இந்த கட்டுரை வைக்கம் முகம்மது பஷீரின் ’ஸஸிநாஸ்’ என்ற சிறுகதை மீதான கல்பற்றா நாராயணனின் வாசிப்பனுபவம். ’ஸஸிநாஸ்’ நம் பொதுப்புத்தியில் உள்ள ஒழுக்கநெறிகளை, பாலியல்விதிகளை கேள்விகேட்கும் கதை. தனிமனித உறவுகளின் உட்சிக்கல்களையும் காதலையும் குறிப்புணர்த்தும் கதை. அதிதீவிரமான காதலும், குற்றவுணர்வும், ரகசியங்களும் கலந்த வாழ்க்கைவிளக்கக்கதை இது…எழுதினால் கை பொசுங்கிவிடும் கதையை சொல்லிவிட்டார் என்பதில் அல்ல, அதை அபாரமான அறிதலுடன், கருணையுடன் சொல்கிறார் என்பதில்தான் பஷீரின் மேன்மை இருக்கிறது என்கிறார் கல்பற்றா நாராயணன். இந்த கட்டுரைக்கு இடையிடையே வரும் ’ஸஸிநாஸ்’ சிறுகதையின் வரிகள் மேற்கோள் குறிக்குள் தடிமனான எழுத்துகளில் அளிக்கப்பட்டிருக்கிறது.
– அழகிய மணவாளன்
அதீதவிழைவு அணிந்திருக்கும் புனிதஆடையில் ‘வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருக்கிறதோ? நம் ஒழுக்கநெறி ’பாவத்தின் கனி’ என விலக்கியவற்றை சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய தண்டனை எவ்வளவுதூரம் கடுமையானது என்பதை வைக்கம் முகமது பஷீரின் ’ஸஸிநாஸ்’ சிறுகதை காட்டுகிறது.
ஒரே குருதி உறவைச்சேர்ந்த இணைகளில் உருவாகும் குழந்தைகளுக்கு உடல்சார்ந்தோ, மனநலம் சார்ந்தோ குறைபாடுகள் இருக்கலாம் என நவீன மருத்துவமும் சந்தேகப்படுகிறது. இது ஒழுக்கநெறி மீறலுக்கான தண்டனைக்கு புறவயமான அடிப்படையையும் அளிக்கிறது. பஷீர் எழுதிய ’ஸஸிநாஸ்’ என்ற சாகசப்பூர்வமான சிறுகதை நம் ஒழுக்கநெறி வகுத்த எல்லையை மீறத்துடிக்கும் சுட்டெறிக்கும்படியான அதீதவிழைவையும் அதனால் உருவாகும் என்றென்றைக்குமான அலைக்கழிப்பையும் விவரிக்கிறது. தாகம் தீர்வதற்காக இந்த பானத்தை குடித்தால் தாகம் தீர்வதில்லை, மாறாக தணியாத தாகமாக ஆகிவிடுகிறது. பஷீர் இந்த சிறுகதை வழியாக நிரந்தரமான அலைக்கழிப்பு என்ற பானத்தை நமக்கு பருகத்தருகிறார். ’ சாய்ந்துகொள்ள தலைக்கு வைத்த கை பாம்பாக கொத்துவது போல’ என்ற கே.ஜி.சங்கரப்பிள்ளையின் உவமையை இதற்கு சமானமானதாக சொல்லலாம். ஆனாலும் நம்மால் ஒப்பிட்டுவிடவே முடியாத, அறுதியாக விளக்கிவிடவே முடியாத என்னவெல்லாமோ ஸஸிநாஸ் என்ற சிறுகதையில் இருக்கிறது.
