காந்தியின் மரணம் – ஒரு தேசம் எழுப்பிய பலிபீடம் : வீ.செ.செந்தில்குமார்

20 ஜனவரி 1948 டெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸ் மைதானத்தில் ஒரு கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. அதே பிர்லா பிர்லா ஹவுஸ் மைதானத்தில் 30 ஜனவரி மாலை சுமார் 5.15 மணிக்கு மஹாத்மா சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்து மத வெறியர்களின் வஞ்சம் இறுதியில் அவரை வீழ்த்தியது. “வாழ்வில் ஒளி மறைந்து, எங்கும் இருள் பரவியது” என நேரு அன்று குறிப்பிட்டார்.

உலகையே அதிர செய்த இக்கொலை வழக்கில், அரசு, 12 நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. செங்கோட்டையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தில் 27 மே 1948 அன்று நீதிபதி ஆத்ம சரண் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. முக்கிய குற்றவாளியான திகம்பர் பேட்ஜ்  குற்றத்தை ஒப்புக்கொண்டு அப்ரூவர் ஆகி சாட்சி அளித்தார். பின்பு அவருக்கு  பொது மன்னிப்பு  அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் குற்றத்தை நிரூபிக்க அப்போது பம்பாய் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொராஜி தேசாய் உட்பட  149 நபர்கள் அரசு சாட்சிகளாயினர். நானூறுக்கும் மேற்பட்ட ஆவணங்களும் எண்பது  சான்று பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

நாதுராம் கோட்சே சார்பாக முதலில் வி.வி.ஓக் வழக்கறிஞர் வாதாட அமர்த்தப்பட்டார். பின்பு கோட்சேவே தனக்காக வாதிட அனுமதி பெற்று வழக்கை எதிர்கொண்டான். காந்தியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் கோபத்திலோ விரக்தியிலோ ஏமாற்றத்திலோ மட்டும் மேற்கொள்ளப்பட்டதன்று. மாறாக நன்கு திட்டமிடப்பட்டது. குற்றவாளிகள் தங்கள் நோக்கத்தை, சித்தாந்தத்தை அனைவரிடமும் பரப்பும் தீவிர வெறியில் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை வழக்கில் கோட்சேவின் செயல்பாடே தீர்மாணமாக விளக்கும். 

கோட்சே, 92 பக்கங்கள் கொண்ட தனது வாக்குமூலத்தை அனைவர் முன்னிலையிலும் தெளிவாக, உரக்கமாக, ஒரு தேர்ந்த நடிகன் போல் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் விளக்கினான். உண்மையில் இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக, காந்தியின் எதிர் தரப்பு காத்திருந்தது போல் இருந்தது. தன் செயல்பாடுகளை நியாயப்படுத்துவது மட்டுமின்றி, தன் தரப்பின் வரலாற்று, அரசியல் காரணங்கள்; தங்கள் மதத்தினர் அடைந்ததாக கருதிய இழப்புகள், கொடுமைகள், ஏமாற்றங்கள் மற்றும் எதிர் மதத்தினர் பற்றிய இழி செய்திகள்; காந்திய செயல்பாடுகள் மேல் ஆரம்பத்தில் கொண்ட மதிப்பு, பாகிஸ்தான் பிரிவினையில் காந்தி நடவடிக்கைகளால் அடைந்த ஏமாற்றம், காந்தியின் இருப்பால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்று மிக விரிவாக கோட்சே உரையாற்றினான்.  வரலாற்றில் இது நிலை கொள்ள வேண்டும் என்ற  அதீத புத்திசாலித்தனத்துடன் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது.  இந்த ஆவணத்தை இந்திய அரசு பின்னால் தடை செய்தது. தனக்கு இக்குற்றத்தில் எவ்வித பங்கும் கிடையாது, கோட்சே மற்றும் ஆப்டே செயல்களுக்கு தான் எவ்வகையிலும் காரணமும், பொறுப்பும் அல்ல என்று சாவர்க்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

