/

யார் இல்லாதபோதும் கவிதை இருக்கும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

நேர்கண்டவர்: விஷால் ராஜா

இந்நேர்காணல் அகழ் ஆசிரியர் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க விஷால் ராஜா அவர்களால் செய்யப்பட்டது.‌ தமிழ் இலக்கியச்சூழலில் கால் நூற்றாண்டு காலம் இயங்கும் கவிஞரின் பார்வையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக நேர்காணல் அமைந்துள்ளது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் படைப்புகள் குறித்தும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் விரிவாக தன் பார்வையை பகிர்ந்து கொண்டுள்ளார். விஷால் ராஜா மற்றும் ஷங்கர்ராமசுப்ரமணியன் இருவருக்கும் நன்றி – அகழ்

1975ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த ஷங்கர்ராமசுப்ரமணியன் கடந்த இருபத்தியைந்து வருடங்களாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். “மிதக்கும் இருக்கைகளின் நகரம்” எனும் அவருடைய முதல் கவிதை தொகுதி 2001ல் வெளியானது.அடிப்படையில் கவிஞராக இருக்கும்போதும் இலக்கிய விமர்சனம், சினிமா, அரசியல், பண்பாடு முதலியத் துறைகள் சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். எட்டு கவிதை தொகுதிகளும் மூன்று விமர்சன நூல்களும் மூன்று மொழிபெயர்ப்புகளும் அவர் எழுத்தில் பிரசுரமாகியுள்ளது. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பான “ஆயிரம் சந்தோஷ இலைகள்” புத்தகத்துக்காக 2017ம் ஆண்டு கனடா இலக்கிய தோட்ட அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது. 

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனோடு கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறேன். இசைந்தும் முரண்பட்டும் அணுகியும் விலகியும் சிரித்தும் கசந்தும் பல்வேறு உரையாடல்கள். கருத்துப் பரிமாற்றங்கள்அவரோடு நேரடிப் பரிச்சயம் ஏற்படுவதற்கு வெகு முன்னரே அவர் கவிதைகளோடு எனக்கு அறிமுகமும் நெருக்கமும் அமைந்துவிட்டன. எனவேஅகழ்இதழ் சார்பாக அனோஜன் என்னிடம், “ஷங்கரை நேர்காணல் செய்ய முடியுமா?” என்று கேட்டபோது மறுயோசனை ஏதும் தோன்றவில்லை. ஷங்கரிடம் இதை தெரிவித்தபோது அவரும் உடனே ஒப்புக் கொண்டார்

இந்த நேர்காணல் சம்பந்தமாக எனக்கு பெரிய திட்டங்கள் இல்லை. ஆனால் நோக்கம் இருந்தது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் காத்திரமாக செயல்பட்டு வரும் ஷங்கர் எனும் ஆளுமை, வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன். அது சாத்தியமாகியிருப்பதாகவே படுகிறது. ஷங்கருடைய கவிதைகள் மட்டுமில்லாமல் கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய அவர் பிற ஆர்வங்களையும் தொடர்ந்து பின்பற்றுவதாலும் அவரோடு தனிப்பட்ட முறையிலும் உரையாடலில் இருப்பதாலும் அவரை முழுமையாகத் தொகுத்துக் கொள்ளும் வகையில் கேள்விகளை உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. ஒருவிதத்தில் இந்த நேர்க்காணல் நிகழ்ந்திராவிட்டாலும் இக்கேள்விகளை நான் அவரிடம் நேர்ப் பேச்சில் கேட்டிருப்பேன். சில கேள்விகள் அப்படி ஏற்கனவே கேட்கப்பட்டவையும்கூட.  ஷங்கருடைய கவிதைகளை பற்றி “பழம் உண்ணும் பறவை” எனும் தலைப்பில் விரிவாக திறனாய்வு எழுதியிருக்கும் புகைப்படக் கலைஞரும் கட்டுரையாளருமான நண்பர் ஏ.வி.மணிகண்டனும் சில கேள்விகள் அனுப்பி வைத்தார். அவையும் இதில் இடம்பெற்றுள்ளன. என்னைப் போலவே ஷங்கர் மீதுள்ள மதிப்பினாலேயே இந்த நேர்காணலில் அவரும் கலந்துக் கொண்டார். மணிக்கு நன்றி.

இந்த கேள்விகள் வெறும் முகாந்திரங்களே. ஏற்றாற்போல, ஷங்கரும் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாக பதில் அளித்துள்ளார். அனேக பதில்களை குட்டி கட்டுரைகளாகவே படிக்கலாம். இப்பதில்களின் மூலமாக தீவிரமும் படைப்பூக்கமும் மிக்க ஒரு கவிஞனின் தேடலை வாசகர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். மூன்று வாரங்களாக இந்த நேர்காணல் நடந்தது. நான் ஒன்றிரண்டு கேள்விகளை முதல் நாள் எழுதி அனுப்புவேன். ஷங்கர் பதில் அனுப்பிவிட்டு மறுநாள் இணைப்பில் வருவார். “விஷாஆல்” என்று அவருக்கே உரிய வகையில் அவசியம் இல்லாத இடங்களில் எல்லாம் நெடில் சேர்த்து “பதில் அனுப்பிட்டேன்” என்பார். எந்த பதிலிலுமே ஆயத்தத்தனமோ பாவனையோ இருக்காது. முதல் தடவை ஒரு சிந்தனையை முட்டித் திறக்கும் வேகமும் தடுமாற்றமும் புலப்படும். சில நேரங்களில் கேள்வியிலிருந்து துண்டுபட்டு தன்னிச்சையாக பதில்கள் வளர்ந்திருக்கும். நான் போன் போட்டு, “ஷங்கர் பதில் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா கேள்விக்கு சம்பந்தமா இருக்குற மாதிரி தெரியல. நான் கேள்வியை மாத்திக்குறேன்” என்பேன். மூச்சடக்கி சிரிப்பது போல் “கெக்கெக்கே” என்று சத்தம் மறுமுனையில் கேட்கும்.

ஷங்கரின் இளமைக் காலம் இந்த நேர்காணலில் பதிவாகியுள்ளது. கவிதையாக்கம் சார்ந்து விரிவாக பேசியிருக்கிறார். கவிதை சார்ந்த தன் லட்சியங்களை விளக்கியுள்ளார். தமிழ் இலக்கிய சூழல் சார்ந்த அசலான அவதானிப்புகளை முன்வைத்துள்ளார். அவருடைய பிரியத்திற்குரிய பிரவுனி பற்றி பேசியிருக்கிறார். இவற்றுக்கு அப்பால் ஷங்கர் எனும் மனிதரோடு பழகியவர்கள், குறைந்தபட்சம் பேசியவர்கள் அறியக்கூடிய ஓர் அம்சம் எழுத்தில் தவறியிருக்கிறது என்றே நினைக்கிறேன். பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்துக்கும் நடுவே – சில நேரங்களில் ஒரே வாக்கியத்தில் இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே- அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளி. மௌனம். பேச்சின் நடுவே தன் கட்டையான தலைமுடியை தடவியவாறு அவர் யோசிப்பார். பொருத்தமான சொல்லை தேடுவதற்காக அவர் அந்த இடைவெளியை எடுத்துக் கொள்கிறார் என்று கூற முடியாது. அத்தருணத்தில் கிட்டத்தட்ட மொழியை மறந்துவிட்டவர் போலவே காட்சி தருவார். மொழி அவரை கைவிடும் தவிப்பும் அதில் தென்படும். ஷங்கரின் கவிதைகளில் இதே குணாதிசயம் இருக்கிறது. சிக்கனமான மொழியில் சாதாரணமான காட்சிகளையே அவர் எழுதுகிறார். ஆனால் அவை தம் தவிப்பினால் மொழிக்கு அப்பால் உள்ள விநோதத்தை சுட்டிவிடுகின்றன. இந்த நேர்காணலில் அந்த இடைவெளியும் மௌனமும் இல்லாமல் ஆகியிருக்கின்றன. வியப்பூட்டும்படியான தொடர்ச்சியும் துண்டுதுண்டாக கதைகளும் வந்தபடி உள்ளன. இருந்தும் தன் பதில்களில் சிந்தனையின் இருப்பின் கலையின் விநோதத்தை அவர் எப்படியோ கொண்டு வந்தும் இருக்கிறார்.

– விஷால் ராஜா

1

நீ ஏன் மகிழ்ச்சியாய் இல்லை என்று கடவுள் கேட்டார்.
 ஒரு நூலால் இழுப்பதுபோல நான் கடக்கும் அழகிய
வீடுகளை எனக்கு பின்புறம் எடுத்துக் கொள்பவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு சந்தோஷமில்லை என்றான் சாப்ளின்.

கேள்வி:  வாசிக்கும் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்பது ஞாபகம் இருக்கிறதா? இளமையில் புத்தக அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

பதில்: அம்மாவிடம் கதை கேட்ட ஞாபகமே முதலில் மேலிடுகிறது. அங்கிருந்தே புத்தகங்கள் நோக்கி நான் நகர்ந்திருக்க வேண்டும். அம்மா நல்ல கதைசொல்லி. தன் சிறுவயது வாழ்க்கை பற்றிய சித்திரங்களை சின்னச் சின்னக் கதைகளாகச் சொல்லியிருக்கிறாள். ஆனால், பொய்களும், மிகையும், நிஜத்தில் இல்லாததும் அவள் கதைகளில் பொதிந்திருப்பதை மிகச் சின்ன வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். அவை எல்லாம் சேர்ந்ததே என் அம்மா. அவளது பொய், அவள் கூட்டிச் சொன்ன மிகை, அவள் உருவாக்கிய புனைவு இவை எல்லாம் சேர்ந்ததே அவள் என்ற புரிதல் அப்போதே இருந்தது.”பொய்யே சொல்லக்கூடாது” என்று என்னை கண்டிப்பவள், “இப்படி இட்டுக்கட்டுகிறாளே” என்று ஆச்சர்யம் அடைந்திருக்கிறேன். பிறகு பாலமித்ரா, அம்புலிமாமா போன்ற புத்தகங்களை இரவலாக வாங்கி வந்து எனக்குக் கதைச் சொல்லத் தொடங்கினாள். அப்புத்தகங்களின் அட்டை ஓவியத்துக்கும் சேர்த்து அவளிடம் நான் கதை கேட்பேன். சளைக்காமல் அட்டைப் படத்துக்கும் ஏதாவது கதை சொல்வாள்.

நாங்கள் வசித்த வளவில் இரண்டு பாட்டிகள் பெரும் கதைசொல்லிகளாக இருந்தார்கள். பாட்டிகள் சொல்லும் கதை எதுவுமே ஒரு இரவில் முடிந்ததில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் எந்தக் கதையையுமே அவர்களுக்கு முடிக்கும் எண்ணம் இருந்திருக்கவில்லை என்று படுகிறது. விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் தொடர்ச்சியும் இருந்ததில்லை. பார்வையாளர்களும் ஒரே ஆட்கள் கிடையாது. ஆனால், மஞ்சள் பல்பின் குறை வெளிச்சத்தில், தீரா இருட்டில் அந்தக் கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டிகளின் கதைகூறலை அந்த முறைமையை ஓரளவு ஞாபகப்படுத்த முடிந்தாலும் பெரிய கதாசிரியன் ஆகிவிடலாம் என்று இப்போது தோன்றுகிறது.  பால்யத்திலிருந்து ஒரேயொரு கதை மட்டும் நூல் அளவு ஞாபகத்தில் உள்ளது. பஞ்சம் பிழைப்பதற்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஜனங்கள் செல்கிறார்கள். அதில் ஒரு பாட்டியை வீட்டின் மாடக்குழியில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அந்தப் பாட்டிக்கு நூற்றுக்கும் மேற்பட்டு வயதாகி, அவள் மாடக்குழிக்குள் வைக்கும் அளவு சிறியவளாகிவிட்டாள். அவளுக்கு ஒரு நாளைக்கு ஒரு பருக்கை உணவு தந்தால் போதும் என்று அந்தக் கதை நீளும்.  அந்தப் பாட்டிக்கு ஒரு சின்னஞ்சிறிய ஈசிசேரைக் கற்பனை செய்தவாறே கதைகேட்ட ஞாபகம் உள்ளது.

அரிதாக அப்பாவும் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தக் கதை துணுக்குத் தன்மை கொண்டதாகவும் சீக்கிரமே முடிந்துவிடுவதாகவும் நகைச்சுவை நிரம்பியதாகவும் இருக்கும். பாட்டிகள் சொல்லும் கதையில் உள்ள இருட்டின் அளவும் மூட்டமும் என் அப்பா சொன்ன கதைகளில் இருந்ததில்லை.

என்னைவிட ஒரு வகுப்பு மூத்த நண்பனான வேணுகோபாலின் வீட்டில் முதன்முதலாக இரும்புக்கை மாயாவியை ஒரு அட்டைப்பெட்டியில் தேடிப் படித்த போது அந்த மாடி அறையில் இருந்த இருளும் வெளிச்சமும் ஞாபகத்தில் உள்ளது.  கருப்பு வெள்ளையில் இருந்தாலும் அந்த உலோகக் கையின் பளபளப்பும், உடல் இல்லாமல் அக்கை இருளில் அலையும் மர்மமுமே என்னை அடுத்தடுத்து புத்தகங்களை நோக்கித் தள்ளின என்று நினைக்கிறேன். இன்னமும் அந்த இரும்புக்கை மேல் எனக்கு ஈர்ப்பு உள்ளது. அதை வண்ணத்தில் பார்த்தப் பிறகும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.

கேள்வி:  உங்கள் குடும்பத்திலும் சுற்று வட்டத்திலும் வாசகர்கள் இருந்தனரா?

பதில்: அப்பா, அம்மா இருவருமே நல்ல வாசகர்கள் தாம். அம்மாவுக்கு வேலை மாற்றலாகி தென்காசியில் குடி வந்தபோது அம்மாவின் அத்தையான கனகா ஆச்சி வீட்டில் நாங்கள் வாடகைக்கு இருந்தோம். கனகா ஆச்சியும் நல்ல வாசகரே. லா.ச.ராவின் ரசிகை அவர். லா.ச.ரா, தென்காசியில் வேலை பார்த்தபோது, என் ஆச்சியும் அவரது இரண்டு தோழிகளும் அவரை சந்தித்ததையும் அவர் கதைகள் பற்றி உரையாடியதையும் என்னிடம் பகிர்ந்திருக்கிறார். வீட்டுக்கு வருபவர்களிடம், தான் படித்த கதைகள் குறித்தும் பார்த்த சினிமா குறித்தும் ஆச்சி விரிவாக பேசுவதை நான் பார்த்திருக்கிறேன்.

கேள்வி:  வாசிப்பு வெறும் பழக்கம் என்பதைத் தாண்டி எப்படி வளர்ந்தது? இலக்கியம் முக்கியமானது என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

பதில்: சமூகப் பின்னணி, குடும்ப அந்தஸ்து, சாதி பெருமிதம், குடும்ப கௌரவம் இவை யாவும் மேம்போக்கானவை என்பதை நான் இளமையிலேயே கற்றுக் கொண்டேன். வாழ்வில் சந்தோஷமே இல்லாமல் அன்றாடம் வன்முறையில் தவித்த என் அம்மாவும், அவரை வன்முறைக்குள்ளாக்கிய என் தந்தையுமே அதை சொல்லித் தந்தனர். பெற்றோரிடையே சீரான உறவு இல்லாததைப் பார்க்கும் குழந்தைகள் இளமையிலேயே குடும்பம், சமூகம் சார்ந்து பொதுவில் இருக்கும் நம்பிக்கைகளை இழந்துவிடுகின்றனர் என்று தஸ்தயெவ்ஸ்கி சொல்கிறார். பிளஸ் டூ படிக்கும்போது, கல்குதிரை வெளியிட்ட தஸ்தயவெஸ்கி மலரில் இதை படித்தேன். அப்போதே இலக்கியத்தின் முக்கியத்துவம் புரிந்துவிட்டது. அதுவே என் தேர்வாகவும் மாறிவிட்டது. சந்தோஷமில்லாத குழந்தைகள் எல்லாருக்குமே அடைக்கலம் எழுத்துதான்.

அம்மாவும் வேலைக்குச் சென்றதால் வீட்டில் உருவான தனிமை சிறுவயதிலேயே என் வாசிப்பை தீவிரப்படுத்தியிருக்கலாம். மூன்றாவது வகுப்பிலிருந்தே காமிக்ஸ்கள் வாசிக்கும் பழக்கமும், வார மாத இதழ்கள் வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி டவுண் மார்க்கெட் புத்தகக் கடையில் வாங்கி, அப்பா ரகசியமாக பதுக்கியிருந்த சரோஜாதேவி புத்தகமும் உடலுறவுப் புகைப்படங்களும் நான்காம் வகுப்பிலேயே அறிமுகமாகிவிட்டன. அந்த வாசிப்பு இணைய வடிவிலேறி இன்றும் என்னைத் தொடர்கிறது.

நான்காம் வகுப்பு கோடை விடுமுறையில் அறிமுகமான இயேசு சரித்திரத்தையும் ஆறாம் வகுப்பில் படித்த காந்தியின் சத்திய சோதனையையும் தீவிர ஈடுபாட்டுடன் வாசித்த முதல் இலக்கியப் பிரதிகள் என்று சொல்வேன். தென்காசியில் பக்கத்து வீட்டில் வசித்த கிறிஸ்தவ குடும்பம் வழியே கிடைத்த புத்தகம் – இயேசு சரித்திரம். காலப்போக்கில் பக்கங்கள் கிழிந்துகொண்டே வர, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை முப்பது நாற்பது முறை படித்திருக்கிறேன். ஜெருசலேம் நகரில் காணாமல் போகும் சிறுவன் கிறுஸ்துவைத் தேடி ஆலயத்துக்கு வரும் தந்தை, வயதில் மூத்த அறிஞர்களுடன் தன் மகன் விவாதித்துக் கொண்டிருப்பதை மறைந்திருந்து பார்க்கும் சித்திரம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. அந்தப் புத்தகம் மீண்டும் கிடைக்குமா என்று தேடி வருகிறேன்.

எட்டாம் வகுப்பில் ஸ்பைடர்மேனிலிருந்து நழுவி பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுஜாதா, சாண்டில்யன் என்று வாசித்து 11-ம் வகுப்பின் இறுதியில் பாலகுமாரனை வந்தடைந்தேன். அந்தச் சமயத்தில் தான், போஸ் மார்க்கெட் நூலகத்தில் தற்செயலாக தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழையும் பார்த்தேன். பூமணியின் “பிறகு” நாவலை, ஒன்பதாம் வகுப்பில் காமிக்ஸ் படிக்கும் அதே விறுவிறுப்பு குறையாமல் நானும் என் நண்பனும் சேர்ந்து படித்திருக்கிறோம். கி. ராஜநாராயணனின் கடிதங்களை ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவிலேயே படித்திருக்கிறேன். ப்ளஸ் டூவின் இறுதியில் வண்ணநிலவன், அசோகமித்திரன், சூடாமணி, பிரபஞ்சன் ஆகியோரின் சில கதைகளை படித்து அவர்களால் வசீகரிக்கப்பட்டிருக்கிறேன்.

இந்தியா டுடே வெளியிட்ட முதல் இலக்கிய மலரில் பிரபஞ்சன் எழுதிய ‘தபால்காரன் பொண்டாட்டி’ கதை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அதில் கிராமத்துக்கு வரும் தபால்காரரை சிறுவர்கள் பின்னாலேயே சென்று கலாட்டா செய்வார்கள். கதை முழுமையாக எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் சிறுவர்கள் அவரைக் கேலி செய்யும் பாடல் ஞாபகத்தில் உள்ளது.

“மஞ்சள் வெய்யில் காயுது
மான்குட்டி மேயுது
தபால்காரன் பெண்டாட்டிக்கு
தர்புர்னு போகுது.”

இப்படித்தான் என் வாசிப்பு படிப்படியாக மாறியது. இப்போதும் பிரபஞ்சனின் சிறுகதை சார்ந்து ஞாபகத்தில் வரும் அந்தப் பாடல் அலாதியான மகிழ்ச்சியை கொடுக்கிறது. அந்த சிறுவர்களின் கலகத்தை ரசிக்கிறேன். பிரபஞ்சனோடு பின்னர் எனக்கு ஏற்பட்ட பழக்கத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் சொல்ல முடியும். அப்பாடலில் அவருடைய இயல்பொன்றும் வெளிப்படுகிறது.

அப்போது பாலகுமாரன், மாத நாவல் ஒன்றில், தமிழில் எழுத்தாளனாக ஆக விரும்புகிறவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதை வைத்து ஒவ்வொன்றாக தேடித்தேடி புத்தகங்களைப் படித்தேன். கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தபோது சக மாணவனான தளவாய் சுந்தரமும் அதே பட்டியலை வைத்து நூல்களை வாசித்து வந்தான். அவனுடைய வாசிப்பு என் வாசிப்பை விட ஆழமானது. மௌனியையும் ந. முத்துசாமியையும் அவன் படித்திருந்தான். பிரபஞ்சன், வண்ணதாசன் என்று நான் ரொமான்டிக்காக இருந்தேன்.

