பேச்சு-காலம்-இடையீடு
முன் குறிப்பு – எப்போதுமே ஒரு படைப்பை பற்றிய பேச்சு என்பது வாசிக்காதவரை வாசிக்க வைப்பதாகவும், வாசித்தவருக்கு புதிதாக எதையாவது சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இருப்பினும் கீழே வரவிருக்கும் பத்திகள் இதுபோன்ற எதையாவது ஒன்றை செய்யும் என்று என்னால் நூறு சதவீதம் சொல்லமுடியாது.
வாழ்வனுபவம் என்ற பதம் எப்போதுமே காட்சி என்ற அம்சத்தால் ஆனது.இரண்டும் விகிதாச்சார அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.எவ்வளவாக காட்சியை காட்டிகிறோமோ அந்த அளவிற்கு வாழ்வனுபவம் கூடும். காட்சி என்பது வாசகன் உத்தேசித்துக்கொள்வது அல்ல.வாசகனுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒன்றை ஆசிரியன் தனக்கானதாக சமைந்துக்கொண்டு எழுந்தால் கண்முன் விரிப்பது.அது வரையில் அவன் வாழ்ந்த வாழ்வுடன் அது இணைந்து கொள்கிறது.இப்படியாக வாசிப்பு என்ற அனுபவம் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.எண்கோண மனிதனை பொருத்தவரை இந்த காட்சி அம்சங்கள் வாழ்வு என்ற பதத்துடன் தொடர்பு கொண்டதாக அல்லாமல், பேச்சு என்ற பிரதான கதை சொல்லும் கருவிக்கு உறுதுணையாக மட்டுமே வருகிறது.
என்னளவில் பேச்சு என்ற கருவியை ஒரு கதை சொல்வதற்காக மட்டுமே பயன்படுத்தியதாக படவில்லை. சொல்லப்போனால் நாவலின் ஆசிரியருக்கு கதையை சொல்வதே உத்தேசமில்லை என்று தோன்றுகிறது.அதாவது சோமன் (எ) சௌமிய நாராயணன் என்ற நாடக/இசை கலைஞனை பற்றிய கதை என்றோ, சோமனை பற்றி தற்செயலாக அறிந்துக்கொண்ட சம்மந்த மூர்த்தியின் வாழ்வு தான் கதை என்றோ,சம்மந்த மூர்த்தியின் ஒன்றுவிட்ட அக்கா மகனான கிருஷ்ணனின் கதை என்றோ புரிந்து கொள்ள முடியவில்லை.இதில் வெளிப்படையாக தெரியாத பேச்சு தான் அனைத்தும் என்று படுகிறது.அதாவது பேச்சு கருவி அல்ல கதையே பேச்சு தான்.
உதாரணமாக, நான் ஒன்று சொல்கிறேன். அத்தியாயம் நான்கில் சம்மந்த மூர்த்தியின் பிறப்பை பற்றி வரும் பகுதிகளை நன்றாக பார்த்தால் உங்களுக்கு புரியும்.தொடக்கத்தில் கிருஷ்ணனும் மாமாவும் பேசுகிறார்கள். சட்டென்று காலம் பின்நோக்கி செல்கிறது.இரவுப்பொழுதில் காட்சி தொடங்குகிறது அங்கு கிருஷ்ணன் பத்து வயதில் இருக்கிறான்.அவனின் உறவினர்கள் பலர் சூழ, அவனின் மாமாவின் ஆசைக்கு இணங்க கிருஷ்ணனின் அம்மா மாமா சம்மந்த மூர்த்தியின் பிறப்பை பற்றி பேசுகிறார். காலம் பின்னோக்கி செல்கிறது 1920 ,தான் சிறுமியாக இருந்த போது தன் சித்தியை பற்றி விவரிக்கிறார்.அவளின் மகப்பேறு பெற்ற மருத்துவமனையில் சம்மந்த மூர்த்தியின் ஜாடையிலேயே இன்னொரு குழந்தை பிறந்தது என்று சொல்லி முடிக்கிறாள். இதில் காட்சி தவ்வி தவ்வி செல்கிறது உண்மையில் நான் எதை என் மனக்கண்ணில் பார்த்தேன் என்பதே குழப்பமாக இருக்கிறது.அப்படி இருக்க பேச்சு வழி நகரும் கதைக்கு காட்சி சிறு உதவி செய்கிறது என்று நான் சொல்வதில் தவறு இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
இல்லை ,என்னளவில் எனக்கும் ஓர் உதாரணம் உண்டு. நாவலில் பல இடங்களில் மாமா சொல்லியதை தான் கேசர்ட் வழி கேட்டு தான் எழுதுகிறேன் என்று சொல்லும் கதை சொல்லி சில இடங்களில் எழுத்தாக வடிக்கும் போது சற்றே நொந்துகொள்கிறார்.அந்த உதாரணம் – “பார்க்கப்போனால், நேரிலும் கேஸட்டிலும் மாமா விவரித்த விதம், அவருடையை மொழியாளுமை, உணர்ச்சி ததும்பல் இவற்றுடன் ஒப்பிட்டால்,வெறும் இரு பரிணாமத்தட்டைதானே நான் எழுதிச்செல்வது. … “இது போக பின்நவீனத்துவ நாவல்களில் இயல்பாக இப்போதெல்லாம் அதிக ஊடுபிரதி தன்மை இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நாம் ஆசிரியனை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம்.ஓர் உரையில் இலக்கணப்பிழை பற்றியும் அதிலிருந்து வெளிவருவதற்கு பேச்சை தீர்வாகவும் சொல்கிறார்.இதை எல்லாமும் சேர்த்து தான் அந்த முடிவிற்கு வருகிறேன். தவறாக இருக்கலாம்
நான் சொல்லும் இந்த அம்சம் நிகர் வாழ்வனுபவத்தை எட்ட முடியாமல் ஆகிறது. அதனாலேயே பேச்சில் சுவாரஸ்யம் உள்ளவர்களுக்கு இந்த நாவல் எடுபடலாம் என்ற முடிவிற்கு தான் வர முடிகிறது. ஆனாலும் இதை வாசித்த பின்னர் சுவாரஸ்யமே இல்லாத ஆட்கள் பேசினாலும் கேட்டுவிட முடியும் என்று தான் தோன்றுகிறது. முன்னோடிகள் பேச்சை மொழியில் எழுவதற்கே பெரிய கண்டிஷன் இருப்பதாக சொல்கிறார்கள் அதை மீறுவதன்மூலம் பேச்சை பிரதானமாக ஆக்குகிறது என்று சொல்ல தோன்றுகிறது. அதை நீங்கள் கதை என்றீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்.
