/

திரிசங்கு : சியாம்

“ கடைசில பழனில வந்து உட்காரணும்னு தான் இருந்திருக்குல்ல. ”

நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர் காகம் போல் தலை சரித்து நின்றிருந்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை.

“ சாமி என்ன மௌன சாமியா பேசாதா? ” என்றார்.

“ ம்.. ”

“ தூக்கிப் போட்டு மிதிச்சு புடுவேன். எந்திருச்சி வா. ”

நான் துண்டை வாரி எடுத்து தலையில் சுற்றி எழுந்து நடந்தேன். நான் அவரைப் பின் தொடர்வேனா என்ற சந்தேகமே அவருக்கு இல்லை. ஜீன்ஸ் பேன்ட், அரக்கை சட்டை, கண்ணாடி போட்டுக் கொண்டு நடப்பவரை பச்சை வேஷ்டியும், திருநீற்றுப் பூச்சும், ருத்ராட்ச மாலையுமாக நான் பின் தொடர்வதை எல்லோரும் ஒருமுறை கூர்ந்து கவனித்தனர். இல்லை எனக்கு அப்படி  தோன்றுகிறதோ என்னமோ.

“ உனக்கு என்ன டீ தானே? ” என்றார்.

“ ம்..”

“ வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சுருக்க? ”

நீண்ட கால மௌனம் ஒரு விதத்தில் மூளையை ஈரமாக்குகிறது. மூளை பறப்பதே சொற்களின் வழியே தான். அல்லது சீரான ஒலிகள் வழியே. அது குறைந்தவுடன் மூளை சொதசொதப்பாகி பூஞ்சை வளர்ந்து கிழட்டுச் சிங்கம் போல் தன்னைத் தானே கடித்து நக்கிக்கொள்கிறது. காற்றிலாடி ஒலியெழுப்பும் கொன்றை நெற்றுகள் போன்ற அதன் பற்கள்.

“ பற்கள். ” என்றேன்.

“ இந்த கிருத்திருவதுக்கு ஒன்னும் கொறச்ச இல்ல. ”

“ இல்ல… ஒன்னும் இல்ல. ”

“ எத்தன நாளாச்சு பேசி? ”

“ ஆமா… தெரியல. இருக்காதா ஒரு இரண்டு எட்டு வருஷம். ”

“ இரண்டு எங்க இருக்கு எட்டு எங்க இருக்கு? ”

நான் மொத்தமாகவே குழம்பிவிட்டேன். ஒவ்வொரு ஸ்பேனராக எடுத்து பொருத்தி சுழற்றி வழுக்க, மூளை மாற்றி மாற்றி எதையோ பொருத்திப் பார்த்துக்கொண்டிருந்தது.

“ ஆமா நாலு.. தொள்ளாயிரத்து தொன்னூத்து எட்டு இருக்கும்போல. ”

“ மழைல நினைஞ்ச குருவி கிடந்து நீவும் பாத்திருக்கியா அது மாதிரி நீ இப்போ நீவிகிட்டு இருக்க. ”

“ ஆமா சரியா வந்துடும் கொஞ்சம் நேரமாகும். ”

அவர் டீயை உறிஞ்சியவாறே என்னைப் பார்த்து சிரித்தார், “ திருமேனி பேர் என்ன சூட்டுக்கோல் கோதண்டராம சுவாமிகளா  இல்ல வேற ஏதுமா? ”

“ அப்படி ஒன்னும் இல்ல. சும்மா சின்னபுள்ளைகளுக்கு விபூதி கொடுக்குறது அவ்ளோதான். ”

மூளை நன்கு உலர்ந்த உணர்வு வந்தது. நெடுநாள் கழித்து கடைகளின் பெயர்ப்பலகைகள் எழுத்துக்களென தெரிந்தன.

“ வேலைய எப்ப விட்டுட்டு வந்த? ” என்றார்.

“ இருக்கும் பத்து வருஷம். ”

“ அப்பவிருந்து இங்கையா. ”

“ இல்ல திருவண்ணாமலை, காளஹஸ்தி, திருக்கூடமலை, கேதார்நாத், எல்லாம் சுத்திட்டு வந்தேன். ஏதோ மலைக்கு பக்கத்துலயே இருக்கணும்னு தோணுச்சு. ”

“ பொண்ணு கட்டுனியா? ”

“ இல்ல. ”

“ நான் கட்டுனேன். ரெண்டு பிள்ளைங்க. ”

“ ஓ. ”

“ ஏன் வேலைய விட்டுட்டு பக்கிரியா சுத்துற? ”

“ கூத்தியாள வரைஞ்சு தரச் சொன்னான். நான் வரைஞ்சு தந்துட்டு அப்படியே கிளம்பிட்டேன். ”

“ ஆமா பெரிய தேவ சிற்பி. ஏன் இதுக்கு முன்னாடி ஆர்ட்டிஸ்ட்லாம் வரையலையா? ”

“ அது வேற. ”

“ என்னமோ ” என்று பையைத் திறந்து அந்த புத்தகத்தை எடுத்து, “ இது நினவிருக்கா? ” என்றார்.