வழக்குகள் வழியாக நாம் கேள்விப்படும் குற்றச்செயல்கள் புதியவை அல்ல. தெய்வங்களுக்கிடையேகூட அது நிகழ்ந்ததாக புராணங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சுய தண்டனையாலோ, பிறர் அளித்த தண்டனையாலோ அதில் அகப்பட்ட இரைகள் சமூகத்தை எதிர்கொள்வதில்லை. மேலும் ஒழுக்கநெறிகளை மீறுபவர்கள் சமூகத்திற்குமுன் வெளிப்படுவதை சமூகமும் விரும்புவதில்லை, அவர்களை நினைவுகூறக்கூட சமூகம் தயங்குகிறது. அதனால் ஒழுக்கநெறி மீறல் என்பது ஒரேசமயம் மிகமிக மோசமான குற்றச்செயலாகவும், அதனாலேயே மிகமிக ஈர்ப்புடையதாகவும் இருக்கிறது. சமூகம் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கக்கூடியது. அவற்றை சொல்லக்கடமைப்பட்டது இலக்கியம். ஆனால் அதுவும் கைசுட்டுவிடும் இந்த விஷயத்தை மிகமிக அபூர்வமாகத்தான் பேசியிருக்கிறது. இவை விதிவிலக்குகள், இவற்றை பேசுவது வழியாக இது சமூகத்தில் விவாதத்திற்குரிய விஷயமாக ஆகிவிடுமே என்ற பயம் இது இலக்கியத்தில் அவ்வளவாக பேசப்படாததற்கு காரணமாக இருக்கலாம். கலைஞர்கள் இதை சித்தரிக்க பயப்படுகிறார்கள். இன்னொருபக்கம் இந்த பயத்தை கடக்கமுடியவில்லையே என்ற அலைக்கழிப்பும் அவர்களுக்கு உண்டு. கலைஞனின் பயத்தை, அதனால் உருவாகும் அலைக்கழிப்பை பஷீர் ’சப்தங்கள்’ நாவல் வழியாக கடந்துவிடுகிறார் என்பதை வாசகன் வெளிப்படையாகவே உணர்ந்துகொள்ளமுடியும். அதை இன்னும்கூட தீவிரமாக ஸஸிநாஸ் என்ற சிறுகதை வழியாக பஷீர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். பணத்தை திருப்பித்தர இயலாதவனுக்கு கடன் அளிக்கிறார்! எந்த வகையிலும் தீர்க்கப்படவே முடியாத விஷயங்களுக்கு அருகேதான் எழுத்தாளன் இருக்க வேண்டும்.
பஷீரின் இந்த ‘ஸஸிநாஸ்’ சிறுகதையின் மையகதாப்பாத்திரம் இருபத்தி இரண்டு வயது இளைஞன். வறுமை. வேலைதேடுகிறான். (திருடிப் பிழைப்பவர்களுக்கு பசி எவ்வளவு ஆதாரமான விசையோ அவ்வளவுதூரம் பஷீரின் கதாப்பாத்திரங்களுக்கு காதல்பசி அடிப்படையானது). அவன் குடியிருக்கும் சிறிய வாடகைவீட்டிற்கு அருகே ஆள் அரவமற்ற மாளிகை ஒன்று இருக்கிறது. திடீரென ஒருநாள் உலக அழகி என்று சொல்லத்தக்க பெண் ஒருத்தி அந்த மாளிகையில் குடியேறுகிறாள். (உலக அழகி என்று சொல்வது புறவயமான உண்மை இல்லை. அழகு என்பது ஒரு மாயை. ஆனால் தன் ஈர்ப்புவிசையால் உலகத்தையே ஸ்தம்பிக்க வைப்பவளை வேறு எப்படி அழைப்பது?) அடுத்த நாள் காலை மாளிகையின் கதவைத்திறந்தபடி, இனி ஒருபோதும் மூடிவிடவே முடியாத கதவையும் திறந்தபடி அவள் வெளியே வருகிறாள். அவனைப்பார்க்கிறாள். “ ஒரு கணம். அவள் பார்வை என்னில் படிந்தது. அவள் கண்கள் வழியாக இரண்டு நுட்பமான ஒளிக்கற்றைகள் என் நெஞ்சிற்குள் பாய்ந்ததாக உணர்ந்தேன்.” அந்த கணத்திலிருந்து அவனில் என்னவோ பிறழ்ந்துவிட்டது. தாகமில்லை, பசியில்லை, முழுவெம்மை. அவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான். அதற்காக எழுதத்தொடங்கியிருந்த விண்ணப்பங்களை கசக்கி எரிந்தான். அதுவரை அவனில் எஞ்சிய அனைத்தையும் துடைத்து வெளியே எறிந்துவிட்டு இந்த பொற்சிலையை தன் கருவறையில் நிரந்தரமாக பிரதிஷ்டை செய்துவிட்டான்.
