
ஒரு கலைப்படைப்பு நம் காலத்தில் என்ன செய்யமுடியும் என்பது இதுவரை எனக்கு தெளிவில்லாத கேள்வியாகவே இருந்து வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும். எனவே இதற்கு இமயத்தின் உப்புவண்டிக்காரன் நாவல் என்ன செய்கிறது என்பதிலிருந்து பதில் கிடைக்குமா என்று தேடுகிறேன்.
உப்புவண்டிக்காரன் நாவல் கவர்னர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியது. கவர்னர் அவன் வீட்டிலிருப்பவர்கள் சொல்வதைக் கேட்காமல் கொரோனாவில் செத்த ஒருவரின் சாவு வீட்டுக்கு போய் வருகிறான். அதனால் அவனும் பின் அவன் பெற்றோரும் அரசால் தனிமைப் படுத்தப்படுகின்றனர். தன்னால் தன் பெற்றோருக்கு, சுற்றத்தாருக்கு கஷ்டம் என்ற எண்ணத்தில் தொடங்கி கவர்னரின் குற்றவுணர்வு பெருகிக் கொண்டே போகிறது.
பிரச்சினை என்னவென்றால் கவர்னரின் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவனால் அவர்களோடு பேச முடியவில்லை, பேசிப் பழக்கமில்லை. தனிமைப்படுத்தி தங்கவைத்திருக்கும் இடத்தில் அவனோடு யாரும் பேசத் தயாராக இல்லை. பேசும் மிகச்சிலருக்கும் அவனிடம் சொல்ல எந்த பதிலும் இல்லை. தினமும் பேசும் மனைவியிடம் அவனுக்கு பேசப் பிடிக்கவில்லை. பேச்சு இல்லாத இந்த உலகமே கவர்னரின் பிரச்சினை ஆகிறது. ரீல்சும், மீம்ஸ்களும் இடையறாது பேசிக்கொண்டிருக்கும் ஒரு இரைச்சலுக்கு மத்தியில் புதிய அமைதியில் கவர்னர் சிக்கிக்கொள்கிறான் என்று சொல்லலாம்.கவர்னரின் பிரச்சினைகள் எதுவும் கொரோனாவில் மட்டும் தொடங்கியதல்ல. அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் மனைவிக்கும் இடையிலான உறவின் சிக்கல்கள் எப்போதிமிருப்பவை. அவன் அவற்றோடு வாழப் பழகியிருக்கிறான். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அவனுக்கு ஒரு பற்றுதல் தேவைப்படும்போது அவனால் அவற்றை பற்றிக்கொள்ள முடிவதில்லை. அப்படி இருக்கும்போதுதான் வாயைப் பல மாஸ்க்குகள் போட்டு மூடிக்கொண்ட அரசு இயந்திரத்தின் புதிர்வட்டப் பாதைகளில் சுற்றி ஓடவிடப் படுகிறான்.
நாம் நீண்ட காலமாக எல்லாவற்றையும் பல்வேறு கோணங்கள், பார்வைகளில் இருந்து பார்ப்பதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசி வந்திருக்கிறோம். நவீன ஓவியங்கள் தொடங்கி, நாவல் எனும் வடிவம் வரை இந்த பன்முகத்தன்மையைச் சாத்தியப்படுத்தும் படைப்புகளையே ஆதர்சமாகக் கொண்டாடியும் வந்திருக்கிறோம். ஆனால் நமது சூழ்நிலை மோசமாகிக் கொண்டேதான் போகிறது. வெறுமனே பொருள்சார்ந்த நிலையை மட்டும் சொல்லவில்லை. மனிதர்களுக்கு என்று பொதுவான விழுமிய நிலை இருக்குமானால், அதாவது ஒரு உயிரினத் தொகுப்பாக இதைவிடக் கீழாக நாம் போகமாட்டோம் என்ற எல்லைகள் இருக்குமானால் அந்த எல்லைகள் சரிந்துகொண்டே போவதைத்தானே பார்க்கிறோம். எனவே மீண்டும் முதல் வரியில் இருக்கும் கேள்வியை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கலைப்படைப்பு என்னதான் செய்யவேண்டும்? மனிதனின் நிலையைப் பிரதிபலித்துக் காட்டினால் போதுமா, நீ இவ்வாறு அநாமதேயனாக, அநாதரவாகவே இருக்கிறாய் என்று. அப்படிப் பிரதிபலித்துக் காட்டுதல் என்றால் என்ன? இவற்றுக்கு இமையத்தின் இந்த நாவல் மிகப்பொருத்தமான பேசுபொருளாக அமைகிறது.
