/

கிரேஸ் இல்லம்: விஷால் ராஜா

ஜான் என்று குடும்பத்தினராலும் ஹெலன் மிஸ் வீட்டுக்காரர் என்று அந்த சுற்று வட்டத்திலும் அழைக்கப்படுகிற திரு.ஜான்சன் தேவராஜ், இன்னும் இரண்டு தினங்களில் காலி செய்ய போகும் “கிரேஸ் இல்லம்” எனும் தங்கள் பழைய வீட்டின் முன் வாசலில் – நாற்காலி, தொலைக்காட்சி மேஜை, துருவேறிய சைக்கிள் என்று அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களின் நடுவே நின்று – “த்சு.த்சு” என குரல் கொடுத்து பவுல் எனும் தவிட்டு நிற வளர்ப்பு நாயை தேடினார். பவுலிடமிருந்து பதில் வரவில்லை. ஜான் சற்று நேரத்திலேயே சோம்பலுற்று தூணில் சாய்ந்துக் கொண்டார். அவருக்கு தலை இன்னமும் பாரம் இறங்கியிருக்கவில்லை. நேற்றைய தினம் வழக்கம் போல அந்திக்கு பிறகு, தோன்றிய தடயமே இல்லாமல் இரவு மின்னி மறைந்திருந்தது. கோப்பையிலிருந்து தவறிவிழுந்து சத்தமே இல்லாமல் ஒழுகிய நீர் மாதிரி.

காலையில் பாதி விழிப்பும்  பாதி உறக்கமுமாய் எடை கனக்கும் தலையோடு , கூடத்தில் கோணலாக விரித்த பாயில் ஜான் புரண்டுக் கொண்டிருந்தபோது, எட்டாம் வகுப்பு ஆசிரியையான அவர் மனைவி ஹெலனும், பிளஸ்-ஒன் படிக்கும் மகள் கிரேஸும் பள்ளிக்கூடத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். தலைமாட்டுக்கு அந்தப் பக்கம் சமையல்கட்டில் ஓர் அடுப்பில் இட்லி அவியும் வாசமும், இன்னொன்றில் எலுமிச்சை சாதத்துக்கு கறிவேப்பிலை போட்டு கடுகு தாளிக்கப்படும் சத்தமும் கலவையாக அவர் சித்தத்தை எட்டின.  ஹெலன் ஸ்டீல் டிபன் பாக்ஸில் சாதத்தை அடைத்து கூடையில் வைப்பதும்,  கிரேஸ் ஏதோ நோட்டு புத்தகத்தை தேடி தனது அறைக்கும் கூடத்துமாய் நடப்பதும்,  குளித்து  வந்து ரிப்பன் எங்கே என்று தேடுவதும், அம்மாவும் மகளும் கிளம்புவதற்கு முன்னால் கழுத்து பகுதியில் பாண்ட்ஸ் பவுடர் அடித்து சோப்பும் பவுடரும் இணைந்த இனிய வாசத்துடனே தன்னிடம் வந்து என்னவோ சொன்னதும், கடைசியாக ‘பிதா சுதன் பரிசுத்த ஆவி’ என்று ஜெபம் செய்து வாசலை சாத்திவிட்டு போனதும் ஒவ்வொன்றாய்  நினைவில் தோன்றி விலகின. ஜானுக்கு இந்த வீட்டில் அல்லது  இந்த வாழ்க்கையிலேயே இருக்கும் ஒரே நிரந்தர வேலை – ஹெலனையும் கிரேஸையும் காலையில் ஸ்கூட்டியில் ஏற்றி பள்ளிக்கூடத்தில் விடுவதும் மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும்தான். அதுவும் சில நேரங்களில் இப்படி தவறிவிடுகிறது.

காலைப் பொழுது பிரகாசமேறி வந்தது. வாசல் செடிகள் மீதும் முருங்கைக் கிளைகள் நடுவிலும் வெயில் படிந்திருந்தது. நீண்ட நாட்களாக இருட்டில் இருந்தததுப் போல் ஜானுடைய கண்கள் வெளிச்சத்துக்கு பழக சிரமப்பட்டன.   ஆனாலும் வாசல் கதவுக்கு வெளியே ஒரு புதிய பகல், மின் கம்பத்தில்உட்கார்ந்திருக்கும் காகத்துடனும் கேஸ் சிலிண்டர் கொண்டு போகும் பையனின் வேகமான நடையோடும் எதிர் வீட்டு மாடியில் துணிக் காயப்போடும் பெண்மணியோடும், பரவி விரிவது அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. தலை பாரத்தை வெளிச்சம் மெல்ல கரைக்கலாகிற்று. தெரு மெல்ல பழக்கமான இடமாக துலங்கி வந்தது. ஜான், தன்னிச்சையாக செல்போனில் ஹெலனை அழைத்தார்.  முதல் தடவை அழைப்பு ஏற்கப்படவில்லை. இரண்டாவது தடவையும் அழைத்தார்.

“கிளாஸ்ல இருக்கும்போது திரும்ப திரும்ப கூப்பிடாதீங்கன்னு எத்தனை வாட்டிப்பா உங்களுக்கு சொல்றது? என்ன விஷயம்?”

“சும்மாதான் கூப்பிட்டேன். காலையில் ஸ்கூலுக்கு போக ஷேர் ஆட்டோ கிடைத்ததா?”

“கிடைச்சுது. சாயுங்காலமாவது நேரத்துக்கு வந்துடுங்க. அப்புறம் காலையில் சொன்னதை மறந்துடாதீங்க. மதியம் பொருளை எல்லாம் ஏத்திக் கொண்டு போய் அந்த வீட்டில் வைக்க வண்டி வரும். எங்கேயும் போயிடாதீங்க. இட்லி வச்சிருந்தேனே. சாப்பிட்டீங்களா?”

