சுதந்திரம் குறித்து டிரேஸி கே ஸ்மித்

தமிழில் : இல. சுபத்ரா.

ஜார்ஜ் ப்ளாயிட் என்னும் கறுப்பினரின் படுகொலை அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அநீதிகளில் ஒன்று. அதைத் தொடர்ந்து ஏராளமான போராட்டங்களும், கறுப்பினத்தவர்களுக்கு எதிராக மேலும் பல ஒடுக்குமுறைகளும் அமெரிக்காவில் நிகழ்ந்தேறியது. இவை உலகெங்கும் அதிர்வலைகளையும் கொந்தளிப்புகளையும் உண்டாக்கியது. இந்த அநீதி காலகட்டத்திற்கு எதிர்வினையாக அறிவியக்க தரப்பில் இருந்து ஒலித்த குரல்களில் முக்கியமானது டிரேஸி ஸ்மித்தின் ‘To Free the Captives’. ஒற்றைப்படையான குரல்களுக்கு மாறாக அவர் முன்வைக்கும் “சுதந்திரமானவர்கள்(Free) vs விடுவிக்கப்பட்டவர்கள்(Freed)” என்னும் பார்வை முக்கியமானது. இன்றைய நவீன அமெரிக்காவில் எல்லோரும் சமம் என்று தந்திரமாக பூசி மொழுகப்படுவதை இது உடைக்கிறது. அவர் இம்மாதிரியான கட்டமைக்கப்பட்ட தொன்மங்களை தன் சொந்த வரலாற்றின் துணைகொண்டு தகர்க்கிறார். ஒரு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை தேடி தன் தந்தையும் அவரது சகோதரர்களும் ராணுவத்தில் சேர்ந்ததாக ஸ்மித் குறிப்பிடுவதும், அன்றைய ராணுவத்தில் கறுப்பினத்தவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதில் உள்ள தயக்கங்களும் ஒருவகையில் தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை வலுவாக நினைவுறுத்துகிறது. உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக சூழலில் நிலைபெற்றிருக்கும் பொதுபுத்தியானது ஒன்றுபோலவே இருப்பது தற்செயலானது இல்லை என்றும் தோன்றுகிறது.
-அகழ் ஆசிரியர் குழு

டிரேஸி கே.ஸ்மித் கவிதைகள்

புலிட்சர் விருது வென்ற ட்ரேஸி கே ஸ்மித் நெறியாளர்கள் விட்னி டெரல் மற்றும் வி வி கணேசநந்தனுடன் இணைந்து ”சுதந்திரமானவர்கள்” (Free) “விடுவிக்கப்பட்டவர்கள்” (Freed) என்கிற இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு குறித்து உரையாடுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துக் குடிமக்களும் இந்த இரண்டில் ஏதோ ஒரு வகைமைக்குள் அடங்கிவிடுவதாக அவர் கருதுகிறார். எப்போதுமே சுதந்திரமாய் இருந்தவர்களது வழிவந்தவர்கள் முதல் வகைமையில் வருகிறார்கள். முதல் வகையினரால் கட்டுப்படுத்தப்பட்டவர்களது வழிவந்தவர்கள் இரண்டாம் வகைமையில் வருகிறார்கள். இந்நாட்டின் ஆயுதப் போர்களில் ஸ்மித்தின் முன்னோர்கள் ஆற்றிய பங்கு குறித்தும், சுதந்திரம் பற்றிய நமது வரலாற்றுப் புரிதலுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்தும் தான் மேற்கொண்ட ஆய்வுகள் சார்ந்து இதில் ஸ்மித் பேசுகிறார். ’To Free the Captives ’ (அடிமைப்பட்டவர்களை விடுவிக்க) அவரது புதிய கட்டுரைத் தொகுப்பு.

