கடந்த சில தசாப்தங்களில் இல்லாத விதத்தில் உலகம் மாறிவிட்டதாக பெருந்தொற்று தீவிரமடைந்த நாட்களில் தோன்றியது. போர்கள், மதச்சண்டைகள், பஞ்சங்கள், இயற்கைச் சீற்றங்கள் வரிசையிலான பேரழிவுகளில் ஒன்றாகவும் ஏக உலகத்தையும் ஒரே தருணத்தில் புரட்டிப்போட்ட துரதிரஷ்டமான நிகழ்வாகவும் பெருந்தொற்று இருந்ததே இதற்குக் காரணம்.
பாகுபாடுகளை நடைமுறையில் வைத்துக்கொண்டு அவை வழக்கிலேயே இல்லை என்ற தினசில் பேசுவதே நம்முடைய இயல்பு. நாடு, மதம், இனம், மொழி, சாதி, குலம் என்று கண்ணுக்குத் தெரிந்தவையோடு தெரியாமல் புழங்கும் இன்ன பலவும் பெருந்தொற்றுக்கு முன்னால் அர்த்தமற்றுப் போய்விட்டன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறைந்தபட்சம் சிறு மாற்றமாவது நிகழ்ந்துவிட்டது. துயரங்களும் பாதிப்புகளும் தனிக்கணக்கு.
பேரழிவு என்றாலும் உலகம் சீக்கிரம் இதையும் மறந்துவிடும்போலத்தான் தெரிகிறது. உலகம் இயங்கி முன்னகர்வதால் இந்த மறதி தவிர்க்கமுடியாது. ஒருவகையில் நல்ல விஷயமும்கூட. என்னைப் பொறுத்தவரை பெருந்தொற்று பெரியதொரு உண்மையைப் போதித்தது, பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் எப்படி இறப்பு சாஸ்வதமோ அதேபோல் தன்னுயிரைக் காத்துக்கொள்வதில் ஒவ்வொரு உயிருக்கு இருக்கும் உரிமையும் சாஸ்வதமானது.
மானுடம் திரளும்போது தோன்றும் ஆற்றலும் அறிவும் அளவிடமுடியாதது. மனிதர்கள் தங்கள் சகல ஆற்றலையும் திரட்டி இரண்டு அலைகளோடு போராடி பெருந்தொற்று கட்டுப்படுத்தபட்டு பழைய வழக்கம் திரும்பியபின் உலகம் அப்படியொன்றும் மாறிவிடவில்லை, அது எப்போதும்போலத்தான் இருக்கிறது என்று கண்டேன். மாறியதாக நினைத்தது என் பாவனைதான். உலகம் மாறியதோ இல்லையோ, குறைந்தபட்சம் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் நான் மாறிவிட்டேன்.
பெருந்தொற்றின் தொடக்கத்தில் பொதுமுடக்கத்தாலும் மென்பொருள் துறையில் புதிய வழக்கமாக அறிமுகமான வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையினாலும் லட்சக்கணக்கானவர்களைப் போல நானும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கே போய்விட்டேன். மகள் பிறந்து அப்போதுதான் வருஷமாகியிருந்தது. அவளது வருகைக்காக திருமணமாகி நாங்கள் ஆறாண்டுகள் காத்திருந்தோம். சொந்த ஊரில் வீட்டிலிருந்தே பணியாற்றுவதால் அவளோடு அதிகநேரம் செலவிட முடிந்தது. தினமும் சிறுகை அளாவிய கூழ் கிடைத்தது. குழந்தையின் பாவனைகளும் விளையாட்டுக்களும் ஸ்பரிசமும் எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுத்தன.
என்னுடைய பத்துவயதுக்குப் பிறகு ஊரில் மூன்று மாதங்களுக்கு மேற்பட்டு தொடர்ச்சியாக வசித்ததில்லை. படிப்பின் காரணமாக இளம்பிராயம் விடுதிகளில் கழிந்திருந்தது. மென்பொருள் வேலையினால் பெங்களூரு, சென்னை, சில வெளிநாடுகள் என்று ஒரு சுற்று வந்துவிட்டேன். உறவுகளின் விசேஷங்களுக்குச் செல்வது தொலைவினாலும் பயணச்சிரமங்களாலும் பெரும்பாலும் தவறிவிடும். இந்த இரண்டரை வருஷத்தில் அந்தக் குறையை சற்றே தணிக்க முடிந்தது.
