“நான் ஒருபோதுமே எனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றதில்லை. அங்கு 23 வருடங்கள் வாழ்ந்திருப்பேன். இங்கு அதிக காலங்கள். இந்த நாட்டின் மொழியைத் தவறுகளுடன் பேசினாலும் அதுவும் எனது தாய் மொழிபோல. எனது கால்கள் பனியில் பல தடவைகள்
நுழைந்துள்ளன.”
வீதி வாங்கிலில் எனக்கு அருகில் இருந்த ஒருவர் இப்படிச் சொல்வது எனது காதில் கேட்டது.
அவரது விழிகள் வானத்தைப் பார்த்தன.
“போர் இல்லாத நாடுகளை சிவனும், இயேசுவும், அல்லாவும் ஏன் படைக்கவில்லை? அனைத்துத் தினங்களும் உதிரத்தில் தோய்வது ஏன்? இப்போது நான் ஓர் பத்திரிகையையும் வாங்குவதில்லை. எனது வீட்டிலே உள்ள கவிதைப் புத்தகங்களையும் படிப்பதில்லை. பல புத்தகங்களில் நான் காண்பது போரினது குரூரங்களையே. ஆம், இவைகளை எழுதுவது அவசியம்தான். ஆனால் போர்கள் அழிகின்றனவா?”
சில கண்ணீர்த் துளிகள் அவரது மடியில் விழுந்தன. பின்பு மீண்டும் வானத்தைப் பார்த்தார்.
நான் அவருடன் பேச விரும்பவில்லை. அவரது சொல்கள் எனது சொல்கள்தாம் என நான் நினைத்தேன். நான் ஓர் பக்கம், அவர் வேறு பக்கம். ஆம், எங்களை நெரித்தது போர்தான்.

“அம்மாவின் நினைவுகள் இப்போதும் உள்ளன. அவள் பல ஆண்டுகள் வாழவில்லை, நானும் வாழ்வது போல வாழாதுள்ளேன் என்பதை அறிந்து பல பச்சை இலைகள் அழுதன என்பது எனக்குத்தான் தெரியும். பல வேளைகளில் எனக்கு அவளது நினைவுகள் வருவதில்லை. சில கனவுகளில் நானும் அவளும் நிர்வாணமாகக் கிடந்தோம். திடுக்கிட்டு விழித்தபோது அவைகளைக் கனவுகள் எனவே நினைத்தேன். நான் இந்தக் கனவுகளை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் சில வேளைகளில் இதனைக் கேட்கும் சிலரால் பலியாகி இருப்பேன். நான் நாத்திகன். எனது அம்மாவே என் தெய்வம்.”
எனக்கும் கனவுகள் மீது கேள்விகள் எழுந்துள்ளனதான். சில கனவுகளில் மாடுகள் சில நூல்களையும், ஆடுகள் சில அகராதிகளையும் வாசிப்பதைக் கண்டேன். மனித உலகின் அனைத்துக் கனவுகளுமே எமது பூரண இலக்கியங்கள் என்று நான் நினைப்பதுண்டு. இந்த ஆடுகளும், மாடுகளும் வாசித்தவைகளது பெயர்கள் எனக்குத் தெரியாது. இந்தப் பிராணிகளை நான் வாசகர்களாகவும் வாசகிகளாகவும் இப்போதும் கருதி வருகின்றேன்.
அருகில் இருந்தவர் என்னை ஒரு தடவை பார்த்தார். பின் அவரது விழிகள் வானத்தின் மீது.
“எங்களுக்கு இலங்கையில் ஓர் வீடு இருந்தது. இது சிறிது, எமக்கு மாளிகைதான். எனக்கு மாடுகளில் அதிக விருப்பம். இவைகளது சாணிகளில் இருந்த விருப்பம் பெரிதே. காரணம்: சாணிகள் எமக்குக் கிடைக்கும் சில்லறைகளே. நான் அவைகளை நிலத்தில் பெற்று வீட்டின் கோடியில் (பின் புறம்) சேமிப்பேன். பின் ஒருவர் வந்து அவைகளை வாங்கிச் சிறிது பணம் தந்து எமக்குள் உள நலத்தைத் தருவார். இந்தச் சிறிது பணம் எமது வாழ்வுக்கு உதவியது. புதிய சாணிகளைச் சில வேளைகளில் பினைந்தும் விளையாடினேன். இப்போது நான் வாழ்ந்த வீடும் இல்லை. எரிந்ததுபோய் விட்டது. ஆம், போரால்தான். அங்கு இப்போது மாடுகள் உள்ளனவா என்பதுவும் எனக்குத் தெரியாது. சரி, இந்தக் கொடிய போரால் பலியானது எனது வீடும், மாடுகளும் அல்ல, அதிக மனிதர்களும் என்பேன்.”
