/

காதலர், ஆன்மிகவாதி அம்பேத்கர் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

சவிதா அம்பேத்கர்(1909-2003)

நாம் பொதுவில் அறிந்த பாபா சாகேப் அம்பேத்கர் -சுதந்திர இந்தியாவின் அரசமைப்பைச் செதுக்கிய முதன்மைச் சிற்பி. இந்தியக் குடியரசின் முதல் சட்ட அமைச்சர். உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு நிராதரவாக நின்றிருந்த மக்களின் மீட்பர். சட்டஞானி. மனிதநேயவாதி. திறன்மிக்க நாடாளுமன்றவாதி. இப்படி பல குணாம்சங்களால் அறியப்படுபவர்.

சவிதா அம்பேத்கரின்  நூலில் அம்பேத்கர் வேறுவிதமாய் வெளிப்படுகிறார். ஐந்து வயதிலேயே தாயை இழந்தவராக. பிறகு பிரியமான அண்ணனையும், தொடர்ந்து முதல் மனைவியையும் தந்தையையும் இழந்தவராக. தனிமையின் மாபெரும் கசப்பும் துயரமும் உடலில் நோய்களாக உருமாறி அலைக்கழித்தவராக. சிறுவயது தொடங்கி, கடைசிவரை தீண்டப்படாதவராக. வரலாற்றுக் கொடூரங்களையும் நோய்களையும் தாங்கிய உடலாக. இப்படி, அம்பேத்கர் வரலாற்று நாயகராக மட்டுமில்லாமல் பிறிதொரு ஆழமான இருப்பாகவும் இந்நூலில் காட்சியளிக்கிறார்.

சவீதா அம்பேத்கரின் நூலில், காந்தியின் மகாத்மாத்துவத்தையே தார்மீகமாக கேள்விக்கும் சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய, இந்திய வரலாற்றின் மகத்தான அரசியல் ஆளுமையாக அம்பேத்கர் வெளிப்படவில்லை. இளமையிலிருந்து தலித் மக்களுக்கான இயக்கங்களை முன்னெடுத்த செயல்பாட்டாளராகவோ, எழுத்தாளராகவோ, இறப்புக்கு முந்தைய தன் கடைசி இரவு வரை ஜூரவேகத்தில் நூல்களை வாசித்த அறிஞராகவோ வெளிப்படவில்லை. சவிதாவின் அம்பேத்கர், சவிதாவின் காதலரே.

அம்பேத்கரின் இறுதி ஆண்டுகளில் நீரிழிவு, நரம்பு அழற்சி, வாதம், உயர் ரத்த அழுத்தம் என பல வியாதிகள் இணைந்து அவருடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையில், வாழ்வை நீட்டிப்பதற்காக அல்லாமல் தான் உத்தேசித்த காரியங்களைச் செய்துமுடிப்பதற்காக, அவர் போராடி சாதித்த கடைசி யுத்தமே சவிதா அம்பேத்கரை வென்ற காதல் என்று தோன்றுகிறது. அவர் அதுவரை அடைந்த அறிவு அனைத்தும் சவிதா அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்களில் தோற்பதைப் பார்க்கிறோம். புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய ‘கண்மணி கமலாவுக்கு’ கடிதங்கள் ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட சிறந்த காதல் கடிதங்களைப் படிக்கும்போதும் இந்த இலக்கிய உணர்வைத்தான் அடைவோம் போல.

கடிதங்களில் அம்பேத்கரின் மொழி கவித்துவத்தை அடைகிறது; அம்பேத்கரின் மொழி பித்துநிலையில் இருக்கிறது; அம்பேத்கர் அங்கே குழந்தையாகிறார். சவிதாவுக்கு நைட்டித்துணியிலிருந்து கைக்கடிகாரம், நங்கூர டாலர் செயின் என ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி தேர்ந்து அனுப்புகிறார். அம்பேத்கரைப் பார்த்திருக்காவிட்டால் மிகப்பெரிய மருத்துவராகவோ அல்லது எழுத்தாளராகவோ திகழ்ந்திருக்க வாய்ப்பிருந்த சவிதா, அம்பேத்கரின் ஆத்ம சேவகர் ஆகிறார். குழந்தைக்கு சட்டை போட்டுவிடுவது போல தினமும் உடனிருந்து ஆடைகளை அணிவதற்கு உதவி அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தன் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் சவிதா இருக்கவேண்டுமென்று அம்பேத்கர் விரும்புகிறார். ஒன்பது ஆண்டுகள் சவிதா ஒரு நிழலைப் போன்றே அம்பேத்கருடன் இருக்கிறார். பின்னர் அவர் மறைந்த பிறகு 2003 வரை அம்பேத்கர் விட்டுச்சென்ற ஒரு நிழல் என, துயரம், அவமதிப்பு, கௌரவம் எல்லாம் சேர்ந்த தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

