”அலேட்டர் செத்துட்டார் மச்சி” காலையிலேயே அழைப்பெடுத்தான் சிறி. 

“…”

”சுரேஸ் அங்க கிட்டத்தானே. அப்பார்ட்மெண்டில நெருப்பு பிடிச்சிட்டுது. அங்க ஒரு குடும்பம் இந்தாளோட நல்லமாதிரி. அவங்கட குழந்தை மாட்டிட்டுது. இந்தாள் இறங்கி பிள்ளைய நல்லபடியாக் கொண்டுவந்து குடுத்திட்டுது… அடேய் இஞ்ச பொறு பிறகெடுக்கிறன்” வேலைத்தள அவசரத்தோடு பேசி முடித்தான்.

சிறி மீண்டும் அழைப்பெடுத்தான். என்ன பேசுவதென்று தெரியாமல் மௌனமாயிருந்தோம். 

”ச்சே, இவ்வளவுக்கால வந்து இப்பதான் மனிசன் நிம்மதியா இருந்தது”

நிம்மதியா இருந்தாரா என்று யோசித்தேன். திடீரென்று தோன்றிய அவசரத்தோடு கேட்டேன். ”ஆளுக்கு ஏதும்?”

”இல்லடா. ஒரு துளிக் காயமும் இல்லயாம். அதாண்டா! என்னத்தச் சொல்லுறது. புகைய சுவாசிச்சதிலதான். தெரியும்தானே அலேட்டர் ஒரு பிள்ளயக் காப்பாத்திட்டுச் சும்மா நிக்கிற ஆளே? இறங்கி வேலை செய்திருக்கும். நாங்கள் ஒருக்கா சந்திச்சிருக்கலாம். இந்தா அந்தாண்டு விட்டாச்சு. இவ்வளவு அவசரா நடக்குமெண்டு யார் கண்ட?”

பத்து வருஷம் இருக்குமா அலேர்ட் குணத்தாரை முதன்முதலாய்ப் பார்த்து. 

*  *  *

“அலேட்டர் அம்மான விசர் வரும் எனக்கு.”

வீட்டுக்குள் நானும் சிறியும் நுழைந்த எரிக்கும் மதியவேளையில் மழைத்தூறல் பட, ஆச்சரியமாக நிமிர்ந்த அதே நேரத்தில் சிறி கோபமாகக் கத்தினான். திறந்த குளியல் தடுப்புச் சுவருக்கு அந்தப்பக்கம் யாரோ வேகமாகச் செல்லும் காலடிச்சத்தம்.

“வந்த உடனயே ஏண்டா அந்தாளோட?” வெளியே வந்தவன் சுரேஸ். சினேகபாவத்துடன் புன்னகைத்தான்.

வசதியான பெரிய வீடு. நான்கு பெரிய அறைகள். நிரந்தரமாக எட்டுப்பேர் தங்கியிருக்க, வந்து தங்கிப் போவோர் என்று பத்துப் பன்னிரெண்டு பேராவது எப்போதும் இருந்தார்கள். எல்லோருமே வெளிநாடு செல்லும் நோக்கத்தோடு இருந்தார்கள். 

மதிய உணவுக்காகச் சமையலறையில் மூன்று பேர் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறைச்சியை வெட்டிக்கொண்டிருந்த சுரேஸ் கேட்டான், “பீஃப் சாப்பிடுவீங்கல்ல?” தலையசைத்தேன். 

”அவன் சாப்பிடுவான். நாந்தான் எதுவும் சாப்பிடாம இருந்தன். இங்க வந்து தொடங்கியாச்சு. இவன் பீஃப் செம்மையா சமைப்பான். முதல்தரம் இங்க பீஃப் எண்டே தெரியாம சாப்பிட்டது. தள்ளுவண்டில்ல வச்சு விப்பாங்க. என்ன டேஸ்ட்டடா எண்டு புளுகமாகிச் சாப்பிட்டுட்டுப் பிறகு வண்டில்ல பேரைப் பாக்கத்தான் ஒரு மாதிரிக் கிடந்திச்சு. பீப்பிரியாணி எண்டு எழுதி வச்சிருந்தாங்கள்”, சிறி.

