தேரோடும் வீதி : மு.குலசேகரன்

ஊரைச் சுற்றி வர தேர் அசைந்தாடிப் புறப்பட்டது. உயர்ந்த கோயில் கோபுரம் நகர்வதைப் போலிருந்தது. உள்ளே தெய்வங்களின் செப்புச் சிலைகள் இளம் காலை ஒளியில் பளபளத்தன. அவற்றின் பெரும்பகுதியை ஆபரணங்களும் வண்ண ஆடைகளும் மலர் மாலைகளும் மறைத்திருந்தன. உற்சவரின் மந்தகாசப் புன்னகை துலக்கமாகத் தெரிந்தது. அர்ச்சகர்கள் சற்று பயத்துடன் தேர்த் தூண்களைப் பற்றியிருந்தார்கள். ஒருவர் தோள் துண்டை வீசி தேர் நகர சைகை காட்டிக்கொண்டிருந்தார். மேள தாளம் முழங்கியது. உச்சியில் வெண் குடை அசைய, சுற்றி தொம்பைகள் ஆட, கனத்த இரும்புச் சக்கரங்கள் உருள தேர் மெல்ல நகர்ந்தது. முன்னால் பொருத்தப்பட்ட மரக் குதிரைகள் தாவிப் பாய்ந்தன. நூற்றுக்கணக்கானோர் கூவியபடி வடக் கயிற்றை இழுத்தார்கள். அரச மரப் பஞ்சாயத்து மேடையைத் தாண்டி வரிசை நீண்டது. சமப்படுத்தும் பிரம்மாண்ட இயந்திரம் அடித்தொண்டையில் உறுமியபடி தேரை பின்னால் உந்தியது. சுற்றிலும் ஆராவாரம் எழுந்தது. நாலைந்து அடி சென்றதும் முட்டுக் கட்டைகள் இடப்பட்டன. தேர் நின்றது.

கோயில் பரம்பரை அறங்காவலர் பாலகிருஷ்ணன் வானளாவிய தேரை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். இந்தத் தேரோடி நாற்பது வருடங்களாகின்றன. கடைசியாகத் திருவிழா நிகழ்கையில் அவருக்குத் திருமணமானப் புதிது. இருவருக்கும் தலை நகரில் அரசு வேலை. தேர்த் திருவிழாவுக்கு விடுப்பில் வந்திருந்தார்கள். அறங்காவலரான தந்தை அப்பாவு விழாவை முன்னின்று நடத்தினார். தாத்தா பெரிய பாலகிருஷ்ணன் காலத்திலிருந்து தேர் இழுக்கப்படுகிறது. கோயிலை விமானமும் சுற்று மதில்களுடனும் பெரிதாக்குகையில் தேரும் உருவாக்கப்பட்டிருந்தது. மிகுந்த பொருட் செலவும் நீண்ட காலமுமாகியிருக்கிறது. அதில் முழுக்க மூலிகை எண்ணெயைப் பூசியிருந்தார்கள். சுற்றிலும் தென்னை ஓலைகளை குன்றைப்போல் வேய்ந்து பாதுகாத்தார்கள். அப்படியும் காற்றும் வெயிலும் மழையும் பாதித்தன. தேர் உள்ளுக்குள் மட்கத் தொடங்கியது. அதன் மரப் பலகைகளும் தூண்களும் சிற்பங்களும் மெல்ல உளுத்தன. பல பகுதிகளாலான பெரும் மரச் சக்கரங்கள் இற்றுக்கொண்டிருந்தன. இரும்புப் பட்டிகளும் திருகாணிகளும் மறைகளும் அடிக்கடி துருப்பிடித்தன. அவற்றைத் தொடர்ந்து பழுதுபார்த்தார்கள்.

அப்போது சில பருவங்களாக மழை பொய்த்திருந்தது. கோயில் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. எதிரில் கோயில் குளம் வறண்டது. படிக்கட்டுக் கற்கள் பெயர்ந்த பள்ளத்தில் இடிபாடுகளைக் கொட்டத் தொடங்கினார்கள். பக்கத்துப் பொதுக் கிணறும் வற்றியது. ஆழத்துப் பாறையில் குடங்கள் இடித்தன. அந்தச் சூழ்நிலையிலும் தேரோட்டம் நிறுத்தப்படாமல் நடந்தது. திருவிழா உற்சாகம் சற்று மட்டுப்பட்டிருந்தது. கனத்த இரும்புச் சங்கிலியை எளிதாகத் தூக்கி இழுக்க நிறைய ஆட்களில்லை. வழக்கம்போல் சக்கரங்களை பின்னால் மரக் கட்டைகளிட்டு நெம்புவதால் ஓடியது. முட்டுக் கட்டைகள் குறைவாக வைக்கப்பட்டன. தேர் மெல்ல ஊர்ந்தது. பரந்த மைதானத்தில் ராட்டினங்களிலும் சூதாட்டக் கடைகளிலும் தின்பண்டக் கடைகளிலும் பரபரப்பில்லை. 

