
புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரைகளை சென்ற ஆண்டு அகழ் இதழில் எழுத்தாளர் அழகிய மணவாளன் தொடர்ச்சியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்திருந்தார். இந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு “கருப்பு இருட்டல்ல” என்ற பெயரில் புதிய நூலாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதையொட்டி அவருடன் மேற்கொண்ட உரையாடல் இது.
கேள்வி: கவிஞர் கல்பற்றா நாராயணனின் எழுத்துக்களுடன் உங்களுக்கு எவ்வாறு அறிமுகம் ஏற்பட்டது என்பது பற்றி கூற முடியுமா?
பதில்: ஜெயமோகன் மொழிபெயர்த்த கல்பற்றாவின் கவிதைகள் வழியாகத்தான் எனக்கு கல்பற்றாவின் எழுத்து அறிமுகமாகியது. கல்பற்றாவின் கவிதைமொழியில் உள்ள துல்லியம் (preciseness) என்னை கவர்ந்தது. பின்னர் மலையாளம் வாசிக்க கற்றுக்கொண்டபின் தமிழில் மொழிபெயர்க்கப்படாத கவிதைகள் தேடி வாசித்தேன். அதுபோக கவிதைகள் அளவுக்கே படைப்பூக்கத்துடன் நிறைய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 3 நாவல்கள். மேடையுரைகள். எழுத்தாளர்களை பற்றிய அறிமுகங்கள். வாசித்து தீர்க்கமுடியாதபடி அவ்வளவு எழுதியிருக்கிறார்.
கேள்வி: இதற்குமுன் நீங்கள் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய நூலை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவருடைய எழுத்துகள் தர்க்கப்பூர்வமானவை. அதோடு அவர் முதன்மையாக ஒரு விமர்சகராக அறியப்படுபவர். அதே சமயம் கல்பற்றா ஒரு கவிஞர். இந்த இருவரின் எழுத்திற்கும் நடுவே என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
பதில்: பி.கே.பாலகிருஷ்ணனின் எழுத்துகள் தர்க்கபூர்வமானவை என்றாலும் அவற்றில் படைப்பூக்கத்தின் அழகும், தீவிரமும் உண்டு. பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரைகள் ஒருவகையான உரையாடல்தன்மை கொண்டவை. ” இப்படி கற்பனைசெய்து பாருங்கள்”, ”உங்களுக்கு அப்படி தோன்றலாம்” என எதிரில் உள்ள யாரிடமோ உரையாடும் தொனியை அவரின் கட்டுரைகளில் உணர்ந்திருக்கிறேன்.
கல்பற்றாவில் அந்த உரையாடல்தன்மையை அவ்வளவாக நான் உணர்ந்ததில்லை. ஒருகவிதை வரியிலிருந்து தன்னுடைய அவதானிப்பு அதிலிருந்து பிறிதொரு கவிதைவரி அடுத்த அவதானம் என அவரின் மொழிபு அவ்வளவு அந்தரங்கமானது என்பதை உணர்ந்திருக்கிறேன். உதாரணமாக, கல்பற்றா ஒரு கட்டுரையில் மறைந்த மலையாள கவிஞர் மாதவன்ஐயப்பத்து பற்றி நினைவுகூர்கிறார். “ மாதவன் ஐயப்பத்து உயிருடன் இருக்கும்போதே அவரைப்பற்றி எழுதியிருக்க வேண்டும்”. ஒருவேளை பி.கே.பாலகிருஷ்ணனாக இருந்தால் அவர் அதை இப்படி எழுதியிருப்பார். “ மாதவன் ஐயப்பது உயிருடன் இருக்கும்போதே அவரைப்பற்றி எழுதியிருக்கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது” என்று எழுதியிருப்பார். அவர் address செய்யும் ’எதிரில் இருப்பவர்’ எப்பொதுமே உண்டு.
கல்பற்றா அடிப்படையில் கவிஞர் என்றாலும், அவர் பி.கே.பாலகிருஷ்ணன் போலவே கூர்மையான விமர்சகரும்கூட. ஆனால் கல்பற்றாவின் விமர்சனமுறைமை பி.கே.பாலகிருஷ்ணனிலிருந்து வேறானது.
