
இப்புவி அதன் விளிம்புகளிலும் ஆழங்களிலும் நீல நிறம்கொண்டு இருக்கிறது. இந்த நீலமென்பது தொலைந்து போன ஒளி தான். நீல அலைவரிசையில் இருக்கும் ஒளி மட்டும் சூரியனில் இருந்து புவி வரையிலுள்ள மொத்த தொலைவையும் கடந்து விடுவதில்லை. காற்றில் உள்ள நுண்ணிய மூலக்கூறுகளால் அவை அலைவுற்று மறைகிறது. அதுபோல அவை நீராலும் சிதறடிக்கப்படுகிறது. நீருக்கென ப்ரதியோகமாக எந்த வண்ணமும் இல்லை. ஆழமில்லா நீர் அதற்கு அடியில் இருப்பதன் வண்ணத்தையே ஏற்றிருக்கிறது. ஆனால் ஆழமுடைய நீரோ சிதறடிக்கப்பட்ட ஒளியால் நிறைந்திருக்கிறது. ஆழமான நீர் எந்த அளவு தெளிந்திருக்கிறதோ, அந்த அளவு அதன் நீலநிறம் அடர்வு கொள்கிறது. இதே காரணத்தினால் தான் வானமும் நீல வண்ணத்தில் இருக்கிறது. ஆனால் புவியின் விளிம்பு வானத்தில் கரையும் இடத்தில் உருவாகும் நீலம் என்பது ஆழம் மட்டுமல்லாமல், கனவின், துயரின் நீலமும் கூட. கண்ணுக்கெட்டும் வரை புலப்படும் தொலைவின் நீலம் அது. நம்மைத் தீண்டாத அந்த ஒளி, மொத்த தொலைவையும் கடக்காத அந்த ஒளி, தொலைந்தழியும் அந்த ஒளிதான் இப்புவியிற்கு அதற்குண்டான அழகைக் கொடுக்கிறது. இதுபோன்ற எண்ணிலடங்கா விஷயங்களை நீல நிறம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
நீண்டகாலமாகவே நம்மால் காணச் சாத்தியாமான பார்வைப்புல எல்லையில் இருக்கும் எந்தவொன்றின் நீலத்தாலும் பரவசமடைகிறேன். அது அடிவானமோ, மலைத்தொடரோ அல்லது வேறு எதுவோ. இந்த தொலைவின் நிறமென்பது ஒரு உணர்வெழுச்சியின் நிறம். தனிமையின், ஆசையின் நிறம். இங்கிருந்து பார்ப்பதால் அங்குள்ளவற்றிற்கு உண்டாகும் நிறம். அவ்விடத்தில் நாம் இல்லாததால் உருவாகும் நிறம். சென்றடையவே முடியாத நிறம். இந்த நீலம் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் அடிவானத்தின் நிறமில்லை. நமக்கும் அந்த இடத்திற்கும் இடையே நிறைந்திருக்கும் வெளியின் நிறம். கவிஞர் ராபர்ட் ஹாஸ்(Robert Hass) இதை ஒருவகை ஏக்கம் என்கிறார். ஏனெனில் ஆசை என்பது முடிவில்லா தொலைவுகளின் குவியலும் கூட. நாம் சென்றடைய முடியாத தூரங்களுக்கான ஏக்கத்தின் நிறம் நீலமே. சுமார் இரண்டாயிரத்து ஐநூறு அடி உயரமான டமல்பாய்ஸ்(Tamalpais) மலையுச்சியில் ஈரமான வசந்தகால விடியல் காற்று சூழ, காரில் செல்லும்போது ஒரு திருப்பத்தில் திடீரென மொத்த சான் பிரான்சிஸ்கோவும் கனவில் உள்ள ஒரு நகரம் போல, நீல நிறம் கவிந்து வெளித் தெரிகிறது. அதைப் பார்க்கையில் நீலக் கட்டிடங்களும் மலைகளும் சூழ்ந்த அந்த நகரத்தில் வாழவேண்டுமென்ற அழுத்தமான விருப்பம் என்னை வந்து அழுத்துகிறது. நான் அங்குதான் வாழ்கிறேன் என்றாலும், அங்கிருந்துதான் காலையுணவை முடித்துவிட்டு வருகிறேன் என்றாலும், பழுப்புக் காப்பியும், மஞ்சள் முட்டைகளும், பச்சைப் போக்குவரத்து விளக்குகளும் அப்படியான எந்தவொரு ஏக்கத்தையும் என்னிடம் ஏற்படுத்தவில்லை.