*
அத்தியாயத்திலிருந்து:

வி வி கணேஷநந்தன்: இத்தொகுப்பின் இரண்டாவது கட்டுரையில், “நான் சுதந்திரமாயிருந்தேன் என்றும் சுதந்திரம் எப்போதோ எனக்காக வெல்லப்பட்டுவிட்டது என்றும் நம்பிக்கொண்டிருந்தது எனது தவறு என இப்போது கண்டுகொண்டேன்…உண்மையில் நான் சுதந்திரமானவள் அல்ல, விடுவிக்கப்பட்டவள். சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இவ்விடங்களில் – அமைப்புகள் என நாம் அவற்றிற்குப் பெயரிடலாம் – நான் ஒரு அதிதி மட்டுமே.” என எழுதியிருக்கிறீர்கள். சுதந்திரமாய் இருப்பதற்கும் விடுவிக்கப்பட்டவராய் இருப்பதற்குமான வேறுபாடாக எதைக் கூறுகிறீர்கள்? இப்புத்தகம் முழுவதிலுமான உங்களது சிந்தனைப்போக்கில் அது என்னவிதமான பங்கை வகிக்கிறது?  

ட்ரேஸி கே ஸ்மித்: இது ஒரு நுண்ணிய வேறுபாடு, பெரும்பாலும் புலப்படாதது. ஆனால், பலவகையில் நாம் அதற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்கிறோம் என்று கருதுகிறேன். அமெரிக்க மனப்பாங்கானது நம்மில் சிலர் மட்டும் எப்போதுமே சுதந்திரமானவர்களாய் இருப்பதாகவும் இருந்துவருவதாகவும் நம்பும்படி கட்டமைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். அவர்களெல்லாம் காலம்காலமாக அதிகாரம் மற்றும் உடைமையினை கட்டுக்குள் வைத்திருப்பவர்களது வழித்தோன்றல்கள்போலும். இவை இந்நாட்டில் அடிமைப்படுத்துதல், மற்றமையை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் மற்றும் அதுபோன்ற திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது ”ஒப்பந்தங்கள்” என்பதாக உருக்கொண்டிருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

இவ்வகைமையில் வருகிற மக்கள் போட்டியற்ற ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். சுதந்திரமாய் இருப்பவர்களால் அடிமைப்படுத்துதல் மூலமும் காலனியாதிக்கத்தின் விளைவுகள் மூலமும் காலங்காலமாய் ஆதிக்கம் செலுத்தப்பட்டவர்களின் வழிவந்தவர்களாக மற்றவர்களாகிய நாங்கள் இருக்கிறோம். இந்நாட்டில் நாங்கள் உரிமைகோரவோ எதிர்பார்க்கவோ விமர்சிக்கவோ முடிகிற விஷயங்கள் குறைவான வரம்புகளுக்குள்ளும் குறுகிய எல்லைக்குள்ளும் அமைவதாகவே நினைக்கிறேன். இதுகுறித்த அதிக ப்ரக்ஞை இன்றியே நாம் பெரும்பாலான சமயங்களில் வாழ்கிறோம் என்றாலும் அவை இருக்கத்தான் செய்கின்றன. 2020ல் நம்மில் பலர் நீதி குறித்தும், நமது நாடு உள்ளிட்ட பல அமைப்புகள் நிறைய விஷயங்களை நிறையப் பேருக்கு வழங்குவதற்காக மாற்றத்தை நோக்கி நகரக்கூடும் என்பதைக்குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் இவையெல்லாம் எனக்குப் புலனாகத் தொடங்கின.

விட்னி டெரல்: இந்நிகழ்ச்சிக்கு முன்பு சுகியும் நானும் Freedom Caucus அமைப்பின் உறுப்பினர்களாலோ ரான் டிசாண்டிஸாலோ முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பாலோ
முன்மொழியப்பட்ட சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். உங்கள் கட்டுரையில், நீங்கள் சுதந்திரத்திற்குக் கொடுக்கிற விளக்கம் சுதந்திரம் குறித்த அவர்களது கருத்தாக்கத்தோடு பொருந்திப் போவதாகத் தோன்றுகிறது எனக்கு. சுதந்திரம் குறித்து, “அது ஒரு முனைப்பான செயல், அழித்தல் மற்றும் மறத்தலுடனான ஒப்பந்தம்” என விவரிக்கிறீர்கள். அதுகுறித்துச் சற்றுப் பேச முடியுமா?