“ஆச்சு”. ஹெலன் போனை வைத்தப் பிறகுதான் அவளும் பாப்பாவும் காலையில் சாப்பிட்டார்களா என்பதை  கேட்டுத் தெரிந்திருக்கலாம் என ஓர் எண்ணம் வந்தது. பாப்பாவை   எப்படியும்  சாப்பிட வைத்திருப்பாள். ஹெலன் சாப்பிட்டாளா என்று தெரியவில்லை.  இட்லியை டப்பாவில் எடுத்துப் போயிருந்தால் பள்ளிக்கூடத்தில் அவகாசம் எப்படியோ சொல்ல முடியாது. அந்த தனியார் பள்ளியில் சிறிய கரிசனங்களைக் கூட எதிர்பார்க்கமுடியாது.

ஜான் மீண்டும் பவுலை பெயர் சொல்லி அழைத்தார். வீட்டுக்கு பின்னாலிருந்து குரைப்பு சத்தம் கேட்டது. செருப்பணிந்து, பக்கவாட்டு சந்தில் நுழைந்து காலைச் சுற்றி சிக்கும்  காய்ந்தக் கொடிகளை கவனமாக மிதித்து பின்கட்டுக்கு போனார். கணுக்கால் உயரத்துக்கு மேலே பச்சைப் புற்கள் மண்டிக் கிடந்த காலி இடத்தில், பவுல், தலையை உசுப்பியவாறு பார்க்க முடியாத எதையோ ஆர்வமாய் துரத்திக் கொண்டிருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வெளியேறும் கழிவு நீர் பாய்ந்து ஈரம் சொதசொதத்த பகுதியில் எப்போதோ முறிந்து விழுந்த கொய்யா மரத் துண்டுகள் உலுத்த எலும்புகள் மாதிரி பரவிக் கிடந்தன.   ஜானை பார்த்ததும் பவுல் ஓடி வந்து அவர் கால் பக்கம் நின்று மூக்கைத் தூக்கி தன் பெரிய உடலை எக்கி  குதித்தது. “ராஸ்கல்” என்று தலையை தடவிக் கொடுத்து மண் நிறமாகியிருந்த பழைய கழுத்து பட்டையை பிடித்து தூக்கி நிறுத்தினார். பிறகு, எல்லையில் துருபிடித்து வளைந்த இரும்பு வேலியோடு  ஃபென்சிங் கற்கள் சரிந்து கிடக்கும் அவ்விடத்தை நோட்டம்விட்டார்.

அது மொத்தம் ஆயிரத்தி எண்ணூறு சதுர அடி சொத்து.  எழுநூறு சதுர அடிக்கு வீடு கட்டப்பட்டிருந்தது. முன்பக்கத்து முன்னூறு சதுர அடியில் விரிசல்களும் பள்ளங்களும் கொண்ட முற்றம். மாடிப் படிக்கட்டு. இவை போக மீதி இடத்தில் மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி முதலியவற்றோடு குட்டித் தோட்டம். வீட்டுக்குப் பின்னால் -ஜான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும், கால் கிரவுண்ட் நிலம் – உபயோகமில்லாத புதர்.  அப்பா வாங்கி கொடுத்த சொத்து என்பதால், ஜானுக்கு இந்த சதுர அடி கணக்கெல்லாம், முன்னால் அட்சரமாகத் தெரியாது. நிலத் தரகர் கணபதி முதல் தடவை “மொத்தமாக எத்தனை ஸ்கொயர் பீட் சார்?” என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திணறினார். பிறகு ஆறு மாதம் அதே தரகரோடு பல்வேறு இடங்களில் அலைந்து, அந்த புறநகரில் பரபரப்பாக திரியும் மந்திரியின் பி.ஏ முதல்  கட்டிடத் தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் அடித்து பணக்காரனான சென்ட்ரிங்காரர் வரை பல பார்ட்டிகளை சந்தித்து வீடு எப்போது கட்டப்பட்டது, கட்டிடத்தின் மூல வரைபடம் இருக்கிறதா, கூட்டு பட்டாவை தனிப் பட்டாவாக மாற்ற முடியுமா என்று பலக் கேள்விகளுக்கு பதில் சொன்னதில் எண்கள் யாவும் மனப்பாடமாகிவிட்டன. 

ஒவ்வொரு நாளும் கணபதியை ஜான் குடைந்துக் கொண்டிருந்தார்.  “இதை நீ எனக்கு எப்போதான் முடிச்சு தரப் போற?”.  சில  நாள், போனில் பேசாமல் நேராக ரியல் எஸ்டேட் கடைக்கே வந்துவிடுவார். ஊதுபர்த்தி ஏற்றிய சாமி படங்களுக்கு கீழே, மேஜையில் கை வைத்து அமர்ந்திருக்கும் கணபதியிடம் முறையிடுவார். “உப்பு தண்ணியே இல்லாத இடம். இந்நேரம் முள்ளங்கி பத்தை மாதிரி விற்றுத் தந்திருக்க வேண்டாமா?”

“அதுக்கென்று இப்படி அவசரப்பட்டால், எப்படி சார்?” பேருக்கேற்ற தன் பெரிய தொந்தியை தடவியவாறு, கணபதி அலுத்துக் கொள்வார்.