 10 பிப்ரவரி 1949 அன்று நீதிபதி ஆத்ம சரண் 110 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பை வழங்கினார். கோட்சேவுக்கும் நாராயண ஆப்டேவிற்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே, விஷ்ணு  கர்கரே, மதன்லால் பாவா மற்றும் சங்கர் கிஸ்தயா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை. தட்டராய பார்ச்சூரிக்கு ஏழு வருட தண்டனை. திகம்பர் பேட்ஜ் அளித்த சாட்சியத்தை தவிர வேற எந்த உறுதியான ஆதாரமும் சாட்சிகளும் இல்லை என்று சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

காந்தி படுகொலை, ஒரு சித்தாந்த தரப்பின் வன்செயலே. ஒரு குற்றச் சதியே. ஆனால் ஆத்மசரண் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த கோட்சே அது சதியல்ல என்றும், தான் ஒருவன் மட்டுமே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டான். நீதிபதிகள் பண்டாரி, அச்ஹ்ரு ராம் மற்றும் கோசலா அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதை விசாரித்தது.

 21 ஜூன் 1949 அன்று மேல் முறையீடுகளை தள்ளுபடி செய்து 560 பக்கங்கள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை மூன்று நீதிபதிகள் வழங்கினார்கள். இது வெறும் தீர்ப்பு ஆவணமாக இல்லாமல், இந்திய சுதிந்திர வரலாறு,  சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு, அஹிம்சை மற்றும் மத ஒற்றுமைக்கான காந்தியின் தொடர் நடவடிக்கைகள், மத அமைப்புகளின் இந்து தேசியவாதிகளின் பிரச்சாரங்கள்,  பிரிவினைச்  சூழல், குற்றவாளிகளின் நோக்கம், சதி திட்டம்  என ஒரு ஒட்டுமொத்த வரலாற்று பார்வையை அளிக்கும் முக்கியமான ஆவணமாக இன்றும் உள்ளது.

 நீதிபதி கோசல தனது தீர்ப்பில், “நீதிமன்றத்தில் இருந்த பார்வையாளர்களுக்கு ஜூரி அந்தஸ்து கொடுத்திருந்தால் உறுதியாக  கோட்சேவின் சாதுர்த்தியமான வாதத்தில் மயங்கி அவனை விடுதலை செய்ய பரிந்துரைத்திருப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார். கோட்சே எப்படி ஒரு உணர்ச்சிகர நாடகத்தை நீதிமன்றங்களில் நிகழ்த்தினான் என்பதற்கு இக்கருத்து சான்றாகிறது. 

மேல்முறையீட்டு வழக்கில் முதல் தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. சங்கர் கிஸ்தயா மற்றும் தட்டராய பார்ச்சூரி மட்டும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அப்போது உச்ச நீதிமன்றம் உருவாக்கப்படாததால், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மேல் பிரிவு கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அது ஆரம்பநிலையிலே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆப்தேவும் கோட்சே தரப்பில் அவனது குடும்பமும் கவர்னர் ஜெனரல் முன்பு தாக்கல் செய்த கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. காந்தியின் வாரிசுகளான மணிலாலும் ராமதாஸ் காந்தியும் குற்றவாளிகளின் தண்டனைகளை குறைப்பதற்காக கோரினர். ஆனால் அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை  இறுதியாக 15 நவம்பர் 1949 அன்று அம்பாலா சிறையில் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள்.

காந்தி கொலை வழக்கை நுணுகி வாசிக்கையில் காந்தியின் எதிர் தரப்பின் செயல்கள் அளவுக்கே அரசின் செயல்பாடுகளும் வியப்பூட்டுகின்றன.  உலகையே உலுக்கிய இந்தியாவின் தேச தந்தையை கொன்ற வழக்கில் அரசின் செயல்பாடுகள் பற்றி பல கடுமையான விமர்சனங்களும், சந்தேகங்களும் கேள்விகளும் அப்போதே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