“ ஆ.. இது அந்த நாவல்ல. வெளிவந்துடுச்சா? ” என்று கையில் வாங்கி பார்த்தேன். அது தொன்னூற்றி எட்டிலேயே வெளிவந்திருந்தது. இப்போது மூன்றாவது பதிப்பு. இந்தியா முழுவதும் மலை ஏறி இறங்கியபோது அவ்வப்போது நினைவில் வருவது இந்நாவல் தான். ஒரு சிறு கொக்கியாக என்னை முந்தைய வாழ்க்கையோடு இணைந்திருந்தது இந்நாவல். நான் அப்படியே திரும்பிப் பயணித்தால் முந்தைய வாழ்வின் விளிம்பிற்கே சென்று அங்கு இந்நாவல் என்னை இந்த மலைகளுடன் இணைத்திருப்பதை உணரமுடியுமெனத் தோன்றியது.

அது நான் காவல் துறையில் சேர்ந்த புதிது. மிஞ்சிப் போனால் ஆறு மாதமிருக்கலாம். மதுரை விளக்குத்தூண் நிலையத்தில் கான்ஸ்டபிள். எனக்கு வீடளிக்க பலர் தயங்கினர். காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருப்பதற்கு பலர் தயங்கினர். இரு தயக்கங்களின் சமரசப் புள்ளியாகத் தான் அந்த வீடு எனக்கு கிடைத்தது. தரகர் அந்த வீட்டிற்குள் இருந்து வழி சொல்ல நான் நிலையத்தின் லேண்ட் லைனிலிருந்து கேட்டு நிலையத்திற்கும் புது மண்டபத்திற்கும் ஐந்து முறை அலைந்து நொந்து கடைசியில் தரகரை காவல் நிலையத்திற்கே வரச்சொன்னேன்.

“ தம்பி மதுரைக்கு புதுசா? ” என்றார்.

“ ஆமாண்ணே நான் அந்த பக்கம். சிவகங்கை. ”

“ வேலைக்கும் புதுசு தான? ”

“ ஆமா. இப்போதான் சேர்ந்தேன். ”

“ அதானே இல்லன்னா முதல் தடவையே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருப்பீயளே. ”

அவர் இராய கோபுரத்திற்கு இடது பக்கம் திரும்பினார். உள்ளே இரண்டு ஆள் நுழைவதற்கு வழி இருந்து சட்டென்று வலது திரும்பியது. கோபுரத்தின் கல் கட்டுமானத்தை இடித்தபடி ஒரு வீடு.

“ இது தான் தம்பி வீடு. ”

“ இதாண்ணே வீடு? ”

“ ஆமா கோபுரத்த ஒட்டுன மாரினு சொன்னேன்ல. ”

“ இடிச்ச மாரினு சொல்லலையேண்ணே. ”

“ எல்லாம் ஒண்ணுதான் தம்பி இந்த ஏரியாவுல வீடு கிடைக்கிறது கஷ்டம். அதுவும் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். இத விட்டா வேற கிடைக்காது பாத்துக்கிடுங்க. ”

வேறு வீடு கிடைக்கும் வரை பொறுத்திருக்க முடியாது. இங்கிருந்தவாறே வேறு வீடு தேடிக்கொள்ளலாம் என்று நினைத்துத் தங்கினேன். முதல் இரண்டு நாள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அந்தச் சந்து இருப்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. கோமதி லிங்கம் அண்ணாச்சி பார்சல் பெட்டிகளை சந்தை அடைத்தாற்போல் அடுக்கியிருப்பார். அதைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால் இந்த வீடு கோபுரத்தை கவ்விக்கொண்டு உட்கார்ந்திருக்கும். அதை நெருங்கும்வரை ஏதோ ஒரு அம்மன் சன்னதியை சுற்றி வருவதாகத் தான் தோன்றும்.  முதலில் பூட்ஸை எங்கு விடுவதென்றே குழப்பம். நிலையில் அருள்மிகு ஏதாவது அம்மன் என்று எழுதி இருப்பதாக கற்பனை. பூட்ஸை வாசலில் விட்டுக் கதவை திறந்தால் உள்ளே  ஒரு சாமி அமர்ந்திருக்கும் என்றே பலமுறை எதிர்பார்த்தேன். உள்ளிருந்து அறை ஜன்னலைத் திறந்தால் கையில் உடுக்கை போன்று எதனுடனோ ஒற்றைக் காலைத் தூக்கி ஒருவன் ஆடிக்கொண்டிருப்பான். காலையில் எழுந்து வாசல் கதவைத் திறந்தால் கையில் வாளுடன் வணக்கம் சொன்னவாறு ஒருவன் நின்றிருப்பான், ஏதோ அழைப்பு மணியை அடித்துவிட்டுக் காத்திருப்பது போல. நான் தலையை மெல்ல அசைத்தால் கூட ஒரே வீச்சில் வெட்ட பல அரிவாட்கள் சூழ்ந்திருப்பதாகவே உணர்ந்தேன். தலையசைப்பு அல்ல ஒரு எண்ணமே போதும். ஆனால் கோபுரத்தின் அப்பக்கம் நேர்மாறானது. பிளாஸ்டிக், எவர்சில்வர் பாத்திரம், பூசை சாமான், பூ, பழம் என்று கடைகள் நிறைந்திருக்கும். அவற்றின் தார் பாய்கள் கோபுரத்திலேயே ஆணியறைந்து மாட்டப்பட்டிருக்கும். உண்மையில் நிலைத் தூண்கள் மட்டும் இல்லையெனில் அது கோபுரம் என்று சொல்வதே கடினம். அங்கு நின்று பார்க்கையில் உறைந்த கால்களை மேல் நீட்டி மல்லாந்து கிடக்கும் கரப்பான் தான் அக்கோபுரம். அதை மொய்க்கும் எரும்புகளென மனிதர்கள். ஆனால் என் வீடிருக்கும் சந்திற்குள் நுழைகையிலேயே இறுதித் தீர்ப்பிற்கு அரசவை நோக்கி இழுத்துச் செல்பவனென்று உணர்வேன். என்னை உலகுடன் இணைப்பதே கோமதி லிங்கம் அண்ணாச்சியின் பார்சல் பெட்டிகள் தான். அவை கூட இரவில் சிற்பங்களென விழி விரித்து நிற்பவை.