ஒருநாள் அவனைப் பார்த்து அவள் சின்ன மிரட்சியுடன் புன்னகைக்கிறாள். அந்த புன்னகை அவனை என்ன செய்தது என்பதை பஷீர் இப்படி எழுதுகிறார்: “ என் நெஞ்சின் தளர்ச்சி முழுக்க இல்லாமலாகிவிட்டது. அப்படியே வெடித்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஜன்னலில் சுவரில் முத்தமிடவேண்டும் ” அந்த இளைஞனின் விழைவாக, நோயாக, ஆனந்தமாக அவள் ஆகிவிட்டிருந்தாள். அவள் அவன் பக்கத்தில் வந்தால் அவளை நேரடியாக பார்க்கக்கூட அவனால் முடியவில்லை, ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அவனால் தாளமுடியவில்லை. ஒருகட்டத்தில் அவள் குடியிருக்கும் மாளிகை உரிமையாளரின் மகன் என்று பொய்சொல்லி அவன் அந்த வீட்டில் நுழைகிறான். அவளின் பெயர் என்ன என்று கேட்கிறான். ’ஏன்?’ என்று அவள் சங்கோஜப்பட்டாலும் ஆழத்திலிருந்து அவள் ’ஸஸிநாஸ்’ என்கிறாள். இந்த அழகிக்கு என்ன பெயர் வைப்பது என பல வருடங்களுக்குமுன் அவள் பெற்றோர் உணர்ந்த பரிதவிப்பை அவன் அப்போது அடைந்தான். ”ஸஸிநாஸ் ஸஸிநாஸ் ஸஸிநாஸ் என அந்த பெயரை மனம் அலுத்துப்போகும்வரை சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அந்த பெயர் என் இதயத்தில் அது மூழ்கி மறைந்துவிட்டது. இனிமையுடன் அது மீண்டும் எழுந்துவந்தது. ஸஸிநாஸ்.
’ஸஸிநாஸ்’ என்றால் நிலவொளி என்று அர்த்தமா?
” இல்லை. அது ஒரு பாரசீகச்சொல். அதற்கு புது ரோஜாமலர் என்று பொருள் “
”நுகரப்படாத மலரா?” என்று கேட்டேன்.
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அவள் ’உம்’ என்றாள்.
இனி அவனுக்கு ஸஸிநாஸ் என்பது ஒரு பெயர் மட்டுமில்லை. அது அவளின் வரையறையாக ஆகிவிட்டது. இனிமேல் அவன் காணப்போகும் இதழ்விரித்த புதுமலர்கள் அனைத்திருக்குமே ஸஸிநாஸ் என்றுதான் பெயர். ஆரம்பத்தில் மிகமிக அழகானதாகவும், பின்பு வேதனைப்படவைக்கும் ஒரு பெயர். இருவரும் தினமும் சந்தித்துக்கொண்டனர். ஒருநாள் காலை அவன் ஒரு பூங்காவிற்கு அருகே நடந்துசென்றுகொண்டிருந்த போது அந்த பூங்காவிற்குள் கொத்தாக பூக்கத்தொடங்கியிருந்த ரோஜாப்பூக்களை பார்க்கிறான். ஸஸிநாஸ்! அங்கு நுழைய யாருக்குமே அனுமதியில்லை. வேலியை தாண்டி குதித்து ரோஜாப்பூக்களை பறித்து ஒரு இலையில் பொதிந்து அதை ஸஸிநாஸிற்கு அளிக்கிறான் ”அவள் அதை வாங்கி முகத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். என் நெஞ்சு துடித்தது. முகம் குனிந்து பூக்களை நோக்கியபடி அவள் ஏங்கி அழுவதாக தோன்றியது. அவள் முகத்தை உயர்த்தினாள். கண்கள் நனைந்திருந்தன. புன்னகையுடன் அவள் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இலைப்பொதியை விரித்து அதிலிருந்து ஒரு பூவை என்னிடம் நீட்டினாள். என் இதயத்தை