”நானும் முதல்தரம் பாத்து என்னடாண்டு குழம்பிட்டன்” சுரேஸ். 

”தம்பி மன்னிக்க வேணும்” அப்போது உள்ளே நுழைந்தவருக்கு நாற்பது வயது மதிக்கலாம். கொஞ்சம் முன் வழுக்கை, குறை சொல்ல முடியாத தொப்பை, அப்போதுதான் குளித்த சோப்பு வாசனை, நெற்றியில் நீறு துலங்க, சற்று நீளமான அரைக் காற்சட்டை, ரீ ஷேர்ட். பார்வையில் ஒரு பெரிய மனுஷன் தோரணை தெரிந்தது.

“இஞ்ச கொண்டாரும் தம்பி” வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். வேலையில் கவனமானார். “இவர்தான் வந்திருக்கிறார்” சுரேஸ் சொல்ல, என்னைப் பார்த்து ஒரு அமர்த்தலான புன்முறுவல். வெகு சிரத்தையாக வெங்காயத்தை உரித்தார். சிறிய தோல்கூட விடுபடக்கூடாது என்பதாகக் கவனமாக ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்துத் தண்ணீருக்குள் போட்டார். கத்தியை எடுத்து அளவெடுத்ததுபோல நறுக்கத் தொடங்கினார்.

”அலேட்டருக்குத் தன்ர கைக்கு வந்த வேலை பிசகக்கூடாது. கையால கவனமாச் செய்யோணும்.” 

“தம்பி இதையொருக்கா உடைச்சுத் தாரும்” மசாலா பைக்கற்றை என்னிடம் தந்தார். அவரின் நகங்களை ஆழமாகவும் சுத்தமாகவும் கத்தரித்திருந்தார். “பிளேடால வெட்டியிருக்கிறீங்கபோல” என்றேன். ”எல்லாம் அங்க பழகினதுதான்” சிரித்தார். அவருக்குக் குழந்தைத்தனமான ஒரு சிரிப்பு வாய்த்திருந்தது.

”எல்லாஞ் சரி, வரேக்க எதுக்கு தண்ணியால எத்தினீங்க? புதுசா ஒருத்தன் வரேக்க மனுசர்மாதிரி இருக்கமாட்டியளே?’ எல்லாம் பழகின்னிங்கள் இதுகளை மட்டும்” சிறி கடுப்பாகக் கேட்டான். 

”யார் தண்ணி எத்தினது? தம்பி நீர் பாத்தனீரோ?” அவர் அமைதியாகக் கேட்டார்.

”இந்த வீட்டில வேற யார் இப்பிடிக் குரங்குச் சேட்டை விடுறது? வேற யாராவது இருக்கினமோ? உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது?”

”தம்பி நீர் கண்டனீரோ நான் எத்தினதை? சும்மா நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன்” குரலை உயர்த்திக் கத்தினார். உண்மையாகக் கோபப்படுகிறாரா, விளையாட்டா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு சிரிப்பு ஓடிக்கொண்டிருந்த மாதிரியே பிரமை. எல்லாருக்கும் இது பழகினதுபோல யாரும் கண்டுகொள்ளவில்லை. 

”அம்மான எனக்கு விசர் வரும் அலேட்டர்” என்றான் சிறி குரலைத் தணித்து.

”இப்பிடிச் சும்மா கதைச்சிட்டிருந்தா வராம..”

செல்பேசி ஒலித்தது. அவசரமாக எட்டி எடுக்க முயன்ற சிறி, கால் இடறி விழப்பார்த்துத் தடுமாறி எழுந்து வெளியே போனான்.

”கூயா..! சும்மா ஒருத்தனில பழிசொன்னா இப்பிடித்தான்” அலேட்டர் உற்சாகமாகிக் கைதட்டிச் சிரித்தார்.

