/

புத்தரின் முதல் இரண்டு பேருரைகள் : ஓ.ரா.ந கிருஷ்ணன்

புத்தரின் முதல் இரண்டு பேருரைகள்

(1) முதலாவது பேருரை

தம்மசக்கப்பவத்தன சுத்தம்

(தம்மச்சக்கரத்தைச் சுழற்றி விடுதல்)

ஆனந்தர்

நான் இவ்வாறு செவியுற்றேன்:

புத்தர் பெருமான் காசிக்கு அருகிலுள்ள இசிபட்டணத்து மான்சோலையில் தமது முதல் ஐந்து சீடர்களான துறவிகளுக்கும் வழங்கிய முதல் போதனை இவ்வாறாகும்.

66 பிக்குகளே! துறவு மேற்கொண்ட ஒருவர் தவிர்க்க வேண்டிய அதிதீவிரங்கள் (அந்த்தா) இரண்டு உள:

1) புலனின்பங்களில் திளைத்தல்-இது கீழானது, இழிவானது, உலகியல் சார்ந்தது, பழிப்புக்குரியது மற்றும் பயனற்றது.

2) தன்ஒறுப்பில் மதிமயங்குதல்- இது வேதனை மிக்கது, பழிப்புக்குரியது மற்றும் பயனற்றது.

இந்த இரு அதிதீவிரங்களையும் கைவிட்டு விட்டு, (சக்கு) கண்ணையும் (ஞான) அறிவையும் மேம்படுத்துவதாக இருப்பதுடன், சாந்தியையும், உயர் ஞானத்தையும், மெய்யொளிப் பேற்றினையும் நிர்வாண நிலையையும் தருவதாக உள்ள (மஜ்ஜிம படிபதா) நடுநிலை வழியை ததாகர் புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்.

66 பிக்குகளே! ததாகர் அறிந்து வைத்துக் கொண்டுள்ள, நடுவழி, கண்ணையும் அறிவையும் மேம்படுத்துவதாக இருப்பதோடு, சாந்தியையும் உயர்ஞானத்தையும் மெய்யொளிப் பேற்றினையும் நிர்வாண நிலையையும் தருவதாக உள்ள நடுநிலை வழி என்பது யாது?

ஓ பிக்குகளே! நற்காட்சி (ஸம்மா திட்டி), நற்சிந்தனை (ஸம்மா ஸங்கப்ப), நல்லுரை (ஸம்மா வாசா), நற்செயல் (ஸம்மா கம்மந்த), நற்தொழில் (ஸம்மா ஆஜீவ), நன்முயற்சி (ஸம்மா வாயாம), நல்மனஒருமைப்பாடு (ஸம்மா ஸதி), நற்சமாதி (ஸம்மா ஸமாதி) ஆகிய எண்வழிப் பாதையே ததாகர் புரிந்து கொண்டுள்ள நடுநிலை வழியாகும்.”

(புத்தர் மேலும் தொடர்ந்தார்):

“கவனிப்பீர், ஓ பிக்குகளே! இதுவே துக்கமாகிய உன்னத வாய்மை (துக்க அரிய ஸச்ச).”

பிறப்பு துக்கம், தேய்வுறுவது துக்கம், பிணி துக்கம், இறப்பு துக்கம்; இன்பம் தராதவற்றோடு இணைவது துக்கம்; இன்பம் தருபவற்றிலிருந்து பிரிவது துக்கம்; ஆசைப்படுவதை அடைய முடியாதது துக்கம், வெறுப்பூட்டுவது துக்கம். சுருங்கக் கூறின், உயிரை ஆக்கும் ஐந்து கந்தங்களை (கூட்டுச் சேர்க்கைகளை)ப் பற்றிக்கொண்டிருப்பது துக்கம்.

“கவனிப்பீர், ஓ பிக்குகளே! இதுவே துக்கத்தின் காரணமாகிய உன்னத வாய்மை (துக்க சமுதய அரிய ஸச்ச).

இந்தப் பிறப்பு, அந்தப் பிறப்பு என்று பிறப்புக்களை வரவேற்று இன்ப வேட்கையோடு பற்றிக்கொள்ளும் மறுபிறப்பை (பொனொபவிக) உண்டாக்குவது இந்த வேட்கைகளே: புலனின்ப வேட்கை (காம தண்ஹா), வாழ்வதில் தொடர்ந்து இருப்பதில் வேட்கை (பவ தண்ஹா), வாழாதிருப்பதில் அழிப்பதில் வேட்கை (விபவ தண்ஹா) ஆகியவையே அவை.

