/

ரயில்வே ஸ்டேஷன் : சுரேஷ்குமார இந்திரஜித்

அவன் அந்த ஊருக்குச் செல்வதாக முடிவு பண்ணினான். ஒரு காலத்தில் அவன் அந்த ஊரில் அரசுப்பணி புரிந்தான். அவனுக்கு அப்போது பல்வேறு நிலைகளில் உதவியாக இருந்த எவரும் இப்போது பணியில் இல்லை. சிலர் இறந்துவிட்டார்கள். அவன் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

பணியில் இருக்கும்போது இருசக்கர வாகனத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வாகன நிறுத்துமிடத்தில் வைத்துவிடுவான். மாதக் கட்டணம். ஈரோடு பாஸஞ்சர் காலை 9.10 க்கு வரும். ரயிலுக்கு மாதாந்திர பாஸ் எடுத்திருந்தான். அவன் பிளாட்பாரத்தில் நுழைவதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கும். ரயிலில் கூட்டமிருக்காது. அவன் ஏதாவது ஒரு கம்பார்ட்மெண்ட்டில் ஏறி உட்கார்ந்துகொள்வான். சற்றுநேரத்தில் சிகரெட் எடுத்துப் பற்றவைப்பான். அவனிடம் லைட்டர் இருந்தது. அதை ஆன் செய்து எரியும் சுவாலையில் சிகரெட் பற்றவைப்பதில் அவனுக்கு மிடுக்கான தோரணை வந்துவிடும்.

முன்பு அவன் பைப் வைத்திருந்தான். அதற்கான புகையிலையையும் அவனிடம் இருந்தது. பைப்பில் பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் விநோதமாக இருக்கும். அன்னியமாகத் தெரியும். பெரிய இடத்து மனிதர்கள் கூடும் இடத்திற்குச் சென்றால், பைப்பில் புகைப்பான். அந்த பைப் கீழே விழுந்து உடைந்துவிட்டது. அவனுக்கு அந்தப் புகையிலை ஒத்துக்கொள்ளவில்லை. புது பைப் வாங்கவில்லை.

இப்போது பொது இடத்தில் புகைபிடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. ரயிலில் புகைபிடிக்க முடியாது. பொது இடத்திலோ அலுவலகத்திலோ புகைக்க முடியாது. அவன் மேலதிகாரி மேஜையில் ஆஷ்டிரே வைத்திருப்பார். இரண்டு சிகரெட் பெட்டிகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார். நான் பார்க்கச் செல்லும் பெரும்பான்மையான நேரங்களில் புகைத்துக்கொண்டிருப்பார். கோப்புகளைப் பார்க்கும்போது, ஆஷ்டிரேயில் சிகரெட்டை வைத்துவிட்டு இரண்டு பக்கங்கள் பார்த்ததும் மீண்டும் சிகரெட்டை எடுத்துப் புகைப்பார். சமயங்களில் புகையை வளையம் வளையமாக ஊதுவார். அவை காற்றில் சென்று மெல்லிய புகையாக மாறி மறையும்.

அவன் டிக்கெட் எடுத்து பிளாட்பாரத்தில் நின்றிருந்தான். ரயில் வந்தது. கூட்டமில்லை. பழைய நினைவுகளுடன் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டான். எதிரே உள்ள பெஞ்சில் கல்லூரி மாணவன் போல் தோன்றிய ஒருவனும், மாணவி போல் தோன்றிய ஒருத்தியும் உட்கார்ந்து மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் மூன்று அடி இடைவெளி இருக்கலாம். ஆனால், அவர்கள் பேசிக்கொள்வது எதுவுமே கேட்கவில்லை. அவன் உட்கார்ந்திருக்கும் பெஞ்சில் ஜன்னலோரத்தில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவன் இறங்கவேண்டிய ஊர் இன்னும் இருபது நிமிடத்தில் வந்துவிடும். வயதானவர் எங்கு போகிறாரோ, இந்த பையனும் பெண்ணும் எங்கு போகிறார்களோ தெரியவில்லை. பையனுக்கும் பெண்ணுக்கும் எதிரே இருவர் உட்கார்ந்திருப்பது பற்றிய எண்ணமே இல்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ரயில் கிளம்பியது.