நாட்போக்கில் பாலகுமாரன் அவர் கொடுத்த பட்டியல் வழியாகவே என்னிடமிருந்து உதிர்ந்துவிட்டார். முதல் தடவை சென்னை போனதும், பேருந்தைவிட்டு இறங்கிய கையோடு பாலக்குமாரனை பார்த்துவிட்டுதான் மறுவேலை என்று கற்பனை செய்திருக்கிறேன். ஆனால், சென்னை வந்தபிறகு அவரைப் பார்க்கப் போகவேண்டுமென்ற எண்ணமே எனக்கு வரவில்லை.

2

“சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்
உன்
தட்டில் போடப்பட்டதை
நீ
சாப்பிடு
நான்
தின்னுவதைப்
பார்த்து
ஏங்காதே
ப்ரவுனி

கேள்வி: கல்லூரி காலத்திலேயே நீங்கள் இலக்கிய உலகுக்குள் நுழைந்துவிட்டீர்கள். முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியுடன் நேரடி பழக்கமும் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் உங்கள்மேல் பெரும் செல்வாக்கை செலுத்தினார் இல்லையா?

பதில்: சுந்தர ராமசாமி ஒருவர் மட்டும் அல்ல. கல்லூரி வயதில் பல ஆளுமைகள் மழைபோல என் மீது பொழிந்திருக்கின்றனர். லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், யுவன், சி. மோகன், விக்ரமாதித்யன் என அடுத்தடுத்து அவர்கள் அறிமுகமானார்கள்.

கேள்வி: ஒவ்வொருவரும் என்ன மாதிரியான தாக்கத்தை உங்களிடம் ஏற்படுத்தினார்கள்? அதை விரிவாக சொல்ல முடியுமா?

பதில்: நான் அறிமுகம் செய்துகொண்ட, மேலே வரிசைப்படுத்திய எழுத்தாளர்களை ஒரே வகையானவர்கள் என்றோ, ஒரே போக்கு கொண்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் வெட்டித்தள்ளக் கூடியவர்கள். ஆனால், அவர்களை பேதமின்றி என்னுள் அனுமதித்ததன் வாயிலாக செழித்த புரதத்திலிருந்து உருவானதுதான் என் ஆளுமை.

காலச்சுவடின் தன்னார்வல ஊழியனாக சுயநியமனம் செய்துகொண்டிருந்த என்னிடம், “சுந்தர ராமசாமியும் காலச்சுவடும் தமிழ் இலக்கியத்தின் ஒரு நிலையமே தவிர, எல்லை அல்ல” என்று கடிந்து சொன்னவர் சி. மோகன். “பிரமிளை வாசிக்காமல் எப்படி கவிதை எழுதுகிறீர்கள்?” என்று நான் வெட்கும்படி அவர்தான் கேட்டார். அப்படி ஒவ்வொருவரும் எங்களை உடைப்பதற்கு நாங்கள் அப்போது அனுமதித்திருக்கிறோம்.

கலாப்ரியா தொடர்பாக சுந்தர ராமசாமிக்கு பெரிய மதிப்பீடு இல்லை. ஆனால், அவர் வீட்டிலிருந்தே கலாப்ரியா கவிதைகளை நான் எடுத்துச் சென்றேன்.  திருநெல்வேலிக்குச் சென்று அப்புத்தகத்தை படித்தேன். நாகர்கோயிலுக்கு திரும்பி வந்து, அக்கவிதைகள் என்னிடம் ஏற்படுத்திய நொறுக்கலை அனுபவமாக சு.ரா வீட்டில் பகிர்ந்துகொண்ட சாயுங்காலம் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது.

தன்னம்பிக்கை கவிஞர்கள், வெற்றியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் முதலியோர் சொல்வது போல வாழ்க்கை எளிமையானதல்ல; ஊடுபாவுகளும் மூட்டங்களும் கொண்டது; நன்மையும் தீமையும் அத்தனை தெளிவான கோட்டுக்கு இருபுறமும் பகுக்கப்படவில்லை எனும் உண்மைகளை சுந்தர ராமசாமியே தனது கனிவாலும் நிதானத்தாலும் அரவணைப்பாலும் சிரிக்கச் சிரிக்கப் பாதுகாப்போடு எனக்கு உணர்த்தினார். விலாக்கள் மெய்யாக நோக நானும் தளவாயும் அவரது பேச்சைக் கேட்டுச் சிரித்திருக்கிறோம். சாயங்காலம் மங்கி சுந்தர விலாசத்தின் மாடியில் இருட்டு ஏறிய பின்னர், அவர் கண்ணாடியின் பளபளப்பு மட்டும் தெரிய வயிறு லேசாகப் பசியெடுக்க அவர் முகம் இருக்கும் இடத்தை நோக்கி அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறோம். 

லஷ்மி மணிவண்ணன் என் வாழ்வில் இன்னொரு முக்கியமான மனிதர். நண்பர், ஆசிரியர் என்பதைத் தாண்டிய வசீகரம் அவர் மேல் இருந்தது. என் பொய்கள், குற்றங்கள், பிறழ்வுகள் எல்லாவற்றையும் அவரிடம் திறந்து காண்பிக்க முடியும்; அவற்றை அவர் அழகாகச் செப்பனிடுவார் என்கிற விசுவாசமும் ஈர்ப்பும் இருந்தன. சுந்தர ராமசாமி போலன்றி மணிவண்ணன் அவரது வயதுக்கேயுரிய மூட்டத்தோடும் சாம்பல் தன்மையோடும் அந்தப் பிராயத்துக்கான என் வண்ணக் கனவுகளின் மீது சுண்ணாம்பு அடித்தார். அவருடன் புகைத்த சிகரெட்டின் சுவையும், பிள்ளையார்புரம் ஓட்டலின் வாசலில் நடந்த உரையாடலினூடாக எங்கள் மீது கவிழ்ந்த அந்தியின் நிறமும் ஞாபகத்தில் உள்ளன். அப்போது கோபி கிருஷ்ணனுக்கும், ஆத்மாநாமுக்கும் மருத்துவம் பார்த்த சாரதா மேனனை சென்னையில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருந்தார் லக்ஷ்மி மணிவண்ணன். மனநலம் என்பது நாம் வாழும் சமூகத்தோடும் நம்மை இயக்கும் அமைப்புகளோடும் தொடர்புடையது என்று அவர் அன்று பேசியது இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. இலக்கியத்தின் தீவிரம் இப்படித்தான் என்னுள் இறங்கியது.

மொழி சார்ந்தும், பார்வை சார்ந்தும் சுந்தர ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் தாக்கமும் 2010-வரை என்னிடம் இருந்தது. போலவே ஜெயமோகனின் கருத்துக்களும், எழுதும் முறையும் ஒரு காலகட்டத்தில் என்மேல் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.

விக்ரமாதித்யனின் கவிதைகளும், அவருடனான உரையாடலும், மரபு வாசிப்பு சார்ந்து அவருடைய தொடர் வலியுறுத்தல்களும் என் வாசிப்பு களன்களை விரிவுபடுத்தியிருக்கின்றன. சில ஆண்டுகளேனும் அவருடைய அலாதியான ஆளுமையோடு அன்றாடம் கலந்து பழகியிருக்கிறேன். போலவே அவருடன் மரியாதையையும் விமர்சன இடைவெளியையும் என்னால் தொடர்ந்து கடைபிடிக்க முடிகிறது. சுந்தர ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன், சி. மோகன் ஆகியோரோடு ஒப்பிடும்போது விக்கிரமாதித்யனுடனான என் அனுபவங்கள் வேறுபட்டவை. வெவ்வேறு நிலப்பரப்புகளை, பருவங்களை, பொழுதுகளை அவருடன் கடந்திருக்கிறேன்.  கோயில்களும் மதுக்கடைகளுமாக அவருடைய விபூதி வாசத்தையும், தாடியில் வீசும் மதுப்பழ நெடியையும் நெருக்கத்தில் அறிந்திருக்கிறேன். நேரடியான விமர்சனத்தையும் தாக்குதலையும் கிண்டல்களையும் சமாந்திரத்தில் நின்று அனுமதிப்பவர் அவர்தான். பெரும்பாலும் இல்லாமையிலேயே உழன்றவர். ஆனால் வறுமை உண்டு பண்ணக்கூடிய கீழ்மையை சிறிதுகூட அனுமதிக்காத ஆளுமை. கூடுமானவரை நண்பர்கள் தொடர்பிலான புகார்களை வெளியே பேசுவதை விரும்பமாட்டார். சி. மோகனிடமும் அந்த இயல்பு உண்டு. புறம் பேசுவதைத் தவிர்ப்பவர் அவர். மனம்விரிய சிரிப்பதற்கு விக்ரமாதித்யன் எப்போதும் தயாராக இருப்பவர். இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்து பழங்காடியாகத் தங்கிவிட்ட பார்வைகளை அவரிடம் பார்க்க முடியும். அப்படித்தான் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடியவர்.         

நேரடி பழக்கமில்லாத பிற எழுத்தாளர்களும் என்னில் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களும் எனக்கு நினைவு வருகிறார்கள். நகுலன் எனது மொழிக்குள்ளும் ஆளுமைக்குள்ளும் இருப்பதைப் பார்த்து கடக்கிறேன். எம் டி எம் “நீர் அளைதல்” கவிதைகள் எழுதிய காலத்தில் மினிமலிஸ்ட் அழகியல் சார்ந்து அவர் சொன்னவையும், அப்போது அவர் தனது வலைப்பூவில் எழுதிவந்த கட்டுரைகளின் மொழியும் என் மீது தாக்கத்தைச் செலுத்தியிருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தேன்.  தேவதச்சனின் உரையாடலும் அவர் கவிதைகளும் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல – யாருக்குமே. தன் கண்களையே நம்மில் பதித்துவிடக்கூடியவர். அவரது பார்வை, அவரது தொனி, அவரது தர்க்க முறையைத் தள்ளிவிட்டு அனுபவங்களைப் பார்ப்பதே மிக கடினம்.  கல் முதலை ஆமைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளை எழுதும்போது தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். நண்பரும் கவிஞருமான வே.நி.சூர்யாவிடம் இப்போதும் கேட்பேன். கல் முதலை ஆமைகள் தொகுதியில் தேவதச்சன் தெரிகிறாரா, தெரிகிறாரா என்று. இப்படி எல்லா தாக்கங்கள் சார்ந்தும் பிரக்ஞையோடு இருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நேர்பவனுக்குத் தெரிவதை விட, பார்ப்பவர்களுக்கு அவை சீக்கிரம் தெரிந்துவிடும். 

19 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய அனுபவத்தால், வாழ்வில் தொடர்ந்து பிரிவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற புரிதல் எனக்குச் சீக்கிரமே நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எந்த இடமும் எந்த நபரும் எந்த உறவும் நிரந்தரம் அல்ல; எப்போதும் வீடோ, இடமோ, மனிதர்களோ மறுதலிப்பார்கள்; மீண்டும் தனியாகச் செல்வதென்பது தவிர்க்க இயலாதது என்பதைக் கற்றுக்கொடுத்ததும் நான் மேலே சொன்ன நண்பர்களும் ஆசிரியர்களுமானவர்களே.

கேள்வி: உங்கள் பேச்சில் ஒரு முக்கியமான முன்னோடி விடுபட்டுவிட்டார். அசோகமித்திரன் மேல் உங்களுக்கு பெரிய ஈடுபாடு உண்டு. சுந்தர ராமசாமியை சந்தித்ததுப் போல இளவயதில் நீங்கள் அவரோடு பழகவில்லை என்றாலும் பிற்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில்லையா? கல் முதலை ஆமைகள் தொகுப்பில் அவர் பற்றி ஒரு கவிதையே இருக்கிறது. மேலும் அவர் குரலை நீங்கள் அப்படியே நடித்துக் காட்டுவதை பார்த்திருக்கிறேன்

பதில்: சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் இருவருக்கும் நடுவே அவர்கள் கதைகளில் இருக்கும் அளவிலான அதே இடைவெளி உண்டு. சுந்தர ராமசாமி ஒரு ஆசிரியராக இருப்பதற்கான சகல வளங்களையும் வைத்திருந்தவர்.    அசோகமித்திரனுக்கு அப்படி எந்த நோக்கமும் கிடையாது. கூடுமானவரை, இலக்கிய வாசகர்களையும் மாணவர்களையும் இளம் எழுத்தாளர்களையும் அவநம்பிக்கைக்குள்ளேயே அவர் தள்ளுவார்.

ஆத்மாநாமை நேரில் பார்த்த போது அவரை ஊக்கப்படுத்தவில்லை என்பதைத் தனது கட்டுரையிலேயே அசோகமித்திரன் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். விக்கிரமாதித்யனிடம் “இதெல்லாம் எதுக்கு?” என்று கேட்டிருக்கிறார். இந்தியா போன்ற நாட்டில் கலை, இலக்கியம் நோக்கி சிறுவயதில் வருபவர்களைப் பார்த்து அவருக்கு இயல்பாகவே அச்சம் இருந்தது. என்னை வைத்துக் கொண்டே என் மனைவியிடம், “இவருடன் எப்படி?” என்று கேட்டு முகத்தைச் சுளித்திருக்கிறார். அவருக்கு என் மேல் கூடுதல் அசூயையே இருந்தது. சுந்தர ராமசாமியின் பள்ளியை சேர்ந்தவன் என்பது அந்த அசூயைக்கான காரணமாக இருக்கலாம்.

எனக்கு அவர் தற்செயலாக பக்கத்துத் தெருக்காரராக இருந்தார். அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும், மறைத்துக் கொள்ளவும் விரும்பிய எளிய இடத்தைத் தாண்டி, அவர் எழுத்துகள் சார்ந்து 18 வயது முதலாகவே எனக்கு அசலான மதிப்பு இருந்தது. அவருடைய இலக்கிய ஸ்தானத்தை பின்னர்தான் விரிவாக தெரிந்துக் கொள்கிறேன்.  நேரில் பார்ப்பதற்கு முன்பாகவே, தன் எழுத்துக்கள் வழியாக பெரும் ஆகிருதியாக எனக்குள் படிந்திருந்தார். அவரது தேசலான, நைந்த பனியன்கள் தொங்கும் பால்கனியைப் பார்த்தபடி, ஒரு நோபல் பரிசுக்கு தகுதியானவன் இங்கே வசிக்கிறான் என்று பெருமையுடன் கடந்திருக்கிறேன்.  அவர் இறந்துபோன பிறகும், வேளச்சேரி வரும் நண்பர்களுக்கு அவர் இல்லாத பால்கனியை கூட்டி போய்க் காண்பித்திருக்கிறேன்.

அவருடைய குரலில் பேசுவதும் அந்த அன்பினால்தான். அதே காரணத்தால்தான் அவரை எப்போது பார்த்தாலும் நாய்க்குட்டி போல அவர் மீது துள்ளி விழுந்து பிரியத்தைக் காண்பிப்பேன். அவர் எவ்வளவு நக்கலடித்தாலும் என் அகந்தை சீண்டப்பட்டதில்லை. அடிப்படையில் நான் பணிவானவன் கிடையாது. சில நேரங்களில், வீட்டுக்குள் அழைக்காமலேயே மாடி பால்கனியில் நின்று, என்னை தெருவில் நிற்கவைத்தே உரையாடுவார். மேலே வரவா என்று கேட்பேன். மேலேயிருந்தே கைகளைக் காட்டி “அங்கியே இருங்கோ” என்பது போலச் சைகை செய்வார்.

அவருடன் கழித்த அபூர்வமான பொழுதுகளை “அசோகமித்திரன் இருந்த வீடு” என்ற கவிதையில் எழுதியதிருப்பதை விட சொல்வதற்கு மேலதிகம் இல்லை. க. நா. சு எழுதிய “புதுமைப்பித்தன் இருந்த வீடு” கவிதையின் எதிரொலியாகத் தான் அந்தக் கவிதையை எழுதினேன். கவிதை மேல் வெளிப்படையாக மரியாதையைக் காண்பிக்காத, கவிஞர்கள் மீது வெளிப்படையாக அசூயையை வெளிப்படுத்திய அந்த மாபெரும் இலக்கிய ஆசிரியனை எனது கவிதைக்குள் தேக்கிவைக்க வேண்டும் என்ற ஆசையை அக்கவிதை வழியே நிறைவேற்றிக் கொண்டேன். ஒரு பிரியமான பழிவாங்கல்தான் அது.

3

“காலை வணக்கம் ஐயா
நாங்கள்
சூரிய உதயத்திலிருந்து
வருகிறோம்
.

கேள்வி: ஆரம்ப காலத்தில் உங்களுக்கு நல்ல கவனத்தை பெற்று தந்த கவிதை – “சிங்கத்துக்கு பல் துலக்குபவன்“. ஒருவகையில் உங்கள் அடையாளக் கவிதை என்று அதை சொல்லலாம். இரு தசாப்தங்கள் கடந்த நிலையில் இன்று அந்த கவிதை சார்ந்து உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கிறது?

பதில்: தமிழில் தொன்னூறுகளுக்கு பிறகு, பரவலாக பிரசித்தம் பெற்ற முதல் நவீன கவிதை அதுதான் என்று சொல்லமுடியும்.  என் கவிதை உலகத்திற்குள் வெற்றிகரமாக விலங்குகள் வர ஆரம்பித்தது அந்த கவிதைக்கு பிறகுதான். அவ்வகையில் அதுவொரு நுழைவு வாயில்.

“சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்” முதலில் ஒரு உருவகக் கதையாக மனத்தில் உருக்கொண்டது. அதை நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி வெற்றிகரமான ஏற்பைப் பெற்ற பின்னரே கவிதையாக எழுதினேன். அது தன்னிச்சையாக ஒரு கார்டூன்தன்மையை கவிதையம்சமாக சுவீகரித்துக் கொண்டது. இதயப்பூர்வமாக சிரிப்பைக் கொண்டுவரும் கூறும் அந்தக் கவிதையில் இருந்தது. பறவைகள் ஈ ஈ என்று அந்தக் கவிதையில் இளிக்கும். இசை முதலிய கவிஞர்கள் அக்கவிதையை தம் வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் ஏற்று அதை பிரபல்யப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி நேரடியாக மட்டுமில்லாமல் மறைமுகமாகவும் அதன் இருப்பு ஸ்தூலப்பட்டுள்ளது.

குமுதம் நிறுவனம் தொடங்கிய தீராநதி இலக்கிய பத்திரிக்கையில் இரண்டாவது இதழில் அக்கவிதை வெளியானது.  2002-ம் ஆண்டு துவக்கம் அது. அக்கவிதை வெளியாகி கிட்டத்தட்ட ஓரிரு வருடங்களுக்கு அந்தக் கவிதையுடனே நான் வாழ்ந்தேன் என்று சொல்லும் அளவுக்கு அக்கவிதை பரவலாகப் பேசப்பட்டது. சினிமா விழாவில் அந்தக் கவிதை பகிரப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அன்றாட வேலைச் சூழலில் பொருந்த முடியாத பருவத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களும் தங்களை அடையாளம் காணக்கூடிய பொதுக்குணம் அந்தக் கவிதையில் இருப்பதால் அது அத்தனை பேசப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது அடிக்கடி பார்க்கும் நண்பராக இருந்த ஓவியர் நடேஷ், அந்தக் கவிதையை அடிப்படையாக வைத்து ஒரு கோட்டுச் சித்திரம் வரைந்தார். அச்சித்திரத்தில் இருந்த சிங்கமும் பறவைகளும் இப்போதும் ஞாபகத்தில் உள்ளன. குஜராத் கலவரத்தை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் மாக்ஸ்முல்லர் பவனில் நடத்திய கூட்டத்தில் நடேஷ் அதை துண்டுப்பிரசுரமாகவும் விநியோகித்தார். அக்கவிதை அவ்விதம் அரசியலும் பேசியது.

அக்கவிதை எழுதிய காலம் தனிப்பட்ட வகையில் என் வாழ்விலும் முக்கியமானது. அந்தக் கவிதைக்கு முன்னாலேயே என் முதல் கவிதைத் தொகுதியான ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ வெளிவந்திருந்தது. ஆனாலும், என் மீது எந்த நம்பிக்கையையும் அது என் நண்பர்களிடையே ஏற்படுத்தவில்லை. விக்ரமாதித்யன் அண்ணாச்சி, சி. மோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற நண்பர்கள் என்னை கவிஞனாக ஏற்கவில்லை. பேச்சுதான் ஜாஸ்தி, ஆனால் கவிதைகளாக அத்தொகுதி தேறவில்லை என்ற மனக்குறையும் புகாரும் ஏமாற்றமும் அவர்களிடம் வெளிப்பட்டன. ‘சிங்கத்துக்கு பல் துலக்குபவன்’ கவிதை அந்த நிலையை மாற்றியது. விக்கி அண்ணாச்சிக்கு, “இவன் தேறிவிடுவான்” எனும் நம்பிக்கை அக்கவிதைக்கு பிறகு வந்தது. என்னோடு பிணக்கில் இருந்த சி. மோகன், ஒரு திருமண வீட்டில் அந்தக் கவிதையைக் குறிப்பிட்டு மீண்டும் என்னிடம் ராசியானார்.