பொதுவாக நாம் ஆசையை தீர்க்கவேண்டிய ஒரு பிரச்சனையாகப் பார்க்கிறோம். ஒரு ஆசை தோன்றும் போது, அதன் இயல்பையும் நம்மில் அது உருவாக்கும் உணர்ச்சியையும் கவனிக்காமல், அது எதைக் கோருகிறது என்று கண்டறிந்து அதைப் பெற்றுவிடுவதிலேயே குறியாக இருக்கிறோம். எனினும் நமக்கும் அந்த விருப்பப் பொருளுக்கும் இடையிலான தொலைவுதான் நமக்குளே துயரத்திற்கான ஏக்கத்தை நிரப்புகிறது. எனக்கு சில சமயம் தோன்றுவதுண்டு, நம்முடைய இந்த பார்வையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடிந்தால், ஆசையை அது உருவாக்கும் அனுபவத்திற்காகவே கொண்டாட முடியும். ஏனென்றால் தூரத்திற்கு உருவாகும் நீலத்தைப் போல, ஆசை என்பது மனித இயல்பிலேயே இருக்கும் ஒரு நிலை இல்லையா? ஆசைக்கும் நமக்கும் இடையே உள்ள தொலைவை கடந்துவிட முயலாமல், அதை வெறுமே பார்க்க மட்டும் முடிந்தால், அடைய முடியாத நீலத்தின் அழகைப் போலவே, ஆசை உருவாக்கும் அந்த ஏக்கத்தின் அழகையும் நம்முடையதாக்க இயலும் இல்லையா? இந்தமாதிரியான ஏக்கம் என்பது தொலைவின் துயர்நீலத்தை போலதான்: கைப்பற்றுவதாலே, சென்றுசேர்வதாலோ அதை இடம்மாற்றி வைக்கத்தான் இயலும், தீர்த்துவிட முடியாது. எப்படி நீங்கள் வந்து சேர்ந்தவுடன் மலைகள் அதன் நீலத்தை இழந்து, அடுத்த மலைத்தொடருக்கு அதை நகர்த்தி வைத்துவிடுவதைப் போல. இதில் தான் எங்கோ நகைச்சுவைகளை விட துன்பியல் நாடகங்கள் அழகாக இருப்பதற்கான மர்மமும், குறிப்பிட்ட சில பாடல்களில், கதைகளில் இருக்கும் துயரத்திலிருந்து நாம் பெருமளவில் மகிழ்ச்சியடைவதற்கான மர்மமும் ஒளிந்திருக்கிறதென்று நினைக்கிறேன். சில விஷயங்கள் எப்போதுமே தூரமாகத்தான் இருக்கிறது. மறைஞானியும் தத்துவவாதியுமான சிமோன் வைல்(Simone Wile) வேறொரு கண்டதில் இருந்த தம் நண்பருக்கு இப்படி எழுதினார் : “ நண்பரே, நம்மிருவருக்கும் இடையே முற்றிலும் அன்பால் பின்னப்பட்ட இந்த தொலைவை நாம் நேசிப்போம். ஏனென்றால் ஒருவரை ஒருவர் நேசிக்காது இருப்பவர்கள் இவ்விதம் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதில்லை ” வைலைப் பொறுத்தவரை அவருக்கும் அவர் நண்பருக்கும் இடைப்பட்ட தொலைவை நிரப்பியிருக்கும் வண்ணமயமான வெளி என்பது அன்பு தான். அந்த நண்பர் அவரின் வீட்டு வாசலுக்கே வந்தாலும் எட்டமுடியாத ஏதோவொன்று தொலைதூரத்தில் இருக்கிறது. முன்சென்று வாசலில் நிற்கும் அந்த நண்பரை அரவனைத்துக் கொண்டாலும் புதிரான, அறியமுடியாத, கைப்பற்ற முடியாத ஒன்றைத்தான் அவருடைய கைகள் சுற்றிவளைக்கிறது. மிக அருகாமையில் இருப்பவர்களுக்குள்ளும் தொலைவானது ஏதோவொரு வகையில் கசிந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப் போனால், நம்முடைய சுயத்தின் ஆழமே நமக்கு தெரிந்திருப்பதில்லை.
கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஓவியர்கள் தொலைவின் நீலத்தை வரையத் துவங்கினார்கள். அதற்கு முன்னர் ஐரோப்பிய ஓவியர்கள் தங்கள் கலைப்படைப்புகளில் தொலைவை அவ்வளவாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஓவியங்களில் புனிதர்களுக்கும், புரவலர்களுக்கும் பின்னால் அழுத்தமான தங்கநிறச் சுவரே இருந்தது; சில சமயம் ஓவியத்தின் பிரதான உருவத்திற்கு பின்னால் உள்ள வெளி வளைக்கப்பட்டு புவியே கோள வடிவில் இருப்பது போல வரையப்பட்டிருந்தது. அதன்பிறகு ஓவியர்கள் தத்ரூபமான தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினர். மானுட பார்வைக்கு புலப்படுவது போல அச்சுஅசலான வடிவில் தம்மைச் சுற்றி இருப்பவற்றை வரையத் தலைபட்டனர். கலை சார்ந்த இயல்புவாதப் பார்வைகள் அப்போது தான் வந்து சேர்த் தொடங்கியிருந்தது. அந்த சமயத்தில் தான் நீலத்திற்கும் தொலைவிற்கும் இடையிலான பிணைப்பை உபயோகித்து, அதன் வழியாக ஓவியர்கள் தங்கள் கலைப் படைப்புகளுக்கு புதுவிதமான ஆழமும் , பரிமாணமும் கொடுக்க முனைந்தார்கள். அடிவானத்திற்கு தீட்டப்பட்ட நீலம் என்பது அப்போது பெரும்பாலும் மிகைபடுத்தப்பட்டதாகவே இருந்தது: ஒன்று ரொம்பவும் முன்னால் நீண்டுவந்திருந்தது, அல்லது அதன் வண்ண மாற்றம் துருத்திக்கொண்டு இருந்தது, இல்லையென்றால் அதிகப்படியான நீலமாக இருந்தது. இந்த மிகைப்படுத்தலை அவர்கள் வெகுவாக ரசித்துச் செய்தார்கள் என்றே சொல்லலாம். வானவெளிக்கு கீழே, ஓவியத்தின் பிரதான உருவத்திற்கு மேலே, வானமும் பூமியும் இணையும் அந்த இடைப்பட்ட இடத்தில் சிறியதான ஒரு நீலவண்ண உலகத்தையே வரைந்தனர். நீலநிற ஆடுகள், நீலவண்ண மேய்ப்பாளர், நீல வீடுகள், நீல மலைகள், நீல சாலைகள், நீல வண்டிகள்…

1474-ஆம் ஆண்டு வரைந்த தனது ‘Ginevra de’Benci’ ஓவியத்தில் டாவின்சி, காவி நிற மரங்களால் சூழப்பட்ட வெளிரிப்போன ஒரு பெண்னின் உருவத்திற்கு பின்னால், குறுகலான இடத்தில் வான்வெளியோடு சேர்த்து மரங்களையும் நீல நிறத்தில் வரைந்திருந்தார். அந்த பெண்ணின் உள்ளாடைப்பட்டையும் நீல நிறத்தில் இருக்குமாறு வரைந்திருந்தாலும், பின்னனியில் உள்ள அந்த நீல்வெளிச்சூழல் ஏற்படுத்தும் விளைவையே அவர் பெரிதும் விரும்பினார். கட்டிடங்கள் வரைவதைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்: “கட்டிடங்களை வரையும்போது ஒன்றைவிட மற்றொன்று தொலைவாக இருப்பதாகக் காட்டுவதற்கு அவற்றின் இடைப்பட்ட இடத்தில் உள்ள காற்றை அடர்த்தியானதாக இருக்கும்படி செய்ய வேண்டும். அதனால் முதல் கட்டிடத்தை அதன் அசலான வண்ணத்திலேயே வரைய வேண்டும். இரண்டாவது கட்டிடத்தை தொலைவாகக் காட்ட அதன் வெளிக்கோடுகள் அவ்வளவு அழுத்தமில்லாமலும், நீலமாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும். அதற்கு அடுத்த கட்டிடத்தை தொலவானதாக காட்ட அதை இன்னும் நீலநிறமாகத் தீட்ட வேண்டும். அதற்கு அடுத்த கட்டிடத்தை இன்னும் ஐந்து மடங்கு தொலைவாகக் காட்ட வேண்டுமென்றால், அதற்கு மேலும் ஐந்து மடங்கு நீல வண்ணம் கொடுக்க வேண்டும்.” ஒரு விதத்தில் அன்றைய ஓவியர்கள் நீலத்தின் பால் பெரும் பிரேமை கொண்டிருந்தனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த ஓவியங்களைப் பார்க்கும் போது நீங்கள் இப்படியான ஒரு உலகத்தை கற்பனை செய்துவிட முடியும்: காவி நிற மரங்களுக்கும், பச்சை நிற புல்வெளிகளுக்கும், வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளுக்கும் நடுவே நடந்து செல்லும் நீங்கள், ஒரு கட்டத்தில் நீலநிறமேயான ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறீர்கள்: புற்கள், மரங்கள், வீடுகள் என அங்கிருக்கும் எல்லாமும் நீல நிறத்திற்கு மாறி விடுகிறது. அங்கு ஒருவேளை உங்களையே நீங்கள் பார்க்கமுடிந்தால், நீங்களும் இந்துக் கடவுள் கிருஷ்னரைப் போல நீலமேனியில் இருப்பீர்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முழு உலகமும் “Cyanotypes” எனப்படும் நீலவன்ணப் படங்களால் உயிர்பெற்றிருந்தது. Cyan என்றால் நீலம் என்று பொருள். Cyanotype புகைப்படங்கள் அக்காலகட்டத்தில் விலை மலிவாகவும் எளிதில் உற்பத்திசெய்ய முடிவதாகவும் இருந்தது. அதனால் சில ஆரம்பகட்ட புகைப்பட கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் எல்லா புகைப்படத்தையும் cyanotype-ஆகவே அச்சிட்டனர். அனுபவம் வாய்ந்த புகைப்படக் கலைஞர்கள் இதைக் கொண்டு தற்காலிக பிரதிக்கான புகைப்படங்களை மட்டும் அச்சிட்டனர். ஏனெனில் அவை ஒரு வாரத்தில் ஒளி இழந்து மறைந்துபோய் விடுபவையாக இருந்தது. இந்த ஆரம்பகட்ட புகைப்படங்களில் இருந்து பின்னர் நிரந்தரமான புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த cynotype புகைப்படங்களில் நீங்கள் வந்தடையும் உலகத்தில் இருட்டும் வெளிச்சமும் நீலமும் வெள்ளையுமாக இருப்பது. இவற்றில் மனிதர்களும், பாலங்களும், ஆப்பிள்களும் ஏரியைப் போலவே நீல நிறத்தில் இருப்பது. எல்லாமே cyanide வழியாக சோகமயமான ஒரு சுற்றுப்புறத்தில் படம் பிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் கூட இந்த நிறம் தபால் அட்டைகள் வழியாக நீடித்திருந்தது. என்னிடம் இன்றும் சில நீல நிற பனிப் பாறைகளும், நீலநிற அரண்மனைகளும், நீல நிற இரயில் நிலையங்களும் இருக்கின்றன.
ஒருவருட வறட்சியின் விளைவாக மாபெரும் சால்ட் ஏரியின் நீரளவு வெகுவாக குறைந்து எப்போதும் கடலாக இருந்த இடமெல்லாம் தரைதட்டி வெளித் தோன்றியிருந்தது. அப்போது ஒரு நாள் நான் அந்த ஏரியில் அமைந்திருந்த Antelop தீவை நோக்கி நடை சென்றிருந்தேன். அத்தீவு அதன் எதிரொளிப்பில் ஒரு திடமான மதிப்புமிக்க கல்லைப் போல அந்த நீலத்தில் மிதந்து கொண்டிருந்தது. பல மைல் தூரம் வரையிலும் முன்னர் கடலாக இருந்த இடம் ஆழமில்லா நீர்க்குட்டைகளாக, ஈரமான, காய்ந்த மணல் பரப்பாக, தெளிந்த நீர் தேக்கங்களாக, விரல்கள் போல நீட்டப்பட்ட மணல்வெளிகளாக என நீண்டதொரு புதிர் சாலையாக மாறி இருந்தது. அதற்கு அப்பால் இருந்த ஆழமான நீலக்கடலில் இவையனைத்தும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் நான் நடந்துவந்த மணல் திட்டு தண்ணீரில் சென்று முடிந்தது. வேறு வேறு மணல் திட்டுகளுக்கு நான் தாவி முன்செல்ல வேண்டி இருந்தது. இருந்தாலும் Antelop தீவை நோக்கிய பல மைல் தூரத்தை பெரும்பாலும் நேர்க்கோட்டிலேயே நடந்து செல்ல முடிந்தது. நான் நடந்த மணல் திட்டுக்களில் சிலவற்றில் மணல் வரி வரியாக அமைந்திருந்தது, சிலவற்றில் மிருதுவான மணலாக இருந்தது, சில இடங்களில் மணல் பரப்புக்கு அடியில் வெற்றிடமாக இருந்ததுபோல அதில் கால்வைத்ததும் என் காலை உள்ளிழுத்தபடி இருந்தது. ஈர மணலில் கால் வைத்த போது மெல்லிய சப்தத்துடன் என் காலடியைச் சுற்றி மணல் வெளிறிப் போனது. நான் விட்டுச் சென்ற இந்த நீண்ட காலடித்தடங்களால் நான் வழி தொலைந்து போய்விடவில்லை. ஆனால் நேரக்கணக்கில் இருந்து அகன்று போயிருந்தேன். வெளியுலகத்தில் உள்ள் அனைத்தும் உதிர்ந்து நான் அவ்விடத்திற்குள் அமிழ்ந்து போயிருந்தேன். இடமாற்றத்தின் வழியாக அல்லாமல் வேறுவகையில் அங்கு நான் தொலைந்து போனேன்.
