
எங்கிருந்தோ வந்த சப்தம் இரவின் அமைதியில் துல்லியமாயிருந்தது. “தட், தட், தட். ” கடப்பாரை சுவரை இடிக்கிறது. இறுகக் கட்டிய செங்கற்கள் சரிகின்றன. நயூம் உற்றுக் கேட்டார். முதலில், தன் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பழைய கடிகாரம்தான் திடீரென உயிர்த்து ஒலிக்கிறது என்று நினைத்தார். சீரான இடைவெளியில் ஒவ்வொரு நொடியும் ஓசை எழுகிறது. அல்லது மேசையில் பழுது நீக்கக் கிடத்திய கடிகாரம் மீண்டும் துடிக்கிறது. ஆனால் தூங்கப் போகுமுன் கடிகாரங்களை கவனமாக அணைத்திருந்தார். கைபேசியையும் மௌனமாக்கியிருந்தார். அனேகமாக அது மூலையிலுள்ள பயாஸின் வீடு இடிபடும் சப்தம்தான். அவர்தான் வீம்புக்காக வீட்டு முன்புறத்தையும் பக்கவாட்டையும் கடைசிவரை அகற்ற மறுத்தார். மேற் பூச்சு, செங்கல், இடையிலுள்ள சாந்து எல்லாமும் துகள்களாக விழுவதை ஊகிக்க முடிந்தது. அவை தன் பிரமை என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தது. வெளிக் கதவோரம் புரண்டு படுத்தார். பயாஸ் வீட்டுடன், அன்வரின் கடைசி அடுக்ககம், பொன்னுசாமியின் பக்கத்து மூன்று மாடிகளும் சேர்ந்து மெதுவாக சிதைகின்றன. எல்லா ஓசைகளும் கலவையாகக் கேட்டன. ஒரு கணமும் ஓயவில்லை.
நயூம் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். எப்போது வேண்டுமானாலும் கடை இடிபடலாம் என்று வதந்தி உலவியதால் சில நாட்களாக இரவுகளையும் இங்கு கழிக்கிறார். பகல்களில் வெறுமனே புழங்கினாலும் திடீரென விழித்தால் அன்னிய இடத்தில் அடைபட்டதாகத் தோன்றுகிறது. அரையிருட்டுக்குக் கண்கள் பழகின. சுவரின் கண்ணாடி அலமாரியில் மாட்டப்பட்ட புது கடிகாரங்கள் பளபளத்தன. சின்னதும் பெரிதுமான கூரிய முட்கள் நிலைகுத்தியிருந்தன. அனைத்து கடிகாரங்களையும் ஓடாமலாக்கியிருந்தார். காலம் உறைந்தாற்போலிருந்தது. பழமைக்கு மாதிரியாக வைத்த கடிகாரப் பெண்டுலம் அசையாமல் தொங்கியது. மூடிய கடைக்குள் ஒவ்வொரு மணிக்கும் ஒலித்து தூக்கத்தைக் குலைக்குமென நிறுத்தியிருந்தார். இரவில் உரக்க அடித்து எதிர்கால அச்சங்களைக் கிளறும். பகலிலிலும் எந்த வேலையிலிருந்தாலும் அவரையறியாமல் மனம் எண்ணும். ஒரு முறை கூட கணக்கு தப்பியதில்லை. நிமிர்ந்தால் நேரம் துல்லியமாயிருக்கும். கடைக்குள் வழக்கமாகக் கேட்கும் பெண்டுல அசைவொலி, வினாடி ஒசை எதுவுமில்லை. சரியான நேரத்தை ஊகிக்கவும் முடியவில்லை. கைபேசியை மேசை மேலிருந்து எட்டி எடுத்தார். இன்னும் விடிவதற்கு நீண்ட நேரமிருந்தது. கண்களை மூடி உறங்க முயன்றார்.
கடிகாரக்கடை தொடங்கப்பட்டது நயூமுக்குத் தெரியாது. இங்கு அப்பா முதலில் வாடகைக்கிருந்தார். பள்ளி இந்திப் பண்டிதர் ராம்பிரசாத் உபாத்யாயாவின் இல்லம். இன்னும் அந்தப் பெயரில்தான் மின்சார இணைப்புள்ளது. அவர் சொந்தப் பிரதேசத்துக்குத் திரும்புகையில் விற்றுவிட்டாராம். அப்போது அருகிலுள்ள ஆற்றில் இறங்கிக் குளிப்பார்களாம். கீழே மீன்களும் மணலும் தெளிவாகத் தெரியுமாம். கரையிலுள்ள கல்லில் பெண்கள் துணி துவைப்பார்களாம். அப்பா காலையில் வேட்டியைக் காய வைத்தபடி வீடு திரும்பும் காட்சியை மறக்க முடியாது. அது உண்மையில் ஏரிக்கு வடிகாலாக அமைந்த கால்வாய். தூரத்து மலையிலிருந்து காட்டாறு குதித்துவந்து ஓர் ஏரியை அடைகிறது. பிறகு மற்றொரு ஏரிக்கு வருகிறது. அங்கிருந்து அருகிலுள்ள இன்னொரு ஏரியை நிரப்புகிறது. உபரி நீர் வழிந்து, இரயில் பாதைக்கு அடியில் நுழைந்து, தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, நகருக்குள் ஊடுருவி பெரியாற்றில் சங்கமிக்கிறது. “இது வெறுங் காவா இல்ல, பெரிய ஆறு. நாங்க சின்னாறுன்னு கூப்புடுவோம்” என்பார் பொன்னுசாமி. கீழே மணல் படுகை ஆழமானது. ஆற்றையொட்டி குழி தோண்டினால் நீர் சுரக்கும். “தண்ணி கையெட்டும் தூரத்துல கெடைக்கும். அப்படியே அள்ளிக் குடிக்கலாம். இளநி மாதிரியிருக்கும்” பொன்னுசாமி சொல்கையில் சிறுவரின் குதூகலம் பொங்கும். நீண்ட காலத்தில் கட்டடங்கள் தோன்றி ஆற்றை ஆக்கிரமித்தன. “இது கண்ணெதிரில சுருங்கி சாக்கடையா ஓடுது. அப்புறமா காணாமக் கூடப் போயிடும்” என்பார் குரல் கம்ம. கொஞ்சம் நேரம் பொழுதுபோக்கிவிட்டு செல்வார். நயூம் கடிகாரத்தில் மூழ்கிய பாவனையிலிருப்பார்.