கவிஞனாகவும் உருவாகவில்லையே என்ற தோல்வி மனப்பான்மையில் இருந்த எனக்கு ‘சிங்கத்துக்கு பல் துலக்குபவன்’ கவிதை, ஒரு அசல் உலகத்தைத் திறந்துக் காட்டியது. எனது இயல்பு, ஆளுமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் ஒளி நாற்புறமிருந்தும் அந்தக் கவிதையின் மீது இப்போதும் வீசிக்கொண்டிருப்பதை விலகி நிற்கும் துக்கத்தோடு பார்க்கிறேன். அந்தக் கவிதையோடு தொடங்கிய ‘காகங்கள் வந்த வெயில்’ தொகுதியின் அத்தனை கவிதைகளிலும் அந்த களங்கமின்மையின் ஒளி இருக்கிறது. நான் மீண்டும் அடையவே முடியாத ஒளி அது. நான் அப்போது என் மனைவியைக் காதலித்துக் கொண்டிருந்தேன். வேலையோ எதிர்காலமோ ஏதுமின்றி இருந்தேன். ஆனால், துளிகூட உடல் மற்றும் மனதின் சுமையின்றி திருவல்லிக்கேணி தெருக்களில் ஏகாந்தமாக உலவும் மாடுகளுடன் நானும் மனதில் என் அடுத்தடுத்த கவிதைகளை கோர்த்தபடி  மிதந்துகொண்டிருந்தேன். திருவல்லிக்கேணியில் அப்போது வசித்துவந்த ஞானக்கூத்தனுக்கு என் மேல் மிகப்பெரிய வாஞ்சையையும் கவனத்தையும் உருவாக்கியவை அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய கவிதைகள் தாம். அவரது பஞ்சுக்கைகளின் ஸ்பரிசம் இப்போது இதை எழுதும்போது ஞாபகத்துக்கு வருகிறது.  

‘சிங்கத்துக்கு பல் துலக்குபவன்’ கவிதை அடுத்த பல கவிதைகளுக்கு உயிர்ப்பை அளித்தது. எனக்கு அந்தக் கவிதை உயிர்ப்பைக் கொடுத்ததைப் போலவே பல வாசகர்களுக்கும் உயிர்ப்பைக் கொடுத்திருப்பதை பின்னால் நிறைய சந்தர்ப்பங்களில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். ஒரு நல்ல கவிதை மேல் ஏறி ஒருவன் சில காலம் சவாரி செய்யமுடியும். நான் அப்படி சவாரி செய்யும் வண்ணம் நான்கைந்து கவிதைகளை அதைப்போலப் படைத்திருக்கிறேன்.

நவீன கவிதைகளில் அதற்கப்புறம் ஒரு மாபெரும் விலங்குக் காட்சி சாலை ஒன்று விரிய காரணமாக அந்தக் கவிதை இருந்திருக்கிறது என்பது இன்னொரு விளைவு.

கேள்வி: உங்கள் கவிதையில் வரும் விலங்குகள் பற்றி சொன்னீர்கள். சமீபமாக உங்கள் கவிதைகளில் பிரிக்க முடியாத பாத்திரமாக உங்கள் வளர்ப்பு மிருகமான “பிரௌனி” நிலைப்பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் நாய் வளர்க்கும் மனிதர்கள் மேல் சந்தேகம் இருப்பதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்களே நாய் வளர்ப்பவராக மாறியிருக்கிறீர்களே?

பதில்: அந்த பேட்டியில் குறிப்பிட்ட கருத்தில் இன்னமும் எனக்கு உடன்பாடுள்ளது. ஆனால் அன்றிருந்த அதே அளவிலான உடன்பாடு என்று சொல்லமாட்டேன். பாதி அளவில் மட்டும் என்பேன்.  

இப்போது அந்த எண்ணத்தில் கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது. அனைத்து வளர்ப்புப் பிராணிகளுமே பிரக்ஞை அளவில் மனிதனைவிட ஒருபடி கீழானவை என்றே கருதுகிறேன். உறவில் மனிதர்களை விட சவால் குறைவான உயிர்கள் அவை. அதனாலேயே மனித உறவுகளிலும் மனித உலகிலும் தோற்பவர்களுக்கு அடைக்கலமாக, சிறையாகப் பிராணிகள் மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அந்த அபாயம் என் மேலும் கவிழலாம் என்ற விழிப்போடே பிரௌனியுடனான என் உறவு இருக்கிறது. ஒரு நிலையில் நானும் மனித உலகத்துடன் உறவுகொள்ளும் சவாலில் தோற்றுப் போய் ப்ரௌனியிடம் அடைக்கலம் கொண்டிருக்கலாம்.

சமீபத்தில் சாப்ளினின் “எ டாக்ஸ் லைப்” படத்தைப் பார்த்தேன். சாப்ளின், அந்த நாய் இருவரையும் ஒரு மதுவிடுதியிலிருந்து தூக்கி வெளியே போடுவார்கள். அந்த நாய் புரண்டெழுந்து அந்த பாரின் வாசலைப் பார்த்து கோபமாகக் குரைக்கும். ஒரு ஏழையின் ரௌத்திரமாக, அந்த நாயின் கோபம் அசலாக வெளிவந்திருக்கும். அது தெரு நாய்களுடன் சேர்ந்து ஒரு கடைவீதியில் ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்கும் காட்சியும் அபாரமானது. சாப்ளினுக்கு இணையாக அந்த நாய் பிரமாதமாக நடித்திருந்ததைக் கூர்ந்து கவனிப்பதற்கு ப்ரௌனியுடனான உறவே உதவியாக புரிந்தது.

நாய் வளர்ப்பில் முழு சம்மதம் இல்லாத காலத்தில்தான் ப்ரௌனி எனக்கு அறிமுகமாகிறது. நான் தினசரி நடைபயிற்சிக்கு போகும் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள தெருவில்தான் ப்ரௌனியோடு எனக்கு பழக்கமேற்பட்டது. ஒருவகையில் அது என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது எனலாம். அழகுக்காக இதைச் கூறவில்லை. என் கூற்றில் புனிதப் பார்வையும் இல்லை. எனது நண்பரும் கவிஞருமான ஆனந்த் சொல்வதை இங்கே நினைவுகூர்கிறேன். எந்தப் பொருளும், எந்த உறவும் நம்மிடம் வருவதிலும் நம்மைவிட்டுச் செல்வதிலும் நம்மால் நிர்ணயிக்க இயலாத ஒரு இலக்கணம் இருப்பதாக அவர் சொல்வதை நானும் நம்புகிறேன். அந்த இலக்கணம் விதி சார்ந்ததோ கடவுள் சார்ந்ததோ அல்ல. எத்தனையோ இப்பால் சக்திகள் சேர்த்து உருவாக்கும் இலக்கணம் அது. அப்படிதான் ப்ரௌனி, வேளச்சேரி பெருங்குடி ரயில் நிலையம் அருகே இயங்கும் அரசு ஜிம்மின் வாசலில் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

ஒரு நபருடனோ ஓர் உயிருடனோ நீண்டகால பந்தம் ஏற்படும்போது என்னவெல்லாம் நடக்குமோ அவை எல்லாம் ப்ரௌனியுடனும் நடந்தன. எப்படியாவது அதன் தொடர்பை முறித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு பல ரோதனைகளை அது கொடுத்திருக்கிறது. நீயா நானா என்று ஒருகை பார்த்துவிடுவோம் என்று நினைக்கும்படிக்கு பல சிக்கல்களைக் கொடுத்திருக்கிறது. பல நாட்கள் உறங்க விடாமல் செய்திருக்கிறது.

வீட்டின் இரும்பு கேட் திறந்திருக்கும்போது, வெளியுலக ருசிக்காக அடிக்கடி ப்ரௌனி காணாமல் போய்விடும். பிறகு திரும்பிவரும். அப்படி ஒரு நாள், பிற நாய்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் வந்து சேர்ந்தது.   சிகிச்சை பெற்று மீண்டது. இருப்பும் வெளியேற்றமுமான எங்கள் உறவில் பிற்பாடு உரசல்கள் குறைந்து ஒரு தணிவு வந்தது. இப்போது ப்ரௌனிக்கு ஐந்து வயது மேல் ஆகிறது. முன்புள்ள துடி குறைந்து அதனிடம் கனிவும் தாய்மையும் சேர்ந்துள்ளன. ஆனால் உடலில் உள்ள திருட்டுத்தனம் கண்களில் இன்னமும் பூப்போல தங்கி ஒளிர்கிறது, என்னைப் போலவே.

ப்ரௌனியுடனான உறவில் இருந்து நான் உணர்ந்துக் கொண்ட விஷயங்கள் சில இருக்கின்றன. நேசத்தை வெளிப்படுத்த போதுமான அளவு கற்றுக்கொள்ளாத எனக்கு ப்ரௌனிதான் நேசத்தைச் சொல்லித் தந்தது. அந்த வகையில், மனிதர்களிடமிருந்து பிராணிகளுக்கும் பிராணிகளிடமிருந்து மீண்டும் மனிதர்களுக்குமாய் என் அலைவும் கற்றலும் தொடர்கின்றன. கண், காது முதல் வால் வரை ஓர் உயிரின் பரிபூரண அசைவுகளிலும் சப்தங்களிலும் கணந்தோறும் ஈடுபட்டுக் கரையும் வாய்ப்பை எனக்கு முழுமையாகக் கொடுத்தது ப்ரௌனிதான். ஈடுபடுவதில் நான் இல்லாமல் போவதற்குப் பெயர்தான் நேசம் இல்லையா; அத்தகைய நான் இல்லாமல் போகும் கணங்களை இப்போது எனக்குக் கொடுப்பது ப்ரௌனியின் இருப்புதான்.

4

“சற்று முன்னர்
சமுத்திரத்தில் உயிர்த்து
இப்போது
கருத்த முதியவளின்
எடைத்தராசில்
துடிப்பு நீங்கி
துயிலும் மீன்களின்
மீது ஈக்கள் போலப் படரும்
கதிரே
உனக்கு வந்தனம்”

கேள்வி: உங்கள் கவிதைகளுக்கும் பிறருடைய கவிதைகளுக்கு நடுவே தென்படும் முக்கியமான வித்தியாசம், உங்களுடைய கவிதைகளில் கவிஞனின் இருப்பு ஓர் உறுதியான தன்னிலையாக வெளிப்படுவதில்லை என்பது. இந்த வேறுபாடு பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில்: கவிஞன் என்னும் உறுதியான தன்னிலையை நான் கவிதைகளில் அனுமதிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை ஒரு அவதானமாக இனிதான் நான் யோசித்து பார்க்க வேண்டும்.

கேள்வி: வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், உங்கள் கவிதைகள் புகைப்படக் கலைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதாக படுகிறது. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், வாலஸ் ஸ்டீவன்ஸ், ஆடன் போல.

பதில்: நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். காட்சிகள் மேல் எப்போதும் எனக்குஈர்ப்புண்டு. உரிய அவகாசமும் சூழலும் இருந்திருந்தால் புகைப்படக் கலைஞனாக வந்திருக்கக்கூடியவன் தான். கவிஞனாக உருமாற்றிக் கொண்ட ஒரு புகைப்படக்காரன் இருக்கிறான் என்று என்னைப் பற்றிச் சொல்வேன். ஓவியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ளமாட்டேன்.

கேள்வி: உங்கள் பல கவிதைகளை வெறும் கண்கள் மட்டுமே ஆனவை என்று சொல்லலாம் இல்லையா?

பதில்: ஆம். கண்கள் இருக்கும்வரை காட்சிகள் தொடரும் இல்லையா? வெறும் கண்களாக இருந்து காட்சிகளை பார்த்துக் கொண்டேயிருப்பது சிறுவயது முதலாகவே என் வழக்கம்தான். அப்படி நிறைய காட்சிகள் ஞாபகத்தில் வருகின்றன.

லெட்சுமி ஆச்சி வீட்டு வளவுத் தெரு நடைப்படியில் உட்கார்ந்து இருக்கிறேன். அது எல்கேஜி அல்லது யூகேஜி கோடை விடுமுறை தினமாக இருக்கலாம். கீழப்புதுத் தெருவின் முக்கால் நீளத்தைக் கடந்து அதற்கடுத்த வீட்டிலிருந்து வடக்கு முனையை நோக்கி என் அம்மாவின் உடல்தடம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவள் தெரிவாள். நடுவில் உச்சினிமாகாளி ஆலயத்தைத் தாண்டிவிட்டால் இன்னும் துல்லியமாகத் தெரிவாள். மத்தியான மூன்றரை மணி வெயிலில் ஒல்லியாக, ஒரு கோடாகத் தெரியத் தொடங்கிவிட்டாள் அம்மா.அன்றுதான் நான் முதல்முறையாகப் படியிறங்கி தெருவில் ஓடியிருக்க வேண்டும். அந்தக் கோட்டை நோக்கி ஓடினேன். மாடத்தெரு அருகில் அவள் துல்லியமாகத் தெரியத்தொடங்கி விட்டாள். நான் இரண்டு நிமிடங்களில் ஓடி அவளது காலைக் கட்டிக்கொண்டேன்.அதுதான் என் ஞாபகத்திலிருக்கும் ஆதிக்காட்சிகளில் ஒன்று. அடுத்த காட்சி ஒன்பது வயதில் தென்காசியில். நாலு மணி ஆவதுவரை, கருப்பு ரோமன் எழுத்துகள் பொரிக்கப்பட்ட பெரிய பெண்டுலம் கடிகாரத்தை, நிமிடம் நிமிடமாக முள் நகர்வதுவரை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான்கு மணி அடிக்கிறது. உடனே வெளியில் ஓடிவந்து வாசலில் நிற்கிறேன். தெருமுனையில் அம்மா தெரிகிறாள். 

எனக்கு பெண்களும், குழந்தைகளும், பிராணிகளும், விதவிதமான சுபாவத்தைக் காண்பிக்கும் முகங்களைப் போன்ற வீடுகளும் காண சலிக்காதவையாக இருக்கின்றன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாரத்தின் ஐந்து நாட்களும் சென்னையின் பறக்கும் ரயிலில் பயணிக்கிறேன். ஜன்னல் வழியாகவோ அல்லது வாசலில் நின்றுகொண்டோ, பறக்கும் உயரத்திலிருந்து சென்னையின் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் அடையாறு ஆறையும் கூவத்தின் மேல் அன்னநடை போடும் பூக்கொண்டை கொக்கையும் குத்தியிருக்கும் கழியில் குந்தியிருக்கும் கிங்பிஷர் உள்ளிட்ட பறவைகளையும் கல்லறைத் தோட்டங்களையும் திருவல்லிக்கேணி நிலையத்தில் செவ்வக வடிவில் தெரியும் கடலையும் ரயில் நிலையத்தின் கூரையை இன்னொரு உலகமாக்கி குடித்தனம் செய்யும் புறாக்களையும் பார்ப்பது சலிப்பதே இல்லை.

மது வாங்கிக் கொண்டு, சென்னையின் விதவிதமான நிலப்பரப்புகளுக்கு சென்று அருந்துவது எனக்குப் பிடித்தமானதாக இருந்துள்ளது. ஒரு பகலோ, ஒரு மாலை நிலக்காட்சியோ போதையில் நிசப்தத்துடன் என்னில் இறங்குவதை அனுபவித்திருக்கிறேன். மதுவோடு சேர்ந்து நிலப்பரப்புகளையும் பருகுவதை ஒரு தியானம் போலச் செய்திருக்கிறேன். சென்னையின் பழந்தன்மை வாய்ந்த ஆளற்ற ஏகாந்த பார்களைத் தேடி தேடிச் சென்று ஒரு காலகட்டத்தைப் பருகியிருக்கிறேன்.

 விரும்பிக் காணும் போர்ன் வீடியோக்களிலும் முகபாவங்களையும் கண்களையும் பார்ப்பது தீரவில்லை. வான்கோ ஓவியங்கள் தொடர்பான சினிமாக்களை வெறியாகவே தொடர்ந்து பார்த்து வருகிறேன். இன்னமும் அபூர்வமாக தியேட்டருக்குப் போகும் சந்தர்ப்பங்களில் கண்களை விரித்தே ஒரு காட்சியின் அத்தனை இடங்களையும் பார்க்கிறேன்.

சமீபத்தில் மறைந்த தனுஷ்கோடி குறித்த ஓர் அனுபவத்தைச் சொல்கிறேன். காஃப்காவின் விசாரணை நாவலையும் அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தையும் க்ரியா பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்தவர். ஓவியரும் கூட. அவரை நண்பர் சமஸுடன் பார்க்கச் சென்றிருந்த போது, அவர் முகத்தில் முதுமையின் கோடுகள் அதீதமாகவும் அழுத்தமான தீற்றல்களைப் போலவும் இருந்தன. அந்தக் கோடுகளை நான் பார்த்துக்கொண்டே இருந்தபோது, எண்ணமில்லாத ஒரு குவிதல் அவர் முகத்தில் ஏற்பட்ட அனுபவம் அலாதியானது. எனது மனம் ஆடிய கூத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த அனுபவம் முக்கியமானது.

வயது கூடக் கூட பெண்களின் நடையையும் உடல் பாவங்களையும் கூடுதலாக கவனிக்கிறேன். அவர்கள் என்னுடன் தொடர்புடையவர்கள் அல்ல; வேறு கிரகங்களிலிருந்து இங்கே இறங்கிச் செல்லும் பறவைகள் என்று தோன்றுகிறது.

கேள்வி: எனில் நீங்கள் புகைப்படங்களும் எடுப்பதுண்டா?

பதில்: யார்தான் இப்போது புகைப்படம் எடுக்காமல் இருக்கிறார்கள்? எனது செல்போனில் புகைப்படங்களை எடுப்பதற்கான தருணத்தை மிகவும் அபூர்வமாகவே வைத்துள்ளேன். எனக்கு இன்னும் செல்பி எடுக்க தெரியவில்லை. பெண்களையும் அழகாகப் படம்பிடிக்கத் தெரியாது. சிதறிவிடுகிறேன். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், பிராணிகள், பூச்சிகள், அசேதனப் பொருட்களை நன்றாகக் கூர்ந்து படம்பிடிக்கப் பிடிக்கிறது.

5

“என்னை மேலும் குழப்பத்துக்கு
பயங்கர
அழகுகளுக்கு
சமன்
குலைக்கும் காதல்களுக்கு
புதிர்களுக்கு
அந்தப்
புதிர்களைத் தீண்டத் திராணியுள்ள மொழிக்கு
மனிதர்கள் திளைத்துத் திகைத்து நிற்கும்
எட்டாயிரம் சாலைகளில்
செலுத்திக் கொண்டு போ கவிதையே”

கேள்வி: சமீபத்தில் கவிஞர் இசைப் பற்றிய கட்டுரையில் தமிழ்க் கவிஞர்கள்நீள் கவிதைகள்எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். பிரமிள், விக்கிரமாதித்யன், கலாப்ரியா போன்ற முன்னோடி கவிஞர்கள் வெற்றிகரமான நீள் கவிதைகள் எழுதியிருக்கிறபோதும் ஒரு வகைமையாக அது ஏனோ தமிழில் வளர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் நீங்கள் அதை இப்போது வலியுறுத்துவதன் தேவை என்ன? இன்று கவிதை என்பது ஒரு புகைப்படச் சட்டகத்தில் பொருந்தி வாட்சாப்பிலும் முகநூலிலும் நிலைத்தகவலாய் வைக்கும் அளவுக்குபுதுயுக வாழ்த்து அட்டை எனஇருந்தால் போதும் எனும் பொது மனநிலை வளர்ந்து வருகிறது. இந்த சூழலுக்கு எதிரானதாகவே உங்கள் கருத்து அர்த்தப்படுகிறது.

பதில்: எனது நண்பரும் கவிஞருமான இசையின் புதிய கவிதைத் தொகுப்பான ‘உடைந்து எழும் நறுமணம்’ நூல் குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரையில் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தேன். தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது ஊடகங்கள் மிகப் பக்கத்தில் வந்துவிட்டிருக்கின்றன. நம் உடலின் பகுதியாகவே அவை மாறியிருக்கின்றன. மனிதனுக்கும் ஊடகத்துக்கும், படைப்புக்கும் வெளியீட்டுக்கும் நடுவே இடைவெளி இல்லாத காலத்தில், ஒரு வஸ்துவின் மேல், ஒரு நிகழ்ச்சியின் மேல், ஒரு பேச்சின் மேல் கவனம் குவிக்க முடியாதபடி நாம் சிதறியிருக்கிறோம். இது முன்னுதாரணமில்லாத மாற்றம். மனிதர்களின் கவன எல்லை மிகவும் குறுகியிருக்கும் வேளையில், எந்த உள்ளடக்கத்தின் மேலும் நீடித்து செயல்படவும் தரித்து நிற்கவும் இயலாத, கவனத்தின் பற்றாக்குறையை தமிழ்க் கவிதைகளிலும் காண முடிகிறது. அந்தப் பற்றாக்குறைதான் புதிதாக எழுதுபவர்களிடம் நகல்த்தன்மையை பெருக்கியுள்ளது. நீள்கவிதை சார்ந்த என்னுடைய ஏக்கமும் இதன் அடிப்படையில் எழுந்ததே.