மலையாள கவிஞர் குமாரன் ஆசானை பற்றி பி.கே.பாலகிருஷ்ணன், கல்பற்றா நாராயணன் இருவருமே இலக்கியவிமர்சன நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். பி.கே.பாலகிருஷ்ணனை பொறுத்தவரை குமாரன் ஆசானின் படைப்புமனதின் தனித்தன்மைகளை புரிந்துகொள்ள அவரது படைப்புகள் அளவுக்கே அவரின் தனியாளுமையின் இயல்புகளிலும், அவர் வாழ்க்கைச்சூழலும், அவரின் தனித்தேடல்களும், அலைக்கழிதல்களும் முக்கியம் என்பதால் தன் நூலில் இவற்றை மிக விரிவாக விவாதித்திருக்கிறார். (300 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் 150 பக்கங்கள் குமாரன் ஆசானின் வாழ்க்கைச்சூழல், டைரிக்குறிப்புகள், அவர் எழுதிய கடிதங்கள் வழியாக அவரின் மன இயல்பு இவை விவாதிக்கப்பட்டிருக்கிறது). இதற்கு நேர் எதிராக கல்பற்றா, குமாரன் ஆசானின் காவியங்களிலிருந்து மட்டுமே குமாரன் ஆசானின் கலைமனதின் சிறப்பம்சங்களை விவரித்திருப்பார். அதுவும் மிக சிக்கனமான சொற்களில். முழுக்க முழுக்க குமாரன் ஆசான் சிருஷ்டித்த கதாப்பாத்திரங்கள், அவர்களின் நெருக்கடிகள் (crisis), அவர் மொழியை பயன்படுத்திய விதம் என பிரதி சார்ந்த ரசனை. மிக சொற்பான இடங்களில் மட்டும் குமாரன் ஆசானின் தனிவாழ்க்கை சார்ந்த சில விவாதங்கள் இருக்கிறது.
கேள்வி: கல்பற்றாவின் நடையில் இருக்கும் அந்தரங்கத் தன்மையும் சொற்சிக்கனமும், கூர்மையான விமர்சன நோக்கும் அவர் அடிப்படையில் கவிஞர் என்பதால் என்றாலும் அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது இல்லையா? (மோசமான உரைநடையில் எழுதும் நல்ல கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்) இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
2026 சென்னை புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்
- தட்டகம்- கோவிலன் – தமிழில்: நிர்மால்யா (பதிப்பகம்: சாகித்திய அகாடெமி)
- அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் : கோபிசந்த் நாரங்
மொழியாக்கம்: என்.பாலசுப்பிரமணியம்
(வெளியீடு: சாகித்ய அகாடமி)- பிரமிள், கு.அழகிரிசாமி, ஜி.நாகராஜன் , கிருஷ்ணன் நம்பி நினைவோடை- சுந்தர ராமசாமி
(காலச்சுவடு பதிப்பகம்)- நறுமணத் துயரே நறுமணத்துயரே: கம்பன் காதல் கவிதைகள் பற்றிய கவிஞர் இசையின் ரசனைக்கட்டுரைகள்
(விஷ்ணுபுரம் பதிப்பகம்)- மேற்குசாளரம்- மேற்குலக இலக்கியப்படைப்புகள் மீதான அழகியல்ரீதியான வாசிப்பு :ஜெயமோகன் (விஷ்ணுபுரம் பதிப்பகம்)
பதில்: ஆம். அதனால்தான் உங்கள் முந்தைய கேள்வியில் கல்பற்றா கவிஞர் என்பதையும், பி.கே. பாலகிருஷ்ணன் விமர்சகர் என்பதையும் சுட்டிக்காட்டி நீங்கள் கேட்டபோது என்னால் அந்த வித்தியாசத்தை பிரதானமானதாக சொல்லமுடியவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் கவிஞன், கவிதைமொழி போன்ற சொற்களை universal ஆக ஏற்றுக்கொண்ட அதன் பொது இயல்புகளை வைத்து அந்த அர்த்த தளத்தில் பயன்படுத்தமுடியும். வேண்டுமானால், ஒரு வசதிக்காக கல்பற்றாவின் உரைநடையை கவிதைமொழிக்கு நெருக்கமானது என்று சொல்லலாம். ஆனால் கவிதைமொழியிலேயே எவ்வளவு பன்முகத்தன்மை உண்டு! உதாரணமாக, தேவதச்சன், பிரான்சிஸ் கிருபா இருவரும் கவிதை என்ற வடிவில் இயங்கினாலும் இருவரின் கவிதைமொழிக்கும் எவ்வளவுதூரம் வேறுபாடு உண்டு. அதனால் கல்பற்றாவின் உரைநடையின் தனிச்சிறப்புகள் அவர் கவிஞர் என்பதால் அமைந்தவை என்று சொல்வதைவிட அவரின் கலைமனதின் இயல்புகளால் அமைந்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
கேள்வி: எம்.டி வாசுதேவ நாயரின் புனைவுலகத்தைப் பற்றிய கட்டுரை(கறை) தான் நீங்கள் மொழியாக்கம் செய்த அவருடைய முதல் கட்டுரை, இல்லையா? கல்பற்றாவின் கட்டுரையை முதன்முதலாக மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கூறமுடியுமா?
