காலத்தை விஞ்சி நிற்கும் கலை
மீன்காரத்தெரு, துருக்கித் தொப்பி உள்ளிட்ட ஒன்பது நாவல்களையும் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் புனைந்துள்ள எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா தமிழின் முக்கியமான எழுத்தாளர்களையும் நூல்களையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘காலத்தை விஞ்சி நிற்கும் கலை’ என்னும் நூல்.
இப்போது தமிழில் நடுநிலை விமர்சகர் அருகிவிட்டார்கள். நூல் விமர்சனம் என்பது இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒரு நிகழ்ச்சியில் வாகனங்களுக்கு பிரேக் எதற்காக அவசியம் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது வண்டியை நிறுத்துவதற்கு, விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு என பல பதில்கள் கூறப்பட்டன. ஒரு பதில் மட்டும் வேகமாக செல்வதற்கு என வந்தது. முதலில் வேடிக்கையான பதிலாக இது தோன்றினாலும் இதுவே முதன்மையான பதில் என்பது புரியும். உடனே நிறுத்த முடியும் என நம்பும்போதுதான் வேகமாக செல்லமுடியும் என்பதை எந்த வாகன ஓட்டியும் ஒப்புக் கொள்வான். இது போலவே பிழையான நூல்களைச் சுட்டும் சரியான விமர்சகன் இருக்கும்போதே இலக்கியத்தின் பாய்ச்சல் வீரியமானதாக அமையும்.
இந்நிலையில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் இந்நூல் பெரும் ஆசுவாசம் அளிக்கிறது. இதிலுள்ள கட்டுரைகள் விமர்சகரின் பார்வையாக இல்லாமல் நல்ல வாசகனின் பார்வையில் அமைந்துள்ளது. இதுவே இந்நூலின் முதன்மையான சிறப்பு. நல்ல வாசகன் என்பது பரந்துபட்ட வாசிப்பு என்பதோடு நுண்மையான வாசிப்பையும் உள்ளடக்கியது என்பதாகக் கொள்ளவேண்டும்.
கீரனூர் ஜாகிர்ராஜா ஒரு நூலைக் குறித்து பேசுவதற்கு முன் அதன் ஆசிரியர் யார், அவரது மற்ற படைப்புகள் எவை, அவருடைய வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதைப் பற்றிய விரிவான சித்திரத்தை அளித்த பிறகு அவர் எடுத்துக் கொண்ட நூலுக்கு செல்கிறார். இந்த வழிமுறை வாசிப்பவருக்கு பெரும் உவகை அளிப்பதாக உள்ளது.
உதாரணமாக புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றிய கட்டுரையில் புதுமைப்பித்தனின் வாழ்க்கையின் முழுமையான சித்திரத்தை அளிக்கிறார். அவரது மனைவி கமலாம்பாளுக்கும் அவருக்கும் இருந்த பிணைப்பையும் பிரிவையும் விவரிக்கிறார். அதன் பிறகு பித்தனின் படைப்புலகத்தின் விரிவையும் புதுமையையும் கூறுகிறார். பொதுவாக கட்டுரைகள் வாசிப்பவரை, சற்று தள்ளி நின்று அவதானிக்கும்படி கோருவதாக இருக்கும். ஆனால் இக்கட்டுரை ஒரு புனைவு போலவே தோற்றம் கொள்ளும் வண்ணம், மொழி ஒரு நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளது. இத்தன்மை வாசிப்பவரை புனைவு போலவே உள்ளிழுத்துக் கொள்கிறது. இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும்போது இதுவரை அறியாத தமிழின் முதன்மைப் படைப்பாளியைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதன் உவகை தோன்றுகிறது.
புதுமைப்பித்தனின் கட்டுரையைப் போன்றதே யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” என்ற நூலைப் பற்றிய கட்டுரையும். பாரதியின் பல்வேறு பரிமானங்களை தொட்டுத் தொட்டு அவரின் முழு வாழ்வையும் காட்டிவிடுகிறது. பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களையும் அதனால் ஏற்படும் மனக்கிலேசங்களையும் வாசிக்கும்போது நம்போலவே சம்சார சாகரத்தால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில்தான் இத்தனை மகத்தான பணிகளையும் ஆற்றியுள்ளார் என்பதை உணரமுடிகிறது. இதனால், பாரதிமேல் கொண்டுள்ள நம் மதிப்பு இன்னும் உயருகிறது.
