/

அறிதல் : எல்.ஜே வயலட்

ஓரிரவு

எனக்கு உன்ன விட ரெண்டு வயசு கம்மி, ஆனா ஏதோ நான் உனக்கு அக்கா மாதிரி தோணுது. வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்க்க வேண்டுமென தோன்றினாலும் அவர்களால் திரைச்சீலைகளைத் திறக்க முடியாது. அந்த ரிசார்ட்டுடைய அறைகளின் பின்பக்க பால்கனிகள் எல்லாம் ஒரு வட்ட தோட்டத்தைச் சுற்றி அமைந்திருந்தன. திரைச்சீலைகளைத் திறந்தால் பிற பால்கனிகளில் அமர்ந்திருக்கக் கூடிய அவர்களது சகபணியாளர்கள் இங்கே பார்க்கலாம். இன்னும் சற்று நேரத்தில் அன்றைய நாளின் மீட்டிங்குகள் தொடங்கிவிடும். அந்த திரைச்சீலைகளுக்குப் பின்னே மெல்லிய பகல் ஒளி தெரிந்தது. அதில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருவராலும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அவ்வப்போது என்ன என்று கேட்கும்போதெல்லாம் நீ ஏன் சிரிக்கிற என்பதே பதிலாக இருந்தது. இருவருக்குமே மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென தோன்றியது, அதே நேரம் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்தவும் முடியவில்லை.

இருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்கள் உலகத்திடமிருந்து தனிமைப்பட்டுப் போய் விடுகிறார்கள். சிலர் உலகமே தங்களுக்கு எதிராக இருப்பதாக அச்சமயங்களில் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் உலகை இன்னும் சற்றே முதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறார்கள். தனக்கு அந்த முதிர்ச்சி இருப்பதாக எண்ணியதால்தான் அவர் தன்னை அக்கா என்று அழைத்துக்கொண்டார் போலும்.

“அய்யோ! நா ஏன் உன் ரூமுக்கு வந்தேன். தெரிஞ்சா ஆஃபீஸ் முழுக்க நம்மள பத்திதான் பேசுவாங்க…”

“ம்ம்ம்”

“உனக்கு அதப் பத்தியெல்லாம் கவலை இல்லையா?”

“அப்படி இல்ல. என் டீம்ல கொஞ்சம் நல்லவங்க, பின்னாடிதான் பேசுவாங்க. மூஞ்சிக்கு நேரா வந்து கேக்க மாட்டாங்க. அதனால அவ்வளவு யோசிக்கத் தோணல.”

“நா இன்னும் ரூமுக்கு வரலியான்னு ஏஞ்சல் கால் பண்ணிருக்காங்க. நாளைக்கு அவங்க எல்லார்கிட்டையும் சொல்லிடுவா. நா உன்கிட்ட காமிச்ச மெசேஜ் எல்லாம் பார்த்தீல்ல.”

“ஏஞ்சல் கால் பண்ணப்போ என்ன சொன்ன?”

“ஒண்ணும் சொல்லல, மெசேஜ் மட்டும் பண்ணி பதில் சொல்லிட்டேன். ஒரு ஃபிரண்ட் ரூம்ல இருக்கேன். பேசிகிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. சாரின்னு
ம்ம்ம். ஒரு வேள ப்ரனீத் மட்டும் இன்னிக்கு வந்திருந்தா. நா ரூம்ல தனியா இருந்திருக்க மாட்டேன். உன்ன கூப்டிருக்க மாட்டேன்…”

“ஆமா, எவ்வளவு பேர் நமக்கு உதவி பண்ணிருக்காங்க.”

மீண்டும் இருவரும் சிரித்துக்கொண்டனர். சிரிப்பு ஒரு சிறிய நீச்சல் குளத்தில் ஏற்பட்ட அலைகளைப் போல அவர்களின் ஒவ்வொரு எல்லைப் புள்ளியிலும் எதிரொலித்து எதிர்ப் புள்ளியைத் தொட்டு, அங்குமிங்கும் அலைகிறது.

நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா என்று சொல்லியபின் வரும் பெருமூச்சுக்கு எத்தனை அர்த்தங்களை எழுதமுடியும். இருந்தாலும் இருவரும் அதையே சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள். அப்படி என்ன அழகப் பார்த்துட்ட? என்று கேட்கப்படும்போது சட்டென்று கண்களில் இருந்துதான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது. அதே நாளில் முதன்முறையாக ஒருவர் இன்னொருவரை (இன்னொருவர் ஒருவரை அதற்கு முன்னே கவனிக்கப்படாமல் கவனித்திருக்கிறார் என்றாலும்) பார்த்து சிரித்த போது அந்த கண்களில் இருந்து தொடங்கியவற்றுக்கு, அந்த இரவின் தொடக்கத்தில் எனக்கு அவ்ளோ தைரியம் கிடையாது உனக்கு? என்று கேட்டபோது உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்களில் இருந்துதானே பதில் தேட முடியும். இந்த சின்ன கண்ணுலயா? யப்பா, சீ போ! எஷ்ட்டு சுல்லு ஹேலித்திதீரியப்பா! எவ்வளவு எவ்வளவு பொய்கள்!

