AZX 9120366 : எஸ்.செந்தில்குமார்

1

S.R.M. லாட்டரி சீட்டுக் கடையின் முன்னால் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. ‘ஆயிரம் வாலா’ வெடித்து ஓய்வதற்காகக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் வெடியின் புகை கலைந்ததும் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைப் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்துச் சிரித்தனர். பரிசு தங்களுக்குக் கிடைத்ததைப் போல உற்சாகமாக இருந்தனர். சீனிவாசகம் கடைக்கு நிலைமாலையைப்போட்டு, கதவுக்கும் மேஜைக்கும் சந்தனம் குங்குமம் வைத்திருந்தான். போஸ்டரில் சுந்தரத்தின் போட்டோவையும் பெயரையும்  அச்சடித்தது அவனது வேலையாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். சிக்கிம், பூடான், மிஸோரம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், கஞ்சன் ஜங்கா, கேரளம், தமிழ்நாடு லாட்டரி சீட்டுகள் விற்று வரும் S.R.M. கடையில் காலைவேளையில் புதிதாக லாட்டரி சீட்டு வாங்குபவர்களும் ஏற்கெனவே வாங்கிய சீட்டுக்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்க வருகிறவர்களுமாகக் கூட்டம் நிறைந்திருந்தது. 

அதிகாலையில் முத்தக்கா வாசல் தெளித்துக் கோலமிட்டுச் சென்றிருந்தாள். பரிசு தனக்கு விழுந்ததாக நினைத்து அவள் குதூகலமாகக் கோலமிட்டிருந்தாள். வண்ணப் பொடிகளை வைத்து கோலமிடவில்லையென்றாலும் இலைகளும் பூக்களும் தீபங்களும் தோரணங்களுமாகக் கோலம் கடைவாசலை நிறைத்துத் தெருவுக்குச் சென்றிருந்தது. கோலத்தில் அவளுடைய சந்தோஷம் தெரிந்தது. சற்றுமுன்பாக அதன் மீது ஆயிரம் வாலா வெடித்து ஓய்ந்தது. தெருவில் புகையும் சிதறிய காகிதங்களுமாகக் கோலம் மறைந்தது.

S.R.M. லாட்டரி சீட்டுக்கடையின் உரிமையாளரின் தம்பி சீனிவாசகம் வாசலுக்கு எதிரே தெரிந்த வானத்து சூரியனுக்கும் மேஜையிலிருந்த சீட்டுகளுக்கும் சூடம், பத்தி பொருத்திக் காட்டினான். கடைக்குள் சென்று சூடத்தட்டை வைத்து நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டான். சாமி படங்களுக்கு முன்னால் இருந்த எவர்சில்வர் டப்பாவை எடுத்துக்கொண்டு வந்தான்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு, பஞ்சுபேட்டையில் வேலை செய்யும் சுந்தரத்திடம் AZX 9120366 தமிழ்நாடு பொங்கல் பம்பர் பரிசு சீட்டைக் கொடுத்தது சீனிதான். “விழுந்தா வீட்டுக்கு, இல்லன்னா நாட்டுக்கு” என்று சுந்தரம் வாங்கினார். அவர் வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு மாத சம்பளம் வாங்குவதற்காகக் காத்திருந்த முத்தக்காவிடம் அவன் சீட்டு வேண்டுமா என்று கேட்டான். கடைசிவரை அவள் AZX 9120366 எண் தமிழ்நாடு பொங்கல் பம்பர் குலுக்கல் சீட்டை வாங்கவில்லை. பரிசு உறுதியாக இந்தச் சீட்டுக்குத்தான் விழும் என்று சீனி சொல்லியதை அவள் நம்பவில்லை. தன்னைக் கேலி செய்கிறான், தன்னிடமிருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொள்வதற்குப் பொய் சொல்கிறான் என்று நினைத்தாள். அவளுக்கு லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமென்கிற ஆசை இல்லை. காமத் புரோட்டா கடைக்கு வாசல் தெளித்துவிட்டதற்குச் சம்பளம் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். பணத்தை வாங்கி அதோடு சீனியிடமிருந்து வாங்கும் பணத்தையும் சேர்த்துப் புதிதாகச் சேலையும் பாவாடையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தாள். அவள் தனக்கு லாட்டரி சீட்டு வேண்டாமென்றுக் கூறியதோடு பிடிவாதமாக, சீனியிடம் சம்பளத்தை வாங்கிச் சென்றாள். அந்தச் சீட்டுக்குத்தான் பரிசு விழுந்திருக்கிறது என்று தெரிந்ததும் முத்தக்காவுக்குப் பைத்தியம் பிடித்துவிடுவது போலிருந்தது. கண் மூடி திறக்கும் நேரத்தில், தனக்குக் கிடைக்க வேண்டியது கை நழுவிப் போனதற்காக வருந்தினாள். அந்த வேகத்தில் பஜார் கடைகளுக்கு வேகமாக வாசல் தெளித்துக் கோலமிட்டுத் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாள். ஏற்ெகனவே அவளை, பஜாரிலுள்ள கடைக்காரர்கள் சாக்கடைத் தண்ணீரை அள்ளி ஊற்றி வாசல் தெளிப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். தனக்கு மாத சம்பளம் ஒழுங்காகத் தரவில்லையென்பதற்காகச் சில கடைகளுக்கு அப்படி செய்தது உண்மைதான். அவர்களுடைய கோபத்தை மாற்றவும் அவர்களிடம் நல்ல பெயர் வாங்கவும் அவள் முயற்சிப்பதில்லை. தெருக்குழாயில் நல்ல தண்ணீர் பிடித்துக் குடம் குடமாகக் கடைவாசலுக்கு ஊற்றி கழுவிவிட்டிருக்கிறாள். வெள்ளி தோறும் பசுஞ்சாணம் கரைத்து வாசல் தெளித்துக் கோலமிட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவளைக் கடைக்காரர்கள் பாராட்டியதில்லை. என்றோ மழைக்காலத்தில் நடந்த செயலுக்காக வருடமெல்லாம் தன்னைக் குற்றம் சொல்வதை அவள் விரும்பவில்லை. அந்த வருத்தத்தோடுதான் பஜாரிலுள்ள கடைகளுக்கு வாசல் தெளித்துவிடுகிறாள்.

சீனி கடையைத் திறப்பதற்காகக் காத்திருந்த வாடிக்கையாளர்களில் ஒருவர், “சீனி, அஞ்சு லட்ச ரூபா நம்ம கடை டிக்கெட்டுக்கு விழுந்திருக்கு. வடை, காப்பி  எதுவுமில்லையா?” என்று பேச்சைத் தொடங்கினார். அங்கிருந்தவர்களின் அதிகபட்சமான ஆசையும் எதிர்ப்பார்ப்பும் அவரிடமிருந்து வெளிப்பட்டதும், அவனிடம் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தனர். “சுந்தரத்த எங்க? ரெண்டு மூணு நாளா கடைப் பக்கம் ஆளைக் காணல. பரிசு விழுந்தது அவருக்குத் தெரியுமா தெரியாதா?” என்று ஒருவர் கேட்டார். அதன் பிறகு அங்கு நின்றிருந்தவர்கள் சுந்தரத்தைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்கள். சுந்தரம் மாலையில் வேலை முடிந்து வருவார் என்பது சீனிக்குத் தெரியும்.

சீனி யாருக்கும் பதில் சொல்லவில்லை. அவன் எதற்கும் தலை நிமிர்ந்து பார்க்காதவன். லாட்டரி சீட்டுக்களை எண்ணித் தருவதிலும் பணத்தை வாங்குவதிலும் கவனமாக இருந்தான். பத்துத் தடவை கேட்டால் பதினோறாவது தடவையாகக் கேட்கட்டும், பதில் சொல்வோம் என்று பேசுவதற்கு யோசிப்பவன். ‘எதுக்குத் தேவையில்லாமல் பேசணும். வெட்டியாகச் சண்டை போடணும், அடி வாங்கணும்’ என்று வாடிக்கையாளர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டவன். அவனது அண்ணன் ராமமூர்த்தியின் லாட்டரிச் சீட்டுக் கடைக்கு ஐந்து வருஷத்திற்கு முன்னால் டவுசர் போட்டு வேலைக்கு வந்து சேர்ந்தான். வேலைக்கு வந்த புதிதில் வாங்கிய அடியை மறக்காமல் இருந்தான்.

“சீனி ரெண்டு காதையும் முதுகுல ஒட்ட வெச்சுருக்கான். யாரு என்ன கேட்டாலும் நிமுந்து முகத்தப் பாக்காம பேரச் சொல்லிருவான்” என்று வாடிக்கையாளர்கள் சொல்வது உண்மைதான்.

“சீனிக்கிட்ட எதுக்குக் கேட்குறீங்க. சுந்தரம் எங்க. அவரு வரட்டும். அஞ்சு லட்ச ரூபாயா சொளையா வாங்குறாரு. அவருகிட்டக் கேப்போம்” என்று பீடியைக் குடித்தபடி ஒருவன் பேசினான். அவன் யாரென்று சீனிக்குத் தெரியும். நிமிர்ந்துப் பார்க்காமல் குரலை வைத்துத் தெரிந்துகொண்டான். சீனி வேலைக்குச் சேர்ந்த புதிதில் சகஜமாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தான். காலையில் கடையைத் திறந்து ராத்திரியில் கடையைப் பூட்டுவதுவரை பேசிக்கொண்டிருப்பான். பேச்சு ஆரம்பித்தால் அடைமழை பெய்வது போல் ஓயாது.

ராமமூர்த்தி, “இப்படி பேச்சு மும்முரத்தில இருந்தா, நமக்குத் தெரியாம ஒண்ணுக்கு ரெண்டா எடுத்துட்டுப் போயிருவாங்க. அப்புறம் நமக்குக் கிடைக்கிற அஞ்சும் பத்தும் கிடைக்காம போயிரும். நிமுந்தாளு ஒருத்தன் சாயங்கால நேரம் வந்தானில்ல” என்று அவனிடம் கேட்டார்.

“ஆமா அதுக்கென்ன இப்ப” என்று சீனி அண்ணனைப் பார்த்துக் கேட்டான்.

“அவனுக்கு ஒண்ணுமில்ல. நமக்குத்தான் பத்து ரூபா நட்டம். உங்கிட்ட எத்தனைச் சீட்டு வாங்குனான்”

“சிக்கீம் நாலு, நாகலாந்து நாலு”

“நாளைக்குக் காலையில ரிசல்ட் பாக்குறதுக்கு அஸ்ஸாமிலயும் ரெண்டு சீட்டு கொண்டு வருவான் பாரு. வியாபார நேரத்தில கண்ணு சீட்டுல இருக்கணும். வர்றவன் போறவன் நம்மக்கிட்டப் பேசிட்டு இருப்பான். பேச்சு மும்முரத்தில கை வெச்சிருவான். நிமுந்து பேசக் கூடாது. தலையைக் குனிஞ்சு சீட்டைப் பாத்து பதில் சொல்லணும். என்ன நடக்குதுன்னு நிமுந்து பாக்காம கண்ணு ரெண்டையும் சீட்டு மேல வெச்சிட்டுக் காதில கேட்கணும். காதுதான் நிமுந்து பாக்கணும். நீயெல்லாம் எப்படி பிழைக்கப் போறன்னு தெரியலை” என்று திட்டினார்.

“ஆமா காது நிமுந்து பாக்கும்” என்று அண்ணனின் பேச்சைக் கேலி செய்தான்.

“அஸ்ஸாம் டிக்கெட்டை அவன் எடுத்தது எனக்கு எப்படி தெரியும் நிமுந்து பாக்காம. நாலு, நாலு எட்டு டிக்கெட்டை எண்ணும் போது எப்படி பத்தாகும். நீ தானே எண்ணி காசு வாங்குன. நீ பத்துன்னு எண்ணி எட்டுக்குக் காசு வாங்கி டப்பாவில போட்ட பேச்சு மும்முரத்தில” என்று ராமமூர்த்தி சொன்னதும் அவனுக்கு ஆத்திரமாக வந்தது. தன்னை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்ததும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சீனியின் அண்ணன் சொல்லியதுபோல, நிமுந்தாள் காலையில் வந்து சிக்கிம், நாகலாந்து சீட்டோடு அஸ்ஸாம் சீட்டையும் நீட்டி ‘ரிசல்ட்’ பார்க்கச் சொன்னான். சீனி வாங்கி திருப்பிப் பார்த்தான். S.R.M. லாட்டரி சீட்டு என்று கடையின் ரப்பர் ஸ்டாம்பு இருந்தது. அவனிடம் ஒன்றும் பேசவில்லை. கடையை விட்டு இறங்கி அவனை கை நீட்டி அடித்துவிட்டான். நெஞ்சைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அவன் கீழே விழுந்ததும் கூட்டம் கூடிவிட்டது. ராமமூர்த்தி பதறிப்போய் கடையை விட்டு இறங்கி கீழே விழுந்தவனைத் தூக்கிவிட்டார்.

“திருட்டுப்பயல். லாட்டரி சீட்டை ஏன்டா எடுத்துட்டுப் போன. எடுத்த சீட்டுக்குக் காசு தாடா” என்று அவனுடைய சட்டையைப் பிடித்துக்கொண்டான். ராமமூர்த்தி சண்டையை ஒரு கண்ணும், கடையை மறு கண்ணுமாகப் பார்த்தார். சண்டையை விலக்குவதா சீட்டை யாரும் எடுத்துக்கொண்டுப் போகாமல் பார்ப்பதா என்று திணறினார். அதற்குள் நிமுந்தாளுக்குத் தெரிந்தவர்கள் சிலர் அங்கு கூடிவிட்டனர். தனக்குத் தெரிந்தவர்கள் வந்ததும் நிமுந்தாள், “எவன்டா திருடப்பய” என்று சீனியை அடிக்க வந்தான். ராமமூர்த்தி ஊடே வந்து விலக்கிவிட்டார். அவரைத் தள்ளிவிட்டு அடிக்க வந்தார்கள். சுந்தரம் அப்போது அங்கு நின்றிருந்தார். சண்டையை விலக்கிவிடுவதற்கு வந்தார். சீனிக்கு விழ வேண்டிய அடி அவருக்கு விழுந்தது. கன்னத்தில் அடி விழுந்ததும் சுருண்டு விழுந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் அவரைத் தூக்கிவிட்டனர். நிமுந்தாளைத் தனியாக அழைத்துச் சென்றனர். ராமமூர்த்தி கடைக்குள் நுழைந்தார். சீனிவாசகம் அடி வாங்கியது யாரென்று பார்த்தான். அன்றிலிருந்துதான் சுந்தரத்திற்கும் அவருக்கும் பழக்கம் உண்டானது.   

“காசு கொடுத்து வாங்கியிருக்கேன். சீட்டுக்குப் பின்னால உங்க கடை பேரு இருக்கு. என்னைய போய்த் திருடிட்டுப் போயிருக்கேன்னு சொல்றான்” என்று தனக்குத் தெரிந்தவர்களைச் சாட்சிக்கு அழைத்தான்.

“அப்ப பாத்தவங்க இளுச்சவாயனா” என்று சீனி முறுக்கிக்கொண்டு வந்தான்.

“அப்ப காசு தந்து வாங்குனவன் இளுச்சவாயனா. மருவாதிய பேப்பர் பாத்துப் பரிசு விழுந்திருக்கா விழுகலையான்னு சொல்லு” என்று நிமுந்தாள் கத்தினான். ராமமூர்த்தியிடம் சமாதானமாகப் போகச் சொன்னார்கள். சீனி, தலைகுனிந்தபடி அந்த லாட்டரி சீட்டுகளுக்கு அதிஷ்டலெட்சுமி பேப்பரில் ரிசல்ட் பார்த்தான். சிக்கிமில் எதுவுமில்லை. நாகலாந்தில் பத்தாயிரம் ரூபாயிக்கு ஒட்டி வந்து சீரியலில் விலகி போய்விட்டது. அஸ்ஸாமில் ஐம்பது ரூபாய் விழுந்திருந்தது. கமிஷன் போக பணத்தைக் கொடுத்துவிட்டு அந்தச் சீட்டை எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தான். பணத்தை வாங்கியவன் அவனைப் பார்த்த பார்வையை இன்னமும் சீனி மறக்கவில்லை. தனக்குப் பதிலாக, சுந்தரத்திற்கு விழுந்த அடியையும் நிமுந்தாளின் பார்வையையும் அவனால் மறக்க முடியவில்லை. “தெனமும் அவன நெனைச்சிட்டுக் கடையத் தொற. புத்தி தானா வரும்” என்று ராமமூர்த்தி சொன்னார். சீனி, அன்றிலிருந்து அவன் பேச்சைக் குறைத்துக் கொண்டான். சீனி அன்றிலிருந்து சுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தான்.

“டீ வாங்கிட்டு வாப்பா சீனி. எல்லோரும் குடிப்போம்” என்று யாராவது சொன்னால் திரும்பிப் பார்க்காமல், “நீங்க போய் வாங்கிட்டு வந்து ஊத்திக்கொடுங்க. இல்லன்னா, நீங்க மட்டும் குடிச்சிட்டு வாங்க” என்று சடாரென பதில் சொன்னான். டவுசர் போட்டு வருவதால் சிறுவயது போலிருக்கிறான். அதனால்தான் டீ, காப்பி வாங்கிவரச் சொல்கிறார்களென சீனியின் அண்ணன் அவனைக் கைலிவேட்டிக் கட்டிக்கொண்டுக் கடைக்கு வரச் சொன்னார். அவன் பேகிஸ்பேண்ட் மாட்டிக்கொண்டு வந்தான். பேகிஸ்பேண்ட்டில் குட்டையாகத் தெரிந்தான். அந்தக் குட்டையான உருவமும் பேகிஸ்பேண்ட்டும் பஜாரில் சீனிக்கு அடையாளமாக மாறியது. லாட்டரி சீட்டு சீனி என்கிற பெயரைவிட பேகிஸ் சீனி என்கிற பெயர் பஜாரிலிருப்பவர்களுக்கு அடையாளமானது. நகைக்கடை சீனி, லாட்ஜ் சீனி, ஷாப்புக் கடை சீனி, கொத்தனார் சீனி, டீக்கடை சீனி, கறிக்கடை சீனி என்று பஜாரில் சீனியின் பெயர்கள் நிறைய இருந்தன.

2

1936ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்ட செவ்ரோலெட் கார் பேட்டைக்குள் நின்றிருந்தது. அந்தக் கார் மைதீன் ராவுத்தருடையது. அதற்கு நூர் என்று பெயர் வைத்திருந்தார். காருக்கு அருகில் இருந்த நாற்காலியில் பஞ்சுபேட்டையின் முதலாளி ரவிச்சந்திரன் அமர்ந்திருந்தான். செய்தித்தாளை மடித்து வைத்திருந்தவனுக்கு வாசிப்பதற்கு மனமில்லை. பாக்கெட்டிலிருந்து எடுத்த சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எரிச்சலுடன் திரும்பவும் பாக்கெட்டில் வைத்தான். கால்களை நீட்டினான். எதிரே நின்றிருந்த நாயைப் பார்த்து அசிங்கமாகத் திட்டினான். சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாய் துள்ளலுடன் அவனிடம் வர முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் குலைத்தது. அதன் சத்தம் பஞ்சுபேட்டை முழுக்க எதிரொலித்தது.

