ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிகளைப் பின்னாளில் வந்த வெள்ளையர்கள் வடக்குக்கும் மத்திய உலர் நிலங்களுக்கும் துரத்தியடித்து துறைமுக நகரங்களை நிர்மாணித்தார்கள். இப்போது புதிய குடியேறிகள் வந்து அதே நகரங்களை ஆக்கிரமித்து வெள்ளையர்களை நாட்டுப்புறங்களுக்குத் துரத்திவிடுகிறார்கள். இன்று அத்தனை பெரு நகரங்களும் பல்வேறு நிறங்களாலும் கடவுள்களாலும் நிரம்பிக்கிடக்கின்றன. தொடருந்துக்குள் ஏறினால் அரபிக்கும் மலையாளமும் மண்டரினும் சத்தமாகக் கேட்கிறது. கறி வாசமும் வியற்நாமிய இஞ்சிப்புல்லும் கமகமக்கிறது. தொடருந்திலேயே இரவு உணவுக்குத் தேவையான வெங்காயமும் உருளைக்கிழங்கும் வெட்டிக்கொண்டிருக்கும் இந்தியப்பெண்களின் தரிசனம் கிட்டுகிறது. பெலிசிற்றா நாட்டுக்கு வந்த காலத்தில் அவள் தொடருந்துக்குள் ஏறினால் அத்தனை வெள்ளைக்காரர்களும் தாம் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலை நிமிர்த்தி இவளை நோட்டம் விடுவார்கள். இவள் தம் அருகில் வந்து அமர்ந்துவிடுவாளோ என்ற சுழிப்பு ஒரு கணம் அவர்கள் முகத்தில் தோன்றி மறையும். ஆனால் எதிர் இருக்கையில் உட்காரும்போது சிறு புன்னகையை உதிர்க்கவும் மறக்கமாட்டார்கள். சில வயதானவர்கள் பேச்சும் கொடுப்பார்கள். எப்படி இருக்கிறாய் இளம் பெண்ணே என்று அவளை முதன்முதலாகத் தொடருந்தில் விளித்த தாத்தாவின் முகம் பெலிசிற்றாவுக்கு இன்னமும் கண்களில் நிற்கிறது. இப்போது எல்லோரும் காதுகளில் சத்தமாகப் பாடல்களைக் கேட்டபடி செல்பேசியில் முகம் புதைத்திருக்கிறார்கள். தாம் அமர்ந்திருக்கும் தொடருந்துப் பெட்டிக்குள் ஒரு கொலை நிகழ்ந்தால்கூட சமூக வலைத்தளங்களினூடாகத்தான் இவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
பெலிசிற்றாவின் மூச்சுக்காற்று வைத்தியசாலை விடுதியின் யன்னல் கண்ணாடி எங்கும் புகாராய்ப் படர்ந்தது. கண்ணாடியைத் துடைத்துவிட்டு ஹைடில்பேர்க் தொடருந்து நிலையத்தை அவள் தொடர்ந்து விடுப்புப் பார்க்க ஆரம்பித்தாள்.
கடைசியில் அந்தப் பஞ்சாபிப் பெண்ணைக் கண்டுவிட்டாள். அவள் தன்னுடைய மகளை அவசர அவசரமாக இழுத்துக்கொண்டு தொடருந்து நிலையத்தை நோக்கி ஓடுவது தெரிந்தது. காலையின் அவதிக்கு இன்னமும் பழக்கப்படாத பதட்டம் அவளிடமிருந்தது. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அவள் பரபரப்புடன் தாமதமாக அவ்விடம் ஓடிவருவாள். அண்மையில் வந்த குடியேறியாக இருக்கவேண்டும். அவளுடைய கணவன் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய தொழிற்சாலையில் பணி புரியலாம். அல்லது வாடகை வண்டி, பார ஊர்தி ஓட்டுபவனாக இருக்கலாம். இவளும் பாவம், காலையிலேயே எழுந்து, தேநீர் ஊற்றி, எல்லோருக்கும் உணவு சமைத்து, மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்து, பள்ளிக்குக் கொண்டுபோய் அவளை விட்டுவிட்டு, பின்னர் தானும் ஒரு குழந்தைகள் காப்பகத்திலோ அல்லது கடையொன்றுக்கோ வேலைக்குச் செல்லவேண்டியிருக்கலாம். இந்தியாவிலாவது இந்தப்பெண் வீட்டில் மாத்திரம்தான் குத்தி முறிந்திருப்பாள். பாவம், இங்கு கூடுதலாக வேலைக்கும் சென்று தேயவேண்டியிருக்கிறது.