சட்டென்று ஒருவரையொருவர் அணைத்தபடி நடனமாட வேண்டும் என்று தோன்றுகிறது. முன்னெல்லாம் அவர்களுக்கு நடனமாட வேண்டும் என்று தோன்றியதேயில்லை. ஆனால் அப்போது உடலில் தோன்றும் சிறிய குறுகுறுப்புணர்வு அதன் போக்கில் மெட்டமைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் நடனமாடவில்லை என்றாலும் ஒருவரது விரல்கள் மற்றவரது உடலில் தாளமிட்டபடியே இருக்கின்றன.

“ஆமா, என் மேல பாலியல் தொந்தரவுன்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட மாட்டியே.”

” ம்ம்ம்ம், சொல்லப்போனா நாந்தான உன் ரூம்ல இருக்கேன். நா வேணா குடுக்கலாம்.”

“ம்ம்ம், நீ கொடுக்கலாம்தான். ஆனா நம்புவாங்களா? நா எவ்ளோ அப்பாவின்னு எல்லோருக்கும் தெரியும்.”

“நீயா அப்பாவி?”

“ஆமா”

“சொல்லிக்கோ”

“என்ன இருந்தாலும் நீ பையன், நா பொண்ணு, அந்த அட்வாண்டேஜ் இருக்குல்ல”

இந்த இடத்தில் இருவரும் ஒருவரையொருவர் சற்றே தள்ளி நின்று பார்க்கிறார்கள். நான் பையனில்லை என்று சொல்லிவிட ஒருவரும், அந்தச் சொல்லை எதிர்பார்த்து இன்னொருவரும். இன்னொருவரின் தோழி ஒருத்தி என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என்று சொல்லி சில கதைகளைச் சொல்லியிருக்கிறாள், அந்தக் கதைகள் இவரைப் பற்றியதுதானோ என்ற சந்தேகம் இருந்தாலும் அது நிவர்த்திக்கப்படவில்லை. நாம் ஆணென்றும் பெண்ணென்றும் அப்படி சட்டென்று அறிந்துவிட முடியுமா? முடியாதா? மனதிலிருந்த சொற்கள் சொல்லப்படவில்லை.

மொழி இரு உடல்களுக்குமிடையே தொடுதலைப் போல செயல்படுகிறது. பல விசயங்கள் வெறும் சொற்களற்ற தொடுதலிலேயே சொல்லப்பட்டுவிட்டன. மொழி அவற்றைத் திரும்பத் தொட்டுவிட விரும்பவில்லை. அந்த நாளின் பேச்சுகளுக்கு அது விதிக்கப்படவில்லை. ஆண், பெண் என்பவற்றுக்கு ஆழமான அர்த்தங்களோ, காயப்படுத்தும் ஆற்றலோ அந்த நாளில் கிட்டவில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு நாளைப் பற்றி பலமுறை பேசிவிட்டார்கள். பல விசயங்களுக்கு ஒருவருக்கொருவர் இன்னொரு நாள் என்று வெட்கத்துடனும் உறுதியாகவும் பதிலளித்து விட்டார்கள். எனவே இன்னொரு நாள் ஒரு சிறிய மழைக்கால காற்றைப் போல அங்கே வீசிக் கொண்டிருக்கிறது.

“நா கூப்பிட்டா நீ உடனே வந்துடுவியா. நீ ரெஸ்ட்ரூம் போகணும்னு சொன்னதால மேல வான்னு சொன்னேன். அப்போ கூட நா திரும்ப ஒரு நடை போகலாம்னுதான் சொன்னேன்.”

“யாரு நீயா? ஆமா எப்போ முடிவு பண்ண இதெல்லாம்!”

“நா முடிவு பண்ணேனா? நீ எப்போ முடிவு பண்ண? மதியம் என்ன பாத்தவுடனேவா,
நா ஒண்ணும் உன்ன இன்னிக்குதான் முதல்முறையா பாக்கல. உனக்குதான் நா ஒரு ஆள் இருக்கதே இதுக்கு முன்ன தெரியாது.”

“ஹே, நெஜமா இன்னும் இதுக்கு முன்னாடி நீயும் நானும் ஒரே ஆஃபீஸ்ல ஒரே ரூம்ல இருந்திருக்கோம்னு என்னால நம்ப முடியல!”

