/

வெளியாட்கள் : எஸ். செந்தில்குமார்

தண்டபாணி தன்னுடைய மனைவியின் பெயரைச் சத்தமாகச் சொல்லி அழைத்தபோது, நடுப்பகல் பன்னிரண்டைக் கடந்திருந்தது. மேலத்தெரு பள்ளிவாசலில் பாங்கு ஓதி முடித்திருந்தனர். அவர்கள் குடியிருந்த தெரு வழியாக, நகராட்சி தூய்மை பணியாளர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். வாசலில் அமர்ந்திருந்த மல்லீஸ்வரியின் மடியில் சிவப்பு நிறத்திலான துண்டும் அதன் மேல் சீப்பும் இருந்தது. சீப்பில் சுருண்டிருந்த முடி காற்றில் பறந்துசென்றுவிடாமல் விரல்களில் பிடித்திருந்தாள். அறைக்குள்ளிருந்து வெளியே வந்தவர், மல்லீஸ்வரியைப் பார்த்து, “மல்லீ என்ன செய்துட்டு இருக்கே. நான் கூப்பிடுறது கேட்கலயா” என்றார். திடுக்கிட்டு, அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த கதையிலிருந்து, நிமிர்ந்தவள் கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள்.

“சீப்பு எங்க”

“எந்த சீப்பு”

“வெளியாட்கள் தலைவாருகிற சீப்பைக் காணோம்” என்று சொன்னதும் மல்லீஸ்வரியின் தலையும் கண்களும் மாடத்தை நோக்கித் திரும்பின. அவள் மாடத்தைச் சுத்தம் செய்யும்போது சீப்பு இருந்ததைப் பார்த்தாள். எழுந்து நின்றவள் அவரிடம், “நேத்து ராத்திரிவரை அங்கதாேன இருந்துச்சு. காலையில காணலன்னா என்னா அர்த்தம்.” என்று சமையலறைக்குச் சென்று தேடினாள். வீட்டிற்கு வரும் வெளியாட்கள் தண்ணீர் குடிப்பதற்குச் சமையலறைக்குள் வருவார்கள். தண்ணீர் குடித்துவிட்டு மறதியாகச் சீப்பை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

சமையலறையில் இல்லை. வீட்டுக்குள் வேறெங்காவது கிடக்குமென படுக்கை அறை, குளியலறை, வீட்டுக்குப் பின்னாலிருக்கும் மருதாணிச்செடி சிமிண்ட் திண்ணையில் தேடினாள். கிடைக்கவில்லை. கிணற்றுமேட்டின் மேல் யாராவது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்களாக என்று பார்த்தாள். கருவேற்பிலை செடியினருகே கிடந்த முக்காலியின் மேல் பார்த்தாள். சீப்பு இல்லை.   

“யாராச்சும் தலைசீவுறதுக்குச் சீப்பு கேட்டா என்னா செய்யுறது. எத்தனை தடவை சீப்பு காணாமல் போகுது. சீப்புக்கு எந்த திருடன் வர்றான்னு தெரியலை. நூறு தடவையாவது சீப்பு வாங்கிப் போட்டிருப்பேன். ஒண்ணாவது பத்திரமா இருக்கா” தண்டபாணியின் குரலில் வேகம் கூடியிருந்தது. கணக்கு எழுதும்போது பேனாவுக்கு மை ஊற்றுவது பென்சிலைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருப்பது ரப்பரில் அழுக்குப் படியாமல் காகிதத்தில் மடித்துவைத்திருப்பது பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்துக்குள் அடிக்குச்சியை வைத்திருப்பதுபோல அவருக்குச் சீப்பு மாடத்தில் இருக்க வேண்டும். ‘அது அது அந்த அந்த இடத்தில் இருக்கணும் இல்லையென்றால் எனக்கு வேலை ஓடாது’ என்று சொல்வார். ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் கணக்குச் சரியாகத் தீராது அவருக்கு. எழுதிக்கொண்டிருக்கும் கணக்கைப் பாதியில் வைத்துவிட்டுக் கடைவீதிக்குச் சென்று புதிய சீப்பை வாங்கிக்கொண்டு வரச் சென்றார்.

தண்டபாணியின் வீட்டிற்கு வரும் வெளியாட்கள் தலைவாரிக்கொள்வதற்கெனத் தனியாகச் சீப்பு ஒன்று இருந்தது. கூர்மையான பற்களும் நீளமான கைப்பிடியுள்ள நீலநிறத்திலான சீப்பு. எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாகி கெட்டவாடையோடு சிலசமயம் பற்களின் இடுக்குகளில் பொக்கும் அழுக்கும் சேர்ந்து எறும்புகள் வரிசை கட்டி சுவற்றில் நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து, தண்டபாணி அவளைத் திட்டுவார். மல்லீஸ்வரி கைக்குழந்தையைக் குளிப்பாட்டுவதுமாதிரி சீப்பைச் சுத்தம் செய்வாள். முதலில் பல் துலக்கும் பழைய பிரஸ்ஸால் இடுக்குகளிலிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்வாள். அப்போது மல்லீஸ்வரி ஆவலாகச் சீப்பின் பற்களை எண்ணிப் பார்ப்பாள். பிறகு சோப்பு நீரில் ஊறவைத்துக் கழுவி காயவைப்பாள். வெளியாட்கள் தலைவாரும் சீப்பைச் சுத்தம் செய்யும்போது அவளுக்கு அருவருப்பாக இருக்கும். கண்களை மூடிக்கொண்டு கழுவுவதைப் பழக்கமாக வைத்திருந்தாள். கண்களை மூடிக்கொண்டாலும் மனதில் வெளியாட்கள் தலைவாருவதை அவளால் பார்க்க முடியும். அவர்கள் வந்து செல்வதை நினைத்துப் பார்க்க முடியும். 