ஏரிக் கால்வாயில் நீரோடி நயூம் பார்த்ததில்லை. கன மழை பெய்தாலும் கடைசி ஏரி நிரம்பாது. உயர்ந்த கரைகள் இல்லை. அதில் புற நகரின் கழிவு நீர்க் கால்வாய்கள் கலந்தன. ஏரி பெரும் சாக்கடைத் தேக்கமானது. அலைகள் கறுத்து கரைகளில் மோதின. ஆனால் வானம் மட்டும் நீலமாகப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள் பசுமையாகக் கவிந்திருந்தன. வெண்மை மங்காமல் கொக்குகள் சரணாலயமாகக் கருதி வாழ்ந்தன. ஓரமாக குடிசைகள் வரிசையாக எழுந்திருந்தன. அவற்றில் வசிப்பவர்களுக்கு நாற்றம் பழகிவிட்டது. சாக்கடை வெள்ளம் பெருகி உபரி நீர்க் கால்வாயில் ஓடும். வழியில் கிளைச் சாக்கடைகள் கலக்கும். எப்போதும் சாலைத் தெரு கால்வாய் வற்றாது. ஈகை நாளில் ஆடு மாடுகளின் ரத்தத்தால் சிவக்கும். கடிகாரக் கடை வாசலில் கசங்கிய கதராடையும் திருநீறுடனும் அவ்வப்போது வரும் வாடிக்கையாளர் உட்கார்வார். உப்பு உர மூட்டைப் பையில் தைத்த சந்தை சாமான்களால் உப்பிய கைப்பைகளை கீழே வைப்பார். பழைய கைக்கடிகாரத்தை வளையலைப்போல் கழற்றுவார். “அடிக்கடி நிக்குது பாய். விடிகாலைல கொல்லைக்குக் கெளம்ப நேரம் கூட தெரியறதில்ல.” கடிகாரப்பட்டை நீங்கிய மணிக்கட்டு வெளிர்ந்திருக்கும். அந்த சிடிஸனுக்கு தினம் அளவாக சாவிகொடுக்க வேண்டும். நயூம் திருகித் திறந்து பார்க்கையில் அவர் கால்வாயில் கண்ணோட்டமிடுவார். “இங்க கீழ ஆறு ஓடுது. இதுவெல்லா மறைஞ்சதால பெரியாறு வத்துச்சு. வெள்ளாமைக் கொறைஞ்சுச்சு” என்பார் பெருமூச்சுடன்.
அன்று நெடுநேரம் கடிகாரத்தை நோக்கிக் குனிந்ததில் நயூமுக்கு கழுத்தும், கண்ணும் வலித்தன. நிமிர்ந்தால் வானத்தைக் காட்டிலும் கால்வாய்தான் உடனே கண்ணில் படும். ஒற்றைக் கண்ணில் இடுக்கிய குழியாடி பெருக்கிக் காட்டியது. கால்வாய் கடக்க முடியாத அளவுக்கு வளர்ந்திருந்தது. கழிவுநீர் கருமையாகப் பளபளத்தது. காற்றுக் குமிழ்கள் பிரம்மாண்டமாகத் தோன்றின. வழக்கமாக ஓடும் சாக்கடை பூரித்து நிதானமாக நகர்ந்தது. குழியாடிக் குப்பியைக் கழற்றினார். சிறிது நேரம் பார்வை குழம்பியது. எவையோ கால்வாயில் ஊர்ந்தன. திமிங்கில முதுகுகளைப்போலிருந்தன. கசங்கிய பாலிதின் பைகள்தான் மிதந்தன. பேருந்து நிலையத்திலிருந்து அடித்து வந்திருக்கலாம். அவற்றை பயணிகளின் பெருங் கூட்டம் அலட்சியமாக வீசியிருக்கும். ஒருமுறை சிறுவடிவ மாதிரிக் கப்பல் நீந்தி வந்தது. யாராவது விளையாட்டுப் பையன் வெள்ளோட்டம் விட்டிருக்கலாம். பாய்மரத்தில் காற்று மோதி அசைத்தது. சாலை மதகின் இருட்டில் புகுந்து மறைந்தது. அது மூழ்காமல் ஆற்றை அடைய வேண்டிக்கொண்டார் நயூம்.