“கவனிப்பீர், ஓ பிக்குகளே! இதுவே துக்க முடிவு என்பதாகிய உன்னத வாய்மை (துக்க நிரோத அரிய ஸச்ச).

இந்த வேட்கைகளை விட்டு விலகல், அழித்தொழித்தல், கைவிடுதல், துறத்தல், விட்டு விடுபடல், பற்றாதிருத்தல் என்பதே அது.

“கவனிப்பீர், ஓ பிக்குகளே! இதுவே துக்க முடிவுக்கு இட்டுச் செல்லும் வழி என்பதாகிய உன்னத வாய்மை (துக்க நிரோத காமினி-படிபதா-அரிய ஸச்ச).

நற்காட்சி, நற்சிந்தனை, நற்சொல், நற்செயல், நல்வாழ்க்கைத் தொழில், நன்முயற்சி, நல்மன ஒருமை, நற்சமாதி ஆகிய எண்வழிப் பாதையே அது.

  1. (i) “இதுவே துக்கம் என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே, இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(ii) “இந்தத் துக்கம் என்பதாகிய உன்னத வாய்மை உணரப்பட வேண்டியதாகும்.”

ஓ பிக்குகளே, இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப் பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(iii) “இந்தத் துக்கம் என்பதாகிய உன்னத வாய்மை உணரப்பட்டது.’

ஓ பிக்குகளே, இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

  1. (i) “இதுவே துக்கத்தின் காரணம் என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(ii) “இதுவே துக்கத்தின் காரணம், இது அழித் தொழிக்கப்பட வேண்டும் என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(iii) “இதுவே துக்கத்தின் காரணம் அழித் தொழிக்கப்பட்டது என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

  1. (i) “இதுவே துக்கத்தின் முடிவு என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(ii) “இதுவே இந்தத் துக்கத்தின் முடிவு அடையப்பட வேண்டியது என்பதாகிய உன்னத வாய்மை.’

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(iii) “இதுவே இந்தத் துக்கத்தின் முடிவு அடையப்பட்டது என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

  1. (i) “இதுவே துக்கத்தின் முடிவுக்கு இட்டுச் செல்லும் வழி என்பதாகிய உன்னத வாய்மை.’ “

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(ii) “இதுவே இந்தத் துக்கத்தின் முடிவுக்கு இட்டுச் செல்லும் வழியைப் பண்படுத்த வேண்டும், பின்பற்ற வேண்டும் என்பதாகிய உன்னத வாய்மை.”

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

(iii) இதுவே துக்க ஒழிப்பிற்கான வழி பூரணமாகப் பண்படுத்தப்பட்டது, பின்பற்றப்பட்டது என்பதாகிய உன்னத வாய்மை.

ஓ பிக்குகளே! இவ்வாறாகவே இதற்கு முன் கேள்விப்பட்டிராதவற்றை அறிந்து கொள்ள என்னுள்ளே அகக் கண்ணும் அறிவும் ஞானமும் உட்காட்சியும் ஒளியும் உதித்தன.

“ஓ பிக்குகளே! இந்த நான்கு வாய்மைகளையும் குறித்து, ஒவ்வொன்றையும் மூன்று கோணங்களிலும் மொத்தம் பன்னிரெண்டு வகைகளிலும், அவற்றின் உண்மையான, உள்ளுணர்வான அறிவு எனக்கு முழுமையாகத் தெளிவாகாத வரை, இவ்வுலகில் தேவர்கள், மாரர்கள், பிரம்மாக்கள் ஆகியோரோடு முனிவர்கள், அந்தணர்கள், கடவுளர்கள், மனிதர்கள் உட்பட எல்லோரிடமும் நான் ஒப்பற்ற உச்ச உயரிய மெய்ஞ்ஞானம் (அனுத்தர சம்மா சம்போதிம்) பெற்றுவிட்டதாகக் கூறிக் கொள்ளவில்லை.