மக்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் விசேஷங்கள் தொடங்கியபின் பட்டுப்போயிருந்த உறவுகளைத் தழைக்க வைத்துவிடும் முயற்சியிலிருந்தேன். அம்மாவின் வகையறாவில் பெரியம்மா மற்றும் சின்னம்மாவின் பெண்களென ஏழெட்டுச் சகோதரிகள் உண்டு. மகள் பிறந்தபின்னரே தாங்கள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரிவதாக அவர்கள் ஈவிரக்கமின்றி குத்திக்கட்டினார்கள். அது உண்மையென்பதால் அவர்களுடைய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்.
உலகம் எவ்வளவு சுருங்கிவிட்டது என்பது புதிய வழக்கத்தின் மூலம் புரிந்தது. எங்கோ ஒரு கிராமத்துத் தோட்டத்தில் கதிவேலிகள், மயில்கள், கிளிகள் எனப் பறவைகளின் குரல்களைக் கேட்டுக்கொண்டு ஐரோப்பியர்களுடன் உரையாடுவதை தகவல் தொழில்நுட்பம் சாத்தியமாக்கிவிட்டது. நியூயார்க் உலகின் நவீன நகரம். ஆனால் இன்றைக்கு உலகின் நியூயார்க் என்பது மெய்நிகர் உலகம்தான். தொழில்நுட்பம் புதிய தொன்மம்.
முந்தைய மாதங்களில் மனைவியும் பாப்பாவும் ஊரிலிருக்க வாரயிறுதிகளில் ஊருக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். வரிசையாக எல்லா வாரங்களுக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸில் பதிவு செய்திருந்தேன். பெருந்தொற்றின் ஆரம்பப் பதற்றங்கள் பரவத்தொடங்கி முகக்கவசமும் சமூக இடைவெளியும் அன்றாடத்தில் நுழைந்திருந்தன. ஊருக்குச் செல்வதற்குப் பதிவு செய்திருந்த 2020, மார்ச் 22 ஆம் தேதியானது எனக்கு அதிர்ஷடவசமாக பெருந்தொற்றின் பொருட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதற்கு முந்தைய நாளாக அமைந்துவிட்டது.
மனித ஆற்றலின் வலிமையைப் புரிந்துகொள்வதற்கான சாட்சியங்களை பெருந்தொற்று ஏற்படுத்திய அதேநேரத்தில் வாழ்க்கையைக் குறித்த அபத்தச் சித்திரங்களையும் அது காட்டியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடக்க முயன்றதும் இரண்டாவது அலையின்போது மருத்துவமனைப் படுக்கைக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தை உருவானதும் நாம் அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் முன்னேற்றத்தை கேள்விக்குள்ளாக்கியவை.
சமூகத்தின் இன்பதுன்பமும் நம்முடையதோடு சேர்த்திதான். மனநிலை பிறழ்ந்தால்தான் சமூகத்திற்கு முழுமையாக முகந்திருப்பிக்கொள்ளமுடியும். இப்படியான தருணங்களில் மனதுக்குள் துயர்கவிந்து அது இருண்மைக்குள் கிடந்தது. ஓசூரில் இருந்த என் நண்பன் சுகுமார் சாவின் விளிம்புவரை சென்று மரண வாக்குமூலம் போல் ஒன்றை எனக்கு வாட்ஸ்ஏப்பில் அனுப்பியதைக்கண்டு இரண்டு நாட்களுக்கு உயிரும் மனமும் முடங்கிவிட்டன. பேரியற்கையின் கிருபையினால் அவன் பிழைத்துவிட்டான். மனிதர்களின் கற்பனையான பிம்பங்களையும் மதிப்பீடுகளையும் சுக்குநூறாகச் சிதைத்த எத்தனையோ சம்பவங்களை கொரோனா காலத்தில் அறிய நேர்ந்தது.
தனிமனிதர்களுடைய இன்பதுன்பங்களின்பொருட்டு உலகம் நின்றுவிடுவதில்லை. அது தன்போக்கில் இயங்கும். இதை எதிர்மறையாகப் பார்க்கவிரும்பவில்லை. நிழலைப்போலவே நம் நிலையாமையும் நம்மைப் பின்தொடர்கிறது. அதன் மெல்லிய மூச்சுக்காற்றை அவ்வப்போது பின்கழுத்தில் உணர நேரிடுவதிலிருந்து எவரும் தப்பமுடியாது. ஆனால் அதன்பொருட்டு இந்த வாழ்க்கையை துக்கப்பூர்வமானதாக அனுஷ்டிக்கமுடியாது. நித்ய காலத்துக்கும் நாம் வாழ்வோம் என்ற பாவனைதான் நம்மை பல சிக்கல்களிலிருந்து விலக்கி வைக்கிறது.