ரவிச்சந்திரன் காலையில் வீட்டிலிருந்து வரும்போது செய்தித்தாளையும் சிகரெட்டையும் வாங்கிக்கொண்டு வந்தான். பேட்டைக்குள் அவன் சிகரெட் புகைப்பதில்லை. நீண்ட நேரமாக வெறுமனே அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து பேட்டைக்கு வெளியே வந்து பெரிய கேட்டின் அருகில் நின்றான். காலை வெயில் முகத்தில் அடித்தது. சிகரெட்டைப் பற்ற வைத்து வேகமாக உறிஞ்சினான். புகை மூக்கிலும் வாயிலும் வெளியேறியது. மெயின் ேராட்டையும் கைக்கடிகாரத்தையும் மாறிமாறி பார்த்துக்கொண்டான். சீக்கிரமாக வீட்டிற்குப்போக வேண்டும். மகளையும் மகனையும் பள்ளிக்கூடத்திற்குச் சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டுமென்கிற வேகத்தில் சிகரெட்டை இழுத்தான். அவனுடைய எண்ணம் முழுக்க சுந்தரத்தின் மீதிருந்தது. சுந்தரம் இப்போது வந்தால் பேசிவிடலாமென்கிற நினைப்பில் நின்றிருந்தான்.

ரவிச்சந்திரன் வீட்டிலிருந்து பேட்டைக்கு வருவது சைக்கிளில்தான். ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று அவனுடைய மனைவி வித்யா பிடிவாதம் பிடித்தாள். ரவிச்சந்திரன் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போகவும் வாரத்தில் ஒரு நாள் பஜாருக்குச் செல்வதற்கு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று அவள் சண்டைப் போட்டுப் பார்த்தாள். பட்டினி கிடந்தாள். ராத்திரி அவனுடன் படுக்காமல் பட்டினி போட்டுப் பார்த்தாள். ரவி முடியாது என்று சொல்லிவிட்டான். “வண்டி வாங்குறதா பெரிசு. நித்தமும் பெட்ரோலுக்கு யாரு காசு தருவா, ஒங்கப்பனா” என்று திட்டினான். வித்யா தன்னுடைய வீட்டில் கேட்டால் உடனே வாங்கித் தந்துவிடுவார்கள், அதற்கும் வேண்டாம் என்று ெசான்னால் எப்படி என்று முறைத்தாள். இரண்டு நாட்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. இரவில் தனித்தனியாகப் படுத்துக்ெகாண்டனர். 

அவளுக்குத் தெரியும். மூன்று நாட்களுக்கு மேல் அவனால் தனியாக உறங்க முடியாது. தன்னைத் தேடி வந்து சமாதானப்படுத்துவான் என்று நினைத்தாள். ஆனால் ரவிச்சந்திரன் வரவில்லை. மறுநாள் காலையில் பேசுவான், இல்லையென்றால் மதியம் சோறு சாப்பிடும் போது பேசுவான் என்று காத்திருந்தாள். சமாதானத்திற்குத் தயாராக இருக்கிறேன் என்பதற்கு ஜாடையாகக்கூடச் சில ஒற்றைச் சொற்களை அவனது முகம் பார்க்காமல் பேசிப் பார்த்தாள். ரவிச்சந்திரன் எதற்கும் மயங்கவில்லை. ஏழு நாட்கள் கடந்துவிட்டது. வித்யா பயந்து போனாள். ஊரிலிருந்த அப்பாவையும் அம்மாவையும் வரவழைத்து, சமாதானம் செய்து வைக்கச் ெசான்னாள். அவர்களும் வந்தார்கள். ரவிச்சந்திரன் அவர்களிடம் இனிமேல் ஸ்கூட்டர் வாங்குவதைப் பற்றி பேசக் கூடாது, அப்படி பேசினால் அவள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னதும் அவர்களும் மகளைக் கண்டித்துப் பேசி இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு ஊருக்குச் சென்றனர்.

அன்றிரவு வாசலில் நின்று ரவிச்சந்திரன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். வித்யா, பிள்ளைகளை உறங்கச் செய்துவிட்டுப் படுக்கையை விரித்து வைத்துப்போட்டுவிட்டு வந்தாள். ரவிக்குப் பின்னால் நின்று, “வாங்க உள்ளாற” என்று அழைத்தாள். ரவியும் அதற்காகத்தான் காத்திருந்ததுபோல் சிகரெட்டை தரையில் போட்டுக் குதிங்காலில் மிதித்துத் தேய்த்துவிட்டு வீட்டுக்குள் வந்தான். அவள் கதவை அடைத்துவிட்டுத் திரும்பியதும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அவள் மனதிற்குள் ‘ஏந்தலையெழுத்து’ என்று பற்களை கடித்துக்கொண்டு கண்களை மூடினாள்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் இட்டிலிக்கு கறிக்குழம்பும் மதியம் சாப்பாட்டிற்குக் கோழிக்குழம்போடு சுக்கா வறுவலுமாகச் செய்து சாப்பிட்டார்கள். மாலையில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜீவன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தார்கள். சினிமா முடிந்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது கோழிக்கறிக்குழம்பில் புரோட்டா சாப்பிட்டால் நன்றாக இருக்குமென்று வித்யா சொன்னாள். ரவி புரோட்டா வாங்கிக் கொடுத்தான். 

ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பஞ்சுபேட்டையைத் திறப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் மைதீன் ராவுத்தரும் அவருடைய கூட்டாளிகளும் பிராந்தி குடிப்பதற்காக வருவார்கள். பஞ்சுபேட்டை முதலாளி ரவிச்சந்திரன் பஞ்சுபேட்டையை விலைக்கு வாங்கும் போது எழுதப்படாத ஒப்பந்தமாகப் பேசிய விஷயங்களில் ஒன்று கார் நிற்குமிடத்திலேயே நிற்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கார் நிற்குமிடத்தை மாற்றக் கூடாது. ஞாயிறு தோறும் தன்னுடைய கூட்டாளிகளுடன் பேட்டைக்கு வந்து மது அருந்திச் செல்வதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று மைதீன் ராவுத்தர் கூறியிருந்தார். ரவிச்சந்திரன் அதற்கு ஒப்புக்கொண்டு இடத்தை வாங்கினான். கூரையை மாற்றி தகரக் கொட்டகைப் போடும்ேபாதுகூட கார் நின்றிருந்த இடத்தை எதுவும் செய்யவில்லை. நான்கு கற்தூண்களுக்கு ஊடே கருப்பு நிறத்தில் நின்றிருந்த செவ்ரோலெட் கார் பம்பாயிலிருக்கும் ஆலன் பெர்மி என்கிற கம்பெனியிலிருந்து 3675 ரூபாயிக்கு வாங்கியதாகவும் அது புதிய கார் இல்லை, பழைய கார்தான் என்று பிறர் சொல்வதை ரவிச்சந்திரன் கேட்டிருக்கிறான். ரவிச்சந்திரனுக்கு காரின் மேல் ஆசை எதுவுமில்லை. ஆனால் வித்யா சொல்வதுபோல் ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்கிற ஆசை மனதில் ஊறத் தொடங்கியிருந்தது. அந்த எண்ணமும் சுந்தரத்திற்கு ஐந்து லட்சம் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று தெரிந்ததும் மாறியது. அவனுக்குச் சுந்தரத்திடமிருந்து ஐந்து லட்சத்தை வாங்கி வியாபாரம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்கிற ஆசை வந்தது. இரண்டு நாட்கள் தன்னுடைய ஆசையை வெளியே சொல்லாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தான். சுந்தரத்திடம் நேரில் பேசிப் பார்க்கலாமென்று காலை நேரத்தில் வந்தான். சுந்தரம் எட்டு மணிக்கு சைக்கிளில் பேட்டைக்கு வந்துவிடுவார். பேசலாம் என்று காத்திருந்தான்.

சுந்தரம் இன்னமும் வரவில்லை. சுந்தரம் வருகின்ற நேரந்தான். ரோட்டையும் கை கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டான். இரண்டு நாட்களாக இருந்த வெட்கமும் தயக்கமும் இப்போது பயமாக மாறியது. சுந்தரத்திடம் எப்படி பணத்தைக் கேட்பது என்று யோசனை செய்தான். பணத்தைக் கேட்டுத் தராமலிருந்துவிட்டால், பணம் கேட்பதை பஜாரில் பிறரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்தில் இரண்டு நாட்களாகப் பேசாமலிருந்தான். ஆனால் வித்யாவிடம் பேசியதிலிருந்து அவனுக்குச் சிறிது தைரியம் உண்டாகியிருந்தது.

சுந்தரத்திற்கு லாட்டரியில் பரிசு விழுந்த செய்தி அவளுக்குத் தெரியும். ஐந்து லட்ச ரூபாயை வாங்கி என்ன செய்யப் போகிறார் என்று அவனிடம் சந்தேகமாகக் கேட்டாள். தங்களுக்குப் பரிசு கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும், என்னென்ன காரியங்கள் செய்யலாமென்று அவனிடம் சொன்னாள். சுந்தரம் இனிமேல் வேலைக்கு வந்தால்தான் வருவார் என்று சந்தேகமாகச் சொன்னான் ரவி. வேலைக்கு வரவில்லையென்றால் என்ன செய்வார் என்று வித்யா கேட்டாள். பரிசு பணத்தை வட்டிக்குக் கொடுத்து அதிலிருந்து வருகிற பணத்தை வாங்கி செலவு செய்வார் என்று அவன் சொன்னான். அவள் தங்களுக்கு வட்டிக்குப் பணம் தருவதற்குக்கூட ஆள் இல்லை என்று கவலையாகச் சொன்னதும் அவளிடம், சுந்தரத்திடம் வட்டிக்குப் பணம் கேட்டால் தருவார், கேட்கலாமா என்றான். அவள் சரி என்று சொல்லவில்லை. வேண்டாமென்றும் மறுக்கவும் இல்லை. மௌனமாக இருந்தாள். ரவி, அன்று முழுக்க சுந்தரத்திடம் பணத்தை வாங்கினால் என்னென்ன காரியங்கள் செய்யலாமென்கிற திட்டத்தை மனதில் எழுதிப் பார்த்தான். அவனது திட்டங்களில் கடைசியாக இருந்தது தனக்காக இல்லையென்றாலும் வித்யாவுக்காகவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காகவும் ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்பதுதான். இதனை வித்யாவிடம் சொன்னதும் அவள் குதித்துவிட்டாள். அவளது கால்களிலிருந்து கொலுசு மணி தெறித்து உருண்டோடியது.

ரவிச்சந்திரன், ஸ்கூட்டர் வாங்கலாம் என்று சொன்னதும் முதலில் அவள் செய்த காரியம் பழைய துணிகளைத் தேடி எடுத்ததுதான். நித்தம் நல்ல துணி ஒன்றில் ஸ்கூட்டரைத் துடைக்க வேண்டுமென்கிற அவளுடைய ஆர்வத்தைப் பார்த்ததும் ரவிக்கும் ஆசையாக இருந்தது. சுந்தரத்தை உடனே பார்த்து பேச வேண்டுமென்று நினைத்தான். ரவி, புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை தரையில் போட்டு செருப்பு காலால் தேய்த்தான். சிகரெட் துண்டு பிய்ந்து நசுங்கி புகையிலைத் துணுக்குகள் வெளியேறின. பேட்டைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தான். செய்தித்தாளைப் பிரித்து ஒவ்வொரு பக்கமாக மேலோட்டமாகப் பார்த்தான். சைக்கிள் நிறுத்தும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். சுந்தரம் சைக்கிளிலிருந்து இறங்கி பேட்டைக்குள் நடந்து வருவது தெரிந்தது. ரவிக்கு நிம்மதியாக இருந்தது. அதே நேரத்தில் படபடப்புக் கூடியது.

சுந்தரம் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கேரியரில் மஞ்சள் பையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் டப்பாவை எடுத்துக்கொண்டார். கண்களை மூடி முகத்தைத் தரையில் வைத்திருந்த நாய் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தது. சுந்தரத்தைப் பார்த்ததும் முன்னங்காலைத் தூக்கி நின்று குலைத்தது. கட்டியிருந்த சங்கிலி அறுந்துவிடுமளவிற்கு அதன் வேகம் கூடியிருந்தது. சுந்தரம் அதைப் பார்க்காமல் காருக்குப் பக்கத்தில் வந்து நின்றார். வேட்டியை அவிழ்த்துவிட்டார். டிபன் டப்பாவின் சூடு அவருடைய உள்ளங்கையில் இருந்தது. டப்பாவை கை மாற்றியவர் பேட்டைக்குள் நுழைந்து குமித்து வைத்திருந்த இலவம் பட்டைகளைக் கால்களால் மிதிக்காமல் நடந்தார். பட்டைகளை மிதித்தால் நொறுங்கல் விழும். நொறுங்கல் விழுந்த பட்டைகளை யாரும் காசுக்கு வாங்க மாட்டார்கள் என்பது பேட்டையில் வேலை செய்பவர்களுக்குத் தெரியும்.

பேட்டையில் சுந்தரத்திற்குப் பட்டைகளைச் சாக்கில் மூட்டையாகக் கட்டிப் போடுகிற வேலை. சில்லறை வியாபாரிகள் பேட்டைக்கு வந்து காசு கொடுத்து இலவம் பட்டைகளை வாங்கிக்கொண்டுப் போவார்கள். பெரியபெரிய சாக்குகளில் வாங்குகிற பட்டைகளைப் பிரித்துச் சிறிய சாக்குகளில் அடைத்து விற்பார்கள். பட்டைகளை ஸ்டாக் வைத்து மழையில் நனைந்துவிடாமல் பஞ்சுபேட்ைடயில் வியாபாரம் செய்து வந்தார்கள். நொறுங்கல் விழாத, மழையில் நனையாத பட்டைகளுக்குக் கிராக்கி இருந்தது. ரோட்டில் இட்டிலி சுட்டு விற்கிறவர்கள், வீட்டில் மண் அடுப்பு வைத்திருப்பவர்கள், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க முடியாதவர்கள் அனைவரும் இலவம் பட்டைகளை வாங்கி அடுப்பெரித்தனர்.

சுந்தரம் சட்டையைக் கழற்றி சுருட்டி மஞ்சள் பைக்குள் வைத்தார். வேட்டியைத் தூக்கிக் கட்டியவர், சாக்குத் தாட்டுகளில் (பெரிய சாக்குப் பை) பட்டைகளை அள்ளிப் போடத் தொடங்கினார். சுந்தரத்திற்குச் சடசடவென்று பட்டைகளின் மேல் பட்டைகள் மோதும் சத்தத்தைக் கேட்பது பிடிக்கும். அந்தச் சத்தம் இரண்டு பட்டைகளை ஒன்றோடு மற்றொன்றை வைத்து தட்டினால் கேட்காது. மொத்தமாக சாக்குகளில் விழும் போதும் கேட்கும். சாக்குகளில் விழும் பட்டைகளைக் கையில் குத்தாமல் நான்குப் பக்கமும் சாக்குப் பையின் காதைப் பிடித்துத் தூக்கிக் குலுக்கிக் குலுக்கி பையை நிறைத்தார். இலவம் பட்டைகளை வாங்குகிற வியாபாரிகளுக்குச் சாக்குப் பையில் தொங்கல் விழுந்திருக்கக் கூடாது. சாக்கு முழுவதுமாக நிறைந்து புடைத்துத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் விலையைக் குறைத்துக் கேட்பார்கள். தைத்த சாக்கைப் பிரித்துப் பட்டைகளைத் திரும்பவும் அள்ளிப் போடச் சொல்வார்கள். சாக்குத் தாட்டு நிறைந்ததும் அதன் வாய் பகுதியைக் கோணியால் தைத்து மூடினார். தனியாக ஒதுக்கி வைத்தார்.  

ரவிச்சந்திரன் அவருக்கு முன்னால் வந்து நின்றான். அவன் வழக்கம்போல் பேட்டையில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவது மாதிரியான தோரனையில் நிற்க வேண்டுமென்பது அவனுடைய எண்ணம். ஆனால் சுந்தரத்தின் முன்னால் அப்படி நிற்க முடியவில்லை. அவன் தன்னுடைய உடலை நிமிர்த்தி நிற்க திராணியற்றிருந்தான். தொங்கல் விழுந்த சாக்குத் தாட்டைபோல் தான் நின்றிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. சுந்தரம் நிமிர்ந்து அவனைப் பார்த்ததும் தன்னிடம் பேசுவதற்கு வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.

“வேப்பெண்ணெய் ஆட்டுறத பத்தி விசாரிச்சு வெச்சீங்களாண்ணே” என்று ரவி அவரிடம் கேட்டான்.

சுந்தரத்திற்கு அப்போதுதான் அந்த ஞாபகம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு வேப்பம் கொட்டைகளை அரைத்து தருகிற மிஷினைப் பற்றிய தகவலைக் கேட்டு வைத்திருக்கச் சொன்னார். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆட்டித் தருகிற கடையில் விசாரித்து வருவதற்குச் சோம்பேறித்தனம் கொண்டிருந்தார். லாட்டரி சீட்டில் பரிசு விழுந்த பரபரப்பில் செக்காட்டும் கடைக்குப்போய் வர மறந்துவிட்டார். ரவி தன்னிடம் கேட்டதும் காரக்குழம்பை நாக்கில் வைத்ததும் சுர்ரென்று மண்டையில் ஏறியது.

“இன்னைக்குப் போயிட்டு விசாரிச்சுட்டு வந்துர்றேன். ரெண்டு நாளா வேற ஜோலியா போச்சு” என்று சொன்னார்.

“மிஷின் லட்ச ரூபாகிட்டக்க வருமாண்ணே” என்று கேட்டான் ரவி.

சுந்தரம் தெரியவில்லை என்று தலையாட்டினார்.

“பேட்டைக்குப் போட்ட பணத்தை இன்னமும் எடுக்க முடியல. உலவம் தோப்புக்காரங்களுக்குப் பணம் கொடுக்க முடியல. எப்படி மிஷின் வாங்குறதுன்னு தெரியல” என்று சுந்தரத்திடம் சொன்னான். அதைக் கேட்டதும் சுந்தரம் சங்கடமாக அவனைப் பார்த்தார். ரவி, “பிள்ளைகள ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் விடணும். நேரமாச்சு” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நின்றான். அவனால் நேரடியாக, சுந்தரத்திடம் பணத்தைக் கேட்க முடியவில்லை. ஏதோ உறுத்தியது. சுந்தரம் பணத்தை என்ன செய்யப் போகிறார் என்று கேட்டுத் தெரிந்திருக்கலாம் என்று மனக்கஷ்டத்தோடு திரும்பி நடந்தான்.

ரவி இரண்டு அடி நடந்து சென்றதும் சுந்தரம் அவனிடம், “மைதீன் ராவுத்தருக்கிட்ட வட்டிக்கு வாங்கலாமா” என்று மெதுவாகச் சொன்னார். சுந்தரம் சொல்லியதைக் கேட்டதும் அவரைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் அவனுக்கு எழவில்லை. வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்கிற எண்ணமே உண்டானது. வித்யாவின் கையைப் பிடித்து சுந்தரம் சொல்லியதைச் சொல்ல வேண்டுமென்கிற ஆதங்கம் வந்தது. ஆதங்கம் ஆத்திரமாகித் தலைக்குள் ஏறி கோபமானது. பதில் பேசாமல் ரவி தன்னுடைய சைக்கிளின் மேலேறி உட்கார்ந்து வேகமாக ஓட்டினான்.

3

சுந்தரத்தினால் வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லை. சொந்தக்காரர்கள் அவரிடமிருந்து பணத்தை வாங்கிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வீடு தேடி வந்தார்கள். அவருடைய மனைவி சரஸ்வதி, அவர் வீட்டில் இல்லை என்று சொன்னாலும் அவரைப் பார்த்துவிட்டுப் போகிறோம் என்று காத்திருந்தார்கள். லாட்டரி சீட்டில் அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் விழுந்த செய்தி ஊர் முழுக்க பரவியிருந்தது. அவரைப் பார்த்துச் செல்வதற்கென நிறைய பேர் வந்தார்கள். அப்போதே தங்களுக்கு வேண்டிய பணத்தைச் ெசால்லி வைத்தார்கள். தூரத்துச் சொந்தக்காரர்கள் சிலர் பஸ்ேஸறி வந்தார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லுங்க, ஐந்தாயிரம் கொடுக்கச் சொல்லுங்க என்று சரஸ்வதியிடம் சொன்னார்கள்.

