/

தஸ்தாயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலை முன்வைத்து சில சிந்தனைகள்: ஹெர்மன் ஹெஸ்ஸே

தமிழில்: ஜனார்த்தனன் இளங்கோ

தஸ்தாயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலின் நாயகன் இளவரசன் மிஷ்கின் பொதுவாக ஏசுவுடன் ஒப்பிடப்படுவதுண்டு. அது எளிதாக செய்யக்கூடிய ஒன்று. ஏசுவின் வசீகரமான உண்மையால் தொடப்பட்ட எவரையும் அவருடன் ஒப்பிடலாம். சிந்தனையும் வாழ்வும் ஒன்றிணைந்தமையால் அத்தகைய ஒருவர் தன்னை சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் எதிர்க்கிறார். அதைத்தாண்டி ஏசு-மிஷ்கின் ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் மிஷ்கினின் ஒரு முக்கியமான பண்பான கூச்சத்தோடு கூடிய சுயக்கட்டுப்பாடு ஏசுவை நினைவுறுத்துவது. ஏசுவின் இந்த குணநலனான பாலியல் வேட்கை மற்றும் இல்லறம் பற்றிய பயம் புராணம் தொட்டு ரெணனின் கிறிஸ்து உருவாக்கம் வரை தொடர்ந்து வருவதைக் காணலாம்.

தொடர்ச்சியாக இவ்விருவரும் ஒப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லையெனினும், எனக்கும் இவ்விருவரின் படிமங்களும் தற்செயலாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக தோன்றுகிறது. இதை மிகத்தாமதமாக ஒரு சிறிய விஷயத்தை யோசிக்கும்போது உணர்ந்தேன். ஒரு நாள் ‘இடியட்’ பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் போது நான் உணர்ந்தது, மிஷ்கினைப் பற்றி யோசிக்கையில் எனக்குத் தோன்றும் முதல் விஷயம் முக்கியமற்ற ஒன்றாகவே இருப்பது. மிஷ்கின் குறித்து என் மனதில் முதலில் விரியும் காட்சி, தன்னளவில் எந்த முக்கியத்துவமும் அற்ற ஒன்றாகவே எப்போதும் இருக்கும். மீட்பரைப் பொறுத்தவரையிலும் அதே போன்ற அனுபவமே. யேசுகிறிஸ்துவின் பெயரை பார்க்கவோ கேட்கவோ செய்யும் போது என் மனதில் முதலில் தோன்றுவது சிலுவையில் இருக்கும் யேசுவோ, கானகத்தில் இருக்கும் யேசுவோ, புனிதரோ, உயிர்த்தெழுந்தவரோ அல்ல. மாறாக நான் காண்பது ஜெருசலேம் தோட்டத்தில் தனிமையை கடைசி கோப்பையை பருகியபடி, இறப்பினாலும், மேலான மறுபிறப்பினாலும் தன் ஆன்மா அல்லலுறும் இயேசுவை. அந்த கைவிடப்பட்ட தனிமையில் குழந்தையைப் போன்ற அரவணைப்பும் தொடுகையும் நட்பும் வேண்டி தன் சீடர்களை எதிர்நோக்கையில் அவர்கள் அனைவரும் உறங்குகிறார்கள்! மதிப்புமிக்க பீட்டர், அழகிய ஜான் உட்பட அனைவரும்! இவர்கள் எல்லோரும் தன்  சிந்தனைகளையும் யோசனைகளையும்  புரிந்துகொள்ள வாய்ப்பிருப்பது போல, அவர்களில் ஒரு எழுச்சியை உண்டாக்க இயலும் என்று தன்னை ஏமாற்றிக்கொண்டு இயேசு முழு அன்போடு அவற்றயெல்லாம் பகிர்ந்துகொண்டார். இதோ இப்போது இந்த தாங்கவியலாத துயரத்தில், முற்றிலும் மனிதனாக மாறி, பாதிக்கப்பட்டவரைப்போல அவர்களிடம் நெருக்கமாகி, அவர்களின் ஒரு சிறு நட்பார்ந்த செய்கையையோ எளிய சொல்லோ எதிர்பார்த்து இருக்கையில் அவர்களோ குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து உறங்குகிறார்கள். இந்த மோசமான தருணம் எப்படியோ என் இளமையில் வந்து குடியேறி, நான் யேசுவைப் பற்றி நினைக்கும்தோறும் என்னுள் எழும்.