பதில்: நான் முதலில் மொழிபெயர்த்த கல்பற்றா கட்டுரை ஜெயமோகனின் 60வது பிறந்தநாளை ஒட்டி எழுதப்பட்ட ”ஜெயமோகனம்” என்ற கட்டுரை. அதை வெளிவரப்போகும் தொகுப்பில் சேர்க்கவில்லை. அது “சியமந்தகம்” என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அந்த கட்டுரையிலேயே கல்பற்றாவை மொழிபெயர்ப்பதில் உள்ள படைப்பூக்கமான சவால்களை கொஞ்சம் உணர முடிந்தது. ஆனால் எம்.டி.வாசுதேவன்நாயரின் படைப்புலகம் பற்றிய கல்பற்றாவின் கட்டுரையில்தான் ”கல்பற்றாத்தன்மை”யின் முழுவீச்சை என்னால் உணரமுடிந்தது.
’கறை’ கட்டுரையை மொழிபெயர்த்து முடித்து அதில் திருப்தியில்லாமல் அப்படியே வைத்துவிட்டேன். திருத்தங்கள் செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. கல்பற்றா தன் கட்டுரைகளில் தன்னுடைய எண்ணங்களை, அவதானிப்புகளை மிகமிக துல்லியமான, குறைந்த சொற்களால் ஆன செறிவான சொற்றொடர்களில் (கவிதைமொழிபின் சொற்சிக்கனத்தில்) வெளிப்படுத்தும் எழுத்துமுறையை கொண்டவர். கவிதைமொழியில் உரைநடை. உரைநடையில் ஓரளவுதான் அது சாத்தியம், ஆனால் கல்பற்றா தன் படைப்பூக்கத்தால் மலையாளத்தில் அப்படி ஒரு புதிய உரைநடையை உருவாக்கியிருக்கிறார். மேலும் மலையாள உரைநடையில் ஒரு வாக்கியத்தில் பயனிலை இல்லாமல், pronoun இல்லாமல் எழுதும் வசதியும் உண்டு. தமிழில் மொழிபெயர்க்கும்போது கல்பற்ற உரைநடையை அப்படியே மொழிபெயர்க்க முடியாது, நம் மொழி அமைப்பு வேறு. ஒரு சில சமரசங்களுடன்தான் ’கல்பற்றாத்தன்மையை’ மொழிபெயர்ப்பில் கொண்டுவரமுடிந்தது. நண்பர்கள் விஷாலுக்கும், பாரிக்கும் மொழிபெயர்ப்பை அனுப்பினேன். அவர்கள் வாசித்துப்பார்த்து ஓரளவு நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதாக சொன்னார்கள், பின்பு அகழ் இதழில் வெளிவந்தது. அவர்களின் வாசிப்பனுபவம் வழியாக கல்பற்றாவின் தொனியை மொழிபெயர்ப்பில் தக்கவைக்க முடிந்தது என்று என்னால் ஆசுவாசப்பட்டுக்கொள்ள முடிந்தது. அந்த கட்டுரைக்கு பின்புதான் கல்பற்றாவின் கட்டுரைகளை தொடர்ந்து மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மேலும் அந்த கட்டுரையில் மிக subtleஆக எம்.டி.யின் தனியாளுமையும், அவரின் கலைமனம் பற்றிய விமர்சனமும் உண்டு. கல்பற்றாவின் பாணி கூர்மையான விமர்சனத்தையும் மிகமிக subtleஆக, understated ஆக வெளிப்படுத்தும் முறைமை கொண்டது. மொழிபெயர்ப்பில் அந்த subtleதன்மையை தக்கவைக்க வேண்டும். உண்மையில், இது போன்ற படைப்பூக்கமான சவால்கள்தான் தொடர்ந்து மொழிபெயர்ப்பதற்கான உந்துதலை அளிக்கிறது.
முன்பு நான் மொழிபெயர்த்த பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரைகளைவிட கல்பற்றா கட்டுரைகளை மொழிபெயர்ப்பில் அதிக திருத்தங்கள் செய்தபின்பே வெளியிட முடிந்தது. பெண்களின் ஒப்பனைபோல, இனி திருத்தங்கள் செய்யமுடியாது என்ற நிலையிலும் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற நிறைவின்மையையும் மொழிபெயர்ப்பாளரில் எஞ்சவைப்பது கல்பற்றா உரைநடையின் தனித்தன்மை.
கேள்வி: கல்பற்றாதன்மை என்றும் அதன் பண்புகள் என்றும் நீங்கள் அடையாளப்படுத்தியிருப்பது சுவாரஸ்யமூட்டுகிறது. Subtle தன்மையத் தவிர வேறு எவற்றையெல்லாம் கல்பற்றாதன்மையுடன் அடையாளப்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்? அது போன்ற விஷயங்களை மொழிபெயர்க்கும் போது பிரக்ஞையுடன் நீங்கள் தக்கவைக்க முயல்வது உண்டா?