“எத்தன நா நாங்க நூறு அம்பதுன்னு சுந்தரத்துக்குத் தூக்கிக் கொடுத்துருப்போம். அரிசின்னு கேட்டதும் அள்ளி கொடுத்தோம். கணக்கெல்லாம் இல்லை. எங்ககிட்ட இருந்துச்சு கொடுத்தோம். இப்ப உங்களுக்குப் பணம் வருது. நாங்க கேட்குறது தப்பா” என்று உரிமையோடு பேசினார்கள். அவர்களுக்கு, சுந்தரத்திடமிருந்து கிடைக்கிற பணம் கிடைக்கட்டும். அதுவரை தங்களுக்கு லாபம் என்ற எண்ணம்.

“நாங்க இல்லைன்னு சொல்லலண்ணே” என்று சரஸ்வதி சமாளித்துப் பார்த்தாள். அவர்கள் ஊருக்குப் போவதாகத் தெரியவில்லை. ஒரு தடவை சுந்தரத்தைப் பார்த்துவிட்டுச் சென்றால் நிம்மதியாக இருக்குமென்று நினைத்துக் காத்திருந்தனர். சரஸ்வதி அவர்களைச் சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைக்க பெரும்பாடாக இருந்தது. சுந்தரம், காலையில் பேட்டைக்கு வேலைக்குச் சென்றால் அங்கு தன்னைத் தேடி வந்துவிடுகிறார்கள். ராத்திரி லாட்டரி சீட்டுக் கடைக்குச் சென்றால் அங்கும் தன்னைத் தேடி வந்துவிடுகிறார்கள் என்று நினைத்தார். வீட்டிலிருக்கும் போது யாராவது வருவதுபோல தெரிந்தால் கக்கூஸிலும் குளிப்பறையிலுமாகப் பதுங்கிக்கொள்வார். தன்னைத் தேடி வந்தவர்கள் சென்றதற்குப் பிறகு வெளியே வருவார். ஒரு நாள் சமாளிக்க முடிந்தது. அடுத்த நாள் பிரச்சினையாகிவிட்டது.

சுந்தரம் குடியிருந்தது நாராயணசாமி காம்பவுண்ட். மொத்தம் இருபது வீடுகள். இரண்டு வீடுகளுக்கு ஒரு கழிப்பறையும் குளியலறையும் கட்டியிருந்தார்கள். சுந்தரம் கழிப்பறையிலும் குளியலறையிலும் மாறி மாறி ஒளிந்து வந்ததை முதலில் கண்டுபிடித்தது பக்கத்து வீட்டுக்காரப் பெண் குசிலிதான். அப்பெண்ணிற்கும் சரஸ்வதிக்கும் நீண்ட நாட்களாக உள்பகை இருந்தது. அவர்களுக்குள் சண்டை வராத நாளில்லை. கழிப்பறைக்குப் போவதில் தொடங்கி தண்ணீர் பிடிப்பதுவரை சண்டை ஆரம்பித்து வளர்ந்திருந்தது. உன் வீட்டு வாசல் குப்பையை என் வீட்டுப் பக்கமாக ஒதுக்கக் கூடாது என்று குசிலியும் உன் குப்பையை என் வீட்டுப் பக்கமாக ஒதுக்கக் கூடாது என்றும் சரஸ்வதியும் சண்டை போட்டனர். சமாதானம் செய்வதற்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண்கள், இருவரையும் கொஞ்சம் பொறுத்து போகச் சொன்னார்கள். சரஸ்வதியும் குசிலியும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டனர். அப்பெண்களால் குப்பை பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. தண்ணீர் பிரச்சினைக்குக் காலையில் நீ பிடி, சாயங்காலம் அவள் பிடிக்கட்டும் என்று சமாதானப்படுத்தி வைத்தனர். அதற்கு குசிலி ஒத்துக்கொண்டாள். குசிலி வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறாள். ஏலக்காய் கடை வேலைக்குப் போகவில்லை. சரஸ்வதி வேலை பார்க்கிற இடத்தில் நானும் வேலை பார்க்க மாட்டேன் என்று வீட்டில் இருந்தாள்.

காலையில் சரஸ்வதி வேலைக்குப்போனால் மாலையில் வருவாள். அவள் காலையில் தண்ணீர் பிடித்தால், மாலையில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாமென்கிற எண்ணத்தில் சரி என்றாள் குசிலி. காலையில் வேகமாகத் தண்ணீர் விழாது. சரஸ்வதி காலை எட்டு மணிக்குள் ஏலக்காய் கடைக்குக் போக வேண்டும். இல்லையென்றால் கணக்குப்பிள்ளை வேலைக்கு வர வேண்டாமென்று திருப்பி அனுப்பிவிடுவார். அவள் வேலை முடிந்து வருவதற்கு இரவு ஏழு மணிக்கு மேலாகிவிடும். தன்னுடைய மகளைத் தண்ணீர் பிடிப்பதற்கு நம்பக் கூடாது என்று காலையில் தண்ணீர் பிடிக்க ஒத்துக்கொண்டாள்.

அந்தச் சண்டைக்குப் பிறகு இருவரும் அடுத்த சண்டைக்குக் காத்திருந்தார்கள். எப்போது வேண்டுமென்றால் தங்களுக்குள் சண்டை வரும், அதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்கிற முன் ஆயத்தங்கள் இருவரிடமும் இருந்தன. அவர்கள் தனித்தனியாக ஆட்களைத் தங்கள் பக்கமாகச் சேர்த்துக் கொள்வதற்கு முயன்றனர். அந்தக் காம்பவுண்டில் சரஸ்வதிக்கு இரண்டு பெண்களும் குசிலிக்கு மூன்று பெண்களும் கூட்டுச் சேர்ந்தனர். இந்தச் சமயத்தில் சுந்தரத்திற்கு லாட்டரியில் ஐந்து லட்சம் பரிசு விழுந்ததும் குசிலி பதறிப்போனாள். அவளுக்கு, சுந்தரம் ஐந்து லட்சம் பரிசு பெற்றது வருத்தமாக இருந்தது. தண்ணியாகச் செலவு செய்தாலும் தீராது என்று அவளது கணவனிடம் சொன்னாள். சரஸ்வதியுடன் ராசியாகப்போவதா இல்லை திரும்பவும் ஏதாவது காரணத்தை வைத்து பெரிய சண்டை போடுவதா என்று குழம்பியிருந்தாள். அந்தக் குழப்பத்தில் கழிப்பறைக்குச் சென்ற போது அங்கு பதுங்கியிருந்த சுந்தரத்தைப் பார்த்தாள்.

குசிலிக்கு சுந்தரத்தைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் வரவில்லை. சுந்தரம் வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு மனம் மாறியது. இதுநாள்வரை சரஸ்வதியின் மேலிருந்த அத்தனை குரோதங்களையும் வெறுப்புகளையும் அக்காட்சி மாற்றிவிட்டது. சுந்தரத்தின் கால்களும் தொடைகளும் அவளை ஏக்கங்கொள்ளச் செய்தன. அவள் கழிப்பறையின் முதல் படியில் நின்றிருந்ததால் காம்பவுண்ட் வீடுகளிலிருந்த மற்றப் பெண்களுக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லை. அதனை அவள் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள விரும்பினாள். வாளி நிறைய தண்ணீருடன் கழிப்பறைக்கு வந்து கதவைப் பூட்டினாள்.

சுந்தரம் இதனை எதிர்பார்க்கவில்லை. தப்பிச்செல்ல முடியாமல் திணறினார். சத்தம் போட்டால் என்னாகும், வீட்டுக்குள் உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களுக்குத் தெரிந்தால் என்னாகும் என்று யோசித்தார். சுந்தரம் அவளைக் கண்டதும் ஒதுங்கி மூலையில் நின்றார். சண்டைக்காரி. தன்னைப் பார்த்தாளா, பார்க்கவில்லையா. பார்த்துவிட்டு வேண்டுமென்றே இப்படி செய்கிறாளா என்று பயந்திருந்தார். அவருக்கு வியர்த்தொழுகியது. அவள் அவரைப் பார்த்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. கழிப்பறையில் யாருமில்லையென்பதுபோல, “ஆத்திரத்தை அடக்குனாலும் மூத்திரத்தை அடக்க முடியாது” என்று மெதுவாக சொல்லி சேலையை இடுப்புவரைத் தூக்கிக் குத்த வைத்தாள்.

சுந்தரம் முகத்தைத் திருப்பிக் கொள்ள நினைத்தார். அவரால் உடம்பையும் முகத்தையும் திருப்பி வைத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு இடுக்கலான இடம். மூச்சை இழுத்துப் பிடித்து நெஞ்சையும் வயிற்றையும் சாகசம் செய்வதுபோல் சுவருடன் ஒட்டி நின்றார். கழிப்பறை பீங்கான் கோப்பை மேல் ஏறி நின்றால் சௌகரியமாக ஒருவர் நிற்க முடியும். மேற்கொண்டு வாளியும் அதற்குள் கப்பையும் வைப்பதற்கு மட்டும் இடமிருந்தது. வீட்டுக்காரர் வாடகைக்குக் குடியிருப்பவர் தங்களது அன்றாட சாகசமான செயல்களைக் கழிப்பறையிலிருந்து தொடங்க வேண்டுமென்கிற எண்ணத்தில் கட்டப்பட்ட கழிப்பறை அது. இரவில் கைவிளக்கைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு போக வேண்டும். இல்லையென்றால் தடுமாறி விழுந்துவிடக்கூடும்.   

சுந்தரம் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தார். அவளது கருத்த புட்டத்தையும் இடுப்பையும் சேலையைத் தூக்கும் போது பார்த்தவர் கண்களை மூடிக்கொள்ள முயற்சி செய்தார். சிறுநீர் கழிக்கும் சத்தம் அவருக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது. அவள் சிறிது நேரம் வெறுமனே பீங்கான் கோப்பையின் மேல் அமர்ந்திருந்தாள். ஒருவேளை மலங்கழிக்க வந்திருப்பாளோ, அப்படியென்றால் என்ன செய்வது. கத்தி ஊரைக் கூட்டி தன்னை அசிங்கம் செய்தால் என்னாகும் என்று அவருக்கு உடல் நடுங்கியது. கால்களும் கைளும் நடுங்குவது கூடுதலாகியது.  

குசிலி எழுந்துகொண்டதும் சேலையை இறக்கிவிடவில்லை. சேலையை மேலும் தூக்கிப்பிடித்தாள். கால்கள் இரண்டையும் அகட்டி நின்று தொடை இடுக்குகளில் தண்ணீரை ஊற்றி தேய்த்துக் கழுவினாள். கால் பாதங்களுக்குத் தண்ணீரை ஊற்றியவள் வாளியிலிருந்த நீர் தீர்ந்ததும் சேலையை இறக்கிவிட்டாள். வாளியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். கழிப்பறைக்கு வெளியே செல்வது மாதிரியான மடக்குக் கதவு. அவள் கதவை முழுமையாகத் திறக்காமல், அளவாகத் திறந்து வெளியேறினாள். கதவை திறந்ததும் தெரியவில்லை, அடைத்ததும் தெரியவில்லை. ஆனால் வெளியேறும் போது வாசலில் நின்று சுந்தரத்தின் கால்களைப் பார்த்தாள். அவள் பார்த்ததை அவரும் கவனித்தார். வேட்டியைத் தொடைகளுக்கு மேலாகத் தூக்கி கட்டியிருப்பதைப் பார்த்தவர் சிறிது நேரம் தன்னுடைய தொடைகளையும் கணுக்கால்களையும் பார்த்தார். வேட்டியை கீழே இறக்கிவிடவில்லை. சிறிது நேரம் வெளியே என்ன சத்தம் கேட்கிறது என்று கூர்ந்து கவனித்தவர் கதவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டார். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே பார்த்தார். ஆட்கள் யாருமில்லை. கதவை வேகமாகத் திறந்து வெளியேறினார். திறந்த கதவை மூடவில்லை.

சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்து உட்கார்ந்தார். தன்னைத் தேடி வந்தவர்கள் யாருமில்லாதது அவருக்குச் சிறிது நிம்மதியைத் தந்தது. பானையிலிருந்த நீரை முகர்ந்து குடித்தார். முகத்தையும் உடம்பையும் துடைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளிருந்து அப்போதுதான் வாசலுக்கு வருபவதுபோல் வந்து எட்டிப் பார்த்தார். சரஸ்வதி வளர்க்கும் கோழிகளும் அதன் குஞ்சுகளும் நாய் குலைச்சலுக்குப் பயந்து அவருடைய கால்களுக்கு ஊடே ஓடியது. கோழியின் இறக்கையும் அதன் கதகதப்பான சூடும் தன்னுடைய கால்களில் தொட்டுச் சென்றதை உணர்ந்தவர் குறுகுறுப்பாகி உடம்பு புல்லரிப்பதை உணர்ந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய அறையை மெதுவாகத் தடவினார்.

சரஸ்வதியையும் அவருடைய மகள் கலைச்செல்வியையும் தேடினார். எங்கே சென்றுவிட்டார்கள். இந்நேரத்தில் வீட்டில்தானே இருப்பார்கள் என்று அவர்களைத் தேடினார். சரஸ்வதி வேலைக்குச் செல்வதற்கு இன்னமும் நேரமிருக்கிறது. அவள் வேலைக்குச் சென்றதற்குப் பிறகுதான் கலைச்செல்வி பள்ளிக்கூடத்திற்குச் செல்வாள். அவர்களைக் காணதாது அவருக்கு எரிச்சலை உண்டாக்கியது. பக்கத்து வீட்டிற்குச் சென்றிருக்கிறார்களா, இருவரும் ஒரே நேரத்தில் எங்கும் போக மாட்டார்களே, யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள் என்கிற எண்ணத்தில் அடுத்த வீட்டை எட்டிப் பார்த்தார். அவர்கள் அங்கு இல்லை. வீட்டு வாசலில் கால்களை நீட்டி உட்கார்ந்தார். அவருக்குச் பதற்றமும் பயமும் நடுக்கமும் குறைந்திருந்தது. குசிலியினால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார். தற்செயலாக அவர் அவளது வீட்டை எட்டிப் பார்த்தார்.

குசிலி வடிகஞ்சியைச் சாக்கடையில் கொட்டுவதற்காக வாசலுக்கு வந்தவள் அவரைப் பார்த்ததும் நின்றாள். சுந்தரத்திற்கு மனம் அதிர்ந்து அடங்கியது. இப்போது அவரால் முகத்தையும் உடம்பையும் திருப்பிக்கொள்ள முடிந்தது. ஆனால் காதும் மனமும் திரும்பாது என்பது அவருக்குத் தெரியும். தன்னுடைய முதுகிற்குப் பின்னால் அவளது கொலுசின் ஒலி கேட்கிறதா, அவள் பேசுகிறாளா என்பதை அறிய ஆர்வமானார். அவளது செருமல் சத்தம் கேட்டது. மிகவும் சிரமப்பட்டு செருமுகிறாள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. முதல் தடவை அச்சத்தம் கேட்டு நின்றது. அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரண்டாவது தடவையும் மூன்றாவது தடவையும் செருமல் ஒலி விசித்திரமாகக் கேட்டது. என்னைப் பார், என்னைத் திரும்பிப் பார் என்பது போன்ற ஒலி அதனுடன் கலந்திருப்பதாக அவர் உணர்ந்து திரும்பினார். அவளைப் பார்த்தார். அவள் சொருவியிருந்த முந்தியை எடுத்துவிட்டு அடிவயிறு தெரிய நின்றிருந்தாள். அடிவயிறு காய்ந்த இலவம் காயின் நிறத்திலிருந்தது. அதில் கறுப்பு வரியாகத் தெரியும் ரோமங்கள். முந்தியை இழுத்துவிட்டு மறைத்தும் திறந்தும் காட்டியவள் வீட்டுக்குள் சென்றாள். சுந்தரத்தினால் வீட்டிற்குள்ளிருக்க முடியவில்லை. வாசலுக்கு வந்து நிற்கவும் முடியவில்லை. உடல் காய்ச்சல் கண்டதுமாதிரி கொதிக்க, மனம் நிலையில்லாமல் அலைந்தது. கையைப் பிடித்து இழுத்துவிடலாமென்கிற யோசனைகூட அவருக்கு வந்தது.   

தண்ணீரை முகர்ந்து குடித்தார். இரண்டு செம்பு நீரும் வயிற்றுக்குள் சென்று மூத்திரம் முட்டியது. கழிப்பறைக்குச் சென்றார். சிறுநீர் கழித்துவிட்டு வாசலுக்குப் போகும் போது அவள் வந்து நிற்பாள், அவளைப் பார்த்துவிடலாமென்கிற ஆசை அவருக்கு உண்டானது. சிறுநீர் வெளியேற வெளியேற ஆசை அதிகமானது. எதற்காக அவள் மேல் இவ்வளவு ஆசை தனக்கு வருகிறது, இத்தனை நாட்களாக இல்லாத விருப்பம் இன்று எதற்காக வருகிறது என்று யோசித்தார். கழிப்பறையிலிருந்து வெளியே வந்தவரின் கண்கள் அவளது வீட்டைப் பார்த்தன. குசிலி இல்லாதது அவருக்கு வேதனையானது. வருத்தத்தோடு நடந்து வீட்டுக்குள் நுழைந்தார். சரஸ்வதி, காலையில் சாப்பிடுவதற்கு என்ன செய்து வைத்திருக்கிறாள் என்று சமையலறையைப் பார்த்தார். காப்பி சட்டியைத் தவிர வேறெதுவுமில்லை. காப்பி குடித்த தம்ளர் கழுவாமல் இருந்தது. சமையலறைக்குள்ளிருந்த மண்ணெண்ணெய்யின் வாடை தொண்டையைக் கமற்றியது. இருமினார். நல்ல இருமல். இந்நேரம் எங்கு சென்றிருக்கிறாள் என்று சரஸ்வதியின் மேல் கோபமாக வந்தது. காம்பவுண்ட் வாசலுக்குச் சென்று பார்க்கலாம் என்று வீட்டு வாசலுக்கு வந்து நின்றார்.

குசிலி அவளது வீட்டு வாசலில் நின்றிருந்தாள். அவள் நெஞ்சைப் பிடித்து செருமினாள். அந்தச் செருமலுக்குண்டான அர்த்தத்தைத் தெரிந்துகொண்ட சுந்தரம் அவளது அடிவயிற்றைப் பார்த்தார். அவளும் அதற்காகக் காத்திருந்ததுபோல் ெசாறுவியிருந்த சேலை முந்தியை எடுத்துவிட்டாள். அவர் வாசற்படியில் அமர்ந்துகொண்டார். கீழே விழுந்துவிட்ட எதையோ தேடுவதுபோல குனிந்து தேடினாள். அவளது கண்கள் தரையில் இல்லை. பதிலாக வாசற்படியில் அமர்ந்திருந்த சுந்தரத்தைப் பார்த்தது. சுந்தரம் பார்க்கட்டும் என்று சிறிது நேரம் குனிந்தவாறு மண்ணில் விரல் வைத்து மனம் விரும்பியபடி கோடுகளையும் புள்ளிகளையும் வளையங்களையும் இழுத்தாள். பிறகு அழித்தாள். சுந்தரத்தின் மனம் படபடப்பாக இருந்தது. அவளையும் தெருவையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

4

கலைச்செல்வி பள்ளிக்கூடத்திலிருந்து வேகமாக சைக்கிளிலில் வந்திறங்கினாள். உடம்பு முழுக்க வியர்த்து நனைந்திருந்தது. முகத்தில் வியர்வை வடிந்தது. சைக்கிளை வீட்டுக்கு எதிர்த்த சுவரில் நிறுத்திவிட்டு கைக்குட்டையில் முகத்தைத் துடைத்தாள். பின்கேரியரில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டாள். வாசலுக்கு மேலே முனீஸ்வரன் கோயில் எலுமிச்சைப் பழத்தை கட்டி வைத்திருந்த இடத்திற்குப் பக்கத்தில் வீட்டுச் சாவி இருந்தது. அதை எடுத்துக் கதவைத் திறந்தாள். அம்மா வருவதற்கு இன்னமும் நேரமிருக்கிறது, அதற்குள் வீட்டுப்பாடங்களை முடித்து வைத்துவிட்டு, சாப்பிட்டுப் பாத்திரங்களைக் கழுவி வைத்துவிடுவோம் என்று எழுதத் தொடங்கினாள்.