பாலகிருஷ்ணன் சிறு வயதில் சில முறை தேரில் ஏறியிருக்கிறார். உத்வேகத்தால் தன்னையறியாமல் கத்துவார். உள்ளூர பயமிருக்கும். தேரில் தொங்கும் மலர்த் தோரணங்களும் தேங்காய் பாளைகளும் வாழைக்குலைகளும் காற்றில் அகப்பட்டவைப்போல் ஆடும். நீரில் மிதப்பதைப்போல் தேர் அசையும். அடிக்கடி முட்டுக்கட்டை போடுகையில் நின்று குலுங்கும். அக்கணத்தில் அடிவயிற்றில் கூசும். ஆயிரக்கணக்கானோர் சங்கிலிகளைப் பற்றி இழுப்பார்கள். ராஜ வீதிகள் பெயருக்கேற்றாற்போல் அகலமாக மேடு பள்ளங்களற்றிருக்கும். தெரு முனைகளில் தேர் நிற்கும். ஊரையொட்டிய வயல்களில் இரும்பு வடங்களுடன் இறங்குவார்கள். முதல் தெரு மூலை வீட்டில் வசித்த இசுலாமியர் வீட்டுச் சந்துகளில் தரதரவென சங்கிலிகளை இழுத்துச் சென்று வருவார்கள். பிறகு மறு தெருவை நோக்கிச் சக்கரங்களை மெல்லத் திருப்புவார்கள். கீழே மண்ணும் மணலும் கொட்டியிருக்கும். கோயிலை தேர் அடைகையில் இரவாகும். முற்காலத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஊர்வலம் நடக்கும் என்பார்கள். அப்போது இரவில் நடுத்தெருவில் தேர் காத்திருக்குமாம்.

பாலகிருஷ்ணனுக்கு பசுமையாக நினைவிருந்தது. கடைசித் தேரோட்டத்தில் தேர் மூன்று வீதிகளை தடங்கல்களில்லாமல் சுற்றியது. அவர் தேர் முன்னால் நடந்துகொண்டிருந்தார். தேர் நான்காவது தெருவை எட்டியது. இன்னும் பத்துப் பதினைந்து வீடுகளைத் தாண்டினால் கோயிலுக்குப் போய்விடலாம். அவர் வீட்டெதிரில் தேர் நின்றது. அறங்காவலர் அப்பா அப்பாவு முன்னால் விரைந்து காத்திருந்தார். கூட்டுக் குடும்பம் முழுவதும் வீட்டையொட்டி நின்றிருந்தார்கள். சிறுவர்கள் திண்ணைகளின் மேலேறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்துக்கு நீரும் வெல்லப் பானகமும் வழங்கப்பட்டன. பெரிய மலர் மாலையுடன் ஆராதனைத் தாம்பாளம் தரப்பட்டது. தலைமைப் பூசாரி கற்பூரமேற்றி பூசை செய்தார். தட்டு திருப்பி அளிக்கப்பட்டது. கற்பூரச் சுடர் எரிந்துகொண்டிருந்தது. திடீரென தேரின் இரண்டாம் அடுக்கிலிருந்து மரக் கட்டு பெயர்ந்து விழுந்தது. பெண்களின் கூக்குரல்கள் எழுந்தன. குடும்பத்தில் பரபரப்பு தொற்றியது. கூட்டத்தில் கூச்சல் குழப்பம் பரவியது. சிலர் மேல் மரத் துண்டுகள் பட்டும் காயமேற்படவில்லை. கீழே நீண்ட மரச் சட்டமும் மடிப்பும் பூ வேலைப்பாடுகளுடன் உடைந்து சிதறியிருந்தன. மட்கி உளுத்த மரச் செதில்கள். தேரிலிலிருந்து வாத்தியக்காரர்களும் அர்ச்சகர்களும் அவசரமாக ஏணி வைத்து கீழிறங்கினார்கள்.                   

அப்பாவு மௌனமாக நின்றிருந்தார். பக்கத்தில் இரண்டு இளைய சகோதரர்களும் பிள்ளைகளும். அப்பாவின் அருகில் பாலகிருஷ்ணன் சென்றார். “ஒண்ணுமில்ல. தேருல ரெண்டு மூணு மரத் துண்டுங்க பெயர்ந்து விழுந்திருக்கு” என்றார். அப்பா கனத்த கண்ணாடிகளின் வழியே ஏறிட்டுவிட்டு மீண்டும் தேரைப் பார்த்துக்கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஒருவர் “நல்லகாலம் யாரு மண்டையும் ஒடையல” என்றார். “போனாப்போவுது, அப்படியே இதோட தேரோட்டத்த நிறுத்திக்கலாம்” என்றார் இன்னொருவர். சித்தப்பாவின் மகன் “நாங்க முன்னாலேயே சொன்னோம், கேக்கல. தேர் பழசாயி உளுத்திருக்குது. எப்ப வேணாலும் சாஞ்சு விழும்” என்று முகத்தைத் திருப்பி முணுமுணுத்தான். அப்பாவு யாரையும் திரும்பியும் பார்க்கவில்லை.