பதில்: கல்பற்றாதன்மை என்பதை குறிப்பிட்ட வகையான வெளிப்பாட்டுமுறை (artistic- expression) என்பதாக முன்னர் சொல்லியிருந்தேன். அதை நீட்டினால் அந்த வெளிப்பாட்டிற்கான காரணம் குறிப்பிட்டவகையான வாழ்க்கைநோக்கு என்று சொல்லலாம். கல்பற்றாவை பொறுத்தவரை, நவீன அறிவியல் உருவாக்கிய காரண-காரிய அறிதலாலும், தர்க்கபூர்வமான சிந்தனைமுறையாலும் உருவானது தரப்படுத்தப்பட்ட உரைநடை(standardized-prose). அது நுட்பமான வாழ்க்கைநிலைகளையும், மர்மங்களை வெளிப்படுத்தும் தகுதி கொண்டதல்ல, standardized-prose-இன் தட்டையான இயல்பால், அதை பயன்படுத்தும் நம் நுண்ணுணர்வும் கொஞ்சம் நீர்த்துவிட்டது என்பது கல்பற்றாவின் தரப்பு. நம் பழைய தொன்மங்களில், பழமொழிகளில் வாழ்க்கையின், மனிதனின் சாராம்சத்தை, அதன் எண்ணிறந்தன்மையை(diversity) வெளிப்படுகிறது. நவீன உரைநடையை ஆப்த வாக்கியம்போல, பொன்மொழி போல, பழமொழிபோல பயன்படுத்தும்போது உரைநடையின் இறுக்கத்தை கடந்து நாம் நுண்ணுணர்வை மீட்டெடுக்கிறோம். மொழி மீதான இந்த நோக்கை கல்பற்றாத்தன்மை என்று சொல்லலாம். மொழி வழியே நுண்ணுணர்வை மீட்பதே கல்பற்றாத்தன்மை. நம் பயன்பாட்டு உரைநடையை விமர்சிக்கிறார், சரி? நவீன இலக்கியம் உரைநடையின் இந்த தரப்படுத்துதலை, அதன் போதாமைகளை தாண்டிச்செல்கிறது அல்லவா? கல்பற்றா சொல்லும் போதாமைகள் அதற்கு பொருந்துமா? கல்பற்றாவிடம் இதை தனிஉரையாடலில் கேட்டிருக்கிறேன். அவருடைய பதில் ” தகழியும், பஷீர் இருவருமே நவீன உரைநடையாளர்கள்தான். மதிலுகள் குறுநாவலில் சுதந்திரப்போராட்ட வரலாற்றை 55 பக்கங்களில் பஷீரால் எழுதமுடிந்திருக்கிறது, ஆனால் சுதந்திரத்திற்கு பின்பான வரலாறை பேசுபொருளாக கொண்ட தகழியின் ஏணிப்படிகள் நாவலுக்கு 800 தேவைப்பட்டிருக்கிறது. பஷீரின் படைப்புமனதின் தீவிரமும், அவர் புனைவுலகின் சொற்சிக்கனமும் மிகமிக கச்சிதமாக இணங்கியிருக்கிறது. தகழியின் கலைமனம் அவரது அதிக-மொழியால் கொஞ்சம் சிதறிடிக்கப்பட்டுவிட்டது அல்லது அவரது கலைமனதின் ஒருமையின்மையை அவரின் ’அதிக’மொழி பிரதிபலிக்கிறது.” ஒரு மோசமான படைப்பை பற்றி பேசும்போது கல்பற்றா முதலில் பயன்படுத்தும் சொல் “ பாஷ போரா (மொழி போதாது)”, கலைத்தன்மையின்மையை, தீவிரமின்மையை அவர் மொழியை முன்வைத்தே சொல்லமுடியும், ஆனால் அது என்று மொழிவெளிப்பாடு மட்டுமாக படைப்பை குறுக்குவது அல்ல என்பதை உணர்ந்திருக்கிறேன்.
கல்பற்றாவின் இந்த கருத்துப்புலம் அவருடனான பேச்சில் எனக்கு அறிமுகமாகியிருந்ததால் கல்பற்றாவின் கட்டுரைகளின் தொனி மாறுபாடுகளை துல்லியமாக புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் மேற்கொள் காட்டும் கவிதைவரிகளில் relevance-ஐ உணர்ந்துகொள்ளமுடிந்தது. அது என் மொழிபெயர்ப்பிற்கு மறைமுகமாக உதவியாக இருந்தது.