சில வேளைகளில் ஓக் மர இலைகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தது – அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த மரம் இல்லையென்றாலும். சில இடங்களில் கொத்து கொத்தாக பறவையின் சிறகுகளும், மெல்லிய எலும்புகளும் காணக்கிடைத்தது. இலைகள் அங்கு எப்படி வந்தன, பறவை எப்படி இறந்தது என்பது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது. எனக்கு பின்புறம் சால்ட் ஏரியைத் தாண்டி பாறைகளுக்கும் மலைகளுக்கும் மேலான உயரத்தில் பொறிக்கப்பட்டது போல போனவைல்(Bonneville) ஏரி இருந்தது. புவிப்பரப்பில் நீர் கோலொச்சிக் கொண்டிருந்த காலத்தில் இந்த ஏரி அவ்வளவு உயரமாகவும் ஆழமாகவும் இருந்தது. அது அரிசோனா(Arizona) மாகாணத்தில் ரெட்வுட் மரங்கள் வளர்ந்திருந்த காலம். டெத் பள்ளத்தாக்கு அப்போது ஒரு ஏரியாக இருந்தது. அந்த ஏரி மறைந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம், எனினும் என்னைச் சுற்றி புலப்பட்ட அந்த ஏரியின் விளிம்பு வட்டம், நான் நடந்து வந்த இடம் ஒருகாலத்தில் ஆழமான தண்ணீருக்கு அடியில் இருந்திருக்கக் கூடும் என்று உணர்த்தியது. அதுபோல அங்கு காணக்கிடைத்த உடைந்த படகின் எச்சங்களும் மென்மணலும் நான் தற்போது நடந்து கொண்டிருக்கும் இடத்தில் முன்பு நீந்தியோ படகோட்டியபடியோ சென்றிருக்க முடியும் என்றும் உணர்த்தியது. இது ஒரு புதிய நிலம் – தற்காலிக நிலப்பகுதி. இந்த குளிர்காலம் முடியும்போது இது மீண்டும் நீரில் மூழ்கிவிடலாம், இங்கு மீண்டும் நடக்க முடிவதற்கு வருடங்களோ, தசாப்தங்களோ கூட ஆகலாம். என்னெதிரே பிரகாசமான சூரிய ஒளியில் பொன்னிறமாக மின்னுகிறது Antelop தீவு. அதை நோக்கி நடந்து செல்லும்தோறும் அது என் முன் தெளிவாகவும் பெரியதாகவும் ஆகியபடி வருகிறது. எனினும் ஒரு கனவைப்போல, நம்பிக்கையைப் போல இன்னும் கைக்கெட்டாமல் என்முன் இருக்கிறது. அங்கு மிச்சமிருந்த நீர் வெளிர் நீலத்தில் இருந்தது. சுட்டெரிக்கும் அக்டோபர் மாத வெயிலில் அங்கு நீருக்கும், அதன் மேலேயுள்ள காற்றிற்கும் இடையிலான வேறுபாட்டை காண்பது இயலாத காரியமாக இருந்தது. அவிழ்த்து விடப்பட படகைப்போல காலையில் இருந்து நடந்து நடந்து, நான் காலத்தில் பிடியில் இருந்து வழுவிச்சென்ற வண்ணம் இருந்தேன். முன்னர் ஒருமுறை சால்ட் ஏரிக்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பேசியது நினைவிற்கு வந்தது. நாம் கவனிக்கத் தவறும் மாற்றத்தின் ஆழத்தை விவரிக்கும் பொருட்டு பொலிவியாவில்(Bolivia) உள்ள டிட்டிகாகா(Titicaca) என்னும் மற்றொரு ஏரியில் நடந்த ஒரு கதையை அக்கூட்டத்தில் கூறினேன். எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் பெருவில் உள்ள லிமா என்னும் நகரத்தில் வசித்து வந்தோம். அப்போது ஒருமுறை ஆண்டெஸ் மலைத்தொடருக்கு சென்று, டிட்டிகா ஏரியைக் கடந்து பெருவில் இருந்து பொலிவியாவிற்கு சென்றோம். டிடிகாகா மிகவும் உயரமான இடத்தில் அமைந்த ஏரிகளுள் ஒன்று. நீலமான கண்கள் நீல வானத்தை கண் கொட்டாமல் வெறித்துப் பார்ப்பது போல.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், என் அம்மா தனது தேவதாரு மர பெட்டியில் இருந்து, போலிவியாவுக்குச் சென்றபோது எனக்காக வாங்கிய நீலப்பச்சை நிற துணியை எடுத்தார் — அது நான் விஷேஷங்களில் அணிந்திருந்த உள்ளூர் பெண்களின் பாரம்பரிய ஆடையின் சிறிய மாதிரியாக இருந்தது. அவர் அந்தச் சிறிய ஆடையை விரித்துப் பார்த்து எனக்குக் கொடுத்த போது, அந்த ஆடையை அணிந்திருந்த உயிரோட்டமான நினைவும், அதே சமயம் அது எவ்வளவு சிறியது என்ற உண்மையுடன் என்னுள் ஒன்றோடொன்று மோதியது. ஒரு அடி நீளத்திற்கும் குறைவான அதன் கைகள், சிறிய பூச்சிக்கூண்டைப் போல சுருங்கிய விலாவிற்கு வடிவமைக்கப்பட்ட அதன் உடல்பகுதி. என்னுடைய அதிர்ச்சி என்னவென்றால் இந்த சிறிய உடைக்குள் இருப்பதன் உணர்வும் என்னுடைய ஞாபகத்தில் பசுமையாக இருந்தது. அதே சமயம் அதில் நான் இத்தனைச் சிறியவளாகவும், இப்போது நினைவுகூறும் என்னைப் போல அல்லாத முற்றிலும் வேறொரு உருவமாகவும் இருந்தேன் என்பது அந்த நினைவில் இல்லை. அந்த நினைவின் ஓட்டம், ஒரு சிறுமியின் உடலுக்கும், வளர்ந்த பெண்மணியின் உடலுக்கும் இடையிலான ஆழமான வெற்றிடத்தை அளக்கவில்லை.