தொடக்கத்தில் எனக்குமே பேச்சு பெரிய சோர்வை தான் தந்தது.கதை கேட்டு கதை கேட்டு சோர்வு அடைந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஜிகர்தண்டா படத்தில் வரும் ‘பொட்டிக்கட பழனியை போல சிலர் என் தலை மீது ஏறியதாக தோன்றியது. ஆனால் மிக முக்கியமான இடத்தை நான் அவதானித்துவிட்டேன்.அதை பார்த்தவுடன் கை நடுங்கியது. கிருஷ்ணனை வேண்டிக்கொண்டேன் (நாவலில் வரும் கிருஷ்ணனை)இடையீடு ஏதேனும் செய்து விடாதே என்று. நாவலின் இறுதி பகுதியில் அத்தியாயம் 21-யில் கிருஷ்ணன் மாமாவிடம் சோமனை தேடி அலைவதை நிறுத்தியதை பற்றி கேட்கிறார்.அகச்சீற்றத்திற்கு உண்டான மாமா கொந்தளிக்கிறார்.அதுவரை நாவலில் வந்த பாத்திரங்கள் சொல்லும் சோமனை பற்றி தகவல் எல்லாம் தானே சம்மந்த மூர்த்தியை ஆட்டிவைத்து ஆர்வம் கொள்ள வைத்திருக்கிறது என்று நாம் நினைப்போம்.ஆனால் அதை எல்லாம் மறுக்கும் அளவிற்கு சோமனை பற்றி எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆட்படுவார் சம்மந்த மூர்த்தி.’ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்‘ என்ற பாணியில் நியாயப்படுத்த தொடங்கிவிடுவார்.அது சோமனின் கலை வெற்றியை கருத்தில் கொள்ளாது அவனின் வீழ்ச்சியை பிரதாணப்படுத்தும் வாதமாக இருக்கும். சிக்கல் என்னவென்றால்? அந்த பேச்சை தொடங்கும் போது இப்படிச்சொல்வார் –
‘ஒரு சின்ன காத்து போறும் ,எல்லாத்தையும் ஊதி வெரட்டறதுக்கு‘ன்ற மாதிரி ஒரு வரி படிச்சேன். எங்கே எதுலேன்னு ஞாபகம் வல்லே… அது கெடக்கட்டும் விடு… .. ‘
என்று தொடர்கிறார்.இதற்கு நான்கு பத்தி முன்பாக கிருஷ்ணன் தன் மாமா தந்த சோமனின் புத்தகம்(எழுதியதல்ல.அவர் கையில் உள்ள ஒன்று) ஒன்றை பற்றி விவரித்துவிட்டு அந்த புத்தகத்தின் இடையே உள்ள துண்டு சீட்டை வாசித்து பார்த்து, அதில் உள்ள கவிதை ஒன்றை தருகிறார்.அதில் முதல் இரு வரி –
“சிறு பொறி போதும்
என் வனத்தைக் கொளுத்த
சிறு காற்று போதும்
என் ஆயுள் அனுபவங்களை ஊதி அகற்ற. … “
என்று நீள்கிறது கவிதை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? சம்மந்த மூர்த்தி என்ற ஆளுமையை உற்றுப் பார்க்கவேண்டிய இடம் இது தான் என்று தோன்றுகிறது.இந்த அத்தியாயத்தின் சாரம் இது தான். ஆனால் இதை ஒரு சாதாரண வரியாக மாற்ற தான் முன்னே உள்ள அனைத்தும் என்று தோன்றுகிறது.உண்மையில் சம்மந்த மூர்த்தியின் ஆளுமை முழுவதும் சோமன் தான் உள்ளான்.இந்த இடம் தர்க்க ரீதியான நியாயப்படுத்தல்களை அதில் உள்ள வேர்பிடிப்பில்லாத இடங்களை சுட்டுவது போல் எனக்கு தோன்றுகிறது.உள்ளே இருப்பது வேறொன்று அதை கபடமாக நடிக்கிறார் என்ற அர்த்தத்தில் இதை சொல்லவில்லை.இயல்பாகவே உள் இருப்பது அவர் சொல்வதற்கு மாறானது.