அந்தப் பையனும் பெண்ணும் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உன்னிப்பாக கவனித்தான். ஒன்றுமே கேட்கவில்லை. அந்தப் பெண் ஒரு நோட்டுப் புத்தகத்தை மடியில் வைத்திருந்தாள். அதன் உள்பக்கத்தில் பேனாவைச் செருகியிருந்நாள். அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தபோது நோட்டுப் புத்தகம் கீழே விழுந்தது. அவன் எடுத்தான். அட்டையின் மேல் ரோகிணி பி.எஸ்.சி. 2வது வருடம் என்று எழுதியிருந்தது. அடைப்புக்குறிக்குள் ‘பாட்டனி’ என்று எழுதியிருந்தது. எடுத்த நோட்டுப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தான். அப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். பிறகு கண்களைத் திருப்பிக்கொண்டாள். அந்த்ப் பையனும் பெண்ணும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அவன் இறங்கவேண்டிய ஊர் வந்துவிட்டது. இறங்கினான். அழகான ரயில்வே ஸ்டேஷன். இத்தகைய வடிவமைப்பை இந்தியா முழுக்க உருவாக்கிய பிரிட்டிஷ்காரர் பெயர் தெரியவில்லை. அந்த வேலி டிசைனும், கட்டிட டிசைனும், ஊர் பெயரைத் தெரிவிக்கும் சிமெண்ட் தூண் அமைப்பும், அதில் மஞ்சள் பின்னணியில் கருப்பு பெரிய எழுத்துகளும், சிமெண்ட் சாய்வு பெஞ்சுகளும் கற்பனையில் வந்துதானே இத்தகைய ரயில்வே ஸ்டேஷன் வடிவமைப்பை உருவாக்கியிருக்க முடியும். ரயில்வே ஸ்டேஷனை நன்றாகப் பார்த்தான். அவ்வளவு அழகாக இருந்தது. சில இடங்களில் நிழலுக்கு மரங்கள் இருந்தன.

அந்தக் காலத்தில் தான் குடியிருக்கும் ஊருக்குத் திரும்பிச் செல்லும் ரயிலுக்காக சாய்வு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து சக பணியாளர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் கண்ணாடி மூடப்பட்ட தள்ளுவண்டியில் முறுக்கு, சீடை, அதிரசம், காரச்சேவு கொண்டுவருவார். வழக்கமாக முறுக்கு வாங்கிச் சாப்பிடுவார்கள். அப்போதே வயதானவராக இருந்தார். இப்போது உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ. அப்போது அவருக்குத் திருமணமாகாத மகள் இருந்தாள். பெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத சில நாட்களில் தள்ளுவண்டியை அவள் தள்ளிக்கொண்டு வருவாள். பிறகு ஆண்களின் தொல்லையினால் அவள் வருவதில்லை.

அவன் பஜாருக்குள் செல்லாமல் வெளிப்பாதையில் நடந்தான். சற்றுநேரத்தில் வயல்வெளிகள் வந்துவிட்டன. இருபுறமும் நெல்வயல்கள். வரப்புகளை ஒட்டிச் செல்லும் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவன் செல்லும் இடத்திற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் நடக்கவேண்டும். ஆட்டோ அமர்த்திச் சென்றில்லலாம். ஆனால், அதெல்லாம் தேவையில்லாத குழப்பத்தைக் கொண்டுவரும்.

தென்னந்தோப்பு தெரிந்தது. செண்பகம் இருக்கிறாளோ இல்லையோ, போய்ப் பார்த்துவிடுவது என்றுதான் வந்திருக்கிறான். தென்னந்தோப்புக்குள் நுழைந்தான். ஒரு காரை வீடு இருந்தது. அவன் வெளியே நின்று, “செண்பகம்… செண்பகம்” என்று அழைத்தான். உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் ஈரக்கைகளை சேலையில் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள். அவனைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தாள்.