இந்நிலை மிஷ்கினுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். மிஷ்கினைப் பற்றி நினைக்கையில் மனதில் எழும் முதல் கணம் இதே போல பெரிதும் முக்கியத்துவம் இல்லாத, அதே சமயம் சோகமான முழுத்தனிமையில் துயரமான ஒரு தருணம். பவளேவ்ஸ் நகரில் லேபிடேவ் வீட்டில், வலிப்பிலிருந்து மிஷ்கின் உடல்நலன் தேறி வரும் வேளையில், ஒருநாள் மாலை எபஞ்சின் குடும்பத்தினர் அவனைப் பார்க்க வருகின்றனர். அப்போது திடீரென ஆரவாரமான அதே சமயம் உள்ளூர பதற்றமான ஒரு கலகக்கார கூட்டம் –  மிகுதியாக பேசக்கூடிய இப்போலிட், பாவ்லிஷேவின் மகன் என்று கூறிக்கொள்ளும் புரடொவ்ஸ்கி மற்றும் பாக்சர் – வீட்டிற்குள் பிரவேசிக்கிறது. அருவருப்பூட்டும் சஞ்சலமான இந்த காட்சியில் குறைபட்ட தவறாக வழிநடத்தப்பட்ட அவர்கள், தங்களுக்கு கிட்டிய மிகை வெளிச்சத்தை பயன்படுத்திக்கொண்டு தங்களின் கீழமையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தோறும் அது வாசகர்களை இருவேறு வகையில் அல்லல்படுத்துகிறது. ஒன்று அது நல்குணமுடைய மிஷ்கினை காயப்படுத்தும் விதத்தில். மற்றறொன்று அது அவர்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாக வெளிப்படுத்தும் குரூரத் தன்மையால்.

நாவலில் இந்த காட்சி முக்கியமானதோ குறிப்பிடும்படியானதோ இல்லையெனினும், ஒருவகையில் வினோதமான மறக்கமுடியாத ஒன்று. ஒருபுறம் சமூகத்தின் மரபான, பகட்டான, அழகும் வலிமையும் கொண்ட மக்கள். மறுபுறம் மூர்க்கமான, தவிர்க்க முடியாத, மரபுக்கு எதிராக வெறுப்பும் கிளர்ச்சியும் மட்டுமே கொண்ட காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்த்தனமான மக்கள். இடையே இளவரசர் மிஷ்கின் தன்னந்தனிமையில் இருதரப்பினராலும் குற்றவாளியைப்போல பாவிக்கப்பட்டு கேள்விக்குட்படுத்தப்படுகிறார். அதோடு இந்த காட்சியும் எப்படி முடிவுறுகிறது? உணர்ச்சிவசத்தால் செய்யப்பட்ட ஒரு சிறு பிழையைத் தவிர்த்து, மிஷ்கின் முழுக்கவும் பரிவுடனும், குழந்தயைப் போல் மென்மையாக, தாங்க முடியாதவற்றை எல்லாம் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, வெட்கமற்ற பேச்சுக்களை கண்ணியமான முறையில் எதிர்கொண்டு, எல்லாவற்றிலும் தன்னுடைய தவறு ஏதேனும் இருக்குமோ என்ற ஐயத்துடன் குறை தேடியும், இவையெல்லாம்  தோல்வியில் முடிவுற்று, கடைசியில் இருதரப்பினராலும் வெறுக்கப்படுகிறார்!! அவர் அவமதித்துவிட்டதாக எல்லோரும் அவரை நோக்கித் திரும்பிவிடுகின்றனர்! அக்கணம் சமூகத்தில் வயதில் கருத்தியலில் எதிரெதிர் நிலைகளெல்லாம் மறைந்து, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆத்திரத்திலும் வெறுப்பிலும் பரிசுத்தமான ஒருவரை கைவிட்டுவிடுகின்றனர்!

எது இந்த அசடனை அவர்கள் உலகத்தில் சாத்தியமற்றதாகச் செய்கிறது? ஏறக்குறைய எல்லோரும் அவனை ஏதோ ஒரு வகையில் விரும்பினாலும், அவனுடைய மென்மையான குணத்தைக் கண்டு அனுதாபப்பட்டாலும்,  ஏன் அவனை யாரும் புரிந்துகொள்ளவில்லை? மற்ற எளிய மனிதர்களிடமிருந்து எது இந்த மாய மானுடனை வேறுபடுத்துகிறது? ஏன் அவர்கள் அவனை நிராகரிப்பது நியாயாமானது? ஏன் அவர்கள் அப்படிச் செய்வது தவிர்க்க முடியாததாகிறது? ஏன் யேசு கிறிஸ்துவைப் போல் கடைசியில் அவனையும் எல்லோரும் கைவிடுகின்றனர்?

