/

எஹுதா அமிக்ஹாய் கவிதைகள்

தமிழில் – வே.நி.சூர்யா

எஹுதா அமிக்ஹாய் (1924- 2000)

ஜெர்மனியில் உள்ள வூர்ஸ்பர்க்கில் மே 3, 1924இல் பிறந்தார். 1936இல் தனது குடும்பத்துடன் பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்தார். பிறகு இஸ்ரேலிய குடிமகனாக ஆனார். ஜெர்மன் அவரது தாய் மொழியாக இருந்தாலும், பாலஸ்தீனத்தில் ஹீப்ருவை கற்றுக்கொண்டார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் இராணுவத்தின் படைப்பிரிவில் பணியாற்றினார. மேலும் 1948இல் அரபு-இஸ்ரேல் போரில் கலந்துகொண்டு போரிட்டார். போரைத் தொடர்ந்து, ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் விவிலிய நூல்களையும் ஹீப்ரு இலக்கியங்களையும் பயின்றார். ஹீப்ருவில் 11 கவிதைத் தொகுதிகளையும் இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைப் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார். மேலோட்டமாகச் சொல்லவேண்டுமெனில் காதலும் யுத்தமுமே அமிக்ஹாயின் பாடுபொருட்கள் எனலாம். அவற்றை விவிலியத்தின் தாக்கம், வரலாறு, ஒரு வித அவலச்சுவை, எதிர்பாரா உருவகங்கள் என வெளிப்படுத்துபவை அமிக்ஹாயின் கவிதைகள் .


தாமாருக்கான ஆறு கவிதைகள்

1

மழை அமைதியாகக் கதைத்துக் கொண்டிருக்கிறது,
நீ இப்பொழுது உறங்கலாம்.
என் படுக்கைக்கருகில், செய்தித்தாள் இறக்கைகளின் சலசலப்பு.
அங்குச் சம்மனசுகள் எவரும் இல்லை.
நான் சீக்கிரமாகக் கண்விழித்து வரப்போகும் தினத்திற்கு
லஞ்சம் கொடுப்பேன்
நம்மிடம் கருணை காட்டுவதற்காக.

2

உன்னிடம் திராட்சைகளின் சிரிப்பு இருந்தது:
முழுமையான பல பசிய புன்னகைகள்.
உனது தேகம் பல்லிகளால் நிரம்பியிருந்தது.
அவை எல்லாமே சூரியனை நேசித்தன
மலர்கள் வயல்களில் வளர்ந்தன, புற்களோ எனது கன்னங்களில் வளர்ந்தன,
எதுவும் சாத்தியமுள்ளதாக இருந்தது.

3

நீ எப்போதும் என் விழிகளின் மீது உறங்குகின்றாய்.
நம் வாழ்வின் ஒவ்வொரு தினமும் ஒன்றுசேர்கையில்
தனது புத்தகத்திலிருந்து ஒற்றை வரியை நீக்குகிறான் பிரசங்கி.
ஒரு பயங்கரமான விசாரணையிலிருந்து நாம் சாட்சியைப் பாதுகாக்கிறோம்.
நாம் அனைவரையும் விடுவிப்போம்!

4

வாயிலிருக்கும் உதிரச்சுவையைப் போல நம் மீது திடீரென இளவேனிற்காலம்.
உலகம் இன்றிரவு விழித்திருக்கிறது.
அது மல்லாந்து படுத்திருக்கிறது, விழிகளைத் திறந்தபடி.
பிறைச்சந்திரன் உன் கன்னவிளிம்புகளில் பொருந்த
என் கன்னவிளிம்புகளில்
இசைகிறது உன் முலை

5

உன் இருதயம் ரத்தத்தைத் தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுகிறது
உனது ரத்தநாளங்களுக்குள்.
உன் விழிகளோ இன்னும் வெதுவெதுப்பாக, காலம் உறங்கிய படுக்கையைப் போல.
உன் தொடைகள் இரு இனிக்கும் நேற்றுகள்.
நான் உன்னிடம் வருகிறேன்.
நூற்றியைம்பது பாசுரங்களும் அல்லேலூயாயெனக் கர்ஜிக்கின்றன

6

எனது கண்கள் ஒன்றோடொன்று கலந்தோட வேண்டும், இரண்டு அண்டை ஏரிகள் போல.
அவை பார்த்திருந்த யாவையும்
தங்களுக்குள் சொல்லிக்கொள்வதற்காக.
என் ரத்தத்திற்கு நிறைய உறவினர்கள் உண்டு.
அவர்கள் ஒருபோதும் பார்க்கவருவதில்லை.
ஆனால் அவர்கள் மரிக்கும்போது எனது ரத்தம் சுதந்தரிக்கிறது.