மீண்டும் வேலையில் ஆழ்ந்தார். அது பழமையான ஆளுயுர கடிகாரம். எப்போதாவது அதிசயமாக தேடி வரும். குடும்ப பாரம்பரியத்தை காக்க நினைத்து ஒருவர் தந்திருந்தார். அக்கால நவாப் வம்சத்தை சேர்ந்தவர். அவர் புதிதுபோல் மெருகேற்றி ஓடவிட்டு வரவேற்பறை மூலையில் வைப்பார். “பழமையின் ஒரு துளி போதும், புதுமையை பன்மடங்கு உயர்த்திக்காட்ட” என்றார் கஸல் பாடலைப்போல் உருதுவில். ஏராள நுண்ணிய பற் சக்கரங்களையும், திருகாணிகளையும், ஜுவல்களையும் கழற்றிப் பாதுகாப்பாக டப்பாவில் மூடினார் நயூம். ஒரு பல்லும் உடையவில்லையென்பது ஆறுதல். நிறைவுடன் கண் குழியாடியை நீக்கிவிட்டு நிமிர்ந்தார். அவரால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியுடன் கடைக்கு வெளியில் சென்றார். எதிரில் சாக்கடைக் கால்வாய் விளிம்பு வரை உயர்ந்திருந்தது. அதன் நீர்மட்டம் கணந்தோறும் அதிகரித்தது. கொஞ்ச நேரத்தில் மதகு அடைத்துக்கொண்டது. கால்வாயில் கழிவு நீர் புக முடியவில்லை. சாக்கடை பல்கிப் பெருகியது. கால்வாயின் சிமெண்டுக் கரைகளைக் கடந்தது. ஆற்றை ஆக்கிரமித்துப் போட்ட நடை பாதையில் பரவியது. ஆட்கள் போக வர வழியில்லை. எங்கும் அழுகிய குப்பை, உணவு, மலம் கலந்த நாற்றம் வீசியது. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை. அனைவரும் வீடுகளிலும் கடைகளிலும் அடைந்திருக்க இயலாமல் வெளிப்பட்டார்கள். குச்சிகளாலும் கம்பிகளாலும் சாக்கடையைக் கிளறினார்கள். ஒருவர் கடப்பாரையால் மதகுக் கண்ணைக் குத்தினார். மற்றவர்கள் மூக்கைப் பொத்தி வேடிக்கைப் பார்த்தார்கள். கை வண்டியில் துணி விற்கும் பாய் நீண்ட இரும்பு வாரியை தேடியெடுத்து வந்தார். அவர் சாலை சந்தில் எப்பிரச்சினையானாலும் முதல் ஆளாக நிற்பார். பாலத்தின் அடியில் அடைத்துள்ளவற்றை வார முயன்றார். கழிவு நீர் சிறிது வெளியேறியதும் மறுபடியும் வழி மூடிக்கொண்டது.
நகராட்சியின் குப்பையள்ளும் வாகனம் வந்து நின்றது. அதற்கு யாராவது தகவலளித்திருக்கலாம். பின்புறமிருந்து காக்கியுடை அணிந்த பணியாளர்கள் குதித்தார்கள். முன்பக்கமிருந்த அனுபவம் வாய்ந்த ஊழியர் பார்வையிட்டார். ஒரு கணத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டார். உடனே கைபேசியை எடுத்து விளக்கினார். பிறகு “இத அள்ளறதுக்கு ஜேசிபி வண்டிய கேட்டிருக்கேன். அதிகாரிங்க ஒத்துக்கவேயில்ல. அது வரும்னுதா நெனைக்கிறேன்” என்றார் சலிப்புடன். நீண்ட நேரம் கழித்து கனத்த இயந்திரம் ஊர்ந்து வந்தது. உச்சியில் இளைஞன் சிரித்தபடி ஓட்டினான். நகரின் கழிவு நீர் முழுவதும் சாலைத் தெருவில் தேங்கியிருந்தது. சாலையின் மீதும் ஓடத் தொடங்கியது. இரு புறமும் பொறுமையில்லாத வாகனங்கள் ஒலியெழுப்பிக் காத்திருந்தன. முதலில் இயந்திரம் சாக்கடையை முகர்ந்து பார்த்தது. கால்வாய் அடியாழத்திலிருந்து ஒரு கையள்ளி வெளியில் போட்டது. நயூம் ஆவலுடன் எட்டிப் பார்த்தார். வெண்மையான மணலும் கூழாங்கற்களும் கலந்திருந்தன. ஓரிரு நுண் சங்குகள் கூட தென்பட்டன. “இது வெறுங் கால்வாயில்ல. ஆறு பிறவிக் குணத்தைக் காட்டிடும். சீக்கிரமா காலி பண்ணி வேற வேலைக்குப் போண்ணு வாப்பா சொன்னது சரிதா” என்று தனக்குள் முணுமுணுத்தார். இதை வீட்டுப் பிள்ளைகளுக்கும் சொல்லவேண்டும்.
