
கைவிடப்பட்டிருந்த நாளங்காடியின் வாசலில் வந்து படுத்ததுமே இதுவரை பரவியிருந்த வெளிச்சம் சட்டென்று தணிந்து இருள் கவிந்து செறிவதை உணர்ந்தான். கண்களை எதுவோ அழுத்துவதைப்போலத் தோன்றியது. நினைவு மெல்லென மங்குவதாக உய்த்துணர்ந்து, இது வெறும்மயக்கமா? அல்லது ஆழ்ந்த உறக்கமா? என்பது முடிவாவதற்குள்ளாகவே எவரோ தன்னை நெருங்கி வருவதுபோலவும் தோன்றியது. கண்களைத் திறக்க எண்ணினான். வச்சிரந் தடவி ஒட்டியதைப் போன்றிருந்தன. இப்போது கண்கள் மட்டுமன்றி, முழு உடலும் அதேநிலைக்கு வந்திருப்பதையுணர்ந்தான். அதற்குள் சிலர் தன்னருகே வந்துநின்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டான்.
‘இதென்ன வாசற்படியில் ஒரு நீளப்பொறி?’
‘அது என்னவாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதை வைத்தே நகரத்திற்குள் நுழைந்து புதினங்களை அறியலாம்’
‘எப்படிச் சாத்தியம்? புரியவில்லை’
‘நகரத்திற்குள் இப்போது அவ்வளவு எளிதாக நுழையமுடியாது. இரண்டே இரண்டு வழிகளில்தான் நுழையலாம். ஒன்று பல்லக்கில் செல்லலாம். அது முக்கிய பிரமுகர்களுக்கானது. அது எங்களுக்குச் சாத்தியமில்லை. மற்றது சவ ஊர்வலம். இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களுக்குச் சாத்தியமானது அது வொன்று மட்டுந்தான். ஏனெனில் பல்லக்குஊர்வலத்தையும், சவஊர்வலத்தை யும் தவிர்த்து வேறெந்த வழியில் சென்றாலும் நகர நுழைவாயில் காப்போர் உள்நுழைவுக்கான அனுமதிச்சீட்டைக் கேட்பார்கள். இருந்தால் பிரச்சினையேது மில்லை. உள்நுழைய அனுமதிப்பர். இல்லையென்றால் திருப்பியனுப்பிவிடுவர்’
‘அதுக்காக இதைவைத்து என்ன செய்வது?’
‘எல்லாம்; எளிதான சங்கதிதான். இங்கே நால்வர் இருக்கிறோம். இதைச் சவமாகத் தூக்கிக்கொண்டு ஊர்வலத்தைத் தொடங்குவோம். நகரத்திற்குள் நுழைவோம். புதினங்களை அறிவோம். அவ்வளவு தான்’
‘இது சாத்தியமாகுமா? பயமில்லையா? ஏறுமாறாக ஏதும் நடந்தால்?’
‘நமக்கு இது மட்டுமே சாத்தியம். பயமடையத் தேவையில்லை. ஏறுமாறாக எதுவுமே நிகழாது. ஏனெனில் இப்போது நகருக்குள் பல்லக்கு ஊர்வலங்களை விட சவஊர்வலங்களே மிகுந்துள்ளன. நகர நுழைவாயில் காப்போர் சில வேளைகளில் பல்லக்கு ஊர்வலங்களைச் சோதனை செய்வதுண்டு. ஆனால், சவஊர்வலங்களுக்கு ஒதுங்கிநின்று வழிவிடுவதுதான் இப்போதிருக்கும் வழமை. எனவே, இதோ எல்லாம் தயார்நிலையிலுள்ளது. மறுபேச்சின்றி இதைத் தூக்கிக்கொண்டு சவஊர்வலத்தைத் தொடங்கலாம்.’
‘தயவுசெய்து என்னைத் தூக்கிச்செல்லவேண்டாம். அது உங்களுக்குக் கேடு விளைவிப்பதாக அமையலாம்’ என்று அவன் கத்தினான். அது அவர்களுக்குக் கேட்கவேயில்லை.
‘வீணாகக் கத்தாதே! உனக்கென்ன வந்தது? அவர்கள்தானே தூக்கிச் செல்லப் போகிறார்கள்? சுகமாக ஊர்வலம் போ! தனது சவஊர்வலத்தைத் தானே காணும் பெரும்பேறு எவருக்குங் கிட்டுவதில்லை. அது உனக்குமட்டுந்தான் கிடைத்தி ருக்கிறது. வாயை மூடிக்கொண்டிருந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிரு. அவ்வளவுதான்’ என்றொரு குரல் அவனுக்குள்ளிருந்து கிளம்பி யொலித்து அவனை அடக்கியது.
அதற்குள் நால்வரும் அவனைக் காவுபடுக்கையில் வைத்துத் தூக்கிக்கொண்டு தமக்குள் பேசிக் கொண்டே நடக்கலாயினர்.
‘ஒரு கற்சிலையைச் சுமப்பதைப் போலிருக்கிறதே! மெய்யாகவே சவத்தைத் தான் சுமக்கிறோமா?’
‘இது என்னவாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு இதை வைத்து நகரத்தினுள் நுழைந்து புதினங்களை அறிந்துகொண்டால் போதும். சுமை கனத்தால் தலையைக் கவிழ்த்துக்கொண்டே நடவுங்கள்’
‘இருந்தாலும்…’
‘அமைதி! அமைதி! நகர நுழைவாயிலை நெருங்கிவிட்டோம். இனித் தலை களைக் கவிழ்த்து மெதுவாகப் போங்கள்.’
சவ ஊர்வலமொன்று வந்துகொண்டிருப்பதைப் பார்த்த நுழைவாயில் காப்போரி ருவரும் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். இவ்வூர்வலம் வெற்றிகரமாக நகரத்தி னுள் நுழைந்தது.
‘இனிமேல்தான் நாங்கள் நிதானமாகவும் அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும். சவ ஊர்வலமென்றால் அதற்குரிய வழியில்தான் செல்லவேண்டும். இவ்வழியே முதலில் நேராகச் சென்று வலதுபக்கமாக ஒரு முடக்கு வரும் போது மட்டுமே திரும்பவேண்டும். அதுவரை இதே கதியில் செல்லுங்கள்.’ பின்னால் இடதுபுறம் நடந்துகொண்டிருந்தவன் தொடர்ந்து வழிநடத்தினான்.
அதன்படியே அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த வீதியில் அவர்களைத் தவிர நடமாட்டமேதுமில்லை. நடந்துகொண்டேயிருந்தார்கள். முன்னால் வலது புறம் சுமந்துகொண்டிருந்தவன் பொறுமையிழந்தவனாகக் கேட்டான்.
‘எங்கே வலதுபுறமாக ஒரு முடக்கும் வரவில்லை?’
‘இன்னுங்கொஞ்சத்தூரம் நடந்தால் வந்துவிடும்’ வழிநடத்துபவன் சொன்னான்.
நடந்துகொண்டேயிருந்தார்கள். ஆனால், வலதுபக்கமாக முடக்கெதுவும் வரவே யில்லை. இந்நிலையில் அந்த ஊர்வலத்தை வழிநடத்துபவனைத்தவிர மற்ற மூவரும் பொறுமையிழந்துவிட்டனர்.
‘வலதுபக்க முடக்கை எதிர்பார்க்காமல் அடுத்துவரும் இடதுபக்க முடக்கில் திரும்புவோமா?’ என மூவரும் ஒருமித்த குரலில் கேட்டனர். அவனுக்கும் மாற்றுவழியேதும் தோன்றாததால், ‘ம்…அடுத்துவரும் இடதுபக்க முடக்கால் திரும்புங்கள்’ என்று சொன்னான். அடுத்து இன்னொரு சிக்கல் தோன்றியது. இடதுபக்கமுடக்கால் திரும்புவதென்று தீரமானித்ததிலிருந்து வலதுபக்க முடக்குகள்தான் வந்துகொண்டிருந்தன. இடதுபக்கமுடக்கேதும் வரவேயில்லை. சவஊர்வலம் சற்றுநேரம் குழம்பிப்போய் நின்றிருந்தது.
‘ஏன் நின்றுவிட்டீர்கள்?’ வழிநடத்துபவன் கேட்டான்.
‘நீ சொன்னபடி முடக்கேதும் இதுவரை தென்படவேயில்லை. இப்படியே ஒரு முடிவில்லாமல் இன்னும் எவ்வளவு தூரந்தான் செல்வது? அதுதான் நின்று விட்டோம்.’ என மற்றையோர் ஒருமித்த குரலில் சொன்னதும், வழிநடத்துபவன் சினத்துடன், ‘அடுத்துவரும் எந்த முடக்கிலாவது திரும்பித் தொலையுங்கள்’ என்றதும் சவஊர்வலம் மெதுவாக நகர்ந்தது. சவமாகக் கிடந்தவனுக்கு அதுவொரு சுவாரசியமான விளையாட்டாகத் தோன்றவும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு தொடர்ந்து நடைபெறவிருக்கும் வேடிக்கை நிகழ்வுகளைச் செவிமடுக்கத் தயாரானான்.
மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த சவஊர்வலம் திரும்பவும் நின்றுவிட்டது.
‘ஏன் நின்றுவிட்டீர்கள்? வழிநடத்துபவன் கத்தினான்.
‘ஒரேயொரு சந்தேகம்’ முன்னிருந்து இடதுபக்கம் சுமப்பவன் கேட்டான்.
‘என்னது? கேட்டுத்தொலையுங்கள்’
‘இருமருங்கும் முடக்குகள் தென்படுகின்றன. அதுதான் எந்தப் பக்கம் திரும்புவது என…’ சொல்லிமுடிப்பதற்கிடையில், ‘ம்… வலதுமுடக்கால் திரும்பித் தொலையுங்கள்.’ எனக் கத்தினான். அவன் கத்தியது மூவர் காதிலும் ‘இடது முடக்கால் திரும்பித் தொலையுங்கள்’ என எதிரொலித்தது. அதற்கமைவாக இடதுபக்க முடக்கால் திரும்பினார்கள். எதிரே கன்னங்கருந்திரை விழுந்ததைப் போல் இருள் செறிந்திருந்தது. எதுவுமே தென்படவில்லை. கண்களைக் கட்டிக் கொண்டு நடப்பதைப் போலிருந்தது. தொடர்ந்து ஓரடிகூட நகரமுடியாமல் சவ ஊர்வலம் நின்றுவிட்டது.
‘அடிமுட்டாள்களே! நகரத்தின் மீளமுடியாத இருட்டுச்சந்திலல்லவா நுழைந் திருக்கிறீரகள். இனிமேல் எந்தத் திசையிலும் நகர்வது சாத்தியமேயில்லை. இவ்விடத்தில் நின்றுகொண்டிருக்கவேண்டியதுதான்’ வழிநடத்துபவன் தொண்டைகிழியக் கத்தினான். அது, ‘அடேய் முட்டாள்களே! ஏன் நின்றுவிட் டீர்கள்? ம்..ம்… தொடர்ந்து செல்லுங்கள்’ என மற்றைய மூவரினதும் காதுகளில் விழ, நடப்பது நடக்கட்டுமெனச் சவஊர்வலம் நகரத்தொடங்கியது. சவமாகக் கிடந்தவன் இதை வெகுவாக இரசித்தான். அவனுக்கும் முதலில் பெருங்குழப்ப மாகவிருந்தது. பின்னர், என்ன நடக்கிறதென்பதை விளங்கிக்கொண்டான். தொடர்ந்து, ‘இவ்வளவு தூரமும் நேரமும் என்னைச் சுமந்துகொண்டிருக்கிறார் களே! பாவம்! என் உடல்எடை குறைந்தால் இவர்களுக்கும் சுமந்துசெல்ல வசதியாக இருக்கும்.’ என நினைத்தான்.
சற்றுநேரம் கழிந்ததும் சுமந்துகொண்டு சென்றோர் சட்டென்று பாரங்குறைந் ததை உணர்ந்தனர். அதனால் சவஊர்வலம் முன்னரைக்காட்டிலும் வேகமாக நகர்ந்தது. வழிநடத்துபவன் திரும்பவும் கத்தினான். ‘டேய்! முட்;டாள்களே! நகராமல் நிற்கச்சொன்னால் இன்னும் வேகமாகச் செல்கிறீர்கள்! உங்களுக் கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? இது இருட்டுச்சந்தடா! தொடர்ந்து செல்வது நமக்குப் பெரும் ஆபத்தினை விளைவிக்கும். தயவுசெய்து நகராமல் நில்லுங்கள்!’
இது அவர்களுக்கு, ‘பலே! பலே! இன்னும் வேகமாகச் செல்லுங்கள். பாரங் குறைந்து இலேசிவிட்டது. கனக்கவேயில்லை. இது இருட்டுச்சந்துதான். என்றா லும் எவ்வித ஆபத்தும் விளையாது. ம்… முடிந்தளவுக்கு வேகமாகச் செல்லுங்கள்!’ எனக் கேட்டது.
இப்போது அவர்கள் ஓட்டமும் நடையுமாகச் செல்ல, வழிநடத்துபவனின் தோளிலிருந்த சுமை நழுவி அவன் பின்தங்கிவிட்டான். ‘அடேய்! முண்டங்களே! நில்லுங்கடா! என் தோளிலிருந்த பாரம் நழுவிவிட்டதடா! கமலகுண்டலமாய் விழுந்து தொலையப்போகிறீர்கள்! நில்லுங்கடா!’ என்று அவன் தொண்டை கிழியக் கத்தினான். அதற்கு முன்பாகவே அவர்கள் கேட்டல் எல்லையைக் கடந்துவிட்டிருந்தனர். இதுவரை சவஊர்வலத்தை வழிநடத்திவந்தவன் செய்வ தறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். சற்றுநேரம் கழிந்ததும் இரு ஒளிப்பொட்டுகள் சமாந்தரமாகவும், கீழிறங்கி மேலெழுவதுமாகவும் அவனை நெருங்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு ஒருகணம் நெஞ்சில் கிலிபடர்ந்து அச்சமேற்பட்டாலும் மறுகணம், நடப்பது நடக்கட்டுமெனக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். மெல்லென வீசிய காற்றில் சுருட்டுப் புகைக்கும் வாசனை மிதந்துவந்து அவன் நாசிக்குள் புகுந்தது. கண்களை மெல்லத் திறக்கலானான். யாரோ இருவர் சுருட்டுப் புகைத்தபடியே அவனை நெருங்கி வந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். சட்டென்று அவர்கள் வந்து கொண்டிருக்கும் வழியிலிருந்து விலகி ஒதுக்கமாக நின்றான். அவ்விருவரும் அவனைப் பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லை. தவிரவும், அவனைப் பொருட்படுத்தவியலாதளவுக்கு இருள் செறிந்திருந்தது. அவனைக் கடந்து செல்கையில் தமக்கிடையே பேசிக்கொண்டது பிசிறின்றிக் காதில் விழுந்தது.
‘என்னது? மெய்தானா? இது சாத்தியமா?’
‘அப்படித்தான் தகவல் கிடைத்திருக்கிறது. இது மெய்தானா? சாத்தியமா? என்பதையறிந்துகொள்ள ஒருதடவை நகரவலம் செய்தால்தான் தெரியும். அதற்காகத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். விரும்பினால்என்னுடன் வரலாம்’
‘ம்… இதோ வருகிறேன்.’
‘ஆனால், ஒரேயொரு நிபந்தனை’
‘என்னது?’
‘நாங்கள் சென்றடையும் எந்தவொரு இடத்திலும் வாய்திறந்து எதுவும் பேசக் கூடாது. அவ்வளவுதான்’
‘இக்கணத்திலிருந்து நானோர் ஊமை. போதுமா?’
இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே அந்த இருவரையும் நிழலாய்ப் பின்தொடர்ந்து செல்லலானான். அவர்கள் சுருட்டுப் புகைத்துக்கொண்டே சென்றதால் பின்தொடர்வது எளிதாகவிருந்தது. அவன் இப்போது சவஊர் வலத்தை மறந்துவிட்டிருந்தான். அவர்களைப் பின்தொடர்ந்துசென்று புதினத்தை அறிந்துகொள்வதுமட்டுமே அவனது நோக்கமாகவிருந்தது. அவர்கள் சராசரிக்கும் மேலான வேகத்தில் சென்றுகொண்டிருந்தாலும் அதற்கு ஈடு கொடுத்து அவனால் செல்லக்கூடியதாகவிருந்தது. அவர்கள் இருவரும் சுமார் அரைமணிநேரம்வரை நடந்துசென்று, பின்னர் ஒரு வலதுபக்க முடக்கில் திரும்பினர். அந்தப்பகுதியில் மங்கலாக வெளிச்சம் படர்ந்திருந்தது. நேரெதிரே ஒரு சிற்றாலயம் தென்பட்டது. சிற்றாலயத்தின் முன்பாகப் படர்ந்திருந்த அரசமரத்தின்கீழ் சிலர் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. அவ்விருவரும் சிற்றால முன்றலில் ஒருவர் பின்னொருவராக நின்று வணங்கப் பின்தொடர்ந்து வந்தவனும் அவர்களுக்குப் பின்பாக நெருங்கிவந்து நின்று அதையே பின்பற்றி னான். வரிசையில் முதலாமாளாக நின்றவன், ‘இவ்விடத்திலேயே தியானிப் பவர்போல் உட்கார்ந்துகொண்டு மரத்தின்கீழ் அமர்ந்திருப்பவர் வார்த்தைகளைச் செவிமடுப்போம்.’ என இரண்டாமாளாக நின்றவனிடம் கிசுகிசுப்பது மூன்றா மாளாக நின்றவனுக்கும் கேட்டது.
‘ஏன் நின்றுகொண்டே செவிமடுத்தாலென்ன?’ இரண்டாமாள் கேட்டான்.
‘பெரிதாக ஒன்றுமில்லை. நம்மை உளவாளிகளெனக் கருதி இவ்விடத்தை விட்டு நாங்கள் அகலும்வரை எதுவும் பேசமாட்டார்கள். அவ்வளவுதான்’ என முதலாமாள் சொன்னதும் இருவரும் அமர்ந்துகொள்ள, மூன்றாமாளாக நின்றவன் சற்றுநேரங்கழித்து அவர்களின் பின்னே உட்கார்ந்து அட்டணக் கால் போட்டான். மூவரும் உட்கார்ந்து சுமார் கால்மணிநேரங்கடந்ததும் மரத்தின்கீழ் அமர்ந்திருந்தோர் பேசவாரம்பித்தனர்.
‘கேள்விப்படவில்லையா?’
‘என்னது?’
‘இன்றையதினம் எதிர்பாராத விதமாகத் திடீரென்று விண்ணிலிருந்து சந்திரன் மறைந்துவிட்டதாக நகரத்தின் மூலைமுடுக்கெங்கும் கடுகதியில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது’
‘இதிலென்ன புதினம்? இன்று முழு அமாவாசைத்தினந்தானே?’
‘அதுவல்ல இது! அது வேறு. இது வேறு. இதுவொரு திடீர்மறைவுச்செய்தி யாகும். அதாவது வளர்பிறை, தேய்பிறை, முழுமதி நாள்களிலும் எவரும் இனி விண்ணில் சந்திரனைப் பார்க்கவேமுடியாது’
‘என்ன இது? சிறுவர்கதை சொல்கிறீர்? நிகழத்தக்கதுதானா இது?’
‘நிகழத்தகாதவையெல்லாம் நிகழ்ந்து முடிந்தபின் வந்திருக்கும் முதலாவது கனத்த அமாவாசைநாளான இன்று நகரத்து மக்களின் செவிகளில் இத்திடீர் மறைவுச்செய்தி வந்து விழுந்திருக்கிறது. தவிரவும், இது நிகழத்தக்கதென எதையும் சொல்லமுடியாத காலமாகும்.’
‘சரி! நகரத்துமக்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?’
‘இதுவரைக்கும் விண்ணகத்துச்சந்திரனை ஏற்றிப் போற்றிக் கொண்டாடிவரு வோரும், இராப்பொழுதுகளை வசீகரித்து இருளகற்றி அலங்கரிக்கும் பால்நில வொளியைப் பெரிதும் விரும்புவோரும் வழமைபோல் இச்செய்தியையும் வெறுங்கட்டுக்கதையென்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தியென்றும் தமக்குள் பேசிக்கொள்கின்றனர்’
‘ம்… அதுசரி, பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள்?’
‘விண்ணகத்துச்சந்திரனை இதுவரைக்கும் தாழ்த்தியும் தூற்றியும் பேசிக் கொண்டிருந்தோரும், அடர்ந்த இருளை எப்போதும் மிகவிரும்பி நாடிச் செல்வோரும் இத்திடீர்மறைவுச்செய்திகுறித்து எந்தவொரு கருத்தினையும் முன்வைக்காமல் மௌனம் சாதித்துவருகின்றனர்.’
‘ஏன்?’
‘உறுதியாகத் தெரியவில்லை. சிலவேளை அவர்களும் இச்செய்தியை வெறும் வதந்தியென நம்பாதிருக்கலாம். நம்பியிருந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அக மகிழ்ந்திருப்பர். எனினும், இச்செய்தியை முரசறைவித்து அரசன் வெளியிடும் வரைக்கும் அந்தரப்பட்டு எந்தவொரு கருத்தினையும் முன்வைக்காமல் பொறுமையுடன் காத்திருப்போம் எனத் தமக்குள் கூடித் தீர்மானித்திருக்கலாம்’
‘அதுவும் சரிதான். ம்….அரசன் எப்போது முரறைவித்து இதைப் பகிரங்கமாக அறிவிப்பான்?’
‘எப்போதென்று உறுதியாகச் சொல்லமுடியாது. வானூர்தியில் அயல்நாடுகாண் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அரசன் நாடுதிரும்பியதும் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.’
‘நகரத்திலுள்ள பகுத்தறிவுவாதிகள் இதற்கென்ன சொல்கிறார்கள்?’
‘அதைப்பற்றித் தெரிந்துகொள்ள மேற்சதுக்கத்திற்குத்தான் செல்லவேண்டும்’
இதையெல்லாம் வரிசையில் மூன்றாமாளாக கண்களை மூடிக் கேட்டுக்கொண் டிருந்தவன் விழித்துப் பார்த்தபோது முன்னிருந்த இருவரும் மாயமாகிவிட்ட தைக் கண்டு திடுக்கிட்டெழுந்து மரத்தடியைப் பார்த்தான். அங்கிருந்தோரையும் காணவில்லை. எங்கே செல்வதெனத் தீரமானிக்கமுடியாதவனாகத் திகைப்பி லாழ்ந்த நின்றுகொண்டிருந்தான்.
2
சவ ஊர்வலம் மேற்கொண்டோர் நெடுந்தூரம் கடந்தபின் வழிநடத்துபவனைத் தவறவிட்டிருப்பதை உணர்ந்துகொண்டனர்.
‘நாலாமாளுக்கு இப்போது எங்கேபோவது?’ முன்சுமந்துகொண்டிருந்த இருவரும் கேட்டனர்.
‘நாலாமாள் வந்து சேரும்வரை காத்திருக்கலாமா?’ பின்சுமந்துகொண்டிருந் தவன் கேட்டான்.
‘நாலாமாள்; எப்போது வந்துசேர்வது? நாம் எங்கே காத்திருப்பது?’ முன்சுமந்து கொண்டிருந்தோர் திருப்பிக் கேட்டனர்.
பின்னின்றவன் அதற்குப் பதில்சொல்வதற்கிடையில் சவமாகக் கிடந்தவன் கீழே குதித்து, ‘நாலாமாளாக நான் வருகிறேன்.’ என்றான். மூவரும் சற்றுநேரம் செய்வதறியாது திகைத்துநின்றனர். இதுவரை தாங்கள் ஒரு மனிதனைத்தான் சுமந்துவந்திருக்கிறோம் எனத் தெரிந்துகொண்டதும் அவர்களுக்கு வியப்பாகவே யிருந்தது. எதுவும்பேசாமல் அவர்கள் மூவரும் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றனர்.
‘என்னை மன்னித்துவிடுங்கள். சினமடையவேண்டாம். நான் இதுவரை ஆழ்ந்து றங்கிக்கொண்டிருந்தேன்.’ என அவர்களைப் பார்த்துச் சொன்னான்.
‘அதெல்லாஞ்சரி. இப்போது சவத்திற்கு என்ன வழி?’ மூவரும் அவனைப் பார்த்துக் கேட்டனர்.
‘இதிற் பெரிதாக ஒன்றுமில்லை. நான்குபேரிருந்தாலே சவஊர்வலம்போல் பாவனை செய்துகொண்டு செல்வது எளிதானது.’ அவன் சிரித்துக்கொண்டே சொன்னான். வேறு உடனடி மாற்றுவழியேதுமில்லையென்பதால் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு சவஊர்வலம் நகர்ந்தது. ஒரு முழுவெளிப்பான பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதிரே முட்டாக்குப்போட்டு தமக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டே வந்துகொண்டிருந்த இருவர் சவஊர்வலத்தைக் கண்டதும், ‘இந்த வழியால் சவஊர்வலம் செல்ல அனுமதியில்லை’ என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்க்கொண்டிருக்கச் சவஊர்வலம் நின்றுவிட்டது.
‘இப்போது என்ன செய்யலாம்?’ முன்னின்ற இருவரும் கேட்டனர்.
‘ம்… காவு படுக்கையை மெதுவாகக் கீழிறக்கி வீதியோரமாக வைத்துவிட்டுச் செல்லலாம்’ இதுவரை சவமாகக் கிடந்து சற்றுநேரத்திற்கு முன்பாக நாலா மாளாக மாறியவன் உற்சாகமாகச் சொன்னான். அவன் சொல்வது ஏனைய மூவருக்கும் சரியெனப்பட்டாலும் அச்சமாகவேயிருந்தது.
‘யாரேனும் பார்த்துவிட்டால்…?’ எனக் கேட்டனர்.
நாலாமாள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டுவிட்டுச் சொன்னான். ‘கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவருமில்லை. அச்சமடையத் தேவையில்லை. காவுபடுக்கையை மெதுவாகக் கீழிறக்கி வைத்துவிட்டு நகர்வோம்.’
அதைத்தவிர உடனடி மாற்றுவழியேதும் இல்லையென்பதால், அவன் சொன்ன படியே செய்துவிட்டு எதிர்த்திசையில் வேகமாக நடந்துசெல்லவாரம்பித்தனர்.
3
சவ ஊர்வலத்தைத் தவறவிட்டுச் சிற்றாலயத்தில் நின்றுகொண்டிருந்த வழி நடத்துனன் காவியுடை தரித்து முக்காடிட்ட இருவர் நெருங்கிவருவதைக் கண்டு மீளவும் வழிபடுவதைப்போலப் பாவனைசெய்யலானான். அவர்கள் சிற்றாலயத்திற்குத்தான் வருகிறார்கள் எனக் கருதினான். ஆனால், அவ்விரு வரும் சிற்றாலயத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். சிற்றாலயத்தில் நின்றுகொண்டிருப்பதைவிட, அவ்விருவரையும் பின்தொடர்ந்து செல்வதே பாது காப்பானதென அவனுக்குத் தோன்றியது. அங்கிருந்து மெதுவாக அகன்று அவர்களைப் பின்தொடரலானான். அவ்விருவரும் மிக மெதுவாகவே நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் தமக்குள் பேசிக்கொள்வதைக் கேட்குமளவுக்கு நெருங்கிவிட்டிருந்தான். சற்றுநேரம் தமக்குள் எதுவும் பேசிக்கொள்ளாமல் நடந்துசென்று வலதுபுறச் சந்தொன்றில் திரும்பி மேற்குநோக்கி நகரும்போது பேசத்தொடங்கினர்.
‘நகரிலுள்ள பகுத்தறிவுவாதிகள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?’
‘காத்திருக்கச் சொல்கிறார்கள்’
‘யாருக்காக? எதற்காக? புரியும்படி சொல்லுங்கள்’
‘இன்றிலிருந்து மூன்றுதினங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன்’
‘ம்…. ஓ….! பிறைச்சந்திரனுக்காகவா?’
‘அதேதான். அதுக்காகவேதான்’
‘எல்லாஞ்சரி. ஆனால் சிலவேளைகளில் பிறைச்சந்திரன் தென்படுவதில்லை யல்லவா?’
‘இதே கேள்விதான் என்னிடமிருக்கிறது. நானறிந்த தகவலை உமக்குச் சொன்னேன். மேலதிக தகவல்களையறியத்தானே மேற்சதுக்கத்திற்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம்’
அவர்களிருவரும் மேற்சதுக்கத்திற்குச் சென்றுகொண்டிருப்பதை அறிந்துகொண் டவன் அகமகிழ்வுற்று சிற்றாலயத்தில் தியானிப்பதைப்போலப் பாவனைசெய்து கொண்டிருந்தபோது, தவறவிட்டவர்களைப்போல் முன்னே சென்றுகொண்டிருக் கும் அவ்விருவரையும் தவறவிடக்கூடாது எனத் தீர்மானித்தவனாய் இன்னும் நெருக்கமாக நடக்கலானான்.
நகரத்தின் மேற்சதுக்கத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது அந்திப்பொழுதாகி விட்டது. அங்கிருந்தபடியே மேற்குவானத்தை முழுமையாகப் பார்க்கக்கூடிய தான அமைவிடங்களிருந்தன. அந்நேரம் மேற்குவானமெங்கும் செம்மை படர்ந் திருந்தது. ஒருவரையொருவர் பார்க்கமுடிந்தளவுக்கு வெளிச்சமிருந்தது. அடுத் தடுத்து மூன்று வெள்ளரசுமரங்கள் ஓங்கியுயர்ந்து படர்ந்து நிழல்பரப்பி நின்றன. இடைக்கிடை வீசுங்காற்றில் இலைகள் சலசலத்துக்கொண்டிருந்தன. வரிசை யில் கடைசியாக நிற்கும் மரத்தினடியில் நான்கைந்துபேர் குழுமியிருந்து பேசிக்கொண்டிருந்தனர். அவன் பின்தொடர்ந்து வந்திருந்த இருவரும் நடுவில் நிற்கும் மரத்தினடியில் குழுமியிருந்த நான்கைந்துபேருக்கும் முதுகு காட்டி அமர்ந்துகொள்வதைப் பார்த்தான். தான் எங்கே அமர்ந்துகொள்வதெனத் தீர்மானிக்கவியலாதவனாகத் தடுமாற்றமடைந்து சற்றுநேரம் அவ்விடத்தி லேயே நின்றுகொண்டிருந்தான். பின்னர் அந்த நான்கைந்துபேரும் குழுமியிருக் கும் கடைசி மரத்தடியை மெதுவாகக் கடந்துபோய் வீதியோரமாக அவர்களுக்கு முதுகிட்டு அமர்ந்துகொண்டான். தான் பின்தொடர்ந்துவந்த இருவரும் தமக் கிடையிலான உரையாடலில் குறிப்பிட்டிருந்த ‘நகரிலுள்ள பகுத்தறிவுவாதிகள்’ அந்த நான்கைந்துபேராக இருக்கலாமென ஊகித்தான். தொடர்ந்து அவர்கள் தமக்கிடையே பேசிக்கொள்வதைச் செவிமடுக்கலானான்.
‘கடந்தகாலத்தைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. வருங்காலத்தை எதிர் பார்த்திருக்கவேண்டிய அவசியமுமில்லை. நாங்கள் நிகழ்காலத்தைமட்டுமே கருத்திற்கொள்வோம். நிகழ்காலத்தை மட்டுமே நம்புவோம். அவ்வளவுதான். இதைவிட வேறொன்றுமில்லை.’
‘அதுவும் மெய்தான். இப்போது வீணாகப் பேசி அவமே காலத்தைப் போக்க வேண்டியதில்லை. இன்றையதினம் கனத்த அமாவாசையென்;பதால் தலை கீழாக நின்றாலும் மேற்கு அடிவானில் பிறை காலிக்கப்போவதில்லை. ஆதலால், தொடர்ந்தும் ஊகங்களுக்கு இடமளிக்காமல் நாளை மறுதினத்தின் அந்திப்பொழுதுக்காகக் காத்திருக்கலாம்.’
‘ம்….இன்னுமொன்றைப் பிரதானமாகக் குறிப்பிடவேண்டும்.’
‘என்னது?’
‘நாளை மறுதினம் அந்திவானம் முகிற்கூட்டம் கவியாமல் தெளிவாகத் துலங்கினாலும் வழிகாட்டி நட்சத்திரத்தின்கீழ் பிறை தென்படாதுபோனால் தொடர்ந்துவரும் பதினைந்து தினங்களின் அந்திப்பொழுதுகளுக்காகக் காத்திருக் கலாம்’
‘அதுவும் சரிதான். ஆனால், நிகழ்வுகளின் பகுப்பாய்வாளர்கள்தான் குழப்பு கிறார்கள்’
‘இது வழமையானதுதானே! குழப்பினாலும் காரியமில்லை. ஆனால். இந்தப் பகுப்பாய்வாளர்கள் திட்டமிட்டே குழப்பத்தை உருவாக்கிவிடுகிறார்கள். ம்….இப்போது என்னதான் சொல்கிறார்கள்?’