ஆலன் கின்ஸ்பெர்க்கின் கவிதையான ஊளைப் போல (Howl – Allan ginsberg), ஆர்தர் ரைம்போவின் நரகத்திலிருந்து ஒரு பருவம் போல (A season in hell – Arthur Rimbaud), தொடர் ஓலம் வெளிப்படும் ரில்கேயின் இரங்கற் பாடல்கள் (Duino Elegies – Rainer Maria Rilke) போல, நீள்கவிதை வடிவத்தை நாமும் முயற்சித்தால், இந்த உடனடி, ஆயத்தத் துணுக்கு குணாம்சத்திலிருந்து நம் கவிதை விடுபட்டுவிடுமோ என்ற ஏக்கம் அது.

லட்சியம் போன்ற அடைக்கல வீடு இந்த நூற்றாண்டுக் கவிஞனுக்கு இல்லை; எந்தத் தரப்பிலிருந்து, எங்கே நின்று பேசுவதென்றும் தெரியவில்லை; அந்த இடைவெளியில்தான் சிறுசிறு சம்பவங்களையும், அட்சதை அரிசி அளவே உள்ள ஆசிர்வாத தருணங்களையும் மூட்டை மூட்டையாக எம் தமிழ்க்கவிஞர்கள் பெருக்கியுள்ளோம் எனத் தோன்றுகிறது.

கனவுகள் இல்லாத சாக்லேட்டுகளைப் போல, திருநீறு பொட்டலங்களைப் போல, சிரிப்பு வாயுப் புட்டிகளைப் போல, கோடரித் தைலங்களைப் போல அந்தக் கவிதைகள் திகழ்கின்றன. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கோடரித் தைலங்கள் உண்மையில் எந்த நோயையும் குணப்படுத்துவதில்லை. நாசியை அடைக்கும் காட்டமான வாசத்தை நம்மைச் சுற்றி அவை பரப்ப மட்டுமே செய்கின்றன. அங்கே வலி இல்லாமல் ஆவதில்லை. மாறாக, அந்த சூழ்தலிலும் கண நேர காந்தலிலும் நாம் வலியை மறந்து தூங்கிவிடுகிறோம். அப்படி வலி மரத்துப் போகும் இடத்தில் கவிதை எப்படி தரிக்க முடியும்?

மகிழ்ச்சி, துக்கம், அபத்தம், அசூயை, அருவருப்பு இவை எல்லாம் பல்வேறு ஜன்னல்களாகப் பெருகி வெவ்வேறு வேடங்கள் பூணும் இந்த மெய்நிகர் எதார்த்தத்தில், தூரமும் இடைவெளியும் தோன்றி மறைவதாயும் நெருங்கி விலகுகுவதாயும் இருக்கின்றன. இந்த காலத்தின் ஏற்றத்தாழ்வு நிலைமைகளை, நம்மால் சரிசெய்யவே இயலாமல் தொடரும் தீராத பொருத்தமின்மையை பெரும் பிதற்றலாக மாற்ற நீள்கவிதை போன்ற ஒரு வடிவத்தை நாம் பரிசீலிக்க வேண்டுமென்ற ஆசையில் சொல்லப்பட்டது அது.

சி. மணியின் “வரும் போகும்”, விக்கிரமாதித்யனின் “நவபாஷாணம்”, பிரமிளின் “தெற்கு வாசல்”, ஞானக்கூத்தனின் “சொல்லப்பட்டது போல் இல்லை இந்த அழிவுப்பாதை”, ஆனந்தின் “இளவரசி” ஆகிய கவிதைகளை தமிழில் செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகள் என்று சொல்வேன். எம் டி முத்துக்குமாரசாமியின் “அனாதையின் காலம்”, கண்டராதித்தனின் “உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்”, சபரிநாதனின் “உயிர்த்திருத்தலின் சங்கீதங்கள்” இவை மூன்றும் சமகாலத்தில் நீள் கவிதைகளின் திசை நோக்கிய காத்திரமான முயற்சிகள்.

மானுட வரலாற்றில் இன்று நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் குறித்த விழிப்பில் தொடங்கி நாம் வாழும் தேசம், பிராந்தியக் கலாச்சாரம், மொழி இவற்றின் பல்நினைவுகளையும், ஊடாட்டத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தும் ஒரு துன்பியல் நாடகமாகவும் நம்மிடையே புழங்கும் சத்தங்களின் அனர்த்த வெளியாகவும் அந்த நீள்கவிதை வடிவம் இருக்க வேண்டும் என்பது என் கற்பனையாக இருக்கிறது.

கேள்வி: நீள் கவிதைகளுக்காக நீங்கள் பேசுவது இன்னொரு வகையில் ஆர்வத்தை ஊட்டுவதாக உள்ளது. ஏனென்றால் நீள் கவிதை என்பது ஒருவகையில் காவியத்துக்கு நெருக்கமாக இருப்பது. உங்களுடைய பெரும்பாலான கவிதைகள் அந்தந்த தருணங்களில் தரிப்பவை. அழகியல் அடிப்படையிலும் வாழ்க்கைப் பார்வை அடிப்படையிலும் நீள் கவிதை என்பது உங்கள் கவியுலகத்துக்கு எதிரே இருப்பதாக தோன்றுவதாலேயே நீங்கள் அதற்காக வாதாடும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பதில்: இதுவரை எழுதி வந்த வடிவத்தில் நான் உணரும் வரம்பிலும், அந்த வரம்பு ஏற்படுத்தியிருக்கும் அலுப்பிலும் இருந்தே நீள்கவிதை சார்ந்த ஒரு மூட்டம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. க்ஷணத்தெளிவுகள், க்ஷண தரிசனங்கள், க்ஷண விடுதலைகள் என வாசகனை அமைதிப்படுத்தும், சொஸ்தப்படுத்தும் கவிதைகள் பெருகுவதற்கு எனது ‘கல் முதலை ஆமைகள்’ முந்தைய தொகுப்பும் காரணமாகிவிட்டது. அதனை உணர்ந்து தான் எனது புதிய தொகுதியான ‘நிழல், அம்மா.’ முன்னுரையிலேயே அதுபோன்ற எதையும் கவிஞனும் வாசகனும் நம்பக்கூடாது என்று பொறுப்புதுறப்பு செய்கிறேன். என் மினிமலிச பாணி கவிதையை நான் நீட்டிக்க விரும்புகிறேன். ஆனால் அதை என் உள்ளடக்கத்திலிருந்தும் பார்வையிலிருந்தும் அனுபவப் புலத்திலிருந்துமே செய்யவேண்டும். முரண்படும் குரல்கள் தொனித்து மோதும் ஒரு நாடகமாக எனது அந்த நீள்கவிதையைக் கனவுகாண்கிறேன். அதற்கான மையக்கருத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே முடிவுசெய்துவிட்டேன். ஆனால், அக்கவிதையை எழுதாமல் வெறுமனே கவிதை பற்றி பேசும்போது இதைப் படிப்பவர்களிடம் ஒரு பிரமாண்டமான மயக்கத்தை என்னால் ஏற்படுத்தி விடமுடியும். ஆனால், அந்தப் பிரமாண்டமோ மயக்கமோ என் நீள்கவிதையை எழுத சுக்களவும் உதவாது என்பதால் முஸ்தீபிடுவதை தவிர்க்கிறேன். நான் உருவகித்துள்ள அந்த நீள்கவிதை ஒரு தெருவில் நடந்துபோகுபவனின் நீ…………ண்………..ட நினைவுகளும் பிதற்றலும். வரலாற்று நினைவின் சுமையிலிருந்தும் வரலாற்றின் நிழலிருந்தும் தனிமனிதனை சற்றே விடுவிக்கவும் அவனை மகோன்னதப்படுத்தவும் இலக்கியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால், வரலாறை நீக்கிவிட்டு அவனால் ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்குள் நுழையவேனும் முடியுமா என்பதுதான் மையக் கேள்வி. அதைமட்டும் எனது ஆசைப்படி எழுத வேண்டும். வேறு பெரிய லட்சியம் எதுவும் எனக்கு இப்போதைக்கு இல்லை.

கேள்வி: இருபத்தியைந்து வருடங்களுக்குக்கும் மேலாக கவிதை எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போதும் உங்கள் மொழியையும் வடிவத்தையும் தலைகீழாக மாற்ற பிரய்த்தனம் எடுப்பதை காணும்போது உங்களுடயை ஒவ்வொரு தொகுப்பிலும் அப்படி ஒரு திசைமாற்றம் அல்லது வளர்ச்சி இருப்பது நினைவில் திறக்கிறது. “ஆயிரம் சந்தோஷ இலைகள்முன்னுரையில்நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் சமீபத்திய கவிதைகளை படிக்கும்போது அவை மௌனத்திலிருந்து பேசும் இடத்திற்கு வந்துவிட்டதாய் பட்டதுதனக்குத் தானே பேசினாலும் முதல் முறையாக ஒரு தனிக் குரலின் ஆதிக்கம் தென்படுகிறது. காலநகர்வில் அப்படி உங்களிடம் வந்து சேர்ந்திருக்கும் மாற்றங்கள் பற்றி சொல்லுங்கள்.

பதில்: நான் எனது கவிதையோடேயே சேர்ந்து வளர்ந்திருக்கிறேன்; உலகியலில் என் கருத்து, நம்பிக்கைகள், விழுமியங்கள் மாறும்போது கவிதையிலும் உருமாறுகிறேன். ஒரு குழந்தை மொழியைத் தொட்டு உலகத்தை அனுபவத்தை வடிவங்களைத் தொட்டு அதன் வழியாக பழகுவது போன்ற வளர்ச்சியே அது. ஏனென்றால் மொழி சார்ந்த இயற்கையான வளத்துடனோ, தன்னெழுச்சி கொண்ட சமத்காரம் மற்றும் மேதமையுடனோ நான் கவிதைகளை எழுதத் தொடங்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் நவீன கவிதை தன்னில் வரித்துக் கொள்ள வேண்டிய குணம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த தேடலும் கேள்விகளும் என்னிடம் இருந்தன. அந்த நாற்சந்தியில் என் பிரத்யேக உலகத்தையும் சேர்த்துக் கொண்டு நான் பயணிக்கத் தொடங்கினேன். அப்படி இந்த இருபத்தியைந்து வருடங்களை கவிதைகளால் கடந்திருப்பதிலும் விரித்திருப்பதிலும் தற்செயலுக்கும் இடமிருக்கிறது; அதிர்ஷ்டத்திற்கும் இடமிருக்கிறது.

இப்போதும் மொழி அளவில் ஆற்றொழுக்காக வெளிப்படும் கவிஞனாக என்னை அடையாளப்படுத்த மாட்டேன். அதனால்தான் எப்பருவத்திலும் பெருந்தொகையாக நான் கவிதைகள் வெளியிட்டதில்லை. எனது தாமசத்திலிருந்து என்னைப் பிய்த்தெடுத்துக் கொண்டு ஒரு ஆமைபோலவே மெதுவாக என் கவிதையைக் கட்டி அடுக்குகிறேன்.

இயல்பு மொழிக் கவிதையை (Plain poetry) தொடக்கத்தில் என் வெளிப்பாடாக  தேர்ந்தெடுத்துக் கொண்ட நான் மொழியை ஒரு மெல்லிய கூடெனவே பயன்படுத்துகிறேன். ஆரம்ப கால கவிதைகளிலிருந்தே இந்த குணம் என்னில் சேர்ந்திருக்கிறது. உரையாடலைப் போலத் தோன்றும், மொழியை ஒத்த ஒரு மொழியையே என் கவிதைகளில் பார்க்கிறேன்.  நத்தைக் கூடு போன்ற அந்த மொழிக்கு அடியில், வெளிப்படையாக அடையாளம் காண முடியாத ஒரு தொனி இயங்குவதும் தெரிகிறது. ஒரு வகையில் அந்த தொனியே என் ஆளுமை என்றும் நினைக்கிறேன். அதைத்தாண்டி மொழி தொடர்பாக அதிகம் சொல்வதற்கு எனக்குப் புலமை கிடையாது. என் கவிதைகளில் நடக்கும் மொழி சார்ந்த மாற்றங்கள் எனக்கே கொஞ்சம் அன்னியமாகவே இருக்கின்றன. எனவே என் கவிதைகளில் இப்போது வந்தமைக்கிற பேசும் குரலையும் அதன் மொழியையும் இடைவெளி இல்லாமல் பார்க்க இயலவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தோன்றுகிறது.

சமீபமாக நான் நிறைய இசை கேட்கிறேன்.  ஒரே போதையாகவும் ஒரே அடைக்கலமாகவும் இசை என் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. அது என் மொழியில் கொஞ்சம் சந்தத்தையும் பேசுவதற்கான ஆற்றலையும் உருவாக்கியிருக்கலாம். மேலும் தனியாக பேசுவது என்பது தனிமையில் இருந்தே பிறக்கிறது. நகுலனில் வீடணன் தனியாகத் தானே பேசிக்கொள்கிறான். தனியாக இருக்கும்போது வார்த்தைகளில், மொழியில், பாடல்களில் அலைவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். குழந்தைப் போல கெட்ட வார்த்தைகளை ரகசியமாக பேசும் பழக்கம் எனக்கு இப்போதும் இருக்கிறது. ஒரு செல்லப் பிராணியுடன் தனியாக வசிக்க நேர்ந்த நான் விதவிதமாக வார்த்தைகளை உருட்டியபடி இருக்கிறேன். நாய்க்குட்டி பந்தை உருட்டுவதைப் போல. அதுவே என் மொழியில். பேசும் குரலாக மலர்ந்திருக்கலாம்.  ஆனாலும் அது பிரமிளுடையதைப் போன்ற வலியமையான தனிக் குரல் அல்ல.  அல்லது சுகுமாரன், யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா முதலிய பிற கற்பனாவாத கவிஞர்கள் போல் பாடல்தன்மை கொண்டதும் அல்ல.  அந்த வகையில் தன்னிச்சையான(spontaneous)  கவிஞன் என்று  என்னை சொல்ல முடியாது.    

நானே என் கவிதைகளை மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது மொழிக்கு அப்பால் குணமாகவும் உள்ளடக்கமாகவும் சில மாற்றங்களை அறிய முடிகிறது. ஒரு சின்ன கண்டுபிடிப்பு, ஒரு தீர்வு, ஒரு முடிவு, ஒரு நீதி ஆகியவற்றை நோக்கிப் போன என் கவிதை இயல்பு இப்போது மாறியிருக்கிறது.  வெளிச்சத்திலிருந்தும் தெளிவிலிருந்தும் விலகி மீண்டும் இருட்டையும் குழப்பத்தையும் நோக்கி சமீபத்திய தொகுதியில் போயிருக்கிறேன். அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. என் நூல்களிலேயே “அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்” தொகுப்பில்தான் உச்சபட்சமான இருட்டை நோக்கிச் சென்றேன். அங்கிருந்து மெதுவாக வெளிச்சம் நோக்கி நகர்ந்து “கல் முதலை ஆமைகள்” தொகுதியில் ஒரு ஆசிரமத்தையே உருவாக்கிவிட்டேன். அங்கிருந்து இப்போது மீண்டும் இருட்டுக்குள் இறங்கியிருக்கிறேன். “நிழல், அம்மா.”-வில் அது நடந்திருக்கிறது. கடவுளே இல்லாத இடமாக அந்தக் கவிதைகளை ஆக்கியிருக்கிறேன்.

தொடக்கக் காலத்தில் கவிதை பற்றி எனக்கு இருந்த எதிர்பார்ப்பும் இப்போது மாறியிருக்கிறது. என் அனுபவத்தை, என் காட்சிகளை, என் கருத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக இந்த உலகத்தை  ஒழுங்குக்குள் கொண்டுவர முடியும் எனும் நம்பிக்கையும் ஆவேசமும் இப்போது இல்லை. சமீப காலம் வரையில் ஒரு நல்ல தருணமோ அல்லது நல்ல படிமமோ வாய்த்தால் அதை மிகச் சீக்கிரமாக கவிதையாக மாற்ற முனைந்திருக்கிறேன். அதை என்னுள் தியானிக்காமல், சுருக்கி வெளியேற்றியோ, பலவீனமாக விரித்துப் பரப்பியோ வீண்டித்திருக்கிறேன். இப்போது ஒரு கவிப்பொருளோ,  காட்சியோ,  கருத்தோ கிடைக்கும்போது அதை என்ன செய்வதென்று திகைப்பே மேலிடுகிறது.  உடனே கவிதையாக மாற்றாமல், கூடுமானவரை தள்ளிப்போட்டு மறதிக்குள் புதைக்கவே முயற்சி செய்கிறேன். ஒரு நிழல்தெருவில் வாதுமை மரங்களுக்கிடையே தோன்றும் நினைவு வேறெங்காவது ஒரு பாலத்துக்குக் கீழே தோன்றும் இன்னொரு தருணம் வரை அந்தக் காட்சி குறித்து மிகவும் விசுவாசத்துடன் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறேன். வெள்ளைப் பூக்கொண்டையோடு ஒரு கொக்கு, முன்பெல்லாம் ஒருமுறை தோன்றினாலே அதை கவிதையில் இறக்கிவிடுவேன். கவிதையின் உள்கட்டுமானம் பற்றி தெளிவே இல்லாமல் அப்படி செயல்பட்டிருக்கிறேன். இப்போது கூடுமானவரை அந்த வெள்ளை கொக்கு எனக்கு தென்படாத வெளியில் செழித்திருக்கட்டும் என்றும் என் கவிதைக்குள் வராமலேயே அதன் பாதைகளில் அது அலைந்திருக்கட்டும் என்றும் தோன்றுகிறது. அப்படி மறதியில் இருந்து தானே வெள்ளைக் கொக்கு மீண்டும் பறந்து வரும் கவிதைச் செயல் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.   கவிப்பொருள் மீது குவிந்து, தரிக்கும் உளத்திடம் காலப்போக்கில் அதிகரித்திருப்பதன் சான்றாகவே,  “ஞாபக சீதா” தொகுதியில் ஒரு துணுக்காக வெளிப்பட்ட ‘குற்றாலத்து லிங்கங்கள்’, பின்னர் ‘அருவிக்குப் போகும் பெண்’ கவிதையாக மாறியுள்ளது. ‘தெரியாதா பேரன்பே’ தொடர்வரிசை கவிதைகளிலும் அந்த நின்று தரித்தல் நிகழ்ந்துள்ளது.

அரக்கப் பறக்க தமிழ் நவீன கவிதையை உய்விக்கும் அவசரம் இருந்தது முதலில். யாரும் இல்லாவிட்டாலும் கவிதை இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரக்ஞைதான் என் கவிதையில் நான் அடைந்திருக்கும் மாற்றம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: கவிதையில் நீங்கள் தொடர்ந்து மாறுவதை பற்றி விரிவாக சொன்னீர்கள்அதன் தொடர்ச்சியாக இந்த கேள்விஓவ்வொரு தொகுப்பிற்கு நடுவிலும் சில மரணங்கள் சில மறுபிறப்புகளைக் காண முடிகிற கவிதை உலகம் உங்களுடையது. எனில் கவிதை நிரந்தரமாக ஒரு பதிலை அளிக்க இயலாதா?

பதில்: கவிதை நிரந்தர பதிலை அளிக்குமென்றால் ஹான் ஷானும், ரில்கேயும், கபிலரும், காரைக்கால் அம்மையாரும், பாரதியும், கலாப்ரியாவும், அபியும், தேவதச்சனும், யவனிகாவும், சபரிநாதனும், சஹானாவும், வே நி சூர்யாவும் ஏன் தோன்றித் தோன்றி எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன், வந்து நிற்கிறான் விக்கிரமாதித்யன் என்ற புலம்பலுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

6

யோயோ
இரும்புக்குண்டுடன்
உலோகச் சங்கிலியை இணைத்துக் கட்டிய
போர்ச்சாதனம் அது.
19ஆம் நூற்றாண்டில்
யோயோவின் வடிவத்தை மாற்றி,
ரப்பர் பந்துடன் எலாஸ்டிக் இணைத்து
விளையாட்டுப் பொருளாய் ஒருவர் மாற்றினார்
ரத்தம் கண்டுகொண்டிருந்த யோயோவை சரித்திரத்தில்
குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக்கியவன்
பெயர் மார்க்ஸ்

கேள்வி: தொன்னூறுகளில் நீங்கள் இளைஞராக கவிதைக்குள் நுழைந்த காலகட்டத்தில்தான் இலக்கியக் கோட்பாடுகளும் தமிழ் அறிவுப்புலத்தில் விவாதிக்கப்பட்டன. கோட்பாடுகளின் வருகையும் அவை தொடர்பான உரையாடல்களும் தமிழ் கவிதை உலகில் ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது?

