/

நிழலின் அசைவு: விஷால் ராஜா

புகைப்படங்கள் : ஏ.வி.மணிகண்டனின் "அஹிர் பைரவ்" நூலிலிருந்து. ஓவியம் : சுதிர் பட்வர்தன்

பகுதி 1

வ்வொரு வீடாகவும் ஒவ்வொரு உடலாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேளையில், பெங்களூர் நகர் முழுக்க ஆளில்லாத ஏரிகளிலும், பூங்காங்களிலும், உயரமான கண்ணாடி கட்டிடங்களிலும் வினோத அமைதி படிந்திருந்தது. ஊரடங்கி மனித நடமாட்டமே இல்லை. மனிதர்களில்லாத சாலைகளையும் மேம்பாலங்களையும் பார்த்து நாய்கள் குரைக்க, போலீஸ் வாகனங்கள் எல்லா பகுதிகளிலும் ரோந்து போய்க் கொண்டிருந்தன.

தீ பற்றியதுப் போல் உச்சியில் சிவப்பு பூக்கள் மலர்ந்திருக்கும் ஆப்பிரிக்கன் டியுலிப்பும் குல்முஹரும் சூழ்ந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் கேட்டை காவலாளி பூட்டுவதை நான்காவது மாடியின் பால்கனியில் நின்று தீபன் கவனித்தான். கன்னம் ஒட்டி, கண்கள் இடுங்கிய அந்த எளியவரால் ஒரு சிறு திருட்டைக்கூட தடுக்க முடியும் என்று தீபனுக்கு தோன்றியதில்லை. தன் சிறிய குண்டாந்தடியோடு அவர் முக்காலியில் உட்கார்ந்தார். 

அந்த ஆக்கிரமிப்பு சக்தி, எல்லா தடுப்புகளையும் மீறி வீடுகளுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. பூமி முழுக்க தோன்றி, மனிதர்களை ஆட்கொண்டு வதைத்தது. எப்படி வருகிறது, எப்படி தாக்குகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன மருந்து கொடுப்பது என்று டாக்டர்களுக்கும் புரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டது போல இயக்கம் ஒடுங்கி, படுத்த படுக்கையானார்கள்.  கடைசியில் முடிவற்ற இருள் போன்ற மரணத்தில் விழுந்தார்கள். சிலர் உடனடியாகவும், சிலர் பொறுமையாகவும் மரணம் நோக்கிச் சென்றார்கள். மரணத்துக்கு பிறகு அவர்களை மேலும் கவலையோடு அணுக வேண்டியிருந்தது. திரும்பி வரவே முடியாதபடி, நிலத்தில் வெகு ஆழத்தில் அவர்கள் புதைக்கப்பட்டார்கள்.

பால்கனியில் நின்றிருந்த, தீபன் சோர்வடைந்தான். பார்வையைத் திருப்பி பகுதி பகுதியாய் பிரிந்த அந்த பத்து ஏக்கர் அபார்ட்மென்டை கண்களால் அலைந்தான். மாடிக் கட்டிடங்கள் நடுவே நீச்சல் குளம், மென்மையான நீல விரிப்பாக கிடந்தது. தூரத்தில் புழக்கம் இழந்த பாட்மிட்டன் மைதானமும், பொது அரங்கமும் கொஞ்சம் குப்பையாகக்கூட காட்சியளித்தன. இவ்வளவு அனாதரவாக அந்த அபார்ட்மெண்ட் இருந்ததே கிடையாது. அக்குட்டி பிரதேசமே அரவமில்லாமல் கைவிடப்பட்டு தோற்றம் அளித்தது. பால்கனியின் கண்ணாடி கதவை இழுத்து மூடிவிட்டு தீபன் தன் அறைக்குள் வந்தான்.

தனித்தனி பால்கனிகளோடு மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த ஃபிளாட்டில், வெவ்வேறு ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கிற – முப்பது வயதை தொடும் மூன்று தமிழ் பேச்சிலர்கள் –தீபன், சத்யா மற்றும் ரகு – வசித்து வந்தனர். ஊரடங்கால் மூவரும் இப்போது வீட்டிலிருந்தே வேலை பார்த்தார்கள். குடியிருப்பின் கடைசியில் இருந்த தன் அறையில் தீபன் அயர்ச்சியோடு நிற்க, திரைச்சீலை மூடாத கண்ணாடி வழியே இன்னும் வெயில் ஏறாத காலை வெளிச்சம் நுழைந்து அங்கங்கு பொருட்களை துலக்கப்படுத்தியது. யாரோ ஒரு மனிதன் நோயுற்று தூங்குவதுப் போல் படுக்கையில் போர்வை சுருண்டு கிடந்தது. தலைகாணிக்கு பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் நாவல். இன்னொரு பக்கம் அரைவாசி மூடிய நிலையில் மடிக் கணினி. 

போதிய தூக்கம் இல்லாமல், ஓய்வுக்கு ஏங்கி தீபனின் உடல் எடை கனத்தது. இலை நிறம் மாறுவதுப் போல் அவன் வெளிரி காணப்பட்டான். ஆனால் அவனால் படுத்து தூங்கவும் இயலவில்லை. கண்களில் எரிச்சலோடு அறைக்குள்ளேயே நடந்தான். ஓரமாக நடக்கையில் கால்களில் தூசி ஒட்டவும் அறையை சுத்தம் செய்யலாம் என ஓர் எண்ணம் எழுந்தது. சனிக்கிழமை செய்வதற்கேற்ற நல்ல வேலை. அந்த அறை சமீபமாக சுத்தப்படுத்தப்பட்டதன் தடயமே இல்லாமல் இருந்தது.

விசாலமான அவ்வறை, தன் ஞாபகத்தில் இருந்ததைவிட, சின்னதாக மாறியிருப்பதை தீபன் கவனித்தான். கனினி மேஜை, நாற்காலி, தரைப் படுக்கை என்று அவன் பயன்படுத்தும் இடங்களாக மட்டும் அது சுருங்கியிருந்தது. அவன் நடந்து புழங்கும் இடங்களைத் தவிர எல்லா பகுதியிலும் தூசி படிந்திருந்தது.கட்டில் போக மீதிப் பகுதியை புத்தகங்களும் அழுக்குத் துணிகளும் நிறைத்திருந்தன. உடைந்த சாவிச் சங்கிலி, காலி குளிர்பான பாட்டில், பழைய மாத்திரை அட்டை, முகக்கவசங்கள் போன்ற உபயோகமில்லாத பொருட்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. குளியலறைக்கு பக்கத்தில் நிரம்பி பிதுங்கும் பிளாஸ்டிக் கூடையை அவன் கண்கள் நோக்கின. அந்த துணிக் குவியலில் ஒரு சட்டைக் கை மட்டும், வெளியேறும் துடிப்போடு, மூடிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது.

ஒழுங்கு செய்யவே முடியாத இடமாய் தன் அறை தோற்றமளிக்க, தீபன் அதை சுத்தம் செய்யும் எண்ணத்தை கைவிட்டான். அது அசாத்திய வேலை என்று தோன்றியது. உடனே அவனுக்கு நிலவறை குறிப்புகள் ஞாபகம் வந்தது. தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறை நாயகன், சமகாலத்தில் ஒரு மனிதன் எந்த வேலையும் செய்ய முடியாது என்று வாதாடுகிறானே, அது அறையை சுத்தம் செய்வதற்கும் பொருந்துமா? மனிதனாக இருப்பதாலேயே நான் எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன் என்கிறான் நிலவறை நாயகன். உலகமே இப்போது நிலவறையில் தானே பதுங்கியிருக்கிறது?

தொடர்ந்து அவன் மனம் வெவ்வேறு இடங்களில் அலைந்தது. இருண்ட அறைகள் தஸ்தாயெவ்ஸ்கியை ஆவி போல பிடித்து வாட்டின என இன்னொரு எண்ணம் எங்கிருந்தோ தீபனுக்கு வந்தது. குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கல்நிகோவின் அறையை பார்த்ததும் அவன் அம்மா துடிதுடித்து போய்விடுகிறாள். ஒரு மனிதனை அவன் அறை என்னவெல்லாம் செய்யும்? முக்கியமாக அறைக்குள்ளேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருக்கும்போது. தீபன் யோசனைகளால் களைத்து, அறையைவிட்டு வெளியே வந்தான்.

அவன் கூடத்திற்கு வந்தபோது அங்கு யாரும் இல்லை. ரகு, சத்யா இருவரின் அறைகளும் மூடியிருந்தன. ஜன்னல்கள் திறக்காததால் வீடு இருள் போர்த்திக் கிடந்தது.  கூடம் நடுவே சோபாவில் போய் உட்கார்ந்தான் தீபன். செல்பேசியை எடுக்காமல் வந்தது பிந்திதான் தெரிந்தது. எழுந்து போய் அதை கொண்டு வர மனம் வரவில்லை. எந்த நல்ல செய்தியும் செல்பேசியில் வருவதில்லை. சிறிது நேரத்துக்கேனும் அச்சமும் பயங்கரமும் விலக்கப்பட்ட வேறொரு உலகில் வசிக்க அவனுக்கு விருப்பம் எழுந்தது. செல்பேசியோடு அது சாத்தியம் கிடையாது என்று எண்ணியபடி வெறுமனே உட்கார்ந்திருந்தான்.

கூடம் இருள் மூடியிருக்க, சற்றுத் தள்ளி சமையலறையில் மட்டும் காற்று போக்கி வழியே சூரிய வெளிச்சம் ரகசியமாய் நுழைந்து தரையில் படிந்திருந்தது. சூரியன் தடமிட்ட அந்த மஞ்சள் வட்டத்தை தீபன் நோக்கினான். தரை பிளந்து பூமிக்குள் போகும் வெளிச்சப் பாதையாய் அது காட்சி தந்தது. சூரிய ரேகைகள் பாய்ந்து அந்தரத்தில் தூசி தங்கப் பொட்டுகளாய் மிதப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவன் பிரக்ஞை மெல்ல நழுவத் தொடங்கிற்று. இமைகள் அனிச்சையாக சரிய, தூக்கம் பற்றிய நினைவே இல்லாமல் தூக்கத்தினுள் விழுந்துவிட்டிருந்தான்.

O

தோ கனவிலிருந்து வெளியே தள்ளப்பட்டு தீபன் துணுக்குற்று கண் விழித்தபோது ஜன்னல்கள் திறக்கப்பட்டு கூடத்தில் வெளிச்சம் பரவியிருந்தது. ஆழத்திலிருந்து மேலேறுவதுப் போல் அவன் கைகள் காற்றைத் துளாவி, பிறகு சோபாவின் பிடியை பற்றிக் கொண்டன. கனவின் ஞாபகம் போல அடையாளம் தெரியாத காட்சிகள் இமையில் ஒட்டி விலகின.

அவன் எழுந்துவிட்டதைக் கண்டு, பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த ரகு, “ஹலோ” என்றான்.

அக்குரல் தீபனை முழுமையாக சென்றடையவில்லை. ரகுவின் இருப்பை வெறும் அசைவாகவே அவன் அறிந்தான். “நீ எப்போ வந்த?” குழப்பத்தோடு கேட்டு, “மணி என்ன?” என்று சுவர் கடிகாரத்தை தேடினான். பகல் முடிந்து, அந்தி முடிந்து, இரவும் கடந்து மீண்டும் விடியல் உதித்துவிட்டதான பிரம்மை அவனை சூழ்ந்தது. ஆனால் ஒரு மணி நேரம் கூட கடந்திருக்கவில்லை. காலம் முடிவில்லாமல் நீண்டு மீண்டும் கைக்குள்ளேயே சுருண்டுவிட்டிருந்தது.

சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்து கொட்டாவியோடு முதுகை நெட்டி முறித்தான். “குட் மார்னிங்” என்று கண்களை தேய்த்தபடி பாதி வணக்கம் வைத்தபோதுதான் ரகுவின் தோற்றம் அவன் கவனத்தில் சரியாக பதிவானது. தேய்த்து போட்ட இளஞ்சிவப்பு நிற டெர்ரிகாட் சட்டைப் போலவே கொழுப்பு தங்காத அவன் வயிறும் நேராக இருக்க, முகத்திலும் சவரம் செய்த பளபளப்பு மின்னியது.

 “ஊரே பூட்டியிருக்கும்போது எங்கே போக உத்தேசம்?” என்று தீபன் கேட்டான்.

“ஓ இதுவா?” ரகு கால்சராயை நீவி விட்டுக் கொண்டான் “வெளியே போனா தான் ஒழுங்காக டிரெஸ் பண்ணனுமா என்ன? எந்த சூழ்நிலையிலும் நம்மள அழகா பிரசென்ட் பண்ணனும். அப்பதான் நமக்கே நம்ம மேல ஒரு நம்பிக்கை இருக்கும். ஆல்சோ, ஒரு நல்ல உடையால் எந்த நாளையும் விசேஷமாக மாத்திட முடியும்”

தீபன் ரகுவை வெறித்து நோக்கினான். ரகு சொன்ன விஷயத்தைவிடவும் சொன்ன விதம் தான் எப்போதும்போல் ஆச்சர்யமூட்டியது. உண்மைப் போலவே சொல்கிறான். ஒருவேளை உண்மையாகவே இருக்குமோ? மேல்பட்டனுக்கு பக்கமாக காபிக் கறை ஒட்டியிருக்கும் அவனுடைய சாம்பல நிற டீஷர்ட்டுக்கும் டிராக் பேண்ட்டுக்கும் என்ன விதமான ஆற்றல் இருக்க முடியும்? இப்படியே ஒரு சோகமான மனிதக் கூட்டத்தில் போய் நின்றால், அடையாளம் தெரியாமல் பொருந்திவிடலாம்.

ரகு பெருமிதமாக “காலையிலேயே எழுந்தாச்சு.ஒரு சுற்று எக்சர்சைஸ். அப்புறம் புரோட்டீன் ஷேக். இதோ ரெடி” என்றான். அரிய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதுப் போன்ற புன்னகை அவன் உதடுகளில் இருந்தது.

“ம்”. தீபன் தலையாட்டிக் கேட்டுக் கொண்டான். சிறு மௌனத்திற்கும் யோசனைக்கும் பிறகு சாவுகாசமாக “ஸ்டார்லைன் அபார்ட்மெண்ட்டில் ரெண்டு பேரை கொண்டு போய்ட்டாங்க தெரியுமா?” என்றான்.

“நிஜமாவா? தெரு முக்கில் உள்ள அந்த அபார்ட்மெண்ட்டிலா?”

“ஆமாம். நம் தெருவுக்கும் அது வந்துடுச்சு போல”

“உனக்கு எப்படி தெரியும்? சும்மா யாராவது கிளப்பிவிட்டிருக்கலாம். வதந்தியா இருக்கும்”

“இருக்கலாம்” என்றான் தீபன் – இருக்காது எனும் குரலில்.

ரகு உடனடியாக தன் செல்பேசியில் இணையத்தை திறந்து பக்கங்களை தீவிரத்துடன் நகர்த்தினான். பிறகு செல்பேசித் திரையை விட்டு கண்ணெடுக்காமலேயே “பயப்பட தேவையில்லை. இரண்டாயிரத்தி சொச்சம்தான்” என்றான்.  

“என்னது?”

“பெங்களூரில் நேற்று இறந்து போனவர்களின் கவுண்ட்”

ரகு செல்பேசியை தீபனை பார்த்து நீட்ட, அதில் சிவப்பு எழுத்துக்களில் எண்கள் மின்னின. 2438.

“இரண்டாயிரத்தி நானூற்றி முப்பத்தி எட்டு” என்று ஒவ்வொரு இலக்கமாக அழுத்தி வாசித்தான் தீபன்.

“அதுதான் நானும் சொன்னேன். ஒன்றும் மோசமான நம்பர் இல்லை.”

“ம்ம்”. அசட்டையாக சொல்லிவிட்டு தீபன் எழுந்து நின்றான். பின்னர், எதையோ ஞாபகப்படுத்த விரும்புவதுப் போல் “அதுல இரண்டு பேர் இதே தெருவா இருக்கலாம்” என்றான்.

O

தீபனும் ரகுவும் பேசிக் கொண்டிருக்கையில், சத்யாவின் அறை திறந்துக் கொண்டது. ஆனால் அந்த அறையிலிருந்து சத்யா மட்டும் தனியாக வெளியே வரவில்லை.  இன்னொரு பெண்ணும் உடன் வந்தாள். தீபன், ரகு இரண்டு பேரும் ஆச்சர்யத்தில் அர்த்தம் கூடாமல் பார்த்து, பிறகு உடனே ஆச்சர்யத்தை மறைத்து வலிந்து இயல்பாகினர்.

மெரூன் நிற மேலாடையும் தொளதொளக்கும் இரவு கால்சட்டையும் அணிந்து, சற்று திறந்திருக்கும் உதடுகளோடு தயக்கமில்லாமல் நடந்து வந்த அப்பெண்ணை “பவித்ரா” என்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்தான் சத்யா.

“அந்த ஆபீஸ் ஃப்ரெண்ட், பவித்ரா நீங்கள்தானா? சத்யா உங்களைப் பத்தி சொல்லியிருக்கான். கடைசியாக நாம் மீட் பண்ணியாச்சு” என்று பவித்ராவிடம் தன் பெயரை சொல்லி ரகு அறிமுகம் செய்து கொண்டான். கொஞ்சம் தள்ளி நின்றிருந்த தீபன் நட்பார்ந்த புன்னகையோடு அவளை நோக்கி “ஹாய்” என்று தலையசைத்தான்.  பவித்ராப் பற்றி தீபனிடம் சத்யா சொன்னதில்லை. அல்லது சொல்லி தீபன் மறந்திருக்கலாம். இரண்டுக்கும் சம அளவில் வாய்ப்புண்டு.

பவித்ராவை சற்று நேரம் கவனித்த தீபன் அவளை அழகி என்று முதலில் எண்ணவில்லை. அவசரமாய் அள்ளி முடிந்த தலைமுடியும், களைத்து போன முகமும் ஈர்ப்பாய் படவில்லை. ஆனால் அந்த எண்ணம் மாறும்படிக்கு அவளிடம் ஏதோவோர் அம்சம் சீக்கிரம் தெளிந்து வந்தது. ரகசியம் சுமந்திருப்பது போன்ற அழுத்தம் காரணமாக இருக்கலாம். அத்தருணத்தில் ஜன்னல் வழியே வெளிச்சம் வந்து விழும் இடத்தை யதேச்சையாக அவள் தேர்வு செய்து நின்றது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

தீபன் மெல்ல அங்கிருந்து விலகி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு மேஜை அருகே நாற்காலியில் அமர்ந்தான்.  சத்யாவும் பவித்ராவும் சோபாவில் உட்கார்ந்தனர். பேச்சை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக உணர்ந்து சத்யா, “பவித்ரா இங்கே வருவது மாதிரி முன்னாடி திட்டமே கிடையாது” என்றான் “திடீர்னு கூட்டிட்டு வர வேண்டியதாகிடுச்சு. நைட்டே போயிட்டேன். அதனால்தான் உங்ககிட்ட சொல்ல முடியல”

பவித்ரா “நான் தான் பிடிவாதமா என்னை ஹாஸ்டலில் இருந்து கூட்டிட்டு போகச் சொன்னேன். அங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா எனக்கு தலையே வெடிச்சிருக்கும்” என்றாள். “நானும் என் ஃப்ரெண்ட் ஒருத்தியும் அந்த ஹாஸ்டலில் ரூம் ஷேர் பண்ணி தங்கியிருந்தோம். அவள் மரணத்துக்கு பிறகு என்னால் அந்த இடத்தில் இருக்க முடியல”. பதினான்கு நாட்கள் கட்டாயத் தனிமை முடிந்ததும் உடனே சத்யாவை தொடர்பு கொண்டு ஹாஸ்டலைவிட்டு வெளியேறிவிட்டதாக அவள் சொன்னாள்.  

பவித்ராவிடம் அவள் தோழி பற்றி மேற்கொண்டு யாரும் எதுவும் கேட்கவில்லை. யாருடைய மரணமும் உடனே தோற்றுவிக்கும் அதிர்ச்சியும் சோகமும் அறையின் காற்றை நிரப்பின. மரணத்தின் காரணம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால், பெயரை சொன்னாலே வெளிப்படும் பூதம் போல அது இங்கே சுவரிலிருந்துக்கூட வெளிப்படக்கூடும் என்பதால் அதை பற்றி பேச தயங்கினார்கள்.