எனது வயதுதான் அருகில் இருப்பவரிற்கும் உள்ளதாக நான் நினைத்துக் கொண்டேன். நான் வாழும் பகுதியில் அவர் வாழ்வார் என நினைத்துக் கொள்ளவில்லை. ஓர் பீடியை உதட்டில் வைத்து நெருப்பூட்டினேன். பிரான்ஸ் வந்தபின் சில தமிழ்க் கடைகளில் இவைகள் கிடந்தன. சரி எங்கள் கலாசாரம் இங்கும் ஏற்றுமதியால் வந்துள்ளது என நினைத்துக்கொண்டேன். நான் அதிகம் புகைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது அதிக பீடிகளை வாங்கினேன் என்பது ஓர் கதை. எனக்கு அருகில் இருப்பவருக்கு பீடி மணம் பிடிக்காதா எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆனால் அவரது விழிகள் வானில்தான்.
“நான் இளம் வயதில் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பேன். இந்த மொழி தெரியாது, சில சொல்களே தெரியும். ரீகல் திரையரங்கில் நான் உருவங்களைத்தான் பார்த்தேன். அவை கறுப்பு உருவங்கள், ஆனால் வெள்ளை நடிகர்கள். இந்தப் பழைய படங்களில் வெள்ளையர்கள் கறுவர்களாக வந்தமையைக் கண்டு ரசித்தேன். பின்பு வெள்ளையர் ஆதிக்கம் கறுப்பு இனங்களை அடிமையாக ஆக்கியதை அறிந்து எனது இதயம் வெடித்தது. உடலது வாழ்வு குறுகியது என்பது இந்த வெடி குண்டுகளுக்குத் தெரியாதா?”
என்முன் ஓர் இளம்பெண் நின்று “நீங்கள் புகைப்பது எது?” எனக் கேட்டாள். “பீடி” என்றேன். “அது எது?” என்று கேட்டாள். “அது இந்தியரது பழைய சிகரெட்.” என்றேன். “எனக்கும் ஓர் பீடி தருவீர்களா?” எனக் கேட்டாள். நான் கொடுத்தேன். முதலில் ஓர் இழுவையைச் செய்தபின் “புதிய சுவை.” என்றாள். “எனது நண்பனும் புகைப்பான். அவருக்கும் ஓர் பீடி தருவீர்களா?” எனக் கேட்டாள். என்னிடம் இருந்த அனைத்துப் பீடிகளையும் அவளிடம் கொடுத்தேன். எனது உதடுகளில் முத்தம் செய்துவிட்டு மறைந்தாள். திரும்பினேன். மீண்டும் அவர் வானத்தில்.
“இந்த நிலவில், தொலைவில் தெரியும் நிலவில்… எமது நிலத்தில் அழிந்த வீடுகள் அழியாமல் உள்ளதைக் காண்கின்றேன். தொலைவில் உள்ள நிலாவில் வாழும் வீடுகளிற்கு நான் செல்லமுடியாதுதான். சிலவேளைகளிலே கனவுகளில் அவைகளிற்குள் செல்லலாம். நிலத்தில் வீடுகள் எரிந்தபோது எனக்கருகில் கடல் இல்லை, கிணறு இல்லை. அழுதேன், அழுதேன்…எனது கண்ணீர்கள் நீர் மழைகளாக மாறும் துடிப்பில். எரிந்து கொண்டிருந்த வீடுகளில் எனது விழி நீர்களும் எரிந்தன. அப்போது நான் நனைக்கப்பட்டேன். ஆம்…நிலவின் கண்ணீரால்.”