உடையை மீண்டும் கையிலெடுத்த தருணத்தில், அந்த நினைவை இழந்துவிட்டேன்- ஏனெனில் அவை இரண்டும் ஒருசேர நிலைத்திருக்க முடியாதவை. நான் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நினைவு ஒரு கணத்தில் சட்டென்று என்னிலிருந்து மறைந்தது. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒளியிலிருந்து அற்புதமாகப் பாதுகாக்கப்பட்ட சுவரோவியங்களைப் பற்றியோ, பதப்ப்படுத்தி புதைக்கப்பட்ட உடல்களைப் பற்றியோ சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். இருப்பினும் புத்தம்புதிய காற்றில் ஒளியில் பட்ட மாத்திரத்தில் அவை வெளிரிச்சுருங்கி காணாமல் போகிறது. சில நேரங்களில் கிடைப்பதும், இழப்பதும் நாம் நினைக்க விரும்புவதைக் காட்டிலும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. அதோடு சில விஷயங்களை அசைத்திடுவதோ, சொந்தமாக்கிவிடுவதோ இயலாத காரியம். சில ஒளிகள் வெளியிலிருந்து பூமிக்கு வந்து சேராமலேயே சிதறிப் போகிறது.
அந்த நீலப்பச்சை சட்டையை நான் என் பெட்டியில் எடுத்து வைத்தேன். அதைபற்றி மீண்டும் நினைக்கத் தொடங்கியபோது, எடுத்துப் பார்த்தேன். இப்பொழுது என் நினைவு அந்தச் சட்டையை எனக்கு பரிச்சயமான வடிவமாக மாற்றியிருந்தது. அது நவாஜோ பெண்களும் சிறுமிகளும் அணியும் வெல்வட் துணியால் செய்யப்பட்ட சட்டை. அந்த போலிவியன் சட்டையில் முத்துக்கள் ஜோடிக்கப்பட்டிருந்தது. அதன் மேல்கழுத்து விளிம்புகள் மென்மையான நீலப் பட்டியால் அலைவரிசைபோல அமைந்திருந்தது. இரண்டு நீல ரிப்பன்களால் ஆன அதன் கழுத்துப்பட்டை வெகு நாட்களுக்கு முன்பே அழுந்தி தட்டையாகி விட்டிருந்தது. அதன் நீலம் என்பது வானவெளியைவிட அடர்த்தியான நீச்சல் குளங்களின், மரகதக் கல்லில் நீலம். பொலிவியா என்று என் நண்பரிடம் சொன்னேன், அவருக்கு ஆப்லிவியன்(oblivion) என்று காதில் விழுந்தது.