ஆனால் நாவல் என்ற இலக்கிய வடிவை பொருத்தவரை பல்வேறு துறை சார்ந்த வாசிப்பிற்கு இடம் இருப்பதாக தானே இருக்கிறது.ஒரு பொருளாதார நிபுணரோ,வரலாற்று ஆசிரியரோ ஏதேனும் படித்து இதை பற்றி சொல்லவேண்டும் தானே.இந்த வகையான கூறு முறைகள் அந்த துறை சார்ந்த வாசிப்பை திட்டவட்டமாக மறுக்கிறது.இது போன்ற பௌதீக அத்தியாவசியத்தை தீர்மானிக்கும் விஷயங்களை வலுவற்றதாக சித்தரிக்கும் போது முன் நகர்தல் என்ற விஷயத்திற்கு மாறாக கைவிடல் என்ற நிலைப்பாட்டையே எடுக்க வைக்கும்.நாவல் பேச எத்தனிக்கும் விழுமியங்கள் மீது கைவிடல் நடைபெறுவதை தனிபட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோக எப்போதுமே இலக்கிய பிரதியை வாசித்து முடிக்கும் போது இயல்பாக நம்முள்ளே எழும் கேள்விக்கும்,எழுத்தாளர் படைப்பில் உத்தேசித்ததும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.ஆனால் ஒரு தொடர்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதை வைத்து தான் வாசகனின் விழுமியங்கள் மீதான மதிப்பீட்டை மாற்றியமைக்கும் என்பது என் எண்ணம்.
இது சற்றே ஆசிரியரின் உத்தேசிப்பு பற்றியது.வலுவான தன் ஆன்மீக நிலைபாடு சம்மந்தப்பட்டது.எழுத்தாளர் ஜெயமோகன் பாரதி, தாகூர் போன்ற இலக்கிய முன்னோடிகளின் வெற்றிக்கு அவர்களின் ஆன்மீக நிலைபாடு முக்கிய காரணம் என்கிறார்.அதுமட்டுமின்றி இதை பற்றி என் பதில் ஆசிரியரின் காலம் சார்ந்த நிலைபாடு சம்மந்தப்பட்டது என்பேன். நீங்கள் சொல்லும் பொருளியல், வரலாறு, அரசியல் அனைத்துமே காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.தனிமனிதனின் பங்கு இவற்றில் என்ன என்று யோசித்து பார்த்தால் ஒரு கருத்து நமக்கு வரலாம்.’கூட்டு‘ என்ற பதத்துடன் தான் இவைகள் போன்ற பண்பாட்டிற்கு முக்கியமான துறைகள் உரையாடும். நீங்கள் சொல்லும் அந்த விழுமியம் என்பதே நாவலில் இது தான் என்று உத்தேசிக்கிறேன்.கேள்வி – உத்தேசம் என்பதை பொருத்தவரை தீர்மானமாக எதையுமே சொல்லிவிட முடியாது.நாவல் தொடங்குவதற்கு தேவையான எத்தனிப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.காலம் சார்ந்த நிலைபாடு என்பதை நாம் பாத்திர வார்ப்பு வழியாகவே அடையமுடியும். அது தான் சாத்தியம் அல்லவா.கதைசொல்லியை அழைத்து கேட்க முடியாது தானே.பாத்திரங்கள் காலத்தை விதவிதமாக அணுகுவதை நாவல் முழுதும் பார்க்கலாம்.இதை தெளிவான கோட்பாடுகள் வழியாக ஒரு உளவியல் நிபுணர் சொல்ல கூடும் இருந்தாலும், ஒரு போட்டி தேர்வு ஆர்வலன் என்ற முறையில் ஒரு சம்பவத்தை சொல்கிறேனே.1905 அக்டோபர் 16 – வங்கப்பிரிவினை. 1906 அக்டோபர் 16 – வ. உ. சி சுதேசி கப்பல் கம்பெனியை உருவாக்குகிறார்.இதை நினைவில் வைத்துக்கொள்வது மிக எளிது இது தற்செயலாக இருக்கலாம்.ஆனால் இந்த சம்பவங்கள் காலத்தை நினைவில் வைத்துக்கொள்ளவும் காலம் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளவும் நன்றாக ஒன்றி வந்திருக்கிறது. மற்ற புனைவுகளின் இது போன்ற பொருந்தி வரும் அம்சங்கள் இருக்கும். எண்கோண மனிதனை பொருந்த வரை ஒவ்வொரு பாத்திரமும் சோமன் பற்றி தன் நினைவிற்கு சரியாக காரணத்தை வைத்திருக்கும். உதாரணமாக கிருஷ்ணன் 1972-ல் தன் தந்தையை இழக்கிறார். அதற்காக மாமா டெல்லியில் இருந்து வந்தாலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு சோமனை பற்றிய தன் விசாரணைகளை மேற்கொள்ள சில ஆளுமைகளை சந்திக்கிறார்.அப்போது பார்த்த / கேட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு தான் பின்னாளில் கிருஷ்ணன் சோமனை மாமா தேடியதை பற்றி எழுதும் போது தன் அனுபவத்தையும் எழுதுகிறார்.கிருஷ்ணன் இதை மட்டும் எப்படி நியாபகம் வைத்திருக்கிறார் என்று நாம் கேட்கலாம். (நியாப சத்தி தனக்கு குறைவு என்று கிருஷ்ணனே சொல்லும் இடங்கள் நாவலில் உண்டு) அதற்கு பதில் –அப்பாவின் இறப்பு அப்போது நடந்திருக்கிறது அதனால் தான் அவன் நினைவில் வைத்திருக்கிறான் என்பது என் அவதானம்.மகாமுனியிடம் கிருஷ்ணன் உரையாடடும் அத்தியாயத்தை பார்த்தால் ஒன்று புரியும், அந்த பாத்திரம் மிக தெளிவாக அரசியல் வரலாற்றை வைத்திருக்கிறது அவ்வரலாற்றுடன் தன் வாழ்வு பிணைந்துள்ளாக அந்த பாத்திரம் எண்ணலாம். ஆனால் சோமனை பற்றி அது ஒன்றுமே சொல்லவில்லை.ஏன் அதற்கு சோமன் பொருள் படவில்லை…