வீட்டுக்கு வரும் வெளியாட்கள் தண்டபாணியிடம் கணக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு நேராக, மாடத்திற்குச் சென்று அங்கிருக்கும் கண்ணாடியின் முன் நின்று தலைவாருவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறவர்களும் வாரத்திற்கு ஒரு நாள் வருகிறவர்களும் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறவர்களும் தலைசீவிக்கொள்ளாமல் சென்றதில்லை. அவர்கள் தலைசீவிக்கொள்வதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள் என்று தோன்றும். நீலநிறச் சீப்பைக் கையில் பிடித்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பழைய ஞாபகம் ஒன்றைத் தங்களது தலைமுடியின் வழியாகப் பார்ப்பதைப் போல கூர்ந்து நோக்கியபடி தலைவாருவார்கள்.  

வெளியாட்கள் என்று வீட்டுக்கு வருபவர்கள், மதிய சாப்பாட்டு நேரத்தில் தங்களது கடையிலிருந்து நேராக தண்டபாணியின் வீட்டுக்கு வருவார்கள். அவர்களது தலைமுடி, சட்டை கால் கைகளில் மாவு எண்ணெய் மஞ்சள்பொடி என்று ஏதாவது ஒட்டியிருக்கும். காக்கிநிறத்திலான துணிப்பையில் பெரியபெரிய பேரேடுகளைக் கொண்டுவருவார்கள். சிலர் நடுராத்திரியில் வந்து அதிகாலையில் புறப்பட்டுச் சென்றுவிடுவதும் உண்டு. அவர்களைப் பகல் நேரத்தில் பார்க்க முடியாது. பலசரக்குக் கடை, ஷாப்புக் கடை, வட்டிக் கடை, அரிசிக் கடை, மருந்து கடை, இரும்புக் கடை, தியேட்டர்காரர்கள் என்று பலரும் அவரிடம் கணக்கு எழுத வருவார்கள். இவர்களில் யாரும் சீப்பை எடுத்துக்கொண்டு போகிற அளவுக்குக் கெட்டவர்கள் இல்லை என்று மல்லீஸ்வரிக்குத் தெரியும். கைமறதியாக வேறு இடத்தில் வைத்திருப்பார்கள். தேட வேண்டும் என்று நினைத்தாள்.  

சைக்கிள் கம்பெனி முத்தையா வந்தால் கவுச்சி வாடையோடு குசுவாடையும் சேர்ந்துகொண்டு வீடு மணக்கும். தண்டபாணி உட்கார்ந்து கணக்கு எழுதும் கோரை பாயில் தலையை வைத்து, கால்களைத் தரையில் நீட்டி உறங்குவார். கிராப்புத் தலை. கிருதா இறங்கி இருக்கும். தொங்கு மீசை. தண்டபாணி கணக்கு எழுதி முடித்ததும் அவரை எழுப்பிவிட்டதும் முகங்கழுவி தலைவாரி பவுடர் அடித்துக் கிளம்புவார். தலைவாருவது படபடவென்று காற்றில் துணி பறப்பதுபோலிருக்கும். கிருதாவையும் மீசையையும் அழுத்தி படிய வாருவதைப் போல் தலையைவார மாட்டார். தலையில் அங்கங்குத் தட்டிவிடுவதுமாதிரி தொட்டுவிடுவார். ராஜம் பாத்திரக் கடை முதலாளி வெள்ளயங்கிரி மாதத்திற்கு ஒரு தடவை வருவார். அவர் கொண்டுவரும் மஞ்சள்பையில் ரசீது நிறைந்திருக்கும். தலைவாருவது, மாடுபிடிக்க மல்லுக்கு நிற்பது மாதிரியிருக்கும். கைகால்களை ஆட்டி முகத்தைக் கண்ணாடிக்கு முன்னால் நீட்டி தூரத்தில் நின்று குனிந்து சைடுவாக்கில் நின்று தினுசாகத் தலைவாருவார். சிலநேரம் தலைவாரும்போது, தலைமுடியை அதட்டுப்போட்டு, ஏய் உட்காரு தள்ளு ஒதுங்கு படிஞ்சு நில்லு இந்தா வந்துட்டேன் பின்னால ஒதுங்கிட்டா விட்டுருவேன்னு நெனப்பா என்று மிரட்டுவார். தலைவாரி முடித்து முகத்தைப் பார்க்கும்போது தலைமுடி, பலசரக்குக் கடை பொட்டலம் மாதிரியிருக்கும். பத்துத் தடவை தலைவாரி, சீப்பைச் சுவற்றில் தட்டுவார். அப்படி தட்டும்போது மல்லீஸ்வரிக்குப் பயமாக இருக்கும். சீப்பு உடைந்துவிடக் கூடாது என்று பதற்றமாக இருப்பாள். ஜானகி நகைக்கடை பையன் வைரமுத்துவும் ராஜா ராணி கட்பீஸ் செண்டர் கேஷியர் முத்துராமனும், அவர்கள் ேவலை செய்யும் கடை பஜாரில் அருகருகே இருப்பதால், ஒன்றாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் வருவார்கள். அவர்கள் நிதானமாகக் கண்ணாடியின் முன் நின்று விசிலடித்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும் விளையாடியும் தலைவாருவார்கள். தங்களை யாரும் பார்க்கவில்லை என்று இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் உரசிக்கொண்டு கண்ணாடியில் பார்ப்பார்கள்.  

