சமீபத்தில் என் நண்பர், தான் வாசித்த கலைரீதியாக தோல்வியடைந்த நாவல் ஒன்றைப்பற்றி சொன்னார். அந்த நாவலின் வடிவத்திலோ, மொழிநடையிலோ எந்த கோளாறும் இல்லை. நாவலின் களம் சார்ந்து ஆசிரியர் செய்த ஆய்வுகளிலும், மெனக்கெடல்களிலும்கூட எந்த குறையும் கூறமுடியாது. இவ்வளவு இருந்தும் அந்த நாவல் கலாப்பூர்வமாக தோல்வியடைதிருந்தது. அது பற்றி அன்று நாங்கள் உரையாடினோம். அந்த உரையாடலில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது, மலையாள நாவலாசிரியரும், இலக்கிய விமர்சகருமான பி.கே.பாலகிருஷ்ணனின் ஜன்ம-ஸித்தி என்ற கருதுகோள்.

 ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற மகாபாரத மறுஆக்க நாவல் வழியாக தமிழ்ச்சூழலில் நாம் பி.கே.பாலகிருஷ்ணனை அணுக்கமாக அறிவோம். அந்த நாவலை சாகித்ய அகாடெமி விருதுபெற்ற ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகாபாரத நாவல் வரிசையான ’வெண்முரசு’ எழுதுவதற்கான தூண்டுதல் பி.கே.பாலகிருஷ்ணனுடனான உரையாடல்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜெயமோகனின் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளில் பி.கே.பாலகிருஷ்ணனின் அழகியல் நோக்கின் நீட்சியை காணமுடியும். “நாவல் கோட்பாடு” நூலை உதாரணமாக சொல்லலாம். தமிழில் நன்கு அறிமுகமான நாவலாசிரியர் எனும் அடையாளம் பி.கே.பாலகிருஷ்ணனின் ஒருமுகம்தான். அவர் மலையாளமொழியின் முக்கியமான இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர். மலையாள நவீன இலக்கியத்தின் போதாமைகள், கேரள அறிவுலகின் பாவனைகள், மலையாள மொழியின் எல்லைகள், கேரள வரலாற்றெழுத்தில் உள்ள விடுபடல்கள், கேரள அறவுணர்வின் நுட்பமான சறுக்கல்கள் என கேரளப் பண்பாட்டின் எல்லா தளங்களிலும் ஆழமான விமர்சனங்களை முன்வைத்தவர் பி.கே.பாலகிருஷ்ணன்.

1962ஆம் ஆண்டு பி.கே.பாலகிருஷ்ணன்      ’நல்ல நாவலும் மகத்தான நாவலும்’ என்ற கட்டுரையை எழுதினார். மலையாளத்தில் அதுவரை எழுதப்பட்ட, கலாபூர்வமான வெற்றிகளாக கருதப்பட்டு வாசக ஏற்பும் பெற்றிருந்த நாவல்களில் ஒன்றைக்கூட “நாவல்” என்று சொல்லமுடியாது என்ற கருத்தை அதில் அவர் முன்வைத்தார். அன்று மலையாளத்தில் எஸ்.கெ. பொற்றேகட்டின் ‘விஷக்கன்னி’,      தகழியின் ‘செம்மீன்’, உறூப்பின் ‘உம்மாச்சு’ போன்ற விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, புகழ்பெற்ற நாவல்கள் வெளிவந்திருந்தன. குறிப்பாக பஷீரின் நாவல்கள் வெளிவந்திருந்தன. அவை கலைரீதியாக வெற்றிபெற்ற படைப்புகள்தான் என்றாலும்  நாவல்கள் அல்ல; நீள்கதைகள்தான் என்ற அவதானிப்பை பி.கெ.பாலகிருஷ்ணன் முன்வைத்தார். அதைத் தொடர்ந்து நாவலின் வடிவம் சார்ந்த சாத்தியங்களை முன்வைத்து ’ நாவல்- ஸித்தியும் சாதனயும் (நாவல்- ஸித்தியும் கதைத்தொழில்நுட்ப பயிற்சியும்)’ என்ற இலக்கிய விமர்சன நூலை 1964ல் எழுதினார். தாராசங்கர் பானர்ஜி, ஜேன் ஆஸ்டன், தஸ்தாயெவ்ஸ்கி என  வெவ்வேறு  அழகியல்நோக்கு கொண்ட மூன்று நாவலாசிரியர்களை முன்வைத்து “நாவல்” எனும் இலக்கிய வடிவம் பற்றி அதில் விவாதித்தார்.