குறுக்கீட்டு செய்ய மன்னிக்கவும். அந்த அத்தியாயத்தில் பிரமாதமாக ஒரு காட்சி சித்தரிப்பு இருக்கிறது கவனித்தீர்களா? மகாமுனி இல்லாத போது அவர் வீட்டில் இருந்து கீழே பார்ப்பார் கிருஷ்ணன்.அப்போது வயது முதிர்ந்த பசு ஒன்று மந்தமாக தரையில் அமர்ந்து அசைபோடும். அதை ஆர்வமாக ஒரு சேவல் பார்க்கும். இந்த படிமம் அபாரமான அந்த காட்சிக்கு ஒன்றி வருகிறது.பசுவையும் சேவலையும் அந்த அத்தியாயத்தில் உள்ள பாத்திரத்துடன் பொருத்தி பார்க்க முடிகிறது. … தொடருங்கள்
ஓ… அந்த மகாமுனி பாத்திரம் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை என்று கேட்டுப் பார்த்தால் ஒன்று தெரிகிறது அவருக்கு சோமன் வெறும் பெயராக எஞ்சி இருக்கிறார்.அது காலத்தால் நிகழ்ந்த ஒன்று.அந்த துறைகள் சார்ந்த விஷயங்கள் அனைத்துமே மிக வலுவானது. இந்த வலுவான விஷயங்கள் மீது ஆசிரியருக்கு பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருக்கலாம். காலத்தால் பெயராக எஞ்சி விட்ட ஒருவர் என்பது மனிதனாக வாழ்ந்த அனைவருக்கும் நிகழும் என்று நினைக்கிறேன்.இதில் ஒளிப்பாய்ச்ச முற்படுவதாக நான் கருதுகிறேன்.நீங்கள் சொன்ன இந்த துறைகள் தானே இது போன்ற ஆளுமைகளை வெறும் பெயராக ஆக்கியிருக்கிறது.அந்த சம்பவத்தை முடிக்கவில்லையே தேர்வில் அதை கேள்வியாக கேட்டபோது வ.உ.சி என்று எழுதுவதற்கு பதில் வ.வே.சு என்று எழுதிவிட்டேன். நான் இதனுடன் தான் இதை தொடர்புபடுத்திப் பார்க்கிறேன்.இதை தடுமாற்றம் என்று சொல்லி தப்பித்துக்கொள்வது எளிது.அதை தான் நாவல் வாசிக்கும் முன்புவரை சரி என்று எண்ணியிருந்தேன்.
ஆனாலும் காலம் பற்றிய குழப்பங்கள் நாவல் முழுவதுமே இருந்து வருகிறது.இறுதியில் அதை கிருஷ்ணனே ஒத்துக்கொள்ளும் போது நாவல் காலத்தை சற்று தள்ளிப்போ என்ற தொனியில் நம்மை பேசுவைக்கிறது.அதை தாண்டி தேடச்செய்கிறது.நீங்கள் இதுவரை சொன்னது நாவலில் வெளிப்படும் காலம் அல்லவே. காலம் பற்றி தன் அபிப்பிராயத்திற்கு அப்பால், பௌதீக(நாவல் பயணிக்கும்) காலம் பற்றிய குழப்பத்தை கிருஷ்ணன் வெளிப்படுத்துகிறார்.அதை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.அதுவரை பிழை என்று எண்ணிவந்த விஷயத்தை ஆசிரியரே வெளிப்படுத்தும் போது, ‘ அவரே நாவலை எழுதி அவரே வாசித்தும் விட்டாரே நாம் என்னத்தை சொல்வது’ என்று தோன்றுகிறது.நாவல் முடியும் தறுவாயில் எட்டு பாத்திரங்கள் இருக்கிறதா என்று தேடினேன்.குழப்பி மீண்டும் வாசிக்க வந்தால் கடைசி அத்தியாயத்தில் இதைப்பற்றி அவரே பேசுகிறார்.
அதாவது இது ஒர் உத்தி என்று தான் என்னளவில் சொல்வேன்.ஆனால் வழக்கமாகவே நாவல் வடிவத்தில் இயங்கும் காலம் போல தெளிவானதான எல்லைக்குட்பட்ட ஒன்றுதான் இந்நாவலில் வெளிப்படும் காலமும்.இதைபபற்றி பேசும் போது கிருஷ்ணனின் அடி குறிப்புகள் பற்றி பேசவேண்டும். (ரொம்பவே நாவல் பற்றி அதிகம் பேசுகிறேனோ. என்ன செய்வது கலைச்சொற்களால் சுருக்கமாக சொல்ல விரும்பவில்லை)அதற்கு முன்பாக ஒன்று, கடைசி இரு அத்தியாயத்தை பொருத்த அளவில் காலம் பற்றி தெளிவு ஆசிரியருக்கே தெரியவில்லை என்று பாவனையை மேற்கொள்கிறது அதனால் இதன் உத்தேசங்களை பற்றி பேச வேண்டியதில்லை. விளைவாக நாம் ஒன்றை கற்பனை செய்யலாம்.நாவலின் வேறு சில அம்சங்களை கண்டறிய தம்மை முன் நகர்ந்துவது போல் தோன்றுகிறது.கடைசி அத்தியாயத்தை வாசிக்கும் போது எனக்கு ஆசிரியன் இறந்துவிட்டான் என்பது போல பிரிதி இறந்துவிட்டது என்று ஏதேனும் இருக்கிறதோ என்று தோன்றியது.அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இது நாவல் அல்ல என்கிறார். பிற்பகுதியில் இப்படி ஒரு வரி வருகிறது
-“பொதுவாக,என் நாவல்களில் கிருஷ்ணன் ஒரு பாத்திரமாக இடம் பெற்றதேயில்லை. மூன்றாம் மனிதர்களின் கதையில், ஏது இடம்?!”