“ அண்ணே வேற வீடேதும் மாட்டுச்சா? ”

“ ஏன் தம்பி அந்த வீடு சௌகரியப்படலையா? ”

“ எங்கண்ணே காலையில எந்திருச்சு பாத்ரூம் போனா ஜன்னல் வழியா ஒரு தடியன் கைல சங்க வச்சிக்கிட்டு ஊதிட்டு உக்காந்திருக்கான். எப்படி விளங்கும்? சுத்தி ஆளு இருக்க மாரியே இருக்குண்ணே. ”

“ அதான் மேட்டரு. தம்பிக்கு பொண்ணு சிற்பம் இல்லைனு தான் கவல. நீங்க இருக்குறது தெக்கு பக்கம். அந்தால வடக்கு பக்கம் கோபுரத்த ஒட்டுனாப்ல இதே மாதிரி ஒரு வீடிருக்கு. வடக்குப் பக்கம் பொம்பளையாளுக சிற்பம் இருக்கும் பாத்துக்கிடுங்க. ஆனா அது இன்னும் கொஞ்சம் கோபுரத்த ஒட்டுனாப்ல இருக்கும். ”

“ இன்னும் ஒட்டுனாப்லனா எப்படிண்ணே கோபுரத்துக்கு ஃபர்ஸ்ட் புளோர்லையா? ”

“ தம்பி விளையாடக்கூடாது. உங்களுக்கு வீடு கிடைச்சதே பெரிசு. நான் வேணா பாக்குறேன். ”

நான் வடக்குப் பக்கம் சென்று பார்த்தேன். உண்மையிலேயே பெண் சிற்பங்கள் அதிகமிருந்தன கொடியைப் பிடித்தவாறும், ஆடியவாறும், குழலூதியவாறும். பெருமூச்சுவிட்டபடி என் வீட்டுப்பக்கம் வந்தேன். ஒருவர் என்னைப் போலவே கோபுரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

“ சார் என்ன வேணும்? ” என்றேன்.

“ சும்மா பாக்குறேன். ” என்றார்.

நான் உள்ளே சென்று ஜன்னல் வழியே பார்த்தேன், இருட்டிய பின்பும் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டிருந்தார். ஒற்றை ஆளாக இவர் எதைத் தூக்கிக்கொண்டு போக முடியும் என்று யோசித்தேன். அடுத்த நாள் நான் வேலைக்குச் சென்று திரும்பி வந்தபோதும் அவர் அங்கிருந்தார்.

“ சார் நீங்க என்ன பாக்குறீங்க. ” என்றேன்.

“ சும்மா தான் கோபுரத்த பாத்துட்டு இருக்கேன். ” காக்கிச் சட்டையைப் பார்த்தும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

“ இந்த ஊரா? ”

“ இல்ல தர்மபுரில இருந்து வரேன். ”

ஒருவர் தர்மபுரியிலிருந்து கிளம்பி வந்து பார்ப்பதற்கு என்ன இருக்கிறதென்று புரியவில்லை.

“ அடிக்கடி உங்கள பாக்குறேன் அதான் கேட்டேன். ”

“ ஒன்னுமில்ல ஒரு நாவல் எழுதணும் அதான் பாத்திட்டு இருக்கேன். ” வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே பொய் சொல்பவர்களை என்னால் கண்டுணர முடியும் என்று நானே நம்பத்துவங்கினேன். 

“ ஓ.. இதான் சார் என் வீடு. நான் கோதண்ட ராமன். கான்ஸ்டபிளா இருக்கேன். ”

அவர் என்னை ஒரு முறை மேலையும் கீழையும் பார்த்து, “ கொஞ்சம் உட்காரலாமா நான் ரொம்ப நேரமா நின்னிட்டு இருக்கேன். ” என்றார்.

அப்படித் தான் ஜெயபிரகாஷ் அறிமுகமானார். அன்று முதல் எல்லா சனி ஞாயிறும் வந்துவிடுவார், ஒவ்வொரு முறையும் அந்தக் கோபுரத்தைப் பற்றிய ஏதோ ஒரு கதையுடன். அதை திருமலை நாயக்கர் கட்டத் தொடங்கியதும் அவர் இறந்த பிறகு நிதி நெருக்கடியால் கட்டுமானம் அப்படியே கைவிடப்பட்டதும் அவர் சொல்லிய கதை தான். மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும் அதை இன் செய்திருப்பதும் தாடியில்லாத முகமும் கண்ணாடியும் அவரை எழுத்தாளர் என்றே நம்பமுடியாது.

“ உண்மை தான் நான் நாகர்கோவில்ல ஒரு ரைட்டர பாக்க போனேன் ஆளு நல்லா மலையாள பட ஹீரோ மாரி இருந்தாரு. நான் ஏதோ ஜிப்பாவும் தோள்பையுமா இருபாருன்னு நினைச்சேன். ஆனா ஒன்னு சுருட்ட முடி உள்ளவன போலீஸ்னு நம்பவே முடியாது. தொப்பி போட்டு மறைச்சுக்க. ” என்றார்.

