நூலகத்திற்கு வந்துசெல்லும் தீவிர வாசகராக அவர் இருந்தார். இந்நிலையில் ஒரு மாதமாக இந்தப் பக்கமே வரவில்லையென்றால் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

நான் சோமேஸ்வரனைத் தேடி மாநகரசபை நூலகத்திற்குச் சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிவந்திருந்த மறுநாள், தற்செயலாக மத்திய பேருந்து நிலையத்தைக் கடந்துசெல்லும்போது தனித்து ஓரிடத்தில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டேன். உடனே அவரை நெருங்கி, ‘கடந்த ஒரு மாதமாக உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். நேற்றும் மாநகரசபை நூலகத்திற்குப் போய்ப் பார்த்தேன். உங்களைக் காணவில்லை. லென்டிங் பகுதியில் விசாரித்தபோது நீங்கள் கடைசியாக அங்கே என்னைச் சந்தித்துக் கதைத்துவிட்டுச் சென்றபின் வரவேயில்லை எனத் தெரிந்தது. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதோ எனப் பயந்துவிட்டேன். உங்களைக் கடைசியாகச் சந்தித்துவிட்டுச் சென்ற மறுதினமே புனையத்திற்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்துப் போய்வந்துவிட்டேன். அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் உங்களிடம் வந்துசொல்லும்படி நீங்கள் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டதால் இன்றும் உங்களைத் தேடித்தான் போய்க்கொண்டிருந்தேன். ’ஒரு தேநீர் அருந்துகையோடு நிதானமாகப் பேசலாம் வாருங்கள்’ என நான் சொன்னதையெல்லாம் குழப்பத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவர், ‘மன்னிக்கவும். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் நபர் நானல்ல’ எனச் சொல்லிக்கொண்டே எழுந்தார்.

‘உங்களது பெயர் ரி. சோமேஸ்வரன்தானே?’

‘ஓமோம்! எனது பெயர் ரி. சோமேஸ்வரன்தான். ஆனால் நான் ஒருபோதும் மாநகரசபை நூலகத்திற்குச் சென்றதேயில்லை. உங்களைக்கூட இன்றுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். நீங்கள் மாநகரசபை நூலகத்தில் சந்தித்துக் கதைத்த நபர் இன்னொரு ரி. சோமேஸ்வரனாக இருக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். நான் மாநகரசபை நூலகத்தில் சந்தித்துக் கதைத்த ரி. சோமேஸ்வரன் இவரேதான் என்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் எதுவும் செய்யத் தோன்றாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

கடைசிப்பக்கத்தை வாசித்து முடித்தவனுக்குத் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை வாசிக்கலாமெனத் தோன்றியது. உடனே தனது பிறந்த திகதியை நினைவு கூர்ந்து பதினோராம் பக்கத்துக்குத் தாவினான். “…..லகத்தில் எனக்கு அறிமுகமான ரி. சோமேஸ்வரன்தான் புனையத்தை நான் சென்றடையப் பெருந் தூண்டுதலாக இருந்தார். ‘எப்போது பார்த்தாலும் பஞ்சுமிட்டாயை உதிர்த்துவிட்டதைப்போல மென் ஊதாநிறப்பூக்கள் ஒரு வட்டக் கம்பள விரிப்பெனத் தரையில் பரவிக்கிடக்க, அதன்மீது களிநடனமிட்டு ஓய்ந்துநிற்கும் ஓர் இராட்சதனெனத் தோன்றும் கடம்பமரமும் அதனையொட்டி வலப்புறமிருக்கும் சிதிலமடைந்த சுமைதாங்கியும் அதன்மீது படர்ந்திருக்கும் நீலப்பூக்கொடியும் புனையத்தின் நுழைவாயிலை உங்களுக்கு அடையாளங்காட்டும்.

எப்போதும் அவ்விடத்தில் யாரேனுமொருவர் சொல்வதற்கு ஏதேனுமொரு கதையோடு அலைந்துகொண்டிருப்பார். அவரைப் பார்த்ததும் நீங்கள், ‘இங்கு கதைகளைப் புனைந்து பரிமாறிக்கொள்ளும் புனைவங்காடி எங்கிருக்கிறது?’ என நேரடியாகக் கேட்டுவிடக்கூடாது. முதலில் அவர் சொல்வதையெல்லாம் நீங்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். பின்னர் தருணம் பார்த்து நீங்கள் அவரிடம் புனைவங்காடிபற்றிப் பேசத்தொடங்கலாம். அதைக் கேட்டுப் புனைவங்காடிக்குச் சென்றடையும் வழியை உங்களுக்கு அவர் சொல்லக்கூடும். தற்செயலாக அவர் அதைச்சொல்லத் தவறினால் நீங்கள் திரும்பவும் புனைவங்காடிகுறித்து எதையும் கேட்கக்கூடாது. அவர் என்ன சொல்கிறாரோ அதைமட்டும் கேட்டுக்கொண்டு திரும்பிவந்துவிட வேண்டும். ஏனெனில், புனையவாசியொருவரின் அனுமதியும் வழிகாட்டலுமின்றித் தனித்து உங்களால் புனைவங்காடியைச் சென்றடையமுடியாதென்பது ஐதீகம். மற்றொன்று முழுமதிநாளில் புனையத்திற்குச் சென்றுவிடக் கூடாதென்பதையும் உங்களுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன். ஏனெனில் அன்றைய தினம் புனையத்தில் எவருமிருப்பதில்லையென்பது மட்டுமல்ல எதுவுமே யிருப்பதில்லை. சித்திரபுத்திரனார் சரிதத்தை வாசிக்கவோ அல்லது செவிமடுக்கவோவெனப் புனையவாசிகள் சகலரும் வெவ்வேறிடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவர். இதைத் தெரிந்துகொண்ட தொழில்முறைத் திருடர்கள் நான்குபேர் முழுமதி நாளொன்றில் புனையத்திற்குள் நுழைந்தபோது குடிமனை யேதுமற்ற பெருவெளிதான் பரந்துகிடந்தது. வானத்தில் நிலவுகூடத் தென்படவில்லை. ஒரு மங்கிய வெளிச்சம்மட்டுமே பரவியிருந்தது. அங்கிருந்து வெளியேறிச்செல்லும் வழிதெரியாமல் அந்த மங்கிய வெளிச்சத்தில் நான்கு பேரும் அங்குமிங்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்.