‘இரண்டே இரண்டு விடயங்களைத்தான் முன்வைத்திருக்கிறார்கள். முதலா வது, பகலில் உச்சமாகத் தகித்துக்கொண்டிருக்கும் சூரியவெப்பத்திற்குச் சளைக் காமல் இந்தச் சந்திரன் இரவை அமுதஒளியால் உச்சமாகக் குளிரவைத்துக் கொண்டிருந்தது. மற்றது, சுமார் கால்நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தச் சந்திரன் வெகுஅருகில் அதாவது கைக்கெட்டுந்தூரத்தில் மிதந்துகொண்டிருந்த போது இதேபோன்று வானத்திலிருந்து சந்திரன் திடீரென்று மறைந்துவிட்டது என்ற செய்தியை இந்நகர மக்கள் செவிமடுத்திருந்தனர். ஆனால், அதையெல் லாம் பொய்யாக்கி அடுத்துவந்த பௌர்ணமிநாளில் சந்திரன் முழுப்பிரகா சத்துடன் தோன்றியிருந்ததைக் கண்ணாரக் கண்டோம். இப்போதென்றால் வானத்தில் சந்திரன் கற்பனைக் கடந்த சோதியாய் வெகுதொலைவில் மிதக்கிறது. கைக்கெட்டுந் தூரத்தில் மிதந்துகொண்டிருக்கும்போதே திடீரென மறைந்துவிடாத சந்திரன், இப்போது கற்பனைக்கெட்டாத தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மறைந்துவிடுவதென்பது சாத்திய மேயில்லை என்றெல்லாம் வியாக்கியானம் தந்திருக்கின்றனர்.’
‘ம்…. என்னதானிருந்தாலும் சிறப்பான தர்க்கந்தான். இவ்வானத்துச்சந்திரனை ஏற்றிப்போற்றிக் கொண்டாடுவோரை மகிழ்விக்கும் வகையிலும், பிறரைக் கவலைக்குள்ளாக்கும் வகையிலும் குழப்பி யிருக்கிறார்கள். அவர்களின் பணி தொடரட்டும். அதுசரி…இதற்கிடையில் இராஜகாரியங்களைப் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்துச்செல்வோரும் ஏதாவது சொல்லியிருப்பார்களே!’
‘ஓ..! அவர்கள்தான் முதலில் கசியவிட்டார்கள்’
‘என்னவாம்?’
‘இதுவரை அரசர்களின் தோற்றம், நடத்தை மற்றும் நகர்வுகளை நிழலாகப் பின்தொடர்ந்து அரச கருமங்களைக் கழுகுப்பார்வையில் பகுப்பாய்வுசெய்து விடுக்கும் அறிக்கையென்ற ஆலாபரண முன்னுரையோடு தொடங்கி, பெரு நுகர்வுத் தானியநிறச் சவுக்கத்தினை அணிந்த கருந்துடைப்பமீசை வைத்த இந்நாட்டின் அரசன் இவன்மட்டுந்தான். இவனுக்கு முன்னர் இந்நாட்டையாண்ட எவருமே இத்தோற்றங் கொண்டிருக்கவில்லை. இதனால்தான் சொல்கிறோம் இவ்வரசன் மாபெரும் தந்திரக்காரன். சதிவேலைகளிலும் கைதேர்ந்தவன். சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள இவ்வானத்துச் சந்திரனை இவ்வரசன் எவ்வகையில் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டான் என்பதை முன்பொரு தடவை ஆதியோடந்தமாக விபரித்திருந்தோம். அவ்வேளை உங்களிற் பெரும் பாலானோர் எங்களைத் தூய்மையான கற்பனாவாதிகள் என்றும், இவ்வரசன் இவ்வானத்துச் சந்திரனுடன் அந்தரங்கமாகப் பேரம்பேசி வழமையாக நிலவெறிக்கவேண்டிய தருணத்தில் மேகத்திரளினுள் புகுந்துகொண்டு இருள் செறிவிக்க வேண்டிக்கொண்டதும், அவ்வேண்டுகோளை இவ்வானத்துச்சந்திரன் நிறைவேற்ற அந்த இருட்செறிவில் இவ்வரசன் சிம்மானத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், அவ்வேண்டுகோளை இவ்வானத்துச்சந்திரன் ஏற்காமல் வழமை போல நிலவெறித்திருந்தால் ஒரு யானைப்பாகன் சிம்மாசனத்தை நிச்சயமாகக் கைப்பற்றியிருப்பான் என்றெல்லாம் நாங்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஆதாரப் படுத்தி விபரித்திருந்ததையெல்லாம் வெறுங்கட்டுக்கதையென்றும்; கேலிசெய் திருந்தீர்கள். காலக்கழிவில் மெய்யுணர்ந்து மௌனமாகிவிட்டீர்கள். அதனால் தான் இப்போது சொல்கிறோம் இவ்வானத்துச்சந்திரனின் திடீர்மறைவுச் செய்தியை வெறும் வதந்தியென்றெல்லாம் புறக்கணித்துவிடமுடியாது. ஏனெனில், இவ்வரசன் மாபெரும் தந்திரக்காரன். வேதாளங்களோடும், ட்ராகன் களோடும் நெருக்கமாகப் பழகிவருகிறான். சதிவேலைகளிலும் கைதேர்ந்திருக் கிறான். இந்நாட்டின் முதல் அரசனாகிய பச்சைக்கிளி மூக்கன் சிம்மாசனத்தைக் கைப்பற்றியதும், ‘இப்போது என்னால் இந்தச் சிம்மாசனத்திலிருந்தபடியே ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத்தவிர மற்றெல்லாத்தையும் தலைகீழாக மாற்றிவிடமுடியும்.’ என்றுதான் அறை கூவல் விடுத்திருந்தார். ஆனால் இவ்வரசனோ தன்னால் இயலாத காரிய மென்றெதுவுமேயில்லையெனச் சிம்மாசனமேறி மகுடந்தரித்த நாளில் எருமை கத்துவதைப்போல முழக்கமிட்டிருந்தான். இதற்கேதுவாகவே தனது உடன் பிறப்பைச் செயலாற்றுந்தளபதியாகவும் நியமித்திருந்தான். அத்தளபதியோ எப்போதும் கண்ணாடிவழியே பார்ப்பவனாகவும், கடுவன் பூனையைப்போன்ற மீசைகொண்டவனாகவும், இவ்வரசனைக்காட்டிலும் பெருந்தந்திரக்காரனாகவும், அதையுங்கடந்து போர்நிகழ்த்துவதில் பெரும் மாயவித்தைகளைக் கையாளக் கூடியவனாகவுமிருக்கிறான்’ என முடித்திருக்கிறார்கள்.
‘பரவாயில்லை. அவர்கள் சொல்வதிலும் ஒரு மறுக்கவியலாத உட்பொருள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது’ என அந்நபர் சொல்லிமுடிக்க மணியோசை கேட்டது.
‘பேராலயத்தில் அந்திக்காலப்பூசை தொடங்கப்போகிறது. காவற்படையினர் இந்தவழியால் வருகைதரக்கூடும். அதனால் இங்கே குழுமியிருப்பது புத்தி சாதுரியமானதல்ல. கலைந்துசென்று நாளை மறுதினம் அந்திவேளைக்குச் சமுகமளிக்கலாம்’ என அடுத்தநபர் சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்ட கலவும், அவரைத் தொடர்ந்து ஏனையோரும் எழுந்து வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்லத் தொடங்கினர். தான் பின்தொடர்ந்து வந்தவர்கள் மணியோசை கேட்ட திசையில் நடப்பதைக்கண்டு அவனும் எழுந்து அவர்களைப் பின்தொடர லானான். அவ்விருவரும் உரையாடுவதைக் கேட்கக்கூடியதாகச் சற்றுநெருங்கி நடைபோட்டான். ஓரிரு நிமிடங்கள் கடந்தநிலையில் தமக்குள் பேசத்தொடங் கினர்.
‘நாளை மறுதினம் இங்கே சமுகந்தர உத்தேசமா?’
‘சமுகந்தந்தால் ஊகங்களுக்கிடமில்லாமல் உண்மை நிலைவரத்தைத் தெரிந்து கொள்ளலாமல்லவா?’
‘ம்…அதுவும் சரிதான். இப்போது பேராலயத்திற்குத்தானே போகிறோம்?’
‘ம்…அதுதான் சரியாகவிருக்கும். ஏனென்றால் பேராலயத்திற்குச் செல்வோரை யாரும் விசாரணை செய்யமாட்டார்கள்.’
‘நான் கருதியதும் அதைத்தான். இன்னுமொன்று’
‘என்னது?’
‘அருந்துவதற்கும் ஏதாவது தரப்படும். வசதிப்பட்டால் அங்கேயே நாளை மறுதினம்வரை பொழுதைக் கழித்துவிடலாம்.’
‘இதுவும் சிறப்பான யோசனைதான். எனக்குத் தோன்றவேயில்லைப் பாரும். இருந்தாலும் அங்குள்ள நிலைவரத்தைப் பொறுத்துத்தான் எதையும் தீர்மானிக்க வியலும். முதலில் அங்கே போய்ச் சேர்வோம்’
‘ம்…ம்… அதுவும் சரிதான்’
இவ்வாறாக உரையாடிக்கொண்டே அவ்விருவரும் ஒரு குறுகலான இருட்டுச் சந்துவழியே இறங்கி நடக்கப் பின்தொடர்ந்தவன் முதலில் தடுமாறினாலும் உடனேயே தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டே அடிமேல் அடிவைத்து நடக்கலானான்.
4
சவ ஊர்வலத்தை விலக்கிவிட்டு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்த நால் வரும் சற்றுத்தூரங் கடந்ததும் எதிரே வட்டக்குல்லாபோட்ட உயரிகள் சிலர் தமக்குள் இடைவிடாமல் மெல்லிய குரலில் கிசுகிசுத்துக்கொண்டு வருவதைக் கண்டு ஒதுங்கிநின்றனர். அவர்களோ இந்த நால்வரையும் பொருட்படுத்தாமல் தம்வழியே சென்றுகொண்டிருந்தனர்.
‘இவர்களைப் பின்தொடர்ந்து செல்வோமா?’ அந்த நால்வரில் சவமாகக் கிடந்த வன் கேட்டான். மற்றவர்கள் எதுவும்கூறாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘ஏன் தயங்குகிறீர்கள்? இலக்கேதுமின்றி அலைவதைவிட இவர்களுடன் சேர்ந்து செல்வது மேலானதல்லவா?’ அவன்தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் மற்றவர்கள் பதிலேதுமின்றி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டி ருந்தனர்.
‘இவர்களைப் பின்தொடராமல் அலைந்துகொண்டிருப்பது கண்காணிப்பவர் களின் வீணான சந்தேகங்களுக்கிடமளிக்கலாம். அது நமக்கெல்லாம் பாதுகாப் பானதுமல்ல. அதனால் நான் இவர்களைப் பின் தொடர்ந்து செல்லப்போகிறேன். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.’ எனக்கூறிக்கொண்டே அவன் வட்டக்குல்லாபோட்ட உயரிகளின் பின்னால் நடக்கலானான். ஒதுங்கிநின்ற மூவரும் சற்றுநேரங்கழித்து ஒவ்வொருவராக அவனைப் பின்தொடரலாயினர். அத்தருணத்தில் நகர்க் காவலர் சிலர் சூரியக்கொடி ஏந்தி எதிரே வரிசையாக அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர்.
‘நல்லவேளை! இவர்களைப் பின்தொடராமல் எதிர்த்திசையில் போய் அலைந்து திரிந்திருந்தால் நகர்க்காவலரின் கண்காணிப்புக்குள்ளாகி விசாரணைக்குட் பட்டிருக்க நேர்ந்திருக்கும்.’ என கடைசியாகச் சென்றுகொண்டிருந்த மூவரும் தமக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். மேலும் சிறிதுதூரங் கடந்ததும் இந்த நால்வரும் வட்டக்குல்லாபோட்ட உயரிகளுடன் ஒன்றுகலந்துவிட்டனர். இப்போது அவர்கள் தமக்கிடையே கிசுகிசுப்பதைத் தெளிவாகக் கேட்கமுடிந்தது.
‘நகரின் மூலைமுடுக்கெல்லாம் இதைத்தானே பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக் கிறார்கள்’
‘இது யாரும் எதிர்பார்த்திராத புதுக்கதை’
‘அதுவென்றால் உண்மைதான். உனக்கென்ன தோன்றுகிறது?’
‘எதுவுங் கூறமுடியவில்லை;. பொறுத்திருந்து பார்க்கலாம்’
‘அதுதான் சரியாக இருக்கும். முறைப்படி அறிவித்தல் வரும்வரை வெளியாவ தெல்லாம் வெறும் ஊகந்தானே? வீணான ஊகங்களுக்கு இடமளித்து மனக்குழப் பத்திற்குள்ளாவதைவிடப் பொறுத்திருக்கலாம்.’
‘ம்… நாளையதினம் அயல்நாடுகாண் பயணத்தை முடித்துக்கொண்டு அரசன் வானூர்தியில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிகிறது. அவன் வானூர்தியி லிருந்து இறங்கியதும் முறைப்படியான அறிவித்தலை வெளியிடுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’
‘இது நிச்சயந்தானா?’
‘ஓர் எதிர்பார்ப்புத்தான். இதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்’
‘ம்…சரி. இப்போது நாம் பேராலயம் நோக்கிச் செல்வதால் ஏதாவது பாதகம் நேர்ந்துவிடாதா?’
‘பாதகமாக ஏதும் நேர்ந்துவிடக்கூடாதென்றுதான் பேராலயம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இன்றையதினம் அங்கே தங்கியிருந்து இராப்பொழுதைக் கழித்துவிட்டு நாளைய அந்திப்பொழுதிற்கு மேற்சதுக்கம் சென்று பிறைபார்ப்ப தாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’
‘ம்… பாதகமாக ஏதும் நிகழ்ந்துவிடாமலிருந்தால் சரி. கடந்தகால நிகழ்வு களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அத்தகையவை.’
‘மறுக்கவில்லை. ஆனால் இந்தத் திடீர் மறைவுச்செய்தி பலரையும் வேறொரு பக்கம் திசைதிருப்பியுள்ளது. அதுவும் இன்னொருவகையில் நமக்கெல்லாம் சாதகமானதுதான்.’
‘இருந்தாலும் எதையும் உறுதியாக நம்புவதற்கில்லை.’
‘மெய்தான். இதெல்லாவற்றையும் கவனத்திற்கொண்டுதான் ஒருநாள் முன்ன தாகப் புறப்பட்டிருக்கிறோம்.’
இவ்வாறாக உரையாடிக்கொண்டே சென்றுகொண்டிருந்தவர்கள் அநேகமான இடங்களில் வீதியின் இருமருங்கிலும் சிலர் ஆளுயரத்திற்குச் செவ்வகவடி விலான கறுப்பாடிகளைப் பொருத்திக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
‘இதென்ன புது ஏற்பாடாயிருக்கிறது?’
‘இதுதான் அரசன் முக்கிய அறிவித்தல்களை நமக்கெல்லாம் வெளியிடுவதற் கான ஏற்பாடு. அநேக மாக நாளையதினம் அது நிகழலாம். அதையும் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.’
‘இதையெல்லாம் பார்த்தால் திடீர்மறைவுச்செய்தியைச் சாதாரணமாகப் புறக் கணித்துவிடமுடியாதென்றே தோன்றுகிறது’
‘பாதகமாக ஏதும் நிகழ்ந்துவிடுவதற்குள் பேராலயத்தைச் சென்றடைந்து விடவேண்டுமென்பதுதான் இப்போதிருக்கும் பிரச்சினை. அதனால் முடிந்தளவு விரைந்துசெல்வோம்’
‘நான் கருதுவதும் அதுதான். இப்போதைக்கு அதொன்றுதான் முக்கியமானது’
அதன்பின்பாக அவர்களிலெவரும் தமக்கிடையே பேசிக்கொள்ளாமல் முன்னரைவிட வேகமாக நடந்துசென்றனர். சவமாகக் கிடந்தவன் அவர்களுடன் ஒன்றுகலக்கப் போய்க்கொண்டிருப்பதைக் கண்டு ஏனைய மூவரும் பின்வரிசை யில் மற்றவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்கலாயினர். சடுதியாக குறுகலான சந்தொன்றில் இறங்கிச் செல்ல நேர்ந்தபோது கவிந்துகொண்டிருந்த இருளின் செறிவில் தட்டுத்தடுமாறித்தான் அவர்கள் நகரவேண்டியிருந்தது. ஒடுங்கிய இருட்குகையொன்றில் நுழைந்து நடப்பதாகத் தோன்றியது. ‘வீணாக வந்து பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொண்டோமே!’ என சவஊர்வலத்தில் வந்த மூவரும் தமக்குள்ளே பேசிக் கவலைபடர்ந்த நெஞ்சினராய் கைகளைக் கோர்த்தபடியே அடிமேல் அடியெடுத்து வைத்துப் போய்க்கொண்டிருந்தனர்.