சென்ற நூற்றாண்டை எடுத்துக் கொண்டால், சோஷலிச புரட்சி, எல்லோருக்கும் உணவை உற்பத்தி செய்யக்கூடிய அறிவியல், எல்லோருக்கும் அது கிடைக்காமல் செய்யும் முதலாளித்துவ அரசியல் அமைப்புகள், பூமி மீதான மனிதனின் ஆதிக்கத்தில் ஒரு புதிய தொடக்கம், மேற்கின் உலகப் போர்கள் தொடங்கி இந்தியாவில் அம்பேத்கரின் புரட்சி வரை மனிதனின் சமூக உரிமைகள் குறித்து நாம் சிந்திக்க நிறையவே முயற்சித்திருக்கிறோம். ஜான் பெர்ஜர் ஒரு கட்டுரையில், இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு கலைப்படைப்பின் மதிப்பு அது ‘ஒரு மனிதனைத் தன் சமூக உரிமைகளை உணரச் செய்வதில்’ இருக்கிறது என்கிறார். அந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத கலைப் படைப்புகளுக்கு மதிப்பில்லை. சரி, நம் நூற்றாண்டின் கேள்வி என்ன? நாம் செயற்கை நுண்ணறிவு போன்ற கண்டுபிடிப்பல்லாத கண்டுபிடிப்புகளின் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவை நம் வாழ்க்கையை எப்படியெல்லாம் முன்னேற்றப் போகிறது என்ற கற்பனைகள் மட்டுமே நம் முன், கழுதை முன் மாட்டிய கேரட் போல தொங்கவிடப் படுகிறது.
நாம் எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறோமா? ஏதோ ஒரு எதிர்காலம் நம்மை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறதா? நாம் அதைப் பார்க்கும் திறனையே இழந்துவிட்டோமா? போன நூற்றாண்டில் அரசியல் கேள்விகளையே நாம் இன்னும் நட்டாற்றில் விட்டு வைத்திருக்கையில், தற்காலத்தில் என்ன செய்வது என பல கேள்விகள் நம் முன் இருந்தாலும், இந்த நூற்றாண்டின் பிரத்யேகமான ஒரு கேள்வியை என்னால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. நம் காலத்தை கவர்னர் போல கைவிடப்பட்ட தனிநபர்களின் காலம் என்றே சொல்லவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
செல்லாத பணம், இப்போது உயிரோடிருக்கிறேன், உப்புவண்டிக்காரன் என இமையத்தின் சமீபத்திய மூன்று நாவல்களுமே வெவ்வேறு வகையில் உடல்நலம்-அரசாங்க அதிகாரம்(bureaucracy) ஆகியவற்றைப் பேசுகின்றன. அரசதிகாரத்தின் குழப்பமான புதிர்ப்பாதைகளை, மனதிழக்கச் செய்யும் மனிதத்தன்மையற்ற நிலையை மிக நேரடியான சித்தரிப்புகள் மூலம் இமையம் உருவாக்குகிறார். ஒரு வகையில் காஃப்காவின் “”கோட்டை” (The Castle) நாவலில் வரும் அதே மனநிலையை, நம் காலத்தின் மிக யதார்த்தச் சித்தரிப்புகள் வழி உருவாக்குகிறார். இதை வாசிக்கும் எவருக்கும் நம் அரசு/அதிகார அமைப்புகளின் மனிதத்தன்மையற்ற அணுகுமுறைகள் குறித்து வெறுப்பு ஏற்படும். எழுத்தாளரின் வெளிப்படையான நோக்கமாகவே அது இருக்கிறது. தனிநபர்களை அரசு உள்ளிட்ட அதிகார இயந்திரங்கள் எப்படி நடத்துகின்றன என்பதன் மீதான விமர்சனமாக இந்த நாவல்கள் அமைந்திருக்கின்றன.