நிலம் வெளிக்கத் தொடங்கியபோதுதான் அந்தப்பெருவெளி சட்டென்று குறுகிப் போய் வரிசைவரிசையாகக் குடிமனைகளுடன் செடி, கொடி, மரங்கள், வளர்ப்புப் பிராணிகளெனச் சகலதும் தென்பட்டன. இரவு அவர்களைத் திகைக்க வைத்த தென்றால் பகலின் தொடக்கமே அவர்களைக் கிலிகொள்ள வைத்துப் பீதிக்குள்ளாக்கியது. முதற்பார்வையிலேயே புனையத்திற்கு அந்நியர்களாகத் தோன்றும் அந்நால்வரையும் எப்போதும் நிமிர்ந்து விடைத்துநிற்கும் நீள்செவிகளைக் கொண்ட நாய்கள்தான் முதலில் அடையாளங் கண்டிருந்தன. அடிவயிற்றைக் கலக்கும் உறுமலோடு பல திக்குகளிலிருந்தும் புலிப்பாய்ச்சலில் வந்து அவர்களைச் சூழ்ந்துநின்று குரைக்கத்தொடங்கின. அந்நால்வரினதும் இடுப்பளவு உயரத்திலிருந்த ஒவ்வொரு நாயும் குரைக்கும்போது வெளிப்பட்ட மூச்செல்லாம் கல்லெறிவதுபோல் தங்களின்மீது பட்டுத்தெறிப்பதை நடுக்கத்தோடு உணர்ந்தனர். நால்வரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவர்களாய் ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி நெருங்கி நின்றுகொண்டிருந்தனர். அந்தக் குரைப்பொலியைக் கேட்டதுமே புனையவாசிகள் அவ்விடத்தில் குழுமத் தொடங்கியிருந்தனர். அதனைத்தொடர்ந்து நாய்கள் குரைப்பதைச் சட்டென்று நிறுத்திவிட்டு அந்நால்வரையும் சுற்றிவளைத்து உட்கார்ந்துகொண்டன. நெடி துயர்ந்த தோற்றமுடைய மூப்பர் ஒருவர் ஊன்றுகோலோடு அவர்களை நெருங்கிவந்தார். ஒரு நீள்தும்பைப் பூவைப்போன்றிருந்த மீசையுந் தாடியும் அவரது முகத்தில் பாதியை மறைத்து மார்புவரை நீண்டுபடர்ந்திருந்தது. வலது கையின் மேற்புறத்தில் வாயுங்காதும் ஒன்றித்திருந்த உருவத்தைப் பச்சைகுத்தியிருந்தார். கதைசொல்வதும் கேட்பதுமே புனையவாசிகளின் வாழ்க்கை என்பதற்கான குறியீடே அதுவாகும். (சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்து இந்த வாக்கியத்தை அடிக்கோடிட்டுவிட்டுத் தொடர்ந்து வாசிக்கலானான்). 

ஊமத்தங்கூகையினதுடையதைப் போன்றிருந்த அவரது கண்களின் முதல் விழிப்பிலேயே நால்வரும் மிரண்டனர்.