TKS: ஆமாம், சுதந்திரமானவர்கள் எதிலிருந்து வருகிறார்கள் எதற்குப் பாத்தியப்பட்டிருக்கிறார்கள் எனப் புனையப்பட்டிருக்கிற கருத்தாக்கத்திற்குத்தான் இது திரும்பவும் வந்துசேர்கிறது. சில மக்கள் இங்கே வரும்போதே சுதந்திரத்தோடு வந்தார்கள் என்று நம்பி அதனடிப்படையில் செயல்படுவதே இயல்பானது என்பதே இந்நாட்டின் நம்பிக்கையாய் இருக்கிறது, ஆனால் உண்மையில் எப்போதுமே கைப்பற்றுதல் இருந்துவந்திருக்கிறது. ஒருசிலர் வேறுசிலரை ஆள்வதை ஊக்குவிக்கிற கடுமையான புலம்சார் அநீதி இருந்துவந்திருக்கிறது.

சுதந்திரம் என்னும் வார்த்தை நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிற விதம் பின்வருமாறு இருப்பதாக நான் நினைக்கிறேன்: பிறரை வாக்குரிமையற்றவர்களாக்கும் திட்டமிட்ட சூழ்ச்சிகளைப் பாதுகாக்கும் கேடயமாகச் செயல்படுவதாக; ’நடப்பதெல்லாம் இயல்புக்குமீறியதல்ல – வாக்களிக்கும் உத்தரவாதமான சூழல் சிலருக்கு இல்லாமல் இருப்பதோ சில மக்கள் இந்நாட்டின் முடிவெடுக்கும் வாய்ப்புகளில் தனக்கு உரிமையில்லை என்னும் நிலையில் இருப்பதோ அநீதியின் விளைவால் அல்ல, மாறாக அவர்கள் மற்றவர்கள் அளவிற்கான சுதந்திரத்திற்கு உரிமைப்பட்டவர்களல்ல என்பதனால்’ என மனசாட்சியின்றி நடப்பதை அனுமதிப்பதாக.

அதைவைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது. அது பாழாகிவிடும், வீணாக்கப்பட்டுவிடும். இதுதான் இப்போது வலுவாக ஒலிக்கிற உரையாடலாக இருக்கக்கூடும். ஆனால் அது ஒருபோதுமே அமைதியடைந்திருந்ததாக எனக்குத் தோன்றவில்லை.

WT: அழித்தல் சார்ந்த உங்கள் சொற்கள், 1619 செயல்திட்டம் மாதிரியான செயல்திட்டங்களிற்கும், வரலாற்றைக் கற்பிப்பதற்கும் ஐக்கிய அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் வரலாற்றுக்கு நேர்மையாய் இருப்பதற்கும், அந்தக் குழுக்கள் செலுத்திய எதிர்வினையை எனக்கு நினைவுபடுத்துவதாக உள்ளன. வரலாற்றை அறியவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரமும் அதைத் தொடர்ந்து அழிப்பதற்கான சுதந்திரமும் வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள். உங்களது விளக்கம் இதையும் உள்ளடக்கியதுதானா?