***
பழைய வழக்கம் திரும்பத்தொடங்கிய நாட்களில் அலுவலகத்துக்குத் திரும்பும்படி நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. திரும்பவும் சென்னைக்கு இடம்பெயரவேண்டும். வங்கிக்கடனில் ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கும்படி பலவருஷங்களாக பலரும் காதில் ஓதினாலும் எனக்கு அதில் பிடிப்பு வரவில்லை. கடன் என்பது சுத்தமாகப் பிடிக்காது. பெரிய சுமை. ஆனால் அப்படியொன்றை வாங்கிப்போட்டிருந்தால் இப்போது செளகரியப்பட்டிருக்கும்.
கொரோனா தொடங்கிய நான்குமாதங்களில் வீட்டைக் காலி செய்துவிட்டிருந்தேன். மாதம் பதினைந்தாயிரம் வாடகை. காலி செய்கிறேன் என்றபோது வாடகையில் மூன்றாயிரம் குறைத்துக்கொள்கிறேன் என்றார் வீட்டுக்காரர். பாதி வாடகை என்றால் தொடர்கிறேன் என்றேன். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததால் இ-பாஸ் வாங்கிக்கொண்டு ஆரோக்கிய சேதுவோடு கோயமுத்தூரிலிருந்து விமானம் ஏறினேன். தரையிறங்கியபோது நீலநிறத்தில் கையில் அடிக்கப்பட்ட முத்திரை ஏற்படுத்திய வினோத உணர்வோடு வேளச்சேரிக்கு டாக்ஸியில் வந்தேன். நான்கு மாதங்களாகத் திறக்கப்படாத வீட்டிற்குள் லேசான தூசிப்படலமும் காற்றோட்டமின்மையினால் புழுக்கமான வாசனையும் நிறைந்திருந்தன.
மூன்றுநாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சுகாதாரத் துறையிலிருந்து வந்து சுவரில் நோட்டீஸ் ஒட்டிப்போனார்கள். அதையெல்லாம் பின்பற்றும் பொறுமையில்லை. வந்தவுடன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் பேசிவிட்டேன். சமையல் எரிவாயு இணைப்பை மாற்றுவதற்காக தேனாம்பேட்டை போகவேண்டியிருந்தது. சமூக இடைவெளி என்பதெல்லாம் வெறும் தாளில்தான். வெளியே போய்விட்டு வரும்போதெல்லாம் தொற்றின் பயத்தில் குளித்துவிடுவேன். மூன்றுநாட்களில் பொருட்களையும் என் யுனிகார்ன் பைக்கையும் ஊருக்கு அனுப்பிவிட்டேன்.
கோயமுத்தூருக்கு திரும்பவும் இ-பாஸ். பரிசோதனை மாதிரி எடுத்துக்கொண்டு ஒருநாள் விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் தொற்று இருந்தால் இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் அழைப்பு வரும். விமான நிலையத்தின் அருகிலிருந்த நட்சத்திர விடுதியில் அறை எடுத்துக்கொண்டு ஆன்மப் பரிசோதனை செய்தவாறு ஒருநாள் அமர்ந்திருந்தேன். வீட்டுக்குத் திரும்பியபின்னும் மூன்றுநாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன். பயம் முழுமையாக விலக ஒருவாரம் ஆனது.
வீட்டிலிருந்து பணியாற்றும் முறை முழுமையாக நடைமுறைக்கு வந்து ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டால் எவ்வளவு செளகரியம் என்ற என் நப்பாசை பலிக்கவில்லை. நிர்வாகப் படிநிலையில் இடைநிலையில் இருக்கிறேன். மூத்தவர்கள் தினமும் அலுவலகம் வந்தால்தான் பெரும்பான்மையான இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்ற நிறுவனத்தின் அறிவுறுத்தலால் சென்னைக்குத் திரும்புவதை பிறகும் தாமதப்படுத்தமுடியவில்லை.
தற்காலிகமாகத் தங்குவதற்கு முதலில் ஒரு இடம் தேவை. நண்பர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள். நண்பர்களின் நண்பர்கள் என்று விசாரித்துப் பார்த்தும் பயனில்லை. பேயிங் கெஸ்ட் விடுதிதான் ஒரே வழியாக இருந்தது. அலுவலகம் ஓஎம்ஆர் சாலையில் இருக்கிறது. அடுத்தவருஷம் பாப்பாவை பள்ளியில் சேர்க்கவேண்டும். அடையாறு, திருவான்மியூர் என்றெல்லாம் யோசித்து கடைசியில் சோழங்கநல்லூரில் வீடு பார்ப்பது என்று முடிவானது. துரைப்பாக்கத்தில் மூன்று நட்சத்திர விடுதியில் மூன்று நாட்களுக்கு அறை முன்பதிவு செய்துவிட்டு பைக்கை பார்சல் சர்வீஸில் அனுப்பிவிட்டு சென்னைக்கு வந்தேன். என் குதிரையில் அலைந்து மூன்று நாட்களுக்குள் அறை பிடிக்கவேண்டும்.
