/

சேரன் கவிதைகள்

தொலைந்தால்  திரும்பி வராதவை:

அக்கறையற்று நீ

எழுதிய கடிதம்

காமத்துக்குப் பின்

நள்ளிரவின் பெருமூச்சு

கண்ணாடி அறைக்குள்

மின்னும் வண்ணத்துப் பூச்சி

பருக மறந்த

 பூநா.

தொலைத்தாலும் திரும்பிப் பெறுபவை

ஈரத்தில் வேர்கொண்ட அன்பு

மன்னிப்பில் நெகிழும் கணம்

பழைய காதல்

பாடப் புத்தகத்தில்

தெறித்த விந்துத் துளி

எல்லார்க்கும் பெய்யும்

மழை.

#

 2. ஒரு பிற்பகலில் ஓராயிரம் எழுதியது

பாவலர் புரிந்து கொள்ளும்படி

எளிதாய் எழுத விரும்புகிறேன்

இடையறாத வலியைப் பற்றி ஒன்று,

இல்லாமல் போன கைகள்

இருப்பதான உணர்வு தரும்

மாயக் கனவுகள் பற்றி ஒன்று

முக்காடு போட்டு மறைத்தாலும்

எப்போதும்

எனக்காக ஒளித்து வைத்திருக்கும்

முடிவற்ற முத்தங்கள் பற்றி

நாவற்பழ முலைக்காம்புகள் பற்றி

ஓராயிரம்.

3. கறுப்பு

அவளுடைய  வடிவும் செருக்கும்

நிறமும் ஒளியும்

அவளுக்குத் தெரியவில்லை

மழையில் தோய்ந்த பனைமரம் போல்

ஒளிரும் கறுப்பும் காதலும்

அவள்

சுட்ட பழமா சுடாத பழமா

எனத் திகைக்க வைக்கும்

 முலைக் காம்பு

அவளுக்கு வெறுப்பேற்றுகின்றது

நான் சொல்ல விரும்பியது இதுதான்:

ஆற்றங்கரைக்கு வா

ஆடை களை

பாதி நிலவு ஒளிரும் நீரில் இறங்கு

உன் ஒளியில் மலரும் நீர்.

அப்போது

ஆற்றில் எப்போதும் விரியாத

பூக்களைப் பார்க்கலாம்.

அவற்றின் பெயர் கடவுளுக்கும் தெரியாது.

கறுப்பில் விளையும் காமம்

உலகப் பேரொளி.

நிறைய மறுக்கும் கறுப்பூ.

4.யோனிப் பாடல்

காதலின் பொருளும் உணர்வும்

நெகிழ்வும் மாறி விட்டன.

தொடாமலே பெருகித் தெறிக்கும்

சுக்கிலத்தைத் தரும் எந்திரக் குறிகள்.

முடிவற்ற காம உச்சங்களை

கொண்டாடும் மினனிதழ்.

மென்துகள். கணினித்திரை.

வேசி கைப்பேசி. கூலிக் காதலன்.

இவற்றைக் கடந்து

அரவம் ஒடுங்கிய இரகசியக்

கணத்தில்

உன்னிடம் வருகிறேன்.

பலநூறு கோடி நரம்புகளும்

உயிர் வழி நாடிகளும் சுடரும்

 பிட்டமும் யோனியும்

இணையும் வழிகளில்

அழிகிறது நோன்பு

ரமல்லாவில் ஒரு மழைக்குருவி

தன் மாலைப் பாடலில்

என்னையும் உன்னையும் வாழ்த்தும்.

#

5.அடர்பனி

புயலுக்குப் பின்

நிலா எழுவதை நீங்கள் பார்க்க வேண்டும்

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்

என்பது கேள்வி அல்ல

எத்தகைய புயல் என்பது கேள்வி அல்ல

வெள்ளப் பெருக்கு, மண் சரிவு,

பேரரசுகள் அழிந்தாலும்

பல்லாயிரம் காலங்களுக்கு

அழியாப் பெருந்தோழியாக இருந்த

ஒற்றைப் பெருக்க மரம்

ஏன் இன்றும் சாயாமல் இருக்கிறது

என்பதும் கேள்வி அல்ல

இதை எழுதுகிற போது

பனிப்புயலும்

கண்ணாடியை உடைக்கும் அதன் இயல்பான வெஞ்சினமும்

எம்மைச் சூழ்கிறது

இவை எல்லாவற்றுக்கும் தப்பி

இந்த அதிகாலையில்

யன்னலோரம் ஒரு சிட்டு

சிறகுலர்த்துகிறது.

சிறகடிக்கிறது.

6.காதலர்கள்

அவர்கள் இருக்கும் வீட்டில்

சமையலறையில்

அடிக்கடி தீ ஓங்கி வளர்கிறது.

அடுப்பில் எதை வைத்தோம்

என்பதை மறந்து விடுகிறார்கள்.

தோசை எரிந்து போய்விட்டது

என்பதை ஆசையால் கடக்க முடியாது.

வானம் எப்போதும் ஒளிராது.

இது வேறு நாடு. பகலின் நிறம் சாம்பல்.

அல்லது தீரா மழை. அல்லது உறையாப் பனி.

எதைச் சேகரிக்கிறோம்

எதைச் சமைக்கிறோம்

எதைக் குழைக்கிறோம்

எதைக் குடிக்கிறோம்

என்பதற்கு ஒரு தர்க்கமும் இல்லை

தூக்கம் இரவிலா, பகலிலா

அல்லது வேறு பொழுதிலா எனவும் தெரியாது

விந்தையும் மகரந்தத்தையும்

காற்றிலும் தூவிப்பனியிலும் அனுப்பும்

மந்திரம் அவர்களுக்குத் தெரியும்.

எந்தக் கவிதையும்

எந்த ஓவியமும்

அவர்களைக் கொள்ள முடியாது.

மார்கழிப் பனிக்காற்றும் கூதலும்

எழும் பிற்பகலில்

அவள்  இருக்கிறாள்.

அவன் அழுகிறான்.

சேரன்

சேரன், யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர். கவிதைகள் உட்பட பத்திகள், அரசியல் கட்டுரைகள்,  நாடகங்கள் என ஏராளமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நாடகங்கள் கனடா, அமெரிக்காவில் மேடையேற்றப்பட்டுள்ளன. தற்சமயம் கனடா, விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஈழத்தின் யுத்த வடுக்களை, சிதைவுகளை ஆரம்பகாலம் தொட்டு தன் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்.

7 Comments

  1. அபாரமான கவிதைகள், சேரனுக்கு பாராட்டுக்கள்

  2. இயல்பான மொழியில் கைகூடும் கவிதைகள் அருமை அருமை

  3. சிறப்பு.தனித்துமான வரிகள் புதுவித வாசிப்பு அனுபவத்தை உணர்கிறேன்.

  4. சிறப்பு.தனித்துமான வரிகள் புதுவித வாசிப்பு அனுபவத்தை உணர்கிறேன்.
    சம்பூர்வதனரூபன்

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published.