வீட்டுப்பாடங்களை எழுதி முடித்து, தட்டில் சோறு போட்டுச் சாப்பிட்டாள். தனித்தனிப் பாத்திரங்களில் சோறும் சாம்பாரும் ரசமும் அப்பளம் இருந்தது. அப்பளம் வதங்கி சவுக்சவுக்கென்றிருந்தது. சாம்பாரில் காய் எதுவுமில்லை. தக்காளியும் பருப்பும் கரண்டி நிறைய வந்தது. சாப்பிட்டு முடித்துப் பாத்திரத்தைக் கழுவி வைத்தாள். முகத்தை மட்டும் கழுவி பவுடர் போட்டுக்கொண்டு தயாரானாள். உதட்டிலும் கையிலும் ரசத்தின் வாசம் வரக் கூடாது என்று பவுடரிட்டாள். வாசலையும் சுவரிலிருந்த கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தாள்.  

சரஸ்வதி, முனிசிபாலிட்டி சங்கு ஊதுகிற நேரத்திற்குள் வீட்டுக்கு வந்துவிடுவாள். ஆனால் இன்று இன்னமும் வரவில்லை. காம்பவுண்ட் வீடுகளில் விளக்குகள் எரியத் தொடங்கின. சரஸ்வதியின் பக்கத்து வீட்டுக்காரப் பெண் குசிலி விளக்குப் போட்டுவிட்டு வாசலை எட்டிப் பார்த்தாள். கலைச்செல்வி பள்ளி சீருடையில் நின்றிருந்ததைப் பார்த்ததும் முதலில் சிரித்தாள். பதிலுக்கு அவளும் சிரித்தாள். இரண்டு நாட்களில் குசிலி சரஸ்வதியுடன் சுமுகமாகிவிட்டாள். அவளாக வீட்டுக்கு வந்து பேசினாள். இரண்டு முறுக்கை கடையில் வாங்கி, வீட்டில் முறுக்கு மாவு இருந்தது சுட்டேன் என்று பொய் சொன்னாள். சரஸ்வதியும் பதிலுக்கு ஐந்தாறு எள்ளுருண்டைகளை ஏலக்காய் கடையிலிருந்து வரும் பொழுது வாங்கி, இந்தா எள்ளுருண்டை என்று அவள் தந்து முறுக்குக் கணக்கைத் தீர்த்தாள்.

குசிலி, கலைச்செல்வியைப் பார்த்து வீடு பூட்டியிருக்கிறதா, சாவி இல்லையா என்று அக்கறையாக விசாரித்தாள். அவளும் சாவி இருக்கிறது அம்மாவுக்காகக் காத்திருக்கிறேன் என்று பதில் சொன்னாள். குசிலி அவளது வீட்டிற்குள் சென்றதும் கலைச்செல்விக்கு எரிச்சலாக இருந்தது. சரஸ்வதி இன்னமும் வரவில்லை என்கிற கோபம் அவளிடமிருந்தது. ஏலக்காய் கடையில் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல் வழியில் நின்று யாருடனாவது பேசிக்கொண்டிருப்பாள் என்று அவளைத் திட்டினாள். சாயங்காலம் அம்மாவும் மகளும் கடைக்குச் சென்று வர வேண்டுமென்று பேசி வைத்திருந்தனர். சரஸ்வதி தனக்குக் காப்பிக்கலரில் ஜாக்கெட் பிட் எடுக்க வேண்டுமென்று சொன்னதும் கலைச்செல்வியும் தனக்கு ரிப்பனும் ஹேர்பின்னும் வாங்கித் தர வேண்டுமென்று கேட்டிருந்தாள்.

கலைச்செல்வி லாட்டரி சீட்டிலிருந்து பணம் கிடைத்ததும் என்னென்ன செய்ய வேண்டுமென்கிற பட்டியலை அவளது நோட்டில் எழுதி வைத்திருந்தாள். அந்தப் பட்டியலில் புதுவீடு முதலிடத்தில் இருந்தது. சரஸ்வதியிடம் பணம் கிடைத்தால் நீ என்ன செய்வாய், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு அவள் யோசித்தாள். அந்த எண்ணம் அவளிடம் இல்லை. அவளுக்குப் பரிசுத் தொகை குறித்து ஓர்மையான சிந்தனை இன்னமும் உருவாகவில்லை. மயக்கமாக இருந்தாள். ஆனால் அவளுக்கும் புதுவீட்டிற்குச் செல்ல வேண்டுமென்கிற திட்டம் இருந்தது. ஐந்து லட்சம் ரூபாயில் கமிஷன் தொகைப் போக கிடைக்கும் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு பத்திரப்படுத்த வேண்டுமென்று அவளது தம்பி செல்லத்துரை சொல்லியிருந்தான். அவனுக்குக் கலைச்செல்வியைத் திருமணம் முடித்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை இருந்தது. அவளைத் திருமணம் செய்துகொண்டால் தனக்கு அந்தப் பணம் கிடைத்துவிடுமென்கிற திட்டத்தில் அப்படி சொல்லியிருந்தான். சரஸ்வதி தன் தம்பி சொல்லும் யோசனைகளையும் திட்டங்களையும் கேட்டுத் தலையாட்டினாள். அவளால் மறுபேச்சு பேச முடியவில்லை. ஆனால் கலைச்செல்வி, செல்லத்துரையிடம், “மாமா பணத்தை என்ன செய்யுறதுன்னு எங்களுக்குத் தெரியும்” என்று சொன்னதும் அவனுக்கு ஏமாற்றமாகப் போனது. இப்போதே இப்படி வாய் பேசுகிறாள். திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பேசுவாளோ என்று கவலையோடு இருந்தான். ஐந்து லட்சம் பரிசுத் தொகை கிடைக்கிறது என்பதால் மட்டுமே அவன் கலைச்செல்வியைத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தான். அந்தப் பணம் தனக்குக் கிடைக்கவில்லையென்றால் அவளை எதற்காகத் திருமணம் செய்ய வேண்டும், ஊரில் வேறு யாருமில்லையா என்று செல்லத்துரை தன் அம்மாவிடம் சொன்னான். அவனது அம்மா, முதலில் பணம் அக்கா கைக்கு வரட்டும் பிறகு மற்றதைப் பேசுவோம் என்று அவனை அமைதியாக இருக்கச் சொன்னாள். 

சுந்தரத்திற்கும் சரஸ்வதிக்கும் கலைச்செல்வி ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்ந்திருந்தாள். லாட்டரி சீட்டில் பணம் கிடைத்ததும் யாருடனும் பேசக் கூடாது, முக்கியமாகப் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாது. அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகாமல் புதுவீட்டிற்கு முன்னால் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்ய வேண்டுெமன்கிற ஆசையும் அவளிடமிருந்தது. ஆனால் இதனையெல்லாம் அவள் நோட்டில் எழுதி வைக்கவில்லை. நோட்டைப் புரட்டிப் பார்த்துவிட்டு மூடி வைத்தவள், வாசலைப் பார்த்தாள். சரஸ்வதி நின்றிருப்பது தெரிந்தது.

“ஏன் இவ்வளவு நேரம். சீக்கிரம் வந்து தொலைய வேண்டியதுதானே” என்று கோபமாகக் கத்தினாள்.

சரஸ்வதி அவசரமாக வாளியில் தொட்டியிலிருந்த தண்ணீரை முகர்ந்துகொண்டு கழிப்பறைக்குச் சென்றாள். கதவை இழுத்து மூடும் சத்தம் பலமாகக் கேட்டது. கலைச்செல்விக்குக் கோபம் வந்து ச்சே என்று கத்தினாள். கண்ணாடியின் முன் நின்று முகத்தையும் ஜடையையும் மாறிமாறிப் பார்த்தாள். ஜடையை முன் பக்கமாக எடுத்துவிட்டுப் பார்த்தாள். பிறகு முதுகுப்புறமாக எடுத்துவிட்டாள். அவளுக்கு ஒரே ஜடையாகப் போடலாமா என்கிற யோசனை வந்தது. இரண்டு ஜடைகளையும் பிரிக்க வேண்டும். ஒத்த ஜடை போடுவதற்கு நேரமாகும் என்று அப்படி விட்டுவிட்டாள்.

சரஸ்வதி வேகமாக வந்தாள். “வா வா. போனதும் வந்துருவோம். வந்து சோறாக்கணும்” என்று சொன்னாள். அவர்கள் வாசலுக்கு வந்து நின்றுகொண்டனர். கலைச்செல்வி வீட்டைப் பூட்டி விட்டுச் சாவியை மணிப்பர்ஸில் வைத்துக்கொண்டாள். அவளுக்கு இன்னமும் புறப்படுவதற்கு மனம் வரவில்லை. அம்மாவிடம் இரட்டை ஜடையைப் பிரித்து ஒரே ஜடையைப் போடச் சொன்னால் திட்டுவாள். இந்த வயதில் உனக்கெதற்கு ஒத்த ஜடை என்று சண்டை வரும் என்று நினைத்தாள். இரட்டை ஜடையை முதுகுப் பக்கமாக எடுத்துவிட்டாள். ஆனால் அது ஒன்று முதுகிலும் மற்றொன்று நெஞ்சிலுமாக விழுந்தது. சரஸ்வதியுடன் நடக்கும் போது அவளுக்குப் பக்கத்தில் நடக்க வேண்டும் இல்லையென்றால் பின்னால் நடந்து வர வேண்டும். அவளுக்கு முந்தி நடக்கக் கூடாது. அவளுக்குக் கோபம் வந்துவிடும். கலைச்செல்வி அவளுக்குப் பின்னால் மெதுவாக நடந்தாள். அவர்கள் முனீஸ்வரன் கோயிலைக் கடக்கும் போது நின்று சாமி கும்பிட்டனர்.

சரஸ்வதிக்கு முனீஸ்வரன் மேல் நம்பிக்கை இருந்தது. இந்தத் தெருவுக்குக் குடி வந்ததிலிருந்து அவனை நம்பித்தான் அடுப்பில் உலை வைக்கிறாள். அது சோறாக வெந்து, வீட்டிலிருப்பவர்களுக்குப் பசியாற்றுகிறது என்று தினமும் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டாள். ஏலக்காய் கடையில் வேலை இல்லையென்று சொன்னால் அவன் மேல் கோபம் வந்து திட்டுவாள். என் சோற்றில் மண்ணையள்ளி போட்டுட்டே முனீசுவரா என்று பொழுதடையும் வரை கோபமாக இருப்பாள். மறுநாள் வேலைக்குச் சென்றதும் அவளது கோபம் தீர்ந்துவிடும். முனீஸ்வரனுக்குப் பொங்கல் வைக்க வேண்டுமென்கிற ஆசை அவளுக்கு இருந்தது. அதற்கு இன்னமும் நேரம் வாய்க்கவில்லை. லாட்டரி சீட்டில் பரிசு விழுந்த செய்தியை சுந்தரம் அவளிடம் சொன்னதும் ராத்திரி என்று பார்க்காமல் கதவைத் திறந்து கோயிலுக்குச் சென்றாள். பாலமுருகன் பலசரக்குக் கடை அடைப்பதற்குள் கடனுக்குச் சூடமும் பத்திக் குச்சியும் வெற்றிலையும் சுருள் பாக்கும் வாங்கி முனீஸ்வரன் காலடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுது கையெடுத்து வணங்கினாள்.

சரஸ்வதிக்கு ஐந்து லட்சம் என்றால் எவ்வளவு பணம், அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் பணம். அதை வைத்து கலைச்செல்விக்குத் திருமணம் செய்து வைக்கலாம். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குப் போகலாமென்பது மட்டும் செல்லத்துரை பேச்சிலிருந்து தெரிந்தது. அதைத்தான் முனீஸ்வரனிடம் தினமும் கேட்டுக்கொண்டிருந்தாள். முனீஸ்வரன் தான் கேட்டதைத் தந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள்.

சரஸ்வதியும் கலைச்செல்வியும் ஜாக்கெட் பிட் எடுக்கும் கட்பீஸ் கடைகள் இருக்கும் தெருவுக்கு நடந்தனர். கடையின் வாசலிலிருந்த பையன்கள் வாங்க வாங்க என்று அழைத்தனர். சரஸ்வதி வாடிக்கையாகத் துணி வாங்கும் கைராசி கட்பீஸ் செண்டருக்குள் நுழைந்தாள். அந்தக் கடையில் வாசலில் புதிதாக இரண்டு பொம்மைகள் வைத்திருந்ததை கலைச்செல்வி பார்த்தாள். பொம்மைகள் இரண்டும் பெண் பொம்மைகள். ஒன்றில் சேலை கட்டியிருந்தார்கள். அதற்குத் தலைமுடி நீளமாகத் தொங்கியது. மற்றொன்றுக்குப் பாடியும் ஜட்டியும் மட்டும் மாட்டி நிறுத்தியிருந்தனர். அதற்குக் குட்டை முடி. கலைச்செல்விக்குச் சிவப்பு நிறத்தில் பாடியும் ஜட்டியும் மாட்டி நின்றிருந்த பொம்மையைப் பார்த்ததும் வெட்கம் வந்தது. அதனைப் பார்த்தும் பார்க்காததுபோல் தலையைக் குனிந்தபடி கடைக்குள் சென்றாள்.

கடையில் சரஸ்வதியை அடையாளம் தெரிந்து வைத்திருந்த பெண்ணொருத்தி சிரித்தபடி “வாங்க அக்கா, ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரல” என்று தன் பக்கமாக அழைத்தாள். அவளுக்குப் பின்னால் ஜாக்கெட் துணிகள் ரூல் தடியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கலர் துணிகளை ஒவ்வொன்றாகப் பார்த்தவள் காப்பிக் கலரிலிருந்த துணியினைக் கைக்காட்டி “இதில எண்பது பாயிண்ட் கிழிச்சு கொடுங்க” என்று கேட்டாள். கடைக்காரப் பெண்ணும் மீட்டர் ஸ்கேல் எடுத்து எண்பது பாயிண்ட் அளந்து கத்தரிக்கோலால் கிழித்து மடித்தாள். “வேறக்கா” என்று சரஸ்வதியின் முகத்தைப் பார்த்துக் கேட்டதும் அவளுக்கு வெட்கமாகப் போனது. அவளுக்குச் சட்டைத் துணிகளைப் பார்த்ததும் ஆசை ஆசையாகத்தான் இருந்தது. கையில் காசில்லை. இந்தத் துணியை எடுப்பதற்கு ஒரு வாரமாகப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தாள். துணியை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுக்கும் இடத்திற்கு வந்த போது கல்லாவில் அமர்ந்திருந்தவர், “உங்க வீட்டுக்காரருக்கு லாட்டரி சீட்டில ஐந்து லட்சம் விழுந்திருக்குச் சொல்லுறாங்க நிசந்தானா” என்று கேட்டார். “ஆமாண்ணே” என்று சொன்னாள். அவர் அவள் தந்த பணத்தை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையைத் தரும் போது, “பணத்தை என்னா செய்யப் போறீங்க” என்று கேட்டார். சரஸ்வதி அவருடைய முகத்தைப் பார்த்தபடி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றாள். ஆனால் கலைச்செல்வி, “புதுசா வீடு வாங்கப் போறோம்” என்று வேகமாக சொன்னாள். அவர், “பணம் வந்ததும் எங்கள மறந்துறாதிங்க. ஜவுளி எடுக்க இங்க வாங்க. நம்மூரைவிட்டுட்டு வெளியூருக்குப் போய் ஜவுளி எடுக்காதிங்க” என்று சொன்னார். அவளும் சிரித்துக்கொண்டு சரி என்று தலையாட்டினாள்.

அவர்கள் இருவரும் கடையைவிட்டு வெளியேறி ரோட்டில் நின்று கொண்டனர். கலைச்செல்வி கடையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் பொம்மைகளைப் பார்த்துக் கொண்டாள். குட்டைத்தலை முடியோடு இருந்த பொம்மையை அவளால் பார்க்க முடியவில்லை. சரஸ்வதி, வந்ததுதான் வந்தோம் முருகன் கோயிலுக்குப்போய் விளக்குப் போட்டு வந்துவிடுவோம் என்று கோயிலைப் பார்த்தாள். அவளறியாமல் அவளது கால்கள் கோயில் பக்கமாக நடந்தது. “எங்கம்மா போறா எங்கம்மா போறா” என்று கலைச்செல்வி கேட்டாள். காது கேட்காதவள் மாதிரி நடந்தாள். கலைச்செல்வி அவளுக்குப் பின்னால் நடந்தாள்.

கோயிலில் கூட்டமாக இருந்தது. விளக்குப் போடுவதற்கு ஆண்களும் பெண்களும் இடித்துக்கொண்டு நின்றிருந்தனர். ஒருவருடைய இடுப்பு மற்றொருவரின் முகத்தில் உரசி நின்றதைப் பார்த்ததும் கலைச்செல்விக்குச் சிரிப்பாக இருந்தது. வாயைப் பொத்திக் கொண்டாள். முருகன் சிலைக்கு முன்னால் நின்று சரஸ்வதி கண்களை மூடி வணங்கினாள். அவளது உதடுகள் துடித்தன. கண்கள் இரண்டும் இமைகளுக்குள் இடமும் வலமுமாக அசைந்து அசைந்து நின்றன. கலைச்செல்வி நெற்றியில் விபூதி பூசிக்கொண்டாள்.

இருவரும் வாசலுக்கு வந்தார்கள். அவர்களுக்கு எதிரே காவி வேட்டி கட்டி வந்தவர் “சுந்தரத்துக்கு லாட்டரியில ஐந்து லட்சம் விழுந்திருக்காம் நிஜமா” என்று கேட்டார். அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“எனக்கு டீக்கடையில சொன்னாங்க. பழநி முருகனுக்குப் பாதை யாத்திரைக்கு வர்றதா வேண்டிக்கச் சொல்லு சுந்தரத்தை. அன்னதானம் தரச் சொல்லு” என்று அவர் கோயிலுக்குள் நடந்தார். சரஸ்வதி அவரை இதற்கு முன்னர் பார்த்த மாதிரி ஞாபகம். யோசித்தவாறு நடந்தாள். ஏதோ கடை வைத்திருக்கிறார் என்று முதலில் ஞாபகத்திற்கு வந்தது. எந்தக் கடை என்று யோசித்தாள். பழநிக்குப் பாதை யாத்திரையாக இவருடன் சுந்தரமும் சென்றிருக்கிறாரா என்று யோசித்தாள். அவளுக்கு எதுவும் ஞாபத்தில் வரவில்லை.