பதில்: கலையும் தத்துவமும் கோட்பாடும் நம்மை என்ன செய்கின்றன? நான் வாழும் காலம், எனக்கும் என்னையும் உள்ளடக்கிய இயற்கைக்குமான உறவு, நான் பங்குபெறும் அமைப்புகளோடு நான் நடத்தும் நாடகம், ஆடும் நடனம் முதலியவற்றை புரிந்துகொள்ளவும் அர்த்தப்படுத்தவும் விமர்சிக்கவுமான புரிதலை தருகின்றன.

கவிதை உலகில் கோட்பாடுகளின் தாக்கம் பற்றி பேசுவதற்கு முன்னால் அது எனக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இந்தியத் தன்மை கொண்ட காஃப்காவியக் கவிஞன் என்று என்னை அடையாளப்படுத்தலாம். அமைப்புகள் மீதும் அவற்றின் அதிகார உறவுகள் மீதும் என் கண்கள் இயல்பாகவே படிகின்றன. அதற்கு ஓர் உருவத்தை அளித்தவர் காஃப்கா. அந்த காஃப்காவின் பெருஞ்சித்தத்தை என் கவிதைகளின், புரிதலின் பகுதியாக மாற்றுவதற்கு மிஷேல் பூக்கோவின் எழுத்துக்கள் எனக்கு உதவியிருக்கின்றன. கல்விச்சாலை தொடங்கி சிறைச்சாலை வரை அரூபமாகியிருக்கும் வன்முறை மேல் கவனம் கொள்ளும் படைப்பாளிக்கு காஃப்காவும், மிஷேல் பூக்கோவும் எப்படி வேறு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக தோன்ற முடியும்?

குற்றவாளி என்று கருதப்படுபவனுக்கு பொது இடத்தில் தூக்கு நிறைவேற்றிய முறை மாறி, அதே மரணதண்டனை சிறை அறைக்குள் சிலர் மட்டுமே பார்க்க நடைபெறும்போதும் தண்டனையின் வன்முறைத்தன்மை அதே அளவில் எப்படி நுட்பம் கொள்கிறது என்பதை பூக்கோவின் விளக்கத்தினாலேயே நான் அறிந்தேன். பின்னர் விக்டர் ஹியூகோவின் ‘மரண தண்டனைக் கைதியின் கடைசி நாள்’ குறுநாவலைப் படிக்க நேர்ந்தபோது பூக்கோவும் ஹியூகோவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நிரப்பி விரிகிறார்கள். போலவே ஆண்டன் செகாவ்வின் ‘ஆறாவது வார்டு’, பூக்கோவின் பரிசோதனைச் சாலை போலத் தெரியத் தொடங்குகிறது. உண்மையான சந்தோஷத்தை உங்களால் உணரவே முடியாது; ஏனெனில் அதைத் தாங்கமுடியாமல் இறந்துபோய் விடுவீர்கள் என்று ஒரு நேர்காணலில் பேசுகிறார் பூக்கோ. அவர் சந்தோஷத்தைப் பற்றிப் பேசுகிறாரா? வலியைப் பற்றிப் பேசுகிறாரா? அந்தப் புள்ளியில் அவன் மெய்யியலாளனாக, கவிஞனாக அல்லவா வெளிப்படுகிறான்? உயிர்க்கொல்லி நோயாக மட்டுமில்லாமல் சொல்வதற்கே விலக்கப்பட்ட நோயாகவே இன்றும் கருதப்படும் எய்ட்ஸ்க்குப் பலியான முதல் தலைமுறை பிரபலங்களில் அவனும் ஒருவன். அந்த முடிவும் சேர்ந்தே அவன் என்னிடம் உருவம் கொள்கிறான். எனில் அவன் கோட்பாடுகள் நேர்நிலையாகவே பாதிப்பை அளிக்கின்றன.

மாறும் ஊடகச் சூழல்களைப் புரிந்துகொள்ளாமல் சமூக நடத்தைகளைத் தெரிந்துகொள்ளவே முடியாது என்ற காலகட்டம் இது. தகவல் தொழில்நுட்பப் பணி வாய்ப்பும் அது அளித்த பொருளாதார வாய்ப்புகளும் சேர்ந்து தலைகீழாக மாற்றிய ஒரு பிராந்தியம் நான் குடியிருக்கும் வேளச்சேரி. போத்ரியார் எழுதிய ‘அமெரிக்கா’ என்ற அ-புனைவு வழியாகவே நான் தினசரி கடக்கும் டைடல் பார்க் சாலையை, மாற்றத்தின் மனநில வரைபடமாகப் பார்ப்பதற்குத் தெரிந்துகொண்டேன். ஊடகவியல், தத்துவம், கோட்பாடு சார்ந்த முறைசார் கல்வியைப் பெற்ற வாய்ப்பில்லாத எனக்கு என் இருபது வயதுகளில் அறிமுகமான சிறுபத்திரிகைகளே பூக்கோவையும் போத்ரியாரையும் வால்டர் பெஞ்சமினையும் அறிமுகப்படுத்தின. அவர்கள் எல்லோரும் என் பார்வையை விசாலப்படுத்தியிருக்கிறார்கள். என் கவி உலகை பாதித்திருக்கிறார்கள்.

மிஷேல் பூக்கோ, போத்ரியார், ரோலன் பார்த் தொடங்கி சூசன் சோண்டாக் வரையிலான பெயர்களை தமிழில் வெளியான கோட்பாட்டு எழுத்துக்களே அறிமுகம் செய்தன. அவர்களை வாசிப்பதற்கான தூண்டுதலையும் அளித்தன. காந்தியையும் அசீஷ் நந்தியையும் ரமேஷ் ப்ரேம் வழியாகவே ஆழமாகக் கவனிக்கும், வாசிக்கும் ஊக்கத்தைப் பெற்றேன். ரவிக்குமாரின் ‘கண்காணிப்பின் அரசியல்’ என்மீது அதிகம் தாக்கம் செலுத்திய புத்தகமாக இருந்திருக்கிறது.

கேள்வி: உலகம் முழுக்கவே கோட்பாடுகள் தேக்கத்தில் இருக்கும் காலத்தில் அவை சார்ந்த உங்களுடைய நேர்மறை பார்வை முக்கியமானதாகப் படுகிறது. தமிழ்ச் சூழலில் கோட்பாடு அறிமுகம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: சுந்தர ராமசாமி சொல்வது போல எந்த ஒரு மாற்றத்தையும் இயக்கத்தையும் அனுபவத்தையும் புரிந்துகொள்ள கால இடைவெளியும் தூர இடைவெளியும் தேவையாகத்தான் உள்ளன.     

 அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு விமர்சனங்களை மார்க்சியப் பின்னணி உள்ளவர்களே இங்கே தொடங்கிவைத்தனர். புதிய ஒன்றைக் கையாளும் பதற்றமும் பரபரப்பும் ஒட்டுமொத்த சூழலிலும் உணரப்பட்டன. அவர்களில் சிலர், அன்றைய எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்துக்களையும் அணுகிய விதத்தில் மேட்டிமைவாதத்தையும் வன்முறையையும் கடைபிடித்தனர். நாகார்ஜூனன், எம். கண்ணன் போன்றவர்களை உதாரணமாகச் சொல்வேன். தங்கள் ஆளுமையில் அவர்கள் பரிசீலனையே செய்யாமல் வெளிப்பட்ட திருகல், ஒரு கோணலாகவே தங்கிவிட்டது அவர்களிடம். அவர்களும் இங்கே அதிகம் தங்கவில்லை. அவர்களுக்கு நவீன இலக்கியம் சார்ந்து தமிழில் உருவான மரபின் மீது மரியாதை இல்லை. சமஸ்கிருதம் அதிகாரமாகச் செயல்பட்ட இடத்தில், கூகுள் இல்லாத காலத்தில், அவர்களிடமிருந்த ஆங்கில வாசிப்பையும் புத்தங்களையும் காட்டி அச்சுறுத்தினார்கள். ஸ்டாலினிய வன்முறையின் நீட்சி போன்றதுதான் அது.

சுந்தர ராமசாமி போன்றவர்களைக் கூட, அந்த அச்சுறுத்தல்கள் ஒரு பொம்மைத் துப்பாக்கியைப் போல சிறிதுகாலம் நடுங்கவைத்தன. அதற்குப் பழியாகத்தான் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி, அப்படி பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சிலரின் துப்பாக்கிகளையெல்லாம் வாசலிலேயே பறிமுதல் செய்து, தனது பதிப்பகத்துக்கு மெய்ப்பு பார்க்க வைத்து பழிதீர்த்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இது ஒரு முகம்தான்.

மறுபுறம் அ. மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை, ரவிக்குமார், ராஜ் கவுதமன், பிரம்மராஜன், எம் டி முத்துக்குமாரசாமி, ரமேஷ் ப்ரேம், தமிழவன், எஸ். சண்முகம் ஆகியோர் அறிமுகம் செய்த கோட்பாடுகளும், சிந்தனைகளும், சிந்தனையாளர்களும் 90-களின் மத்தியில் முற்றிலும் மாறிய கவிதைகளின் மொழியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் உருவான கோட்பாட்டு மொழி மற்றும் சிந்தனைகளின் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு உருவான பிரதான கவிஞன் என்று யவனிகா ஸ்ரீராமை சொல்வேன். தமிழில் அறிமுகமான மிஷேல் பூக்கோவை லக்ஷ்மி மணிவண்ணன் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் வரித்துக் கொண்டதை நான் அறிவேன். இன்று கவிஞர் வெய்யில் வரை அந்தக் கோட்பாட்டுச் சூழலின் தாக்கம் தொடர்வதை என்னால் பார்க்க முடிகிறது.

தமிழ் கவிதை அகமும் புறமுமாக ஜனநாயகப்பட்டதற்கு அம்பேத்கர் நூற்றாண்டும் அதன் இணையாக நடந்த கோட்பாட்டு அறிமுகங்களும் விவாதங்களும் பிரதானமானக் காரணங்கள் என்று கருதுகிறேன்.  ஆகவே, இங்கு நிகழ்ந்த சிந்தனைத் திருப்பத்தை எதிர்மறையாகப் பார்க்கவே முடியாது.

7

“நான் தமிழ் புரோட்டா
உங்கள்
வரலாறு
மூர்க்கம் ஆசைகள் காமம்
வலி அரசியல் துயரங்கள்
நெருக்கடி
உழைப்பு
உங்கள்
மாமிசமும் சேர்ந்த
குழம்பில்
நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் மடிப்புமடிப்பாக
தூள்தூளாகக் கரைந்துபோகக்
காத்திருக்கும்
தமிழ் புரோட்டாதான் நான்.”

கேள்வி: அகவயப்பட்டதாக தொடங்கிய தமிழ் நவீன கவிதை இயக்கம் இன்று அந்த எல்லையைக் கடந்துவிட்டிருக்கிறது. நீங்கள் சொல்வதுப் போல, கோட்பாடுகளின் வருகைக்கு அதில் முக்கிய பங்கிருக்கிறது. அதே நேரம் எந்த பேசுபொருளும் கவிதைக்கு வெளியே இல்லை எனும் நிலை இன்று உருவாகிவிட்டிருக்கிறது. இது கவிதை பற்றிய குழப்பங்களையும் உருவாக்குகிறது. கவிதையின் பேசுபொருள் சார்ந்த உங்கள் அபிப்ராயங்கள் என்ன?

பதில்: அக மரபு தமிழில் தொன்மையானது மட்டுமல்ல வலுவானதும்தான். அதே சமயம், அகவயப்பட்டே தோன்றிய கவிதைக்குள் புற வஸ்துக்களை ஞானக்கூத்தன் வலுவாகவும், எஸ். வைத்தீஸ்வரன் சன்னமாகவும் கொண்டு வந்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா? எனவே இது பிற்காலத்தில் மட்டும் நடந்த மாற்றம் அல்ல. அப்போது சற்றே விரிந்த புதுக்கவிதை திரும்ப மூடிக்கொண்டது. பிறகு கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் ஆத்மாநாமும் ஒரு படையாகத் திரும்ப புற விஷயங்களோடு அடுத்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் வந்து சேர்கின்றனர். குடை ரிப்பே…..ர் என்று கூவும் குரல் அப்போது கேட்கத் தொடங்குகிறது. அப்புறம் மீண்டும் ஒரு சுருக்கம் ஏற்படுகிறது.

90-களில் நிகழ்ந்தது ஒரு பெரிய உடைப்பு. ஓரறிவு ஈரறிவு உடைய சிற்றுயிர்களும், பேருயிர்களும், வஸ்துக்களும் கலந்து ஒன்பது படிகள் கொண்ட கொலுக் கண்காட்சி போலாகி விட்டது நவீன கவிதை. ஞானக்கூத்தன் சில பொருட்களுக்குத்தான் உயிர்கொடுத்தார். முதலை முதல் டினோசர் வரை அத்தனை உயிர் உருவங்களும் இன்று பெருகிய சந்தையில் லட்சிணைகளாக மாறிவிட்டன. பேருயிர்கள் அருகிய நிகழ்வும் நமது நவீன கவிதைகளில் உயிர்கள் வரும்போதுதான் தொடங்குகிறது. போர்ஹேயைப் போல இனி நாம் கற்பனையான உயிர்களைத் தான் உருவாக்க வேண்டிய நிலையில் அந்தப் பெருக்கம் நிகழ்ந்திருக்கிறது.   

கேள்வி: நீங்கள் குறிப்பிடும் உடைப்பு, புதுமைகளை கொண்டு வந்த அளவுக்கே தேய்வழக்குகளையும் உருவாக்கிவிட்டது இல்லையா?

பதில்: தேய்வழக்கு எந்த கலைவடிவத்திலும் உருவாவதுதான். தமிழ் கவிதையில் அந்த விபத்து மிகச் சீக்கிரமே நடந்துவிடுகிறது. ஒரு கவிஞன் தன் உலகத்தைக் கண்டு அதை அவனே பூர்த்தி செய்வதற்குள் அவனுக்கு மேல் ஒரு அடையாளம் திணிக்கப்பட்டு விடுகிறது. நகல்கள் வேகமாகப் பிறந்துவிடுகின்றன. அது ஊடகப் பெருக்கத்தினால் விளைந்த கோளாறு. ஞானக்கூத்தன், பிரம்மராஜன், தேவதச்சன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன் எல்லாருக்கும் அவரவர்கள் இயங்கிய காலத்தில் நகல்கள் இருந்தனர். அவர்கள் எண்ணிக்கையில் சொற்பம். அவர்களும் இப்போது காலத்தால் மறக்கப்படிக்கப்பட்டு விட்டனர். நல்ல கவிஞர்களுக்குக்கூட உடனடியாக பல நகல்கள் உருவாகிவிடுகின்றன.

காலை நடைபயிற்சி போகும் தெருக்களில் ஒரு நாய்க்குட்டி பிறந்து மிக அழகாக சில நாட்கள் துருதுருவென்று இருக்கும். அடுத்த சில நாட்களில் நோய் வந்து பரிதாபமாகத் தோன்றும். அப்படித்தான் நம்பிக்கை கொடுக்கும் கவிஞர்கள் தங்கள் உலகம் மேலேயே இருந்து தேய்த்து விடுவதும் நடக்கிறது. 

செழித்துக் கொண்டிருக்கிற பொருட்களைக் கவனி என்று தாவோ தேஜிங் சொல்கிறது. அவை ஒவ்வொன்றும் மூலாதாரத்தை ஞாபகம் வைத்து திரும்பிச் செல்பவை. இருட்டில் தான் எல்லாம் செழிக்கின்றன; ஆனால், எதையும் நாம் இருட்டில் இருப்பதற்கு அனுமதிப்பதில்லை. இருட்டில் இருந்த ஞாபகம் கவிதைக்கும், கவிஞனுக்கும் எப்போதும் இருக்கவேண்டும்.

கேள்வி: முன்பு தமிழ் எழுத்தாளர்கள் தம்மை அரசியலுக்கு வெளியே இருப்பவர்களாக காட்டிக் கொள்வதில் மதிப்பு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. எல்லோரும் அரசியல் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் இல்லாமல் அன்றாடம் இல்லை என்பது உண்மை என்றாலும் ஓர் எழுத்தாளனுக்கோ அல்லது கவிஞனுக்கோ அரசியல் நுழையாத அந்தரங்க இடம் என்பது சாத்தியமானது தானா?

பதில்: சாத்தியம் என்பதைவிடவும் அதை தேவை கருதிய ஒன்றாகவே நான் பார்ப்பேன். இன்றைய காலகட்டம் அரசியலில்லாத இடத்தை அனுமதிக்கவில்லை. அரசியல் நுழையாத அந்தரங்க இடத்தின் பாதுகாப்பை நானும் விரும்பவில்லை.

உரையாடலே சாத்தியமற்ற துருவப்படுத்தப்பட்ட காலம் இது. வர்க்கம், சாதி, மதம், பாலினங்கள் என்று வெவ்வேறு தரப்புகளாக பிளவுபட்டு தினசரி அகத்திலும் புறத்திலும் மோதி, ரத்தம் வழிந்தோடும் குருக்ஷேத்திரம் தான் இன்றைய இந்தியா. இதுவரை மரபென்றும், புனிதமென்றும், தர்மமென்றும், சனாதனமென்றும் காலம் காலமாகப் பாதுகாத்து வந்த அத்தனை நடைமுறைகளையும் கூர்வாட்களாக மாற்றி ஆட்சியாளர்கள் மக்கள் மேல் இறக்கி வருகிறார்கள். இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெரும்பான்மை மக்களிடம் ஆங்காங்கே இருந்த பாகுபாட்டு உணர்வுகள் தொகுக்கப்பட்டு அரசுவாத விஷமாக மாறியுள்ளன.  இந்த விஷத்தில் நவீனத்துவமும் சந்தைப் பொருளாதாரமும் கூடுதல் நச்சுத்தன்மையைக் கலந்துள்ளன. நேரு கனவு கண்டதைப் போல ஆலயத்தை அணைகள் இடம்பெயர்க்கவில்லை. ஆத்மாநாம் கனவு கண்டதைப் போல மதத்தை கவிதைகள் இடம்பெயர்க்கவில்லை. ஐரோப்பாவைப் போல அறிவியலும் சிந்தனைகளும் சேர்ந்து உருவாக்கிய தனிமனிதனும், பொது அறமும் இங்கு ஆரம்ப நிலையிலேயே சிதைந்துவிட்டன. சாதியும் வர்க்கமும் முயங்கி பொது அறத்தையும் பொதுக்குரலையும் இங்கே ரத்து செய்துள்ளன. ஆறாத ரணமாக காயத்தை வைத்திருந்த ஒரு நாகரிகத்தின் தோல் கிழிக்கப்பட்டு விட்டது. இங்கு ஏற்படுத்தப்பட்ட பாகுபாடு அடிப்படையிலான தர்மம் என்பது எலும்பில் குத்தப்பட்ட ஆணி.

அமைதியாகவும் சமாதானமாகவும் பேசுவதற்கான பொதுமேடைகளை எல்லோரும் சேர்ந்தே அழித்துள்ளோம். அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப், தான் படிக்கும் ப்ளேபாய் புத்தகங்களின் பெட்டிக்குள் போட்டு  வைத்தது வெறும் செய்தி அல்ல; நம் காலத்தின் உருவகம். மேன்மைகள், பெருந்தன்மைகள் இருந்த இடங்கள் மேடைகளில் நமது உருவகிப்புகளாகவே சிறுமைகள் குள்ளமாய் வீற்றிருக்கின்றன.

கண்ணையும் வாயையும் வாய்க்கரிசி போல புழுதி நிறைக்கிற காலம் இது. இந்தப் புழுதி என் வாயை நிறைத்து என்னையும் மூடப்போகிறது எனும் செய்தியை உரைப்பதே அரசியல் என்றால் அது கவிதையில் இடம்பெற்றே ஆகும்.

கேள்வி: உங்களுடைய கவிதையில் பெரியார் இடம்பெற்றிருப்பதையும் இதன் தொடர்ச்சியாகவே பார்க்கலாமா? நேரடி அரசியல் கட்டுரைகளும் சமீபமாக நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள்.