நான் முதன்முதலாக எழுதத் தொடங்கிய போது, அதுவரையிலான எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு குழந்தையாகவே கழித்திருந்தேன். அந்தக் குழந்தைப் பருவத்து நினைவுகள் மிகத் தெளிவாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருந்தன, அவைதான் என்னை உருவாக்கிய சக்திகள். அவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் தளர்வடையத் தொடங்கின. ஒரு நினைவைக் குறித்து எழுதி முடித்த கணமே, அது என்னிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது. என் நினைவுகளில் இருந்த அதன் நிழல் வாழ்க்கை முடிந்து, எழுத்தில் நிலைகொள்கிறது. அதன்பிறகு அது என்னுடையதில்லை. உயிரோடிருக்கும் எந்த ஒரு உயிரிக்கும் இருக்கக்கூடிய மாறுதலடையும் நம்பகமற்றத்தன்மை அந்த நினைவிலிருந்து நீங்கிவிடுகிறது. சிறுவயதில் நான் அணிந்திருந்த அந்த சட்டை எப்படி புகைப்படத்தில் அடையாளம் தெரியாத ஏதோவொரு சிறுமியின் சட்டையாக மாறிவிடுவதைப் போல. இருபதுகளில் இருக்கும் ஒரு இளம்பெண் பெரும்பாலும் ஒரு சிறுமி தான். எனினும் காலம் செல்ல செல்ல, அந்த குழந்தைத்தனம் அவளிடம் குறைந்துகொண்டே வருகிறது, நீண்ட தூரம் விலகிச்சென்று வெளுத்து மறைகிறது. இருப்பினும் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் – ஏதோ மொத்த உலகத்தையும் சுற்றி புறப்பட்ட அந்த ஆதி இருட்டிற்கே மீண்டும் திரும்புவது போல- பால்யகாலம் புதுப்பொலிவுடன் திரும்பும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை முதுமைக்கு அருகாமையும் சமீபமும் மங்கலாக இருக்கிறது. காலத்தாலும் இடைவெளியாலும் தொலைவில் இருப்பவை மட்டும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.
மறுபுறம் குழந்தைகளுக்கோ தூரமான விஷயங்களில் எந்தவித நாட்டமும் இருப்பதில்லை. புகழ்பெற்ற சூழியலாளர் கேரி பார் நபன்(Gary Paul Nabhan) அரிசோனாவின் மாபெரும் பள்ளாத்தாக்கிற்கு(Grand canyon) தன் குழந்தைகளை கூட்டிச் சென்றதைப் பற்றி இப்படி எழுதுகிறார்: “பெரியவர்கள் எல்லோரும் அங்கு விரிந்திருக்கும் நிலப்பரப்பையும், புகைப்படமெடுப்பதற்கேற்ற அழகான நிலைக்காட்சியையும் தேடியபடி மொத்த நேரத்தையும் செலவிட்டார்கள். ஆனால் அங்கும் குழந்தைகள் அவர்களின் கைகளுக்கும் கால்களுக்கும் அருகில் உள்ளவற்றிலேயே கவனம் கொண்டிருந்தனர். நம்மைபோன்ற வளர்ந்தவர்கள்தான் அருவமானவற்றால்(abstraction) பயணிக்கத் தொடங்கிவிடுகிறோம்.” அவர் மேலும் எழுதுகிறார் “அந்தப் பயணத்தில் நாங்கள் பிற மலை முகடுகளுக்கும் சிகரங்களுக்கும் சென்றபோதுகூட என் மகனும் மகளும் எங்களைப் பற்றியிருந்த கைகளை அவசரமாக உதறிவிட்டு அங்குள்ள மண்ணில் கிடக்கும் பைன் மரக் கூம்புகளை, கற்களை, இறகுகளை, பூக்களை எல்லாம் பொறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்” குழந்தைப்பருவத்திற்கு தொலைவு என்பதே இல்லை: ஒரு கைக்குழந்தைக்கு தன்னைவிட்டு அடுத்த அறைக்குச் செல்லும் அன்னை என்பவள் எப்போதைக்குமாய் பிரிந்துபோகும் அன்னை தான். அந்த குழந்தையைப் பொறுத்தவரை அதன் அருகில் இல்லாத எதுவும் அடையவே முடியாததும், வாய்ப்பில்லாததும் தான். அவர்களுடைய மனதின் நிலைக்காட்சி என்பது ஒருவகையில் பண்டையக் கால ஓவியங்களைப் போல: முன்பகுதி முழுவதும் தெளிவான விஷயங்களால் நிறைந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் வெற்று சுவர் தான். தொலைவின் நீலம் என்பது காலம் கடந்த பிறகு, துயரத்தை, இழப்பை கண்டறிந்த பிறகு, ஏக்கத்தை, நாம் நகர்ந்து செல்லும் சூழலின் சிடுக்கை நேரடியாக தொட்டுணர்ந்த பிறகு, நீண்டகால பயணத்திற்கு பிறகு வருகிறது. துயரமும் அழகும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறதென்றால், நபன் சொல்வதுபோல முதிர்ச்சி என்பது அருவமான பார்வையை கொண்டுவருவதில்லை. மாறாக காலத்தால் தொலைந்துபோனவற்றை ஈடுகட்டுகின்ற, தொலைதூரத்தில் உள்ளவற்றில் அழகைக் கண்டுகொள்கிற ஒருவித அழகுணர்ச்சியைதான் ஒருவேளை கொண்டுவருகிறது என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கட்டத்தில் ஆன்டிலோப் தீவு நெருங்கச் செல்ல செல்ல பெரியதாகவும் தெளிவாகவும் புலப்பட ஆரம்பித்தது. இறுதியாக ஒரு புள்ளிக்கு மேல் முன்னே செல்லமுடியாதபடி ஆகிவிட்டது. ஒருவேளை நீந்திச் சென்றால் தீவை அடைய முடியலாம். ஒருகணம் என் ஆடைகளைக் களைந்துவிட்டு ஒரு தக்கையைப் போல தண்ணீரில் நீந்திச் சென்று தீவை அடைவது போல கற்பனை செய்தேன். எனினும் அங்கு சென்றபின் என்ன செய்திருப்பேன் என்பது தெரிந்திருக்கவில்லை. அதோடு அந்த தீவினுள்ளே செல்ல முடியுமா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் வெளித்தோற்றத்திற்கு பளபளக்கும் அதன் தங்கநிறம், நெருங்கிச் சென்றவுடன் மண்ணாலும் புதர்களாலும் ஆனதொரு குவியலுக்குள் கரைந்து போய்விடும் என்று தோன்றியது.
