“உன்னுடைய இன்னொரு மார்பு எங்கே “? ச.துரையின் கதை – கவிதைகள் குறித்து கீரனூர் ஜாகிர்ராஜா

“கண்ணாடி என்கிறார்கள்
எனக்கு அவற்றின் பிரதிபலிக்கும்
குணத்திற்கு முன்னதாக
உடைகிற சப்தம்தான் கேட்கிறது”
(மத்தி- ப.40)

ச.துரையின் கதைகளைக் குறித்துப் பேசும் முன் அவரது கவிதைகளைக் குறித்து ஓரிரு வார்த்தைகளாவது சொல்லிவிடத்தோன்றுகிறது. கண்ணாடிகளுக்கு பிரதிபலிக்கிற குணம் மட்டுமல்ல உடைகிற குணமும் இருக்கிறது. நாம் புலங்குகிற பெரும்பாலான பொருட்களும் இவ்வாறான இரட்டை குணங்கள் கொண்டவைதான். மனித இனமும் சிருஷ்டி – மரணம் என இரண்டு நியதிகளைக் கொண்டதுதான். ஜனனத்தின் போதே மரணமும் உடன் பயணிக்கத் தொடங்குகிறது. எதுவுமே இங்கு நிலையானது இல்லை; ஆனால், நிலையற்றவற்றின் அழகும் பயனும் அது நிலைத்திருக்கும் வரை நிஜம்தான். கண்ணாடியைக் குறித்த ச.துரையின் மூன்றுவரி குறுங்கவிதை கண்ணாடியை மட்டுமே குறிப்பதல்ல துன்பங்களையும், தீவினைகளையும் எதிர்க்கொள்ள அஞ்சி மனித மனம் கொள்ளும் பதட்டத்தின் வெளிப்பாடே அவ்வரிகளெனக் கருதுகிறேன்.

“பின்னிரவில் ஒரு இருமல் சப்தம் கேட்டது
யாரென்று கேட்டேன்
நான்தான் அமைதி என்றது குரல்”

இது சப்தம் குறித்த ச.துரையின் மற்றொரு குறுங்கவிதை அமைதி என்று நாம் நம்பிக்கொண்டிருப்பதற்கு பின்னால் அவஸ்தை இருக்கிறது. இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது என்கிற தொனி இக்கவிதையில் வெளிப்படுகிறது. இன்னொரு நீள் கவிதையின் கடைசி வரிகள் இவ்வாறு முடிகின்றன.

“ஆமாம் சப்தங்கள் ஏன் குரலிழந்தவர்களின் சாயலிலே இருக்கின்றன”

நீங்கள் இந்த இரண்டு வரிகளை சில நூற்றாண்டுகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைப்பெற்ற பல போராட்டங்களோடு பொருத்திப் பார்க்க இயலும். ஈழவிடுதலைப் போராட்டமும் அவற்றிலொன்று.

“நிமிர்த்தப்பட்ட பீரங்கிகளாக மாறிப்போயின நகரின்
வானுயர்ந்த அடுக்குமாடிகள்
நிலத்தடி அறைக்குள்
யுத்தத்தின் இடையே பசிக்கிறது என்ற
பிஞ்சிடம் தாயொருத்தி
வெடிக்காத அணுகுண்டை
விளையாடக் கொடுத்தாள்
நம்புவோமாக அது வெடிக்காது விடியும்வரை பிஞ்சுக்கும் பசிக்காது”

இதுவும் பொழிப்புரை தேவையிராத கவிதை “மத்தி” தொகுப்பின் பொரும்பாலான கவிதைகள் இவ்வாறு ஒருபொருள் சுட்டுவனவாக இருப்பதை வாசகன் எளிதில் அவதானிக்க இயலும். மேலும் இவரது கவிதைகளை வாசிக்க நீங்கள் கிறிஸ்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை – ஆனால் பைபிளை ஒரு தடவையாவது வாசித்திருக்கலாம். கின்னரப்பெட்டி வாசிக்கிற ஹென்றி டிக்சன் கோவெல்லை , சார்லஸை , அனடோலி இவனோவிச்சை அவர்தன் கவிதைகளில் குறிப்பிடுகிறார். மலையாளத்தில் பால்சக்காரியா தனது கதைகளில் தேவனை உலவவிட்டதைப் போல துரை தனது கவிதைகளில் யேசுவை உரசிப்பார்க்கிறார்.

