- குடும்பப் புகைப்படம் – சந்திரா தங்கராஜ்
குடும்பப் புகைப்படத்தில்
அம்மா வெளிர் நீலப் புடவையில்
அழகாக இருப்பாள்
பூத்தோடும், வெள்ளைக்கல் இரட்டை மூக்குத்திகளும் எடுப்பாக இருக்கும்
அப்பா மாலையானதும்
சுடுதண்ணீரில் குளித்து வெகுநேரம்
கண்ணாடி முன் நின்று தலைவாருவார்
என்னோடு மூன்று குழந்தைகள்
அவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள்
அதற்காக அப்பா வாழ்நாள் முழுதும்
மூன்று குழிகளை வெட்டினார்
அதில் முப்பதாயிரம் முறை விழுந்தெழுந்தார்
278 தடவை அவருடைய
கழுத்துவரை மண் மூடியது
7063 முறை மேற்கு மலையில் சுமையுடன் ஏறினார்
மாடுபூட்டாமல் நிலம் உழுதார்
ஒற்றைத் தலைவலியோடு
நெற்கட்டுகளை சுமக்கும் அம்மா ஒருத்தியாய்
மூனு ஏக்கர்நிலத்தில் களையெடுப்பாள்
ஒரு மத்தியானம் நாங்கள் தட்டாமாலை சுற்றியதற்கு
அவள் பருத்திக் காட்டில் கிறுகிறுத்து விழுந்தாள்.
2. காட்டுமரம் – நரன்
ஒரு காட்டு மரம்
அது தன்னைத் தானே விதைக்கும்.
தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும்.
வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும்.
கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை
சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும்.
எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும்.
தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும்.
இல்லையேல் மேசையாகி கை , கால் ஊன்றிக் குனிந்து கிடக்கும்
மரங்கள் நாற்காலிகளை விளைவிக்கிறது.
மரநாற்காலிகளில் அமர்ந்தபடி
மரங்களை விலை பேசும் மரக்கடைக்காரரை என்ன சொல்ல…
மரக்கடைக்காரா…
அங்கே கொஞ்சம் பசுமையான என் நினைவுகளின் மீதும் உட்கார் .
அதன் அடியிலும் உட்கார்.
3. புலி – ரமேஷ் பிரேதன்
அவன் என்னை விட்டுப் போய்விட்டான்
சிறுத்தையாக நான் இருந்தபோது
என்னுடன் பழகியவன்
எனது புள்ளிகள் கோடுகளாக வழிந்து
நான் புலியாக மாறியவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்
புலி ஒரு அரசியல் விலங்கு
அதிலும் தமிழ் விலங்கு என்றவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்
எனது கோடுகள் வளர்ந்து கம்பிகளாகிவிட
நான் கூண்டுக்குள் இருக்கிறேன்
கூண்டாகவும் இருக்கிறேன்
மூன்றுமுறை தப்பித்தேன்
நடுக்கடலில் சுடப்பட்டேன்
ஒவ்வொரு முறையும் செத்துப் பிழைத்தேன்
என் கனவில் விரியும் தென்புலக் கடலில்
அவனுக்கும் எனக்குமிடையே ஒரு கடல்
கொஞ்சம் சொற்கள்
நிறைய ஆயுதங்கள் மற்றும்
மக்கிப்போன பழைய முத்தங்கள்.
ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.