இயந்திரக் கரம் நீண்டு மதகுக் கண்ணைக் குடைந்தது. அங்கிருப்பவற்றை அள்ளி குப்பை வாகனத்தில் கொட்டியது. பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாத்திரங்களும், குடிநீர் பாட்டில்களும் குன்றாகக் குவிந்தன. ஓர் உடைந்த சுவர்க்கடிகாரம் கூட அகப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் கை நழுவி விழுந்தது. இன்னும் மட்காமல் அப்படியேக் கிடந்தது. அனைத்திலும் கறுத்த பிசினைப் போல் சாக்கடை ஒட்டியிருந்தது. மேலிருந்து கரிய நீர் வழிந்தது. நிறைந்த குப்பை வாகனம் சொட்டியவாறு சென்றது. நயூமின் காதில் பயாஸ் கிசுகிசுத்தார். “அத அப்படியே பெரியாத்துல போய் கொட்டுவாங்க. அவங்களுக்கு வேற வழி தெரியாது.” நாலைந்து நடை சகதியை அள்ளிய பிறகு சாக்கடைக் குழாய் திறந்தது. மெல்லக் கழிவுநீர் நகர்ந்தது. மீண்டும் கால்வாய் ஓடத் தொடங்கியது. கரைகளில் கறுத்த சேற்றுக் குப்பல்கள் மீந்திருந்தன.
திடீரென நீண்டகாலம் கழித்து மழை பெய்தது. மேகம் வெடித்ததைப்போல் கொட்டியது. நயூமால் கடைக்குப் போகாமலிருக்க முடியாது. இன்னும் வீடுகளில் கடிகாரம் அத்தியாவசியப் பொருள். அதைப் பார்த்துதான் காலத்தைக் கடத்துகிறார்கள். அவருக்கும் கடிகாரமில்லையானால் வாழ்க்கை ஸ்தம்பிக்கும். அவர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். மழைக்கோட்டை மீறி தூறல் விழுந்தது. தெருக்களில் ஓடைகள் ஓடின. வாகன முன் சக்கரம் நீரைக் கிழித்துப் பாய்ந்தது. கோயிலருகில் சாலையை மீறி கிளை ஆறு பெருக்கெடுத்தது. அது ஓர் எச்சரிக்கை. அவர் துணுக்குறலுடன் தொடர்ந்தார். பேருந்து நிலையம் முழுக்க நீர் நிறைந்திருந்தது. அதுவும் ஆதியில் ஏரியாயிருந்து அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். பேருந்துகள் வெளியில் நின்று பயணத்தைத் தொடர்ந்தன. மீண்டும் வந்த வழியில் திரும்பி மற்றொரு சாலையில் சென்றார். அங்கும் கால்வாய்க்கு மேல் ஆறு போல் நீரோடியது. முன்னால் வாகனங்கள் நிற்காமல் நீரை விசிறியபடி விரைந்தன. அவர் வியப்பு தீராமல் பின்தொடர்ந்தார். இன்னொரு மேடான சாலைக்கு வந்தார். அதிலிருந்து வேறொரு சாலையில் புகுந்தார். திருப்பத்திலேயே வாகனத்தில் திகைத்து நின்றார். சாலையிலுள்ள இரு கால்வாய்களிலும் நீர் பாய்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலைகள் சாலையைக் கடந்தன. சாலை தாழ்ந்து குளம் போலிருந்தது. எதிரிலுள்ள முக்கியமான வங்கியைத் திறக்கவும் முடியவில்லை. இதுபோன்ற பெரு வெள்ளத்தை நகரம் ஒருபோதும் சந்தித்திருக்காது.
நயூம் வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார். பாதி சக்கரங்கள் நீரில் அமிழ்ந்தன. சிறிது தூரத்தில் நீர் மட்டம் உயர்ந்தது. மதிய சாப்பாட்டு பை, கால் வைக்குமிடம், இருக்கை, கண்ணாடி, இரு சக்கரங்கள் மூழ்கின. முழு வாகனமும் நீரில் மறைந்தது. வெள்ளத்தின் வேகத்தால் இழுபட்டு தத்தளித்தது. அவருக்கு மூச்சுத் திணறி இறப்போமென்ற பயம் எழுந்தது. அதை அறியாமல் மற்றவர்கள் சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்தார்கள். வாகனம் ஊறி ஓய்ந்து நின்றது. இறங்கி வெளியில் நீட்டிய கைப்பிடிகளைப் பிடித்துத் தள்ளினார். வாகனத்துடன் நீந்தி மேட்டுக்கு வந்தார். சாலையில் சொட்டியபடி நடந்தார். சற்று தூரத்திலுள்ள சாலைத் தெருவை அடைந்தார். புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளத்துக்குப் பயந்து சுற்றி வளைத்துப் பயணித்ததில் நெடு நேரமாகிவிட்டது. அப்படியும் வாகனம் பழுதானது.