பெரும் சத்தத்தோடு ஹோர்னை அடித்துக்கொண்டு, தொடருந்து சரியாகப் பதினைந்து நிமிடங்கள் தாமதமாக நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள். பெலிசிற்றா மெல்பேர்னுக்கு வந்த புதிதில் இந்த அவசரங்கள் எவரிடத்திலும் இருக்கவில்லை. உள்ளிருக்கும் பயணிகள் வெளியே இறங்கும்வரைக்கும் பொறுமை காத்து, அத்தனை பேரையும் பரஸ்பரம் குசலம் விசாரித்தபடி, சாவகாசமாகத்தான் புதிய பயணிகள் உள்ளே ஏறுவார்கள். தொடருந்தும் அதுவரைக்கும் பொறுமையாகக் காத்து நிற்கும். இப்போது எல்லோருக்கும் சுடுது, மடியைப் பிடி என்கின்ற அவசரம். என்றோ ஒரு நாள் அவர்களும் பெலிசிற்றாவைப்போல, நேரத்தைப் போக்க வழி தெரியாமல், ஏதேனும் ஒரு வைத்தியசாலை நோயாளர் விடுதி யன்னலுக்குள்ளால் ஊரைப் புதினம் பார்க்கும் அவலம் வரும்வரைக்கும் அந்த அவசரம் அவர்களைப் பீடித்துக்கொண்டேயிருக்கும். பெலிசிற்றாவும் ஒரு காலத்தில் அப்படி ஓடிக்கொண்டிருந்தவள்தான். இருபத்திரண்டு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு ஓடி வந்து, அகதியாகி, ஆங்கிலம் பேசத் தெரியாது தடுமாறி, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, கடைசியில் மார்சியாவின் புண்ணியத்தால் இரட்சணிய சேனையில் நிரந்தர வேலைக்கு இணையும்வரைக்கும் பெலிசிற்றா இந்த நாட்டில் நூறு மீற்றர் வேக ஓட்டம்தான் ஓடிக்கொண்டிருந்தாள். உழைப்பது, சிக்கனமாக வாழ்ந்து காசு சேர்ப்பது. சேர்த்த காசை மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவது என்பவைதான் அவளது வாழ்வின் இலட்சியங்களாக இருந்தன. அவளின் வீட்டில் எப்போதுமே காசுக்கான தேவை இருந்துகொண்டேயிருந்தது. தங்கைகள் அடுத்தடுத்து சாமத்தியப்பட்டார்கள். உறவுக்காரர்களுக்குத் திருமணங்கள் முற்றாகின. அம்மாவின் கருப்பையை அகற்றவேண்டி வந்தது. இப்படி ஏதும் அவசரத் தேவைகள் இல்லை என்றால் உடனே வீட்டின் கிடுகுக்கூரையைப் பிரித்து ஓடு விரிக்கவேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வந்துவிடும். சொந்தமாகப் பசுமாடு வாங்கி வளர்த்தார்கள். திடீரென்று மூத்த தம்பி, பதினெட்டு வயது ஆன கையோடு கூடப்படித்த பெண்ணைக் கர்ப்பமாக்கிக்கொண்டு வந்து நின்றான். பெலிசிற்றாவுக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்கள் எல்லாவற்றிலும் கவலைகளே நிறைந்திருந்தன. நீ ஆன தீனி உண்கிறாயா? நீ வாழும் வீடு எப்படி? உன் நண்பர்கள் எப்படி? அந்த ஊர் எப்படி? குளிரா? வெயிலா? மழையா? என்ன வேலை செய்கிறாய்? எப்படி வேலைக்குப் போகிறாய்? ம்ஹூம். இவை எவற்றையுமே அக்கடிதங்கள் கேட்பதில்லை. நீ நலமாக இருக்கக் கர்த்தரைப் பிரார்த்திக்கிறேன் என்கின்ற முதல் வரிக்கு அப்புறம் எல்லாமே அவர்களின் கவலைகளும் பிரச்சனைகளும்தான். அவள் நலத்தை மட்டும் கர்த்தர் கையில் ஒப்படைத்துவிட்டுத் தம் நலத்துக்கு பெலிசிற்றாவிடம் இறைஞ்சும் சுயநலவாதிகள். எப்படி இருக்கிறாய் இளம்பெண்ணே என்று அவளை ஆதரவுடன் விசாரித்த, பெயரே தெரியாத அந்தத் தாத்தாவின் கரிசனைகூட எப்படி அவளது குடும்பத்தில் இல்லாமல் போனது? தம் குடும்பத்தின் மூத்த பெண், இருபத்திரண்டு வயதில் வீட்டை விட்டுப் போய், திக்குத் தெரியாத ஒரு ஊரில் தனியாக, பேசிப்பழக மனிதர் இன்றி, வாய்க்குச் சுவையான உணவு இன்றி, எந்தப் பிடிப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து தவிக்கிறாளே என்கின்ற ஒரு சின்னக் கவலைகூட அந்தக் கடிதங்களுக்கு இருந்ததில்லை. அவளுமே அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. ஊர்ச்செய்திகள் எல்லாம் உயிரிழப்பையும் உடைமைச் சேதத்தையும் இடப்பெயர்வுகளையும் சுமந்துவரும்போது, ஊரின் கவலைகளோடு ஒப்பிடுகையில் தன்னுடைய கவலை என்று எதுவுமே இல்லை என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இப்போது எண்ணிப்பார்க்கையில் என்ன இருந்தாலும் அவள் கவலை அவளுக்கானது அல்லவா என்றே தோன்றுகிறது. மொத்தக்குடும்பமும் அவளது உழைப்பில் குளிர் காய்ந்தது என்னவோ உண்மைதானே? அதற்கான குறைந்தபட்ச நன்றியுணர்வுகூட எப்படி அவர்களிடத்தில் இல்லாமற்போனது?