காந்திஜியின் கடைசி நாள் வரை அருகில் இருந்த, மனுபென் எழுதிய “பாபுவின் இறுதி கணங்கள்” (Last Glimpses of Babu) புத்தகத்தில் ஒரு தகவல் வருகிறது. அபா மற்றும் மனுவுடன் பிராத்தனை கூட்டத்திற்கு நடந்து செல்கையில், இரண்டு கத்திவார் தலைவர்கள் காந்தியை சந்திக்க விழைகிறார்கள். அதை மனுபென் காந்தியிடம் தெரிவிக்கையில், “பிராத்தனை முடித்துவிட்டு உயிரோடு திரும்பினால் அவர்களை சந்திக்கிறேன்” என்று பாபு கூறியதாக மனு பதிவு செய்கிறார். உள்ளுணர்வின் மூலமோ அல்லது வேறு காரணங்களினாலோ காந்திக்கு தன் இறுதி பயணத்தை பற்றி தெரிந்திருக்கலாம் அல்லது யூகம் இருந்திருக்கலாம். ஆனால் அரசு காந்தியை பாதுகாப்பதில் எந்த அளவு தீவிரமாக இருந்தது என்பதை, நடைபெற்ற நிகழ்வுகளை கவனிக்கையில் பெரும் வியப்பாகவும் எளிதில் புறந்தள்ளமுடியாத சந்தேகங்களை எழுப்பும்படியும் உள்ளது. 

அக்கால கட்டத்தில் இந்தியாவில் யாரை காட்டிலும் உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள நபராக நிச்சயம் காந்தி தான் இருந்தார். ஏற்கனவே அவர் மேல் நான்கைந்து முறை கொலை முயற்சி தொடுக்கப்பட்டிருந்தது. கோட்சேவே தனது குழுவுடன் இரு முறை முயன்றுள்ளான். மிக முக்கியமாக, சுட்டு கொல்வதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அதே பிர்லா வளாகத்தில் அதே போன்று பிராத்தனை கூட்டத்தில் காந்தியை கொள்வதற்கு கையெறி குண்டு வீசப்பட்டது. திட்டமிட்டது போல் இரண்டாவது குண்டை எரியாததால் காந்தி உயிர் தப்பினார். மற்ற குற்றவாளிகள் தப்பிக்க மதன்லால் பவா மட்டும் கைது செய்யப்படுகிறான். கோட்சே உட்பட தப்பியோடிய மற்ற குற்றவாளிகள் தான் திரும்பவும் பத்து நாள் கழித்து காந்தியை கொலை செய்கிறார்கள். அந்த குழுவிலுள்ள ஒருவனை கைது செய்த பின்பு கூட இவர்களின் சதித்திட்டத்தையோ, மற்ற குற்றவாளிகளின் இருப்பிடத்தையோ அல்லது காந்திக்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்துவதிலோ காவல்துறை எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.   இதை பற்றி நீதிபதி ஆத்ம சரண் தனது தீர்ப்பில் டெல்லி காவல்துறையை மிக கடுமையாக விமர்சிக்கிறார். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் மீது இது தொடர்பாக பல்வேறு கண்டனங்களும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. இந்து மத அமைப்புகள் மேல் அவரின் சார்பு நிலைப்பாடு பற்றி பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வழக்கில் குற்றவாளிகளாக இருந்து தலைமறைவாகி விட்ட கங்காதர் தாவதே, சூர்யா தேவ் சர்மா மற்றும் கங்காதர் யாதவ் ஆகியோர் திரும்பவும் கைது செய்யப்படவில்லை. இன்று வரை பெரும் விவாதமாக உள்ளது இக்கொலையில் சாவர்க்கரின் பங்கு. அப்ரூவராக மாறிய திகம்பர் வாக்குமூலம் தவிர, சாவர்க்கர் இக்குற்ற சதியில் ஈடுபட்டார் என்பதற்கான எவ்வித சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றம் பதிவு செய்கிறது. அவ்வாறெனில் அவரை குற்றவாளியாக அறிவிக்க என்ன காரணம் அல்லது அவர் ஈடுபாடு இருந்திருந்தால் அதை ஏன் காவல்துறை நிரூபிக்க தவறியது? அதுமட்டுமல்லாமல் மேல்முறையீட்டில் இன்னும் இரண்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற வழக்கில் கூட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரத்தை காவல்துறையால் சமர்ப்பிக்க முடியவில்லை.