‘பரிதாபத்துக்குரியவர்களே! உங்களைப்போன்ற முழுமதிநாளில் புனையத்தில் எவருமிருப்பதில்லையென்பதை மட்டும் தெரிந்துகொண்டு இங்கே திருடவந்தவரெல்லாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். முழுமதி நாளில் புனையத்தில் எவருமிருப்பதில்லை என்பதுமட்டுமல்ல, எதுவுமேயிருப்பதில்லை. இங்கிருக்கும் குடிமனைகள், மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் என்றெல்லாம் எங்களால் புனையப்பட்டவை. இவை மட்டுமல்ல, இங்கே தென்படும் சூரியன், சந்திரன், ஆகாயம், முகில்கள், ஆறுகள், நதிகள்கூட எங்களால் புனையப்பட்டவைதான். நிலம் மட்டும்தான் இயற்கையானது. நாங்கள் இங்கில்லாதபோது எங்களால் புனையப்பட்டவையும் இங்கிருப்பதில்லை. எங்களுடனேயே வந்துவிடுகின்றன. நாங்கள் திரும்பிவரும்போதுதான் அவையும் திரும்புகின்றன. நேற்று முழுமதித் தினமாகவிருந்தாலும் பூரண நிலவை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இங்கே திருடவந்தவர்களை நாங்கள் என்றைக்கும் தண்டிப்பதில்லை. இப்போது இங்கிருந்து நீங்கள் வெளியேறிச்செல்லலாம்’ என்றவர் சொன்னபோது மாடப்புறாவொன்றின் குறுகுறுப்பும் உடுக்கின் நாதமும் அந்தக் குரலில் ஒன்றிணைந்திருப்பதாக நால்வரும் உணர்ந்திருந்தனர். மறுகணம் எங்கிருந்து புனையத்திற்குத் திருடப் புறப்பட்டார்களோ, அந்த இடத்திலே நால்வரும் நின்றுகொண்டிருந்தனர். எல்லாமே ஒரு நீண்ட துர்க்கனவு சம்பவித்து முடிந்ததைப் போலிருந்தது. இச்சம்பவம் நிகழ்ந்தபின்னர் அந்த நால்வரும் திருடுவதை முற்றிலுங்கைவிட்டு வெவ்வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக அவர்களிலொருவனை நான் தற்செயலாகச் சந்தித்தபோது என்னிடம் சொல்லியிருந்தான். அவன் இப்போது சித்திரக் கதைப் புத்தகங்களை வாங்கி விற்பதாகவும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் வெகுசொற்பமானதுதான் எனினும் நிம்மதியாக உறங்கியெழ முடிகிறது எனவும் புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்து சொல்லலானான். இதற்குப் பின்பாகத்தான் புனையத்திற்குச் சென்றேயாகவேண்டுமென முடிவெடுத்தேன்’ என ரி. சோமேஸ்வரன் என்னிடங் கூறியிருந்தார்.” 

இந்தளவில் வாசிப்பதை நிறுத்திக் கைக்கடிகாரத்தை ஒருதடவை பார்த்துவிட்டுத் தொடர்ந்து வாசிக்கலானான்.

“…ஆனால் உடனடியாக அவருக்குக் கால அவகாசங் கிடைக்கவில்லை. சுமார் மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில்தான் சந்தர்ப்பங் கிடைத்தது. இனியும் தாமதிக்கக்கூடாதெனப் புறப்பட்டார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் புறப்பட்டது முழுமதித் தினமாகவிருந்ததை அவர் கவனத்திற்கொள்ளத் தவறியிருந்ததால் போன வேகத்திலேயே ஏமாற்றத்தோடு திரும்பிவர வேண்டியதாயிற்று. அதற்குப்பிறகு இன்றுவரை அவருக்குப் புனையத்திற்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரவில்லையென்றும் தன்னைவிடவும் புனையத்திற்குச் செல்வதில் நான் மிகுந்த முனைப்பினைக் கொண்டிருப்பதால் அங்கே சென்ற டைவதற்கான வழிவரைபடத்தை என்னிடந்தருவதாகவும் நான் புனையத்திற்குச் சென்றுதிரும்பியதும் எனக்கேற்பட்ட அனுபவத்தைத் தன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டு, உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்த வழிவரைபடத்தையும் என்னிடந் தந்திருந்தார். இருந்தும் எனக்கும் உடனடியாகப் புறப்படச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சுமார் இருமாதங்கள் கழிந்த நிலையில்தான் அது சாத்தியமாயிற்று. முழுமதி தோன்றுவதற்கு இரு தினங்கள் முன்பாகப் புறப்பட்டு ரி. சோமேஸ்வரனின் வழிவரைபடத்தைப் பின்பற்றிப் புனையத்திற்கு வந்துசேர்ந்தேன். அவர் சொல்லியிருந்தபடியே புனையத்தின் நுழைவாயிலையடைந்து ஒரு வழிப்போக்கனைப்போல் தன்னந்தனியே நின்றுகொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவருமே தென்படவில்லை. பச்சைவெண்ணெய், கருநீல நிறங்களில் வண்ணத்துப் பூச்சிகள் திரள்திரளாகத் தொடர்ந்து கிழக்கிலிருந்து மேற்காகக் குதித்துக்குதித்து மிதந்துசெல்லும் அதிசய நிகழ்வை என் வாழ்வில் முதன்முதலாகப் பார்த்தேன்.”

பதின்மூன்றாம் பக்கம் முடிவுற்றநிலையில் இருதடவைகள் தொடர்ந்து கொட்டாவி விட்டான். வாசிப்பை இத்தோடு நிறுத்திவிடலாமெனத் தோன்றியது. திரும்பவும் ஒருதடவை கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் தலையை மேலுங் கீழும் ஆட்டினான். வாசிப்பைத் தொடரத் தீர்மானித்து, தாயின் பிறந்த திகதியை நினைவுகூர்ந்து இருபத்தைந்தாம் பக்கத்திற்குத் தாவினான்.