கைகளில் உணர்ந்தேன். நான் அதை வாங்கி இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை என் முத்தங்களால் நீராட்டினேன்.” பூக்களை பறிக்கும்போது அவன் கையில் ரோஜாமுள் பட்டு காயமாகியிருந்தது. அவள் உள்ளே போய் ஏதோ ஒரு மருந்தை எடுத்துவந்து அவன் கையில் தடவினாள். ”ஏன் என் உடல் முழுக்க காயமாகவில்லை?” என்று அவன் வருத்தத்துடன் எண்ணிக்கொள்வதாக பஷீர் எழுதுகிறார். அவன் அவளின் காதலை யாசித்து நிற்கிறான். அவனுக்குள் இருந்த மற்ற அனைத்தும் உதிர்ந்து முழுக்கமுழுக்க காதல் மட்டுமே இருந்தது. ஆரம்பத்திலேயே அவள் அதை புரிந்துகொண்டிருந்தாள் என்றாலும் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள அவள் அஞ்சினாள். அவளில் வெளிப்படும் கருணையில், அவன் மீதான அவளுக்கு இருக்கும் அக்கறையில் அவன் திருப்தி அடைந்துகொள்ளலாம். அவளின் நடத்தைகளை வைத்து தன்னை ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம். காத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையை அவன் கடந்துவிட்டான். அவன் காதலால் தகித்தபடியே இருக்கிறான். நிலவு வெளிச்சம் நிறைந்திருந்த ஒரு இரவில் அவன் அவளிடம் அழுதுகொண்டே “நான் நீறி எரிந்துகொண்டிருக்கிறேன்…………….தயவுசெய்து…. ஸஸிநாஸ் தயவுசெய்து என்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிடு……” என்றான். அவள் அவன் கண்ணீரை துடைத்துவிட்டாள். “நாளை சொல்கிறேன்” என்றாள்.
நாளை என்றால் அது அடுத்த நாளாகவும் இருக்கலாம், எவ்வளவோ நாட்களுக்கு பிறகாகவும் இருக்கலாம். அவனைப்பொறுத்தவரை அந்த நாளை என்பது அந்த இரண்டுமேதான். அடுத்த நாள் காலை ‘அவள் சொன்ன ’நாளை’ என்பது இன்றல்லவா’ என்று பதறியபடியே வேகமாக வெளியே வந்து பார்க்கிறான். அவள் குடியிருக்கும் மாளிகைக்கு முன் சென்றபோது கதவு பூட்டியிருந்தது. விசாரித்தபோது அவள் அதிகாலையே அந்த வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாள் என்று தெரியவந்தது.
”வெளிறிய பகல்களாக, பயங்கரத்தனிமை நிறைந்த இரவுகளாக” எந்த சாரமும் இல்லாமல் அவன் வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் அவனுக்கு அவள் எழுதிய கடிதம் வருகிறது.. அந்த கடிதத்தில் ஸஸிநாஸ் அவனை காதலிக்கிறாளா என்ற கேள்விக்கான பதில் மட்டும் இல்லை. அவளைப்பார்த்த கணத்திலேயே நரக வேதனையை ஏற்படுத்தும் அளவுக்கு அவளை அவன் அவ்வளவு தீவிரமான காதலிக்க ஆரம்பித்தது ஏன்? அவள் மீதான அவனுக்கு இருந்த அதீதமான ஈர்ப்பு புரிந்துகொள்ளமுடியாதபடி அவ்வளவு ரகசியமானதாக இருந்தது ஏன்? அவளின் சோகமான சிரிப்பு ஏன் அவ்வளவு அழகானதாக இருந்தது? அவனை அலைக்கழித்த கேள்விகளுக்கான விடை அவள் எழுதிய கடிதத்தில் இருந்தது.