இதை வாசிக்கும் வரை இறுதி அத்தியாயத்தை எழுதுவது யுவன் சந்திரசேகர் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.கிருஷ்ணன் பயணக்கதையில் வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால் இதை எழுதியது யார்? ஒரு வகையில் கிருஷ்ணன் என்று சொல்லலாம்.கிருஷ்ணனே கிருஷ்ணனை வைத்து தன்மையில் சொல்லிய நாவல் இது. ஆசிரியர் அப்படி தன்னை வெட்டிக்கொண்டு என்ன செய்யப்பார்க்கிறார் என்று எரிச்சல் தான் முதலில் வந்தது. ஆனால் இந்த தன்மை நீங்கள், நான், சம்மந்த மூர்த்தி, கிருஷ்ணன், நாவலை எழுதிய கிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் என்று அனைவரையும் ஒன்று என நிறுவமுயல்கிறது.
அடிக்குறிப்பு பற்றி சொன்னீர்கள்.இந்த நாவலை பொருத்தவரை பிரதிக்கும் நமக்கும் இடையே நிறைய நபர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.சோமனை பற்றிய தகவல்சொல்லிகள் அதன் வழி மாமா அவர் வழி கிருஷ்ணன் பின்னர் தான் நாம் இருக்கிறோம்.இப்படியாக நான்கு காதுகள் தள்ளி தான் நம்மை அடைகிறது கதை. இதை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஆங்காங்கே அடிக்குறிப்பு வழியாக இடையீடு செய்து கொண்டே இருக்கிறார். பெரும்பாலும் அது நம்பகத்தன்மை குறையும் போது.நாம் சரியாக அவதானித்த ஒன்றை ஒரு கருவியாக வனைந்துகொண்டு நாவலை அணுகலாம் என்று எண்ணும் போது கிருஷ்ணன் இடை மறிக்கிறார்.ஒரே சொற்றொடர் மீண்டும் ஒரு முறை வரும்போது அது ஏதோ உருவகமோ என்று யோசிக்கும் போது அதை கிருஷ்ணன் இடையீடு செய்து மட்டுப்படுதுகிறார்.
ஆங்…நல்லவேளையாக நினைப்படுத்திவிட்டீர்கள்.அதன்வழி கிருஷ்ணன் சதா தன் மாமாவின் நினைவாற்றலை கண்டு பூரிக்கிறாரே அதை உடைக்க முடியும் என்று படுகிறது. அது இலட்சுமணன் பற்றிய அத்தியாயம்.அதில் வரக்கூடிய சொற்றொடர் .
‘ரொம்ப வருசமா பூசையிலே இருந்த மூலவரு கணக்கா அத்தன திருத்தமா இருப்பான்‘
இது சோமனை பற்றி இலட்சுமணன் வருணிப்பது.நாவலின் பெரும் பகுதி மாமா கேஸட்டில் குரல்பதிவு செய்தது தான் என்பதை முன்னே பேசியிருந்தோம் தானே. அப்படி குரல் பதிவில் வரக்கூடிய அத்தியாயம் இது. இங்கு தான் கிருஷ்ணன் தன் இருந்தலை நிறுவுவது மட்டுமல்லாமல் மேலதிகமான அர்த்தமுள்ள ஓர் இடத்தை நமக்கு காட்டுகிறார்.இதே வரியை அலமேலுவை பற்றி சொல்ல மாமா பயன்படுத்தி இருப்பார். இந்த இடத்தில் மாமாவின் நினைவை நாமே கேள்விக்கேட்கும் இடத்திற்கு நம்மை இட்டு செல்கிறார்.
நீங்கள் சொல்லிய விஷயம் தான் எனக்கும் தோன்றுகிறது ஆனால் அதை என் மொழியில் சொல்லவேண்டும் என்றால் – மூன்று அடுக்குகளால் ஆனது யுவன் படைப்புகள் என்று சொல்வேன்.
1.மொழி 2.தர்க்கம் 3.கற்பனை இந்த அடுக்கில் தான் இவை இருக்கின்றன. கற்பனையை எட்டவேண்டும் என்றால் மேலே உள்ள இரண்டு அடுக்குகள் தரும் தடையை அல்லது பாவனையை மீறவேண்டும்.
அதுபோக பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு ஒருவர் பேசுவதை வைத்துத்தானே நாம் அவரை தீர்மானிக்கிறோம்.அது சார்ந்த கருதை உருவாக்கி கொள்கிறோம்.யுவனை படிக்கும் போது இது அவ்வளவு அபத்தமாக தெரிகிறது.