நடக்க முடிந்த எல்லை வரை சென்று குனிந்து பார்த்தேன். வளைவு நெளிவான கரை விளிம்புகள் தண்ணீரோடு சேர்ந்து விமானத்திலிருந்து பார்க்கும் போது தெரியும் ஒரு உலகம் போல இருந்தது. விமானங்கள் பொதுவாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்னென வரையறுக்கப்பட்டபடி சென்று சேரும். ஆனால் அதற்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் இடங்களை தோராயமாகவே சுட்ட முடியும்: நீயூபவுன்ட்லேண்டிலோ, நெப்ராஸ்காவிலோ, டகோடாஸிலோ எங்கேயோ ஒருபகுதி. பல மைல்களுக்கு மேலே வானத்தில் இருந்து பார்க்கும்போது தரைப்பகுதி ஒரு வரைபடம் போலவே காட்சியளிக்கிறது. எனினும் வரைபடங்களை அர்த்தமுடையதாக மாற்றும் எந்த குறிப்புப் புள்ளிகளும் அதில் இருப்பதில்லை. விமான ஜன்னலுக்கு வெளியே வளைந்து நெளிந்து ஓடும் நதிகளும், மலைகளும் அடையாளமற்ற, புரிந்து கொள்ளமுடியாத, எழுத்துகளில்லாத ஒரு வரைபடம். அடிக்கடி இம்மாதிரி நகரங்களுக்கு இடையே பணி நிமித்தமாக விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இம்மாதிரியான இடத்தில் ஒருமுறையாவது விமானம் அவசரநிலையால் தரையிறங்க வேண்டும் என்ற ஆசை உண்டென தெரிந்து கொண்டேன். இந்த பெயரில்லாத இடங்கள் எங்கோ கண்காணாத இடத்தில் தொலைந்து போய்விட வேண்டும் என்ற ஆவலை கிளர்த்துகிறது. இந்த சோர்வான விந்தை தான் தொலைவு உருவாக்கும் துயரம் அல்லது நீலம். அன்று என்னுடை கால்கள் கூட என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதுபோலத் தோன்றியது. அந்த வெட்டவெளியில் அருகாமையும் தொலைவும் ஒன்றோடொன்று மடிந்து அளவுகோல்கள் மறைந்து சிறு குழியில் தேங்கியிருந்த நீர் பெருங்கடல் போலவும், மணற்கட்டிகள் மலைத்தொடர்கள் போலவும் காட்சியளித்தது.
தீவை எனக்குப் பின்னால் விட்டுவிட்டு தூரத்தில் எனக்காக காத்திருந்த வண்டியில் குப்பைக்கூளமான அன்றாட உலகிற்கு திரும்ப வேண்டி நடக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த அந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறிய ஆச்சரியம் இருந்தது. அங்கு உயரமில்லாமல் பாளம் பாளமாக நீர் உப்புக்கட்டிகளாய் மாறிப் போயிருந்தது. ரோஜா அடுக்குகளாக, வைக்கோல் கட்டுகளாக, பனிக்கட்டிகளாக என பல வடிவங்களில் சேற்றோடு கலந்த உப்புக்கட்டிகள். என்னோடு எடுத்துச் செல்வதற்காக அதிலிருந்து ஒன்றை பெயர்த்து எடுத்தேன். எடுத்தவுடனேயே அதன் அழகு கொஞ்சம் குறைந்துபோய் விட்டது. சில விஷயங்கள் தொலைந்தபின்னர் தான் நம்மோடு எப்போதும் இருக்கிறது. வேறு சில விஷயங்கள் தொலைவில் இருக்கும் வரைதான் தொலைந்து போகாமல் இருக்கிறது.
***

ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

இந்தக் கட்டுரை ஒட்டுமொத்தமாக தொடமுடியாததின், அடையமுடியாததின் அழகைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறது…அபூர்வமானது…