5
தட்டுத்தடுமாறி ஒருவழியாக இருட்டுச்சந்திலிருந்து அவன் வெளியே வந்த போது காவிதரித்து முட்டாக்குப்போட்டு இதுவரை முன்னால் சென்றுகொண்டி ருந்த இருவரையும் காணவில்லை. இனி அவர்களைப் பின்தொடரவேண்டிய அவசியமேதுமில்லையென அவனுக்குத் தோன்றியது. இருட்டுச்சந்திலிருந்து வெளியே வந்தவன் வீதியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு நேரெதிரே வெண்கூம்புவடிவில் பேருருக்கொண்டு நிற்பதுதான் அவன் பின்தொடர்ந்து வந்திருந்த அவ்விருவரும் தமக்கிடையில் குறிப்பிட்;ட தேவாலயம் எனப் புரிந்துகொண்டான். அவன் மிக மெதுவாகவே பிரதான வீதியைக் குறுக்கறுத்து நடந்து பேராலயத்தின் நுழைவாயிலுக்கு வந்தான். நுழைவாயிலின் இருமருங்கும் படைக்கலமேந்தி நின்றுகொண்டிருந்த காவலர் களைப் பார்த்தவன் உள்நுழையத் தயங்கினான். ஆனால் அவனுக்குப் பின்னால் பல்லக்கொன்றைச் சுமந்தபடியே சிலர் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அக்காவலர்கள் அதற்கு வழிவிட்டு உள்ளே செல்லுமாறு அவனுக்குப் பரபரப் புடன் சைகைவிடுக்கவும், வேகமாகப் பேராலயத்தின் நுழைவாயிலைக் கடந்து உள்ளேபோய் ஒதுங்கிநின்றான். அண்ணாந்து பார்க்குமளவு உயரத்தில் அகலத் திறந்திருந்த நுழைவாயிலின் மரக்கதவுகளில் எதிரெதிரே வாளேந்திப் பாய்ந்துகொண்டிருந்த சிங்கங்கள் அவனை ஒருகணம் மிரளவைத்தன. பிடரியில் லேசான வலியை உணர்ந்தவன் தலையைத் தாழ்த்திகொண்டான். இதற்கிடையில் பல்லக்கு அவனைக் கடந்து வெகுதூரம் சென்றுவிட்டது. இன்னும் சில பல்லக்குகள் இடைவெளிவிட்டு வரிசையாக உள்நுழைந்தபடியே யிருந்தன. அவனைப்போலவே கால்நடையாகப் பேராலயத்தினுள் நுழைந்த பலரும் பல்லக்குகளுக்கு வழிவிட்டு உட்புறவழியின் இருமருங்கிலும் ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். இரவைப் பகலாக்கும் முனைப்புடன் பேராலயமெங்கும் ஒளியேற்றப்பட்டிருப்பதாய் உணர்ந்தான். இன்னுமின்னும் பேராலயம்நோக்கிப் பலர் கால்நடையாக வந்துகொண்டேயிருந்தனர். பல்லக்கு களின் வருகை ஓய்ந்தநிலையில் உள்ளே ஒதுங்கிநின்றவர்கள் பேராலய முன்றிலைநோக்கிச்செல்ல அவனும் பின்தொடரலானான். அத்தருணத்தில் பேராலயத்தின் உள்ளிருந்து மாரிகாலத்து இரவுகளில் தவளைகள் நுணலு வதைப்போலச் சிலர் ஒருமித்தகுரலில் மந்திரமோதத்தொடங்கியிருந்தனர். அவனுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தவர்களில் சிலர் தேவாலயத்தினுள் நுழைய, இன்னுஞ்சிலர் வலப்புறமும் இடப்புற முமாகப் பிரிந்துசெல்வதையும் பார்த்தான். அவனுக்கோ பேராலயத்தினுள்ளே நுழையும் எண்ணமேதுமில்லாத தால், வலப்புறம் செல்வதா? இடப்புறம் செல்வதா? என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறிச் சற்றுநேரம் உள்வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டி ருந்தான். அக்கணத்தில் தேமாப்பூ வாசம் அவனது நாசியில் பரவுவதை உணர்ந்தான். அதிலொரு பயங்கலந்த இதந்தோன்ற, வலப்புறம் பிரிந்து சென்று கொண்டிருப்பவர்களைப் பின்தொடர்ந்து செல்லலானான். சில காததூரம் நடந்ததுமே வெளிச்சம் குறைந்துகொண்டிருப்பதை உணரமுடிந்தது. நடைவழியின் இருமருங்கும் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கைகளில் மூன்றுநான்குபேராகப் பலரும் உட்கார்ந்து தமக்குள்ளே கிசுகிசுத்துப் பேசிக்கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது. எங்காவது உட்கார்ந்துகொள்ளும் நோக்குடன் இடந்தேடி நகர்ந்தான். அவனுக்கு முன்னே சென்றுகொண்டிருந்தோர் பேராலயச்சூழலுக்கு நன்கு பரிச்சயமானோர் என்பதையும் அடிக்கடி அங்கு வந்துசெல்வோர் என்பதையும் அவனால் உணர வியலுமாயிருந்தது. அவர்களில் அநேகர் தம்வசதிக்கேற்ப ஒவ்வோரிடங்களில் அமர்ந்துகொள்ள, அவன் தனியனாகிக்கொண்டிருந்தான்.
இப்போது கல்லாசனங்களெல்லாம் நிரம்பிவிட்டிருந்த நிலையில் அவன் நடை வழியின் முடிவிடத்திற்கு வந்திருந்தான். நல்லவேளை அங்கேயமைந்திருந்த கல்லாசனமொன்றில் ஏற்கனவேயிருவர் அமர்ந்திருந்தபோதும் அவனுக்கு ஓரமாய் அமர ஓர் இடங்கிடைத்து உடனே அமர்ந்துகொண்டான். அங்கே கடைசியாய் அமர்ந்துகொண்டவன் அவனாகத்தானிருக்கும்.
மாரிகால இரவுகளில் தவளைகள் சேர்ந்து நுணலுதல்போன்று இதுவரை பேராலயத்தினுள்ளிருந்து ஒலித்த மந்திரஉச்சாடனம் நின்றுபோய்ச் சற்று நேரத்தில் நடைபாதைவழியே இருவர் கரத்தையைத் தள்ளிக்கொண்டு வருவது தெரிந்தது. கல்லிருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியை அண்மித்ததும் நகர்வை மெதுவாக்கிக்கொண்டு ஒருவன் கரத்தையைத் தள்ள, மற்றவன் தாமரைஇலைகளில் வைக்கப்பட்டிருந்த வெண்தளிசைகளை எடுத்துக் கல்லிருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பரிமாறத்தொடங்கினான். கரத்தை நகர்ந்து கடைசியில் அவனது அமர்விடத்திற்கு வந்தபோது தனக் கருகே இன்னுமிருவர் அமர்ந்திருப்பதையும், கரத்தையில் மூவருக்கான வெண் தளிசைகள் வைக்கப்பட்ட தாமரையிலைகளிருப்பதையுங்கண்டு ஒருகணம் அதிசயத்திலாழ்ந்தான். அதையொரு தற்செயல் நிகழ்வாக அவனால் கருத முடியாமலிருந்தது. மனதில் அச்சம் படர்ந்தது. கண்ணிமைப்பொழுதில் அவனுள்ளிட்ட மூவருக்கும் தாமரையிலைகளில் வெண்தளிசைகளைப் பரிமாறிய பின்பாக கரத்தையுடன் வந்திருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்;துப் புன்னகைத்துத் தலையசைத்துக்கொண்டே கரத்தையைத் திருப்பி வந்தவழியே திரும்பிச்சென்று மறைந்துவிட்டனர். அவர்களிடமிருந்து வெளிப் பட்டிருந்த இலவங்கத்தின் நறுமணம் காற்றில் மிதந்து பரவித் தேய்ந்துபோனது. அவன் வெண்தளிசையில் கையை வைத்தான். வெண்தளிசையின் நடுவே பச்சடி தூவப்பட்டிருந்தது. முதலில் தேமாப்பூவாசங் கமழ்ந்தது. அவன் ஒரு கவளம் விண்டு வாயில் வைத்தபோது கற்பூரம் நாறியது. அங்கிருந்த இருவரும் பேசத்தொடங்கினர்.
‘வழமையாகக் கச்சலான வேப்பம்பூப் பச்சடிதானே தரப்படும்? இதென்ன ஒரு நாளுமில்லாத திருநாளாக இன்று தித்திக்கும் கருப்பம்பூப் பச்சடி தரப்பட்டிருக் கிறது?’
‘ம்…நாளை மறுநாள் மன்னவர் நாடுதிரும்பியதும் ஏதேனும் தித்திப்பான பகிரங்க அறிவித்தலை வெளியிடப்போகிறாரோ என்னவோ?’
‘யாருக்குத் தித்திப்பான அறிவித்தல்?’
‘ம்… ஏதோ பொறுத்திருந்து பார்ப்போம்’
‘இப்போது இதைத் தின்றுமுடிப்பதொன்றுதான் பிரதானம்’
‘ம்…அதுவும் சரிதான்’
அந்தளவில் அவர்களுக்கிடையிலான உரையாடல் முடிவுக்கு வந்திருந்தது. அதன்பின்பாக அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அவனும் வெண் தளிசையைத் தின்றுமுடித்திருந்தான். மெய்யாகவே அவனுக்குப் பசியில்லாத போதிலும் வெண்தளிசையை உண்ணாதிருப்பது வீணான சந்தேகங்களுக்கிட மளிக்கக்கூடுமென்ற அச்சவுள்ளுணர்வுந்துதலினாலேயே தின்றுதீர்க்கவேண்டி யிருந்தது. வெண்தளிசைகளைத் தின்றுமுடித்திருந்த சிலர் தமக்குள்ளே சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, இன்னுஞ் சிலர் கல்லிருக்கைகளில் சாய்ந்துறங்க வாரம்பித்திருந்தனர். சற்றுநேரம் அமர்ந்திருந்தவன் தாமரையிலையை ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் போட்டுவிட்டு, நடைவழியின் முடிவில் நின்று கொண்டிருந்த மரயானையின் துதிக்கையிலிருந்து வழிந்துகொண்டிருந்த தண்ணீரை வரிசையில்நின்று மொண்டு கைகளைக் கழுவி, அருந்தி முகத்தை நனைத்துக்கொண்டு வந்த கல்லிருக்கையிலமர்ந்து சாய்ந்துறங்கலானான்.
6
மறுநாள் அந்திசாயும்வேளையில் தன்னால் வழிநடத்தப்பட்ட சவஊர்வலத்தில் பங்கேற்றிருந்த மூவரும் பேராலயத்தினுள் நுழைவதை அவன் பார்த்ததும், மின்னல்தாக்கியவனைப்போல் அதிர்ச்சிக்குள்ளானான். அடிவயிற்றிலிருந்து பயங்கிளம்பி உட்பரவியது. அன்றையதினம் மதியந்திரும்பியவேளை, ‘சவஊர் வலமொன்றின்மூலம் நகரினுள் உளவாளிகள் நால்வர் நுழைந்துவிட்டனர். அந்நால்வரில் ஆகக்குறைந்தது ஒருவரையாவது அடையாளங்கண்டால் அறியத்தரவும்’ எனச் சிலர் பேராலயமெங்கும் பகிரங்க அறிவித்தல் விடுத்துச்சென்றிருந்தனர். அதைக்கேட்டவன் நிலைகுலைந்துவிட்டான். உடலெங்கும் வியர்த்துத் தொடையிரண்டிலும் நடுக்கமெழுந்தது.
‘சவஊர்வலமென்பதை நினைவிலிருந்து அகற்று! இயல்பாக இரு! உன்னை நீயே காட்டிக் கொடுத்துவிடாதே!’ உள்மனம் எச்சரிக்கத்தொடங்கியது. ஆள்நட மாட்டமற்ற பகுதியைத்தேடி நகர்ந்து தன்னைச் சுமுகமாக்கிக்கொள்ள எத்தனித் தான். அத்தருணத்தில்தான் அந்த மூவரும் பேராலயத்தினுள் நுழைந்து கொண்டிருப்பதைக்கண்டு மேலும் கிலியுற்றான். அவர்களுக்கு இந்தப் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பது நிச்சயமாகத் தெரிந்திருக்காது என்பதால் தனக்கு நேரவுள்ள பேராபத்தை எண்ணிக் கதிகலங்கிப்போனான். அம்மூவரும் தன்னை அடையாளங்கண்டு ஓடோடிவந்து அளவளாவுதல் என்றபேரில் எல்லாவற்றையும் உளறிக்கொட்டி நிலைமையை மோசமாக்குவதற்கிடையில் அவர்களின் கண்களில் தென்படாமல் வெகுதொலைவுக்கு ஏகிவிடவேண்டு மென எண்ணியவனாய் அம்மூவரும் வந்துகொண்டிருக்கும் திசையைக் கண்காணித்து எதிர்த்திசையில் விலகி நடக்கலானான். அதிஷ்டவசமாக அம்மூவரும் அவன் சென்றுகொண்டிருந்த வழியே திரும்பாமல் இடதுபுறமாகத் திரும்பிச்செல்வதைக்கண்டு சற்று நிம்மதியடைந்தான். அத்தருணம் பேரால யத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அவன் பேராலயத்தின் பிரதான வாயிலைநோக்கி விரைந்துசென்றான். அங்கே அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.
பேராலயத்திற்கு வெளியே பிரதானவீதியின் நடுவே வந்துநின்ற முரசறை வோன் மும்முறை ஓங்கியறைந்தபின், ‘இதனால் சகலமானவர்களுக்கும்! சவஊர்வலமொன்றை வழிப்படுத்தி வருவதைப்போல் நால்வர் நகருக்குள் உளவாளிகளாகப் புகுந்துவிட்டனர். அவர்களில் ஆகக்குறைந்தது ஒருவரை யாவது அடையாளங்கண்டால் நகர்க்காவலர்களுக்கு இரகசியமாகத் தெரிவிக் கும்படி வேண்டப்படுகிறீர்கள்!’ என்றுரைக்கலானான். இதைக்கேட்டு அவன் பெருங்குழப்பத்திற்குள்ளானான். ‘இந்நிலையில் பேராலயத்தைவிட்டு வெளி யேறுவது மோசமான ஆபத்தை விளைவிக்கும்’ என உள்மனம் எச்சரிக்க, அங்கிருந்து திரும்பி அம்மூவரும் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை எங்கும் தென்படவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தவழியே திரும்பி நடக்கலானான். வெகுஇயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காகத் தலை கவிழ்ந்து மிகமெதுவாகச் சென்றான். இருவர் நடைவழியில் நின்று பேசிக் கொள்வது காதில் விழுந்தது.
‘உளவாளிகளைப்பற்றியெல்லாம் இங்கே வந்து முரசறைந்து அறிவித்தல் விடுக்கவேண்டியதில்லை’
‘ஏன்?’