“தப்பா எடுத்துக்காதே. நீ செய்து முடிச்சிடுவேன்னு தெரியும்” ஜானுடைய குரல் கனியும் .”படபடன்னு சேல் அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் கைக்கு வந்தால், நானும் உனக்கு கமிஷன் செட்டில் பண்ண ஆரம்பிடச்சிடலாம் இல்லையா? அட்வான்ஸ் கேஷாகவே வாங்கிக் கொடுத்துவிடு. நானும் கேஷாகவே கமிஷனும் கொடுத்துவிடுகிறேன்”

“அட. கமிஷன் எங்கே போக போகுது? முதலில் பார்ட்டி கிடைக்கட்டும்”

“நோ நோ. பண விஷயத்தில் எப்போதுமே கரெக்டாக இருக்கனும்”. இப்போதே பணத்தை கையில் திணிப்பது போல், ஜான் தீவிரமாக சொல்வார். பிறகு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு “ஒகே கணபதி. நான் கிளம்புறேன். ஒரு டூ ஹண்டிரட் ரூபீஸ் மட்டும் இப்போ கொடு. கமிஷனில் சேர்த்துக்கலாம்” என்பார்.

“இங்கேயே ஒன்னும் பணம் இல்லையே” .காகிதங்கள் நிரம்பிய தன்  மேஜை டிராயரை சும்மா திறந்து திறந்து பூட்டுவார் கணபதி.   வெற்று   யோசனைக்கு பிறகு , தன் மேல்சட்டை பாக்கெட்டில் கட்சி தலைவரின் படத்துக்கு பின்னிருந்து, இருநூறு ரூபாயை எடுத்துக் கொடுப்பார். “இத்தோடு எண்ணூறு ரூபா ஆச்சு சார்” 

“ரவுண்டாக ஆயிரம்னே கமிஷனில் போட்டுக்கோ”  என்று காசை வாங்கிச் சென்று சில மணி நேரம் கழித்து யாரையோ தாங்கி நடப்பது மாதிரி நடை தளும்ப ரியல் எஸ்டேட் கடைக்கு திரும்பவும் வருவார். ஒவ்வொரு படியாக தடுமாறி ஏறி, “நீ எப்போ இத முடிச்சு தரப் போற?” என்று மறுபடியும் ஆரம்பிப்பார்.  அவர் வார்த்தைகள் நடுங்கும். “ஒன்னுமில்லாதவன் சொத்தை விக்கிறேன்னு நினைச்சுக்காதே. என் அப்பா, அந்த காலத்திலேயே பி.டபிள்யூ.டியில் இஞ்சினியர். வீடு வாங்குறேன்னு ஒவ்வொருத்தனும்  வந்து, டீக்கடையில் பேப்பரை விரிச்சு படிக்கிற மாதிரி டாகுமெண்ட்டை பிரிச்சு பிரிச்சு பார்த்துட்டு போறானுங்க. பகர்ஸ்”

“எனக்கு தெரியாதா சார் உங்களைப் பத்தி?” என்று கணபதி சமாதானம் சொல்வார்.”அரை மணி நேரம் முன்னாடிக்கூட ஒரு அருமையான பார்ட்டிக்கிட்ட நம்ம பிராபர்டி பத்திதான் பேசிட்டிருந்தேன். இது எப்படியும் செட்டாகிவிடும்”  என்று  ஒரு கற்பனை மனிதர் பற்றி பிரஸ்தாபமாக பேசி ஜானை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

கடைசியில் ஒருவழியாக  வீட்டை வாங்குவதற்கு ஆள் கிடைத்து, பத்திர பதிவும் முடிந்துவிட்டது. வீட்டை வாங்கியிருக்கும் அந்த இருபத்தியைந்து வயது இளைஞன்,  தாடி சீராக வெட்டிய கருப்பு முகமும் காலர் வைக்காத டீஷர்ட்டுமாக  , முதல் தடவை கணபதியுடன்  வந்தபோது ஜான் அவனை நம்பிக்கையில்லாமல்தான் பார்த்தார்.  சீக்கிரமே அவனுடைய பாந்தமான அணுகுமுறையும் “அங்கிள்” என்று உரிமையோடு பேசும் முறையும் அவரை ஈர்த்துவிட்டது. உடன், அவன் ஹெலனின் முன்னாள் மாணவன் என்பது தெரிய வர, மேலும் அணுக்கம் உண்டானது. ஆனால் அந்த பையனுக்கு வீட்டை விற்பது, தனக்கு பிடித்த மாதிரியோ பிடிக்காத மாதிரியோ  ஹெலன் காட்டிக் கொள்ளவில்லை.   பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் அவளிடம், அவன் படித்திருக்க வேண்டும். பெயர் உடனே நினைவு வராவிட்டாலும் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. வகுப்பில்  பாராட்டவோ குறை சொல்லவோ முடியாதபடி படிக்கக்கூடிய, தொந்தரவில்லாத மாணவன்.  வருங்காலத்தில் நல்ல சம்பளத்தில் உத்தியோகம் கிடைப்பதற்கான லட்சணம் அப்போதே அவனில் இருந்திருக்கலாம். ஹெலனுக்கு ஞாபகம் இல்லை.  ஆனால் விலை பேசும்போது அவள் ரொம்பவே கறாராக இருந்தாள்.  எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பதுப் போன்ற கண்டிப்புடனே அவள் அந்த பையனிடம் விலையை சொன்னாள். ஜான் கூட இறுதி ஐம்பதாயிரத்தில் சமரசம் செய்துகொள்ள இறங்கி வந்திருப்பார். ஆனால் ஹெலன் ஒப்புக் கொள்ளவே இல்லை.  “அதுதான் சம்பாதிக்கிறானே. ஐம்பதாயிரம் கொடுத்தால் ஒன்னும் ஆகிடாது” என்று தனிமையில் சாதாரணமாக சொன்னாள்.