‘ஓ பிக்குகளே! இந்த நான்கு வாய்மைகள் குறித்து, ஒவ்வொன்றையும் மூன்று கோணங்களிலும் மொத்தம் பன்னிரெண்டு வகைகளிலும், அவற்றின் அதி நுட்பமான, உண்மையான உள்ளுணர்வான அறிவு எனக்கு முழுமையாகத் தெளிவாகிய பிறகே, இவ்வுலகில் தேவர்கள், மாரர்கள், பிரம்மாக்கள் ஆகியோரோடு முனிவர்கள், அந்தணர்கள், கடவுளர்கள், மனிதர்கள் உட்பட எல்லோரிடமும் நான் ஒப்பற்ற உச்சஉயரிய மெய்ஞ்ஞானம் பெற்றுவிட்டதாகக் கூறிக் கொண்டேன்.

“மேலும், என் மனத்தின் அசைக்க முடியாத விடுதலை நிலை குறித்தும், இதுவே என் இறுதிப் பிறப்பு என்பது குறித்தும், இனி மீண்டும் பிறவி இல்லை என்பது குறித்தும் என்னுள்ளே அறிவும் உட்காட்சியும் (ஞான தஸ்ஸன) உதித்தன.”

இவ்வாறு புத்தர் பெருமான் பேருரையாற்ற, பிக்குகள் மகிழ்ச்சியடைந்து அவரது அருளுரையைப் பாராட்டி ஆரவாரித்தனர்.

இந்தக் கோட்பாடு விளக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, வணக்கத்திற்குரிய கொண்டஞ்ஞாவின் அகத்தே மாசற்றதும், களங்கமற்றதும், உள்ளதை உள்ளபடி காண்பதுமான மெய்யறிவு- ‘எவையெல்லாம் தொடக்கத்துக்கு ஆட் பட்டவையோ அவையெல்லாம் முடிவுக்கும் ஆட்பட்டவையேயாகும்’ என்கிற மெய்யறிவு உதித்தது.

தம்மச்சக்கப்பவத்தன சுத்தத்தை புத்தர் விளக்கியபோது தெய்வங்க ளெல்லாம், “இந்த உலகில் எந்தத் துறவியாலும் குருவாலும் தெய்வத்தாலும், பிரம்மாவாலும் எடுத்துரைக்கப்படாத இந்த உன்னதமான தம்ம சக்கரத்தை புத்தர் பெருமான் காசிக்கருகிலுள்ள இசிபட்டணத்து மான்சோலையில் விளக்கி இருக்கிறார்” என்று வியந்துரைத்தனர்.

இதைக் கேட்டு, சாதும்மஹாராஜிக, தாவதிம்ச, யாம, துசித, நிம்மானரதி, பரநிம்மிதவசவத்தி ஆகிய தேவர்களும் பிரம்மா பாரிஸஜ்ஜ, பிரம்மா புரோஹித, மஹா பிரம்மா, பாரித்தாபா, அப்பமாணாபா, ஆபஸ்ஸர, பரித்தஸுப, அப்பமாணஸுப, சுபகிண்ண, வேகப்பல, அவிஹ, அதப்ப, சுதஸ்ஸ, சுதஸ்ஸி, அகனிட்ட ஆகிய பிரம்மாக்களும் அவ்வாறே மகிழ்ச்சிக் குரலெழுப்பினர்.

இவ்வாறாக, அதே கணத்தில், அதே நொடியில் இக் குரலோசை பிரம்ம லோகம் வரை எட்டியது. பத்தாயிர உலகப் பிரபஞ்சங்களும் ஆடி நடுநடுங்கிப் பலமாக அதிர்ந்தன.

தெய்வங்களின் ஒளியையும் விஞ்சிய ஒரு பிரகாசமான ஒளி உலகில் தோன்றியது. அப்பொழுது புத்தர் பெருமான், “நண்பர்களே, கொண்டஞ்ஞா மெய்யாகவே விளங்கிக் கொண்டார்! நண்பர்களே, கொண்டஞ்ஞா மெய்யாகவே விளங்கிக் கொண்டார்!” என்று கூறினார்.

ஆகவே, வணக்கத்திற்குரிய கொண்டஞ்ஞா, அஞ்ஞாத கொண்டஞ்ஞா என்று அழைக்கப்படலானார்.