“சாரி பவித்ரா” என்று ரகு பெருமூச்சுவிட்டான் “உங்களுக்கு ஒன்னும் ஆகலயே? அதுதான் இப்போதைக்கான அதிகபட்ச சமாதானம்.”

பவித்ரா மௌனமாக தலையசைக்க, ரகுவே உரையாடலை தொடர்ந்தான். சத்யாவிடம், “நீ எப்படி இவங்கள கூட்டிட்டு வந்த? எல்லா இடத்திலையும் போலீஸ் இருக்குதே” என்று கேட்டான்.

“எல்லாம் ஒரு அசட்டுத் துணிச்சல் தான்” என்று கைகளை உரசிக் கொண்ட சத்யா, ஒரு சாகச கதையின் பாத்திரம் போல பேசினான். “நேத்து ராத்திரி இவளை கூட்டிட்டு வர போகும்போது, ரோட்டில் ஒரு ஆள் கிடையாது. ஒரு அசைவு கிடையாது. இரண்டு மூன்று தடவை பைக்கில் வழி வேற மாறிட்டேன்.  கூடவே, யாரோ துரத்திக்கிட்டே வர மாதிரியும் ஒரு நினைப்பு” கண்களை சிமிட்டி “செம திரில்லான அனுபவம்” என்று முடித்தான். 

 பவித்ரா அவன் உணர்ச்சியை பகிர்ந்து கொள்ளவில்லை. “இதெல்லாம் எப்போ முடியுமோ?”  என்று அலுத்துக் கொண்டாள்.

“கவலைப்படாதீங்க. சீக்கிரம் நிலைமை மாறிடும். இப்போதான் இண்டர்நெட்டில் பார்த்தேன். நேற்று இறந்தவர்கள் கவுண்ட், இரண்டாயிரத்தி நானூறுதான். அதுவொன்னும் மோசமான நம்பர் இல்லை. ரோட் ஆக்சிடெண்டிலேயே அதைவிட அதிகமான பேர் தினமும் இறப்பார்கள்”

“இரண்டாயிரத்து நானூத்தி முப்பத்தியெட்டு”. அதுவரை மௌனமாக இருந்த தீபன் உடனடியாக ரகுவின் எண்ணிக்கையை திருத்தினான். அவன் பதிலை ரகு சட்டை செய்யவில்லை. ஆனால் பவித்ராவின் பார்வை மட்டும் தீபன் மேல் –கேள்வி போலவோ தலையாட்டல் போலவோ- குத்திட்டு நிலைத்து பின் விலகியது. அதை தீபனாலும் உணர முடிந்தது.

 “சோகக் கதை எல்லாம் போதும்”. என்று பேச்சை திசை மாற்றினான் சத்யா. “நாளை என்ன நடக்குதோ நடக்கட்டும். இப்போ எனக்கு பசிக்குது. சட்னி அரைத்து தோசை சுடலாமா?” என்று ஆர்வமாக கேட்டான். உணவு பற்றி பேசும்போது எப்படியோ அவனில் தவிர்க்கவே முடியாமல் உற்சாகம் சேர்ந்துவிடுகிறது. 

சத்யாவும் ரகுவும் காலை உணவு தயாரிக்க சமையலறைக்குச் செல்ல, தீபன் அங்கேயே அமர்ந்திருந்தான். அவர்கள் போனதும் பவித்ராவிடம் தனியே பேச அவனுக்கு விருப்பம் வந்தது.

அறை இப்போது நன்று பிரகாசமாகியிருந்தது. கூடத்தில் தொலைக்காட்சியின் கருப்புத் திரை வெளிச்சக் கோடுகளில் மினுங்கியது. காலைப்பொழுதின் ஆரம்பத்தில் இருக்கும் தயக்கமான மனோநிலை அவ்விடத்தைவிட்டு விலகியிருந்தது. பவித்ரா வெற்றிடத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். சட்டென்று தீபனின் இருப்பை அறிந்ததுப் போல, தன்னைத் திரட்டிக் கொண்டு பலகீனமாக சிரித்தாள்.

“ஏன் அந்த இடத்தை விட்டு நீங்க உடனே வர நினைச்சீங்கன்னு புரியுது” என்றான் தீபன். “உங்க ஃப்ரெண்ட் போனப் பிறகு நிச்சயமாக அந்த இடத்துல இருக்க முடியாது. அவங்க கூடவே இருக்கிற மாதிரி தோணியிருக்கும்”. 

பவித்ரா மறுப்பாக தலையாட்டி “அவளை கொண்டு போன பிறகு, அவ அங்கே இருக்கிற மாதிரி எனக்கு தோணியதேயில்லை” என்றாள்.”அவ அங்கே இல்லை என்று எனக்கு உறுதியாக தெரிஞ்சுது. ஆனா அவ நிழல் மட்டும் சுவரில் அலைவது மாதிரி அடிக்கடி தோணும். ” 

O

ன் அறையில் கதவு சாத்தி கீழே படுக்கையில் சரிந்து உட்கார்ந்திருந்தான் தீபன். அந்தி சாயும் வெளிச்சம் பால்கனித் தாண்டி தரையில் நெருப்பின் சாயையோடு படிந்திருந்தது. மெல்ல அந்த நாள் முடிவு நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெளியே மனித சந்தடி இல்லாததால் ஒரு நாளின் முடிவை உணர்வது சிரமமாக இருந்தது. பறவைகளின் மட்டும் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. விடியற்காலையிலும் கருக்கலிலும் மட்டுமே கேட்கக்கூடிய பறவைகளின் குரல் இப்போது நாள் முழுக்க ஒலிப்பதால் அதை வைத்தும் காலத்தை கணிக்க முடிவதில்லை. காகங்களும் குருவிகளும், “யாரும் இல்லையா?” என்று பொழுதுக்கும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஜன்னல் பக்கம், புறாக்களின் ஓயாத சிறகசைப்பு. மனிதர்கள் இல்லா நகரில், அப்பறவைகள் மகிழ்ந்திருக்கின்றனவா அல்லது பயந்திருக்கின்றனவா என்றே சொல்ல முடியவில்லை.

உறக்கமின்மையில் தீபன் உடல் லேசாக வெப்பம் கண்டிருந்தது. கண்களில் எடையேறியது. மேலும் அவன் வலது கையில் வேறு காந்தலும் வலியும் மிகுந்துக் கொண்டிருந்தன. காயம்பட்ட மூன்று விரல்களில் காற்றுப் படுந்தோறும் பொறுக்கமாட்டாமல் உச்சுக் கொட்டினான். மதியம் சமையலறையில் ஏற்பட்ட காயம் அது.

சத்யா, மதியம் பருப்புக் குழம்பும் தேங்காய் அரைத்துவிட்ட கேரளா பாணி அவியலும் சமைத்திருந்தான். காய்கறி வெட்டுவது, தேங்காய் அரைப்பது என்று எல்லோரும் அவனுக்கு உதவினார்கள். ரகு பவித்ராவிடம் பேச்சுக் கொடுத்தபடி இருந்தான். பவித்ராவின் பெற்றோர், ஊர், படிப்பு என்று ஆரம்பித்து சத்யா அவளுக்கு அறிமுகமானது, அவர்களுடைய உறவு இவை பற்றி குட்டிக் குட்டி தந்திரங்களோடு அவன் கேள்வி கேட்க, அவளும் சகஜமாக பதில் சொன்னாள். பவித்ராவும் அவர்களை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டாள். ரகு, சத்யா, தீபன் மூவரும் கல்லூரி நாட்களிலிருந்து நண்பர்களாய் இருப்பது; பெங்களூரில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்து இடம் பெயர்ந்து ஒன்றாக அபார்ட்மெண்ட்டில் வீடு எடுத்து தங்கியது என்று அவர்கள் உரையாடல் வளர்ந்தது.

பேச்செல்லாம் முடிந்து குழம்பும் கறியும் தயாராக பிறகு, அடுப்பில் சாதம் மட்டும் வெந்துக் கொண்டிருந்தது. அப்போது அரிசி பானை மூடியை தீபன் அவசரமாக எடுத்து பார்த்ததில், நீராவி பரவிய மூடி சரிந்து கையில் விழுந்து விரல்கள் பொத்துவிட்டன.

மதியம் சூடுபட்டபோது உடனே வலி தெரியவில்லை. நேரம் கூட கூட, எரிச்சல் அதிகரித்து வந்தது. சமையலறையில் பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்றான் சத்யா. “கிட்சனில் என்ன இருக்கிறது? கத்தியும் நெருப்பும்தானே” என்று சத்யா சிரித்தபோது தீபனுக்கு வினோதமாக இருந்தது. கத்திக்கும் நெருப்புக்கும் நடுவே இயல்பாகவும் லாவகாமாகவும் புழங்கிய சத்யா, சாப்பாட்டிலும் அலாதியான ருசியை கொண்டு வந்திருந்தான். தயிர் கலந்த அவியல் சுவை இன்னமும் நாக்கில் எஞ்சியிருந்தது.

அறையில் அமர்ந்திருந்த தீபன் மனதில் அன்றைய நாள், துண்டு துண்டு காட்சிகளாக ஓடியது. அப்போது அனிச்சையாக அவன் வலது கையை கன்னத்தில் வைத்தான். நொடியில் சுருக்கென்று வலி அழுத்த, யோசனையில்லாமல் தரையில் கையை ஊன்றினான். வலி இரு மடங்கானது. கையை உதறி உதறி துடித்தான். பின், வேகமாக எழுந்து குளியலறைக்கு போய் தண்ணீர் வாளியில் கையை முக்கினான். நீரின் குளிர்ச்சியில் காந்தல் மெல்ல அடங்கியது. அவன் விரல்களை பார்த்தான். சிறு படலமாக தோலைச் சுற்றி விரல்களில் கோடிழுத்திருந்தது. நீரில் முங்கி வெளிரும் விரல்களை சற்று நேரம் பார்த்துக் கொண்டேயிருக்க, மட்டுப்பட்ட வலி கொஞ்சம் கிளர்ச்சியூட்டியது. எதிர்பாராமல் உடலில் தோன்றும் மின்சாரம் போல. அதை உணர்ந்தவாறு குளியலறைவிட்டு வெளியேறி தீபன் தன் படுக்கையில் திரும்பவும் வந்து உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரம் ஆசுவாசமாக இருந்தது. அந்தியின் ஒளி அறைச் சுவர்களில் சிவப்பு தீற்றல்களாக நடனமிடுவதை பார்க்கலானான். தூய்மையான ஒளியசைவுகள்.   அக்காட்சிக்கு சம்பந்தமில்லாத மாதிரி அறைக்குள் பொருட்கள் கலைந்துக் கிடப்பதும் தரை அழுக்கேறி இருப்பதும் மனதில் நெருடியது. அறையை சுத்தம் செய்ய வேண்டும் என மீண்டும் விருப்பம் வந்தது. உடனே தஸ்தாயெவ்ஸ்கி திரும்பவும் ஞாபகத்தில் வந்தார்.  ரஸ்கல்நிகோவின் அம்மா அவன் அறையை சவப்பெட்டி என்று சொல்கிறாளே. அவ்வளவு ஏன், ரஸ்கல்நிகோவே பிற்பாடு சோனியாவிடம், அறைகள் மனிதனை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா என்று கேட்கிறானே? தீபன் சட்டென்று தன் எண்ணவோட்டத்தை வெட்டி நிறுத்தினான். அந்த ருஷ்ய வலிப்பு நோயாளி, சம்பந்தமேயில்லாமல் எல்லோரையும் தன் கதையின் பாத்திரங்கள் போல உணரச் செய்துவிடுகிறான் என்று சலித்துக் கொண்டான்.

அறையை சீக்கிரம் சுத்த செய்ய வேண்டும் என தீபனுக்கு முனைப்புக் கூடியது. இப்படி எண்ணும்போதே அவன் விரல்களில் மீண்டும் வலி பரவியது.   எந்த பொருளையும் தற்சமயம் தொட்டு எடுக்க முடியும் என அவனுக்கு தோன்றவில்லை. கைவிரல்கள் கனத்துக் கொண்டிருந்தன.  தொடுதல் பற்றி யோசிக்கையில் சம்பந்தமில்லாமல் பவித்ராவின் நினைவு வந்தது. அங்கிருந்து இங்கு வந்தது எப்படி என்று தெரியவில்லை. அவள் மொத்த உருவமும் கண்முண் வந்து நிலைத்தது. பெரிய உதடுகளோடும் மணிக்கட்டிலிருந்து மேலேறும் கையின் திரட்சியோடும் அவள் அங்கு ரூபமாய் நிலைத்திருந்தாள்.

மதியம் எல்லோரும் சேர்ந்து உணவருந்திய பிறகு பவித்ரா சத்யாவோடு அறைக்கு போய்விட்டாள். தீபனால் மேற்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. விரல்களில் வலியும் வளர ஆரம்பித்திருந்தது. ரகு “என் ரூமில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கிறது.காயத்துக்கு மருந்து எடுத்து தரவா?” என்று கேட்க, அதை மறுத்து விரைந்து தன் அறைக்கு வந்தான். கிட்டத்தட்ட தப்பித்து விலகுபவன் போல. இப்போது பவித்ராவின் ஞாபகம் மனதில் திறக்கிறது.  யதேச்சையாக வருகிறதா அல்லது காத்திருந்து வெளிப்படுகிறதா என்று தெரியவில்லை.

காலையில், பக்கவாட்டில் அமந்து பார்த்த அவள் முகம் தீபன் மனதில் எழுந்தது. எந்த முகத்திலும் ஒருதடவை அழகை, அழகின் கோணத்தை கண்டுபிடித்துவிட்ட பிறகு அதை ஒதுக்கிவிட்டு கற்பனையே செய்ய முடிவதில்லை. பவித்ராவின் அகன்ற நெற்றிக்கு கீழே உருண்டையான கண்கள். ஏதோ பேச ஆரம்பித்து பாதியில் நிறுத்துவிட்டது போல் சற்று திறந்திருக்கும் பெரிய உதடுகள். அவை ஒருவித நிரந்தர திடுக்கிடலை அவளிடம் காட்டின. எண்ணும்போதே அவளை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று தீபனுக்கு விருப்பம் மூண்டது. மறுநொடியே அப்படி பேச நேரவேக்கூடாது என்றும் நினைத்துக் கொண்டான்.

இருண்ட அறைகளைக் கண்டு பயந்த மாதிரி தஸ்தாயெவ்ஸ்கி பெண்களை கண்டும் பயந்தார் என தீபன் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. இல்லையென்றால் கரமசோவில், டிமிட்ரியை அப்படி நாய் மாதிரி அலையவிட்டிருப்பாரா? அவன் பெருமூச்சுவிட்டு கண்களை மூடினான். இருட்டுக்குள் தீ போல் கண்கள் தகித்தன. இமைகளை அழுத்தி மூடிக் கொண்டான். லேசாக சமநிலைக் கூடியது. ஆனால் கைவிரல்களில் ஈரம் காய்ந்ததும் முன்னைக் காட்டிலும் கூடுதலாக வலி எழ ஆரம்பித்தது. அவன் கண்களை திறக்கவில்லை. மூளையில் திரைப் போல உறக்கம் படிந்து வந்தது. ஆனால் பிரக்ஞை அந்த வலியோடு கட்டப்பட்டிருந்தது. அதை அவன் கவனிக்கலானான். மனம் மெல்ல ஆற்றுப்பட இமை மூடிய இருட்டில் அந்த வலியை விலகி நின்று பார்க்க முடிந்தது. அந்த வலி சிறிய அசௌகர்யம் மட்டுமே என்று பட்டது. தொடர்ச்சியான அசௌகர்யம். ஆனால் பொறுத்துக் கொள்ள முடியும். வலி அடங்கி பின் மீண்டும் துவங்குவதை தீபன் அறிகிறான். ஒரு நினைவூட்டல் போல அது எழுகிறது. பின் ஞாகபம் போலவே கரைகிறது. மெல்ல அவன் உறக்கத்தினுள் சரிந்தான்.

O
தீபன் நெடுநேரம் தூங்கியிருக்கவில்லை. சீக்கிரமே ஆழத்திலிருந்து யாரோ அவனை வெளியே உந்தித் தள்ளினார்கள். அதிர்ந்து எழுந்தான். ஏதேதோ பேசிக் கொண்டிருந்த வெவ்வேறு குரல்கள் பாதியில் நின்றது போல விடுபடலாய் ஓர் அமைதி.

கண் விழித்ததும், தீபன் உடனடியாக அறிந்தது சுற்றியுள்ள இருட்டை. அவன் தூங்கி எழுந்த சிறுபொழுதில் இரவு வந்துவிட்டிருந்தது. அறையை நிறைத்த அந்த கருமையும், உலகில் மனிதர்களே இல்லாத மாதிரியான தொலைதூரம் வரையிலான நிசப்தமும் அச்சமூட்டின. தீபன் லேசாக நடுங்கத் துவங்கினான். தலையணை பக்கமிருந்து செல்பேசியை இடது கையில் எடுத்தான். திரையை தொட்டு திறந்ததுமே ஊரில் அம்மாவிடம் பேசலாம் என்று நினைப்பு தட்டியது. ஒரு நிமிடம் நான்கு விநாடிகள் மட்டும் நீண்ட சம்பிரதாயமான பேச்சு. சாப்பிட்டியா என்று அம்மா கேட்டாள். ஆமாம் என்று அவன் சொன்னான். அங்கே எல்லோரும் பத்திரமா என்று அவன் கேட்டான். நீ பத்திரமாக இரு என்றாள் அம்மா. அப்பா நலமா என்று அவன் கேட்டான். அவருக்கென்ன? உலகமே அழிஞ்சாலும் அவர் தன் போக்கில் இருப்பார் என்றாள் அம்மா. அப்புறம் என்றான் அவன். ஊரடங்கால், கோயிலுக்கே போக முடியவில்லை என்று வருத்தமாக சொன்னாள் அம்மா. ம்ம்ம் என்றான் அவன். சரி,நேரத்துக்கு சாப்பிடு, நேரத்துக்கு தூங்கு என்றாள் அவள்.

தீபன் போன் பேசி முடிக்கவும், திடீரென்று அந்த அறைக்குள் வெளிச்சம் நிறைந்தது. “ஏன் இருட்டில் இருக்க? லைட் போட்டால் என்ன?” கதவை திறந்து வந்த ரகு வாசல் கதவுக்கு பக்கம் நின்று விளக்கு ஸ்விட்சை அழுத்தினான்.

“சொல்லிட்டு லைட் போடக்கூடாதா? வெளிச்சம் கண்ணுல பாயுது”

“வலி இப்போ பரவாயில்லையா?” அந்த அறையில் எங்கே உட்கார்வது என்று ரகு யோசித்தான். கட்டிலில் சில புத்தகங்களை ஒதுக்கிவிட்டு “ரூமை சுத்தமா அடுக்கி வச்சாதான் என்ன?” என்றபடி அமர்ந்தான்.

“இந்த அட்வைஸ் கொடுக்கதான் இப்போ வந்தியா?”

“இல்லை. சும்மா போரடிக்குது, பேசலாமேனுதான் வந்தேன். ரூமை பார்த்ததும் தோணுச்சு. சொன்னேன். தப்பா?”

தீபன் அமைதியாக இருந்தான்.