வங்கியில் இருந்து எஞ்சினியர் வந்து வீட்டை அளந்து மதிப்பீடு கொடுத்து அந்த பையனுக்கு கடன் ஒப்புதலாகி, அவன் சுப நேரம் பார்த்து, தஸ்தாவேஜூகளின் தூசி வாடை விலகாத பழைய அரசுக் கட்டிடத்தில் டோக்கன் போட்டு பத்திர பதிவு நடந்தது.  கணபதியும், நோட்டரி வக்கீல் ஒருத்தரும் சாட்சி கையெழுத்துப் போட்டார்கள். டோக்கன் நம்பர் வருவதற்கிடையே அரை மணி நேரம் காணாமல் போன ஜான்,  சிவந்த கண்களோடு மீண்டு வந்து குரலை ஏற்றி ஏற்றி பேசிக் கொண்டிருந்தார். “கவர்ண்ட்மெண்ட் ஆபீசில் ஒரு வேலையாவது காசில்லாமல் நடக்குதா? எல்லாம் கரப்ட். பகர்ஸ்”.  திருமணப் பதிவுக்காக பக்கத்தில் ரோஜா மாலையோடு நின்றிருந்த இளம் ஜோடி அசூயையோடு முகத்தை திருப்பியது.  பிறகு, டோக்கன் நம்பர் வந்ததும்  ஜான் பத்திரத்தில் தன் முழுப் பெயரை அழகிய கையெழுத்தில் எழுதிக் கொடுத்து, எந்த குற்றச்சாட்டும் இல்லாதவராய், களங்கமில்லாமல் சிரித்தார். அந்த பையனோடு அழுத்தமாக கை குலுக்கி “ஆல் தி பெஸ்ட்” என்று விடைபெற்றார். சொத்து பேர் மாறியது. இன்னும் இரு தினங்களில் வீட்டை காலி செய்ய வேண்டும்.

பவுல் சந்தில் நுழைந்து முன்பக்கம் ஓட, ஜான் அந்த உபயோகமில்லாத புதரையே பார்த்துக் கொண்டிருந்தார்.  பக்கத்து நிலத்தின் வாதாம் கிளை இங்கு நீட்டிக் கொண்டிருந்தது.  பழுத்து உதிர்ந்த மஞ்சள் இலைகள் தூரத்தில் புல் மேட்டை கொஞ்சம் போல் மூடியிருந்தன. ஏறுவெயிலின் வெளிச்சத்திலேயே, அந்த பச்சை பரப்பு சற்று அச்சமூட்டும்படி இருந்தது. அவ்விடத்தில் மனித காலடி பட்டே நெடு நாளாகிவிட்டது. கணவன், மனைவி, மகள் மூவருமே பின்கட்டுக்கு வருவதில்லை. வீட்டை காலி செய்து சாவியை ஒப்படைப்பதற்கு முன்னால் கூலிக்கு ஆள் வைத்து புதரை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஜான் விரும்பினார். “அதெல்லாம் தேவையில்லை” என்று ஹெலன் சொன்னபோது உடனடியாக மறுத்து பேசினார், “நோ நோ. அது கவுரவம் கிடையாதும்மா”. ஆனால் கூலிக்காக தனியே எடுத்து வைத்த ஐநூறு ரூபாய், எந்த அந்தியில் காணாமல் போனது என்று அவருக்கு இப்போது தெரியவில்லை.

தன் காலுக்கு அருகேயிருந்த, வாய் உடைந்த பிளாஸ்டிக் பக்கெட்டை ஜான் அப்போது பார்த்தார். புற்றுப் போல் திட்டு திட்டாக மண் அழுந்தியிருந்த அந்த பக்கெட்டை உள்ளங்கையில் அழுக்குப் படாமல் விரல்களால்  பற்றிக் கொண்டு  புதருக்குள் இறங்கினார். ஈரப்புற்கள் மிதிப்பட்டு காலை உரச, பச்சை வாசம் மூக்கில் ஏறியது.   எத்தனையோ நாள், ஜான் வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியே வீசியெறிந்த குட்டி குட்டி கண்ணாடி பாட்டில்கள் அங்கங்கு சிதறி புதைந்திருந்தன. ஒவ்வொன்றாக எடுத்து பக்கெட்டில் போடத் தொடங்கினார். புல்லோடு புல்லாக பழைய பிளாஸ்டிக் பைகளும்  மண்ணில் புதைந்து நெளிந்தன. அவற்றை தள்ளிவிட்டு, பாட்டில்களை எடுத்து போட, கண்ணாடி பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதுவதும் உருள்வதும் கோலிக் குண்டுகள் கைகளில்  குலுங்குவதுப் போலிருந்தது.  ஒளி ஊடுருவிப் பாய, கண்ணாடி மினுக்கத்தோடு சில பாட்டில்கள் புல் மேலேயே கிடந்தன. சிலவற்றை செடி பிடுங்குவதுப் போல கீழேயிருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஓரு பாட்டிலுக்கு பக்கத்திலேயே  அதன் டப்பாவும் தட்டுப்பட்டது. கிழிந்த காகித அட்டையை கையில் எடுத்து உதறி பார்த்தார்.  காற்றுப் பையும் ஊதுகுழல்களுமாய் தொப்பி வைத்த வெள்ளைக்கார உருவம் அட்டைப் படத்தில் மங்கலாய் தெரிந்தது. மகிழ்ச்சியை அல்லது மகிழ்ச்சிக்கு காரணமான ஏதோவொன்றை ஞாகப்படுத்தியது அந்த வெள்ளைக்கார முகம். அதை சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு பக்கெட்டில் போட்டு மேலும் பாட்டில்களை எடுக்கலானார்.