பி.கெ.பாலகிருஷ்ணனின் இலக்கிய விமர்சனங்களில் ’ஜன்ம-ஸித்தி’ என்ற கருதுகோள் முக்கியமானது. ஸித்தி என்ற சொல் பொதுவாக ஆன்மிக தளத்தில் பயன்படுத்தப்படும் சொல்.      கடுமையான, நீண்ட யோகப்பயிற்சிகளால் கைகூடிவரும் சக்திகளையும், பலன்களையும் ஸித்தி என்று குறிப்பிடுவார்கள். உதாரணம், அஷ்டமா-ஸித்தி.      பி.கெ.பாலகிருஷ்ணனின் ஜன்ம-ஸித்தி என்ற கருதுகோளுக்கு மேலே குறிப்பிட்டது போன்ற எந்த ஆன்மிக அர்த்தமும் இல்லை. ஜன்ம-ஸித்தி என்பதை ஒரு கலைஞனில் இயல்பாகவே உள்ள படைப்பூக்கம் (Creative Giftedness) என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். பி.கே.பாலகிருஷ்ணனே ஜன்ம-ஸித்தி எனும் கருதுகோளை வரையறுக்கும்போது ”இது இசகுபிசகான வரையறைதான்” என்று குறிப்பிடுகிறார். பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட, பல வகையில் திரிக்கப்பட்ட இந்த  கருதுகோளை மீண்டும் மீண்டும் பி.கே.பாலகிருஷ்ணன் விளக்கியபடியே இருந்தார்.  ஜன்ம-ஸித்தி என்ற கருதுகோளுக்கு சமானமானது என மேற்கில் கலை சார்ந்த விவாதங்களில் பயன்படுத்தப்படும் ‘Genius’ என்ற கருதுகோளைச் சொல்லலாம். பி.கே.பாலகிருஷ்ணன் பல இடங்களில் ஜீனியஸ் என்ற சொல்லை      நேரடியாகவே பயன்படுத்துகிறார்.

Genius (‘மேதமை’) என்ற கருதுகோள் ஐரோப்பிய இலக்கிய விவாதங்களில் படைப்பாளியின் திறன்(ability), நிபுணத்துவம் (expertise) ஆகியவற்றை சுட்ட பொதுப்படையாக பயன்படுத்தப்பட்ட சொல். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கில தத்துவவாதியும் கவிஞருமான எட்வார்ட் யங் (Edward Young) தன் Conjectures on Original Composition (1759) என்ற நூலில் ‘Genius’ என்ற சொல்லை கலைஞனின் திறன், நிபுணத்துவம் போன்றவற்றிக்கெல்லாம் அப்பால் கலைஞனில் இயல்பாகவே உள்ள படைப்பூக்கம் என்று வரையறுத்தார். எட்வர்ட் யங் ஐரோப்பிய கற்பனாவாத காலத்தின் கவிஞர்கள் பலருக்கு தூண்டுதலாக இருந்தவர். எட்வர்ட் யங்கின் ‘Genius’ வரையறையை      கற்பனாவாத காலகட்டத்தில் கலைஞனின் தீர்க்கதரிசனம், பித்து என வளர்த்தெடுத்தனர். மனிதனின் சுயத்தையே சமூகக்கட்டுமானமாகப் பார்க்கும்  பின்நவீனத்துவம் போன்ற சமகால சிந்தனைமுறைகள் கற்பனாவாத காலகட்டத்தில் உருவாகி வந்த கலைஞனின் தனிப்பட்ட மேதமை என்ற வரையறையை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் ’Genius’(மேதமை) எனும் கருதுகோள் புழக்கத்திலேயே இருக்கிறது. 