ஆம், அவர் தனது விழிகளைத் துடைத்தார். என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் வானத்தைப் பார்த்தன அவரது விழிகள். தீடீரென்று என்முன் ஓர் பந்து வந்து விழுந்தது. நான் அதனைப் பிடித்துக் கொண்டேன். அது எங்கிருந்து வந்தது என அறிய வலதும் இடதும் எனது விழிகள் ஓடின. எறிந்த முகத்தைக் கொண்ட எவருமே என்முன் இல்லை. எங்கிருந்து வந்தது இந்தப் பந்து என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இது வானில் இருந்து வந்த பந்தா எனும் கிண்டலான கேள்வியும் எனக்குள். அருகில் இருந்தவருக்கு என்மீது பந்து விழுந்தது தெரியவில்லை போல இருந்தது. அவர் அவரது உலகில் இருக்கும்போது தெரியுமா? “பந்து! பந்து!” எனக் கத்தல் பின்பு வந்தது. பல பக்கங்கள் பார்த்தேன். கத்தியது ஓர் சிறுவனின் குரல். ஆனால் அவனை எனது விழிகள் காணச் சிரமப்பட்டன. மீண்டும் கத்தல் வந்தது. என் முன் உள்ள மாடியைப் பார்த்தேன். ஓர் ஜன்னலின் முன் ஓர் சிறுவனின் முகம்.
“தா,தா!” என்று கேட்டான். “வா!” என்றபோது அவனது முகம் துக்கமானது எனக்குத் தெரிந்தது. “ஏன்?” என்று கேட்டேன். “நான் முடவன். எனது இயந்திரக் கதிரையில் இருந்து பந்தை எனது வீட்டுக்குள் எங்கும் வீசுவேன். அது தவறி வெளியே வந்து உங்கள் மீது வீழ்ந்துவிட்டது. மன்னிக்கவும். எனது பந்தை என்னிடம் கொண்டு வந்து தருவீர்களா?” என்றான். எனது பதில் “ஆம்” ஆகவே இருந்தது. அவனிடம் பந்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் எனது வாங்கிலுக்கு வந்தேன். அருகில் இருந்தவர் இப்போது எழுந்து நின்று, மீண்டும் வாங்கினில் இருந்தார்.
“போர் வாழ்வை அங்கு நான் கடந்து வந்தாலும், நான் ஓர் சமாதானத் தரையிலேயா இருக்கின்றேன்? இல்லை. அங்கு எனக்கு வீடு இருந்தது. அது அழிந்தது என்பது போரினால்தான். இங்கு எனக்கு வீடு இல்லை. ஓர் கட்டிடத்தில் ஒரே அறை. வாடகை கட்டாமல் இருப்பின் இந்த வீதியே எனக்கு வீடு. எனது வாசிப்புகளில், அனைத்துக் கண்டங்களிலும் வசதியற்றோர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என அறிந்துள்ளேன். நான் இங்கு அகதியாக வந்தேன், இப்போது வாழ்வதோ அடிமையாக. எமது உலகத்தைக் காட்டிலும் வானில் அகதிகள் இல்லையா, வாடகை இல்லையா, செல்வர்கள் இல்லையா, வங்கிகள் இல்லையா என்ற கேள்விகளுடன்தான் நான் வானைப் பார்க்கின்றேன்…”
இந்தக் கணத்தில் எங்களின் முன் ஓர் ஆணும், பெண்ணும்.
பெண் பயந்தபடி. ஆண் ஆத்திரத்தில்.
அவன் அவளை அடித்தான், அடித்தான், அடித்தான். அவள் கதறினாள்.
அவர் மிகவும் பெரிய கோபத்துடன் எழுந்தார். ஆணின் ஓர் கை அவரது கையில் சிக்கியது. அவர் அவனை முரட்டுத்தனமாக அடித்தார்.
“அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள்!” எனப் பெண் அழுதாள்.
ஆண் விழுந்தான்.
“அவளை மீண்டும் அடிப்பியா?” என்று கத்தினார் அவர்.
“ஒருபோதும் அடிக்கமாட்டேன்.”
“நீ சொல்வது உண்மையா?”
“உண்மைதான், நீங்கள் என்னை மீண்டும் அடிக்கவேண்டாம்.”
“சரி போ!”
அவன் எழுந்தான். அவள் அவன் பின் சென்றாள். அவர் வானத்தை மீண்டும் பார்த்து முத்தமிட்டார்.
000

க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.