செஸ்லா மிலோஷ் கவிதைகள்

தமிழில் சபரிநாதன்

அத்தாட்சி

எனினும் நீ அனுபவித்துள்ளாய் நரகத்தின் தீப்பிழம்புகளை.
உன்னால், அவை எப்படிப்பட்டவை என்றும் நீ சொல்லக்கூடும்: நிஜமானவை, எலும்பு வரை
சதையைத் துண்டு துண்டாய் கிழிக்கும்படிக்கு கூர்மையான கொக்கிகளில் முடிபவை.
நீ அத்தெருவில் நடந்தபோது அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தன:
கசையடிகளும்,ரத்தக்களரியும்.
நீ நினைவுகூர்கிறாய், ஆக உனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை:
நிச்சயமாக நரகம் என ஒன்றுண்டு.

000

ஒரு குறிப்பிட்ட வயதில்

நாம் நமது பாவங்களை ஒப்புக்கொள்ள விரும்பினோம், ஆனால் கேட்பவர்கள் யாருமில்லை.
வெள்ளை மேகங்கள் அவற்றை ஏற்க மறுத்தன, காற்றோ
கடல் கடலாய்ச் செல்வதில் மும்முரமாக இருந்தது.
விலங்குகளுக்குச் சுவாரஸ்யமூட்டுவதிலும் நாம் வெற்றிபெறவில்லை.
உத்தரவை எதிர்பார்த்த நாய்கள் ஏமாற்றம் அடைந்தன.
பூனை,எப்போதும் ஒழுக்கக்கேடான அது,தூங்கி வழிந்தது.
பார்ப்பதற்கு மிக நெருக்கமாக இருப்பது போன்ற ஒருவர்
எப்போதோ முடிந்த விஷயங்களைப் பற்றிக் கேட்பதில் அக்கறை செலுத்தவில்லை.
வோட்கா அல்லது காபியுடனான நண்பர்களின் உரையாடல்
சலிப்பின் முதல் சமிக்ஞையைத் தாண்டி நீடித்தல் கூடாது.
வெறுமனே காதுகொடுத்து கவனிப்பதில் டிப்ளமோ பெற்ற ஒரு மனிதர்,
அவருக்கு மணிக்கணக்கில் சம்பளம் தருவது என்பது அவமானமாக இருக்கும்.
தேவாலயங்கள்.ஒருவேளை தேவாலயங்கள்..ஆனால் அங்கே எதை ஒப்புக்கொள்வது?
நாம் நம்மை அழகானவர்களாகவும் மேன்மையானவர்களாகவும் எண்ணியிருந்தோம்
ஆனால் பின்னர் நமது இடத்தில் ஓர் அசிங்கமான தேரை
தனது தடித்த கண்ணிமையை பாதி திறந்து பார்க்கிறது என்பதையா.
தவிர நமக்குத் தெளிவாகத் தெரிகிறது:”அது நான்தான்”

000

மந்திரம்

மானுட பகுத்தறிவு அழகானது வெல்லமுடியாதது
கம்பிகள்,முள்வேலிகள்,புத்தக அழிப்புகள், நாடுகடத்தல்
எதுவும் வெல்லமுடியாது அதற்கெதிராக. அது
உலகளாவிய கருத்துகளை மொழியில் நிலைநாட்டுகிறது.பின்
சத்தியத்தையும் நீதியையும் பேரெழுத்துகளில் எழுதுமாறும்
பொய்யையும் அடக்குமுறையையும் சிற்றெழுத்துகளில் எழுதுமாறும்
நம் கைகளை வழிநடத்துகிறது.
இருப்பதை விட இருக்க வேண்டியவற்றை மேலாக வைக்கும் அது
விரக்தியின் எதிரி;நம்பிக்கையின் நண்பன்.
யூதனென்றும் கிரேக்கனென்றும் அடிமையென்றும் எஜமானென்றும் அறியாதது.
உலகின் ஆஸ்தியை நிர்வகிக்கத் தந்துள்ளது நமக்கு.
வதைக்கப்பட்ட வார்த்தைகளின் அசுத்தமான சண்டையில் இருந்து
ஆடம்பரமற்ற தெளிந்த சொற்றொடர்களைக் காப்பாற்றுகிறது.
சூரியனின் கீழ் எல்லாமும் புதியது என்று சொல்கிறது.
கடந்த காலத்தின் உறைந்த முஷ்டியைத் திறக்கிறது. ஃபிலோ-ஸோபியாவும்,
நன்மைக்கான சேவையில் அவளது கூட்டாளியான கவிதையும்
எழிலும் வெகு இளமையும் வாய்ந்தன.
அவர்களது பிறப்பை நேற்றுதான் கொண்டாடியது இயற்கை.
இச்சேதி மலைகளுக்கு ஒரு யுனிகார்னாலும் ஓர் எதிரொலியாலும் கொணரப்பட்டது.
அவர்தம் நட்பு புகழ்மிக்கதாய் இருக்கும்.அவர்களின் காலத்திற்கு வரம்பு இல்லை.
அவர்களது எதிரிகள் தம்மை அழிவுக்கு ஒப்படைத்துள்ளனர்.