மகிழ்ச்சி ஒரு வினோதமான உணர்வு. நேற்று தொடங்கிய நாள் முடிந்து சில மணிநேரங்கள் ஆகிறது. ஆனால் அவர்கள் இன்னும் அதிலேயே நடை பயின்று கொண்டிருக்கிறார்கள். நாளை வார இறுதி. உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் இந்த வார இறுதியில் அவ்வளவாக பேசிக் கொள்ளப் போவதில்லை. இருவருக்குமே மறுநாளே சந்திக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக யோசிக்கிறார்கள்.

ஒருவர் என்ன சொல்வார் என்று மற்றொருவர் யோசிக்கும்போது அவர்கள் சிறிய ஸ்மைலிகளில் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்கிறார்கள். கவலைப் படாதீர்கள், அவர்கள் இருவரும் இந்த வாரம் முழுவதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் எல்லோரும் என்ன என்ன என்று கேட்கும்போது ஒண்ணுமில்ல என்று தலையாட்டிக் கொள்வார்கள். அதன்பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தேவையில்லாதது. நமது கதை அல்லது இக்குறிப்பு நேற்றில் தொடங்கி இன்னும் நடந்துகொண்டிருக்கும் இன்றோடு முடிகிறது.

“ஏன் சிரிக்கிற?”

“சொல்லமாட்டேன்”

“ப்ளீஸ்”

“சரி அப்போ நீ பசங்க பொண்ணுங்க எல்லாரையும் டேட் பண்ணிருக்க?”

“ஆமா”

“ம்ம்ம்ம். சரி. அப்போ இத காமிக்கிறேன்”

அவர் காண்பித்த மெசேஜை இவர் சரியாக பார்க்கவே இல்லை. அதில் கே என்ற சொல் மட்டும் ஆங்கிலத்தில் மின்னியது. அதில் அவர்களது சகபணியாளரான ஏஞ்சல், அவர் இவரையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அன்று மத்தியம், இவருக்கு பெண்களில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ரொம்ப முயற்சி செய்யாதே என்று செய்தி அனுப்பியிருந்தாள். அந்த கணத்தில் இருவரையும் அளவுக்கு அதிகமாக சிரிக்க வைத்ததை தவிர அந்த செய்தி பெரிதாக அர்த்தம் பெறவில்லை. நம்மைப் பற்றி நாம் அறியாமலேயே பலர் கவனித்தும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பது அந்த கணத்தில் அவ்வளவு அச்சுறுத்தக் கூடியதாக இல்லை. ஏனெனில் இருவருக்குமே அடுத்து என்ன நடக்குமென்று தெரிந்திருந்தது. இருவருக்குமே அது புதிதுமில்லை. ஆனாலும் இருவருக்குமே அன்று புதிதாயிருந்தது. எனவே இன்னும் கொஞ்சம் சுற்றி வளைத்து, இருவரின் தைரியங்களைப் பற்றியும் கேள்வி எழுப்பிக்கொண்டு கடைசியாகத்தான் நான் உன்னை முத்தமிடலாமா? என்று இருவரில் ஒருவர் கேட்டார்.
வழக்கமாக இருவரில் ஒருவருக்கு இதுபோன்ற சமயங்களில் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ளும், மற்றவருக்கு உள்ளங்கைகள் வியர்த்து நீரோடும். ஆனால் அன்று இருவருமே மிக அமைதியாக இருந்தார்கள்.

“நமக்கு வயதாகிவிட்டதல்லவா?”

“ஆமா, எனக்கு ஆகிடுச்சு.”

“எனக்கும்தான். இது தெரிஞ்சா என்ன யார் மதிப்பாங்க?”

“யப்பா…”

“அதுசரி! அவங்க என்ன பேசினாலும், என் வேலைய யாராலும் செய்ய முடியாது. அதனால எனக்கு பிரச்சினை இல்லை.”

“நா பெருசா வேலையே செய்றது இல்ல”

முதல் முத்தத்தில் நாம் ஏன் கண்களை மூடிக்கொள்கிறோம் என்று இருவரும் யோசித்தார்கள். இரண்டாவது முத்தத்திலும் இருவரும் கண்களை மூடிப் பின் திறந்தார்கள். விரல் நுனிகள் தயங்கித் தயங்கிப் பயணித்தன. அவர்களது முத்தங்களின் வேகத்துக்கும் அதற்கும் தொடர்பே இல்லாதது போலிருந்தது.

“சரி மணி என்ன?”

“இரண்டு”

“இப்படியே போனா தூங்க மாட்டோம்”

இருவரும் ஒருவர் மீதொருவர் ஆடைகளை எறிந்தும், பிடித்தும், ஆடைகள் அணியவேண்டும் வேண்டாம் என்ற விருப்பங்களிடையே குழம்பினர். சில தலைகாணிகளை எடுத்து இருவருக்கும் இடையே வைத்துக்கொண்டனர். கைகள் தலைகாணிகளைத் தாண்டி நீண்டு, பின்வாங்கி, உதடுகளைத் தொட்டு மீண்டன. மூடிய கண்களின் புருவங்களை விரல் நுனிகள் தீண்டி புதிதாய் வரைந்தன.

