/

அகழ் : நூல் அறிமுகங்கள்

1.

பிரியத்தின் முரண்

(பொன்முகலியின் ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுக்கும் திரும்புகின்றபோது’ கவிதை நூலை முன்வைத்து)

“எல்லாவற்றுக்கும் விடையறிவது
உன்னை எந்த விதத்தில்
ஆற்றுப்படுத்தப் போகிறது?
உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்
பிரத்யேகமான இரு கண்களை
தேடிக் கண்டடை.
எல்லாவற்றுக்கும் பதில்
நீ புரிகிற காதலில் இருக்கிறது.”

இணையத்தில் இக்கவிதையை வாசித்ததுதான் பொன்முகலி கவிதைகளுடனான எனது முதல் அறிமுகம். காதலின் மீதான ஒப்பற்ற நம்பிக்கையையும், எல்லாவற்றின் மீதான அலுப்பையும் ஒருசேர வெளிப்படுத்திய அக்கவிக்குரலின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உடன் அவரது தாழம்பூ கவிதைத் தொகுதியை வாங்கி வாசிக்க முயன்றபோது ஏமாற்றமே ஏற்பட்டது. அத்தொகுதியை முழுமையாக என்னால் வாசிக்க இயலவில்லை. வெற்று குறிப்புகளாய் தோன்றியது. எனவே அதைக் கைவிட்டேன். பின் புத்தகக் கண்காட்சியில் ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுக்கும் திரும்புகின்றபோது’ தொகுப்பை எதேச்சையாக கண்டெடுக்கும்போதுதான் பொன்முகலியை முதன்முதலில் வாசித்த அக்கணத்தின் உணர்வுகளை மீட்டெடுத்துக் கொண்டேன்.

பொன்முகலியின் கவிக்குரல் மீது எனக்கொரு ஆழமான நம்பிக்கையின்மை இருக்கிறது. அவை வெளிப்படுத்தும் எதையும் நான் நேரடியாக நம்பிவிடுவதில்லை. நிறைய ஏமாற்றும் ஒரு நண்பரைப் போல. அதே நேரம் நட்பைக் கைவிடும் அளவு மோசமில்லை. எனவே அவரின் கவிதைகளில் போலித்தனமில்லாத ஒரு மானுடத்தைக் கண்டுகொள்கிறேன், ஆனால் நேரடியாக அல்ல. தியாகிப் பட்டத்துக்காய் ஆற்றில் குதிக்கும் ஒரு நபரைப் போல, உறவுகளை இருபுறமும் கூருள்ள கத்தியாகவே அணுகும் நபரைப் போல, தனது புலம்பல்கள் மீது மாத்திரமே அதீத அக்கறைகொண்ட நபரைப் போல, எப்போதும் குருதி சிந்தத் தயாராக இருக்கும் காதலரைப் போல மிகுந்த கவனத்துடனே நான் அவரின் ஒவ்வொரு கவிதையையும் அணுகுகிறேன்.

நம்மை வேண்டுமென்றே ஏமாற்றும் ஒருவருக்கும், நம்மையும் தன்னையும் ஒருசேர ஏமாற்றும் ஒருவருக்கும் இருக்கும் வித்தியாசம் சற்றே பெரியதென்று சொல்லிக்கொண்டே மீண்டும் இக்கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இதில் இரண்டாம் பாணியாக ஒரு கவிஞர் இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

ஒருகோணத்தில் நான் இக்கவிதைகளை மிக மோசமாக மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இக்கவிதைகள் மீது எனக்கொரு ப்ரியம் இருப்பதாகவும் படுகிறது. இந்த முரணையே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஒருவேளை பொன்முகலியின் குரலில் என்னை, நான் நேசிக்கும் சிலரைக் கண்டுகொள்கிறேனா என்பதை யோசிக்கிறேன். தான் மிகமிகச் சரியென கவி சொல்லும்போதே, அவர் சரியல்ல என்பது நமக்குத் தோன்றிவிடுகிறது. அது நாம் சரியல்ல என்ற அறிதலிலிருந்து வருமென்றால் பிரச்சினையில்லை. கேள்வி, அவ்வறிதலைக் கவிஞரும் பகிர்ந்துகொள்கிறாரா என்பதே! முடிவில், இல்லையென்றே எனக்குத் தோன்றியது.