தொடருந்து புறப்பட முன்னரேயே அந்தப் பஞ்சாபிப்பெண் மகளுக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு அவசர அவசரமாக நிலையத்தை விட்டு வெளியேறினாள். நடக்கும்போதே தன் செல்பேசியை எடுத்து யாருடனோ பதற்றத்துடன் பேச ஆரம்பித்தாள். பணியிடத்தின் முகாமையாளராக இருக்கவேண்டும். இப்படியே பேசிக்கொண்டு நேராகப் பேருந்துத் தரிப்பிடத்துக்குச் செல்வாள். இரண்டு வண்டிகள் வைத்திருக்கும் வசதி இன்னமும் அந்தக்குடும்பத்தில் வந்திருக்காது. அவளின் காலத்துக்கு இன்று பேருந்தும் தாமதமாகியது. அவள் தரிப்பிடத்து இருக்கையில் உட்கார்ந்து, கைகளை விசுக்கி விசுக்கி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். ஊரிலிருந்து வந்த அழைப்பாக இருக்கலாம். நடுச்சாமத்தில் தூக்கம் வராத வயோதிபர் யாராவது அவளுக்கு அழைப்பெடுத்து ஊர்க்கதைகளைச் சொல்லக்கூடும். அல்லது வீட்டில் பெரும் சண்டை நிகழ்ந்து மனிதர்கள் சாமம் கழிந்தும் தூங்காமல் இருப்பார்கள். எங்காவது சாவு விழுந்திருக்கலாம். அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் மேசன் ஒழுங்காக வேலைக்கு வராமல் ஏமாற்றலாம். தங்கைக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அம்மாவின் புற்று நோய் கீமோதெரபிக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம். இவளிடம் பணம் கேட்பதற்கு ஊர் ஆயிரம் அவசரங்களை உருவாக்கிக்கொள்ளும் என்று பெலிசிற்றாவுக்குத் தோன்றியது. இவளோடு ஒப்பிடுகையில் பெலிசிற்றாவின் நிலையாவது பரவாயில்லை எனலாம். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெறுங் கடிதங்கள் மாத்திரமே அவளுக்கு வந்துகொண்டிருந்தான். வீட்டிலிருந்து மாதத்துக்கு ஒரு கடிதம் வரும். சண்டை ஏதாவது ஆரம்பித்துப் பாதை மூடப்பட்டுவிட்டால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நான்கைந்து கடிதங்கள் ஒன்றாக வந்து சேரும். ஒருமுறை மொத்தமாக எட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. மூன்று கடிதங்கள் மாமாவிடமிருந்து. இரண்டு பெரியம்மாவிடமிருந்து. இரண்டு அவள் வீட்டிலிருந்து. அவள் படித்த ஆரம்பப் பள்ளியிலிருந்துகூடக் கடிதம் வந்திருந்தது. எல்லாமே பணம் கேட்டுத்தான். அவளைவிட இளையவளான மச்சாளுக்குச் சீதனம் கொடுக்கவேண்டும். பள்ளிக்குக் கக்கூஸ் கட்டவேண்டும். தம்பியின் மகனுக்குப் பிறந்தநாள் என்றுகூடக் கூசாமல் காசு கேட்டிருந்தார்கள். ஊரிலிருந்து அழைப்பிதழ்கள் வந்தாலே எரிச்சல்தான் ஏற்படும். இந்தப்பெண்ணுக்கு முப்பது தாண்டுகிறதே, ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யவேண்டும் என்று எவருக்குமே தோன்றியதில்லை. மலை அட்டைகள். இரத்தம் குடிக்கும் மலை அட்டைகள். ஒரு அட்டை அவள் முழங்காலில் கடித்து, முட்ட முட்டக் குடித்துக் கழன்று விழுவதற்குள் இன்னொரு அட்டை அவளது தொடைவரை ஏறிவிட்டிருக்கும். ஏக சமயத்தில் ஏழெட்டு அட்டைகள்கூட இரத்தம் குடிப்பதுண்டு. அதுவும் வலிக்காமல் உடலைக் குதறி எடுக்கும் வித்தை தெரிந்த அட்டைகள். இனி போதும் என்று அவையே தாமாக விழுந்தபின்னர்தான் இரத்தம் கசிவது இவளுக்குத் தெரியவரும். அவளும் விசரிபோல இது