மல்லீஸ்வரிக்கு, தண்டபாணியிடம் இதுநாள்வரை ஒரு பெண்கூடக் கணக்கு எழுதி வாங்கிச் செல்வதற்கு வந்ததில்லை என்கிற வருத்தம் இருந்தது. கடைக்காரர்கள் கணக்கு எழுதி வாங்கிச்செல்வதற்கு ஏன் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்று கோபத்தோடு இருந்தாள். யாராவது பெண் வந்து தனது வீட்டில் தலைவாருகிறாளா, ஜடை போட்டுக்கொள்கிறாளா, ஆண்கள் மட்டும் வீட்டிற்கு வருகிறார்கள் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தனக்கும் தண்டபாணிக்கும் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டுந்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள், அதுவும் அவள் கொண்டு வந்த சீப்பில் தலைவாரிக்கொண்டாள் என்பதை நினைத்தபோது அவளுக்கு வேதனையாக இருந்தது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் முத்துமீனா வீட்டுக்கு வந்த நள்ளிரவை மல்லீஸ்வரி இன்னமும் ஞாபகத்தில் வைத்திருந்தாள்.

முத்துமீனாவுக்குக் குச்சிக்கால்கள், தட்டைக்குச்சி மாதிரியான கைகள். அவளது உருவத்திற்குப் பொருத்தமில்லாதபடி தலைமுடி. மூணாறில் பலசரக்குக் கடை வைத்திருக்கிற பரசுராமனுக்கும் அவளுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. மூணாறிலிருந்து போடிக்கு வந்து, புரோட்டா தின்று ராத்திரி சினிமா பார்த்துவிட்டு கடைசி பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போக வேண்டுமென்று வந்தார்கள். பஸ்ஸைத் தவறவிட்டவர்கள் இரவு தங்கியிருந்து மூன்று மணி முதல் பஸ்சுக்குப் போவதற்காக, தண்டபாணி வீட்டிற்கு வந்தார்கள். தை மாதக் கடைசி. நல்ல குளிர். தண்டபாணி அவர்களுக்குக் கெட்டியான போர்வையைக் கொடுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னார். மல்லீஸ்வரி, முத்துமீனாவின் அருகில் நின்று அவளது தலையைத் தடவிவிட்டு, மாசமா இருக்கியா என்று ெமதுவாகக் கேட்டாள். அவள் இல்லையென்று தலையாட்டினாள். மல்லீஸ்வரி பால்சட்டியை அடுப்பில் வைத்து, சூடாக்கி, காப்பிப்பொடி கலந்து அவர்களுக்குக் கொடுத்தாள். முத்துமீனா காப்பி குடித்துவிட்டு பரசுராமனிடமிருந்து டம்ளரை வாங்கிக்கொண்டு எழுந்தாள். மல்லீஸ்வரி ஏங்கிட்ட கொண்டாம்மா என்று கேட்டாள். அவள் மறுத்து எங்க வைக்கணும், எங்க கழுவணும் என்று கேட்டுச் சமையலறைக்குச் சென்றாள். முத்துமீனா சேலையை இடுப்புக்கட்டில் சொறுவிக்கொண்டு அவளது கைப் பையை எடுத்துக்கொண்டு நடந்தாள். பரசுராமன் அவள் நடந்து செல்வதைப் பார்த்தான். அவன் பார்ப்பதை தண்டபாணியும் மல்லீஸ்வரியும் பார்த்தார்கள்.

தண்டபாணி, “நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல வேணா போய் தூங்குங்க. காலையில எந்திரிச்சு குளிச்சு சூடா இட்டிலி சாப்பிட்டுப் போகலாம்” என்று சொன்னார்.

“இல்லண்ணே. கோட்டயத்துக்குப் போகணும்.” என்றான்.  