“நீ இன்னும் கொஞ்சம் டிசிப்ளினோடு இருக்கலாம். அதுவும் வெளியே இவ்வளவு கேயாஸ் இருக்கும்போது நம்ம ரூமாவது ஆர்டரா இருக்கனும்” என்றபடி ரகு அந்த இடத்தை சுற்றி பார்த்தான். “அறையை சுத்தம் செய்யுறதும் வாழ்க்கையை சுத்தம் செய்யுறதும் ஒன்னுதான் தெரியுமா? ஜோர்டன் பீட்டர்சன் அதை சொல்லிக்கிட்டே இருக்கார்”. சிதறி கிடக்கும் புத்தகங்களை பார்த்தவாறு தோளை குலுக்கி “கதை, நாவல்னு கண்டதையும் படிக்கிறதுக்கு பதிலாக நீ அவர் எழுத்துக்களை படிக்கலாம். பிரயோஜனமா இருக்கும். வேறெதையும் படிக்கவே தேவையில்லை” என்றான்

ரகு இதுவரை தன் வாழ்நாளில் வாசித்த நான்கு புத்தகங்களிலேயே அவனுக்கு மிகவும் பிடித்தமானது ஜோர்டன் பீட்டர்சனின் “வாழ்க்கைக்கான பன்னிரெண்டு விதிகள்” நூலே. அவன் படித்த மற்ற மூன்று புத்தகங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு; பாலோ கெய்லோவின் ரசவாதி நாவல்; ராபின் ஷர்மாவின் தினசரி உத்வேகம். அவன் மேஜையில் இந்த புத்தகங்கள் வரிசை குலையாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஜோர்டன் பீட்டர்சனின் நூல் கை தொடும் இடைவெளியிலேயே எப்போதும் இருக்கும். அந்த பன்னிரெண்டு விதிகளையும் அவனால் அப்படியே ஒப்பிக்க முடியும். முதல் விதி, தோள்களை விரித்து நிமிர்ந்து நில். இரண்டாவது, நீ உதவி செய்ய வேண்டிய இன்னொரு மனிதனைப் போல உன்னை நடத்து. அந்த பட்டியலில் ஆறாவது விதிதான் – உலகை விமர்சிப்பதற்கு முன்னால் உன் வீட்டை சுத்தமாக்கு என்பது.

தீபன் ஆழ மூச்சை இழுத்துவிட்டு “இந்த ரூமை யாருமே ஒழுங்கு பண்ணி வைக்க முடியாது” என்றான்.

“ஏன்?”

“அது அப்படித்தான்”. ஞாபகமில்லாமல் கைவிரல்களை மடக்கி நீட்டி வலியில் தீபன் நாக்கை கடித்துக் கொண்டான். பிறகு அந்த வலியோடே “வேறு யாரோ இங்கே இருக்காங்க” என்றான்.

“என்ன டா சொல்ற?”

“ஆமா” தீபன் குரலில் அழுத்தம் ஏறியது “இந்த ரூமில் நமக்கு தெரியாம யாரோ இருக்காங்க”

“உளறாதே”

“நம்பலைன்னா விடு. எனக்கென்ன ஆசையா, இப்படி கலைச்சு போட்டு வாழுறதுக்கு? யாரோ கலைச்சு போடுறாங்க. நான் என்ன பண்ண முடியும்?”

“நக்கல் பண்றியா?”    

“உண்மையாதான் சொல்றேன். எத்தனையோ தடவை ரூம் சாவியை சரியா நான் டேபிளில் வச்சிருக்கேன் ஆனா ஒவ்வொரு தடவையும் தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கு. அப்போ அதை ஒளிச்சு வைக்கிறது யாரு?” டேபிள் நோக்கி அவன் கை காட்டினான். சாவி கிண்ணம் காலியாக இருந்தது

ரகு அதை பார்த்துவிட்டு, “பைத்தியம் மாதிரி பேசாத” என்றான். திறந்த பால்கனி வழியே அறையை குளிர் நிறைக்கத் தொடங்கியது. அந்த பக்கம் திரும்பிய ரகு, இருட்டை கண்டு திடுக்கிட்டு பார்வையை தீபனின் முகத்திலேயே பதித்து வைத்தான்.    

“எனக்கும் நம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆனா அதுதான் உண்மை. இதோ, இந்த புக்ஸக்கூட நான் அடுக்கிதான் வைக்குறேன். ஆனா எல்லாம் இடம் மாறுது. கலைஞ்சு போகுது. அதுக்கூட பரவாயில்லை. இன்னொரு விஷயம் சொல்லவா?”

“ம்ம்ம்”

“சொன்னால் நம்புவியோ மாட்டியோ”

“ம்ம்ம்”

“கொஞ்ச நாளா அடிக்கடி என் புக்ஸ் காணாம போகுது தெரியுமா?” குறிப்பாக கவிதை புத்தகங்களாய் தொலைந்து போவதாக தீபன் சொன்னான். “யாரோ தேடி, எடுக்குறாங்க”

“கவிதையா?”

“ஆமாம். கவிதையே தான்”

“ம்ம்ம்”

“ரொம்ப அமைதியாக இருக்கும்போது உத்து கவனிச்சா யாரோ கவிதை வாசிக்கிறதுக்கூட இங்க கேட்கும். வேணும்னா, நீயும் கவனிச்சு பாரேன்”

“ஏதாவது பொய் சொல்லாத” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ரகு மௌனமானான். தீபன் தலை குனிந்து கண்களை அங்கும் இங்கும் அலையவிட்டான். ரகுவை நோக்கி, உதட்டில் கை வைத்து சைகை செய்தான் – உன்னிப்பாக கவனிக்கும்படி. ரகுவின் செவி கூர்மையுற்றது. சுவர்ப் பூச்சிகளின் ரீங்காரம் மட்டும் ஒரு நீண்ட அழைப்பாக அங்கு நிலவியது. அந்த ஓசையை தனியே கேட்க முடிந்ததும் அது அடங்கி அறையில் அமைதி இன்னும் துல்லியமானது. இருவராலும் தங்கள் மூச்சொலியை வெளியே கேட்க முடிந்தது. சொட்டக் காத்திருக்கும் நீர்த் துளி போல ரகு தளும்பினான். கால்மயிர்கள் சிலிர்த்து அடங்கின. அந்த அமைதிக்குள் லேசான அசைவு. யாரோ பேச தயாராவதுப் போல. வெடுக்கென்று ரகு எழுந்து நின்றான் “போடா. உன் முட்டாள்த்தனத்துக்கெல்லாம் எனக்கு நேரமில்ல”

ரகு வெளியேச் சென்றதும் தீபன் கால் மணி நேரம் அறையில் இருந்தான். அதற்கு மேல், அவனாலும் அங்கே தனியாக இருக்க முடியவில்லை. எழுந்து கூடம் நோக்கி போனான்.

O

தீபன் போனபோது, கூடத்தில் ரகுவும் சத்யாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். செய்தி சேனலில் விவாத நிகழ்ச்சி ஓடியது. சோதனை மிகுந்த இந்நாட்களை எப்படி அர்த்தப்படுத்துவது என்பது விவாதத் தலைப்பு. விவாத மேஜையில் இருந்த யாருக்குமே அந்த கேள்விக்கு பதில் தெரிந்ததுப் போல படவில்லை. ஆனால் எல்லோரும் தன்னம்பிக்கையோடு கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தீபன் அங்கே வந்து நின்றிருப்பதை கவனித்த சத்யா, அந்த சந்தர்பத்திற்காகவே காத்திருந்த மாதிரி மேஜை மேலிருந்த ரிமோட்டை எடுத்து தொலைகாட்சி சேனலை மாற்றினான். “போதும் நியூஸ். வேற ஏதாவது பார்ப்போம்”

“நியூஸ் பார்த்தாதான் உலக நடப்பு தெரியும்” ரகு, அலுத்துக் கொள்ள, தீபன் நாற்காலியில் உட்கார்ந்தான். எதிர்வரிசையிலிருந்து ஒரு முட்டாளை பார்ப்பது போல, ரகு தீபனை பார்த்து உதட்டை சுளித்து முகத்தை வெட்டினான். தீபனுக்கு லேசாக சிரிப்பு வந்தது. 

சத்யா கடைசியாக வைத்த சேனலில், ஒரு பழைய படக் காட்சி ஓடியது.

“இதுவே இருக்கட்டும். நல்ல படம்” என்றான் ரகு.

திரைப்படத்தில் ஒரு காதல் பாடல் வந்தது. பிரபலமான பாடல் மெட்டில் அந்த அறை ஓர் இனிய பருவத்துக்கு வேகமாய் திரும்பியது. வெளி உலகமும் அதன் அச்சங்களும் அவர்கள் ஞாபகத்தில் பின்னால் போயின. தொலைக்காட்சியில் சேனல் மாற்றுவது போலவே, அவ்வளவு எளிதாக அது நடந்தது. ரகுவும் சத்யாவும் அந்த பாடலை முணுமுணுத்தனர். வரிகளை மறந்தும் மாற்றியும் உற்சாகமாக பாடினர்.

தீபன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோதும், அவன் கவனம் அந்த படத்திலோ பாட்டிலோ நிலைக்கவில்லை. நடுவே ஒரு தடவை கைவிரல்களில் வலி எடுக்க, எழுந்துச் சென்று சமையல் அறை சிங்கில் கைவிரல்களை நனைத்துவிட்டு வந்தான். நீரின் குளிர்ச்சியில் சிறு இதம் எழுந்தது. திரும்பி வந்து தீபன் சோபாவில் உட்கார்ந்தான். அப்போதும் தொலைக்காட்சியில் அவனால் லயிக்க முடியவில்லை. அவனுக்கும் பிடித்த பாடல் தான் அது. ஆனால் அவன் மனம் நிலையின்றி சுற்றியது. பவித்ரா எங்கே என்று சத்யாவிடம் கேட்க நினைப்பு தள்ளியது. பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டான்.

தீபன் பார்வை சத்யாவை தொட்டு தொட்டு விலகியது. முதல் தடவை பார்ப்பதுப் போல சத்யா, ஒரு புதிய மனிதனாக அவனுக்கு காட்சி அளித்தான். வசீகரமானவன் என்று பட்டது. ஆனால் அந்த வசீகரம் அவன் தோற்றத்தினால் மட்டும் வரவில்லை. மாநிற முகத்தில் நுணுகி கத்தரிக்கப்பட்ட சீரான தாடி, கள்ளத்தனம் போல் சற்று மேலேறிய நெற்றி, சின்ன தொப்பையோடு வாட்டசாட்டமான உடல், ஆர்வமான கண்கள் இவை எல்லாவற்றையும் கடந்த வேறேதோவொன்றும் கலந்தே, அந்த வசீகரம் அவனில் உருவாகியிருந்தது. பெயர் சொல்லமுடியாத ஆனால் யாரும் உடனடியாக கண்டுகொள்ளக்கூடிய ஒன்று.

 தொலைக்காட்சி பார்த்தவாறே ரகு “பவித்ரா எங்கே?” என்று பொதுவாக கேட்டான்.

“சாமி படத்துக்கு விளக்கு ஏத்தி வேண்டிக்கிட்டிருக்கா”

“சாமிப் படமா?” அனிச்சையாக தீபன் கேட்க, “அதுக்கு நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிற?” என்றான் ரகு.

“சும்மா கேட்டேன்”

சத்யா, “ஆமாம். சாமிப் படம்தான். பைக்குள்ளேயே ஏதோ படம் வச்சிருக்கா. விளக்கும் அவளே கொண்டு வந்ததுதான்” என்றான்.

“தீப்பெட்டி அவ எடுத்திட்டு வர தேவையில்லை. உன்கிட்டயே இருக்கும்” என்று ரகு சிரித்தான்.

“அட நீ வேற ஏன்டா? என் கம்யூட்டர் டேபிளே பூஜை ரூம் மாதிரி ஆகிடுச்சு”

“என்ன பேசுகிறீர்கள்?” என்றபடி லேசான கற்பூர வாடையோடு பவித்ரா கூடத்துக்கு வந்தாள்.

சத்யா இயல்பாக “ஒன்னுமில்லை. வா, வந்து உட்காரு” என்றபடி சற்று தள்ளி அமர்ந்து சோபாவில் பவித்ராவுக்கு இடம் கொடுத்தான். காலையில் பார்த்த மாதிரியே, தீபனால், மீண்டும் பக்கவாட்டு கோணத்தில் இருந்து பவித்ராவை காண முடிந்தது. கத்திரிப் பூ நிறத்தில் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள். தலை குளித்து லூஸ் ஹேர் தோளில் புரண்டது. காலையில் பார்த்தது போல், பாரம் அழுந்தி அவள் காணப்படவில்லை. அதே நேரம் மகிழ்ச்சியானவளாகவும் தெரியவில்லை. ஏற்கனவே அறிமுகமானவளாகவும், புதிதாக தோன்றுபவளாகவும் ஒருங்கே காட்சியளித்தாள். அத்தனை வேறுபாட்டுக்குமான காரணமாய், நெற்றியில் ரத்தத் துளியாய் குங்குமமிருந்தது. அதைக் கண்டு வித்தியாசமாக உணர்ந்து சத்யா ரகு தீபன் மூவருமே பேசாமல் இருந்தனர்.

“என்ன இப்படி ஒரு அமைதி?”

“ஒன்னும் இல்லை” என்றான் ரகு “இந்த ஃபிளாட்டில் நாங்க யாரும் சாமி கும்பிட்டதில்ல. அதனால நீ பக்தியோட வந்திருக்கிறது புதுசா இருக்கு”.

“என்ன இருந்தாலும் இது பேச்சிலர்கள் வீடில்லையா?” என்றான் சத்யா.

“அது சரி” என்று பவித்ரா கோணலாக உதட்டை வெட்டினாள். “சாமிதானே கும்பிட்டதில்லை? அதுக்கு இப்படி பயப்பட வேண்டாம்”

“யார் கண்டது?” என்று தோளை குலுக்கினான் சத்யா. “ராம நாராயணன் படங்களில் இப்படிதான், கெட்ட சக்திகளின் வீட்டுக்கு அம்மன் மாறுவேஷத்தில் வரும்”

ரகு சத்தமாக சிரிக்க, தீபன் சிரிப்பதா பயப்படுவதா எனும் குழப்பத்தில் இருந்த மாதிரி தெரிந்தான். 

“ரொம்ப அலட்டாதே” என்று சத்யாவை தோளில் அடித்தாள் பவித்ரா. “இதுக்கு முன்னால் இந்த பேச்சிலர் குகைக்கு, பொண்ணுங்களே வந்ததில்லையா என்ன?” என்று சீண்டுகிற மாதிரி கேட்டாள்.

ரகு வாயை ஜிப் வைத்து மூடுவதுப் போல் சைகை செய்தான். மூவராலுமே அந்த கேள்விக்கு உண்மையான பதிலை சொல்லியிருக்க முடியாது. அவர்கள் குடிவந்த ஐந்து வருடங்களில் அந்த வீட்டிற்கு, பெண்கள் நிச்சயமாய் வந்திருக்கிறார்கள். வெளியே சொல்லக்கூடிய பெண்கள். வெளியே சொல்ல முடியாத பெண்கள். ரகுவின் பழைய தோழிக்கூட இங்கு வந்திருக்கிறாள். தன் நகைச்சுவை உணர்வின்மேல் அவசியத்துக்கு மேல் நம்பிக்கைக் கொண்ட பெண். ரகுவும் அவளும், பின்னர் பிரிந்து விட்டார்கள். தீபனுடைய பழைய தோழி இங்கே வந்தது கிடையாது. ஆனால் அவளும் இப்போது தீபனோடு உறவில் இல்லை. பிரியும்போது அவள் சொன்ன குற்றச்சாட்டுகளை தீபனும் ஏற்றுக் கொள்ளவே செய்தான். மூன்று பேரில் கடைசியில் சத்யாவுக்குதான் ஒரு ஸ்திரமான உறவு அமைந்திருக்கிறது. அவன் கடந்தகாலத்தில் அதற்கான தடயமே இல்லை. அவன், நிராகரித்த பெண்கள், அவன் நிராகரிக்கக்கூடும் என்பதையறிந்து முன்னமே விலகிக் கொண்ட பெண்கள் – இந்த இரண்டு விதமாகத்தான் அவனுக்கு உறவு வாய்த்திருக்கிறது. இரண்டு நிலைகளிலும் ஒரேவிதமான துயரை அவன் அனுபவித்திருக்கிறான்.

“என்ன மறுபடி அமைதி?” என்றாள் பவித்ரா. “மூணு பேரில் நீங்கதான் ரொம்ப அமைதி போல” என்று தீபன் பக்கம் திரும்பினாள்.

தீபன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. தடுமாறி விழித்தான். மேலும் சரியாக தூக்கமில்லாமல், எல்லோருடைய குரலும் அவனுக்கு எதிரொலி போல கேட்டுக் கொண்டிருந்தது. 

“அவனா? பார்க்கத்தான் அமைதியா இருப்பான். ஆனால் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றான் ரகு “அவன் ரூமுக்கு போய் பார். பேயை தன் கூட தங்க வைத்திருக்கிறான்”

“பேயா?”

“ஆமாம். கவிதை வாசிக்கும் பேய்”

“அப்ப, இது ஏற்கனவே பேய் இருக்கும் வீடுதான் போல். சாமி வந்தால் மட்டும் ஆகாதா?” என்றாள் பவித்ரா

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவன் சும்மா சொல்கிறான்” என்றான் தீபன். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டோ?” அக்கேள்வியை கேட்ட பிறகு, தனக்கே அதன் அர்த்தம் புரியாத மாதிரி குழப்பமாக தோன்றினான் தீபன்.

“ஏன் அப்படி கேட்கிறீங்க? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா என்ன?”

தீபன் பதில் சொல்வதற்கு முன்பாக, ரகுவும் சத்யாவும் “எனக்கு இருக்கிறது” என்று வேகமாக பதிலுரைத்தார்கள். பதில் பேசாமல் அமைதியாக இருந்த தீபன் மேல் மூன்று ஜோடிக் கண்களும் நிலைத்தன. “நீங்க இன்னும் பதில் சொல்லலயே?”

“தெரியலை”

“தெரியலையா?”

“கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்று எனக்கே தெரியலை” தீபன் சிறு இடைவெளிக்கு பிறகு “ஆனால் என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு” என்றான். அம்மா எப்போதும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பதை அவன் நினைவுக் கூர்ந்தான். “சின்ன வயசில் இருந்தே, எனக்கும் சேர்த்து வேண்டிக்கச் சொல்லி அம்மாவிடம் நான் கேட்பேன்” என்று தீபன், தன் விரல்களில் மீண்டும் வலி அழுத்துவதை உணர்ந்தபடி, பவித்ராவை நோக்கினான். அவள் தலையாட்டினாள். 

O

பகுதி 2

த்யாவின் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விளக்கேற்றினாள், பவித்ரா. தன் தோழி கொண்டுச் செல்லப்பட்ட பிறகு பதினான்கு நாட்கள் பவித்ரா ஹாஸ்டலில் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டியிருந்தது. தினமும் மாலையில் அம்மன் படத்துக்கு விளக்கேற்றி வழிபடுவது அப்போது தொடங்கிய பழக்கம். ஆனால் அதை அவள் பயத்தினால் மட்டும் செய்யவில்லை. தான் வசித்து வந்தவரை, ஹாஸ்டலில் அவள் தோழி பின்பற்றிய நடைமுறை இது. அவள் இல்லாத இடத்தில், அக்கடமையை பவித்ரா மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அவள் தோழியும் சமீபமாய்தான் இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள். தினந்தோறும் தொலைக்காட்சி, பத்திரிக்கை, செல்போன் இவை எல்லாவற்றிலும் இறந்துபோனவர்களின் பட்டியல் அறிக்கையாய் வெளியாவதைக் கண்டு, அவள் தாளாமாட்டாமல் இந்த முடிவை எடுத்தாள். அந்த ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. குட்டி இலைப் போன்ற பித்தளை விளக்கில் அம்மனுக்கு அவள் தினமும் தீபம் ஏற்றத் தொடங்கினாள். நிறைய பேச விரும்புபவளும், சகல நிகழ்வுகள்மீதும் கருத்துக் கொண்டிருப்பவளும், பொதுவாக மனிதர்கள் மேல் நம்பிக்கை உள்ளவளுமான பவித்ராவின் தோழி அச்செயலை நேர்ச்சையெனவே நிகழ்த்தினாள். இப்போது பவித்ரா தன்னை அதற்கு ஒப்புக் கொடுத்திருந்தாள்.