எதுவும் புரியாமல் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக்கொண்டேயிருந்திருக்கிறாள். ஒரு நாள் உடைகளை எல்லாம் கழட்டி உதறி, அம்மணமாகி, அத்தனை அட்டைகளையும் கொடுக்கோடு பிடுங்கி எறிந்துவிட்டு வெற்றிலை எச்சலை அட்டை கடித்த இடத்தில் துப்பி எல்லாவற்றையும் தலை முழுகியிருக்கவேண்டும். வந்த கடிதங்களைப் பிரிக்காமலேயே கிழித்துப்போட்டிருக்கவேண்டும். யாருக்கும் சொல்லாமல் முகவரியை மாற்றி நிம்மதியாகத் தன் உறவுகளிடமிருந்து தப்பித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அதை அவள் செய்யவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவர்களின் இருப்பு அவளுக்கு வேண்டியிருந்தது. அவள்மீதான அவர்களின் கவனக் குவிவும் வேண்டியிருந்தது. அந்தக் கடிதங்களை அவள் உள்ளூர ரசிக்கவே செய்தாள். அவளின்றி அந்தக் குடும்பங்கள் எப்படித் தப்பிப்பிழைக்கும் என்ற எண்ணம் அவளுக்குச் சிறு திருப்தியைக் கொடுத்தது. அதுவும் இல்லையெனில் இந்தப் பிரபஞ்சத்தில் அவள் எப்போதோ காணாமற்போயிருக்கக்கூடும். தன்னையே எரித்து எரித்து ஒளி கொடுத்தாலும் பூமி இல்லாமல் சூரியனுக்கு இருப்பு ஏது? பெலிசிற்றாவின் இரத்தத்தை உறிஞ்சவாவது சில அட்டைகள் அவளது கால்களில் ஒட்டிக்கிடக்கின்றன அல்லவா?
செல்பேசிச் சத்தம் பெலிசிற்றாவின் சிந்தனையைக் கலைத்தது. எடுத்துப்பார்த்தாள்.
அம்மாதான் சிறுநீர் கழிக்கவென எழுந்திருக்கிறார். ஊர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமரா கண்டுபிடித்துச் செய்தி அனுப்பியிருந்தது. பெலிசிற்றா கமராவை அழுத்தி அம்மாவின் அறையையே பார்த்துக்கொண்டிருந்தாள். இருட்டில் கமராவின் சன்னமான வெளிச்சத்தில் அம்மாவின் படுக்கை கொஞ்சமே தெரிந்தது. மெலிந்து, தளர்ந்து, கருவறையில் சுருண்டுகிடக்கும் நிறைமாசக் குழந்தையைப்போல அந்தத் தொண்ணூற்றைந்து வயது மனிசி குறண்டிக்கொண்டு படுத்திருந்தது. நுளம்புகள் பல கமராவின் வெளிச்சத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து திரிந்தன. அவை உறிஞ்சுவதற்கு அம்மாவிடம் சொட்டு இரத்தம்கூட இருக்குமா என்ற சந்தேகம் பெலிசிற்றாவுக்கு வந்தது. நுளம்புகளின் கடியை உணரும் சக்தியைக்கூட அம்மா இழந்துவிட்டிருக்கக்கூடும். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தாலும் நுளம்புகள் எப்படியோ நெருங்கி வந்துவிடுகின்றன. வீட்டுச்சுவர்களிலுள்ள மேல் ஓட்டைகளுக்கு வலை அடிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டை நன்றாகப் பூட்டி உள்ளே புகைபோடுமாறு வேலைக்காரப் பெண்ணிடம் சொல்லவேண்டும். பல நாட்களாக அம்மா ஒரே சேலையைத்தான் அணிந்திருக்கிறார். அவரை இந்த வாரம் குளிப்பாட்டவும் இல்லை என்று தெரிந்தது. பாதிரியாரை அழைத்து வந்து செபம் செய்யக்கேட்டது. அதுவும் நிகழவில்லை. பெலிசிற்றாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாசமாசம் பணம் மட்டும் வங்கியில் விழவேண்டும். ஆனால் வேலைக்காரி சொன்ன வேலையைச் செய்யமாட்டாள். இதுதான் மாசச் சம்பளம். நீ இந்திந்த வேலைகள் செய்யவேண்டும் என்று பேசித்தீர்த்தாலும் காரியங்கள் நிகழுவதில்லை. காசையும் கொடுத்து, கெஞ்சிக்கேட்டு வேலை செய்விக்கும் அவலம் எங்கள் ஊரில் மாத்திரமே நிகழக்கூடிய ஒன்று.