மல்லீஸ்வரி, பாத்திரம் துலக்கச் சென்றவளை இன்னமும் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தாள். சமையலறையில் யாருமில்லை. படுக்கை அறை வெளிச்சமாக இருந்தது. பீரோவிலிருந்த கண்ணாடியின் முன்பாக அவள் நின்றிருந்ததை மல்லீஸ்வரி பார்த்தாள். கண் இமைக்கும் நேரம், அவளது முதுகில் தொங்கிய கூந்தல் சட்டென்று பின்னந்தொடை வழியாக இறங்கி குதிங்காலைத் தொட்டு நின்றது. பின் மெதுவாக நகர்ந்து மல்லீஸ்வரியை எட்டிப் பார்ப்பதுமாதிரி வாசலுக்கு வந்து நின்றது. பிறகு மடமடவென மரமேறுகிற வேகத்தில் சுவரில் படர்ந்ததைப் பார்த்தாள். அந்த அறையில் மரத்தின் கிளைகளைப் போல அவளுடைய கூந்தல் விரிந்திருந்தது. முத்துமீனா தன்னுடைய கைப் பையில் வைத்திருந்த சீப்பை எடுத்து தலைவாரினாள். மடியிலிருந்து இறங்கி ஓடும் கைக்குழந்தையை இழுத்துக்கொள்வதுபோல அவள் தலைமுடியை இழுத்துப் பிடித்து மடியில் போட்டாள். தன்னிடம் வர மறுத்து, தரையில் கிடந்த கூந்தலை, “எங்க போறீங்க. ஒரு இடத்தில இருக்க மாட்டீங்களா” என்று அள்ளியெடுத்துத் திட்டினாள். மல்லீஸ்வரிக்கு என்ன நடக்கிறது என்பதை ஊகித்துக்கொள்வதற்கு முன் முத்துமீனா அறையைவிட்டு வெளியேறி அவர்களிடம் வந்தாள். ஜடைமுடித்து நின்றவளின் கூந்தலைப் பார்த்தாள் மல்லீஸ்வரி. தோளில் சாய்ந்து உறங்கும் குழந்தையைப் போலிருந்தது முத்துமீனாவின் கூந்தல். அதனைப் பார்த்த மல்லீஸ்வரியினால் பேச முடியவில்லை. அவர்கள் ஊருக்குச் சென்றதற்குப் பிறகு மூன்று நாட்கள் காய்ச்சலாகப் படுத்துக்கிடந்தாள் மல்லீஸ்வரி. மேலத்தெரு பள்ளிவாசலுக்குச் சென்று ஓதி தண்ணீர் தெளித்துக் கயிறு கட்டியதற்குப் பிறகுதான் காய்ச்சல் குறைந்தது. ஆனால் உடம்பு மெலிந்து முகம் வெளுத்தது. உதடு காய்ந்து சொனங்கினாள். மல்லீஸ்வரி காலையில் குளித்து முடித்து வாசலில் உட்கார்ந்து, குழந்தைக்குப் பால் தந்து மடியில் கிடத்தி உறங்கச்செய்வதுபோல, தலைமுடியை நீவிவிட்டு மடியில் போட்டுக்கொள்வதைப் பழக்கமானது. வீட்டுக்கு வந்த முத்தையா, அவளது வெளுத்த முகத்தைப் பார்த்து, “உன் கதையெல்லாம் நான் வாங்கிக்கிறேன். என் கதையை எல்லாம் நீ வாங்கிக்க. எல்லாம் சரியாப் போகும்” என்று அவளுக்குக் கதை சொன்னார். அந்தக் கதையிலும் சீப்புத் தொலைந்துவிடுகிறது. சீப்பைக் கண்டுப்பிடித்துக் கொடுத்தால்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று கல்யாணப் பெண் சொல்லவும் சீப்பைத் தேடுகிறான் மாப்பிள்ளை. ஒரு சீப்புக்குக்காக இப்படியா மாப்பிள்ளையை அலையவிடுவது, கேவலமில்லையா என்று பெண்ணைத் திட்டுகிறார்கள். சீப்பின் பற்களில் என்னுடைய சுருள்முடி இருக்கிறது. அதில் நான்கு எழுத்தை எழுதி வைத்திருக்கிறேன், ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும் என்று சொல்லவும் மாப்பிள்ளையோடு பலரும் தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் அவள் உறுதியாகச் சொல்லிவிட்டாள். மாப்பிள்ளையைத் தவிர வேறு யார் தேடினாலும் சம்மதிக்க மாட்டேன், தேடி எடுத்துக்கொண்டு வந்து தந்தாலும் வாங்க மாட்டேன். மாப்பிள்ளை தனியாகத் தேடி என்னிடம் தர வேண்டும் என்றாள். மாப்பிள்ளை கடைவீதியில் புதிதாகச் சீப்பு வாங்கிக்கொடுத்துவிடலாமென்று யோசித்தான். ஆனால் சுருண்ட முடிக்கு எங்கு போவது? ஒவ்வொரு நிறத்தில் எழுதியிருக்கும் நான்கு எழுத்தை எப்படிப் பார்ப்பது? அது என்ன எழுத்து, எதைப் பற்றியது என்கிற குழப்பத்தோடு தெரு தெருவாக அலைந்தான். சீப்பைப் பார்த்தீர்களா சீப்பைப் பார்த்தீர்களா என்று ஓடினான். ஒரு தெரு முடிந்து இன்னொரு தெரு, அடுத்தத் தெரு, அடுத்தத் தெரு என்று அடுத்த ஊரிலிருக்கும் தெருவுக்குள் நுழைந்து கேட்கிறான். இவன் போன ஊரில் பந்தயம் நடக்கிறது. பந்தயத்தில் ஜெயித்தால் சீப்பு ஒன்று பரிசாகத் தருவதாகச் சொல்கிறார்கள். அந்தச் சீப்பில் அப்படியென்ன விசேஷம், அப்படியென்ன பந்தயம் நடத்துகிறீர்கள் என்று கேட்கிறான். இத்தோடு முத்தையா கதையை நிறுத்திவிட்டார். மல்லீஸ்வரிக்கு மீதி கதையைச் சொல்லவில்லை. நேரமாகிவிட்டது, இன்னொரு நாளைக்கு வரும்போது ெசால்லுகிறேன் என்று கணக்கு பேரேடுகளை வாங்கிக்கொண்டு போய்விட்டார். மல்லீஸ்வரிக்குத் தாங்க முடியவில்ைல. மனுஷன் மிச்சத்தையும் சொல்லிட்டுப்போனால் என்ன என்று வருந்தினாள். முத்தையா வரும்வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். அன்று மாலை கண்ணாடியைப் பார்த்தபோது தன்னுடைய முகம் தெளிந்து வெளுப்பு நீங்கியிருந்ததைக் கண்டாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு முத்தையாவின் மகன் சபாபதி வந்தான். முத்தையா இறந்துபோனதாகச் சொன்னான். உன் கதையெல்லாம் நான் வாங்கிக்கிறேன் என் கதையை எல்லாம் நீ வாங்கிக்க எல்லாம் சரியாப் போகும் என்று சொன்னது இதற்காகத்தானா என்று கலங்கினாள்.