ஜெயகாந்தன், பஷீர், வண்ணதாசன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடைய படைப்புலகைப் பற்றியும் அவற்றிலுள்ள பலரும் அறிந்திடாத சில நுட்பமான விசயங்களை தொட்டுக்காட்டும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்நூலின் சிறப்பம்சம் என்பது அநேகமாக எவரும் அறிந்திடாத இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளையும் கொண்டிருப்பதுதான்.
சித்தி ஜுனைதா பேகம், காதம்பரி, சுகன் போன்றவர்களை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் அறிந்ததில்லை என்பதை எண்ணி ஒரு குற்றவுணர்வு தோன்றியது. ஆனால் அதற்கு நான் மட்டும் காரணமல்ல தமிழ்சூழல்தான் காரணமென சொல்லிக் கொண்டு அவ்வுணர்விலிருந்து வெளிவந்தேன்.
சித்தி ஜுனைதா பேகம் என்ற இஸ்லாமிய குடும்பத்துப் பெண் 1930- களில் எழுத்தாளராக இருந்ததையும் அத்தனை உறுதியாகத் தொடர்ந்ததையும் வாசிக்கும்போது நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போதும் வியப்பாகவே உள்ளது. தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சா. இவரது நூலுக்கு முன்னுரை அளித்துள்ளார். குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பை மீறி தனக்கு முன்மாதிரியென எவரும் இல்லாத நிலையில் இருண்ட கானகத்தினுள் நுழைந்த மழலையென தமிழ் இலக்கிய உலகிற்குள் அடிவைத்து தன் எழுத்துகளால் தடம் பதித்துள்ளார். புனைவுகளுடன் கட்டுரைகளும் எழுதியுள்ளார். “முஸ்லீம் பெண்கள் கணவன் பெயரை தன் பெயருக்குப் பின்னே இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. அவள் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவளுக்குத் தெய்வம் அவள் கணவனல்ல..” என “நூருல் இஸ்லாம்” என்ற இதழில் எழுதியிருப்பது அவரது துணிச்சலுக்குச் சான்றாக தரப்பட்டுள்ளது. இப்போதுகூட இஸ்லாமியப் பெண்ணால் பொதுவெளியில் உரைக்கச் சாத்தியமில்லாததை அப்போதே கூற அவருக்கு பெரும் துணிச்சலை அளித்தது அவரது தானொரு எழுத்தாளர் என்ற உணர்வாகவே இருக்கமுடியும். இவரது வாழ்வு, இளம் எழுத்தாளருக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கவல்லது. தமிழுலகம் மறந்துவிட்ட அல்லது புறமொதுக்கி மறைத்துவிட்ட, தான் வாழ்ந்த எண்பத்தியிரண்டு வயது வரை எழுதி கொண்டிருந்த சித்தி ஜுனைதா பேகத்தை இந்நூல் மூலம் கீரனூர் ஜாகிர்ராஜா வெளிக் கொணர்ந்துள்ளார்.
நான் இதுவரை அறியாதிருந்த சுகன் பற்றிய கட்டுரையும் இளம் படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. சுந்தர சரவணன் எனும் இயற்பெயர் கொண்ட அவர், சுந்தரசுகன் எனும் இலக்கிய சிற்றிதழை பல வருடங்கள் தஞ்சாவூரிலிருந்து வெளியிட்டவர். அவ்விதழில் அப்போது பிரபலமாக இருந்த பல எழுத்தாளர்களின் படைப்புகளும் வெளிவந்தன. அதோடு புதிய எழுத்தாளர்களையும் எழுத ஊக்குவித்திருக்கிறார். அவ்விதழில் வாசகர் கடிதங்களுக்கென பல பக்கங்கள் ஒதுக்கப்பட்டன என்ற செய்தி பெரும் வியப்பை அளிக்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜாவிற்கும் சுகனுக்குமான அறிமுகம், நட்பு மற்றும் இடைவெளி உருவானதை ஒரு சிறுகதையைப் போலவே இக்கட்டுரையில் கூறிச் செல்கிறார். இலக்கியச் செயல்பாடென்பது எத்தனை ஆத்மார்த்தமான பணியாக சிலருக்கு இருந்துள்ளது என்பதையும் அப்படிப்பட்ட சிலரால்தான் இலக்கிய தீபம் அணையாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.