பெலிசிற்றா இப்போது வீட்டிலிருந்த ஏனைய கமராக்களையும் அழுத்திப்பார்த்தாள்.
சமையலறையில் பாத்திரங்கள் எதுவும் கழுவப்படாமல் அப்படியே கிடந்தன. ஹோலில் மின்விசிறி தனியாகத் தேவையின்றி ஓடிக்கொண்டிருந்தது. வெளி வாசற்படியில் ஜிம்மி சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தது. நினைவு தெரிந்து அவர்களது வீட்டு நாய்களுக்கு ஜிம்மி என்றே பெயரிட்டு வந்தார்கள். பெலிசிற்றா சிறுமியாக இருந்தபோது ஒரு கறுத்த ஜிம்மி அவர்களோடு வாழ்ந்து வந்தது. இடது பக்கப் பின்னங்கால் ஊனமான நாய் அது. அவள் நினைவுக்குக் குட்டை பிடித்துப்போன, வயதான அந்த ஜிம்மியின் முகந்தான் இன்னமும் படிந்திருக்கிறது. அது இறந்ததும் புதைத்துவிட்டு ஒரு பிரவுண் கலர் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். அந்த ஜிம்மிதான் பெலிசிற்றாவின் உற்ற நண்பி. இருவரும் சேர்ந்தே விளையாடி வளர்ந்தார்கள். ஐந்தாறு வருடங்கள் கழித்து அது லொறி ஒன்றில் மோதி இறந்துவிட வேறொரு ஜிம்மி வீட்டுக்கு வந்தது. அது ஒரு பொமனேரியன். அவளுடைய சாமத்திய வீட்டுக்குப் பரிசாக சாக்காரியா பாஃதர் கொடுத்தது. பெலிசிற்றா ஊரை விட்டுக் கிளம்பும்வரைக்கும் அந்த ஜிம்மிதான் வீட்டிலிருந்தது. பின்னர் அவள் அவுஸ்திரேலியா வந்த பிற்பாடு இரண்டு ஜிம்மிகள் வீட்டுக்கு வந்து, வளர்ந்து, இறந்துவிட்டன. ஒரு ஜிம்மி இடம்பெயர்வோடு காணாமற்போய்விட்டது. இப்போது இருக்கும் ஜிம்மிக்கு மூன்று வயதாகிறது. வேலைக்காரப்பெண்தான் கொண்டுவந்து அதை வீட்டில் விட்டவள். பெடியன் நாய். வெள்ளையும் பிறவுனும் கலந்த ஊர்ச்சாதி. செல்பேசியில் பேசும்போது ஜிம்மியையும் காட்டுமாறு அந்தப்பெண்ணிடம் பெலிசிற்றா கேட்பதுண்டு. இவள் இந்தப்பக்கமிருந்து ஜிம்மி என்றால் அது சன்னமாகத் தன் வாலை ஆட்டும். டேய் ஜிம்மிக் குட்டி என்றால் மின்விசிறிபோல வால் சுழலும். பெலிசிற்றாவுக்குச் சிரிப்பு வந்தது. கமராவில் ஜிம்மியையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஜிம்மி அவ்வப்போது நுளம்புகள் கடிக்கும்போது எழுந்து, விசனத்தில் வாலை அடித்து அவற்றைக் கடிக்க முயன்றது. பெலிசிற்றா செல்பேசிக் கமரா செயலியிலிருந்த ஒலிவாங்கியை அழுத்தி ஜிம்மி என்று சொல்லிப்பார்த்தார். ஜிம்மி சற்றே காதுச்சோனைகளை நிமிர்த்திப்பார்த்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தது.
டேய் ஜிம்மிக்குட்டி.
ஜிம்மி இப்போது எழுந்து நின்று கமராவைப் பார்த்து வாலை ஆட்டியது.
ஜிம்மி, என்ர செல்லமே. நீயாவது என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்கிறாய்.