“நீங்களா. எவ்வளவு காலம் ஆச்சு உங்களைப் பார்த்து.”

“ஆமாம், செண்பகத்தைப் பாத்துட்டுப் போகலான்னுதான் வந்தேன்.”

“உள்ளே வாங்க.”

அவன் உள்ளே நுழைந்தான். இரண்டு நாற்காலிகள் இருந்தன. இன்னும் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகள் சுவரை ஒட்டி அடுக்கப்பட்டிருந்தன. நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். செண்பகம் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்துகொண்ண்டாள்.

“எனக்கு ஒரே சிரிப்பா வருது” என்று சொல்லி செண்பகம் சிரித்தாள்.

“எதுக்கு.”

“உங்களைப் பாத்த சந்தோஷந்தான்.”

“அப்ப நானும் சிரிக்கறேன். உன்னைப் பாத்த சந்தோஷத்திலே” என்று அவனும் சிரித்தான்.

அவன் எழுந்து அவளருகே சென்றான். அவள் எழுந்து நின்றாள். காலால் ஒரு பக்கக் கதவைச் சாத்தினாள். இருவரும் கட்டிக்கொண்டார்கள். அவள் முகத்தில் அவன் சில இடங்களில் முத்தமிட்டான்.

சற்று நேரத்தில் பிரிந்து அவரவர் இடத்தில் உட்கார்ந்துகொண்டார்கள். அடைத்த ஒரு பக்கக் கதவைத் திறந்தாள்.

“பையன் என்ன செய்யறான். எப்படி இருக்கான்.”

“அய்யா நீங்க காட்ன வழியிலே படிச்சு, பாஸாகி அரசாங்க வேலைக்கும் போயி, மாசாமாசம் எனக்குப் பணம் அனுப்பறான். நீங்க இருக்கற இடம் தெரியலை. மெட்ராஸ்லே மக வீட்லே இருக்கறதா கேள்விப்பட்டேன். வேலை கிடைச்ச பின்னே உங்களை சந்திச்சு பையனுக்கு ஆசீர்வாதம் வாங்கணும்னு நெனைச்சேன். முடியாமல் போயிருச்சு” என்றாள்.

“ஆமா பெண்டாட்டி இறந்த பிறகு மக வீட்டுக்குப் போயிட்டேன். மெட்ராஸ்லே வைச்சுத்தான் வைத்தியம் பாத்தோம். கேன்சர்ங்கிறதுனாலே ஒண்ணும் சரிசெய்ய முடியலை.”

“நீ எப்படி இருக்கே.”

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன், தென்னை மரங்களைப் பாத்துக்கிட்டு. தேங்காயும் முன்னைப்போல காய்ப்பு இல்ல. டீ சாப்டறீங்களா. பால் இருக்கு.”

“சாப்பிடறேன்.”

அவள் எழுந்து அடுக்களையாக இருந்த சிறிய இடத்தில் இருந்த அடுப்பைப் பற்றவைத்தாள். சற்றுநேரத்தில் டீ வந்தது.

டீ டம்ளரை செண்பகம் அவனிடம் கொடுத்தாள். அவன் வாங்கி டீயை உறிஞ்சினான். “செண்பகம் மாதிரியே நல்லா இருக்கு” என்றான். அவள் வெட்கப்பட்டாள்.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லையே” என்றான்.

“சர்க்கரை நோய்னு சொல்றாங்க. இனிப்பு சேத்துக்கறதில்லை. மாத்திரை சாப்பிடறேன்” என்றாள் செண்பகம்.

பழைய கதைகள் பேசினார்கள். சிரித்துச் சிரித்துப் பேசினார்கள். அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

“நேரமாயிருச்சாக்கும். இனி எப்ப பாக்கறதோ தெரியலை” என்றாள்.“என்ன செய்றது. வாழ்க்கை இப்படித்ஆன் ஓடும்” என்றான் அவன்.

