இசை கவிதைகள்

ஓடுகிற பையன் எமோஜி

நான் ஒரு இக்கட்டான தருணத்தில்
அவனை
வாட்ஸ் அப்பில் சந்தித்தேன்

சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு
ஓடும் பையனாக

சொல்லி ஆக வேண்டியதை
சொல்லிவிட்டு ஓடும் பையனாக

அவன் ஒரு பொடியன் என்பதால்
“விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது
அவனுக்கு எளிது
ஆகவே
சொல்லியும் சொல்லாமல் இருப்பதில்
அவன் சமத்தன்

அவன் வெறுமனே ஒரு கேள்வி
அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை
ஆகவே
எதையும் அவன் நின்று கேட்பதில்லை

“ இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..”
என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை
அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த
அப்பாவிச் சிறுவனவன்,
“ சாப்பிட்டீங்களா..?”
என்று கேட்டுவிட்டு
ஓடி விடுவான்.

000

நாசகாரக் கும்பல்

எனக்குத் தெரியும்
இங்கு காணும்
எல்லாத் துன்பங்களுக்கும்
இந்தக் கவிஞர்கள்தான் காரணம்

மண்
மண்ணென்றிருந்தது
இவர்கள் அதில்
சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள்

சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால்
அதிலிருந்து
நரகம் என்று ஒன்று
தானே எழுந்து கொண்டது

கண்ணெறிருந்த கண்ணில்
இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள்

இடையென்றிருந்த இடையில்
வேலியில் படரும்
கொடியைக் கொண்டு வந்து
சுற்றி விட்டார்கள்

பேசினால் விளங்கிவிடும்
ஒவ்வொன்றையும்
இவர்கள் பாடிப் பாடி ஜோடிப்பார்கள்

இவர்தம் குலத்தொழிலாவது
உள்ளதை உள்ளபடி விட்டு வைக்காதது
கூடவே
ஊதி ஊதி பெருக்குவது

துள்ளிக் குதிக்காதது
சோர்ந்து விழாது

நம்புங்கள்,
கவிதைதான்
கடவுளின் நயவஞ்சகம்

சற்றே உப்புக் குறைவான ஒரு பண்டத்தை
நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியுமெனில்
இந்த நாசகாரக் கும்பலை
வேரோடும் வேரடி மண்ணோடும்
அழித்து விடலாம்.

000

இரவுக் காவலாளியின் ” அனுபவம் புதுமை”

1.

ஒரு நாளும் வாராமல் இராத இரவு
இதோ வந்து விட்டது
கூடவே வந்துவிட்டது
இரவின் குரல்

இரவின் குரலாவது
ஸ்ரீனிவாசின் குரல்

இரவின் ராஜா
பேங்கோஸ் குதிரையில்
வந்திறங்குகிறார்

மனிதர்கள்
ஓய்ந்தடங்கிய பின்பு
இரவு பாடத் துவங்குகிறது

இரவு பாடும் போது
விலகிச் செல்கிறது இருட்டு

பகலெல்லாம் மூடிக்கிடந்த வானத்தை
மெல்ல மெல்ல திறக்கிறது
அப் பாட்டு

இரவைப் போல
ஆழமான பாடகரென்று இன்னொருவரில்லை

2.

அண்ணாந்த கதியில்
அவள் சொன்னாள்…

“ இரவு மெல்ல மெல்ல
பாடத் துவங்கி விடுகிறது , இல்லையா?”

அதே கதியில் நான் சொன்னேன்..

“ஆம். அது ஸ்ரீனிவாசைப் போலச் செய்யப் பார்க்கிறது..”

3.

“பகலெல்லாம் பி.பி. எஸ் பாடுவதில்லையா என்ன?’

பாடத்தான் செய்கிறார்
ஆனால்
அப்போது அவர் ஒரு
பரிதாபத்திற்குரிய பாடகர்

4.

எல்லோரும் நினைப்பது போல
இரவில் பாடுவது நிலவல்ல

எப்போதும் வெளிச்சம்தான்
பாட வேண்டும் என்றில்லை

5.

பாட்டின் மர்மமே..
நீ தானா அது?
இரவில் ஜொலிக்கும் அது

6.

கேட்பவர் பாடுகிற
பாடல் என்பது
வேறு.

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

5 Comments

  1. அற்புதமான கவிதைகள்….ஓடுகிற பையன் எமோஜி செம்ம….

  2. ஓடுகிற பையன் எமோஜி ,நாசகாரக் கும்பல்
    கவிதைகள் இரண்டும் மிக அருமை. அதிலும்
    நாசகார கும்பல் நன்றாக அமைந்துள்ளது.

  3. அருமையானகவிதைகள. குறிப்பாக அனுபவம் புதுமை

உரையாடலுக்கு

Your email address will not be published.