1. மனதின் இசை
(சுப்புராவ் மொழிபெயர்த்த டி.ஜே.எஸ்.ஜார்ஜின் “எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு” நூலை முன்வைத்து)
“சுத்தமான இசை என்ற அளவுகோலில் பார்த்தால்,அவர் முதல் வரிசை மேதைகளில் இடம் பெறமாட்டார். அவர் பாணியில் தனித்துவமானதாக ஒன்று உண்டு என்றால் அது ஆலத்தூர் சகோதரர்கள், சம்மங்குடிகள், ராமனாதன்கள் தம் அறிவால் அறிவிற்காக பாடிய போது அவர் தனது மனதால் மனதுக்கு பாடினார்.“
ஒரு காலகட்டத்தில் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளின் மனதில் நிற்கும் மிக பிரபலமான ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் சிறுமியின் தீவிரமான மனகவனமும், வெகுளித்தனமும், கடின பயிற்சியும், தன்னை சுற்றி உள்ள கூட்டத்தை கவனத்தில் கொள்ளாத தன்மையும் அவசியம். கர்நாடக சங்கீதத்தின் மிக முக்கியமான பாடகி, அன்றைய சினிமாவின் பிரபல நட்சத்திரம் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற ஒருவரை எழுதுவதற்கு டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்ற ஒரு பத்திரிகையாளருக்கு மேற்சொன்ன இத்தனை விதமான தகுதிகளும் தேவைப்பட்டிருக்கும்.
வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு மிக அடிப்படையானது என்ன? ஒரு வாழ்க்கை வரலாறு தன்னளவில் கொள்ள வேண்டிய நியாயம் என்ன? ஒரு ஆளுமையின் மேல் சமூகமோ,எழுதுபவரோ கொண்ட பற்றுதலினால் எழுதப்படுகிறது. அந்த ஆளுமை எழுதுபவரை எந்த வகையிலோ தீவிரமாக தன்வயப்படுத்தியிருக்க வேண்டும். அந்த வயப்படுத்துதலே தீராத தேடலின் தீயை அணையவிடாமல் காக்கிறது. இரண்டாவதாக ஒரு வாழ்க்கை வரலாற்று நூலின் மிக அடிப்படையானது ‘உண்மை’. தன்னை ஆகர்ஷித்த ஒருவரை குறித்து சமரசமின்றி எழுதவேண்டும். மூன்றாவது மற்ற இரண்டையும் விட மிக முக்கியமானது. வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன் என்ற பெயரில் அந்த ஆளுமையின் பிம்பத்தை தட்டையாக்கிவிடக்கூடாது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் இந்த மூன்று அடிப்படைகளுக்கும் நியாயம் செய்யும் படி இந்த நூலை எழுதியுள்ளார். பாடகி சுப்புலட்சுமி என்ற ஆளுமையை சுற்றி கட்டப்பட்டுள்ள கோட்டையை ஒரு காற்றின் லாகவத்துடன் கடந்து திரை விலக்கும் அனுபவம் நமக்கு வாசிப்பில் ஏற்படுகிறது. விலக்கிய திரை வழியே காணும் உண்மையின் தரிசனம் இந்த புத்தகத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குகிறது. அங்கு நம் முன்னே நிற்கும் ரத்தமும் சதையும், ஏக்கமும், புன்னகையும், விடாப்பிடியான பொறுமையும்,இசை ஞானமும் கொண்ட சுப்புலட்சுமி, ஜார்ஜை எந்த அளவுக்கு பாதித்தாரோ அதே அளவுக்கு வாசிப்பவரையும் பாதிக்கிறார்.
எம்.எஸ் பிறந்த குடும்பத்தையும், சமூக சூழலையும், இந்திய தென்னிந்திய தமிழக சமூக பின்ணனியில் இருந்து ஜார்ஜ் விளக்குகிறார். இசை வேளாள வகுப்பு பெண்களின் சமூக சூழலை நம்முள் ஆழப்பதியவிட்டப் பின்னே ஜார்ஜ் தன் நாயகியின் வாழ்கையை சொல்லத் தொடங்குகிறார். ஆனாலும் ஜார்ஜ்க்குள் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் அவ்வளவு உணர்ச்சிவப்படுபவர் அல்ல. மிகக்கறாரானவர். இந்த இரண்டு ஜார்ஜ்களும் சேர்ந்தெழுதிய இந்த நூல் எம்.எஸை உண்மைக்கு பாதகமில்லாத வகையில் வாசிப்பவருக்குள் கடத்துகிறது.