எதிரில் குடைகள், மழைக்கோட்டுகளுடன் கூட்டம் கூடியிருந்தது. பெண்கள் கவலையுடன் பர்தாவுமில்லாமல் முன்கூரைகளின் கீழ் நின்றிருந்தார்கள். “நீ பேசாம வீட்டுல கெடந்திருக்கலாம். எதுக்கு வேலையுமில்லாம வந்த?” பொன்னுசாமி வரவேற்றார். பயாஸ் “தீர்ப்பு நாள் வந்திட்ட மாதிரியிருக்குது” என்றபடி வாகனத்தை நிறுத்த உதவினார். நயூமால் நம்ப முடியவில்லை. சாலைத் தெரு நிறைய நீரோடியது. தூரத்திலுள்ள காட்டாறு இறங்கி வந்தாற்போலிருந்தது. அலைகளுடன் நுரை பொங்க பழுப்பாகப் பாய்ந்தது. கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் எழுந்தது. பசும் செடிகொடிகள் வேரோடு புரண்டு சென்றன. மதகின் மேலேறி சாலையைக் கடந்து கால்வாய் மீண்டும் தன் பாதையில் ஓடியது. முன்பு தெருவில் சாக்கடை அடைத்து தேங்கியதற்கு பதில் இப்போது நீர் சூழ்ந்துள்ளது.
அண்டை மாநிலத்தில் உற்பத்தியாகி வரும் பெரியாறு கரைபுரண்டோடியது. அங்கங்கே கட்டப்பட்ட எண்ணற்ற சிறிய தடுப்பணைகளைத் தாண்டியிருந்தது. பெரு அணைகளையும் கடந்திருந்தது. கிளை ஆறுகளும் பெருக்கெடுத்திருந்தன. சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. கால்வாய்களில் நீர் பாய்ந்துகொண்டிருந்தது. அவை ஏற்கெனவே நிறைந்த பெரியாற்றில் கலந்துவிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. நகரெங்கும் நீர் பரவியது. தாழ்ந்த வீடுகளிலும் கட்டடங்களிலும் புகுந்தது. குடிசைகளை அடித்துச் சென்றது. அனைவருக்கும் அச்சமுண்டானது. மழை தொடர்ந்தால் நகரம் மூழ்கும் என்று தோன்றியது.
நயூம் கடையைத் திறந்துவிட்டு வெளியில் நின்றார். உள்ளே செய்வதற்கு ஏதுமில்லை. ஏரிக் கால்வாயில் நீர் தெளிந்து ஓடியது. சாக்கடையின் தடயம் சிறிதுமில்லை. அதன் நடையும் பாவனையும் மாறிவிட்டன. படிகளைத் தொட்டுச் சென்றது. அவர் கால்களில் அலைகள் மோதின. சில அங்குலம் உயர்ந்தால் கடைக்குள் புகும். பழைய, புதிய கடிகாரங்களைக் கண்ணாடிக் கதவுள்ள காட்சி அலமாரியில் அடைத்திருந்தார். பெட்டிகளையும், நாற்காலிகளையும் மேசை மேலேற்றியிருந்தார். விலையுயர்ந்த சிறு மின்கலங்களை இழுப்பறையில் பூட்டியிருந்தார். அனைத்தையும் மறந்துவிட்டு கால்வாயைக் கண்டார். மீன்கள் கூட்டமாகத் தவழ்ந்தன. அவற்றுக்கும் அடியிலுள்ள மணலுக்கும் வித்தியாசம் புலப்படவில்லை. சாக்கடைக் கால்வாயை ஆறுதான் என்று நிச்சயித்துக்கொண்டார். தினமும் கடைக்கு வந்து வீணாகக் காத்திருந்தார். சில நாட்களில் மழை நின்றது. பெரியாறும், கிளை ஆறுகளும் தணிந்தன. நகரில் வெள்ளம் வடிந்தது. கால்வாய் பழையபடி மாறியது. அதில் மீண்டும் கறுத்த சாக்கடை ஓடியது. பெரியாற்றில் தொடர்ந்து கலந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல் அன்றும் நயூம் கடையைத் திறந்தார். சுவரில் ஒட்டப்பட்டிருந்த வரைபடம் கண்ணில் பட்டது. ஏரியில் துவங்கும் கால்வாய் வளைந்து நெளிந்து ஆற்றை அடைவதைக் காட்டியது. அனைத்து ஆக்கிரமிப்புகளும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தன. அவருடைய கடையின் பெரும்பகுதியும் கால்வாயிலிருந்தது. அது ஆற்றுப் புறம்போக்கு என்று முன்பே கேள்விப்பட்டிருந்தார். மீதியுள்ள இடம் மட்டும்தான் தனக்கு சொந்தமானது. அரசு ஆவணங்கள் அவ்வாறுதான் தெரிவித்தன. இப்போதுதான் அவருக்கும் உறுதியானது. இவ்வளவு நாட்களாக ஆற்றில் வாழ்ந்து வருகிறோம். அதற்கு அப்பா உரிய விலை தந்திருக்கிறார். அவர் தெரிந்தோ தெரியாமலோ கால்வாய் இடத்தை சேர்த்து வாங்கியிருக்கலாம். எதிர்காலத்தில் யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் நினைத்திருக்கலாம். பேருந்து நிலையத்தின் அருகில் கால்வாய் ஓடி வருகிறது. வழியிலுள்ள உயர்தர தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிலையங்களை அப்புறப்படுத்தியாக வேண்டும். திருப்பத்தில் பயாஸின் மாடி வீடு முக்கால் பாகம் அடைத்துள்ளது. பொன்னுசாமியின் அடுக்ககம் பாதியளவு கரைக்குள் நிற்கிறது. அன்வரின் கண்ணாடிகள் அலங்கரித்த வளாகத்தின் நீண்ட முன்பகுதியும் ஆற்றிலிருந்தது. அனைத்தையும் போக்க சுவரொட்டி எச்சரித்தது. சாலையைத் தாண்டி வரிசையாக குடிசைகளில் பலர் வசித்தார்கள். அவர்களும் உடனே காலி செய்தாக வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் சுவரிலிருந்து கால்வாய் வரைபடத்தை பிடுங்கினார். கையோடு சுலபத்தில் வந்தது. அண்டைக் கட்டடங்களுக்கு சென்றார். மூலை வீட்டுக்குப் போனார். தூரத்திலுள்ள குடிசைகளுக்கும் போய் பார்த்தார். எல்லா இடங்களிலும் வரைபடம் ஒட்டியிருந்தது. சில சுரண்டிக் கிழித்தெறியப்பட்டிருந்தன.
