பஷீரின் புகழ்பெற்ற ‘ஜன்ம தினம்’ என்ற சிறுகதை மீதான கல்பற்றா நாராயணனின் வாசிப்பனுபவம். பெரும்பாலான பஷீரின் படைப்புகளைப் போலவே இதுவும் சுயசரிதைத்தன்மை கொண்ட சிறுகதை. இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் சிறுகதை வரிகள் தடிமனான எழுத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அன்று அவரின் பிறந்தநாள். ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அந்தரங்கமான கேலண்டரில் புதுவருடம். ”தைமாதம் 8ஆம் தேதி. இன்று என் பிறந்தநாள். வழக்கத்திற்கு மாறாக நான் விடியகாலையே எழுந்து குளித்துவிட்டு இன்று அணிவதற்காகவே எடுத்து வைத்திருந்த வெள்ளை கதர் வேட்டியும் வெள்ளை கேன்வாஸ் ஷுவும் அணிந்து என் அறையில் சாய்வுநாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் படுத்துக்கிடந்தேன்” அன்று அவரை முதன்முதலாக பார்க்கவருவது அவர் தங்கியிருக்கும் அறைக்கு உரிமையாளனான பி ஏ படிக்கும் வசதியான மாணவன் மாத்யூ . மாத்யூ அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறான். “ஐ விஷ் யு மெனி ஹேப்பி ரிட்டேன்ஸ் ஆஃப் தி டே”. இந்த நாள் மீண்டும்மீண்டும் நிகழவேண்டும் என்று வாழ்த்துகிறான். ”நான் என் சொந்த ஊரிலிருந்து மிக மிகத்தொலைவில் இங்கே இருக்கிறேன். கையில் காசு இல்லை, கடனாக பணம் கிடைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இன்று நான் அணிந்திருக்கும் உடை, ஷு எல்லாமே மற்ற நண்பர்களுடையது. எதையுமே என்னுடையது என்று சொல்ல முடியாது. இம்மாதிரியான நிலையில் இருக்கும் என்னுடைய இந்த பிறந்தநாள் மீண்டும் நிகழவேண்டும் என்றுதான் வாழ்த்தினானா?“ இந்த வாழ்த்தைவிட குரூரமானது வேறு இருக்கமுடியாது. இனி ஒருமுறைகூட, எந்த ஒரு மனிதனிலும் நிகழாமல் இருக்கட்டும் என்று தோன்றவைக்கக்கூடிய நாள். அவரைப்பொறுத்தவரை அது சபிக்கப்பட்ட நாள். உச்சபட்ச இருள் நிறைந்த நாள். உலகுபுரக்கும் தெய்வம் எந்த நிதானமும் இல்லாமல், ஒருதுளி இரக்கமும் இல்லாமல் தன் தலையில் எழுதிய அந்த பிறந்தநாளின் கடைசி பொழுதில் விளக்கின் அடியில் அமர்ந்து கொஞ்சம்கூட தன்னிரக்கம் இல்லாமல் அந்த நாளின் அனுபவத்தை பஷீர் எழுதுகிறார்.
பிறந்த நாட்களில் தீரநோய்களின் வீரயம் அதிகமாகும் என்றொரு நம்பிக்கை உண்டு. பசியும் புரட்சியும் இலக்கியமும் தான் பஷீரின் தீரநோய்கள். அன்று அவர் சந்திக்கும் புரட்சியாளரான தோழர் கங்காதரன் “கிட்டத்தட்ட மூவாயிரம் தொழிலாளிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். 10 நாளைக்கு மேல் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். இது பெரிய ஆர்ப்பாட்டமாக ஆகப்போகிறது. மனிதன் பட்டினி கிடக்கும்போது என்ன வேண்டுமானாலும் நிகழ வாய்ப்பிருக்கிறது” என்கிறார். எதுவும் நிகழ சாத்தியமுள்ள பசி என்ற வெடிகுண்டின் செயல்பாட்டைதான் அந்த நாள் முழுக்க பஷீர் அனுபவிக்கிறார். அந்த பசி அவரை பிறருக்கு முன்பு மட்டுமல்ல, சுயகௌரவத்திற்கு முன்னும் நிர்வாணமாக நிற்க வைக்கிறது.