‘முதலாவது விடயமென்னவென்றால், பேராலயத்தில் நுழைவதால் உளவாளி களுக்குப் பயனேதுமில்லை. இரண்டாவது, தப்பித்தவறி நுழைந்துவிட்டாலும் அவர்களால் நிதானத்துடனிருக்கமுடியாது. ஏதோவொரு விதத்தில் எங்களால் அடையாளங்காணக்கூடியவாறு தம்மையறியாமல் செயற்படுபவர்களாகவே யிருப்பார்கள். இதுவரை அந்தவிதத்தில் எவருமிங்கே தென்படவில்லை’
அதைக் கேட்டுக்கொண்டே இதயத்துடிப்பு அதிவேகப்பட நகர்ந்தான். ஏதேனு மொன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே பேராலய வளாகத்தில் தொடர்ந்திருக்கமுடியுமென்றுணர்ந்தான். இப்போது பேராலயத்தின் பின்புறத் திற்கு வந்துசேர்ந்துவிட்டான். அங்கே சிலர் குழுமியிருப்பதைப் பார்த்ததும் நெருங்கிச்சென்று நோட்டம்விட்டான். பருமட்டாக ஒரு சாணிலிருந்து ஐந்து அல்லது ஆறடிவரையான நீளஅகலங்களைக்கொண்ட சூரியக்கொடிகள் குவிக்கப்பட்டிருக்க, சிலர் அவற்றை எடுத்து விரித்துக் குச்சிகளையும், கம்பு களையும் சொருகி மறுபுறம் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் கூர்ந்த மூக்கும், இடுங்கிய கண்களும், ஒடுங்கிய வாயுமாய் எண்ணெய் வடியும் இறுகிய முகமும் வழுக்கைவிழுந்த தலையுமாயிருந்த அரையில் நீலக் கோடன் சாறத்தை மடித்துக்கட்டியிருந்த குள்ளனொருவன், ‘சுற்றிநின்று வேடிக்கை பார்ப்பதைவிட எங்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக உழைக் கலாமே?’ எனக் கரகரத்த குரலில் கேட்டான். அதைக்கேட்டு குழுமிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோர் ஒருவர்பின் ஒருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்துசெல்ல, கடவுள் சித்தமாகத் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப் பென இதைக் கருதிக்கொண்டு அவன் அந்நபர்களோடு சேர்ந்துகொண்டு தேசநலனுக்காக உழைக்கும்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆழ்ந்த தொரு நிம்மதிப்பெருமூச்சுவிட்டான்.
7
கனவொன்று சம்பவித்துமுடிந்ததைப்போல அவன் பேராலயத்தினுள் மூன்றுநாள்களைக் கழித்துவிட்டிருந்தான். அன்றையதினம் பிற்பகல் தொடங்கு வதற்கு முன்பாகவே அந்திப்பொழுதில் மேற்சதுக்கத்தில் ஒன்றுகூடுவதுபற்றிப் பலரும் பேசவாரம்பித்திருந்தனர். பிற்பகல்வேளை நெருங்கிக்கொண்டிருந்த போது பேராலய வளாகம் பரபரப்புக்குள்ளானது. அப்போதிருந்தே பேராலயத்தை விட்டுப் பலரும் மேற்சதுக்கம்நோக்கிச் செல்லவாரம்பித்திருந்தனர். அவனுக் கும் மேற்சதுக்கம்நோக்கிச் செல்லும் பரபரப்பு எழத்தான் செய்தது. எனினும், அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன்னுடன் தேசநலனுக்காக நேற்றைய மதியத்திலிருந்து உழைத்துக்கொண்டிருப்பவர்களைப்போல வெகுஇயல்பாக விருப்பதாகப் பாசாங்குசெய்துகொண்டிருந்தான். அவர்கள் வெவ்வேறு அளவு களிலிருந்த சூரியக்கொடிகளை குச்சிகளையும் கம்புகளையும் நுழைத்து அடுக்கிமுடித்திருந்தனர். அவனுடன் சேர்த்து ஆறுபேர் அந்தக் குழுவிலி ருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் கொடிகள் அந்தக் குள்ளனால் பிரித்து வழங்கப்பட்டிருந்தன. ஒரு சாண் அளவான கொடிகள் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. பேராலயத்தைவிட்டு அநேகர் வெளியேறி யிருந்த நிலையில் தேசநலனுக்காக உழைத்து முடித்திருந்த அக்குழுவினர் அங்கிருந்து வெளியேறி மேற்சதுக்கம் செல்லத் தயாராகினர். அத்தரு ணத்தில் குள்ளன் அவர்களைநோக்கி, ‘புறப்படுவதற்கு முன்பாகக் கொஞ்சம் கவனி யுங்கள்! இன்றையதினம் மாலைப்பொழுதிற்குள் நம்மரசர் செவிக்கினிய பகிரங்கஅறிவித்தலொன்றை வெளியிடுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பகிரங்க அறிவித்தலை வெளியிட்டதும் நம்மிடமுள்ள கொடிகளிலொன்றை எடுத்து மேல்நோக்கி அசைத்து ‘என்றும் நிலைத்திருக்கும் சூரியன் வாழ்க! இத்தேசத்தின் ஒரே ஆதிக்குடியாம் சூரியகுலம் என்றென்றும் வாழிய வாழியவே!’ என மும்முறை முழக்கமிட்டபின்னர் அங்கே குழுமியிருப் போரிடம் இக்கொடிகளைக் கையளியுங்கள்.’ எனக் கரகரத்தான். அதனைத் தொடர்ந்து கொடிகளைச் சுமந்துகொண்டு மூவர் மூவராக இருவரிசைகளில் நடந்து பேராலயத்தைவிட்டு வெளியேறி மேற்சதுக்கத்தைநோக்கி நடக்கத் தொடங்கினர். இரண்டாவது வரிசையில் கடைசியாளாக நடந்துகொண்டிருந் தவன் அத்தருணம் சவஊர்வலத்தைத் தவிர்க்கமுடியாமல் நினைவுகூர்ந்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
அவர்கள் ஆறுபேரும் மேற்சதுக்கத்தைச் சென்றடைந்தபோது அந்திசாயும் வேளையாயிருந்தது. மேற்கு அடிவானிலிருந்து விதானப்பரப்பெங்கும் சிறு முகிற்தீற்றல்கூட இன்றி நிர்மலமாயிருந்தது. பிறைகாட்டி நட்சத்திரம்மட்டும் தனித்துநின்று ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால், பிறைச்சந்திரன்மட்டும் தென்படவேயில்லை. பலரும் கூட்டங்கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந் தனர். அவர்களை நெருங்காமலேயே அவர்கள் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் தெளிவாக அவனுக்குக் கேட்டது.
‘இந்த நாளின் இத்தருணத்திற்காகத்தானே காத்திருந்தோம். ஆனால் மேற்கு அடிவானில் சந்திரன் தோன்றவில்லையே? ஒருவேளை திடீர்மறைவுச்செய்தி மெய்யாயிருக்குமோ?’
‘இதிலே அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடமுடியாது. குறைந்தது இன்னும் பதினான்கு நாள்கள் அவகாமிருக்கிறது. இதற்குள் என்ன நிகழ்கிறது எனப் பொறுத்திருந்து அவதானிக்கலாம். இப்போதுதான் அரசன் அயல்நாடு காண் பயணத்தை முடித்து வானூர்தியில் தேசந்திரும்பிக்கொண்டிருப்பதா கவும் இன்னுஞ் சற்றுநேரத்தில் இந்த மண்ணில் கால்பதித்ததும் விடுவிக்க வுள்ள முதலாவது பகிரங்க அறிவித்தலின் காணொளியைத் தேசத்தின் மூலை முடுக்கெங்கும் பொருத்திவைக்கப்பட்டுள்ள நீள்சதுரவாடிகளில் பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது’
சட்டென்று திக்கெட்டும் முரசுகள் முழங்கின. மேற்சதுக்கத்தின் இருசந்து களிலும் பொருத்தப்பட்டிருந்த நீள்சதுரவாடிகள் மின்னல்வெட்டியதைப்போல ஒளிர்ந்து வெண்மை பரவியது. அந்த வெண்மை மங்கி நீலம் படர்ந்தது. அப்படர்வில் சிறு வெண்புள்ளி தோன்றிப் பெரிதாகிக்கொண்டே வந்து ஒரு வானூர்தியாகத் தரையிறங்கியது. ஒற்றைக்கதவு மெல்லெனத் திறந்துகொள்ள உறைந்த குருதிநிறத்தில் பெருநுகர்வுத்தானியத்தைக் குறிக்கும் சவுக்கத்தைக் கழுத்தில் அணிந்து வெள்ளுடை தரித்து மீசையும் சிரிப்பில் விரியக் கரங்குவித்தபடி மண்ணில் காலடிபதித்த அரசன், அடுத்துத் தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து குனிந்து நிலத்தை முத்தமிட்டு எழுந்தான். வாளை உருவிச் சிரமேலுயர்த்தி முழக்கமிடலானான்.
‘பன்னெடுங்காலமாய் எமது தேசத்தை அவதிக்குள்ளாக்கி நிம்மதியிழக்கச் செய்திருந்த தொற்றுநோய் அடியோடகன்றுவிட்டது. அதுவொன்றும் தானாய் அகன்றுவிடவில்லை. எல்லோருஞ்சேர்ந்து பெருஞ்சமர் புரிந்துதான் அடியோட கற்றியிருக்கிறோம் என்பதை என்றென்றும் நினைவிற்கொள்ளவேண்டும். இனி யிந்தத் தேசத்தில் சூரியன், சந்திரன் என்ற பாகுபாடில்லை. எங்களுக்கிருப்பது ஒரே வானம், ஒரே சூரியன்தான் என்பதை அறுதியிட்டும் இறுதியிட்டும் கூறுகிறேன். இரவென்பது ஒளியற்றது. இருளால் அலங்கரிக்கப்படுவது. இரவின் அடர்த்தியும் வனப்புமென்பதே நிசப்தம் கவியும் இருள்தான். அந்த இருளை அகற்றி இரவின் வனப்பையும் அடர்த்தியையும் அழித்து ஐதாக்கிக் கொண்டிருந்த வெண்ணிலவை, இரவை அர்த்தமிழக்கச் செய்துவந்த சந்திரனை, இருளை உயிர்க்குறியாய் நேசிக்கும் மக்களையெல்லாம் பயமுறுத்திவந்திருந்த அம்புலிமாமாவை நான் உங்களது முழு ஆதரவோடு எங்களது தேசத்தின் பரந்து விரிந்த வானகத்திலிருந்து நிரந்தரமாகவே நேற்றுமுன்தினம் அகற்றி விட்டேன் என்பதைப் பெருமையோடு உள்ளம் பூரிக்க இத்தருணத்திலே உங்களுக்குப் பகிரங்கமாக அறிவித்து இதையொரு வரலாற்றுப் பதிவாக்கு கிறேன்.’
அரசன் இவ்விதங்கூறிமுடித்ததும் பேரிகை முழங்கி வானைப் பிளந்தது. தேசத்தின் மூலைமுடுக்கெங்கும் சங்குகள் முழங்கின. தங்களைச் சூரியகுலத் தோர் எனச் சொல்லிவந்திருந்தோர், ‘சந்திரனை அகற்றிய சூரியனாம் எங்கள் மாமன்னன் வாழ்க! என்றும் நிலைத்திருக்கும் சூரியன் வாழ்க! இத்தேசத்தின் ஒரே ஆதிக்குடியாம் சூரியகுலம் என்றென்றும் வாழிய வாழியவே!’ என்றெல் லாம் ஆர்ப்பரித்துக் கோசமிட்டனர். இது அடங்கும்வரை சிரமேலுயர்த்திய வாளுடன் கையசைத்துக்கொண்டிருந்த மாமன்னன் எருமை கமறுவதைப் போலத் தொடரலானான்.
‘அடர்ந்த இருளை உயிருக்குயிராய் நேசிக்கும் மக்களையெல்லாம் இரவில் ஒளிவீசி அச்சுறுத்தி வந்திருந்த அம்புலிமாமாவை நான் உங்களது முழு ஆதர வோடு எங்களது தேசத்தின் பரந்து விரிந்த வானகத்திலிருந்து நிரந்தரமாகவே அகற்றிவிட்டதால் இனி அமாவாசை, வளர்பிறை, பௌர்ணமி, தேய்பிறை எனும் நிலைப்பாடுகளுக்கெல்லாம் இடமளிக்கப்படமாட்டாது. ஆகவே, எங்கள் தேசத்தில் இன்றுமுதல் அமாவாசையுமில்லை. வளர்பிறையுமில்லை. முழுமதியுமில்லை. தேய்பிறையுமில்லை. இதனால் பிறைபார்த்துத் தொடங்கும் விரதங்கள், நோன்புகள் யாவும் இன்றுமுதல் தடைசெய்யப்படு கின்றன.’
‘அடுத்து, இன்றிலிருந்து பின்னணிப்பாடகர் எவரையும் பாடும்நிலா என்றழைப் பதும் தடைசெய்யப்படுகிறது. இன்றுமுதல் அவரை பாடுங்குயில் என்றோ அல்லது பாடும் சூரியன் என்றோதான் அழைக்கவேண்டும். ஏனென்றால் அறிவியல்ரீதியாகவும் ஆண்குயில்தான் கூவும். நிலா கூவுவதில்லை என்பதைக் கவனத்திற்கொள்ளவேண்டும். மேலும், சந்திரனையோ, அம்புலி மாமாவையோ அல்லது நிலாவையோ நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடும் கவிதைகள், பாடல்கள், கதைகள் எனச் சகலதும் இன்றுமுதல் தடைசெய்யப்படுகின்றன. இன்றுமுதல் ‘நிலா! நிலா! ஓடிவா! நில்லாமல் ஓடிவா!’ எனும் பாடலைப் பாடித் தாய்மார் தமது குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டவேண்டியிருக்காது. பதிலாக, ‘சூரியா! சூரியா! ஓடிவா! நில்லாமல் ஓடிவா!’ எனப் பாடிச் சூரியச்சோறு ஊட்ட வேண்டியிருக்குமென்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று சந்திரனையோ, அம்புலிமாமாவையோ அல்லது நிலாவையோ நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடும் கவிதைகள், பாடல்கள், கதைகளில் எல்லாம் சூரியன் அல்லது சூரியா மற்றும் தினகரன் என மாற்றிப் பாவிக்கவேண்டும் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கடுத்ததாகச் சந்திரனில் ஆரம்பிக்கும் அல்லது முடியும் பெயர்களைக் கொண்டிருப்பவர்கள் இன்றுதொடக்கம் அந்தப் பெயர்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அதாவது சந்திரகுமார் என்ற பெயரு டையவர் சூரியகுமார் என்றும், ஜெயச்சந்திரன் என்ற பெயருடையவர் ஜெயசூரியன் என்றும் தமது பெயர்களை மாற்றிக்கொள்ளல்வேண்டும் என்பதோடு, இன்றிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்குச் சந்திரன், அம்புலிமாமா, நிலா, மதி போன்ற பெயர்களைத் தொடக்கமாகவோ முடிவாகவோ கொண்டு பெயரிடுவதும் தடைசெய்யப்படுகின்றது. இதுவரை நான் தடைசெய்யப்படுவ தாக எடுத்துக்காட்டியவற்றை மீறிச் செயற்படுவதென்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் கவனத்திற்கொள்ளுங்கள்.
‘இன்றிலிருந்து இருளை உயிருக்குயிராய் நேசிப்போருக்கும், இருளில் புகுந்து தேசநலனுக்காக அயராது உழைத்து வருவோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் தொடங்குகிறது. அம்புலிமாமாவை எங்கள் தேசத்தின் வானகத்திலிருந்து நிரந்தரமாகவே அகற்ற என்னோடு தோளோடு தோள்கொடுத்து அயராது உழைத்த சகலருக்கும் பெருமிதத்தோடு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.’
வாளை உறைக்குள் சொருகிய மன்னன் கருந்துடைப்பமீசை விரியச் சிரித்துக் கொண்டே கைகளை உயர்த்தியசைக்க நீள்சதுரத்திரை மின்னல்வெட்டிக் கருமை படர்ந்தது. அத்தருணத்தில் மேற்சதுக்கத்தின்மீது மயானஅமைதி கவிந்து ஒருகணம் எல்லாம் உறைந்துவிட்டதைப்போலிருந்தது. மறுகணமே கொடியேந்திகளை வழிநடத்தி வந்திருந்த குள்ளன் முழக்கமிட்டான்.
‘என்றும் நிலைத்திருக்கும் சூரியன் வாழ்க! இத்தேசத்தின் ஒரேயொரு ஆதிப் பெருங்குடியாம் சூரியகுலம் என்றென்றும் தழைத்தோங்கி வாழிய வாழியவே! தேசத்தாயே! நமோ! நமோ! நமோ! வானில் பகல் தந்து மிதக்கும் சூரியனே! நமோ! நமோ! நமோ!’
தொடர்ந்து அங்கு கூடியிருந்தோரின் கைகளில் சூரியக்கொடிகள் திணிக்கப் பட்டன. அச்சத்தின் வசப்பட்டிருந்ததால் எவருமே மறுப்பேதுமின்றிச் சூரியக் கொடிகளை வாங்கிக்கொண்டு கேட்ட பணத்தைச் செலுத்திவிட்டுக்; கலைந்து செல்லத்தொடங்கினர்.