“…கதையளக்க அதிகாரங்கொண்டிருந்தவர்களின் குரல் மட்டுமே புனையத்தில் மேலோங்கியிருந்த நாள்களில் வண்ணத்திப்பூச்சிகளை ‘அகலிகையின் புன்னகை’ என அவர்கள் குறிப்பிட்டுவந்தனர். இதனுடன் கூடவே முன்னீடாக, ‘இந்த வண்ணத்துப்பூச்சிகள்தான் அகலிகையின் பேரழகை நீளம், அகலம், உயரம் எனும் முப்பரிமாணங்களில் தேவேந்திரனுக்கு வரைந்து காட்டியபின்பே அவன் பெருந்தவிப்புக்குள்ளாகிக் கௌதமருக்கும் அகலிகைக்கும் நடந்த விவாகத்திற்குப் போயிருந்தான். அவனைப்போலவே பெருந்தவிப்புக்குள்ளாகி அந்த விவாகத்திற்கு வந்திருந்த தேவர், முனிவரென யாவருமே அகலிகையின் வனப்பினால் மோகம்மீறித் தாதுகலிப்பட்டனர்’ என்பதைச்சொல்லி அகலிகையின் கதையைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். புனையவாசிகளும் இதையெல்லாம் ஒரு கடமை என்பதைப்போலத் தொடர்ந்து கேட்டுவந்தனர். கதையளக்க அதிகாரங்கொண்டிருந்தவர்களிடம் குறுக்கிட்டுக் கேள்வி கேட்க எவரும் துணிந்திருக்கவில்லை. காலக்கழிவில் புனையவாசிகளுக்குள்ளும் கேள்வியெழுப்பக்கூடியவர்கள் தோன்றினர்…”

‘தோன்றட்டும். தோன்றட்டும். நன்றாகத் தோன்றட்டும்’ எனச்சொல்லிச் சிரித்துக் கொண்டே தனது வயதினை நினைவுகூர்ந்து முப்பத்தைந்தாம் பக்கத்திற்கு நகர்த்தினான்.

“…புனையத்தில் கதையளக்க அதிகாரங்கொண்டிருந்தவர்கள் மட்டுமே வண்ணத்துப்பூச்சிகளை ‘அகலிகையின் புன்னகை’ என்றழைத்துவந்தனர். அவர்களைத் தவிர்த்து மற்றெல்லோரும் வண்ணத்துப்பூச்சிகளை ‘அகலிகையின் யோனி’ என்றே அழைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்;. இதைப்போல நீலப்பூவையும் புனையத்தில் வசிப்போர் ‘அகலிகையின் யோனி’ என்றழைத்துவந்தனர். இதன் உட்பொருள் விசித்திரமானது. புனையத்தில் பருவகாலம் மாறும்போது அதாவது, இலைதுளிர்காலம் தொடங்கும்போது கிழக்கிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் வண்ணத்துப்பூச்சித் திரளில் பச்சைவெண்ணெய் மற்றும் கருநீலமென இரண்டேயிரண்டு நிறமுடையவை மாத்திரமே கலந்திருக்கும். இவ்விரு நிறங்களும் சேர்ந்திருப்பது நீலப்பூவில் மட்டுந்தான். ஒரு சுட்டுவிரல் அளவுள்ள நீலப்பூவை என்றைக்காகவது நின்று நிதானமாகப் பார்த்திருக்கிறீர்களா? இனி அவகாசங்கிடைத்தால் பாருங்கள். அதிசயமாகத்தானிருக்கும். புனையவாசிகள் எந்தளவுக்கு நுணுக்கமும் கலையுணர்வுங்கொண்டவர்களென்பதை வெகு எளிதாகப் புரிந்துகொள்ளவியலும்……”

அவனுக்குச் சாதுவாக நித்திரை வந்தது. ஒரு பெரிய கொட்டாவி விட்டான். இத்தோடு வாசிப்பதை நிறுத்திவிடலாமெனத் தோன்றியது. திரும்பவும் ஒரு தடவை கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் தனது பிறப்பாண்டை நினைவு கூர்ந்து எண்பத்தாறாம் பக்கத்திற்குத் தாவினான்.

“….அதிகாரமேதுமற்ற புனைகதையாளரொருவரின் கைப்பிரதியிலுள்ள பகுதிகள் ஒவ்வொன்றுமே கள்ளங்கபடமேதுமின்றி உயிர்ப்புடனிருப்பதால் ஒருதடவை கேட்டாலோ அல்லது வாசித்தாலோ மனப்பதிவாகிவிடும். ஆனால் அதிகாரம் தலைக்கேறிய (கைக்கேறிய) புனைகதையாளரின் கைப்பிரதிக்குள் கள்ளத்தனமும் தந்திரமும் புகுந்துவிடுவதால் எந்தவொரு பகுதியும் உயிர்ப்புடனிருப்பதில்லை. அதனால் எத்தனை தடவை வாசித்தாலும் அல்லது செவிமடுத்தாலும் மனதிற் பதிவதில்லை என்பது மூப்பனின் நேரடி அனுபவமாகும்.” 

‘இருந்துவிட்டுப் போகட்டுமே! இதனால் எனக்கொரு பாதிப்புமில்லை’ என வாய் விட்டுக் கூறியவன் எண்பத்தெட்டாம் பக்கத்திற்குப் போனான்.

“….புனைகதை அங்காடியில நான் பரிமாறிய ‘அகலிகையின் காதை’யைச் செவிமடுக்க வந்திருந்த அரேபிய வணிகனொருவன் காதையின் முடிவில் ‘அகலிகை தேனில் ஊறிய பேரீச்சை’ என என்னிடங் கூறினான்.

‘என்னது அரேபியவணிகன் எங்களது மொழியில் பேசினானா? புளுகித் தள்ளாதே!’

‘புனைவங்காடிக்கு வருகைதரும் எவரும் எங்களது மொழியிலேயே கதையளப்பார்கள் என்பது உனக்குத் தெரியாதா?’