ரோமைன் வில்லியம்ஸ், கர்த்தோன், ரெய்னர் மரியோ ரில்கே , அரோக்சனா என பலரும் பலதும் துரை கவிதைகளில் இடம்பிடிக்க பஷீரும் , ஏங்கல்சும் கூட இடையே வருகிறார்கள். நாட்டுகருவைகளும், சவுக்கைமரங்களும் தாவரங்கள் என்கிற பெயரில் வருகின்றனவே தவிர ஒரு ரோஜாவைக்கூட காண இயலவில்லை. ரோஜாவை காணாதது குற்றமுமில்லை, மாற்றாக அரோக்சனாவைப் பற்றி எழுதும் போது சாமந்தி பூக்கள் வருகின்றன. சங்குமுள்ளின் கால்களை சமைக்கும் கிழவிகளும், தேவனிடம் முறையிடும் கன்னிகளும், செம்படவனும், சோறு சோறு என கேட்கும் தகப்பனும், கிளிஞ்சல்களும் , இசைத்தட்டுகளும், பூனையும், எலியும், சப்பாத்துகளும், ஆடுகளும், சடலங்களும், அணுகுண்டுகளும், பனைகளும் மாறிமாறி இக்கவிதைக்குள்ளாவது நிகழ்கிறது. கடலையும், கரையையும் , விதவிதமான மீன்களையும் குறிப்பிடத்தேவையில்லை இம்மூன்றையும் சுற்றித்தான் ச.துரையின் கவியுலகு கட்டியெழுப்பபட்டுள்ளது. வயலின் இவருக்கு பிடித்த இசை கருவியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கவிதையின் இடைவெளியிலும் அதன் ரீங்காரம் எனக்கு கேட்டபடியே இருந்தது.

ச.துரை சிலபோது கவிதைகளில் கதை கூறுகிறார். அதில் கவித்துவத்துக்கு குறையில்லை. விவிலியத்தின் தாக்கம் கொண்ட மொழி துரையினுடையது. தரம் கூடிய ஓயினின் மணம் வீசும் மொழிக்காடு ஒன்று அவரிடம் உள்ளது. சடலங்களின் நாற்றமும் மீன்களின் கவிச்சியும் இடையிடையே கமழ்வதுதான் அவருடைய கவிதைகளின் அழகியல், அரசியல். அவரின் கதைகளும் கவிதைகளும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை. அதற்கு காரணம் கடலும் கரையும் மீன்களும். ஆனால் அவற்றைக் கடந்து அவர் கதை சொல்ல முயற்சிக்கிறார். ”யூர்வனமும் எண்களும் “, “திரோபியஸ் தானேஸ்”, ”வாசோ” , “குரைக்கும் பியானோ” போன்ற கதைகளில் அம்முயற்சி வெளிப்படுகிறது. இந்த நான்கு கதைகளும் வழக்கமான அவரின் கதைகளத்திலிருந்து வேறு வேறு இலக்குகளில் செல்கின்றன.

பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது எனத் தொடங்கும்” யூர்வனமும் எண்களும்” கதை மங்கேல் நாட்டின் யூர் காட்டைப் பற்றி அறிஞர் டேன் சொல்வதாக புனைவுற்றுள்ளது. அந்த காட்டுக்குள் பூமி உருவாகும் போதே வானத்திலிருந்து நிறைய எண்கள் (number) வந்து விழுந்ததாகவும் அக்காட்டுவாசிகள் அவற்றை என்னவென்று தெரியாது கடந்தார்கள் என்றும் , அவர்கள் அவற்றை எப்படி பயன்படுத்தினார்கள் அவை எவ்வாறு பயன்படத்தொடங்கின என்றும் கதைசொல்லியும் டேனும் நட்சத்திர விடுதியில் அமர்ந்து பேசிக்கொள்கிறார்கள். யூர்வனத்து சிறுவன் ஒருவன் ஒரு மதிய வேளையில் நடந்து செல்கையில், வானத்திலிருந்து விழுந்த நாள்முதல் நகரவே முடியாத பூஜ்யத்தின் மேல் கால்தடுக்கி விழுகிறான். ச.துரை அந்தக் காட்சியை இவ்வாறு எழுதுகிறார் “பூஜ்யம் அப்போதெல்லாம் எளிதில் தூக்க கூடியதாக இருந்திருக்கிறது இப்போது மனிதர்கள் பூஜ்யத்தை தூக்க முன்வருவதில்லை. அன்று அச்சிறுவன் பூஜ்யத்தை அசைத்து தூக்கினான்” என்று சொல்லும் அந்த பத்தி சிறுவன் பூஜ்யத்தை பாறைமேல் மோதி துளையாக்கியதையும் , ஓடிக்கொண்டிருந்த அருவியின் நீரை பூஜ்யத்தில் நிரப்பி தன் தோள்களில் தொங்கவிட்டான் என்று முடிகிறது. அறிஞர் டேன் ”அப்போதெல்லாம் எண்கள் நம்மிடம் உலாவின. இப்போதெல்லாம் நாம் எண்களோடு உலாவுகிறோம் புரிகிறதா?” என்று கதைசொல்லியிடம் கேட்கிறார். இந்தக் கதையை படித்தபோது நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்த பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஜுலியோ சீசர், மல்ஃபா தஹான் எனும் புனைப்பெயரில் எழுதிய “எண்ணும் மனிதன்” ( The Man Who Counted ) எனும் நாவல் நினைவுக்கு வந்தது. கடலையும் மீனகளையும் எழுதிக் கொண்டிருந்தவரிடமிருந்து இப்படியொரு மாறுபட்ட கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இதுமட்டும்தானா இன்னும் இருக்கிறது என்று “திரேபியஸ் தானேஸ்” கதையின் வழியே ஒரு மார்பு மட்டும் கொண்ட திரோன்ஸி என்கிற மருத்துவமனை செவிலியை அறிமுகப்படுத்துகிறார். திரோபியஸ் தானேஸ் என்பதே ஒரு மருத்துவமனையின் பெயர்தான். இந்த கதைசொல்லி அடிப்படையில் தானொரு மாயோவிய தத்துவ சிந்தனையாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அரூபங்களின் மீதான தனது விருப்பத்தை தனது காதலியிடம் வெளிப்படுத்துகிறான். நன்கு எடுப்பான மார்புகள் கொண்ட அவளிடம் ” உன்னை மார்புகளற்ற பெண்ணாக பார்க்கத் தோன்றுகிறது” என்கிறான். அவள் அதை புரிந்து கொள்ளாமல் அவளது சிறுவயது புகைப்படத்தை அவனிடம் காட்டுகிறாள். அத்துடன் அந்தக் காதல் நிறைவுறுகிறது. பிறகு அவன் சந்திப்பவளே ஒற்றை முலைச்சி திரோன்ஸி.

நம்முடைய பழந்தமிழ் இலக்கியமாகிய நற்றிணையில் ஒரு முலை அறுத்த பெண் உவமையாக சுட்டப்படுகிறாள். “ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாஉண்ணி” என்பது அவ்வரி. நற்றிணை சுட்டும் ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி கண்ணகியாக இருக்கலாம் என்ற ஒரு யூகம் உண்டு. கேரளத்தில் உள்ள கொடுங்களூர் பகவதி அம்மனுக்கு ”ஒற்றை முலைச்சி” என்ற பட்டப்பெயர் இருக்கிறது. இது குறித்து ஜெயமோகன் சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கும் திரோன்ஸி ஒற்றை முலையுடன் இருப்பதற்கும் தொடர்பு இல்லை. திரோன்ஸியுடன் கதைசொல்லி பழக தொடங்கிய பிறகான ஒரு சந்தர்ப்பத்தில் அவனிடம் கேட்கிறான் ” உன்னுடைய இன்னொரு மார்பு எங்கே” எனக் கேட்கிறான். அவளோ மோகமுள் ஜமுனாவைப்போல இவ்வளவுதானா? என்று கேட்கிறாள். ஆனால் சிரித்தபடி அவன் மறுபடியும் கேட்கிறான் “ எங்கே இன்னொரு மார்பு” அவள் கூறும் பதில் கதைசொல்லிக்கு மட்டும் அல்ல நமக்கும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ”அதுவொரு விபத்து ஒருவன் என் மார்பை திருகிக் கொண்டிருந்தபோது மறந்து அவனிடமே கொடுத்துவிட்டேன்” அவள் என்ன சொன்னால் என்ன? அவனுக்கு அவள் ரூபமாக வந்து செல்லும் அரூபம், உருவிலி.

வாசோ எனும் கதையும் வித்தியாசமான கதைதான். நேபாளி ரங்கோன் ராஜின் மகள் மாலினி தன் தாயைக் கொன்ற ஓநாயாக கருதி அவனை ”வாசோ.. வாசோ” எனக்கூறி விரட்டுவதும், அவன் தன்னையே ஓநாயாக கருதிக் கொள்வதும் சுவாரஸ்யமான புனைவு. அந்த மனவுளைச்சலிலேயே அவன் உழன்று”சீக்கிரமே இந்நாளின் இரவு வந்தால் நன்றாய் இருக்கும் எனத் தோன்றுகிறது, கூடவே நிலவைப் பார்த்து ஊளையிட்டால் இந்த குற்றவுணர்வாவது கொஞ்சம் குறையும்” என்று சிந்திப்பதுபோல கதை முடிவதும் சுவாரஸ்யம்தான்.