நீல நிறத்தில் பாதுகாப்பு உடை அணிந்த அரசு ஊழியர்கள், அசையும் இயந்திரங்கள் போல, ஹாஸ்டலுக்கு வந்து பவித்ராவின் தோழியை கொண்டு போன அன்று, அவளுடைய எல்லா உடமைகளையும் சேகரித்துக் கொண்டார்கள். ஆடைகள். கைப் பை. செல்பேசி. மடிக் கணினி.  இவை எல்லாவற்றையும், ஒரு மனிதரை சுமக்கும் அளவு உயரமான, கருப்பு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் அம்மன் படத்தையும் விளக்கையும் எடுத்துச் செல்லவில்லை. பவித்ரா அவற்றை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

தன் தோழி வழியே பவித்ராவுக்கு அறிமுகமான அக்கடவுளின் பெயர் காஞ்சனியன்னை. தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் இருக்கும் சிறிய ஊரான பூங்காவூரில் கோயில் கொண்ட காஞ்சனியன்னை ஒரு கர்ப்பினி பெண். தங்க நிறத்தில் சட்டம் போட்ட புகைப்படத்தில், அவள் எலுமிச்சை மாலை சூடிய கழுத்தும் மஞ்சள் குன்று போன்ற நிறைமாத உடலுமாய் படுத்துக் கிடந்தாள். அன்னையாகாமலேயே அன்னை என்று அழைக்கப்படும் தெய்வத்தை தினமும் விளக்கேற்றி பூஜித்தாள் பவித்ரா. பதினான்கு நாட்கள் முடிந்து, சத்யாவின் வீட்டிற்கு வந்த பிறகும், பவித்ரா அம்மனுக்கு தவறாமல் விளக்கேற்றினாள். அங்கு அவள் தங்கியிருந்த கடைசி நாள்வரை அவ்வழக்கத்தை நிறுத்தவில்லை.

பவித்ராவின் தோழி கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவர்கள் இருவரும் வசித்த ஹாஸ்டல் அறையை பூட்டிவிட்டார்கள். வாசலில் சிவப்பு நிறத்தில் டேப் போட்டு கட்டினார்கள். பரிசோதனைக்கு பிறகு பதினான்கு நாட்கள் பவித்ரா தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டாள்.  வார்டன் வேறு அறையின் சாவியை அவளிடம் கொடுத்தார். உண்மையில் அந்த ஹாஸ்டலில் எல்லா அறைகளும் ஒன்று போலவேதான் இருக்கும். எனவே புதிய அறை எந்த வேறுப்பாட்டையும் பவித்ராவிடம் தோற்றுவிக்கவில்லை – ஆளில்லாத பக்கத்து கட்டில் மட்டும் அவ்வப்போது துணுக்குற வைத்ததைத் தவிர.

பதினான்கு நாட்கள், அறைக்குள் தனித்திருக்கையில், வெளியே, உலகமே ஓசையடங்கி ஒரு காலி இடமாய் மாறிவிட்டதாக தோன்றியது. எல்லையற்ற காலி இடத்தில் அந்தரத்தில் மிதக்கும் அறையில் அவள் தனித்திருந்தாள். சில தினங்களிலேயே காலம் பற்றிய பிரக்ஞை அவளிடம் நழுவ ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு இரவும் தூங்கி நேற்றுக்குள் விழுந்துக் கொண்டிருந்தாள்.

அறையிலிருந்தே அவள் அலுவலக வேலைகள் செய்து வந்தாள். அப்பா, அம்மாவிடமும், திருமணமாகி வெளிநாட்டில் இருக்கும் மூத்த சகோதரியிடமும் தினமும் செல்பேசியில் பேசினாள். சம்பிரதாயமான பேச்சுகள். உயிரோடிருப்பதை மறக்காமல் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது. சாப்பிட்டியா என்று அம்மா கேட்பதற்கு சில நேரங்களில் உண்மையாகவும் சில நேரங்களில் பொய்யாகவும் பதில் சொன்னாள். ஹாஸ்டலை சுத்தப்படுத்துபவர் மூன்று வேளையும் அவளுக்கு சாப்பாடு கொணர்வார். எப்போதாவது அவள் சாப்பிடுவாள்.  சாப்பாட்டை மறுக்கும்போதும், தினமும் மாலையில் அன்னைக்கு விளக்கேற்ற மட்டும் அவள் தவறவேயில்லை.

பெற்றோரிடமும் சகோதரியிடமும் பவித்ரா தன் தோழிப் பற்றி சொல்லவில்லை. அவர்களுக்கு கவலை அளிக்க வேண்டாம் என நினைத்தாள். சத்யாவுக்கு மட்டும் ஒரு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பி விஷயத்தை பகிர்ந்துகொண்டாள். ஆனால் அது பற்றி குரலெடுத்து பேச அவளுக்கு துணிச்சல் வரவில்லை. எனவே, சில நாட்களுக்கு சத்யாவின் செல்பேசி அழைப்புகளை பவித்ரா தவிர்த்தாள். சத்யா அவளை புரிந்து கொண்டான். சத்யாவுக்கு அந்த பக்குவம் இருந்தது. அவசியமான இடைவெளிகளை கொடுப்பதும், அவசியமான நேரங்களில் மௌனமாக இருப்பதும் அவன் குணத்திலேயே இருந்தன.

அந்நாட்களில் பவித்ரா சத்யாவை, நினைத்தபடியே இருந்தாள். ஒரு மலை பிரதேசத்திற்கு அலுவலகச் சுற்றுலா போன போதுதான் சத்யா அவளுக்கு நெருக்கமானான். அப்போது அவள் உடனடியான அடையாளம் கண்டுகொண்டது, அவனது பக்குவமான குணத்தினையே. காபி தோட்டங்களும், மிளகுச் செடிகளும், யுகலிப்டஸ் மரங்களுமான அந்த பச்சைப் பரப்பில் சத்யா எவ்வளவு இயல்பாக இருந்தான்? பாறை மேடுகளிலும் செங்குத்து ஏற்றங்களிலும் எவ்வளவு உறுதியோடு அவன் நடந்தான்? அருவிக்கு போகும் வழியில் அவனை பின்தொடர்ந்து வந்தவள் சற்று தடுமாறிய போது கையை பிடித்துக் கொண்டான். அப்போது அவன் மணிக்கட்டு நரம்புகளில் அவள் கண்ட மெல்லிய அசைவும் அது ஏற்படுத்திய கிளர்ச்சியும் இன்னமும் ஞாபகம் இருந்தது.

மலைப் பயணம், சத்யாவுடனான நெருக்கம், கிளர்ச்சி, கூடுதல் நெருக்கம் இவை எல்லாம் ஒரு வருடத்துக்குள் நடந்தவை. ஆனால் பழைய நினைவாய் படுகிறது. சத்யாவே, எப்போதுமுள்ள தோழன் போல தோன்றுகிறான். காலம் சுருங்கி சுருங்கி அணுவென அழுத்தமேறி வந்தது. பூமிக்குள் நுழைந்த அந்த ஆக்கிரமிப்பு சக்தி காலத்தை அப்படி இறுக்குவதாய் அவள் நினைத்தாள். அதன் வருகைக்கு, முன்னால் நிகழ்ந்தவை யாவும், தூரத்துக்கு தள்ளப்பட்டுவிட்டன.

ஒருவேளை, இதுவரை இருந்த அனைத்தும், சென்று மறைந்த, கடந்த காலத்தில், வேறுபாடுகளே கிடையாதோ? அவள் கடந்தகாலம் உதிரி நினைவுகளாய் அலைவுற்றது. பவித்ரா, சிறுமியாக மீன் வளர்த்தது. சிறுமியாக பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடியது. பின்னர், வாழ்வின் மீதான தூய ஈடுபாடு போல அவள் தலைமுடி நீளமாய் வளர்ந்தது. அவளும் உயரமானது. ஒருமுறை வீட்டில் அக்கா உடை மாற்றும்போது அவள் மார்பகத்தை தெரியாமல் பார்த்து கூச்சப்பட்டது. தானும் பூப்பெய்தி புடவை உடுத்தியது. அதன் இனிய துடிப்பில் நிலமே அழகிய கம்பளமாகி முன்னால் விரிந்தது. கல்லூரி விடுதியில் ஒரு சீனியர் பெண் ரகசியமாய் அவளுக்கு முத்தம் கொடுத்தது. வேலைக்கான நேர்காணலில் தோற்று அழுதது. ஜெயித்து அஞ்சியது. விரும்பும் ரயில்கள். பிடிக்காத பேருந்துகள். அப்புறம் சத்யா. அவன் மணிக்கட்டு நரம்பு. பாம்பு போன்ற அதன் நெளிவு. அவனுடைய தீண்டல். இவை எல்லாம் எங்கிருக்கின்றன, அருகிலா தொலைவிலா? இடங்களும் பொருட்களும் உணர்ச்சிகளும் கடந்தகாலத்தில் வரிசை குலைந்து ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. முன்னும் பின்னும் மாறுகின்றன.

இந்த மனதுடனான, இந்த உடலுடனான இருபத்தியேழு வருடங்களும், தொடமுடியாத ஏக்கமாய் உருமாறுவதை பவித்ரா அறிந்தாள். அவள் மனவோட்டம் சட்டென்று அதிர்ந்து நின்றது. சமகாலத்துக்கு –காலி இடத்தில் மிதக்கும் தன் அறைக்கு- அவள் வந்தாள். ரூம் பிரெஷ்னரின் லாவண்டர் மனம் நாசியில் ஏறியது. அச்சிறிய அறை, நாட்போக்கில் விரிந்துக் கொண்டேச் செல்வதாய் அவளுக்கு பட்டது. அல்லது காலம் என அவளும் சுருங்கிக் கொண்டேயிருக்கிறாளா? தன்னுடைய காலம். தன் தோழியின் காலம். சட்டென்று ஓர் இன்மையில் மோதி பவித்ரா திடுக்கிட்டாள். தன் தோழியின் ஞாபகங்கள் இப்போது எங்கே இருக்கும்? அவள் மட்டும் அறிந்த காலம் எங்கே? அது தன்னுடையதைப் போல் சுருங்கிக் கொண்டே இருக்கிறதா அல்லது அவளுக்கு முடிவற்று நீண்டுக் கொண்டேயிருக்கிறதா? நடுக்கம் எடுத்தது. தன் தோழியை ஆக்கிரமித்து அழித்த இருப்பை எண்ணி பயம் கொண்டாள். 

அந்த அசாதாரணமான இருப்பு எவ்வளவு சாதாரணமாக நுழைகிறது என்பதே வியப்பாக இருந்தது. முந்தைய நிமிடம்வரை அவள் தோழி இயல்பாகவே பேசிக் கொண்டிருந்தாள். எந்த ஆபத்துக்கும் தயாராக இல்லாதவளாய், டீஷர்ட்டுக்கு மேலே ஜெர்க்கின் போட்டு டிராக் பேண்ட் அணிந்திருந்தாள்.  பேச்சு முடிந்த இடைவெளியில் அவள் முகம் மாறுபடத் தொடங்கியது. உடனடியாக ஞாபகத்தில் கொண்டு வர முடியாத ஒரு முக்கியமான நிகழ்வை யோசித்து தேடுவது போல. சடுதியில், அவளுடல் மீட்கமுடியாத பிடியில் சிக்கிக் கொண்டது. இருட்டு அவன் கண்களில் படிவது தெரிந்தது. கடந்தகாலத்தில் தொலையும் நினைவாக இருண்ட பரப்புக்குள் அவள் நழுவிக் கொண்டேச் சென்றாள்.

உடனேயே முகக் கவசம் அணிந்து, கையுறைகள் மாட்டி அறையைவிட்டு ஓடி வெளியே வந்தாள். தன்னையும் அறியாமல் கண்ணீர் பெருகி முகக்கவசத்துக்குள் நுழைந்து உதடுகளில் உப்பாய் படிந்தது. அன்றிரவுவரை அவள் ஹாஸ்டல் வராந்தாவிலேயே நின்றுக் கொண்டிருந்தாள். பூட்டிய மற்ற அறைகளுக்குள் ஏதேதோ அசைவுகள். பேச்சுகள். ஆம்புலன்ஸ் வந்து சேரும்வரையில், பதற்றமும் கைவிடப்பட்ட தவிப்புமாக சுவரில் சரிந்து கால்கள் குறுக்கி உட்கார்ந்திருந்தாள். தொலைவில் நின்றபடியே வார்டன் அவளிடம் பேசினார். ஆனால் அவளுக்குள் அச்சொற்கள் செல்லவில்லை.  தன் தோழியின் சத்தமான -சிலபோது பாதுகாப்பையும் சிலபோது எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையான – குரல் அறைக்குள் ஒலிப்பதாய் பிரம்மை ஏற்பட்டது.

தோழி இல்லாமலான பிறகு, பதினான்கு பகல்களையும் பதினான்கு இரவுகளையும் தனிமையில் கழித்தாள். எட்டாவது நாள் தோழியின் மரணச் செய்தி அவளை செல்பேசியில் எட்டியது. அதிர்ச்சியோ துயரமோ கொள்ளாமல், காத்திருப்பின் இறுதி வெறுமையோடு, விலகியிருந்து அதை அவள் உள்வாங்கினாள். தன் தோழியோடு அவளும் அந்த மரணத்துக்கு காத்திருந்ததாக தோன்றியது. அவள் தனிமை மேலும் வளர்ந்தது.

அந்த தனிமையின் நாட்களில், மதிய நேரங்களில் மட்டும் அவள் ஜன்னல் பக்கம் போய் நிற்பதுண்டு. மாலையில் விளக்கேற்றுவதைத் தாண்டி, முக்கியமான இன்னொரு ஆறுதல் அது. வெளியே மனித அசைவின்றி நகரமே புகைப்படம் போல் உறைந்திருக்க, எதிரில் பாதி கட்டி முடிக்கப்பட்ட மாடிக் கட்டிடம் ஒன்று பகலிலும் இருள் மூடிக் கிடக்கும். சிமெண்ட் பாதி பூசி, பாதி பூசாமல் செங்கற்களின் சிவப்பு வரிசை தென்படும். மாடித் தரைகளில் மண்ணும் கல்லும் குவித்து வைத்திருந்தார்கள். இன்னும் ஜன்னல் மற்றும் கதவுகளின் சட்டகம் பொருத்தாத செவ்வகத் துளைகள், குட்டி குட்டி சுரங்க பாதைகளாய் காட்சித் தந்தன. கைவிடப்பட்ட அக்கட்டிடம் ஒரு புராதான உணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருநாள் தற்செயலாக அக்கட்டிடத்தை நோட்டம் விட்ட பவித்ரா, சற்றைக்குள்ளாக நேரே எதிர் மாடியிலிருந்து தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்தாள். சில மெலிந்த உருவங்கள் தெரிந்தன.  அவள் அத்திசையில் திரும்பி பார்ப்பதைக் கண்டு அந்த உருவங்கள் பின்வாங்கிவிட்டன. சுவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டன. உற்று நோக்கும்போது அங்கு சமையல் அடுப்பு புகைவது தெரிந்தது. ஆனால் உடனடியாக அடுப்பும் அணைக்கப்பட்டது. அங்கு ஒளிந்திருப்பவர்கள் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து வந்த கட்டிடத் தொழிலாளிகளாக இருக்கலாம். அவர்களும் தம் உயிரை காப்பாற்றும் பிரயத்தனத்தில் இருந்தார்கள். தப்பித்தும் அஞ்சியும் பதுங்கியிருந்தார்கள். அதன்பிறகு நாள்தோறும் மதியத்தில் அங்கு வந்து நிற்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். ஆனால் எதிர் கட்டிடத்தில் இருப்பவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி ரகசியமாக சுவரோடு ஒட்டிக் கொண்டுவிடுவாள். அவர்களுடைய அசைவுகளை கவனிக்கும்போது அவளுக்கு ஆதுரமாய் இருக்கும். அங்கு அடுப்பு எரிவதை – செந்தழலாக நெருப்பு அசைவதை- காண நிறைவெழும். அந்த குறுகிய பொழுதில் மட்டும் அவள் ஆறுதலாய் உணர்ந்தாள்  

அடுத்தடுத்த தினங்களில், மெல்ல அவள் மனம் எண்ணங்கள் அடங்கி ஓய்ந்தது. எனினும் அவள் கலக்கம் கொள்ளாமல் இல்லை. ஞாபகமும் யோசனையும் அவளை திரைகள் போல் சூழ்ந்துக் கொண்டன. கெட்ட கனவுகளை என்ன செய்வதென்றும் அவளுக்கு தெரியவில்லை. அவ்வப்போது ஆளில்லாத காலி படுக்கை வேறு துணுக்குறல் ஏற்படுத்தும். அங்கே யாரும் இல்லையென்று அவளுக்கு உறுதியாக தெரியும். முக்கியமாக தன் தோழி இல்லையென்பது. ஆனால் வேறேதோவொன்றும் அவளை உறுத்த ஆரம்பித்தது. திடீரென்று வெள்ளை படுக்கை விரிப்பின் மேல் இருள் படிந்து படிந்து விலகியது. ஜன்னலுக்கு வெளியே அசையும் பறவையின் நிழலாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தாள். ஆனால் அது வளர்ந்தபடியிருந்தது. வடிவைத் தேடுவது போல. சுவர்களிலும் எதிர்பாரா நேரங்களில் நிழலசைவை அவள் கண்டாள். பேசமுடியாத தொட முடியாத நிழலின் அசைவு. அது அவளை தொடரவில்லை. அவளோடு தொடர்புறுத்தவில்லை. ஆனால் தன்னை வெளிப்படுத்தியபடி இருந்தது.  தான் இருக்கும் அறையே, தெய்வத்தின் பரிசோதனைக் கூடமோ என்று அவளுக்கு சந்தேகம் வந்தது. மாலை விளக்கேற்றும்போது இன்னும் தீவிரமாய் வேண்டுதல் மேற்கொண்டாள். அவள் ஹாஸ்டலுக்கு தாமதமாக திரும்பும் நாட்களில் அவளுக்காக மறக்காமல் உணவு எடுத்து வைத்திருக்கும் தோழியின் முகமும் வேண்டுதலின்போது வந்து வந்து போனது.

இப்படியாக யாருடனும் நேர்ப் பேச்சில்லாமல் தனிமையில், எந்திரத்தனமான அலுவலக வேலையோடும், மஞ்சள் உடல் அன்னையின் விளக்குச் சுடரோடும், தனக்கே முழுமையாக புரியாத வேண்டுதல்களோடும், எதிர்க் கட்டிடத்தின் முகம் தெரியாத உருவங்களின் அசைவுகளோடும், பிறகு அவர்கள் ஒரு மதியம் சட்டென்று தொலைந்துபோன கவலையோடும், அடிக்கடி தன்னை அழைக்கும் கண்ணாடி பிம்பத்தோடும், அறைக்குள் இடம் மாறிக் கொண்டேயிருக்கும் நிழலோடும் பவித்ரா பதினான்கு நாட்களை செலவழித்தாள். பாதுகாப்பு தடுப்புகள் அரசு ஊழியர்களால் விலக்கப்பட்டதும் அவள் சத்யாவை தொடர்பு கொண்டு பேசினாள். “உடனடியாக என்னை வந்து கூட்டிச் செல்”. சத்யா அவளை அழைத்துச் செல்ல வந்தபோது வார்டனுக்கு தெரியாமல் பின்பக்க கதவுக்கு வழியே வெளியேறினாள் பவித்ரா.  சத்யாவை கண்டதும் எலும்புகள் தொடும் அளவுக்கு இறுக அணைத்துக் கொண்டாள்.

O

            த்யா, ரகு, தீபன் ஆகியோர் வசித்து அந்த நவீனமான அடுக்குமாடி வீடு உண்மையிலேயே அவளுக்கு பிடித்திருந்தது. அங்கு தங்கியிருந்த ஒரு வாரமும் அவள் ஆசுவாசமாக உணர்ந்தாள். இடையே சத்யா மேல் ஒரு சின்ன விலக்கம் உருவாகியிருந்ததை மறுக்க முடியாது. அவனிடம் ஏதோவோர் இணக்கமின்மையை அவள் அறிந்தாள். ஒருவேளை இருவரும் ஒரே அறையை பகிர்ந்துகொள்வதனால் – தொடர் நெருக்கத்தினால்-உருவாகியிருக்கலாம். அல்லது அந்த இடைவெளிக்கும் சத்யாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம்.