ஆறு மீட்பு குழுதான் நீதிமன்றத்தில் ஆறு ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. அதன் தலைவர் வடிவேல் தினமும் ஏரிக் கால்வாயில் நடந்து வந்தார். அதில் வசிப்பவர்களிடம் விளக்கினார். “உங்க நல்லதுக்குதான் கேக்குறோம். இது தண்ணி ஓடற இடம். தயவுசெஞ்சு காலி பண்ணுங்க.” அவர் தன் சொந்தப் பிரச்சினையைப்போல் எண்ணுவது அவர்களின் மனதைப் பாதித்தது. ஆனால், பலர் மிஞ்சும் குறுகிய இடங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். சிலர் அசட்டுத் துணிச்சலுடன் எதிர்த்தார்கள். “நீங்க யாரு கேக்கறதுக்கு? இது காலங்காலமா வாழுற பூமி. நாங்க போக மாட்டோம்.” கால்வாயிலுள்ள தடைகளை அகற்ற நீதி மன்றம் கெடு விதித்தது.
குறித்த நாள் அதிகாலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கட்டுமான இயந்திரம் இரும்புக் கரத்தை உயர்த்தியபடி சந்தில் புகுந்தது. அதைக் கண்டு சாலைத் தெருவாசிகள் நடுங்கினார்கள். உள்ளே நுழையவிடாமல் தடுத்தார்கள். குடிசைவாசிகள் குனிந்து வணங்கினார்கள். அதனிடம் “எங்க இடத்த அழிக்காதீங்க” என்று அழுதார்கள். இயந்திரத் துப்பாக்கியில் விரல் வைத்தபடி காவலர்கள் அணிவகுத்து வந்தார்கள். பின்னால் பல துறையைச் சேர்ந்த பல்வேறு அரசாங்க அலுவலர்கள் தொடர்ந்தார்கள். நயூம் திகைத்து நின்றார். என்ன செய்வதென குழம்பினார். முதலில் உபகரணங்கள் அடங்கிய மேசை இழுப்பறையை மூடினார். கடையை இயந்திரம் அடியோடு அழிக்குமென பயந்தார். உள்ளேயுள்ள பொருட்களையெல்லாம் வாரி எடுத்துப்போய்விடும். அதற்கு கடிகாரங்களுக்கும் செங்கற்களுக்கும் வித்தியாசம் தெரியாது. பல்லாண்டுகளாக சேர்ந்துள்ள நுண் பொருட்கள் பாழாகும். அவருடைய கடிகாரங்கள் நிரந்தரமாக நிற்கும்.
கடைக்குள் நயூம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். வடிவேல் அருகில் வந்து தோளைத் தொட்டார். “பாய், நாங்க சொல்லியிருக்கோம். உடனே இடிக்க மாட்டாங்க. உங்க கடையக் குறிச்ச அளவுக்கு காலி பண்றதா வாக்கு கொடுங்க போதும்” என்றார். நயூம் அரைகுறையாகத் தலையாட்டினார். வடிவேல் “இன்னும் கொஞ்சம் நாளுக்குள்ள நீங்களா இடிக்கணும். இல்லாட்டி அவங்க ஒடைப்பாங்க” என்றார். பக்கத்திலுள்ள அன்வரின் கட்டடத்துக்கு சென்றார். பணியாளர்களும் உரிமையாளரும் வெளியில் பதட்டமாகக் காத்திருந்தார்கள். அவர்களிடமும் வடிவேல் நிலைமையை சொன்னார். பணியாளர்கள் கண்ணீர் மல்கக் கைகூப்பினார்கள். பயாஸ் வீட்டுக்குப் போனார் வடிவேல். பயாஸின் குடும்பத்தினர் பயந்து வெளியில் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதலளித்துவிட்டு அடுத்த இடத்துக்கு விரைந்தார். பொன்னுசாமி தன் அடுக்ககத்தின் முன்புறத்தை நீக்கத் தொடங்கியிருந்தார். நீண்ட வெளிப்படிகளை ஆட்கள் இடித்தார்கள்.