நேரப்போக்கில், தன்னியல்பாக அவர் மனம்  ஒவ்வொரு பாட்டிலையும்  கணக்கு போட்டு எண்ண ஆரம்பித்தது. ஒன்று, இரண்டு, மூன்று. ஒவ்வொரு பாட்டிலோடும்  ஒவ்வொரு இரவை கையில் அள்ளி போட்டார். நேற்று. முன் தினம்.  இரண்டு நாட்களுக்கு முன்னாடி. போன வாரம். அப்புறம் ஒவ்வொரு பாட்டிலோடும், ஒரு பருவத்தை எடுத்து வைத்தார். புனித வெள்ளியும், ஈஸ்டரும் முடிந்து ஹெலனும் பாப்பாவும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் நீண்ட பகல்களை உடைய வெயிற்காலம்.  கோடைக் காலத்தில் சர்ச்சில் சின்ன சின்ன வேலைகளை எடுத்துப் போட்டு அவர் செய்வார். சர்ச்சின் கதவு மற்றும் ஜன்னல் கம்பிகளுக்கு பெயிண்ட் அடித்தது அவர்தான். கோபுரச் சிலுவையின் சட்டகத்தை மாற்றக்கூட உதவி செய்தார். பின்னர் வந்த மழைக் காலத்தில் ஒரு நாள், தன் வீட்டில் அதே சிலுவை கண் முன் அலையடிக்க, மூச்சுக்குத் திணறி ஜான் மயங்கி விழுந்தார். “கடவுள் கிருபையால் பிழைத்திருக்கிறீர்கள். இனி ஒரு துளி போதும், கடவுளும் பின்வாங்குவதற்கு” என மருத்துவர் அச்சுறுத்தி அனுப்பினார். மழை ஓய்ந்து நிலம் நெகிழ்ந்ததும் இறுதியில் வருகிறது, குளிர் காலம் – ஒரு நீண்ட காத்திருப்பாக. பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களில்  கிறிஸ்துமஸ் விளக்கு, இரவெல்லாம் அவர்கள் வீட்டு வாசலில் அழகாய் ஒளிரும். கிறிஸ்துமஸ்க்கு முந்தைய தினம், சபை உறுப்பினர்களோடு சேர்ந்து ஜானும் ஆலயத்தை அலங்கரிப்பார். பலூன்களை ஊதி ஊதி நிரப்புவார்கள். மெழுகுவர்த்தி ஏற்றாத பலிபீடத்துக்கு கீழே வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்கள் குவிந்துக் கிடக்க, காற்றில் அவை சிறு உயரத்துக்கு பறந்து பறந்து அடங்கும். சபை இசைச் குழு பாடல் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும். கிரேஸ் கோரஸில் பாடுவாள். துதிப்போமே, துதிப்போமே. துயரமோ பாரமோ துதிப்போமே. மறவாமல் துதிப்போமே. ஆலயத்தின் உயரமான விதானத்தில் இனிய குரல்கள் எதிரொலிக்கும். இப்படி சின்னஞ்சிறு பாட்டில்களில் பருவங்கள் அடங்க, தொடர்ந்து ஒவ்வொரு பாட்டிலோடும், ஒவ்வொரு வருஷத்தை சேகரிக்கலானார் ஜான்.  நாற்பத்தியேழு. நாற்பத்தியாறு. நாற்பத்தியைந்து. சற்றைக்குள், அந்த பக்கெட் நிறைந்துவிட்டிருந்தது.  பக்கெட் நிறைந்தால் அடுத்து என்ன செய்வது என்று ஜான் யோசித்திருக்கவில்லை.  அதற்குள் அவர் களைத்துப் போயும் இருந்தார்.

ஜான், பக்கெட்டை  சுவரோடு சரித்து வைத்து உடலை நெட்டி முறித்தார். வெற்றி வியர்வை வரியாக ஓடி காது பக்கம் சொட்டியது. புதர் நடுவே இருந்து, அவர் திரும்பி பார்த்தபோது வீடு வெறும் ஒற்றைச் சுவராக கண் முன்னால் இருந்தது. தட்டையான கல் முகம் போல. சோகத்தில் இருளடைந்த கண்கள் மாதிரி ஜன்னல்கள்  இருபுறமும். சுவரில்  ஊதா நிறம் வெளிரி, அங்கங்கு காரை பெயர்ந்திருந்தது. வலது பக்கமிருந்த  கிரேஸின் அறை ஜன்னலை பார்த்தார். மெலிதான வெளிச்சக் கோடுகளுக்கு பின்னே வெறும் நிழலாய் இருந்தது.  செல்போனில் கண் பதித்தபடியோ அல்லது  உதடுகள் வேகமாக அசைய புரியாத சத்தத்தில் பாடத்தை உருபோட்டபடியோ ஜன்னலோரமாய் தன் மகள், அமர்ந்திருப்பது போன்ற மயக்கம் தோன்றியது. அந்த திசையில் சற்று நடந்தபோது கால்களில் காகிதக் குப்பைகளாய் இடறின. உடன், கிரேஸ் ஜன்னல் வழியே வீசியெறிந்திருந்த சாக்லேட் கவர்களும் காலி சிப்ஸ் பாக்கெட்டுகளும் மண்ணோடு கலந்திருந்தன. அந்த கால் கிரவுண்ட் காலி இடத்தில், ஆற்று மணல் கொட்டி மேடேற்றி பாட்மிட்டன் விளையாடலாம் என்று கிரேஸேதான் ஒருமுறை சொன்னாள்.  அதை எப்படியோ அவளும் மறந்து போயிருக்கிறாள். ஜன்னல் வழியே யாரும் இல்லாத அறையை எட்டி பார்த்துவிட்டு, ஜான் எதிர்புறம் திரும்பினார். வரும்போது சுவரின் அடிப்பக்கத்து சிறுகுழாய் வழியே சொட்டிய கழிவு நீர் காலில் ஒட்ட “ச்சை” என்று புல்லோடு தன் மெலிந்த காலை தேய்த்துக் கொண்டார்.