இவ்வரிசையில் இன்னொருவர் காதம்பரி. ஜி. வெங்கட்ராம் என்ற இயற்பெயர் கொண்ட காதம்பரி புனைவு எழுத்தாளர் இல்லை. இலக்கியங்களை வாசித்து லயித்து பிறரிடம் அதை சிலாகிப்பவர். விமர்சகர் என்று சொல்லாமல் ரசிகமணி என இவரை குறிப்பிடுகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.
தன் தனிப்பட்ட வாழ்வின் நெருக்கடிகளுக்கிடையே இலக்கியத்தின் தேன் நுகர்ந்து அதன் சுவையை மற்றவர்களுக்கு பரிமாறியவர் காதம்பரி. அது அவருக்கு ஆசுவாசமளித்ததோ இல்லையோ கேட்டவர்களுக்கு பெரும் பரவசமளித்தது என்பதுடன் அவை தொகுக்கப்படாதது வருத்தமளிப்பதாக கூறுகிறார் கட்டுரையாளர். அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். தமிழில் இரு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. “கலை கலைஞன் காலம்” எனும் காதம்பரியின் நூல் குறித்து சில குறிப்புகளை மட்டும் அளித்து அந்நூல்களை வாசிக்கத் தூண்டும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
மேலும் இந்நூலில் திரைப்பட இயக்குனர்கள் சத்யஜித்ரே, மகேந்திரன் மற்றும் ஜான் ஆபிரகாம் குறித்த முக்கியமான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மற்றொரு கட்டுரை ஜின்னா பற்றியது. இவரைப் பற்றி நான் கொண்டிருந்த எதிர்மறை பிம்பத்தை சற்று கலைத்துவிட்ட இக்கட்டுரை நமக்கு கூறப்படும் அத்தனையையும் ஆழ்ந்து பார்க்க கோருகிறது. “ஜின்னா கடைசிவரை பாகிஸ்தானியாக மாறவில்லை, அவர் ஒரு இந்தியனாகவே வாழ்ந்தார்” என முடியும் “வில்லன் எனும் நாயகன்” கட்டுரை பல முடிவிலா கேள்விகளை நம்முள் எழச் செய்கிறது.
மேலும் திலீப்குமார், அரவிந்தன் போன்று பெரிதாக பேசப்படாத எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையுமே இதுவரை அறியவில்லையே என்ற வியப்பையும் இப்போதாவது அறிந்து கொண்டோமே என்ற உவகையையும் ஒருங்கே தருகின்றன.
இந்த நூலை வாசித்து முடிக்கும்போது கீரனூர் ஜாகிர்ராஜா இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரமான சபரியை ஒத்துள்ளவராகத் தோன்றுகிறது. பல கனிகளைச் சுவைத்து அவற்றில் நறுங்கனிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ராமனுக்குப் படைக்கிறார் சபரி. அவர் சுவைத்த எத்தனை கனிகள் புளிப்பாகவோ துவர்ப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருந்தனவோ அப்பரம்பொருளே அறியக் கூடும். அதுபோலவே கீரனூர் ஜாகிர்ராஜா அவர் வாசித்த நூல்களில் அவருக்கு மிகவும் பிடித்த அல்லது அவரைக் கவர்ந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி எழுதியுள்ளார். வாசகர்கள் மேல் எத்தனை வாஞ்சையிருந்தால் இப்படி எழுதியிருப்பார். இதற்காக அவர் எத்தனை தரமில்லாத நூல்கள் தந்த அயர்ச்சியை தாங்கியிருப்பார் என எண்ணும்போது அவரை தழுவிக் கொள்ள மனம் துடிக்கிறது.