000

அற்புதம்

ஓ என்னவொரு விடியல் சன்னலில்! பீரங்கிகள் முழங்குகின்றன.
பசிய நைல்நதியில் மிதந்துசெல்கிறது மோசஸின் பரிசல்.
காற்றில் அசைவற்று நின்றபடி,நாம் மலர்களின் மேல் பறக்கிறோம்:
நீண்ட தாழ்வான மேசைகள் மேல் வைக்கப்பட்ட ட்யூலிப்களும் அழகிய கார்னேஷன்களும்.
ஹல்லாலி எனக் கூவும் வேட்டைக்கொம்புகளும் செவிப்பட்டன.
பூமியின் எண்ணற்ற எல்லையற்ற வஸ்துக்கள்:

தைம் இலையின் நறுமணம்,ஃபிர் மரத்தின் வண்ணச்சாயல்,வெண் உறைபனி,நாரைகளின் நடனங்கள்
யாவும் ஒரேநேரத்தில், யாவும் நித்தியமானதாகவும் இருக்கலாம்.
காணப்படாது,கேட்கப்படாது ஆனாலும் அவை இருந்தன.
இசைநரம்புகளாலோ,நாவினாலோ வெளிப்படாது,ஆனாலும் அவை இருக்கும்.
ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம்,நாம் உருகுகிறோம் ஆகாயத்தில்.

000

ஒரு கவித்துவ நிலை

கண்களுக்குப் பதில் எனக்கு ஏதோ தலைகீழ் தொலைநோக்கி வழங்கப்பட்டது போல,உலகம் விலகிச்செல்கிறது. யாவும் சிறியதாகிறது. மக்கள்,தெருக்கள்,மரங்கள்- தம் தனித்துவத்தை இழக்காது- நெருங்கிச்செறிகின்றன.

கடந்தகாலத்தில், கவிதை எழுதும்போது இத்தகைய கணங்களை நான் அடைந்ததுண்டு, என்பதால் எனக்கு இடைவெளியைத் தெரியும். பற்றற்ற சிந்திப்பையும், நான் அல்லாத ”நான்” ஐ சூடிக்கொள்வதையும் கூட. ஆனால் தற்போதோ, எப்போதுமே அப்படித்தான் உள்ளது.என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் இதற்கு என்ன அர்த்தம், நான் ஏதும் ஒரு நிரந்த கவித்துவ நிலைக்குள் நுழைந்துவிட்டேனா என்று.

ஒருகாலத்தில் கடினமாக இருந்ததெல்லாம் எளிதாக உள்ளன,ஆயினும் இதை எழுத்தில் கடத்தவேண்டும் என்ற வலிய தேவை எதையும் உணரவில்லை நான்.
இப்போது நல்ல ஆரோக்கியத்தில் இருக்கிறேன். முன்னரோ நோயுற்றிருந்தேன் ஏனெனில் காலம் பாய்ந்தோடியது மேலும் அடுத்து என்ன நிகழும் என்ற அச்சத்தால் சித்ரவதை பட்டேன்.

ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஜாலம் என்னை பிரமிக்கவைக்கிறது.இலக்கியம், இதற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது ரொம்ப வேடிக்கையானது.

ஒவ்வொரு நிமிடமும் என் உடலில் தொட்டுணர்ந்துகொண்டே, நான் துரதிர்ஷ்டத்தைப் பழக்குகிறேன்,அதை விலக்கும்படி கடவுளை வேண்டுவதில்லை நான். ஏனெனில் மற்றவர்களிடம் இருந்து அதை விலக்கமாட்டார் எனில் என்னிடம் இருந்து மட்டும் ஏன் அவர் அதை விலக்கவேண்டும்.

முன்பு ஒரு கனவு கண்டேன், பெருங்கடல்மீன் அசைந்துகொண்டிருக்கும் நீர் மேலே, குறுகிய பாறை விளிம்பில் நான் இருப்பதாக.கீழே குனிந்து பார்த்தால் விழுந்துவிடுவேன் என்ற அச்சம்.எனவே திரும்பி கற்சுவற்றின் கரடுமுரடை
விரல்களால் பற்றியபடி கடலுக்கு முதுகு காட்டியவாறு மெல்ல நகர்ந்து ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்தேன்.

நான் பொறுமையற்றவனாக இருந்தேன்.சுத்தம் செய்வது, சமைப்பது போன்ற சில்லறை விஷயங்களில் இழந்த காலத்தைக் குறித்து எளிதில் எரிச்சலுறுபவனாகவும். இப்போது நான், கவனத்துடன் வெங்காயங்களை வெட்டுகிறேன்;எலுமிச்சைகளைப் புளிகிறேன்; பல்வேறு வகையான சாஸ்களைத் தயார்செய்கிறேன்.

சபரிநாதன்

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.