பெரும்பாலும் நான் இல்லாத போதும் அவர் என் வீட்டிலேயே இருப்பார். திரும்பி வந்து பார்க்கையில் தரை முழுக்க காகிதங்களைக் கசக்கிப் போட்டு எழுதிக்கொண்டிருப்பார். காலையில் வேலைக்கு கிளம்புகையில் “ அவ்ளோதான் இது சரி வராது நானும் வேற வேற மாரி எழுதிப்பாத்துட்டேன். சரி வரல விட்டுட வேண்டியதான். நான் கிளம்புறேன் சாவிய அந்த மண்டை ஓட்டுல வச்சிட்டு போறேன். ” என்பார். மாலை திரும்பி வந்து பார்க்கையில். “ எழுதியாச்சு பாதி முடிஞ்சது பாத்துக்க. பஸ் ஏறி உக்காந்துட்டேன் ஆனா பிட்சாடனர் பக்கத்துல இருக்குற அந்த மான் ஏதோ உறுத்திட்டே இருந்துச்சு. ‘குருதி விரல்களை நக்கும் மானென கலை’னு ஒரு வரி வந்துச்சு திரும்பி வந்து எழுத ஆரம்பிச்சேன். இன்னும் மூத்திரம் கூட அடிக்கல. முட்டுது. ” என்பார். அவர் எழுத காகிதம் தேடும்போது தான் அதை எடுத்துப் பார்த்தார்.

“  இது மோனே இல்ல?”

“ ஆமா மோனே தான். ‘வுமன் வித் பாரசோல்’. ” என்றேன்.

“ நீ வெஸ்டர்ன் பெய்ண்டிங் பாப்பியா? ”

“ நான் ஓவியன். அதுல தான் பெரிய ஈடுபாடே. வரைஞ்சுகிட்டே இருந்தேன். ஊருல ஒரு அண்ணே மெட்ராஸ் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சாரு. அவர் சொல்லிக்கொடுத்ததுதான். பள்ளிக்கூடம் படிக்குறப்பையே அவர் அளவு வரைவேன். அதே காலேஜ்ல சேரலாம்னு தான் இருந்தேன். அப்பா பெல்ட எடுத்து உரிச்சிட்டாரு. அவர் போனதுக்கப்புறம் அவரோட வேல தான் எனக்குக் கிடைச்சது. ”

அன்று முதல் அவர் என்னிடத்தில் கலை பற்றி தொடர்ந்து பேசினார். ஐரோப்பிய மதம், தத்துவம், இசை, ஓவியம், இலக்கியம், நாடகம் ஒன்றோடொன்று எப்படி சார்ந்து வளர்ந்தது என்பதை பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கினார்.

“ நீ எப்படி போலீஸா இருக்க? ”

“ அதான் சொன்னேன்ல அப்பா வேலைனு. ”

“ அது இல்ல. அடிப்படையிலேயே யூனிபார்ம் கலைக்கு எதிரானது. அதுலையும் போலீஸ், மிலிட்டரி மாதிரியான காவல் துறை செய்யுறது பேசிக் யூனிபிகேஷன் தான். மார்ச் பாஸ்ட் அதோட சின்ன வெளிப்பாடு. பலநூறு காலும் கையும் சேர்ந்து ரெண்டு கால் கையா மாறனும். பலநூறு மூள சேர்ந்து ஒன்னாகனும். அதுக்கு பெரிய சமரசம் வேணும். அது சாமானியன்கிட்ட சுலபமா வந்திடும். ஆனா ஆர்ட்டிஸ்டால முடியாது. ஒரு விதத்துல கலைங்கறதே வித்தியாசமா இருக்குறதுதான். ஒரு ஆர்ட்டிஸ்டோட உட்ச கட்ட வெற்றியே அவன் அப்பன் மாரி இல்லாதது தான். ” என்றார்.

நான் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வரையத் தொடங்கினேன். பெரும்பாலும் பிரபல மேற்கத்திய கோட்டோவியங்களின் பிரதிகள். முதலில் கை வரவேயில்லை. சிலந்தி வலையில் கை விரல்கள் சிக்கிக்கொண்டாற் போல, சிலந்தியின் இஷ்டத்திற்கு நகரும் என் விரல்கள், இல்லை அதன் இழைகளாகவே மாறிய என் விரல்கள். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, லத்தியின் கட்சிதம். உடலின் எல்லா சிரைகளிலும் ஓடும் உலோகம். தேங்கி கெட்டித்துப் போன அதன் திடம். அது உருகி கரைந்து வெளியேரவே ஒரு மாதமானது. அதன் பின்னரே இராய கோபுரத்தை வரையத் தோன்றியது. கோமதி லிங்கம் அண்ணாச்சி கடையிலிருந்து, என் வீட்டு மாடியிலிருந்து, நந்தி சிலை முன்பிருந்து என்று இருபது படங்கள். வரைய வரைய அது எனக்கு அணுக்கமானது. ஒரு கட்டத்தில் என் அறையில் இருந்த படியே எல்லா சிற்பங்களையும் காண முடிந்தது. அவையே நானான மாதிரி, இராயகோபுரமே நான் என்பது போல. வளரத் துடித்தேங்கும் ஒரு வித்தென அது நின்றிருக்கிறது. நிலத்தின் அடியில் அதன் விம்மலோசையே அதனுடன் என்னை அணுக்கமாக்கியது.