பரவாயில்லையா, உனக்கு இன்னும்
இன்னிக்கு வேண்டாம்
நீ எது பண்ணாலும்… அப்படி இருக்கு
என்ன மாயாஜாலம் வெச்சிருக்க நீ
மேல
கண்ண பார்க்காத
போ
யக்‌ஷி
அழகி

இந்தக் கதையை அல்லது சிறுகுறிப்பை முடிக்க சற்றே காலத்தில் பின்னோக்கிச் சென்று வர வேண்டும். சற்றே ஒரு சிறிய துயரம் கிடைத்தால் அதைப் பற்றிக் கொள்ளலாம். உலகோடு சேர்ந்துகொள்ளலாம். ஆனால் பல பங்களாக்களும் ஒரு ரெசார்ட்டும் கொண்டிருந்த அந்த வளாகத்தில் தென்னைகளும் வேறு பல மரங்களும் சூழ்ந்திருந்த ஒரு ஆட்களற்ற சாலையில் அதே நாள், சற்று நேரம் முன்பு மாலை வேளையில் நடந்துகொண்டிருந்த இருவருக்கும் எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் மகிழ்ந்திருந்தனர். எனவே அவர்கள் தனித்திருந்தனர். ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொள்ள விரும்பினாலும் தயங்கங்களால் ஒட்டியும் விலகியும் நடந்தனர். பெரிதாக குடித்திராவிட்டாலும் அவர்கள் நடையில் தடுமாற்றம் நிரம்பியிருந்தது, அவ்வப்போது தோள்பட்டைகள் இடித்துக்கொண்டபோது விரல்கள் விரிந்து மூடின. ஒருவர் இன்னொருவருக்கு நிலவைக் காட்டினார். இன்னொருவர் ஒருவருக்கு காலையில் புல்புல்கள் ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தெழுந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்ததைச் சொன்னார். இருவரும் ஒரே நேரத்தில் நின்று தூரத்தில் கேட்ட பறவைச் சத்தத்தை கவனித்தனர், கவனிப்பதுபோல ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டிருந்தனர். இருவரில் ஒருவர் பங்களாக்களுக்கும் சென்று பார்க்கலாமா என்று தைரியம் காட்டி அடுத்தவரின் பதட்டத்தை இரசித்தார். இருந்தாலும் அந்தச் சாலை அவ்வளவு சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாம். அல்லது அந்தச் சாலை மிகச்சரியான நீளத்தில் முடிந்துவிட்டது.

“என் ரூமுக்கு வாயேன், இன்னும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். தூக்கம் வருதா?”

“இல்ல. எப்படியும் ரெஸ்ட் ரூம் போகணும். அவசரம்! வரேன்”

“போய்ட்டு இன்னொரு ரவுண்ட் நடக்குறதுன்னாலும் நடக்கலாம்.”

“ஏஞ்சல் நா வருவேன்னு பார்த்துகிட்டு இருப்பாங்க”

“ம்ம்ம்”

அந்த சிறிய, அழகிய, செடிகள் நிறைந்திருந்த பாத்ரூமுக்குள் ஒருவர் வெளியே இன்னொருவர் வெளியே என அமர்ந்திருந்தபோதும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர்.

மறுநாள் காலை மீண்டும் அதே பாத்ரூமில் தனித்தனியாக தங்கள் கனவுகளைக் கொண்டு இந்தக் கதையை இரு கதைகளாக பிரித்து எடுத்துச் சென்றனர்.


லாப்பிஸ் லசூலி

அவர்கள் இருவரும் ஒரு டேட்டிங் செயலியில்தான் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்றினாலும் அதற்கென சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பேசிக் கொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொண்டதாய் நினைத்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் ஒருவர் இன்னொருவரை பெங்களூருவில் இருக்கும்போது ஸ்வைப் செய்துவிட்டு அப்போது அஜந்தா ஓவியங்களைப் பார்க்க பயணித்துக்கொண்டிருந்தார். எதற்காக ஸ்வைப் செய்தோம் என்பதற்கு காரணங்கள் எல்லாம் இல்லை. படுவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கார் சட்டென்று இடமோ வலமோ திரும்ப அந்த நேரத்தில் காரணங்கள் இருக்கும். ஆனால் காரோட்டி அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன அதுபோலத்தான். அவ்வாறு ஒருவர் அஜந்தா ஓவியங்களைப் பார்த்துவந்து ஹோட்டல் அறையிலும், இன்னொருவர் பெங்களூருவில் பணி முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்தபடி தன் நண்பர்களோடு படத்துக்குக் கிளம்புவதற்கு முன்னதான இடைவேளையிலும் பேசிக்கொண்டனர்.