***

பலகனியில் தனியே நின்றுகொண்டிருந்தபோது ஏரியாவே அமைதியாயிருந்தது. மாலைநேரத்துக்கு அந்த அமைதி அந்நியமானதுபோலத் தோன்றியது. எதிர்வீட்டு கேற்றடியில் பிங்க் கலர் ஸ்விஃப்ட் கார் தனியாக நின்றிருந்தது. தெருவில் அவ்வப்போது உயர்ரக சொகுசுக் கார்கள் நடமாட்டமிருந்தது. பெரிய மதிற்சுவர்களோடு கூடிய வீடுகள். இந்தத் தெருவில் நாம் தங்கியிருக்கும் இந்த வீடுதான் ஆகச் சிறியது என்று சொல்லலாம். சினிமா நடிகர்கள், பிரபலங்கள், டீவி சீரியல் நடிகர்கள் குடியிருக்கும் பகுதி என்று சிறி சொல்லியிருந்தான். அவனுக்கு இங்கு வந்த ஆரம்ப நாட்களில் எல்லா வீடுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வதுதான் பொழுதுபோக்கு. எந்த வீட்டில் யார் இருக்கிறார்களோ என்ற ஆர்வம். முதலில் கொஞ்ச நாட்கள் ஆச்சரியப்பட்டுப் பிறகு பழகிவிட்டதாகச் சொன்னான். 

”அலேட்டர் எங்க? கிளம்பியாச்சோ?” ஜீன்ஸ் டி ஷேர்ட்டில் நின்றவர், ”ஓம் டைரக்டர் வீட்ட போறன், இரவு வரமாட்டான்” என்றவர் தலையசைத்துச் சிரிப்புடன் சென்றார். யார் டைரக்டர், என்றேன் ஆர்வம் தாங்காமல். ”இங்க யார் டைரக்டர் யாரெல்லாம் டைரக்டர் இல்லையெண்டு சொல்ல ஏலாது. இப்ப நாளைக்கே நீ ஒரு கதை வச்சிருக்கிறேன், படமெடுக்கப்பபோறேன்னு சொல்லு. உன்னைச்சுத்தி நாலுபேர் வருவாங்கள். அதவிட எங்கடையாக்களுக்கு ஈஸியானது ப்ரொடியூசர் வேலைதான். லண்டன் கனடாவிலருந்து எங்கடையாக்கள் வந்தாலே போதும். சிலோன்காரர் எண்டாலே ப்ரொடியூசர் மாதிரியே பாக்கிறவனுங்களும் இருக்கிறாங்கள். எனக்கே போனகிழமைதான் தெரிஞ்சுது. ஒருத்தன் கேட்டான். உன்னைப் ப்ரொடியூனுசர்ண்டு சொல்றேன். நடிக்க இண்டர்வியூவுக்கு ஒரு பொண்ணு வரும். நீ ஒண்டும் பேச வேண்டாம், சும்மா இருந்தா போதும். நடிக்கிறியா? எண்டான். ஆளை விடுறா சாமி எண்டு எஸ்கேப்பாகிட்டன். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தமோ. இப்பிடி அல்லாட வேண்டிக்கிடக்கு. இதில” உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான் சிறி.  

”இந்தாள் டைரக்டர் வீட்ட டைரக்டர் வீட்ட எண்டு அடிக்கடி போகுது. எங்கயோ தெரியேல்ல” என்றான் ஒருத்தன். 

”அலேட்டர பிழையாக் கதைக்காத! அந்தாள் பாவம்டா.. சரி எங்க போனாத்தான்  என்ன? எங்கயாவது போகட்டும். அந்தாளுக்கு என்னடா இருக்கு வாழ்க்கைல? மனிசி, சின்னப் பிள்ளை எல்லாத்தையும் கண்ணுக்கு முன்னால பறிகொடுத்துட்டு வந்த மனிசன்” என்ற சிறி அமைதியாக என்னிடம் சொன்னான், ”சின்ன வயசில இயக்கத்தில் சேர்ந்துட்டுது. அதான் அந்தாளுக்குச் சின்னப்பிள்ளைத்தனம் இன்னும் விட்டுப்போகேல்ல. இப்பதான் பள்ளிக்கூடப் பெடியள் மாதிரி ஒளிச்சிருந்து தண்ணி தெளிக்கிறது, பிடரில தட்டிப்போட்டுத் தெரியாத மாதிரி நிக்கிறது,  இதுகள்தான் விளையாட்டு. இப்ப இல்ல வந்த புதுசுல இன்னொரு பழக்கம் இருந்தது. வீட்டில எலாஸ்ட்டிக் வச்ச காச்சட்டை போட்டிருந்தா பின்னுக்கிருந்து டக் எண்டு இழுத்து விடுறது. எல்லாரும் பேசி அதிசயமா அந்த விளையாட்டை நிப்பாட்டீட்டுது. அந்தாள் பள்ளிக்கூடத்தில தான் விட்ட இடத்திலயிருந்து இப்ப கொன்டினியூ பண்ணுது. பிறகு, அந்த நேரத்தில நான் கோபத்தில் கத்துறதுதான், ஆனா பாவம்டா அந்தாள்” என்றான்.