“ேஹர்பின்னும் ரப்பர் பேண்ட்டும் வாங்கித் தா” என்று கலைச்செல்வி ெசான்னாள். சரஸ்வதி அவளை அழைத்துக்கொண்டு ஃபேன்சி கடைக்குச் சென்றாள். கலைச்செல்வி நெளி ஹேர்ப்பின் அட்டை ஒன்றும் சாதா ஹேர்ப்பின் அட்டையில் ஒன்றும் ஜடைக்கு மாட்டுகிற டிஸ்கோ ரப்பர் பேண்ட் பாக்கெட்டும் ஒன்றும் வாங்கினாள். அவளுக்குக் கடையிலிருக்கிற பொருட்களை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை. பேன்சி கடைக்கு வரும் பொழுதெல்லாம் இந்த எண்ணம் அவளுக்கு வரும். அதை எடுக்க வேண்டும், இதை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் கடையை வேடிக்கைப் பார்ப்பாள். அவளுக்குத் திருப்தி ஏற்படாது. ஜடை முழுக்க ரப்பர் பேண்ட் போட்டுக்கொள்ள வேண்டும். நித்தம் கலர் கலராக ரிப்பன் கட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அப்பாவிற்குப் பணம் வந்ததும் தனக்குத் தனியாக சிறிது பணத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற திட்டமும் அவளிடம் இருந்தது.

காய்கறி கடைகள் இருக்கும் தெருவிற்குள் நடந்தார்கள். ஒரு ரூபாயிக்கு கொத்துமல்லியும் கருவேப்பிலையும் வாங்கினால் இரண்டு நாட்கள் ரசத்திற்கு ஆகுமென்று கடையைத் தேடினாள். பச்சைமிளகாய் சுத்தமாக இல்லை. தக்காளியைப் பார்த்ததும் வாங்க வேண்டுமென்ற நினைப்பு வந்தது. ைகயிலிருக்கும் காசை மனதிற்குள்ளாக எண்ணிப் பார்த்தாள்.

தக்காளி கடையில் கெட்டியான பழமாக வாங்கி முந்தியில் போட்டுக் கொண்டாள். ேஹர்பின்னுக்கும் ரப்பர் பேண்ட்டிற்கும் தக்காளிக்கும் பாதி காசு செலவாகிவிட்டது. மீதி காசில் என்ன வாங்குவது என்று தயங்கி நின்றாள். முதலில் கருவேப்பிலை கொத்துமல்லியும் வாங்கலாமென்று கடைக்குச் சென்றாள். கடைக்காரர் இவர்களைப் பார்த்ததும் “ரெண்டு ரூபாயிக்கு வாங்குங்க. ஒத்த ரூபாயிக்கு வாங்காதிங்க” என்று சொன்னார். அவள் ஒரு ரூபாய் கொடுத்து கொத்துமல்லியும் கருவேப்பிலையும் வாங்கிக் கொண்டாள். கடைக்காரர் இனுக்கி இனுக்கிக் கொடுத்தார். சரஸ்வதி, “இரண்டு தழை சேத்து வைங்கண்ணே, கருகப்பிள்ளக் குச்சியா இருக்கு” என்று சொன்னாள். “உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது. கடையை வழிச்சுக் கொடுக்கணும்” என்று புலம்பினார். கலைச்செல்விக்குக் கோபமாக வந்தது. தன்னை ரோட்டில் நிற்க வைத்து இப்படி அசிங்கம் செய்கிறாள் என்று வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவர்கள் கடையை விட்டுப் போகும் போது, “உங்களுக்கு லாட்டரியில ஐந்து லட்சம் பரிசு விழுந்திருக்கு. அதிஷ்டந்தான். ரெண்டு நாளைக்கு முந்தி அந்தச் சீட்டை நான் எடுத்து வெச்சிருந்தேன். காசு கொடுத்து வாங்க முடியலை. கடைசிநாளில் சுந்தரம் வாங்கிட்டாரு. அந்தச் சீட்டு நாலு பேரு கை மாறி சுந்தரத்துக்குக் கிட்டப் போயிருக்கு. உங்களுக்குக் கிடைக்கணுமின்னு இருக்குது” என்று சொன்னார். சரஸ்வதி அவர் சொல்வதைக் கேட்டதும் சங்கடாக இருந்தது. உண்மையில் லாட்டரியில் தங்களுக்குப் பரிசு கிடைக்காமல் கொத்துமல்லி விற்பவருக்கு கிடைத்திருந்தால் என்னாகியிருக்கும் என்று கவலையோடு நடந்தாள். அவளுக்கு உடம்பு நடுங்கியது.

 5

வித்யா வாசலில் காத்திருந்தாள். அவளுக்குப் பின்னால் அவளது அம்மாவும் அப்பாவும் நின்றிருந்தனர். ஸ்கூட்டர் வந்ததும் ஆலாத்தி எடுக்க வேண்டுமென்று விரும்பினாள். ரவிச்சந்திரன் ஸ்கூட்டர் வாங்கி வர தேனியிலிருக்கும் ஷோரூம்மிற்குச் சென்றிருந்தான். இன்னமும் வரவில்லை. காலையில் பத்து மணிக்குக் கடை திறந்ததும் முதல் டெலிவரியாகத் தந்துவிடுவதாகச் சொன்னார்கள். மதியம் மூன்று மணியாகிவிட்டது. இன்னமும் வரவில்லை. தேனியிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு இவ்வளவு நேரமா என்று கவலையாக இருந்தாள்.

மைதீன் ராவுத்தரிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தை அவர்கள் இருவரும் ராத்திரி முழுக்க எண்ணினார்கள். அவள் ரூபாய் தாள்களுக்கு நூறு தடவையாவது முத்தம் கொடுத்திருப்பாள். அதைப் பார்த்த ரவிக்குப் பொறாமையாக இருந்தது. இத்தனை தடவை தனக்குக்கூட முத்தம் தந்ததில்லை, தனக்குக்கூட வேண்டாம், பிள்ளைகளுக்குக் கொடுத்திருக்கிறாளா என்று நினைத்தான். ராவுத்தரிடம் முழுசாக லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியிருந்தான். ஜாமல் ராவுத்தர் தன்னுடைய மகனையும் எண்ணெய் செக்காட்டும் மிஷின் கடைக்குப் பங்காகச் சேர்த்துக்கொள்ளச் சொன்னார். ரவி மறுத்துவிட்டான். “தொழில் வேற, பழக்கம் வேற மாமா, என்னைத் தப்பா நினைக்காதிங்க” என்று பணத்தை வாங்கிக்கொண்டு வந்தான். மறுநாள் காலையில் தேனிக்குச் சென்று பஜாஜ் கப் ஸ்கூட்டர் டீலரிடம் வெள்ளை கலருக்கு ஆர்டர் கொடுத்தான். முழு பணத்தையும் கட்டி ரசீது வாங்கிக் கொண்டான். வெள்ளை கலர் ஸ்கூட்டரில் ரவிக்குப் பின்னால் உட்கார்ந்து பிள்ளைகளுடன் சினிமாவுக்குச் செல்லும் ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையை நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு ஏக்கமாக இருந்தது. சீக்கிரம் ஸ்கூட்டர் வராதா என்று ஏங்கினாள். வித்யாவுக்குப் பொறுமை இல்லை. அதற்குள் அவளது அப்பாவிடமும் அம்மாவிடம் ஸ்கூட்டர் வாங்கிய விசயத்தைச் சொல்லி வரவழைத்துவிட்டாள். கல்யாணம் வீடு மாதிரி தடபுடலாகயிருந்தது. காய்கறியும் அப்பளமும் பாயாசமுமாக மதிய சாப்பாடு தயாரானது.

ரவி, தன்னிடம் வேலை செய்யும் சுந்தரத்திற்கு லாட்டரியில் ஐந்து லட்சம் விழுந்து அவர் வண்டி வாகனம் புதுவீடு என்று நினைக்கும்போது தனக்கு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்ற ஆசை வரக் கூடாதா என்று நினைத்தான். வட்டிக்கு வாங்குகிறோம், உழைத்து சம்பாதித்து வட்டி கட்டுகிறோம். மாதத்திற்கு நாலு மெத்தைக்குப் பஞ்சு விற்றால்போதும் பணத்தைக் கட்டி அள்ளி சேர்த்துவிடலாமென்று நினைத்தான். வட்டிக்கு வாங்கி மூன்று நாட்கள் முடிந்துவிட்டது. மைதீன் ராவுத்தர் மூன்று நாட்களும் காலையிலும் மாலையிலும் பேட்டைக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்வதாக ஆட்கள் சொன்னார்கள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. இரண்டு லட்ச ரூபாயிக்குச் சொத்து வைத்திருக்கிறோம், சொந்த வீடு இருக்கிறது. பணத்தை வேறு தொழிலுக்குப் போட்டு சம்பாதிக்க வாங்கியிருக்கிறோம். புரோ நோட்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம். நம்பிக்கை இல்லாமல் எதற்காக, தான் இல்லாதபோது பேட்டைக்கு வந்து விசாரித்துவிட்டுச் செல்கிறார் என்று நினைத்தான். கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமா, கடன் வாங்கி ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா என்று யாரோ தனக்குப் பின்னால் இருந்துகொண்டு கூறுவதுபோலிருந்தது அவனுக்கு.

ஆனால் வித்யாவுக்கு இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையுமில்லை. ஸ்கூட்டர் வாங்கிய மறுநாள் வீரபாண்டிக்குப் போய் வர வேண்டும். தேனிக்குப் போக வேண்டும். தேனியிலிருக்கும் நாகர் புரோட்டா கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி சாப்பிட்டுவிட்டு வர வேண்டுமென்கிற ஆசையில் மிதந்து கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் புலம்பித் தவித்தாள்.

“வேணாம் வேணாமுன்னு சொல்றேன். என் பேச்சை கேட்கவே மாட்டேங்குறாருக்கா. நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க”

“ஸ்கூட்டரு எவ்வளவு வித்தியா”

“அரை லட்சத்துக்குப் பக்கத்தில வந்துருச்சுக்கா”

“வண்டியிருக்கிறது நல்லதுதான் வித்தியா. பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு வரலாம். பேட்டைக்குப் போய் வரலாம். மதியம் சாப்பாட்க்கு வந்துட்டுப் போகலாம்” என்று பக்கத்து வீட்டுக்காரப் பெண் சொன்னாள்.

“ஆமாக்கா அதான் நானும் ஒண்ணும் சொல்லல. சும்மா இருக்கேன்” என்றாள். அவளுக்குத் தெருக்காரர்கள் தன் மேல் பரிதாபங்கொள்ள வேண்டுமென்கிற எண்ணம் வந்தது. ஸ்கூட்டரைத் தெருவில் நிறுத்தக் கூடாது என்பதில் அவள் நோக்கமாக இருந்தாள். தனக்கு இந்தத் தெருவில் வேண்டாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது சீட்டில் பிளேடு போட்டுவிடுவார்கள். டயரை பஞ்சராக்கிவிடுவார்கள் என்று நினைத்தாள். யாரையும் நம்பக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். வீட்டிற்குள் ஸ்கூட்டரை நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்கி வைத்தாள். தேனியிலிருந்து ஸ்கூட்டரில் நான்கு மணிக்கு வந்தால் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துவரலாம் என்று நினைத்தாள். அவளும் கணவனுடன் பள்ளிக்கூடத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வரலாமென்று நினைத்தாள்.

ரவி மதியம் சாப்பிட்டாரா இப்போது எங்கிருக்கிறார் என்று குழப்பத்தோடு வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்தாள். ஸ்கூட்டர் வண்டி வீட்டிற்கு வரும் நாளில் பாயாசமும் உளுந்துவடையும் சுட்டுச் சாப்பிட வேண்டுமென்று செய்து வைத்திருந்தாள். மதியம் சாப்பிடாமலிருந்தது அவளுக்கு மயக்கம் வந்தது. தண்ணீரை வயிறு நிரம்ப குடித்ததால் சிறுநீர் வந்தது. அடக்க முடியவில்லை. கழிப்பறைக்குச் சென்ற நேரத்தில் ரவி ஸ்கூட்டரில் வந்துவிட்டால் என்ன செய்வது என்று அடக்கி வைத்திருந்தாள். சிறிது நேரம் அடக்கிக்கொண்டிருந்தவள் மேற்கொண்டு அடக்க முடியாமல் அவசரமாகக் கழிப்பறைக்குச் சென்று வந்தாள்.

பணத்தைக் கட்டுவதற்கு ஒருநாள், ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஒருநாள் என்று அலைய விடுகிறார்கள் என்று கடைக்காரனைத் திட்டினாள். அவளுக்கு ஆத்திரமாக வந்தது. தெருவில் எதாவது சத்தம் கேட்டால் கூட முக்குவரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள். அவளுக்குப் பசியால் காதடைத்தது. இதற்கு மேல் பசியோடு இருக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். வயிற்றுவலி வந்தால் நிற்காது, வேல்ராஜ் டாக்டரிடம் நான்கு நாட்கள் தொடர்ந்து ஊசி போட வேண்டும். டானிக் சாப்பிட வேண்டும் என்று வீட்டுக்குள் சென்று தட்டில் சோறு போட்டுச் சாப்பிட்டாள். அவளால் நிம்மதியாக ஓர்மையாக சாப்பிட முடியவில்லை. வடை சுட்டெடுக்கும் போது அவளும் அவளது அம்மாவும் பிய்த்து தின்று பார்த்தனர். மெதுவாக இருந்தது. சோற்றை வாயில் வைத்த போது தெருவில் சத்தம் கேட்டது. தட்டோடு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள். ஐஸ் வண்டிக்காரன் சைக்கிளில் பூவாத்து ஹாரன் அடித்துக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிந்தது. ஸ்கூட்டரில் ஹாரன் சத்தம் இப்படியா இருக்கும் என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சத்தத்தை முதலில் நன்றாகக் கேட்டுப் பழகிக்கொள்ள வேண்டும். தெருவுக்குள் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்துவிட வேண்டுமென்று நினைத்தாள்.

வீட்டுக்குள் சென்று தட்டை மடியில் வைத்து சாப்பிடத் தொடங்கினாள். இன்னொரு தடவை சோறு போட்டு சாப்பிடலாமா என்று யோசித்தாள். வேண்டாமென்று அவளது உள்மனம் சொல்லியது. வேகமாக எழுந்து தட்டைக் கழுவி வைத்தாள். சோற்று சட்டியையும் குழம்பு சட்டியையும் மூடி வைத்தாள். ஆசைக்கு இன்னொரு வடையை எடுத்து வாசலில் வந்து நின்றாள். படியில் அமர்ந்து மெதுவாகச் சாப்பிடத் தொடங்கினாள்.

பள்ளிக்கூடம் விடும் நேரமாகிவிட்டது. தெருவில் பிள்ளைகள் நடந்து சென்றனர். மகனையும் மகளையும் அழைத்து வர வேண்டுமென்று அவளது அப்பாவிடம் சொன்னதும் அவர் சைக்கிளை எடுத்துக் கொண்டுச் சென்றார். இன்னமும் சிறிது நேரத்தில் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். வீடு ஹேேஹவென்று சத்தமாகிவிடும். ஸ்கூட்டரில் ரவுண்ட் அடிக்க வேண்டுமென்று இருவரும் சண்டையிடுவார்கள் என்று அவளது கற்பனை அலைந்தது. அதேசமயத்தில் இந்த மனுஷன் இன்னமும் வராமலிருக்கிறாரே என்று கவலைப்பட்டாள். ஸ்கூட்டர் வரவில்லையென்றால் ஊருக்கு வந்துவிட வேண்டியதுதானே, எதற்காக அங்கிருக்க வேண்டுமென்று பதற்றமானாள். தொலைபேசி எண் இருந்தால் பேசலாம். எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. ரசீதையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். எழுதி வைத்திருந்தாலும் வைத்திருப்பார் என்று படுக்கை அறையில் தேடினாள். கண்டுப்பிடிக்க முடியவில்லை. அவளுக்கு நெஞ்சு துடித்தது. என்னமோ தனக்குப் பெரியதாகக் கெட்டது நடக்கப் போகிறது என்ற நினைத்தாள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கக் கூடாது. வீரபாண்டிக்கு வந்து மாலை வாங்கிப் போடுவதாக மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். மாரியாத்தா மாரியாத்தா என்று வாய் திறந்து புலம்பினாள். அவளறியாமல் கண்களில் நீர் திரண்டு நின்றது.

அவளது அப்பா, பிள்ளைகளை சைக்கிளில் உட்காரவைத்து வந்தார். பிள்ளைகள் வாசலையும் வீதியையும் மாறிமாறி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தனர். வீடு நெருங்க நெருங்க அவர்களது சத்தம் பெரியதாகக் கேட்க ஆரம்பித்தது. அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு சைக்கிளை விட்டு இறங்கினார்கள். அப்பா இன்னமும் வரவில்லையென்றதும் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. வித்யாவின் அருகில் அமர்ந்து அப்பா எங்க, ஸ்கூட்டர் இன்னும் வரலையா என்று தொனதொனவென கேட்டனர். வித்யா ஏற்கெனவே கோபத்தில் இருந்தாள். பிள்ளைகள் வந்து கேட்டதும் மேலும் எரிச்சலாகி “சும்மா உட்காருங்க. வருவாரு வருவாரு பெரிசா ஸ்கூட்டரு வாங்க போயிருக்கறாராம் ஸ்கூட்டர்” என்று முனங்கினாள்.

“அப்பா ஸ்கூட்டர் வாங்கலையாம்மா” என்று இரண்டு பேரும் ஒன்று சொன்னது போல் கேட்டதும் அவளுக்கு அழுகை வருவதுபோலிருந்தது. வித்யா எழுந்து சமையலறைக்குச் சென்று பிள்ளைகளுக்குத் தட்டில் சோறுபோட்டு வடையை வைத்து தந்தாள். பிள்ளைகள் அவர்களாகவே கைகளைக் கழுவிக்கொண்டு தட்டின் முன்பாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். யார் பின்னால் அமர்ந்து கொள்வது, யார் முன்னால் அமர்ந்து கொள்வது என்று அவர்களுக்குள் சண்டை நடந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் சண்டையிட ஆரம்பித்துவிடுவார்கள் என்று அதட்டு போட்டாள்.

வீட்டு வாசலில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்றார்கள். வித்யா எட்டிப் பார்த்தாள். அவர்களைப் பார்த்தும் பிள்ளைகள் அமைதியானார்கள். வித்யாவின் அப்பாவும் அம்மாவும் குழப்பத்தோடு வாசலுக்குச் சென்றார்கள். வித்யாவுக்கு என்னமோ நடந்து விட்டது என்று தெரிந்தது. அப்பாவுக்குப் பின்னால் நின்றாள். போலீஸ்காரர்களில் ஒருவர், “யாரும்மா வித்தியாங்குறது” என்று கேட்டதும் அவள் அப்பாவை விலக்கிவிட்டு முன்னால் வந்து நாந்தான் ஸார் என்று நின்றாள்.  

“உங்க வீட்டுக்காரர் பேருதான் ரவிச்சந்திரனா”

“ஆமா ஸார்”

“போடிவிலக்கில ஆக்ஸிடெண்ட்டாகி ஆஸ்பத்திரியில கிடக்குறாரு. ஸ்கூட்டர் நொறுங்கி நடுரோட்டில கிடக்குது” என்றார்.

எந்த ஆஸ்பத்திரி, என்ன விபரம் என்பதை வித்யாவின் அப்பா போலீஸ்காரர்களிடம் விசாரித்தார். வித்யாவுக்கு அதற்குப் பிறகு அவர்கள் பேசுவது எதுவும் காதில் கேட்கவில்லை. அவளுடைய காதுகளுக்கு ஸ்கூட்டர் நொறுங்கி நடுரோட்டில கிடக்குது என்பது மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டது. அவள் சத்தமாக அழத் தொடங்கினாள். அவள் அழுவதைப் பார்த்ததும் பிள்ளைகளும் அழுதார்கள். அவர்களை யாரும் சமாதானப்படுத்த வரவில்லை.   