யாரிடமும் பகிரமுடியாத, ஆனால் தன்னை புரிந்துகொள்ள கோரும் தவிப்பொன்றும் தற்சமயம் அவளை, ஆட்கொண்டிருந்தது. அதன் எடை அவளை அழுத்தியது. சிடுசிடுப்பாக்கியது. சத்யா உற்சாகமாக இருப்பதே சமயங்களில் அவளை கோபமூட்டியது. ஒவ்வொரு நாளும் அவன் விதவிதமாய் சமைக்க எடுத்துக் கொள்ளும் பிரய்த்தனம்கூட சில நேரம் அவளை சலிப்படைய வைத்தது. அவள் எங்கேயோ சரணடையத் தயாராகயிருந்த நிலையில் அவன் இன்னும் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வந்தான். எனினும் அவள் சத்யாவை முன்னைப் போல நேசிக்கவும் செய்தாள். தினமும் அவன் தயாரித்து தருகிற, தேன் போட்டு கலக்கிய ருசியான ஏலக்காய் தேநீரை பருகும்போது அது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

அன்று விடியற்காலையிலேயே அவளுக்கு விழிப்பு தட்டிவிட்டது. சத்யா அருகே துயின்றுக் கொண்டிருப்பதை கண்டாள். சட்டையில்லாத உடலில், ஏதோ தெரியாத தீவிலிருந்து கரையொதுங்கியவன் போல கட்டிலை அணைத்துக் கிடந்தான். அவனை ஏக்கத்துடன் பார்த்து, பவித்ரா மெதுவாக எழுந்து குளியலறைக்குச் சென்று முகத்தை கழுவினாள். பின்னர், அறையைவிட்டு வெளியே வந்தாள்.

இருட்டுக்கு பழகி அவள் கண்கள் பாதையை அறிந்தன. மேஜை விளக்கு, வீட்டு ஓனர் சுவரில் மாட்டியிருந்த மேற்கத்திய ஓவியம், காற்று மணிகள் என்று ஒவ்வொரு பொருளும் இருட்டில் மர்மம்கூடி தெரிந்தது. அவள் கூடத்துக்கு வந்தாள். அவள் நடக்க நடக்க, தூக்கம் உதிர்ந்து கண்களிலும் தெளிவு கூடியது.  கூடத்தை ஒட்டிய பெரிய ஜன்னல் திரைக்கு பின்னால் அங்கங்கு இருள் ஊறிக் கிடந்தது. பவித்ரா, நெருங்கிச் சென்றபோது, தூரத்து வெளிச்சத்தில் அபார்ட்மெண்ட் நடைபாதையும் நீச்சல் குளமும் துல்லியமாக தெரிந்தன. பாட்மிட்டன் கோர்ட்டில் ஒற்றை விளக்கு எரிந்து, பால் வெள்ளையில் வெளிச்சம் பொழிந்தது. அப்போது ஜன்னல் கண்ணாடியின் இருட்டான பகுதியில் மெதுவாக துலங்கி வந்த தன் பிம்பத்தை பார்த்தாள் பவித்ரா. ஈரமான நெற்றி முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டாள். சட்டென்று, கண்ணாடி பிம்பம் இன்னொரு மனுஷி போல் நடந்துகொள்வதாக எண்ணி அவள் துணுக்குற்றாள்.

பவித்ராவுக்கு ஜன்னல் கதவை திறக்க வேண்டும் போலிருந்தது. தன் ஒவ்வொரு அசைவையும் ஏளனமாய் போலி செய்யத் துவங்கியிருந்த பிம்பத்தை விரட்டுவதற்காக அல்ல. காலை புலரும் வேளையில், மரச்செடிகளில் தேங்கிய பனி வடிந்து காற்றில் ஏறும் பச்சை வாசத்தை அவள் நுகர விரும்பினாள். நினைக்கும்போதே அவ்வாசம் அறைக்குள் பரவிய மாதிரியிருந்தது. பிறகு அந்த எண்ணத்தை விடுத்து, மெல்ல திரும்பி வலது புறம் பார்த்தாள். நடைவழியின் முடிவில், தீபன் அறையில் கதவிடுக்கு வழியே வெளிச்சம் கசிவது புலப்படவும் அனிச்சையாக அத்திசையில் நடந்தாள்.

தீபனின் அறை வாசலில் நின்று, கதவை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்து பின்னர் லேசாக தள்ளி, எட்டி பார்த்தாள். தீபன் தரைப் படுக்கையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான்.

“சாரி. லைட் எரிவதை பார்த்து சும்மா வந்தேன்.”

“ஓன்னும் பிரச்சனை இல்லை. உள்ளே வாங்க.”

“சீக்கிரம் எழுந்துட்டீங்க போல?” அவள் அந்த படுக்கையின் எதிர்முனையில் உட்கார்ந்தாள்.

தீபன் சீராக தூங்கி பத்து நாட்களுக்கு மேலாகியிருந்தது. அவ்வப்போது தூங்குவதும் அதிர்ந்து எழுந்து கொள்வதுமாக அவன் விழிப்புக்கும் உறக்கத்துக்கும் நடுவிலான வலையில் சிக்குண்டிருந்தான். தூக்கமில்லாமல் கண்ணில் சதா வலியெடுத்துக் கொண்டிருந்தது. அவன் வலது கைவிரல்களில் காயம் ஆறி பழைய தோள் செதில்களாய் பிய்ந்து வந்தது. அதை தடவியபடி, “ஆமாம். தூக்கம் வரலை” என்றான். பவித்ரா ஒரு கையை ஊன்றி, காலை மடித்து அமர்ந்திருந்த விதத்தை –இறுக்கமான கெண்டைக்கால் பிடிப்பை- கண்டு அவன் லேசாக பதற்றமுற்று பின் மீண்டான்.

அந்த அறையை பவித்ரா சுற்றி பார்த்தாள். துணிகள் ஒரு மூலையில் குவிந்து கிடக்க, ஒழுங்கு செய்ய ஆரம்பித்து பின் பாதியில் கைவிட்டது போல புத்தகங்கள் அரைகுறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“ரூம் கொஞ்சம் கலைஞ்சு கிடக்குது. அடுக்கிட்டிருக்கேன்” மன்னிப்பு கோருவது மாதிரி தீபன் சொன்னான்.

“அது பரவாயில்லைங்க. நிறைய புக்ஸ் இருக்கே. அதுதான் ஆச்சர்யமா பார்க்குறேன். இதெல்லாம் என்ன புக்ஸ்?”

“வேற வேற புக்ஸ் இருக்கும்” தன் கையில் இருந்த புத்தகத்தை மடித்து கீழே வைத்தான். “பெரும்பாலும் ஃபிக்ஷன் தான் வச்சிருப்பேன். நீங்க வாசிப்பதுண்டா?”

இல்லை என்று பவித்ரா தலையாட்டினாள். ஆனால் அவளிடம் சட்டென்று ஈடுபாடு தோன்றியிருந்தது. தீபனும் தன் அறையில் சுதந்திரமாய் இருப்பதை அவள் கண்டாள். ஒரு வாரத்தில் அவள் காணாதவிதமாய் அவன் புதிதாக தோன்றினான். அவ்வளவு புத்தகங்கள் நடுவே இருப்பது அவளுக்கேக்கூட பாதுகாப்பாய் இருந்தது. அப்போதுதான் அவள் அந்த கேள்வியை கேட்டாள். “ஃபிக்ஷன் எதுக்கு வாசிக்கனும்?” அக்கேள்வி அவளிடம் தன்னியல்பாக, பதில் பற்றிய எந்த யூகமும் இல்லாமல் தோன்றியது.  தீபன் “ஃபிக்ஷன்” என்று சொன்னது வசீகரமாய் இருந்தது.

அந்த தருணத்தில் தீபன் அக்கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் தன் பார்வையை தாழ்த்தினான். பவித்ராவுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தான். இதுக்கு முன்னால் ரகு ஒருமுறை இதே கேள்வியை கேட்டிருக்கிறான். ஆனால் அவனுடைய தொனி தீபனை சீண்டியதால், கிண்டலாக பதில் சொல்லி கடந்துவிட்டான். கதை வாசிப்பது நேர விரயம் என்பது போல ரகு பேசினான். உடனே அவனை காயப்படுத்தும்படி தீபன் என்னவோ பதில் சொன்னான். ஆனால் பவித்ராவிடம் உண்மையான ஆர்வம் புலப்பட்டது. மேலும் அக்கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியும் என அவள் நம்புவதாகவும் தோன்றியது. அவனும் அது பற்றி யோசிக்காமல் இருந்ததில்லை. அவன் வரையில் ஒரு பதில் இருந்தது. அறையில் உள்ள அத்தனை புத்தகங்களும் கண்களாய் மாறி தன்னை நோக்குவதாய் அவனுக்கு பட்டது.

“பலமா யோசிக்கிறீங்க?”

“எப்படி பதில் சொல்றதுன்னு யோசிக்கிறேன்” தீபனுடைய சிந்தனை மெல்ல துலங்கியது “இப்படி சொல்லலாம். ஃபிக்ஷன் படிக்கிறது டெஸ்டிமொனி கேட்கிற மாதிரி”. தொடர்ந்து அவனால் தடையின்றி பேச முடிந்தது. அவன் சொன்னான், மற்றவர் சந்தோஷத்தையோ துயரத்தையோ சொந்த அனுபவமாக அறிய புனைவு உதவி செய்யும். “ஏன்னா இன்னொருத்தருடைய அனுபவத்துக்கான வழி ஒவ்வொருத்தருக்குள்ளேயும் திறந்தேதான் இருக்கு”

பவித்ரா அக்கருத்தை உள்வாங்க முயன்றாள். அவள் நிலை குத்திய கண்கள் தீபனை மேலும் பேசத் தூண்டின. “உங்களுக்கு பக்கத்தில் இருக்கிற அந்த நாவலை உதாரணமா சொல்லலாம்” என்றான் தீபன். பச்சை வண்ண அட்டைப் போட்ட அப்பெரிய நூலை பவித்ரா கையில் எடுக்க, காகித வாடை அணுக்கமாய் நாசியில் ஏறியது. தீபன் மேற்கொண்டு பேசினான். பவித்ராவின் கையிலிருந்த நூல் அவனை ஆட்கொண்டது. நீண்ட உரைகள் நிகழ்த்தும், வலிப்பு நோய் கிழவனின் கதாபாத்திரங்களில் ஒருவனாக தன்னை அவன் உணர்ந்தான்.

நீங்கள் கையில் வைத்திருப்பது, ருஷ்ய மேதையான தஸ்தாயெவ்ஸ்கியின் அசடன் நாவல். அது உலக இலக்கியத்தின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று. அந்நாவலில் ஒரு இடம் வருகிறது. அதன் கதாநாயகன் பெயர் மிஷ்கின். மிஷ்கின், சிறையில் இருக்கும்போது ஒரு மரண தண்டனை கைதியோடு அவன் பழகுகிறான். தஸ்தாயெவ்ஸ்கியே சைபீரியா சிறையில் இருந்தவர்தான். அந்த அனுபவத்தை அவர் நிறைய எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் அது இருக்கிறது. மிஷ்கினும் அவன் நண்பனும் மரணம் குறித்து நாவலில் பேசுகிறார்கள். அக்கைதி மரணத்துக்கான காத்திருப்பு பற்றியும் அக்காத்திருப்பில் காலம் மயங்குவது பற்றியும் அதன் துயரம் பற்றியும் சொல்கிறான். மரணத்துக்கான காத்திருப்பில், மனித மூளை அசாதாரணமான செயல்திறன் கொண்டுவிடுகிறது. முழு வேகத்தில் இயக்கப்படும் எந்திரம் போல. அப்போது மிஷ்கினுக்கு தோன்றுகிறது, எந்த மனிதனும் அப்படி நிச்சயத்தன்மையோடு மரணத்துக்கு காத்திருக்கக்கூடாது என்று. ஏனென்றால் உயிர் வாழ முடியும் என்ற நம்பிக்கையே ஒருவனை மனிதனாக வைத்திருக்கிறது. மரணத்துக்கான நிச்சயமான காத்திருப்பானது மனிதனுடைய ஆன்மாவை இழிவுப்படுத்துவது என்கிறான் மிஷ்கின்.

“இதுவொரு உண்மை. இது நமக்கு அன்னியமான ஒரு உண்மை இல்லை. ஆனா தன்னை அது வெளிப்படுத்த ஃபிக்ஷன் தேவையா இருக்கு. ஏன்னா, ஃபிக்ஷனா வெளிப்படும்போது நீங்களே எல்லாவற்றையும் வாழ்ந்து அறிய முடியுது. நீங்க இன்னொருத்தரா மாறுறீங்க. மரணமே இல்லாத இடத்துலயும் மரணத்துக்கான காத்திருப்ப அறியுற மாதிரி.”

பவித்ரா தீபனை பார்வை அகலாமல் நோக்கினாள். போதிய உறக்கமில்லாததால் தீபனுடைய இடது கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் அவன் பேசிக் கொண்டேயிருந்தான். அவன் கூற்றின் சாட்சியம் போல கண்ணீர் கன்னத்தில் கோடாய் ஒழுகியது.  

“நான் சரியாக சொல்றேனா தெரியல” இன்னும் சொற்கள் தன்னுள் தளும்புவதாய் தீபன் உதடுகள் துடித்தன.

“இல்லை. எனக்கு புரியுது” பவித்ரா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். அவன் சொற்களை தன்னுள் மீள நிகழ்த்துபவள் போல. பின்னர் அவள் தயங்கி தயங்கி பேசினாள். ஹாஸ்டலில் தனிமையில் இருந்தபோது தன் தோழி பற்றி தொடர்ந்து யோசித்ததாக அவள் குறிப்பிட்டாள். “நீங்க சொல்லும்போது அது ஞாபகம் வருது”. மேலும் பேச முயன்று அவள் தடுமாறினாள். தன் எண்ணங்களுக்கு மொழி துணை நிற்காததன் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது. அவள் பெரிய உதடுகள் ஓசையில்லாமல் அசைந்து அசைந்து நின்றன. இறுதியில் மீண்டும் “எனக்கு புரியுது” என்று அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.  

பவித்ராவின் வலி மிகுந்த கண்களை கண்டு “சாரி” என்றான் தீபன். அவனும் நிலையழிந்திருந்தான்.  பவித்ராவின் தோழியை அவன் நினைத்துக் கொண்டான். அந்த முகம் தெரியாத பெண் பவித்ராவின் தோற்றத்தில் அவனுக்கு தோன்றினாள். அவன் தன் இமைகளை துடைத்துக் கொண்டான்.

பவித்ரா அசடன் நாவலை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். அட்டைப் படத்தில் மெய்யாகவே அசடன் என்று தோன்றக்கூடிய வகையில் ஒருவன் கோணல் உடலோடு நின்றுக் கொண்டிருந்தான். அலங்கோலமாய் கலைந்திருந்த அவன் தலைமுடி முள்கிரீடம் என காட்சி தந்தது. “இத நான் எடுத்துக்கவா”

“கண்டிப்பா”

“தேங்க்ஸ்”

O

தீபன், பவித்ரா இருவரும் கூடம் வழியே மௌனமாக நடந்தார்கள். இன்னும் சூரியன் வராமல் அடர்நீல வெளிச்சம் வெளியே படிந்திருந்தது. அவர்கள் சமையற்கட்டில் வந்து நின்றபோது, ஜன்னலுக்கு அப்பால், குயிலொன்று விட்டுவிட்டு குக்கூ என்று கூவியது. தன் கையிலிருந்த அசடன் நாவலை மேடையில் வைத்துவிட்டு சுவரோடு ஒட்டி நின்றாள் பவித்ரா. தன்னுள் களங்கமில்லாமல் ஒரு தவிப்பு மேலிடுவதாய் அவள் கருதினாள். அதுவே நிறைவாய் மாறும்படி பறவையின் மென்மையான குரல் மீண்டும் ஒலித்தது. குக்கூ.குக்கூ. கிளை மாறி மாறி தாவுவது மாதிரி வெவ்வேறு இடங்களிலிருந்து அக்குரல் கேட்டது. ஒரே பறவை ஒரே நேரத்தில் பல கிளைகளில் நின்று கூவுவதாகவும் தோன்றியது. சட்டென்று, குக்கூ எனும் அழைப்பு மாறி தன் பெயரை குயிலின் குரலில் கேட்டாள், பவித்ரா. நால் திசையிலிருந்தும் அப்பறவை அவளை பெயர் சொல்லி அழைத்தது. பவித்ரா மகிழ்ச்சியால் சூழப்பட்டாள். ஆயிரம் திரைகள் விலகி, எடையற்று லேசானாள்.

“உங்களுக்கு காபி வேண்டாமா?” என்று மறுபடி ஒருதடவை தீபன் கேட்டான்.

“வேண்டாம்” என்றாள் பவித்ரா. அவள் உதடுகள் தன்னிச்சையாக மலர்ந்திருந்தன. ஜன்னல் வழியே தன்னை பெயர் சொல்லி அழைத்த பறவை தெரிகிறதா என்று எட்டி பார்த்தாள். இரவு உதிர்ந்த பூக்கள் சாலையில் விரவியிருந்தன. மரக்கிளைகள் அசைவில்லாமல் இருள் நீங்கும் வானின் பகுதியாய் மாறியிருந்தன. வானும் இலைகளும் ரகசியமாக பேசிக் கொள்வது போல,பச்சை இலைகள் மேல் வானின் நீலச் சாயை படர்ந்திருந்தது. வேறெங்கோ காகங்கள் கரைவது கேட்டது. நீ எங்கிருக்கிறாய், சிறுகுயிலே?

பவித்ரா ஜன்னலோடு லயித்திருக்க, தீபன் அடுப்பில் பால் காய்வதை கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது, ரகு தன் அறையை திறந்து சமையற்கட்டுக்கு வந்தான். அவன் டீஷ்ர்ட் வியர்வையில் நனைந்து உடலோடு ஓட்டிக் கொண்டிருந்தது. கழுத்தில் பெரிய காதுகளோடு ப்ளூடூத் ஹெட்போன் மாட்டியிருந்தான். உடற்பயிற்சி முடிந்து வியர்வை ஈரத்தில் முகம் பொலிவுற்றிருந்தது. “ஹலோ.குட் மார்னிங். பவித்ரா, விடியமே எந்திரிச்சாச்சோ?” என்று கேட்டான், ரகு.

“ஆமாம்”

“நீ சீக்கிரம் எந்திரிக்கக்கூடிய ஆளில்லையே. நைட்டு தூங்கினியா இல்லையா? இது எத்தனையாவது காபி?”

ரகு கேட்டதற்கு தீபன் சும்மா சிரித்து வைத்தான்.

பவித்ரா, ரகுவிடம் “சனிக்கிழமைக்கூட நீங்க காலையிலேயே தவறாம எந்திரிச்சுடுறீங்க, என்ன?” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

“கண்டிப்பா. அதை மிஸ் பண்றதே இல்லை. டிம் குக்லாம் தினமும் நாலு மணிக்கு முன்னாடியே எந்திருச்சிருவார்.” என்றபடி ரகு தன் பிளாஸ்டிக் பாட்டிலில் புரோட்டின் மிக்ஸ் போட்டு பாலை கலந்து குலுக்கினான். தீவிரமான குரலில் “அப்புறம் வெயிட் ஏறினால் குறைப்பது ரொம்ப கஷ்டம். பெங்களூர் வந்த புதிதில் நல்லா குண்டடிச்சிட்டேன். அப்புறம் எக்சர்சைஸ் பண்ணி குறைச்சேன். அதனால் டெய்லி ரொட்டீன் மிஸ் பண்றதே கிடையாது” என்றான்

“எனக்கு இந்தளவுக்கு கமிட்மெண்ட் இல்லை” என்று பவித்ரா இன்னமும் புன்னகை விலகாத முகத்தோடு சொன்னாள். அவனுடைய கவலைகளே புரியாத மாதிரி.

“கமிட்மெண்ட் வளர்ந்துக் கொள்ள வேண்டும் என்றால், நீ முதல்ல இவனோட சேர்றத நிறுத்து” என்று தீபனை தோளில் இடித்தான் ரகு. “என்னென்னவோ சொல்லி குழப்புவான்.  சார், ரைட்டராக இருக்க வேண்டியவர். ஐடியில் குப்பை கொட்டுறாரு”

“அப்படியா?” என்று பவித்ரா சிரித்தபடி தீபனை நோக்கினாள். “என்னிடம் சொல்லவில்லையே”

தீபன் உதட்டை வெட்டியபடி, ரகுவை ஏற இறங்க பார்த்தான். பிறகு இருவரும் ஒரே நேரத்தில் புன்னகைத்துக் கொண்டார்கள்.