கேள்வி: இந்தத் தொகுப்பில் கவிதைள் குறித்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்றிருக்கிறது. எனினும் தனி அனுபவக் கட்டுரைகளும், சிறுகதைகளைப் பற்றிய கட்டுரைகளும் கூட இடம் பெற்றுள்ளன. மொழியாக்கத்திற்கென அவருடைய கட்டுரைகளை எந்த அடிப்படையில் தெரிவு செய்கிறீர்கள்? தெரிவின் பின்னனியைப் பற்றி சொல்லுங்கள்.
பதில்: கல்பற்றா கடந்த 25 வருடங்களாக, கவிதைகளைப்போலவே கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். கிட்டத்தட்ட 15 கட்டுரைதொகுப்புகள். பல விஷயங்களையும் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார்: இலக்கியம் அல்லாது காந்தியம், மார்க்ஸியம், கேரளத்தின் அரசியல், பண்பாடு பிரச்சனைகளிலிருந்து அவரின் அன்றாடவாழ்க்கை வரை. இவற்றில் கவிதை பற்றியும், கவிஞர்களைப்பற்றிய கட்டுரைகளும் அதிகம். இந்த கட்டுரைகளில் கேரளத்தின் சமகாலப்பிரச்சனைகள், அவர்களின் தனித்துவமான பண்பாட்டு பிரச்சனைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படாத மலையாளக்கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளை(ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதையுலகம் பற்றி மிக நல்ல கட்டுரையை 1 வருடம் முன்பு எழுதியிருந்தார்) போன்றவற்றை- அவற்றை தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்துவதில் உள்ள பொருத்தமின்மையால்- நான் மொழிபெயர்ப்பிற்கு தேர்வுசெய்யவில்லை.
கல்பற்றா தன் அன்றாடத்தையோ, கோவிட் போன்ற crisisஐயோ எதிர்கொள்ளும்போது அதில் ஒருவகையான கல்பற்றாவிற்கே உரிய தனித்தன்மையான நோக்கு உண்டு. உதாரணமாக, ”விளையாட்டு வீரர்களின் மரணச்செய்தி நாளிதழின் விளையாட்டு பக்கத்தில் வருவது “வாழ்க்கை ஒரு விளையாட்டு” என்று எண்ணும் என்னை மயிர்கூச்செறியவைக்கிறது” என்று எழுதுவதில் ஒருவகையான கல்பற்றாத்தன்மை உண்டு. அதனால்தான் நான் கல்பற்றா தன் அன்றாடம் பற்றி எழுதிய கட்டுரையை மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்தேன், கல்பற்றா கையாண்ட வெவ்வேறு பேசுபொருட்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ, கவிஞனின் அன்றாடம் விரும்பி வாசிக்கப்படும் என்பதாலோ அல்ல.
மேலும் நண்பர், எழுத்தாளர் விஷால்ராஜாவுடனான உரையாடலும் என் மொழிபெயர்ப்பு தேர்வை கூர்மையாக்க உதவியது. சீரான இடைவெளியில் என் மொழிபெயர்ப்பு வெளியாகும்போது தன் வாசிப்பை பகிர்ந்துகொண்டு நான் அதை மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்த காரணத்தையும் கேட்பார். அது ஒருவகையில் என்னை மேலும் கூர்மையாகவும், கவனமாகவும் கட்டுரைகளை தேர்வு செய்ய உதவியது. நண்பர் பாரி தன் வாசிப்பை பகிர்ந்ததும், அவருடனான உரையாடலும் அதேபோல எனக்கு உதவியது.
கேள்வி: ஒரு எழுத்தாளரின் அபுனைவு ஆக்கங்களை ஒருவர் மொழிபெயர்க்கும் போது அவை பெரும்பாலும் பேசுபொருள் சார்ந்து தேர்வு செய்யப்படுவதே வழக்கம். அவ்வாறு இல்லாமல் பலதரப் பட்ட பேசுபொருளில் உள்ள கட்டுரைகள் தொகுக்கப்படும்போது, ஒட்டுமொத்த வாசிப்பில் தன்னியல்பாக பேசுபொருளை தாண்டிய விஷயங்களின் மீது வாசகரின் கவனம் விழுகிறது. இப்படித் தொகுக்கப்படுவதால், மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் சூழலில் கல்பற்றாவின் உரைநடை மேல் நுட்பமான வாசிப்பு நிகழ சாத்தியமிருப்பதாகத் தோன்றுகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மலையாளத்தில் கல்பற்றாவின் சில கட்டுரைத்தொகுதிகளைத்தவிர மற்றவை பேசுபொருள் சார்ந்து தொகுக்கப்படவில்லை, அந்த அளவு diversity இருப்பதால் அது சாத்தியமும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர் படைப்புகள் பற்றி, படைப்பாளிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் என்று தொகுக்கலாம், ஆனால் அதுவும் இன்னும் கேரளச்சூழலில் நிகழவில்லை. கல்பற்றா போன்ற எழுத்தாளர்களை பொறுத்தவரை, எந்த வகையான கட்டுரையிலும் மனிதனின் சாராம்சமான மனநிலைகள் பற்றிய ஆராய்தல் உண்டு என்பதால் பேசுபொருள் சார்ந்த தொகுத்தல் சாத்தியமில்லை என்றும் தோன்றுகிறது. இந்த மொழிபெயர்ப்பு தேர்வு அப்படி அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். உங்கள் தர்க்கப்படி கல்பற்றா கையாண்ட பேசுபொருட்களுக்கு அப்பால், அவற்றின் வெளிப்பாட்டுமுறை, அதன் தனித்தன்மை இவற்றை பற்றிய வாசிப்பு நம் சூழலில் நிகழ்ந்தால் அது நல்ல விஷயம் தான்.
