/

முட்டை : ஆண்டி வியர்

தமிழில் : ராம்பிரசாந்த்

நீ வீட்டுக்கு போகிற வழியில் இறந்துவிடுகிறாய்.

அது ஒரு கார் விபத்து. விஷேஷமாக சொல்லிக் கொள்ளும் படி இல்லையென்றாலும் அது உயிர்சேதத்தை விளைவிக்கத் தவறவில்லை. நீ உன்னுடைய மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்துவிட்டாய். வலியில்லாத ஒரு மரணம். அவசர சிகிச்சை மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை., நல்ல காலம் நீ இறந்துவிட்டாய், ஏனெனில் உன் உடல் அவ்வளவு மோசமான நிலையில் சுக்குநூறாக சிதலமடைந்திருந்தது.

நீ அப்பொழுது தான் என்னை சந்தித்தாய்.

“என்ன…என்ன நடந்தது?” நீ கேட்டாய். “நான் எங்கே இருக்கிறேன்?”

“நீ இறந்துவிட்டாய்,” நான் உணர்ச்சியற்று சொன்னேன். நாசூக்காக பேசுவதில் பயனில்லை.

“ஒரு… ஒரு டிரக் எதிரே வந்தது. பிறகு அது  சரிந்தது…”

“ஆமாம்,” நான் சொன்னேன். 

“நான்…நான் இறந்துவிட்டேனா?”

“ஆம். அதற்காக வருத்தப்படாதே. எல்லோரும் ஓர் நாள் இறப்பவர்கள் தான்” நான் சொன்னேன்.

நீ சுற்றும் முற்றும் பார்த்தாய். வெறுமை மட்டுமே இருந்தது. நீயும் நானும் மட்டும் இருந்தோம். “இது என்ன இடம்?” நீ கேட்டாய். “இது தான் இறப்பிற்கு பிறகான வாழ்க்கையா?”

“கிட்டதட்ட,” நான் சொன்னேன்.  

“நீங்கள் கடவுளா?” நீ கேட்டாய்.

“ஆம்,” நான் பதிலளித்தேன். “நான் கடவுள் தான்.”

“என்னுடைய குழந்தைகள்… மனைவி?” நீ சொன்னாய்.

“அவர்களுக்கு என்ன?”

“அவர்கள் நன்றாக இருக்கிறார்களா?”

“அதை பார்க்கத்தான் நானும் விரும்புகிறேன்,” நான் சொன்னேன். “சற்று முன்பு தான் இறந்திருக்கிறாய். ஆனாலும் உன் முதல் கவலை உன் குடுமபத்தை பற்றியதாக இருக்கிறது. ஆஹா, உனக்கு தான் எவ்வளவு பாசம்!”

நீ என்னை வியப்புடன் பார்த்தாய். உனக்கு என்னைப் பார்த்தால் கடவுளைப்போல் தோன்றவில்லை. யாரோ ஒருவரைப் போல் தெரிகிறேன். ஒரு பெண்னாகக் கூட இருக்கலாம். தோராயமாக நான் ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும். நான் நிச்சயம் எல்லாம் வல்ல கடவுளைப்போல இல்லாமல் ஒரு  பள்ளிக்கூட ஆசிரியரைப் போல உனக்கு தெரிந்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே,” நான் சொன்னேன். “அவர்கள் நன்றாக இருப்பார்கள். உன் குழந்தைகள் எல்லா விதத்திலும் சிறந்த தந்தையாகவே உன்னை நினைவில் கொள்வார்கள். உன்மேல் அவமதிப்பு உருவாகும் பருவத்தை அவர்கள் இன்னும் அடையவில்லை. உன் மனைவி வெளியே அழுதாலும், உள்ளுக்குள் ரகசியமாக நிம்மதியடைவாள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், உன் திருமண வாழ்வு முறியும் தருவாயில் தான் இருந்தது. உன் மனைவி அவள் உணரும் நிம்மதியினால் குற்ற உணர்ச்சி கொள்வதுதான் இதில் ஆறுதலான ஒரே விஷயம் .”

“ஓ,” என்றாய் நீ. “அடுத்தது என்ன? சொர்க்கதிற்கோ, நரகத்திற்கோ அல்லது அதுபோன்ற ஒரு இடத்திற்கு நான் செல்வேனா?”

“இரண்டுமே இல்லை,” நான் சொன்னேன். “நீ மறுபிறவி எடுக்கப்போகிறாய்.”

“ஆகா,” நீ சொன்னாய். “அப்படியென்றால் இந்துக்கள் சொன்னது சரிதான்”

“எல்லா மதங்களும் அவர்கள் வரையில் சரி தான்” என்று நான் சொன்னேன். “என்னுடன் நடந்து வா.”

நீ என்னைப் பின்தொடர, நாம் அந்த வெறுமையில் நடந்து சென்றோம். “நாம் எங்கே செல்கிறோம்?”

“குறிப்பாக எங்குமில்லை,” நான் சொன்னேன். “பேசியவாறே ஒரு நடை சென்றால் நன்றாக இருக்கும் அல்லவா.”