மல்லீஸ்வரி எதையோ இழந்ததுபோல நிம்மதி இல்லாமல் இருந்தாள். அன்றிலிருந்து யாருக்காகவோ காத்திருப்பதுபோல தினமும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வாசலில் காத்திருக்கத் தொடங்கினாள். முத்தையா சொல்லி முடிக்காத கதையின் மிச்சத்தை நூறு தடவையாவது அவள் மனதிற்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அவள் மனதில் நினைத்துக்கொள்ளும் கதை, அவர் சொல்லிய கதையோடு பொருந்தவில்லை.

மல்லீஸ்வரி நூறாவது தடவையாக நினைத்துப் பார்த்த கதை, கதவைத் திறந்ததும் அங்கிருந்த அறையில் காடாவிளக்கு வெளிச்சம் மஞ்சளும் சிகப்புமாகச் சுவர் முழுக்கத் தெரிந்தது. தூபப்புகை, பன்னிரண்டு வகை வாசனைத்திரவியத்தில் மோகங்கொள்ளும்படி மணக்க, ஒரு கால்மடக்கி மறுகால் நீட்டி யானையின் துதிக்கைபோல தொடை இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரசியிருக்க, விளக்குவெளிச்சத்தில் அத்தொடையில் தெரிகிற மயிர்கள் சில சுருண்டிருக்க, தொப்பூள்மேட்டில் வடிந்த துளி வியர்வை முத்துருண்டையென நின்றிருக்க, உதட்டில் கருஞ்சிகப்பும் கூர்நாசியும் குளிர்ந்த கண்களும் கொண்ட ஸ்திரியின் காலடியில் மண்குப்பிகளைக் கைகளில் ஏந்தி புகை உறிஞ்சும் சிலரின் புலம்பல் விலக்கி அவள் முகம் தெரிய முன் நின்றவன் பந்தயச் சீப்பைத் தாம்பாளத்தில் பார்த்து என்ன பந்தயம் என்ன விசயம் என்று விஜாரித்துத் தெரிந்துகொண்டான்.

பெண்ணின் தைலக்கூந்தல் பன்னிரண்டு வகை வாசனாதிகளின் சேர்மானங்களில் மணந்து, இவ்வூர் விட்டு நீண்டு சென்று மறைந்திருக்கிற இருப்பை யாரும் அறிய மாட்டார் என்று நீ அறிக.

இப்பெண்ணின் நீண்ட கூந்தலை யார் கண்டு சுருட்டி எடுத்து இங்கு வருபவனே புருஷனென்று இவள் ஊர் அறிய சொல்லிப்போட்டாள் என்று நீ அறிக.

நாற்பது ஊர் சமர்த்தியவான்கள் முப்பது ஊர் பலசாலிகள் பத்து ஊர் பரதேசிகள் போனவர்கள் இன்னமும் கூந்தல் இருப்பிடம் அறிந்து வரவில்லையென்றிருக்க, இவளோ காத்திருந்து காத்திருந்து தைலம் நீவி இன்னமும் வளர்த்தெடுக்கிறாள் கூந்தலை என்று நீ அறிக என்று ஒருவன் சொல்லவும்

பெண்ணின் அங்கத்திற்கும் முகத்திற்கும் தன்னை மறந்தவன் அவள் கூந்தல் வழி நடக்க, ஹோவென்று குரல்கள் அவ்வறையிலிருந்து மேலெழுந்து நிறைக்க, கணத்த மார்பும் பருத்த வயிறும் மஞ்சள்நிற நகமும் கோணமுகமும் பருத்த தலையையும் எதிர் நின்று பேசும் சமயம் கண்கள் இங்கும் அங்கும் பார்க்கும்படி இருக்க, பாதங்களில் பெருவிரல்கள் கோணலாகியிருக்கும் ஒருவன் எதிரே வந்து தன்னை மறித்து நின்றதும் பயணம் போக வேண்டாமென நின்று கோபங்கொண்டான். அவனிடம், நீ விசனமும் தரித்திரமும் உடையவன், உனக்கு இவள் மட்டுமல்ல எவளும் கிடைக்க மாட்டாள் என்று உதறி விலக்கிச் சென்றான்.