12 நவம்பர் 1964 அன்று கோபால் கோட்சே, விஷ்ணு கர்கரே, மதன்லால் ஆகியோர் விடுதலை அடைந்ததை தொடர்ந்து புனேவில் அவர்களை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்வு ஒன்றில் பேசிய பாலகங்கா திலகரின் பேரன் ஜி.வி.கேட்கர், கோட்சேவின் கொலை சதி திட்டம் பற்றி தனக்கு அதற்கு ஆறுமாதம் முன்பே தெரியும் என்றும் அதை அப்போதைய பம்பாய் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும் பேசினார். இது இந்தியாவெங்கும் மிக பெரிய சர்ச்சையை உருவாக்கியது. எனவே இதை பற்றி விசாரிக்க மத்திய அரசு 1966ம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கப்பூர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்தது.கப்பூர் மூன்று வருடம் மிக விரிவாக பல ஆவணங்களை பார்வையிட்டு, சாட்சிகளையும் விசாரணை மேற்கொண்டு  சமர்ப்பித்த தனது அறிக்கையில் காவல்துறையின் தோல்விகளை மிக கடுமையாக சாடுகிறார். மேலும் சதியில் சாவர்க்கர் ஈடுபாடு குறித்து சரியாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டுகிறார்.

கோட்சேவும் நாராயண ஆப்தேவும் காந்தி கொலைக்கு முன்பு சாவர்க்கரை சென்று சந்தித்து ஆசி பெற்று வந்தார்கள் என்று அந்நிகழ்வில் கூட இருந்த குற்றவாளிகளில் ஒருவரான திகம்பர பேட்ஜ் சாட்சியமளித்தாலும், வேறு சாட்சிகள் ஏதுமன்றி, சாவர்க்கர் கொலையின் சதி குற்றத்தில் ஈடுபட்டார் என தீர்மானிக்க இயலாது என்று சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் கபூர் கமிஷன் சாவர்க்கரின் உதவியாளர் விஷ்ணு தம்லே மற்றும் மெய்காப்பாளர் ராமச்சந்திர காசரை விசாரித்து, அவர்களும் கொலைக்கு முன்பு இந்த மூவரின் சந்திப்பு நடைபெற்றது உண்மை என வாக்குமூலம் அளித்தார்கள். மேலும் இதை முன்பே காவல் விசாரணையிலும் தெரிவித்து இருந்தார்கள். ஆகவே குற்ற சதியில் சாவர்க்கரின் பங்கு மறுக்க இயலாதது என கபூர் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில்கூட காந்தியின் மரணம் மீண்டும் பேசுபொருளானது. Dr. பங்கஜ் குமுத்சந்திரா பட்னிஸ் என்பர் இந்திய உச்சநீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்து அதில் காந்தி கொலை வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.  அவர் தான் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் காந்தியின் மீது கோட்சே சுட்ட மூன்று குண்டுகள் மட்டுமல்ல, நான்காவது ஒரு குண்டும் உள்ளது; அதை சுட்டது யார் அதன் பின்னணி என்ன என்பதை விரிவாக விசாரித்து நாட்டு மக்களிடம் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று  வாதிட்டார். உச்சநீதிமன்றம் அது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று வழக்கை ரத்து செய்தாலும் காந்தியை கொலலை செய்ய எண்ணற்ற முயற்சிகள் நிகழ்ந்துவந்த வேளையில் அப்படியொரு நான்காவது குண்டு வெடித்திருந்தாலும் ஐயப்படுவதற்கில்லை. இன்னும் சுடப்படாத பல நூறு துப்பாக்கிக் குண்டுகள் காந்தியை துளைக்க அப்போது தயாராகிக் கொண்டேயிருந்தன.