மொத்தத்தில், இந்நூலை கோவில் கோபுர கலசத்தில் வைத்திருக்கும் நெல்மணிகள் போன்றது எனக் கருதுகிறேன். மக்களிடம் இருக்கும் தானியங்கள் முழுவதுமாக அழிந்துபோய்விட நேர்ந்தால் மீண்டும் பயிர்களை உருவாக்குவதற்காக இப்படி விதை நெல்லை கலசத்தில் வைத்து பாதுகாப்பதாக ஒரு கூற்று உண்டு. போலவே தமிழிலுள்ள நூல்கள் அழிந்து விட்டாலும் இந்த ஒருநூல் இருந்தால் போதும் சிறந்த நூல்களை மீளுருவாக்கம் செய்து விடலாம் எனத் தோன்றுகிறது. காலத்தை விஞ்சி நிற்கும் கலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நூல் காலத்தை கடந்தும் நிலைக்க வேண்டுமென விரும்புகிறேன். இது தமிழியக்கியத்திற்கு நன்மையளிக்கும்.
கா.சிவா – சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்
௦௦௦
விவரணை
ஸ்வீடிஷ் எழுத்தாளர் “இயா யான்பெரி” எழுதிய நாவல் Detaljerna . இது அவரது மூன்றாவது நாவலாகும். இந்நாவல் ஆங்கிலத்தில் The Details என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவல் 2024 சர்வதேச புக்கர் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. இந்த நாவலை தமிழில் கண்னையன் தட்சிணாமூர்த்தி ”விவரணை“ என்ற பெயரில் மொழிபெயர்த்து Two Shores Press-ன் முதல் வெளியீடாக வந்துள்ளது.
கண்னையன் தட்சிணாமூர்த்தி கருங்குன்றம் என்ற மொழிபெயர்ப்புக்காக 2023 ம் ஆண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது பெற்றுள்ளார். தமிழ்ப் பதிப்புச்சூழலில் கவனம் பெறாத உலக, பிறமொழி இலக்கியங்களைத் தமிழ் வாசகர்களிடம் கொண்டு செல்லும் பயணத்தின் தொடக்கம் இது எனவும், இயா போன்ற சமகால சர்வதேச எழுத்தாளர்களி உடனுக்குடன் தமிழில் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம் என Two Shores Press அறிவித்துள்ளது.
விவரணை நாவலில் கதைசொல்லிக்கும் நான்கு பேர்களுக்குமான Love Hate Relationship போதிய விவரணைகளுடன் நான்கு உபதலைப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
1. யோஹன்னா
யோஹன்னா ஒரு புத்தகத்தை எவ்வளவு வேகமாக வாசித்து முடிக்கிறாள் என்பதிலிருந்தே அதைப்பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்று என்னால் சொல்லி விடமுடியும். வேகமாக வாசித்தாள் என்றால் அலுப்புத்தட்டி முடித்துவிட வேண்டும் என்பதால் விரைகிறாள் என்றும், மிகவும் மெதுவாக வாசித்தால், அதே மாதிரி அலுப்புத் தட்டி விட்டது என்றும் , ஆனால் கடைசிப் பக்கத்தை எட்டுவதற்குச் சிரமப்படுகிறாள் என்றும் புரிந்து விடும். யோஹன்னா அவனுடைய உளறலை சகிக்கமுடியாமல் அவனைக் கடுமையாக வசைபாடத்தொடங்கினாள். அத்தகைய வசவுகளை அவள் அதற்கு முன் அவள் பேசி நான் கேட்டதில்லை. பின் இயல்பாகி என் பக்கம் திரும்பி அவள் உரையாடலை மீண்டும் தொடர்ந்தபோது மூகமூடியைப் போட்டிருந்தாளா அல்லது கழற்றி விட்டிருந்தாளா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
யோஹன்னா என் கடந்த காலத்திய நபராகிப் போனாள். நம்முடைய மரணத்தை நாமே தேர்ந்தெடுக்க முடியாத்தது போல், முறிந்து போன உறவை நீட்டிக்கவும் நம்மால் ஆகாது.அவள் என்னை விட்டுப் போன பல ஆண்டுகள் கழித்து ஒரு தருணத்தில் மீண்டும் எழுத முயற்சிப்பது என்று தீர்மானித்தேன். என்னுடைய படைப்பில் “விவரணைகளைச் சொல்வதில் துயரார்ந்த பார்வை இருக்கிறது “ என்றும், ”சரியாகச் சொல்லபடாத துல்லியம் இருக்கிறது” என்றும் சொல்லப்பட்டது.