நான் மேலே குறிப்பிட்டதுபோல மலையாளச்சூழலில் அவர் கட்டுரை நூல்கள் பேசுபொருள் சார்ந்து தொகுக்கப்படவில்லை என்றாலும் துரதிஷ்டவசமாக அவரின் கட்டுரைகளுக்கு பேசுபொருள் சார்ந்த வாசிப்புகளே அதிகம் நிகழ்கிறது. கல்பற்றாவிற்கு மலையாளத்தில் எழுதப்படும் அவர் படைப்புகள் மீதான வாசிப்புகள் மேல் கடுமையான அதிருப்தி உண்டு. தமிழ் இலக்கியச்சூழலும் மலையாள இலக்கியச்சூழலும் வேறு என்பதால் நம் சூழல்மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததாலும் இவற்றின் மீது மலையாளச்சூழலில் அல்லாத நல்ல வாசிப்புகள் அமையும் என்ற அடிப்படையில்தான் நான் இந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தேன்.
கேள்வி: வெளித்தோற்றத்திற்கு பலதரப்பட்ட பேசுபொருட்களை மையப்படுத்தியிருப்பதாகத் தெரிந்தாலும், இந்த கட்டுரைகளின் அடிநாதமாக இருட்டு, சுயம், ஒழுக்கம், தனிமை போன்ற ஆதாராமான விஷயங்களையே எடுத்துக் கொண்டு ஆராய்கிறார் என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ‘கழுதையும் குதிரையும்‘, ‘என்னுடைய ஒரு நாள்‘ போன்ற கட்டுரைகளில் பேசுபொருள் ஒரு திசைதிருப்பல் என்றே தோன்றுகிறது – இந்த கட்டுரைகளில் ஆதாரமான விஷயங்களை இன்னும் பூடகமாக கையாள்கிறார், இல்லையா? கட்டுரைகளை அவர் இந்த வகையில் கட்டமைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ஆம். வெவ்வேறு பேசுபொருள்களை இணைக்கும் மையச்சரடு மனிதனின் ஆதாரநிலைகள் பற்றிய கல்பற்றாவின் கேள்விகளும் அக்கறையும்தான்.
என்னுடைய ஒரு நாள், தன் அன்றாடத்தை சொல்வதாக ஆரம்பித்தாலும் இதில் உடல்பயிற்சி என்ற phenomenonன் பொருளின்மை, குழந்தை வலியை அறிந்துகொள்ளும் வழிமுறை, காலவுணர்வின்(sense of time) பரிமாணங்கள் என பல அடிப்படையான விஷயங்களை விவாதித்திருப்பார். நீங்கள் சொல்வது சரிதான், ’என்னுடைய ஒரு நாள்’ என்ற தலைப்பு வாசகனை மிக எளிதாக திசைதிருப்பக்கூடியது, அதில் கல்பற்றாவின் அன்றாடம் என்பது ஒரு நிமித்தம் தான். ‘கழுதையும், குதிரையும்’ வெறும் கழுதை*குதிரை என்ற dichotomyஐ மட்டும் பேசுவதில்லை. அதிலிருந்து தொடங்கி கழுதைத்தன்மையின் அசாதாராணமான இயல்புகளை, அதன் சகிப்புத்தன்மையை வரலாற்றின் ஓட்டத்தில் அதன் இயல்புகள் எப்படி தலைகீழாகவும், அருவருக்கக்கூடியதாகவும் ஆகிறது என்பதையும் விவரிக்கிறது. இந்த கட்டுரையை வாசித்தபிறகு கழுதைமேல் அமர்ந்த கிருஸ்வை நாம் இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது.