‘அப்படியா? இது எனக்குப் புதுத் தகவல். மன்னிக்கவும்’

‘ம்…. அதொன்றுங் காரியமில்லை. தெரிந்துகொண்டால் போதும்.’

‘அதுசரி, ஏன் அந்த அரேபிய வணிகன் அகலிகையைத் தேனில் ஊறிய பேரீச்சை எனக் குறிப்பிட்டான்?’

‘இனிப் பேரீச்சம்பழங் கிடைத்தால் முதல்வேலையாகப் பிரித்துப் பார்த்துவிட்டு உண்ணவும்.’

‘எதிர்காலத்தில் நீங்கள் குறிப்பிட்டவாறு பேரீச்சம்பழம் உண்ணப்படுமென்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’

இதுவும் சரிப்பட்டுவராதெனத் தோன்ற, தனது முதற்காதலியின் பிறந்த வருடத்தை நினைவுகூர்ந்து தொண்ணூற்றிரண்டாம் பக்கத்திற்குத் தாவினான்.

“…ஐயகோ! இந்தப் பேரழகின் மறுவிளக்கமா கௌதமனின் கரஞ்சேர்ந்து வீணானது? நானிது நாள்வரை கண்டிராத பெருவனப்பைச் சித்திரமாய்க் காட்டிய வண்ணத்துப்பூச்சிகளே! உங்களை இந்த தேவேந்திரன் விதந்து போற்றுகிறான். கௌதமன் என்னும் அடர்வனத்தில் வீணாக அமுதைப் பொழிவதற்கா இந்த அகலிகையென்னும் முழுநிலவு தோன்றியது? நினைக்க நினைக்க என் மனம் வாடுகிறது. சித்திரத்தில் கண்டுகொண்ட பெருவனப்பை சொற்களிலடங்காத பேரெழிலை நேரில் காணும்வரைக்கும் நான் இல்லாதிருக்கப்போவதில்லை…”

‘சைக்…! முழுஅபத்தம்! முழுஅபத்தம்!’ எனச் சலித்துக்கொண்டவன், தனது மனைவியின் பிறப்பாண்டை நினைவுகூர்ந்து தொண்ணூற்றியெட்டாம் பக்கத் திற்குப் போனான்.

“…முன்பெல்லாம் இந்த இடத்தைச் சாதாரணமாகக் கடந்திருக்கிறேன். பகலில் சற்றே ஆள்நடமாட்டமுள்ள இடந்தான். கரம்சுண்டல் விற்கும் அந்தச் செந்நிற நெடுவல் தாடிக்காரன் விந்திவிந்தி நடந்துவந்து தள்ளுவண்டிலை ஓரங்கட்டி விட்டு, அட்டணக்கால்போட்டு பீடி புகைத்துக்கொண்டிருப்பான். இது வழமையாக நண்பகல் பன்னிரண்டிலிருந்து ஒன்றுக்குள் நிகழும். அதனைத்தொடர்ந்து நீலப்பூக்கள் பரவியிருக்கும் சிவத்தச் சேலையுடுத்து வலது மாறாடிபோட்ட கறுத்துக் குள்ளமான மீன்காரி, முலைகள் சலிந்து வெளித்தள்ளிக்கொண்டிருக்க அதைப் பொருட்படுத்தாமல் மீன்கடகத்தை இறக்கி வைத்துவிட்டு அமர்ந்திருந்து கண்ணாடிப்போத்தலைத் திறந்து தண்ணீர் குடிப்பாள். இரண்டு நாய்களாவது அவளைச் சுற்றிநின்று வாலாட்டிக்கொண்டிருக்கும். அவள் அங்கிருந்து சென்றதும் இளவட்டங்கள் சிலர் உந்துருளிகளில் வந்துநின்று இருள்கவியும்வரை சிரித்துக் கதைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களும் போய்விட்டால் நாய்களின் காமக்களிப்புத் தொடங்கிவிடும். மற்றும்படி இரவில் ஆள்நடமாட்டமேதுமிருக்காது என்றே நினைத்திருந்தேன்.

பின்னிரவுவேளைகளில் இதுவோர் அதிசய நிகழ்விடமாக இருக்குமென நானொருபோதும் எதிர்பார்க்க வேயில்லை. ஓராறு மாதங்களுக்கு முன்பான இரவொன்றில் சற்றே மனங்குழம்பி, இங்கே வந்து படுத்து நெடுநேரமாக உறக்கமின்றி வெளவால்கள் சலம்புவதையும் வெட்டுக்கிளிகள் இடைவெட்டிக் குறங்குவதையும் கேட்டுக்கொண்டிருந்தேன். எப்போது உறங்கினேனோ தெரியவில்லை. நடுநிசியைக் கடந்து ஓரிரு மணித்தியாலங்களாகியிருக்கலாம். உறக்கங் கலையாத விழிப்புநிலையிலிருந்தேன். யாரோ இருவர் பேசிக்கொண்டிருப்பது துல்லியமாகக் காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வீதிக்கு முகங் காட்டிப் படுத்திருந்தேன். எனக்குப் பின்புறமாகவிருந்து அவ்விருவரும் பேசிக் கொண்டிருந்தனர். கதைகளைப் பரிமாறப் புனைவங்காடிக்கு வந்திருப்பவர்களென உணரமுடிந்தது. ஒருவர் கீச்சுக் குரலில் ஆரம்பித்தார்:

‘இந்தத்தடவை நான் வழமைபோல அகலிகையின் காதையைப் பரிமாறப் போவதில்லை. யாருமே எதிர்பார்த்திராத கோணத்தில் அதை மாற்றிப் பரிமாறப் போகிறேன்.’

