/

நண்பர்களை உருவாக்குவதற்கான போர் : அகரன்

வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள்.

ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது.

மகளைக் கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன்.

‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன்.

‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள்.

என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது.

***

தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள்.

போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு.

அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ .

சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21.

21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள்.

மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில்‘ மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான். லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான். அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம்.

மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும், நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி.

1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள்.

‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம்.

‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’

இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள்.

‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’
இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான்.

களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய்‌ நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது.

முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள்,

‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’

‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’

‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’

களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான்.

மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும், அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது.

மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’

முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது.

அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது. விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது.

‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது.

நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது.

வாசகனை தாகக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது.

ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது‌ என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார்.

என்‌ மனம் மலரவனை‌ இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா? என்று அங்கலாய்த்தபடி‌இருந்தது.

***

மகள்‌ ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள்‌ என்னிடம்‌ ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது.

‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்‌ இதை நீ எங்கே‌ கற்றுக்கொண்டாய் என்றேன்?’

தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான்‌ இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘

‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’

‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’

‘அப்படி என்றால் உன்னோடு‌ யாரும் விளையாடமாரட்டார்களா ?’

‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே ‌விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன்.

‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’

‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள்.

௦௦௦

அகரன்

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

1 Comment

  1. பொதுவாக களத்திலிருந்துகொண்டு, அல்லது களமாடியபின் வெளியில் வந்து போரிலக்கியம் படைத்தவர்களிடையே, போராளிகள் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்தியும் அவற்றை மிகையாக உன்னதப்படுத்தியும் சாகசச்செயல்போலவும் எழுதும் ஒரு போக்கு இருந்தது. அதனாலேயே போரிலக்கியங்கள் சலிப்பைத்தரத் தொடங்கின. மலரவனின் போர்பற்றிய பார்வையும் எழுத்தும் மனிதநேயத்தையும், மாற்றானின்/எதிரியின் உயிரின் பெறுமதியையும் பாரபட்சமின்றி விளம்பிச்செல்வதால் வாசகமனதை நிரவிநிறைத்துச்செல்கின்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.