மற்றுமொரு விஷயம் – தர்க்கப்பார்வையை மறுக்கும் போதும், அதன் எல்லையை சுட்டுவதன் மூலமும், அதன் இருத்தலை உணர வைத்தல் மூலமாகவும் தர்க்கதிறனை வலுப்படுத்தும் முயற்சி தான் விளைவாக நடைபெறுகிறது என்று என்னால் சொல்ல முடியும்.நாவலிலே பாருங்கள் ‘தொகுத்து சொல்கிறேன்‘ என்று அடிக்கடி கிருஷ்ணன் சொல்கிறார். அப்படி சொல்லும் போதும், செய்யும் போதும் தர்க்கம் தான் தொடர்ந்து செயல்படுகிறது.
சோமனை தேடி அலையும் மாமா பல ஆளுமைகளை சந்திக்கிறார் அதாவது நாவலின் படி பாத்திரங்கள். அவைகளின் பேச்சிலும் மொழியிலும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லையே. உதாரணமாக அனைவருமே பழமொழியோ , சொலவடைகளோ சொல்கிறார்கள். அது ரொம்பவே ஒற்றை படையான அனுபவத்தை தான் கடத்துகிறது.இலட்சுமணன் அத்தியாயத்தையே பாருங்கள் அந்த பாத்திரம் சோமன் சொன்னதாக ஒரு வரியை சொல்கிறது.அது தனக்கு புரியவே இல்லை என்று சலிக்கிறது. தனக்கு புரியாத ஒன்றை இத்தனை காலமாக ஒருவன் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும். அது மட்டுமன்றி இந்த பாத்திரங்கள் பலவற்றுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. அது வறுமை. அதனால் ஏதாவது ஒரு பாத்திரமானது கொந்தளித்ததா?
எனக்கு அப்படி தோன்றவில்லை.நாவலின் ஓர் இடத்தில் ‘திட்ட திட்ட திண்டுக்கலு வைய வைய வைரக்கல்லு‘ என்று ஒரு வரி வருகிறது. இதை போன்ற சில சொலவடைகளும் வரவே தான் செய்கிறது. பின்னே கடைசி பத்தியில் அவர் சொன்னாரா? என்று நினைவில் இல்லை என்று கிருஷ்ணன் சொல்கிறார்.இதற்கு என்ன அர்த்தம் என்று சற்று யோசித்து பார்த்தால் தெரியும்.கேசட்டில் மாமாவின் குரல் வழியாக இதை எழுதுவதாக கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார் அல்லவா? அப்படி என்றால் கிருஷ்ணனின் மனம் மாமாவின் சிந்தனைக்கு பழகி விட்டது என்று தானே அர்த்தம்.இதுபோக முன்னரே பேசியது போல மாமாவின் இடையீடும் , கிருஷ்ணனின் இடையீடும் நிறைந்த ஒரு பிரதியை தான் நாம் வாசிக்கிறோம். இது இரண்டும் ஒன்றொடு ஒன்று முயங்கி தானே வரும். அப்படி என்றால் இருப்பது ஒரு சிந்தனை. அதனாலே தான் அந்த அனுபவம். இலட்சுமணன் பற்றி சொல்லும் ஒரு உதாரணம்– யாருமே அவர்களின் ஊரில் பார்த்த பைததியத்தை மறக்க மாட்டார்கள். அது போல தான் இதுவும். பைத்தியம் என்பதை பிரத்யேகம் என்று புரிந்துக் கொண்டால் சோமனும் பிரத்தியேகம் தான் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் தானே.சரி இப்படி வைப்போம் சம்மந்த மூர்த்தி ஒரு பிராமணர், சோழனின் தாயாரும் ஒரு பிராமணர் இதை வைத்தே ஒரு கதையை பண்ணிக்கொண்டு கற்பனை செய்து இந்த விஷயங்களை எல்லாத்தையும் கைவிட்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை. இதற்கு பதிலும் கொஞ்சம் முனைந்தால் கண்டறியலாம்.
சரிவிடுங்கள். எனக்கு உவப்பில்லை.
நாவலின் மைய நாடிக்கு வருவோம். சோமன் மோகன்ராம் என்ற ஆண் உட்பட இரு பெண்களுடன் அக புற தொடர்பில் இருக்கிறார்.இவரின் உளவியல் சிக்கல் வெளிப்படும் போது விஷயத்தின் தீவிரம் புரிகிறது.நாவலின் வலுவென்று நான் எண்ணுவது அது அவிழும் தருணம் தான்.காந்தியின் காமம் சார்ந்த சோதனைகளில் ஈடுபட்டு மநுபென் அதைபற்றி பேசும் போது, அப்போது தன் அன்னையிடம் இருப்பதுபோலவே உணர்ந்ததாக சொல்கிறார்.பொதுவாகவே இந்து ஞானமரபில் பால் என்ற அம்சத்தை உயிரி கைவிடும் போது இயல்பாகவே ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டதாக ஆகிறது. அல்லது அப்படி கைவிட ஆன்மீக பயிற்சிகள் இன்றியமையாததாக இருக்கிறது.சில துறவிகளுக்கு முலை வளர்ந்ததாக கூட சொல்லுவார்களே.இங்கு சோமன் என்ற கலையில் அதிக திராணி உள்ள ஒருவனுக்கு இதுபோன்ற ஒன்று நடக்கிறது.இது கலையை சற்றே ஆன்மிகத்திற்கு நெருக்கமாக கொண்டுவர எத்தனிக்கிறது.