6

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு சுந்தரத்தின் எண்ணம் முழுக்க சீனிவாசகத்திடம் இருந்தது. சனிக்கிழமைக்கு இன்னமும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று எண்ணியவருக்கு ஏக்கமாக இருந்தது. சனிக்கிழமை சீக்கிரமாக வந்துவிட வேண்டுமென்று காலண்டரைப் பார்த்துக் கொண்டார். சனிக்கிழமை மாலை நேரத்தை நினைத்தவருக்கு உடம்பு திகுதிகுவென்றானது. இப்போதே குடித்துவிட்டுப் புரோட்டா தின்றுவிட்டு வர வேண்டுமென்கிற ஆசை எழுந்தது. அவருக்குப் பீடி புகைக்கும் பழக்கம் இல்லை. கறிக்குழம்பு சாப்பிடும் தினத்தில் வெற்றிலை போட்டுக்கொள்வார். சனிக்கிழமை சாயங்காலம் சுந்தரம் பேட்டையிலிருந்து ஐந்துமணிக்கு பஜாருக்கு வந்துவிடுவார். வேலை முடிஞ்சு வந்துட்டேன். வீட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன் என்று கண் ஜாடையில் சொல்லிவிட்டுச் சைக்கிளை மிதித்து வீட்டுக்குப் பறந்துவிடுவார். அவசர குளியலை முடித்து நெற்றியில் பட்டையைப் போட்டு வெளுத்த வேட்டியும் சட்டையும் உடுத்திக்கொள்வார். அவர் கடைக்கு வருவதற்கு நேரமானால் சீனிவாசகம் வீட்டுக்குத் தேடி வந்துவிடுவான். சுந்தரம், வீட்டில் கலைச்செல்வி இருக்கும்போது சீனிவாசகத்தை வரச்சொல்வதில்லை. வீட்டுக்குள்ளும் வரவிடவும் மாட்டார்.

லாட்டரி கடையில் நிமுந்தாளுடனான சண்டைக்குப் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுந்தரம் அவன் மேல் அடிவிழாமல் காப்பாற்றியதை, சீனிவாசகம் ஞாபகம் வைத்திருக்கிறான் என்பது அவருக்குத் தெரியும். முதலில் அவனுடன் மீனாட்சி டீக்கடையில் பஜ்ஜியும் டீயும் குடிக்க ஆரம்பித்தார். பிறகு அவனுடன் சினிமாவிற்குச் சென்றார். அவனுடன் குடிக்கப் பழகினார். மூன்று வருடங்களாக, சீனியும் சுந்தரமும் வாரந்தோறும் சனிக்கிழமை கறி தின்று பிராந்தி குடித்து சினிமா பார்த்தார்கள். சுந்தரம் ஒரு நாள் செலவு செய்ததில்லை. சீனிவாசகம் தயக்கமில்லாமல் உள்பாக்கெட்டிலிருந்து டிக்கெட் பாக்கெட்டிலிருந்து வெளிபாக்கெட்டிலிருந்து பணத்தை மாறிமாறி எடுத்து செலவு செய்தான். சனிக்கிழமையென்றால் இருவருக்கும் தீபாவளி வந்துவிடுகிறது என்று பஜாரில் பேசினார்கள். சனிக்கிழமை செலவு செய்வதற்கென சீனிவாசகம் பணத்தைச் சேர்த்துவைத்தான். கடையிலும் வீட்டிலும் பணத்தை அவனது அண்ணனுக்குத் தெரியாமல் ஒளித்தான். ஏழு நாட்கள் சேகரித்ததைச் சுந்தரத்துடன் சேர்த்து ஒரே நாளில்  செலவழித்தான்.

சீனிவாசகம் பேக்பைபர் கோல்டு இல்லையென்றால் ஜானெக்ஸ்சா அரைபாட்டில் வாங்குவான். சீனியும் சுந்தரும் மெதுவாக ரசித்து ஊர்கதை உலகக் கதைகளைப் பேசி அரைப் பாட்டிலைக் குடித்து முடித்து, தியேட்டருக்குச் செல்வார்கள். தியேட்டருக்குப் படம் பார்க்கப் போவதில்லை. ஃபோன் காற்றில் உட்கார்ந்திருப்பார்கள். சுந்தரம் தியேட்டரில் உட்கார்ந்ததும் உறங்கிவிடுவார். சீனிவாசகம் இடைவேளை நேரத்தில் அவரை எழுப்பி விடுவான். சிறுநீர் கழித்ததும் பாதி போதை தெளிந்துவிடும். சீனி, சோடா வாங்கி வாய் கொப்பளித்து முகத்தைக் கழுவுவான். அவனுக்குச் சந்தோஷமாக இருக்கும். தினமும் இப்படி குடித்தால் நன்றாக இருக்கும் என்று சுந்தரத்திடம் சொல்வான். இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் படம் பார்ப்பார்கள். பசித்ததும் எழுந்து தியேட்டரைவிட்டு வெளியேறி வந்துவிடுவார்கள். கூட்டமில்லாத புரோட்டா கடைக்குச் சென்று உட்கார்ந்துவிடுவார்கள். “நல்லா சாப்பிடுங்கண்ணே. இன்னொரு ஆம்லெட் வாங்கிச் சாப்பிடுங்கண்ணே” என்று சப்ளையரை அழைத்து, “அண்ணனுக்கு வீச்சு புரோட்டா ஒண்ணு போட்டுக் கொடுங்க” என்று சுந்தரத்தை உபசரிப்பான். அவருக்கு உண்மையில் அப்பொழுதுதான் போதை ஏறும். போதை உடம்புக்குள் பிசாசு மாதிரி புகுந்து ஆடத் தொடங்கும். சிலசமயத்தில் பேசும். சமயத்தில் பாடும். நடுரோட்டில் நின்று அழும். பிறகு புலம்பும். அனைத்தையும் சீனி கேட்டு, “விடுங்கண்ணே விடுங்கண்ணே ஒருநாள் நீங்க லட்சாதிபதியாகி இந்த ஊரில நடக்கப்போறிங்க. இது இந்தப் புரோட்டா மேல் சத்தியம்” என்று சொல்வான். அவன் சொல்லியதை நினைத்துதான் சுந்தரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் சொன்னதுபோல் புரோட்டாமேல் சத்தியம் செய்ததுபோல் தனக்குப் பரிசு கிடைத்துவிட்டதை நினைத்தவருக்கு உடம்பு புல்லரித்தது. சீனிவாசத்திடம் இத்தனை நாட்கள் வாங்கி தின்றதுக்குக் கைமாறாக அவனுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்தபோது அவருக்குக் கண்ணீர் முட்டியது. ஆனால் அவருக்கு உள்ளுக்குள் பயம் இருந்தது. கலைச்செல்வியைக் காதலிக்கிறானா, அவளும் இவனைக் காதலிக்கிறாளா? இருவரும் தன்னிடம் மறைத்து வைத்து ெசால்லாமல் ஊரைவிட்டுப் ேபாய்விட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.   

போனா வருடம் தீபாவளிக்கு முன்பு, பேட்டையில் ராத்திரியும் பகலுமாக வேலை நடந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை வெளியே வர முடியவில்லை. சீனிவாசகம் அவரைத் தேடி பேட்டைக்குச் சென்றான். “வாங்கண்ணே, பிராந்தி குடிச்சிட்டு வேலை செய்யுங்கண்ணே. வெத்திலை போட்டுக்கிட்டா ஒண்ணும் தெரியாதுண்ணே” என்று ஊற்றி குடிக்க வைத்தான். புரோட்டாவை பொட்டலம் கட்டிக்கொண்டு வந்திருந்தான். குடித்துவிட்டு இரண்டு ஆம்லெட், இரண்டு புரோட்டா சாப்பிட்டதும் அவருக்கு உடம்பும் மனதும் பஞ்சு மாதிரி பறந்தது. பறந்துகொண்டே சீனிவாசகத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தம்பி உனக்கு நான் கைமாறா என்ன செய்யுதுன்னு தெரியலை. நீ என்னா வேணுமின்னாலும் கேளு தம்பி” என்று உளறினார். அவனிடமிருந்து ஏதாவது ரகசியத்தை ைகப்பற்றிவிட வேண்டுமென்கிற கருத்தில் இருந்தார்.

சுந்தரத்திற்கு இந்தப் போதை தூசி மாதிரி என்று அவனுக்குத் தெரியும். சீனிவாசகத்திற்குப் போதை இல்லை. பேச வேண்டுமென்பதற்காகப் பேசுகிறார் என்று அவனும் போதையில் ஆடுபவன்போல் ஆடிக்கொண்டு பேசினான். “அண்ணே விடுங்கண்ணே இதெல்லாம் ஒரு விசயமா. உங்களுக்குக் காசு வர்றப்ப வாங்கிக் கொடுங்க” என்று ஆரம்பித்தான். சுந்தரத்திற்குப் பொறுக்க முடியவில்லை. எதாவது செய்தாக வேண்டுமென்கிற முனைப்பில் நிற்க முடியாமல் நின்றார். ஊறுகாயை நாக்கின் நடுவில் வைத்துக்கொண்டார். இனிமேல் பேச மாட்டேன், நீ தான் பேச வேண்டுமென்பதற்கு இதுதான் அடையாளம் என்று அவனுக்குத் தெரியும்.

சீனிவாசகம் நன்றாகக் காலை நீட்டி தரையில் அமர்ந்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தான். இரண்டு இழு இழுத்துப் புகையை ஊதியவன், “அண்ணே நீங்க என்னைய தம்பின்னு கூப்பிடுறது உண்மை இல்லண்ணே” என்று முகத்தை கவிழ்த்துக் கொண்டு விசும்பினான். சுந்தரத்திற்கு இதைக் கேட்டதும் தாங்க முடியவில்லை. எழுந்து நின்று வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டார். “நீ என்கூடப் பிறக்காத தம்பி. நான் செத்தா நீதான் மண்ணள்ளிப் போடணும். மகனுக்கு மகனா நின்னு காரியம் செய்யணும்” என்று ஆடிக்கொண்டு சொன்னார். சீனியும் எழுந்து நின்று அவர் தோளின் மேல் சாய்ந்து நின்றான்.

“மகனா, தம்பியா எதாவது ஒண்ணு ெசால்லுண்ணே”

“எனக்கு ரெண்டும் வேறவேற இல்லை சீனி. தம்பி இல்லாதவனுக்கு மகன்தான் தம்பி. மகன் இல்லாதவனுக்குத் தம்பிதான் மகன்”

“அண்ணே நல்ல வசனம். எந்த படத்தில் வருது”

“என் மனசிலிருந்து வர்ற வார்த்தை. என்னை நம்பு” என்று அவனது தலையில் அடித்தார். அவரால் நிற்க முடியவில்லை. கால்கள் ஆடுவதை சீனி பார்த்தான். அவரைப் பிடித்துத் தரையில் உட்கார வைத்தான். அவனும் உட்கார்ந்துகொண்டான். சுந்தரத்திற்குப் போதை தலைக்கு ஏறிவிட்டது.

“நீ சொல்லுறது நிசமாண்ணே” என்று ேகட்டான். ஆமாம் என்று மெதுவாகச் சொன்னார்.

“உங்களுக்கு நான் தம்பின்னா, எனக்கு கலைச்செல்வி மகள்தானே. உங்களுக்கு நான் மகன்னா எனக்கு கலைச்செல்வி தங்கச்சிதானே. நான் வீட்டுக்குள்ளே வந்து கலைச்செல்விகூட பேசினா தப்பா. நான் அப்படிப்பட்டவனா. என்னைய வீட்டுக்குள்ளே நுழையவிடாமல் ெவச்சிருக்கிறது எதுக்கு. ஏந்தங்கச்சிண்ணே அந்தப் புள்ள” என்று சொன்னவன் சிகரெட்ைட ஆழமாக இழுத்துப் புகையை விட்டான். அதற்குப் பிறகு அவன் பேசவில்லை. சைக்கிளை எடுத்து வேகமாக ஒட்டிச் சென்றான். அவன் இருட்டில் செல்வதை சுந்தரத்தினால் பார்க்க முடியவில்லை. ஆனால் ரோட்டில் ஒவ்வொரு விளக்கு கம்பத்தையும் சைக்கிள் கடக்கும்போது அவனைப் பார்க்க முடிந்தது.  

சுந்தரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மனதில் இருப்பதை எப்படி சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று பலமுறை வெட்கத்தோடு அவனைப் பார்த்தார். ஆனால் சீனிவாசகம் வழக்கம்போல் வாங்கண்ணே என்று ஆசையாகப் பேசினான். அன்று இரவு குடித்துவிட்டு பேசியது வேறு யாரோ என்று அவருக்குத் தோன்றியது. குடித்துவிட்டு நடிக்கிறானா இல்லை குடிக்காமலிருக்கும் போது நடிக்கிறானா என்று தெரியவில்லை. கடையில் இருக்கும் சமயத்தில் ஒன்றும் பேச முடியாது. குடித்துவிட்டு அவனுடன் பேச வேண்டுமென்று நினைத்தார். முடியவில்ைல. அதற்குப் பிறகு அவனுக்கும் அவருக்கும் இடையே இடைவெளி உண்டானது.  

சுந்தரம், பரிசு விழுந்த லாட்டரி சீட்டுக்குப் பணத்தை இன்னமும் தரவில்லை. அந்தச் சீட்டு சீனிவாசகத்திடம் இருந்தது. இரண்டாக மடித்து அவனுடைய சிறிய டைரியில் வைத்திருந்தான். அவனிடமிருந்து சீட்டை வாங்குவதற்கு சுந்தரத்திற்கு மனம் வரவில்ைல. அவனிடம் இருக்கட்டும் என்று நினைத்தார். வாசல் கூட்டி பெறுக்கும் முத்தக்கா, “சீட்டை வாங்கி வெச்சுக்க சுந்தரம். சீட்டு தொலைஞ்சிருன்னு சொன்னாலும் சொல்வான்” என்றாள். கருவேப்பிலை விற்பவனும் “ஆளு ஒரு மாதிரி சுந்தரம். சூதானமா இருப்பா” என்று சொன்னான்.

சீனிவாசகம், “சீட்டை வாங்கி வீட்டில் வெச்சுக்கண்ணே. சாமி படத்துக் கீழே வெச்சிரு. பரிசு விழும்” என்று சொன்னான்.

சுந்தரம், “உன்கிட்டே இருக்கட்டும். காசு கொடுத்துட்டு வாங்குறேன்” என்று சொன்னதற்கு “இப்போ யாரு உன்கிட்டே காசு கேட்டா. ராசியான சீட்டு. நாலுபேரு கை மாறி உன்கிட்டே வருது. வாங்கிக்க மாட்டேங்குற” என்று சீட்டை அவருடைய சட்டை ஜோப்பில் வைத்துவிட வந்தான். ஆனால் சுந்தரம் மறுத்துவிட்டார். “காசு கொடுத்துட்டு வாங்கிறேன்” என்று கடையை விட்டு வந்தார். “இந்தச் சீட்டு எனக்கு ராசியா இருக்குது. திரும்பவும் ஏங்கிட்ட வருது” என்று சீனி தன்னுடைய டைரியில் வைத்துக்கொண்டான். அதன் பிறகு சுந்தரம் கடைக்குப் போகவில்லை. சீனிவாசகம் பரிசு விழுந்திருக்கும் செய்தியைப் பேட்டைக்கு ஆள் மூலம் சொல்லியனுப்பியதற்குப் பிறகு கடைக்குச் சென்றார்.

ராத்திரி பத்து மணி இருக்கும். பஜாரில் கடையை மூடி சூடம் பொருத்திக் கொண்டிருந்தார்கள். பேட்டையிலிருந்து நேராக லாட்டரி சீட்டு கடைக்குச் சென்றார். சீனிவாசகமும் ராமமூர்த்தியும் கடையை அடைத்து சூடம் பொருத்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ராமமூர்த்தி அவரைப் பார்த்ததும், “அஞ்சு லட்சம் சுந்தரம். காலையில வந்துருங்க. பேங்கில டெபாசிட் செய்துருவோம்” என்று கையைப் பிடித்துக்கொண்டார். சீனிவாசகம் ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டான். “நாளைக்குக் காலையில போஸ்டர் அடிச்சு ஒட்டுறேன் பாருங்க” என்று சொன்னதும் அவருக்கு வெட்கமாக இருந்தது. அந்த வெட்கத்தோடு வீட்டுக்கு நடந்தார். பரிசு பணம் கிடைத்ததும் சீனிவாசகம் கேட்பதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அப்போதுகூட அவனிடமிருந்து லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டு வர வேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு வரவில்லை.  

7

செல்லத்துரை, அக்காவுடன் சண்டை போட்டு தகராறு செய்ய வேண்டுமென்று வீட்டிற்குள் நுழைந்தான். கலைச்செல்வியைப் பார்த்ததும் அமைதியாக நின்றான். அவள் கால்களை நீட்டி அமர்ந்து முருங்கைக்கீரையைக் கிள்ளி சட்டியில் போட்டுக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூடம் சீருடையில் இருந்தாள். ஞாயிற்றுக்கிழமை. இன்னமும் குளிக்கவில்லை. அவளது தலைமுடி பரட்டையாகச் சிலும்பி நின்றது. முகம் கழுவாமல் இருந்தாள். செல்லத்துரைக்கு அவள் அழகாகத் தெரிந்தாள். வெள்ளைச் சட்டையும் பச்சைப் பாவாடையும் உடுத்தி அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தான். கலைச்செல்வி, அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது பார்த்துவிட்டாள். ஆனால் பார்க்காததுபோல் தலையைக் குனிந்து கீரையைக் கிள்ளிக் கொண்டிருந்தாள். அவன் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி நின்றான். அவளது முகத்தைப் பார்ப்பதா இல்லை கால்களைப் பார்ப்பதா நெஞ்சைப் பார்ப்பதா என்று கண்களை அலையவிட்டு நின்றான். அவள் தன்னைப் பார்க்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டவள் கால்களை மடக்கிக் கொண்டாள். சட்டையை இழுத்துவிட்டாள். நிமிர்ந்து பார்த்து, “அம்மா கடைக்குப் போயிருக்கு” என்று வெடுக்கென்று சொன்னாள். அவன் சிரித்தபடி அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“நீ மொதல்ல எந்திரி. அங்ஙன போய் உட்காரு. எந்திரி எந்திரி” என்று கத்த ஆரம்பித்தாள்.

அவளுடைய குரலைக் கேட்டு குசிலி எட்டிப் பார்த்தாள். வாசலில் சைக்கிள் நிற்பதைப் பார்த்ததும் யாரு என்று கேட்டு வீட்டுக்குள் வந்தாள். செல்லத்துரையைப் பார்த்ததும் என்ன தம்பி என்றாள். அவனும் அக்காவைப் பார்க்க வந்தேன் என்று மழுப்பலாகப் பதில் சொன்னான்.

“எங்கடீ உங்கம்மாவை” என்று கேட்டாள் குசிலி.

“பலசரக்குக் கடைக்குப் போயிருக்காங்க” என்று சொன்னாள் கலைச்செல்வி.

குசிலி அவனது முகத்தைப் பார்த்தாள். யாருமில்லாத நேரத்தில் குமரி பிள்ளையை எதாச்சும் செய்துவிடுவான் என்று “தம்பி வெளியில உட்காரு. சரசு அக்கா வரட்டும்” என்று சாந்தமாகச் சொன்னாள். கலைச்செல்வியின் கையைப் பிடித்து இழுத்து தரையில் உட்காரும்படி ஜாடையாகச் சொன்னாள். அவளும் அதனைப் புரிந்துகொண்டவள் மாதிரி பாவாடையை இழுத்து சுருட்டி வைத்து சம்மணக்கால் போட்டு ஒழுங்காக உட்கார்ந்தாள். அவளுக்குப் பக்கத்தில் குசிலி உட்கார்ந்து அவளுக்கு உதவியாகக் கீரையைக் கிள்ளி சட்டியில் போட்டாள். செல்லத்துரையை ஓரக்கண்ணால் பார்த்தாள்.  