2. நிக்கி
பழைய சம்பவங்கள் என்பவை ஒரு சிலரைப் பீடித்துக் கொள்கிற ஒரு விதமான நாள் பட்ட நோய் என்பதை நான் நிக்கியுடன் தோழமை கொண்டதிலிருந்து அறிந்து கொண்டேன். பழைய சம்பவம் எதுவானாலும் அது மூடி முத்திரையிடப்பட்ட பல பெட்டிகளைக் கொண்ட ஒரு பெரும் பெட்டி போன்றது. அதாவது நிக்கி சொல்வது போல் உரையாடல் என்று சொல்லப்படுகின்ற பேச்சில் ஒவ்வொருவரும் தத்தமது மூடி முத்திரை இடப்பட்ட பெட்டிகளோடு தமது பிரஸ்தாபங்களி எடுத்துரைக்கக் காத்திருப்பார்கள். நிக்கி எனக்கு பரிச்சயமாகியிருந்த காலத்தில், புத்தகக்கடைகளில் நாள் முழுக்க செலவிட்டிருக்கிறோம். சில புத்தகங்களைப் “ பெறுவதற்காக” போகிறோமோ அன்றி “வாங்குவதற்காக” அல்ல என்று சொல்லிக் கொள்வோம். புத்தகங்களின் உள்ளடக்கம் எங்களுக்குச் சொந்தமானது போலவும், கட்டுண்டு கிடக்கும் அவற்றைச் சுதந்திரமாக்கி வீட்டுக்கு கொண்டு வருவது போலவும் அது தொனிக்கும். நிக்கியைச் சந்திக்கிற எவரானாலும், காதல் அவளுக்கு எளிதானது என்றும் , அது அவளுக்கு “ஆன்” செய்யவும் “ஆஃப்” செய்யவும் கூடிய ஒரு ஸ்விட்ச் என்ற அபிப்ராயத்தைப் பெறுவார்கள். அது அவளுக்கு சாதாரணமான இயக்கம். கருப்பு அல்லது வெள்ளை: அன்பு அல்லது வெறுப்பு.
3. அலெஹண்ட்ரோ
புயல் வீசவேண்டுமென்று நான் விரும்பிய போது புயல் வீசியது. காதலில் எவரேனும் என்னை வளைத்துப் போட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டால் அது நடக்கக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்தது. அலெஹண்ட்ரோ தான் ஒரு குழந்தை அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை முன்னெடுத்தான். அலெஹண்ட்ரோவுக்குள் மூழ்கிவிட விரும்பினேன். அங்கே எதை கண்டறிவேன் என்று தெரியாத போதும், எங்களுக்குள் குதித்து விடவே விரும்பினேன். நாங்கள் ஓர் உடன்பாட்டுக்கு வந்தோம். அது முதற்கொண்டு அவனுடைய அபிப்ராயங்களைப் போலவும், சக பணியாளர்களைப் போலவும், பணி அமர்த்துபவர்களைப் போலவும், என்னையும் அவன் கழற்றி விடக்கூடும் என்று உணர்ந்தேன். சில பேர் அப்படித்தான். இல்லையா? நம் வாழ்க்கைக்குள் வந்து, திடீரென்று போய்விடுவார்கள். அப்படித்தான் அலெஹண்ட்ரோ எங்கு இருக்கிறான் என்று தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டான்.