“ ஆமா ஒரு விதத்துல அதான் கலையே இல்ல? காலம் முழுக்க எல்லாரும் கவிதை எழுதுறது அதுக்குத்தான். எதையோ பாக்குறப்போ பிரம்மாண்டமா, பயமா இருக்கு. எழுதிட்டா கால சுத்தி வர நாய்க்குட்டி மாதிரி ஆயிடுது. ஆழ்வார் கிருஷ்ணன பத்தி பாடுனது தான் நினைவுவருது. அது ரொம்ப பெருசு, ஆனா பாடிட்டா சின்னக் குழந்தை. குண்டில ரெண்டு தட்டி தொட்டில்ல படுக்க போட்டுரலாம். ” என்றார். அவர் ‘ஒரு விதத்தில் கலை என்பது இதுதான்’ என்று இதுவரை ஓராயிரம் விதத்தில் சொல்லி இருப்பார்.

பார்சல் பெட்டிகளை மிதிக்காமல் நடந்தவாறே “ சரி இப்போ வரைஞ்சு ஓவியத்துக்கெல்லாம் என்ன பேரு வைக்கிறது? ” என்றேன்.

“ ஆமா நானும் அதத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். நேத்துதான் நாவல்ல ஒரு கதைய சேர்த்தேன். அது தான் நாவல்னே இப்போ தோணுது. திரிசங்கு கதை. கம்பராமாயணத்துலயே வர கதை தான். மகாபலிபுரத்தில பாத்த சிற்பம், அதுல என்னமோ திரிசங்கு மட்டும் உறுத்திட்டே இருந்துச்சு. நாவல்ல திரிசங்கு வந்த பிறகு கோபுரமே திரிசங்கா மாறிடிச்சு. “

“ எப்படி? ”

“ நாவல வாசிக்குறப்போ கோபுரமே திரிசங்கா மாறிடும். ”

அவ்வளவாகப் புரியவில்லை. ஒரு முறை கோபுரத்தை பார்த்து, “ ப்ச்.. பாவம்ல. ”  என்றேன்.

“ ஐயா ஒன்னும் பாவப்பட வேண்டாம், நீயே திரிசங்கு தான். காக்கிச் சட்டையோட மைக்கேல் ஏஞ்சலோ ஆகப் பாக்குற. எதையாவது ஒன்னத் தூக்கிப்போடு. பிறவு அந்தரத்துல கிடந்து என்ன கேவுனாலும் காப்பாத்த ஆளு கிடையாது. ”

ஒரு பசு கோபுரம் வழியாக நந்திச் சிலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது.

“ கோபுரமே மாடு நடந்து போக உருவான ஒரு வாயில் தான். தொழுவதுக்குள்ள மாடு போறதுக்கு ஒரு கேட் அவ்ளோதான். மாடுன்னா செல்வம். அதனால அது போற வாயிலும் ஐஸ்வர்யம். அதோட ஐக்கனாத் தான் கோவில்ல கோபுரம் நிக்குது. ஒரு சாதாரண மரவாயில்ல இருந்து இப்போ இவ்ளோ பெரிய கோபுரம். ”

“ அந்த ஐஸ்வர்யத்துக்காகவா இங்க கடை போட்றது? ”

“ அப்படி இல்ல. ஒன்னு தரையில இருக்கணும் இல்ல உச்சியிலே இருக்கனும். நடுவுல மாட்டுனா இப்படித்தான் நாய்ப் பொழப்பு. இந்த கோபுரத்தோட பழைய போட்டோ உண்டு என்னூத்தி எழுவதுல எடுத்தது அதுலயே இங்க ஒரு அம்மா கடை போட்டு உக்கார்ந்திருக்கு பாத்துக்க. ”

“ அதான் ஓவியத்தோட மகிமை. கடையே இல்லாம தான் நான் வரைஞ்சுருக்கேன். ”

“ அது என்னது வைராங்கம்னு கையெழுத்து போட்டு வச்சுருக்க? ”

“ அது அப்பா பேருக்கு பின்னாடி இருக்கும். நானும் வரையிறப்போ வைராங்கம்னு போட்டுக்குறது. ”

“ சாதி பேரா? ”

“ இல்ல எங்கப்பா பெரியாரிஸ்ட். என்னோட கம்யூனிட்டி பேரே தெரியாமத்தான் வளர்ந்தேன் இன்னிக்கும் தெரியாது. என் கம்யூனிட்டி செர்டிபிகேட் கூட நான் சரியா பாத்தது இல்ல. எங்க அப்பாட்ட கேட்டப்போ அது எங்க குடும்ப பேருன்னு சொன்னாரு. ”

“ குடும்பம் எங்க இருக்கு? ”

“ தெரியல நான் பிறக்கறப்போ எங்கப்பா பல இடம் மாத்தலாகி இருந்தாரு. அம்மாவையே ஓடி வந்துதான் கல்யாணம் பண்ணாரு. எந்த உறவும் இப்ப இல்ல. ”

“ ஒரு புத்தகம் உண்டு ரூட்ஸ்னு. அந்த ரைட்டர் இப்படித்தான் அவர் வம்சத்த தேடிப் போவாரு. ஒருத்தன் மொத்த வம்ச வரலாறையும் சொல்லுவான். அது மாதிரி நீ தேடிப் பாரேன் ஏதாச்சும் கெழவி சொன்னாலும் சொல்லும். ”