TKS: மிகச்சரி. இது சண்டையிட்டுத் திருடப்பட்டதென்பதை முழுமையான வரலாறு சொல்லும். பிறகெப்படி நல்லெண்ணத்துடன் செயல்பட முடியும்? இவ்விடத்தில் உங்களது இருப்பைப் பாதிக்கும் பின்புலமாக இது இருக்கும்போது நீங்கள் நம்புகிற ஒன்று உங்களை வந்துசேரும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்நாட்டில் சுதந்திரம் குறித்து நிலவும் தொன்மங்களுக்கு வரலாறு உண்மையிலேயே ஓர் அச்சுறுத்தலாகும். வரலாறு எப்போதுமே தொன்மங்களுக்கு அச்சுறுத்தலானதுதான். என்னைப்பொறுத்தவரை, மக்களையும் அவர்களது முடிவுகளையும் யதார்த்தத்தைக் கட்டமைக்கிற சூழல்களிலிருந்தும் அதற்குக் காரணமாயிருந்த வன்முறை வடிவங்களிலிருந்தும் தப்பிக்க உதவுபவையாகவே தொன்மங்கள் இருந்துவருகின்றன.

VVG: சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்தை வெவ்வேறு வகைகளில் அமல்படுத்திய பல்வேறு அமெரிக்க அமைப்புகள் உள்ளன என்றாலும் அமெரிக்க ராணுவத்தைக் காட்டிலும் அதனுடன் தொடர்புடைய அமைப்பு வேறெதுவும் இல்லை என்றே எண்ணுகிறேன். உங்கள் குடும்பத்திற்கு ராணுவத்துடன் உள்ள தொடர்பு குறித்து நீங்கள் நிறைய பேசுகிறீர்கள், அதனைக்குறித்துப் பேசுவதற்கு முன்பு சுதந்திரத்தையும் ராணுவத்தையும் நாம் ஏன் தொடர்புபடுத்துகிறோம் என்பது குறித்துப் பேச விரும்புகிறேன். அது முறையானதுதானா? உண்மைதான், நமது ராணுவம் ஹிட்லர் முசோலினி மாதிரியான சர்வாதிகாரிகளுக்கு எதிராகப் போரிட்டிருக்கிறது, அந்த வகையில், அவர்களால் ஆளப்படுவதிலிருந்து நம் தேசத்தைக் காத்திருக்கிறது. ஆனால் இன்று, ராணுவம் நமது சுதந்திரத்தைக் காத்ததாக பலரும் பேசுவதை நான் அடிக்கடி கேட்கிறேன். அதன் பொருள் என்ன என்று யோசிக்கிறேன். அதாவது, இராக்கிய விடுதலை நடவடிக்கை யாருடைய சுதந்திரத்தையாவது காத்ததா என்ன? எனக்கு அப்படித் தோன்றவில்லை.

TKS: ஆமாம், இது உண்மையிலேயே சுவாரஸ்யமானது. இதுகுறித்து நாம் உருவாக்கியுள்ள பல்வேறு வரையறைகள் இந்த வெவ்வேறு அமைப்புகளும் ஒரே நேரத்தில் செயல்பட உதவுகின்றன. உள்நாட்டுப் போரில் போரிட்ட மூதாதையர்கள் எனக்கிருப்பதாகக் கருதிக் கொள்கிறேன். போரிடும் காலத்தில், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடையவும் மனிதனுக்குரிய முழு உரிமைகளைப் பெறவும் தாங்கள் சண்டையிட்டு வருவதாக அடிமைப்படுத்தப்பட்ட கருப்பர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நம்பினார்கள், எதிர்பார்த்தார்கள் என்பதை இத்தேசம் புரிந்துகொண்டது. ஆனால், அவை நாம் இன்று உணர்கிறாற்போன்ற அரூபமானவை அல்ல, அது அவர்களது தினசரி இருப்பின் முழுப்பொருண்மையான உண்மைகளை உள்ளடக்கியது. முதலாம் உலகப்போரில் போரிட்ட எனது தாத்தா குறித்தும் அவரது சகோதரர் குறித்தும் பிந்தைய மோதல்களில் பின்னாட்களில் சேர்த்துக்கொள்ளப்பட்ட என் மாமாக்கள் குறித்தும் அப்பா குறித்தும் நான் சிறிது எழுதுகிறேன். பெரும்பாலான சமயங்களில் கருப்பின வீரர்களும் சிறுபான்மையின வீரர்களும் இந்த நாட்டின் முழுமையான குடிமகன்களாகக் கலந்துகொண்டு ஒரேவிதமான உரிமைகளுக்காக போராடவே எதிர்பார்க்கப்படுகிறார்கள். எனது அப்பாக்களுக்கும் அவரது சகோதரர்களுக்கும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதே மத்தியதர அல்லது அதுபோன்ற ஒரு வாழ்க்கைக்கான வழியாக இருந்திருக்கிறதென்பதை நான் அறிவேன். எனவே அது சில சூழல்களிலிருந்து கிடைக்கிற விடுதலையாகவே இருந்திருக்கிறது, எடுத்துக்காட்டாக அவர்கள் பிறக்கும்போதே வாழநேர்ந்த ஜிம் க்ரோ பிரிவினைகளைக் கூறலாம். 