ஏனெனில் அசடனின் சிந்தனை முறை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறது. இதன்மூலம் அவன் சிந்திக்கும் முறை அர்த்தமற்றதாகவோ குழந்தைத்தனமாகவோ இருப்பதாக சொல்லவரவில்லை. மாயவித்தை என்று நான் அந்த சிந்தனை முறையைக் கூறுவேன். இந்த மென்மையான அசடன், மற்றவர்களின் சிந்தனை மற்றும்  உணர்ச்சி வழியை, எதார்த்தத்தை, அவர்களின் உலகத்தை, முற்றிலும் நிராகரிக்கிறான். அவனின் எதார்த்தம் மற்றவர்களை விடச் சற்று வேறுபட்டது. அவனைப்பொறுத்த வரை மற்றவர்களின் எதார்த்தம் நிழல் போன்றது. அவன் வேறொரு எதார்த்தத்தை பார்ப்பதாலும், அதை மற்றவர்களிடம் கோருவதாலும் அவர்களின் விரோதி ஆகிறான்.

இதற்க்குக் காரணம் அதிகாரம், செல்வம் , குடும்பம், சமூக அந்தஸ்து போன்றவற்றை அவர்கள் உயர்வாகக் கருதுவதாலும், அவற்றை அவன் குறைத்து மதிப்பிடுவதாலோ அல்ல. அவர்கள் லௌகீகமான விஷயங்களை பிரதிநிதித்துவ படுத்துவதாலும் அவன் ஆன்மீகமான விஷயங்களை பிரதிநிதித்துவ படுத்துவதாலும் அல்ல. நான் சுட்டிக்காட்ட விரும்புவது அதுவல்ல. அசடனிற்கும் லௌகீகமான உலகம் இருக்கிறது, அதைத் தீவிரமாக அவன் எடுத்துக்கொள்ளவில்லை யெனினும் அதன் முக்கியத்துவத்தை அவன் அங்கீகரிக்கவே செய்கிறான். ஒரு இந்துத் துறவியைப் போல தன்னளவில் ஆன்மீகமான  ஒரு முழுமையை அவன் வேண்டினாலும், அதுதான் எய்தக்கூடிய எதார்த்தம் என்று அவன் பிடிவாதமாக நம்பினாலும்.

இயற்கையும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் தொடர்புகொள்ளும் விதம் பற்றி மிஷ்கின் மற்றவர்களோடு ஒரு புரிதலுக்குச் செல்ல இயலும். மற்றவர்களுக்கு இந்த இரு உலகங்களின் இணக்கத்தன்மை ஒரு கொள்கை அவ்வளவே! ஆனால் மிஷ்கினுக்கோ அவைதாம் வாழ்வும் எதார்த்தமும். இதை மேலும் தெளிவு படுத்த வேறு வார்த்தைகளில் இப்படிச் சொல்கிறேன். மிஷ்கின் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவன், எப்படியென்றால் அவன் ஒரு அசடன், வலிப்பு நோயாளி அதே சமயம் மிகுந்த புத்திசாலியும் கூட. அதனால் மற்றவர்களைக்காட்டிலும் அவனுக்கு ஆழ்மனதோடு நெருங்கிய நேரடி தொடர்பு சாத்தியமாகிறது. அவனுடைய மகத்தான அனுபவம் என்பது அந்த அரை நொடியில் கிடைக்கப்பெறும் ஏற்புத்திறன், அதன்மூலம் அடையும் ஞானம். சில முறை அவனுக்குக் கிட்டிய அந்த அனுபவம் என்பது, அந்த மாய கணத்தில், ஒரு மின்னற்பொழுதில் எல்லாமும் ஆகி, உலகத்தில் உள்ள எல்லாவற்றயும் உணர்ந்து கொள்ளமுடிகிற, அனுதாபம் கொள்ள முடிகிற, புரிந்து ஏற்றுக்கொள்கிற தரிசனமாக இருக்கிறது. அதுவே அவன் இருப்பின் சாரமாக ஆகிறது. அவன் இவற்றை கற்றுத் தெளியவில்லை, படித்து ரசிக்கவில்லை. மாறாக அனுபவமாக – சில அறிய தருணங்களில் தான் எனினும்- அடைகிறான். அந்த அனுபவங்களில் அவனுக்குக் கிடைப்பது வினோதமான பிரம்மாண்டமான சிந்தனைகள் மட்டுமல்ல. அந்த மாயக் கணத்தின் விளிம்பில் எல்லாமே உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள். நடைமுறைக்கு சாத்தியம்மாற்ற ஒன்றும் சரி, அதற்கு நேர் எதிரான ஒன்றும் சரி, அனைத்தும் உண்மையே.