பொன்முகலியின் கவிதையிலிருந்து என்னை விலகச் செய்யும் பிரச்சினையென்பது அவற்றின் தன்முனைப்பு. என் வீட்டருகே உள்ள மரத்திற்கு வருகைதரும் ஒரே இனத்தைச் சேர்ந்த இரு பறவைகளை அடையாளம் காண்பதென்பது என்னை மகிழச் செய்யும், ஆனால் பொன்முகலியை அது முக்கியத்துவம் இல்லாதவராக உணரச் செய்கிறது. உலகிலுள்ள எல்லாமே அவரது முக்கியத்துவத்தை அச்சுறுத்துபவையாகவே இருக்கின்றன. ஒரு கவி தன்னிலையை எழுதும்போது, அது வெறும் கவியின் தன்னிலையாக, நமக்கு வேற்றுமையாகவே தோன்றுமென்றால், அந்த வேற்றுமையின் பால் நேசம் உருவாகவில்லை என்றால் அங்கு கவிதை தொழிற்படவில்லை என்றே பொருள்.

உலகம் பொன்முகலியைச் சுற்றிச் சுழல்கிறது. நம்முடையதைப் போன்ற ஒரு உலகையே அவரும் எழுதுகிறார், ஆனால் அது அவருடையது. அந்தத் தன்முனைப்பிலிருந்தே அவர் கவிதையை உருவாக்கி நம்மோடு உரையாடுகிறார். அல்லது அவர் பேசுகிறார், நாம் கேட்கிறோம். இவையே அவரது கவிதைகளை வெறும் புலம்பல்களாகச் சுருக்கிவிடுகின்றன. பல சமூக ஊடகங்களில் தன்முனைப்பன்றி வேறேதுமில்லா இன்ஃப்ளூயன்சர்களை விட, ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தகன்றுகொண்டிருக்கும் அக்கவுண்ட்டுகளை விட ஒரு கவிஞருக்கு இன்னும் சொல்ல ஏதேனும் இருக்கவேண்டும், அது இன்னும் பொன்முகலியின் கவிதைகளில் முழுமையாக நிகழவில்லை. ஆனாலும் நான் முதல்வாசிப்பின், முதற்பார்வையின் ப்ரியம் தருகின்ற நம்பிக்கையின் மீது இன்னமும் சற்று நம்பிக்கையோடே இருக்கிறேன்.

எல்.ஜே.வயலட்
‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ நூலின் ஆசிரியர்

2.

மிளிரும் கருணை

(அஜிதனின் ‘மைத்ரி’ நாவலை முன்வைத்து)

அஜிதனின் முதல் நாவலான மைத்ரி மந்தாகினியும், சோன் கங்காவும் தவழும் மலைப்பகுதியை களமாக கொண்டு அங்கே உருவாகும் நட்பை காதலை காட்சிப்படுத்துகிறது. நிலக் காட்சிகள் வர்ணித்தல் நதி, நீர் நிலைகளை வர்ணித்தல், காட்டு மரங்களை வர்ணித்தல், இசையை வர்ணித்தல், பெண்ணை வர்ணித்தல், சுவையை வர்ணித்தல் என வர்ணனைகளின் கவித்துவமாக சங்கமமாக நிறைத்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த வர்ணனைகள் வசீகரமான வாழ்வியலை பயணத்தை கலையை பண்பாட்டை ரசனையை பதிவு செய்வது இந்த நாவலில் சிறப்பம்சம்.

நாவலாசிரியர் கட்டமைத்திருக்கும் பயணவழியில் வாசகர் தாமே பயணப்படும்படிக்கு நாவல் கை தேர்ந்த சிற்பியிடம் சுகப்படும் சிற்பம் போல எழுந்து வந்திருக்கிறது. கதையை மட்டும் உணரும்படி எழுத்தப்படுவது ஒரு வகை எழுத்து. கதையில் கிளர்ந்தெழும் உட்காட்சிகளை காண எழுதுவது இன்னொரு வகையான எழுத்து. அஜிதனின் மைத்ரி இரண்டாம் வகைமைக்கு அருகில் நிலைகொள்கிறது. புராண தொன்ம கதைகளிலிருந்து நிகழ் மனிதர்களை உருவாக்க முயற்சி செய்வதிலும் நாவல்  சோதனை செய்து பார்த்திருக்கிறது.