“ஹலோ”

“ஹலோ, வீக்கெண்ட் எப்படிப் போச்சு?” (அதுவொரு திங்கள் கிழமை)

“போச்சு. பெரிசா எதுவும் நடக்கல. ஆனா அதுவே நல்ல விசயம் அப்படின்ற மாதிரி ஆகிடுச்சே வாழ்க்கை.”

“உங்க திங்கள் எப்படிப் போகுது? வேலையா?”

“இல்ல. ஒரு வாரம் லீவ். பயணம். அஜந்தா 🙂 ரொம்ப நாள் ஆசை”

“தனியாவா”

“இல்ல. நண்பர்கள் கூட”

“நானும் இதுவரை அஜந்தா போனது இல்ல. எப்படி இருக்கு? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு. நா எதிர்பார்க்கவே இல்ல. ஒரு சில இடத்துல மேற்கூரையில வரைஞ்சிருக்க ஓவியத்துல எல்லா வண்ணமும் மங்கிப் போய் ஒரு நீலம் மட்டும் பளிச்சின்னு மிச்சமிருக்கு. அப்படியே!”

“லாப்பிஸ் லசூலி!”

“ஓ! இப்போதான் கூகிள் பண்ணிப் பார்க்கிறேன். அந்த நீலம் அப்படியே கண்ணுல பதிஞ்சா மாதிரி இருக்கு.”

“இந்த நேரம் கூட்டமா இருக்கும்ல?”

“ஆமா. ஆயிரக்கணக்குல. எல்லாரும் வர்றாங்க. ஃபோட்டோ எடுக்குறாங்க. போய்கிட்டே இருக்காங்க. இந்த ஃபோட்டோ எல்லாம் திரும்பி பார்ப்பாங்களா கூட தெரியல.”

“ம்ம்ம்ம். டிஜிட்டல் நினைவுகள்.”

“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“படத்துக்குப் போகணும். ஃப்ரண்ட்ஸ் வர்றேன் சொன்னாங்க. வெய்ட் பண்ணிகிட்டு இருக்கேன். ஆமா. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”

இதுவரை அப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டதில்லை. அல்லது இத்தகையதொரு கேள்வியை முழுமனதாக எதிர்கொள்ள வேண்டுமெனத் தோன்றியதில்லை. இப்போதும் கூட மனம் சடசடவென்று இதிலிருந்து நழுவுவதெப்படியென்றே யோசிக்கிறது. சில நல்ல பதில்கள், நகைச்சுவையானவை, உரையாடலை வளர்ப்பவை…

“இப்போதைக்கு லாப்பிஸ் லசூலிதான் மனசுலயும் கண்ணுலயும் இருக்கு. சந்தோஷமா இருக்கேனா தெரியல. நீங்க?”

“நிம்மதியா இருக்கேன்.”

“இதுக்கு அது பதிலில்லையே”

“நீங்க தமிழா?”

“ஆமா 🙂”

“இதுவரைக்கும் இந்த டேட்டிங் ஆப்ல நான் தமிழர்கள் யாரையும் சந்திச்சதே இல்ல. சென்னையில இருக்கும்போது டேட்டிங் ஆப் எல்லாம் யூஸ் பண்ணதே இல்ல.”

“நா ஒரு ரெண்டு மூணு தமிழர்கள சந்திச்சிருக்கேன்னு நினைக்கிறேன். சரி நா கிளம்பறேன். பார்க்கலாம்.”

“பார்க்கலாம் 🙂”

“பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு எங்க ஊர்ல சொல்வாங்க”

“புதன் கிடைச்சிருச்சு. இப்போ பொண்ணு வேணுமா 🙂”

“ஹாஹாஹா. கிடைச்சா நல்லாதான் இருக்கும்.”

“உனக்கு ரொம்பதான் ஆசை பொண்ணே! என்ன பண்ணிட்டிருக்க?”

“ஆஃபீஸ்ல வேலை பார்க்காம சும்மா அதையும் இதையும் பண்ணிகிட்டு இருக்கேன். நீங்க?”

“அதேதான். ஆனா ஆஃபீஸ் இல்ல. வொர்க் ஃப்ரம் ஹோம்.”

“இன்னிக்கு காலையில ஒரு குட்டிப் பறவை பார்த்தேன். என் வீட்டு பக்கத்தில இருக்க ஒரு மரத்துல. அந்த நீல கலர்ல, லாப்பிஸ் லசூலி கலர்ல.”

“உனக்கு பறவை பார்க்கறதெல்லாம் பிடிக்குமா
அவ்வளவெல்லாம் பொறுமையும் கிடையாது. பறவைய பார்த்து அடையாளம் சொல்லவும் தெரியாது. ஆனா சும்மா கவனிச்சேன். அந்த கலர், இந்த தூசி படிஞ்ச மரத்துல அப்படியே சீரியல் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சுது.”