முன்பு நடந்த ஊர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்காளிக் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள். “ஊருக்கு எவ்வளவோ பண்ண வேண்டியிருக்குது. ஒழுங்கான பள்ளிக்கூடக் கட்டடம் வேணும். இவ்வள செலவு பண்ணி தேர்த்திருவிழா தேவையா?” என்றார் அப்பாவுவின் பெரியப்பா மகன். “ஏன் சாமியால தெருவுல நடந்து போவ முடியாதா?” என்றான் பாலகிருஷ்ணனின் ஒத்த வயதுள்ள அவர் மகன். “தேரு ரொம்ப பழசாயிடுச்சு. சக்கரங்க இத்துப் போச்சு. இழுத்தா குட சாயலாம்” என்று ஊர்ப் பெரியவர் அபிப்ராயப்பட்டார். “இப்ப தேர சரி பண்ணுங்க. அடுத்த வருசம் பாக்கலாம்” என்றார் மற்றொருவர். அப்பாவு தீர்மானமாகத் தெரிவித்தார். “ஒவ்வொரு வருசமும் தேரு இழுக்கறது முறை. அது ஊரு ஒத்துமையக் காப்பாத்தறது. அந்தக் கோயில் சம்பிரதாயத்த மீற முடியாது.” கடைசியில், ஊர்ப் பெரும்பான்மையோர் தேர் இழுக்க ஒத்துக்கொண்டார்கள். வீட்டில் இரவு சாப்பாட்டு வேளையில் அம்மாவிடம் கடைசித் தம்பி மறுத்தார். “இவருக்கு சொன்னா புரிய மாட்டேங்குது. தேரு ஒடைஞ்சு விழுந்தா பல பேரு சாவாங்க. அத இழுக்கக் கூடாது” என்றார். “ஆமா, நம்ம மேல பழி விழும்” என்றார் மற்றொரு தம்பியும். “இப்ப ஓட்டிப் பாக்கலாம். அப்புறமா பணம் திரட்டி தேர சரி பண்ண முயற்சிக்கலாம்.” அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பாவு சாப்பிட்டுக் கைகழுவினார்.                         

அவர்கள் சொன்னது நடந்துவிட்டது. நடுத் தெருவில் தேர் அசையாமல் நின்றது. அனைவரும் நீண்ட நேரம் கலந்தாலோசித்தார்கள். இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அர்ச்சகர் “நேரமாவுது. தேரு மேலயிருந்து சாமியை எறக்கி எடுத்துப் போயிடலாம்” என்றார். “இது தீய சகுனம். ஊருக்குக் கெட்டது நடக்கலாம். இல்லாட்டி கோயில் தர்மகர்த்தாவுக்கு கெடுதல் வரலாம்” என்றார்  வயதான ஒருவர் . “ஆளுங்கயில்லாம தொலைவிலேயிருந்து தேர இழுத்துப் போவலாம். சாஞ்சாக் கூட ஒண்ணுமாகாது” என்றார் கடைசி தம்பி. “பூஜையில்லாட்டிக் கூட பரவாயில்ல. தேரு கிட்ட யாரும் போகக் கூடாது” என்றார் எதிர் முகாம் அனுதாபி. அதே குழுவைச் சேர்ந்தவர் “போலிசுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கணும்” என்றார். கூத்து வாத்தியார் ராவண முனுசாமி தொண்டையை கனைத்துக்கொண்டார். “தேருல சின்ன துண்டு விழுந்தது சாதாரணம். மூணு தெரு சுத்தியும் எதுவும் ஆகல. இனிமேயும் நடக்காது. நாம தாராளமா தேர இழுக்கலாம்” என்றார் கனத்த குரலில். “சரிதான், இன்னும் கொஞ்ச தூரந்தான். எல்லாம் வழக்கம்போல நடக்கட்டும்” என்றார் அப்பாவு. மூக்குக் கண்ணாடியைத் துடைத்து அணிந்துகொண்டு நிமிர்ந்து பார்த்தார். மாலை ஒளியில் தேர் பொன்னால் உருவாக்கியதுபோல் பளபளத்தது. அவர் அருகில் சென்று இரும்பு வடத்தைத் தொட்டார். பலரும் சேர்ந்து பிடித்து இழுத்தார்கள். புதிதாகப் புறப்படுவதைபோல் தேர் நகர்ந்தது. சற்று வேகமாக ஊர்வலம்  சென்றது. எங்கும் நிற்காமல் கோயிலை அடைகையில் பெரும் ஆசுவாசம் தோன்றியது. கண்ணீர் மல்க ஆராவரித்தார்கள். அந்த நெகிழ்ச்சியை பாலகிருஷ்ணனால் மறக்க முடியாது.                