“ எதுக்கு ஊர்ல கிடக்குற ரெண்டு ஏக்கர் நிலத்துக்கும் சொந்தம் கொண்டாடிகிட்டு எவனா வரவா? நமக்கு எதுக்கு? புது மண்டபத்துக்குள்ள போவோமா? ”

“ அதுக்குள்ள போனா எனக்கு தலைய சுத்திரும். முன்ன ஒரு நாள் உள்ள போனேன். நைட்டி கடை போட்ருக்கான். ஒரு பய எங்கம்மைக்கு நைட்டிங்குறான். அளவு தெரியல. பின்னாடி மகிஷாசுரமர்தினியக் காட்டி அந்த அளவுங்குறான். கடைக்காரன் பாத்துட்டு அப்போ xl சரியா இருக்கும் ஆனா அந்த பச்சைத் தாமரை போட்டது சரியா இருக்காது வெள்ள மயிலு போட்டதுதான் எடுப்பா இருக்குங்குறான். ”

அவர் எதுவும் பேசாமல் நகத்தை கடித்துப் துப்பியவாறே நடந்து கொண்டிருந்தார்.

“ இத தான் நாவல்ல எழுதப் பாக்குறேன். இவ்வளவு பெரிய கோவிலே நுகர்வோட உட்சத்துல தான் சாத்தியம். அதில இருந்து தான் கனவு, கலை எல்லாம் வருது. ஒரு காலத்துல நுகர்வு தன்ன கலை மூலமா நியாயப்படுத்திக்கிச்சு. இப்போ இருக்குறது நுகர்வு வெறி. ஆனா இது கலைய நோக்கி கை நீட்டல. ஒரு கட்டத்துக்கு மேல யோசிச்சா நானும் இருத்தலியல்ல வந்துதான் நிக்கிறேன். ஒருவேளை அதுதான் உண்மையோன்னு கூடத் தோணுது. ”

அடுத்த நாள் அவர் எழுதிய எல்லா காகிதங்களையும் எடுத்துச் சென்றார். அதன் பிறகு இன்று தான் நான் அவரை பார்க்கிறேன், திரிசங்கு நாவலுடன். அவர் மலையையே பார்த்துக்கொண்டிருந்தார், அதில் நிகழும் சிறு அசைவைக் கூட உணர முடியும் என்பதுபோல.

“ நாவல் நல்லா வித்ததா? ” என்றேன்.

“ முதல் பதிப்பு ஆயிரம் காப்பி போட்டோம். அதுல முன்னூறு காப்பி நானே வாங்குனேன். ”

“ நீங்க எதுக்கு வாங்குனீங்க? ”

“ நாவல் வெளியாச்சு. ஆறு மாசம் கழிச்சி திண்டுக்கல் பக்கத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது விஸ்வநாதன்னு ஒருத்தர் எழுதுனது. ராயகோபுரம் மாதிரி அறுபத்திநாலு கோபுரம் கட்ட பிளான் இருந்ததா சொல்வாங்க. சில கோபுரம் அஸ்திவாரத்தோட போச்சு. சில கோபுரத்த பின்னாடி வந்தவங்க கட்டுனாங்க. நாயக்கர் ஆட்சியே ஒரு விதத்துல கோயில் கட்டுற ஆட்சி தான். எப்படி பஞ்சாலை, சிமெண்ட் பாக்டரிலாம் ஒரு இன்டஸ்ட்ரியா இருக்கோ அது மாதிரி கோயில் கட்டுறதே ஒரு பெரிய இன்டஸ்ட்ரி. சிற்பி எல்லாம் கூட்டம் கூட்டமா கிளம்பி போயிருப்பாங்க. ஒரு பெரிய இயக்கம். கர்நாடகாவிலயிருந்து மதுரைக்கும், மதுரையிலயிருந்து மொத்த தமிழ்நாட்டுக்கும் சிற்பி அலைஞ்சுருப்பாங்க. சங்க காலத்துல கவிஞர்கள் அலைஞ்ச மாதிரி நாயக்கர் காலத்துல சிற்பிங்க. திருமலை நாயக்கர் தொடங்குன மதுரை கோபுரத்துல ஒரு பெருஞ்சிற்பி இருந்துருக்காரு. அவரோட வழி வந்தவருதான் இந்த விஸ்வநாதன். அந்த சிற்பி கோபுரத்த செதுக்க வேணாம்னு முடிவெடுத்த பின்னாடியும் விடாம செதுக்கி இருக்காரு, ஒத்த ஆளா. செதுக்கி சேத்த சிலை இல்லாம கோபுரத்தில இருக்குற ஒவ்வொரு சிற்பமும் அவர் செதுக்குனதுனு விஸ்வநாதன் எழுதியிருந்தாரு. அந்த சிற்பிக்கு கோவில் எழுப்பி கும்புடுறாங்க. அது அவங்க உபாசனை தெய்வம். விஸ்வநாதன் எண்பது வயசு ஆளு. அவரோட பேரன் தான் நாவல வாசிச்சிட்டு அவர்கிட்ட சொல்லி இருக்கான். அத மறுத்து கடிதம் போட்டிருந்தாரு. அந்தக் கோயிலுக்கு போய்ப் பார்த்தேன் அங்க தெய்வமா இருக்கதே அந்த சிற்பியோட உளி தான். அதுக்கப்புறம் தமிழ்நாடு முழுக்க சுத்தி மிச்ச இருந்த காப்பி எல்லாத்தையும் வாங்குனேன். ”