‘உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் சூரியக்கொடிகளை நாளைமுதல் உங்கள் வீடுகளிலும் பல்லக்கு, தேர், மாட்டுவண்டிகளிலும் பொருத்திப் பட்டொளிவீசிப் பறக்கவிடும்படி வேண்டப்படுகிறீர்கள். இவ்வேண்டுதலைப் புறக்கணிப்பதும், சந்திரக்கொடிபோன்ற ஏனைய கொடிகளைப் பறக்கவிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.’ என அக்குள்ளன் மேற்சதுக்கத்தில் நின்று கத்திய ஒலி கலைந்து சென்றவர்களைப் பின்தொடர்ந்துவந்து தேய்ந்துபோனது.
8
பகுத்தறிவுவாதிகள் மேற்சதுக்கத்தில் ஒன்றுகூடிய நாள்களில் தேசத்து விண்ணகத்தில் சந்திரன் தோன்றுமெனக் குறிப்பிட்டிருந்த காலக்கெடு முடிந்தி ருந்த நிலையிலும் நிர்மலமாயிருந்த விண்ணகத்தில் நட்சத்திரங்கள் மட்டுமே ஒளிர்ந்துகொண்டிருந்தன. சந்திரன் தோன்றவேயில்லை. இப்போதும் பகுத்தறிவுவாதிகள் மாமன்னன் விடுத்திருந்த பகிரங்க அறிவித்தலை மறுத்து, ‘தேசத்து விண்ணகத்திலிருந்து சந்திரனை அகற்றுவது ஒருபோதும் நிகழச் சாத்தியமேயில்லை. இதில் ஏதோ சூழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது. சந்திரனைமட்டும் நமது கண்களுக்குப் புலப்படாதவகையில் விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் இடையில் மாயத்திரை போடப்பட்டுள்ளது.’ என்றொரு கருத்தினை இறுதியாக முன்வைத்திருந்தனர். இக்கருத்து வலுவடைந்து மாமன்னனின் செவிக்கெட்டி யதும் முதலில் அதற்குப் பதிலேதுமளிக்காமல் தனது கருந்துடைப்ப மீசை விரியச் சிரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அயல் நாடுகாண் பயணத்தை முடித்துக்கொண்டு வானூர்தியில் திரும்பித் தேசத்துமண்ணில் காலடி பதித்து முழந்தாளிட்டு அந்த மண்ணை முத்தமிட்டு வணங்கியதும் விடுத்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகிரங்க அறிவித்தலைப் பொய்யாக்கு மளவிற்குப் பகுத்தறிவுவாதிகளின் மறுத்துரைப்பானது மேவி மேலும் வலு வடைந்துகொண்டிருந்த நிலையில், இனியும் சிரித்துக்கொண்டிருப்பது ஆபத்தை விளைவிக்குமென்றுணர்ந்து தனது அடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகிரங்க அறிவித்தலை மாமன்னன் மீளவும் நீள்சதுரத்திரையில் தோன்றிச் சான்றாதாரக்கோப்புடன் வெளியிடலானான்.
‘எனது நீதிவழுவா மெய்யாட்சிக்குக் களங்கமேற்படும் வகையில் எதிர்த்தரப் பொன்றிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கும் பொய்யான தகவலுக்கு முறைப் படி விளக்கமளிப்பதற்காகவே இத்தருணம் உங்களின் முன்பாக வந்துள்ளேன். முதலில் அர்த்தமற்ற பொய்யான தகவல்களுக்கெல்லாம் விளக்கமளித்துக் காலவிரயஞ்செய்ய நான் விரும்பவில்லையென்பதாலேயே மௌனமாக இருந்தேன். ஆனால், பொய்யொன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டி ருப்பதால் அது உண்மையென்றாகி விடக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கவேண்டி வரலாம். அதனால் சான்றாதாரக்கோர்ப்புடன் உங்களின் முன்னிலையில் வந்துள்ளேன். இப்போது அதை நீங்களே நேரடியாகக் காணலாம். இனியொரு தடவை நான் உங்களின்முன்னிலையில் தோன்றி விளக்கமளிக்கவேண்டி யிருக்காது. நன்றி!’
மாமன்னனின் தோற்றம் மங்கியதும் சான்றாதாரக் கோப்பு ஒளிரத்தொடங் கியது. சீருடைதரித்த காவலர் சிலர் தேசத்து விண்ணகத்திலிருந்து அகற்றப் பட்ட சந்திரனை மட்டைப்படலொன்றில் வைத்துக் காவிச்சென்றுகொண்டி ருந்தனர். சந்திரனின் மேல்விளிம்பு பிளந்துபோயிருந்தது. ஒரு கைத்துண்டி னால் சந்திரனை அரையுங்குறையுமாகப் போர்த்தி மூடியிருந்தனர். கிண்ணக் குழிகள் ஏதுமின்றிச் சந்திரனின் மேற்பரப்பு வெகுஅழுத்தமாக இருந்தது. இதை மூன்றுதடவைகள் தொடர்ந்து ஒளிரச்செய்தனர். நாட்டின் மூலைமுடுக்கெங் கும் பொருத்தப்பட்டிருந்த நீள்சதுரவாடிகளில் இச்சான்றாதாரக்கோர்ப்பு மும்முறை ஒளிர்ந்து ஓய்ந்ததும் சந்திரனின் திடீர்மறைவுச்செய்தி பரவிய நாளில் ஏற்பட்ட பரபரப்பு திரும்பவும் தலைதூக்கியிருந்தது. சந்திரனை ஏற்றியும் போற்றியும் கொண்டாடிவருவோர் மற்றும் இராப்பொழுதுகளை வசீகரித்து அலங்கரிக்கும் நிலவொளியைப் பெரிதும் விரும்புவோரில் அநேகர் இச்சான்றாதாரக் கோர்ப்பினைப் பார்த்ததும் மனமுடைந்து கண்ணீர்மல்கித் தமக்கிடையில் இரகசியமாகத் துயர் பகிர்ந்துகொண்டிருந்த வேளையில் அவர்களிற்சிலர், ‘இச்சான்றாதாரக்கோர்வை நன்கு இட்டுக்கட்டி அலங்கரிக்கப் பட்ட பொய்’ என்று மறுப்பறிக்கை விடுத்ததுடன், ‘இச்சான்றாதாரக் கோர்வை யில் காட்டப்பட்ட சந்திரனின் மேற்பரப்பு ஒரு சிறுகிண்ணக்குழிகூட இன்றி அழுத்தமாகவும் பளபளப்பாகவுமிருப்பதேன்?’ எனவும் கேள்வியெழுப்பியிருந் தனர். அத்தோடு இத் தேசத்து விண்ணகத்தில் மிதந்த சந்திரன் தற்போது வெகுதூரம் விலகிச்சென்று வேறொரு தேசத்து விண்ணகத்தில் எந்தவொரு சேதாரமுமின்றி மிதந்துகொண்டிருப்பதைப் போன்றதோர் அசையாக் காணொளி யையும் இன்னுமொரு சாரார் மாமன்னன் பகிரங்கமாக வெளியிட்டிருந்த சான்றாதாரக் கோர்வைக்குப் பதிலிறுக்கும்வகையில் அதனுடன் இணைத்து வெளியிட்டுப் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தமுயன்றும் அது எதிர்பார்த்த விளைவை உண்டாக்கவில்லை.
இவ்வாறெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த நாள்களில் சவஊர்வலத்தை வழி நடத்தி வந்தவன் ஏனைய ஐவருடனும் சேர்ந்து சூரியக்கொடி விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததுடன், தேசத்தின் விண்ணகத்திலிருந்து சந்திரனை நிரந்தரமாக அகற்றிய வெற்றிவிழாக் கொண்டாட்டங்களிலும் களியாட்டங்களிலும் கலந்துகொண்டு அசாதாரணமாகவே கிடைக்கக்கூடிய அறுசுவை உணவுவகை களையும், மதுபானத்தையும் அருந்தியருந்தித் திளைக்கலானான். இருந்தும் நெஞ்சோரத்தில் அச்சவுணர்வொன்று ஒட்டிக்கொண்டிருந்து அவ்வப்போது எட்டிப்பார்க்கவே செய்தது. இவ்வாறாக வெற்றிவிழாக் கொண்டாட்ட நிகழ் வொன்றில் கலந்துகொண்டபின்னர் வந்து ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட் டிருந்த இடத்தில் படுத்துறங்கிக்கொண்டிருந்த இரவொன்றில் அரைத்தூக்கத்தி லிருந்தவனுக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த இருவர் தமக்குள் கிசுகிசுத்துக்கொள்வது தற்செயலாகக் காதில் விழுந்தது.
‘பொழுது புலர்வதற்கு முன்பாகவே இங்கிருந்து புறப்பட்டாகவேண்டும்.’
‘ஏன்? அப்படியென்ன அவசரம்? எல்லாமிங்கே சாதாரணமாகத்தானே இருக்கிறது?’
‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தானிருக்கும். ஆனால், இதுவொரு மாயத்தோற்றம். சவஊர்வலம் என்ற போர்வையில் நகரினுள் நுழைந்து எங்கெங்கோ பதுங்கியிருக்கும் அந்த நான்கு உளவாளிகளையும் இன்னமும் வலைவிரித்துத் தேடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.’
‘அதனால் நமக்கென்ன வந்தது? வழமைக்கு மாறாக எதுவும் நிகழவில்லை என்றளவில் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்?’
‘நிலைமை புரியாமல் பேசுகிறாய். எல்லாம் வழமைக்கு மாறாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெற்றிவிழாக்கொண்டாட்டங்களுக்கெனச் சந்திரகுலத் தோர் என அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர் களைத்தேடிக் கண்டுபிடித்து மிரட்டி அச்சுறுத்தி நிதி வசூலிக்கப்படுகிறது. சந்திரகுலத்து இளம்பெண்களிடம் சொல்லவே வாய்கூசுமளவுக்கு அத்துமீறல்களும் நிகழ்ந்துவருகிறது. இனி வரும் நாள்களில் எந்த அசம்பாவிதமும் நிகழச் சாத்தியமிருக்கிறது. உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் எங்களைக்கூடக் கைதுசெய்யும் சாத்தியமிருக்கிறது.’
‘ஐயோ! கேட்கவே பயம்பிடித்தாட்டி அடிவயிற்றைக் கலக்குகிறது. இப்போது என்னதான் செய்வது?’
‘அதுதான் முதலிலேயே சொன்னேனே, இன்றைய பொழுது புலர்வதற்கு முன்பாகவே இங்கிருந்து புறப்பட்டாகவேண்டுமென்று’
‘புறப்பட்டு எங்கே செல்வது?’
‘இங்கிருந்து புறப்பட்டுக் கிழக்குநோக்கி நூறடி நடந்தால் நிலந்தாழ்ந்து கொண்டே செல்லும். அதன்; வழியே இருநூறடி வைத்தால் ஒரு சமவெளியைச் சென்றடையலாம். அங்கிருந்து மேற்குநோக்கி நூறடி போனால் பூடகமாகக் கதைபோடுவோர் சதுக்கம் வரும். அங்கே முந்நூறு அகவையுடைய வன்னி மரத்தின் கீழமைந்த கற்பீடத்தில் எவரேனுமொருவர் பூடகமாகக் கதைபோட்டுக் கொண்டிருப்பார். மனஅவசத்திற்குள்ளானோர் அதைத் தணிப்பதற்காகச் சுற்றி வர அமர்ந்திருப்பவர். நாங்கள் சென்றடையவேண்டியது அங்கேதான்.’
‘அந்தவிடம் நமக்கு உச்சப்பாதுகாப்பளிக்குமா?’
‘இப்போதுள்ளநிலையில் இங்கே எந்தவோரிடமும் நமக்கு உச்சப்பாதுகாப் பளிக்காது. எனினும் அவ்விடத்தைநோக்கி இந்த அடக்குமுறையாளர்களின் கவனங்குவிய நமக்குப் போதிய காலஅவகாசமிருப்பதால் அங்கே சென்று பின்னர் அங்கிருந்து குறுக்குவழியில் நகரத்தைவிட்டு வெளியேறித் தப்பித்துக் கொள்வது எளிதாக இருக்குமென நம்புகிறேன். நாளை பொழுது புலர்வதற்குள் எழுந்து புறப்பட்டால் மதியப்பொழுதை நெருங்குவதற்கிடையில் அவ்விடத் தைச் சென்றடைந்துவிடலாம்.’
‘ஏதோ நடப்பது விதிப்படி நடக்கட்டும் நானும் கூடவருகிறேன்.’
‘ம்…நான் எழுந்து புறப்படும்போது உன்னை மெல்லத் தட்டுவேன். உடனே எழுந்து வந்துவிட வேண்டும். தவறினால் நான் எழுந்து புறப்பட்டுவிடுவேன். பிறகு என்னைக் குறைவிளங்கக்கூடாது.’
‘உனக்கந்தச் சிரமமேற்படாது. இன்றையபொழுது நான் கண்ணோடு கண்மூடப் போவதில்லை’
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே படுத்திருந்த அவனும் அன்றிரவு கண்ணோடு கண்மூடவில்லை. ஊமத்தங்கூகையைப்போலக் கொட்டக்கொட்ட விழித்தபடி மல்லாந்துகிடந்தான். சொல்லிவைத்தபடியே அவர்களிருவரும் எழுந்து புறப்பட்டபோது சிறிது இடைவெளிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து மதியந்திரும்புவதற்கிடையில் பூடகமாகக் கதைபோடுவோர் சதுக்கத்தை வந்தடைந்திருந்தான். முதல்நாளிரவில் அவர்கள் பேசிக்கொண்டதைப்போலவே அங்கே சாதாரணமாக ஐந்துபேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக்கூடிய வன்னி மரமும் கீழமைந்த கற்பீடமும் பளிச்செனத் தென்பட்டன.
அவ்விடத்தை நெருங்கியதும் உச்சிக்குடுமியுடன் தோளில் வன்சிவப்புச் சவுக்கந்தரித்து அரைக்கு வன்மஞ்சள் துண்டுகட்டிக்கொண்டு ஒருவர் கற்பீடத்தில் அட்டணக்கால் போட்டிருந்தார். முதற்பார்வை யிலேயே மரநாயொன்றின் முகச்சாயல் அவரில் படர்ந்து தேய்வதை அவனால் உணர முடிந்தது. ‘முகச்சாயலில் என்ன இருக்கிறது?’ எனத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அவரைச்சுற்றி ஐதாக இருபதுபேர்வரையில் அமர்ந்து தமக்குள்ளே தீவிரமாகக் கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர். அவர் பரந்த நெற்றியில் சந்தனந் தீற்றிக் குங்குமமிட்டிருந்தார். அவன் பின்தொடர்ந்து வந்திருந்த இருவரும் அங்கே சுற்றிவர அமர்ந்திருந்தவர்களுக்குப் பின்னால் சற்றே இடைவெளிவிட்டு உட்கார்ந்துகொள்ள, அவனும் அதையே பின்பற்றி வசதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் அமர்ந்துகொள்ளும் வரைக்கும் காத்திருந்தவரைப் போல் தனது ஒடிசலான செந்நிற உடம்பை நிமிர்த்தி மயிலொன்று அகவு வதைப்போன்ற குரலில் அவர் பூடகமாகக் கதைபோடத்தொடங்கினார்.