சோழங்கநல்லூரில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலனவை அடைசலானவை. சுகாதாரக் குறைவானவை. உயர்தரமாக இருந்த விடுதிகளில் குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களேனும் தங்கவேண்டுமாம். என் தேவையோ இரண்டு மூன்று மாதங்கள்தான். இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட விடுதிகளைப் பார்த்தும் எதுவுமே பிடிக்கவில்லை. நீண்ட வேலைநேரங்கள் மற்றும் சுதந்திரத்தைக் கருதி தனியறை எடுப்பதே என் தீர்மானமாக இருந்தது. முற்றிலும் புதியவர்களோடு அறையைப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை மாறிவிட்டது. நம் செளகரியங்கள் நமக்கு முக்கியமானவை.
கடைசியில் ஆவின் வளாகத்திற்கு எதிரில் புதிதாகத் தொடங்கப்பட்ட நெல்லூர் பாணியிலான மூன்று தளங்கள் கொண்ட விடுதியின் தரைத்தளத்தில் அறையைப் பிடித்தேன். வாடகை மற்றும் உணவோடு சேர்த்து மாதம் பதினான்காயிரம். இருவர் பகிர்ந்துகொள்ளும் அறைக்கு ஆளுக்குப் பத்தாயிரம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். தனியறையாகக் கொடுத்தால் ஆறாயிரம் இழப்பு. மேனேஜர் ரொம்பவும் யோசித்தான். இதுவும் அமையாதுபோல என்று கிளம்பியபோது இருங்கோ ஸார் என்று சொல்லி அறையைக் உறுதியாக்கினான். வாரநாட்களில் இருவேளை மற்றும் வாரயிறுதிகளில் மூன்றுவேளை உணவு, ஏஸி, கட்டில், அலமாரி, அட்டாச்சுடு பாத்ரூம், கெய்ஸர், ஒவ்வொரு தளத்துக்கும் இரண்டிரண்டு வாஸிங் மெஷின், ஒரு ஃப்ரிட்ஜ் மற்றும் இலவச வைஃபை என்று இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. ஒரு ஆளுக்கு நல்ல செளகரியம்.
இனி சீக்கிரத்தில் ஒரு வீட்டைப் பார்த்து முடிவு செய்யவேண்டும். என்னதான் காலையும் மாலையும் வாட்ஸ்ஏப் அழைப்பில் பாப்பாவைப் பார்த்தாலும் அது நேரில் அள்ளி அணைப்பதற்கு ஈடாகாது என்று வாரயிறுதிகளில் வீடு தேடுவதற்குப் பதிலாக திரும்பவும் ஊருக்கு ஓடிவிட்டேன். அங்கேயே ஒருவாரத்திற்கு தங்கிவிடுவதுமுண்டு. பிறகு என்னையே நான் முதுகில் பிடித்துத் தள்ளிக்கொண்டுதான் சென்னைக்குத் திரும்பவேண்டும்.
ஹாஸ்டலில் பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் ஆந்திரா இளைஞர்கள். இனியொருபோதும் மீளாத இருபதுகளின் பொற்காலம் மீதான ஏக்கத்தை அவர்களும் அவர்களுடைய பைக்குகளும் அவர்களின் பொருட்டு தெருவில் தென்படும் இளம் யுவதிகளும் ஏற்படுத்தினார்கள். பூமியில் எந்தவொரு உயிரும் இளமையின் சாஸ்வதத்திலேயே தங்கிவிடமுடியாது என்ற உண்மையின் வீச்சில் எனக்கான ஆறுதலை நான் அடந்துகொண்டேன்.
இடையில் திடீரென அலுவலகச் சிக்கல் தோன்றிவிட்டது. பெருந்தொற்றுச் சூழலால் தொழில்துறைகளெங்கும் மென்பொருளின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அதில் முதலீடுகள் பெருகின. அந்த முதலீடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கின. சந்தையில் திறமைக்கான தேவை பெருகி அது மென்பொருள் துறையில் பெரும் ராஜினமா அலைக்கு வித்திட்டது. எழுபது, எண்பது ஏன் சில சமயங்களில் நூறுசதவீத சம்பள உயர்வோடு ஆட்களைப் பிடித்தார்கள். எனக்குக் கீழான பல அணிகளில் பனிரெண்டு பேர் கொண்ட ஒரு முக்கியமான அணியில் ஒரே மாதத்தில் எட்டுப்பேர் ராஜினாமா செய்துவிட அந்த அணி முடிக்கவேண்டிய முக்கியமான டெலிவரியில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.