இந்த அச்சமூட்டும் அம்சம் தான் பலமுறை மற்றவர்கள் அவனைக்கண்டு மருளச் செய்கிறது. அவன் முற்றிலும் தன்னந்தனியன் அல்ல,  மொத்த உலகமும் அவனை எதிர்ப்பதில்லை. சில நேரங்களில் அவனை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ளும், சந்தேகத்திற்கிடமான, அச்சமூட்டும் மற்றும் அச்சமடையும் சிலர் உண்டு. ரோகோஸின் மற்றும் நஸ்டாஸியா. மிஷ்கின் என்னும் பரிசுத்தமான மென்மையான பாலகன், குற்றவாளிகளாலும், மூர்க்கமான பித்தர்களாலும் புரிந்துகொள்ளப்படுகிறான்!  இந்த பாலகன் உண்மையில் அவ்வளவு மென்மையானவன் இல்லை!! அவனுடைய அப்பாவித்தனம் ஊறுவிளைவிக்காத ஒன்று இல்லை அதனால்தான் மற்றவர்கள் அவனைக் கண்டு மருள்கின்றனர்.

நான் முன்னரே சொன்னது போல், இந்த அசடன் நெருங்கி நிற்கும் விளிம்பில் ஒவ்வொரு எண்ணமும் அதன் நேர் எதிர் எண்ணமும் சரியென்று அங்கீகரிக்கப்படுவது. அதாவது அவனது உள்ளுணர்வின் படி எந்த எண்ணமும், விதியும், குணநலமும் ஒரு புறத்திலிருந்து பார்க்கப்படுவதால் தான் சரியென்றும் உண்மையென்றும் ஆகிறது, அதே சமயம் அவற்றிற்கு  மறுபுறமும் உண்டு. ஒரு எல்லையில் நிறுவிக்கொள்வதும், அதிலிருந்து அனைத்தையும் பார்த்த்து ஒழுங்குபடுத்திக் கொள்வதும் தான் எல்லா அமைப்புகளின், சமூகங்களின், கலாச்சாரங்களின் முதல் விதி. ஆன்மா-இயற்கை, நன்மை-தீமை ஆகியவை இடமாற்றம் ஆகக்கூடியவை என்று ஒரு கணமேனும் நினைப்பவர் இந்த அனைத்து ஒழுங்கமைவிற்கும் கொடிய விரோதி ஆகிவிடுகிறார். அதன்பின் அங்கிருந்து பெருங்குழப்பம் தொடங்குகிறது.

உணர்வற்ற ஆதி நிலைக்கு, குழப்பத்திற்கு இட்டுச்செல்லும் சிந்தனை முறை ஒட்டுமொத்த மனித கட்டமைப்பையும் அழிக்கிறது. நாவலில் ஓரிடத்தில் ‘மிஷ்கின் உண்மையை மட்டுமே பேசுகிறார், அதைத்தவிர வேறேதும் சொல்வதில், இது ஒரு அருவருப்பூட்டும் செயல்’ என்று ஒருவர் குறிப்பிடுகிறார். அது உண்மையே. அங்கு எல்லாமும் சரியானது, எல்லாவற்றிற்கும் ‘ஆம்’ சொல்லிவிட முடியும். இவ்வுலகத்தை சீராக வைக்க, இலக்குகளை அடைய, சட்டம், சமூகம், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க ‘ஆம்’ உடன்  ‘இல்லை’ என்ற ஒன்றையும் சேர்க்க வேண்டியுள்ளது, உலகிலுள்ளவற்றை எல்லாம் பிரித்து நல்லவை கெட்டவை என்று வகுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு ‘இல்லை’ யும் முதலில் தற்செயலாக தொடர்பற்றதாக தெரிந்தாலும் அது விதிமுறையான உடன் புனிதத்தன்மையை அடைந்துவிடுகிறது. பின் அந்த பார்வைக்கு அடித்தளமாக அது அமைந்து விளைவுகளை உருவாக்கத் தொடங்கிவிடுகிறது.