“எனில் இதிலுள்ள விஷயம் என்ன?” நீ கேட்டாய். “நான் மறுபிறவி எடுக்கும் போது என் இப்போதய ‘நான்’ என்னும் நிலை முற்றிலும் அழிந்து, ஒரு குழந்தையாக இருப்பேன் இல்லையா? . இந்த வாழ்கையில் நான் செய்த எல்லா செயல்களும், அனுபவமும் அப்போது அவசியமில்லாமல் போய்விடும் இல்லையா?”      

“அப்படி இல்லை!” நான் சொன்னேன். “உன்னுடைய முந்தைய பிறவிகளின் ஒட்டுமொத்த அறிவும் அனுபவமும் உனக்குள் இப்போதும் உள்ளது. அவையெல்லம் தற்சமயம் உனக்கு ஞாபகத்தில் இல்லை, அவ்வளவு தான்.”

நான் நடப்பதை நிறுத்திவிட்டு உன் தோள்களை பற்றி முன்நிறுத்தினேன். “நீ கற்பனை செய்ய்ய முடியாத அளவு உன்னுடைய ஆத்மா பிரமாண்டமானது, அழகானது, பெரியது. உன்னில் ஒரு சிறு பகுதியைத் தான் ஒரு மனித சித்தத்தால் தேக்கிக் கொள்ள முடியும். ஒரு தண்ணீர் குவளையில் விரலை விட்டு அது சுடுகிறதா, குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பதைப்  போன்றது. உன்னில் ஒரு சிறு பகுதியைத்தான் நீ அந்த கலத்தில் பெற்றுக் கொண்டாய். அங்கிருந்து மீண்டும் இங்கு வரும் போது அந்த கலத்தில் இருந்து கிடைத்த எல்லா அனுபவங்களையும் கூடுதலாக நீ சேர்த்துக் கொள்கிறாய்.”

“கடந்த 48 வருடங்களாகத்தான் நீ ஒரு மனிதனில் இருந்திருக்கிறாய். அந்த காலத்திற்குள் மேலும் விரிவடைந்து உன் விலாசமான பிரக்ஞையின் எஞ்சிய பெரும்பகுதியை உன்னால் உணந்துகொள்ள முடியவில்லை. அங்கு இன்னும் போதுமான காலம் இருந்திருந்தால் உன்னுடைய எல்லா ஞாபகங்களும் உன் நினைவிற்கு வரத் தொடங்கியிருக்கும். எனினும் அதை இரண்டு பிறவிகளுக்கு நடுவே செய்வதில் எந்த பிரயோஜனமுமில்லை.”

“அப்படியானால் நான் எத்தனை முறை மறுபிறப்பு எடுத்திருக்கிறேன்?”

“நிறையவே. ஏகப்பட்ட முறை. அதிலும், வெவ்வேறு உயிர்களாய்.” நான் சொன்னேன். “இம்முறை, நீ கி.பி. 540-இல் ஒரு சீன விவசாயப் பெண்ணாக இருக்கப் போகிறாய்.”

“நில்லுங்கள். என்ன சொல்கிறீர்கள்?” நீ தடுமாறினாய். “என்னை காலத்துக்கு பின்னோக்கி அனுப்புகிறீர்களா?”

“அப்படியும் சொல்லலாம். நீ உணரும் வகையிலான காலம் என்பது உன் பிரபஞ்சத்தில் மட்டுமே இருக்கிறது. நான் இருக்கும் இடத்தில் இவையெல்லம் வேறுமாதிரி உள்ளது.”

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” நீ கேட்டாய்.

“கண்டிப்பாக சொல்கிறேன்,” நான் விளக்கினேன். “நான் வேறு ஒரு இடத்திலிருந்து வருகிறேன். வேறு எங்கிருந்தோ. என்னை போலவே வேறு நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு எப்படி இருக்கும் என்று நீ அறிந்துகொள்ள விரும்புகிறாய் என்று தெரிகிறது. ஆனால் விளக்கினாலும் உனக்கு உண்மையில் எதுவும் புரியாது.” 

“ஒ..” சிறிது ஏமாற்றத்துடன் நீ சொன்னாய்.

“அப்படியென்றால்! காலத்தின் வேறு வேறு இடங்களுக்கு நான் பிறவியெடுத்துச் சென்றிருக்கிறேன் என்றால், என்னுடைய வேறு ஒரு பிறவியை எப்போதாவது நான் சந்தித்திருப்பேன் இல்லையா? ”

“ஆமாம். நிறைய முறை அப்படி நடந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு சந்திக்கும் இரண்டு வாழ்க்கைப் பிறவிகளும் தத்தம் ஆயுட்காலத்தை மட்டுமே அறிந்திருப்பதால், இவ்வாறு சந்தித்து கொள்கிறோம் என்பதை அறியாமல் போகிறார்கள்”    

“அப்படியென்றால் இதெல்லாம் எதற்காக?”

“மெய்யாகவா?” நான் கேட்டேன். “நீ மெய்யாகவே வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று என்னிடம் கேட்கிறாயா? இது ஒரு சம்பிரதாயமான கேள்வி இல்லையா?”