சாலைத் தெருமுனையில் கனரக இயந்திரம் ஓய்ந்து நின்றது. இரும்புக் கரம் தரையைத் தொட்டுத் தொங்கியது. துப்பாக்கிகளுடனும் லத்திகளுடனும் காவலர்கள் காத்திருந்தார்கள் அருகில் அதிகாரிகள் கோப்புகளுடன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். வடிவேல் சைகை செய்தார். அங்கிருந்து அதிகாரிகளும் காவலர்களும் ஏமாற்றமுடன் வெளியேறினார்கள். இயந்திரம் உயிர்பெற்று தலையைத் திருப்பியது. மெதுவாக பின்வாங்கி சாலையில் ஊர்ந்து மறைந்தது. அவர்கள் மற்றொரு கால்வாய்க்கு சென்று காலி செய்யுமாறு வற்புறுத்துவார்கள். அங்குள்ளவர்களையும் தாமாக சுவர்களையும் திண்ணைகளையும் இடிக்க வைப்பார்கள். வேடிக்கைப் பார்த்தவர்கள் சலிப்புடன் கலைந்தார்கள். தெருவாசிகள் தத்தம் இடங்களுக்குத் திரும்பினார்கள். நயூம் கடைக் கதவை திறந்தார். மேசை நாற்காலிகளை தூசு தட்டினார். கண்ணாடி அலமாரிகளில் படிந்த மெல்லிய அழுக்கைத் துடைத்தார். உள்ளே விற்பனைக்கு நீண்ட காலம் காத்துள்ள கடிகாரங்களை தேய்த்து மெருகேற்றினார். பிறகு பழுது பார்க்கும் மேசையில் குனிந்து உட்கார்ந்தார். சக்தி வாய்ந்த விளக்கை ஏற்றினார். ஒரு கண்ணில் குழியாடியை அணிந்தார். தேவையற்ற ஒரு பழைய கைக்கடிகாரத்தை எடுத்துப் பிரித்தார். உள்ளே மிகச் சிறிய சக்கரங்கள் துருவேறியிருந்தன.
எல்லாவற்றையும் நினைத்தவாறு வெகு நேரம் கடையிருட்டில் அடைந்திருந்த நயூம் எழுந்தார். மேசையிலிருந்த இதுவரை யாருமழைக்காத கைபேசி கடிகாரத்தை உயிர்ப்பித்தார். பொழுது புலர்ந்துவிட்டதை அறிந்தார். கதவைத் திறந்து வெளியில் வந்தார். கிழக்குத் தொடர்ச்சி மலை மேல் ஒளி வீசியது. மசூதி மினராக்கள் வானுயுர்ந்து நின்றன. நடுக் கோபுரம் மோனத்தில் கவிந்திருந்தது. சாலைத் தெருவின் முன்னும் பின்னுமானக் கட்டடங்கள் துலங்கின. இடையில் வற்றிச் சுருங்கிய ஏரிக் கால்வாய். அங்கங்கே சிறிய மணல் திட்டுகள் தெரிந்தன. மீதி இடங்களில் காங்கிரீட் பாதை. ஓரத்தில் நீண்டு செல்லும் சாக்கடைக் கால்வாய். உள்ளே நீர் கறுப்பாக பளபளத்தது. கால்வாயை ஆக்கிரமித்துள்ள கட்டடப் பகுதிகளிலிருந்து இடிக்கும் ஓசைகள் மெல்லக் கேட்டன.
மூலையிலுள்ள வீட்டு மாடி இடிபட்டுக்கொண்டிருந்தது. தனியாக ஒருவர் களைப்புடன் கடப்பாரையால் குத்திக்கொண்டிருந்தார். அனாதரவாக பலகணியின் கைப்பிடிச்சுவர் தொங்கியது. உள்ளேயிருந்த இரும்புக்கம்பிகள் தாறுமாறாக நீண்டிருந்தன. எதிரிலுள்ள படிகள் சிதைந்திருந்தன. கீழே சிலர் கடப்பாரைகள், சம்மட்டிகளுடன் காத்திருந்தார்கள். இரவோடிரவாக பயாஸ் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்திருக்கலாம். அடுத்துள்ள அன்வரின் வளாக உச்சி மாடி சதுரமாக வெட்டுண்டிருந்தது. அதில் நீல வானம் துல்லியமாகத் தெரிந்தது. பலர் முகமூடிகளுடன் மேலேறினார்கள். கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளைப் போன்ற நீண்ட துரப்பணக் கருவிகள். அகமதின் விடுதி மேற்புறம் கண்ணாடிகளாலானது. அகழ்வு இயந்திரத்தின் சிறு தொடுகையில் உதிர்ந்துவிடும். அவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ள சுவர்கள் மட்டும் கவனமாக நீக்கப்படப்போகின்றன. வாயிற் இரும்புக் கதவுகள் கழற்றியிருந்தன. பக்கவாட்டிலுள்ள மின்தூக்கியின் அறை அகற்றப்பட்டிருந்தது. விடுதியின் முன்னால் ஆட்கள் ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள். இடிபாடுகளை அள்ளிப்போக சரக்கு வாகனம் காத்திருந்தது.
சற்றுத் தொலைவில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. விளையாட்டுப் பொருட்கள் விற்கும் சிறு கடை, அச்சகம் இரண்டும் முன்பே அடியோடு அகன்றிருந்தன. மிகுந்த பேராசையுடன் ஏரிக்கால்வாயின் நடுவே கட்டப்பட்டவை. தவற விட்டுச் சென்ற பொருட்களைப்போல் இடிபாடுகள் சிதறியிருந்தன. அச்சிட்ட பணச்சீட்டு, வண்ண நகல் தாள், அறிக்கைகளின் துண்டுகள் தேடினால் கிடைக்கும். காற்று நிற்காத ஓட்டைக் கால்பந்தையும் உடைந்த செங்கற்களில் காணலாம். அவை தாமாக வெளியேறிச் சென்றதின் அடையாளங்கள்.