மண் ஒட்டிய இரண்டு கைகளையும் அகலத் தள்ளி தொங்கவிட்டு, பக்கவாட்டு சந்தில் நுழைந்து முன்பக்கம்,  வந்தார் ஜான். அங்கு குழாயில் கையையும் காலையும் கழுவிவிட்டு, மீண்டும் பவுலைத் தேடினார். அவர் தேடும்போதே அது அவரை கண்டுவிட்டது. குழாய் சத்தம் கேட்டு படிக்கட்டுக்கு பின்னிருந்து, தன் கிண்ணத்தை வாயில் கவ்வியாறு ஓடி வந்து ஜானின் காலடியில் போட்டு, கடமையை நினைவூட்டுவது போன்ற சலித்த முகத்துடன் அமைதியாக நின்றது. ஜான் அதில் நீர் நிரப்பி கொடுக்கவும், பவுல் தலை குனிந்து நாக்கை சுழற்றி வேகமாக நீர் அருந்தியது. பகல்வேளையின் அமைதியின் ஊடே பவுல் தண்ணீர் அருந்தும் சப்தம் மட்டும் துல்லியமாக கேட்டது. தண்ணீர் குடித்துவிட்டு, உடலை சிலிர்த்து வாலாட்டியது. தரையில் கிடந்த சங்கிலியை கவனித்த ஜான், அதை எடுத்து பவுலை தூணில் கட்டலாமா என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள், அது மாடிப் பக்கம், மீட்டர் பெட்டிக்கு கீழே மண் தோண்டி வைத்த குழியில் போய் சாவுகாசமாய் படுத்துக் கொண்டது. “ராஸ்கல்” என்று பவுலை நோக்கி விரலை ஆட்டியபடி ஜான் வாசல் முற்றத்தில் போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

பாதி வீடு முற்றத்துக்கு வந்துவிட்டிருந்தது. ஜான் உட்கார்ந்திருந்த சோபாவுக்கு எதிரே, மேஜை மேல் அட்டைப் பெட்டியில் கட்டி வைத்த தொலைக்காட்சி இருந்தது. இடப்புறம் இரண்டு நாற்காலிகள். தூணை ஒட்டி வரிசையாக பெரிய பிளாஸ்டிக் கவர்கள். பைபிள்கள், ஸ்தோத்திர புத்தகங்கள், காய்ந்த குருத்தோலைச் சிலுவைகள், காலி பூஞ்சாடி முதலியவை ஒரு கவரில் இருந்தன. அடுத்தது துணி மூட்டை. மின்விசிறி றெக்கைகள், கயிறு கட்டி வைக்கப்பட்ட கடைசி அட்டைப் பெட்டிக்கு மேலே இன்னொரு கவர். கூடத்தில் மாட்டியிருந்த அகன்ற சட்டம்போட்ட இரு புகைப்படங்களை ஜான் அக்கவரில் வைத்து சுருட்டியிருந்தார். ஊட்டியில் எப்போதோ கழுத்தில் குளிர் சால்வை சுற்றி கன்னம் வற்றாத உருண்டையான முகமும் கருப்பு கண்ணாடியுமாக ஜான், ஹெலன் தோள்மேல் கைப் போட்டு நிற்கும் படம் ஒன்று. இன்னொன்று கிரேஸ் பூப்பெய்தியபோது பட்டு புடவையில் எடுத்தது. எவ்வளவு அழகாக அதில் முகத்தை சரித்து அமர்ந்திருப்பாள், கிரேஸ். தான் குழந்தையில்லை என்பதை அறிவிப்பது போல. ஜான் திரும்பி சோபாவின் மரக்கட்டையில் கை வைத்து சரிந்து அமர்ந்தார். வீட்டு ஹாலில் இருப்பது மாதிரியே அவர் முன்னால் டீப்பாய் கச்சிதமாய் நின்றிருந்தது. உடனே, ஹாலில் இருப்பது மாதிரி தன் சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை மட்டும் கழற்றிவிட்டுக் கொண்டார்.

அப்போது வாசல் கதவு திறக்கப்படுவதை பார்த்து தன் குழியை விட்டு எழுந்து லேசான குரைப்பொலியோடு பவுல் ஓடி வரவும், ஜான் கழுத்தை மட்டும் ஒடித்து பார்த்தார். “தம்பி வாப்பா. அட என்ன யோசிக்கிற? நீதானே இனி ஓனர். தயங்காமல் வா”

முன்னாள் உரிமையாளர் மீதான கரிசனத்தைக்காட்டிலும் பவுலை பார்த்தே அந்த உயரமான இளைஞன் தயங்கி நின்றுக் கொண்டிருந்தான். வாசல் கதவின் தாழ்ப்பாளை அவன் அழுத்தி திறக்க வேண்டியிருந்தது. இறுதி அழுத்தில், கதவு கிறீச்சிட்டு திறந்து தள்ளாட்டதுடன் பின்னால் ஓடியது. பவுலை ஜாக்கிரதையுடன் பார்த்து உடலை நெளித்தவாறு உள்ளே வந்தான்.