கடல் குறித்தும் மீனவ வாழ்வு குறித்தும் இதுவரை எழுதியுள்ள எழுத்தாளர்களில் ச.துரை தனித்து தெரிகிறார். கதை கூறல் அவருக்கு இயல்பான குணாம்சமாக இருக்கிறது. தீடை தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அவர் வித்தியாசமாக கையாண்டுள்ளார். கடல் அவருடைய பிரதான் பாடுபொருள். “புள்ளியந்திருக்கை” கதையில் கோரான்பூர் கடல்களைப் பற்றி எழுதும்போது அவைதான் தென்னிந்தியாவின் நீளமான பொங்கும் வயிற்றைக் கொண்ட கடல் என்கிறார். ஆனால் இந்த கோரான்பூரை கூகுளில் தேடினால் கிடைக்காது. ஒரிசாவிலிருந்து கோரான்பூர் கடல்களைத் தேடி வந்த ஒருவர்” இது ஆண் கடலா” என கதைசொல்லியிடம் கேட்கிறார். அவன் “தனக்கு தெரியாது சேவியருக்கு தெரியும்” என்கிறான். கடலில் அடிக்கின்ற அலைகளில் ஆண் அலை பெண் அலை என்று புனைவுகளில் வாசித்திருக்கிறேன். ஆண் கடல் பெண் கடல் குறித்த அறிவு எனக்கில்லை.”கடல்தாண்டா நமக்கு அம்மா” போன்ற வாசகங்களை பெரும்பாலான கதைகளில் கேட்டிருக்கிறோம். புள்ளியந்திருக்கை கதையில் அப்படியொரு வசனம் தொடக்கத்திலேயே வந்துவிடுகிறது.” எனக்கு தெரிய இந்திய மீன்பிடி நகரங்கள், கிராமங்கள் என எங்கு போனாலும் யார் எந்த குடில்களின் மீன்பிடி சாதனையாளர், பெரும் மீன்பிடித்த வலைகளுக்கும் படகுகளுக்கும் உரிமையாளர் என்கிற பெருமை இருக்கும்” என்று கதைசொல்லி யோசிப்பதும் உண்மைதானே. 780 கிலோ புள்ளியந்திருக்கை மீன்பிடித்தல் ஒரு சாதனை. அந்த சாதனை பற்றிய கதைதான் இதுவும். ஆனால் கடலை குறித்த பலவிதமான விவரணைகளும் தொகுப்பு முழுக்க கொட்டி கிடக்கிறது. “கடற்கரை ஒட்டி இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு கடல் இருக்கும்”, ”வெண்ணீல கூந்தலின் மீது படகொன்று நகர்கிறது” , “ ஒரு கடலாடிக்கு கடலிடம் தோற்பதைவிட வேறென்ன கௌரவம் இருக்கப்போகிறது” , “நிலத்தடி மனிதன் நீர்வழி வசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் இழப்பும் துயரும் சொல்லி மாளாதது” இப்படி நிறைய சொல்லலாம்.

ஆவுளியா கதையில் வரும் ஆவுளியா மீனைப்பற்றிய கதையும் விநோத உணர்வைத் தந்தது. தன் குட்டிக்காக கரையில் உட்கார்ந்து அழும் ஒரு தாய் மீன் புனைவோ நிஜமோ நெகிழச் செய்தது.

தீடை கதை ஏற்கனவே நாம் பலமுறை சந்தித்துள்ள கதைக்கருதான். ஆனால் கூறும் முறையால் துரை அதை வேறொரு அனுபவமாக்கி தருகிறார். மானுட குணங்களாகிய இயலாமை, வன்மம், துக்கம், சாகசம் குறித்த பெருமிதம், குற்றவுணர்வுடன் காதலும் கொண்ட மனிதர்கள் இவருடைய கதைமாந்தர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் என்று நேசன் சொன்னார். ஏன் இருக்க கூடாதா என்ன? துரை கதை சொல்லும் மொழியும் தனித்துவமானது. எல்லாம் சரி துரை ஆனால் தீடையில் வரும் தாமஸ் ஏன் அவனுடைய பிரஞ்சுதாடியின் வெள்ளை முடியை நாக்கால் தொடுகிறார்?

000

தஞ்சை “டால்ஸ்டாய் புத்தக நிலையம்” ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் எழுத்துவடிவம்.

கீரனூர் ஜாகிர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிவரும் முதன்மையான படைப்பாளி. நாவல், சிறுகதை, விமர்சனம்,தொகை நூல்கள், சிறார் இலக்கியம் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.