/

க.கலாமோகன் கவிதைகள்

தொலைவைத் தேடி
நடந்து நடந்து
எனது கால்கள்
களைத்துப் போகவில்லை

ஓர் வீதியில்
கம்பன் வரிகளை ஒருவர்
பாடிக்கொண்டிருந்தார்

வேறு ஓர் வீதியில்
நொருங்கிய சிலம்பில்
நடந்தேன்

கண்ணகிகள் ஒருவரையும்
நான் காணவேயில்லை

எதனைச் சொல்ல வருகின்றேன்
என்பது
எனக்குத் தெரியாது

நான் தொலைவைத் தேடி
ஏன் இந்தத் தேடல்
என்பதுவும்
எனக்குத் தெரியாது

ஓர் வீதியில்
ஓர் கிழவர்
சிறுமி ஒருத்தியுடன் சதுரங்கம்
விளையாடிக் கொண்டிருந்தார்

என்னைக் கண்டதும்
“சிகரெட்” என்றார்

“இல்லை” என்றதும்
என் முகத்தில் துப்பினார்

ஓர் வீதியில்
வயலைக் கண்டேன்
சில கணங்களில்
அது மறைந்தது

வேறு வீதியில்
ஓர் விபச்சாரியைக் கண்டேன்
அவள் மறையவே இல்லை

என்முன் அவள் வந்தபோது
“காசு இல்லை” என்றேன்

“நீதான் எனது காசு”

அவள் என்னைத் தனக்குள்
புதைத்தபின்

நாம் கடலொன்றின் கரையில்
தனித்திருந்த ஓடத்தில்
நிர்வாணமாகக் கிடந்தோம்

“ஆடுவோம்.”
அவள் கத்தினாள்

நான் ஓடினேன்
எனது தொலைவைத் தேடி

அவள் என்னைப் பிடித்து
அடித்தாள்

நான் அவளது
தலையைத் திருகினேன்

“சாவு ஓர் கவிதை”
சொன்னாள்
விழுந்தாள்

மீண்டும் நான்
தொலைவைத் தேடி

ஓடினேன்

என் முன் சில எலும்புகள்
மனித வடிவில்
எழுந்து நின்றன

“நான் எங்கே?”

“நீ எங்களது சுடலையில்.”

“ஏன் இங்கு
தொகையான வாடிய பூக்கள்?”

அனைத்து எலும்புகளும்
சிரித்தன
அவைகளது குரல்கள்
பெண் குரல்களே

அவைகள் யாவும்
முலைகள் இல்லாமல்

அவைகளிற்குள்
எனது
அம்மாவும் இருக்கலாம்

ஒருத்தி வந்து
என்னை முத்தமிட்டாள்

இரண்டாமவள்
எனது காதைத் தொட்டாள்

மூன்றாமவள்
என் காலில் விழுந்து அழுதாள்

நான்காமவள்
என் முன் நின்று
“தின்!” என்றாள்

அவளது எலும்புக் கைகளில்
வாசம் தரும் மாம்பழம்

ஆம்,
அவள் என் அம்மா

நான் அவளை
அணைக்கத் துடிக்கையில்
என் முன் கருகினாள்

எனது அம்மாவின்
சாம்பலைக் காக்க
ஓர் குடம் என்னிடம்
இருக்கவில்லை

கிழிந்த
எனது சட்டைப் பைகளில்
அதனை நுழைத்தேன்

சில சேவல்கள்
ஓர் வீதியில் பாடின
பின் என் முன் நின்றன

“நீங்கள் எங்கே போகின்றீர்கள்?

“தொலைவைத் தேடி.”

“நாங்களும் அதனைத் தேடியே.
உங்களுடன் வரலாமா?”

“நீங்கள் எங்கும் வரலாம்
எங்கும் போகலாம்
நான் ஓர் பிணம்”

சேவல்கள் அழுதன
பின்பு மறைந்தன

நான் எந்த வீதியில்?

எனக்குத் தெரியாது
ஏதோ ஒன்றில்
அதனது பெயரும் தெரியாமல்

என்முன் இருள்
அதனுள் வீதி ஒன்று தெரிகின்றது

அந்த வீதிக்குள்
சித்தர் ஒருவர்
சில அழகிய பல நிறப் பெண்களுடன்…

அவள்கள் அவரது
உடலை முத்தங்களினால்
கவ்வுகின்றாள்கள்

நான் அவர் முன்

“உங்கள் தத்துவங்கள்…”

சிரித்தார்

“ஏன் சிரிப்பு?”

“நான் கன்னிகளைச் சுவைத்தே
அவள்களைச் சுவைக்காதே
என்று எழுதினேன்.”

“நீங்கள் பொய்யர்.”

“யாவரும் பொய்யர்களே.”

“நான்?”

“நீயும் பொய்யன்
உனக்கு ஓர் பெண் இல்லையா?”

“பல பெண்கள் இருந்தனர்
இப்போதோ
நான் தொலைவைத் தேடி.”

“உனது பெண்களது
தொலைபேசி எண்களை
எனக்குத் தா!”

“ஏன்?”

“உனக்கு நான்
தொலைவைக் காட்டுவேன்.”

எனது போனைத் திறந்தேன்

அங்கு இருந்த அனைத்துப் பெண்களது
இலக்கங்களும்
அழிந்து
ஆண்கள் இலக்கங்களே இருந்தன

“மன்னிக்கவும்
பெண்களது இலக்கங்கள் மறைந்து
ஆண்களது இலக்கங்களே உள்ளன.”

“ஆணும் பெண்தான்
போனைத் தா!”

அதனுடன்
அவர் தனது பெண்களுடன்
ஓடினார்

தொலைவில் அவரது அனைத்துப்
பெண்களும்
ஆண்களாகத் தெரிந்தனர்

எனது
உடலுக்குள் புதைந்தது
தொலைவு.

(பாரிஸ் 11-10-2023)

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.