***

இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை. பலகனியில் நின்று வானத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பிங்க் நிறக் கார் இன்னமும் தனியாக நின்றுகொண்டிருந்தது. இந்தப் பகுதியில் பகல் நேரத்தைவிட இரவில் கொஞ்சம் நடமாட்டம் இருந்ததுபோலத் தோன்றியது. 

சத்தம் கேட்டுத் திரும்பினேன். இப்போது எதிர்வீட்டு கேற் திறந்திருக்க, உள்ளேயிருந்து ஒரு பிஎம்டபிள்யு கார் வெளியே போனது. சற்று நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளிருந்து நைட்டியில் வந்த பெண்மணியை எங்கோ பார்த்தது போலிருந்தது. மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தார். வெளியே நிறுத்தியிருந்த பிங்க் நிறக் காரை வீட்டுக்குள் செலுத்தி மறைந்தார். மிகப்பரிச்சயமான முகமாகத் தெரிந்தது. எனக்கு நன்றாகத் தெரியுமே ச்சே அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேன் என்றது. பக்கத்தில் வேறு யாருமில்லை கேட்பதற்கு. சடுதியில் மின்னலாய்த் தோன்றியது. அந்த அண்ணி காரெக்டர்தானே? பிரபல நடிகருக்கு அழகான அண்ணியாய் நடித்தவர். மறுநாள் காலை திடீரென அந்தக் காட்சி ஞாபகம் வந்தது.

”டேய்..நேற்றிரவு” நான் உற்சாகமாக ஆரம்பிக்கவும் சுரேஸ், ’’அண்ணிய பாத்துட்டியா?” என்றான். ஆச்சரியப்பட்டு, ”எப்பிடி?” என்றேன். ”வழக்கமா இங்க வர்ற எல்லாருமே இப்பிடித்தான் கேப்பாங்கள்” என்றான். ”ஒவ்வொருநாளும் இரவு நீர் பாக்கலாம் தம்பி. உள்ள நிக்கிற கார் போனதும் வெளில நிக்கிற கார எடுக்க  நைட்டியோட வருவா.. இதிலருந்து என்ன தெரியுது?” அலேட்டர் ஒரு ‘சரியான விடையைக் கூறுங்கள் பார்க்கலாம்’  பள்ளிக்கூட வாத்தியாரின் சீரியஸ் பாவனையோடு கேட்டார். ”அலேட்டருக்கு வேற வேலை வில்லட்டி இல்லையெண்டு தெரியுது” என்றான் ரகு. ”அப்பிடியில்ல தம்பி நாங்கள் எப்பவும் எங்களச்சுத்தி இருக்கிற இடத்தில அலேட்டா இருக்கவேணும் தம்பி.”   

”அதுசரி, கோயிலுக்கெல்லே வெளிக்கிட்டனீங்கள். பிறகு எதுக்கு உந்தத் தேவையில்லாத கதையள்?” என்றான் சுரேஸ். அலேட்டர் குளித்துப் பக்திப் பழமாகப் புறப்பட்டார். 

“வியாழக்கிழமைகளில் தவறாமல் பாபா கோயிலுக்குப் போவாராம். அடுத்த தெருவில்தான் இருந்தது. ஒரு சினிமாப் பிரபலம் கட்டிய கோயிலாம். அங்கதான் மாஸ்டருக்கு நகைச்சுவை நடிகர் ஒருவரும் பரிச்சயமானராம். அவரும் வியாழன் தவறாமல் வருவாராம். இலங்கைத்தமிழர் எண்டுறதால இவர் மேல சும்மாவே கொஞ்சம் கூடுதல் பாசம். பிறகு இவற்ற கதையளக் கேட்டு அவருக்கு இன்னமும் பிடிச்சுப் போச்சாம். இப்ப போட்டுட்டு போற ஷேர்ட் அவர்தான் குடுத்ததாம். பிறந்தநாளுக்கு ஒரு வொட்ச் குடுத்தவராம் எண்டு அலேட்டர்தான் சொன்னார்” என்று இழுத்தான் ரகு.