பஷீரின் ஒரு குறுநாவலில் இந்த கதை வருகிறது. கடவுள் எல்லா உயிர்க்குலங்களையும் படைத்த பிறகு அவர்களிடம் உங்களை படைத்தது யார் என்று கேட்கிறார். அவை ’ எங்களை யாரும் படைக்கவில்லை’ என்று பதில் சொல்கின்றன. ஆத்திரமடைந்த கடவுள் பல வகையான தடைகளை உருவாக்குகிறார். பின்பு கேட்கிறார் “உங்களை படைத்தது யார்?” அப்போதும் அவற்றின் அகங்காரம் குறையவேயில்லை. மீண்டும் ”எங்களை யாரும் படைக்கவில்லை என்று சொல்கின்றன. கடவுள் பசியை சிருஷ்டிக்கிறார். பசி தாளாமல் அவை கடவுளின் காலடியில் விழுந்து ”எல்லையில்லாத கருணை நிறைந்த நீங்கள்தான் என்னைப்படைத்தவர்” என்று பதில் சொல்கின்றன.
கிருஸ்துவம் சொல்லும் ’The Fall’ என்ற கருத்துருவை பசியே இல்லாத சொர்க்கத்திலிருந்து பசியின் உலகத்தை நோக்கிய வீழ்ச்சியாகவும் விளக்கிக்கொள்ளலாம். அந்த பிறந்தநாளில் பஷீர் எவ்வளவு முயற்சித்தும் வீழ்ந்துவிட்ட அவரால் எழ முடியவில்லை. ஒவ்வொரு முயற்சியும் பரிதாபகரமாக தோல்வியடைகிறது. செல்வந்தரான பத்திரிக்கை உரிமையாளரை சந்திக்க செல்கிறார். அவர் தன் மேசையிலிருந்து ஒரே ஒருவருக்கான தேநீருக்கு செலவாகும் பணத்தை எடுத்து வேலையாளிடம் வாங்கிவரச்சொல்லியபோது அது தனக்குத்தான் என்று நினைத்து பஷீர் மகிழ்ச்சியடைகிறார். ’பசியை என் முகமே காட்டிக்கொடுப்பதை, என்னில் எழுந்த அவமானவுணர்வை இந்த தன்னலமில்லாத மனிதர் புரிந்துகொண்டார்’ என்று பஷீர் எண்ணிக்கொள்கிறார். ஆனால் பத்திரிக்கை உரிமையாளர் தேநீர் சொன்னது அவருக்கு, பஷீருக்கு அல்ல. தேநீரை குடித்தபடி சம்பிரதாயமாக ஒரு கேள்வி ’ உங்களுக்கும் வேண்டுமா?’ . ’வேண்டாம்’ என்கிறார் பஷீர்.
அடுத்ததாக கல்லூரி மாணவன் ஒருவனிடம் பஷீர் உதவி கேட்க செல்கிறார். அவரால் பொருளிலியல் லாபமடைந்து பெரிய செல்வந்தனாக ஆகிவிட்டான் அந்த மாணவன். அவனை நண்பர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். கடன் கேட்க சிரமப்பட்டு எழுதி கேட்கலாம் என பஷீர் முயற்சிக்கிறார். அவன் ”கதை எழுதுகிறீர்களா?” என்று கிண்டலாக கேட்கிறான். கடைசியில் பொறுமையிழந்து வேறுவழியில்லாம் நேரடியாகவே கடன் கேட்கிறார். சூழ நண்பர்கள் இருக்கும்போதே அந்த மாணவன் பஷீரிடம் அருவருப்பான குரலில் சத்தமாக ’இல்லை’ என்று பதிலளிக்கிறான்.
உணவுக்கடை நடத்தும் ஹமீது அன்று பஷீரை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். கடைக்கு சென்றபோது அவர் அங்கே இல்லை.“என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம்..” ஹமீதின் வீட்டிற்கு செல்கிறார். தாழ்போட்டிருந்த தகரக்கதவை பலதடவை தட்டிய பிறகு அவர் மனைவி வெளியே வந்து “ அவர் மாலைதான் வருவார். வந்தவுடன் சொல்கிறேன். நீங்கள் யார்?” என்று கேட்டதற்கு பஷீர் “நானா… ஓ……. நான் யார்? ஒன்றும் சொல்லவேண்டியதில்லை” என்று கிளம்பிவிடுகிறார்.