ஜிம்மி சின்னதாகக் குரைத்து வாலை ஆட்டிவிட்டு மீண்டும் தூங்கப்போனது. இத்தனைக்கும் ஜிம்மியை பெலிசிற்றா நேரில் கண்டதில்லை. அவுஸ்திரேலியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒருமுறைதான் பெலிசிற்றா ஊருக்குப் போயிருக்கிறாள். அதுவும் பத்து வருடங்களுக்கு முன்னர் அவளது தம்பியின் மகனுக்குத் திருமணம் என்று போனது. ஊர் எப்போதுமே நினைவுகளில் சுகத்தையும் நேரிலே கசப்பையும்தான் அவளுக்குக் கொடுத்ததுண்டு. இந்தப்பயணத்திலும் வழமையான குசல விசாரிப்புகள் முடிந்து மூன்றாம் நாளே அது ஆரம்பித்துவிட்டது. உன்னால் இந்தக் குடும்பமே அவமானப்பட்டுவிட்டது என்ற பழைய பல்லவியையே பாடினார்கள். இரண்டாவது தங்கையான திரேசமேரியும் அவள் கணவனும் அவர்களது குடும்பத்திலேயே அரச உத்தியோகம் பார்ப்பவர்கள். அதனால் குடும்பத்தின் பெரிய முடிவுகளை எல்லாம் திரேசமேரியே எடுத்துக்கொள்வாள். பெலிசிற்றாவின் செய்கைகளால் ஊருக்குள் தான் தலையே காட்ட முடிவதில்லை என்று அவள் புலம்ப ஆரம்பித்தாள். குடும்ப மானத்தைக் கப்பலேற்றிவிட்டாள் என்றாள். திருமணத்தன்று பெலிசிற்றா முன் இருக்கையில் அமர்ந்தால் தான் பின்னாலே சென்றுவிடுவேன் என்று மிரட்டினாள். இதனால் பெலிசிற்றா தேவாலயத்திற்குச் செல்வதையே தவிர்க்க நேர்ந்தது. பெண் பிள்ளையைத் தனியாக விமானமேற்றி வெளிநாட்டுக்கு ஏற்றும்போதும் அவள் கற்றை கற்றையாகக் காசு அனுப்பும்போதும் போகாத பொல்லாத மானம். பாஃதர் செய்த அசிங்கத்துக்கும் அவளைத்தான் குற்றம் சொன்னார்கள். முப்பத்திரண்டு வயதில் ஒரு ஆணோடு இணைந்து வாழ்ந்தபோதும் குறை கண்டார்கள். மரியதாஸ் செய்த காரியம் என்னவென்றே தெரியாமல் வசை பாடினார்கள். தம் முகம் குரூரமாகத் தெரிந்தால் கண்ணாடியை வையும் மூடர் கூட்டம்.
பெலிசிற்றா வீதியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாசற்படிக்கருகே ஐந்தாறு குடி தண்ணீர் பிடிக்கும் கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வீதிக்கு அடுத்த பக்கம் நின்ற ஜாம் மரத்தில் யாரோ கொடி கட்டி உடுப்புக் காயப்போட்டிருந்தார்கள். அம்மாவின் சேலைகளும் உள்ளாடைத் துணிகளும்தான் அவை. உடுப்புக் காயப்போடக்கூட வசதியற்ற, குச்சுக் காணி முழுதும் கட்டப்பட்டிருந்த குட்டி வீடு அது. வாசல் கதவைத் திறந்தவுடன் வீதி வந்துவிடும். விசாலமான முற்றமுள்ள ஒரு காணிக்குள் வீடு கட்டி வாழவேண்டுமென்று அம்மா பெலிசிற்றாவிடம் புலம்பிக்கொண்டேயிருப்பார். ஆனால் இருந்த ஐந்தடி முற்றத்தையும் வீதி அகலமாக்கவென மாநகரசபைக்கு அழுததுதான் ஈற்றில் நிகழ்ந்தது. நினைத்திருந்தால் பக்கத்துக் காணியையும் வாங்கி, பெரிய முற்றத்தோடு ஒரு வீட்டினை ஊரில் அவள் கட்டியிருக்கமுடியும். இந்த வயதில் ஒரு தனிக்கட்டைக்கு எதற்குப் பெரிய வீடு என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டாள். ஊரின் வீடு அவளுக்கு நல்ல நினைவுகளைக் கொடுத்ததேயில்லை. வீட்டைத் துறப்பதற்கான மனநிலைதான் இறப்புக்குத் தயாராவதற்கான முதல்படி என்று அடிக்கடி பெலிசிற்றா தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுண்டு.
அடுத்த தொடருந்தின் ஹோர்ன் சத்தம் கேட்கவும், பெலிசிற்றா செல்பேசியை வைத்துவிட்டு மறுபடியும் யன்னலுக்கு வெளியே பராக்குப் பார்க்க ஆரம்பித்தாள்.
பேருந்துத் தரிப்பில் நின்றிருந்த அந்தப் பெண்ணை இப்போது காணவில்லை. இன்று அவள் தாமதமாகத்தான் வேலைக்குப் போகப்போகிறாள். மேலதிகாரியிடம் ஏச்சு வாங்கவேண்டியிருக்கும். ஒரு மணி நேர ஊதியம்கூட வெட்டுப்படலாம். பெலிசிற்றாவுக்கு அம்மாவின் ஞாபகம்தான் மீண்டும் வந்தது.