பதில்: தி இந்து குழுமம் புதிதாகத் துவங்கிய தமிழ் நாளிதழில் பணியாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பும் அங்கு பெற்ற அனுபவங்களும்தான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். வெளியே மதச்சார்பின்மை, சமத்துவம், கம்யூனிசம் என்று பேசிக்கொண்டே உள்ளே வைதிகத்தையும் பிராமணியத்தையும் மேட்டிமைத்தனத்தையும் பாகுபாடுகளையும் பல தசாப்தங்களாக வெற்றிகரமாக பேணிவரும் ஒரு இடத்தையும் அங்கே சஞ்சரிக்கும் மனிதர்களையும் பார்த்தது முக்கியமான அனுபவம்.

அங்கே நுழையும்போது நான் ஷிர்டி சாய் பாபாவை வணங்குபவன்; இந்து தமிழ் திசையின் ஆன்மிக இணைப்பான ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழை ஒருங்கிணைத்தது நான் தான். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை இந்து,கிறிஸ்து, முஸ்லீம் என்று எந்த மதத்தினரும் கடவுளைத் தனது உடலின் சிறுதுளையில் அனுமதித்தாலும் அது வைதீகத்தை வளர்க்கும் வேலைதான் என்பது அந்த இடத்தில் தான் தெரிந்தது.

என் அம்மாவின் விருப்பம் என்பதாலேயே கடைசியாக ஒரே புரோகிதச் சடங்கை நான் மேற்கொண்டேன். கடவுளை மறுக்கும் நாத்திக இடத்துக்கு என்னால் செல்லவே முடியாது, நான் அழகுடன் சம்பந்தப்பட்டிருப்பதால். ஆனால் கடவுளின் இருப்பு சார்ந்து சந்தேகப்படும் இடத்தை நோக்கி இயல்பாக நகர்ந்திருக்கிறேன். ஸ்டீபன் ஹாக்கிங்க்சும், விளையனூர் ராமச்சந்திரனும் என்னுடைய கடவுளின் சவப்பெட்டிக்குக் கடைசி ஆணியை அடித்தார்கள். இன்மையில் பிறந்து வளர்ந்து இன்மையில் நின்று கொண்டிருக்கும் என் இருப்பிலிருந்து நான் சென்று சேரும் வெறுமையை நிஷ்டூரமாகப் பார்க்கும் தைரியத்தை அளித்தவர்கள் அவர்கள். கடவுள் சம்பந்தப்பட்ட கருத்து குறையும்போது பயத்தையும் ஆசையையும் நேரடியாகப் பார்த்துவிட முடிகிறது. தமிழ் மரபில் பயம் வெளிப்படாத கவிஞன் பாரதிதாசன் ஒருவன்தான்.

கடவுளுக்கு அருகில் பாத்திரத்தில் இருக்கும் அழகை என்னால் இன்னமும் கைவிட முடியவில்லை. அந்தப் பின்னணியிலிருந்து தான், பாகுபாட்டை விளைவிக்கும் அழகுக்கு எதிராக நின்ற பெரியாரை, உருவ வழிபாட்டுக்கு எதிரான ஒரு கருத்துருவத்தை, என் கவிதைக்குள் ஸ்திரப்படுத்த முயன்ற விசாரணை தான் அந்தக் கவிதை. உருவத்திலிருந்து தப்பித் தப்பிப் போய் அவர் உருவங்களாகவே நம்மிடம் எப்படிப் பல்கிப் பெருகுகிறார் என்பதைத் துலக்க முயன்ற அழகியல் மோதல் அந்தக் கவிதை. பட்டவர்த்தனமாக எல்லா ரகசியங்களையும் புனிதங்களையும் கலைத்து, தோன்றியதைப் பேசித் திரிந்த அந்த உருவத்தை, மர்மப்படுத்துவதற்கு அந்தக் கவிதையில் நான் முயன்றிருக்கிறேன். பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூல் அந்தக் கவிதைக்கு உந்துதலாக இருந்தது.  பெரியார் மிகுந்த பிரியத்துடனேயே என் கவிதையில் என் கைபிடித்து என்னுடன் அமர்ந்திருக்கிறார். வைக்கம் முகம்மது பஷீர் ஒரு பெருங்கூட்டத்தில் காந்தியைத் தொட்டுவிட்டுக் கூட்டத்தால் தள்ளப்பட்டு விலகியதைப் போல, பெரியாரில் கொஞ்சத்தைப் பிடித்து என் கவிதையில் வைத்திருக்கிறேன். பெரியார் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதுதான் அந்தக் கவிதை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியிருப்பது பிரத்யேகமான தமிழ் துரதிர்ஷ்டம்.

கேள்வி: திராவிட இயக்க சார்பு நிலையையும் சமீபமாக உங்கள் எழுத்துக்களில் காண முடிகிறது. முன்பில்லாத ஒரு மாற்றம் இல்லையா அது?

பதில்: இந்து தமிழ் திசையில் வேலை பார்த்த அதே வருடங்களில், கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா குறித்த நூல்களுக்காக நண்பர் சமஸுடன் சேர்ந்து பணியாற்றியபோதுதான் திராவிட இயக்கம் குறித்த நேர்மறையான பார்வையை பெற்றேன். புதுமைப்பித்தனில் தொடங்கி எழுத்து பத்திரிகை வழியாக விரிவடைந்த தமிழ் சிறுபத்திரிகை இலக்கிய இயக்கம் எப்படி ஒரு நவீன கலாச்சார இயக்கமோ அதேப் போல சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டு இயக்கமாக குறைந்தபட்ச சமத்துவத்தையும் சமத்துவ சிந்தனையையும் தமிழ்நாட்டு மனிதர்களிடையே அதிகம் வன்முறை ஏதுமின்றி சாதித்த நவீன அரசியல் இயக்கம் திராவிட இயக்கம்.

ஆண் – பெண் சமத்துவமின்மை தொடங்கி அனைத்து மட்டங்களிலும் புராதன ஏற்றத்தாழ்வை மீள்கட்டமைப்பு செய்வதற்காக இந்தியாவின் பிற பகுதிகளில் எழுந்திருக்கும் பெரும்பான்மை மதவாத அலையைப் பார்க்கும்போது, சமத்துவம் என்பதை ஒரு பொது விழுமியமாக தமிழகத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் திராவிட இயக்கம் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது.

கேள்வி: பிரபலமான பத்திரிக்கைகளில் வேலை பார்த்திருக்கும்போதும் –அரசியல் கட்டுரைகள் எழுதுகிறபோதும்- உங்கள் உரைநடையில் இதழாளருக்கு உரிய சரளம் கூடவில்லை. மாறாக சிற்றிதழ் எழுத்தாளரின் பூடகமான தொனியே இருக்கிறது. இதழியலின் பொதுத் தேவையிலிருந்து உங்களை எப்படி தற்காத்துக் கொண்டீர்கள்?

பதில்: என் கவிதையும் உரைநடையும் மிக எளிமையான மொழியில் இருப்பதாகவே எண்ணுகிறேன். சின்னச் சின்ன வாக்கியங்களில் எழுத கற்றுக்கொடுத்ததற்காக இதழியலுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். தமிழ் வெகுஜன இதழியலில் ஏற்கனவே சுவாரசியம் என்று நிறுவப்பட்டிருந்த எழுத்து முறையை நான் பயிலவேயில்லை. அதன் தேவையை நான் உணரவுமில்லை. இனிமேலும் அதற்கு வாய்ப்பும் கிடையாது.

இதழியலில் பணியாற்றுபவன் என்றாலும், நான் அதன் மைய நீரோட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்திரிக்கையாளன் அல்ல. வேலைகளில் நிராகரிக்கப்பட்டவன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். தி இந்து நிறுவனம் தமிழில் ஒரு தினசரி ஆரம்பிக்க திட்டமிட்டபோது, தமிழ் இதழியலில் அதுவரை நிலவிய உள்ளடக்கத்தின் வரம்புகளை மீறினார்கள். அந்த உள்ளடக்க வரம்புகளுக்குத் தொடர்பில்லாத நபர்களையும் அவர்கள் அதற்கு தெரிவு செய்தார்கள். அதன் விளைவாக நிகழ்ந்த வெற்றிகரமான திருமணமே எனக்கு அங்கே கிடைத்த இதழியல் அனுபவம்.

இல்லேஸ்ட்ரேட்டட் வீக்லி, டெஹல்கா போன்ற ஆங்கில இதழ்களோடு பரிச்சயம் கொண்டிருந்த எனக்கு தமிழ் இதழியல் சார்ந்து ஒரு கனவு இருந்தது. எனது நண்பன் தளவாய் சுந்தரத்துடன் அந்த கனவை பகிர்ந்திருக்கிறேன். அது சார்ந்து நாங்கள் உரையாடியிருக்கிறோம். தீராநதி இதழில் அவன் சிலவற்றை நிறைவேற்றவும் செய்தான்.

என்னுடைய தமிழ் சிறுபத்திரிகை வாசிப்பும் இந்து தமிழ் திசை நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கொடுத்த ஊக்கமும் பல்வேறு ஆளுமைகள் பற்றி எழுதுவதற்கான இடத்தை இந்துவில் எனக்கு அளித்தது. ஆசிரியர் அசோகன் எனது மொழியை தன்னியல்பில் விட்டு போஷித்தவர். அவர் விகடனிலிருந்து வந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். இவையெல்லாம் தற்செயல்கள்.  ஐன்ஸ்டீனின் நூற்றாண்டை முன்னிட்டு e = mc ஸ்கொயர்ட் குறித்து தலையங்கமே வந்துள்ளது. தமிழ் சூழலுக்கு மறதி ஜாஸ்தி என்பதால் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. மார்க்வெஸின் மரணத்தையொட்டி கார்டியனில் வெளியான அரைப்பக்க கட்டுரை மொழிபெயர்த்து வந்திருக்கிறது. புது யுகம் பிறக்கிறது, இனி, சுபமங்களா, நிறப்பிரிகை, காலச்சுவடு, உயிர்மை புதிய பார்வை, ஜூனியர் போஸ்ட், தீராநதி, விகடன் தடம் என ஒரு மரபின் தொடர்ச்சியாக தினசரியில் நிகழ்த்த முடிந்த காரியங்கள் இவை. 

8

“நீ
இதுவரை
எதையெல்லாம் தவறவிட்டிருக்கிறாய்
சங்கரா
சிறுபையனாய்
எத்தனை
நாணயங்களை
தெரியாமல்
தெரியாமல்
அதற்கெல்லாம்
காரணம்
தெரிந்ததா
தெரியுமா
சங்கரா”

கேள்வி: ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி முதலியோரை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறீர்கள். அவர்களை பற்றி எழுதவும், மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறீர்கள். ஒருவகையில் இது போன தலைமுறை பழக்கம் எனலாம். தனி மனித விடுதலையை முன்வைக்கும் மதச் சார்பில்லாத  நவீன ஆன்மீகம் சார்ந்து முன்னர் ஒரு நம்பிக்கை இருந்தது. நவீன ஆன்மீக வழிகாட்டிகள் சார்ந்து தேடல் இருந்தது. பிரமிளும் சுந்தர ராமசாமியும் சுகுமாரனும் ஜே.கிருஷ்ணமூர்த்தி மேல் உயர்ந்த அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் பெருகிவிட்ட நிலையில், உங்கள் தேடலும் ஆன்மீக நம்பிக்கையும் எந்த அளவில் இருக்கிறது?

பதில்: என்னுடைய சொந்த அச்சங்களை ஒட்டியே நான் ஆன்மீகத்தை நாடுகிறேன். கார்ப்பரேட் சாமியார்களின் பெருக்கத்தால் என் நம்பிக்கை ஏறவோ இறங்கவோ இல்லை. அது தன்னியல்பில் இருக்கிறது. 

வாழ்க்கை சார்ந்த கேள்விகள் முடிவில்லாதவை. இந்தக் கேள்விகளின் மழை இரைச்சல் மனத்தில் அதிகரிக்கும்போது தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் போய் ஒதுங்குகிறேன். அது மரணம் வரை தொடரும் என்றே கருதுகிறேன்.

நாகரிக உடைகள் அனைத்தையும் கழற்றிப் போட்டு பாதாளத்தில் உலவும் என் ஆசை, காம, குரோதங்களை நெருங்குபவன் யாராக இருந்தாலும் அவன் எனக்கு மெய்யியலாளன் தான். 

மறைஞானம் என்ற சாகசத் தொனி எதுவும் இல்லாமல் என் உள்ளார்ந்த நடுக்கங்களை புரிந்துகொள்ள- கடப்பதற்கு அல்ல – உதவிகரமாக இருப்பவர்கள் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் குர்ஜிப்பையும் சொல்வேன். குர்ஜிப் இசையமைத்த  “மியூசிக் பார் இடியட்ஸ்” தந்தி இசையைக் கேட்டாலே அவர் குறிப்பிடுகிற சூன்யத்தினை நாம் கூடுதலாக உணரமுடியும். ஜே. கிருஷ்ணமூர்த்தி, நான் காணும் காட்சிகளை கூர்மையாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்த கவிஞரும் கூட. ரமணர் பாடம் பார்த்து வெளியிட்ட அஷ்டாவக்கிர கீதை உரையைத் நான் திரும்பத் திரும்ப எடுத்து வாசிக்கிறேன். யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அனுஷ்டானமான இந்திய ஆசிரியர்களின் மத்தியில் குதிரையில் வரும் துப்பாக்கி ஏந்திய கௌபாயைப் போல பரபரப்பை ஏற்படுத்துபவர்.

அனுபவம் என்பது யதார்த்தமும் என் கற்பனையும் சேர்ந்ததே என்பதை நினைவில் இருத்திக் கொள்ள மேற்சொன்ன ஆசிரியர்கள் உதவினார்கள். 19 வயதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முதலில் பார்த்தபோது, அங்கு உணர்ந்த பதற்றமும், நெருக்கடியும், அச்சமும் சென்ட்ரல் ரயில் நிலையத்தோடு முற்றிலும் தொடர்புடையவை என கருதினேன். 42 வயதில் அதே சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது அதே பீதியும் அச்சமும் நிம்மதியின்மையும் தோன்றுகின்றன. ஆனால் அவற்றை சமைப்பதில் என் மனதுக்கு பங்கிருப்பது தெரிய வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதார்த்தம், ஒரே பொழுதில் எனக்கும் இன்னொரு தேனிலவு ஜோடிக்கும் வேறு வேறு மாதிரி அர்த்தப்படும் என்பதை அறிய இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது. வெளியே இடம் இருப்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவு அங்கே எனது மனமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனம் மாறும்போது இடம் சார்ந்த எனது உணர்வும் மாறுகிறது. இவை எல்லாம் மேற்சொன்ன ஆன்மீகவாதிகளிடமிருந்து கற்றவை.

போலவே, ஒன்றை பாடம் செய்வதானலேயே அது புரிந்துவிடுவதில்லை. ஒன்று புரிந்துவிடுவதனாலேயே அதை வென்றுவிடமுடியாது என்பதையும் நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

ரமணர், சாது அப்பாத்துரையார், நித்ய சைதன்ய யதி முதல் நிசர்கதத்த மகராஜ், குர்ஜிப், ஜே. கிருஷ்ணமூர்த்தி, யு ஜி கிருஷ்ணமூர்த்தி வரை ஓரளவு படித்து அவர்களோடு பயணம் செய்திருக்கிறேன். ஒர் உளவியல் ஆலோசகரைப் போல அடுத்தடுத்த அமர்வுகளுக்கு தேடிச் சென்றுள்ளேன். போதையைப் போல அவர்களை நாடி போயிருக்கிறேன். அவர்களைத் தேடி அவர்கள் முலைக்காம்பில் வாய்பதித்து, க்ஷண நிம்மதியை, க்ஷண விடுதலையைக் கொஞ்சம் அனுபவித்ததாக நினைத்தும் இருக்கிறேன். ஆனால், நாம் சென்று கேட்க கூடிய உளவியல் ஆலோசகரும் நம்மைப் போலவே அச்சத்தையும், உளநடுக்கத்தையும், ஆசைகளையும், காம குரோதங்களையும் உள்ளே வைத்துக்கொண்டு நம் முன்னர் மிகுந்த தனிமையில் அமர்ந்திருப்பவர்தான். எத்தனை வழிகளை அவர்கள் பேசினாலும், அவர்களும் உள்ளே நடுங்கிக்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இன்னொருவருக்கு அது பயன்படுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றியுள்ளது.

தேவதச்சன் வாழ்நாள் முழுக்க ஜென் சால்னாவையும் அத்வைத புரோட்டாவையும் குழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு மிகுந்த பிரியத்துடன் சில ஆசிரியர்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தி சில பயிற்சிகளை உளப்பூர்வமாக நம்பி எனக்கு சிகிச்சை முறையாகக் கற்றுக்கொடுக்கவும் செய்திருக்கிறார். அவையெல்லாமும் எனக்கு வழுக்குப் பாறைகளாகவே இருந்திருக்கின்றன.  தத்துவம், உளமேம்பாடு சார்ந்த நூல்களை, ஆசிரியர்களை தொடர்ந்து வேட்டையாடுவது போலப் படித்துவரும் தேவதச்சனால் அவரது பூர்விக பயங்களிலிருந்து சிறிதுகூட விடுபடவே முடியவில்லை என்பதை, நான் அவருடனான நேர்த்தொடர்பிலிருந்து அறிவேன். அவர் கவிதைகளில் அவை கொடுத்த அறிவிலிருந்து விடுபடும் தருணங்களையே அவர் முதன்மைப்படுத்துகிறார். தியானதாராவை எழுதிய பிரமிளிடம், ஜே கிருஷ்ணமூர்த்தியை அவ்வளவு நெருக்கமாக மொழிபெயர்த்த பிரமிளிடம் அவர்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்? அவரது குரோதங்களை ஆவேசங்களை அவர்களால் குறைந்தபட்சம் மட்டுப்படுத்தவாவது முடிந்ததா? இல்லையே.

ஒட்டுமொத்தமாக, மேம்பாடு என்ற கருதுகோளே விசாரனைக்குட்பட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்டோம். மேம்பாடு அடைந்த சுயங்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சுயங்கள், அரசியல், அறிவியல், வாழ்வியல், அறவியல் என எல்லாத் தளங்களிலும் உருவாக்கியுள்ள வன்முறை அளப்பரியது. அந்த அடிப்படையில் சுய மேம்பாடு என்று பொதுவாக நம்பப்படுவது தொடர்பில் எனக்கு தற்போது குறைந்தபட்ச நம்பிக்கை கூட இல்லை.

ஒரு துப்பாக்கிக்கு முன்னால், தூக்குக் கயிறுக்கு முன்னால், ஓர் அழகுக்கு முன்னால், மரணத்துக்கு முன்னால் நான் என்னவாக ஆகிறேன்? அந்த க்ஷணத்தில் நமது அத்தனை ஞானமும் என்னவாகிறது? ஓஷோ, அமெரிக்க போலீசை எதிர்கொண்டதை விட எனது அம்மா, மரணத்தை கண்ணியமாக எதிர்கொண்டாள். அவள் மகாத்மா அல்ல; அல்ப உயிர். பகவான் ரமணர், ஆசிரமம் அமைப்பதற்கு முன்னர், சிறுவனாக பிச்சை எடுத்தது திருவண்ணாமலை பிராமணர் தெருவில் மட்டுமே. காமத்தையும் குரோதத்தையும் அது நமக்குத் தரும் உத்வேகத்தையும் அதன் ரூபத்திலேயே பார்க்கும் ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தை ஒழுங்காகப் பார்த்தால் அது ஒரு மெய்யியல் அனுபவம்தான்.

காஃப்காவின் விசாரணை நாவலில் வரும் வாயிற்காவலன் கதையை இன்று முழுக்க நம்புகிறேன். எனக்காக மட்டுமே திறந்து நான் இறந்தவுடன் மூடிவிடுவதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்தில் எந்த ஆசிரியன் எனக்கு வழிகாட்டிவிட முடியும்? அத்தனை தனியாகவே எனது அனுபவத்தை நான் மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரும் அதைப் பகிர்ந்துகொள்ளவே முடியவில்லை. நானும் ப்ரௌனியும் மிக நெருக்கத்திலும் அத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவிலும் தனித்தும் இருக்கிறோம் ஒரே நேரத்தில்.

அப்புறம் ஒரு வாசகனாக, இலக்கிய நூல்களால் ஆன்மீக மேம்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என நினைக்கிறேண். தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் அருட்தந்தை ஜோசிமா, தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசும்போது எடுத்துரைக்கும் அந்த ஊதுவர்த்தி காட்சி எந்த மெய்யியலாளனின் தருணத்துக்கும் மேலானதே. மா. அரங்கநாதனின் வீடுபேறு கதையும், அசோகமித்திரனின் காந்தி கதையும் அப்படியான தருணங்களைக் கொண்டவையே. மௌனியும் பஷீரும் அந்தப் புள்ளியைத் தொடுபவர்கள்தாம்.

கேள்வி: பதில் சொல்வதைவிடவும் கேள்வியாக எஞ்சும்போதே இலக்கியம் அதிகம் உயிர்ப்பை காட்டுகிறது. ஆனால் ஆன்மீகமும் தத்துவமும் பதில் சொல்வதில் முனைப்புக் கொண்டிருக்கின்றன. எனவே ஒரு கவிஞனின் ஆன்மீகத் தேடல் அவனை கவிதையிடமிருந்து பிரிக்கக் கூடுமா?