சேவையில் பங்கேற்றது எல்லோருக்குமே அந்த அனைத்துப் பலன்களையும் தரவில்லை என்பதை அறிவேன். ஆனால் அரசு நல்லெண்ணத்துடன் செயல்படும் என்பதும், அனைவரும் குடிமக்களாக வாழும் இந்த செயல்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க முடியும் என்பதுமே எங்களது ஊக்கமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் சொல்லிவருவது போல, எதுவுமே தூய்மையானதல்ல. ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்தும் தன்மையால் மாசுபடாத வரலாறென்பதே கிடையாது. இது உண்மையாகவே சுவாரஸ்யமானதெனக் கருதுகிறேன். இந்நாட்டில் நாம் இயைந்து செல்கிற சமூகப் படிநிலைகள் பலவற்றை ராணுவம் வலுவூட்டுகிறது, அதிகாரத்திற்குப் பணிந்து போவதையும் அதிகாரம் என்பது பலவிஷயங்களில் நம்பத்தகுந்தது என்பதையும் வலியுறுத்துவது அவற்றில் முதன்மையானது. ஆனால் அதேநேரம், இந்நாட்டின் அதிக பலவீனமானவர்களை நீங்கள் கூறுகிற வேறு சில விஷயங்களில் உடந்தையாகக் கோருகிறது. உதாரணமாக, வளங்கள் மீதான மோதல், வேறு மாகாணங்களில் வேறு நாடுகளில் அழிவினை உண்டாக்கப் போகிற மோதல்கள்.

எனவே இது சிக்கலான தேர்வுகளைத் தொகுப்பாகக் கொண்டுள்ளது, எல்லோருமே இவை குறித்துச் சிந்திக்கிறார்களா என்பதும், அல்லது சிந்திக்கமுடியும் என்றும் சுதந்திரத்தின் மிகச்சுலபமான பதிப்பினை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் நம்புகிறார்களா என்பதும் சந்தேகமே. இது தற்செயலானது அல்ல என்பது உறுதி. பல்வேறு இனத்தைச் சேர்ந்த குடிமக்களை வாதி பிரதிவாதிகளாகக் கொண்டுள்ளதன் காரணமாக இந்த மோதல்கள் –அதற்கான நோக்கங்களில் சில ஊமையாக்கப்பட்டிருக்கையில் – பெரும்பான்மையினரை விடுத்து சிலரை மட்டும் மகிழ்விக்கிற அதிகாரத்தையும் அமைப்பையும் வலுப்படுத்துகின்றன.