இருக்கலாம், ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் நாவலில் சொல்லப்படுகிறது.தொடக்கத்தில் பெண்வேடமிட்டுதான் சோமன் நடிக்கிறார் அல்லவா.நடிப்பு என்பதே அகத்தில் அதுவாக மாறுவது தானே.அந்த மோகன்ராமை பொருத்தவரை அவனும் பெண்வேடம் தான் புரிகிறார்.அதனால் ஒருவித இணக்கம் கூடி இருக்கலாம் என்று தான் எனக்குப் படுகிறது.அது மட்டும் அன்றி பாத்திரங்களின் அடையாளம் பெரும்பாலும் வலுவாக சொல்லப்படுவதை பார்க்கலாம். சில இடங்களில் அதற்கு ஏற்றார் போலவும், பல இடங்களில் அந்த அடையாளத்தை மறுக்கும் விதமாகவும் பல.உளவியல் மருத்துவர், சோமன் துறவியாக வாய்பில்லை என்கிறார். ஆனால் வங்காள துறவி அத்தியாயத்தில் சோமன் தொலைந்த பின்னர் தான் பார்த்ததாகவும் தாடியுடன் இறந்து கடந்ததாகவும் சொல்கிறார்.இறப்பும் துறவு தானோ என்று கிருஷ்ணன் தனக்குள் விசாரணை செய்கிறார்.இவை இரண்டிற்குமே அவர்களின் அடையாளம் ஒரு காரணமாக இருக்கலாம்.சற்று நேரத்திற்கு முன்பு பேசினோமே துறை சார்ந்த விஷயத்தை மறுப்பது பற்றி,இதுவும் அதற்கு உதாரணம் தானே.
தற்செயல் வெளிப்படும் சம்பவங்களை நாவலில் சொல்லும்போது மற்ற இடங்களில் வெளிப்படும் பரந்த பார்வை வெளிப்படாமல் ஆகிறது.இந்த இராமமிர்தம் என்ற பாத்திரம் வருகிறதல்லவா? அவர் தான் இறுதியாக சோமனை பார்த்தவர்.இவரின் இயல்பை பேச்சு வழி நிறுவினாலும் இடையீட்டின் வழி நம்பச்செய்தாலும் அந்த பாத்திரம் சற்றே தற்செயலை ஒட்டி தான் இருக்கிறது. அதை விசாரணை செய்ய கிருஷ்ணன் துணியவில்லையே.ஒரு வாசகனாக கிருஷ்ணன் தரும் அடிக்குறிப்புகள் பாத்திர வார்ப்பில் நம்பிக்கை குன்றும்போது வந்து தலையிடுவதாக,இருப்பது பிரதியில் வாசகனின் குவிதலை தட்டி விடுகிறது.
இராமமிர்தம் பாத்திரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள மற்ற பாத்திரங்கள் மீது உங்கள் கருத்து முக்கியம் என்று சொல்வேன்.டெல்லியில் ஒரு ஆசிரமத்தில் அவள் சம்மந்த மூர்த்தியை பார்த்துவிட்டு அவர் சோமன் சாயலில் உள்ளதாக சொல்கிறார். சம்மந்த மூர்த்தியின் வழி நீங்கள் இராமமிர்தத்தை பார்ப்பதால் அவர் உங்களுக்குத்தற்செயலாக தெரிகிறார். ஒருவேளை நீங்கள் இராமமிர்தத்தின் பக்கம் நின்று பார்த்தால், அவரின் வாழ்கையை கேட்டால் சம்மந்த மூர்த்தியை பார்த்தது தற்செயலாக இல்லாமல் போகலாம்.இதை பற்றி கிருஷ்ணன் கூட இடையீடு செய்வதில்லை.அதுமட்டும் அன்றி நாவலின் பின்னே வரும் பாத்திரம் யாருக்குமே சோமனின் சாயலில் தான் சம்மந்த மூர்த்தி இருக்கிறார் என்று தோன்றவில்லை.நேருக்கு நேர் உரையாடியும் இவர்கள் சம்மந்த மூர்த்தியை பார்த்து உரையாடுகிறார்கள். அவர்கள் அனைவருமே சோமனுடன் நெருங்கி சில காலம் பயணித்தவர்கள்.ஆனால் இராமமிர்தம் சில மணிநேரம் சோமனுடன் இரயிலில் பேசுகிறார்.இதை வைத்துக்கொண்டு அவள் சரியாக சோமனின் சாயலுடன் சம்மந்த மூர்த்தியை ஒப்பிடுகிறார். அப்படி இருக்க ஏதோ ஒரு பிரத்யேக திறன் அவருக்கு இருப்பதாக இருக்கலாம். இதை பற்றி ஒரு அனுபவம் எனக்கு உண்டு அதை பின்னர் சொல்கிறேன்.இது மற்ற பாத்திரங்களில் இருந்து இதை தனித்துக்காட்டுகிறது.ஏன் அவள் நினைவு குறிப்பு எழுதுபவராக இருக்கக்கூடாது.யார் கண்டது அவளும் சோமனை தேடினாரோ என்னவோ.இது போன்ற பின் தொடர்தல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இருக்கிறது. இது தங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். தன்மையில் நாவல் இருப்பதனால் இப்படி வாசிப்பதை தவிற வேறு வழி இருப்பதாக தோன்றவில்லை.தங்களுக்கு உவப்பில்லை என்றால் எழுத்தாளர் சு.கி சொன்னதை சொல்கிறேன்.தற்செயல் என்பது அவரின் ஆன்மீகத்துடன் தொடர்புடையது.நாவலில் பாத்திரங்கள் என்பது அவைகள் சொல்லும் கதைகள் தான் அல்லவா?பெரும்பாலும் அவைகளை புரிந்து கொள்ளவும், உண்மை தன்மையும் விசாரணை செய்யும் கிருஷ்ணன் தன் வாழ்வில் அடைந்த அனுபவத்தை வைத்தோ அல்லது ஒரு கதையை வைத்தோ தான் அவைகள் சொல்வதை அறிந்துக்கொள்கிறார்.இலட்சுமணன் பற்றி எழுதும் போது தனக்கு திருவளத்தான் கதை நினைவிற்கு வந்ததாக சொல்கிறார். அது ஒரு கருவி போல நமக்கு தட்டுப்படலாம் இலட்சுமணனை அறிந்துக்கொள்ள அதேவேளையில் அதில் ஓர் எதார்த்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது.