“ஒரே ஒரு பல்ப் மட்டும் எரியுற சீரியல் லைட்டா 🙂”

“ஹாஹஹா. ஆமா. திருவிழா முடிஞ்சு மறுநாள் காலையில அணையாம எரிஞ்சுகிட்டிருக்க ஒத்த பல்ப்.”

“ஆமா. நீங்க என்ன வேலை பார்க்குற?”

“கண்டெண்ட் ரைட்டர்.”

“ம்ம்ம்ம் கண்டெண்ட். கண்டெண்ட். கண்டெண்ட்.”

“நீங்க?”

“கிராஃபிக் டிசைனர்.”

“ம்ம்ம்ம். நீங்க ஆர்ட்டிஸ்ட்டா அப்போ? அதனாலதான் கலர் பத்தியெல்லாம் அப்படி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க…”

“ஆர்ட்டிஸ்ட்டா எல்லாம் தெரியல. ஆனா அதுக்குதான் படிச்சேன்.”

“அப்போ என் ஃப்ரொஃபைல்ல செசான் ஓவியங்கள் பிடிக்கும்னு சொன்னதாலதான் ஸ்வைப் பண்ணீங்களா?”

“அப்படியெல்லாம் இல்ல. அழகா இருந்த ஸ்வைப் பண்ணேன். ப்ரொஃபைல் எல்லாம் நம்ம மேட்ச் ஆனப்புறம்தான் படிச்சேன்.”

“இவ்வளவு உண்மை நல்லதுக்கு இல்லீங்க”

“அப்போ நீ எதுக்கு ஸ்வைப் பண்ண? என் ஃபோட்டோஸ் பாத்து இல்லியா?”

“ஃபோட்டோஸும் பாத்துதான்.”

“பொய் சொல்லாத”

“நீங்க க்யூட்டாதான் இருக்கீங்க. ஆனா ப்ரொஃபைலும் இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. எதுவுமே இல்லாம ஃபோட்டோ மட்டும் இருந்திருந்தா?”

“இருந்திருந்தா?”

“ஸ்வைப் பண்ணிருப்பேன்னுதான் நினைக்கிறேன். அவ்வளவு அழகா இருக்கீங்களே”

“உன் அளவுல்லாம் இல்லப்பா. அழகி!”

“நா ஆல்ரெடி கரெக்ட் ஆகிட்டேங்க. ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க இன்னும்.”

“ஹாஹாஹா. சரி வா அப்போ மீட் பண்ணலாம்.”

“எப்போ? எங்க?”

“நீ சொல்லு”

“காஃபி? உங்க வீடு எங்க? அங்க பக்கத்தில?”

“ம்ம்ம்ம் வெள்ளிக்கிழமை ஃப்ரீயா நீ?”

“ஃப்ரீதான். வேலை முடிஞ்சிடும் 5 மணிக்கு.”

“சரி. அப்போ பார்க்கலாம்.”

“இன்னிக்கு மீட் பண்ணலாமா?”

“ஆமா. ஆனா… நீ தப்பா நினைச்சுக்கலன்னா வீட்டுக்கே வர்றியா. சுத்தமா வெளியில எங்கயும் போக மனசில்ல. இல்ல, நாம ஞாயிற்றுக்கிழமை கூட பார்க்கலாம்.”

“நா வர்றேன். உங்களுக்கு ஓகேவா? டயர்டா இருக்குன்னா ஞாயிறு பார்க்கலாம்”

“இல்லல்ல. நீ வா. நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் 🙂”

“சூப்பர். என் நம்பர் இது. லொக்கேஷன் அனுப்புங்க”

“நா வெளியில இருக்கேன்… ஹலோ…”

“சாரி சாரி. குளிச்சிட்டு இருந்தேன். மூணாவது மாடி. ஃப்ளாட் நம்பர் டி2”

“ஹலோ… ஹலோ…”

“நா இவ்வளவு சீக்கிரமா யாரையும் மீட் பண்ணதே இல்ல.”

“நானும்தான். எதோ நீ மட்டும் பத்தினி மாதிரி சொல்ற”

“நா ஒன்னும் பத்தினியெல்லாம் இல்ல”

“காஃபி?”

“ம்ம்ம்ம்”

“இல்ல பியர்?”

“ஆமான்னு சொன்னா அடுத்த ஆப்ஷன் சொல்வீங்களா”

“ஹாஹாஹா சரி பியர்”

“நேத்து நா ரொம்பவே சந்தோஷமா இருந்தேன்.”

“நானும்தான்.”