ராஜினாமா செய்தவர்களிடம் வேலை வாங்குவது எவ்வளவு சிரமமென்று துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். அதுவும் எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். அலுவலகத்திற்கு திரும்பச்சொன்னால் உடனடியாக வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். எவரிடமும் மனம் கோணும்படி பேசிவிடமுடியாது. சமாளித்து இழுத்துப் போகவேண்டும். பின்னிரவுகள் வரை வேலை நீளும். தலைமை நிர்வாகிகளுக்கு அதிகாலையில் நிலைவிவர மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கப் போவேன்.
வாரயிறுதிகளில் அணியினர் ஒவ்வொருவரின் நேரத்தையும் கெஞ்சிக்கேட்டு உறுதிப்படுத்தி வேலையை முன்னகர்த்த வேண்டும். முன்பைப்போல் ஒரே அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் சூழல் இருந்திருந்தால் அறுபது எழுபது சதவீத தாமதத்தைத் தவிர்த்திருக்கமுடியும். இந்த அணியில் உள்ளதைப்போல அசாதரணமான சூழல் நிலவுமிடத்தில் மூர்க்கமாக பேசி வேலை வாங்கமுடியாது. அசாத்திய பொறுமையும் ஸ்டாய்க் மனநிலையும் வேண்டும். என் பதினேழு ஆண்டுகால மென்பொருள் துறை அனுபவத்தில் நான் கையாண்ட அசாதாரணமான சூழ்நிலை. சிக்கலை ஒருவழியாகத் தீர்த்தபோது மேலும் ஒன்றரை மாதங்கள் கழிந்திருந்தது.
கல்வியாண்டு தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கிற நிலையில் சில பள்ளிகளில் அட்மிஷன் முடியத்தொடங்கிவிட்டது. எனவே வீடு தேடுதலில் முனைப்பானேன். மரங்கள் அடர்ந்த சுத்தமான தெரு, காற்றோட்டம், கார் பார்க்கிங் மற்றும் மழைநீர் தேங்காத இடம் என்பது என் விருப்பம். வாடகை கொடுக்கத் தயாராக இருந்தாலும் அப்படியொரு இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது.
பெரிய அப்பார்ட்மெண்ட்களில் வீடு பார்க்க விருப்பமில்லை. உயரம் என்றால் பயம். அதையும் மீறி பார்த்த சில அப்பார்ட்மெண்டுகள் மனதுக்குப் பிடித்தாலும் நடை தெற்குப் பார்த்து இருந்தது. தெற்கு நடையுள்ள வீடுகள் ஆகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். இன்னும் சில அப்பார்ட்மெண்டுகளில் நவீன வசதிகள் இருந்தாலும் செல்லும் வழியெல்லாம் தெருக்கள் குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தன. துரைப்பாக்கத்தில் இருந்து சிறுசேரி வரை அலைந்ததில் ஒவ்வொரு அடி நிலத்தையும் காசாக்க முனையும் மனிதர்களின் பொருளியல் எத்தனங்கள் வெளிப்படையாகவே தெரிந்தது.
அந்த சனிக்கிழமை முற்பகலில் வீடுதேடி அலைந்துவிட்டு சலிப்போடு திரும்பியவன் சர்வீஸ் ரோட்டிலிருக்கும் கடையில் டீ குடித்தவாறே சாலையில் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தப் பெண்ணும் சிறுமியும் வந்தார்கள். சிறுமிக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். போஷாக்குக் குறைவாய், ஒல்லியாய் இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது சொல்லலாம். தாயும் மகளும் என்பது ஜாடையிலிருந்தே தெரிந்தது. அவர்களுடைய கண்களில் ஈரம் உலர்ந்துபோய் அவை உணர்ச்சிகளற்று இருந்தன.
கையிலிருந்த சிறிய டிரம்ஸை தாய் தட்ட ஆரம்பிக்க சிறுமி ஒரு வளையத்துக்குள் தன் உடலை புகுத்தி எடுத்தாள். முன்னும் பின்னும் சில கரணங்கள் அடித்தாள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. வித்தையில் அனுபவமின்மை இருவரிடமும் புலப்பட்டது. நிச்சயமாக அவர்கள் தொழில்முறை கழைக்கூத்தாடிகள் அல்ல. சுற்றியிருந்தவர்கள் எவருமே சிறுமியின் வித்தைகளை பொருட்படுத்தவில்லை. சிறுமி நீட்டிய அலுமினியத் தட்டில் தாளோ நாணயமோ விழவில்லை.