எல்லா விதமான மனிதர்களின் எல்லாவிதமான பசிகளையும் இல்லாமலாக்க விடாப்பிடியாக போராடிக்கொண்டிருந்த புரட்சியும் பஷீரின் தனிப்பட்ட பசியை கண்டுகொண்டதாக தெரியவில்லை. அன்று அவரிடம் கருணையாக நடந்துகொண்ட ஒரே மனிதன் ஹோட்டல் தொழிலாளியான ஏழ்மையான சிறுவன்தான். அவன் பஷீருக்கு இரண்டு அணா கொடுக்கிறான். அதில் ஒரு அணாவை புரட்சி கேட்டு வாங்கிக்கொள்கிறது. மீதியிருக்கும் ஒரு அணாவில் கிடைத்த உணவில் பாதியை அது வாங்கிக்கொண்டு அவரின் பசியை இன்னும் கடுமையானதாக ஆக்குகிறது. புரட்சி யாருக்காக ஆபத்தான காரியங்களை செய்ததோ, அவர்களுக்கு புரட்சி என்றாலே பரிகாசம்தான். அதையும் அவர் அனுபவிக்கிறார். முன்பு பத்திரிக்கையாளரும் இப்போது வியாபாரியுமான மி.பி பஷீரை பார்த்தவுடனேயே ”புரட்சியெல்லாம் இப்போது என்ன ஆனது?” என்று பரிகாசமாக கேட்கிறான். பரிகாசமும் அவமதிப்பும் புரட்சியாளனுக்கான ஊதியம், புரட்சியாளுக்கு பின்னாலோ முன்னோலோ எப்போதும் ஒரு சி.ஐ.டி உண்டு. பஷீரை எந்த நொடியிலும் சித்ரவதை செய்யலாம், சிறையில் அடைக்கலாம். அந்த அதிகாரத்தையும் பயன்படுத்த போலீஸ்காரர்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். அவ்வப்போது பார்த்து அவரை தளைத்திருக்கும் சங்கிலியின் ஆற்றலை அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். புரட்சி பொதுவான பசி அல்லாமல், தனிநபர்களின் பசியை, உணவை தவிர்த்த மற்ற பசிகளை கவனிப்பதில்லை. மற்றவர்களிடம் பகிர சாத்தியமான பசிகள்தான் புரட்சியாளர்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. பஷீரைப்பொருத்தவரை எந்தப் பசியும் ஒன்றைவிட மற்றது எளிமையானது அல்ல. அன்றைய தினம் ஒரு பெண் மீதான தீவிரமான பசியை எவ்வளவு கஷ்டப்பட்டு பஷீர் கட்டுப்படுத்திக்கொண்டார்?
அன்று அவர் பார்த்த ஒரு சம்பவம் புரட்சியைத்தவிர மனித மீட்பிற்கு வேறு என்ன வழி இருக்கமுடியும்? என்ற யோசிக்க வைக்கிறது. அன்று மாலை மிதியடிகள் விற்கும் ஏழ்மையான இரண்டு சிறுவர்கள் சுத்தமாக ஒரு பைசாகூட இல்லாத பஷீரிடம் வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உதவிசெய்யமுடியாததில் அவரை வருத்தப்படச்செய்கிறார்கள். அவர்கள் இருவரும் செல்வந்தர்களின் வீட்டு பிள்ளைகள் படிக்கும் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார்கள். யாரும் மிதியடிகளை வாங்கவில்லை. பசி, யாருமே வாங்கவில்லை என்ற ஏமாற்றவுணர்வு. மிகப்பரிதாபமான நிலையை அடைந்தவுடன் வேறு வழியில்லாமல் மிதியடியின் விலையை குறைக்கிறார்கள். ஹாஸ்டலுக்குள் நுழைந்தவுடன் எதிர்பட்ட இரண்டு மாணவர்களிடம் பேசி ‘ உங்களுக்கு வேண்டுமென்றால் இரண்டரை அணா’ என்கிறார்கள். ஒரு மாணவன் பேசிப்பேசி விலையை இரண்டேகால் அணாவாக குறைத்து மிதியடியை வாங்கிக்கொள்கிறான். பணமாக பத்து ரூபாயை நீட்டுகிறான். அந்த சிறுவர்களுக்கு அன்று நடந்த ஒரே வியாபாரம் அதுதான், மீதி சில்லறை கொடுக்க அவர்கள் கையில் காசு இல்லை. அது கொடுத்த ஆளுக்கும் தெரியும். சில்லறை இல்லை என்று சொல்கிறார்கள். கடைசியாக களைத்துப்போன முகம் கொண்ட அந்த சிறுவர்களிடம் ’இதுதான் இருக்கிறது’ என்று இரண்டு நோட்டுகளை தருகிறான். மொத்தம் இரண்டு அணா. வேறுவழியில்லாமல் அதை வாங்கி அந்த சிறுவர்கள் கிளம்பிப்போய்விடுகிறார்கள். அந்த மாணவன் இன்னொருவனிடம் ’ நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன். அதில் ஒரு அணா செல்லாது.’ இது பூர்ஷுவா மனநிலையின் விஸ்வரூபம். அடிப்படையான, ஆழமான மாற்றம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்காமல் இம்மாதிரியான கீழ்மைகளுக்கு தீர்வு உருவாகாது. பசியையே அறியாதவன் பசியை புரிந்துகொள்ளமுடியுமா? பல்வேறு வடிவங்கள் கொண்ட பசியில் உணவுப்பசிதான் தாளமுடியாதது. கேரளத்தின் வஞ்சிப்பாட்டு எழுதிய முன்னோடி, திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் அவைப்புலவர் கவிஞர் ராமபுரத்து வாரியார். அவர் எழுதிய ‘குசேல விருத்தம்’ கேரள கலாச்சாரத்தில் ஆழமான செல்வாக்கை செலுத்திய படைப்பு. அதில் ” ஏழ்மையைவிட பெரிய ஆர்த்தி வேறொன்றும் இல்லை” என்று எழுதுகிறார். மலையாளத்தில் ஆர்த்தி என்ற சொல்லுக்கு விழைவு, பெரிய துயரம் என்ற இரு அர்த்தங்கள் உண்டு. தீர்க்கவேமுடியாத விழைவு கொண்ட வாழ்க்கைச்சந்தர்ப்பங்களில் ’பெரிய துயரம்’ தன் கடுமையான முகத்தை வெட்கமே இல்லாமல் காட்டக்கூடியது.