நான் திரும்பிப் பார்த்தேன். அவன் தொடர்ந்தான், ”அலேட்டர் பொய் சொல்லுற ஆளெண்டில்ல.  சிலநேரம் கொஞ்சம் புளுகில கதைக்கும். ஆனால் அந்தாளிட்ட இருந்து நாங்களாகக் கேட்டு எந்த உண்மையையும் எடுக்க ஏலாது. உண்மையைச் சொல்லுங்கோ எண்டு தப்பித்தவறி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களோ அப்ப அந்தாள் சொல்லுறது முழுக்கப் பொய்யாத்தான் இருக்கும். சீரியஸா கேள்வி கேட்டால், விசர்த்தனமாகக் கதைக்கும். நீங்கள் எந்தளவுக்கு சீரியஸாக கதைக்க நினைக்கிறீங்களோ அந்தளவுக்கு விசர்த்தனமாக் கதைக்கும். அது அந்தாளின்ர ஒரு விளையாட்டுக் குணம். எங்களுக்குப் பழகிப் போச்சு. எப்பாவது தானா தன்ர கதையக் கொஞ்சமாச் சொல்லும். அப்ப நம்பலாம் அதில பொய்யே இருக்காது. நூறு வீதம் உண்மையாத்தான் கதைக்கும். தெரியும். அதெப்பிடியோ தெரியாது அந்த நேரத்தில தெரியும் இது அவ்வளவும் உண்மைதானெண்டு. மனிசன் சின்னப் பிள்ளைத்தனமாவே நடந்துகொண்டிருக்கும். ஆனா எண்டைக்காவது ஒருநாள் காட்டிடும் எல்லோரையும்விட நாந்தான் பெரியாளெண்டு. இங்க யாரும் அந்தாளோட எதுக்கும் கோவிக்க மாட்டாங்கள். சும்மா அந்த நேரத்தில கடுப்பில கத்துறதுதான். அந்தாளும் எவ்வளவு திட்டினாலும் மனதில வச்சிருக்காது. திருந்தவும் போறதில்ல” சிரித்தான் ரகு.

***

அங்கே இருந்த நாட்களில் யாருக்கு என்ன வருத்தம் துன்பமென்றாலும் கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் மனுஷன். அந்த நேரத்தில ஒரு அம்மா மாதிரி நடந்துகொள்ளும். எவ்வளவு தடுத்தாலும் கேக்காமல் உடுப்புத் தோய்த்துக் கொடுப்பார். அந்த விளையாட்டுத்தனங்களையும் விடவில்லை. அடிக்கடி அவர் சொல்லும் ‘தம்பி எப்பவும் அலேட்டா இருக்கோணுமடா’தான் குணத்தாருக்கு அலேட்டர் என்ற பெயரைக் கொடுத்திருந்தது. அந்த இரண்டு வருடங்களில் கடைசி ஐந்தாறு மாதங்கள்தான் அவர் கொஞ்சம் ஓய்ந்து போனதுபோல மாறியிருந்தார். அடிக்கடி யோசனையோடு திரிந்துகொண்டிருந்தார். அப்போது நாங்கள் பேசிக்கொள்வதெல்லாம் எங்களுக்கு எப்ப சரிவருதோ இல்லையோ முதல்ல குணத்தார் வெளிக்கிட வேணும் என்பதுதான். சிறி கூட நேரடியாகவே கேட்பான் ”என்ன அலேட்டர் இப்ப எல்லாம் விளையாட்டுக்கு குறைஞ்சிட்டு? இப்பிடி இருக்கக் கூடாதே.” சிரித்துவிட்டு அமைதியாயிருப்பார். 