கொஞ்ச நேரத்தில் அனைத்துக் கட்டடங்களிலும் இடிக்கும் ஒலி எழுந்தது. சாலைத் தெருவில் மோதி எதிரொலித்தது. நயூமின் தலையில் புகுந்து குடைந்தது. காது செவிடாகும் போலிருந்தது. இனி தன் கடையை இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்துள்ள முன்புற பெரும் பாகத்தை அகற்ற வேண்டும். பிறகு தனக்குச் சொந்தமாக சிறிய பகுதி மீதியாகும். அதில் கடிகாரங்கள் பழுது நீக்குவதையும் விற்பதையும் தொடரலாம். இல்லையெனில் வேறு பாதுகாப்பான இடத்தையும் நாடலாம். அல்லது புதிய வேலையைத் தேடலாம். ஆனால் தனக்கு கடிகாரத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. முன்பே பயாஸ் தன் வீட்டு வாசலையும், வரவேற்பறையையும் நீக்குவதாக தெரிவித்திருந்தார். அவர் எஞ்சிய படுக்கையறை, சமையலறையில் மட்டும் குடியிருக்கப்போகிறார். அன்வரும் தன் கூடத்தின் பாதியை அகற்றிவிடுவார். அங்கு மீதியாகும் சிறு கூடத்தில் எவரும் சிறிய நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.
நயூம் மீண்டும் கடைக்குள் நுழைந்தார். கடைசியாக மிஞ்சப் போகும் குறுகிய இடத்தை அளந்தார். அங்கு நாற்காலி, மேசையை இழுத்துப் போட்டார். அதற்காக திட்டமிட்டு உருவாக்கியவைப்போல் நன்கு பொருந்தின. பின் சுவரில் கண்ணாடி அலமாரியை மாட்டினார். உள்ளே புதிய கடிகாரங்களை நெருக்கி நிரப்பினார். கீழே பழுதான பழைய கடிகாரங்களை அடைத்தார். கைக் கடிகாரங்களை மேசை இழுப்பறையில் மூடினார். கைபேசி சரியான நேரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அனைத்தும் சிற்றிடத்தில் எப்படி அடங்கியதெனத் தெரியவில்லை. அதுவே போதுமெனப் பட்டது. அப்படித்தான் மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கும். எதிர்காலத்தில் கைபேசிகளால் கடிகாரங்களின் தேவையில்லாமலாகிவிடும். மிகச் சிறிய இடமும் அதிகம். அதை ஆறு வெளிப்படையாகக் காட்டியுள்ளது. அவர் தீர்மானமாக மூலையிலிருந்த கடப்பாரையை எடுத்து வந்தார். கடையின் முன்புறத்தை இடிக்கத் தொடங்கினார். அந்த ஓசை பிற இடிக்கும் ஒலிகளுடன் கலந்தது.
கடைசியில் நயூம் கைபேசியில் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார். சிறிய முள் ஒரு சுற்று முடித்திருந்தது. முன்பே சில உதவியாட்களை சேர்த்துக்கொண்டிருந்தார். நடுவில் சற்று ஓய்வெடுத்துமிருந்தார். ஏறக்குறைய கடையின் முன்பகுதியை நீக்கியாகிவிட்டது. அனைத்தும் குறித்த நேரத்தில் ஓரளவு முடிந்துள்ளது. அவர் களைப்புடன் வெளியில் எட்டிப் பார்த்தார். அருகிலுள்ள கட்டடங்களின் முன்புறங்கள் முழுதாக இடிபட்டிருந்தன. மீதிச் சுவர்கள் தாறுமாறாக சிதைந்திருந்தன. உடைந்த செங்கற்கள் நீட்டியிருந்தன. கீழே கிடந்த இடிபாடுகளை வாகனங்கள் அகற்றியிருந்தன. தாராளமாகப் புழங்க முடியாதளவு இடங்கள் மிகவும் குறுகிவிட்டன. இப்போது சாலைத் தெருவின் கால்வாய், தோணிகள் போகுமளவு பரந்து விரிந்து தெரிந்தது. முன்பை விட நீண்டு பெரிதாக மாறிவிட்டது. பழைய ஆற்றைப் போலிருந்தது. அதில் நீரோடுவதைப்போல் தோன்றியது. மீன்கள் கூட்டமாக நீந்தின. அடியில் மணல் படுகை தெளிவாயிருந்தது. அந்த சிறிய ஆறு ஓடி பெரியாற்றில் கலந்துகொண்டிருந்தது.
000

மு.குலசேகரன்
முழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். 'ஒரு பிடி மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மைப் பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “உற்ற சொல்லைத் தேடி” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. “தங்க நகைப் பாதை” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நாவல் வெளியாகியுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
சி.எல்.சாலையையும், அங்கு புழங்கும் மனிதர்களையும், சின்னாறில் கலக்கும் கால்வாய்களையும் கண் முன் நிறுத்தும் நல்ல படைப்பு