இரவு வீட்டு வாசலில் காத்திருந்த அம்மா பெருமூச்சுவிட்டார். “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது” என்றார். அருகில் அப்பாவு அமர்ந்தார். “இனிமே தேர இழுக்க முடியாது. அத நெறய முறை சரி பண்ணிப் பாத்தாச்சு. புதுசா வேற கட்டணும். அது எந் வாழ்நாளில நடக்காது” என்றார். குரல் கம்மியது. அம்மாவின் கண்கள் கலங்கின. அவருடைய தம்பிகளும் கண்களைத் துடைத்துக்கொண்டார்கள். பிள்ளைகளின் விளையாட்டுக் கூச்சல்கள் அடங்கின. பரந்த வாசலில் கனத்த அமைதி நிலவியது. வீட்டு உள் திண்ணையில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் எழுந்து வந்தார். “அப்பா, நா தொடர்ந்து நடத்தறேன். எல்லோரையும் சேர்த்து புதுத் தேரு கட்டலாம். நீங்க கவலப்படாதிங்க” என்றார். அவருடைய பாட்டி கைகளைப் பற்றிக்கொண்டாள். “நம்ம கௌரவத்த காப்பாத்து” என்றாள். அப்பாவு தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.         

பாலகிருஷ்ணன் ஒய்வு பெற்று ஊரில் வசிக்கத் தொடங்கினார். அப்பா இறந்த பிறகு அவர்தான் கோயில் அறங்காவலர். தற்காலிகமாக உற்சவ பீடத்தில் மூங்கில் வாரைகளால் சிறிய தேரைக் கட்டி தொடர்ந்து ஓடச் செய்தார். முதலிலிருந்து திட்டமிட்டு ஊராரைக் கொண்ட கோயில் குழுவை அமைத்தார். பிற அறங்காவலர்களுடன் சேர்ந்து புதிய தேருக்கு நன்கொடைகள் வசூலிக்க ஆரம்பித்தார். சென்ற இடத்திலெல்லாம் மனமுவந்து அளித்தார்கள். தன் அரசாங்கப் பணி அனுபவத்தால் அரசு அறநிலையத்துறையின் பண உதவி பெற்றார். புதிய தேரை மெல்ல உருவாக்கினார்கள். பல வருட உழைப்பு. தேர் ஸ்தபதி ஊரிலேயே இரு வருடங்கள் தங்கிக் கட்டினார். அவருக்கு ஊர்வாசிகள் உடைகளையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார்கள். அவர் பல கோயில் தேர்களை செய்த அனுபவம் வாய்ந்தவர். புகழ்பெற்ற தென்மலைப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் பழைய தேரின் வரைபடத்தைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. முழுமையாக புதிய ஒன்றை எழுப்பினார். கடைசியில் அது பழைய தேரின் வடிவை ஒத்திருப்பதாக கூறப்பட்டது. அதே உயரம், எடை. சிறிய மரச்சிற்பங்களும் பழைய தேரிலுள்ளவை போன்றவை. கீழே மறைந்துள்ள கட்டுப்பாடற்ற பாலுறவு சிற்பங்களும் வேறுபடவில்லை. மாறாக சக்கரங்கள் மட்டும் இரும்பிலானவை. அருகாமை ஊரில் முன்பு வசித்த உயரதிகாரியின் உதவியால் கனரக பொறியியல் நிறுவனத்தில் தயாரித்தவை. அவற்றால் பெரும் கனத்தை சுமக்க முடியும். தெரு முனையில் எளிதாகத் திரும்பும். பழைய தேர்ச் சக்கரங்கள் மரத் துண்டுகளால் இணைக்கப்பட்டவை. பலமுறை பழுது பார்த்து, இரும்புப் பட்டிகளால் பிணைத்திருந்தன. அப்படியும் தேரின் பளுவைத் தாங்காமல் விரிந்துவிட்டன. புதிய தேரைச் சுற்றி பாதுகாப்பாக தகரக் கொட்டகையும் எழுப்பப்பட்டது. உள்ளே தூசியும் புகாது.       

இப்போது தேர் முதல் தெரு முக்கில் நின்று திரும்பியது. கீழே காங்கிரீட் தரையில் கனத்த இரும்புத் தகடுகள் பரப்பியிருந்தன. தேர் இழுப்பதில் அனுபவம் வாய்ந்த தொழில் முறைக் குழு மும்முரமாக ஈடுபட்டது. சக்கரங்களில் முட்டுக்கட்டைகளின் முனைகள் வைக்கப்பட்டன. சமனாக்கும் இயந்திரம் ஒரு பக்கம் மட்டும் உந்தித் தள்ளியது. தேர் எளிதாகத் திரும்பியது. முதல் தெருவை நோக்கி கம்பீரமாக நின்றது. அலங்கார வண்ணத் துணிகள் முகத்தின் நீண்ட மயிர்க்குழல்களாக தொங்கி அசைந்தன. தெரு மூலையில் நின்றபடி கலா கவனித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு மெய் சிலிர்த்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி. இன்னும் அழுத்தமாக நினைவில் தங்கியிருந்தது. அப்போது அவள் பள்ளியில் படிக்கும் சிறுமி. தேர்த்திருவிழாவுக்கு அப்பா வாங்கித் தந்த புதுத் துணி உடுத்தியிருந்தாள். கிளிப்பச்சை பட்டுப் பாவாடை, மெஜந்தா நிறச் சட்டை. அங்கங்கே சரிகை பூவேலைப்பாடுகள் மின்னின. அடிக்கடி பாவாடையை மண் தரையில் படாமல் தொட்டு தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தாள். தோழிகளின் கண்களில் பொறாமை புலப்பட்டது.  அவளுடைய வீடு நான்காவது பிரதான தெருவிலுள்ளது. அறங்காவலரின் பழைய குடும்ப வீட்டுக்கு நேரெதிரில். அதே போன்ற இரண்டு கட்டு ஓட்டு வீடு. எதிரில் நீண்ட  திண்ணைகளும் அறைகளும் பிறகு பள்ளமான பெரும் வாசலும் சுற்றி தாழ்வாரமும் அறைகளும் கொண்டது. பங்காளிகளுக்குள் வித்தியாசமிருக்கக் கூடாதென அக்காலத்தில் ஒன்றே போல் கட்டப்பட்டது. வாசப்படியில் நின்றால் அறங்காவலர் குடும்பத்தின் சமையலறை உள் வரையிலும் காணலாம்.  