அடிக்கடி இரவு பார்ட்டிகளின்போது அவர் நிற்பதில்லை. ”ஆள் குடிக்கமாட்டாரோ?” என்று கேட்டதற்கு சுரேஸ், ”குடிப்பார், குறைவு. அளவா நிதானமாய்க் குடிக்கும் மனிசன். இங்க ரெண்டுமூன்று பேர் வருவாங்கள். பீக்குடிகாரர் எண்டுற வகை. இரவிரவாகக் குடிச்சு வாந்தியெடுத்துட்டு அதுக்குள்ளயே தூங்கி எழும்பி விடிய வெறும் வயித்தில திரும்பவும் சரக்க ஏத்திற ஆக்கள். சிறியனுக்கு அவங்களெண்டா காணும்  நல்ல  சந்தோஷமா ஜோதில ஐக்கியமாயிடுவான். அலெட்டருக்கு உந்த அரியெண்டங்கள் பிடிக்காது. அப்பிடியொரு பார்ட்டில நிக்கவே விரும்பாது. ஆனா ஒண்டு எப்பாவது குணத்தார் அடிச்ச அண்டைக்குத்தான் தன்னைப் பற்றிக் கொஞ்சமாவது சொல்லுவார். அப்பிடித்தான் நாங்கள் அவரைப் பற்றித் தெரிஞ்சுகொண்டது.”

நாங்கள் ஐந்தாறுபேர் கலந்துகொண்ட சில பார்ட்டிகளில் குணத்தார் குடித்திருக்கிறார்; அப்போது நிறையப் பேசியுமிருக்கிறார். அன்று சுரேஸ் யாரோ வெளிநாட்டிலிருந்து வந்து கொடுத்ததாக இரண்டு ரெமி மார்ட்டின் போத்தல்கள் கொண்டுவந்தான். ஏகப்பட்ட பைட்கள், மாட்டிறைச்சிப் பொரியலோடு கோலாகலமாக ஆரம்பித்தோம். குணத்தாரும் இணைந்துகொண்டிருந்தார். ஏதேதோ பேச்சுக்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் குணத்தார் ஆரம்பித்தார்:

”தம்பி ஒரு வேலையைப் பொறுப்பெடுத்தா என்ன பாடுபட்டெண்டாலும் சரியா, அலேட்டா முடிக்கோணும். அதில நான் பிழைவிட்டதில்லை. ஒருக்கா ஏழாலைக்க தனியா பசீலனோட மாட்டிட்டன். கூட என்னோட நிண்டவங்கள்ல ஒருத்தனுக்குக் காயம். மற்றவர்கள் எங்கேயெண்டு தெரியேல்ல. பசீலன் தெரியும்தானே ரக்டர்ல தூக்குக்காவடி மாதிரி பூட்டியிருக்கும். ஏரியாவ ஆமி சுத்தி வளைச்சிட்டான்போலதான் இருந்திச்சு. ஒண்டுஞ் செய்யேல்லா. விட்டுட்டு ஓடுறதத் தவிர வேற வழியில்லை. காயம்பட்டவன் வேற என்னைச் சுட்டுட்டு போ மச்சான் எண்டுறான். யோசிச்சன். பக்கத்தில மரவள்ளி தோட்டத்துக்க அவனைப் படுக்க வச்சிட்டு, ரக்டரை எடுத்து ஒரு வீட்டில பிலா மரத்துக்கு கீழ நிப்பாட்டிட்டு அங்கேயிருந்து மாங்காய் பறிச்சிட்டுத் திருப்பி இங்க வந்தா ரோட்டைக் கடக்க முடியேல்ல, தூர நிண்டு  சுடுறாங்கள். அப்பிடியே  இருட்டுமட்டும் படுத்துக்கிடந்த இரவு அவன்கிட்ட போய் மாங்காயும் தண்ணியும் குடுத்து விடியவிடிய முழிச்சுக் கிடந்து நிலந்தெளியமுதல் அவனையம் ஏத்தி ரக்டரை எடுத்துக்கொண்டு ஒரு பிடி பிடிச்சன். சடசட எண்டு வைக்கிறார்கள், நிக்கயில்லை என்ன. எங்கடயாக்கள் எதிர்பாக்கேல்ல. பாதுகாப்பா கொண்டுபோய் சேத்தாச்சு. என்னைப் பாக்க வேணுமெண்டு சொல்லி வந்து சந்திச்சவர் பானு அண்ணை. அப்பிடித்தாண்டா இந்த அலேட்டன் எப்பவும் இருந்தவன். இப்ப அங்கேயிருந்து ஒரு குறூப் அவரையும் துரோகி எண்டு சொல்லுதாம். என்ர கண்ணுக்கு முன்னால யாரும் கதைக்கட்டும் பாக்கிறன். முறிச்சுப்போடுவன்” ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