மனித கலாச்சாரத்தின் பார்வையில் ஆகப்பெரும் நடைமுறை என்பது இவ்வுலகத்தை சரி/தவறு, வெளிச்சம்/இருட்டு என்று வகுப்பதில்தான் இருக்கிறது. ஆனால் மிஷ்கினின் நடைமுறை இந்த உறுதியான விதிமுறைகளை தலைகீழாக்குவதும், அவ்வாறு வகுக்கப்பட்ட இருமைகளுக்கு சரிசமமாக நியாயம் கற்பிப்பதிலும் உள்ளது. அசடனின் சிந்தனை முறை இறுதியில் கொண்டு சேர்க்கும் இடத்தில் ‘தன்னுணர்வற்ற நிலை’ அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரமாகவும், அது கலாச்சாரத்தை வேரோடு அழிப்பதாகவும் இருக்கும். இது விதிமுறைகளை நேரடியாக உடைப்பதில்லை, மாறாக அவற்றை தலைகீழாகக் கவிழ்த்து அதன் பின்பக்கத்தைக் காட்டுகிறது.

இத்தகைய ஒரு ஒழுங்கின்மையின் எதிரி, அச்சமூட்டும் அழிவுசக்தி ஒரு குற்றவாளியாக அன்றி ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தைத்தனமான, அனைவரையும் வசீகரிக்கும், தன்னலமற்ற மனிதநேயமிக்க ஒருவராக சித்தரிக்கப்படுவதில் தான் இந்த பிரம்மிப்பூட்டும் நூலின் ரகசியம் இருக்கிறது. மிக ஆழ்ந்த ஞானத்தின் விளைவாகவே தஸ்தயேவ்ஸ்கி இந்தக் கதாபாத்திரத்தை வலிப்புவாதம் கொண்ட நோயாளியாக உருவாக்கியுள்ளார். புதுமையை, இலக்கற்ற அச்சுறுத்தும் தன்மையை குழப்பத்தை பிரதிநித்துவப்படுத்தும் யாவரும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் நோயாளியாகவும், சந்தேகத்திற்கு உரியவர்களாகவும் பாரஞ்சுமக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். ரோகோஜின், நஸ்டாஸியா மற்றும் நான்கு கரமசோவ் சகோதரர்கள். இவர்கள் அனைவரும் தடம் புரண்டவர்களாவும், வழக்கத்திற்கு மாறாக விந்தையானவர்களாகவும் முன்வைக்கப்படுகின்றனர். இருப்பினும் இந்த தடம் புரண்டவர்களை நாம் ஒருவித பிரம்மிப்பூட்டும் பயபக்தியோடு உணர்ந்து கொள்கிறோம்.

இதில் குறிப்பிடத்தகுந்த விந்தையான விஷயம் ரஷ்யாவில் 1850/60 களில் வலிப்பு நோய்க்கு ஆளான ஒரு மாமேதை தம் புனைவாற்றலால் இக்கதாபாத்திரங்களை உருவாக்கியது அல்ல. மூன்று தசாப்தங்கள் கடந்தும் இந்த நூல்களின் முக்கியத்துவம் நாள்தோறும் பெருகியபடி, ஒரு தீர்க்கதரிசனமாக இளம் தலைமுறை ஐரோப்பியர்களுக்கு இருந்து வருவதுதான். மற்றொரு விந்தை என்னவென்றால் நாம் இந்த அசடர்களையும், மூர்க்கமானவர்களையும், குற்றவாளிகளையும் மற்ற புகழ்பெற்ற நாவல்களில் உள்ள அசடர்களை குற்றவாளிகளைப் போல பார்ப்பதில்லை. இவர்களை நாம் நம்மின் நீட்சியைப் போல பாவித்து அசாதாரணமான முறையில் உணர்ந்து கொள்கிறோம், அன்பு செலுத்துகிறோம்.