அஞ்ஞாத கொண்டஞ்ஞா தம்மத்தை அறிந்து கொண்டார், புரிந்து கொண்டார், உள்ளூடுருவிப் பார்த்து உணர்ந்து கொண்டார், அவரது உறுதியில்லாத மனநிலைகள் கைவிடப்பட்டன, அவரது ஐயங்கள் மறைந்தன, தம்மத்தில் அவர் முழு நம்பிக்கை பெற்றார். உலகுக்கு ஆசான் வகுத்தளித்த வழிமுறையில் தற்சார்பு கொண்டவரானார். அவர் புனிதரான புத்தரை வேண்டிக் கொண்டார்: “வணக்கத்திற்குரிய பெருமானே, புனிதரான புத்தரை அடைக்கலமாக ஏற்று பிக்குவாக முழு தீட்சை பெற விரும்புகிறேன்.”

புனிதரான புத்தர் கூறினார்: “வாருங்கள், பிக்குவே, தம்மம் நன்றாகவே பறைசாற்றப்பட்டது. துக்கத்தை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு புனித வாழ்க்கை மேற்கொள்வீராக.” இந்த அறிவிப்பே அவருக்கு முழுமையான தீட்சையாகியது.

பிறகு, புனிதரான புத்தர் மற்ற நான்கு பிக்குகளுக்கும் விரிவாக தம்ம உரை நிகழ்த்தி அறிவுறுத்தினார். அப்படி அவர் தம்ம உரை நிகழ்த்தியபோது, வணக்கத்திற்குரிய வப்ப, பத்திய இருவரது உள்ளங்களிலும் தம்மத்தின் கறையற்ற, விழுத்தூய்மை பெற்ற நற்காட்சி எழுந்தது.” தோற்றத்துக்கு ஆட்பட்ட எல்லாமே மறைவுக்கும் ஆட்பட்டுள்ளன என்கிற உண்மையை உள்ளூர உணர்ந்தனர். அவர்களும் புத்தரிடம் தங்களுக்கும் முழு தீட்சை வழங்குமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களும் மேற்கண்டவாறே முழு தீட்சை பெற்றனர்.

பிறகு, புனிதரான புத்தர் எஞ்சியிருந்த இரண்டு பிக்குகளுக்கும் விரிவாக தம்ம உரை வழங்கி அறிவுறுத்தினார். முந்திய மூன்று பிக்குகளும் பிச்சையேற்கச் சென்று, கொண்டு வந்த உணவை அறுவரும் பகிர்ந்து கொண்டனர். விரைவில் வணக்கத்திற்குரிய மகாநாமாவும் அஸ்ஸஜியும் கூட தம்மத்தின் கறையற்ற, விழுத்தூய்மை வாய்ந்த அகக்காட்சி பெற்றனர். அவர்களும் புத்தரிடம் தங்களுக்கும் முழு தீட்சை வழங்குமாறு வேண்டிக் கொண்டனர். மேற்கண்டவாறே அவர்களும் முழு தீட்சை பெற்றனர்.

(2) இரண்டாவது பேருரை

விநய. மகாவக்கம் 1:6; சம்யுத்த 56:11)

உபாலி

அநத்தலக்கண சுத்தம்

பிறகு புத்தர் ஐந்து பிக்குகளுக்கும் தமது இரண்டாவது பேருரையான அநத்தலக்கண சுத்தத்தைப் போதித்தார். இது உலகில் எதிலும் ஆன்மா இல்லை என்று ஆன்மா-இன்மைக் கோட்பாட்டை விளக்கும் போதனையாகும்.

புனிதரான புத்தர் கூறியதாவது:

“ஓ பிக்குகளே! இவ்வுடம்பு (ரூப) ஆன்மா இல்லாததாகவே (அநத்த) இருக்கிறது. ஓ பிக்குகளே! இதில் ஆன்மா இருக்குமானால், இவ்வுடம்பு துன்பத் திற்கு ஆளாகாது. “இவ்வுடம்பு இப்படி இருக்கட்டும்; இவ்வுடம்பு இப்படி இல்லாதிருக்கட்டும்” என்று ஆணையிடுவதற்கான வாய்ப்பும் இருக்கும். ஆனால், இவ்வுடம்பில் ஆன்மா இல்லாதிருப்பதால், இது துக்கத்திற்கு இலக்காவதாக இருப்பதுடன், ‘இப்படி இரு, இப்படி இராதே’ என்று (ஆணையிடுவதற்கான) வாய்ப்பில்லாமலும் இருக்கிறது.