அப்பெண்ணின் பெயர் கேசமணா. அவள் தலைக்கூந்தலின் இருப்பு அறிய சென்றவன் பெயர் கண்பனா என்ற பெயரை உடையவன். யானையின் சிறுகண்களைப் போன்றும் விசேஷ சித்திரத்தின் நூதனத்தைப் போன்றும் கண்களைக் கொண்டவன் என்பதால் அப்பெயரென்று பலரும் அவன் அவ்விடம் விட்டுச் சென்றதற்குப் பிற்பாடு பேசிக்கொண்டனர். அவனுக்கு ஒத்தாசைக்குக்கென்று சிலர் தீவட்டிப் பிடித்துப் பின்செல்ல அவனோ வேண்டாமென்று மறுத்து கேசமணாவின் கூந்தல் வழி நடந்தான். வழிநெடுகக் கூந்தலைக் கோதிவிட்டுச் சிக்கெடுத்துத் தொட்டுத்தூக்கி நுகர்ந்து முத்தமிட்டுத் தழுவி சாமத்துக்கூதலுக்குப் பெண்ணே கூந்தலென கூந்தலே கேசமணா என்று தன்மேல் அவளை வஸ்திரித்துச் சென்றான். நான்கு தடவை முழுநிலவு கண்டவன், அந்நாட்களில் கூந்தல் வழி பயணித்தான். இரவில் மினுங்கும் ஆற்றின் கரையில் நடப்பது போன்றிருந்தது கண்பனாவுக்கு. கூந்தல் ஆறாக நீளும் கரையில் தானும் மறுகரை வனத்தில் மூங்கில் பலா தேக்குமரங்களின் வேர்களின் மேலாக வெற்றிலைக்கொடி பூசணிக்கொடி அவரைக்கொடிகளினூடாக அவளின் கூந்தல் நீண்டிருப்பதைக் கண்டான்.

கண்பனா கண்பனா போகாதே போகாதே என்று முன்னர் தேடி ஆவிநீத்து அவனுக்குப் பின்னலையும் உருவமற்று ஒலிமட்டும் மிஞ்சியவர்கள் அவன் வழியாகத் தாங்கள் போகாத பாதை, காணாத வனாந்திரத்தில் பெண்ணின் கூந்தலை அறிந்தனர். தொட்டுணர்ந்துவிடுவான் கேசமணாவின் கேசத்தின் அடியை, ஆவிநீத்தவர்களின் முதலாமவன் சொன்னதைக் கேட்கிறான் கண்பனா.

இன்னொருவனோ கூக்குரலெழுப்பி கீழுதட்டில் முத்தமிடும் நாள் கூடிவருகிறது, ஒரேஒரு முழுநிலவை அவன் கடக்க வேண்டும் என்று ஆசையாகக் கூற கண்பனா ஓடுகிறான் வெறியோடு. எத்தனை நாள் எத்தனை புலர்வேளையென்று அவன் கணக்கிடவில்லையென்றாலும் அன்றைய சூரியக்கதிரே கூந்தல் வழி இறங்கி செம்பழுப்பில் ஓடுவதைக் கண்டான். பொன்னிறமான மணலின் மேல் கரும்பட்டாடை கிடப்பதைப் போலிருந்தது கேசமணாவின் கூந்தல். நுரைத்து வென்மை கூடிய நீர் பனாவின் காலடியை நிறைக்க கரும்பட்டாடையாகக் கிடந்த கூந்தல் கடலாக விரியவும் அக்கடலில் மூழ்கினான் கண்பனா.    