இந்த நூலில் ஜார்ஜின் சமர்ப்பணமே நூலின் ஆன்மாவை சொல்லிவிடுகிறது. அதை நோக்கியே எம்.எஸ் தன் முழு வாழ்க்கையை செலுத்தியிருக்கிறார். ‘சுரண்டப்பட்ட சமூகத்தின் கண்ணியத்திற்கான ஏக்கம்’ என்று அந்த சமர்ப்பணம் தொடங்குகிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு ஒரு நுண்ணுணர்வு தேவைப்படுகிறது. அதுவும் அவர் ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர். ஜார்ஜ், அவரே சொல்வதைப்போல ஒரு ‘வெளிஆள்’. எம்.எஸ் என்ற தனிநபரின் வரலாற்றின் வழி கர்னாடக இசை வரலாறு,தமிழ் சமூகத்தில் இசை,அன்றைய அரசியல் என்று விரியும் ஒரு வரலாறு இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் அறியப்படாத வரலாறு, சிதறல்களாக இந்நூலில் அங்கங்கே பரவலாக இருக்கிறது. உதாரணத்திற்கு பிரபல இதழான கல்கி தொடங்கி நடத்தப்பட்ட சித்திரம் உள்ளது. இசை ஆளுமைகள், அரசியல் ஆளுமைகள் என்று வரலாற்றின் நாயகர்கள் அங்கங்கே வந்து போவதால் எம்.எஸ் வாழ்வுடன்,அவர் வாழ்ந்த காலகட்டத்தின் முழுசித்திரத்தை வாசித்த அனுபவம் கிடைக்கிறது. காந்தி நேரு ராஜாஜி,பாலசரஸ்வதி, எம்.எல் வசந்த குமாரி, படே குலாம் அலிக்கான், அலாதீன் கான் போன்ற இசை மேதைகள் என்று பரந்த தளத்தில் நூல் விரிகிறது. நூலை வாசித்து முடிக்கும் போது எம்.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாற்றுடன்,இந்திய தமிழக வரலாற்றின் ஒரு சென்சிடிவ்வான பக்கத்தை வாசித்த உணர்வும் நமக்கு ஏற்படுகிறது.
நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு உறுத்திய ஒரே விஷயம். எஸ்.ஸின் கணவரான சதாசிவத்தை பற்றி ஐார்ஜ் உருவாக்கும் பிம்பம். வாழ்க்கை வரலாற்றில் சிறிய புனைவம்சத்தை தவிர்க்கவே முடியாது. ஆனால் ஜார்ஜ் சதாசிவத்தை பற்றி சொல்லும் போதெல்லாம் அவரை திறன் மிகுந்த வியாபாரியாக, திட்டமிட்டு அனைத்தையும் வெற்றி கொள்பவராக, மதியூகியாக கிட்டத்த ஒரு ப்ளாஸ்டிக் தன்மை கொண்டவராக சொல்வதாக தோன்றியது. எம்.எஸ் ஸின் ஆழத்தை தொட முடிந்த ஜார்ஜால், சதாசிவத்தின் ஏதோ ஒரு நுண்ணிய பகுதியை சரியாக எட்டமுடியவில்லை.
1930 களில் ஒரு ஸ்மார்த்தர், வேளாள இசைக்கலைஞரை தன் சொந்த சமூகத்தின் முன், தன் சொந்த குடும்பத்தின் முன் முறைப்படி மனைவியாக்கிக் கொள்வதில்,மனைவியை அவரின் கலையில் ஆகச்சிறந்த இடம் வரை செல்ல துணையிருந்து அங்கே நின்று, ‘இதுதான் நான் நீண்டகாலமாக கனவு கண்டு வந்தது. அவளை உலக மேடையில் நிறுத்துவது. என் பெரிய லட்சியம் நிறைவேறியது’ என்று நிறைவடையும் ‘தான்’ இல்லாத அன்பின் கிறுக்குத்தனம் இவ்வளவு ப்ளாஸ்டிக் தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நூலில் உள்ள உண்மை தன்மையினால் வாசிப்பவரால் அதை தொட்டுவிட முடிகிறது. அதன் குறையை அதுவே ஈடு செய்யும் ஒன்றும் நூலிலேயே உள்ளது.
கமலதேவி
“கடல்”,”ஆழி” உள்ளிட்ட சிறுகதை நூல்களின் ஆசிரியர்
2.