நான் ஒன்றும் சொல்லாமல் தாடியை நீவியபடி நின்றிருந்தேன். அவர்,

“ உனக்கு புரியலனு நினைக்குறேன். நாவலே தரிசனம் தான். கதையும் வடிவமும் அதுக்கப்பறம். வடிவமும் கதையும் இருபது வருசத்துல பழசாயிடும். நிக்கிறது தரிசனம் மட்டும் தான். என்னோட நாவல்ல வர சங்கர பெருந்தச்சன் விஸ்வநாதன் சொன்ன இந்த சிற்பியோட கதாபாத்திரம். நாவலோட கடைசில பொருளாதார நெருக்கடில இந்த கோபுரத்த கை விடுவாங்க. ஆனா சங்கர பெருந்தச்சனோட கனவிது. பதினொரு நிலை கோபுரம் முன்னூறு அடி உயரம். கட்டி முடிச்சிருந்தா அவர் தான் நாயக்கர் காலத்தோட குஞ்சரமல்ல பெருந்தச்சன். நாவலே அத நோக்கித் தான் நகரும். நாவலோட முதல் பக்கமே பதினொரு நிலையோட இருக்குற அந்த கோபுரத்தோட விவரணை தான். நாவலோட முதல் பாகம் ஸ்தூபி. அது முழுக்க கோபுரம் முழுசாத் தான் இருக்கும் எல்லாம் சங்கரனோட கற்பனை தான். ரெண்டாவது பாகம் உபபீடம். அதுல தான் உண்மையா திருமலை நாயக்கர் அந்த கோபுரத்த கட்ட ஆசைப்படுவாரு. அவருக்கு முன்னாடியே சங்கரன் அந்த கோபுரத்த அந்த இடத்துல பாத்தாச்சு. கடைசி பாகம் பாதாளம். அதுல தான் திரிசங்கு கதை வருது. எப்பவுமே மனுசன் பிரம்மாண்டமான வளர்ச்சியப் பாத்து பயப்படுறான். சராசரியான ஆளுகளுக்கு கற்பனைல கூட கஞ்சத்தனம் உண்டு. ராய கோபுரத்தோட நிலத் தூண பாத்தீல. நாலும் ஏதோ வானத்தயே புடுச்சி வச்சுக்குற மாரி. அதப் பாத்தே எல்லாம் பயப்பட்டானுங்க. அதுல தேர இருக்கு, அவ்ளோண்டு தேர போதும் சங்கரனோட திமிர அடக்கனு பேச ஆரம்பிச்சானுங்க. அப்புறம் கோபுரம் பாதில நின்னிரும். நாவலோட கடைசில சங்கர பெருந்தச்சன் பித்தெடுத்து உளியோட அலைவாரு. கோபுரத்தோட ஒவ்வொரு சிற்பமா உடைப்பாரு. ஒரு கருக்கு விடாம சிதைச்சிட்டு வரப்போ திருமலை நாயக்கர் சிலை வரும் அத உடைக்கப் போறப்போ அவர வாளால வெட்டிக் கொல்றாங்க. தலையில்லாத உடம்பு திருமலை நாயக்கரோட கால் கட்டவிரல் நகத்த மட்டும் சிதைச்சிட்டு சரியுது. இரத்தக் கறையோடக் கிடக்குற உளிய புதைக்கிறதோட நாவல் முடியும். ”

“ நீங்க எழுதுனத்துக்கு நேர் எதிரா நடந்துருக்கு இல்ல? ”

“ ஆமா. ” அவர் மோவாயைத் தூக்கி வாயை வளைத்து, காது வரை கொண்டு சென்றார். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர் அப்படி செய்வதுண்டு. அவர் எப்படியும் அங்கு நின்றிருக்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

“ அப்ப அவ்வுளவுதான் அந்த நாவல். தர்மபுரியில இருந்து கிளம்பி வந்து கிடந்தது எல்லாம் வேஸ்ட். ” என்றேன்.

“ அது எப்படி? எல்லா காப்பியையும் நானே வாங்குன பிறகு ரெண்டாவது எடிஷன்ல பாதாளம் பாகத்த மாத்துனேன். பதிப்பாளர் முழிச்சாரு. அப்புறம் போட்டாரு. அதுக்கு பெரிய விமர்சனம் வந்துச்சு நல்லதும் கெட்டதுமா. அதெல்லாம் பாத்தா ரைட்டரா இருக்க முடியுமா என்ன? அடுத்து மூணு நாவல் வெளியாச்சு. அதுல ஒன்னு சினிமாவா வருது அது விசயமாத் தான் பழனி வந்தேன். ”

“ கதையில எத மாத்துனீங்க? ”

“ இப்போ எதையும் தெளிவாச் சொல்ல முடியல. அத எழுதுனதே அந்த சிற்பியோட கோவில்ல உக்காந்துதான். சன்னதம் வந்த மாதிரி எழுதினேன் நாலு நாள் இருக்கும். ஒரு வார்த்த கூட அதுல மாத்தல அப்படியே பிரிண்ட் பண்ணது. ”

ஒரு கருப்பு கார் வந்து நின்று ஹாரன் அடித்தது, அதிலிருந்து ஒருவர் “ ஜெபி ” என்றழைத்தார்.