என்னிடம் வந்தபோது பர்ஸைத் திறந்தேன். சில்லறையாக இல்லை. குறைந்தபட்ச தாளே இருநூறு ரூபாய்தான். கடைக்காரரிடம் சில்லறை வாங்கி பத்து ரூபாய் கொடுக்கலாம் என்ற யோசனையையும் மீறி ஏதோவொரு மன இளகலில் இருநூறு ரூபாய்த்தாளை அப்படியே போட்டுவிட்டேன். உணர்ச்சியற்று இருந்த சிறுமியின் கண்களில் மெலிதான் ஒளிக்கீற்று மின்னி மறைந்தது. தாயிடம் சென்று ரூபாயைக் கொடுத்துவிட்டு என்னைக் கைகாட்டினாள். அதே உணர்ச்சியற்ற பாவனையில் அந்தப் பெண் ரூபாயை தன் கைகளுக்குள் சுருட்டிக்கொண்டாள். அவர்கள் கிளம்புவதற்குத் தயாரானபோதுதான் அந்த ஒடிசலான தாடி இளைஞன் வந்தான்.
நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு நாலைந்து வயது இளையவன்தான். ஆனால் இடையிலிருந்த உடல்மொழி இருவரும் கணவன் மனைவி அல்லது சேர்ந்து வாழ்பவர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. அவன் அதட்ட அவள் முரண்டினாள். சிறுமி அடைக்கலம் கோரும் பாவனையில் தாயின் கால்களைக் கட்டிக்கொண்டிருந்தாள். அவன் சிறுமியை மூர்க்கமாக இழுத்துத் தள்ளி நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணை பளீரென அறைந்தான். டேய்… என்று என் மனதுக்குள் எழுந்த குரல் வாயில் எழும்பவில்லை. மறுபேச்சு பேசாமல் கையில் சுருட்டி வைத்திருந்த இருநூறு ரூபாயை நீட்டினாள். நான் கொடுத்தது. வாங்கிக்கொண்டவன் உறுமலாக மிரட்டிவிட்டு நகரந்தவனை தாயும் மகளும் உணர்ச்சியற்ற கண்களோடு பின்தொடர்ந்தார்கள்.
மதிய உணவுக்குப்பின் ஓய்வெடுத்துவிட்டு வெயில் தாழும் நேரத்தில் திரும்பவும் வீடு தேடலாம் என்பதுதான் அன்றைய திட்டம். ஆனால் சட்டென்று இருண்மை மனதைச் சூழ்ந்துவிட அறையில் முடங்கிவிட்டேன். அவர்கள் இருவரின் கோலம் மனதுக்குள் சலனங்களை எழுப்பிவிட்டது. அவர்களைப் பார்த்தால் புதிதாக வறுமைக்குள் வந்தவர்களைப் போலிருக்கிறது. எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் வாழ்க்கை என்ன? வீடு வாசல் ஏதேனும் இருக்குமா? கொரோனா காலத்தில் பிழைப்புக்கு என்ன செய்தார்கள்? சிறுமியின் எதிர்காலம் என்ன?
இதெல்லாம் உலகத்தில் வழக்கமாக இருப்பவைதானே? கடந்தகாலத்தில் கண்டும் காணாமலும் கடந்ததுதானே? கொடுக்க முடிந்த பொருளைக் கொடுத்தாயிற்று. இத்தனை வருஷங்களாக தோல் தடிப்பாகத்தானே இருந்தது. இப்போது ஏன் இப்படி அதிநாடகீயமாக யோசிக்கிறேன், என்னையே நொந்துகொண்டேன். கொடுத்த இருநூறும் சிறுமிக்குப் பயன்படாமல் போய்விட்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. என்ன செய்வான் தாடி? குடிப்பானா? கஞ்சா போடுவானா? ஆளையும் தோற்றத்தையும் பார்த்தால் குடிப்பவனாகத் தெரியவில்லை. ஒருவேளை சூதாடுவானோ? இருக்கலாம்.
மனசஞ்சலத்திலிருந்து விடுபட இன்று குடிக்கலாம் என்று நினைத்தேன். அடிக்கடி குடிப்பவன் அல்ல. இந்த அறைக்கு வந்தபின் வேலைப்பளு கொடுத்த களைப்பு மற்றும் தனிமையின் சுமை இவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள நான்குவருஷ இடைவெளிக்குப் பின்னர் மூன்றுமுறை சென்றிருக்கிறேன். விடுதியிலிருந்து நடக்கும் தூரத்தில் நட்சத்திர விடுதியில் பார் இருக்கிறது. நடந்தே போய்விட்டு வரலாம். இதமான சோபாக்களில் பொதிந்து தொந்தரவற்றுக் குடிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்.