“ஒண்ணு சொல்றேன் தப்பா நினைச்சுக்காத. எனக்கு உன்ன ரொம்பவே பிடிச்சிருந்தது. நீ அவ்ளோ. அவ்ளோ… ஆனா அதே நேரம் உன் முகம், உன் முதுகுல இருக்க அந்த மச்சம் எல்லாமே என் தங்கச்சிய மாதிரியே இருக்கு. எனக்கு அத எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல. அதனால திரும்ப நாம மீட் பண்ணுவோமா தெரியல. ஒருவேளை எங்கயாவது வெளில போகலாம். ஆர்ட் கேலரி போகலாம். ஆனா அதுக்கும் எனக்கு கொஞ்ச நாள் ஆகும்.”

“ம்ம்ம் புரியுது. உங்கள திரும்ப பார்த்தா சந்தோஷப்படுவேன். இல்லன்னாலும் டேக் கேர் 🙂 பார்க்கலாம்.”


அருள்

அவர்கள் இப்போதைக்கு பேசிக்கொள்ள வேண்டாமென நினைக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்தாலும், நேரில் பார்த்தால் சட்டென்று கண்களைப் பார்க்கவும் தயக்கமாக இருக்கிறது. இத்தனை காலத்தில் ஒருவரையொருவர் நன்றாகவேப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே எதையும் மறைப்பது சாத்தியமில்லை என்ற உணர்வு கண்களைத் திருப்பிக்கொள்ளச் செய்கிறது. கடைசி முறை அவர்கள் சண்டை போட்டுக்கொண்டார்கள். கற்பனையில் ஒருவர் மேல் ஒருவர் கண்ணாடிக் கோப்பைகளை எறிந்துகொண்டார்கள். அவை மேலே படாமல் விலகிக் கொண்டார்கள். பின் தங்களுக்குத் தாங்களே வயதாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள். இனி சிறுபிள்ளைத்தனமாக சண்டை போட முடியாது. பெரியவர்கள் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். சமயத்தில் இருவருக்குமே தோன்றும், ஒரு அறை கொடுத்து, ஒரு அறை வாங்கிக்கொண்டால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று. ஆனால் இதற்குமுன் அவர்களது இருவேறு வாழ்க்கைகளில் சிலவேறு நபர்களுடன் அப்படி நடந்தபோதெல்லாம் பிரச்சினைகள் வெறுமனே ஒத்திமட்டும்தான் போனது என்பதால்தான் அவர்கள் வேறு வழியில்லாமல் பெரியவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் இப்படிப் பிரிந்துபோவதாக பேசிக்கொள்வது மூன்றாவது முறை. எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் வேண்டும். எனக்குக் கொஞ்சம் நேரம் வேண்டும். எனக்குக் கொஞ்சம் வேறெதேதோ வேண்டும். எனக்கு என்ன வேண்டுமென்று கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்களுக்கு பழையவை எல்லாம் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நினைவுகளின் பாரம் பதட்டம் உண்டாக்குகிறது. ஒருமுறை ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் என் கையில் இருக்கும் இந்தக் கோடுகளைக் கண்டு முகம் சுழிக்காத, பதட்டம் அடையாத முதல் ஆள் நீதான் என்று. அவர் அந்தக் கோடுகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தார். இந்தக் கோடுகள் உன்னை பயமுறுத்தவில்லையா. நீ கூடிக்கொண்டிருக்கும் இந்நபர் ஒரு காலத்தில் தன் உடலை சிதைத்துக்கொண்டார் என்பது உனக்கு மோசமாக, அறுவறுப்பூட்டுவதாக, அச்சுறுத்துவதாக இல்லையா. அந்தக் கோடுகள் வரைதான், அதற்கு கீழிருக்கும் இந்தக் கோடுகள் நான் உண்டாக்கியதில்லை. இதோ இவன் என அவர் தன் பூனையைக் கைகாட்டினார். பூனை உண்டாக்கிய கோடுகளின் மேலும் சில முத்தங்கள். காதலரே, உடல்கள் சிதைந்துகொண்டேதான் இருக்கின்றன.

“ஞாபகம் இருக்கா?”

“எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு. ஆனா, எதைப் பத்தியும் பேசணுமா தெரியல”

“பேசாமலே போய்டலாமா”

“போகமுடிஞ்சா போய்டலாம்”

“ஒருமுறை ஒருவர் வேறொருவருடன் உறவில் இருந்தார். அவர்கள் ஒரே வீட்டில் இருந்தார்கள். இது இந்தக் கதையில் வரும் இருவருக்கும் முதல் முறை பிரேக் அப் ஆகி பின் கூடுவதற்கு இடையிலான ஒரு வருடத்தில் நடந்தது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்த நான்கு வருடங்களில் அதுவே மிக நீண்ட பிரிவு. அப்போது ஒருவரும் வேறொருவரும் பிரிந்தாலும் ஒரே அப்பார்ட்மெண்டில் வெவ்வேறு தளங்களில் வசித்துவந்தார்கள். அது கொரோனாவுக்குப் பின்னான சமயம். தடைகள், தயக்கங்கள் நிறைந்திருந்த சூழல். அப்போது இவர்களிருவரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் சந்தித்துக்கொள்ள முடிவுசெய்திருந்தனர். அந்த சமயத்தில் வேறொருவரும் அதே மொட்டை மாடியில் இருந்த ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார். இவர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அது கூட்டியதா, குறைத்ததா என்று இப்போது யோசிக்கிறார்கள். படபடவென ஓடும் நினைவுகளை அர்த்தமாக்கிக் கொள்ளக் கஷ்டமாயிருக்கிறது.”