வாசலில் நின்று தெருமுக்கைப் பார்த்தாள் மல்லீஸ்வரி. புது சீப்பு வாங்கி வருகிறேன் என்று கடைக்குச் சென்றார். அவளுக்கு உள்ளங்காலில் குறுகுறுப்புத் தொற்றியது. அந்தக் குறுகுறுப்புச் சிறிதுசிறிதாகப் பரவி தலைக்கு ஏறி கிறுகிறுக்கச் செய்தது. அவளால் நிற்க முடியவில்லை. சீப்புகளை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வைத்திருக்கிற பெட்டியைத் திறந்து பார்த்துவிட வேண்டுமென்கிற ஆசை வந்தது. ஓடிப்போய் பெட்டியைத் திறந்து பார்த்துவிடலாமா என்று நினைத்தாள். பெட்டியைத் திறந்து பார்க்கும்போது தண்டபாணி வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து வாசலில் நின்றாள். வீட்டுக்குள் போகலாமா வேண்டாமா என்று தயங்கினாள். தண்டபாணி குளிக்கும்போது, அவர் மட்டும் தனியாகச் சினிமாவுக்குச் சென்றிருக்கும்போது தைரியமாகப் பெட்டியைத் திறந்து பார்ப்பாள். கலர்கலராக, இரண்டாக உடைந்த சீப்புக்களைக் கையில் அள்ளி எடுத்து பார்க்கும்போது அவளுக்கு அழுகை வரும். கண்ணீர்துளிகள் விழுந்ததும் பதறிப்போய் சீப்புகளைப் போட்டுவிடுவாள். எதற்குச் செய்கிறோம் என்றால் அவளிடம் பதில் இல்லை. தண்டபாணிக்குத் தெரியாமல் குப்பையில் கொட்டிவிடலாமென்று நினைத்தாள். இருக்கட்டுமென்று விட்டுவிட்டாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள், வீட்டுக்கு வருகிற வெளியாட்கள் தலைவாருவதற்குச் சீப்பு இல்லாமல் வெறுமனே நிற்க வேண்டும், தலைவாராமல் போக வேண்டும் என்று நினைத்தாள்.

முதலில் மண்சட்டியில் சீப்புகளை ஒளித்து வைத்திருந்தாள். அது நிறைந்ததும் டயனோரா கருப்பு வெள்ளை டிவி வாங்கிய அட்டைப்பெட்டியில் கடல்பஞ்சுகளுக்கு அடியில் ஒளிந்து கிடக்கட்டுமென்று போட்டுவைத்தாள். தன்னுடைய கணவனுக்குத் தெரிந்தால் என்ன பதில் சொல்வது என்கிற பதற்றம் ஆரம்பத்தில் அவளிடமிருந்தது. இப்போது இல்லை. மல்லீஸ்வரி ஒரு நாள் கோபத்தில் கருப்பு நிறத்திலான சீப்பை இரண்டாக உடைத்துப் போட்டாள். அந்தச் சீப்பின் சின்ன பற்களுக்கும் பெரிய பற்களுக்குமிடையிலிருந்த இடைவெளி அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்த இடைவெளியில் இருக்க வேண்டிய  சீப்பின் பல் உடைந்திருந்தது. அதை யாரோ திட்டமிட்டுப் பிய்த்திருக்கிறார்கள் என்று கோபத்தில் சீப்பை உடைத்தாள். உடைத்த சீப்பைத் தூக்கிப் போடுவதற்கு மனதில்லாமல் ஒளித்துவைக்கப் பழகிய பழக்கம் தொடர்ந்தது. யாரென்று தெரியவில்லை. எதற்கென்று புரியவில்லை. சின்ன பற்களுக்கும் பெரிய பற்களுக்குமிடையிலிருக்கிற சீப்பின் பல்லை உடைக்கிறார்கள், அந்த இடைவெளி மூலமாக, ரகசியமாகச் செய்கிறார்கள் என்று நினைத்தாள் மல்லீஸ்வரி.

புதிய சீப்பு வந்த சில மாதங்களில் சீப்பை இப்படி பாழாக்குபவர்கள் யார் என்று அவள் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கதவுக்குப் பின்னால் நின்று தலைவாருவதைப் பார்த்தால் தன்னை என்னவென்று நினைப்பார்கள். யார் வேண்டுமானாலும் உடைக்கட்டும், சீப்பின் பல்லை உடைத்தவுடன் அதை இரண்டாக ஒடித்து ஒளித்து வைத்துவிட வேண்டுமென்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்தது. சீப்பின் நடுபல்லை ஒடித்துவிட்டார்கள் என்று தண்டபாணியிடம் சொன்னால், வெளியாட்களுக்கு இதுதான் வேலையா என்று அவளைத் திட்டினார்.

ஒரு தடவைகூடச் சீப்பின் நடுப்பல்லை உடைக்கிறவர்கள் யாரென்று கண்டுப்பிடிக்க வேண்டுமென்கிற எண்ணம் வந்ததில்லை அவளுக்கு. மூன்று மாதங்களுக்கு முன்பு சீப்பின் பல்லை உடைத்து இடைவெளியை உண்டாக்கினார்கள். கடைசியாக வந்த வெளியாட்கள் யார், தலைவாரியது யார் என்று யோசித்தாள். அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. முதன்முதலாகச் சீப்பை ஒளித்து வைத்த தினத்தை அவள் நினைத்துப் பார்த்தாள். விரல்கள் நடுங்கின. சீப்பை முறிக்க முடியவில்லை. வழுக்கியது. கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தது. குனிந்து எடுக்கும்போது, தன்னிடம் என்னை உடைத்துவிடாதே உடைத்துவிடாதே என்று கெஞ்சியதுபோலிருந்தது அவளுக்கு. எண்ணெய் பசை நீக்கி, அழுக்குகளைக் கழுவி துடைத்துச் சுத்தம் செய்தாள். கடைசியாகப் பார்த்துக்கொண்டாள். சீப்பை வேகமாக முறித்தாள். இரண்டு கைகளிலும் சீப்பு தனித்தனியாக இருந்தது. இனி ஒன்றாக்க முடியாது, பொருத்தக்கூட முடியாது என்று நினைத்தவளுக்கு அழுகை வந்தது.

