/

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

1

சர்க்கஸ் கூடாரம் பிரிக்கப்படுகிறது

உருத்திரளாத நிலவு பவளமல்லி மரத்திற்கிடையே உடைந்து நிற்கிறது

படுக்கையறையிலிருந்து எங்கள் மலையைப் பார்க்கும் கடைசி இரவு
என் இதயக் காட்டில் எல்லாப் பறவைகளுக்கும் பைத்தியம் முற்றிவிட்டது.
கையிலிருக்கும் அம்புகளை ஏவி
பறவைகளை அமைதியடையச் செய்து
வீட்டுத் தோட்டத்தில் மரம் செடிகளுக்கிடையே உலர்த்தி வைத்தேன்
ஆனால் பைத்தியம் பிடித்த அதன் கண்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை.

துளசி மாடத்தில் தீபம் அணையாதிருக்க
விடியவிடிய உறங்காமல் எண்ணெய் ஊற்றுகிறாள் அம்மா
ராத்தங்கலுக்கு
உலகின் மறுபுறம் செல்லும் சூரியனும் உறங்குவதில்லை
என்கிறாள் சன்னமாக.

யாரும் பார்பதற்கு முன்
வீட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்
கண்ணீர் சிந்தினால்
நாடோடிகள் சொந்த நிலத்தை வேண்டுவது
வரலாற்றுப் பிழை என்பார்கள்.

என் செந்நிலமே
பபூன் வேடம் தரித்திருந்த எங்களின் தலைகளை துண்டாக்கி
நிலவடியில் மாட்டிவிட்டு வெளியேறுகிறோம்
இனி கடந்த காலம் புதையுண்ட முதுமொழியாகும் .

2

நீலசயனம்

அம்மாவிடமிருந்து திரிந்த முலைப்பாலை அருந்திய நாள் முதல்
அவளுக்கு பித்தம் தலைக்கேறியது
ஒரு மத்யானம் வீட்டை விட்டு வெளியேறினாள்.

தாமரைக் குளத்தில் அல்லிமலர்கள் பூத்திருந்தன
கூந்தல் முடிகளை பிய்த்தெடுத்து நூலாக்கி
அல்லிகளை மாலையாகத் தொடுக்கிறாள்.

மலர்களிலிருந்து எட்டிப்பார்த்த சர்ப்பத்திற்கு
மாத்திரைகளை விழுங்கக்கொடுத்து,
“பைத்தியமாகிவிடாதே எல்லாம் சரியாகிவிடும்” என தலைகோதி சயனத்தில் ஆழ்த்தி,
சர்ப்பத்தின் உள்நாக்கு நீலத்தை ருசித்து வண்ணமாகிறாள்.

“மயிலின் தோகையென விரிந்த உடலில் நீல நடனம் அரங்கேறுகிறது”

அம்மாவின் எழுத்து இயந்திரத்தில் இன்னொரு கவிதை பிறந்தது.

இப்படித்தான்
தினம் தினம் தான் வளர்க்கும்
மலைப்பாம்பின் வயிற்றுக்கு
அவளை இரையாக்குவதும்
பின் அதன் வாய்க்குள் கையை நுழைத்து
அவளை வெளியே இழுப்பதுமாக
பெரும் விளையாட்டை 25 ஆண்டுகளாக
அம்மா விடாது செய்கிறாள்.

3

அன்னமிடுதல்

என் கனவுகளில் குதிரைகளின் உடல்கள் துண்டாக்கப்படுகின்றன
என்றேன் பாட்டியிடம்

“ஒரே கனவா” எனக்கேட்டாள்
இல்லை வெவ்வேறு கனவுகள் வெவ்வேறு குதிரைகள் என்றேன்.

” மாமிசங்களை துண்டாக்கி காயவை” என்றாள்

குதிரை மாமிசம் உண்ணக் கூடாதில்லையா எனக் கேட்டேன்

“அது உனக்கல்ல உன் கனவுகளுக்கு” என்றாள்

இப்படித்தான் தொடங்கியது
கனவுகளில் கண்டதையெல்லாம் மாமிசமாக்கி
உப்பிட்டு கனவுகளுக்கு உணவிடுவது.

4

அழிக்கத் தெரியாத ரப்பர்

நிறுத்தி நிறுத்தி அழும் காயம்பட்ட சிறுமியைப்போல்
சூரியன் விட்டுவிட்டு ஒளிர்ந்தது.
என்னதான் நடக்கிறதென
என்றோ மூடப்பட்ட என் சாளரத்தை திறந்து பார்த்தேன்
எதிர் திசையில் மண்சுவரில் படர்ந்திருந்த பூசணிப் பூக்கள்
வெயிலில் ஒரு மாதிரியும்
வெயிலற்ற பொழுதில் ஒரு மாதிரியுமாய் நிறம் கொண்டிருந்தன.

முன்பு அங்கொரு வீடிருந்தது
அங்கே துணிக்கு அடியில் தாழம்பூ மணக்கும்
அம்மாவின் தகரப்பெட்டி இருந்தது
அதில் ஒரு சின்ன நெளிவு
அவளின் முடிக்கற்றையைப் போல அவ்வளவு அழகாக.

வாரத்திற்கொருமுறை
அம்மா ஏற்றும் அகல்விளக்கு ஒளி நிழல்களில்
கருமையாய் படிந்திருந்தன எங்களின் லட்சம் துயர்கள்
வீட்டுப்பாடங்களை எழுதும்போது,
ஆப்பிள் வாசனை வரும் பென்சில் அழிப்பான்களால்
அவற்றை அழித்தோம்.
ஆனால் அம்மாவின் துயர் மட்டும்
ஆப்பிள் வாசனையோடு மிஞ்சிப்போனது.

சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்.

தமிழ் விக்கியில் 

2 Comments

  1. ஆழ்மனதின் காட்சி படிமங்களை கிளறும் படியான கவிதைகள் , அழிக்கத் தெரியாத ரப்பரும், நீலச்சயனமும் உச்சம் நன்றி

  2. மிகவும் நுட்பமான வரிகளால் பின்னப்பட்டக் கவிதைகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.