காந்தியின் மரணம் பற்றி நெடுங்காலமாக பல்வேறு சதிக் கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அதை மீண்டும் நினைவுப்படுத்துவதோ அப்போதைய அரசை குற்றம் சுமத்துவதோ பயனுள்ள செயலன்று. ஆனால் காந்தியின் மரணத்துக்கு அவர் எதிர்ப்பாளர்கள் காத்திருந்தது போலவே இந்திய மனமும் காத்திருந்ததோ என்பதை கேட்டு பார்க்க வேண்டியுள்ளது. காவல்துறை கொலையை தடுத்திருக்க முடியும் என்கிறார் நீதிபதி. சுடப்பட்டு உயிரோடிருந்த காந்தியை திரும்ப உள்ளே அழைத்துச் செல்ல பத்து நிமிடங்கள் ஆகியிருக்கிறது. அப்புறம் மனுபென் அவருக்கு பகவத் கீதையை வாசித்துக் காட்டியிருக்கிறார். மருத்துவமனையை தொடர்பு கொள்வதில் சிக்கல். மருத்துவர்களை வரவைப்பதில் சிக்கல். காந்தி இறந்துக் கொண்டிருந்தார். எந்த தாமதமும் திட்டமிட்டு நடக்கவில்லை. எந்த முன்தயாரிப்பும் திட்டமிட்டு கைவிடப்படவில்லை. ஆனால் தேசத்தின் நனவிலி அந்த துப்பாக்கி குண்டுக்கு, காந்தியின் ரத்த பெருக்குக்கு, மரணத்துக்கு காத்திருக்கவே செய்தது.

மகாத்மாவின் கொலையில் யார் யாருக்கு என்னென்ன நோக்கம் இருந்தது என்று இப்போது யாராலும் அறுதியிட்டு சொல்ல இயலாது. ஆனால் அரசாங்கத்தை சேர்ந்த பலர் கொலையை விரும்பாவிட்டாலும், காந்தியின் மறைவு அவர்களுக்கு நிச்சயம் பெரும் ஆசுவாசத்தையும், நிம்மதியையும் கொடுத்திருக்கும். ஏனெனில் மதப்பிரிவினைக்கு மட்டுமல்ல அதிகாரமும், அடக்குமுறையும் கொண்ட, மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசுக்கும் காந்தி மிக எதிரானவர். அதிகார மற்றும் ஊழல் ஆட்சி செய்வதற்கு காந்தி தங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதை காங்கரஸ் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பர். தாராளவாத முற்போக்கினரும் இன்றுவரை காந்திய கருத்துக்கள் மேல் விமர்சனப்போக்கு கொண்டிருக்கிறார்கள். நவீன வளர்ச்சியின் அபிரிதமான பசிக்கும் காந்தி எதிரானவர். காந்தி இந்திய தேசத்தின் உளச் சான்று. பல நேரங்களில் நம் மனசாட்சியை எதிரியெனவே கருதுகிறோம். அது மௌனமாய் இருக்கவே விரும்புகிறோம்.

காந்தியின் வாழ்வு இந்தியாவுக்கு உதவியது போலவேதான் அவர் மரணமும் உதவியிருக்கிறது என்றே இப்போது எண்ணத் தோன்றுகிறது. ஹிந்து மகாசபா போன்ற அடிப்படைவாத அமைப்புகள் காந்தியால் தான் இந்தியா ஹிந்து ராஷ்டிரம்  மாறாமல் தடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று நம்பினார்கள். அவர்களுக்கு அப்போது பெருமளவு ஆதரவும் இருந்தது. காந்தி சுடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற ஹிந்து மகாசபா மாநாட்டில் காந்தியையும் அவருக்கு ஆதரவாக இருப்போரையும் பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற தீர்மானம் பெருத்த ஆரவாரத்திற்கு இடையே நிறைவேற்றப்பட்டது. ஆனால் காந்தியின் மரணம் அவர்கள் மீதான ஆதரவை குறைத்தது. அவர்கள் மேல் வெறுப்பை உருவாக்கியது. காந்தி தன் மரணம் வழியே அடிப்படைவாத அலையை தடுத்து நிறுத்தினார்.  