“இருந்தாலும் நியாயமான கேள்வி தானே?” நீ தொடர்ந்தாய்.

நான் உன் கண்களைப் பார்த்து “வாழ்க்கையின் அர்த்தமும், நான் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் உண்டாக்கியதன் காரணமும் நீ முதிர்ந்து கனிவதற்குத்தான்” என்றேன்.

“நீங்கள் மொத்த மனிதகுலத்தையும் சொல்கிறீர்களா? எங்கள் அனைவரையும் முதிர்ச்சியடையச் சொல்கிறீர்களா?”

“இல்லை, உன்னை மட்டும் தான் சொல்கிறேன். உனக்காக மட்டும் தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கினேன். ஒவ்வொரு புதுப் பிறப்பினாலும் நீ மேன்மேலும் வளர்ந்து, முதிர்ந்து மிகச்சிறந்த அறிவாற்றலை அடைகிறாய்” 

“நான் மட்டுமா? பிறகு மற்றவர்களெல்லாம்?”

“வேறு யாரும் இல்லை,” நான் சொன்னேன். “இந்த பிரபஞ்சத்தில், நீயும் நானும் மட்டும் தான்.”   

நீ என்னை வெறுமையாய் பார்த்தாய். “பூமியில் இருக்கின்ற மற்றவர்கள் எல்லாம்…”

“எல்லோரும் நீ தான். அனைவருமே உன்னுடைய வெவ்வேறு அவதாரங்கள்.”

“பொறுங்கள். நான் தான் எல்லாருமா !?”   

“இப்பொழுது தான் உனக்கு விளங்குகிறது” நான் சொன்னேன், மெச்சியவாறு உன் முதுகில் தட்டி விட்டு.

“வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் நான் தானா?”

“ஆம், இனிமேல் வாழப்போகிற அனைவரும் நீ தான்.”

“நான் ஆப்ரஹாம் லிங்கனா?”

“அவரை கொன்ற ஜான் வில்கெஸ் பூத்தும் நீ தான்.” நான் சேர்த்துக் கொண்டேன்.

“நான் ஹிட்லரா??” நீ அதிர்ச்சியுடன் கேட்டாய்.

“அவர் கொன்ற கோடிக்கணக்கான மக்களும் நீ தான்.”

“நான் யேசுவா?”

“அவரைப் பின்பற்றிய அத்துனை மனிதர்களும் நீ தான்.”

நீ அமைதியில் ஆழ்ந்தாய். 

“ஒவ்வொரு முறையும் நீ ஒருவருக்கு தீங்கிழைக்கும் போதும்” நான் சொன்னேன், “நீ உன் மீதே தீங்கிழைத்துக் கொண்டாய். நீ செய்த ஒவ்வொரு நல்ல காரியமும், உனக்கே செய்து கொண்டது தான். எந்த ஒரு மனிதனும் அனுபவித்த, அனுபவிக்கப் போகும் எல்லா மகிழ்ச்சியான, துக்கமான தருணத்தை யெல்லாம் நீயும் அனுபவிப்பாய்.”

நீண்ட நேரமாக நீ சிந்தித்தாய்.

“ஏன்?” நீ என்னை கேட்டாய். “எதற்காக இதையெல்லாம் செய்யவேண்டும்?”

“ஏனெனில் ஒரு நாள், நீ என்னைப் போல் ஆவாய். ஏனென்றால் நீயும் நான் தான். நீ என் இனம். என் குழந்தை.”

“ஐயோ!!” நீ ஆச்சர்யத்துடன் விளித்தாய். “அப்படியென்றால் நானும் கடவுள்தான் என்கிறீர்களா?”

“இல்லை. இப்பொழுது இல்லை. இப்பொழுது நீ வெறும் கரு. நீ இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறாய். எப்போது நீ மொத்த காலத்திற்குமான ஒவ்வொரு மனித வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கிறாயோ, அப்போது தான் பிறப்பெடுக்கும் அளவிற்கு நீ வளர்ந்திருப்பாய்.”

“அப்படியென்றால் இந்த முழு பிரபஞ்சம்?” நீ கேட்டாய், “இது வெறும்…”

“ஒரு முட்டை.” நான் பதிலளித்தேன். “இப்போது நீ உன்னுடைய அடுத்த வாழ்க்கைக்கு செல்லும் தருணம் வந்துவிட்டது.”

பிறகு நான் உன்னை வழியனுப்பி வைத்தேன்.

ராம்பிரசாந்த்

ராம்பிரசாந்த். மொழியியலில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். மதுரை அருகேயுள்ள பேரையூரில் வசித்து வருகிறார். இசை, இலக்கியம் இரண்டிலும் ஆர்வமுண்டு.

1 Comment

  1. நிச்சயம் ஒரு சிறப்பான அறிவியல் புனைவு ,உரையாடல் மூலம் கதை போவது இன்னும் சிறப்பு . முட்டை ஒன்று மட்டுமா?

உரையாடலுக்கு

Your email address will not be published.