பதில்: ஆன்மிகமோ, தத்துவமோ மட்டுமல்ல எது திட்டவட்டமான பதிலைத் தந்தாலும் அதை ஒரு படைப்பாளி சந்தேகத்தோடேயே பார்க்க வேண்டும். எங்கே கேள்விகள் இல்லையோ, எங்கே சந்தேகம் இல்லையோ அங்கே மடம் வந்துவிடுகிறது. எப்போது அந்த மடத்தின் பீடத்தை போர்த்தும் திரைச்சீலைக்கு பக்கவாட்டில் உட்காருகிறோமோ அப்போது பிரமிள் சொல்வது போல அங்கே வைதீகம் வந்துவிடுகிறது. வைதீகத்தைத் தொடர்ந்து அங்கே நடப்பதைக் கேள்விகேட்காத மௌடீகமும் வந்துவிடுகிறது.

தத்துவம் கொன்ற கவிஞர் என்று சி. மணியை சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவ்வளவு நவீனமாக வெளிப்பட்ட கவிதை மொழி அவருடையது. ஆனால், அதன் உள்ளடக்கம் பட்டினத்தார் காலத்தினது. பட்டினத்தாரும் தலிபானும் வேறு வேறானவர்கள் அல்ல. உடலை அதீதமாக கொண்டாடுவது,  உடலை அதீதமாக இழித்துப் பேசுவது இரண்டுமே ஒன்றுக்கொன்று மிக ரகசியமாக கைகொடுத்துக் கொள்பவை.

9

மார்க்கெட்டில் காய்கறி வாங்கும்போது
காசுக்கு மாற்றாய் கவிதையை அளிக்கலாமா?
கவிஞர் கே. சிந்தித்தார்
இந்த சிந்தனையையே
இன்னொரு கவிதையாய் மாற்றிவிடலாம்
கவிமனம்! கவிமனம்!”

கேள்வி: கவிதையியலில் கவிஞர்களின் பங்களிப்பு எப்போதுமே முதன்மையாக இருந்து வந்துள்ளது. உலக இலக்கியத்திலும் கவிதை விமர்சனம் எழுதாத கவிஞர்கள் குறைவு. நீங்களும் கவிதை பற்றியும் தமிழ் கவிஞர்கள் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். தமிழில் நீங்கள் முக்கியமாக நினைக்கும் அத்தகைய கவி விமர்சகர்கள் யார்?

பதில்: கவிதை, தனித்த முழுமையான அறிதல் முறை எனும் நம்பிக்கை கொண்ட விமர்சகர்களை நீங்கள் கவி விமர்சகர்கள் என்று சொல்கிறீர்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன். கவிதையை காத்திரமான இயக்கமாக முன்னெடுத்தவர்கள் இவர்கள்தாம். கவிதைக்கு வெளியிலும் பேசி, எழுதி அதுசார்ந்த எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள், மகிழ்ச்சி மற்றும் போதாமைகளை தொடர்ந்து முன்வைத்து ஓர் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் செயல்பட்டவர்கள் என்று க. நா. சுப்ரமண்யம், பிரமிள், சுந்தர ராமசாமி, நகுலன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், பிரம்மராஜன், சுகுமாரன், லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோரை நான் சொல்வேன். தமிழ் கவிதையின் வளத்துக்கும் அங்கு காணக்கிடைக்கும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் அரூபக் காரணிகளும் இவர்கள்தான்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் பிறமொழிகளிலிருந்து கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்தவர்கள். தமிழில் கவிதைகள் என்னென்ன வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் தழுவ வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடே அந்த மொழிபெயர்ப்புகள்.

கவிதையியல் சார்ந்து மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் அபியினுடைய எழுத்துகள் அபூர்வத்தன்மையும் கண்டுபிடிப்புகளும் கூடியவை. கவிதை குறித்து பிரம்மராஜப் ஆத்மாநாமுடன் நிகழ்த்திய உரையாடலை கவிதை மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டுமென்று வலியுறுத்துவேன்.

கவிதை பற்றி எழுதவேயில்லை என்றாலும் தனிப்பேச்சு வழியாகவே கவிஞர்களிடம் தீவிரமான ஓர் இடையீட்டை நிகழ்த்தியவர், தேவதச்சன். எழுதாதவர் என்றாலும் தவிர்க்கக் கூடாத கவி விமர்சகர் அவர். பசியைச் சோற்றால் ஜெயிக்கணும் என்றால் சோற்றைப் பசியால் ஜெயிக்கணும் தானே. இது கவிதை மட்டுமா? ஒரு காலகட்டத்தில் விடுக்கப்பட்ட விமர்சன அறைக்கூவலும் தானே? அந்தக் குரல், மார்க்சிய இயக்கம் வலுவாக செயல்பட்ட கோயில்பட்டி நிலப்பரப்பிலிருந்து எழுகிறதென்பது கூடுதல் குறிப்பு. அந்தக் குரல், கொஞ்சம் தொன்மையானதுதான்; அதேவேளையில் பழைய குரல் அல்ல. சோற்றைப் பசியால் ஜெயிக்கும் ஒரு வழிமுறை தான் அவரது கவித்துவ அறிதல் என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

கேள்வி: கவிதை பற்றி பேசுவது சவாலான காரியம். விளக்க முடியாத வஸ்துவாக கவிதை இருக்கும்போது ஒரு விமர்சகராக நீங்கள் கட்டுரைகளில் எதை வாசகருக்கு சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்: கவிதை என்றால் என்ன? கவிதை எது? போன்றவை பதிலே சொல்ல முடியாமல் கண் முன்னால் பூச்சி பறக்கவைக்கும் கேள்விகள். மரணம்வரை அவற்றுக்கு பதில் சொல்லிவிட முடியாது. எனவே எது கவிதை என்று சொல்வதைவிடவும் எதுவெல்லாம் கவிதை அல்ல என்று சொல்வதே கவிதையை நெருங்குவதற்கான வழி என நினைக்கிறேன்.

கவிதை மொழி அல்ல; கவிதை ஒரு நீதிமொழி மட்டும் அல்ல; கவிதை அழகிய சொற்கூட்டம் அல்ல; கவிதை பாடல் அல்ல; கவிதை வெறும் அர்த்தமோ, சத்தமோ அல்ல என்று ஒவ்வொன்றையும் விலக்கி விலக்கியே கவிதை என்ற வஸ்துவை நெருங்க வேண்டியிருக்கிறது.

கவிதை பற்றி பேசுவதில், ம. அரங்கநாதன் எழுதிய ‘பொருளின் பொருள் கவிதை’  எனும் சிறிய கட்டுரை நூலை கவிதை குறித்த ஆதாரமான தமிழ் பாடம் என்றே சொல்லல்லாம். கவித்துவம் எங்கெல்லாம் நிகழ்கிறது என்பதை அவர் புதுமைப்பித்தன் கதை வழியாகவும் மேற்கத்திய, கீழைத்தேய தத்துவங்கள் வழியாகவும் விரித்து விரித்து சொல்கிறார்.

என்வரையில், முதலில் அர்த்தமாகவும் அனுபவமாகவுமே கவிதை உள்நுழைந்தது. பின்னால்தான் மொழியைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன். சமீபத்தில்தான் தொனி பிடிபடத் தொடங்கியிருக்கிறது. எங்கே கவிஞன் சொல்லாமல் விடுகிறான். எங்கே ஆழ்ந்த மௌனத்தின் இடைவெளிகள் கவிதையை மேலான அனுபவமாக்குகின்றன. இவற்றையெல்லாம் கவனிக்கும் திறன் மிக மெதுவாக வளர்கிறது. இப்படி நான் அறிகின்ற ஒவ்வொன்றையும் என் கட்டுரைகளில் எழுதுகிறேன்.

கவிதை எழுதுவதைத் தாண்டி கவிதை குறித்து பேசுவதற்கு காரணம் ஒரு நம்பிக்கைத் தரப்பைச் சேர்ந்தவன் என்பதை வலியுறுத்துவதே. கவிதையை அங்கீகரிக்கப்பட்ட தரப்பாக மாற்றுவதற்கும் “கவிதையை நம்புங்கள், கவிதை உய்விக்கும்” என்று சொல்வதற்கும் கவிதைப் பற்றி எழுத வேண்டியது அவசியம். கவிதை என்ற இயக்கம் செழுமையாக இருக்க நீரூற்றினால், அங்கே என் கவிதையும் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக இருக்கும் என்பது இன்னொரு நம்பிக்கை.

எந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகும் வெறுமனே நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்வதை சுந்தர ராமசாமி விரும்ப மாட்டார். ஏன் உங்களை அந்த நூல் கவர்கிறது, ஏன் கவரவில்லை என்ற காரணங்களை நீங்கள் சொல்வதும் எழுதுவதும் அடிப்படையானது மட்டுமல்ல; பொறுப்புமிக்கதும் கூட என்று அவர் வலியுறுத்தியதை நான் சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டேன். அவரிடம் பேசுவதை, நண்பர்களிடம் பகிர்வதை குறிப்புகளாக எழுதத் தொடங்கியதுதான் கட்டுரைகளுக்கான ஆரம்பம்.

கலாப்ரியாவின் முழு தொகுப்புக்கு ஜெயமோகன் எழுதிய பின்னுரையை இங்கு குறிப்பிட வேண்டும். நூல் விமர்சனத்தின் தீவிரத்தன்மையையும் விமர்சன சட்டகத்தின் தேவையையும் எனக்கு அக்கட்டுரை உணர்த்தியது. இன்னமும் அந்தக் கட்டுரை எனக்கு வேதாகமம் போன்றது. கவிதை வரலாற்றுவாத நோக்கு எனும் வகைமை எனக்கு பின்னால்தான் தெரிய வருகிறது. மேலும் ஜெயமோகன் பயன்படுத்திய முறைமையும் கலாப்ரியாவின் கவிதைகளை நெருங்குவதற்கு அவர் உபயோகித்த புதிய கவித்துவப் படிமங்களும் என்னை ஈர்த்தன. கவிதையில் கலாப்ரியா நிகழ்த்திய கலகத்தை, புழுத்த நாயை இழுத்துக் கொண்டு வந்து அக்கிரகாரத் தெருவில் போட்டது போன்றது என ஜெயமோகன் எழுதியிருப்பார். அந்த படிமம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு கவிதையை அணுகுவதற்கு அதே கவிதையின் முறைமையைப் பயன்படுத்தலாம் எனும் திறப்பு அது. ஒரு கவிதை கொடுக்கும் அனுபவத்தை ஒரு படிமம் வழியாக, ஒரு சித்திரம் வழியாக, ஒரு அன்றாட நிகழ்ச்சி, ஒரு கதை வழியாக தொகுத்துக் கொள்ளும் முறை அது. 

கேள்வி: நீங்கள் இப்போது சொல்லும் நம்பிக்கைத் தரப்பும் போன பதிலில் குறிப்பிட்ட கவி விமர்சகர்களின் பட்டியலும் ஒன்றுதான் இல்லையா?

பதில்: கண்டிப்பாக. அது பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்லலாம். 1998-1999 ஆக இருக்கும். க. நா. சுப்ரமணியத்தின் கவிதைகளை ஒன்றுசேரப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. புதுக்கவிதை பற்றிய அவர் கருத்துக்களையும் அப்போதுதான் படித்தேன். 90 களின் மத்தியில் கவிதை பற்றி எனக்கிருந்த உத்தேசங்களுக்கு நெருக்கமாக கநாசுவின் பார்வையும் அவர் கவிதைகளும் இருந்தன. சந்தத்தைத் துறந்த வசன தன்மை, எள்ளல், துணுக்குத்தன்மை, மர்மம், திடுக்கிடும் இயல்பு, மரபில் பேசுவதற்குத் தடையாக இருந்த உள்ளடக்கங்களை மனத்தடையின்றி எடுத்தாளுதல், மௌனம், இடைவெளி என்று அவர் சொன்ன தன்மைகளையே நானும் வரித்துக்கொண்டிருப்பதாக பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. க. நா. சுவின் மரபில் வருபவன் என்று என்னை உருவகித்துக் கொண்டேன். கு. ப. ரா-வோ, ந. பிச்சமூர்த்தியோ என்னை ஈர்க்கவில்லை. 

நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஒரு விமர்சன, அறிவு ரீதியான மரபை அளித்த புதுமைப்பித்தனிலிருந்து கிளைவிடும் அந்தக் கவிதை மரபு இன்று சபரிநாதன் வரை தொடர்கிறது.  அதைத்தான் என் தரப்பு என்று சொல்கிறேன். நகுலனையும், ஞானக்கூத்தனையும், ஆத்மாநாமையும், கலாப்ரியாவையும் விக்கிரமாதித்யனையும், சுகுமாரனையும், சமயவேல்யும் க. நா. சுவின் மரபு என்றே கருதுகிறேன். பா. வெங்கடேசனும் அங்கேதான் தொடங்கினார். 

இப்படியாக நிலைப்பெற்று இன்று என் கண்கள் கவிதை சார்ந்து அனுமானிக்கும் இடங்களை கட்டுரைகளில் பகிர்கிறேன். கவிதையின் அறிதல் முறை மனதின் பயணத்தை துல்லியமாகப் பார்ப்பதற்கு அருகில் இருப்பதாக எனக்குப் படுகிறது. நகுலனும், அபியும், தேவதச்சனும், ஆனந்தும், யுவனும் அந்த இடத்திலேயே நின்று தரித்துப் பேசும் வல்லமை உடையவர்கள். மேலே சொன்ன வரிசையில் ஆனந்தை நான் சேர்க்கவில்லை. ஏனெனில் அவருக்கு கவிதை முதன்மையானதல்ல. யுவன் அவ்வப்போது எழுதியிருக்கிறார்.   

கேள்வி: கவிதை பற்றிய பேச்சு கவிதையை மேம்படுத்துமாகவிதை பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் கவிஞராக உங்களுக்கு உதவியிருக்கின்றனவா?

பதில்: கவிதை நிகழும் புள்ளியில் எந்த அறிவுமே உதவுவதில்லை. ஆனால் உத்தேசித்த ஒரு கருப்பொருள் வெளிப்பாட்டில் விரியாமல் சிக்கி நிற்கும்போது, பார்வைக் கோணத்தை மாற்றுவதற்கும் வேறு புள்ளியிலிருந்து சொல்லிப் பார்ப்பதற்கும் வேறுவிதமாக அடுக்குவதற்கு கவிதை சார்ந்த உரையாடல் உதவியாகவே இருக்கிறது. தொனியைக் கைப்பற்றுவதற்கு பேச்சும் பிறரிடமிருந்து அடைந்த தாக்கங்களும் உதவுவதை அறிகிறேன். அப்புறம் வெற்றிகண்ட உள்ளடக்கங்களையும் வெற்றிகண்ட முறைமையையும் நானே நகலெடுக்காமல் இருக்க, அடைந்த உச்சங்களையே மீண்டும் மீண்டும் போய்த் தொட்டு அந்த உச்சங்களே, என்னைப் பரிகசிக்காமல் இருக்க கவிதை பற்றிய பேச்சும் வாசிப்பும் எழுத்தும் உதவிகரமாக உள்ளன.

கேள்வி: கவிஞர்கள் பற்றி எழுதிய அளவுக்கே புனைவாசிரியர்கள் பற்றியும் நீங்கள் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்? கதை வாசிப்பு உங்களுக்கு என்ன கொடுக்கிறது?

பதில்: புனிதத்தில் சில கணங்கள்தான் தரிக்க முடியும். சில கணங்களே பறக்க முடியும். உச்சத்தில் ஒருவர் எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? கீழே இறங்கியாக வேண்டும். சேற்றில் விழுந்து புரளவேண்டும். சமவெளியில் கால் பாவ நடந்து பழக வேண்டும். கவிஞனுக்கு கவிதை மட்டும் போதவே போதாது. அன்றாடச் செய்திகள், பில்போர்டுகள், விளம்பரப் படங்கள் தொடங்கி நாவல்கள், தன் வரலாறுகள், ஓவியம், சினிமா என பல்வேறு மூலகங்கள் கவிதைக்கு எரிபொருளாகும்.  தஸ்தயவெஸ்கி, ஆண்டன் செகாவ், புதுமைப்பித்தன், காப்ரியல் கார்சியா மார்க்வேஸ், பஷீர் தொடங்கி ஆ. மாதவன், ஷோபா சக்தி வரை புனைவு இன்னொரு உலகமாகவும் அடைக்கல வீடாகவும் கொடுக்கும் விஸ்தீரணத்தை கவிதை எப்போதும் கொடுக்காது. பாலசரஸ்வதியின் வாழ்க்கைச் சரிதம் வழியாக பழைய சென்னையை புதிய சென்னைக்குள் கற்பனை செய்ய முடியும். கவிதைக்குத் திண்ணையோ, விளையாட்டுக் கூடமோ கிடையாது. அங்கே பக்கவாட்டில் பரந்து அலைந்து பொறுக்கி சேகரித்துத் திரிதல் சாத்தியம் அல்ல. ஸ்டீபன் ஹாக்கிங்ஸிலிருந்து ரோமுலஸ் விட்டேகர், விளையனூர் ராமச்சந்திரன் வரை பலரும் என் கவிதை வீட்டின் சாளரங்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் நான் வாழ முடியாத வாழ்க்கைகளுக்கு என்னை இடம்பெயர்த்து மொழிபெயர்த்து வழிகாட்டும் மேன்மையான சகபயணிகள்.

கவிதை வாசிப்பு என்பது இசையில் தரிப்பது போலத் தான். ஒரு போதையின் தாங்கமுடியாத இன்பவேதனையில் எவ்வளவு நேரம் இருக்க முடியும்? மூச்சுமுட்டி செத்துவிடுவோம் இல்லையா? முதல் முறையாக ஆத்மாநாமின் கவிதை குறித்து உரையாடலை எல். சுப்ரமணியனின் வயலின் இசை ஒலிக்க தனியான இரவொன்றில் வாசித்து முடித்தபோது அப்படித்தான் இருந்தது. உடனே மரணிக்கத் தூண்டும் இன்ப ரணம் அது.  வண்ணநிலவனின் குளத்துப்புழை ஆறு கவிதை தரும் அனுபவத்தை விக்கிரமாதித்யன் ஆத்மவேதனை என்று சொல்கிறார். ஆத்மவேதனையில் எவ்வளவு நேரம் நின்று தரிக்க முடியும்?  அது எவ்வளவு ரசமானதாக இருந்தாலும். புனைவாசிரியன் மட்டுமே மலையிலிருந்து இறங்கவைத்து உங்களை ஆசுவாசப்படுத்துகிறான். சந்தைத் தெருவின் எதார்த்தத்தை உங்கள் எலும்புகளுக்கு உரமாக மாற்றித் தருகிறான். எனக்கு இன்பம் தெரியும். அந்த இன்பத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது என்பதும் தெரியும். அதனால் கதைகளை நோக்கி, அபுனைவுகளை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன்.    

கேள்வி:  கால் நூற்றாண்டாக தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக செயல்படுகிறீர்கள். நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் என்று எவற்றை சொல்வீர்கள்?

பதில்: நவீன தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனை என்றால் சிறுகதையையே சொல்வேன். குறுக்கு நெடுக்காக அத்தனை வளமைகளையும் வகைமைகளையும் வைத்திருப்பது. புதுமைப்பித்தனும் கு அழகிரிசாமியும் மௌனியும் அசோகமித்திரனும் நகுலனும் ந. முத்துசாமியும் சுந்தர ராமசாமியும் ஜானகிராமனும் எம்வி வெங்கட்ராமும் வண்ணநிலவனும் வண்ணதாசனும் ராஜேந்திர சோழனும் தஞ்சைப் பிரகாஷும் ம. அரங்கநாதனும் கோணங்கியும் ஜெயமோகனும் எஸ். ராமகிருஷ்ணனும் யுவன் சந்திரசேகரும் சுரேஷ்குமார் இந்திரஜித்தும் ஷோபா சக்தியும் குமார நந்தனும் குலசேகரனும் லஷ்மி மணிவண்ணனும் என எத்தனை ஆசிரியர்கள் எவ்வளவு குணரூபங்கள் கொண்ட சிறுகதைக் கலைஞர்கள் ஒரு நூற்றாண்டு இடைவெளியில் இங்கே கிளைத்திருக்கிறார்கள். தமிழ் நவீன இலக்கியத்தின் நூற்றாண்டு சாதனை என்றால் சிறுகதைகள்தாம்.