பருவம், குற்றம் மற்றும் பிரார்த்தனை
(விஷால் ராஜாவின் “திருவருட்செல்வி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)
”திருவருட்செல்வி” சிறுகதைத்தொகுப்பு விஷ்ணுபுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. விஷால் ராஜா இத்தொகுப்பில் சிறுகதைகளின் வடிவம் சார்ந்து சோதனைகள் செய்துள்ளார். “கண்ணாடித் தனிமை” இரண்டே பக்கத்தில் பல பத்திகளைக் கொண்ட கதையென்றால், “நிழலின் அசைவு” குறுநாவல் அளவு விரியும் தன்மை கொண்டது. இந்த ஒன்பது கதைகளில் பருவம், குற்றம், பிரார்த்தனை என மூன்று பகுப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் மூன்று கதைகள் உள்ளன.
விஷால் ராஜா ஏற்கனவே தன் விமர்சனக்கட்டுரைகள் வழியாக சூழலில் அறியப்பட்டவர். அக்கட்டுரைகளின் மேலான ஈர்ப்பின் பேரிலேயே இக்கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்.திருவருட்செல்வி மற்றும் கிரேஸ் இல்லம் ஆகிய இரு கதைகள் மனதிற்கு நெருக்கமானவையாக அமைந்தன. எளிய மனிதர்கள், எளிய பேசுபொருட்கள் சார்ந்து மனிதனில் இயல்பாக வெளிப்படும் உணர்வுகளை கதை வெளிப்படுத்துகிறது.
காமம், குரோதம், மோகம், வன்முறை போன்ற இருண்மையான பேசுபொருட்கள் ஒரு புறம். தியாகம், கருணை போன்ற ஒளிமிக்க பேசுபொருட்கள் மறுபுறம். இவ்விரண்டையும் உள்ளடக்க இலக்கியம் அசாதாரண மனிதர்களையும், அசாத்திய நிகழ்வுகளையும், உச்சமான சம்பவங்களையும் பயன்படுத்துகிறது. ஆனால் திருவருட்செல்வியும், கிரேஸ் இல்லமும் அன்றாடத்தின் எளியவற்றிலுள்ள உன்னதங்களின் விசாராணையாக இருக்கின்றன.
”கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு ஒரே கத்து கத்தினால் போதும் எல்லாம் ஓடிவிடும்” என்று சொல்லுமளவான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் வளைந்து சோம்பிச் செல்லும் பூனையின் மீது செல்வி வைத்திருக்கும் இயல்பான அன்பு. மகத்தானவைகளை அடிக்கடி நினைத்துக் கொள்ள ஏதுவாக தன் தந்தை தனக்கு விட்டுச் சென்றவைகளை ஒரு தருணத்தில் உணரும் ஜானின் மெல்லிய உணர்வு. இக்கதைகள் இந்த எல்லா உணர்ச்சி நிலைகளையும் நம்முள் கடத்துகின்றன.
இத்தொகுப்பை வாசிக்க சற்று நிதானம் தேவைப்படுகிறது. சட்டென உள் நுழைந்து எளிதாக பயணம் செய்யக்கூடிய சுவாரசியமான உரையாடல்களோ, சிறுகதையின் முடிவின் உச்சமான திருப்பங்களோ கதைசொல்லல் முறையில் இல்லை. அவ்வளவு பதற்றமாகச் செல்லத்தேவையில்லை என்று பூனை போல செல்லும் நடை. ஆசிரியரின் அழகியலை, தேடலைக் கண்டடைந்து அவருடன் வாசகர் பயணிக்க ஏதுவான கதைகள். மொழி, பேசுபொருள், கூறுமுறை, அழகியல் சார்ந்து ஒரு புதிய ஒன்றை இங்கு ஆசிரியரின் படைப்பின் வழியாகக் கண்டடைய முடிகிறது.
அட்டைப்படத்தில் கைகளில் பூனையை வைத்தபடி அதன்மேல் சாய்ந்தமர்ந்திருக்கும் பெண்ணின் முகத்தில் குடிகொண்டிருக்கும் அருள் நிரம்பிய கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை.
ரம்யா
“நீலி” இதழ் ஆசிரியர். கட்டுரையாளர்
3. மூதன்னையர் கடன்
ஆஷாபூர்ணாதேவியின் “முதல் சபதம்” (ப்ரதம் ப்ரதிஸ்த்ருதி வங்காள மூலம்) நூல் 1964இல் வெளிவந்தது. அவருக்கு ரவீந்திர புரஸ்கார் விருதும், ஞானபீட விருதும் பெற்றுக்கொடுத்த ஆக்கம். இந்திரா சௌத்ரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொண்டு இக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. தமிழில் புவனா நடராஜன் மொழிபெயர்த்துள்ளார்.