”அண்ண விசர்த்தனமாக் கதைக்காதையுங்கோ. நீங்கள் உதுக்கே போப்போறியள்? இவ்வளவு வருஷத்துப் பிறகு உங்கட  அம்மாவும் தங்கச்சியும் உங்கள பார்க்க, ஒண்டா இருக்கக் கூப்பிடுறாங்கள். புது வாழ்க்கையில சந்தோசமா இருக்கப் பாருங்கோ. தேவையில்லாத வேலை பாக்காம” சிறி கத்த, அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  

***

இன்னொருமுறை கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது. ”என்னத்த அலேட்டா இருந்து என்ன…” சாதாரண பேச்சாக வாய்தவறிப்போய் வார்த்தையை விட்டுவிட்டான் சிறி. அலேட்டர் அடிபட்டவர்போலப் பார்த்தார். 

”நான் என்ர வேலைல பிசகு விட்றக்கூடாதெண்டு வலு அலேட்டாத்தான் இருப்பன். கடைசி வரைக்கும் லைன்ல என்ர பொசிசன விடேல்ல. காயம்பட்டு அரைமயக்கத்தில என்னைப் பெடியள் இழுத்துக்கொண்டு போறப்பதான் மனிசி பிள்ளைய நினச்சேன். நான் வராம போமாட்டமெண்டு சொல்லிக்கொண்டிருந்தது. போகேல்ல. இடிஞ்ச பங்கருக்குள்ள நெஞ்சுக்குக் கீழே இறச்சிக்குவியலா.. பிள்ளைய நான் பாக்கேல்ல. என்ர கண்ணில படவே வேண்டாமெண்டு திரும்பிட்டேன். அப்பா வாங்கோ எண்டு கையக்காட்டிக் கத்தினதுதான் கடைசியாப் பாத்தது.”

யாரும் பேசவில்லை. ஒருவன் ஓங்காளித்துக்கொண்டு வெளியே ஓடினான். அலேட்டர் சின்னச்சின்ன மிடறுகளாக அந்தப் பெக்கை முடித்தார். இறைச்சித் துண்டொன்றை வாயில் போட்டு நிதானமாக மென்றார்.

சுரேஸ் தன் சாப்பாட்டுக் கோப்பையையும் மாஸ்டரையும்  தயக்கமாகப் பார்த்தான். ”என்னண்டு அண்ண இந்தக் கதையளோட?”

“தம்பி கதை கேக்கிறவனுக்குத்தான், கதையாக் கேக்கிறவனுக்குத்தான் வாந்தி குமட்டல் மசக்கை எல்லாம் வரும். அதுக்குள்ளயே வாழ்ந்தவனுக்கில்ல.”

யாரும் பேசவில்லை. பிறகு அவரே சொன்னார்: 

”சாகிறது ஒண்டுமில்லத் தம்பி. ஆனா உடம்பு சிதையாம உருப்படியாச் செத்திட வேணும். பாக்கிறவன் பாவம்.”

”அண்ண விடுங்கோ உந்தக் கதையை.”

”இல்லத்தம்பி நான் அலேட்டாத்தான் இருந்தன் எப்பவுமே. உங்களுக்கு என்ன நக்கல்? நீங்கள் குறை சொல்ல ஏலாது. உங்களில நாங்கள் எப்பாவது குற்றச்சாட்டோ குறையோ சொன்னனாங்களோ? உங்கட குற்ற உணர்ச்சியை மறைக்க வாய்க்கு வந்தபடி கதைக்கிறீங்க”

செல்பேசி ஒலிக்கவும் எடுத்துக்கொண்டு பலகனிக்கு நகர்ந்தேன். உள்ளே வாக்குவாதம் முற்றியது தெரிந்தது. சற்று நேரத்தில் குணத்தார் வீட்டிலிருந்து வெளியே செல்ல முயல, இரண்டு பேர் அணைத்துப் பிடித்துழுத்துச் சமாதானம் செய்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சிறி வெளியே வந்து கத்தினான், ”இனி உங்கட மூஞ்சில முழிக்கவே மாட்டன்” ஆவேசமும் அழுகையுமாக வெளியேறினான். பின்னாலேயே இரண்டுபேர் ஓடினார்கள். 

