/

இசை கவிதைகள்

ஓவியம் : சேது வேலுமணி

1. மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு

    ஒரு உடையிலிருந்து
    இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல
    ட்ரவுசருக்கு மாறுவது

    ட்ரவுசருக்கு மாறுகையில்
    நான் தயாராகிறேன்
    எதற்கென்றால்
    எல்லாவற்றிற்கும்

    உறக்கத்திற்கு
    போர்க்களத்திற்கு
    எல்லாவற்றிற்கும்

    ட்ரவுசர் அணிந்தவுடன்
    சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்
    மேலோட்டமான நம்பிக்கைகளில்
    வாழ்ந்து வருபவர்கள்
    அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை

    சுற்றுலா செல்கையில்
    ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு
    ட்ரவுசர் ஒரு சுற்றுலா
    என்பாரும் உண்டு

    ட்ரவுசரில் இருக்கையில்
    நான் என் காதலி

    அதை அளக்க முடியாது
    என்பது போலவே
    சுருக்கவும் முடியாது

    ட்ரவுசரை காற்றோட்டம் என்பது
    மூடர் தம் சுருக்கம்

    2. அங்கு

    வாத்தியக்காரன்
    வாத்தியத்திலிருந்து
    கையைத் தூக்கிவிடும் போது
    உருவாகும் தாளமே!
    நீ
    அங்கென்னைக் கூட்டிச்செல்!

    3. தமிழ் மலர்கள்

    அது ஒரு சின்னத் தோட்டம்

    அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.

    இன்று
    புதிதாக
    அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்

    “ அருமலர் எழிலகம்”

    அதில்
    இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.

    அதற்குள்
    பூத்துக் குலுங்கிவிட்டன.

    4.தேங்கெண்ணெய்

    “அம்மா…” என்று கூவியபடி
    முதல் முட்டிக் காயத்துடன்
    தெருவிலிருந்து
    வீட்டுக்குள் ஓடி வந்த போது
    மாரோடணைத்துக் கொண்டு
    கொஞ்சம் தேங்கெண்ணெய்
    பூசி விட்டாள்.

    உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்
    அதே தேங்கெண்ணெய்யேதான்

    படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு
    ஞாபக மறதிக்கு
    முகப்பருவுக்கும்
    அதேதான்

    எது குறைந்தாலும்
    தேங்கெண்ணெயால்
    அவள் அதைக் கூட்டி விடுவாள்

    மகன்
    வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு
    மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்

    உள்ளங்கையில் தேங்கி நிற்கும்
    நான்கு சொட்டால்
    உலகத்துக் கோணல்களையெல்லாம்
    வழித்தெடுத்து விடுவாள்

    “ ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று
    ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்
    அவளது அருமருந்தை

    கட்டி சொன்னது…

    “ நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”

    5. சிறிதே!

    அவ்வளவு பெரிய வானம் என்பது
    அதைக் காணும்
    சின்னஞ்சிறிய
    நீ தான்.

    இசை

    கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

    நன்றி : தமிழ் விக்கி

    1 Comment

    1. சிறியதின் உள்ளே இருப்பதும் பெரிதுதான்.

      சிறப்பு வா நன்றியுடன்.

    உரையாடலுக்கு

    Your email address will not be published.