மனிசியும் காலையிலேயே எழுந்து, தண்ணீர் பிடித்துவந்து, பால் வாங்கி, எல்லோரையும் எழுப்பித் தேநீர் ஊற்றிக்கொடுத்துவிட்டு தேவாலயத்துக்கு ஓடிவிடும். அங்கே காலைத் திருப்பலிக்கு முன்னர் தேவாலயத்து மண்டபத்தையும் முற்றத்தையும் கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, பாஃதர் தொழுகையை ஆரம்பித்ததும் அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பி, காலை உணவு செய்து, கணவனைத் தொழிலுக்கு அனுப்பி, பெலிசிற்றாவையும் அவளது ஆறு சகோதரர்களையும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கொஞ்சங்கூட ஓய்வு எடுக்காமல் கிடுகு பின்னும் வேலைக்குப் போய், மதியம் மறுபடியும் வீட்டுக்கு வந்து உணவு ஆக்கி, பிள்ளைகள் ஒவ்வொருவராய் பாடசாலை முடிந்து வீடு திரும்ப, சாப்பாடு கொடுத்து, மாலையில் மீண்டும் தேவாலயம் சென்று பாஃதரின் வீட்டைத் துப்புரவாக்கி, அவருக்குச் சமையல் செய்து, கணவன் இரவு வீடு திரும்பும் முன்னர் தான் வந்து வீட்டைக் கூட்டி, இரவு உணவு ஆக்கி என்று அம்மாவின் ஒரு நாள் பொழுதை யோசிக்கவே பெலிசிற்றாவுக்கு மூச்சு முட்டியது. பாவம் மனிசி. குடும்பத்துக்காக உழைத்துக் காய்ந்து கருவாடு ஆனதைத்தவிர வேறு சுகங்கள் எதனையும் அம்மா அனுபவித்து அறியாதவர். அடுத்தடுத்து ஏழு பிள்ளைகள். அதுகூட கசிப்பு நெடியுடன் தினமும் இரவு வீட்டுக்கு வருகின்ற ஐயோவோடான உறவின் பயன் எனும்போது பெலிசிற்றாவுக்குத் தாயின்மீது கழிவிரக்கமே ஏற்பட்டது. அம்மாவின்மீது பெலிசிற்றாவுக்குக் கோபம் ஏதுமில்லை. வெறும் ஆதங்கம்தான். உறவுகள் யாரும் பெலிசிற்றாவைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக்கூட மன்னித்துவிடலாம். அவர்கள் தாம் வாழும் சமூகத்தின் சூழ்நிலைக் கைதிகள். ஆனால் அம்மா அப்படியல்லவே. அம்மாவைப் புரிந்துகொண்டவள் பெலிசிற்றா மட்டும்தானே. இருவருக்குமிடையேயான இரகசியங்கள் அவர்களை மேலும் நெருக்கமாக அல்லவா பிணைத்திருக்கவேண்டும்? ஆனால் அம்மா மேலும் மேலும் பெலிசிற்றாவிடமிருந்து விலகியல்லவா சென்றார்? திரேசமேரியுடன் சேர்ந்து அம்மாவும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார். பாஃதரைப்பற்றிய பேச்சு எழுந்தபோது அம்மாவின் முகத்தில் சிறு குற்ற உணர்வாவது தென்படும் என்று அவள் தேடினாள். ஆனால் அம்மா திரேசமேரிக்கும் மேலே நின்று சதிராடினார். இப்போதெல்லாம் மனிதர்கள் குற்றவுணர்வுகளுக்குப் பாவ மன்னிப்புகள் கேட்பதில்லை. எதிரே நிற்பவரிடத்தில் அந்தக் குற்றத்தைச் சுமத்திவிடுகிறார்கள். அம்மா அதைத்தான் செய்தார். எந்தத் திரேசமேரியை நம்பி அம்மா பெலிசிற்றாவை இகழ்ந்தாரோ அதே திரேசமேரி அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு இரண்டே வருடங்களில் கனடாவுக்கு ஓடிவிட்டாள். குழந்தை, குடும்பம் என்றில்லாமல் தனியாக வாழ்கின்ற பெலிசிற்றாதான் அம்மாவைக் கவனிக்கவேண்டும் என்று வேறு திரேசமேரி பெலிசிற்றாவுக்குச் சொல்லியிருந்தாள்.
வணக்கம் பெலிசிற்றா? எப்படி இருக்கிறீர்கள்?
கதவைத் திறந்துகொண்டு தாதிப்பெண் உள்ளே வந்தாள். இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியின் பட்டையை பெலிசிற்றாவின் கையில் சுற்றினாள்.