“சிட் டவுன். இங்கேதான் இந்த சேரில் உட்கார். என்ன யோசனை? அட உட்காருப்பா”

சாலை கண்பட, திறந்த வாசலுக்கு நேரே அப்படி உட்காருவதில் அவனுக்கு லேசாக கூச்சம் இருந்திருக்க வேண்டும். பாதி நாற்காலியில் முதுகு வளைய உட்கார்ந்தான். “என்ன அங்கிள்? காஃபிக்கு வெயிட் பண்ணுகிற மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று சுற்றி பார்த்தான்.

“ஹா ஹா” ஜான்பலமாக சிரித்தார். “காஃபி கேட்டாலும் கொடுக்க வீட்டில் இப்போது ஆளில்லை. வீடே பாதி காலியாகிவிட்டதே. உனக்கு குடிக்க, தண்ணீர் கொண்டு வரவா?” எழுந்து செல்லும் எண்ணத்தையே உடலில் காட்டாமல் அவர் கேட்டார்.

“வேண்டாம் அங்கிள். அந்த டாகுமெண்ட் ஜெராக்ஸ் பைண்டர் தருவதாக சொன்னீர்களே”

“அட ஆமாம். ஏற்கனவே எடுத்து வச்சிட்டேன். ஒன் மினிட்” என்று ஜான் வீட்டுக்குள் சென்றார். பொருட்கள் இல்லாத அறையில் அவருடைய ஒவ்வொரு காலடியும் தரையில் அறைந்து எதிரொலித்தது. நீல அட்டையில் ஸ்பைரல் போட்ட பெரிய பைண்டரை ஜான், அவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். ஏற்கனவே பலமுறை பார்த்த பக்கங்களை மீண்டும் அவன் புரட்டினான். பத்திர நகல். பட்டா நகல். வீட்டின் முதல் உரிமையாளர் கட்டிய மின்சார ரசீது. வீட்டு வரி ரசீது. அந்த நகரின் வரைப்படம். ஒவ்வொரு பக்கத்திலும் காகிதத்தின் பழைய வாசனை ஏறியிருந்தது.

“இது மொத்தமும் என் அப்பாவே சேகரித்து ஜெராக்ஸ் போட்டு வைத்தது”. ஓர் அரிய ஆவணம் பற்றி பேசுவதுப் போல் ஜான் அதை சுட்டிக்காட்டி சொன்னார் “உனக்கு தெரியுமோ என்னவோ. இந்த பிராபர்ட்டியே என் அப்பா எங்களுக்கு வாங்கிக் கொடுத்ததுதான். என் பொண்ணு கிரேஸ், கைக் குழந்தையாய் இருந்தபோது வாங்கிக் கொடுத்தார். அப்போது இந்த ஏரியாவே மொத்தமாய் காடுதான். உங்கள் ஹெலன் மிஸ்சுக்கு இந்த இடம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் என் அப்பாவை மீறி யாரும் எதுவும் பேசிவிட முடியாது. அவர் அந்த காலத்திலேயே பி.டபிள்யூ.டியில் இஞ்சினியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். ஹானஸ்ட் மேன். அவருக்கு தெரிந்திருக்கிறது. இந்த பகுதி டெவலப் ஆகும் என்று. இப்போது பார், மழையில் புல் முளைத்த மாதிரி சுற்றி வீடுகள்தான். என் அப்பாவுக்கு அப்படி நிறைய விஷயங்கள் தெரியும். இதோ இப்படி எல்லாத்தையும் ஜெராக்ஸ் போட்டு அழகாய் சேமித்து வைத்திருக்கிறாரே”

அழகிய சேமிப்பான பைண்டரை அந்த பையன் மூடினான். “பொருட்களை எல்லாம் பேக் செய்தாகிவிட்டது போலயே”

“உன்னிடம் சாவி கொடுக்க வேண்டும் இல்லையா?” அவர் பார்வை அந்த பைண்டரே மேலேயே இருந்தது. “என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. என் அப்பா இவ்வளவு துப்புரவாக ஒவ்வொரு பேப்பரையும் காப்பி எடுத்து சேர்த்து வைத்திருக்கிறார்”

“ஆமாம் அங்கிள். ரொம்ப டிஸ்பிளீனாக பைண்ட் போட்டிருக்கிறார்” ஜான் அளவுக்கு ஆச்சரியமின்றி அவன் இயல்பாக சொன்னான்.

“அப்பா உயிரோடிருந்த காலத்தில் அவருக்கும் எனக்கும் எப்பவுமே ராசியாக இருந்ததில்லை. அவருக்கு அக்கா மேல்தான் பாசம் அதிகம். ஆனாலும் எனக்கு வாங்கிக் கொடுத்த சொத்துக்கு எவ்வளவு சிரத்தையாக ஜெராக்ஸ் போட்டு பைண்ட் செய்து வைத்திருக்கிறார் பார்த்தியா?”

ஜானுடைய குரல் தழுதழுக்க, அந்த பையன் சந்தேகமாக விழித்தான். பத்திர பதிவு அலுவலகத்தில் பார்த்தது போல அவர் கண்கள் சிவப்பாக இருக்கின்றவனா என்று சோதிக்க ஒருமுறை அவரை நேர்க் கொண்டு நோக்கினான். கண்கள் தெளிந்தே இருந்தன. ஒரு வளர்ந்த மனிதர் அவ்வளவு சீக்கிரத்தில் அழுகை நோக்கி செல்வது அவனை அசௌகர்யபடுத்தியது. அவன் குழப்பத்தோடு அந்த பழைய பைண்டரை பார்க்க, ஜான் தொண்டையை செறுமி பேச்சை தொடர்ந்தார்.