குடிப்பதற்கு நட்சத்திர விடுதியென்றால் உணவுக்கு சாலையோர வண்டிக்கடை. சுவாரசியமான முரண்தான். அறைக்கு திரும்பும் வழியில் சர்வீஸ் ரோட்டில் இருக்கும் வண்டிக்கடை டிபனுக்கு அவ்வளவு பிரமாதமான சுவை. கல்தோசையும் கோழிக்குழம்பும் பிரமதமாக இருக்கும். விதவிதமான அசைவ தொடுகறிகள். இந்த நெல்லூர்க்காரர்கள் இரவிலும் சோற்றையும் பருப்பையும் சிலநாட்கள் கொட்டுவார்கள். அந்த நாட்களில் இரவுணவுக்கு வண்டிக்கடைக்கு வந்துவிடுவேன். என் வயிறும் ஏற்றுக்கொண்டுவிட்டது. என்னவொன்று, ஆர்டர் சொல்லி பத்துநிமிஷம் காத்திருக்கவேண்டும். அவ்வளவு கூட்டமாக இருக்கும். கறிவறுவல்கள் தீர்ந்துவிட்டாலும் கல்தோசையும் கோழிக்குழம்பும் கடைசிவரை குறைவுபடாமல் கிடைக்கும்.
குடிக்கப்போவதின் நினைப்பு ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் மனதுக்குள் இருண்மையுணர்வு முழுமையாகக் கரையவில்லை. ஒருவேளை தாடி இளைஞனின் இடத்தில் வாழ்க்கை என்னை வைத்திருந்தால் நானும் அவனைப்போல் இருந்திருப்பேனா? தெரியவில்லை. இல்லாத சாத்தியங்களைப் புனைந்து இல்லாத துயரங்களை ஏன் நான் கற்பனை செய்துகொள்கிறேன்? தலையை உலுக்கிக்கொண்டேன்.
சுகமான உலகத்தையே கற்பனை செய்ய விரும்பினேன். மாலை முழுக்கவும் இணையத்தில் மகிழ்ச்சியான காணொளிகளைப் பார்த்தேன். வாழ்க்கையின் மீதான பிடிப்புணர்வை இழக்காமலிருக்கவேண்டுமானால் அழகை விழையவேண்டும். அனுபவிக்கவேண்டும். அழகு எந்தவிதமான வடிவத்திலும் இருக்கலாம். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், வாழ்க்கை என்றால் இருட்டும் ஒளியும் இணைந்துதான் இருக்கும், தாங்கும் வலு இல்லாவிட்டால் வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை நீ பார்க்காதே. அப்படிப் பார்க்காமல் இருப்பதில் தப்பொன்றும் இல்லை. உனக்குமுன் வாழ்ந்துபோன லட்சக்கணக்கான மனிதர்கள் நீ கற்பனை செய்யவே முடியாத அளவிலான துயரத்தை அனுபவித்துப் போய்விட்டார்கள். ஏதோ, பேரியற்கையின் கிருபை உன்னை பத்திரமாக வைத்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நீ வெறும் பொக்கு. உன் உள்ளீட்டுக்கு ஏற்றவனாய் நீ இருந்துவிட்டுப் போவதில்லை எந்தத் தப்பில்லை.
விஸ்கியின் முதல் லார்ஜ் உள்ளே இறங்கியவுடன் மனதிலிருந்த இருண்மை விலகிவிட்டது. அரையிருள் அல்லது ஒளியினால் பதப்படுத்தப்பட்ட இருள். குறைவான கூட்டம். மெலிதான மேற்கத்திய இசை. நான்கைந்து இளம் பெண்கள் இருந்தார்கள். நால்வரில் தன் ஆண் நண்பனோடு வந்திருந்த பெண் பேரழகி. அவள் பொழுதுக்கு மெருகூட்டிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் பியர் அருந்துபவர்கள். நான் எப்போதுமே இறக்குமதி விஸ்கிதான் அருந்துவேன். அதைத்தான் என் உடல் ஏற்றுக்கொள்ளும். உள்ளூரில் எல்லாம் சாரமிழந்துவிட்டன. ஊரா இது? திரும்பவும் ஐரோப்பாவுக்குச் போய்விடவேண்டும். அங்கேயே செட்டிலாகிவிடவேண்டும். பத்தே முக்காலுக்கு வெளியே வந்தபோது மனம் உல்லாசமாக இருந்தது. சோழங்கநல்லூர் சாலை சனிக்கிழமை முன்னிரவுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.
வண்டிக்கடையில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. மூன்று கல்தோசை சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றபோது முற்பகலில் கண்ட மூவரையும் பார்த்தேன். ஷட்டர் இறக்கப்பட்டிருந்த கடையின் முன்னால் அந்தப் பெண் தலைகுத்தி அமர்ந்திருந்தாள். சிறிய டிரம்ஸும் துணிப்பையும் பக்கவாட்டில் கிடந்தன. சற்று தள்ளி அமர்ந்திருந்த தாடி சாலையை வெறித்துக்கொண்டிருந்தான். சிறுமி வண்டிக்கடையை நெருங்க நினைப்பதும் பின் விலகுவதுமாய் அலைபாய்ந்தாள். என்னை அடையாளம் கண்டுவிட்ட பாவனை தெரிந்தது.