கேள்வி: இந்த தெரிவின் வழியாக ஒருவகையில் உங்கள் அழகியலையும் ரசனையையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: இந்த தெரிவு கல்பற்றா மீதான என் வாசிப்பு என்று சொல்லலாம். ஆனால் அது வழியாக என் அழகியலையும் ரசனையையும் முன்வைக்கிறேன் என்று சொல்லமுடியாது. காரணம் இந்த மொழிபெயர்ப்பு வழியாக தமிழ்ச்சூழலுக்கு அறிமுகம் ஆவது கல்பற்றாவின் அழகியல்நோக்கும், அவர் ரசனையும்தான். நான் தேர்வுசெய்த கட்டுரைகள் கல்பற்றாவின் அக்கறைகளை, கேள்விகளை, வாழ்க்கைநோக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். என் அழகியல்நோக்கையும், ரசனையையும் முன்வைப்பதாக நான் எண்ணவில்லை.

கேள்வி: கல்பற்றா தன் கட்டுரைகளில் காட்டும் மேற்கோள்களைப் பற்றி கேட்கலாம் என்று நினைக்கிறேன். பைபிள், நீட்ஷே, விட்கென்ஸ்டைன், குமாரன் ஆசான், அச்சுதன் நம்பூதரி, ஆற்றூர் ரவிவர்மா என்று பலதரப்பட்ட ஆளுமைகளை தன் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார். இவை கட்டுரையின் ஒழுங்கில் இயல்பாகப் படிந்திருப்பதை வாசிக்கும் போது உணரமுடிகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய மேற்கோள்களை தமிழ்ப்படுத்துவதைப் பற்றியும் கூறவும்.
பதில்: கல்பற்றா தன் கட்டுரையில் அளிக்கும் கவிதை மேற்கோள்கள் கட்டுரையில் அவர் வெளிப்படுத்தும் எண்ணங்களையும், அவதானிப்புகளையும் துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவை கட்டுரையில் மிக இயல்பாக படிந்திருக்கின்றன. சமீபத்தில் விஷால் மொழிபெயர்த்து அகழில் வெளியான ஆடம் கிரிஷின் “விமர்சனத்தில் நவீனக்கூறு” என்ற கட்டுரையிலும் கிரிஷ் மேற்கோள் காட்டும் கவிதை பற்றிய கவிஞர்களின் வரிகளில் அதே தன்மை இருந்தது. தீவிர படைப்பூக்கத்தின் விளைவாகத்தான் அந்த appropriateness நிகழ்கிறது என்று தோன்றுகிறது.
மேற்கோள்களில், குறிப்பாக கல்பற்றா அளிக்கும் மலையாளக்கவிதை மேற்கோள்களை தமிழ்ப்படுத்துவதில் எனக்கான சவால் இருந்தது. மலையாள நவீனக்கவிதையிலும் ஒருவகையான சந்த அமைப்பு உண்டு. மொழிபெயர்க்கும்போது தமிழில் சமானமாக சந்த அழகுடன் உள்ள சொற்களை தேர்ந்தெடுத்தால், சந்த அழகிற்காக கவிதையழகை இழக்க வேண்டியிருந்தது. சாத்தியமான அளவுக்கு கல்பற்றா மேற்கோள் காட்டும் கவிதைவரிகளின் கவிதைத்தன்மையை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மொழிபெயர்த்தேன்.
கேள்வி: மேற்கோள்களைப் பற்றி மற்றுமொரு கேள்வி. அநேகமாக அவருடைய எல்லா கட்டுரைகளிலும் பைபிள் பற்றிய குறிப்பு வந்து விடுகிறது. இதுமட்டுமில்லாமல் கிரேக்க, எகிப்திய தொன்மங்களைப் பற்றிய குறிப்புகளும் கூட தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்டுரையிலும் இவை இயல்பாகவும் அமைந்திருக்கின்றன. இந்த முரண்பாடு வியப்பூட்டுவதாக இருக்கிறதே?