புரட்சியாளனைப்போலவே எழுத்தாளனுக்கு கிடைக்கும் பிரதானமான சன்மானம் அவமதிப்பும் பரிகாசமும்தான். அர்ப்பமான ராயல்டி தொகை, எழுத்தாளன் என்ற பரிகாசம். அவனின் செயல்பாடு கண்ணுக்கு தெரியாதது என்பதால் எழுத்தாளன் மற்றவர்களை சுரண்டி வாழக்கூடியவன் என்ற எண்ணம். இந்த கதையில் எழுத்தாளரும் புரட்சியாளருமான பஷீருக்கு பிறந்தநாளில் அவமானம் தாராளமாகவே கிடைக்கிறது. தன்னை வரச்சொன்ன ஹமீது தன்னை மறந்துவிட்டதால் உருவான சுய இழிவு, கடன் கேட்டபோது கதை எழுதுகிறாயா என்று மாணவன் கேட்ட கேள்வியில் உள்ள பரிகாசம், அன்றைய தினத்தின் ஒவ்வொரு சின்ன சம்பவத்தாலும் அந்த பிறிதொன்றில்லாத பிறந்தநாளில் பஷீர் நீறி எரிகிறார். கடைசியில் எல்லாவற்றிற்கும் மகுடம் போல அந்த தீவிரமான விஷயமும் நிகழ்கிறது. பசி தாளமுடியாமல் அவர் அடுத்த அறையில் உள்ள மாத்யூவின் உணவை எடுத்து சாப்பிடுகிறார். சாப்பிடும்போதே அவர் வெட்கத்தால் கூசி நடுங்குகிறார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொது ’அந்த உணவை உங்களுக்கு தருவதற்காகத்தான் வைத்திருந்தேன்’ என்கிறான் மாத்யு. இந்த anti climax சுட்டுப்பழுத்த உலோகத்தில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றியது போல ஆகிவிட்டது. அவர் ஆவியாகிவிட்டார். எழுத்தாளனும் புரட்சியாளனுமான பஷீரின் பலவகையான முரண்பாடுகள் நிறைந்த அந்த பிறந்தநாள் நூறு முறை மீண்டும் நிகழவேண்டும் என கதையின் தீவிரத்தில், அதன் முழுமையில் வாசிக்கும் நாம் நம்மை அறியாமலேயே சொல்லிவிடுவோம். அந்த பிறந்தநாளுக்கு பல பல பதிப்புகள் வரும், இனியும். பஷீர் மீது விதி செலுத்திய கஷ்டங்கள் எல்லாம் வாழ்த்துகளாக ஆகிவிட்டது.
பஷீரின் சிறுகதைகளில் பிரதானமானது ’ஜென்ம தினம்’ என்ற இந்த சிறுகதை. சமூகத்தின் முழுமையாக தன்னை கரைத்துக்கொள்ள முடியாத, தனியாளுமையை கைவிடமுடியாத சிதறுண்ட மனதின் உண்மைநிலையை சித்தரித்ததால் இந்த சிறுகதை அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட படைப்பாக ஆகியிருக்கலாம். தன் தனியாளுமையை துறந்து சமூகத்தின் பகுதியாக ஆகும்போது தான் இழப்பவற்றில் தன்னுடைய உண்மைத்தன்மையும் இருக்கிறது என்று கண்டுகொண்டதால் கம்யூனிச இயக்கங்களிலிருந்து பஷீர் வெளியேறினார். தீர்வு உள்ளவற்றை மட்டும் எதிர்கொண்டால் போதாது, தீர்வே இல்லாததையும் எழுத்தாளன் எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதலும் அவரை கம்யூனிசத்திலிருந்து வெளியேர வைத்திருக்கலாம்.
***
ஜன்ம தினம் சிறுகதையை வாசிக்க : ஜன்ம தினம்
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.
அற்புதம், நன்றி அழகிய மணவாளன்