4. பிரிகிடா
நான் எழுதத்தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் , நான் தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நபர் இருக்கிறார். அந்த நபர் பிரிகிடா. என் தாய். அவளுடைய பதின் பருவத்தின் தொடக்க காலத்தில்நிகழ்ந்த ஒரு சம்பவம் அவளை மனநீதியாக அச்சுறுத்தி விட்டதால் எப்போதும் கொந்தளிக்கும் பதற்றபீதியிலேயே இருப்பாள். தனி ஒரு நிகழ்வு இப்படித்தான் ஒரு நபரைப் பாதிக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். அது நஞ்சாகத் திரண்டு அப்படியே இருந்து, மெல்லக் கசிந்து மெதுவாக வேலையைக் காட்டும். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் அரசியலில் தீவிரமாக இருந்த அவள், புதிய இயக்கங்களில் சேர்ந்து, கல்வி கற்று, போதையைப் பழகி, லிஃப்ட் வாங்கியே ஐரோப்பாவைச் சுற்றி, கிடார் வாசித்து, கிராமிய ராக் இசைக் குழுவில் பாடி,பலவாறு வாழ்ந்திருக்கிறாள். அவள் “ மெய்யாலுமே அனாவசியமான் யுத்தம் என்று வியட்நாமைப் பற்றியும், எல்லாவற்றையும் ஏன் அவர்கலெ தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக் எதேச்சதிகாரத்தைப் பற்றி, கார்கள் துர்நாற்றம் அடிக்கின்றன என்று சுற்றுச்சூழல் பற்றியும் பேசுவாள். வெற்றி பெறுதல், போட்டியிடல் என்ற அண்பதுகளின் சித்தாந்தம் அவளுக்கு ஒத்துவரவில்லை. மேற்குலகினர் வரையறுத்த தனிநபராக அவள் இருக்கவில்லை. கடசி வரை அவளுடைய மூச்சு பதற்றமாகவே இருந்தது. இறுதியாக அந்த பதற்றபீதி அவள் உடலை விட்டு நீங்கியது. நான் அருகிலிருக்க அவளுடைய உயிர் போனதை உணர்ந்தேன். ஒரு வழியாக அவளுக்கு எல்லாவற்றிலிருந்தும் விடுதலை என்று நினைத்துக் கொண்டேன். Detailing is not a form of storytelling என்ற பழைய சித்தாந்தத்தை முறியடிக்கும் இந்த வகையான நாவல்கள் தமிழில் மிகக்குறைவு . அதனால் தமிழ் வாசக பரப்பில் இது சில திகைப்புகளை உருவாக்கக்கூடும். உலகின் பிற மொழிகளில் நாவல் வடிவமும், கதை கூறல் முறையும் எந்த திசைகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை அறிய இத்தகைய மொழிபெயர்ப்புகள் நமக்கு உதவுகின்றன.
இந்த நாவலை முடிக்கும் போது கதைசொல்லி அவளது நெருங்கியத் தோழியான சால்லியின் குரலில் “சீக்கிரமே காலம் போய்விடும். எனவே வாழ்க்கையை முடிந்த அளவுக்கு அனுபவித்துவிடவேண்டும்” என்று சொல்வார். இந்த நாவலை படித்தவுடன் ” நாம் வாழ்க்கையில் இருக்கிறோமா அல்லது அனுபவிக்கிறோமோ ” என்ற கேள்வி நம்முள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. இதுவே இந்நாவலின் வெற்றியெனக் கொள்ளலாம்.
தேஜூ சிவன் – சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்.
௦௦௦
தீடை
கவிஞராக நன்கு அறியப்பட்ட ச.துரை, தொடர்ச்சியாகச் சிறுகதைகளும் எழுதி வருகிறார். அவை தொகுக்கப்பட்டு “தீடை” என்கிற தலைப்பில் சிறுகதைப் புத்தகமாக வெளியாகியுள்ளது. துரை எழுதக்கூடிய கவிதைகளில் கடல் சார்ந்த படிமங்கள் தொடர்ச்சியாக ஒரு பெருமழையின் தடித்த நீர்த் துளிகள் போல் கொட்டிக் கொண்டிருக்கும். அவரது சிறுகதைகளிலும் இதே இயல்பைப் பார்க்க முடிகிறது. துரையை ஒரு கதை சொல்லி என்று வகுக்கலாம், கதைகளைத் தன்பார்வையிலிருந்து சொல்லிச் செல்கிறார். நினைவுகள் ஊடாக பால்யத்திற்குள் கரைந்து அங்கிருந்து கதா மாந்தர்களை அகழ்ந்து எடுத்து நெய்தல் நிலத்தில் புதிர்த் தன்மையான கதா மாந்தர்களின் விசித்திர சிக்கல்களை முதிர்ந்த இளைஞனின் பார்வையில் சொல்கிறார். திரும்பத் திரும்பக் கடல் ஒரு புதிர்த் தன்மை கொண்ட விவரிக்க இயலாத அன்பு, பயம், வெறுப்பு கொண்ட வஸ்துவாக இருக்கிறது. அதனால் அவரால் கடலுக்கு இரத்தத்தை உருவாக்கிப் பார்க்க இயல்கிறது. கடல் மீது வசீகரமான மர்மம் ஒரு விருப்பத்திற்கு உரிய பொருளாகத் துரையின் கதை உலகில் இருக்கிறது. கடலின் கரையிலிருந்து கடலைப் பார்ப்பதற்கும் கடலின் உள்ளே இருந்து கடலைப் பார்ப்பதற்கும் இடையில் இருக்கக்கூடிய நுண்ணிய வேறுபாட்டை இக்கதைகளில் காணலாம். கரையிலிருந்து கடலின் உள்ளே சென்று மீண்டு வரும் கதா மாந்தர்களை வசீகரமான மர்மத்துடன் அவர்களது சாகசங்களைக் குற்ற உணர்வுகளை வாழ்க்கையின் மீதான பிடிப்பைக் கதைகளில் தொடர்ச்சியாக உருவாகி வருவதைப் பார்க்க இயல்கிறது. துரைக்கு அனைத்து மனிதர்களையும் பிடிக்கின்றது, அவர்களது எதிர்மறையான குணங்களைக் கூட வெறுப்பில்லாமல் கனிவாக அணுக இயல்கிறது. உணர்வுகள் ஒரு மனிதனில் மெல்ல மெல்லத் தாக்கம் செலுத்தும் இரசாயன மாற்றத்தை, மிக விலாவாரியாக நிதானமாகச் சொல்ல இயல்கிறது.