மூதன்னையருக்கு தீர்க்க வேண்டிய கடன் என்று துவங்குகிறது இந்த நாவல். முகலாய ஆட்சியிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு மாறி, சுயாட்சி சிந்தனைகள் கிளைவிரிக்கத் தொடங்கும் காலம். இந்த பிண்ணனியில் மானுட அறத்தின் வழி மரபை மீட்டுருவாக்க நினைத்தவர்களின் கதை இது. அவர்கள் நினைத்த வெற்றியை முழுதாய் அடையாத கதை. உலகளாவிய சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்த போது, அதன் மறுபுறம் நிகழ்ந்த சுயசிந்தனை மாற்றங்களை விரித்து செல்கிறது. சட்டங்களின் தேவை ஒருபுறம் இருக்க அதன் போதாமைகளை, அதனால் மட்டுமே நிலைபெற முடியாத அறத்தை, தான் ஊன்றி நிற்கும் மரபினுடனான தர்க்கங்களிலும் மாற்றங்களிலும் நிகழ்த்த விழைபவர்களின் கதை.
கௌரி தானம் என்று எட்டு வயதுக்குள்ளான பெண் குழந்தையை திருமணம் செய்விக்கும் வழக்கமிருந்த காலம். சத்தியவதி ஒரு ராணியாகவே அவளது தந்தை வீட்டில் வாழ்கிறாள். அவளது துணிச்சலும், எதையும் உற்று நோக்கி அறியும் குணமும் அவளது தந்தை ராம்கலியால் கனிவுடன் மட்டுமே நடத்தப்படுகிறாள். அவள் மறு வீடு சென்று வளர்ந்து வாழ்ந்து மீண்டும் அவள் தொடங்கிய இடத்திற்கு, ராம்கலியிடமே செல்கிறாள். தீராத கேள்விகளோடு. அவள் மரபை மறுத்து மாற்றுவழி எடுக்கும் தருணங்கள் எல்லாமே மானுட அறத்தை மட்டுமே அடித்தளமாக கொண்டவை. நீதி உணர்வு நிரம்பியவளாக, மனோபலத்திற்கு உதாரணமாக இருப்பவள், தனக்கான தோல்வியையும் அந்த நீதி உணர்வாலேயே பெறும் தருணம் ஒரு உச்சம். அப்போது அந்த மனோபலமும் அவளின் தந்தை மீதான நம்பிக்கையுமே அவள் பாதையாகிறது.
சத்தியவதி மட்டுமல்ல, அவரவர் வழியில் அனைவருமே ஒரு அறச்சிக்கலில் உழல்கின்றனர். கைவிட்டுச் சென்ற கணவனிடம் மீளும் சௌதாமினி, தன் கணவனின் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சாரதா, குழந்தை பருவத்திலேயே கணவனை இழந்த சங்கரி, பரிதாபமான முடிவை எதிர்கொள்ளும் மோக்ஷதா, என அனைவருக்கும் தன்னலத்திற்கும் – பொது அறத்திற்குமான விவாதமாகவே அவர்களின் சிக்கல் உள்ளது.
தான் நினைத்த தார்மீகமான அறத்தை நிலைநாட்ட இயலாமல் போவது சத்தியவதியின் ஊழ் எனில், தான் நிலைநாட்டிய அறத்திலிருந்து மீட்பு இல்லாமல் போவது ராம்கலியின் ஊழ். ஒரு தந்தையின் நிமிர்வுக்காக ஒரு பெண்ணின் வாழ்வு பலியானது தெரியாமல் ராம்கலி நிற்பதை சாரதா சுட்டிக்காட்டுவது கற்றோரின் ஆணவம் நொறுங்கும் இடம்.
ராம்கலி தோற்றதில் சத்தியவதி வென்று முன் செல்கிறாள், அந்த நோக்கில் சத்தியவதி தோற்றதும் ஒரு தொடர்ச்சியே. ஆஷாபூர்ணா தேவியின் ஆழ்நோக்கும், அறத்தின் மீதான நம்பிக்கையும், மானுட இயல்புகள் இன் மீதான கனிவும் இவர்களின் வெற்றிகளை பட்டியல் இடுவதில் இல்லை. அது, இன்றிருப்பவர்களின் பாதை அன்றிருந்தவர்களின் தோல்வியையும் அதற்கான காரணங்களையுமே அடிகற்களாக கொண்டுள்ளது என்று காட்டுவதில் உள்ளது.
மதுமிதா
கட்டுரையாளர்