பி.கே.பாலகிருஷ்ணன் “நாவல் – ஸித்தியும் சாதனயும் (நாவல்- ஸித்தியும் கதைதொழில்நுட்ப பயிற்சியும்)” என்ற இலக்கிய விமர்சன நூலில் ’நாவல்’ என்ற இலக்கிய வடிவத்தை மற்ற இலக்கிய வடிவங்களுடன் ஒப்பிட்டு சில அவதானிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். மற்ற இலக்கிய வடிவங்களில் எழுதப்பட்ட படைப்புகளைக் காட்டிலும் இதுவரை எழுதப்பட்ட நாவல்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.       ஆனால்,      மற்ற இலக்கிய வடிவங்களின் கலைவெற்றிகளுக்கு நிகராக கலாபூர்வமாக வெற்றிபெற்ற நாவல்கள் மிகமிக குறைவு என்பது பி.கெ.பாலகிருஷ்ணனின் முடிவு. இது எந்த அளவுக்கு சரி என்பது வேறு      விவாதம். ஆனால்  எந்த அடிப்படையில் பி.கே.பாலகிருஷ்ணன்       இந்த முடிவுக்கு      வந்துசேர்ந்தார் என்பது இங்கே முக்கியமானது. அதை வைத்தே ஜன்ம-ஸித்தி என்ற கருதுகோளை ஏன் பி.கே.பாலகிருஷ்ணன் தன் இலக்கிய விமர்சனத்தில் இவ்வளவுதூரத்துக்கு முக்கியமாக கருதுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எந்த நல்ல கலைப்படைப்புமே கலைஞனின் ஜன்ம-ஸித்தி (ஜீனியஸ்), வடிவத்தேர்ச்சி இரண்டின் விளைவு என்பது  பி.கே.பாலகிருஷ்ணனின் கருத்து. ஒரு கலைப்படைப்பின் வடிவம் சார்ந்த கூறுகளை புறவயமாக விவாதிக்கலாம், மதிப்பிடலாம். ஆனால், ஒரு படைப்பாளியின் ஜன்ம-ஸித்தியை(ஜீனியஸ்) திட்டவட்டமாக வகுத்துவிட முடியாது.       இலக்கியத்தின் மற்ற வடிவங்களிலும், இலக்கியம் தவிர்த்த மற்ற கலைகளிலும் கலைஞனின் ஜீனியஸ் பற்றிய தோராயமான புரிதல் நமக்கு இருக்கிறது. ஆனால், நாவல் என்ற இலக்கிய வடிவத்தில் மட்டும் நாவலாசிரியரின் ஜீனியஸ் சார்ந்த      புரிதல் நமக்கு இல்லை. அதை உருவாக்கிக்கொள்வதும் சாத்தியமில்லை. அதனால் நல்ல நாவலை எழுத வடிவத்தேர்ச்சி மட்டுமே போதுமானது என்று தோன்றக்கூடும். ஆனால் அதையும் உடனே மறுக்கிறார் பி.கே.பாலகிருஷ்ணன்.

வடிவம் சார்ந்த பயிற்சி இருந்தால், கலை சார்ந்த நுண்ணுணர்வுள்ளவர்களால் (artistic sensibility), நாவல் எழுதிவிடமுடியும். அதனால், எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாவல்கள் அதிக அளவில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இலக்கியம் தவிர மற்ற கலைகளில் இப்படியான உற்பத்தி நிகழ்வதில்லை.      ஜீனியஸ் அல்லாதவர்களால் மற்ற கலைகளில் நுழையவே முடியாது. இலக்கியத்தில் மட்டுமே யாரும் முயற்சிக்கலாம் என்ற பலவீனம் உள்ளதாகவும் அதுவும் குறிப்பாக நாவலில்களில் அந்த பலவீனம் கூடுதலாக இருப்பதாக சொல்கிறார் பி.கெ.பாலகிருஷ்ணன். இது சற்று மிகையான கடுமையான கருத்துதான், பி.கெ.பாலகிருஷ்ணன் அத்தகைய கருத்துக்களுக்காகவே பெயர் பெற்றவர். ஆனாலும் மற்ற இலக்கிய வடிவங்களில் எழுதப்படுவதைவிட அதிக அளவில் நாவல்கள் எழுதப்பட்டாலும் செவ்வியல்தகுதியை அடைந்த நாவல்கள் மிகமிக குறைவாக இருக்கின்றன எனும் அவருடைய கருத்து சிந்தனைக்குரியதே.

இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் செவ்வியல்தகுதியை அடைந்த நாவல்களின் தனித்தன்மைகளை ஆராய்ந்தால், மற்ற விசேஷ குணங்களோடு அது ஒரு      ஜீனியஸால்      சிருஷ்டிக்கப்பட்டது என்பதையும் நிச்சயம் கணக்கில் எடுக்க வேண்டி வரும்.

ஜன்ம-ஸித்தி (ஜீனியஸ்) என்ற கருதுகோள் நம்மில் சந்தேகங்களை எழுப்பாமலில்லை. ஒருவன் தன் கலையில் ஜீனியஸா என்று எப்படி கண்டுகொள்ள முடியும்? அல்லது ஒரு கலைப்படைப்பை ரசிப்பவன் அந்த கலையை சிருஷ்டித்தவனின் ஜீனியஸை உணர்ந்துகொள்ள முடியுமா? பி.கே.பாலகிருஷ்ணன் இவற்றிற்கு தன்னளவில் பதில் சொல்லவே செய்கிறார்.

ஒரு  இலக்கியப்படைப்பு ஆழமானதாக இருக்க அதன் படைப்பாளிக்கு தீவிரமான      வாழ்க்கையனுபவங்கள் இருக்க வேண்டும் என்பது நிபந்தனைபோல இலக்கியசூழலில்      ஒலித்துக்கொண்டே இருக்கும் கருத்து. இந்த குரலை பி.கே.பாலகிருஷ்ணன் முழுமையாக ஆமோதிப்பதில்லை.      எதிர்வினையாக, அவர்      சுட்டிக்காட்டுவது தஸ்தாயெவ்ஸ்கியின் “House of Dead”     நாவலை. அது கலைவெற்றி கைகூடாத நாவல். தஸ்தாயெவ்ஸ்கி நான்கு வருடங்கள் சைபீரியாவில் கடுமையான சிறைவாசம் அனுபவித்தவர். அந்த தீவிரமான அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டதுதான் அந்த நாவல். தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிரமான வாழ்க்கையனுபவத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த நாவல் ஏன் மகத்தானதாக உருக்கொள்ளவில்லை? 

அறிதலாக  மாறாத எந்த அனுபவமும் (அது எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும்) கலைப்படைப்பில் கையாளப்படக்கூடிய தகுதியை அடைவதில்லை. ஒரு கலைஞனின்      வாழ்க்கையனுபவங்களிலிருந்து திரண்டு வரும் தனிப்பட்ட கேள்விகளும், சிக்கல்களும் கலைப்படைப்பில் நித்யமானதாக (Eternal), மானுடப்பொதுவானதாக (Universal) இருக்க       வேண்டும். அப்போது மட்டும்தான் வாழ்க்கையனுபவங்கள் கலைஞனின் ஆழ்மனதில் அறிதலாக மாறியிருக்கிறது என்று சொல்லமுடியும் என்கிறார் பி.கெ.பாலகிருஷ்ணன்.  தீவிரமான அனுபவங்களை எதிர்கொள்பவர்கள் அனைவரிலும் அனுபவங்கள் அறிதல்களாக மாறுவதில்லை. ஜன்ம-ஸித்தி கொண்ட கலைஞர்களின் கலைமனதில் (ஜீனியஸில்) மட்டும்தான் அனுபவங்கள் அறிதல்களாக மாறுகின்றது என்கிறார் பி.கே.பாலகிருஷ்ணன்.