காங்கிரஸ் மீது அம்பேத்கர் கடைசிவரை கொண்டிருந்த கசப்பை சவிதாவும் வாழ்க்கையின் கடைசிவரை பகிர்ந்திருக்கிறார். அம்பேத்கரின் மரணத்துக்குப் பிறகு பண்டித நேரு அவருக்கு அரசு மருத்துவ அதிகாரி பதவியை வழங்குவதற்கு முன்வந்தபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவை உறுப்பினராவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கரின் பதிப்பிக்கப்படாத நூல்கள் தொடர்ந்து பதிப்பு காண்பதில் முப்பது ஆண்டுகள் செலவழித்துள்ளார். அம்பேத்கரின் சகியாக, சாரு எனும் செல்ல அழைப்பாக ஆவதற்கு சவிதா அம்பேத்கர் கொடுத்த கொடை என்னவென்று இந்த நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

சவிதா அம்பேத்கரின் ஆளுமையும் இந்நூலில் துலங்குகிறது. அம்பேத்கரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் மரணத்துக்கான காத்திருப்பில், அவர் வாழ்க்கையில் கடைசி ஒன்பது ஆண்டுகளை கூடுதலாகப் பரிசளித்த மருத்துவராகவும் காதலியாகவும் மனைவியாகவும் சவிதா அம்பேத்கர் இருந்துள்ளார். புத்தரின் வாழ்க்கையில் யசோதராவின் பாத்திரம் தான் தன்னுடையது என்று இந்த நூலின் துவக்கத்திலேயே சவிதா கூறுகிறார். தனது பாத்திரம் என்னவென்று மிக மௌனமாக உணர்த்திவிடுகிறார்.

‘அத்தஹி அத்தானோ நாதோ’ (ஒருவருக்கான அடைக்கலம் அவருக்குள்ளேயே உள்ளது.) எனில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் என்னுடைய பாத்திரம் ஒருவகையில் யசோதராவைப் போன்றதல்லவா?  

அம்பேத்கரின் புகழை கடைசிவரை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட பணிகளையே தனது அடைக்கல இல்லமாக, சவிதா உணர்ந்திருக்க வேண்டும். அம்பேத்கரின் மரணத்துக்கு சவிதா காரணமாக இருந்தார் என்று அம்பேத்கருக்கு நெருக்கமான தலித் தலைவர்களே கூறிய அவதூறுகளைத் தாண்டி, அந்த அவதூறுகளுக்கும் மனப்புழுக்கங்களுக்கும் மத்தியில் இப்பணிகளை அவர் செய்து முடித்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து தொல்லியல் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட ஆலயத்தின் கட்டிடப் பகுதிகள் சிதைந்துபோன பௌத்த விகாரையின் பகுதிகள் என்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தவர் சவிதா.

பொது வாழ்க்கையிலேயே பல துயரங்களை சவிதா அனுபவித்துள்ளார். அம்பேத்கர் தன் கடைசி இரவு வரை மெய்ப்பு பார்த்த கைப்பிரதியான ‘புத்தமும் தம்மமும்’  நூல் முன்னுரையில் சவிதாவின் தியாகங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த காரணத்தினாலேயே அம்முன்னுரை அம்பேத்கரின் நூல்களைப் பதிப்பித்தவர்களால் பல தசாப்தங்களாக வெளியிடப்படாத துரதிர்ஷ்டம் சவிதாவுக்கு நேர்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பேத்கர் தனது இகத்தையும் அகத்தையும் கடைசி ஆண்டுகளில் செழிக்கச் செய்தவரான காதல் மனைவி சவிதா அம்பேத்கருக்கு ஒரு நூறு வார்த்தைகள் வழியாக நன்றி சொல்லியிருக்கிறார். இதுவே சவிதாவுக்கு வரலாறு கொடுத்த அடையாளமும் அடைக்கலமும்.

சவிதா அம்பேத்கரின் குடும்பப் பெயர் கபீர் மற்றும் ஷாரதா. அம்பேத்கருக்கு சாரு. அம்பேத்கருக்குப் பின்னால் அவருக்கு அடையாளமாக இருந்த பெயர் சவிதா அம்பேத்கர்.