“என் அக்காவும் இப்போது நோ மோர். கிரேஸ்க்கு கண்ணும் மூக்கும் அக்காவின் ஜாடையேதான். அக்கா ஒரு கவர்மெண்ட் ஸ்கூலில் டீச்சராக இருந்தாள். பெயர் குளோரி. குளோரி என்றால் மகிமை. என் அப்பா தேர்வு செய்த பெயர். அவர் இங்கிலீஷ்லையே பைபிள் வாசிப்பார். குடும்பத்தில் எல்லாமே பைபிள் பெயர்கள்தான். என் மகளுக்கும் அப்பாதான் பெயர் வைத்தார். கிரேஸ். கிரேஸ் என்றால் கருணை.” சில நொடிகள் அமைதியாக இருந்து “மகிமை.கருணை” என்று இரண்டு முறை திரும்ப திரும்பச் சொன்னார். அவ்வார்த்தைகளை முதல் தடவை கேட்பதுப் போல. அல்லது அவற்றுக்கு முதல் தடவை அர்த்தம் தெரிந்தது போல. “என்ன மாதிரியான பெயர்கள். எந்த பெயர்களை நாம் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று அப்பாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்பாவுக்கு இப்படி நிறைய விஷயங்கள் தெரியும். வருங்காலத்தில் இந்த காகிதங்கள் எல்லாம் எனக்கு தேவைப்படும் என்றுக்கூட அவருக்கு தெரிந்திருக்கலாம்” என்று பைண்டரை சுட்டிக் காட்டினார். மீண்டும் அவர் தலை மட்டும் லேசாக ஆடியது.  

“இது உங்கக்கிட்டயே கூட இருக்கட்டும் அங்கிள்”. வேறு என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.

“அப்பா வாங்கி கொடுத்த சொத்தையே வித்தாச்சு. இது என்ன?” என்று கண்ணீருக்கு முந்தைய கணத்திலிருந்து ஜான் தன்னை மீட்டுக் கொண்டார். “உன்னை போரடித்துவிட்டேனோ?”

“அப்படியொன்றும் இல்லை”. பேச்சை திசைமாற்றும் எத்தனத்தில் அவன், “அப்புறம் அந்த கணபதியை திரும்ப பார்த்தீர்களா அங்கிள்? அது இது என்று சொல்லி கமிஷனுக்கு மேலே எப்படியோ பத்தாயிரம் என்னிடம் புடுங்கிவிட்டார்” என்றான். “உங்களிடம் எவ்வளவு வாங்கினார்?”

“நான் ஏற்கனவே அவனுக்கு கொஞ்சம் பணம் தர வேண்டியிருந்தது. எல்லாம் சேர்த்துதான் கொடுத்தேன்”

“எதுக்கும் ஒருதடவை சரியாக கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்” என்றபடி எழுந்து நின்றவன் பக்கவாட்டு சந்தை ஏறிட்டான். “வருகிறேன் அங்கிள். அந்த பின்கட்டை சுத்தம் செய்ய வேண்டும். ஒரே புதராய் கிடக்கிறது. பாம்பு வந்தால் கூட தெரியாது போல”

“நோ நோ” என்று ஜானும் எழுந்தார். “இந்த பதினாறு வருஷங்களில் ஒரு தடவைக்கூட பாம்பு இந்த வீட்டுக்கு வந்ததில்லை. சத்ரு அண்டாத வீடு” ஜான் பெருமிதத்துடன் கூறி அவனை நெருங்கிச் சென்றார். “முடிந்தால் முன்னாடி இருக்கும் செடிகளை எல்லாம் அப்படியே வளர்க்க முடியுமா என்று பார். இங்கு மல்லி ஜோராக பூத்து வரும்”. அவர் கை நீட்டிய இடத்தில் கறிவேப்பிலைச் செடியோடு வெள்ளை நூல் வைத்து மல்லிக் கொடி கட்டப்பட்டிருந்தது. பலவீனமாக ஒட்டிக் கொண்டிருந்த அச்செடியில் அங்கங்கு மொட்டு முகிழ்ந்திருந்தது. இளம்பச்சை நெளிவில் வெள்ளை பொட்டுகள். அப்பூச் செடியை அவன் குனிந்து நோக்கினான். அடிப்பட்ட உடலில் கட்டுப் போட்டதுப் போல நூல் சுற்றி தொங்கிக் கொண்டிருந்தது. “மறுபடியும் பூக்கிறது போல” என்று அவன் சிறு ஆச்சர்யத்தோடு சொல்ல, ஜான் அவன் முதுகைத் தட்டி சிரித்தார்.

“வர்றேன் அங்கிள்”.

ஜானும் அந்த பையனோடு கதவு வரை நடந்துச் சென்றார். “தாப்பாள் நான் போட்டுக்கிறேன்” தள்ளாடிய வாசல் கதவை ஜான் பிடித்துக் கொள்ள, அவன் கையசைத்து விடைபெற்றான். “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று ஜான் ஆங்கிலத்தில் கூறி அவனை வழியனுப்பவும், பவுல் என்ற அந்த பெரிய உடல் கொண்ட தவிட்டு நிற நாய் அவர் காலருகே விஸ்வாசமாய் நின்றுக் கொண்டிருந்தது.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.