கலாவின் வீட்டெதிரில் தேர் நிற்காது. சற்று தள்ளி அறங்காவலர் வீட்டு முன்னால்தான் நிற்கும்.  அவர்கள் வீட்டிலிருந்து ஆரத்தி தட்டு போகாது. தெருக் கதவையும் சன்னல்களையும் அடைத்துவிடுவார்கள். கடைசியாக நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஓடிய தேர்த்திருவிழாவில் நடந்தவையும் ஞாபகமிருந்தன. அன்று நாலாம் தெருவுக்குள் தேர் நுழைந்தது. அவர்களுடைய வீட்டில் பெண்கள் கதவு இடுக்குகளில் ஆவலோடு தேரைப் பார்த்தார்கள். சன்னல் சந்துகளில் பிள்ளைகள் வேடிக்கைப் பார்த்தன. நாதஸ்வரங்களும் மேளங்களும் கொட்டி முழங்கின.  கூட்டத்தின் களிப்பான பெருங்கூச்சல்கள். அவளால் பொறுக்க முடியவில்லை. “தன் வீட்டில் மட்டும் ஏன் தேரை வணங்குவதில்லை?” அம்மா திட்டினாள். “உனக்கு வயதானாலும் புரியாது. அந்தக் குடும்பம் நமக்கு எதிரிங்க. உந் அப்பா சாமி கும்பிடாத கட்சிக்காரரு.” அப்பா மகளின் கண்ணீரைத் துடைத்தார். “கடவுள் இல்ல. அதத் தூக்கிக் கொண்டாட தேர்த் திருவிழா தேவையில்ல. நாம புத்திசாலிங்க.” அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேரைப் பார்க்க வேண்டுமென்று அழுதாள். அன்று தேர் உடைந்து விழுகையிலும் வீட்டுக் கதவு திறக்கவில்லை. அப்பா மகிழ்ச்சியுடன் சிரித்தார்.

கலாவுக்குத் திருமணமாகி வெளியூர் சென்ற பிறகு திரும்ப ஊருக்கு வரவில்லை. அவள் கணவன், அப்பாவிடம் டிராக்டர் ஏர் ஓட்டிய வேறு சாதிக்காரன். அவன் அக்கறையுடன் வண்டியோட்ட கற்றுத் தந்தான். யாருமறியாமல் மெல்ல காதல் அரும்பியது. அவனை அண்ணன்கள் தென்னை மரத்தில் கட்டி வைத்து ரத்தம் ஒழுக அடித்தார்கள். அவனுடன் ஓடிப்போன பிறகு வீட்டை வெறுத்தாள். உறவு எண்ணம் எழவில்லை. அப்பா, அம்மா இறந்த பிறகு பேச்சுத் தொடர்பும் முழுதாக அறுந்தது. எந்த குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் அண்ணன்களும் அண்ணிகளும் அழைப்பதில்லை. அவளுக்கும் வர விருப்பமில்லை. 

