அவனது முடிவு மற்றும் அவனது துவக்கம்
இறுதி அல்லாட்டமும் ஓய்ந்துவிட்டது, அவன் தற்போது தனிமையில் கிடக்கிறான் – உடைந்து போனவனாயும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் . கிடந்தவன் அப்படியே உறக்கத்துக்குள் மூழ்கிவிட்டான். விழித்தெழுந்து பார்த்தபோது அவனது தினசரி இருப்பினுடைய பழக்கவழக்கங்கள், இடங்கள் அவனுக்காகக் காத்திருந்தன. முந்தின நாள் இரவு நடைபெற்றது குறித்து அதிகம் யோசிக்கக்கூடாதென்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான். அந்த உறுதியால் உற்சாகம் கொண்டு வேலைக்குச் செல்வதற்காக பதற்றமேயின்றி உடைகளை அணிந்தான். ஏற்கெனவே செய்த வேலையையே திரும்பச் செய்யும் அலுப்பு காரணமான அசௌகரிய உணர்வுடனேயே, அலுவலகத்தில் பணிகளை சிறப்பாகவே மேற்கொண்டான். அங்கிருந்த மற்றவர்கள் அவனைப் பார்த்தவுடன் கண்களைத் திருப்பிக்கொள்வதை அவன் பார்க்காமல் இல்லை; அவன் இறந்துவிட்டானென்று அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். அந்த இரவில்தான் துர்கனவுகள் தொடங்கின. அந்தக் கனவுகள் எந்த ஞாபகச்சுவடையும் அவனிடம் விட்டுச் செல்லவில்லை – திரும்ப வருமோ என்ற அச்சத்தைத் தவிர. காலத்தில், அந்த அச்சம் நீடித்தது. அது அவனுக்கும் அவன் எழுதவிருக்கும் பக்கத்துக்கும் நடுவே, அவனுக்கும் அவன் வாசிக்க முயன்ற புத்தகத்துக்கும் நடுவே. எறும்புகளைப் போல பக்கங்களில் ஊறும். முகங்கள், பரிச்சயமான முகங்கள், படிப்படியாக மங்கி, குலைந்து, வஸ்துக்களும் மனிதர்களும் மெதுவாக அவனைக் கைவிட்டனர்.
வினோதமாகத் தெரிந்தாலும் அவனால் சத்தியத்தை சந்தேகிக்கவே முடிந்ததில்லை. அது அவனிடம் திடீரென்று மோதி உதித்தது. தனது கனவுகளின் வடிவங்கள், சத்தங்கள் மற்றும் வண்ணங்களை தன்னால் ஞாபகத்தில் கொள்ள முடியாது என்பதை அவன் உணர்ந்தான். அங்கே வடிவங்கள், வண்ணங்கள் அல்லது சத்தங்கள் கிடையாது. கனவுகளின் கனவுகளும் கூட. அவைதான் அவனது மெய்மை. காட்சிக்கும் அமைதிக்கும் அப்பாலான எதார்த்தம்; என்பதனாலேயே நினைவுக்கும் அப்பாலான எதார்த்தம். இறந்த நேரத்திலிருந்தே சுழற்றியடித்த பைத்தியக்காரக் காட்சிகளினால் அவன் அலைக்கழிக்கப்பட்டிருந்த நிலையைவிட இந்த திடீர் அறிதல் கூடுதல் அங்கலாய்ப்பை அளித்தது. அவன் கேட்ட குரல்கள் எதிரொலிகளாக இருந்தன; அவன் பார்த்த முகங்கள் முகமூடிகளாக இருந்தன; அவனது கையின் விரல்கள் நிழல்களாய் இருந்தன – தெளிவாக உணரமுடியாததாகவும், திடமின்றியும். உண்மைதான். இருப்பினும், அவனுக்குப் பிரியமானதாக, அத்துடன் பரிச்சயமானதாக.
ஆனாலும் இந்தப் பொருட்கள் அனைத்தையும் விட்டுச்செல்வது தனது கடமை என்பதை அவன் உணந்தான். தற்போது அவன் இந்தப் புதிய உலகத்துக்குப் பாத்தியப்பட்டவன். இறந்தகாலம், நிகழ் மற்றும் எதிர்காலத்திலிருந்து நீக்கப்பட்டவன். சிறிதுசிறிதாக இந்தப் புதிய உலகம் அவனைச் சூழ்ந்தது.அவன் பல வேதனைகளால் பீடிக்கப்பட்டான், விரக்தி மற்றும் தனிமையின் பிராந்தியங்களினூடாக அலைந்திருக்கிறான் – பயங்கர யாத்திரைகள் அவை. அவனது முந்தைய கண்ணோட்டங்களை, நினைவுகளை, நம்பிக்கைகளைக் கடக்கவைத்தவை. அனைத்து பயங்கரமும் தத்தமது புதுமையில் பேரெழிலில் உறைந்துள்ளது. அருளுக்கு அவன் உரிமைப்பட்டவன் – அவன் அதைச் சம்பாதித்திருந்தான்; மரணமடைந்த கணத்திலிருந்து ஒவ்வொரு நொடியும், அவன் சொர்க்கத்திலேயே இருந்து வந்தான்.