செல்லத்துரை வாசலில் இருந்த அம்மிக்கல்லின் மேல் அமர்ந்தான். சுந்தரத்திற்கு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்திருக்கிறதை போஸ்டர் ஒட்டி வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். மாமாவின் போட்டோவை கருப்பு வெள்ளையில் பார்த்ததும் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. கடைவீதி முழுக்க, அவரு எங்க மாமா. அவங்க மகளைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன் என்று சொன்னான். அவனுடன் வேலை செய்தவர்கள் ரோட்டில் நின்று சுவரொட்டியைப் பார்த்தனர். ஐந்து லட்ச ரூபாய் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்தான். அவர்கள் பணம் கைக்கு வந்து திருமணம் முடிந்ததும் பார்ட்டி கொடுக்க வேண்டுமென சொன்னார்கள்.  

அன்றிரவு படம் பார்க்க, ஆனந்த் தியேட்டருக்குச் சென்றான். இடைவேளை நேரத்தில் டீ குடிப்பதற்காக கேன்டீனுக்கு வந்து கூட்டத்தில் நின்ற போது லாட்டரி சீட்டுக்கடை சீனிவாசகத்தைப் பார்த்தான். சீனி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். பேச்சு சத்தம் அவனுக்குக் கேட்டது. டீ கப்பை வாங்கிக்கொண்டு இருட்டில் ஒதுங்கி நின்றான். அவர்கள் பேசுவதை அவனால் கேட்க முடிந்தது.

“ஐந்து லட்சத்தை வாங்கி என்ன செய்யப் போறாரு” என்று சீனிக்கு எதிரே நின்றிருந்தவன் கேட்டான்.

“பொம்பளப் பிள்ளை ஒண்ணு இருக்கு. அதுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டா எந்த கவலையும் இல்லை அவருக்கு. அதுக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்கோம்” என்றான் சீனிவாசகம்.

“அவரு மச்சினன் ஒருத்தன் இருந்தான்”

“செல்லத்துரை. வீனா போனவன். அவனுக்கெல்லாம் கட்டிக் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு. பணத்தை சுருட்டிட்டுப் போயிருவான். சுந்தரத்தோட தூரத்து சொந்தத்தில் பையன் இருக்கானாம். அவனுக்கு ஏற்பாடு நடந்துட்டு இருக்கோம். லாட்டரியில விழுந்த பணத்தைக் கமிஷன் போக அப்படியே நகை பாத்திரம் சாமான் எடுக்குறதுக்கு ஏற்பாடு நடந்துட்டு இருக்கு. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. சீட்டை பேங்கில போட்டு, பணம் டெபாசிட்டானதும் பாருங்க. லாட்டரி சீட்டு ஏங்கையிலதானே இருக்கு” என்று சொன்னதும் செல்லத்துரைக்குக் கோபம் வந்தது. டீயை அவனது முகத்தில் ஊற்றிவிட்டுச் சட்டையைப் பிடித்து சண்டை போட வேண்டுமென்று நினைத்தான். கோபத்தை அடக்கிக்கொண்டான். தியேட்டரைவிட்டு வீட்டுக்கு வந்து அவனது அம்மாவிடம் சொன்னான். தூரத்தில் இருக்கும் பையன் யார். அவன் தன்னைவிட அழகாக இருப்பானா, படித்திருப்பானா வேலைக்குப் போகிறவனா என்றெல்லாம் அவனுக்கு யோசனையாக இருந்தது. தூக்கம் வரவில்லை. இரண்டு தடவை எழுந்து கழிப்பறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். விடியற்காலையில் அவனறியாமல் உறக்கம் வந்தது. விடிந்ததும் அவனது அம்மா எழுப்பிவிட்டாள். காப்பிகூடக் குடிக்காமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தான்.  

“எந்த கடைக்கு அக்கா போயிருக்கு. சீக்கிரம் வந்துருமா” என்று கலைச்செல்வியைப் பார்த்துக் கேட்டான்.

அவள் பதில் சொல்லவில்லை. குசிலியின் முகத்தைப் பார்த்தாள். குசிலி, “வந்துரும் தம்பி உட்காருங்க” என்று சிரித்துக்கொண்டு சொன்னாள். அவள் சிரித்ததும் கலைச்செல்வியும் சிரித்தாள். எதற்காகத் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். தன்னிடம் என்ன இருக்கிறது என்று வெட்கப்பட்டுக் கொண்டான் செல்லத்துரை. சைக்கிள் பெடலை வீணாகப் பின்னால் சுற்றினான். ஹேண்ட்பாரை இடது பக்கமாகவும் வலது பக்கமாகவும் திருப்பினான். பின் சக்கரத்தைச் சுற்றிவிட்டுக் கோட்டமாக இருக்கிறதா என்று பார்த்தான். அக்கா தனக்கு, கலைச்செல்வியைத் திருமணம் செய்து வைத்து பணம் கொடுத்தால் பஜாரில் சைக்கிள் கடை வைக்கலாமென்கிற ஆசையில் திரும்பிப் பார்த்தான். அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டான். திரும்பவும் அவர்களது சிரிப்பு சத்தம் கேட்டது.

குசிலியைப் பார்த்தான். எதற்காக இவள் இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறாள், அவளது வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்று அவளை முறைத்துப் பார்த்தான். அவள் வேண்டுமென்றே கலைச்செல்வியிடம் மெதுவாகச் சொல்லி சிரித்தாள். அவளும் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவனுக்கு வெட்கமாகவும் இருந்தது, கோபமும் வந்தது. இன்னொரு தடவை திரும்பிப் பார்க்கலாமா என்று யோசித்தான். எதற்கு வம்பு என்று தலையைக் குனிந்துகொண்டான். ஆனால் அவனுக்குள் அவர்கள் என்ன பேசுகிறார்கள், தன்னைப் பற்றி எதாவது பேசுகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் இருந்தது. ஒருவேளை கல்யாணத்திற்குப் பிறகு குசிலியுடன் சேர்ந்து தன்னை இப்படித்தான் கலைச்செல்வி கேலி செய்வாளா என்று கற்பனை செய்து பார்த்தான். அவனுக்கு கலைச்செல்வியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கி எழுந்தது.

சரஸ்வதி வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்றுகொண்டான். “என்னாடா தம்பி இந்நேரத்தில வந்துருக்கே. அம்மாவுக்கு மேலுக்குச் சுகமில்லையா” என்று கேட்டாள்.

“அம்மா நல்லாயிருக்கு” என்று கோபமாகச் சொன்னான். அவனது கோபத்தைப் பார்த்தவள், “எந்தம்பி சண்டை போட்டுட்டு வந்தியா” என்று அவனுக்குப் பக்கத்தில் நின்றாள்.

செல்லத்துரை முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டான். தலையைக் குனிந்து நிற்பதைக் கண்ட சரஸ்வதி என்னமோ வீட்டில் நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். “சரி வா வீட்டுக்குள்ளாற. காப்பி குடி” என்று வீட்டுக்குள் நுழைந்தாள். சரஸ்வதி வீட்டிற்குள்ளிருந்த குசிலியைப் பார்த்தவள் தயங்கினாள். எதற்காக வந்திருக்கிறாள். அதுவும் தம்பி வந்திருக்கும் வேளையில் என்று கண் மூடித் திறக்கும் நேரத்தில் யோசித்தவள் தன்னுடைய மகள் முகத்தைப் பார்த்தாள். அவள் சந்தோஷமாகச் சிரிப்பதைப் பார்த்ததும் சரி வேறெந்த பிரச்சினையும் இல்லை என்று வீட்டிற்குள் சென்றாள். வா குசிலி என்று சிரித்துக்கொண்டு அவளுடன் பேசினாள்.

“இவ மட்டும் தனியா இருந்தா. காலையில வேலையெதுவுமில்லாமல் சும்மா இருந்தேன். இவளுக்குக் கீரையை ஆஞ்சுக்கொடுப்போமுன்னு அப்படியே உட்கார்ந்துட்டேன்” என்று வாசலைப் பார்த்துப் பேசினாள்.

சரஸ்வதி காப்பி சட்டியை அடுப்பில் வைத்தவுடன் குசிலி எழுந்து கொண்டாள். “நான் போயிட்டு வர்றேக்கா” என்று சொன்னாள். “இரு குசிலி காப்பி சாப்பிட்டு போ” என்று சரஸ்வதி சொல்லியதும் அவள் அடுப்பு மேட்டுக்குப் பக்கத்தில் சென்றாள். குசிலி, “வயசுப் பிள்ளைய தனியா விட்டுட்டு எதுக்கு கடைக்குப் போறே.” என்று சொல்லியவள் அவளிடம் மெதுவாக, ஆசைக்குத் தொட்டுட்டு இன்னொருத்தி கிடைச்சான்னா போயிருவானுங்க ஆம்பளைங்க. நீதான் அவளை ஜாக்கிரதையா காப்பாத்திப் பொத்திப்பொத்தி வெச்சுக்கணும். பணம் காசு போயிருச்சுன்னு திரும்பவும் கொண்டாந்திரலாம். அழுகிப்போன கத்திரிக்காவா தூக்கிப்போட்டுட்டு சந்தையில வாங்கிட்டு வர்றதுக்கு. உடம்பில இருக்கிறதில்ல மானமும் மரியாதையும் என்று சொல்லிவிட்டு நடந்தாள். அதைக் கேட்டதும் சரஸ்வதிக்கு திக்கென்றானது.  

சரஸ்வதி, தன்னுடைய தம்பி கலைச்செல்வியை என்ன செய்துவிடப்போகிறான். தாய்மாமன், கல்யாணம் செய்து கொள்ளப்போகிறான், அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் என்ன தப்பு, இவளுக்கென்ன, ஏதோ பேசுகிறாள் என்று அமைதியாக இருந்தாள். கலைச்செல்வி அவள் சென்றதும் அம்மாவிடம் வந்து நின்றாள். என்னாடீ என்று அவளை கேட்டாள் சரஸ்வதி. அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. சரஸ்வதி காப்பி போட்டு தம்ளரில் ஊற்றினாள்.

“இந்தா தம்பி காப்பி குடி” என்று செல்லத்துரைக்குத் தம்ளரை நீட்டினாள். அவன் வாங்கிக் கொண்டு, “மாமாவை எங்க” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“எதுக்குடா அவரைத் தேடுற” என்று சரஸ்வதி கேட்டாள்.

“மாமா அவுங்க தூரத்து சொந்தத்தில பையனைப் பார்த்திருக்காறாம். அவனுக்குத்தான் கலைச்செல்வியைக் கல்யாணம் செய்து கொடுக்கப் போறாருன்னு சொல்லுறாங்க” என்று கோபமாகச் சொன்னான்.

“அது யாருடா தூரத்தில, எனக்குத் தெரியாம எந்த தூரத்தில” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் சரஸ்வதி.

“எனக்கும் தெரியல. தாய்மாமா நானிருக்கும் போது இன்னொருத்தன் எவன் வர்றது. அதான் பேசிட்டுப் போவோம்முன்னு வந்திருக்கேன்” என்று சொன்னதும் கலைச்செல்வி சிரித்துவிட்டாள். அவளது தலையில் நறுக்கென்று கொட்டி, “என்ன சிரிப்பு. கழுதை மூடு வாயை” என்று திட்டினாள் சரஸ்வதி.

கலைச்செல்விக்கு உச்சந்தலை வலித்தது. மண்டையைப் பிடித்துக்கொண்டு கோபமாக வேறு பக்கமாக நின்றாள். செல்லத்துரைக்கு அவளைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. “அவளை எதுக்கு திட்டுற. மாமா வந்ததும் அவரைப் பிடுச்சி என்னான்னு கேளு” என்று சொன்னான். கலைச்செல்விக்கு மேலும் ஆத்திரமாக வந்தது. தனக்கு எதற்காக ஏற்றுக்கொண்டு பேசுகிறான் தாலி கட்டிய புருஷனைப்போல என்று நினைத்தவள், முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி குசிலியிடம் சென்றாள்.

செல்லத்துரை அவள் எங்கு செல்கிறாள் என்பதைப் பார்த்தான். இந்த குசிலியைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தனக்கும் கலைச்செல்விக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக இருப்பாள் என்று நினைத்தாள். கலைச்செல்வியையும் குசிலியையும் முதலில் பிரித்து வைக்க வேண்டும். பெரிய சண்டையை உண்டாக்கிவிட வேண்டுமென்று நினைத்தான்.

“ரூபாய் கைக்கு வரட்டும்டா அது முடிய எல்லோரும் அமைதியா இருங்கன்னு எத்தனை தடவை சொல்லுறது” என்று சரஸ்வதி மெதுவாக அவனது காதருகில் வந்து சொன்னாள். அவன் அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டான். அவள் கை ஜாடையில் அமைதியாக இரு என்று சொன்னாள். அக்காவும் தனக்குச் சிபாரிசு செய்வதற்கு இருக்கிறாள், இனி கவலையில்லை என்று நினைத்துக் கொண்டான். காப்பி குடித்துவிட்டு, வெறும் தம்ளரை தரையில் வைத்துவிட்டுப் போயிட்டு வர்றேன் என்று சொன்னான்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு குசிலி வீட்டை ஓரக்கண்ணால் பார்த்தவாறு உருட்டினான். அவள் வீட்டை கடக்கும்போது மணியடித்தான். வீட்டிற்குள்ளிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. சைக்கிளை உருட்டியவன் என்ன நினைத்தானோ சீட்டில் மேலேறி அமர்ந்து ஓட்டத் தொடங்கினான். வீட்டிற்குப் போகக் கூடாது, பஜாருக்குப் போய் சுந்தரம் மாமாவைப் பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நினைத்தான்.

8

சீனிவாசகம், சனிக்கிழமை மாலை கடையிலிருந்து சீக்கிரமாக வெளியேறினான். சுந்தரம் தன்னைத் தேடி வருவதற்குள் சென்றுவிட வேண்டுமென்கிற அவசரம் அவனிடம் இருந்தது. விடிந்ததிலிருந்து அவசரமாக இருந்தான். சுந்தரத்திடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் அப்படி நடந்து கொண்டான். எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று யோசித்தான். வழக்கம்போல அவருடன் சேர்ந்து பிராந்தி குடித்து, புரோட்டா தின்று, சினிமா படம் பார்க்கச் செல்லலாம் என்று நினைத்தான். அதேநேரம் வேண்டாம் என்ற எண்ணமும் உண்டானது. அவருடன் சேர்ந்து இனிமேல் குடிக்கக் கூடாது, சினிமா படம் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதே நேரம் நாளைக்கு சுந்தரத்தைப் பார்த்தால் என்ன பேசுவது என்று குழப்பமாக இருந்தான்.  சுந்தரத்திற்குப் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட் தன்னுடைய பர்சிலிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டான். பஞ்சுபேட்டையிலிருந்து சுந்தரம் வருவதற்குள்ளாகக் கடையிலிருந்து சென்றுவிட வேண்டுமென்று நினைத்தவன், ராமமூர்த்தியிடம் வீட்டுக்குப் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டுச் சினிமாவுக்குப் போக முடிவு செய்தான்.

கலைச்செல்வி சொல்வது சரிதானே என்று நினைத்தான். சுந்தரம் தன்னுடன் மட்டுந்தானே குடிக்கிறார், வேறு யார் அழைத்தாலும் போக மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். குடிக்கிற பழக்கத்தை நிறுத்திவிட்டால் அவர் வாழ்க்கையில் ஜெயித்துவிடுவார் என்று அவன் நினைத்தான். அவருடன் சனிக்கிழமை தோறும் சேர்ந்து பிராந்தி குடிப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று முடிவு நினைத்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டுக் கடைக்கு நியூஸ் பேப்பர் கடைக்காரர் தன்னுடன் புகைப்படக்காரரை அழைத்து வந்தார். சுந்தரத்தையும் லாட்டரி சீட்டு விற்கும் கடைக்காரரையும் போட்டோ படம் பிடித்து செய்தித்தாளில் போட வேண்டுமென்று சொன்னார். சுந்தரத்தைப் பேட்டையிலிருந்து அவசர அவசரமாக வரவழைத்தார்கள். ராமமூர்த்தியுடன் சுந்தரத்தைப் பக்கத்தில் நிறுத்தி போட்டோ எடுக்கும் போது சுந்தரம், சீனியையும் அழைத்தார். சீனி, வேண்டாம் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். யாராச்சும் ஒருத்தர் நின்னா போதும். எதுக்கு ரெண்டு பேரு என்று அவன் சொல்லியது சுந்தரத்திற்குச் சங்கட்டமாக இருந்தது. எதற்கு இப்படி சொல்கிறான் என்று நினைத்தார். அதற்குப் பிறகு அவன் அவருடன் முகங்கொடுத்துப் பேசுவதை நிறுத்தினான். யாருக்கோ பதில் சொல்வதுபோல் பேசினான். சுந்தரமும் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்குப் பிறகு அவனுடன் வீம்பாகப் பேசினார். ராமமூர்த்தி டீ குடிப்பதற்கு நியூஸ் பேப்பர்காரரை அழைத்துச் சென்ற போது அவரையும் அழைத்தார். சுந்தரம், சீனியுடன் குடிப்போம் என்று மறுத்துவிட்டார். அவர் டீ குடித்து விட்டு கடைக்கு வந்ததும் சீனியை டீ குடிக்க அழைத்தார். ஆனால் அவன், “நீங்க போய் குடிச்சிட்டு வாங்கண்ணே. நான் கடையில் இருக்கேன்” என்று சொன்னான். சுந்தரம் டீ குடிக்கப் போகவில்லை. அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பழைய நியூஸ் பேப்பரைப் புரட்டினார். மதிய சாப்பாடு நேரம்வரை கடையில் உட்கார்ந்திருந்தார். அவன் எதுவும் பேசவில்லை. பேட்டைக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்ட போது சரி என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொண்டான். அவனுக்கு அப்படி பேசியதும் வருத்தமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை என்று அவனுக்குத் தெரியும்.

சீனிவாசகம் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தான். தனியாக நின்றிருந்த பேருந்துக்குப் பின்னால் சைக்கிளை நிறுத்தினான். சிறுநீர் கழித்துவிட்டு சினிமா பட போஸ்டர்களை வேடிக்கைப் பார்த்தான். நான்கு தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருந்த படங்களைப் பார்த்துவிட்டான். பார்த்த படத்தை திரும்பவும் பார்க்க வேண்டுமா, தேனிக்குப் பஸ் ஏறிப்போய் படம் பார்க்கலாமா என்று யோசித்தான். அவனுக்கு அது சரி என்று மனதில் தோன்றியது. உடனே சைக்கிளைத் தனக்குத் தெரிந்த பெட்டிக்கடையின் முன்பு நிறுத்திவிட்டு பஸ் ஏறினான். மூன்று பேர் உட்காரும் சீட்டில் ஜன்னல் ஓரம் அமர்ந்தான். டிக்கெட் வாங்கினான். யாரும் தன்னைப் பார்க்கக் கூடாது. தானும் யாரையும் பார்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். கண்களை மூடிக் கொண்டான். உறக்கம் வரவில்லை.  