“எது நிகழவேண்டுமோ அது நிகழவில்லை. எது நிகழக்கூடாதோ அது நிகழ்ந்தது. பகுத்தறிவுள்ளோர் மனதளவில் சிறுவன் எனக்கருதிய சின்னத்தம்பி கிழக்குக் கடற்கரையோரம் நடந்துவரநேர்ந்ததில் ஒதுங்கிக்கிடந்த குடுவை யொன்றைக் கையிலெடுத்தபோது கடலரசி நிகழவிருக்கும் அசம்பாவிதங் களனைத்தையும் முன்னுணர்ந்து அலைக்கரங்களால் மார்பில் ஓங்கியறைந்து ஆர்ப்பரிக்கலானாள். ‘பகுத்தறிவுள்ள அநேகரால் மனதளவில் சிறுவனெனக் கருதப்படும் சின்னத்தம்பியே! ஆபத்து! வல்ல பூதக்குடும்பத்துடன் வாலாட்டிகப் பேய்கள்; அல்லற்படுத்தும், அடங்காமுனிகள்; பிள்ளைகளைத் தின்னும் புறக்கடை முனிகள்; பெண்களை நுகரும் பிரமராட்தர்கள் அனைத்தும் உள்ளிருக்கின்றன. எவன் வந்து திறப்பான்? என வெளிவரக் காத்திருக்கின்றன. திறந்துவிடாதே! உன் வழக்கமான விளையாட்டை இதிற் காட்டாமல் தவிர்த்து விடு! ஓர் உண்மையான வலைஞனாக நடந்துகொள்! இதை நீ திறந்துவிட்டால் எதெல்லாம் நிகழக்கூடாதோ? அதெல்லாம் நிகழும். எவரும் எதுவும் எஞ்சி யிருக்காது. சகலமும் அழியும். முடிவில் நீயுமழிவாய். அதனால் அதை என்னிடம் வீசிவிடு!’ இதைக்கேட்டுக் காற்றரசன் கைகொட்டி நகைத்துக் கொண்டே, ‘பேதைப்பெண்னே! உன் ஆர்ப்பரிப்பு சிறுவனின் செவிபுகாது. புகுந்தாலும் அவன் மடுக்கப்போவதில்லை. சிறுவன் இங்கே தற்செயலாக வந்ததாகவா நினைத்துக்கொண்டிருக்கிறாய்? எப்பவோ முடிந்த கதை. இனி நிகழப்போவதெல்லாம் வன்செயல்கள் என்பது விதி! சிறுவன் குடுவையைத் திறப்பதற்காகவே இங்கு வருகை தந்துள்ளான். அதற்காகவே வல்லபூதக் குடும்பத்தின் தூதுவர் இரகசியவழியில் வந்து அவனுக்கு முந்நூறுகோடி திரவியங்கொடுத்ததை நீ கேள்விப்பட்டதில்லையா? குடுவை மாயமும் மந்திரமும் அபாயமும் நிறைந் ததென்பதை உன்னாயிரங்கைகளுக்கு அகப்படாமல் நழுவிக் கரையொதுங்கியபோதே நீ உணர்ந்துகொள்ளவில் லையா?’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எது நிகழக்கூடாததோ அதுதான் நிகழ்ந்தது. சின்னத்தம்பி குடுவையின் மூடியைத் திருகி அகலத் திறந்துவிட்டான். கடலரசி உள்ளொடுங்கினாள். காற்றரசன் வாயை இறுக மூடினான். தொடர்ந்து, நிகழக்கூடாததெல்லாம் படிப்படியாக நிகழத் தொடங்கின. முதலில் பூதக்குடும்பம் குடுவைக்குள்ளிருந்து வெளியேறி அவற்றில் வலியது தடையேதுமின்றிச் சிம்மாசனத்தில் தாவியேறி அமர்ந்து கொண்டது. எஞ்சியிருந்த ஆசனங்களில் மற்றெல்லாம் தாவியேறி அமர்ந்து கொள்ள, ஒவ்வொன்றும் அமரஅமர ஆசனங்கள் தோன்றிப்பெருகின. தொடர்ந்து வாலாட்டிகப்பேய்கள்; அடங்காமுனிகள்; பிரமராட்சதர் என அணி வகுத்து வெளியேறிப் பரிவாரங்களாகத் தாவியேறி அமர்ந்துகொண்டன. பிணந்தின்னுஞ் சாத்திரங்கள் என்றாகி எதெல்லாம் நிகழவேண்டுமோ அதெல்லாம் நிகழாமல், எதெல்லாம் நிகழக்கூடாதோ அதெல்லாம் நிகழும் அகாலந்தொடங்கியது.
சின்னத்தம்பியானவன் குடுவையைத் திறப்பதற்குத் தயாரானபோது, ‘சின்னத் தம்பியின் விளையாட்டுக்களால் சுண்டெலிகளின் உயிர்போகாமல் இருள் விலகாது! திசைகள் வெளிக்காது! பூட்டிய விலங்குகள் தெறிக்காது! ஆதலால் சுண்டெலிகளின் உயிரிழப்பே இருள் விலக்கும்! அதிலிருந்து திசைகள் வெளிக்கும்! பூட்டியிருந்த விலங்குகள் தெறிக்கும்! இதுவே வரலாறு சொல்லும் பாடம்!’ என எதிரொலிக்கலானான். ‘அந்தக்குடுவை மாயமும் மந்திரமும் அபாயமும் மிகுந்ததென்றும் அதைத் திறப்பது சகலருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்குமென்றும் நன்கு தெரிந்திருந்துமா அதைத் திறக்கப்போகிறாய்?’ எனச் சின்னத்தம்பியுடன் நாளும்பொழுதும் உடனிருப்போர் சிலர் அவனிடங் கேட்க, ‘திறக்கத்தெரிந்த எனக்கு இறுக மூடத்தெரியாதா?’ எனப் பெருமிதத்தோடு திருப்பிக்கேட்டான். பின்னர் அவர்களிடமிருந்து எந்தக்கேள்வியும் எழவில்லை. தொடர்ந்து நிகழ்ந்ததனைத்தையுமே கண்ணீராரக் கண்டோம். செவிகனலக் கேட்டோம். சின்னத்தம்பி பெரும் ஆபத்தின் விளிம்பில் நின்றபோது குடுவை யின் மூடி தொலைந்துவிட்டது. இதுதான் நடந்த கதைச்சுருக்கம்.
‘இப்போதும் நிகழத்தகாதவைதான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சந்திரன் என்றார். முழுமதி என்றார். அம்புலிமாமா என்றார். அமுதைப்பொழியும் நிலவு என்றார். முழுவதும் கற்பனை. வெறும்மாயை. சிலர் தாங்கள் நிலைத்திருப் பதற்காகச் சிறுவனை மகிழ்விக்க அந்தச் சின்னத்தம்பியைக் குதூகலப்படுத்த ஊதிப்பெருப்பித்த மாயத்தோற்றமேயன்றி வேறில்லை. சூரியன் என்கிறார். ஆதவன் என்கிறார். ஏறுவெயில் என்கிறார். எழில்ஞாயிறு என்கிறார். சந்திரனை விலக்கிய மங்காத பேரொளி என்கிறார். இதுவும் முழுக்கற்பனைதான். வெறும் மாயத்தோற்றந்தான். எல்லாப்பக்கமும் சிறுவர் இருப்பதால் அவர்களை மகிழ்விக்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.’
“ஒரு நாளிரவில் ஆகக் குறைந்தது ஒரு கணமேனும் நிலவொளிபட்டவர் உட்பட நிமிடக்கணக்கில், மணிக்கணக்கில், நாட்கணக்கில் என நிலவொளிபட்ட அனைவரும் எங்களிடம் வாருங்கள். உங்களை வெயிலில் உலர்த்தித் தொற்று நீக்கி மறுவாழ்வளித்து மருத்துவமுகாமில் வைத்து இளைப்பாறுதலளித்து விடுவிப்போம். இதைப் புறக்கணித்துத் தப்பிச்செல்ல எத்தனிப்பதோ தப்பித்துச் செல்வதோ தொற்றுநோய் பரப்பிய குற்றமாகும். அவ்விதம் தப்பித்துச்செல்ல எத்தனித்தோ, தப்பித்துச் சென்றோ அகப்பட்டுக்கொண்டால் உங்களை மிக ஆபத்தான நோய்க்காவிகள் என அடையாளப்படுத்தி வெளியே தலைகாட்ட முடியாதவாறு தனிமைப்படுத்தி வைத்துவிடநேரும்’ என ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், ஆண்கள் எனப் பலரும் வரிசையில் ஒலிபரப்பியவர் முன்னிலையில் நம்பிக்கையோடும், நேர்மையோடும், பயத் தோடும் வந்திருந்தனர். மேலும், அநேகர் தாய்மார், தந்தைமார், மனைவிமாரால் ஒலிபரப்பியவர் முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டு நோய்த்தொற்றுநீக்கல் என்பதை வேதவாக்காகக் கருதிக் கையளிக்கப்பட்டிருக்கிறார்கள். வாக்களித்த படியே இங்கே முன்னிலைக்கு வந்தோரையும், கையளிக்கப்பட்டிருப்போரையும் வெயிலில் உலர்த்தித் தொற்றுநீக்கி மறுவாழ்வளித்து மருத்துவமுகாமில் வைத்து இளைப்பாறுதலளித்து விடுவிப்பார்கள் என முழுமையாக நம்பலாமா? ஏனெனில், நிகழத்தகாதவைகளே நிகழத்தொடங்கியுள்ளன. சிலநாள்கள் கழித்து, ‘வெயிலில் உலர்த்தித் தொற்றுநீக்கி மறுவாழ்வளித்து மருத்துவமுகாமில் வைத்து இளைப்பாறுதலளித்து விடுவிக்கவென உங்களிடம் கையளிக்கப்பட்ட வர்கள் எங்கே?’ எனக் கேட்டால் மௌனம் நிலவலாம். மேலும் வற்புறுத்திக்கேட்டால், ‘இப்போது இப்போது தொற்றுநீக்கும் செயல்முறையில் எவருமில்லை. எல்லோரையும் உடனடியாகத் தொற்று நீக்கி, இளைப்பாறுத லளித்து வெளியனுப்பிவிட்டோம்’ என்றும், ‘தொற்றுக்குள்ளானோரைப்பற்றிப் பேச்செடுக்கவேண்டாம். அவர்களை மறந்துவிடுங்கள்’ என்றும், ‘தொற்றுக்குள் ளானவர்களை மண்ணறைகளைத் தோண்டித்தான் தேடவேண்டும்’ என்றும், ‘தொற்றுக்குள்ளானோர் அனைவரும் உயிரோடிருக்கச் சாத்தியமில்லை’ என்றும் விதவிதமாக எழுமென்பதை மறுதலிக்கப்போகிறீர்களா?”
“சந்திரனை நீக்கியதால் சந்திரகிரகணமும் இனியில்லையாம். அம்புலி மாமாவை ஏற்றியும் போற்றியும் துதித்தும் வாயாரப் பாடிவந்தோர் இன்றெல் லாம் கட்டளைப்படி சூரியனை ஏற்றியும் போற்றியும் துதித்தும் வாயாரப் பாடுதலை நகைப்போடும் நெஞ்சோரம் வேதனையோடும் செவியாரக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சந்திரனின் திடீர்மறைவுச் செய்தி மெய்யோ? பொய்யோ? தெரிந்திருப்பார் யாருமில்லை. ஆனால் இருள் கவிந்ததுமட்டும் முழுமெய். அவ்விருள் கவிந்து விழுந்த திரைக்குப் பின்னால் உயிர்களின் விலையோ பூச்சியமாகிறது. அகாலமரணங்கள் மலிந்தும் அவலச்சாவுகள் மிகுந்தும் தலைகள் துண்டாகி மரங்களில் தோரணமாய்த் தொங்கவும் முண்டங்கள் பெருகிக் குவிகின்றன. நிணமும் கொழுப்பும் நாசியை நிறைக்க அழுகிய பிணங்களைக் காகங்கள் கொத்தி விழுங்குகின்றன. முலைகள் அறுந்து தெறித்துவிழ நாய்களும் நரிகளும் கௌவிச்சென்று சப்புகின்றன. யோனிகள் கருகித் தீய்ந்து மணக்க பிரமராட்சதர் புசித்த பெண்ணுடல் வரிசை நீள்கிறது. புறக்கடைமுனிகள் சப்பித்துப்பிய பிள்ளைகளின் உடலங்களும் எலும்புகளும் குவிகின்றன. ஆறெனக் குருதி பெருக்கெடுத்தோடும் சலசலப்பை செவிகள் தகிக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இருளின் போர்வைக்குள் நிகழத்தகாத தென நிகழும் இதெல்லாம் குற்றமில்லை. இதற்கெல்லாம் சாட்சியில்லை. மாட்சியில்லை. நேரடிக்காட்சியில்லை. ஏனென்றவொரு கேள்வியில்லை. எல்லாம் பேய்கள் நிகழ்த்தும் வேள்வி. யாருக்கும் கருணையில்லை. யாவும் அம்புலிமாமா எனும் சின்னத்தம்பியின் சிறுபிள்ளை விளையாட்டால் விளைந் தவை என்பதை மறுதலிக்கப்போகிறீர்களா? குற்றம் சொல்ல நாமேன் மற்ற வரைத் தேடவேண்டும்? நிலவொளிபட்டுத் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெளிச்சத்தைநோக்கி வந்துகொண்டிருந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் சகலரையும் மேலாடை கீழாடையெல்லாம் களைந்து அம்மணமாய்ச் சாவடியைக் கடந்துசெல்லக் கட்டளையிட்டு நடைமுறைப் படுத்தி நின்று பார்த்து ரசித்ததை நீங்கள் ஒருதடவையாவது கேட்டு நாணித் தலைகுனிந்ததில்லையா?”
“தொடர்ந்து நிகழப்போகும் நிகழத்தகாதவையைச் செவிமடுப்பீர்! இனிப் பிணந்தின்னுஞ் சாத்திரங்கள். சந்திரகுலச் சித்திரமாதர் அல்குல் கிழிந்து குருதி பெருகும். பிரமராட்சதர் புசித்த பெண்ணுடல் வரிசை நீள்வதும், யோனிகளில் காலணிகொண்ட பாதங்கள் ஓங்கியோங்கி மிதிப்பதும் தொடர்கதையாகும். வழுக்கிச்செல்லும் கரும்பூதங்கள் தோன்றிப் பல்கிப்பெருகும். அவை போகிற போக்கில் எதிர்ப்படும் நங்கையர் முலைகளைக் கீறக் குருதி வழியும். மாரி, கோடை என்றில்லாமல் எப்போதும் அடைமழை பொழியும். ஈரஉடைகளுடன் தான் படுத்துறங்கநேரும். கொடுக்கன்; பிள்ளைத்தேள்; மட்டைத்தேள்; திருநீலகண்டம்; புலிமுகச்சிலந்தி; புடையன்குட்டிகள் என அணிவகுப்பு நிகழும். இருப்பிடத்திலிருந்து வெளிச்செல்லும்போது குடை தேவைப்படும். மாமன்னன் மந்திரியாகலாம். செயலாற்றிய தளபதி மாமன்னனாகலாம். வரலாற்றுச்சிறப்பு மிக்க தொன்மவழிபாட்டுத்தலத்தில் முடிசூட்டிக்கொண்டு சூரியகுலத்தவர் கையால் குறுக்கறுத்து உயர்த்திவிட்டதாலேயே மாமன்னனானவன் என்பதால், சூரியகுலததவருக்கு மட்டும் நான் மாமன்னன் எனப் பிரகடனம் செய்யலாம். இனி நாய்களை வணங்குவோம். பேய்களை வணங்குவோம். நரிகளை வணங்கு வோம். மாமன்னனின் நிழலில் கள்ளரும், காடரும், பகற்கொள்ளையரும் தோன்றிப் பல்கிப்பெருகுவர். எங்கும் திரவியங்கள் கொள்ளைபோகும். எங்கெங்கும் கொள்ளை! எங்கெங்கும் திருட்டு! இவைமட்டுமா? கள்ளருங் காடரும் காவலராவர். பாற்குடங்களைப் பூனைகள்தான் காவல்காக்கும். வேலிகள் நகர்ந்து உட்பயிர் மேயும். எங்கெங்கும் திருட்டு! திசையெல்லாங்கொள்ளை! அனைத்தும் மாமன்னனின் நிழலில் தோன்றிப் பல்கிப்பெருகியவைதான். அறியவரும்போது நிகழ்வதெல்லாம் நகைப்பாகவும் திகைப்பாக வுமிருக்கும். தொடர்ந்துசெல்கையில் போதை கபாலமேறித் தேசந்தலைகீழாகிச் சுழலும். ஒரு சிறுவிளக்கெரிக்கவும் வழியின்றி இராப் பகலாய் வரிசையில் நின்று வருந்துவோம். மரணிக்கவும் நேரும். இன்றுதிப்பது மட்டுமல்ல, என்றுதிக்கும் சூரியன் படர்த்தும் வெயிலால் நயமேதுங்கிட்டாது. இந்த வெயில் நம் மேலாடை உள்ளாடை மனங்குடிக்கும். ஈரமுலர்த்தாது. இந்த வெயில் இருளகற்றாது. இந்த வெயில் நங்குருதியைப் பெருக்கும். வியர்த்து வியர்த்துக் குருதிவழியும். இந்த வெயில் நங்கண்ணீரை உகுக்கும். உறிஞ்சவே உறிஞ்சாது. இந்த வெயில் நம்முடல்களைக் கருக்கும். இந்த வெயில் மூத்திரம் முட்டும். ஒருநாள் சட்டென்று வானிலை மாறும். இந்த வெயிலை உறைய வைக்கும் பனிமழைக்காலம் மெல்லத்தொடங்கி தென்திசையில் மூசிப் பெய்யும். தொடர்ந்துவரும் நாளில் பனிபடர்ந்து மூடி எவராலும் அகற்ற முடியாத, என்றென்றும் வானத்தில் நிலைத்திருக்கும் சூரியன் என்ற மாபெருங் கற்பனைக்கோட்டை தகர்ந்துவிழும். மாயை கலையும் மாயத்திரை விலகும். செயலாற்றுந்தளபதியை மாமன்னனாக்கிய சூரியகுலத்தின் கைகளே அவனைச் சிம்மா சனத்திலிருந்து சரித்துக் கவிழ்த்து வீழ்த்தும். மாமன்னன் அடர்ந்துமூடி உறையும் பனிக்கு அஞ்சிநடுங்கி, அரண்மனையின் பின்வாசல்வழியே தப்பித்து ஓடித் தேசங்கடந்துபோய் ஒளிந்துகொள்வான். இதுவரை நான்குகால் யானையில் தேசத்தின் மாமன்னனாகும் நெடுநாள் கனவோடு அலைந்துதிரிந்து சலித்து, யானையின் மூன்றுகால்களையுமிழந்து ஒற்றைக்காலோடு சரிந்து விழும் நிலைக்கு வந்திருந்த நரித்தலையானைப்பாகன் சிம்மாசனத்திற்குத் தாவியமர்ந்து மாமன்னனாவான். இவ்வாறாக நிகழத்தகாத அதிசயங்களெல் லாம் நிகழக்கூடும். ம்….! இந்தளவில் இவ்விடத்தை விட்டகல்வதுதான் சகலருக்கும் நன்மைபயக்கும்” எனக்கூறிக்கொண்டே இதுவரை பூடகமாகக் கதை போட்டுக்கொண்டிருந்தவர் சடுதியாக எழுந்து பீடத்தைவிட்டிறங்கி மேற்குநோக்கிச் செல்லத்தொடங்கினார். கதைகேட்டுக்கொண்டிருந்தவர்களும் ஒவ்வொருவராக எழுந்துகொண்டனர். எதிர்த்திசையிலுள்ள மண்சாலையில் தீவிபத்து நிகழுமிடத்தில் அடர்ந்து எழும் புகைபோலச் செம்புழுதி கிளம்பு வதைக் கண்ட சிலர், ‘காவற்படையின் தேரணிவகுப்புத் தொடங்கிவிட்டது. எங்களை நெருங்கினால் ஏதும் விபரீதம் நேரலாம். அவர்களது சந்தேகத்திற் கிடமளிக்காமல் இங்கிருந்து விலகி மெல்லக் கலைந்துசெல்லுங்கள்’ எனக் கத்தினார்.