*
[தாமார்- பைபிளில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம்]

2
முடிவிலாத கவிதை

புத்தம் புதிய அருங்காட்சியகத்தினுள்
ஒரு பழைய வழிபாட்டுத் தலம்.
அவ்வழிபாட்டுத் தலத்தினுள்
நான்.
எனக்குள்
எனது இருதயம்.
என் இருதயத்தினுள்
ஓர் அருங்காட்சியகம்.
அந்த அருங்காட்சியகத்தினுள்
ஒரு வழிபாட்டுத் தலம்,
அதற்குள்
நான்.
எனக்குள்
எனது இருதயம்,
என் இருதயத்தினுள்
ஓர் அருங்காட்சியகம்.
*

3

இது என்ன? இது உபகரணங்களின்
பழைய கொட்டகை.
இல்லை, இது மகத்தான கடந்தகாலத்திய காதல்.
இந்த இருட்டிலும் நம்பிக்கையிலும்
பதற்றமும் ஆனந்தமும் இங்கு ஒன்றாக இருந்தது.
அநேகமாய் முன்பொருசமயத்தில் நானிங்கு இருந்திருக்கலாம்.
நான் அருகில் செல்லவேயில்லை என்னவென்று தெரிந்து கொள்ள.
இவை சொப்பனத்திலிருந்து அழைக்கும் குரல்களேதான்.
இல்லை, இது ஒரு மகத்தான காதல்.
இல்லை, இது உபகரணங்களின் பழைய கொட்டகை.

*
4
தொலைந்தவை

செய்தித்தாள்களிலிருந்தும் அறிவிப்பு பலகைகளிலிருந்தும்
நான் தெரிந்து கொள்கிறேன்
தொலைந்துபோன விஷயங்களைக் குறித்து.
இதுதான் மனிதர்களிடம் என்ன இருந்ததென்றும்
அவர்களுக்கு என்ன பிடிக்குமென்றும்
அறிந்துகொள்வதற்கான எனது உபாயம்.

ஒருமுறை, களைத்த எனது தலை
ரோமங்களடர்ந்த எனது மார்பில் சாய்கையில்
நான் கண்டுபிடித்தேன்
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும்
எனது தந்தையின் நறுமணத்தை.

செக்கோஸ்லோவாக்கியாவிற்குப் போக முடியாத அல்லது
சிலேயிற்குத் திரும்புவதற்கு அஞ்சும்
ஒருவனைப் போன்றது எனது ஞாபகங்கள்.

சிலசமயங்களில் நான் மறுபடியும் பார்க்கிறேன்
மேஜையில் தந்தியுடன்,
வெண்ணிற கூரையுள்ள அறையை.
*

5
எதிர்காலம் என்று அழைக்கப்படும் மாபெரும் நிகழ்ச்சி தொடங்குகின்றது

என்னால் இனி பார்க்கவே முடியாத மனிதர்கள்
என்னுடன் அமர்ந்து உணவருந்துகின்றனர்.
சிறுவன் சொப்பனம் காண்கிறான் படுக்கையிலிருந்து
அங்கவன் ஆழாழியினில் நீந்துபவனாகவோ விண்ணில்
பறப்பவனாகவோ இருக்கக்கூடும்.
மேலும் அவர்கள் அனைவரும் சீவப்படுகின்றனர் ஒரே சீப்பால்
யாவும் ஒரே திசையில்.
மரித்தவர்கள் அல்லேலூயா பாடுகிறார்கள், தூசி நிறைந்த வாயுடன்.
நாட்கள் மறைகின்றன இரவின் வனப்பிற்குள்.
ரேடியோவில் பெண்ணொருத்தி செய்தி வாசிக்கிறாள்
மெல்லிய இனிய குரலில்
யுத்தத்தில் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறார்கள் என்று.
எதிர்காலம் என்று அழைக்கப்படும் மாபெரும் நிகழ்ச்சி
தொடங்குகின்றது.

*

வே.நி.சூர்யா

கவிதைகள், மொழியாக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் வே.நி.சூர்யா, கரப்பானியம், அந்தியில் திகழ்வது என்ற இரண்டு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

2 Comments

  1. ////நான் சீக்கிரமாகக் கண்விழித்து வரப்போகும் தினத்திற்கு
    லஞ்சம் கொடுப்பேன்
    நம்மிடம் கருணை காட்டுவதற்காக//

உரையாடலுக்கு

Your email address will not be published.