பவித்ரா மேலும் மேலும் மகிழ்ச்சியால் நிரம்பினாள். என்ன காரணமென்று அவளுக்கே தெரியவில்லை. பால் மெல்ல பொங்கி வரும் இனிய வீச்சம், ஆடை கடந்து தன் மார்பு வரை செல்லும் காலைக் குளிர், காபி டப்பாவை திறந்ததும் வெளியேறிய காபி பொடியின் காட்டமான மணம், கண்ணாடி கோப்பையில் பாலும் காபித் தூளும் கலந்து செம்பு நிறத்தில் ஓர் மினுக்கம், மலர் விரிவது போன்ற காபி நுரை – இவற்றோடு அந்த நாள் மெல்ல கண் விழித்துக் கொண்டிருப்பது பவித்ராவிடம் பரவசத்தை ஏற்படுத்தியது.  சமையலறை மேடையில் வரிசையாக சில எறும்புகள் போவதை அவள் பார்த்தாள். அடர்பச்சையில் வெள்ளை புள்ளிகள் வைத்த மார்பிள் கல் மேல் அச்சிறிய உயிர்கள் திட்டமிட்ட பாதையில் அணிவகுத்தன. “எறும்புங்க போகுது” என்றாள் பவித்ரா.

தீபனும் ரகுவும் சற்று குழம்பி மேடையைப் பார்த்து “எறும்பா?” என்றனர்.

 “ஸ்லாப்ல சத்யா தேன் பாட்டில் வச்சிருக்கான். அங்க தான் போகும்” என்றான் ரகு. “யுடியூப்ல ஒரே சமையல் வீடியோவா பார்த்து தள்ளி, கிட்சன் முழுக்க என்னென்னவோ வாங்கி வச்சிருக்கான்”

“சமையலும் ஒன்னும் ஈசி கிடையாது” என்று தீபன் குறுக்கிட்டான். “யார் சமைச்சாலும் ருசி வந்திராது”

“கஷ்டம்தான். ஆனா முயற்சி பண்ணா முடியாததில்லை”

அவர்கள் இருவரும் பேசுவதை கேட்கும்போது பவித்ராவுக்கு கூடுதலாக புன்னகை எழுந்தது. தொடர்ந்து அவர்கள் ஒருவரையொருவர் மறுத்து விவாதிப்பார்கள். ஒரு வாரத்தில் இதை அவள் அடிக்கடி பார்த்துவிட்டாள். தீபன், ரகு இருவரும் எதிரிகள் போல சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்புறம், ஒருவர் இன்னொருவரை தேடிக் கொண்டும் இருப்பார்கள். இரண்டு பேரையும் அவன் புன்னகையோடு பார்த்தாள். காலையிலேயே உடற்பயிற்சி செய்து மாநிறத் தோல் பளபளக்கும்படி வியர்வை பெருகி உற்சாகமாய் நின்றிருந்தான் ரகு. தூக்கமில்லாத விழிகளோடு தீபன் தொலைந்துபோனவாய் தோன்றினான். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டோ?” என்று அவன் ஒருதடவை கேட்டது ஞாபகம் வந்தது. என்ன மாதிரியான கேள்வி அது? எவ்வளவு ஆச்சர்யமானவை, மனிதர்களின் பயங்கரமான தத்தளிப்புகளும், சமாதானம் தெரியாத பரிதவிப்புகளும்.

ரகு, தீபன் இருவரையும் நோக்கினாள், பவித்ரா. அவர்கள் அருகருகே நின்றிருக்க, புகை போக்கி வழியே முதல் வெளிச்சம் தரையில் விழுந்தது. இப்போது இதே அறையில் உயிர்கொல்லியான அந்த ஆக்கிரமிப்பு சக்திக் கூட இருக்கலாம். ஆனால் அது பற்றி அச்சமில்லாதவளாய் பவித்ரா புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“சரி. நான் வரேன்” என்று அசடன் நாவலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றாள், பவித்ரா.

“இவன் கொடுத்த புக்கா? இதெல்லாம் படிக்காதீங்க” என்று ரகு விளையாட்டாய் சொன்னான்.

தொடர்ந்து, பவித்ராவின் முதுகுக்கு பின்னால் தீபனும் ரகுவும் என்னவோ தீவிரமாக உரையாட, காற்றே தன்னை கொண்டுச் செல்வது மாதிரி நடந்து, கூடத்தைக் கடந்து சத்யாவின் அறைக்குள் போனாள், பவித்ரா.

சத்யாவின் அறையில் வெளிச்சம் பொறுமையாக ஊடுருவி பாய, அவள் பால்கனி வரைச் சென்றாள். அங்கு துணி உலர்த்தும் ஸ்டாண்டில் அவளுடைய மேலாடை ஒளிக்கரங்களால் தீண்டப்பட்டு, ஆரஞ்சுப் பழத்தின் தோல் போல பளிச்சென்று தெரிந்தது. சத்யாவின் சாம்பல் நிற ஜீன்ஸ் மீதும் வெளிச்சம் தூசி பொட்டுகளோடு படிந்தது. நிலமெங்கும் ஈரம் காய்ந்து ஆவியாக, வெளிச்சம் ஒவ்வொன்றையும் தொட்டு எழுப்புவதை அவள் உணர்ந்தான். பால்கனி கண்ணாடியை கடந்து அறைக்குள் வெளிச்ச ரேகைகள் பாய்ந்தன. அலமாரியை ஒட்டியிருந்த கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப் போன்ற விளையாட்டு சாதனங்களை அவள் பார்த்தாள். ஓரத்தில், கூடைப் பந்து குட்டி சூரியனாய் ஒளியை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அது சுழல்கிறதோ என்று பவித்ரா ஒரு கணம் மயங்கி தெளிந்தாள்.

சத்யா இன்னமும் படுக்கையைவிட்டு எழுந்துக் கொள்ளவில்லை. பவித்ரா நடனம் போன்ற அசைவுகளோடு அறையைச் சுற்றி வந்தாள். பிறகு, கதவை தாழிட்டுவிட்டு படுக்கையை நெருங்கி, சத்யாவோடு ஒட்டி படுத்துக் கொண்டாள். எதிரே, அறை முடிவில், காஞ்சனி தங்கச் சட்டம் போட்ட படத்தில் நிறைமாத உடலோடு படுத்துக் கிடந்தாள். புற்றாய் ஓங்கி வளர்ந்த அவள் மஞ்சள் மேனியை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சத்யாவின் கைகள் பவித்ராவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டன. அவனுடைய வெற்று உடல் தன்னை உரசும் கூச்சம். “நீ முழிச்சுதான் இருக்கியா?” என்று பவித்ரா சத்யாவை விலக்க முயன்றாள். “ம்ம்ம்” என்று சத்யா பிடியை இறுக்க, அவன் மூச்சுக் காற்றில் அவள் முதுகு ரோமங்கள் சிலிர்த்தன.

ஒரு தோல் ஆடையென தான் முழுமையாக திறக்கப்படுவதாய் பவித்ரா உணர்ந்தாள். வெண்மை பளீரிடும் அவள் கழுத்து வளைவை சத்யா மெல்ல கவ்வி பல் பதித்தான். அவள் முலைக்குவைகளிலும் பின்னந்தொடையிலும் இளங்குளிர் போல அவன் விரல்கள் ஒழுகின. ஜன்னல் கடந்து சூரிய வெளிச்சம் அறையில் நுழைந்து சுவரில் இளமஞ்சள் வண்ணம் தெளிந்து வந்தது. பவித்ரா விழி மூடினாள். ஒளிச்சுடரென அவள் இருப்பே கண்ணிமைகளில் அசைந்து பின் நிலைத்தது. நெருப்புச் சுடர். அந்த நெருப்பை அவளுக்கு தெரியும். அவள் அதை பார்த்திருக்கிறாள்- கைவிடப்பட்ட கட்டிடத்தில் ஒரு மண் அடுப்பில். அந்த நெருப்பே கடவுளின் விளக்கிலும் திகழ்கிறது -நடுக்கமேயில்லாமல். அவள் கைகளை அகல விரித்து சத்யா அவளோடு பொருந்தினான். முடிவற்று நீளும் அவள் தலைமுடியை பற்றிக் கொண்டான். மென்னிதழ் தசைகள் இணைந்து இணைந்து பிரிய, மரணத்தின் காத்திருப்பு போல மயங்கியது காலம். தீராத உவகை. அணையாதச் சுடர்.

பவித்ராவின் உடல் எல்லையற்று வளர்ந்தது. ஒவ்வொருமுறை திறந்து வழிவிடும்போது பெரிதாகிக் கொண்டே போனாள். அவள் தோழி சொல்லியிருக்கிறாள், கர்ப்பகிரகத்திற்கு முன்னால் படுத்துக் கிடக்கும் மஞ்சள் தேவியின் உடலைச் சுற்றி வரவே மூச்சு வாங்கும் என்று. நூறு குழந்தைகள் உள்ளே வளர்வது போல அவ்வளவு பெரிய வயிறு அவளுக்கு. பவித்ராவின் கண்ணிமைகளில் படிந்த வெளிச்சம் தங்கக் குழம்பாகி அவளுடலே பொன்மஞ்சளானது. அப்போது தொலைவிலும் அருகிலுமாய் மாறி மாறி கேட்கிறது, பறவையின் குரல். குக்கூ. குக்கூ. தொடர்ந்து அவள் பெயரை சொல்லி அழைக்கிறது. எங்கே இருக்கிறாய் சிறுகுயிலே? எங்கே அழைக்கிறாய் சிறுகுயிலே?

பவித்ரா கண் திறந்து பார்த்தபோது அருகே சத்யா மலர்ச்சியோடு படுத்துக் கிடந்தான்.  அவள் தலை சரித்து நோக்கினாள். விறைப்பு மெல்ல நீங்கி தளர்ந்து வரும் அவன் ஆண்குறியில் விந்துவின் கடைசி துளி. பவித்ரா அதை பார்த்துக் கொண்டேயிருந்தாள். 

O

பகுதி 3

தீபன், ரகு, சத்யா மூவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவது அரிதாகிவிட்டிருந்தது. கூடத்தில் இப்போது யாரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. பாதி கிழிந்த சிகப்பு டேப்புடன், சத்யாவின் அறை ஓர் அவலச் சின்னம் போல பக்கத்திலேயே இருக்க, அதனை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் அவர்கள் தடுமாறினார்கள். பவித்ரா கொண்டுச் செல்லப்பட்ட பிறகு அவர்கள் வசிப்பிடத்தில் கண்களுக்கு தெரியாத ஒரு பிளவு உண்டாகியிருந்தது.

பவித்ரா இல்லாத வீட்டில், அந்த இரவு, அவர்கள் விஸ்கி கோப்பைகளோடு தீபனுடைய அறையில் குழுமியிருந்தனர். தானியங்களின் நொதித்த வாசம் கண்ணாடி பாட்டிலிலிருந்து பரவி காற்றில் கிறக்கமாய் ஏறியிருந்தது. பால்கனியில் வானத்தின் அடையாளம் போல நிலவொளி படிந்திருந்தது.

“உன் ரூம் இப்போ பரவாயில்லையே” என்றான் ரகு, எந்த உணர்ச்சியும் இல்லாமல்.

தீபன் மௌனமாய் தலையசைத்தான். உபயோகமில்லாத பொருட்கள் எல்லாம் அகற்றப்பட்டு தீபனின் அறை பெரிதானதுப் போல் தோன்றியது. பாதி புத்தகங்கள் ஏற்கனவே அலமாரியில் அடுக்கப்பட்டு, மீதியும் ஓரத்தில் சீராக ஒதுக்கப்பட்டிருந்தன. அழுக்குத் துணி எதுவும் கண்ணிலேயே படவில்லை. தீபன் காலை நீட்டி உட்கார்ந்து, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான். பிறகு அடுத்த மிடறை மெல்ல பருகினான்.

அலெக்சாவின் ப்ளூடூத் ஸ்பீக்கரில் மென்மையாக இசை ஒலித்துக் கொண்டிருந்தது.  சத்யா அதன் லயத்திற்கு வெளியே மௌனமாய் யோசனையில் தொலைந்திருந்தான். மூவரும் ஒருவரிடம் இன்னொருவர் பேசத் தெரியாதவர் போல அமர்ந்திருக்க, அசௌகர்யமான அமைதிக்கு மேலே அந்த இசை பாதுகாப்பான வலையொன்றை நெய்தது.

நீல நிறத்தில் பாதுகாப்பு உடையணிந்த அரசு ஊழியர்கள் பவித்ராவை கொண்டுச் சென்று ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டிருந்தது. ஒரு மனிதரை சுமக்கும் அளவு உயரமான, கருப்பு பிளாஸ்டிக் கவரில் அவளுடைய பொருட்களை எல்லாம் அவர்கள் சேகரித்துக் கொண்டார்கள். பரிசோதனையை அடுத்து மூன்று பேரும், பதினான்கு நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டார்கள். அரசு ஊழியர்கள் விடைபெறும்போது, சத்யாவின் அறையை சுத்தப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர். ஆனால் அதில் யாரும் முனைப்புக் காட்டவில்லை. சத்யா கூடத்திலேயே தங்க ஆரம்பித்தான். அரிதாக தன் பொருட்களை எடுக்க அறைக்கு அவன் போவதுண்டு. கனினி மேஜை மேல், அரசு ஊழியர்கள் எடுத்துச் செல்ல மறந்த, காஞ்சனி படத்தையும் அசடன் நாவலையும் கண்டு திடுக்கிட்டு சீக்கிரமே வெளியே வந்துவிடுவான். தீபனும் ரகுவும் அறையை பகிர்ந்துகொள்ள அழைத்தபோது சத்யா மறத்துவிட்டான். ஆனாலும் அச்சமும் பதற்றமும் சூழ்கிற – இன்னொருவரிடம் சொல்ல முடியாத பயங்கர கனவுகளை தோற்றுவிக்கும் இரவுகளில்- சத்யா தன் நண்பர்களின் அறையில் உறங்கச் செல்வதுண்டு.

சத்யாவின் தோற்றத்தில் பெரிய மாற்றம் தெரியவில்லை. இன்னமும் நுணுக கத்திரித்த தாடியோடு அவன் வசீகரம் குறையாமலேயே தோன்றினான். ஆனால் அவனிடம் உள்ளூர வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. அவன் சமைக்கும்போது உணவில் பழைய ருசி அமையவில்லை. ஒரு சிட்டிகை பொருத்தமின்மை எப்போதும் இருந்தது. சமையலில் பக்குவம் வராமல் தவித்தான். பக்குவம் வருவதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதும் குழப்பமாக இருந்தது. ஒன்று சீக்கிரம். அல்லது தாமதம். எப்படியோ பக்குவம் தொலைந்தது. நாக்கில் கசந்தது. ஒவ்வொன்றையும் உணவாக்க நெருப்புக்கு தேவைப்படும் காலம் எவ்வளவு? அவனால், கணிக்கவே முடியவில்லை. நடுவே ஒருமுறை காய்கறி நறுக்கும்போது கையை வேறு வெட்டிக் கொண்டான். தொடர்ந்து அவன் எரிச்சலும் கசப்பும் அடைந்து, சமைப்பதையே ஏறத்தாழ நிறுத்திவிட்டான்.

ஆரம்ப நாட்களில் தீபனும் ரகுவும் சத்யாவை ஆற்றுப்படுத்த முயன்றார்கள். தீபன் நம்பிக்கையில்லாமலும். ரகு தீவிரத்துடனும். ஆனால் சத்யாவினிடத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிறகு அவர்கள் இருவருமே தங்கள் நிலைகளில் சோர்வுற்று அலைய, சத்யா தன் துயருடன் தனித்துவிடப்பட்டான். பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் போல் அவன் தன் துயரை சுமந்தான். அதன் அழுத்தம் வருத்தும்போதும் அவன் அதை கைவிடத் தயாராக இல்லை. விளைவாக, அந்தரங்கமாய் அவன் நோய்மைப்பட்டு வந்தான். அலுவலகத்திற்கு அடிக்கடி விடுப்பு எடுத்து வெறுமனே படுத்தேக் கிடந்தான். பவித்ராவின் உடல், அதன் மென்மை, அவன் மணிக்கட்டை அவள் பற்றிக் கொள்ளும் இதம் எல்லாமே அவன் தசைகளில் அழியாமல் இருந்தன.  அவளது குரலும், அவ்வப்போது சீண்டும் சுபாவமும் அவனை அலைக்கழித்தன. ஏக்கத்தை ஏற்படுத்தின.   ஞாபகமே ஒரு பொறியாய் அவ்வப்போது திறந்து அவனை இறுக கவ்வியது. பவித்ரா இல்லவே இல்லை என்பதையே சமயங்களில் சத்யா மறந்துவிடுவான். அது மீண்டும் ஞாபகம் வரும்போது, கலக்கம் மேலிடும். தான் மறந்துவிடும் நேரத்தில் அவள் எங்கே இருக்கிறாள்? தான் ஞாபகங்கொள்ளும் நேரத்தில் அவள் எங்கே மறைகிறாள்? சத்யாவுக்கு தெரியவில்லை.

“நாம ஒன்னும் செய்றதுக்கில்லை” என்றான் ரகு. ஆறுதல் போலன்றி ஒரு வறண்ட உண்மை போல அதை அவன் சொன்னான். தீபனும் சத்யாவும் அவனை அர்த்தமில்லாமல் நோக்கினர். தன் செல்பேசியில் இணையப் பக்கத்தை மூடிவிட்டு ரகு தொடர்ந்தான். “ஓரு நாளைக்கு இருபதினாயிரத்தி நானூற்றி அறுபத்தியேழு பேர் இந்த நகரத்தில் சாகும்போது நாம என்ன செய்துவிட முடியும்?”

O

டுத்த சுற்று கோப்பைகள் நிரம்பின. ரகுவிடம் இயல்பான உற்சாகம் இல்லை. அயர்ச்சியுடனே பேசிக் கொண்டிருந்தான்.அவன் எண்ணியது போல வெளியே, நிலைமை சீராவதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டு வந்தது. அது அடுத்து எந்த மூடிய கதவுக்குள் நுழையும் என்றோ யாரை ஆக்கிரமிக்கும் என்றோ தெரியவில்லை.

வீட்டில் இருப்பது ஒவ்வொரு நாளும் சிக்கலாகியது. தனக்கு பரிச்சயமானவர் அல்லது தனக்கு பரிச்சயமானவருக்கு தெரிந்தவர் என்று யாராவது மரணித்துக் கொண்டேயிருந்தார்கள். சிலபோது சத்யாவின்மீதுக்கூட ரகுவுக்கு கோபம் எழும். பவித்ராவை தேவையில்லாமல் அழைத்து வந்து இந்த வீட்டை ஆபத்துக்கு திறந்துவிட்டான் என்று. பிறகு சத்யாவின் இழப்பை எண்ணி வருந்தவும் செய்வான். பாவம் அவன். பாவம் பவித்ரா. இவற்றைத் தாண்டி திடீரென்று வேறொரு கவலை அவனை ஆட்கொண்டது. தான் வேறொரு மனிதனாக மாறுவதை அவன் அறிந்தான். பவித்ரா கொண்டு செல்லப்பட்டு ஒரு வாரம் கழிந்து, முதல் முறையாக தன்னில் ஒரு வினோத மாற்றத்தை கவனித்தான். அதிலிருந்து தினமும் அவனில் கலக்கமும் சலிப்பும் ஏறிக் கொண்டே வந்தன.

அன்றைய தினம் காலை, உடற்பயிற்சி முடித்துவிட்டு கண்ணாடியின் முன் நின்றபோது ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான், ரகு. முகம் உப்பி தாடையில் சதையேறிய மாதிரியிருந்தது. உடனே, கன்னத்தை இழுத்து பார்த்துக் கொண்டான். பலூன் தோலாய் இழுக்க இழுக்க கன்னச் சதை வந்துக் கொண்டே இருந்தது.  தாடைவெட்டு மறைந்து அவன் முகம் உருண்டையாகிவிட்டடிருந்தது.