கலா தேரை ஒட்டி நடந்தாள். அவளை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இப்போது ஊர் முழுக்க மாறிவிட்டிருந்தது. கோயிலையொட்டி அர்ச்சகர்கள் குடியிருந்த சிறிய சந்து. அங்குதான் அவளுடைய தமிழ் ஐயா வசித்தார். வீடுகள் சிதிலமடைந்து செடிகள் முளைத்து ஓடுகள் கொட்டியிருந்தன. இப்போது ஒருவருமில்லை. அனைவரும் வேலை தேடி வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள். திருவிழா நாட்களில் மட்டும்தான் அர்ச்சகர்கள் கோயிலுக்கு வருவார்கள். மற்ற நாட்களில் அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்தவர் கருவறையில் நுழைந்து பூஜை செய்தார். அது அறங்காவலர் செய்த பெரிய மாற்றம். முதல் தெருவில் எப்போதோ வந்த வெளியூர்க்காரர்கள் குடியிருந்தார்கள். இப்போது ஆரம்ப சுகாதர மையமும் நூலகமும் கட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கான இடங்கள் அறங்காவலர் குடும்பத்தால் தானமாக வழங்கப்பட்டவை. பக்கத்தில் திறந்திருந்த நியாய விலைக் கடை. அவற்றில் வேலை செய்பவர்களும் வெளியூர்க்காரர்கள்தான். அடுத்து சிறிய மாடி வீடுகளும் ஓட்டு வீடுகளும் வரிசையாயிருந்தன. இடையில் சில குட்டிச் சுவர்களுமிருந்தன. அவற்றில் காத்திருந்து வழிபட யாருமில்லை. தேர் நிற்காமல் உருண்டு கடந்தது. திருப்பத்தில் பல காலமாக வசித்த இசுலாமியரின் வீடு. ஏறக்குறைய ஊரைவிட்டு வெளியே கால்வாய் புறம்போக்கிலிருந்தது. அவர்தான் முதலில் மளிகைக் கடை வைத்தவர். குடும்பம் பல்கிப் பெருகியிருந்தது. அவர்களில் ஒருவர் ஊர் தலையாரி, மற்றொருவர் பள்ளிப் பணியாள். முன்பு பக்கத்தில் பேனா பென்சில் நோட்டுகள் விற்பவரின் கடையுமிருந்தது. அவருடைய இறப்புக்குப் பிறகு குடும்பமும் வெளியேறிவிட்டது. அவள் பள்ளி படிக்கையில் பேனாவுக்கு மை ஊற்ற அடிக்கடி வருவாள். கூடவே சிறு சீரக மிட்டாய்கள் வாங்குவாள்.    

அடுத்த தெருவுக்கு தேர் திரும்பி ஓடத் தொடங்கியது. கலா உடன் சென்றாள். தெரு அகலமாயிருந்தது. அக்காலத்தில் கொல்லர்களும் தச்சர்களும் நிறைந்திருந்தார்கள். எப்போதும் உலைக் கூடங்கள் எரியும். பழுத்த இரும்பை ஓங்கி அடித்தபடியிருப்பார்கள். தூரத்து அருக மலையில் சப்தம் மோதி எதிரொலிக்கும். பார்க்கும்பொதெல்லாம் வண்டிச் சக்கரத்தை படுக்க வைத்து இரும்பு வட்டத்தை ஏற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கோயிலை உருவாக்கக் குடியேறிய கைவினைஞர்கள் என்பார்கள். இங்கு நிரந்தரமாகத் தங்கி விட்டார்களாம். கலாவுக்கு நெருங்கிய பள்ளி வகுப்புத் தோழியும் அங்குதான் வசித்தாள். அந்த வீடு மறந்துவிட்டது. அவள் வாழ்க்கைப்பட்டு கண்காணாத இடத்துக்குப் போயிருப்பாள். இப்போது தெருவில் இரும்புச் சப்தமில்லை. நிறைய மளிகைக் கடைகள் தோன்றியிருந்தன. பெண்கள் பொருட்களை விற்றார்கள். தென்னை ஓலைகள் வேய்ந்த நினைவுச் சின்னம் போன்ற ஒரேயொரு உலைக்கூடம் அணைந்திருந்தது. மூலையில் வெளியூர்களுக்கு செல்லும் சாலை பிரிந்தது. முன்பு வயல்வெளிகள் விரிந்திருக்கும். அங்கு தேர் சற்று நேரம் ஓய்வெடுத்தது. பிறகு மெல்லத் திருப்பப்பட்டது. அது கண்கொள்ளாக் காட்சி. மேலே குடை அசைய, சிறகுகள் போல் வண்ணத் தொம்பைகள் விசிற, வெண்கல மணிகளும் மலர் மாலைகளும் குதிரைகளும் ஆடின.

மூன்றாம் தெருவில் தேர் மெல்ல முன்னேறியது. அடிக்கடி நின்றது. அதனுடன் கலாவும் சேர்ந்து நின்றாள். அந்தத்  தெரு குறுகிவிட்டிருந்தது. வீட்டு முகப்புகள் முன்னால் நீட்டியிருந்தன.  இருபுறமும் சாக்கடை சிமெண்டுக் கால்வாய்  வளைந்து நெளிந்து ஓடியது. மேலே மின்சார வயர்கள் தாறுமாறாகப் பின்னிக்கிடந்தன. அவற்றைப் பிரித்தும் கவையால் தூக்கியும் கடக்க வேண்டியிருந்தது. ஓரங்களில் ஊன்றிய மின் கம்பங்கள் முட்டின. ஒரு வீட்டின் தகர மறைப்பு உரசியது. சில வீட்டுப் படிகள் குறுக்கிட்டன. சக்கரம் மேலேறி இறங்கியதில் சிதைந்தன. தேர் விழும்போல் குலுங்கியது. அவளுடைய சித்தப்பாவின் வீட்டெதிரில் தேர் நின்றது. அவளுடைய கல்யாணத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர். அவரைக் காணோம். பெண்கள் மட்டும் பூஜைத் தட்டுடன் காத்திருந்தார்கள். அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை கைவிட்டிருக்கலாம். பெரிய ரோஜா மாலை கொடுக்கப்பட்டு சிலர் கைமாறி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. தேர் தயக்கமுடன் தெருவில் ஊர்ந்தது. பல வீடுகள் இடித்துக் கட்டப்பட்டு மாளிகைகளாகியிருந்தன. முற்றங்களில் கார்கள் பளபளத்தன. பெரும் இரும்புக் கதவுகள் வாயில்களில் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து திண்ணைகளும் நீக்கப்பட்டிருந்தன.