WT: கருப்பின வீரர்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றது குறித்து நான் முன்பு எழுதியிருக்கிறேன், வேறு பலரும்கூட எழுதியிருக்கிறார்கள் – ஏனெனில் மோசமான நகைமுரணாக அவர்கள் ஜிம்க்ரோ நடைமுறைக்குத்தான் திரும்பவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் உங்களது அந்த முதல் கட்டுரையில் முதலாம் உலகப்போரில் போரிட்ட உங்களது தாத்தா உள்ளிட்ட கருப்பின வீரர்கள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அது அதிகம் எழுதப்பட்டதில்லை. அதுகுறித்த உங்களது ஆய்வுகள் பற்றியும் போரில் உங்களது தாத்தாவின் அனுபவங்கள் மற்றும் இப்பிற வீரர்களது அனுபவங்கள் குறித்தும் பேசமுடியுமா? அதன்பிறகு உங்களது கட்டுரையிலிருந்து சிறுபகுதியை எங்களுக்காக வாசிக்கலாம்.

TKS: நிச்சயமாக. என் தாத்தாவின் அனுபவம் குறித்து நான் விரும்பிய எனக்குத் தேவைப்பட்ட பல ஆவணங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. போர்வீரர்கள் பட்டியலிலிருந்து அவர் அதன்பொருட்டு எங்கெல்லாம் பயணித்திருக்கிறார் என்பது குறித்து உத்தேசிக்க முடிந்தது. அவர் போருக்குச் சென்ற சமயத்திலோ அவர் ஃப்ரான்ஸில் இருந்த சமயத்திலோ எடுத்திருக்கப்பட வாய்ப்புள்ள அவரது ஒரு பழைய புகைப்படம் கையில் சிக்கியது. அது ஒரு அதிசயம், பொக்கிஷம்.

ஆனால், அவரது அனுபவம் எப்படியிருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள பிறரது அனுபவங்கள் குறித்த ஆவணங்களை நான் ஆராயவேண்டியிருந்தது. ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் (Smithsonian Museum of African American History and Culture) என்கிற இடம் மிகப்பயனுள்ளதாக இருந்தது. நிறைய தனிமனிதர்கள், முதலாம் உலகப்போர் வீரர்களது வாரிசுகள் தங்கள் தந்தையர் தாத்தாக்கள் கொள்ளுத்தாத்தாக்களது ஆவணங்களை பரந்துபட்ட ஒரு வரலாற்றிற்காக நல்கியுள்ளார்கள். வெகு சில கருப்பர்கள் மட்டுமே போர்க்குழுக்களில் இருந்துள்ளனர், அதற்கான காரணம் தற்செயலானது அல்ல. கருப்பர்களிடம் ஆயுதங்களைத் தருவது சார்ந்த பயம் ஒருபுறமும் கருப்பர்களை திறமையற்றவர்களாக சோம்பேறிகளாக கோழைகளாக ஏமாற்றுக்காரர்களாக முத்திரைகுத்தும் பழக்கம் மறுபுறமுமாக இவை தொழிற்பட்டன. எனவே பெரும்பாலான கருப்பின வீரர்கள் – எல்லோரும் அல்ல – வேலையாட்களாகவோ சேவைப் பிரிவுகளிலோ பணிசெய்தனர் – எனது தாத்தாவும் அங்கேதான் இருந்தார்.

000

பேட்டிக்குத் தொடர்புடைய உசாத்துணைகள்:
Fiction/Non/Fiction, Season 4 Episode 9: “Tracy K. Smith and Kawai Strong Washburn on Biden’s Debts to His Base (Especially Black Women)”  •  The 1619 Project  •  Smithsonian’s National Museum of African American History and Culture  •  W.E.B. Du Bois  •  “The Glaring Contradiction of Republicans’ Rhetoric of Freedom”  by Ronald Brownstein|The Atlantic, July 8, 2022 •  “Trump’s Second-Term Plans: Anti-‘Woke’ University, ‘Freedom Cities’”  by Andrew Restuccia | The Wall Street Journal

இல. சுபத்ரா

இல.சுபத்ரா, பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர். திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது(Half the night is gone)’ நாவலின் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல' என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு, அனா பர்ன்ஸின் 'ஆயன்(Milkman)' ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.