பதில்: தொன்மங்கள் கல்பற்றாவிற்கு மிக உவப்பானவை. வரலாற்றைவிட தொன்மங்களே நுண்ணுணர்வுள்ள மனிதனுக்கு தேவை என்பது அவரின் நிலைப்பாடு. பைபிளும் அவருக்கு ஒருவகையான தொன்மகளஞ்சியம்தான். சொர்க்கம், பாவத்தின் கனி, ஆதம் என பைபிளின் படிமங்களுக்கு கல்பற்றா அவருக்கே உரிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டவர். மனிதனின் மரணம் பற்றிய அறிதல்தான் அவனை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது என்று ஒரு கட்டுரையில் சொல்கிறார். (பிற உயிர்கள் மரணடையும் கணத்தில் மட்டுமே மரணத்தை அறிகின்றன, மனிதன் மட்டுமே ஒவ்வொரு கணமும் தனக்கு மரணமுண்டு என்பதை அறிகிறான்)
Standardized மொழியை பாவத்தின் கனியாக ஒரு இடத்தில் சொல்கிறார். தொன்மங்கள் அவரின் சிந்தனைமுறையின் இயல்பான பகுதி என்பதால், மனிதனின் அடிப்படையான நிலைகளை சுட்டும் படிமங்கள் கொண்டது என்று அவர் உணர்வதால் வெவ்வேறு வகையான தொன்மமும் கட்டுரையில் இயல்பாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
கேள்வி: கல்பற்றாவை மொழிபெயர்ப்பதினால் உண்டாகும் நிறைவின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த நிறைவின்மை ஒருவகையில் அடுத்த மொழிபெயர்ப்பு பணிக்கான தூண்டுதலையும் அளித்துவிடுகிறது என்று சொல்லலாமா? மேற்கொண்டு கல்பற்றாவின் ஆக்கங்களை மொழிபெயர்க்கும் திட்டம் இருக்கிறதா? உங்கள் அடுத்தகட்ட பணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
பதில்: ஆம். அடுத்து கல்பற்றாவின் கவிதைகளை மொழிபெயர்க்கவேண்டும் என்பது என் எண்ணம், சில கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன் அகழில் வெளியாகியிருக்கிறது. கல்பற்றாவின் மொழிபெயர்க்கவேண்டிய கட்டுரைகள் இன்னும் நிறையவே உள்ளன. ஆனால் நான் சில கட்டுரைகள் எழுதும் திட்டம் இருக்கிறது, அதற்காக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
000
“கருப்பு இருட்டல்ல”, விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியீடு.

ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
ஜனார்த்தனன் இளங்கோவின் கேள்விகளும் அழகிய மணவாளன் பதில்களும் தெளிவையும் கூடுதல் கண்டுபிடிப்புகளையும் கொண்டவை. பி.கே. பாலகிருஷ்ணனுக்கும், கல்பற்றா நாராயணனுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் காணும்விதம் எனக்கு கூடுதல் திறப்பை அளிப்பது. அழகிய மணவாளனிடம் ஒரு வேண்டுகோள். கல்பற்றாவின் புதினங்களை, குறிப்பாக, சுமித்ராவை மொழிபெயர்த்துத் தரவேண்டும். பி.கே. பாலகிருஷ்ணன் எழுதி தமிழில் அ. மாதவன் அவர்களால் ரத்தக்களறியாக மொழிபெயர்க்கப்பட்ட இனி நான் உறங்கட்டும் நாவலையும் செய்யவேண்டும். தனியாக அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டேன்…இப்போது பொதுக் கோரிக்கையாக அவருக்கு நினைவுறுத்தி ஒரு கூடுதலான சிக்கலைத் தருகிறேன்…என்ன செலவானாலும் அந்த மொழிபெயர்ப்புகளுக்கு நான் பொறுப்பு அழகிய மணவாளன்…உங்களது தொடர் செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்…
சுந்தர ராமசாமி, சிற்பி, நிர்மால்யா, சுகுமாரன், ஜெயமோகன் வாயிலாக நிறைய மலையாளக் கவிஞர்களும் கவிதைகளும் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும் நவீன தமிழ் கவிதை வாசகர்களுக்குக் கிட்டத்தட்ட தமிழ் கவிஞர் இவர் என்ற அளவில் நெருக்கமான உணர்வைத் தருபவர் கல்பற்றா. இன்னொருவர் அய்யப்பன். தனிப்பட்ட வகையில் எனக்கு பி.ரவிக்குமார் எனக்கு நெருக்கமாக இருக்கிறார். கக்காடு, சச்சிதானந்தன், ஆற்றூர் ரவிவர்மா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, டி பி ராஜீவன், பி. ராமன் போன்றவர்களின் சில கவிதைகளே நமக்கு ஞாபகத்தில் உள்ளன. மலையாளக் கவிதையின் வளமையான இசைத்தன்மையைத் துறந்தவர் என்பதும் அவரது பாடுபொருளின் நவீனமும் தமிழ் நவீனகவிதைகளுக்கு நெருக்கமாக இருப்பவை…தேவதச்சனோடு சேர்ந்து பார்க்கத் தூண்டும் கவிதை உலகம் கல்பற்றாவினுடையது என்று எண்ணுகிறேன். தேவதச்சனைவிட கூடுதலான உலகியல் வண்ணங்களோடு…அழகிய மணவாளனின் உரையாடலைத் தொடர்ந்து எனக்குள் கிளர்ந்த எண்ணங்கள் இவை…
குஞ்சுண்ணியும் ஓரளவு தமிழ் வாசக உலகத்தில் முழுமையாக இறங்கியுள்ளார்…அது ஒரு விடுபடலாகிவிட்டது…