வாசோ கதையில் வரும் கதைசொல்லி, மாலினிக்காகத் தன்னை ஓநாயாகக் கற்பனை செய்து, அவளது அம்மாவைக் கடித்துக் கொன்றதற்காக வருந்தும் மனநிலையை அடைகிறான். அந்தச் சிறுமியின் பரிசுத்தமான முகத்திற்கு முன்னால் அவனால் வாதிட முடியவில்லை; அவள் அளித்த சாபத்தை முற்றாக ஏற்றுக்கொண்டு அவளது அம்மாவின் இறப்புக்கு தானே காரணம், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்க ஆரம்பிக்கும் ஓர் சிதைவில் விழுந்து விடுகிறான். துரையின் கதைகளில் தென்படும் கதா மாந்தர்கள் கதை சொல்லியிடம் ஏற்படுத்தும் ஒரே தாக்கம், விதம் விதமான குற்ற உணர்வுகளின் வெவ்வேறு வடிவங்களாக இருக்கின்றன என்றும் தோன்றுகிறது. இந்த குற்ற உணர்வுகளைக் கதை சொல்லி மிகுந்த வாஞ்சையுடனும் களங்கம் இல்லாத உணர்வுடனும் எதிர்கொள்கிறான். ஒரு பெரிய கடல் அனைத்து மாசையும் தானே உள்ளிழுத்துக் கொள்வது போல, கதை சொல்லி அனைத்து சங்கடங்களையும் விழுங்கிக் கொள்கிறான், அனைத்திற்கும் தானே காரணம் என்பது போலச் சஞ்சலம் கொள்கிறான். அவனுக்குத் தொந்தரவு கொடுத்த மனிதர்களை மன்னிக்கிறான். இக்கதைகளின் வசீகரமே, கதை மாந்தர்கள் அடையும் குற்ற உணர்வுகளைக் கதை சொல்லி எதிர்கொள்ளும் விதம் என்றே தோன்றுகிறது. கடல் சார்ந்த வாழ்க்கை ஒவ்வொரு எழுத்தாளர்களால் எழுதப்பட்டாலும், துரை எழுதும் கடல், கடலை அண்டி வாழும் மாந்தர்களும் இதுவரை நாம் பார்த்திராத தன்மையில் உள்ளன. ஆனால் கடல் வாழ்க்கை சார்ந்த நுண்மையான சித்தரிப்புக்கள் வழியாக உருவாக்கி அளிக்கும் நிலப்பரப்பும், உணர்வுகளும் இக்கதைகளை நம் அருகே புதுமையுடன் வைத்திருக்கின்றன. துரையின் கதைகளைப் படிக்கும் போது கோணங்கியின் புனைவுலகம் மெல்ல நினைவு வருவதையும் தவிர்க்க முடியவில்லை, ஆனால் துரை தன் கவிதைகளில் தெறிக்கும் அதே மொழியைப் புனைவில் வசீகரமாகக் கையாள்வது பல சமயங்களில் ஒரு பெரிய கவிதையைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இது உரைநடையில் நிகழும் மற்றொரு நேர்த் தன்மை கொண்ட விஷயமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
அனோஜன் பாலகிருஷ்ணன் – எழுத்தாளர்