‘என்னது? யாருமே எதிர்பார்த்திராத கோணமா? சொல்லுமையா, அதையுந்தான் கேட்போமே’ அடங்கிய சற்றே கரகரப்பான குரலில் இரண்டாவது நபர் சொன்னார்.

‘ம்… எழுத்தில் பரிமாற உத்தேசித்து வந்துள்ளேன். எழுதிவைத்திருப்பதை வாசிக்கிறேன். கேளுங்கள்’ எனக் கீச்சுக்குரலில் மறுமொழி வந்தது.

“நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. மும்முறை சேவல் கூவி ஓய்ந்ததும் கௌதம மகரிஷியானவர் படுக்கையிலிருந்து எழுந்து நதி நீராடப் புறப்பட்டார். அகலிகை ஒரு தோற்சிற்பமென ஒருகளித்து உறங்கிக் கொண்டிந்தாள். இன்னமும் நிலம் வெளிக்காதிருப்பதை அவர் முதலில் உணர்ந்திருந்தும் அதையொரு பொருட்டாகக் கருதாமல் நதிக்கரையை வந்தடைந்திருந்தார். நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. நதிநீராடி முடித்துப் பூப்பறிக்கப் போயிருந்த கௌதம மகரிஷி, இன்னமும் மொட்டு அவிழாதிருக்கக் கண்டு வழமைக்கு மாறாக இன்று சேவல் மும்முறைகூவித் தனது துயில் கலைந்ததில் ஏதோ சூழ்ச்சியிருப்பதையுணர்ந்து வேகமாய்த் தனது குடிலைநோக்கி விரையலானார். நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. குடிலின் வாசலில் கால்வைத்ததுமே கௌதம மகரிஷி தேவேந்திரனின் பாதணிகளைக் கண்டு திகைத்து, நிகழ்ந்ததையும் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் உய்த்துணர்ந்துகொண்டார். உள்ளே கௌதம மகரிஷி உருவில் அகலிகையுடன் தேகக்கலப்பில் திளைத்திருந்த தேவேந்திரன், வெளியரவங் கேட்டுப் பூனையாகி அகன்றுவிடப் பதுங்கிப்பதுங்கி வந்தான். எனினும், நெருப்பாகிவிட்ட மகரிஷியின் கண்களுக்குள் விழுந்தேவிட்டான். நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. உடல் நடுங்க கௌதம மகரிஷி இட்ட பெருஞ்சாபத்தில் அகலிகை கல்லாகி ஒடுங்கினாள். தேவேந்திரன் ஆயிரம் யோனிகளால் தேகம் நிறைய ஓட்டமெடுத்தான். அவன் ஓடிக்கொண்டிருப்பதை முழவமிசைத்து விளையாடிக்கொண்டிருந்த முப்பெருந்தேவியர்தான் முதலில் பார்த்தனர். நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. தேவியரும் தேவேந்திரனைப் பார்த்ததுமே கோபாக்கினி முகங்களில் சுடர்விட, பிரம்மதேவரின் முன்னே தோன்றினர்.

‘என்னவோர் அதிசயம்! முப்பெருந்தேவியரும் ஒருங்கே தோன்றுவது கண் கொள்ளாக் காட்சியன்றோ!’ என்றவர் சொல்லிமுடிப்பதற்கிடையில், ‘போதும் உமது பரிகாசம். இத்துடன் நிறுத்திக்கொள்ளும். நீர்க்குமிழியாய்த் தோன்றி மறையும் உடல்கொண்ட மானிடப்பெண்ணொருத்திக்கு எவ்வுலகுங் கண்டிராத பெருவனப்புடன் யோனியைச் சிருட்டித்துவிட்டு, முழுமுதற் தெய்வப்பெண்களான எங்களுடையவற்றை மட்டும் மிக இழிவாகச் சிருட்டித்து உமது படைப்பின் மகத்துவத்தைக் காட்டியிருக்கிறீர்!’ என மூவரும் ஒருமித்து இடிமுழக்கமிட, நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று. அவர் பதறிப்போய், ‘முப்பெருந்தேவியரே! என்மீது சினங்கொள்ள வேண்டாம். நான் எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. இவ்விடயத்தில் என்னைமீறி ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. சற்று அவகாசங் கொடுங்கள். ஆராய்ந்து தகுந்த விளக்கந் தருகிறேன். உடடனடியாகப் பதிலளிக்கமுடியாமைக்கு மனம் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ சிரந்தாழ்த்தி வணங்கிநிற்க, நிகழ வேண்டியிருந்ததெல்லாம் முறைப்படி நிகழலாயிற்று.