எனக்கு கல்தோசை தயாராகி வந்தது. நாவில் எச்சில் ஊறியது. உண்ண நினைத்தவனுக்கு சிறுமியின் பார்வை இடறலூட்டியது. அவளை அழைத்தேன். அருகில் வந்தவளிடம் தட்டை நீட்டினேன். தயக்கத்தோடு வாங்கியவள் தன் அம்மாவிடம் போனாள். அவள் எதுவும் பேசாமல் தட்டை வாங்கி தோசையைப் பிய்த்து அவளுக்கு ஊட்டப் போகையில் சட்டென்று எழுந்த தாடி காலால் தட்டை எட்டி உதைக்க கல்தோசை தரையில் சிதறியது. எனக்குள் சுர்ரென்று ஒரு கோபம், இல்லை வெறி என்றுதான் சொல்லவேண்டும்.
நெருங்கி அவன் சட்டையை இழுத்து பளீரென அறைந்தேன். வாழ்க்கையில் நான் தாக்கும் முதல் மனிதன். அவன் இதை எதிர்பார்த்திருக்காவிட்டாலும் சுதாரித்தவனாய் என்னைத் திருப்பி அறைய முயற்சி செய்தான். ஆனால் என் உடல்வலு மற்றும் ஆல்கஹால் மூர்க்கத்தின் முன் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை. அவனுடைய முதுகில் நான்கைந்து குத்துக்கள் விட்டேன். எழுந்து மட்டும் நின்றிருந்தாளோ ஒழிய அந்தப் பெண்ணிடம் வேறு சலனம் எதுவுமில்லை. மெல்லிய அழுகையோடு அந்தச் சிறுமி என் கால்களைப் பிடித்து பின்னால் இழுத்தாள். வேறுவழியின்றி அவன் மீதான பிடியைத் தளரவிடும்போது என் முகத்தில் காறித்துப்பிவிட்டுச் சொன்னான்.
“வுடறா தேவிடியாப் பையா”
எச்சிலின் அருவெறுப்பு எனக்குள் திரும்பவும் வெறியை மூட்டிவிட்டது. கண்மண் தெரியாமல் அவனைத் தாக்கத் தொடங்கினேன். அவன் இப்போது நிஜமாகவே பயந்துவிட்டான். அவனுடைய முதுகெலும்பின் திமிறல் மறைந்துவிட்டது. தரையில் சரிந்து விழுந்தான். மூச்சு வாங்க நின்றிருந்தபோது சிறுமி என்னை நோக்கி எதையோ வேகமாக வீசினாள், நெற்றியில் சுளிரென்ற வலி. கண்களில் பூச்சிகள் பறந்தன. கூரிய கருங்கல்லால் என்னை அடித்திருந்தாள். நெற்றி கிழிந்து வழிந்த ரத்தம் வலது புருவ முடிகளில் பரவியது. தள்ளாடியபடியே எழுந்த நின்ற தாடியின் கால்களைப் பின்னாலிருந்து கோர்த்துக்கொண்டு என்னைப் பார்த்தாள். எதனோடும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் அந்தப் பெண் சிலையாகவே இன்னும் உறைந்திருந்தாள்.
“இன்னா சார் நீ? கம்முனு சாப்ட்டுட்டுப் போகாமா, அதுக லெவலுக்கு எறங்கீட்டு” யாரோ சொன்னதைக் கேட்டு சுயநினைவுக்கு மீண்டபோது என்னை நினைத்தும் என் வன்முறையுணர்வை நினைத்தும் மனங்கூசிவிட்டேன். அந்த இடத்திலிருந்து நகரவிரும்பினேன். கர்ச்சீபை எடுத்து ரத்தத்தைத் துடைத்தவாறு அந்தச் சிறுமியை பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் அவளுடைய கண்களில் மின்னிய உணர்ச்சிகளை வாழ்க்கையின் இறுதிவரை மறக்கமுடியாது. எவ்வளவு பெரிய உண்மையை நீ எனக்கு உணர்த்திவிட்டாய், மகளே!
***
குணா கந்தசாமி
சிறுகதை ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படும் 'குணா கந்தசாமி' சமகாலத்தில் பல்வேறு மதிப்புரை கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை, புலியின் கோடுகள், உலகில் ஒருவன், மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் ஆகிய நூல்ககளின் ஆசிரியர்.