“நாலு வருஷம்?”

“ம்ம்ம்ம் எவ்வளவு நாள் உயிரோடிருக்கப் போறோம் அப்டின்றத பொருத்து, ரொம்ப நீண்ட காலம். இல்ல ரொம்ப கம்மி”

இருவருமே இந்தக் கதையை இத்தோடு முடித்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். முடிந்தவுடன் அவர்களுக்கு உடனடியாக ஒரு விடுதலையுணர்வு கிடைக்கும். மூச்சுவிட முடியாமல் அழுத்திக்கொண்டிருக்கும் எதுவோ விட்டுப்போனது போல. ஆனால் அது நிலையாக இருக்குமா என்பதில் இருவருக்குமே நம்பிக்கை இல்லை.

“நான் உன்ன மிஸ் பண்ணலன்னு இல்ல. ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். ஆனா நீ கூட இல்லாதப்போ உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேனோ, நீ கூட இருக்கும்போதும் உன்ன அவ்வளவு மிஸ் பண்றேன். அதனாலதான் என்னால இத தொடர்ந்து செய்யமுடியும்னு தோணல”

“இது வொர்க் அவுட் ஆகல. சரிவரல அப்டின்றது என்னால இன்னமும் முழுசா ஏத்துக்க முடியலன்னு நினைக்கிறேன்”

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை இடையூறு செய்வதுபோல அவர்கள் அமர்ந்திருந்த உணவகத்தின் அருகே சிறு கோளாறு. ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தை ரோட்டோரம் நிறுத்திவிட்டு இறங்கிவந்து கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். பேருந்தில் மாணவர்களுக்குப் பொறுப்பாக வந்திருக்கும் ஆசிரியர் இறங்கிப் போய் அவரை சமாதானப்படுத்துவதா, மாணவர்களை விட்டு இறங்கலாமா என்று குழம்பிப்போயிருக்கிறார். தெருவில் சென்றுகொண்டிருந்த நற்குடிமக்கள் சிலர் ஓட்டுநரை சமாதானம் செய்ய முயல்கிறார்கள். சிறுவர்கள்தானே. ஏன்ப்பா இப்படிச் சொல்லலாமா. ஒட்டுநருக்கு லேசாக கண்ணீர் முட்டுவது போலிருக்கிறது. ஒரு நிமிடம் யாரோ கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, ப்ளாட்ஃபார்மில் அமர்ந்து எழுபவர் மீண்டும் பேருந்தை எடுத்துவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.

“நான்தான் நம்ம உறவ கைவிட்டுட்டேன்னு நீ நினைச்சுடக் கூடாது. அப்படி நீ நினைப்ப. ஏதாவது ஒருநாள் ஏன்டா இந்த அஞ்சு வருஷம்னு நீ நினைச்சுடுவ. வெறுத்துடுவ, இதெயெல்லாம் யோசிச்சாலே எனக்கு…”

“நா உன்ன வெறுத்துட மாட்டேன். யோசிச்சிருக்கேன். எல்லாத்தையும். பலவிதமா. ஆனா, எப்பவுமே உன்மேல வெறுப்பு வரல”

“ம்ம்ம் இத இத்தனை கிரேஸோட செய்யமுடியும்னு நினைக்கல”

“ம்ம்ம் கிரேஸ்க்கு தமிழ்ல என்ன?”

“யோசிக்கணும்”

“மொழிபெயர்ப்பாளர்தான நீ?”

“கருணை அல்லது கிருபை இரண்டுமே சொல்லலாம். முதல்ல கிரேஸ்க்கு ஆங்கில அகராதியில என்ன போட்டிருக்குன்னு கூகிள் பண்ணு”

“மனிதர்கள் மீண்டெழவும் விமோசனமடையவும் அளிக்கப்படும் அவர்கள் தகுதியடையாத இறை…’

“…அருள்!”

“ம்ம்ம் அருள்! ஆனா நாம தேடிக்கிட்டிருந்த வார்த்தை அது இல்ல, இல்லயா?”

“இல்ல. அது வேற என்னவோ. கிட்டும்போது கிட்டும்.”

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.