சத்யா சமையல் செய்வதை நிறுத்திய பிறகு அவர்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் ரகு தன் உடற்பயிற்சியை ஒரு நாளும் நிறுத்தினானில்லை. எனவே தன்னுடலை அதன் தொலைந்த வடிவை கண்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். இது சாத்தியமே இல்லாதது. குறுகிய காலத்தில் ஒருவர் எப்படி இவ்வளவு எடை ஏற முடியும்? பக்கவாட்டில் திரும்பி நின்றும், உடலை இறுக்கியும் கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் தன்னை பார்த்துக் கொண்டான். ஒன்றும் மாறிவிடவில்லை என்று இயல்பாய் ஒரு சமாதானம் எழுந்தது.  ஏதோ தோற்ற மயக்கம் என்றெண்ணி கைத் துண்டினால் கழுத்தை துடைத்துக் கொண்டான். உப்பு ஊறிய வியர்வை மணம் குறுகுறுப்பேற்ற, துண்டை நாசியின் அருகே கொண்டுச் சென்று பிறகு தோளில் அணிந்து குளிக்கச் சென்றான்.

வழக்கம் போல, அன்றைக்கும் ரகு குளிப்பதற்கு முன்னால் செல்பேசியில் நிர்வாண உடல்களின் மூர்க்கமான முயக்கத்தினை கண்டான். துண்டு துண்டு காட்சிகளாய் பல்வேறு உடல்கள் அவனை தாபத்துடன் அழைத்தன.  எத்தனை எத்தனை உடல்கள். செழித்த தொடைகள். முலைகள். இடுப்பின் வளைவுகள். சதை பிடிப்புகள். புட்டங்கள். திரையில் மிக அருகே அவை அசைகின்றன. ஒரு பெண், தன் உடலெங்கும் நகத்தால் மென்மையால் கீறி இச்சையில் துடிக்கிறாள். இதோ, கொஞ்சம் போனால் தொட்டுவிடலாம். இதோ, கொஞ்சம் முயன்றால் வென்றுவிடலாம். கையில் பிசுபிசுப்போடு குளிக்க போகையில் ரகு, இனி இந்த மாதிரி படங்கள் பார்ப்பதை குறைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். இவற்றின் அபாயம் பற்றி ஜோர்டன் பீட்டர்ஸன் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். பொறுப்பின் துணையில்லாத இன்ப உணர்ச்சி அபாயமானது. எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். எதுக்கு? எல்லாவற்றுக்கும். அனைத்து பெண்களும் விரும்பக்கூடிய ஆணாக இருக்க வேண்டும் என்றும் ஜோர்டன் பீட்டர்ஸன் சொல்கிறார். ரகுவுக்கு சற்று பெருமிதம் கூடியது.

தன் தோற்றத்தினால் பெண்கள் கவரப்படுவதை ரகு அறிந்திருக்கிறான். எந்த பெண்ணுமே தன்னை கண்டதும் ஈர்க்கப்பட்டுவிடுவாள். யாராவது அப்படி இல்லையென்று மறுத்தால் அது நிச்சயமாக பொய். பெண்கள், பல்வேறு நிர்பந்தளாலும், தம் அகந்தையினாலும், அப்படி பொய் சொல்லக்கூடியவர்கள். சில சமயங்களில், அவர்களுக்கே தெரியாமல்கூட அந்த ஈர்ப்பு அவர்களிடம் இருக்கும். ஆனால் அது ரகுவுக்கு மட்டும் தெரியும். பவித்ரா, இங்கே இருந்தவரையில், அவள் தன்னை பார்த்த விதத்தில்கூட அந்த ஈர்ப்பு இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் அதை அவன் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், ஜோர்டன் பீட்டர்ஸன் சொல்லியிருக்கிறார் – அனைத்து பெண்களும் விரும்பக்கூடிய ஆணாக இருந்தாலும், ஒரேயொரு பெண்ணை மட்டுமே வாழ்க்கை முழுமைக்குமாய் தேர்வு செய்ய வேண்டும்.  

குளித்து முடித்துவிட்டு ரகு டவலை இடுப்பில் கட்டினான். எளிதில் முடிச்சிடமுடியவில்லை. இழுத்து பிடித்துதான் கட்ட முடிந்தது. குழப்பத்தோடு வெளியே வந்த ஆடை மாற்ற ஆரம்பித்தான். அலமாரியில் இருந்து கால்சட்டையை எடுத்து அணிந்தான். கால்சட்டையையும் இடுப்பில் மாட்ட இயலவில்லை. தொடை இறுக்கி பிடித்தது. கால்சட்டைப் பட்டியின் இரண்டு முனைகளுக்கும் நடுவே இடைவெளி அகன்றுக் கொண்டே போக, அவனை மெல்ல அச்சம் நெருக்கியது. ஆற்றாமை மிகுந்து, பலம் கொண்டு இரண்டு பக்கமும் இழுத்து பட்டனை பொருத்தினான். சில நொடிகளுக்கு மேல் அதை அணிந்திருக்க முடியவில்லை. வயிறு அழுத்தி வலித்தது. அதை உடலைவிட்டு கழற்றிய பின்னரே ஆசுவாசமாக இருந்தது. ரகு தன்னை குனிந்து பார்த்துக் கொண்டான். எப்படி இந்த தொப்பை வந்தது? குளிக்க போகும் முன்னால் கூட தன்னுடலில் இவ்வளவு எடை இல்லையே?

ரகு வேறொரு கால்சட்டை எடுத்து அணிந்து பார்த்தான். அதுவும் இடுப்பு பத்தவில்லை. தன்னுடைய எல்லா ஸ்லிம்-ஃபிட் மேல்சட்டைகளையும் கால்சட்டைகளையும் அலமாரியிலிருந்து அள்ளி படுக்கையில் குவித்தான். பச்சை நிற சட்டை. நீல நிற ஜீன்ஸ். மஸ்டர்ட் நிற பிரிண்டட் சட்டை. முழங்கையில் பேட்ச் வைத்த மெரூன் சட்டை. வெள்ளைநிற காட்டன் கால்சட்டை. ஒவ்வொன்றாக எடுத்து அணிய அணிய, அவன் முகம் பீதியில் வெளிரி வந்தது. எதுவுமே பொருந்தவில்லை. கடைசியாக ஒரு கருப்பு நிற கால்சட்டையை கஷ்டப்பட்டு மூச்சை இழுத்து பிடித்து அணிந்து சில அடிகள் நடந்தபோது அது அசிங்கமான ஒலியோடு கால்களுக்கு நடுவே கிழிந்திற்று. ரகு அவமானமாய் உணர்ந்தான். பனியன் மற்றும் உள்ளாடையோடு அவன் கட்டிலில் உட்கார்ந்தான். அன்று அவன் அலுவலக வேலை செய்யவில்லை. நெடுநேரம் அறையைவிட்டு வெளியே வராமல் கட்டிலேயே உட்கார்ந்திருந்தான்.

யாரோ தன்னிடம் விளையாடுகிறார்கள். திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள். தன்னை கோமாளியாக்கி ஒளிந்திருந்து சிரிக்கிறார்கள். ரகு கண்ணாடி முன்னால் நின்று தன்னை பார்த்துக் கொண்டான். அடையாளமே தெரியவில்லை. யார் இந்த குண்டு மனிதன்? சற்றைக்குள் அவன் உள்ளாடையின் எலாஸ்டிக்கூட அழுத்த ஆரம்பித்தது. நேரம் கடந்து செல்லவும் அவனுக்கு பசியும் எடுத்தது. விடியற்காலையிலேயே அவன் எழுந்துவிட்டிருந்தான். தண்ணீர் கூட குடிக்கவில்லை. உடலே வெறும் பசியாக மட்டும் மாற, தன் மேலயே அவனுக்கு கடுங்கோபம் எழுந்தது. சாப்பிடக்கூடாது என வைராக்கியம் பிறந்தது. இந்த ஒருவேளை மட்டுமல்ல. எப்போதுமே சாப்பிடக்கூடாது – உடலை அபகரித்திருக்கும் மொத்த கொழுப்பும் உருகி மறையும் வரையில். பின்னர், ஏதோ யோசனை வந்து, பழைய டிராக் பேண்ட்டும் பெரிய டீஷர்ட்டும் அணிந்து கூச்சத்துடன் தீபனுடைய அறைக்கு போனான்.

கனினி மேஜையில் உட்கார்ந்திருந்த தீபன் ரகுவை வியப்புடன் பார்த்து “வேலை செய்யலயா?” என்று கேட்டான்.

ரகு பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா?”

“இல்ல. ஒன்னுமில்ல. ஏதும் வித்தியாசமா தெரியலையா?”  

“என்ன வித்தியாசம்?”

ரகு தன்னை மேலும் கீழும் பார்த்துக் கொண்டான்.வயிறு முன்னே தள்ளிக் கொண்டு வந்தது.அதை உள்ளே இழுக்க முயன்று தோற்று “ஒன்னுமே தெரியலயா?” என்று கேட்டான்.

“என்னடா சொல்ற? ஓ. ஆமாம். வழக்கமா டிப் டாப்பா கிளம்பியிருப்ப. இப்போ காஷ்வலா டிரெஸ் பண்ணியிருக்கியே. அதுவும் இவ்வளவு லூஸா இருக்கு? என்னாச்சு?” இந்த ஆடைக்கும் ஒரு நாளினை அழகாக்கும் சக்தி உள்ளதா என்று தீபன் கேட்டான்.

ரகுவுக்கு மேலும் குழப்பமாக இருந்தது. தீபன் யாரை பார்க்கிறான்? தோள் பகுதியில் சட்டை இறுக்கி பிடிப்பது அவனுக்கு தெரியவில்லையா? ரகு குழம்பி, “சரி வரேன்” என்று வெளியேறினான்.

தன்னுடல் மேல் ரகுவுக்கு கடும் வெறுப்பு மேலிட்டது. தன்னுடலே ஒருவனுக்கு எதிரியாகும்போது என்ன செய்வது? தொடர்ந்த நாட்களில் அவ்வெறுப்பு அதிகரித்துக் கொண்டே போனது. இரண்டு டீஷர்ட்டுகளும் டிராக் பேண்ட்டும் மட்டும் தான் அவன் உடலுக்கு பொருந்தியது. அலமாரியை நிறைத்திருந்த மற்ற எந்த ஆடையையும் அவனால் அணிய முடியவில்லை. முன்னைப் போல உடற்பயிற்சி செய்வதும் அவனுக்கு எளிதாக இல்லை. சீக்கிரமே மூச்சிரைத்தது.

தொப்பையைக் குறைப்பதற்கான, இடுப்புச் சதையை வற்றச் செய்வதற்கான பல்வேறு யுடியூப் வீடியோக்களை ரகு பார்த்தான். 14 நாட்கள் சவால். 21 நாட்கள் சவால். தினமும் செய்ய வேண்டிய மூன்று நிமிட பயிற்சி. ஏழு நிமிட பயிற்சி. எல்லாவற்றையும் அவன் மேற்கொண்டான். மூன்று வேளைகளும் குறைவாகவே சாப்பிட்டான். பழைய உடலுக்கு திரும்ப பல மாதங்கள் ஆகக்கூடும் என்று அவனுக்கு பட்டது. எடையேறிய அவன் உடலை சுமக்க முடியாதது போல ஒவ்வொரு நாளும் பொறுமையாக நகர்ந்தது. ஜிம் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் தீபன், சத்யா இருவருமே எடையேறிய அவன் உடலை பார்க்காமல் பழைய ரகுவினையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவே தாளமுடியாத ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

நடுவே, தன் பெற்றோருக்கும் வேறு சில நண்பர்களுக்கு வீடியோ கால் செய்து பேசினான் ரகு. அவர்களுக்கும் அவனுடலின் மாற்றம் தெரியவில்லை. ஒருமுறை தன்னை தானே ஒரு புகைப்படம் எடுத்து –கனினி மேஜை முன்னால் வயிறை எக்கி இழுத்து அமர்ந்திருக்கும் நிலையில்- இன்ஸ்டாகிராமில் பதிவிட்டான். பலர் முன்னிலையில் மேடை ஏறி நின்று ஏதோ குற்றத்தை ஒப்புக்கொள்வது போல மிகுந்த பயத்துடனும் குற்றவுணர்ச்சியுடனும் அச்செயலில் அவன் ஈடுபட்டான். தன்னுடைய இந்த தோற்றத்தை- அவலட்சணத்தை, ரப்பர் போல் ஆடும் சதைத் திரட்சியை- பொதுவில் யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள்? தோற்றுப் போன உடல் எவ்வளவு அவமானகரமானது? இரண்டு அலுவலகத் தோழிகள் உட்பட நூற்றிருபது பேர் அப்படத்திற்கு இதயக்குறி அழுத்தினார்கள். ஒரு பழைய நண்பன் பின்னூட்டம் எழுதினான்– “இந்த சோதனைக் காலத்திலும் நீ உன் உடற்பயிற்சியை நிறுத்தவில்லை போல. பைசெப்ஸில் தெரிகிறது”.

ரகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் எல்லாம் யாரை பார்க்கிறார்கள்? என் உடல் ஏன் அவர்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை இது தன் வருங்கால தோற்றமோ? காலத்தில் தான் மட்டும் முன்னால் போய்விட, எல்லோரும் வேறு காலத்தில் இருக்கிறார்களோ? எனில் வருங்காலத்தில் எனக்காக காத்திருப்பது – இந்த பெருத்த பின்புறம்தானா?

கண்ணாடி கோப்பையில் சோடா கலந்து தங்க மினுக்கம் எழுந்தது. ரகு குனிந்து தன் வயிறை அசூயையோடு பார்த்தான். ஒவ்வொரு மூச்சுக்கும் அது அகலமாய் விரிந்து அடங்கியது. தீபனும் சத்யாவும் அது பற்றிய போதமே இல்லாமல் தங்கள் கோப்பைகளோடும் சுருங்கும் விழிகளோடும் தனி யோசனைகளில் முழ்கியிருந்தனர். சுவாசத்தில் நெருப்பு போல் வெப்பமேற, விஸ்கியை மொத்தமாக, கவிழ்த்து குடித்தான் ரகு.

O

                தீபன், ரகு, சத்யா மூன்று பேரும் கண்களை மூடி மூடி திறந்தார்கள். தலைக்குள் முடிச்சுகள் இளகி புறவுலகு தன் திரையை கலைத்து புதிய ஒத்திசைவை வெளிப்படுத்தியது. சத்யா ஒருக்களித்து படுத்துக் கொண்டான். வெவ்வேறு அளவுகளோடு விஸ்கி கோப்பைகள் மையத்தில் இருந்தன. குளிர்ந்த காற்று அறைக்குள் புகுந்தது.      

“டின்னர் ஆர்டர் செய்வோமா?” என்றவாறு தீபன் ஆன்லைன் செயலியை திறந்து ஒவ்வொரு பக்கமாக நகர்த்தினான். “என்ன செலக்ட் பண்ணலாம்?” செல்பேசி திரையில் வெவ்வேறு உணவுகளின் பட்டியல் புரண்டது. குஜராத்தி பட்டர் சிக்கனும் மதுரை மட்டன் சுக்காவும் மும்பை வடா பாவும் ஹைதரபாதி தம் பிரியாணியும் கர்நாடகா தொன்னை பிரியாணியும் மலபார் பிரியாணியும் இத்தாலியன் பாஸ்தாவும் பெல்ஜியம் வாஃபிலும் அழகிய புகைப்படங்களில் இனிய ருசியை நினைவூட்டி திரையில் அலைந்தன.  எல்லா உணவகத்திலும் அசல் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

“மனுஷன் சாப்பிட்டே செத்துடுவான் இங்க” என்று கசப்போடு கூறினான் ரகு. நகரமே ஒரு பக்கம் மரண வீடாக மாறிக் கொண்டிருக்கும்போது கல்யாண வீடு மாதிரி இன்னொரு பக்கம் விசேஷமாக சமையலும் நடந்துக் கொண்டிருக்கிறது என்றான். “சாப்பாடு டெலிவரிக்கு முதலில் தடை போடனும். ஊரையே பூட்டிட்டாங்க. ஆனால் இவங்க வண்டி மட்டும் ஓடிட்டே இருக்கு”

தீபன் சிறு இடைவேளைக்கு பிறகு “இன்னொரு வண்டியும் ஓடுது. ஆம்புலன்ஸ்” என்று கூறிவிட்டு டின்னர் ஆர்டர் செய்தான்.

பொழுதுக்கும் சாலைகளில் அழுகுரலோடு ஆம்புலன்ஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. வெளியே உலகம் இயங்குவதன் ஒரே அறிகுறியாய் அவை அலறலோடு மரணம் நோக்கி உடல்களை சுமந்து முன்னேறின.

தீபன் தன் அறையில் தனித்திருக்கும்போது எதிர்பாராத தொடுதல் போல ஆம்புலன்ஸ் சத்தம் அடிக்கடி தீண்டி துணுக்குற வைத்தது. நகரை போர்த்தியுள்ள மௌனத்தினால் அது கூடுதல் அழுத்தம் பெற்றிருப்பதாக அவன் எண்ணினான். டீஸல் வாசம் மிகுந்த பேருந்து நிலையங்கள், வறுத்த கடலையும் சமோசாவும் பானிப்பூரியும் விற்கும் சாலையோர தள்ளுவண்டிகள், நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மலிவு விலை ஆடைகள், வாகன ஓட்டிகளின் பொறுமையில்லாத ஹாரன் ஒலிகள் இவை எதுவும் இல்லாத பெங்களூர் நகரம் காடு போல மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. இளவேனில் பூக்கள் யாரும் பார்க்காமல் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்துக் கொண்டிருந்தன. ஆம்புலஸ்களின் அலறலில் நகரமே சட்டென்று உயிர்கொண்டு துடித்தது. காலி அறையின் எதிரொலியாய் சைரன் ஒலிகள் அமானுஷ்யமாக கேட்டன. ஊரடங்கிய மௌனம் மட்டும் இல்லாவிட்டால் எல்லா ஓசைகளும் இவ்வளவு துல்லியமாக கேட்காது என தீபன் கருதினான். ஒவ்வொன்றும் தனித்தனியாக தன்னை வெளிப்படுத்தாது. சமீபமாக, தன்னுடைய அறையில் கேட்டுக் கொண்டிருக்கும் கவிதை வாசிக்கும் குரல்கூட கவனத்தில் விழாமல் போயிருக்கலாம்.

பவித்ரா கொண்டு செல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து, அது நடந்தது. அந்த சனிக்கிழமை மதியம் அறையில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது முதலில் பவித்ராவின் குரலே தீபனுள் ஒலித்தது. அதை அவன் இயல்பாக எடுத்துக் கொண்டான். மனதுக்குள் ஒலிக்கும் பவித்ராவின் குரல் அடிக்கடி கேட்டு பழக்கமாகிவிட்டிருந்ததால் அவன் அன்னியமாக உணரவில்லை. அவளை கொண்டு போவதற்கு முன்னால் ஓர் அதிகாலை, அவளுடன் தனிமையில் நடந்த உரையாடல் அவன் நினைவில் அழுத்தமாக பதிந்துவிட்டிருந்தது- அவளுடைய பெரிய உதடுகள் போலவே. அவள் மறைந்தும் அவ்வுரையாடல் நீண்டது. அவள் குரல் மனதில் ஒலித்தது.

பவித்ரா, இல்லாமலாகியும்,சில நேரங்களில் அவனிடம் கேள்விகள் எழுப்புவாள். ஒரு தடவை, புனைவு ஏன் வாசிக்க வேண்டும் என பழைய கேள்வியை திரும்ப கேட்டாள். இன்னொரு தடவை, உங்கள் அறையில் ஏன் குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகங்களே நிறைய இருக்கின்றன என்று வினவினாள். ஒரு சமயம், எல்லை மீறி உங்கள் பழைய காதலியின் பெயர் என்ன என்றும் கேட்டிருக்கிறாள். அவளது எல்லா கேள்விகளுக்கும் தீபன் பதில் கூறினாள். இப்படி வெவ்வேறு கேள்விகள் கேட்கும் பவித்ரா, அன்று, நீங்கள் ஏன் கவிதை வாசிக்கிறீர்கள்? என்று கேட்டாள். மனதில் அனிச்சையாக பதில் உருவாக, தீபன் வலுக்கட்டாயமாக தன்னை தடுத்து நிறுத்தினான். இது கட்டுப்பாட்டை மீறி போவதாய் தோன்றியது. இறந்தவர்களுடன் பேசுவது அவ்வளவு நல்லதல்ல – அதிலும் முக்கியமாக கவிதைப் பற்றி பேசுவது – என்று நினைத்து தன் எண்ணவோட்டத்தை தடுத்தான். பவித்ராவுடனான கற்பனை உரையாடல்களை இத்துடன் நிறைவு செய்ய அவன் முடிவெடுத்தான். இந்த நிலையில்தான் அப்புதிய குரல் அறையில் தோன்றியது. ஒரு முதிய ஆண்குரலின் நடுக்கமான முணுமுணுப்பு.