இந்த மூன்று நாவல்களின் பொதுத்தன்மையிலிருந்து உப்புவண்டிக்காரன் வேறுபடும் இடத்தைப் புரிந்துகொள்ள நாம் தனித்திருத்தல் என்பதையே மீண்டும் புரிந்துகொள்ள முயலவேண்டும். நோய்வாய்ப்படும் எல்லோரும் ஒரு அளவில் தனித்திருக்கிறார்கள். அது செல்லாத பணத்தில் தீக்குளிக்கும் ரேவதியாக இருந்தாலும் சரி, இப்போது உயிரோடிருக்கிறேனில் சிறுநீரகம் செயலிழக்கும் சிறுவனாக இருந்தாலும் சரி. பராமரிக்கும் குடும்பத்தாரோ பிறரோ அவர்களது வலியைப் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. ஐசியூவில் தனியாகப் படுத்திருப்பதை விட செத்தே போகலாம் என்று விரும்புகிறான் அச்சிறுவன். ஆனால் அந்த நோய்மையைத் தாண்டி அவர்கள் தங்கள் குடும்பத்தோடு உடனிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலோ தீர்வோ கிடைக்காவிட்டாலும் பற்றிக்கொள்ள கைகள் இருக்கின்றன. அவர்களது மிக முழுமையாக தனித்து விட்டுவிடப் படுவதில்லை என்று சொல்லலாம்.
பெரும்பாலான நோய் நிலைமைகளில் காரரண காரணங்கள் ஏதும் இருப்பதில்லை. ஒரு சிறுவனுக்கு சிறுநீரகம் செயலிழக்கும்போது அதற்கு எத்தனை அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், நம்மிடம் ‘ஏன்’ என்ற ஒரு கேள்வி மிச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. உப்புவண்டிக்காரனிலோ நோய்மை அத்தனை ‘உண்மை’யாக இருப்பதில்லை. அந்த நோயை யாராலும் முழுமையாக நம்பமுடிவதில்லை. செத்தபின்னரும் கூட அவர்களால் சாவுக்கு வெறுமனே நோயை மட்டும் கைகாட்ட முடிவதில்லை. எதை, யாரைக் கைகாட்டுவது என்ற குழப்பத்தில் அவர்கள் தங்களையே கைகாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கைகாட்ட கடவுளும் இருப்பதில்லை, கதாபாத்திரங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இல்லாமல், அவர்கள் கடவுளால் கைகொடுக்கக் கூடிய இடத்தில் இல்லை என்ற யதார்த்தத்திலேயே இமையத்தின் கதைகள் நிகழ்கின்றன.
புதிய நூற்றாண்டு தொடங்கி கால் நூற்றாண்டாகப் போகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் இறந்த எண்ணற்றோரைக் கடந்து காலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் நடந்த மாற்றங்களை நாம் சமூகமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால் ஒரு வெறுமையே மிஞ்சுகிறது. கொரோனாவுக்கு முன் நாடு முழுக்க குடியுரிமைச் சட்டங்கள் தொடர்பான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு ஏதும் தீர்வு கிட்டியதா, கொரோனாவுக்குப் பின் அத்தகைய பெரும் குடிமைச் சமூகப் போராட்டங்கள் நிகழ்வதற்கான தேவை இல்லாமல் போய்விட்டதா? இந்த பேரிடர் காலத்தைக் கடந்த மனிதர்களாக நம் மனநிலை என்னவாகியிருக்கிறது?
கவர்னரைப் போல நம்மில் பலருக்கும் தனிப்பட்ட இழப்புகளும், குற்றவுணர்ச்சிகளும் இந்த காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் முழுச் சமூகமாக பிழைத்திருக்கும் நமக்கு அப்படி ஏதாவது குற்றவுணர்ச்சிகள் மீதமிருக்கிறதா? குற்றவுணர்ச்சி நிச்சயம் தீர்வில்லை என்று பதில் அளித்தால், பின் அதற்கு பதிலாக நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்பதையும் கேட்டுக் கொள்ளலாம்.