நான்காம் தெருவுக்கு தேர் திரும்பியது. முன்பு அந்த இடத்தில் சங்கிலிகளை இழுத்துக்கொண்டு தென்னந்தோப்புகளில் நுழைந்து ஓடுவார்கள். இப்போது அதற்குத் தேவையில்லை. ஆனால் தெரு முனை குறுகியிருந்தது. பல முறை முட்டுக் கட்டைகள் வைத்தும், சமனாக்கும் இயந்திரம் தள்ளியும் தேர் சிரமத்துடன் திருப்பப்பட்டது. அகலத் தெரு மாறவில்லை. இரு புறமும் மாவிலைத் தோரணங்கள் தொங்கின. முனையில் சாமியார் வாழ்ந்த வீட்டைக் காணவில்லை.  பல வீடுகள் புதிதாக எழும்பியிருந்தன. அறங்காவலரின் பெரிய கூட்டுக் குடும்பம் பிரிந்திருந்தது. அவர் தம்பிகளின் வீடுகள் தனித் தனியாக நின்றிருந்தன. உறவு வீடுகளும் வரிசையாயிருந்தன. இரண்டாம் தம்பியின் வீடு அழகுற நவீனமாயிருந்தது. முன்னால் காருக்குப் பக்கத்தில் தொங்கும் மர ஊஞ்சல். அவரும் அரசு அதிகாரியாயிருந்து ஓய்வு பெற்றவர். கலா தேருக்கு முன்னால் கூட்டத்துடன் சென்றுகொண்டிருந்தாள். அனைவரும் வடத்தைப் பற்றி இழுக்க வேண்டியதில்லை. பங்கேற்பதற்காக தூக்கிப் பிடித்தால் போதும். பின்னால் இயந்திரம் வலிமையுடன் தள்ளியது. அடுத்தது அறங்காவலர் பாலகிருஷ்ணனின் பெரிய வீடு. இருபக்கமும் நீண்ட திண்ணைகளுடன் பழமை மாறவில்லை. அவர் முன்பே சென்று குடும்பத்துடன் நின்றிருந்தார். கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேருக்கு ஆளுயுர மாலை சாத்தி வணங்கினார்கள். அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மேளமும் கோஷங்களும் அடங்கி அமைதியாயின. தேர் சிறிது ஓய்வெடுத்தது.

அறங்காவலர் வீட்டெதிரில் கலாவின் வீடு. அதுவும் புதிதாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது. இரும்பு வாயில் ஒரு பக்கம் மட்டும் திறந்திருந்தது. அவளுடைய மூத்த அண்ணன் நாற்காலியில் தளர்ந்து அமர்ந்திருந்தார். கையில் செயற்கை சிறுநீர் சுத்திகரிப்புக்காக பிளாஸ்திரி ஒட்டிய சிறு குழாய். அவர் முழுக்க அப்பாவைப் போலிருந்தார். பின்னேற்றி வாரிய தலை. மீசையற்ற குவிந்த உதடுகள். அவளுக்கும் அவை வாய்த்திருந்தன. அவைதான் துணிந்து காதலிக்க வைத்தன என்பான் கணவன். அண்ணனுக்குப் பக்கத்தில் குடும்பத்தாரும் உறவினர்களும் கும்பலாக நின்றிருந்தார்கள். அங்கிருந்தும் பூஜைத் தாம்பாளம் வழங்கப்பட்டது. கற்பூரம் எரிய திருப்பித் தரப்பட்டது. அண்ணன் வணங்காமல் உட்கார்ந்து வெறுமனே தேரைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு கணம் அவளைப் பார்த்தது போலிருந்தது. சற்று நரைத்து, கண்ணாடியணிந்து, வெறும் நெற்றியுடனுள்ள அவளை அடையாளம் தெரிந்திருக்காது. அவள் நகர்ந்து கூட்டத்தில் மறைந்து நின்றாள். சற்றுத் தள்ளி பல தெருக்களும் சந்துகளும் கிளை பிரிந்தன. அவற்றிலுள்ளோர் வரிசையாக பூஜைத் தட்டுகளை கொண்டு வந்தார்கள். பல பெண் முகங்கள் புதிதாகத் தோன்றின. நீண்ட காலத்தில் நினைவுகள் மங்கியிருந்தன. பதிலாக எண்ணற்ற புது ஞாபகங்கள் அடைத்திருந்தன. அவளுக்கு மயக்கம் வரும்போலிருந்தது. அது அவ்வப்போது தோன்றுவது. அப்படியே மயங்கி விழுவாள். சிறிது நேரத்தில் தெளிந்து எழுவாள். மீண்டும் நினைவு திரும்பும்.                                                                  

தேர் மீண்டும் புறப்பட்டது. கலா தயக்கத்துடன் பின் தொடர்ந்தாள். சொந்த வீட்டை பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றியது. யாருடனாவது பேச நினைத்தாள். ஆனால், இழந்த உறவை  மறுபடியும் புதுப்பிக்க விரும்பவில்லை. அவள் எங்கோ கண்காணாத இடத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டிருக்கட்டும். அவர்களின் வறட்டுக் கௌரவம் எப்போதும் குலையாது. அவள் மெல்ல நடந்துகொண்டிருந்தாள். ஒருவரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. இருபக்கமும் வீடுகள் உயர்ந்தும் தாழ்ந்துமிருந்தன. இன்னும் சிலவற்றைக் கடந்தால் கோயிலை நெருங்கலாம். பின்னாலிருந்து தேர் பல எறும்புகள் சேர்ந்து இழுத்துச் செல்லும் பண்டம் போலிருந்தது. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம்.