அவன் பதற்றமடையாமல் நிதானமாக எழுந்து நின்றான். அதிகாலையில் எழுந்து புறப்பட்ட இருவரையும் பின்தொடர்ந்து புறப்படுகையில் கைவசமிருந்த நான்கைந்து சூரியக்கொடிகளைச் சுருட்டி மறைத்து எடுத்து வந்திருந்தான். இப்போது அந்தக்கொடிகளை விரித்து இருகைகளிலும் பிடித்தவாறு அங்கிருந்து கணிசமானோர் நகர்ந்துகொண்டிருந்த கீழ்த்திசையில் நடக்கலானான். அவனைப் பார்த்தவுடன் சிலர் ஒதுங்கிநிற்க, மற்றும்பலர் அவனது நடைவழி யிலிருந்து விலகி நடந்தனர். சூரியக் கொடிகள் படபடக்கும் தேரணிவகுப்பு அவர்களை நெருங்கிவந்துகொண்டிருக்க, அவனைத்தவிர மற்றெல்லோரும் பதகளித்துச் செய்வதறியாது திகைப்பிலாழ்ந்தபடியே நடைபோடுவதில் தாமத மாகினர். அவன் சூரியக்கொடிகளைக் கைவசம் வைத்திருந்ததற்காகத் தன்னைத்தானே மெச்சியபடி இன்னும் விரைந்துசெல்லலானான். தேரணிவகுப்பில் சென்றுகொண்டிருந்த காவற்படையினர் அவனைக்கண்டு கைகளை அசைத்தனர். அவனும் பதிலுக்குச் சூரியக்கொடிகளை இடமிருந்து வலமாக உயர்த்தி அசைத்தபடியே ஓடிச்செல்லலானான். இவ்வாறாக முந்நூற டிகள் ஓடியபின்னர் நகரத்தின் வெளியேறும் வாசலைச் சென்றடைந்தான். அங்கே வெளிச்செல்வோரைக் காவலர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தி உடைமைகளை அக்குவேறு ஆணிவேறாகச் சோதித்துக்கொண்டிருந் தனர். அவனைப் பார்த்ததும் சோதனைக்குட்படுத்திக்கொண்டிருந்தவர்களை விலகி நிற்குமாறு சைகை செய்த காவலர்கள் வெளியேறிச்செல்ல அனுமதித்தனர். சூரியக்கொடிகளை இடம் வலமாக அசைத் தபடி நகரத்தைவிட்டு வெளியேறி யவன் நிம்மதிப்பெருமூச்செறிந்தான்.
9
சவமாகக் கிடந்தவனின் வழிகாட்டலில் பேராலயத்தினுள் நுழைந்திருந்த மூவரும் நகரத்தினுள் வந்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் உளவாளிகள் தொடர்பில் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க எச்சரிக்கை அறிவித்தலைக்கேட்டு ஒருகணம் பெரும்பீதிக்குள்ளாகிச் செய்வதறியாது திகைத்துநின்றனர். அப்போ தும் சவமாகக் கிடந்தவன் பயமடையவில்லை.
‘ஒன்றும் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. இயல்பாக இருங்கள். மற்றவர் கள் சந்தேகத்திற்கிட மளிக்கும்விதத்தில் நடந்துகொண்டு உங்களை நீங்களே காட்டிக்கொடுத்துவிடாதீர்கள். குனிந்த தலை நிமிராமல் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்.’ எனக் கிசுகிசுத்துவிட்டு முன்னேறிச் செல்லலானான். அவன் நான்காமாளாகச் சவஊர்வலத்தை வழிநடத்திச்செல்ல முன்வந்ததி லிருந்து மற்றைய மூவரும் அவனது சொற்படியே பின்தொடர்வதைத்தவிர வேறுவழியேதுமிருக்கவில்லை. இப்போதும் அதுதான் நிகழ்ந்தது. முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தவன் நெருக்கடிகுறைந்த சந்தொன்றினுள் நுழைய, மூவரும் பின்தொடர்ந்து போயினர். முடிவில் ஒரு குறுகலான புற்றரையில் சூரியத்தலைக்கவசமணிந்து பனையோலை விசிறிகளைக் கையிலேந்திய நிலையில் வட்டமாகக் குந்தியமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஐந்து மீசையற்ற மல்லர்களை நால்வரும் கண்டனர். வழமைபோல் இப்போதும் தயங்கிநின்றுகொண்டிருக்க, அவன்தான் அந்த ஐவரிடமும் நெருங்கிச்சென்று பேசலானான்.
‘தேசநலனுக்காக அயராதுழைப்போரே! சிரந்தாழ்ந்த வணக்கம்! உங்களுக்கு எந்தவகையிலாவது எங்களால் உதவமுடிந்தால் மனநிறைவாக இருக்கும்’ அவனது முந்திரிக்கொட்டைத்தனமான நடவடிக்கையால் அதிர்ந்துபோன மூவரும், ‘வடிகட்டிய முட்டாள்! வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கு கிறானே!’ எனத் தமக்குள் குசுகுசுத்தனர். அந்த ஐவரும் அவனையும் ஒதுங்கி நிற்கும் மூவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, அவர்களுள் சற்றே பருமனா னவன், ‘யார் நீ? உன்னுடன் வந்திருக்கும் இந்த மூன்றுபேரும் யார்? நீங்கள்தான் சவஊர்வலம் என்ற பேரில் நகரத்தினுள் நுழைந்திருக்கும் உளவாளிகளா?’ எனச் சினந்துகொண்டே கேட்டான்.
‘தொலைந்தோமடா! இந்த வடிகட்டிய முட்டாள் அவசியமேதுமின்றி வலிந்து போய் எங்களை ஆபத்தில் மாட்டிவிட்டானே!’ எனத் தமக்குள் பேசிப் பதகளிப் பிற்குள்ளாயினர். ஆனால் அவனோ எவ்விதப் பதற்றமுமின்றிக் குபீரிட்டுச் சிரித்துவிட்டு, ‘தேசப்பற்றுள்ள என் உடன்பிறவாச் சகோதரர்களே! உங்களது சந்தேகம் நியாயமானதுதான். உங்கள் நிலையில் நானிருந்தாலும் இதே கேள்வி யைத்தான் கேட்டிருப்பேன். கோபப்படவேண்டாம். நீங்கள் எங்களைச் சந்தேகிப் பதைப்போல நாங்களும் உங்களைச் சந்தேகிக்கலாமல்லவா?’ எனக் கேட்டான்.
‘எப்படிச் சந்தேகிக்கலாம்?’ அந்த ஐவரில் குள்ளமாகவிருந்தவன் கேட்டான்.
‘நீங்கள் ஐந்துபேரிருக்கிறீர்கள். சவஊர்வலம் என்றபேரில் நான்குபேர் உளவாளி களாக நகரத்தினுள் நுழைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.’
‘அதுக்கு..?’ அதே குள்ளன் இடைமறித்தான்.
‘அது ஒரு மெய்யான சவஊர்வலமாக இருக்கச் சாத்தியமில்லை. அதனால் அவ்வூர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சவமும் மெய்யானதாகவிருக்க முடியாதல் லவா?’ அவன் சொல்லிமுடிக்குமுன்பே அவனையும் உடன்வந்த மூவரையும் உளவாளிகளெனச் சந்தேகப்பட்டுக் கேள்வியெழுப்பியிருந்த பருமனானவன் குறுக்கிட்டான்.
‘அட…! இது எங்களுக்குத் தோன்றவில்லையே! அப்படியென்றால்…?’
அவன் தொடர்ந்தான், ‘நீங்கள் ஊகிப்பது சரிதான் சகோதரரே! சவமாக எடுத்து வரப்பட்டவரும் உயிருள்ளவர்தான். ஆகவே, சவஊர்வலமென்ற பேரில் ஐந்து பேர் உளவாளிகளாக நகரத்தினுள் நுழைந்திருக்கும் நிலையில் இப்போது நீங்கள் ஐந்துபேரிருக்கிறீர்கள். உங்களையும் நாங்கள் சந்தேகங்கொள்ள இடமிருக்கிறதல்லவா?’
அவன் சொன்னதைக் கேட்டதும் அந்த ஐவரின் முகங்களிலும் ஒருங்கே திகைப்புப் படர்ந்தது. ஒதுங்கி நின்றுகொண்டிருந்த மூவரும் அவனது புத்தி சாதுரியம்மிக்க தந்திரமான பேச்சினை வியந்து நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர்.
‘நாங்கள் ஒருவர்மீதொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய நேரமிது வல்ல. இது எல்லோரு மிணைந்து தேசநலனுக்காகப் பாடுபட்டுழைக்க வேண்டிய தருணம். அதற்காகத்தான் நாங்கள் நால்வரும் உங்களுடன் ஒன்றி ணைய இங்கே வந்துள்ளோம்’ என ஒரு தேர்ந்த நடிகனைப்போல் கைகளை அகலவிரித்துக்கொண்டே கூறிமுடித்தான். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஐவரும் மேலுங்கீழுமாகத் தலைகளையாட்டித் தமக்குள் சற்றுநேரம் தீவிரமாக விவாதித்துக்கொண்டபின் அவர்களில் பருமனானவன், ‘நீ சொல்வதெல்லாம் சரிதான். உங்கள் நால்வரையும் எங்களுடன் இணைத்துக்கொள்கிறோம். முதற் கட்டமாக நான்கு உண்டியல்களை உங்களிடம் தருகிறோம். நாளையதினத்தில் அந்திப்பொழுதில் மேற்சதுக்கத்திற்கு எங்களுடன் வாருங்கள். அங்கே நமது மாமன்னர் பகிரங்க அறிவித்தலை வெளியிடுவார். அதுமுடிந்ததும் வெற்றி விழாக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகும். நீங்கள் நால்வரும் நாங்கள் காட்டும் திசைகளில் பிரிந்துசென்று வீதிகளில் எதிர்ப்படுவோர், வீடுகளில் முடங்கியிருப்போர் எனச் சகலரிடத்தும் இந்த உண்டியல்களில் வெற்றிவிழாக்கொண்டாட்டததிற்கான நிதியைச் சேகரித்துக்கொண்டு வர வேண்டும். நீங்கள் திரும்பும்வரை நாங்கள் அங்கேயே காத்துக்கொண்டி ருப்போம். நிதி தரமறுப்போருக்கும், தயக்கங்காட்டுவோருக்கும் வன்முறை யைக் கையாளத் தயங்கவேண்டாம்.’ எனத் தவளை நுணலுவதைப் போலச் சொல்லிமுடித்து உண்டியல்களைக் கைமாற்றினான். அதனைத்தொடர்ந்து நால்வருக்கும் தாமரைஇலைகளில் வெண்தளிசைகளும், மதுபானங்களும் பரிமாறப்பட்டன.
10
உண்டியல்கள் கைமாறிய தருணம் சவமாகக் கிடந்தவனை மற்றைய மூவரும், ‘இதென்ன சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகப் பிறிதொரு வில்லங்கத்தில் மாட்டிவிட்டாயே?’ எனச் சினந்துகொள்ள, ‘இந்த உண்டியல்கள் தான் தங்குதடையேதுமின்றி நகரத்தைவிட்டு வெளியேற எங்களுக்கு உதவப் போகும் அனுமதிச்சீட்டுகள். நடப்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்’ என அவன் சொன்னான். அதன்படியே எல்லாம் படிப்படியாக இனிதே நிறைவேறின. சவஊர்வலத்தை வழிநடத்தி வந்தவன் சூரியக்கொடிகளை அசைத்துக்கொண்டு நகரத்தைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே அவர்கள் நால்வரும் காணிக்கை உண்டியல்களைக் குலுக்கிக்கொண்டே வெளியேறிவந்து ஆளை யாள் பார்த்துச் சிரித்துக்கொண்டே நெட்டுயிர்த்தனர். சவஊர்வலத்தை வழிநடத்திவந்தவன் நகரத்தைவிட்டு வெளியேறிச் சிறிதுதூரங்கடந்தபின்னர் சூரியக்கொடிகளைச் சுருட்டி மறைத்துக்கொண்டு நடக்க, அவனை இனங்காண முடியாதிருந்த அந்நால்வரும் அவனுக்கு முன்பாக வந்துநின்று காணிக்கை உண்டியல்களைக் குலுக்கி, ‘வெற்றிவிழாக் கொண்டாட்டத்திற்குத் தங்களாலி யன்ற காணிக்கையை இடுக!’ எனக் கூறிப் புன்னகைத்தனர். அவர்களை நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஒருபுறம் திகைப்பாகவும், மறுபுறம் நகைப்பாகவுமிருந்தது. அவன் சுருட்டி மறைத்து வைத்திருந்த சூரியக்கொடிகளை வெளியே எடுத்து விரித்து மேலுங்கீழுமசைக்க, ‘ஓ! மன்னிக்கவும்’ எனச் சொல்லி விலகி நின்றனர். அவ்வேளை நால்வரைக்கொண்ட சவஊர்வலமொன்று நகரநுழை வாயிலைநோக்கி வந்துகொண்டிருந்தது.
சவஊர்வலம் அவனை நெருங்கியதும், ‘மெய்யான சவத்துடன் செல்லுங்கள்!’ எனக் கத்தினான். சவஊர்வலம் போனோர் ஒருகணம் திகைத்துநின்று அவனைப் பார்க்க, காணிக்கை உண்டியல்களை ஏந்திநின்ற நால்வரும் கெக்கட்டமிட்டுச் சிரிக்கலாயினர்.
—–
இராகவன்
இராகவன் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன புனைவில் வடிவங்கள், உள்ளடக்கங்கள் சார்ந்து வெவ்வேறு பகுப்புக்களைச் செய்பவர். ‘கலாவல்லி முதலான கதைகள்’ , ‘விட்டில்–சமகால அரசியல் பகுப்பாய்வு’ என்ற சிறுகதை தொகுப்புகளின் ஆசிரியர்.