“ சரி பாப்பம். என் விலாசமும் நம்பரும் எழுதி தரேன். ஏதாச்சுன்னா போன் பண்ணு. ” என்று விலாசம் எழுதி அந்நாவலைக் கொடுத்துவிட்டு காரில் ஏறிச் சென்றார். அட்டைப் படத்தில் ஒரே ஒரு உளி இருந்தது. ‘திரிசங்கு – ஜெயபிரகாஷ்’

முன்னுரை

முதலாம் பதிப்பின் முன்னுரையை இதில் இணைக்கவில்லை. சென்ற பதிப்பை மொத்தமாகவே மறக்க நினைக்கிறன். இதற்கு கடும் விமர்சனம் வரும் என்றறிந்தே செய்கிறேன். சிந்தனை என்பதே ஒரு தொடர் பரிசீலனை தான். ஒரு விதத்தில் பழைய சிந்தனைப் பரிசீலனையின் ஒரு நீட்சியாகவே புதிய சிந்தனை தோன்றுவதை காலம் நெடுகப் பார்க்கமுடிகிறது. தனது இறுதி மூச்சு வரை பரிசீலனை செய்த அறிஞர்களை அறிவேன். அதில் முதலாமவர் காந்தி. காந்தி தொடர்ந்து தன்னை சோதித்துக் கொண்டார். தன்னைக் கொண்டே தன் சிந்தனைகளைப் பரிசோதித்தார். அந்தப் பரிசோதனையின் ஊசலாட்டத்தில் காந்தி தன் வாழ்நாட்களில் பெரும் பங்கை செலவழித்திருக்கிறார். உங்களது சிந்தனையை நீங்களே மறுக்க முடியவில்லையெனில் பிறர் அதை ஏற்றுக்கொள்ளவேண்டுமென எப்படி நினைக்கிறீர்கள்? முதலாம் பதிப்பிற்கு பின் எனக்குக் கிடைத்தது பெரும் திறப்பென்றே சொல்வேன். திரிசங்கு என்பது இன்று நாம் பார்க்கும் Alpha Centauri நட்சத்திரக் கூட்டம். சூரியனை விடப் பெரியது, பிரகாசமானது.

திரிசங்கு சூரியக் குலத்தில் வந்தவன். இன்று அதைவிடப் பிரம்மாண்டமானவன். மனித உடலுடன் விண்ணகம் செல்ல முயற்சித்த அவன் குலத்திலேயே மனித உடல் கொண்டு விண்ணகத்திலிருந்து கடவுள் இறங்கினார். இராமன் செய்யும் நீர்க்கடன் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் நின்றிருக்கும் திரிசங்கையும் சேரும். இங்கு தனது கலையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தத் துடிக்கும் அனைவரும் திரிசங்குகளே. கனவு கனத்த கண்களுள்ளவர்களுக்குப் புரியும். வேறு யாரையும் நான் பொருட்படுத்துவதில்லை.

இந்நாவல் எனது அன்புள்ள மூத்த நண்பரான விஸ்வநாதன் வைராங்கம் அவர்களுக்கு சமர்ப்பணம்.

ஜெயபிரகாஷ்

மீண்டும் ஒரு முறை வாசித்தேன் ‘விஸ்வநாதன் வைராங்கம்’ என்றே இருந்தது. நாவலைப் புரட்டிக் கடைசி பக்கத்தை வாசித்தேன்.

‘ அதுதான் கடைசி ஓவியம். கோமதி லிங்கம் அண்ணாச்சி கடை வாசலில் அமர்ந்து வரைந்துக் கொண்டிருந்தேன். மழை பெய்து அதன் ஈரப் பளபளப்பு எருமைக் கண்களென சிற்பங்களில் ஒட்டியிருந்தது. சூரியனைப் பெற்று ஒவ்வொரு துளியும் சிறு நட்சந்திரங்கள் என தனித்து மின்னியது. சென்று கொண்டிருந்தவர் மழைக்காக ஒதுங்கியது போல மூன்றாம் நிலைக் கோஷ்டத்துள் ரிஷபாந்திகர் நின்றிருந்தார். அருகில் புறா ஒன்று மெல்ல தலை நீட்டி தண்ணீர் சொட்ட உள்ளிழுத்துக்கொண்டது. எட்டாம் நிலையில் உலகளந்த பெருமாளின் கால் மகாவலியைக் கடந்து, சூரிய சந்திரர்களைக் கடந்து திரிசங்கையும் கடந்து தேவருலகம் நோக்கி நீண்டுகொண்டிருந்தது. மேல் நிலையில் சிவன் உமையுடன் அமர்ந்திருக்க அருகில் ஒருவர் கை கட்டி நின்றிருந்தார். அவரது கையிலுள்ள உளியை வரைந்துவிட்டு கழுத்தை அழுத்தி நீவிக்கொண்டேன். இறுதியாக ஒருமுறை ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘கோதண்ட ராமன் வைராங்கம்’ என்று கையெழுத்திட்டு எழுந்தேன். ’

என் விரல்கள் வியர்த்து காகிதம் ஊறியிருந்தது. நாவலை மூடிவைத்து, பணமுடிப்பை திறந்தேன். மதுரை செல்லும் அளவுக்கு பணம் இருந்தது. 

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

2 Comments

  1. சிறப்பான சிறுகதை நல்ல நிறைய தகவல்களுடன் விவாதிக்ககூடிய சிறுகதை மேலும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கலாம். நன்று.

  2. நுணுக்கமாய் செதுக்கப்பட்ட தகவல்கள்.
    “மூளை பறப்பதே சொற்களின் வழியே” என்ற வரியில் மூலத்தை தரிசித்த ஞானம்.
    நல் வாசிப்பனுவம் தந்தமைக்கு நன்றி சியாம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.