000

இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு முந்தைய ஆண்டு நவம்பர் 25-ம் தேதி அரசமைப்பு அவையில் கீழ்க்கண்ட எச்சரிக்கை வாசகங்களைக் கூறி தனது வரைவை அம்பேத்கர் முன்வைத்திருக்கிறார்.

“26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.”

இது அம்பேத்கர் அடித்த எச்சரிக்கை மணி. சுதந்திர இந்தியா ஜனநாயகமாக, சமூக, பொருளாதார வாழ்க்கையில் கடந்த 80 ஆண்டுகளில் சமத்துவத்தை எட்டுவதில் தோல்வியை அடைந்து தேர்தல் சர்வாதிகாரத்தை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் அம்பேத்கரின் எச்சரிக்கை உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

000

காந்திக்கும் அம்பேத்கருக்குமான தருணங்கள் இந்த நூலில் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவை. மறுமலர்ச்சியாளர் புலே குறித்த திரைப்பட நிகழ்வு ஒன்றில் அம்பேத்கரோடு ராமசாமி நாயக்கராக பெரியாரும் கலந்துகொள்ளும் ஒரு சம்பவத்தையும் சவிதா நினைவுகூர்கிறார். காந்தியின் சரிதையை எழுதுவதற்கு அம்பேத்கருக்கு திட்டமிருந்திருக்கிறது. அதற்கு தானே சரியான நபர் என்றும் அவர் சவிதாவிடம் பகிர்ந்திருக்கிறார்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களில், அம்பேத்கருக்கும் சவிதாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது “காந்தி இத்திருமணத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று படேல் சொல்கிறார். அம்பேத்கரும் வருத்தத்தோடு ஆமாம் என்கிறார்.

காந்தி கொல்லப்பட்டதையடுத்து 1948 பிப்ரவரி 6-ல் அம்பேத்கர், சவிதாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தியின் சடலத்தைப் பார்க்கச் சென்றதைக் குறிப்பிடுகிறார். காந்தியைப் படுகொலை செய்ததைக் கண்டித்து இப்படித் தொடர்கிறார் கடிதத்தை,

“நான் எதற்காகவும் திரு. காந்திக்குக் கடன்பட்டிருக்கவில்லை. என்னுடைய ஆன்மிக, தார்மிக, சமூக குண இயல்புக்கு அவர் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை. என்னுடைய இருப்புக்காக நான் கடன்பட்டிருக்கும் ஒரே ஒரு நபர் புத்தர் மட்டும்தான். என் மீது அவருக்கு இருந்த வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை காலையில் பிர்லா இல்லம் சென்றேன். அவருடைய சடலத்தைக் காட்டினார்கள். என்னால் அவருடைய காயங்களைப் பார்க்க முடிந்தது. அவை மிகச்சரியாக இதயத்தில் இருந்தன. அவருடைய சடலத்தைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். என்னால் நடக்க இயலவில்லை என்பதால் இறுதி ஊர்வலத்துடன் கொஞ்ச தூரம்தான் போக முடிந்தது” என்று கூறியபடி எழுதிச் செல்லும்போது “திரு. காந்தி இந்த நாட்டுக்கு ஒரு நேர்மறையான அபாயமாக மாறிவிட்டார். எல்லா சுதந்திரச் சிந்தனைகளையும் அவர் அடக்கிவைத்திருந்தார். திரு. காந்தியின் புகழ்பாடுவதையும் நயம்பாடுவதையும் தவிர, சமூகத்தின் வாழ்க்கையை நிர்வகிக்கும் எந்தவிதமான சமூக அல்லது தார்மிகக் கொள்கையிலும் உடன்படாத சமூகத்திலுள்ள எல்லா மோசமான மற்றும் சுயமோகக் கூறுகளின் கலவையாக அவர் காங்கிரஸை வைத்திருந்தார்” என்று கடுமையாக விமர்சித்தும் செல்கிறார்.

காந்தியின் மரணம் ஒரு சாகச மனிதனின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என்றும் அவர்களை சுயமாக யோசிக்க வைக்கும் என்றும் அது அவர்களைத் தங்கள் தகுதிகள் மீது நிற்கவைக்கும் என்றும் நம்பிக்கையை வைக்கிறார்.

அகிம்சையையும் தியாகத்தையும் லட்சணமாக்கி பெரும் மக்கள்திரளை அடிபணிய வைத்த காந்தி போய்விட்டார். அதிகாரம், மயக்கம், படைபலத்தால் மக்களைக் கட்டும் தலைவர்கள் இந்தியாவில் பின்னர் தோன்றிவிட்டார்கள். வாய்ஜாலம், பொய் சாகசங்களால் கட்டப்பட்ட பிம்பங்கள் தலைமைப் பீடங்களைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மக்கள் தன்னிறைவு அடைவார்கள் என்ற அம்பேத்கரின் நம்பிக்கை தோற்ற காலத்தில் இருக்கிறோம்.