“நீங்க செஞ்ச உதவியை நானும் என் பையனும் மறக்கமாட்டோம்.”

“நான் என்ன பெரிசா உதவி செஞ்சேன். எனக்குத் தெரிஞ்ச வழியைக் காண்பிச்சேன். சில உதவிகள் செய்தேன். அவ்வளவுதான். நீ எனக்கு செய்ததுதான் பெரிசு. ரயில் வர்றநேரமாச்சு. திரும்பிப் போகணும்” என்றான்.

“பக்கத்துலே வாங்க” என்றாள். அதே சமயம் காலால் ஒரு பக்கக் கதவைச் சாத்தினாள்.

அவன் பக்கத்தில் வந்தான். கட்டிக்கொண்டார்கள். அவன் முகத்தில் அவள் சில இடங்களில் முத்தமிட்டாள்.

இருவரும் பிரிந்தார்கள். அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். சோகமாய் நின்றிருப்பதுபோல் இருந்தாள். சாலையை அடைந்து, நடந்து, ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். அழகான ரயில்வே ஸ்டேஷன்.

வரும் ரயிலில் ஏற சில பயணிகள் காத்திருந்தார்கள். சிமெண்ட் சாய்வு பெஞ்சில் உட்கார்ந்தான். பலகாரத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு ஒருத்தி வருவதைப் பார்த்தான். கூட ஒரு சிறு பையன் துணைக்கு வந்துகொண்டிருந்தான். சில பயணிகள் பலகாரங்கள் வாங்கினார்கள்.

அவன் பலகாரத் தள்ளுவண்டி அருகில் சென்றான். “அம்மா, நான் முன்பு ஒரு காலத்தில் இங்கு வேலை பாத்தேன். உங்க அப்பாவைத் தெரியும்” என்றேன்.

“அவர் இறந்துபோயி ரொம்ப காலாமாயிருச்சு. இவன் என் பையன்” என்று அந்தச் சின்னப் பையனைக் காட்டினாள்.

அவன் முறுக்கு வாங்கினான். அதற்கான பணம் கொடுத்தான். அவள் தள்ளுவண்டியை நகர்த்தி பிற பயணிகளை நோக்கிச் சென்றாள்.

சற்றுநேரத்தில் ரயில் வந்தது. ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ஊர் போய்ச் சேர்ந்தான்.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

2 Comments

  1. வளையம் வளையமாக ஊதப்பட்ட சிகரெட் புகை, காற்றில் சென்று மெல்லிய புகையாக மாறி மறைந்து … அது மீண்டும் மெல்லிய புகையாக வியாபித்து, வளையம் வளையமா உருவெடுத்து அழகு காட்டுகிறது இந்த கதை.

    சுகமாக இருக்கும் ஊரை, உறவுகளை, ‘இனி எப்ப பாக்குறதோ தெரியலை’ என்று சோகமாக மறைகிறது வாழ்க்கையின் ஓட்டம். ரயில் பயணத்தில் வரும் வாலிபன், நடு வயதினன், முதியவர் என மூவரும் ‘இனி எப்பவுமே திரும்பாது வாழ்க்கை’, என்று இருத்தலை காட்டுகிறார்கள். முதுமை … கனத்த இதயத்தோடு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

    இந்த கதை காட்டிய காட்சிகளை விட்டு விலக முடியவில்லை. உணர்வையும், உத்தியையும் செதுக்கி ஒரு குறும்படத்தையே காட்டிவிட்டீர்கள் சுரேஷ்குமார் இந்திரஜித் … சார் !.

  2. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆணின் மனதிலும் இதுபோன்ற நிகழ்வு நடக்காதா என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காதே! சுரேஷ்குமார் இந்திரஜித் தின் அற்புதமான எழுத்து நமக்கெல்லாம் பரிச்சயமானது தான். அதை மீண்டும் அனுபவிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்!

உரையாடலுக்கு

Your email address will not be published.