“நண்பரே, ‘நாளை’ எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அப்படி சொல்லி பல இரவுபகல்கள் கடந்துவிட்டன. ஆனால் நாம் சந்தித்துக்கொண்ட அந்த நிலவொளி நிறைந்த இரவில்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான ஒரே இரவாக அது கலையாமல் என்னில் எஞ்சியிருக்கிறது. நீங்கள் என்னிடம் “ ஸஸிநாஸ், என்னை காதலிக்கிறாயா?” என்று கேட்டீர்கள். ஆம், ஆம் நான் காதலிக்கிறேன் என்ற முழு நிறைவுடன் என் நெஞ்சு அதிர்ந்தது. ஆனால், ஒரு சம்பவம், ஒரு கெடுநினைவு நம் இருவருக்கும் இடையே மலைபோல உயர்ந்து நிற்கிறது. உங்களை ஏமாற்றும் ஆற்றல் இல்லாததால் நான் போய்வருகிறேன். என்னை மன்னியுங்கள்…”
அடுத்து அவள் தன் வாழ்க்கைக்கதையை சொல்கிறாள். செல்வவளம் கொண்ட குடும்பத்தின் செல்லப்பெண். பள்ளி இறுதியாண்டு படிக்கிறாள். அவளின் மூத்த சகோதரன் வெளியூரில் பி.ஏ படிக்கிறான். கோடை விடுமுறை என்பதால் அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான். ஒரு மாலைநேரம் அவள் தன் தனிஅறையில் புத்தகத்தை விரித்துவைத்துபடி பகற்கனவு கண்டுகொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்து அவன் அவளை கட்டிப்பிடித்தான், பின்கழுத்தில் முத்தமிட்டான். அவள் அதிர்ந்துவிட்டாள். கையை விடுவித்துக்கொண்டு ஓடிச்சென்று தப்பித்தாள். மீண்டும் ஒருநாள் அதேபோல நிகழ்ந்தது. அவள் தட்டிவிட்டாள். இந்தமுறை அவன் கையை விடுவிக்கமுடியவில்லை. அதே நாள் இரவில் அவள் அறைக்கு அவன் வந்தான். மீண்டும் அது நிகழ்ந்தது. அவள் கருவுற்றாள். அம்மாவிற்கும் அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. அவள் கருவுற்றதற்கு காரணம் யார் என்று கேட்டு அவர்கள் அவளை கடுமையாக சித்ரவதை செய்தனர். அவள் கையில் நெருப்பு கங்குகளால் சூடு வைத்தனர். வலி பொறுக்கமுடியாமல் அவள் உண்மையை சொல்லிவிட்டாள். அவனுக்கு தந்தியடித்தனர். அடுத்தநாள் அவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். மூன்று நாட்களுக்கு பிறகு அம்மாவும் விஷம் குடித்து இறந்துவிட்டாள். தற்கொலை செய்துகொள்ள தைரியம் இல்லாததால் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி பல இடங்களில் அவள் வாழ்ந்துவந்தாள். அவள் இங்கு வந்து இந்த இளைஞனை காண்கிறாள். இந்த கடிதத்தை அவனுக்கு எழுதியவுடன் அவள் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.
இந்த சிறுகதையின் சிறம்பம்சம் என்ன? எழுதினால் கை பொசுங்கிவிடும் முறைமீறிய உறவின் (incest) கதையை சொன்னது பஷீரின் சிறம்பம்சம் என்று சொல்லலாமா? இல்லை. இந்த கதையை அபாரமான புரிதலுடன், அளவில்லாத கருணையுடன் சொல்லமுடிந்ததில்தான் பஷீரின் மேன்மை இருக்கிறது. மனிதர்கள் பிறரை புறவயமாகவும், தங்களை அகவயமாகவும் பார்க்கக்கூடியவர்கள் என்கிறார் கிர்கேகார்ட்(The majority of men are subjective towards themselves and objective towards all others, terribly objective sometimes- but the real task is in fact to be objective towards oneself and subjective towards all others- Soren Kierkeegard). இந்த சிறுகதையில் அவளை காதலிக்கும் அந்த இளைஞன் வழியாக ஸஸிநாஸை அகவயமாக பார்ப்பதற்காக முடியுமா என பஷீர் முயற்சிக்கிறார். அவளைப் பார்த்த கணத்தில், அவள் இன்றி தன் அகத்தில் எதுவுமே மிச்சமில்லாமல் ஆன அந்த காதலன் வழியாக அவள் தன் குற்றங்களுக்கும் குறைகளுக்கும் அப்பால் உள்ளவளாக ஆகிவிடுகிறாள். அவளை பிழையானவளாக பார்க்க அவனால் இயலவில்லை. அவள் மீதான ஈர்ப்பால் பாதிக்கப்பட்ட அவளின் மூத்த சகோதரனை தன்னைப்போலவே அவனால் புரிந்துகொள்ளமுடியும். பாலியல்நெறிகளால் மனிதனை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் அந்த இளைஞனால் மனிதனை புரிந்துகொள்ளமுடியும்.