“இங்க பிரச்சனை ஒண்டுமில்ல. எங்கட பெடியங்கள்தான் நிக்கிறாங்கள். எல்லாரும் என்னை மாதிரித்தான். எப்ப சரிவருமெண்டு தெரியாதுதானே”. அம்மா தான் நேர்த்தி வைத்திருந்த விபரத்தை விலாவாரியாக விளக்கிவிட்டு ஃபோனை வைத்ததும் கீழே சென்றேன். அப்படியொரு காட்சியை நான் எந்தத் தமிழ்ப்படத்திலயும் கண்டதில்லை. இப்பவரைக்கும் அப்பிடியொரு சீன் வந்ததா எனக்குத் தெரியாது.

சிறி விம்மிவிம்மி அழுதுகொண்டிருந்தான். குணத்தார் அவன் நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டிருந்தார். அவனைத் தோளோடு அணைத்திருந்த அவரின் வலக்கையில் வண்டே கப்பில் ரெமி மார்ட்டின். அவ்வப்போது அவனுக்குப் பருக்கிவிட்டார். நல்லபிள்ளையாகக் குடித்துச் சமாதானமடைந்தான். எல்லாரும் நிறைவாக அமைதியாகக் குடித்தோம்.

***
அந்த வீட்டில் கடைசியாகக் குணத்தாருடன் பேசியபோது சாமம் ரெண்டு மணியிருக்கும். தூக்கம் வராமல் பலகனியில் உலாத்திக்கொண்டிருந்தேன். ஆனாலும் அது வழக்கம்போலில்லை.

“என்ன தம்பி நித்திரை வரேல்லயோ” என்றபடி அருகில் வந்தார், சிரித்துவைத்தேன். 

“எனக்கும் வாறதில்ல. சும்மா கண்ண மூடிக்கொண்டு கிடப்பன். எப்பாவது அசந்து தூங்கினாச்சரி. இல்லாம அரை நித்திரை எல்லாம் துன்பம் தம்பி.

ஏன் என்றெல்லாம் நான்  கேட்கவில்லை. 

”பிள்ளை கனவில வருவா. இப்ப இருந்தா ரெண்டாம் வகுப்பு படிப்பா. ஆனா அப்ப இருந்தமாதிரியேதான் இருப்பா. கடைசியா பாத்த மாதிரி. என்னைக் கையசைச்சுக் கூப்பிட எல்லாம் இல்லை. அப்பிடியே பாத்துட்டிருப்பா. கண்வெட்டாம.. கோபமாவும் இல்லை. ஏண்டா வரேல்ல? எண்டுற மாதிரி ஒரு பார்வை.”

குணத்தாரின் குரல் உடையாமல் பிசிறில்லாமல் இருந்தது. உணர்ச்சி வசப்படுகிறாரா, அல்லது கண்ணீர் விடுகிறாரா என்பது தெரியவில்லை. பக்கத்தில் நின்றவரைத் திரும்பிப் பார்க்கத் தைரியமிருக்கவில்லை. இருவரும் தூரத்தே வானத்தை வெறித்துக்கொண்டிருந்தோம். 

”நாளைக்குப் பயணம்போல. நித்திரை வராதுதான்”

”ஓம். பத்தரைக்கு வெளிக்கிடுறன்.”

”நான் காலைலயே வெளில போயிடுவன்” கை கொடுத்தார்.

”பிறகு ஒருநாள் எல்லாரும் ஒண்டா சந்திப்பம் என்ன?” கண்களில் நம்பிக்கை மின்னச் சிரித்தபடியே தோளோடு அணைத்தார். 

”அலேட்டர மறக்கமாட்டியள்தானே? நல்லபடியாப் போட்டுவாங்கோ” குழந்தைச் சிரிப்போடு விடை கொடுத்தார்.

உமாஜி

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.