காந்தியின் இதயத்துக்குள் தோட்டாக்கள் போட்ட துளைகளை ஒரு அதலபாதாளத்தை உற்றுநோக்குவது போல அம்பேத்கர் குனிந்து நோக்கிக் கொண்டிருக்கும் சித்திரம், நம்முடைய இந்திய தேசம்  இன்று வந்திருக்கும் நிலையின் உருவகமும் கூட. தோட்டா துளைத்த ஓட்டைகளைப் பார்த்துக் கொண்டிருப்பவனும் தன் காலத்தின் மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன். தோட்டாக்கள் துளைத்து சடலமாகப் படுத்திருப்பவனும்  மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன்.

0000

ராணுவ அதிகாரியான தந்தையின் வலியுறுத்தலால் சிறுவயதிலேயே ராமாயணமும் மகாபாரதமும் அறிமுகமானாலும் அம்பேத்கரை அவை கவரவில்லை. பீஷ்மரும் துரோணரும் கிருஷ்ணரும் ராமரும் கபட வேடதாரிகளாகவே தெரிகிறார்கள். அவர்களது பாத்திரங்கள் தன்னை ஈர்க்கவில்லை என்று வாதாடியிருக்கிறார்.

தாதா தெலுஸ்கர் வாயிலாக புத்தரின் பக்கம் திரும்பியவர், தம்மம் மீது ஆர்வம் கொள்கிறார். மதமோ, கடவுள் நம்பிக்கையோ பற்றுதலாக இல்லாமல் மனிதர்களால் மீட்சியடைய இயலாது என்று நம்பியிருக்கிறார். சமத்துவத்துக்கும் பகுத்தறிவுப் பார்வைக்கும் சரியான சமயம் என்று பௌத்தத்தையும் சரியான கடவுள் என்றும் புத்தரையும் நம்பியிருக்கிறார். நோயும் மனக்கவலைகளும் உறங்கவிடாமல் ஆக்கிய அவரது கடைசி ஆண்டுகளில் சவிதா அம்பேத்கரை வாசிக்கச் சொல்லி ‘அஷ்வகோஷாவின் புத்தவிதா’வின் கவித்துவமான பகுதிகளைக் கேட்டு அமைதியாகித் தூங்கியிருக்கிறார்.

அமெரிக்காவுக்குச் சென்று கல்வி கற்றிருந்தாலும், மேற்கத்திய கனவானின் தோற்றத்தைப் பாவித்தாலும், தனது கடைசி காலத்திலும் மருந்தாகக்கூட ஒரு தேக்கரண்டி மதுவை உட்கொள்வதற்கு அவர் மனம் ஒப்புக்கொள்ளாத அளவு ஒழுக்க நடத்தையைக் கொண்டிருந்திருக்கிறார். திருமணத்துக்கு முன்னால் அம்பேத்கருக்கு உதவியாளராக சேவை செய்ய சவிதா முன்வருகையில், தன்னைப் போல் பொதுவாழ்வில் இருப்பவரோடு ஒரு பெண் உடனிருப்பது அவதூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

சவிதா,அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்திலும் ஆண் – பெண் சமத்துவம் குறித்து தனக்கு இருக்கும் நிலைப்பாட்டில் அவர் செயல்பூர்வமாகவும் கொண்டிருக்கும் நம்பிக்கை தெரிகிறது.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய இந்தியாவின் தலைமகன்களில் ஒருவராகிய அம்பேத்கரையே 1952-ல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் தோற்கடிக்கிறது. தமது மக்களே தன்னைத் தோற்கடித்தார்கள் என்று விரக்தியுடன் இருந்த அம்பேத்கரை பௌத்தம் சார்ந்த பணிகளும் சவிதாவும் சேர்ந்தே மீட்கிறார்கள். கீதையைப் போல, விவிலியத்தைப் போல பௌத்தத்துக்கு ஒரு பொதுநூல் இல்லாத குறையை உணர்ந்துதான் ‘பௌத்தமும் தம்மமும்’ என்ற நூலையே எழுதத் தொடங்குகிறார். பல நூற்றாண்டுகளாக தங்கள் கடவுளர்களாலும், தாம் அடையாளம் காணும் சமயத்தின் வைதீக விதிகளாலும் நான்கு வர்ணங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட மக்களின், மனித உயிர்கள் என்ற மதிப்புகூட இல்லாமல் விலங்குகளுக்கும் கீழாக நடத்தப்பட்ட தீண்டப்படாத மக்களின் அத்தனை சுமைகளையும் சிலுவையென ஏற்று, முறியத்துடிக்கும் கிறிஸ்துவைப் போல, அம்பேத்கர் பௌத்தத்தில் கடைசி அடைக்கலத்தையும் அமைதியையும் கொள்ளும் சித்திரத்தைக் காணமுடிகிறது.