இமையத்தின் கறாரான யதார்த்தவாத நடை இப்போது உயிரோடிருக்கிறேன், உப்புவண்டிக்காரனில் மிகவும் கூர்மைப் பட்டிருக்கிறது எனலாம். எழுத்து என்னும் ஊடகம் குறித்தே நாம் முழுமையாக யோசிக்க வேண்டாம் என்று எழுத்தாளர் சொல்ல வருவது போல. ’கதை’, சம்பவங்கள், கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள் இவை மட்டுமே நேரடியாக இந்தப் புத்தகங்களில் நிறைந்திருக்கின்றன என்பதாகத் தோற்றம் தருகின்றன. இமையம் தனக்குத் ‘தெரிந்த கதைகளையே’ எழுதுகிறார். இதுவே இப்படைப்புகளை ஒரு கையறுநிலையைத் தாண்டிச் செல்லாமல் தடுக்கவும் செய்கிறது. எவ்வளவு பாரிய கையறுநிலையைக் காட்டும் படைப்பாக இருந்தாலும், எல்லா படைப்புருவாக்கச் செயல்பாடுகளையும் போல அதுவும் ஒரு நம்பிக்கையில் இருந்தே எழுதப்படுகிறது. இந்த நம்பிக்கை எழுத்தாளர் என்ற தனிநபரில் இருந்து படைப்பால் உருவாக்கப்படும் மனநிலையாக மாறாமல் இருப்பதற்கு இந்த கறாரான மொழிநடையின் இறுக்கமே காரணம்.
இந்த இடத்தில் காஃப்கா ஒப்பீட்டுக்கு மீண்டும் வந்தால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்கள்தொகை உற்பத்தி ஆகியவற்றின் பெருக்கம், அதற்கேற்ற பொருளாதார மாற்றங்களோடு பல தனிநபர்கள் அவர்களது மரணங்கள் எந்த தனித்துவமும் இல்லாதவையாக, பெயரிலியாக ஆகும் நிலை ஏற்பட்டது. இதை எழுதும் ஜான் பெர்ஜர் “இந்த அநாமதேயப்படுத்தல் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த கடவுளாலும் கொடுக்க இயலாத தண்டனை” என்கிறார். நாம் இந்த தண்டனையின் மறுபுறத்தில் இருக்கிறோம். இவற்றுக்கு இடையே ஒரு கட்டத்தில் யதார்த்த வாத எழுத்துகளுக்கு ஒரு பணி இருந்தது, அது உண்மைக் கதையைச் சொல்லி, சிலவகை மனிதர்களை இந்த அநாமதேயத்தின் சாபத்திலிருந்து விடுவித்தல். அடிக்கடி அதிகாரத்தின் விருப்பங்களுக்கு மாறாகவே இதைச் செய்யும் தேவையிருந்தது. ஆனால் நம் காலகட்டத்தில் கதைகள் மலிந்திருக்கின்றன, காசாவின் படங்கள், தினசரி கதைகள், மிக நுணுக்கமான விவரணைகள், காட்சிகள் எதனாலும் எந்தப் பயனும் இல்லை என்பதைப் பார்த்தபிறகு நாம் யதார்த்தவாத எழுத்துகளை எப்படி அணுகுவது?
இப்போது உயிரோடிருக்கிறேன், உப்புவண்டிக்காரன் இரு படைப்புகளின் மதிப்பும் அவை நம்மில் உருவாக்கும் இத்தகைய சில கேள்விகளில்தான் இருக்கிறது. இப்படைப்புகள் முழுமையான கையறுநிலையை எட்டுவதில்லை. கவர்னர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான், நம் எல்லாரைப் போல அவனும் தன் இழப்புகளைத் தாண்டி வாழத்தான் போகிறான். இப்போது உயிரோடிருக்கிறானில் வரும் சிறுவனுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்த நாவல்களைத் தாண்டி நாம் கேட்டுக்கொள்ள சில கேள்விகள் இருக்கின்றன. இவற்றைக் கடந்த முழுமையான கையறுநிலை, நம்பிக்கையின்மை எப்படி இருக்கும்? அதன் முன் நாம் என்ன செய்வோம்? அதை நம்மால் இப்போது செய்ய இயலாதா?

வயலட்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