அவனது நினைவுகள் முழுக்க சுந்தரத்திடம் இருந்தது. அவர் இந்நேரம் பேட்டையிலிருந்து வந்திருப்பார். தன்னை எங்கே என்று அண்ணனிடம் கேட்பார், அண்ணன் வீட்டுக்குச் சென்றுவிட்டான் என்று சொல்வார். வீட்டுக்குச் சென்றது தெரிந்ததும் வீட்டிற்குப் போவார். வீட்டில் இல்லையென்றதும் தெரிந்தவர்களிடம் விசாரிப்பார் என்று அவனது மனதில் ஓடியது. அவரை எதற்காக அலைய விடுகிறோம். அவரிடம் கலைச்செல்வி கூறியதைச் சொல்லிவிடலாம். அவள் சொல்லியதை இல்லையென்றாலும் பொதுவாக இந்தப் பழக்கம் வேண்டாம் போதும் நிறுத்திடுவோம் என்று சொல்லக் கூடாதா. தம்பி சொல்றேன் போதும் அண்ணே என்றால் அவர் கேட்க மாட்டாரா. அவரிடம் பணம் வந்ததும் மாறிவிடுவார். வாரத்திற்கு ஒருமுறை என்பது தினமும் குடிக்கும் அளவுக்குப் பழக்கமாகும். அதற்கு அவருக்குத் துணைக்குப் போகக் கூடாது. அவரை இப்போதிருந்தே தனியாக விட்டுவிட வேண்டும். அவருடைய மகளுக்கும் மனைவிக்கும் நல்ல மனுஷனாக வாழட்டும். குடிப்பவர்களுடன் அவரைப் பழகவிடாமல் வைத்திருந்தால் போதும் காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தான்.

பேருந்து ஓரிடத்தில் நின்றது. கண் முழித்தான். எந்த ஊரில் பேருந்து நின்றிருக்கிறது என்று பார்த்தான். இன்னமும் கோடாங்கிப்பட்டியைக்கூடக் கடக்கவில்லை. தியேட்டரில் படம் போடுவதற்கு முன்பு சென்றுவிட முடியுமா என்று சந்தேகப்பட்டான். இன்னமும் நேரமிருக்கிறது. பஸ்காரன் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் சீக்கிரமாகச் சென்றுவிடலாம். டிரைவரைப் பார்த்தான். அவரைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அமைதியாக உட்கார்ந்திருந்தார். நடத்துனர் விசில் அடித்ததும் பேருந்து மெதுவாக நகர்ந்தது.

பேருந்தின் முன் சீட்டில் இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்களைப் பின் பக்கமாகப் பார்க்கும் போது சரஸ்வதியைப் போலவும் கலைச்செல்வியைப் போலவும் தெரிந்தது. சீட்டிலிருந்து எழுந்து நின்று பார்க்கலாமா என்று யோசனையாக இருந்தான். அப்படி பார்த்தால் தன்னைத் தவறாக நினைப்பார்களென அமைதியாக இருந்தான். அவர்களைப் போலத்தான் தெரிந்தார்கள். அவர்கள் எதற்காகப் பேருந்தில் செல்கிறார்கள், தேனியில் அவர்களுக்கு என்ன வேலை என்று குழப்பமாக இருந்தான். சீக்கிரம் பஸ் ஸ்டாண்ட் வந்துவிடாதா, அவர்கள் இறங்கும் போது பார்க்கலாம் என்று நினைத்தான். கலைச்செல்வியை நினைத்தபோது அவள் சொல்லிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.

“எங்கப்பா ரெண்டாவது தடவை காப்பி குடிக்க மாட்டாரு. உங்ககூடச் சேர்ந்து குடிக்கப் பழகியிருக்காரு. குடிக்க வெச்சு அவரைக் கொல்லணுமின்னு முடிவு செஞ்சிட்டீங்களா” என்று கலைச்செல்வி சொல்லி முடிப்பதற்குள் “ஏம்ப்பா உன் வயசு என்ன, அவரு வயசு என்ன. அவருக்குத்தான் வெட்கமில்லைன்னா, உனக்குமா இல்லாம போச்சு. உனக்கு அறிவில்லையா. ரெண்டு பேரும் கூட்டா சேந்து பிராந்தி குடிச்சிட்டுச் சினிமாவுக்குப் போறதும், ஹோட்டலுக்குப்போய் புரோட்டா தின்னுட்டு வர்றதும் நிசம்மாப்பா” என்று சரஸ்வதி கேட்டதும் சீனிவாசகத்திற்கு அவமானமாக இருந்தது.

“அண்ணே இனிமேல் நீங்க அப்பாவைத் தேடிட்டு வறாதிங்க. என்னை நீங்க தங்கச்சின்னு கூப்பிடுறது நெசமுன்னா ரெண்டு பேரும் சேந்து இனிமேல் குடிக்கக் கூடாது. அவரு கூட நீங்க சேராதீங்க.” என்று அழுதுகொண்டு சொன்னதை சீனிவாசகம் நினைத்துப் பார்த்தான். அவனுக்கு அழுகை வந்தது.

பேருந்து, ஸ்டாண்டில் ரவுண்ட் அடித்து நின்றது. சீனிவாசகம் இறங்கினான். சினிமாவுக்கு இன்னொரு நாள் போகலாம் என்று பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த நாகர் புரோட்டா கடைக்குள் நுழைந்தான். நல்ல இடத்தில் உட்கார்ந்தான். மனசார சாப்பிட வேண்டுமென்று நினைத்து சப்ளையரிடம் வேண்டியதைச் சொன்னான். சப்ளையர் இலை போட்டு தம்ளரில் தண்ணீர் வைத்தார். சிறிது நேரத்தில் சூடாக புரோட்டாவும் சுக்கா வறுவலும் வந்தது. ஆசைஆசையாகச் சாப்பிட்டான். குனிந்த தலை நிமிரவில்லை. இரண்டு புரோட்டா தின்று முடித்தவுடன் இன்னும் இரண்டு புரோட்டா வாங்கினான். ஏதோ ஞாபகத்தில் சுந்தரமும் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார் அவருக்கும் சப்ளையரிடம் புரோட்டா சொல்ல வேண்டுமென்கிற நினைப்பு உண்டாகி குனிந்த தலை நிமிராமல் “உங்களுக்கு என்னாண்ணே வேணும்” என்று கேட்டான். அந்த மேஜையில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவர் அவனை விசித்திரமாகப் பார்த்தார். அவன் தலை கவிழ்ந்து தன்னுடைய இலையிலிருந்த புரோட்டாவைத் தின்னத் தொடங்கினான். அவனறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் இலையில் விழுந்தன. அவன் அவசரஅவசரமாகக் கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டான். சிறிது நாட்கள் வேறு ஊருக்குச் சென்றுவிட்டால் அவருக்கும் தனக்கும் பழக்கமில்லாமல் போய்விடும் என்று நினைத்தவன் எந்த ஊருக்குச் செல்லலாம் என்று யோசித்தான். ‘சின்ன கழுதை என்னைய இப்படி பேசிட்டாளே’ என்று அவனாகப் புலம்பியவன் ஆத்திரத்தில் பஸ் ஏறினான்.  

9

கலைச்செல்வியும் சரஸ்வதியும் சுந்தரமும் வீட்டு வாசலில் நின்றிருந்தனர். சுந்தரம் சலவை செய்த வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்தார். அவர்கள் மூவரும் வீரபாண்டி திருவிழாவிற்குப் பிறகு இப்போதுதான் குடும்பத்துடன் வெளியே செல்கிறார்கள். தீபாவளிக்குத் துணி எடுப்பதற்குக்கூட அவர்கள் ஒன்றாக கடைக்குச் சென்றதில்லை. கலைச்செல்வி தாவணி உடுத்தியிருந்தாள். ஐந்து லட்சத்திற்குக் கமிஷன் தொகை எவ்வளவு என்று ராமமூர்த்தி நேற்றிரவு கணக்குப் போட்டு காகிதத்தில் எழுதி கொடுத்திருந்தார். அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் பணத்தை வாங்குவதற்கு இரண்டு ஆடிட்டர்களிடம் யோசனை கேட்டு அதன்படி தயாராகியிருந்தார். சுந்தரம், ரேஷன் கார்டும் பாஸ்போர்ட் போட்டோவும் எடுத்து வைத்திருந்தார். சரஸ்வதியின் பெயரிலும் கலைச்செல்வியின் பெயரிலும் தன்னுடைய பெயரிலும் பணத்தைப் பிரித்து வங்கி போட்டு வைக்க வேண்டுமென்றும் யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதை மனப்பாடமாக வைத்திருந்தார். 

சுந்தரம், குசிலியின் வீட்டைக் கடந்து செல்லும் போது வாசலை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார். அவள் அவர்களைப் பார்த்ததும் அவசரமாக சொறுவியிருந்த சேலையை இழுத்துவிட்டு சிரித்தாள். சரஸ்வதியிடம், “பாத்துப் போயிட்டு வாங்க. தொனைக்கு வரட்டா” என்று அனுசரனையாகக் கேட்டாள். சரஸ்வதி அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. சுந்தரம் அவளிடம் பேச்சாகச் சொல்லவில்லையென்றாலும் கண்ணால் ஜாடையாகச் சொல்லிவிட்டு காம்பவுண்டைக் கடந்தார். கலைச்செல்வியும் சரஸ்வதியும் அவருக்குப் பின்னால் ஒருவருக்குப் பின் ஒருவராக நடந்தார்கள். நேற்றிரவு முனீஸ்வரனுக்குத் தேங்காய் வாழைப்பழம் பத்தி சூடம் வாங்கி வைத்திருந்தாள். முனீஸ்வரனை மனதார வேண்டிக் கொண்ட பிறகுதான் வங்கிக்குச் செல்ல வேண்டுமென்று கோயிலுக்கு முன் நின்றாள். மஞ்சள் பையிலிருந்த தேங்காய் பழத்தை எடுத்து முனீஸ்வரனின் காலடியில் வைத்தாள். ஊதுபத்தியைப் பொருத்தி வாழைப்பழத்தில் சொறுவினாள். ஊதுபத்தி புகை, முனீஸ்வரன் முகத்திற்கு மேல் படர்ந்தது. அவளுக்கு அந்தப் புகையில் முனீஸ்வரன் கண் திறந்து பார்ப்பது போலிருந்தது. சரஸ்வதி கண்களை இறுக்கமாக மூடி வேண்டினாள். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த கலைச்செல்வியும் கண்களை மூடி கையெடுத்து வணங்கினாள். சுந்தரம் வாசலுக்கு வெளியே நின்றிருந்தார். அவருக்குக் கோயிலுக்குள் செல்வதற்கு மனமில்லை. சீனிவாசகம் தன்னுடன் பேசாமலிருப்பது அவருக்கு மனச்சுமையாக இருந்தது. நேற்றிலிருந்து கடையில் அவன் இல்லை என்று அவரிடம் தகவல் சொன்னார்கள். அவன் எதற்காக இவ்வளவு சடவாக இருக்கிறான் என்று தவிதாயப்பட்டார். அதற்குக் காரணத்தைத் தெரிந்துகொண்டால், சரி செய்துவிடலாம் என்று நினைத்தார்.

கலைச்செல்வியும் சரஸ்வதியும் கோயிலை விட்டு வெளியே வந்தனர். கலைச்செல்வி கோயிலைவிட்டு வாசலில் கட்டியிருந்த மணியின் கயிற்றைப் பிடித்து இழுத்தாள். மணியோசை பலமாக எழுந்தது. அப்போது குசிலி வேகமாகக் கோயில் பக்கமாக வந்தாள். சரஸ்வதியைப் பார்த்து, “தலை நிறைய பூ வெச்சிட்டுப் போக்கா” என்று ஈரத்துணியால் உருட்டி வைத்திருந்த பூவைத் தந்தாள். சரஸ்வதிக்கு நடுரோட்டில் நின்று தலையில் பூ வைப்பது வெட்கமாக இருந்தது. அவள் தனக்கும் கலைச்செல்விக்குமாகப் பூச்சரத்தைப் பெருவிரல் நகத்தால் கிள்ளி பகிர்ந்தாள்.

கலைச்செல்விக்குத் தலையில் பூ வைத்ததும் அவளது முகம் மாறிவிட்டது. “சரி பத்திரமா போயிட்டு வாங்க” என்று குசிலி சொன்னதைக் கேட்டதும் சுந்தரம் அவளருகே வந்து “வீட்டை விட்டு எங்கேயும் போகாத குசிலி. நாங்க வர்ற வரைக்கு வீட்டைப் பாத்துக்க. ரவி வந்தான்னா நாங்க பேங்குக்குப் போயிட்டோம்முன்னு சொல்லு. அவங்கிட்டதான் லாட்டரி சீட்டு இருக்கு” என்று சொன்னார். அவளும் சரி என்று வெட்கத்துடன் தலையாட்டினாள்.

சரஸ்வதிக்கு அவர்கள் பேசிக்கொள்வது பிடிக்கவில்லை. மூவரும் தெருவைக் கடக்கும்வரை மணியோசை எதிரொலித்துப் பின் மெதுவாக அடங்கியது. சரஸ்வதி தெரு முக்கில் நின்று திரும்பிப் பார்த்தாள். சரஸ்வதிக்கு நாள் முழுக்க நின்று முனீஸ்வரனிடம் வேண்டுவதற்கு விஷயங்கள் இருந்தன. அப்போதைக்கு வேண்டியதை மட்டும் ேகட்டுவிட்டுத் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். அதுதான் அவளுடைய சாமி கும்பிடுமுறை. இப்போதைக்கு இதுபோதும். நாளைக்கு வந்து மிச்சத்தைப் பார்த்துக்கொள்கிறேன் என்பது போலிருப்பாள்.

இருவரும் சுந்தரத்தின் பின்னால் நடந்தார்கள். சரஸ்வதி திரும்பிப் பார்த்தாள். குசிலி இன்னமும் கோயில் அருகே நின்றிருந்தாள். அவள் வெட்கத்துடன் நின்றிருப்பதைப் பார்த்த சரஸ்வதிக்குப் பயமாக இருந்தது. சுந்தரமும் இரண்டு தடவை கோயில் பக்கமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டதை அவள் கவனிக்காமல் இல்லை. ஏற்கெனவே ஒருமுறை யாருமில்லாதபோது இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாள். சாயங்காலம் குசிலி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது சுந்தரம் செம்பை நீட்டி தண்ணீர் கேட்பதுபோல் அவளுடைய இடுப்பைப் பிடித்தார். அவள் ஒதுங்கிக்கொண்டாள். செம்பு நிறைந்து தண்ணீர் வடிந்தது. அவள் சட்டியில் நிறைந்திருந்த தண்ணீரை விரல்களால் அள்ளி அவரது முகத்தில் தெளித்தாள். சுந்தரத்திற்குச் சிரிப்பு வந்தது. அப்போது ஏலக்காய் கடையிலிருந்த வேலை முடிந்து வந்த சரஸ்வதி அவர்களைப் பார்த்தாள்.

குசிலி சுதாரித்துக்கொண்டாள். முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி நின்று கொண்டவள், சரஸ்வதியைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தாள். சுந்தரமும் அதற்குத் தகுந்தாற்போல் செம்பு நீரை குடித்து முடித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். அதிலிருந்து சரஸ்வதி இருவரையும் கண்காணித்துக் கொண்டு வந்தாள். நேற்று அவள் கோழிக்குழம்பை கிண்ணம் நிறைய கொண்டு வந்தாள். சுந்தரம் ராத்திரி வேலை முடிந்து வருவதற்கும் அவள் கிண்ணத்தோடு வீட்டுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. ‘இந்தாக்க கோழிக்குழம்பு எங்கம்மா வீட்டிலயிருந்து தந்துவிட்டாங்க’ என்று தன்னிடம் கிண்ணத்தை நீட்டி சுந்தரத்தைப் பார்த்ததை அவளும் பார்த்தாள். இருங்கடி உங்களை வெச்சுக்கிறேன். கையில சிக்குறன்னைக்கு வௌக்கமாத்தை எடுத்துச் சாத்துறேன் என்று பொறுமையாக இருந்தாள்.

சரஸ்வதிக்கு நடந்து செல்வதற்கு மனமில்லை. குசிலி எதற்காக வீதிவரை வழியனுப்ப வருகிறாள், தாலி கட்டிய புருஷனை வழியனுப்புவதுபோல நின்றிருக்கிறாள் என்று கோபத்தில் நடந்தாள். அந்தக் கோபத்தில் மற்றொரு தடவை திரும்பிப் பார்த்தாள். சுந்தரம் திரும்பிப் பார்த்தார். அவர் திரும்புவதைப் பார்த்ததும் சரஸ்வதிக்கு ஆங்காரமாக வந்தது. அவளைக் கூட்டிட்டுப் போக வேண்டியதுதானே என்று மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். கைவிரல்களைச் சொடுக்குப்போட்டு முறுக்கினாள். குசிலியைத் திட்டினாள். சுந்தரத்தை முன்னால் நடக்கவிட்டு கலைச்செல்வியிடம் பேசிக்கொண்டு வரலாமென்று நினைத்தவள் நடையை மெதுவாக்கினாள். அவளிடம் என்ன சொல்வது. பெற்ற மகளிடம் இதைப்பற்றி என்ன பேச முடியும். இதையெல்லாம் அவளிடம் சொல்ல முடியுமா?.

சரஸ்வதி நடக்கச் சிரமப்பட்டாள். யாரோ தன்னைப் பிடித்து இழுத்து நிறுத்துவது போல் உணர்ந்தாள். எதற்காக தனக்கு இப்படியொரு சோதனையை முனீஸ்வரன் தந்திருக்கிறான், இதிலிருந்து எப்படித் தப்பித்து வருவது என்று யோசனையாக நடந்தாள். ‘அய்யா முனீசுவரா குடிகாரங்கிட்ட இருந்து காப்பாத்தி குடும்பத்தை நாசஞ்செய்யுறவக் கையில கொடுத்துட்டேயே ஏம்புருசனை’ என்று கோயில் முன் நின்று அழுது புரள வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. செல்லத்துரையிடம் சொன்னால் தெருவில் நின்று கத்துவான். சண்டை வந்துவிடும். அவன்தான் சுந்தரம் சீனிவாசகத்துடன் சனிக்கிழமை குடித்துவிட்டுச் சினிமாவிற்குச் செல்வதைக் கண்டுபிடித்துச் சொல்லியது. நிறைய பணம் வருகிறது. தங்களுடைய வாழ்க்கை மாறுகிற சமயத்தில் மனுஷனுக்கு இப்படியொரு கெட்டபுத்தி வந்திருக்கிறதே என்று கண்ணீர்விட்டாள். யாரிடம் என்னவென்று சொல்வது. யார் தனக்கு உதவுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது.

கலைச்செல்வி, “எதுக்கு இப்ப ரோட்டில அழுதுட்டு வர்றே” என்று மெதுவாக அவளிடம் கேட்டாள். சரஸ்வதி ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவளது கண்களிலிருந்து நீர் வடிந்தது. கலைச்செல்வி எதுக்கு அழுகுற என்று திரும்பத் திரும்ப கேட்டபடி நடந்து வந்தாள். தனக்கு முன்னால் நடந்து செல்லும் சுந்தரத்தின் சட்டையைப் பிடித்து இதெல்லாம் உனக்கு நியாயமா எனக்கெதுவும் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கியா. கக்கூசில நீ ஒளிஞ்சிட்டு இருந்தப்ப அவள் வந்துட்டுப் போனது எனக்குத் தெரியாதான்னு நெனச்சிட்டு இருக்கீங்களா நீங்க ரெண்டு பேரும் என்று கேட்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அப்படி செய்ய தன்னால் முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. கண்களைத் துடைத்தபடி சுந்தரத்தின் பின்னால் நடந்தாள். தனக்குப் பக்கத்தில் நடந்து வந்த கலைச்செல்வியின் கைகளைப் பற்றியிருந்தாள். கலைச்செல்வி, கேட்டதற்கு அதைத் தவிர சொல்வதற்கு அவளிடம் வேறொன்றுமில்லை. தெருவில் அவர்கள் இருவருக்கும் பின்னால் ஆட்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து ஆட்கள் சென்று கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் சீனிவாசகம் திருவனந்தபுரம் பஸ்ஸ்டாண்டில் தனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் ஆட்களை விலக்கிக்கொண்டு வேகமாக நடந்துகொண்டிருந்தான்.  

000

எஸ். செந்தில்குமார்

தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.