அம்பேத்கர் வரைந்த கண் திறந்த புத்தர்

கௌதம புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தின் லும்பினி தொடங்கி அவர் இறந்த இடமான குஷினாரா வரை அம்பேத்கர் பெரும் உடல்நலிவூடாகவே பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். புத்தரின் உடல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட விகாரையின் படிகளில் கனத்த உடலுடன் நடக்க இயலாமல் நான்கு ஆட்கள் தாங்கிப்பிடிக்க நடந்து ஏறி, அங்கிருந்த புத்தரின் சிலையைப் பார்த்து முழங்காலிட்டுக் கொண்டு த்ரிவாரப் பிரார்த்தனையைச் சொல்கிறார். கன்னங்களில் முடிவில்லாத கண்ணீர் வழிந்ததாக சவிதா எழுதுகிறார். எத்தனை நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டதன் கண்ணீர்? எத்தனை நூற்றாண்டுகள் தேடியும் இன்னும் கிடைக்காத விடுதலையின் கண்ணீர்? காலம் காலமாக  நடைமுறையாகவும் தர்மமாகவும் இருந்த தீண்டாமைக்கு சட்டரீதியான தடைகொண்டுவந்து சிலுவைப் போரில் வெற்றியடைந்தவன் வடித்த கண்ணீர் அது.  

சவிதா அம்பேத்கரின் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கரின் ஓவிய ஆளுமையும் தெரிகிறது. புத்தரை திறந்த கண்களுடன் அவர் வரைந்திருக்கும் ஓவியம் இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளது.“புத்தர் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கண்கள் திறந்த நிலையில்தான் சுற்றிவந்தார். திறந்த விழிகளுடன்தான் அவர் உலகின் துயரங்களை அவதானித்தார்”

போதனை வழங்கும் புத்தர், திறந்த விழிகளுடன் இருக்கும் புத்தர், இந்திய அம்சங்கள் கொண்ட புத்தர், நடந்து செல்லும் புத்தர் என வெவ்வேறு தோற்றங்களில் அவர் புத்தரை உருவாக்க நினைத்திருக்கிறார். ஆனால் மரணம் அதற்குள் அவரை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. எனினும், இந்திய எதார்த்தம் என்னவென்று கண்திறந்து பார்க்கும் ஒரு புத்தரை நமக்கு வழங்கியிருக்கிறார். புத்தர் எப்போதும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புனைவு, அ-புனைவு எதுவாக இருப்பினும் மொழிபெயர்ப்புகள் தமிழில் சித்திரவதை அனுபவங்களாக மாறும் பின்னணியில் இந்த நூலுக்கு ஒரு பழைய தொனியைப் பிடித்து அதைக் கச்சிதமாகத் தொடர்ந்து சவீதா அம்பேத்கருக்கு ஒரு சீரான தொனியை அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் த. ராஜன். குறிப்புகள், புகைப்படங்களும் மிகவும் கவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எதிர் வெளியீடு இந்த நூலை பிழைகளின்றி, மதிப்பு துலங்க வெளியிட்டுள்ளது.

இறந்துபோவதற்கு முன்னாலும் புத்தம் சரணம் கச்சாமி பாடலையும், கபீரின் ‘சலோ கபீர் தேரா பவசாகர் தேரா’ என்ற பாடலையும் மிகுந்த லயத்துடனும் காதலுடனும் பாடியிருக்கிறார். கடந்து செல்லுங்கள் கபீர், இது உங்களுடைய தற்காலிக உறைவிடம். அம்பேத்கர் கடந்து போக எண்ணியது இன்னும் கோடிக்கணக்கான மக்களால் கடக்க இயலாததாக உள்ளது.

000

டாக்டர் அம்பேத்கர் அளித்த திருமண விண்ணப்பம் : சவிதா அம்பேத்கர்

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. மிகவும் அருமையான கட்டுரை காந்தி பற்றிய கேள்விகள் இக்காலத்தில் பொருள் படுகிறது ஆக சிறந்த கட்டுரை

உரையாடலுக்கு

Your email address will not be published.