வணக்கம் பீனா, இன்னமும் ஷிப்ட் முடித்து வீட்டுக்குப் போகவில்லையா?
நான் பீனா இல்லை. பியாட்றிஸ். பீனா இந்தியன் அல்லவா, மறந்துவிட்டீர்களா?
பெலிசிற்றாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏனோ அவர் நினைவில் இந்த இத்தாலிய தாதிப்பெண்ணின் பெயர்தான் பீனா என்று பதிந்திருந்தது.
அதிருக்கட்டும். என்ன காலையிலேயே எழுந்து பராக்குப் பார்க்க ஆரம்பித்தாயிற்றுப்போல.
இன்றைக்கு ஏனோ தெரியாது, ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய ரயில் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது
பெலிசிற்றா யன்னலினூடாக ஹைடில்பேர்க் தொடருந்து நிலையத்தைக் காட்டினார். பியாட்றிசும் வெளியே எட்டிப்பார்த்தாள்.
ரயில் தாமதமா? இது ஒரு பெரிய விசயமா? மெல்பேர்னின் வானிலையைக்கூட எதிர்வு கூறிவிடமுடியும். ரயில் வரும் நேரத்தை மாத்திரம் எடை போடமுடியாது
அந்தப் பஞ்சாபி மனிசி பாவம். ரயில் தாமதமாகியதால் பேருந்தையும் விட்டுவிட்டாள். இன்று அலுவலகத்தில் ஏச்சு வாங்கப்போகிறாள்.
பியாட்றிஸ் மறுபடியும் வெளியே எட்டிப்பார்த்தாள். பதினேழாம் மாடியிலிருந்து கீழே பார்க்கவே அவளுக்குத் தலையைச் சுற்றியது.
எப்படித்தான் இவ்வளவு உயரத்திலிருந்து எல்லாவற்றையும் பார்க்கிறீர்களோ தெரியாது. வேண்டுமானால் டிவியைப் போட்டுவிடவா?
வேண்டாம். காலையில் வேலைக்காரி வந்ததும் நான் சற்றுத் தூங்கப்போகிறேன்.
பியாட்றிஸ் கணம் யோசித்துவிட்டுப் பின்னர் புரிந்தவளாய்த் தலையாட்டினாள்.
ஓ, உங்களது ஶ்ரீலங்கன் வீட்டைச் சொல்கிறீர்களா? உங்கள் அம்மா எப்படி இருக்கிறார்? கமரா வேலை செய்கிறதா?
படுக்கை ஈரமாகிக் காய்ந்தும் விட்டது. ஆனால் வேலைக்காரப்பெண் இன்னமும் வரவில்லை. பல தடவை அழைப்புகள் எடுத்துவிட்டேன். பதில் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை
அங்கு இப்போது நடுச்சாமம் அல்லவா? காலையில் எழுந்ததும் உங்களுக்கு அழைப்பு எடுப்பார்கள். நீங்கள் நிம்மதியாக இருங்கள்.
பியாட்றிஸ் ஆதரவாக பெலிசிற்றாவின் முடியைத் தடவிவிட்டார். அந்தப் பிரிவில் பணி புரியும் அத்தனை பேருக்கும் பெலிசிற்றாவின் குடும்ப இரகசியங்கள் தெரிந்திருந்தன.
சரி, நீங்கள் பாத்ரூம் போகப்போகிறீர்களா? நான் உதவி செய்யவா?
பெலிசிற்றா தயங்கினார்.
என்னால் எழுந்து நடக்கமுடியும் என்று தோன்றவில்லை. கொள்கலனைத் தரமுடியுமா?
வர வர பெலிசிற்றாவுக்கு சோம்பல் அதிகரித்துவிட்டது.
பியாட்றிஸ் செல்லக்கோபத்துடன் பெலிசிற்றாவின் கன்னத்தைத் தட்டிவிட்டு, மூத்திரக் கலனை எடுத்துவந்து அவரின் உடையை விலக்கி உள்ளே அணைத்து வைத்தாள்.
முடித்ததும் கூப்பிடுங்கள், நான் பக்கத்துப் படுக்கையிலிருக்கும் எலீனைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
பெலிசிற்றா பெருமூச்சு விட்டபடியே செல்பேசியில் வீட்டுக் கமராவைப் பார்த்தபடி இருந்தாள். அம்மாவின் படுக்கையில் மறுபடியும் ஈரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பித்திருந்தது.
000
ஜேகே தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயங்களுள் ஒன்று இந்தப் “பெலிசிற்றா”. இரு வேறு நிலங்களின் பிறழ்வுகளுக்கிடையில் சிக்கித்தவிக்கும் நம் சக மனிதர்களின் வாழ்வினைப் புரிந்துகொள்ளும் சிறு முனைப்பை இந்நாவல் செய்கிறது.
ஜே.கே
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.