ஒலிவ மரம்
இந்த மரம்
நூற்றாண்டுகள் பழமையானது.
அது தரும் பழங்களின் சுவை
பெருங்கவிதையின் சாறு
றமல்லாவில்
தன்பாட்டுக்கு அவ்வப்போது வரும்
உலர்காற்றின் பாடலுக்கு
ஒலிவ மரம் தலை அசைக்கிறது
ஓர் இலை கூட விழவில்லை.
நானும் அப்துல் அல் -ஷெய்க்கும்
கூடவே ரானா பராக்கத்தும்
மரத்தை நோக்கி நடக்கிறோம்.
எவ்வளவு நேரம் மரத்தின் கீழ் இருந்தோம்?
இரவு வரும்வரை
நிலவு எழும்வரை
காயம் ஆறும்வரை.
ஒரு கால். ஒரு கை
ஒரு கால். ஒரு கை
இழந்த வீட்டில்
ஒரு பிஞ்சுக் கை. ஒரு பிஞ்சுக் கால்
எஞ்சி அழுகிறது.
அந்தக் காலில்
தன் பெயரை எழுதியிருக்கிறது குழந்தை.
ஒரு கால், ஒரு கை துண்டாடப்பட்ட போது
ஒரு பெயர்.
நீலம்
இப்போதுதான் பார்த்தேன்
சூலுற்ற பெண்ணின் வயிற்றில்
சப்பாத்துக் காலால் உதைக்கிறான்
படையாள்.
ஒற்றை நட்சத்திரத்தை
குருதியால் எழுத ஒரு அரசு
இன்றோ
குருதியின் நிறம் நீலம்.
உயிர்
சொல்லத்தான் வேண்டும்
என்னுடைய காதலியின் பெயரை
ஆனால்
சொல்லவும் முடியாது
அவளுக்கு ஜெனின் அகதி முகாமில் வாழ்வு
இரட்டைக் குடியுரிமை இருந்தாலும்
வெளியேறும் வாய்ப்பில்லை
இன்றைய குண்டு வீச்சில்
வீடு தகர்கிறது
அவளது பூனையும் பூச்சாடியும் எஞ்சுகின்றன
சாம்பல் மேட்டில்
எப்போதும் ஒரு குரல் கேட்கிறது
உயிர் எழுதும் காவியம்.
புன்னகை
எப்போது எனத் தெரியவில்லை
நான் தனித்துப் போனேன்
காஸாவின் எல்லைப் புறத்துக்கு
படையாள் என்னை இழுத்துச் செல்கிறான்
எனக்குப் பாதிக்கால் இல்லை
குருதி பெருகுகிறது
சிரிக்க முடிந்தாலும் அழ முடியவில்லை
செல்கிறேன்
நிழல் மட்டும் வர மறுத்து
காஸாவில் தேங்குகிறது
பல்லாயிரம் ஏவுகணைகளுக்கும்
அது ஒரு புன்னகையை அனுப்புகிறது.
நூரா
என் அன்பின் நூரா
இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கிறாள்
வெளியே தெரிந்த
அவளது இரண்டு கால் விரல்களை
நான் காண்கிறேன்
என்னுடைய இடையறா முத்தத்தின் எதிரொலி
அவள் விரல்களில் கேட்கிறது
அவளுடைய ஆறு குழந்தைகளும்
காதலனும் தப்பி விட்டார்கள்
உம்மா இல்லாத உலகு
தாலாட்ட வராத காற்று.
சேரன்
சேரன், யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர். கவிதைகள் உட்பட பத்திகள், அரசியல் கட்டுரைகள், நாடகங்கள் என ஏராளமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நாடகங்கள் கனடா, அமெரிக்காவில் மேடையேற்றப்பட்டுள்ளன. தற்சமயம் கனடா, விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஈழத்தின் யுத்த வடுக்களை, சிதைவுகளை ஆரம்பகாலம் தொட்டு தன் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்.
உயிரோட்டமான கவிதை ….