புத்தகங்கள் அடுக்கிக் கொண்டிருந்தவன் களைத்துப் போய் படுக்கையில் சரிந்து பிறகு தன் நினைவில்லாமலேயே தூக்கத்தில் அமிழ்ந்திருந்தான். சிறுபொழுதிலேயே உடல் அதிர்ந்து அவன் உறக்கத்திலிருந்து எழுந்துக் கொண்டான். எரிச்சலோடு அவன் கண் திறந்தான். உறக்கத்திலிருந்தும் வலியும் துயரும் இல்லாத அதன் ஆழத்திலிருந்தும், யார் அது தன்னை சதா வெளியேற்றுவது?

சடவு முறித்து தன்னிலை மீண்டதும் அறையின் நிசப்தத்தில் ஏதோ வேறுபாட்டினை தீபன் அறிந்தான். நோயாளியின் மூச்சிரைப்பென ஒரு சத்தம். காற்றில் காகிதங்கள் படபடப்பது கேட்டது. அந்தியை எதிர்நோக்கி மதிய ஒளி மங்கிக் கொண்டு வந்தது. சிறிய கனைப்பைத் தொடர்ந்து ஒரு முதிய ஆண் குரல் எதையோ படிப்பதை அவன் கேட்டான். சன்னமான குரல். அது என்ன மொழி என்றுக்கூட தெரியவில்லை. அக்குரல் கரகரப்பாக இருந்தது. பல்வேறு அலைவரிசைகளில் மோதி இரைச்சலை கடந்து கேட்பது போல. உற்று கவனிக்கும்போது அதை தனியாக அறிய முடிந்தது.  பாஷை புரியாதபோதும் அது கவிதை என தீபன் கண்டு கொண்டான் – ஒலியாலும் உச்சரிப்பின் தீவிரத்தாலும். குரலில் பெரிய உணர்ச்சி வேகமோ தெளிவோ இல்லை. ஆனால் அம்முதியவர் ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்கிறார் என்று தெரிந்தது – மரண வாக்குமூலம் என. அதுவே மனதில் கலவரம் ஏற்படுத்தியது. அச்சொற்கள் மந்திர உச்சாடனம் போல அவ்வறையை நிறைத்தன. கொஞ்ச நேரத்தில் தீபன் எழுந்து நின்றுவிட்டான். தன்னில் பெருகும் உணர்ச்சியினை சுமக்க முடியாமல்.

அதன் பிறகு, அவ்வப்போது அக்குரல் அவனுக்கு கேட்கும். அவன் உடனே எழுந்து நின்று அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி நடப்பான். அக்குரலும் அவனை துரத்தி துரத்தி வரும்.

ரகு “இன்னொன்னு ஒகேவா?” என்று விஸ்கி பாட்டிலை கையில் எடுக்க, சத்யா கண்ணை திறந்து ஆம் என்று தலையாட்டினான்.

தீபன் தலை பாரமேறியிருந்தது. அம்முதிய குரலை பொருட்படுத்தக்கூடாது என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அது கேட்கிறதா இல்லையா என்பதை அறிய சதா செவிகளை கூர்படுத்த வேண்டி வந்தது. தவிர்ப்பதற்காகவே அதை எதிர்நோக்க வேண்டியதாகிற்று. எப்போது வேண்டுமானாலும் அந்த முதியவர் கவிதை வாசிக்க ஆரம்பிக்கலாம். தீபன் கழுத்தை சரித்து அண்ணாந்து பார்த்தான். மேலே மின்விசிறியின் இறக்கைகள் வெட்டுப்பட்ட கரங்கள் என அசைவில்லாமல் நின்றன. மெல்ல அவை அசைவதாக அவனுக்கு மயக்கம் எழுந்தது. தலைக்கு மேல் அந்த கருப்பு கரங்கள் சுழல்கின்றன. ஒன்று. இரண்டு. மூன்று. மூன்று றெக்கைகளும் தொடங்கிய புள்ளிக்கே மீண்டும் வந்து, அங்கிருந்து திரும்பவும் சுழல ஆரம்பிக்கின்றன. மீண்டும் மீண்டும் நிகழும் தொடர்ச்சி. ஏன் அவை அப்படி முடிவின்றி தன் வாலை தானே துரத்தும் நாயாக ஒரே இடத்தில் சுற்றுகின்றன?

ஒலிபெருக்கியில் மென்மையாக ஒலித்த பாடல் தீபன் காதில் விழுந்தது. ஒரு ஷெனாய் நெடுநேரமாக ஒரே ஸ்வர வரிசையை திரும்ப திரும்ப காற்றில் மீட்டிக் கொண்டிருந்தது – காலத்தையே நீட்டிப்பது போல. முதலில் அதன் போக்கு அவனுக்கு பிடிபடவில்லை. ஆனால் அவனை அது கட்டியிழுத்தது. கூர்ந்து கவனிக்கையில், திடீரென்று ஒரு கணத்தில் மின்னல் வெட்டாய் அவன் அதை கண்டு கொண்டான். வடிவம். திட்டவட்டமான வடிவம். இசை மேலேறியது. கீழே இறங்கியது. நேர்க்கோட்டில் தரித்து மீண்டும் மேலேறியது. திரும்பவும் கீழே இறங்கியது. மீண்டும் மேலே. இவ்வளவுதான். என்னவொரு பைத்தியக்காரத்தனம்? மீள மீள நிகழும் ஒரு வடிவத்தில் –அந்த தொடர்ச்சியில்- எப்படியோ இசை பிறக்கிறது. வடிவமும் தொடர்ச்சியும். வேறொன்றுமே இல்லை. அவன் அலெக்சாவை நிறுத்திவிட்டு சத்யாவையும் ரகுவையும் அவன் நோக்கினான். அவர்களோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை.

தீபன் மேலும் வியப்புற்றான் -எவ்வளவு விஷயங்கள் இப்படி திரும்ப திரும்ப நடக்கின்றன? சுழல்களின் சுழல். புதிர்களின் புதிர். இது யாருடைய சொற்பிரயோகம்? போர்ஹெவாகத்தான் இருக்கும். எல்லா புனைவும் ஒரே கதை என்பது அவர் நம்பிக்கை. எல்லா மனிதரும் ஒரே நபர்தான். எல்லா வாழ்க்கையுமே ஒரே கதைதான். மீண்டும் மீண்டும் நிகழ்வது. ஆனால் புதிது போலவே உணர்கிறோம். பிறப்பும் இறப்பும். எனில் இப்பேரழிவும் ஏற்கனவே நடந்திருக்கிறதா? லட்சம் உயிர்களை கொன்று வளர்கிற, அந்த ஆக்கிரமிப்பு சக்தியும் ஏற்கனவே இருந்ததா? அது இறந்து பிறந்திருக்கிறதா? எனில், இறந்த மனிதர்களும் அப்படி மீண்டும் பிறக்க முடியுமா? அல்யோஷாவிடம் ஒரு சிறுவன் கேட்கிறான். “கரமசோவே! நமக்கு சொல்லப்பட்டது உண்மைதானா? நாம் மரணத்திலிருந்து மீண்டும் எழுந்து வருவோமா? மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்போமா?” அல்யோஷா பாதி உற்சாகத்துடனும் பாதி சிரிப்புடனும் சொல்கிறான் “நிச்சயமாக நாம் மீண்டும் எழுவோம். மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வோம். நமக்கு நடந்தவற்றை எல்லாம், ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக் கொள்வோம்”

தீபன் அறையைச் சுற்றி பார்த்துவிட்டு, சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். இரவு விளக்கின் தேசலான மஞ்சள் ஒளியில் அறைமூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மாய உயிர்களாய் தோன்றின. தீபன் யோசனையோடு கோப்பையை கையில் எடுக்க, தீடீரென்று அறைக்குள் காகிதங்கள் காற்றில் படபடக்கும் ஓசை கேட்டது.  கோப்பையை உடனே கீழே வைத்துவிட்டு, அவன் மறுபடி ரகுவையும் சத்யாவையும் பார்த்தான். அவர்களிடம் அந்த ஓசை பற்றிய பிரக்ஞையே இல்லை. தலையை உலுக்கி, தீபன் புலன்களை முடிந்த மட்டும் ஒருங்கிணைத்தான். வெற்று வெளியை உன்னித்து கவனித்தான். ஓசைகள் அவன் கற்பனையில் காட்சியாய் மலர்ந்தன.

இருட்டில் ஒரு மெழுகுவர்த்தி முன்னால் அமர்ந்தபடி, நீண்ட தாடி கொண்ட முதியவர் காற்றில் படபடக்கும் பக்கங்களை கையால் அழுத்தி பிடிக்கிறார். காகிதத்தின் மேல் விரல் வைத்து ஒவ்வொரு வார்த்தையாக படிக்க, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியுள்ளது. அவர் சொற்களை உற்றுக் கேட்டான் தீபன். அப்போது அக்கவிதை வரிகள் அவனுக்கு புரிவது போலிருந்தது. அக்குரல் மெல்ல தேய்ந்து மறைந்த பிறகும் அவ்வரிகள் அவன் மனதுக்குள் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவனுடைய நடுங்கும் கைகள் அனிச்சையாக கோர்த்துக் கொண்டன – யாருக்கோ நன்றி சொல்வது போல.

O

த்யா கனவின் திளைக்கும் கண்களோடு படுத்துக் கிடந்தான். இசை நிறுத்தப்பட்டு, அறைக்குள் வளர்ந்த மௌனம் அவனை மேலும் தூரத்தில் தள்ளியது. பால்கனியில் நிலவு வெளிச்சத்தை அவன் பார்த்தான். ஏதோ செய்தி சொல்ல காத்திருப்பது போல தோன்றியது. பிறகு எந்திரத்தனமாக, செல்பேசியில் அலையத் தொடங்கினான், சத்யா.

அவன் வாட்சாப்பில் ஏதேதோ வீடியோக்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றாய் பார்த்தான். முதல் வீடியோவில் ஓர் இளம்பெண் மருத்துவமனையின் பிணவறை அருகே நின்று வான் நோக்கி “யாருமே காப்பாற்றவில்லை” என்று முறையிட்டுக் கொண்டிருந்தாள். கருப்பு நிற முகக்கவசம் வாயை மூடியிருந்ததால், அவள்தான் பேசுகிறாளா என்றும் சந்தேகம் எழுந்தது. குரல் வேறெங்கிருந்தோ வருவது மாதிரியும் இருந்தது. அது அந்த கேவலை இரட்டிப்பாக்கியது. அண்மைக் காட்சியில் அவள் நெற்றி நரம்பு துடிப்பதும், கழுத்து எலும்பும் துருத்துவதும், தொண்டைக்குழி அழுந்துவதும் துல்லியாமக தெரிந்தன. சத்யா அடுத்த வீடியோவை திறந்தான். அதில் காவல் துறை அதிகாரிகள் வடகிழக்கை சேர்ந்த தொழிலாளிகளை விரட்டி அடித்துக் கொண்டிருந்தனர். நகர் முழுக்க, வேலை முடங்கிய பல கட்டிடங்களில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் பதுங்கியிருந்தனர். ஒரு கட்டிடத்தில் மண் அடுப்பில் நெருப்பு இன்னும் அணையாமல் எரிய, அவர்கள் மூட்டை முடிச்சுகளை மட்டும் தூக்கிக் கொண்டு போவதை காமிரா காட்டியது. சத்யா அக்காட்சியை உறைய வைத்து, அந்த நெருப்பையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டெலிவரி வந்துடுச்சு போல”

வாசல் மணியின் எலக்ட்ரானிக் பறவைக் குரல் கேட்டு, சத்யா திடுக்கிட்டான். “நான் வாங்கிட்டு வரேன்” என்று அவன் எழுந்துகொள்ள, தீபன் கூடவே எழுந்து நின்றான். “எல்லோரும் வெளியவே இருப்போம். ரூமுக்குள்ள மூச்சு அடைக்குது”. ரகு தன் பெரிய உடலோடு எழுந்து கொள்ள கைகளை தரையில் ஊன்ற வேண்டியிருந்தது.

அழகான குட்டி டப்பாவில் உணவு பேக் செய்யப்பட்டிருந்தது. டெலிவரி செய்ய வந்த நபரும் அப்படி பேக் செய்யப்பட்ட உணவு போலவே உடலை மூடியிருந்தார். ஹெல்மட் மாதிரி கண்ணாடி முகக்கவம் அணிந்திருந்தார். தீபன், ரகு இருவரும் கூடத்து நாற்காலிகளில் அமர, சத்யா கதவை சாத்திவிட்டு உணவு டப்பாவை கொண்டு வந்து மேஜையில் வைத்தான்.

ரகுவுக்கு அந்த உணவு டப்பாவை பார்க்கும்போது ஆத்திரமாய் வந்தது. அதே நேரம், மூன்று பேருக்கான உணவை ஒரே ஆளாய் சாப்பிட அவனுக்கு வேகமும் வந்தது. பசியை வெளிப்படுத்துவது மாதிரி அவன் வயிறு லேசாய் முனங்கியது. அவன் தன் மீதே கோபம் கொண்டான். சீக்கிரமே, தன் வேஷம் கலைந்துவிடும் என்று அவனுக்கு பட்டது. தன் உண்மையான உடல் எல்லோர் கண்களுக்கும் தெரிய போகிறது.  அவன் உடனே எழுந்து நின்றான். கால்கள் லேசாக தடுமாறி பின் நிலைத்தன.

“எங்கடா எந்திரிக்கிற?” என்று கேட்டான் தீபன்.

“இல்லைடா. எக்சர்சைஸ் பண்ணிவிட்டு வந்து சாப்பிடுறேன்”. வேகமாக தலையசைத்த ரகுவினால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிட்டான். அர்த்தமில்லாமல் ஏதேதோ சொற்கள் அவன் உதடுகளில் நெரிபட்டன.

அவனை குழப்பத்துடன் நோக்கிவிட்டு, தீபன் திரும்பி பக்கவாட்டில் இருந்து காலி சோபாவை பார்த்தான். சடுதியில் அவனில் என்னவோ கலைந்து விலகியது. பவித்ராவை அதே இடத்தில் அமர்ந்து பார்த்ததும் அவள் அழகு துலங்கி வந்ததும் அவன் ஞாபகத்தில் திறந்தன. கடவுள் நம்பிக்கை பற்றியும் அங்கு உட்கார்ந்துதான் அவர்கள் பேசினார்கள். உடனேயே தன் அம்மாவின் நினைவு வந்தது தீபனுக்கு. தனக்காய் வேண்டிக் கொள்ளச் சொல்லி அவளிடம் கேட்டு, எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன? அடுத்தமுறை பேசும்போது அதை சொல்ல வேண்டும் என்று நினைத்தான். அச்சமயம் யதேச்சையாக தன் கைகளை பார்த்தான். வலது கைவிரல்களின் பழைய காயம் சுவடேயில்லாமல் மறைந்திருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சத்யா தாகமாய் உணர்ந்து நீர் அருந்த சமையலறைக்குச் சென்றான். போகும் வழியிலும் செல்பேசியில், தான் உறைய வைத்த காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். தினமும் ஹாஸ்டலில் நின்று அந்நெருப்புத் தழலை பார்த்தது பற்றி, பவித்ரா அவனிடம் சொல்லியிருக்கிறாள். செல்பேசியை மூடி அவன் கால்சட்டையில் போட்டுக் கொண்டான். சமையலறை புழக்கம் இழந்து, உணவு பொருட்கள் தரையெல்லாம் சிந்தி, சுத்தப்படுத்தப்படாமல் எச்சில் பாத்திரங்களோடும், கலைந்த பிளாஸ்டிக் டப்பாக்களோடும் மோசமாய் காட்சி அளித்தது. கழுவு தொட்டியில் அழுகிய வாடை புதைந்திருந்தது. பிரிட்ஜில் பிரெட் பாக்கெட்டுகளில் பூஞ்சை வளர்ந்திருந்தது. சத்யா கேஸ் அடுப்பில் நெருப்பை பற்ற வைத்து சில நொடிகளுக்கு நீல முனைகளிலிருந்து மேலேறும் ஜீவாலையினையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அடுப்பை அணைத்தபோது, சமையலறை மேடையில் சில எறும்புகள் போவதை அவன் கண்டான். அவை திட்டமிட்டுச் சென்ற வழி, தேன் பாட்டிலில் போய் முடிந்தது. சத்யா அந்த கண்ணாடி குடுவையை மர அடுக்கிலிருந்து எடுத்தான். கட்டியாக தேன் ஒட்டியிருந்த மூடியை திருகி கழற்றினான். உள்ளே பல எறும்புகள் செத்து கிடந்தன. குளத்தில் மிதக்கும் மனித பிணங்கள் என தேன் பாட்டிலில் அச்சிறிய உயிர்கள் உப்பிய வயிறோடு மல்லாந்து கிடந்தன. பெருமூச்செறிந்து சத்யா சமையலறையை விட்டு வெளியே வந்தான்.

“எங்கடா போற? சாப்பிட வரலையா?” வேகமாய் நடந்து சென்ற சத்யாவை பார்த்து தீபன் கேட்டான்.

தன் அறையை விரலால் சுட்டிக் காட்டினான் சத்யா.

ரகு “அதுதான் சரி” என்று நாற்காலியின் கை பிடியை பற்றி விரைந்து எழுந்தான். “எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறோம்”. அவன் எழுந்து நின்று சில நொடிகளுக்கு வயிறு மட்டும் தனியே குலுங்கியது.சத்யாவை பின் தொடர்ந்து ரகு செல்ல, தீபனும் வேறு வழி தோன்றாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.   

ஏற்கனவே பாதி கிழிந்திருந்த சிகப்பு டேப், சத்யா கதவை இழுத்து தள்ளியே வேகத்தில், முழுமையாக கழன்று கீழே விழுந்தது. ரகு லைட் ஸ்விட்சை அழுத்தவும் வெளிச்சம் கண் கூசி பாய்ந்தது. சத்யா நேராக நடந்து பால்கனி கதவை திறந்தான். நெடுநாள் கழித்து வெளிக்காற்று அறைக்குள் நுழைந்தது. இரவின் குளிர் அலையாய் சுழன்றது. மலை மேல் நின்று பள்ளத்தாக்கினை பார்ப்பது போலவும் காற்றழுத்தம் மூச்சை நெருக்குவது போலவும் சத்யா சுவாசத்துக்கு சிரமப்பட்டபடி அறையை அர்த்தமின்றி நோக்க, தீபன் வாசல் பக்கமாகவே நடந்துக் கொண்டிருந்தான்.

தன் ஒவ்வொரு காலடியையும் யாரோ எண்ணுவது மாதிரி பொறுமையாக நடந்த தீபன், மேஜையில் எலுமிச்சை மாலை அணிந்த ஒரு நிறைமாத மஞ்சள் உடலையும் ஒட்டடை படிந்த விளக்கையும் பார்த்து நின்றான். விளக்கிலிருந்து எண்ணெய் வாசம் மெல்ல அவன் நாசியில் ஏற, ஒரு பழைய கற் கோயிலில் இருப்பதான பிரம்மை எழுந்திற்று. சற்றுத் தள்ளி, அவனது அசடன் நாவல் இருந்தது -முள்கிரீடத்தை வலியே இல்லாமல் வெறும் குழப்பத்தோடு சுமக்கும் அசடனின் அட்டைப் படத்தோடு. அதை எடுக்கலாம் என்றெண்ணி சில அடிகள் முன்னால் போகையில், ரகுவின் கரம், தன்னை அச்சத்துடன் பற்றுவதை தீபன் அறிந்தான். அவன் கை எப்போது இவ்வளவு பெரிதாகிற்று? ரகுவின் உருண்டை முகத்தையும் சதைத் திரண்ட மார்பையும் கண்டு பதறிய தீபன், எதிர் சுவரில் நிலை பதித்திருக்கும் அவன் பார்வையை அறிந்து திரும்பினான். அதே நேரம் சத்யாவும் அவ்விடத்தை பார்க்கலானான்.

சுவரில் உடலற்ற நிழலொன்று இருளாய் படிவதையும் அது மெல்ல அசைவதையும் அவர்கள் கண்டார்கள்.

O

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.