கங்கை (மந்தாகினியை) நதியை சிவனின் தங்கை என்று சொல்வார்கள். கங்கையின் தீவிரத்தை தன் சடைமுடியுள் சுருட்டும் போது அவள் சிவன் மீது காதல் கொள்கிறாள். சிவமோகம் தணியும் போது அங்கிருந்து தப்பி மனிதர்களை புனிதமாக்க கங்கையாக உருமாற்றம் கொண்டு மலையிலிருந்து ரிஷிகேஷ் நோக்கி இறங்கி ஓடுகிறாள். இந்த கதையில் மைத்ரி ஹரனுக்கு அறிமுகம் ஆகும் போது “சகோதரா” என்று அழைத்து பின்னர் அவனையே மோகித்து காரணமே சொல்லாமல் தன் பாதையில் பிரிந்து ஹரித்துவார் சென்றுவிடுகிறாள்.

மைத்ரியின் பிரிவு ஹரன் தன் காதலி கௌரியை தீவிரமாக பற்றிக் கொள்ள காரணமாகிறது. கங்கையே சிவனை பார்வதிக்கு(கௌரிக்கு) தன் உடலின் பாதி பகுதியை தர வைக்கிறாள். கங்கை இந்த பூமியை பொன்னாக மாற்றிக் கொடுக்கிறாள். மைத்ரி ஹரனுக்கு அவன் வாழ்வின் மறக்கவே முடியாத, ஒரு பேரொளியாகிறாள். அது மட்டுமல்லாமல் கஸ்தூரி மிருக்(மான்) காணும் மைத்ரி மாயமான் போல ஹரன் உலகிலும் ஹரன் அதே மாயத்துடன் மைத்ரியின் உலகத்திலும் சங்கமிப்பது, வரிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்ட கதை.  அவர்களின் காதல் – அது காதல் அல்ல கட்வாலி மொழியில் சொன்னால் மாயா.ஆம் மாயை. அந்த மாயை நாவலை தாங்கி நிற்கும் தூணாகியிருக்கிறது. ஆனால் மைத்ரி ஹரன் இடையிலான காதல் பிரிய காரணங்களை புனைவில் வளர்த்தெடுத்திருந்தால் புனைவின் வீச்சு இன்னொரு தளத்தை அடைந்திருக்கும். இப்போதிருக்கும் வடிவம் பயணப் புனைவாக அதற்கான நிறைவுடன் அமைந்திருகிறது.

இன்னொரு விதத்தில் இந்த கதை நீராலானது. மைத்ரி, ஹரன் வாழ்வின் மந்தாகினியோடு பயணிக்கும் போது கண்டடையப்படுகிறாள்(பகுதி ஒன்று). சோன்கங்கா பாயும் பனிப் புல்வெளிகளிலும் காடுகளிலும் அந்த நட்பு காதலாக வளர்கிறது. த்ரீ ஜூகி கிராமம் தாண்டி வரும் தேவதாரு மரங்கள் நிறைந்த பகுதியில் மலையோடைகள் சேர்ந்து உருவாக்கும் அகன்ற  பனி நீர் நிறைந்த, நேர்த்தியான அகல் விளக்கு போன்ற ஏரியும், அதன் முகட்டில் இருந்து வழியும் அருவியுமாக மைத்ரியின் மீது ஹரனுக்கு உண்டாகும் மோகமும் காமமும் பொங்குகிறது.(பகுதி இரண்டு) பின்னர் மைத்ரி பிரிந்த பின்னர் கௌரிகுந்த் பகுதியின் வெப்ப ஊற்றுகள் அந்த பிரிவை ஆற்றி ஹரனை அமைதிபடுத்திகிறது.(பகுதி மூன்று) அவன் தனக்கான காதல் எதுவென்று கண்டு கொள்ள இந்த நீர் நிலைகளோடு பயணம் மேற்கொள்கிறான். தனது காதலி கௌரியுடனான ஊடலை அதிதீவிர மனவெறுப்பை மந்தாகினியும் அலக்நந்தாவும் கலக்கும் சங்கமத்திலேயே தொலைத்துவிடுகிறான். பின்னர் தன் காதலை மேலும் சரியான திடத்தோடு கண்டெடுக்க இந்த மலையடுக்குகள், மரங்கள், பறவைகள் கூடவே இசையும் என்ற பயணம் உதவுகிறது.

காடு நாவலை வாசித்த பின்னர் இதனை எழுத முடிவு செய்ததாக தனது முன்னுரையில் அஜிதன் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த நாவலில் காடு நாவலின் எந்த தாக்கமும் இல்லாமல் கவனமாக எழுதியிருப்பதற்கு அஜிதனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பெரிய தேவதாரு மரத்தின் நிழலில் நின்று கொண்டு அந்த நிழலை பிரதி செய்யாமல் தனக்காக ஒளியை வேறுவிதமாக பாய்ச்சியிருப்பது அற்புதமானது.  ஆயினும் சில இடங்களில் காடு நாவலை வாசக மனம் தானே முடிச்சிடுகிறது. இந்த ஒப்பீடு பொதுவாக இணைதளத்தில் எழுதப்பட்ட நாவல்களுக்கு இடையே நடப்பது தான். முதல் நாவல் என்ற எந்த சலுகையும் கோராமல் பிசிறில்லாத சுவாரஸ்யமான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதில் ஒரு சந்தேகமும்  இல்லை.