சரி,ஒரு வேலை இருக்கிறது. இதை மட்டும் சொல்லிவிடுகிறேன். இவ்வளவு நேரம் நாம் உரையாடியதால் உங்களின் வாசிப்போ மதிப்பீடோ மாறும் என்று நான் கருதவில்லை.ஆனால் நான் யுவனை வாசிக்க சில காரணம் இருக்கிறது.பாரதியின் ஒரு வரியை சினிமாவில் ‘பஞ்ச்‘ ஆக பயன்படுத்தி அதை தேய்வழக்கு ஆக்கிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.யுவனின் வரிகளை இதுபோன்ற அர்ப்ப விஷயத்திற்கு பயன்படுத்தினாலும் அவர் ஒன்றும் வருந்த மாட்டார் என்று தோன்றுகிறது.உங்கள் துறைக்கு இது எந்த விதத்தில் உதவும் என்று யோசித்து அதற்கு கூட பயன்படுத்திக்கொள்ளாம். சில கதை முயற்சிகள் செய்தவன் என்ற முறையில் மொழி சார்ந்த கூர் உணர்வை இவர் வலியுறுத்துவது எனக்கு ஏற்பாக இருக்கிறது.உதாரணமாக நாவலின் இப்படி வரும் ஒரு வரியிருக்கிறது.
‘இப்படித்தான், சில வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டுப் புழுப்பருவம் நூற்றாண்டு காலம் நீடித்துவிடுகிறது… ‘
இறுதியாக ஒன்றே ஒன்று – பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேனே ஒரு சம்பவம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த யுவன் ஒரு நாள் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் என்று பேசிய பலரும் தன் வாழ்வு சார்ந்த ஒரு அனுபவத்தை சொல்கிறார்கள். அது போன்று எனக்கு ஒன்று சொல்ல இருக்கிறது.நிச்சயமாக அவர்கள் சொல்கிறார்கள் என்று கடினப்பட்டு கண்டறியவில்லை. நாவல் வாசித்த போது இயல்பாக தோன்றியது.சொல்லப்போனால் அப்படி ஒன்று நினைவில் தட்டு பட்ட பின்னர் தான் நாவலை ஊன்றி வாசிக்கத் தொடங்கினேன் என்று சொல்லலாம்.
நான் நான்காவது வகுப்பு படிக்கும் போது, ஐந்தாவது படித்தவன் நண்பன் நவீன்.என் வீட்டிற்கு அருகே. அவன் வீட்டிற்கு சென்று வருகையில் எல்லாம் திண்ணையில் அமர்ந்திருக்கும் அவனின் தாத்தாவை பார்ப்பேன்.மனப்பிறழ்வு கொண்டவர். சட்டென்று ஆடைகளை கலைந்து விடுவார். அது அவரை நினைவில் வைத்துக்கொள்ள போதுமானதாக இருந்தது.அதே வருடமே அவர் காணாமல் ஆகிவிட்டார். தேடியும் ஆள் ஆப்பிடவில்லை.சில வருடங்கள் கழித்து, நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். நவீன் குடும்பமும் எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து திருச்செந்தூர் சென்றிருந்தோம்.அங்கு நுங்கு வெட்டும் கிழவரை பார்த்தவுடன் என் அம்மா கண்டறிந்து விட்டார். அவர் தான் என. நவீன் நெருங்கி பேச்சு கொடுத்தான். பேச்சு தெளிவு பதட்டம் இல்லை. அவன் வந்து தாத்தா இல்லை என்று சொல்லிவிட்டான்.ஆனால் அவர் குடும்பத்தார் யாராலும் அவர் இல்லை என்று நம்ப முடியவில்லை. வெகுநேரம் நின்று விட்டு சென்றுவிட்டோம்.ஒருவேளை அவர் தாத்தாவாகவே இருந்திருக்கலாம். அல்லது அவர் சாடையில் உள்ள வேறு ஒருவராக இருக்கலாம்.நாவலில் வரும் சம்மந்த மூர்த்தி போல.என் அம்மா தான் முதலில் சொன்னதால் அதற்கு பின்னர் பார்த்த அனைவருக்குமே அதே போன்று தோன்றியிருக்கலாம்.அப்படி தான் என்றால் இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்த சிலரால் அவரை ஏன் வலுவாக சரி என்று கண்டறிய முடியவில்லை.
அது மட்டுமன்றி இன்று வரை அவரின் முகம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
இப்போது உங்களுக்கு இராமமிர்தம் புரியலாம் அல்லது இது போன்ற ஒரு விஷயத்தை உங்கள் வாழ்வில் இருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் நாம் யாரும் இங்கு கோமாவில் இல்லை அல்லவா!
அ. க. அரவிந்தன்
க.அரவிந்தன் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர். சமகால தமிழ் இலக்கியத்தின் போக்குகளை தொடர்ந்து அவதானித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், டி.தருமராஜ் போன்றோரை ஆதர்சமாக கொண்ட அரவிந்தன் தலித்தியம், நாட்டுப்புறவியல் சார்ந்து எழுத இயங்க முனைகிறார்.