இது ஏதோ தற்செயலானது அல்ல. தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கியக் கூறுகள் மற்றும் புறக்காரணிகள் கூட ஓரளவிறகே இதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அவரின் இந்த அம்சம் எவ்வளவு தொந்தரவிற்கு உள்ளாக்கினாலும், நாம் யோசிக்கவேண்டியது அவர் எப்படி ஆழ்மனதின் முற்றிலும் வளர்ச்சி அடைந்த உளவியல் கூறுகளை கணிக்கிறார் என்பதே. நாம் அவருடைய ஆக்கங்களை விதந்தோந்துவது அதன் ஆழமான நுட்பங்களுக்காகவோ, திறன்களுக்காகவோ அல்லது நாமறிந்த உலகத்தை கலப்பூர்வமாக காட்டுவதற்காகவோ அல்ல. மாறாக அதன் தீர்க்க தரிசனத்திற்காக, குறிப்பாக தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் குழப்பங்களையும் அழிவுகளையும் முன்னரே கண்டுணர்ந்தமைக்காக. இந்த புனைவுப் பாத்திரங்கள் ஒரு பூரணமான எதிர்காலத்தைச் சுட்டுவதாக நான் சொல்ல வரவில்லை. மிஷ்கினோ அல்லது பிற கதாபாத்திரங்களோ நகல் செய்யப்படவேண்டிய உதாரண புருஷர்கள் இல்ல. மாறாக இங்கு நாம் உணர்வது ‘மீட்பின் வழி இதுவே’ என்னும் தவிர்க்க முடியாமையை.

எதிர்காலம் நிச்சயமற்றது ஆனால் இதில் காட்டப்படும் பாதை சந்தேகத்திற்கு இடமற்றது. அது தெரிவிப்பது ஆன்மீக மறுமதிப்பீடு. அதன் அறைகூவல் மிஷ்கினின் வழியே சென்று குழப்பத்தை ஏற்கும் மாயா சிந்தனை முறை. நாம் திரும்பிச்செல்ல வேண்டியது ஒத்திசைவற்ற, ஒழுங்கற்ற, விலங்கியல் மற்றும் அதற்க்கும் முந்தைய ஆதி நிலையை. அங்கே இருப்பதற்காகவோ, விலங்கியல் கூறுகளை அடைவதற்காகவோ அல்ல. மாறாக நம்மை புதுப்பித்துக் கொள்ளவும், நம் இருப்பின் வேர்களை அடையவும், மறந்துபோன உள்ளுணர்வுகளையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் மீட்டெடுக்கவும், புதிதாக உருவெடுக்கவும், மதிப்பீடுகளை  கைக்கொள்ளவும், உலகெங்கும் இவற்றை பகிர்ந்தளிக்கவும் வேண்டி. எந்த செயல்முறையும் இந்தப் பாதையைக் கண்டுபிடிக்க நமக்கு உதவாது. எந்தக் கலகமும் இந்த பாதைக்கான கதவுகளைத் திறக்க உதவாது. ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தை தனியே நிகழ்த்த வேண்டும். ஒவ்வொருவரும் கொஞ்ச நேரமேனும் மிஷ்கின் நின்ற -உண்மைகள் முடிந்து புதிதாக ஆரம்பிக்கும்- அந்த விளிம்பில் நின்றாக வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு கணமேனும், மிஷ்கின் அந்த மாய கணத்தின் அனுபவத்திற்கு சென்று மீண்டதைப்போல, தஸ்தயேவ்ஸ்கி நேருக்கு நேர் மரணதண்டனையை எதிர்கொண்டு அதிலிருந்து ஞானியின் கண்களை அடையப்பெற்றதைப் போல ஒரு அனுபவத்தை அடைய வேண்டும்.

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

ஹெர்மன் ஹெஸ்ஸே

ஹெர்மன் ஹெஸ்ஸே, ஜெர்மனியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கவிஞர். அவர் அடசன் நாவலைப்பற்றி எழுதியிருக்கும் இக்குறிப்பில் இளவரசர் மிஷ்கின் கிறிஸ்துவுடன் ஒப்பிடப்படுவதைப்பற்றி விவரிக்கிறார். அத்துடன் மிஷ்கினின் மாயா சிந்தனை முறை பற்றியும், பிற அனைவரிடமிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் தன் நுட்பமான அவதானங்களை முன்வைக்கிறார். அதிலிருந்து நம் ஆன்மீக விடுதலைக்கான வழிமுறையையும் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்துவை புனிதராக்குவதில் உள்ள தந்திரத்தை சுட்டிக்காட்டி அவரை அனார்கிஸ்ட் என்று வரையறுத்து அதன் வழியே மிஷ்கின் மேல் புதிய வாசிப்பை முன்வைக்கிறார்

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.