தண்டபாணி கடையிலிருந்து இந்நேரம் வந்திருக்க வேண்டும். பன்னிரண்டு மணிக்குச் சென்றவர் மதிய சாப்பாட்டு நேரத்திற்கு மேலாகிவிட்டது, இன்னமும் வரவில்லை. வேறெங்காவது செல்ல வேண்டுமென்றால்கூடத் தன்னிடம் சொல்லிவிட்டுத்தானே சென்றுவருவார், இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது எங்கு போயிருக்கிறார் என்று மல்லீஸ்வரி சங்கடப்பட்டாள். அவளுக்குப் பசித்தது. அவர் வரும்வரை காத்திருக்க வேண்டும், வயிறு பசிக்கிறது என்று அவருக்கு முன் சாப்பிட்டால் அன்று முழுக்கப் பசிக்கவில்லை, பசிக்கவில்லை என்று சாப்பிடாமல் இருப்பது அவருடைய பழக்கங்களில் ஒன்று. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை வந்த பிறகு சாப்பிடலாம் என்று அவளும் காத்திருந்து சாப்பிடுவதை இத்தனை ஆண்டுகளில் பழக்கமாக்கிக் கொண்டாள்.

திருமணமான புதிதில் ராத்திரி கட்டிலுக்கு வரும்போது கண்ணாடி முன் நின்று மேல்உதட்டை மடித்து மீசையை சரி செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். தண்டபாணிக்கு ராத்திரியில் தலைவாருவது பிடிக்கும். உள்ளங்கையில் சிறிது தண்ணீர் வைத்து தலைமுடியைத் தேய்த்துவிட்டு வாருவார். தலைமுடி, சலவைக்காரர் இஸ்திரி செய்த வெள்ளை வேட்டியைப் போலிருக்கும். ஒன்றுடன் ஒன்று ஒட்டி எந்த முடியும் தன்னுடைய தலையிலிருந்து பிரிந்துவிடக் கூடாது, கலைந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் தலைவாரியதைப் போலிருக்கும். இணைந்திருக்கும்போது ஆசையில் தலைமுடியில் தொட்டுவிட்டால் தண்டபாணிக்குக் கோபம் வந்துவிடும். மின்சாரம் தடைப்பட்டதும் நின்றுவிடும் தொலைக்காட்சியைப் போலாகிவிடுவார். பலமுறை அவருடைய தலைமுடியைத் தொட்டு அனுபவித்த வேதனைக்குப் பிறகு, மல்லீஸ்வரி தலைமுடியைத் தன்னையுமறியாமல் தொட்டுவிடக் கூடாது என்று தன்னுடைய கைகளைப் பறவையின் இறக்கைகளைப் போல படுக்கையில் விரித்துவிடுவாள். ஆனால்  ஒரே ஒரு தடவை, ஒரு தடவையாவது அவருடைய தலைமுடியைத் தொட்டுவிட வேண்டுமென்று ஏங்கினாள். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒன்றுகூடுகையில் அவள் பரவசத்துடன் அவருடைய தலைமுடியைத் தொட்டாள். தண்டபாணி அவளுடைய கையைத் தட்டிவிட்டு அவளிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். அதற்குப் பிறகு அவர் மல்லீஸ்வரியிடம் வருவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

வாசலில் இரண்டு பேர் நிற்பதைக்கூட அவள் கவனிக்காமல் யோசனையில் இருந்தாள். அவர்கள் அவளிடம் தண்டபாணியை விசாரித்தார்கள். அவர்களது கையில் கணக்குப் புத்தகங்கள் இருந்தன. வீட்டுக்குள் வந்து உட்காரும்படியும் வந்துவிடுவார் என்றும் அவள் அவர்களை அழைத்தாள். அவர்கள் வீட்டுக்குள் வரவில்லை. பதிலாக வீட்டுக்கு எதிரே இருந்த நிழலில் ஒதுங்கி நின்றுகொண்டனர். அவளுக்கு அவர்கள் முன்பாக வாசலில் நின்றிருப்பதற்குச் சங்கடமாக இருந்தது. வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். தண்டபாணி உட்கார்ந்து கணக்கு எழுதும் இடத்தைப் பார்த்தாள். சிறிய மேஜை, அதன் மேலிருக்கும் பென்சில் பேனா காகிதத்தில் மடித்து வைத்திருக்கும் ரப்பர் தொடர்கதை பைண்ட் புத்தகத்திற்கு வைத்திருக்கும் அடிக்குச்சி சில்லறை காசுகள் போட்டு வைத்திருக்கும் டப்பா பரீட்சை அட்டையில் மாட்டிவைத்திருந்த காகிதங்கள் என்று அந்த அந்த இடத்தில் இருந்தன. அவளுக்கு அந்த நேரத்தில் கண்பனாவின் ஞாபகம் வந்தது. கண்பனா நடந்து செல்லும் பாதையின் எதிரே தண்டபாணி நடந்து வந்துகொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தாள்.

௦௦௦

எஸ். செந்தில்குமார்

தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.