தஸ்தாயெவ்ஸ்கியின்  House of Dead நாவலைப்போலவே குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், அசடன் போன்ற நாவல்களும் குற்றத்தை அடிப்படையாகக்கொண்ட நாவல்கள்தான். ஆனால், அவை செவ்வியல்தகுதியை அடைந்தவை. காரணம், இந்த நாவல்களில் குற்றம் என்பது குறீயீட்டுரீதியாக மனிதனின் ஆதிபாவமாக      விரிவடைந்திருக்கிறது. குற்றவுணர்வின் என்றென்றைக்குமான மனநிலையை, அதன் வண்ணங்களை ஆராய்ந்திருக்கிறது. தீங்கிழைக்கப்பட்டவனின் சகிப்புத்தன்மையை கிறிஸ்துவத்தின் சகிப்புத்தன்மையுடன் பொறுத்திப்பார்க்கிறது. அம்மாதிரியான விரிவு ”house of dead” நாவலில் நிகழாததால்தான் அது டைரிக்குறிப்பைப்போல கலையம்சம் இல்லாத படைப்பாக இருக்கிறது.

இவ்வாறு      ’குற்றம்’ என்ற தனிவாழ்க்கை அனுபவத்தை, தான் சைபீரியாவில் எதிர்கொண்ட குற்றவாளிகளின் மனநிலைகளை அறிதல்களாக மாற்றிய கணத்தில்தான்                  தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் தன்னைதானே கண்டுகொண்டது என்று சொல்ல வேண்டும். அது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்று பி.கே.பாலகிருஷ்ணன் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

ஒரு படைப்பின் கலைத்தன்மையை ஆராயும்போது வடிவம் சார்ந்த, வரையறுப்பட்ட கருதுகோள்களை மட்டும் வைத்துக்கொண்டு அதன் கலைத்தன்மையை அல்லது கலைத்தன்மையின்மையை முழுமையாக விளக்கிவிட முடியாது.

கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பட்ட என் நண்பருடனான உரையாடலுக்கு திரும்புகிறேன். வடிவத்தேர்ச்சி, நல்ல மொழிநடை, நாவலின் களம் சார்ந்த ஆய்வு இவை இருந்தும் ஒரு நாவல் கலாப்பூர்வமாக தோல்வியடைவதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பி.கே.பாலகிருஷ்ணனின் ஜன்ம-ஸித்தி (ஜீனியஸ்) என்ற கருதுகோளைத்தவிர வேறு எதை பதிலாகச்சொல்லமுடியும்?

மேலும், நல்ல கலைப்படைப்பில் நாம் உணர்ந்த மகத்துவத்தை எந்த அளவுக்கு திட்டவட்டமாக விளக்கிவிடமுடியும்? எந்த மகத்தான கலைப்படைப்பும் வடிவமுழுமை கொண்டதுதான். நல்ல மொழிநடையும், பேசுபொருள் சார்ந்த விரிவும் கொண்டதுதான். அபாரமான வாழ்க்கை முகூர்த்தங்களும், உணர்வெழுச்சிகளும், தரிசனங்களும் நிறைந்ததுதான். இப்படி அடுக்கிக்கொண்டே போனாலும் நல்ல கலைப்படைப்பில் நாம் ஆழத்தில் உணர்ந்த மேன்மையை முழுக்க விளக்கிவிடமுடியாத நிறைவின்மையைத்தான் நாம் அடைவோம். ஜீனியஸால் அந்த படைப்பு சிருஷ்டிக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளும்போது மட்டும்தான் ஒரளவுக்காவது நாம் அந்த படைப்புகளின் மகத்துவத்தை விளங்கிக்கொள்ளமுடியும்.

பி.கெ.பாலகிருஷ்ணனே சொல்வதுபோல ஜன்ம-ஸித்தி என்ற கருதுகோள் இசகுபிசகானதுதான் என்றாலும், வரையறுக்க இயலாதது என்றாலும், விவாதத்திற்குரியது என்றாலும் இந்த  கருதுகோளை புறந்தள்ளிவிட்டு கலைப்படைப்பின் மகத்துவத்தையோ, தோல்வியையோ நம்மால் புரிந்துகொள்ளமுடியாது என்றுதான் தோன்றுகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.