‘என்னது? மன்னிப்பா? உமக்கா? எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை என நியாயப்படுத்தித் தப்பிக்க முடியாது. உம்மைமீறித் தவறு நேர்வதானால் படைத்தல் தொழிலுக்கு நீர் பொருத்தமில்லாதவர். அதனால் இப்போதே நீர் கல்லாகக் கடவது’ எனச் சாபமிட்ட முப்பெருந்தேவியரும் மின்னலென மறைய, பிரம்மதேவர் கல்லாகச் சமைகிறார். நிகழவேண்டியிருந்ததெல்லாம் முறைப் படி நிகழலாயிற்று. இதனால் படைப்புத்தொழில் சட்டென்று நின்றுவிடுகிறது. இதனைத்தொடர்ந்து காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஒவ்வொரு தொழிலும் செயலிழந்து உறைநிலைக்கு வந்துவிட, ஐந்தொழில்களும் கருத்திழந்து அத்தொழில்களுக்கான கடவுளர்களான திருமால், சிவன், உருத்திரன், மகேஸ்வரன் முதலானோரும் கையறுநிலைக்கு உள்ளாகின்றனர். இதையெல்லாம் திருக்கைலாயத்தில் தனித்திருந்த சிவபெருமான் பொழுதுபோக்காகத் தனது முன்நிகழ்வாடியில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நிகழப்போகும் அசம்பாவிதத்தைத் தவிர்த்துக்கொள்ளும்பொருட்டு நதிநீராடி முடித்துப் பூப்பறிக்கப்போன கௌதம மகரிஷி இன்னமும் மொட்டவிழாதிருக்கக் கண்டு, வழமைக்கு மாறாக இன்று புலர்வுக்கான சேவல் மும்முறை கூவித் தனது துயில் கலைந்ததில் ஏதோ சூழ்ச்சி யிருப்பதையுணர்ந்து வேகமாகத் தனது குடிலைநோக்கி விரைந்துகொண்டிருக்க, அவரை வழியிலே தடுத்தாட்கொண்டு மனம், வாக்கு, காயம் மூன்றாலும் கௌதம மகரிஷியைத் தேவேந்திரனாக உருமாற்றிவிட்டார். இந்தத் தேவேந்திரன் ஐராவதத்தில் தாவித் தேவலோகம் சென்றடைந்தபோது அது இந்திராணியுடன் சேர்ந்து களிக்கும் காலமாயிருந்தது. ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் தேவேந்திரனை வரவேற்று நடனமாடி இந்திராணியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தனர். வழமைக்கு மாறாக இன்றைய தினம் உரியநேரத்தில் தன்னுடன் சேர்ந்து களிக்க வந்திருக்கும் தேவேந்திரனைக் கண்டு ஒருகணம் அதிசயத்திலாழ்ந்த இந்திராணி, மறுகணமே, வந்திருப்பது தேவேந்திரனல்லவென்பதை உய்த்துணர்ந்துகொண்டாள். வந்திருப்பது யாராயிருப்பினும், தேவேந்திரனின் உருவிலிருப்பதால் அவருடன் சேர்ந்து களித்திருப்பது இந்திராணி என்றவகையில் தனது கற்புநெறிக்குட்பட்ட கடப்பாடென்பதை மனதிற்கொண்டு அணைப்பிற்கிணங்கினாள். ஆழ்நிலைத் தியானத்திற்கிட்டுச் செல்வதைப்போன்று அவ்வணைப்பிலாழ்ந்ததும் உணரலானாள். இதுதான் அனுபூதிநிலையோ எனத் தனக்குள் கேள்வியெழுப்பிக் கிறங்கலானாள். இதுநாள்வரை தேவேந்திரனிடமிருந்து தனக்கு நேர்ந்திருக்காத புத்துணர்வில் கடலில் மிதக்கும் மரக்கலம்போல் திளைக்கலானாள்.

அகலிகையுடன் தேகக்கலப்பில் திளைத்துமுடித்து, கிறக்கம் தணியாமலேயே இந்திரலோகந் திரும்பிய தேவேந்திரனை வரவேற்ற சேவகர்கள் ‘வானவர்கோன் இப்போது தேவியுடன் சேர்ந்திருப்பதால் அவரை நீங்கள் உடனடியாகக் காண முடியாது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் சபைக்குத் திரும்பும்வரை விருந்தினர் அரங்கில் காத்திருக்கலாம். அல்லது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வெடுக்கலாம். இவற்றில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் மகரிஷி?’ எனச் சிரந்தாழ்த்திக் கேட்கவும், தேகக்கலப்பின் கிறக்கம் சட்டென்று தணிய,  மின்னல் தாக்கியதைப்போல அதிர்ச்சிக்குள்ளாகிய தேவேந்திரன் ‘என்னது நான் மகரிஷியா? காத்திருப்பதா? பித்தர்களே! நான்தானடா தேவேந்திரன்! உள்ளேயிருப்பவன் யாரடா? அவனை இங்கே கொண்டுவாருங்கள்! நான் பார்த்தாக வேண்டும்,’ எனக் கத்தினான். அவன் பேசிய ஒரு வார்த்தைகூட வெளியே கேட்கவேயில்லை. சேவகர்கள் தாழ்த்திய சிரங்களை இன்னமும் மேலுயர்த்தாமல் நின்றபடியே, ‘மன்னிக்க வேண்டும் மகரிஷி. தாங்கள் சொன்னதெதுவுங் கேட்கவேயில்லை,’ என வாய்பொத்தி நின்றுகொண்டிருந்தனர். கௌதம மகரிஷியை மனம், வாக்கு, காயம் மூன்றாலும் தேவேந்திரனாக உருமாற்றிய ஆதிசிவனார், தேவேந்திரனைப் பார்ப்பவர் கண்ணுக்கு கௌதம மகரிஷியாகத் தோன்றும்படி செய்துவிட்டார். இதை யவன்…’

அந்தாள் கதையைச் சொல்லிமுடிக்கும்வரை கேட்டுக்கொண்டிருக்காமல் அந்தரப்பட்டுக் குறுக்கிட்டேன். 