கவிதை சார்ந்து ஒரு மேஜர் வாய்ஸ் என்பது சீக்கிரத்தில் நிகழும் என்றே கருதுகிறேன். வர்க்கம், சாதி சார்ந்த வரம்பை மீறிய ஒரு பொது மனம் கவிதையில் இன்னும் பிறக்காமல் இருப்பதாலேயே, கவிதை ஒவ்வொரு இருபது வருடமும் கொஞ்சம் விரிந்து மீண்டும் சுருங்கிவிடுகிறதென்ற விமர்சனத்தை நான் வைத்து வருகிறேன். ஷோபா சக்தி வழியாக ஒரு உலகளாவிய தமிழ் குரல் ஒன்று சிறுகதையில் பிறந்துவிட்டது, சாதத் ஹசன் மண்டோ மூலம் நிகழ்ந்ததைப் போல. அதற்காக காத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது.

ஆழமான தமிழ் வாசகர்கள் பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும். வாசக எண்ணிக்கை, இலக்கியம் குறித்த பொது உணர்வு ஆகியவற்றை முன்வைத்து கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களை எல்லோரும் சிறப்பாகச் சொல்வார்கள்.  ஆனால் எனது அனுபவத்தில் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் புதுமைப்பித்தனிலிருந்து லக்ஷ்மி மணிவண்ணன் வரை, ஒரு எழுத்தாளனை தனது வாழ்க்கையில் பிரதிபலித்தபடி தொடர்கிற, “சஹிருதயர்கள்” என்று ஜெயகாந்தன் வரையறை செய்கிற செறிவான வாசகர்கள் இங்கேயே இருக்கிறார்கள்.  புதுமைப்பித்தனை, மௌனியை, சுந்தர ராமசாமியை, அபியை, விக்கிரமாதித்யனை தன் அகத்தில் கொண்டுசெல்லக்கூடிய வாசகர்கள் சிலரை எனக்கு நேரடியாகத் தெரியும். தமிழகம் முழுவதும் ஐம்பது, அறுபது என்ற எண்ணிக்கையில் இருந்த அந்த ஆழமான வாசகர்கள் சில நூறுகளாக இன்று ஆகியிருக்கிறார்கள். அப்படி சில செறிவான வாசகர்களையாவது கேரளத்தில் பஷீர் பெற்றிருப்பாரா என்று நான் அறியேன். இந்தச் செறிவான வாசகர்கள்தான் நூறாண்டு காலமாக தமிழ் இலக்கியத்தை முன்னால் எடுத்துச் செல்பவர்கள். தொமுசி ரகுநாதன் என்ற வாசகன் தானே புதுமைப்பித்தனை இங்கே நிலைநிறுத்தியது. பிரமிளை கால சுப்ரமணியம் என்ற வாசகன் தானே இன்று வரை நிலைபெறச் செய்திருப்பது. அப்படியான ஒரு சூழல் வெளியே மிக அரிதென்று நினைக்கிறேன்.  

10

“காலணிகளற்று 
நடப்பவனைப் போல்
 
நகரத்தில் பாதுகாப்பின்மையுடன்
உலவுபவன் என் ஊர் என
 நான் அறிவேன்”

கேள்வி: திருநெல்வேலிக்கு நவீன தமிழ் இலக்கியத்தில் விசேஷ இடம் இருக்கிறது. முக்கியமான பல எழுத்தாளர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள். நீங்களேதாமிரபரணி நால்வர்என்று வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா ஆகியோரை ஒன்றாக பேட்டிக் கண்டு எழுதியிருக்கிறீர்கள். திருநெல்வேலிக்கும் உங்களுக்குமான உறவு எத்தகையதுஉங்களுடைய கவிதைகளைப் படிக்கும்போது நவீனமான ஒரு பெருநகரத்து இருப்பையே அதில் காண முடிகிறது.  “தாமிரபரணி வற்றினால் தீஎன்று எழுதும் விக்கிரமாதித்யனிடம் தென்படும் ஆழமான பற்றுதலை உங்களிடம் பார்க்கவே முடியவில்லை.

பதில்: திருநெல்வேலியிலிருந்து ஏன் இத்தனை பேர் எழுத்தை நோக்கி வந்திருக்கிறார்கள் எனும் கேள்வி சார்ந்து என் அவதானங்களை நான் போதுமான அளவில் பகிர்ந்திருக்கிறேன். எல்லா திருநெல்வேலி எழுத்தாளர்களும் பகிர்வதைப் போல் திருநெல்வேலியின் தனித்தவொரு பாழ் தன்மையை நானும் பகிர்கிறேன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி புரோட்டா கடைகள், சின்னச் சின்னச் சந்துகள், ஓட்டல்கள், திருநெல்வேலியின் ரதவீதிகள், திருநெல்வேலியின் வீடுகள், ஆறு, திரையரங்கங்கள் இவை யாவும் எனது பால்ய காலத்தின் சாட்சியாக இருக்கின்றன. சாரமாக என் ஞாபகத்தில் இறங்கியிருக்கின்றன. ஆனால், திருநெல்வேலியின் சமயம் சார்ந்தோ சாதி மற்றும் கலாச்சாரத் தொன்மையுடனோ எனக்கு அடையாளமோ நினைவோ இல்லை.

சமீபத்தில் நெல்லை கண்ணன் இறந்தபோது அலுவலக நண்பர்கள் என்னிடம் அது பற்றி கேட்டார்கள். நெல்லை கண்ணன் அவர்கள் வீடு சார்ந்த சிறுவயது ஞாபகத்தை மட்டுமே என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அம்மன் சன்னிதி தெருவில் அப்போது பெரிதாக இருந்த பங்களா வீடு அவருடையது. முதன்முதலாக லாப்ராடர் நாயை நண்பர்களோடு போய் பார்த்தது அவர்கள் வீட்டில்தான். அந்த நாய் ஒரு பக்கெட் அளவுக்கு தயிர்சாதம் சாப்பிடும் என்று நண்பர்கள் கதை பேசியிருக்கிறோம்,

இப்போது என் அம்மாவின் முதலாம் ஆண்டு திதியை நிறைவேற்றுவதற்காக திருநெல்வேலிக்குப் போனபோது டவுண் முதல் ஜங்சன் வரை இரண்டு முறை நடந்துச் சென்றேன். யாத்திரைப் போல. அம்மாவின் உறவினர் வீடுகள். நெருங்கி பழகியவர்களின் வீடுகள். தெருக்கள். அம்மா வேலை பார்த்த போஸ்டல் அண்ட் டெலிகிராப் டிஸ்பன்சரி. அம்மாவுடன் சென்ற திரையரங்குகள். வசித்த வீடுகள். இவை எல்லாவற்றையும் தேடி தேடி பார்த்தேன். தெரிந்தவர்கள் யாரையும் விசாரிக்கவோ, அவர்கள் முகங்களைத் தேடவோ இல்லை. காம்பவுண்டுகளுக்குள் போய், குட்டிச் சுவராக நிற்கும் இடங்களையும் அங்குள்ள செடிகளையும் எனது பால்யம் உருவாக்கிய சித்திரங்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருந்தேன். அது அம்மாவுடனான யாத்திரைதான்.

அன்று சாலைக்குமார சுவாமி கோயிலுக்கு மேலே உள்ள சிமெண்டு விதானத்தில், மூன்று முதலை பொம்மைகளை முதல்முறையாகப் பார்த்தேன். அந்த முதலை பொம்மைகளுக்கு என் வயதுதான் இருக்கும். வண்ணங்களில்லாமல் ஒன்று வாயை மூடிக்கொண்டிருந்தது. இன்னொன்று சற்று திறந்த வாயோடிருந்தது. மூன்றாவது முதலை நன்றாக வாயைப் பிளந்துகொண்டிருந்தது. எந்தப் புராணக் கதாபாத்திரங்களுடனும் தொடர்பேயில்லாத முதலை பொம்மைகள் அவை. கிட்டத்தட்ட புறநடையாக நடு மேம்பாலத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரிய வீற்றிருக்கும் வண்ணமற்ற முதலைகள் அவை. அது கல் முதலையும் அல்ல. அந்த முதலைகள் திருநெல்வேலிக்கு யாரோ, அதேபோலத் தான் நானும் திருநெல்வேலிக்கு.

என் ஆரம்ப கால கவிதை வாசிப்பில் மிகத் தீர்மானகரமான திருப்பத்தை உருவாக்கியவை கலாப்ரியா கவிதைகள்.எனக்கு பரிச்சயமான திருநெல்வேலியின் கலாசாரக் கூறுகள் அக்கவிதைகளில் அசலாக வெளிப்பட்டிருந்ததுதான் காரணம். கவிதை ஆழமானது என்ற முதல் அனுபவம் அவர் மூலமாகவே எனக்குக் கிடைத்தது. அதுவரை நான் வாசித்த கவிதைகளில் இருந்த மூட்டத்தையும் மௌடீகத்தையும் அனுஷ்டானத்தையும் கலாப்ரியாதான் நொறுக்கிப் புதுப்பித்தார். தமிழில் கவிதை வாசிக்க வரும் எந்த வாசகனுக்கும் கலாப்ரியா அந்த அனுபவத்தைக் கொடுப்பவர்தான். அவ்விதம் திருநெல்வேலி, அழுத்தமாக என்னுடைய மிகச் சில கவிதைகளில்தான் பதிவாகியுள்ளது.

கேள்வி: ஆச்சர்யமாக விஷயம். திருநெல்வேலியின் அழுத்தமான வட்டார வாடைக்கூட உங்கள் பேச்சில் அதிகம் தென்படுவதில்லை. அரிதாகவே சில வார்த்தைகள் உங்கள் பூர்வீகத்தை ஞாபகப்படுத்துகின்றன.  

பதில்: உண்மைதான். என் பேச்சில் வட்டார வாடை தென்படாது. “நீங்கள் மலையாளமா?” “இலங்கையா?” என்றெல்லாம் என்னை விசாரித்திருக்கிறார்கள். என்னுடைய வட்டாரம் என்பது பயம் தான். பயம்தான் எனது பேச்சின் வட்டாரத்தை ஆட்சிசெய்கிறது என்று சுயபகடியாகக் கூடச் சொல்வேன்.

கேள்வி:  அகதி அம்சமும் அனாதைத் தன்மையும் உங்கள் கவிதைகளில் விரவியுள்ளன. உங்களுடைய சமீபத்திய கவிதையானஹம்டி டம்டிவரை அவை தொடர்கின்றனஎனவே ஊர் என்று நீங்கள் எதை சொல்வீர்கள்?

பதில்: எனது ஊர் என்றால் இப்போதைக்கு சென்னை வேளச்சேரிதான். வேளச்சேரியினையே எனது நிம்மதியான கருப்பையாக தொடர்ந்து உணர்கிறேன். ஆண்களும் பெண்களுமாக எனக்குத் தெரிந்த முகங்கள் என 50 பேர் வேளச்சேரியில் தான் இருக்கின்றனர். எப்போதும் எதுவும் நேரலாம் என்ற அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த எனது சோகமான வீட்டை விட்டு, விடுதலை அடைந்து வந்த இடம் சென்னைதான். கூனலாய், மெலிந்த உடலுடன் வந்த எனக்கு எல்லாப் புரதங்களையும் தந்து பொலிவித்தது சென்னைதான். இங்கேதான் எனக்கு எல்லாமே நடந்திருக்கின்றன. எந்த அடையாளத்தையும் பார்க்காமல் எனக்கு வாழ்க்கையை, சுய கல்வியை, அங்கீகாரத்தை, காதல்களை, அலாதியான மகிழ்ச்சிகளை, உறவுகளை, பலகலாசாரப் பரிவர்த்தனைகளை, உணவை, மதுவை, ஓவியத்தை, சினிமாவை, விருந்து இரவுகளை, இசையை அளித்த இடமென்றால் சென்னைதான்.

கேள்வி: இறுதி கேள்வி. சம்பிரதாயமானதுதான். கவிதை உங்களுக்கு என்னதான் கொடுத்திருக்கிறது?

பதில்: என் கவிதைகள் வழியேபலவிதமான வாழ்க்கைகளை நான் வாழ்ந்திருக்கிறேன். உண்மையில் என் கவிதையே அந்த வாழ்க்கைகளை வாழ அனுமதித்திருக்கிறது. என்னுள்ளே இருக்கும் சிறுவன் பெரிதாக சேதப்படாமல் இன்னமும் அதே விளையாட்டு இயல்புடன் இருப்பதற்குக் காரணம் கவிதைதான். அவன் ஆரம்பத்தில் குற்றம், தவறு என நினைத்த எந்த விஷயம் தொடர்பிலும் இப்போது அவனுக்கு குற்றவுணர்வு இல்லை. சரி, தவறு என்று எதுவும் இல்லை; ஆனால், செய்யும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து இன்னும் கூடுதல் மகிழ்ச்சியுடன் திகழ்கிறான். குற்றம் எதையும் நிகழ்த்தாமலேயே, குற்றத்தைத் தொடாமலேயே, குற்றத்தின் மூட்டம் கொடுக்கும் உற்சாகத்தில் திகழ அவனுக்கு கவிதைதான் கற்றுக்கொடுத்திருக்கிறது. எந்தக் கற்பனையும் எந்தச் சிந்தனையும் குற்றமோ, ஹராமோ அல்ல என்பதையும் கவிதையும் இலக்கியமும்தான் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கற்பனையோ, சிந்தனையோ சமூகத்துக்கு எதிராக இல்லாமல், அதேநேரத்தில் அச்சமூகத்தவனாக அவன் வாழத் துணிந்ததற்குக் காரணமும் கவிதைதான், கவிதை தவிர வேறொன்றும் இல்லை.

0

இந்த அந்தி

ஷங்கர்ராமசுப்ரமணியன்

முதிய கருவேப்பிலைச்செடியின் கீழே
ஓரு அந்தி கவிழ்கிறது.
மூலைக் கழிப்பறைக்கும்
ஈரப் புழக்கடைக்கும் இடையே நின்று
இச்செடி
உள்ளங்கையளவு சோகத்தை
இருட்டோடு சேர்த்து
அனைவருக்கும் பகிர்கிறது
காபிப்பொடி நீரில் அவியும் மணம்
துண்டிக்க
தன் பிராயக் கால வீட்டின் நினைவைத்
தொடரும் பெண்ணின் கண்ணீர்த்துளி
உலர்ந்த அவள் முகத்தில்
இந்த அந்தி சில்லிடும்.
குழந்தைகள்
விடைபெற்றுச் செல்லும்
ஓவ்வொரு பொழுதும்
நடுங்கும் முதுமையின் கரங்களில்
விசனத்துடன்
இந்த அந்தி கனக்கும்.
ஓரு கருப்பு வண்ணத்துப்பூச்சி
அந்தியின்
இடைவெளிகள் மேல்
பறக்கிறது.
கடைசித்துளி சிறுநீர் பிரியும் க்‌ஷணத்தில்
அந்தி
நம்மிடம் விடைபெறுவதும்
கருவேப்பிலைச் செடி
தன் இலைகளோடு
இருள்மசங்கலில்
மறைந்து கரைவதும்
பறவைகளின் உருமறைந்த இரைச்சலும்
ஓரு சின்னஞ்சிறிய
வழி அனுப்புதலின் பொருட்டா.

0

ஷங்கர் ராமசுப்ரமணியன் நூல் பட்டியல்

கவிதைகள்
மிதக்கும் இருக்கைகளின் நகரம் (2001)
காகங்கள் வந்த வெயில் (2003)
சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை (2005)
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் (2008)
ராணி என்று தன்னையறியாத ராணி (2011)
ஆயிரம் சந்தோஷ இலைகள் (2014)
ஞாபக சீதா(2016)
கல் முதலை ஆமைகள் (2019)
நிழல்,அம்மா (2022)

கட்டுரை தொகுதி
கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும் (2011)
படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் (2016)
பிறக்கும்தோறும் கவிதை (2021)

மொழிபெயர்ப்பு
விசாரனை அதிகாரி – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

7 Comments

  1. யதேச்சையாகப் படிக்கக் கிடைத்தது. வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் இப்படித்தான் நேர்கின்றன. சமகாலத் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவர் சங்கர ராம சுப்ரமணியன். எல்லாக் கவிஞர்களாலும் கவிதை குறித்து வாழ்க்கை குறித்து அகல்விரிவாகப் பேசமுடிவதில்லை. அது அவசியமா என்பது வேறு விஷயம். ஆனால், சங்கருக்கு முடிந்திருக்கிறது. பேட்டி கண்டவரும் பொருத்தமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார். நிறைவான வாசிப்பனுபவம் தந்ததற்காக மனமார்ந்த நன்றி. – லதா ராமகிருஷ்ணன், சென்னை

  2. கேள்வி கேட்பவர்களே நல்ல பதில்களைக் கொண்டு வருகிறார்கள் என்ற் ரீதியில் முக்கியமான நல்ல கேள்விகளும் விரிவான அக்கறையான பதில்களும் நிறைந்து நேர் காணல் சிறப்பாக வந்திருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டு கால தமிழ் நவீன கவிதையினை ஆழ அகலமாக விவாதித்திருக்கிறார்கள் விஷால் ராஜாவும் சங்கரும். இருவரும் நன்றியு ம் வாழ்த்துகளும்.

  3. .தமிழில் எப்பொழுதாவது தான் இது போன்ற நேர்காணல் நிகழ்கிறது.மிக ஆழமான,நேர்த்தியான,,புதிய கண்டு பிடிப்புகளோடு,திறப்புகளோடு,சங்கரின் பயத்தோடு,குழப்பத்தோடு,விவாதங்களோடு வந்திருக்கிறது.வாசிக்க வாசிக்க சங்கர் துலங்கி வருகிறார்.ஓயின் போல வைத்து வைத்து பருக படக்கூடிய ஓன்றாய், மிக்க நன்றி.நான் பயிலுவதற்கு ஒன்றானதாகவே இந்த நேர்காணலை கருதுகிறேன்.விஷாலால் தான் இது சாத்தியமாயிருக்கிறது.விஷால் அல்லாத ஓருவரால் இதை நிகழ்த்த முடியாது என்று உறுதியாய் சொல்வேன்.

  4. சிறப்பான நேர்காணல்.. விஷாலுக்கும் ஷங்கருக்கும் அன்பு….

  5. எதுவும் இட்டு செல்லவில்லை எந்தப் பாதையும் இல்லை. நிதானமான நடை கொடுக்கும் இருப்பு.

    சிறுவனின் கண்கள், உள்ளது உள்ளபடி பார்க்கும் சிறுவனின் கண்கள் அள்ளி வரும் ஆச்சரியம்.

    துணுக்குக்கும் காவியத்திற்குமான இடைவெளி குறித்த கவிஞனின் பிரக்ஞை.

    பயம் தருவிக்கும் ஒழுங்கிற்கான யத்தனத்தை தவிர்க்கும் கவனமான அறிவின் ஆதரவு நிழல்

    பழம் பெருமை உண்டு. எதிர் பொற்காலம் இல்லை. இருட்டின் மீதான பயம் உண்டு. கற்பனையின் அதீத நம்பிக்கை இல்லை.

    புறம் வாரி வரும் அத்தனையும் அகம் சேர்வதில்லை ஆனால் தேசலான அப்பாதையின் தடம் தெரியும் சொற்கள். சூழலில், கவிதைக்கு உள்ளேயும் வெளியே நிகழும் அக புற மாற்றங்கள் குறித்த தனித்த பார்வை.

    வாசிப்பு எங்காவது கொண்டு செல்லுமா தெரியாது.. நிதானத்தை கொண்டு வருமா ..வரலாம்..

    அருமையான நேர்காணல் , விஷால் ராஜாவிற்கும் கவிஞர் ஷங்கருக்கும் நன்றி.

  6. மிக விரிவான நேர்காணல். கவிதை குறித்த கருத்துக்களை சங்கர் மிக்கது தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். புதுக்கவிதையின் தோற்றத்திற்கு முந்தைய கவிதை அல்லது செய்யுள் மரபுகள் தாக்கத்தைத் தன் மீது அவர் உணர்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கவிதை மொழியின் ஓசை நயம் குறித்து அவர் கருத்து என்ன என்பதையும். கவிஞர்கள் பட்டியலில் கல்யாண்ஜியும் மோகனரங்கனும் இடம் பேராதது வியப்பையளித்தது. ஒரு வேளை என் வேகமான திறன்பேசி வாசிப்பில் நான்தான் கோட்டை விட்டு விட்டேனா! எப்படியிருந்த போதிலும் கவிதை குறித்த உரையாடலில் இ த நேர்காணலுக்கிருக்கும் முக்கிய இடத்தைக் காலம் உறுதி செய்யும். நன்றியும் வணக்கமும்.

  7. மிக நீண்ட சிறப்பான நேர்காணல். கதை, கவிதை, நாடகம் போல் நேர்காணலும் ஒரு இலக்கிய வடிவமாக உருப்பெற்றிருந்த காலம் ஒன்றிருந்தது. நேர்காணல் ஒன்றிட்காகவே வாங்கிவாசிக்கப்பட்ட சஞ்சிகைகளும் எம்மிடையே அன்று இருந்திருந்தன. இப்போது இவை எல்லாம் காணாமல் போய்விட்டன. ‘அகழ்’ கொஞ்சம் நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.

உரையாடலுக்கு

Your email address will not be published.