தேவிபாரதியின் “பிறகொரு இரவு” சிறுகதை மஹாத்மாவின் இறுதி நாட்களை பற்றியது. அந்நாட்களில் அவர் அடைந்த ஏமாற்றத்தை, துயரத்தை, கடுமையான உளச்சோர்வை, அதன் பொருட்டு தன் மரணம் பற்றிய அவரின் எண்ணத்தை, அதற்காக அவர் கொள்ளும் பயணத்தை ஒரு புனைவாக தேவிபாரதி விவரித்திருக்கிறார். இந்த தேசமே அவர் மரணத்தை எப்படி எதிர்நோக்கியிருந்தது என்ற சித்திரம் அதில் வெளிப்படுகிறது. காந்திக்காக கட்டப்பட்ட பலிபீடம் அதில் புலப்படுகிறது.  அவர் எப்படி அதை தேர்ந்தெடுத்தார் என்பதும் உணர்ச்சிகரமாய் பதிவாகிறது.

காந்தியின் கடைசி காலம். பெரும் அழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் மத மோதல்களை, அவற்றால் ஏற்படும் அழிவுகளை, குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் சந்திக்கும் அவலங்களை, தன்னால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருந்து அவர் துடிக்கிறார். மக்கள் நல செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்காமல், புனிதர் என்ற பிம்பத்தில் இருந்து வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளில் மட்டும் தன்னை ஈடுபட வைக்க முயலும் தன் சுற்றத்தை கடுமையாக வெறுக்கிறார். மேலும் தான் கண்ட கனவிற்கு மாறாக அரசும் அதிகாரிகளும் நடந்துகொள்வதையும் தான் நம்பியவற்றிக்கு முற்றெதிராக மக்கள் நடவடிக்கைகள் இருப்பதை அறிந்து மனம் வெதும்புகிறார். விளைவாக டால்ஸ்டாயை போல் தன் இறப்பும் அமைதியாக நிகழாதா என்றெண்ணுகிறார்.

காந்தி அதையொட்டி ஓர் இரவு தனியே ஊர் நீங்குகிறார். தனது இறுதி பயணத்தை ரகசியமாக மேற்கொள்ளும் பாபு ஜியினால், மரணத்தை தான் விரும்பியவாறு அடைய முடியவில்லை. ஒரு ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடலால் திரும்பி வந்துவிடுகிறார். அவரை திருப்பியனுப்பும் ஸ்டேஷன் மாஸ்டர் கூறுவார், “நீங்கள் நலமாக இருக்க வேண்டும் பாபுஜி..! தங்கள் மரணம் எங்கள் வாழ்வின் செய்தியாக இருக்க வேண்டும்”. காந்தியின் இறுதி நாட்களை புரட்டி பார்த்தால் பிறகொரு இரவு புனைவு மட்டுமல்ல என்றே தோன்றுகிறது. மகாத்மாவின் மரணம் நம் வாழ்விற்கு என்றும் ஒரு பெரிய செய்தி.

*

வீ.செ.செந்தில்குமார்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்குமார் கட்டுரையாசிரியர். வரலாறு, குற்றவியல் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர். பயணங்களில் தீரா விருப்பம் கொண்டவர், பயணக் கட்டுரைகளும் எழுதுகிறார்.

2 Comments

  1. ஆங்கிலேயர்கள் கிளம்பிய பிறகு உயிருள்ள காந்தியை விட புகைப்பட காந்தியே அனைவருக்கும் தேவைப்பட்டார். புகைப்படம் யாருக்கும் எந்த சிரமத்தையும் தராது . தன் மீது கொட்டப்படும் பழியையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் .

    நல்ல விமர்சனக் கட்டுரை.

உரையாடலுக்கு

Your email address will not be published.