‘புனைவில் நிகழ்ந்திருக்கும் உருமாற்றம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் புனையப்பட்ட முறை சிறுபிள்ளைத்தனமானது. இதைக் கொண்டுபோய்ப் புனைவங்காடியில் பரிமாறினால் முதற்சுற்றிலேயே நிராகரித்து வெளியேற்றிவிடுவார்கள். நீங்கள் விரும்பினால் நான் சொல்லும் முறையில் புனைந்து ஒரேயொரு வசனத்தையும் சேர்த்துவிட்டால் புனைவங்காடியில் பரிமாறும்போது இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகும் ஒரேயொரு புனைவாக அமைவதுடன், காலங் கடந்தும் நிலைத்திருக்கும். என்ன சொல்கிறீர்கள்?’

நான் கேட்டதற்கு மறுமொழியேதுமில்லை. சட்டென்று எல்லாமடங்கி மயான அமைதி நிலவியது. எழுந்து பார்த்தேன். அங்கே எவருமில்லை. நிகழ்ந்ததெது வுங் கனவல்ல என்பதில் உறுதியாகவிருப்பதால் எந்தவொரு குறுக்கீடும் செய்யாமல் அந்தப் புனைகதையை முழுமையாகக் கேட்டுமுடித்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஆறுமாதங்களாக ஒவ்வோரிரவும் இங்கேவந்து உறங்காமல் காத்திருக்கிறேன்’ என மூப்பர் என்னிடம் சொல்லிமுடித்தார்.

தக்க தருணம் இதுவென்றுணர்ந்து, ‘நீங்கள் குறிப்பிடும் புனைவங்காடி எங்கிருக்கிறது? அங்கே நான் சென்றடைய வழிகாட்ட முடியுமா?’ எனக் கேட்டுவிட்டேன். முதலில் சிறுகுழந்தைபோல் கெக்கட்டமிட்டுச் சிரித்தார். பின்னர், ‘இது நல்ல கூத்து! இப்போது நீ நின்றுகொண்டிருப்பதே புனைவங்காடியில்தான்’ என்றார். அவர் சொன்னதை என்னால் நம்பவேமுடியவில்லை. திரும்பவும்…’

நூறாவது பக்கத்தைத் திருப்பினான். நூறாம் பக்கமும் நூற்றியோராம் பக்கமும் எதுவும் அச்சாகாமல் வெற்றுப்பக்கங்களாயிருந்தன. தொடர்ந்து வாசிக்கும் மனநிலையற்றவனாகப்  புத்தகத்தை மூடிவைக்கத் தீர்மானித்தவன், சட்டென்று முதலாம் பக்கத்தைப் புரட்டி வாசித்தான்.

‘அவன் முகப்போவியங்களுக்காகவே புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் புத்தகங்களெல்லாமே அவனால் முகப்போவியங்களுக்காக வாங்கப்பட்டவைதான். ஏதாவது புத்தகங்களை வாங்கிவந்தால் அறைக்குள் நுழைத்து எங்கே இடைவெளி யிருக்கிறதோ அங்கே சொருகிவிட்டுப் போய்விடுவான். இதுதவிர எப்போதாவது அறையை ஒழுங்குபடுத்த வேண்டுமெனத் தோன்றினால் மட்டும் அங்கே நுழைவான். அதுவும் ஒரு மணித்தியாலத்துக்குமேல் அங்கிருக்கமாட்டான். அதற்குள் தனக்கிசைவான விதத்தில் அறையை ஒழுங்குபடுத்த எத்தனிப்பான். சிலவேளைகளில் ஒருசில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்ப்பான். பின்னர் தனக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொள்வான். கைக்கடிகாரத்தை உயர்த்தி நேரம் பார்ப்பான். உடனே அறையைப் பூட்டிக்கொண்டு போய்விடுவான். அன்றைய தினம் வெறுங்கையோடு அறைக்குள் நுழைந்தவன் வழமையான ஒழுங்குபடுத்தலில் ஈடுபடாமல், நுழைவாயிலுக்கு நேரெதிராகவிருந்த இறாக்கையின் இரண்டாவது தட்டின் அடுக்கிலிருந்து சரிந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த புத்தகத்தை இழுத்தெடுத்தான். முன்னட்டை மயில்…’

புத்தகத்தை மூடி எடுத்த இடத்தில் சொருகிவிட்டுத் தனக்குள்ளே ஏதோ பேசிச் சிரித்துவிட்டு, கைக்கடிகாரத்தை உயர்த்தி நேரம் பார்த்தான். பரபரப்புடன் அறையைப் பூட்டிவிட்டு ஓட்டமும் நடையுமாக வெளியே போனான்.

இராகவன்

இராகவன் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன புனைவில் வடிவங்கள், உள்ளடக்கங்கள் சார்ந்து வெவ்வேறு பகுப்புக்களைச் செய்பவர். ‘கலாவல்லி முதலான கதைகள்’ , ‘விட்டில்–சமகால அரசியல் பகுப்பாய்வு’ என்ற சிறுகதை தொகுப்புகளின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.