கடைசியாக தேர் கோயிலை அடைந்துவிட்டது. அதை திருப்பி நிலையில் நிறுத்துவது இன்னொரு பாடு. கூட்டத்தில் ஆராவாரம் எழுந்தது. தேரோட்டம் ஒற்றுமையை மெய்ப்பித்துவிட்டது. கோயிலைச் சுற்றிலும் கடைகள் நிரம்பியிருந்தன. எளிய விளையாட்டுப் பொம்மைகளும் அலங்காரப் பொருட்களும் ஆபரணங்களும் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. கோயில் பந்தலிலும் கடைகள். அவளுக்கு நிற்க முடியாமல் சோர்வேற்பட்டது. தலை சுற்றி வேர்த்து ஒழுகியது. எங்காவது படுக்கத் தோன்றியது. சற்று ஓய்வெடுத்தால் சரியாகும். சொந்த மண்ணில் இறந்தாலும் பரவாயில்லை. கோயில் கொட்டகைக் கதவுகள் சாத்தியிருந்தன. எதிரில் காவலுக்கு ஒருவர் நின்றிருந்தார். அவரை முன்னெப்போதோ பார்த்த நினைவு. அவள் நெருங்கி “எனக்கு தலை சுத்தி மயக்கமாயிருக்குது. கொஞ்ச நேரம் உட்காரணும்” என்றாள். அவர் கொட்டகைக் கதவுகளை விரியத் திறந்தார். “இங்க மட்டுந்தான் இடமிருக்குது” என்றார்.

கலா கொட்டகைக்குள் நுழைந்தாள். உள்ளே அரையிருட்டு சூழ்ந்திருந்தது. பீடங்களுடன் கடவுள் வாகனங்கள் நிறைந்திருந்தன. யானை, சிங்கம், யாளி, குதிரை, பாம்பு, கருடன், அன்னம் வரிசையாயிருந்தன. அவளை உற்றுப் பார்த்தன. யானையின் தும்பிக்கை லேசாக அசைந்தது.  பிடரி மயிரை குதிரை சிலிர்த்தது. சிங்கம் மௌனமாக உறுமியது. அன்னப் பட்சியின் வெண் சிறகுகள் படபடத்தன. கருடாழ்வார் கண்களை உருட்டினார். அவள் யானையின் காலடியில் படுத்தாள். கீழே தூசி படர்ந்திருந்தது. வௌவால்களின் கார வீச்சம். காற்று வீசாமல் புழுங்கியது. அவள் களைப்புடன் கண்களை மூடிக்கொண்டாள். நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்தாள். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தாள் என்று தெரியவில்லை. யாரோ தொட்டு எழுப்பினார்கள். அவள் மெல்ல கண்களைத் திறந்தாள். அறங்காவலர் பாலகிருஷ்ணன் குனிந்து நின்றிருந்தார். பக்கத்தில் காவல்காரர். “கலாவதி, என்னாச்சு, எழும்மா” என்றது பாலகிருஷ்ணனின் கனிந்த முகம். அவளுடைய முழுப்பெயர் அழைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட்டாள். யானையின் தும்பிக்கையை பற்றியபடி எழுந்து நின்றாள். காவல்காரர் குடிநீர் பாட்டிலை நீட்டினார். அவள் குடித்து முகம் கழுவினாள். மறுபடியும் உயிர் பெற்றது போலிருந்தது. “எந் பெயர இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க” என்றாள் புன்னகைக்க முயன்று. “இந்த ஊரு பொண்ணாச்சே. நீ காலையிலிருந்து சாப்பிட்டிருக்க மாட்ட. போகலாம் வா” என்று பாலகிருஷ்ணன் வெளியில் வந்தார். நாலாவது தெருவில் தன் வீட்டை நோக்கி நடந்தார். அவள் பின் தொடர்ந்தாள்.                                                     

000 

மு.குலசேகரன்

முழுப் பெயர் மு. குலசேகரபாண்டியன். மு. குலசேகரன், குலசேகரன் ஆகிய பெயர்களில் எழுதி வருகிறார். வேலூர் மாவட்டம், பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். ‘ஓரு பிடி மண், ‘ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள், அருகில் வந்த கடல், புலி உலவும் தடம் என்ற சிறுகதை தொகுப்புகள், உற்ற சொல்லைத் தேடி என்ற கட்டுரை தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.