ஸஸிநாஸ் சிறுகதை அளவில் மொத்தமாக 20 பக்கங்கள் வரும். அதில் அவளின் துயரமான தனிவாழ்க்கை வெறும் 4 பக்கங்கள்தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. மீதி 16 பக்கங்கள் முழுக்க அவளைப்பார்த்தவுடன் வேறு எதையும் பார்க்கமுடியாமல் ஆகிவிட்ட அந்த இளைஞனின் அலைக்கழிப்பு, அவனது காதல் இதுதான். இந்த கதையின் மிக முக்கியமான பகுதியான ஸஸிநாஸின் தனிவாழ்க்கையைவிட அந்த இளைஞனின் காதல் இவ்வளவு அதிகமாக விவரிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? அவள் மீது அவ்வளவு ஆழமான பிரியம்கொண்ட, அவள் மீது அவ்வளவு கருணைகொண்ட அந்த இளைஞன் வழியாக அல்லாமல் வேறு எப்படியும் ஸஸிநாஸின் கதையை சொல்லிவிடக்கூடாது என்று பஷீர் எண்ணியிருக்கலாம். ஒரு ஈக்கூட்டத்தில் ஒரே ஒரு ஈ மட்டும் எரியும் நெருப்பில் ஆவேசமாக குதிக்கிறது. அந்த ஒரு ஈயைத்தவிர அந்த ஈக்கூட்டத்தில் உள்ள வேறு எந்த ஈயாலும் நெருப்பு மீதான தவிர்க்கமுடியாத, தற்கொலைத்தனமான ஈர்ப்பை புரிந்துகொள்ள முடியாது. (இந்த வீழ்ச்சி எவ்வளவு இனிமையானது! என்ற ஒளப்பமண்ண கவிதையில் உள்ள வரி நெருப்பில் விழும் ‘ஈ’க்கு சரியாக பொருந்தக்கூடியது). அவளை காதலிக்கும் இந்த இளைஞனைப்போன்ற மனம் கொண்டவர்களால் சில சந்தர்ப்பங்களில் ‘எதுவும் எதற்கும் தடையாக ஆக முடியாது’ என்பதை புரிந்துகொள்ளமுடியும். பின்னர் நிகழக்கூடியதையெல்லாம் முன்பே அறிந்திருந்தாலும்கூட அப்படி நிகழாமல் இருந்திருக்காது என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.
அந்த இளைஞன் ஸஸிநாஸ் மீதான வழிபாட்டுணர்வால், அவள் பெயரின் அர்த்ததால் கவரப்பட்டு சுவரேறி குதித்து, யாரும் நுழைய அனுமதியில்லாத பூங்காவிலிருந்து கைகள் காயமாகும்படி பறித்த ரோஜாப்பூக்களை அவளுக்கு அளிக்கிறான். அதை அவள் நெஞ்சோடு சேர்த்து விம்மி அழத்தொடங்கினாள். நுகரப்படாத மலர் என்ற தன் பெயரின் அர்த்தத்தை அவள் எப்போதோ இழந்துவிட்டதை நினைத்து அழுதாள். தன்னை காதலிக்கும் இந்த இளைஞனை ஏமாற்றவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது என்பதற்காக அழுதாள். இந்த இளைஞனின் மூச்சடைக்கவைக்கும், கண்மூடித்தனமான காதலை எண்ணிப்பார்க்கிறாள். இவ்வளவு தீவிரமான காதல்தானே அவள் மூத்த சகோதரனை, ஒருவேளை தன்னையும் அவ்வாறு செய்யவைத்தது. அவள் தன் செயல்பாடுகளை நினைத்து இன்னும் நீறுபோல எரிந்துகொண்டிருக்கிறாள். அந்த இளைஞனின், அந்த காதலனின் கண்ணீரை அன்புடன் துடைக்கும்போது அவனுக்கும் அவளுக்கும் இடையே மலைபோல உயர்ந்துநிற்கும் பாவச்செயலை அவனிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவள் முடிவெடுக்கிறாள். ஆனால், எப்படி? பின் அவன் அவனாகவே இருப்பானா? தான் தானாகவே இருப்போமா? அவள் அந்த ரகசியத்தை, அவள் வாழ்க்கையையே, அடுத்த தருணத்திற்கு ஒத்திவைக்கிறாள். நாளை? நாளை சொல்கிறேன்.