லாவண்யா சுந்தர்ராஜன்
“மண்டோவின் காதலி” உள்ளிட்ட கவிதை நூல்களின் ஆசிரியர்

3.

மரபும் அன்றாடமும்

(இசையின் “மாலை மலரும் நோய்” கட்டுரை நூலை முன்வைத்து)

இசையின் கவிதைகள் பலவற்றில் நாம் ஒரு சுவாரசியமான இணைப்பைக் காணமுடியும். அவை அன்றாடத் தருணங்களின் எளிய அழகிய வெளிப்பாடுகளாக இருக்கும் அதேசமயம் அவற்றில் நாம் எண்ணிப்பார்த்திராத வகையில் பழந்தமிழ் சொற்கள் வந்தமர்ந்திருக்கும். தற்காலத் தருணங்களில் மரபிலக்கியச் சொற்றொடர்கள் இயல்பாக இணையும் அழகை அவர் பல கவிதைகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அப்போது அச்சொற்கள் தன் பல்லாண்டுகால ஆடை ஆபரணங்களைக் கலைந்து இயல்பாக நம்முடன் புழங்குகின்றன. ‘நைஸ்’ என்ற அவரது ஆரம்பகாலக் கவிதையில் இருந்தே இதை நாம் கவனிக்க முடியும். “இந்த நைஸ்ஸிற்காகத் தான் ‘வைகறை வாளாகிறதா?’. ” என்பது அவரது முத்திரை வரிகளில் ஒன்று.

அவ்வகையில்  ‘‘மாலை மலரும் நோய்’ என்ற திருக்குறள் குறித்த இசையின் புத்தகம் மேலும் கவனம் பெறுகிறது. காமத்துப்பால் பிரிவின் கீழ்வரும் 250 குறள்களின் உரை இதன் உள்ளடக்கம். ஆனால் சம்பிராதயமான சொற்பொருள் கூறி உரை விளக்கும் வகையில் அமையாமல் குறளில் இருக்கும் கவிதையை அணுகும் முயற்சியாக அமைந்துள்ளது.

இசையின் இத்தேர்வே தன்னளவிள் குறியீட்டுத் தன்மை கொண்டது. குறள் அடிப்படையில் ஒரு நீதிநூல். நம் வாழ்வு சிறப்பதற்கான விழுமியங்களையும் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தும் நூல். ஆனால் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு மனித அகவுணர்வுகளின் சித்திரங்களாக மட்டும் அமைந்திருப்பவை. மற்ற இரு பிரிவுகளின் (அறம், பொருள்) அறிவுறுத்தும்தன்மை இல்லாமல் வாழ்வுத்தருணங்களின் தீற்றலாக இருப்பவை. குறளின் இம்முகம் பலர் அறியாதது. அதேசமயம் எந்த ஒரு நவீன மனதுக்கும் நெருக்கமானது.

முன்னுரையில் இப்புத்தகத்திற்கான தூண்டுதல் குறித்து இசை குறிப்பிடுகையில் “நமது கல்விக்கூடங்களில் காமத்துப்பால் பாடல்கள் பெரும்பாலும் பாடமாக வைக்கப்படுவதில்லை. அறிஞர்களுக்கும் முனிவர்களுக்கும் ஒரு இடைஞ்சலாகவே எப்போதும் அவை இருந்துவந்துள்ளன.” எனக் கூறுபவர் “குறளின் கவித்துவத்தையும் அதன் மயக்கத்தையும் என் உரைகளில் கடத்த முயன்றிருக்கிறேன்” எனவும் குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய கடைசி வரியே இப்புத்தகத்தை வாசிப்பதற்கான மனஅமைப்பை ஏற்படுத்துகிறது. ஆண்டாண்டு காலமாக நம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒன்றின் அறியப்படாத பகுதி நவீன கவிஞனின் ரசனை வழியாக நாம் அணுகுவது இப்புத்தகத்தின் சிறந்த வாசிப்பனுபவமாக அமைகிறது. உதாரணமாக,

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

உறவில்லாதவர்கள் போல் வெளியே கடுஞ்சொல் பேசினாலும் உள்ளே அன்பு கொண்டிருப்பது விரைவில் உணரப்படும் என்பது இதன் நேரடிப் பொருள். ஆனால் குறள்கூறும் இவ்வுணர்வு இன்றைய நேரடிவாழ்வில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை இணைத்துக்காட்டுவதில் உள்ளது இசையின் தனித்தன்மை.