ஒரு பிரார்த்தனை
ஆயிரம் முறைகள், எனது அங்கமாக இருக்கும் இரண்டு மொழிகளிலும், எனது உதடுகள் உச்சரித்தன; தொடர்ந்து மந்திர ஜெபத்தை எனது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்யும்; ஆனாலும் அதில் ஒருபகுதி மட்டுமே எனக்குப் புரிந்தது. இந்த நாளின் காலையில் – ஜூலை 1, 1967 – நான் ஒரு பிரார்த்தனையை முயற்சிக்க ஆசைப்பட்டேன்; அது அந்தரங்கமானது; வழிவழியாக வந்தது அல்ல. அப்படியான ஒரு முயற்சி மனிதசக்தியைத் தாண்டிய அர்ப்பணிப்பை வேண்டுவது என்று எனக்குத் தெரிந்திருந்தது. அந்தப் பிரார்த்தனையிலிருந்து எதையும் கோருவதற்கு நான் விலக்கப்பட்டவன். எனது கண்களை இரவு நிரப்பக்கூடாது என்று வேண்டுவது பைத்தியக்காரத்தனம்; குறிப்பாக சந்தோஷமாக, நியாயமாக அல்லது ஞானவான்களாக இல்லாத, பார்க்கும் திறனுள்ள ஆயிரம் மனிதர்களை நான் அறிவேன். காலத்தின் அணிவகுப்பென்பது காரண காரியங்களின் வலையாக இருப்பதால், கருணையின் பரிசாக எதைக் கேட்டாலும், அது எத்தனைதான் சிறியதாக இருந்தாலும், அந்த இரும்புவலையின் கண்ணியை உடைக்கவோ, ஏற்கெனவே உடைந்திருக்க வேண்டுமென்றோ கோருவதுதான். அப்படியான அற்புதத்தைக் கேட்கும் வசதி யாருக்கும் கிடையாது. எனது அத்துமீறல்கள்கள் மன்னிக்கப்பட வேண்டுமென நான் கோரமுடியாது; மன்னிப்பு என்பது இன்னொருவரின் செயல் என்பதால் என்னை நான் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே முடியும். மன்னிப்பு பாதிக்கப்பட்ட தரப்பைத் தூய்மைப்படுத்துகிறதே தவிர, தவறிழைத்தவனை அல்ல; அவன் மன்னிப்பால் துளியும் தீண்டப்படுவதே இல்லை. எனது சுதந்திர விருப்பின் சுயேச்சைத்தன்மை என்பது ஒருவேளை மாயையாக இருக்கலாம்; ஆனால் என்னால் அளிக்க முடியும். அல்லது அளிப்பதை நான் கனவுகாண இயலும். எனதுடையதாக இல்லாத தைரியத்தை நான் அளிக்க இயலும். என்னிடம் உறைந்திருக்காத நம்பிக்கையை நான் கொடுக்க முடியும். என்னிடம் எனக்குத் தெரியாத, அல்லது கணத்தோற்றமாகவே தெரியும் கற்பதற்கான விழைவை நான் கற்றுக்கொடுக்க முடியும். நான் கவிஞனாக அல்ல, நண்பனாகவே நினைவுகூரப்படவே விரும்புகிறேன். டன்பார் அல்லது ப்ராஸ்ட் அல்லது நள்ளிரவில் ரத்தம் சிந்தும் மரத்தை, சிலுவையை, பார்த்த அந்த மனிதனின் கவிதையை யாராவது உச்சாடனமாகத் திரும்பத் திரும்ப ஒலிக்கவேண்டுமென்றும், அந்த வார்த்தைகளை அவன் முதல்முறையாக எனது உதடுகளில் இருந்து கேட்டதை அகத்தில் பிரதிபலித்துப் பார்க்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். மற்ற எதுவும் எனக்குப் பொருட்படுத்தத் தகுந்ததே அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் திட்டங்கள் நம்மால் அறியவியலாதது. ஆனால் தெளிவாக சிந்திக்க முடிவதோடு பிரபஞ்சத்தின் திட்டங்களுக்கு (நமக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படாது) உதவுவதற்கு நேர்மையுடன் செயல்படவும் நம்மால் இயலும்.
நான் பூரணமாக மரணமடைய விரும்புகிறேன்; இந்த உடலுடன் மரணமடைய விரும்புகிறேன் – எனது துணையுடன்.
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
வாசிக்க அருமையாக இருக்கிறது .வாழ்துக்கள் கவிஞரே