’ஸஸிநாஸ்’ சிறுகதை ஒருமுறைகூட நிகழ சாத்தியமில்லாத விஷயத்தை பேசுகிறது என்று சொல்லமுடியாது. அப்படியிருந்திருந்தால் இந்த சிறுகதை அவ்வளவு அச்சுறுத்தக்கூடியதாக இருந்திருக்காது (நிகழவே சாத்தியமில்லாத விஷயம் அச்சுறுத்துவதில்லை). நினைத்துப்பார்க்கக்கூட தைரியமில்லாத, அந்த நெருப்புப்பாலம் வழியாக எப்போதாவது, ஒரேஒரு தடவையாவது கடந்துசென்றவர்கள் அரிதானவர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. அதைப்பார்த்து பயந்து பின் திரும்பி ஓடியவர்கள் அதிகம்பேர். குற்றம் மீதான ஈர்ப்பு எவ்வளவு அபாயகரமானது! ஆனால் எவ்வளவு உண்மையானது. நம் ஒழுக்கநெறிகள் அசைந்தபடியே உள்ள ஒரு கல்லில் அஸ்திவாரம் அமைத்து ஆலயம் போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த கல் பெயர்ந்துவிட்டால் நம் ஒழுக்கநெறிகள் என்ற அமைப்பு அப்படியே தரைமட்டமாகிவிடும் என இந்த சிறுகதை வழியாக பஷீர் நமக்கு சுட்டிக்காட்டுகிறார். நம் ஒழுக்கநெறிகளின் ஆலயம் ஸஸிநாஸ் போன்ற குற்றமற்றவர்களின் குருதியால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதிக்காலத்தில் பலவகையான மனிதர்கள் கடிதங்களிலும், நேரடியாக சந்தித்தும் தங்கள் வாழ்க்கையின் துயரக்கதையை அவரிடம் சொன்னார்கள். மற்ற யாருடனும் பகிர்ந்துகொள்ளமுடியாத அவமானத்தின் கதைகள் அவை. ’ எங்களை சிருஷ்டித்தவனிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்’ என தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரங்கள் அவரைத்தேடி வந்தவர்களுக்கு ஒருவகையான நம்பிக்கையை அளித்திருக்கின்றன. பஷீரின் இந்த சிறுகதையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரம்போல காதலால் அழிந்தேவிட்ட மையக்கதாப்பாத்திரத்திடம் பஷீர் அளித்த பெரிய பொறுப்பும் அதுதான். அவன் தன்னை எந்த வகையிலும் மதிப்பிடக்கூடியவன் இல்லை, எந்த நிபந்தனையும் இல்லாமல் தன்னை விரும்புகிறான். தன் வாழ்க்கை நாடகம் முடியப்போவதற்கு முன் தனக்கு நிகழ்ந்ததை அவனிடம் மட்டும்தான் சொல்லமுடியும் என்று அவளுக்கு தோன்றியிருக்கிறது. அந்த அருகதையை அவனுக்கு அளிப்பதற்காகத்தான் அவனுக்கு கதையில் கூடுதலான இடம்கொடுத்திருக்கிறார் பஷீர். அவனுக்கு அதிகப்படியான காதலையும் அளித்திருக்கிறார். மற்ற யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத விஷயங்களை எழுத்தாளன் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று பஷீர் நினைக்கிறார். அவன் தெய்வத்தைப்போல, ஏன் அதற்கும் மேலான தாங்குதிறன் கொண்டவனாக இருக்கவேண்டும். அதிகாலையில் தூக்குமேடை நோக்கி தனிமையில் கிளம்பும் கைதிகளுக்காக கறுப்புடீ போட்டுக்கொடுக்கும், அவர்கள் தூக்குமேடை ஏறும்போது தூங்காமல் விழித்திருந்து துணையிருக்கும் கதாப்பாத்திரம் ஒன்று பஷீரின் மதில்கள் நாவலில் உண்டு. தீர்வு உள்ள பிரச்சனைகளுக்கு அல்ல, தீர்வே இல்லாத பிரச்சனைகளுக்குதான் எழுத்தாளன் உடன் இருக்கவேண்டும். அப்போதுதான் அவன் தன் அசலான கடமையை செய்கிறான். எழுத்தாளன் அரசியல் என்ற திட்டவட்டமான ஆட்டத்தை பதிவுசெய்தால் போதாது. அதையும் கடந்த, தீர்வுகளே இல்லாத பல விஷயங்கள் கொண்ட வாழ்க்கை என்ற வரையறுத்துவிடமுடியாத ஆடலை அவன் பதிவுசெய்யவேண்டும், கருணையுடன்….
******
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.
சிறப்பான ரசனை. நல்வாழ்த்து.