“ ’லூசு’ என்கிற வசைக்குக் காதலர்கள் எவ்வளவு அகமகிழ்ந்து போகிறார்கள். இரா முழுக்க அந்தச் சொல்லை உருட்டி உருட்டி விழித்துக் கிடக்கிறார்கள்.” எனக் கூறுகையில் சட்டென குறள் நம் அருகே வந்து அமர்ந்துகொள்கிறது.

அதேபோல், குறள்காட்டும் சித்தரப்பை ஒட்டிச்செயல்படும் நுட்பமான மனஇயக்கத்தையும் கவனப்படுத்துகிறார்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

“காதல் பிறந்தவுடன் கள்ளமும் குறும்பும் கூடவே பிறந்துவிடுகின்றன” என அதன் உளவியல் நோக்கிச்செல்கிறார். இப்படியான ரசனைக்குறிப்புகளாக குறளை வாசிப்பதும் அதன் வழியாக கூடவே இசையின் நுண்ணுணர்வுகளை அறிந்துகொள்வதும் என இரட்டை சாத்தியங்களை அளிக்கிறது இப்புத்தகம்.

ஆனால் ஒரு போதாமை வாசித்து முடித்தவுடன் எஞ்சுகிறது. குறள் எந்த அளவு நம் ரசனைக்கும் அழகுணர்வுக்கும் அடிப்படையாக இருக்கிறதோ அதேயளவு நம்மை பிளந்து செல்வதாகவும் நம் ஆழத்தை அதிர்வடையச் செய்வதாகவும் இருக்கும் படைப்பு. இந்த இரண்டாவது அம்சம் நோக்கி அவர் செல்வதில்லை. பெரும்பாலும் அன்றாடத்தின் மேற்தளங்களை ஒட்டியே குறளின் வாசிப்பு நின்றுவிடுகிறது. தினசரி நம் உறவுகளில் குறளின் உணர்வுத்தருணங்கள் வெளிப்படுவதை தொட்டுக்காட்டுவதுடன் நின்றுவிடுகிறார்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
.”

இக்குறளுக்கான பொருளைக் கூறி அழிவின் இன்பத்தை பற்றியது என்பதுடன் அடுத்த குறளுக்கு நகர்ந்து விடுகிறார். இதில் உள்ள ’பேரமர்க் கட்டு’ என்கிற பதம் ஏற்படுத்தும் அதிர்வு நோக்கி அவர் செல்லவில்லை. எவ்வளவு அடர்த்தியான சொற்சேர்க்கை. பெண்தகையாளின் கட்டு; காலனின் பாசக்கயிறுக்கு இணையானது; பெரும்போர் நிகழ்த்தவல்லது. காதலியின் கண்களில் ஒருவன் காலனின் கட்டைப்பார்க்கும் தருணம் எவ்வளவு ஆழமானது. அன்றாடத்தின் ஒர் கணத்தில் வாழ்வின் ஒட்டுமொத்த ஆட்டத்தைப் பார்க்க வாய்க்கும் தருணம் இக்குறளில் உள்ளது. இசையின் பல கவிதைகளில் நாம் மரபுடன் நட்பாக கைகுலுக்கி ‘ஹாய்’ சொல்ல முடிகிறது. அதேயுணர்வை அவரின் இந்த உரைகளும் தருகின்றன.  வள்ளுவனின் ஈரடிகள் பலவற்றை இன்றைய வாழ்வில் பிரதிபலித்துக் காட்டுவதன் மூலம் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அதேசமயம் அன்றாடத்திலிருந்து மரபின் ஆழ்த்திற்கு செல்ல ஒரு தாவல் நிகழ்த்தவேண்டியுள்ளது. அது நிகழ்ந்திருந்தால் இப்புத்தகத்தின் முக்கியத்துவம் மேலும் கூடியிருக்கும்.

பாலாஜி பிருத்விராஜ்
கட்டுரையாசிரியர்

1 Comment

  1. நல்ல தொகுப்பு. கட்டுரையாளரின் புகைப்படமோ, குறிப்போ இல்லாதது வருத்தமளிக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.