“இதைப் போலவே, மற்ற கந்தங்களாகிய புலன் உணர்வுகளும் (வேதனா), அறிவுணர்வுகளும் (சஞ்ஞா), மன உருவாக்கங்களும் வாசளாக்களும் (சங்காரா), தன்னுணர்வுகளும் (விஞ்ஞானம்) ஆன்மா இல்லாதனவே.

66 ‘ஓ பிக்குகளே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த உடம்பு நிலையான தென்றா, நிலையற்றதென்றா?”

“நிலையற்றது (அநிச்ச), ஐயனே.”

“நிலையில்லாத ஒன்று, மகிழ்ச்சியானதா, துன்பமானதா?

துன்பமானது (துக்க), ஐயனே.”

“அப்படியானால், நிலையில்லாததும் துன்பமயமானதும் தோன்றி மறைவது மான ஒன்றை இது எனது, இது நான், இது என் ஆன்மா, என்று நினைப்பது சரியா?”

“நிச்சயமாக இல்லை, ஐயனே.”

“அப்படியானால், ஓ பிக்குகளே, எல்லா உடம்பையும்- அது கடந்த காலத்ததோ, நிகழ்காலத்ததோ, வருங்காலத்ததோ, தன்வயமானதோ, புறவய மானதோ, பருவெட்டானதோ, நுட்பமானதோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, பக்கத்தில் இருப்பதோ, தூரத்தில் இருப்பதோ எதுவானாலும்- அதனை “இது எனதல்ல, இது நானல்ல, இது என் ஆன்மா அல்ல என்று அதன் உண்மையான இயல்பை நல்லறிவால் புரிந்து கொள்ள வேண்டும். 66

6″ ‘எல்லா புலன் உணர்வுகளும்- அறிவுணர்வுகளும், மன உருவாக்கங்களும் (வாசனாக்களும்), தன்னுணர்வுகளும்- அவை கடந்த காலத்தனவோ, நிகழ் காலத்தனவோ, வருங்காலத்தனவோ, அகவயமானவையோ, புறவயமானவையோ, பருவெட்டானவையோ, நுட்பமானவையோ, பக்கத்தில் இருப்பவையோ, தூரத்தில் இருப்பவையோ எவையானாலும்- அவற்றை “இவை என்னுடையன அல்ல, இவை நானல்ல, இவை என் ஆன்மா அல்ல” என்று அவற்றின் உண்மையான இயல்பை நல்லறிவால் புரிந்து கொள்ள வேண்டும்.

“இப்படிப் பார்க்கும் கற்றறிந்த ஓர் அரிய மாணாக்கன் உடம்பின் பேரிலும், புலன் உணர்வுகள் பேரிலும், அறிவுணர்வுகள் பேரிலும், மனஉருவாக்கங்களின் பேரிலும், தன்னுணர்வுகள் பேரிலும் அருவருப்படைகிறான். வெறுக்கத்தக்க அவற்றின் மீது பற்றற்றிருக்கிறான். பற்றின்மையின் வாயிலாக வீடுபேறடைகிறான். அப்பொழுது ‘நான் விடுதலையடைந்து விட்டேன்’ என்ற அறிவு அவனுள்

உதிக்கிறது. ‘பிறப்பு முடிவுற்றது; பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தாயிற்று; செய்யத் தக்கதைச் செய்தாயிற்று; இத்தகைய (பிறவி) நிலை இனிமேலும் இல்லை’ என்று அவன் விளங்கிக் கொள்கிறான்.”

புத்தர் பெருமான் இவ்வாறு கூற, மகிழ்வெய்திய பிக்குகள் அவரது மொழிகளைப் போற்றி ஆரவாரித்தனர்.

புத்தர் இந்தப் போதனையை விரித்துரைத்தபோது அந்தக் குழுவிலிருந்த பிக்குகள் ஐவரின் மனங்களும் பற்றுக்கள் யாவுமற்று மாசுக்களிலிருந்து விடுபட்டன. ஐவரும் அரஹந்த நிலையை அடைந்தனர்.

-விநய மகாவக்கம் 1.6

ஓ.ரா.ந கிருஷ்ணன்

ஓ.ரா.ந. கிருஷ்ணன் (ஓடத்துறை ராமாயாள் நல்லுச்சாமி கிருஷ்ணன்) (பிறப்பு: மே 16, 1934) பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் சார்ந்த நூல்களை எழுதும் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், செயல்பாட்டாளர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.